சூரசம்ஹாரம்

நேற்று சூரசம்ஹாரம் எல்லா முருகன் கோவில்களிலும் சிறப்பாக நடைபெற்றது. சூரசம்ஹாரம் என்பது தீமையை புனிதம் வெல்லும் ஒரு திருநாள். இத்திருநாள் நமக்கு அளிக்கும் நம்பிக்கை சொல்லில் அடங்காதது. இத்தினத்தில் திருமுருக கிருபானந்த வாரியார் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதியை பகிர்ந்துகொள்வதில் தமிழ்ஹிந்து மகிழ்ச்சி அடைகிறது.

samharaசரவணபவன் விடுத்த சக்தி ஆயுதம் சூரனுடைய மார்பைப் பிளந்தது! உடம்பை இரு துண்டாக்கிக் கடலில் வீழ்த்தியது. வேதங்கள் வாழ்த்தின. தேவர்கள் பூ மழை சொரிந்தனர். வேற்படை அப்பூமழை நடுவிற் பாய்ந்து சென்று தேவகங்கையில் மூழ்கிப் புனிதம் பெற்று அங்கிருந்து திரும்பிச் செவ்வேளின் செங்கரத்தில் வந்து அமர்ந்தது. மார்பு பிளந்து உடல் இரு துண்டான பின்னரும் கூட சூரபன்மன் சாகவில்லை.

கடற்ச லந்தனி லேயொளி சூரனை
உடற்ப குந்திரு கூறென வேயது
கதித்தெ ழுந்தொரு வேவலு மாமயில் விடும்வேலா

சூரபன்மனி வச்சிர யாக்கை பிளந்தவுடனே ஒரு பாதி சேவலாகவும் மற்றொரு பாதி மயிலாகவும் ஆயின. அந்த நிலையிலும் சூரபன்மன் விடவில்லை. மாணிக்க மரகத மலையொன்று கால்களையும் சிறகுகளையும் பெற்றுப் பறந்து செல்வது போல ஆறுமுக வள்ளலை எதிர்த்துப் போர் புரியும் செருக்குடன் வந்தான்.

சூரபன்மன் என்பது ஆணவமலம். செம்பிற்குக் களிம்பு போலும் அரிசிக்குத் தவிடு போலும் ஆணவமலம் உயிருக்கு அநாதியேயுண்டு.

நெல்லிற் குமியும் நிகழ்செம்பி னிற்களிம்பும்
சொல்லிற் புதிதன்று தொன்மையே வல்லி
மலகன்ம மன்றுளவாம் வள்ளலாற் பொன்வாள்
அலர்சோகஞ் செய்தகமலத் தாம்

ஆணவமலத்தை ஞானத்தால் வலிகெடச் செய்வது சூரசம்ஹாரம். ஆணவ மலம் ஒருபோதும் அழியாது. அதன் ஆற்றல் கெடும். நான் என்ற அகப்பற்று அகங்காரம். எனது என்ற புறப்பற்று மமகாரம்.

யான் எனதென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க்
குயர்ந்த உலகம் புகும்
என்பது திருக்குறள்.

உல்லாச நிராகுல யோக விதச்
சல்லாப விநோதனும் நீ அலையோ
எல்லாம் அற என்னை இழந்த நலம்
சொல்லாய் முருகா! சுரபூபதியே!
என்பது கந்தரநுபூதி.

நான் எனது என்ற இருவகைப் பற்றும் அற்றபின் அற்றபின் பொறிபுலன்களையொடுக்கி அருளனுபவத்தில் ஒடுங்குதல் வேண்டும்.

ஐந்தில் ஒடுங்கில் அகலிடமாவது
ஐந்தில் ஒடுங்கில் அருந்தவமாவது
ஐந்தில் ஒடுங்கில் அரன்பதமாவது
ஐந்தில் ஒடுங்கில் அருளுடையோரே

-திருமந்திரம்

ஆமையைப் போல் ஐம்புலனை அடக்கிய இடத்தில் ஒரு பெரிய சுகம் ஆரம்பமாகின்றது. ஒரு மனிதன் வெளியிலே கண்டவாறு அலைந்து திரிகின்ற போது துன்பம் உண்டாகும். வீட்டிலே போய் நிழலில் சற்று ஆறுதலாக அமர்ந்தவுடன் மகிழ்ச்சியாக இருக்கின்றதல்லவா? அது போல் புலன்கள் வெளிப்பட்டு உழலும் போது கவலை உண்டாகிறது. அவைகளை அகமுகப் படுத்தும் போது ஆறுதல் உண்டாகிறது. இதுவே மோட்சமாகிய பேரானந்தம்.

சூரபன்மனின் ஒரு பாதி நான் என்கிற அகங்காரம். மற்றொரு பாதி எனது என்கிற மமகாரம். இவ்விருபாதிகளின் வடிவான மயிலும் சேவலுமாகிய சூரபன்மன் முருகவேளை எதிர்த்து வருவதைக் கண்ட தேவர்கள் அஞ்சினர். ஆஉமுகக் கடவிள் சூரபன்மன் மீது அருள் நோக்கம் செய்தார். ஞானிகள் பார்வையால் இரும்பு பொன்னாவது போல அத்திருவருட் பார்வையால் சூரபன்மன் பகைமை நீங்கி ஞானம் பொருந்திய மனத்தினாய் நின்றான். அப்பொழுது கந்தவேள் தமது திருவருளால் ஞானம் பெற்ற கோழியை நோக்கி “நீ நமது தேரில் கொடியாக இருந்து கூவுவாய்” என்று பணித்தருளினார். அவ்வாறே கோழி அவர் தேரில் ஏறி கொடியாக நின்று கம்பீரமாக கூவியது. பின்பு பெருமான் இந்திரனாகிய மயிலினின்றும் இறங்கினார். சூரபன்மனாகிய மயிலின் மீது ஏறி உலகெங்கணும் பவனி வருவாராயினார்.

One Reply to “சூரசம்ஹாரம்”

  1. ஆறுமுக ஆண்டவன் ஆறுதலைத் தருவான்! – வள்ளல் கிருபானந்த வாரியார் சுவாமிகள்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *