வாழையடி வாழையாய் வரும் நற்பண்புகள்

another-banana-treeவாழையடி வாழையாய் என்ற சொற்களைச் சொல்லிப் பார்த்ததுமே வள்ளலாரின் ‘வாழையடி வாழையென வந்த திருக்கூட்டத்தில் யானும் ஒருவன்” என்ற வார்த்தைகள் நினைவுக்கு வருகிறது. மா, புளி, தென்னை, வேம்பு, பலா, அரசு என எத்தனையோ மரங்கள் இருக்க ஏன் வாழையைக் குறிப்பிட வேண்டும்? பொதுவாகத் தாவரங்கள் விதை மூலமாகவோ பதியன் மூலமாகவோ தான் உற்பத்தி செய்யப்படும். ஆனால் வாழையின் அடிவாழையிலிருந்து கன்றுகள் உற்பத்தியாகின்றன. அதேபோல் அருளாளர்கள் தானே பிறக்கிறார்கள்.

வாழையின் சிறப்பு

மற்ற மரங்களை வெட்டி அதன் நடுப்பகுதியைப் பார்த்தால் கருப்பாக இருக்கும். வயதான மரமாக இருந்தால் மிகவும் கருப்பாக இருக்கும். அதை வைரம் பாய்ந்த மரம் என்று சொல்வார்கள். நெஞ்சில் வைரம் வைத்திருக்கிறான் என்றால் பழிக்குப் பழி வாங்கும் எண்ணம் வைத்திருக்கிறான் என்று பொருள். ஆனால் நல்ல முற்றிய வாழையை வெட்டி அதன் நடுப் பகுதியைப் பார்த்தால் அது வெள்ளை வெளேரென்று இருக்கும். அருளாளர்களின் உள்ளமும் வெள்ளையாக இருக்கும். மற்ற மரங்களை விட வாழை யில் ஈரம் அதிகம். அருளாளர்களின் நெஞ்சிலும் ஈரத்தன்மை அதிகம்.

இப்படி வாழைக்கும் அருளாளர்களுக்கும் ஒற்றுமை இருப்பதால் தான் வாழையடி வாழையென வந்த திருக் கூட்டத்தில் யானும் ஒருவன் என்று பெருமிதத்தோடு சொல்கிறார் வள்ளலார். நமது நாடு வாழையடி வாழையாக எத்தனையோ மகான்களைக் கண்டிருக்கிறது.

பாரத நாட்டின் சிறப்பு

நமது நாட்டின் சிறப்பைப் பாட வந்த பாரதி

மாரத வீரர் மலிந்த நன்னாடு,
மாமுனிவோர் பலர் வாழ்ந்த பொன்னாடு
பூரண ஞானம் பொலிந்த நன்னாடு,
புத்தர் பிரான் அருள் பொங்கிய நாடு
நல்லன யாவையும் நாடுறும் நாடு
பாரத நாடு பழம் பெரும் நாடு

என்றும் இதற்கீடாக வேறு நாடில்லை என்றும் போற்றுகிறார்.

”எந்தரோ மஹானுபாவுலுஅந்தரிகி வந்தனமு” என்கிறார் தியாகராஜ சுவாமிகள். அந்த மஹானுபாவர்கள் வாழ்ந்த நாட்டில் வாழையடி வாழையாக நற் பண்புகள் வளர்க்கப்பட்டு வந்தி ருக்கின்றன. நமது நாடு எந்த நாட்டோடும் பகைமை பாராட்டு வதில்லை. எந்த நாட்டின் மீதும் போர் தொடுப்பதில்லை. உலக அமைதிக் காகவே அரும்பாடு பட்டுவருகிறது. உலகமே வியக்கும் வண்ணம் அஹிம்சாமுறையில் போராடி சுதந்திரம் பெற்றோம்.

புராண இதிகாசங்கள்

நமது நாட்டின் மாபெரும் இதிகாசங்கள் இராமாயணமும் மஹாபாரதமும் ஆகும். நமது புராணங்களும், இதிஹாசங்களும் ஒழுக்கம், பணிவு, பொறுமை. பணிவு, தியாகம், தொண்டு, பாசம், குருபக்தி, அதிதிகளைப் போற்றுவது போன்ற பல நற்பண்புகளைப் போதிக்கிறது. நமது சங்ககால நூல்களும், காப்பியங்களும், திருக்குறள் நாலடியார், ஏலாதி, திரிகடுகம் ,சிறுபஞ்சமூலம் நீதிநெறி விளக்கம், நான்மணிக்கடிகை போன்ற அறநூல்களும் பல நற்பண்புகளை அறிவுறுத்துகின்றன.

யாதும் ஊரே யாவரும் கேளிர்

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நமது முன்னோர்களுக்கு உலகளாவிய பார்வை யிருந்தது என்தைப் புறநானூறு சொல்கிறது. கணியன் பூங்குன்றனார் என்ற புலவர்

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர் தர வாரா

என்கிறார் .எந்த ஊராக இருந்தாலும் அது எம்மூரே. யாராக இருந்தாலும் அவர் எமக்கு உறவினரே. நன்மையும் தீமையும் நோதலும், தணிதலும் மற்றவர்களால் வருவதன்று, நம்மால் தான் விளைவது என்கிறார். இந்த அழகான உலகளாவிய பார்வை எக்காலத்துக்கும் பொருத்தமானதாகவே தோன்றுகிறது.

vivekananda6 ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் சொல்லப்பட்ட பொன் மொழியை அடியொற்றியே சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த விவேகாநந்தர் அமெரிக்கா சென்ற பொழுது, சிகாகோ மாநாட்டில் முழங்கினார். எல்லோரும் சீமான்களே, சீமாட்டிகளே என்று பேச ஆரம்பித்தார்கள். ஆனால் விவேகாநந்தர் சகோதர சகோதரிகளே என்று பேச ஆரம்பித்தார். கூட்டம் அவருக்குத் தலை வணங்கி மரியாதை செய்தது!

உயர்ந்ததும் தாழ்ந்ததும்

எது உயர்ந்தது எது தாழ்ந்தது என்பதையும் புறநாநூறு நமக்குக் கற்றுத் தருகிறது.

ஈயென இறத்தல் இழிந்தன்று,
ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று
கொள் எனக்கொடுத்தல் உயர்ந்தன்று
கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று

எனக்கு ஒன்றைத்தா என்று கேட்பது இழிவானது தான். ஆனால் கொடுக்க மாட்டேன் என்று மறுப்பது அதைவிட இழிவானதாகும். இதைப் பெற்றுக்கொள் என்று ஒன்றைத் தானே விரும்பிக் கொடுப்பது உயர்வானது. ஆனால் அவ்வாறு கொடுப்பதைக் கொள்ளமாட்டேன் என்பது அதைவிட உயர் வானது. எவ்வளவு உயர்ந்த பண்பாடு!

தாய் தந்தை பேண்

மாத்ருதேவோ பவ, பித்ருதேவோ பவ, ஆசார்யதேவோ பவ, அதிதிதேவோபவ என்கிறது வேதம்.
தாய், தந்தை, குரு, அதிதி இவர்களைப் போற்றுவது வாழையடி வாழையாய் வரும் மரபாகும்.

தாய், தந்தைக்குப் பணிவிடை செய்து கொண்டிருக்கிறான் புண்டரீகன். அவனுடைய பணி விடையைக் கண்டு மகிழ்ந்த இறைவன் அவனுக்குக் காட்சி தர அவனுடைய வீட்டிற்கே வருகிறான். இறைவன் வந்த சமயம் புண்டரீகன் பெற்றோருக்குப் பணிவிடை செய்து கொண்டி ருக்கிறான். வந்த இறைவனுக்கு ஆசனமாக ஒரு செங்கல்லைக் கொண்டு வந்து போட்டு அதில் இருக்கும் படி சொல்லி விட்டுத் தன் பெற்றோருக்கான பணிவிடையைக் கவனிக்கப் போய் விடுகிறான் புண்டரீகன். புண்டரீகன் தன் பணிவிடையை முடித்துவிட்டு வரும் வரை அந்தச் செங்கல் மேலேயே நின்று கொண்டிருந்தான் இறைவன்! புண்டரீகன் பெற்றோர் பக்திக்கு மெச்சி இன்றும் பண்டரிபுரத்தில் செங்கல் மேலே நின்று காட்சி தருகிறான் பாண்டுரங்கன்.

இதையே ஔவையும் ‘அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’ என்று சொல்லிப் போந்தாள். முற்றும் துறந்த துறவிகளான ஆதிசங்கரரும், பட்டினத்தடிகளும் தங்கள் தாயின் இறுதிக் கடன்களைச் செய்ய ஓடோடி வருகிறார்கள். அவர்கள் குடியிருந்த கோவிலல்லவா?

”உன் அன்னையின் பாத கமலங்களிலேயே சுவர்க்கம் இருக்கிறது” என்கிறார் முகம்மது நபி அவர்கள். பாரதியும் ‘பெற்ற தாயும் பிறந்தபொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே’ என்று பெற்ற தாய்க்குச் சிறப்புச் செய்கிறார்.

ஆசார்ய தேவோ பவ

தாய் தந்தைக்கு அடுத்தபடியாக வருபவர் குரு. குருவும் தெய்வமும் ஒரே நேரத்தில் வந்தால் யாருக்கு முதல் வணக்கம் என்றால் குருவுக்குத் தான் முதல் வணக்கம். ஏனென்றால் தெய்வத்தைக் காட்டித்தருவதே குருதானே? கண்ணன் சாந்தீபினி முனிவரிடம் கல்வி கற்கச் செல்கிறான். குருகுல வாசம் முடிந்ததும் குருதக்ஷிணை கொடுக்க வேண்டும் என்பது வாழையடி வாழையாக வரும் வழக்கம். தக்ஷிணையாக என்ன கொடுக்க வேண்டும் என்று கண்ணன் கேட்கிறான். குருபத்தினி,”12 ஆண்டுகளுக்குமுன் கடலில் மாண்ட என் மகன் வேண்டும் என்கிறாள்.கண்ணன் கடலுக்குள் சென்று பாஞ்ச ஜனன் என்ற அசுரனிடமிருந்த சிறுவனை மீட்டு வந்து குருதக்ஷிணையாகத் தருகிறான்.

இதை

மாதவத்தோன் புத்திரன் போய்
மறிகடல் வாய் மாண்டானை
ஓதுவித்த தக்கணையா
உருவுருவே கொடுத்தான்

periyazhvar2என்று பெரியாழ்வார் புகழ்கிறார். இராமன் தன் குல குருவான வசிஷ்டரையும் விசுவாமித்திரரையும் எப்படிப் பணிவோடு வணங்கி அவர்களிடம் கல்வி கற்றான் என்பதை இராமாயணம் காட்டுகிறது. இராமகிருஷ்ணரால் ஆட்கொள்ளப்பட்ட விவேகானந்தர் தன் குருவின் பெயரால் இராமகிருஷ்ண மடங்கள் ஏற்படுத்தினார்.

தமிழ்த்தாத்தா என்றழைக்கப்படும் உ.வே.சா அவர்கள் தன் ஆசானான மகாவித்வான் மீனாக்ஷிசுந்தரம்
பிள்ளையிடம் எவ்வளவு பக்தியும் மரியாதையும் கொண்டி ருந்தார் என்பதை அவருடைய ”என்சரிதை” என்ற நூலிலிருந்து அறியலாம். திரு உ.வே.சா அவர்கள் தன் குருவின் பெயரைக் கூடச் சொல்ல மாட்டாராம். அவ்வளவு மரியாதை! அதேபோல் வாகீச கலாநிதியான திரு கி.வா.ஜ அவர்களும் தன் ஆசிரியர் பிரானான உ.வே.சா அவர்களிடம் மிக்க அன்பும், மரியாதையும் கொண்டிருந்தார். முன்னாள் குடியரசுத் தலைவரான திரு.ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களும் தன் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களை நன்றியோடும் அன்போடும் நினைவு கூர்ந்து அவர்களிடம் தமக்குள்ள மரியாதையைக் குறிப்பிடுகிறார். நமது அரசும், முன்னாள் குடியரசுத் தலைவரும் ஆசிரியரும் தத்துவ ஞானியுமான திரு ராதாகிருஷ்ணனை கௌரவிக்கும் விதமாக அவர் பிறந்த நாளை ஆசிரியர் தினமாக அறிவித்துள்ளது ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதும் வழங்கி வருகிறது. இன்றும் ஒரு கலையோ கல்வியோ தொடங்கும் பொழுது குருதக்ஷிணை கொடுத்து குருவுக்கு மரியாதை செய்த பின்பே தொடங்குகிறார்கள்.

அதிதி  தேவோ பவ

வீட்டிற்கும் நாட்டிற்கும் வரும் அதிதியை உபசரிப்பது என்ற பண்பு காலம் காலமாக வழங்கி வரும் ஒரு சிறந்த பண்பாகும். இல்லறத்தில் இருப்பவனுக்கு அது ஒரு கடமையாகவே விதிக்கப்பட்டிருக்கிறது. செல்விருந்து அனுப்பி வருவிருந்து எதிர் நோக்கும் பழக்கம் காலம் காலமாக உள்ளது.

அசோகவனத்தில் இருக்கும் சீதை, தான் இல்லாத நேரத்தில் அதிதிகள் வந்தால் அவர்களை யார் உபசரிப்பார்கள், அவர்களுக்கு யார் உணவு பறிமாறுவார்கள்?என்று கலங்குகிறாள். கோவலனைப் பிரிந்த கண்ணகியும்

அறவோர்க்களித்தலும் அந்தணர் ஓம்பலும்
விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை

என்று வரும் விருந்தினரை உபசரிக்க முடியாமல் போனதை எண்ணி வருந்துகிறாள்.

நாயன்மார்கள் சிவனடியார்களை உபசரிப்பதைத் தங்கள் கடமையாகவே செய்து வந்தார்கள். தாங்கள் வறுமையில் வாடியபோதும் கொட்டும் மழையில் நனைந்து இரவுநேரம் வந்த சிவனடியாருக்கு உடுக்க ஆடை கொடுத்து உபசரிக்கிறார் இளையான்குடி மாறநாயனார். வந்தவருக்கு உணவு கொடுக்க வீட்டில் அரிசியும் இல்லை. அதனால் அன்று விதைத்த நெல்லை அரித்துக் கொண்டு வருகிறார். அவர் மனைவி அதை வறுத்து அரிசியாக்கி சமைக்கிறேன் என்கிறாள் சாதம் மட்டும் போதுமா? கொல்லையில் இருந்த கீரையைப் பறித்து வருகிறார். ஆனால் அவற்றைச் சமைக்க விறகு வேண்டுமே! விறகில்லை. சிறிதும் தயங்காமல் தன் வீட்டின் மேற்கூரையிலிருந்த கழிகளை வெட்டிக் கொடுக்கிறார். அதை எரித்து அமுது தயாரிக்கிறாள் மனைவி. உணவு தயாரானதும் சிவனடியாரை உணவருந்த அழைக்கிறார் மாறநாயனர். அப்பொழுது சிவனடியார் மறைந்து இறைவனே காட்சி தருகிறான்

kovil-006வழிப்போக்கர்களுக்காகத் தண்ணீர்ப் பந்தல் வைத்து, தண்ணீர் ,மோர் இவற்றைத் தருவது நம் நாட்டு வழக்கம். நாவரசர் பெயரில் அப்பூதி அடிகள் தண்ணீர் பந்தல் வைத்திருந்ததை பெரியபுராணம் வாயிலாக அறிகிறோம் .வெயில் காலங்களில் கோவில் தேர்த்திருவிழாக் காலங்களில் நீர்மோர் அளிப்பதும் உண்டு. பாக்கெட் தண்ணீர், பாட்டில் தண்ணீர் வந்த பிறகும் கூட கோடையில் தண்ணீர் வழங்கும் பழக்கம் நடைமுறையில் உள்ளது.

கர்நாடக மாநிலத்தில் தர்மஸ்தலா என்ற ஊரிலுள்ள மஞ்சுநாதர் ஆலயத்தில் தினந்தோறும் ஆயிரக் கணக்கான யாத்ரீகர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. சென்ற வருடம் அமிர்தஸரஸ் பொற்கோவிலுக்குச் சென்ற பொழுது அங்கு நடக்கும் அன்னதானம் கண்டு வியந்தேன். யாத்ரீகர்களுக்குத் தண்ணீர் கொடுக்கும் நேர்த்தியையும் சாப்பிட்ட தட்டை சுத்தம் செய்து நன்கு துடைத்துத் தருவதையும் மிக நேர்த்தியாகச் செய்கிறார்கள். இதற்காக ஆயிரக்கணக்கில் வாலண்டியர்கள் இருக்கிறார்கள்.

இப்பொழுது நமது அரசாங்கம் நமது நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை அதிதிகளாக மதித்து அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்ய திட்டங்களைத் தீட்டியுள்ளது. டாக்ஸி, ஆட்டோ டிரைவர்களுக்கு இதற்காக விசேஷப் பயிற்சியும் கொடுக்கப் படுகிறது.

இரக்கம்

மன்னுயிரெல்லாம் தன்னுயிர் போல் நேசித்தல் இரக்கம் எனப்படும். ஒருவன் அல்லது ஓருயிர் துன்பத்திலிருக்கும் போது உதவி செய்து துயரத்தைப் போக்க நினைப்பதற்கு அவனிடமுள்ள இரக்கம் என்ற நற்பண்பே காரணம்

தோட்டத்திலே உட்கார்ந்திருக்கிறான் அந்த மன்னன்.அவன் காலடியில் ஒரு புறா வந்து விழுகிறது. பயத்தால் அந்தப்புறா நடுங்குகிறது. அதை எடுத்து ஆதரவாகத் தடவிக் கொடுக்கிறான். அதைத் துரத்தியபடி ஒரு கழுகு வருகிறது .”இந்தப் புறாவைக் கொடுத்துவிடு’,’என்கிறது கழுகு. ”உன்பசிக்கு இரைதானே வேண்டும்? இதோ இந்தப் புறாவின் எடைக்குச் சமமான சதையை நான் தருகிறேன்” என்கிறான் மன்னன். தராசுத் தட்டில் தன் தொடையிலிருந்து அரிந்தெடுத்த சதையை வைக்கிறான். எடை சரியாக வில்லை. தன் சதையை வைக்க வைக்க எடை சரி யாகாமல் இருப்பதைக்கண்ட சிபிச்சக்கர வர்த்தி கடைசியில் தானே தராசுத் தட்டில் ஏறி உட்கார்ந்து விடுகிறான். எடை சரி யாகிறது. புறாவாகவும் கழுகாகவும் வந்த தேவர்கள் அவனை வாழ்த்துகிறார்கள். இன்றளவும் அழியாப்புகழ் பெற்றிருக்கிறான் சிபி.

இதேபோல் குளிரால் நடுங்கிய மயிலுக்குத் தன் சால்வையைப் போர்த்துகிறான் பேகன். படரக்கொழுகொம்பில்லாமல் தவித்த முல்லைக்கொடிக்காகத் தன் தேரையே கொடுத்த பாரியையும், வறுமையில் தவித்த புலவருக் கிரங்கித் தன் தலையயே கொடுக்க முன்வந்த குமணனையும் வள்ளல்கள் என்று இந்த நாடு போற்றுகிறது. இதே வழியில் வந்த வள்ளலாரும்” வாடிய பயிரைக் கண்டு வாடுகிறார்.”அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும். ஆருயிர்கட் கெல்லாம் நான் அன்பு செயல் வேண்டும்”, என்று இறைவனிடம் வரம் வேண்டுகிறார். இந்த இரக்க குணம் இருப்பதால் தான் விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் சரணாலயங்கள் அமைக்கப் பட்டுள்ளன. விலங்குகளையும் பறவைகளையும் வேட்டையாடுவதும் தடை செய்யப் பட்டுள்ளது..பிராணிகளுக்கான ப்ளூக்ராஸ் போன்ற நலச்சங்கங்களும் செயல் பட்டு வருகின்றன.

தொண்டு

”என்கடன் பணிசெய்து கிடப்பதே” என்கிறார், நாவரசர் பெருமான். உழவாரப்படை கொண்டு கோவில்களில் தொண்டு செய்தார் அவர்.

நடமாடும் நம்பர்க்கு ஒன்று ஈகீராயின்
படமாடும் பகவற்கு ஆகும்

என்கிறார் திருமூலர்.

”மனிதர்களுக்கு நல்லது செய்வதே கடவுளுக்குச் செய்யும் நல்ல தொண்டாகும்”

என்கிறார் பிராங்க்ளின் என்ற அறிஞர்.

”என்னைப் பொறுத்த வரையில் எனது நாட்டுக்கும் எல்லா மக்களுக்கும் தொண்டு செய்வதில் தான் முக்திக்கு வழி இருக்கிறது” என்கிறார் காந்தியடிகள்.

டாக்டர் முத்துலக்ஷ்மி ரெட்டியால் நிறுவப்பட்ட அடையாறு கான்சர் இன்ஸ்டிடியூட்டில் டாக்டர் சாந்தா என்பவர் கான்சர் நோயாளிகளுக்குத் தொண்டு செய் கிறார். சமீபத்தில் அவருக்கு பத்மபூஷன் விருது வழங்கப் பட்டுள்ளது. இன்னும் உதவும் கரங்கள், அமர்சேவா சங்கம் போன்ற பல தொண்டு நிறுவனங்கள் ஆதரவற்றோகளுக்காவும் ஊனமுற்றோர்களுக்காகவும் தொண்டு செய்து வருகின்றன.

”அன்பர் பணிசெய்ய என்னை ஆளாக்கி விட்டால்
இன்ப நிலை தானே வந்தெய்தும் பராபரமே

என்றபடி தொண்டுள்ளம் கொண்ட மனிதர்கள் இன்றும்
தொண்டு செய்து வருகிறார்கள்.

நட்பு

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு

என்கிறார் வள்ளுவர். ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்காமலும் கூட நட்பு வளரும் என்பதற்குச் சான்றாகக் கோப்பெருஞ்சோழனும் பிசிராந்தையாரும் விளங்குகிறார்கள். இருவரும் ஒருவரைப் பற்றி மற்றவர் கேள்விப்பட்ட்டிருக்கிறார்களே தவிர ஒருவரையொருவர் நேரில் பார்த்ததேயில்லை. கோப்பெருஞ் சோழன் இறக்கும் தறுவாயில் தன் சமாதிக்குப் பக்கத்தில் ஒரு இடம் காலியாக விட்டு வைக்கும் படி சொல்கிறான்,”என் நண்பர் பிசிராந்தையார் வருவார் என்கிறான்

உடனிருந்தவர்கள் நம்பமுடியாமல் திகைக்கிறார்கள். அந்தக் காலத்தில் இதுபோல் தகவல் தொழில் நுட்பச் சாதனங்கள் கிடையாதே! ஆனால் மன்னன் மறைவுக்குப்பின் மன்னன் சொன்னபடி பிசிராந்தையார் வந்து வடக்கிருந்து உயிர் துறக்கிறார். நட்புக்கு இலக்கணமாக இன்றும் இருவரும் பேசப்படுகிறார்கள்.

தானம்

பூதானம், கோதானம், வித்யாதானம், கன்னிகாதானம், அன்னதானம் என்று சொல்லக்கேட்டிருக்கிறோம்
.”கார்த்திகைக்குப் பின் மழையுமில்லை, கர்ணனுக்குப் பின் கொடையுமில்லை, என்று கர்ணனின் புகழ் பேசப்படுகிறது. எல்லா தானங்களிலும் சிறந்தது அன்னதானம் என்று சொல்லுவார்கள்

‘மண்டினி ஞாலத்து வாழ்வோர்க்கெல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே”

என்று அன்னதானத்தின் பெருமையைப் பறை சாற்றுகிறது மணிமேகலை.

இதற்கும் மேலாக இன்று ரத்த தானம் என்பது பரவலாக வழங்கப் படுகிறது. ஜாதி,மத இனம் கடந்து இரத்ததானம் செய்யப்படுகிறது. சில நல்ல உள்ளம் கொண்டவர்கள் ரத்ததானம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு அடுத்த படியாகக் கண்தானம் செய்கிறார்கள்.

காளத்தி மலையிலே குடுமித்தேவர் கண்களிலே ரத்தம் வருவதைக்கண்ட திண்ணன் என்ற வேடன் ‘ஊனுக்கு ஊன்’ என்பதை நினைத்து தன் கண்னை இடந்து அப்பிக் கண்ணப்ப நாயனார் என்று பேரும் புகழும் பெற்றார் என்பதைப் பெரிய புராணம் சொல்கிறது .’செத்தும் கொடுத்தான் சீதக்காதி’ என்று அவருடைய வள்ளல் தன்மை பற்றிப் புகழ்கிறார்கள். ஒருவர் இறந்த பிறகும் கூட தானம் செய்ய முடியும். ஒருவர் இறந்த பின் அவருடைய கண்களைத் தானமாகப் பெற்றுக் கொள்ளலாம் என்று உயில் கூட எழுதி வைக்கிறார்கள்.
hidendranஇதையும் விட அதிகமாகத் தானம் செய்ய முடியும் என்பதை ஒரு பெற்றோர் நிரூபித்தி ருக்கிறார்கள். சமீபத்தில் விபத்தில் அகால மரணமடைந்த ஹிதேந்திரன் என்ற மாணவனின் இதயம், கண்,கிட்னி போன்ற ஆறு உறுப்புக்களை அவனது பெற்றோர் தானமாக வழங்க, அவற்றை ஆறு பேருக்குப் பொருத்தி ஆறுபேரை வாழவைத்தி ருக்கிறார்கள். ‘செத்தும் கொடுத்தான், செத்தும் வாழ்கிறான்’ என்ற புதிய பழமொழியை உருவாக்கியிருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு விபத்தில் இறந்தவர்களின் உறுப்புகளைத் தானமாக வழங்கலாம் என்ற விழிப்புணர்ச்சிஅதிகரித்திருக்கிறது.

இவ்வளவு நற்பண்புகள் சமுதாயத்தில் கடைப்பிடிக்கப்பட்ட போதிலும் இன்னும் சில கரும்புள்ளிகளும் தென்படாமல் இல்லை. பெரியவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மதிப்பும் மரியாதையும் கொடுப்பது குறைந்து கொண்டு வருகிறதோ என்று தோன்றுகிறது. பஸ்ஸில் கர்ப்பிணிப்பெண்கள், கைக்குழந்தையுடன் வரும் தாய்மார்கள், முதியவர்கள் இவர்களுக்குத் தன் இருக்கையைக் கொடுக்க பலரும், முக்கியமாக இளைஞர்கள் முன் வருவதில்லை.அவர்கள் கவனம் எல்லாம் செல்போனிலேயே! முன்பெல்லாம் வீட்டிற்கு வரும் தாத்தா, பாட்டி, அத்தை, மாமா, பெரியப்பா, பெரியம்மா இவர்களை வணங்குவது வழக்கம். அந்த நல்ல பழக்கம் இப்பொழுது மெல்ல மெல்லக் குறைந்து கொண்டு வருகிறது. அதேபோல் உறவு சொல்லி அழைக்கும் வழக்கமும் மறைந்து பொதுவாக அங்கிள், ஆண்டி என்று அழைக்க ஆரம்பித்தி ருக்கிறோம். உறவு முறை சொல்லி அழைப்பதால் உறவு நெருக்க மடைகிறது. விபத்தில் யாராவது அடிபட்டுக் கிடப்பதைக் கண்டால் கூட உதவி செய்யாமல் கண்டும் காணாததுபோல் போய்விடும் மனோபாவமும் மேலோங்கியிருக்கிறது. உறவினர்கள் வந்தால் மகிழ்ச்சியோடு வரவேற்றது போய் மிக நெருங்கிய உறவினர்கள் வருவதானால் ”என் பையனுக்குப் பரீக்ஷை என் பெண்ணுக்குப் பரீக்ஷை அதனால் இப்பொழுது வராதீர்கள் என்று சொல்லும் அளவுக்கு உறவு முறைகள் சீர் கெட்டுக் கொண்டிருக்கின்றன.

இதற்கிடையில் நம்பிக்கைக் கீற்றுகளும் தென்படாமல் இல்லை. இரு ஆண்டுகளுக்கு முன்னால் மும்பை மின்சார வண்டியில் குண்டு வெடித்த போது அங்குள்ள மக்கள் காட்டிய தீரம், நிதானம், உதவும் மனப்பன்மை உலகையே வியக்க வைத்தது. சுனாமியில் மனிதர்களின் மனிதபிமானம் வெளிப்பட்டது. சமீபத்தில் வந்த தினமணி கதிரில் ஆம்புலன்ஸ் கணேசன் என்பவரைப் பற்றிய கட்டுரை படித்தேன். விபத்தில் சிக்கியவர்களைப் பாதுகாப்பாக மருத்துவ மனையில் கொண்டு போய் சேர்ப்பதற்காவே 5 ஆம்புலன்ஸ் வைத்திருக்கிறார். ஏராளமானோரைத் தக்க சமயத்தில் மருத்துவ மனையில் சேர்த்து அவர்கள் உயிர் பிழைக்க வழி செய்திருக்கிறார்.

அநாதைப் பிரேத ஸம்ஸ்காரம் அஸ்வமேத யாகத்துக்கு சமம் என்று சொல்வார்கள். கணேசன் எத்தனையோ அஸ்வமேத யாகம் செய்து விட்டார்!

”நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
எல்லோர்க்கும் பெய்யும் மழை”

என்ற ஔவையின் முது மொழிக்கேற்ப இப்படிப் பட்ட நல்ல பண்புள்ளம் கொண்டவர்கள் இருப்பதால் தான் மழை பெய்கிறதோ என்று தோன்றுகிறது.

வாழையடி வாழையாய் வரும் நற் பண்புகள் வாழ்ந்தும் வளர்ந்துகொண்டும் இருக்கின்றன. இவை இன்னும் மேலும் மேலும் வளர்ந்து வையம் தழைக்க வேண்டும்.

3/11/2008 அன்று திருநெல்வேலி ஆல் இண்டிய ரேடியோவில் நிகழ்த்தப்பட்ட உரை. நிகழ்த்தியவர் திருமதி.எஸ்.ஜயலக்ஷ்மி. 14/11/08 அன்று மாலை வாடாமலர் நிகழ்ச்சியில் 6.15க்கு ஒலிபரப்பப்பட்டது.

7 Replies to “வாழையடி வாழையாய் வரும் நற்பண்புகள்”

 1. வணக்கம்

  அனைவருக்கும் தீபத்திருநாள் வாழ்த்துக்கள்.
  ///வாழையடி வாழையாய் வரும் நற் பண்புகள் வாழ்ந்தும் வளர்ந்துகொண்டும் இருக்கின்றன. இவை இன்னும் மேலும் மேலும் வளர்ந்து வையம் தழைக்க வேண்டும்.///

  இதுவே இந்நாளின் வாழ்த்தும், சங்கல்பமும் ஆகும்.

 2. Even when mohamad nabi is saying mother same as God, which same as mother country, in which you life, the society, so can not understand some muslims can not sing the song “Vandemadharam”, when I use to be small boy, my father encourged to sing, he did not even tell me what does it mean, the feeling inside was can not be explained.

 3. Akka You have touched all areas – it is really very nice and read the entire write up. I fully agree with your views on relationship between teachers and students and among family members. I admire your observation. Keep writing .

 4. Life is inscrutable. Good and bad co-exist. Old-time values seem to disappear. Only rarely do we see them manifest. Materiialism is reigning supreme. Perhaps it will get worse as time progresses. But in the long run things will get rectified since ultimately it is a cyclic process and we have to get back to where we started. But don’t ask me “how long” is “in the long run”

 5. Both are very nice. Kazhugumalai and good qualities. Everyone should read and know about the good qualities

  gowri

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *