Invading the Sacred: அமெரிக்காவில் நிகழும் இந்துமத ”ஆய்வுகள்” – பகுதி (2)

கடாமரின் கொள்கைகளை இப்படிப் பயன்படுத்தலாமா என்று ஆட்சேபிக்கிறார் டேவிட் ப்ரீட்ஹோல்ம். கடாமரின் fushion of horizons முறையைப் பின்பற்றித் தான் ஸ்ரீராமகிருஷ்ணரின் வாழ்வை ஆய்வு செய்தேன் என்று க்ரைபல் சொல்வது தவறாகும் என்று கூறுகிறார் டேவிட். இது உண்மையில் கடாமரின் முறையைப் புரிந்துகொள்ளாமல் தப்புந்தவறுமாகக் கையாளுவது என்று கூறுகிறார்.

சரி இவர்கள் ஏன் இந்த மாதிரி ஏதாவது கோட்பாடுகளைக் கைக்கொண்டுதான் மகான்களின் வாழ்க்கையைப் புரிந்துகொள்ள வேண்டுமா? அப்படிப் புரிந்துகொள்ளும் போதும் ஏன் செருப்புக்கு ஏத்தபடி கால் என்று கோட்பாடுகளுக்கு ஏற்றாற்போல் உண்மைகளைத் திரிப்பானேன்? இதற்கு ஒரு விடை இந்த invading the sacred என்ற நூல் தோன்றுவதற்கே மூல காரணராய் இருந்த திரு ராஜிவ் மல்ஹோத்ரா தரும் சக்ரா விளக்கவியல் கோட்பாடு என்பதில் இருக்கிறது.

ராஜீவ் மல்ஹோத்ரா
ராஜீவ் மல்ஹோத்ரா

திரு ராஜிவ் மல்ஹோத்ரா இணயத்தில் ஸுலேகா முதலிய தளங்களில் எழுதி எடுத்த முயற்சிகளே பெரும் தூண்டுகோலாய் இருந்திருக்கிறது இத்தகைய அறிவு ரீதியான சூதுகளை அம்பலாமாக்குவதற்கு. அது மட்டுமன்று அவர் செய்த மற்றொரு நல்ல செயல் இந்த மாதிரிக் கல்விக் கழகங்களில் ஏற்படும் சூழ்ச்சிக் கூட்டாளிகள் எப்படி பாரபட்சமற்ற அறிவு நிரூபண நெறிமுறைகளையும் பலவிதங்களில் ஊடுருவி வெறும் கேலிக்கூத்தாய் ஆக்கிவிட முடிகிறது என்பதையும் வெட்ட வெளிச்சமாக ஆக்கியது. அதுதான் சூழ்ச்சிக்கார ஆய்வாளர்களின் கோபத்தை பெரும் அளவு மல்ஹோத்ரா, அவருடைய கருத்தின் நியாயத்தை இணங்கிய வேறு யாரேனும், அது தங்களுடைய ஆய்வுக்குடும்பத்தைச் சேர்ந்த ஆளாகவே இருந்தாலும் (உதாரணம் அந்தோனியோ து நிக்கோலா) அவர்களுக்கு எதிராகத் தூண்டியது.

ராஜயோகத்தில் ஏழு சக்ரங்களைப் பற்றிக் கூறுவார்கள். முதல் மூன்று சக்ரங்கள் மூலாதாரம், மணிபூரகம், ஸ்வாதிஷ்டானம். இந்த சக்ரங்களில் மனது சஞ்சரிக்கும் வரை உலகாயத ரீதியிலான விஷயங்களில்தான் நாட்டம் செல்லும். அந்த விஷயங்களே உண்மை என்ற தீவிர பிடிப்பு இருக்கும். எந்த உயர்ந்த மனநிலைகளையும் எப்படியாவது தம்முடைய நிலைகளுக்கு ஏற்றாற் போல் மாற்றி அர்த்தம் பண்ணிக் கொள்ளத்தான் முனைப்பு இருக்கும்.

ஸ்ரீராமகிருஷ்ணர் சொல்வதுபோல் நாலாவது சக்ரமாகிய அனாகதத்திற்கு வந்ததும்தான் மனம் ஆன்மிக விஷயங்கள் என்பதையே ஆர்வமுடன் ஈடுபடும். ஆனாலும் வாசனா பலத்தால் மீண்டும் மீண்டும் கீழ் மூன்று சக்ரங்களில் போய் விழும். பிறகு ஐந்தாவதான விசுத்தி, ஆறான ஆக்ஞா ஏழான ஸஹஸ்ராரம் இவையெல்லாம் உறுதியான ஆன்மிக மனநிலைகள். உண்மையின் காட்சி மறைக்கப்படாத சக்ரங்கள்.

மல்ஹோத்ரா கூறுவது பொதுவாக மேலை நாட்டு நாகரிக ஆய்வாளர்கள் இந்தக் கீழ்மூன்று சக்ரங்களில் இருந்துதான் ஆய்வு நடத்துகிறார்கள் என்பது. எனவே அவர்களால் உயர்ந்த சக்ரங்களின் பார்வையில் கருத்துக்களைக் கூற மொழி கையாளப் படும்பொழுது, அந்த மொழி உருவகங்கள் இவற்றிலிருந்து உயர்ந்த நிலைகளுக்கான உட்செறிவுகள் புரிந்துகொள்ளப் படாமலே போய் வேறும் மொழியின் மேல் கூடுகளாய் இருக்கும் அம்சஙகள் மட்டுமே, உருவகங்களின் அடிமட்டமான கட்டுமானங்களே நிதர்சனங்களாகக் கைக்கொள்ளப் படுகின்றன.

உதாரணமாக ஆணும் பெண்ணும் மணம் புரிதல், உடலுறவு கொண்டு மக்களைப் பெறுதல் என்பது மனித வாழ்வின் புறவயமான யதார்த்தம். மனித உயிராய் இருக்கும் எதுவும் எதார்த்தமாக இந்தப் பிணைப்பில் குடும்பமாக ஆகி சமுதாயம் சென்று கொண்டிருக்கிறது. உலக அடிப்படை உண்மைகளை தத்வார்த்தங்களை உணர்த்த வரும் ஆன்மிகம் பிரபஞ்சத்தின் அடிப்படை சத்யமும் அதன் இயங்கு திறனும் ஒரே தத்துவத்தின் இரு காட்சிகளாய்ப் பிரிக்க முடியாதவை என்று கூறவந்தால் என்ன செய்யும்? ஏற்கனவே மனிதனின் அன்றாட அனுபவத்தில் இருக்கும் ஆண்பெண் கூட்டுறவு என்ற புழங்குகருத்தைப் பயன்படுத்தி, தான் சொல்ல வரும் தத்வார்த்தத்தை விளக்க முயலும்.

பிரபஞ்ச காரணமான சத்யமும், அதன் இயங்கு திறனும் ஆண்பெண் இணைந்த ஒரு கூட்டுறவான குடும்பம். இதன்றி அது இல்லை. பழங்காலத்தில் வேறு எப்படியும் பொது மககளுக்குப் புரிய வைக்கவும் முடியாது. அன்றாடமான அடிமட்டமான உறவுகளையும், நெருக்கங்களையும் வைத்துத்தான் மிக உன்னதமான தத்வார்த்தமான ஒன்றிப்புகளையும் கூறமுடியும், அதுவும் அந்தக் காலத்தில். அப்படி தத்வங்களை பொதுமக்கள் பாஷையில் கூற வந்தவைதான் புராணங்கள்.

பல கதைகள். இதில் மக்கள் குழுக்களில் வழிவழியாக வரும் யதார்த்தமான வரலாறுகளும், கதைகளும், உருவகங்களும் ஏற்கனவே இருந்துகொண்டே இருப்பன. புராணப் படுத்துதல் என்பது எப்பொழுது ஆரம்பிக்கிறது? எப்பொழுது உயர்ந்த ஆன்மிகக் கருத்துகள் பெரும்பான்மையான மக்களால் புரிந்துகொள்ளப்படும் விதத்தில் மொழியாட்சி, உருவக ஏற்றம் என்பதற்கு உட்படுத்தப் படுகிறதோ அப்பொழுதுதான். இந்தக் கூறுகள் எல்லாம் நம் ஆன்மிகப் பண்பாட்டில் படிந்து பழகிய மனங்களுக்கு இயல்பாகப் புரிந்துகொள்ளப்படும் மொழியாடல்களாக இருக்கின்றன.

காரணம் உயர்ந்த சக்ரங்களுக்கான பார்வைகளின் ஒரு முன்னூட்டம் நமக்குப் பிறப்பின் காரணமாகவே இந்த மண்ணில் பண்பாட்டு அம்சமாக ஊட்டப்பட்டு விடுகிறது நம்மை அறியாமலேயே. எனவேதான் தெய்வங்களுக்கு இடையில் நடைபெறும் உறவுகளுக்கு நாம் என்றும் யதர்த்தமான பொருள் love_games_of_radha_and_krishna_wp08கொள்வதில்லை. அதைத் தத்வார்த்தமானது என்று நம் மனமே தனிப்பட பிரித்துப் பார்க்கிறது. அது ஏதோ தத்வ ரீதியான கருத்து ஒன்றைக் கூறவந்த மொழி உருவக வடிவே என்று நாம் அறிஞராய் இருந்தாலும் சரி பாமரனாய் இருந்தாலும் சரி பாரத குடிமகன் ஒவ்வொருவர் புரிதலிலும் இந்த முதிர்ச்சியான புரிந்துகொள்ளுதல் ஊறிப்போயிருக்கிறது. ஒரு சமயத்தில் நாமே இவற்றைப்பற்றிக் கொச்சையாகக் கேள்வி கேட்டுப் பார்த்தாலும் உள்மனத்தில் நமக்கு ஓர் எண்ணம் இருக்கவே செய்கிறது. இவை புறப்பொருள் ரீதியான நிகழ்வுகள் அல்ல என்று. என்ன அறிவு ஜீவிகளாய் இருக்கும் நம்மில் சிலர் என்ன சொல்வோம்? ஏன் தத்வங்களை உள்ளபடி சொல்லிவிடக் கூடாதா? எதற்கு இந்த மாதிரியான விபரீதக் கற்பனைகளும் உருவகங்களும்.? இன்று பரவியுள்ள பொதுக் கல்வியின் தாக்கத்தை வைத்து நாம் அன்றைய ஆக்கங்களுக்கு விமரிசனம் செய்ய முயல்கிறோம் என்பதை மறந்துவிடக்கூடாது.

ஆனாலும் நாம் யாராயினும் எல்லோருமே அன்றாட வாழ்வில் எந்த ஒழுங்கீனங்களையும், பாலியல் ரீதியிலான வக்ரங்களையும் ஒரு போதும் ஒப்புவதில்லை. பொது இடத்தில் உறவுமுறைகளின் கௌரவம் இப்படித்தான் பேணப்பட வேண்டும் என்பதில் நாம் மேலை நாடுகளைவிட கறாரான சமுதாயமே. என்றும் புராண உருவகங்களையும் நடைமுறை வாழ்க்கையையும் போட்டு ஒரு நாளும் யாரும் குழப்பிக் கொள்வதில்லை.

நமது பொது மக்கள் ரீதியிலான இந்த முதிர்ச்சியான மனநிலையும் இல்லாமலேதான் செமித்திய மதப் பண்பாட்டுச் சூழலில் வளர்ந்த மேலைநாட்டு ஆய்வாளர்கள் புராணக் கருத்துக்களையும் உருவகங்களையும் அப்படி அப்படியே கொச்சையாக அர்த்தம் கொண்டு, அதுவும் போதாதென்று மொட்டைத்தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போடும் கணக்காய்ப் பொருந்தாத உருவகங்களையெல்லாம் வலுக்கட்டாயமாக வலிந்து பொருத்தித் தாமே பல புனைவுகளில் ஈடுபடுகின்றனர். தத்வார்த்தங்கள் எல்லாம் அடிமட்டமான கருத்துக்களை மூடிமறைக்கச் செய்யும் சால்ஜாப்பே என்பது அவர்களுடைய முன்முடிவு நம்பிக்கையாகும்.

ஹிந்து மதக் கருத்துக்கள் அறிவியலும் கண்டு வியந்து உவக்கும் தத்துவச்செறிவு கொண்டவை என்பது விவேகாநந்தரில் தொடங்கி உலகம் எங்கணும் பரவலாகச் சென்றடைந்த ஆன்மிக விளக்கம் என்பது வரலாறு. அந்த வரலற்றை எப்படியாவது இல்லையாக்கிவிட வேண்டும் என்று சிலக் கூட்டங்கள் முயற்சி செய்வது போல் இருக்கிறது இந்த மாதிரியான சூழ்ச்சிகளும், சொதப்பல்களும்.

ஒரு காலத்தில் ‘நாம்–அவர்கள்’ என்ற பிணக்கு ஆய்வுத்துறையிலும், இலக்கிய ஆக்கங்களிலும் கடும் உளைச்சல் கொடுத்துவந்ததை ஆய்ந்து வெளிப்படுத்தியிருக்கின்றனர் எட்வேர்ட் செயித் போன்றவர்கள். இலக்கியங்களே இந்த ‘உள்ளே வெளியே’ சூதாட்டத்திற்கு இரையான கொடுமையை தமது ‘ஓரியண்டாலிஸம்’ (Orientalism) என்ற நூலிலும், ‘கல்சர் அண்ட் இம்பீரியாலிஸம்’ (Culture and Imperialism) என்ற நூலிலும் விளக்கமாக ஆராய்ந்திருக்கிறார் செயித் என்னும் அராபிய கிறித்தவராகப் பிறந்து அமெரிக்கா சென்று குடியேறி பேராசியராகப் பணிபுரிந்தவர். இந்த ‘நாம் — அவர்கள்’ என்ற பிணக்கு இன்று அமெரிக்கச் சூழ்நிலையில் சில பல்கலைக் கழக வளாகங்களிலேயே வெண்டி டொனீகர் போன்றவர்களின் செயலால் இன்னும் வக்ர முகம் அடைந்திருக்கிறது என்பதை இன்வேடிங் த சேக்ரட் நூலில் நன்கு வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

முதலில் மல்ஹோத்ராவின் Wendy’s Child Syndrome என்ற விளக்கக் கருவி மிக முக்கியமானது. இந்த WCS என்பதின் முக்கிய அம்சங்கள் என்ன என்று பார்த்தால் விஷய்ம் நன்கு சுவை படுகிறது.

1) மேலை நாட்டுப் பெண்கள் தங்கள் பாரம்பரியச் சூழலில் தங்களுக்கான இடம் மிகவும் அலட்சியக்கப்பட்ட ஒன்றாய் இருப்பதை உணர்ந்தார்கள். ஆனால் அதுவே ஹிந்து மதப் பண்பாட்டின் குடை நிழலில் ஒதுங்கின பாரம்பரியக் காட்சிகளில் பெண் என்பவளுக்கு, நன்கு முக்கியப் படுத்தப்பட்ட, கவனம் மிக்க இடம் தானாகவே அமைந்திருக்கக் கண்டார்கள். அதனால் முதலில் மிக ஆர்வத்துடனும் மதிப்புடனும் தங்கள் ஆய்வுகளை நடத்தியவர்கள் சிறிது காலத்தின் பிறகு தங்களுடைய உள்ளார்ந்த வாசனைகள் தலைதூக்கவும், ஹிந்துமதச் செழுமைகளை மெதுவாக தங்கள் பண்பாட்டுப் பெண் புனிதங்களின் மீது சுமத்தித் தங்கள் கையோங்கலை ஸ்தாபித்துக்கொள்ளத் தொடங்கி விட்டனர். ஹிந்துமதப் பெண்களின் ஆளுமைச் சித்திரத்தையும் தங்களின் உள்நோக்கங்களுக்குத் தகுந்தவாறு வரையறுக்கத் தொடங்கினர். தலைப்பொட்டு, சேலை, குனிந்த தலை நிமிராமை, கல்லானாலும் கணவன், தியாகச் சித்திரம் என்பன போன்ற கருத்துப்படங்கள் மட்டுமே ஹிந்துப் பெண்களுக்கான ஆமோதிக்கப்பட்ட வரையறை. யதார்த்தமான வாழும் மரபின் பெண்களின் காலத்திற்கேற்ற வளர்ச்சி என்பது இந்த அச்சடித்த உள்நோக்கம் மிகுந்த வலியுறுத்தும் வரையறையின் புறமான விபரீதம் என்று தீர்ப்புணர்த்தும் ஒரு அபிப்ப்ராயச் சூழலை பரவவிட்டனர்.

(இந்தச் சித்திரத்தில் பல அம்சங்கள் நாமே ஏற்கனவே பெண்ணின் விழுமியங்களாகப் பேணும் கருத்துக்கள்தானே என்று தோன்றும். ஆனால் நமது வாழும் மரபில் காலத்தோடு ஒட்டி வளர்கின்ற வளர்ச்சிக்கும் ஒரு சாத்தியத் திறவு கூடவே இருக்கிறது. நாம் சீதையை மட்டும் ஹிந்துப் பெண்ணின் சித்திரத்தில் காண்பதில்லை. நமது பார்வை ஸர்வதோமுகமானது. சீதையை வணங்கும் அதே நேரத்தில் திரௌபதியையும் நாம் கற்புக்கரசியாய்ப் பார்க்கிறோம். விழுந்த பழம் ஒட்டிக்கொள்வது ஒரு பெண் தன் மனத்தைத் திறந்து சொல்லத் தரப்படும் வாய்ப்பில், அஞ்சாது அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்கிறாள், அந்த அச்சமின்மையை சுற்றியிருக்கும் சமூகம் இயல்பாக எடுத்துக்கொள்கிறது என்றும் பார்க்கிறோம். அதே நேரத்தில் கலயாணமாகாத பெண் தன் வரனைத் தானே தீர்மானிப்பது மட்டுமன்று, அவன் தலைவிதியையும் தான் மாற்றி எழுத முடியும் என்பதை நிறுவுகிறாள் என்ற விழுமியத்தை சாவித்திரியிடம் பார்க்கிறோம்.

அநசூயையின் சித்திரம் ஒருபக்கம். அகல்யாவின் சித்திரம், நளாயினியின் சித்திரம், கண்ணகியின் சித்திரம், இந்திரனின் மகன் ஜயந்தனின் சம்பந்தமான கதைப் பின்னணியுடன் தரப்படும் மாதவி மணிமேகலை சித்திரம் ஒருபக்கம். தான் பெறாத குழந்தைக்கு முலை சுரந்த பெருந்தாயான யசோதை, தான் ஈன்ற மகவுகளைக் கங்கைக்கு இரையாக்கிய ஊர்வசி, புருஷகார பூதை என்று ஸ்ரீவைஷ்ணவச் சான்றோர்களால் கொண்டாடப்படும் ஸ்ரீமஹாலக்ஷ்மி, ஸ்ரீமஹாவிஷ்ணுவின் யோகநித்ரா என்று கொண்டாடப்படும் சண்டிகா, ரஜபுத்ரப் பெண்ணரசிகள், கணவனுக்குச் சமமாக அரியணை வீற்று அரசில் பங்கெடுத்த சோழ, சேர, பாண்டிய குல அரசிகள் — நமது பெண்மையைப் பற்றிய சித்திரஙக்ள் எண்ணத்தொலையாத முகங்களை உடையன. வரையறைக்கு இறாய்க்கும் இந்த பன்முக விழுமியப்பாட்டைப் புரிந்துகொள்வது சற்று கடினம். அதுவும் காலக் கோளாறுகளால் சில காலமாய் நாம் பெண்மைக்கு நமது மரபிற்கும் ஒவ்வாத முறையில் இழைத்திருக்கும் அநீதிகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டு பார்த்தால் புரிந்துகொள்வது இன்னும் சற்றுக் கடினம். கருத்துகளின் நுணுக்கப் பெருக்கம், காலத்தின் கொடுமை, இதை எதையுமே உணராத நம்மில் பலரின் அறியாமை இவைதான் இந்த மேலைநாட்டுப் பொறுப்பற்ற சிலரின் விஷமங்களுக்கு ஊக்கமளிக்கிற அடித்தளம்.)

வெண்டிக் கூட்டம் என்று சொல்லத்தக்கவர்கள், அதிலும் பெண்கள் இந்த மாதிரியான ஹிந்துவின் பெண்மையைப் பற்றிய விழுமியச் செறிவைத் தங்கள் உள்நோக்கத்திற்குப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். அதாவது தங்கள் சொந்த இனத்தில் தங்களுக்கு மறுக்கப்பட்ட வேட்கைகளையும், இஷ்டப்படியான சுயசரிதப் போக்குகளையும் ஹிந்துக் கடவுட் பெண்களின் மீதும், தேவியரின் மீதும் சுமத்தி அதற்குத் தகுந்தாற்போல் விளக்கம் கூற முற்படுகின்றனர். பல விழுமியங்கள் ஒன்றுக்கொன்று உள்தாங்கும் ஒரு மரபிலிருந்து ஒற்றைப்பட்டையை உருவி எடுத்து தங்கள் கற்பனைகளையும், தீரா வேட்கைகளையும் அதற்குள் புகுத்தி, பின்னர் அதுதான் மூல மரபிலும் இருக்கிறது, அவ்வாறு இல்லாது போனாலும் தங்கள் திரிபு வேலைக்கேற்பத்தான் மூல பாடங்களையே அர்த்தம் செய்யவேண்டும் என்ற போக்கு இது WCS என்பதில் ஒரு பிரதான அம்சம்.

2) WCS இல் இரண்டாவதாக, மேலைநாட்டு முறைசாராப் பாலியல் உறவு வகைகளான ஓரின முயக்கங்கள் பொது சமுதாயத்தில் தங்களுக்கு ஒரு வித கௌரவத்தையும், செல்வாக்கையும் சம்பாதித்துக்கொள்ள ஹிந்து மத விழுமியப் பெருக்கத்தின் செறிவு மிக்க தொன்மங்களைப் பயன்படுத்திக் கொண்டனர். அவர்கள் நோக்கத்திற்கு ஏற்ப மற்றொரு பண்பாட்டு அமைப்பில் கிளர்ந்த சில சோதனா முயற்சிகளைத் தங்களுக்கான சான்று தரும் சாய்வுரைகளாகப் பயன்படுத்த முயன்றனர். விளைவு விபரீதம்தான். (தம்முடைய அருட்செல்வத்தைப் பயன்கொள்ளத் தகுந்த சீடர்கள் வருவார்கள் என்று தமக்குக் காட்டப்பட்டும் இன்னும் அந்தக் குழந்தைகள் வரவில்லையே என்று தக்ஷிணேஸ்வரத்துத் அருட்புனல் கதறிய உருக்கம், இந்த அபத்தங்களின் நோக்கத்திற்கு ஏற்றாற்போல் ‘சின்னப் பையன்களிடம் கவர்ச்சி’யான விபரீதம் ஒன்று போதுமே உதாரணத்திற்கு).

3)அடுத்து அப்ரஹாமிய மதச் சூழலில் ஆண்டவனுக்கும், சாத்தானுக்கும் இருக்கும் நிரந்தரப் பிணக்கம், ‘நம்மவர்’ – ‘மற்றவர்’ என்ற சமன்பாட்டின் தலையில் ஏற்றப்பட்டு ’நாம்’ அல்லாத ’மற்றவர்கள்’ சாத்தானைப்போலவே கருதப் பட வேண்டியவர்கள் என்ற மனப்போக்கு அடைந்த விபரீதம்.

‘வெண்டிக் கொடுக்குகளின் விடம்பனம்’ என்று மொழிபெயர்க்கத் தக்க Wendy’s Child Syndrome என்பதின் முக்கிய அம்சங்களை மேலே கண்டவாறு இதுகாறும் விளக்கினோம். இனி இந்த வெ.கொ.வி யின் தாத்பர்யங்களாகச் சிலவற்றை மல்ஹோத்ரா அவர்கள் பட்டியல் இடுகிறார்கள். அவற்றையும் ஒரு சொடுக்குப் பார்வை பார்த்துவிட்டு ’நாம்–மற்றவர்’ என்பதின் அமெரிக்க பிராண்டு வக்ரம் என்ன என்பதைப் பார்க்க இருக்கிறோம் இனி.

WCS -Wendy’s Child Syndrome என்ற வார்த்தையை எப்படி மல்ஹோத்ரா கையாளுகிறார்? ஜெப்ரி க்ரைபல் Kali’s Child என்று நூல் எழுதினாரா? சரி இப்படி எழுதுகின்ற இவர்கள் மூலம் இயக்கும் கருத்துச் சூழ்நிலை யாருடையது? அந்த நபருடைய ஊக்கம், தாக்கம் இவற்றால்தானே இந்தக் கல்விப்பரம்பரை இப்படி அலங்கோல ஆய்வுகளில் ஈடுபடுகிறது. எனவே இதுவே ஒருவித உளவியல் சூன்யம் போல்தானே செயல்படுகிறது. அதன் பாதிப்பில் வந்தவர்கள் எல்லாம் ஒரே அபஸ்வரமாகப் பாடிக்கொண்டு. இந்தத் திருப்பித் திருப்பி உந்தித் தள்ளும் பழக்கச் சுழலை syndrome என்றால் இது வெண்டிக்கொடுக்கு syndrome அல்லவா? (கொடுக்கு — மகன்). இவ்வாறு ஒருவித கேலியாகத்தான் மல்ஹோத்ரா இந்தப் பெயரைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். ஆனால் அது மிகவும் குறிப்புணர்த்தும் பெயராகவும் மாறிவிட்டது.

இந்த WCS இன் தாத்பர்யங்களாக மல்ஹோத்ரா குறிப்பிடுபவை:

1) இந்த ஆய்வாளர்கள் பலபேருக்கு ஒரு மரபின் உள்ளாழங்களை அதன் நளினம் அறிந்து பயன் கொள்ளத்தக்க பண்பாட்டுச் சூழலைப்பற்றிய அறிவோ, பிரதேச மொழியறிவோ, மொழியாளுமையில் பண்பாட்டுக் கூறுகள் நடத்தும் செறிவான பொருள் தரங்கள் பற்றிய சாதாரண தெரிவோ எதுவுமே இருப்பதில்லை. எனவே அவர்களால் அந்தப் பிரதேச மொழியினராகிய அறிஞர்களின் விளக்கத்தை மிஞ்சுகிற அளவிற்கு யோசிக்கமுடிவதில்லை. ஆனால் அவ்வாறு தாங்கள் எடுத்த எடுப்பிலேயே மிஞ்சிப் போய்விடுவதாக மனப்பால் குடிக்கின்றனர்.

2) ஒரு மரபைச் சார்ந்த உள் தேசிகர்கள் இவர்களின் கலந்துரையாடலிலும், விவாதங்களிலும் கலந்துகொள்ள அனுமதிக்கப் படுவதில்லை. காரணம் பயம். கட்டி எழுப்பப்படும் கோணல்
சித்திரங்கள் முளையிலேயே கிள்ளி எறியப்படும் வாய்ப்பு அதிகம் அன்றோ! அப்படியே உள்ளே அனுமதித்தாலும் அவர்களுக்கான அந்தஸ்து ’விவரம் தெரிவிக்கும் ஊரான்’ என்பதே ஆகும்.

3) துறை சார்ந்த கருவிச் சொற்கள் கர்ம சிரத்தையாகத் தாறுமாறாக மொழிபெயர்க்கப்பட்டு, அலட்சியமான விதங்களில் கையாளப்பட்டு, எல்லா சொற்களும் கூடியவரையில் அவற்றின் அடிமட்டமான பொருளிலேயே வலுக்கட்டாயமாகப் பொருத்திவைக்கப் படுகின்றன.

chakra_chart

4) ஹிந்து மத நூல்களைப் படிக்குமிடத்து வேண்டுமென்றே யோக சக்ரங்களில் கீழ் மூன்று சக்ரங்களான மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம் இவற்றின் மூலமாகவே நூல் கருத்துகள் அணுகப்படுகின்றன. இதன் காரணம் மேல் சக்ரங்கள் மூலம் அணுகினால் நூல்களின் உள்ளார்ந்த உயர்வும், சிறப்பும் புலனாகி மாணவர்களுக்கு ஹிந்து மத நூல்களைப்பற்றிய ஈர்ப்பும் ஆர்வமும் மிக்குயர்ந்து விடுமே என்ற கவலை.

5) ஆய்வாளர்கள் இங்கொன்றும் அங்கொன்றுமாக இருக்கும் நூல் பகுதிகளைக் கத்திரித்து ஒட்டவைத்து, தற்கால எண்ணங்களை ஊடே கலசி ஒப்பேத்துவதில், ஒரு தோற்றத்தை ஏற்படுத்துவதில் கைதேர்ந்தவர்களாய் இருக்கின்றார்கள் என்பது.

6) இவர்கள் ஆய்வுகளை மறுக்கும் ஆதாரங்களை இவர்கள் காண மறுத்துவிடுவர். ஹிந்து மரபுக்குள்ளிருந்து வரும் மாற்றுக் கருத்துக்களை கவனிக்காமல் நிராகரித்தல், அல்லது கவனித்தே தொலைக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால் எதிர்ப்பவர்களை வசை பாடுவது.

7) ஆய்வாளர் ஒரு தலைப்பைப் பற்றி ஆராய்ந்தால் அப்புறம் அந்தத் தலைப்பே அவருடைய தனிப்பட்ட சொத்தாக உருவகிக்கப் படுகிறது.

இதைப்போன்ற அம்சங்களை இந்த WCS எனபதின் நடைமுறைத் தாக்கங்களாகக் காட்டுகிறார் ராஜிவ் மல்ஹோத்ரா.

இதைத்தவிர அமெரிக்காவில் குடியேற்ற காலங்களில் குடியேற வந்த ஐரோப்பியர்களுக்கும், அமெரிக்காவின் பூர்வ குடிகளுக்கும் இடையே பயமும், அந்நியத்தன்மையும், வெறுப்பும், பகையும், போரும் இருந்தன. அமெரிக்கர்களால் காட்டுமிராண்டிகள் நாகரிகம் அற்றவ்ர்கள்,
நாகரிகமான தங்கள் வாழ்விற்கு ஊறு விளைப்பவர்கள் என்று கருதப்பட்டனர் பூர்வ குடிகள். நாம் – அவர்கள் என்பது நாகரிகத்திற்கும் காட்டுமிராண்டித்தனத்திற்குமான சமன்பாடாக ஆகிவிட்டது. அமெரிக்கர்களின் இன்றைய மனத்தின் உள்ளும் ஊன்றிப்போயிருக்கும் மனோபாவம் இந்த ஆதிகால குடியேறிகள் – பூர்வகுடிகள் என்பவரிடையே நடந்த வெறுப்பும், போரும், பிணக்கமுமேயாம். இந்த ஆய்வாளர்களும் தங்களை எதிர்ப்பவர்களை அது என்னதான் அறிவு பூர்வமான தளமாக இருந்தாலும் அதெல்லாம் கவலையே இன்றி தயங்காது அந்த சரித்திர வயமான தங்கள் சமுதாய குடியேற்றப் பிரச்சனை சமன்பாட்டிலேயே வைத்துக் காண்கின்றனர்.

எனவேதான் ஹிந்துமதக் கோட்பாடுகளில் தாங்கள் உள்புகுந்தால் அது உடனேயே நாகரிகமிகுந்த தங்களுக்கான முன்னுரிமைப் பிரதேசமாக ஆகிவிடுகிறது இந்த ஆய்வாளருக்கு. எதிர்க்கும் ஹிந்துக்கள் அந்த பூர்வ குடிகளின் ஸ்தானத்தில் வைத்துப் பார்க்கப் படுகின்றனர். உடனேயே சக ஆய்வாளருக்கு விசில் ஊதப் படுகிறது. நாகரிக உலகிற்கே கேடு என்பதுபோல் பதட்டங்கள் பரப்பப் படுகின்றன. இந்தக் கருத்துப்புலத்தைச் சார்ந்த (அவர்கள் கண்ணோட்டத்தில்) பூர்வ குடிகளையும் அவர்களுக்கான பிராந்தியத்திற்குள் கட்டுப்படுத்தி வைக்கும் ஆத்திரமும் தொனிக்க ஆரம்பித்துவிடுகிறது.

(தொடரும்…)

8 Replies to “Invading the Sacred: அமெரிக்காவில் நிகழும் இந்துமத ”ஆய்வுகள்” – பகுதி (2)”

  1. Pingback: pligg.com
  2. Your observations are fantastic. By reading your review I think I will buy this book, read it and then give my comments.
    Many western writers have taken liberties with our literature. Even the great author, Amarthya Sen wrote in his book that Vedas are just collection of some hymns and not the storehouse of knowledge as claimed by some hindu organizations. (Argumentative Indian) I wanted to write to him to know our culture first before putting his ignorance in writing. He may be a Nobel laureate. But what he wrote about Vedas is incorrect.
    Thank you. Keep it up. My best wishes to you and your noble effort.
    (I passed out of my school in 1950 after 10th std and intermediate in 1953. I am writing Tamil after more than 50 years.)

  3. இந்த இரண்டாம் பகுதியில் ‘அநசூயையின் சித்திரம் ஒரு பக்கம்…’ என்று ஆரம்பிக்கும் பத்தியில் ‘தான் ஈன்ற மகவுகளை கங்கைக்கு இரையாக்கிய ஊர்வசி..’ என்று விழுந்திருக்கிறது. ஊர்வசி என்ற இடத்தில் கங்கை என்று இருக்கவேண்டும். ஆனால் இந்தக் கதையை நான் சின்ன வயதில் படித்த காலத்திலிருந்தே அந்த இடத்தில் ஊர்வசி என்றுதான் வைத்துப் படிக்கத் தோன்றுகிறது. கங்கையை கங்காதரரோடு அன்றி மானிடரோடு தொடர்பு படுத்திப் பார்க்க என் மனம் ஒப்புவதில்லை. இந்த மனப்பான்மையின் காரணமாக தவறிப்போய் ஊர்வசி என்று விழுந்திருக்கிறது. பொறுப்பீராக.

    ஸ்ரீரங்கம் வி மோக்னரங்கன்

  4. Amartya Sen got hisNobel prize for Economics. (We all know about Nobel prizes.Obama got it for peace this year for promising to do something for world peace!) He has been living outside India for a long time. But he is being promoted here by some vested interests as a ‘know it all’ about the history, culture and heritage of India, thinking that it will help them in their ‘fight’ against Hinutva forces.

  5. திரு ஸ்ரீரங்கம் வி மோக்னரங்கன் அவர்களுக்கு,உங்கள் இந்த கட்டுரை மிகவும்,அருமையாகவும்,தேவையானதாகவும் உள்ளது

  6. Thank you Thiru Mohanarangan
    This is a timely article. What the book is about may shock some readers , the way it shocked people like me a few years ago.
    The line of thinking by some Western academics make us want to throw up.
    It is easy to see why Mr Malhotra uses the chakra explanation.
    Some minds operate at the lowest levels and want everyone else’s to operate that way too.
    we look forward to the series.

  7. திரு ஸ்ரீரங்கம் வி மோக்னரங்கன் அவர்களுக்கு,உங்கள் இந்த கட்டுரை மிகவும்,அருமையாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *