பிறப்பும் சிறப்பும் இறப்பும் – 3

முந்தைய பகுதிகள்:

ஆம், நமக்கு இறைவனை விட மிக நெருங்கியவன் யார்? நாம் என்றும் நாமாக இருந்தால் இறைவன் நம்முடன் உள்ளதை நாம் எப்போதும் உணர்வோம். ஆனால் அதற்குள்தான் நமது மனம் வந்து நம்மைப் பல விஷயங்களில் அலைபாய வைக்கிறதே. சரி, நாம் எப்போதும் உள்ள நிலையை எப்படித்தான் உணர்வது? நம்முடன் வாழ்ந்த, மற்றும் நாம் அறியாத பல சான்றோர்கள் சொல்வதைக்கொண்டு பார்த்தால், நாம் நமது பிறப்பையோ, இறப்பையோ மிகவும் பொருட்படுத்தாது, நாம் வாழும் இயல்பு நிலையை ஆராய்ந்து பார்க்கக் கற்றுக் கொள்ள வேண்டும். எது எதற்கோ நாம் நேரம், காலம் என்று செலவழிக்கிறோம், ஆனால் இதைப் புரிந்து கொள்ள முயற்சி செய்வதற்கு மிகவும் யோசிப்போம். ரமணர் என்ன மேலும் சொல்கிறார் என்று பார்க்கலாமா?

மரண பயம் மிக்க உள அம்மக்கள் அரணாக
மரணபவம் இல்லா மகேசன் – சரணமே
சார்வார் தம் சார்வோடு தாம் சாவுற்றார் சாவு எண்ணம்
சார்வரோ சாவாதவர்

சாதாரணமாக ஒரு மங்கலச் செய்யுள் இருக்க வேண்டிய “உள்ளது நாற்பது” என்ற அவர் நூலில் வரும் இந்த இரண்டாம் மங்கலச் செய்யுள் இயற்றப்பட்டதே ஒரு தனிக் கதை. “உள்ளது அலது…………” என்று தொடங்கும் அந்த முதல் மங்கலச் செய்யுளை நாம் வாய்மை வெல்கிறதா? வாய் மெய்யை மெல்கிறதா? என்ற கட்டுரையில் முன்பே பார்த்திருக்கிறோம். அது உட்பட எல்லாச் செய்யுட்களையும் சரி பார்த்து, வரிசைப் படுத்திய அவரது முதல் நிலை சீடரான கணபதி முனி என்பவர் “இது என்ன, எல்லாம் நிர்குண உபாசனை சம்பந்தப்பட்டதாக இருக்கிறதே, ஏதேனும் ஒன்றாவது சகுண வாசனையுடன் இருக்கட்டுமே” என்று சொல்ல, ரமணரும் மேலே உள்ள செய்யுளை இயற்றி, அதை இரண்டாம் மங்கலச் செய்யுளாகச் சேர்த்ததாக நான் கேள்விப்பட்டிருக்கிறேன். மேலும் இது ரமணர்,

“நான் இறந்து விட்டேன், இந்த உடலை இப்போது எடுத்துக் கொண்டு போய் மயானத்தில் எரித்து விடுவார்கள்; ஆனால் நான் இன்னும் இதோ இருக்கிறேனே? ஆக நான் இந்த உடல் இல்லை”

என்ற தன் சத்து-சித்து-ஆனந்த நிலையை சிறு வயதிலேயே உணர்ந்த அனுபவத்தின் பேரில் எழுதப்பட்டது என்றே நாம் கொள்ளலாம். இச்செய்யுள் நமக்கு என்ன சொல்கிறது?

பொருள்: மரண பயம் மிகத் தீவிரமாக உள்ள நல்ல குணமுடைய மனிதர்கள், பிறப்பு இறப்பு என்ற இரண்டும் இல்லாத ஒரு பாதுகாப்புள்ள கோட்டையாக விளங்கும் மகேஸ்வரன் சரணத்தை நாடி அடைக்கலம் அடைவார்கள். தனது பந்த பாசங்கள், பற்றுக்கள் இவைகளோடு அடைக்கலம் அடைந்தவர்கள் தம்முடைய ஜீவ பாவமும் அறவே ஒழிந்தவர் ஆவார்கள். அப்படிச் சாவாத தன்மையடைந்த ஜீவன் முக்தர்கள் மறுபடியும் மரணத்தைப் பற்றிய எண்ணத்தை அடைவார்களோ?

smashan-cremationசாதாரணமாக ஒருவனின் வைராக்கியத்தைச் சொல்லும்போது பிரசவ வைராக்கியம், மயான வைராக்கியம் என்று இரண்டைச் சொல்வார்கள். ஒன்று பிறப்பையும், மற்றது இறப்பையும் பற்றியது. இது இரண்டுக்கும் இடையில் தானே வாழ்க்கை அமைகிறது. அதனால் இவ்விரண்டையும் சொல்லி விட்டால் எல்லாம் சொன்னது போல என்று பெரியோர்கள் நினைத்திருக்க வேண்டும்.

ஒருவன் தன் மனைவிக்குக் குழந்தை பிறக்கும் போது படும் கஷ்டத்தை நினைத்துக்கொண்டோ, அல்லது ஒரு பெண்ணே தனது நிலையை நினைத்து அவதிப்படும்போதோ, இன்னுமொரு குழந்தை வேண்டாமே என்று நினைப்பதுதான் பிரசவ வைராக்கியம். குழந்தையின் மழலையில் அது காலப் போக்கில் கரைந்து போகலாம்.

அதுபோலவே ஒருவன் தனது உற்றாரோ, சுற்றமோ இறந்து போகும்போது, மயானத்தில் இட்டு விட்டு வரும் போது நமக்கும் ஒருநாள் இப்படித்தானே நடக்கும், இனி அனைவருடனும் மிக அன்பாகவும், கருணையுடனும் இருக்க வேண்டும் என்று நினைப்பது மயான வைராக்கியம். இதுவும் பின்னாளில் ஓரளவாவது கரையக் கூடும்.

ஆனாலும் ஒருவரை நல் வழியில் கொண்டு வருவதற்கு, மரண பயத்தைப் போன்றதொரு சாதனம் வேறு கிடையாது. ஞானம் பெறுவதற்கும், நாம் உலகில் நல்லதையே நினைத்து, நல்லதையே பேசி, நல்லதையே செய்வதற்கும் அது ஒரு பயனுள்ள சாதனம் தான். ரமணருக்கு ஞானம் அப்படித்தான் வந்தது. மற்றவர்கள் நல்ல வழியில் செல்வதற்காவது அதை உபயோகப்படுத்திக் கொண்டால் அவர்களுக்கு நன்மையே.

அப்படி வரும் மரண பயத்தைப் பற்றி சிறிதேனும் யோசித்தவர்கள் நன்கு தெளிவு அடைவார்கள். ஏனெனில், மரணம் என்பதை யாரும் தவிர்க்க முடியாது. ஒன்று சொல்வார்களே? வாழ்க்கையில் நிச்சயமானது என்று ஒன்று உண்டென்றால் அது மரணம்தான் என்று. இதை விட உண்மையான வாக்கியம் வேறு ஒன்று உண்டோ? தவிர்க்க முடியாது என்பதை நினைவில் கொண்டு மேலும் அதை அலசினால், அப்படிப்பட்ட மனிதர்களில் பலர் முதலில் செய்வதென்ன?

இறைவனைத் துதிப்பார்கள். ஏன்? மரணம் என்பது அவர்களைப் பொறுத்தவரை ஒரு முடிவினைக் குறிக்கிறது. அதனால் முடிவே இல்லாத இறைவனைத் துதித்து முடிவுள்ள தமக்கு ஒரு பாதுகாப்பினைத் தேடுகிறார்கள். அப்படித் தேடுபவர்கள், முடிவில்லாத இறைவனிடம் அடைக்கலம் அடைகிறார்கள் என்றுதான் பொருள். அந்தச் சரணாகதி ஒரு முழுச் சரணாகதி என்றால் இறைவனை நாடுபவர்களும் இறைவனைப் போலவே முடிவற்றவர்களாக ஆவதால், அவர்களுக்குச் சாவு என்று ஏதும் உண்டோ என்று கேட்கிறார் ரமணர். அதற்குப் பின்னும் அவர்களுக்கு சாவு பயம் வருமென்றால், அவர்களது சரணாகதி பூரண சரணாகதி இல்லை என்பதைத் தவிர வேறென்ன சொல்வது?

அப்படியென்றால் அவர்கள் தங்கள் சரணாகதியை பரிபூரணமாக்கும் முயற்சியில்தான் ஈடுபட வேண்டும். எவ்வளவோ முயன்றுதான் பார்க்கிறேன், முடியவில்லையே என்று பலர் சொல்வார்கள். சிலர் இப்படித்தான் எனக்கு இருக்கும் போலிருக்கிறது, என்று தம் வினையை நொந்து கொள்வார்கள். அதற்கு ரமணர் என்ன சொல்வார் என்று பார்க்கலாம்.

வினை முதல் நாம் ஆயின் வினைப் பயன் துய்ப்போம்
வினை முதல் ஆரென்று வினவித் – தனை அறிய
கர்த்தத்துவம் போய்க் கருமம் மூன்றும் கழலும்
நித்தமாம் முக்தி நிலை

ramanars-mother-died-in-skandasramamபொருள்: செய்யப்படும் கர்மங்களின் கர்த்தா நாமே என்று எண்ணினால், அந்தக் கர்மங்களினால் விளையக்கூடிய பயனையும் நாமே அனுபவிப்போம். இந்தக் கர்மங்களைச் செய்யும் கர்த்தாவாகிய நான் யார் என்று விசாரித்து தனது பரமார்த்த உண்மையை அறிந்தால், கர்மங்களைச் செய்யும் கர்த்தா நான் அன்னும் அபிமானம் நீங்கும். அத்துடன் சஞ்சிதம், ஆகாமியம், பிராப்தம் என்ற மூன்று கர்மங்களும் அழிந்துவிடும். இந்த நிலையே நித்தியமாகிய முக்தி நிலை.

இது “நான்” எனும் கணவன் இறந்துவிட்டால் அவனது மூன்று மனைவிகளும் கைம்மை அடைவதைப்போல, கர்த்தா நான் இல்லை என்றால் கர்மம் மூன்றும் நம்மை ஒட்டாது என்று முன்பே ரமணர் சொன்ன கருத்துதான். ஆனாலும் இதில் ஒரு சிறப்பு என்ன என்றால், அப்படி அவர் முன்பு சொன்னது ஞானிகள் விஷயத்தில். இப்போது அவர் சொல்வதோ எவர் விஷயத்திற்கும் பொருந்தும். இதுதான் ரமணர் போன்ற ஞானிகளுக்கும் நமக்கும் உள்ள வித்தியாசம். அவர்கள் கண்ணில் ஞானி என்றோ, அஞ்ஞானி என்றோ எந்தப் பாகுபாடும் கிடையாது. “நான்” எனும் அபிமானத்தை அழித்துவிட்டு ஒருவன் இருக்கிறான், இன்னொருவன் அதை அழிக்க முடியாது இருக்கிறான். அதைத் தவிர வேறு வித்தியாசம் ஏதும் இல்லை.

ஆக நம்மைப் பொறுத்தவரை நாம் ஞானி ஆவதற்கு ஒரு எளிதான வழி சொல்லியிருக்கிறார். அதாவது, நாம் செய்யும் செயல் எதுவானாலும் “அது அவன் செயல்” என்று உளமார நினைத்து அவனுக்காகவே செய்ய வேண்டும். அது போதும். இதுவேதான் பூரண சரணாகதி என்று சொல்லப்படுவது அல்லவா? அதில் சிறிது தவறி நாம் செய்கிறோம் என்றோ, அவனா செய்கிறான் என்றோ சிறிதாவது சந்தேகம் அடைந்தாலோ, நாம் நமது வினையைக் கூட்டிக் கொள்கிறோம் என்றே ஆகும். அப்போது அதன் பலனையும் நாமே எதிர்கொள்ள வேண்டும் – இப்பிறவியிலோ அல்லது எப்பிறவியிலோ. அப்படி என்றால் பிறந்தவன் எவன் என்று தெரிந்து கொள்ள வேண்டுமா?

பிறந்தது எவன் தன் பிரம்ம மூலத்தே
பிறந்தது எவண் நான் என்று பேணிப் – பிறந்தான்
அவனே பிறந்தான் அவன் நிதம் முனீசன்
அவன் நவன் நவன் தினமும் நாடு

ganga_rishikeshபொருள்: எவனொருவன் தான் பிறந்தது எங்கே என்று விசாரித்து, தனது இருப்பிடமாகிய பிரம்ம மூலத்தில் பிறந்தானோ (மூலத்தை அடைந்தானோ) அவனே பிறந்தவன் ஆவான். அப்படிப் பிறந்த அவன் நித்தியமான முனீசன் ஆவான். அவன் எப்போதும் புதுமையோடு விளங்குவான் என்று அறிவாய்.

நான் உடல், இல்லை மனம், இல்லை புத்தி, …. என்றிவ்வாறான நிலைகள் எல்லாவற்றையும் கடந்து எவன் தனது “என்றும் உள்ள” சொரூபத்தை உணர்ந்து அதிலேயே நிலைத்து நின்று, சகல சீவ ராசிகளையும் அவ்வாறே காண்கிறானோ, அவனே பிறப்பு – இறப்பு எனும் நிலைகளைக் கடந்த சிறப்பை அடைந்தவன். அதுவரை அவன் மீண்டும் மீண்டும் வந்து இறுதியில் இந்த நிலையையே அடைகிறான். “அடைகிறான்” என்பதைவிட “என்றும் இப்படியே உள்ளோம்; ஆனாலும் அதை உணராது இருந்தோம்” என்பதைத் தெரிந்து கொள்கிறான். இதுவே பேரறிவு எனப்படுகிறது. எதைத் தெரிந்து கொண்டால் மேலும் தெரிவதற்கு ஏதுமில்லையோ அதைவிட சிறப்பு ஏதும் உண்டோ?

அந்தச் சிறப்பை அடைபவர்கள் எந்த வழி அவர்களுக்கு இயல்பாக இருக்கிறதோ அதன் மூலம் அடையலாம், வேறு வழிகள் வாயிலாய் வந்து சேர்ந்தாலும் மற்ற வழிகளின் தாக்கங்களையும் அவர்கள் அப்போது உணரலாம். ரமணர் உறுதியாகக் கூறுகிறார்:

ஆதலினால் அறிவு மயமாம் சுத்த
இதயத்தே அகத்தைச் சேர்க்கும்
சாதனையால் வாதனைகளொடு வாயு
ஒடுக்கமுமே சாருந் தானே

பொருள்: ஆகையினாலே அறிவு சொரூபமான தூய சச்சிதானந்த இதயத்தில் மனதை அதனிடம் சேர்க்கும் பயிற்சியினால் வாசனைகளின் அழிவும், பிராண வாயுவின் ஒடுக்கமும் தானாகவே அடையக்கூடும்.

ஒருவன் தனது இயல்பான வழிகளில் செல்லும் மனத்தைக் கட்டுப் படுத்தியோ, பிராண வாயுவை அடக்கிச் செய்யும் பயிற்சிகள் மூலமோ, இறைவனிடம் பக்தி செலுத்தியோ, தம் தம் கடமைகளைச் செவ்வனே ஆற்றியோ, வேறு எந்த வழிகளிலோ சென்று தனது ஆன்ம நிலையை எய்தலாம். ஆன்ம நிலையை எய்தியவன் மேலே சொன்ன அனைத்தும் தமக்குப் பொருந்துகிறது என்றும் பின்னர் உணரலாம். காரணத்தினால் காரியத்தையும், காரியத்தினால் காரணத்தையும் முன்னும் பின்னுமாக இருவரும் உணர்வார்கள்.

நான் இதைச் செய்து அதை அடைந்தேன் என்று இங்கு கூற வாய்ப்பில்லை. நான் என்னை விசாரித்துத் தன்னை உணர்ந்தேன், ஆனாலும் அன்றும் இன்றும் எப்போதும் அப்படியே உள்ளேன் என்று சொல்லாமல் சொல்லி, நினையாமல் நினைப்பதே இங்கு உள்ள சிறப்பு.

(முற்றும்)

One Reply to “பிறப்பும் சிறப்பும் இறப்பும் – 3”

  1. Pingback: Indli.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *