Invading the Sacred: அமெரிக்காவில் நிகழும் இந்துமத ”ஆய்வுகள்” – பகுதி (1)

invading-the-sacred_coverஇந்த நூலைப் பற்றி அறிமுகம் செய்யச் சொல்லி ஜடாயு அவர்களைச் சில தினங்கள் முன்பு கேட்டிருந்தேன். என்ன வேலை மும்முரமோ? குரல் காணவில்லை. அதற்குள் என் கைக்கே இந்த நூல் திணிக்கப்பட்டது. ஆமாம் ‘திணித்தல்’ என்றுதான் சொல்லவேண்டும். என் பால்ய கால நண்பர் திரு ஜி.பி. ஸ்ரீநிவாசன் விடாப்பிடியாக இதைப் படித்தால்தான் உண்டு என்று பிராணனை வாங்கிவிட்டார். பெயரைப் பார்த்ததும் சரி ஏதோ அழுமூஞ்சிப் புத்தகமாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். ஒரு வழியாகப் படிக்கத் தொடங்கியதும்தான் வெட்கமாக இருக்கிறது, இவ்வளவு நல்ல நூலை, அதுவும் முக்கியமான நூலை, என் மாதிரி ஆளே இவ்வளவு சிங்க நாதம் பிடித்துத்தான் படிக்கத் தொடங்குகிறேன் என்றால்….

ஜி.பி.எஸ் அடிக்கடி பேசியதிலிருந்து நான் புரிந்துகொண்டது, ‘மேலை நாட்டுக் கல்விக் கழகங்களில் பல குழப்பவாதிகளும், கலாசார நாச வேலைக் காரர்களும் ஊடுருவி உயர்கல்விப் பெறுமானங்கள், துலாக்கோல்கள் எல்லாவற்றையும் ஹிந்துப் பண்பாட்டிற்கு எதிராகப் பிரயோகித்தலையே ரகசிய நோக்கமாகக்கொண்டு செயல்படுகின்றனர்,’ என்பது. இந்த மாதிரி ஊரெல்லாம் திரண்டு நமக்கு எதிராகவே நிற்கின்றனர் என்பது ஒரு வித மனோவியாதி என்ற எண்ணம் எனக்குண்டு. எனவே அவர் சொல்வதைப் பெரிதும் சட்டை செய்வதில்லை. ஆனால் மனிதர் விடாப்பிடியாக என் கையில் இந்த நூலைத் திணித்த பின்னர்தான் மிக உன்னதமாகக் கருதப்படவேண்டிய கல்விக் கழகங்களே எப்படிப் புன்மைகளின் ஊடுருவலுக்குப் பலியாகி விட்டன என்பது ஆச்சரியமாகவும் வேதனையாகவும் இருக்கிறது.

மற்ற மதங்களைப் பற்றி இப்படித் திரிபு வேலைகளில் யாரும் ஈடுபடுவதில்லை. காரணம், பெரும் பணபலம், ஆள்பலம், உலக ஆட்சி பலம், வன்முறை, பெரும்பாலான அதிகார பீடங்களைக் கைக்குள் வைத்திருத்தல் போன்றவை. ஹிந்து மதம் இன்றும் இத்தகைய குடைகளுக்குள் ஒண்டாமல் வெட்ட வெளியில் வெய்யில் மழை என்று அனைத்தையும் சந்தித்துக் கொண்டிருக்கிறது. ஹிந்து மத நூல்களை யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் திரித்து, மறைத்து, பழித்து அவதூறு செய்யலாம். மதம் சாராக் கொள்கை, ஹிந்துக்களுடைய, ’தம்மைத் திட்டுவோரை முழுச் சுதந்திரம் அளித்து, மாற்றுக்கருத்து விவாதம் என்று அணுகும் நிதானமும், பரந்த மனமும் கொண்டவர்கள்’ என்று சுமத்தப்பட்ட, சுமந்துகொண்ட, சுயமானதும் ஆன முகம். ஏகப்பட்ட நூல்கள், புராணங்கள், தத்துவ நூல்கள், சித்தாந்த நூல்கள், மகான்களின் சரிதங்கள், பெருவாரியான மதத் துணை நூல்கள் என்ற பெரும் பரப்பில் நீந்திக் கரை கண்டவர்களே கிடையாது என்னும்படியான நூல் பெருக்கமும், அதன் கருத்துகளை அறியாமலேயே பழம்பெருமை பேசும் பெருவாரியான ஹிந்துக்கள், ஒரு வழமையான சமுதாய முறைகளிலிருந்து நவ நாகரிக வாழ்க்கை முறைகளுக்கு வரலாற்றிலேயே முதல் முறையாக பொதுமக்களும், பெண் சமுதாயமும் அறிமுகம் ஆன உற்சாகத்தில் மதம் பண்பாடு மரபு வழி விழுமியங்கள் முதலியவற்றை விமரிசனக் கண்கொண்டு அணுகுதல் மட்டுமே அறிவின் கடமை என்று நினைத்தல் — என்று இன்னோரன்ன பல காரணிகள் இயங்கும் உலகின் பெரும் மக்கட் சுட்டு ஆக்கரமித்திருக்கும் நிலப்பகுதி. இதில் அறிவார்ந்த மீள்பார்வைகளும், உணர்ந்து பயன் கொள்ளும் புனர் செறிவுகளும், உலக பீடங்களில் நீங்கள் போய் அமர்ந்து கொண்டால்தான் தெரியும், எத்தகைய பேதலிக்கச் செய்வதும், வெருவரல் அடையச் செய்வதுமான மகா– மக்கள் — அறிவு — சுய உணர்வு யத்தனம் என்று! பிரிட்டன், அமெரிக்கா, ஆஸ்த்ரேலியா, கனடா போன்ற நாடுகளின் மொத்த ஜனத்தொகைக் கூட்டம் நமது பாரதத்தின் 1/3 ஜனத்தொகைக்குக் குறைவுதான். எந்த விஷயத்தில் தெரியுமா? ஆங்கில மொழி அறிமுகம் என்ற வகையில். இந்த 1/3 ஜனத்தொகை என்பது இன்னும் அதிகமாகவோ அல்லது இந்த 1/3 ஜனத்தொகையே இன்னும் தீவிரமாகக் கல்வியில் முன்னேறினாலோ உலகில் பேராற்றல் கேந்திரம் என்பது அச்சு மாறி பாரத வர்ஷே பரதக் கண்டே என்று சங்கல்பம் செய்துகொண்டு நம்நாட்டின் பக்கம் வந்துவிடும். ஏற்கனவே அச்சு சிறிது சிறிதாக நகரத் தொடங்கிவிட்டது. அந்த அதிர்ச்சி அலைகள்தான் அந்நிய சக்திகளுக்கு, உலக ஆட்சிச் சக்தியாளர்களுக்கு பல பயங்களைத் தோற்றுவித்திருக்கின்றன. இது காலத்தின் பூதப் பாதப் பெயர்ப்பு என்பது அவர்களுக்கு உறைத்தாலும், முடிந்தமட்டும் எப்படியாவது ஆற்றல் கேந்திர அச்சைத் தக்க வைத்துக்கொள்ளச் செய்யும் முயற்சியாக பல தளங்களில் மறைமுக வேலைகள் நடைபெறுகின்றன.

ஒரு நாட்டை அதன் காவியங்களையும், புராணங்களையும், கடவுளரையும் கண்டு உள்வெட்கம் கொள்ளச் செய்துவிடு. பின்பு வெட்டின மரம் தானே சாய்வதுபோல் காத்திருக்க வேண்டியதுதான் பாக்கி. — இந்த ராஜதந்திரச் சூத்திரத்தைத்தான் விதவிதமாக அவிழ்த்து விட்டிருக்கிறார்கள். இந்த விளக்கம் குறிப்பிடும் நூலில் காணப்படுவதன்று. ஆனால் இது போன்று நெடுக சிந்திக்கவைத்து விட்டது என்னை இந்த நூலில் காணும் பல கட்டுரைகள். எல்லாம் ஏற்கனவே பெரும்பாலும் இணையங்களில் மேட்டில் ஏற்றிவைத்த சரக்குகளைத்தான் நூல் வடிவில் ஆக்கியிருக்கிறார்கள் என்றாலும் ஒருங்கிணைந்த ஓர் ஓர்மை நூல் முழுதும் துலங்க வடிவாக்கம் செய்திருக்கிறார்கள்.

இந்த நூலின் தலைப்பை எப்படித் தமிழாக்கம் செய்வது? ‘புனிதங்களின் எல்லைக்குள் புன்மைகளின் ஊடுருவல்’ என்று செய்து பார்த்தேன். ஆனால் புன்மை என்று சாடல் சரியே என்றாலும் விஷயம் அதைவிடச் சுழல் மிக்கது. குறிப்பிட்ட நபர் புன்மையானவராய் இல்லாமல் இருக்கலாம். ஆனால் பெருஞ்சுழலுக்குள் மாட்டி அவருடைய செயல்பாடு வக்கிரம் அடைந்துவிடுகிறது. எனவே அப்படியே மொழிபெயர்க்காமல் ஒலி பெயர்த்துப் போட்டுவிட்டேன். துணைத் தலைப்பு — அமெரிக்காவில் நடைபெறும் ஹிந்துமதம் பற்றிய ஆய்வுகளைப் பற்றிய ஓர் அலசல்–

பதிப்பாளர்கள் — கிருஷ்ணன் ராமஸ்வாமி, அந்தோனியோ து நிக்கோலா, அதிதி பானர்ஜி ஆகிய மூவர். ரூபா கம்பெனியார் 2007ல் கொண்டுவந்திருக்கின்றனர்.

சரி நூலுக்குத் தோற்றுவாய் என்று ஏதேனும் உண்டல்லவா? அதுவும் பலர் கூடித் தேரிழுக்கும் இது போன்ற நூலுக்கு; ஆம். வட அமெரிக்காவில் பல்கலைக் கழகங்கள் ஹிந்து மதத் தலைப்புகளில் வகுப்புகள், ஆய்வுகள், பட்டங்கள், பாடத் திட்டங்கள் என்று வைத்ததில் புதிய திசைகளில் சிந்தித்தல், உளவியல் ஆய்வுகளைக் கொண்டு புது விளக்கம் காணல், உள்ளே மறைந்திருக்கும் மனித அமைப்பின் அடிமட்டமான வேகங்களே ஹிந்து விழுமியங்களின் உண்மை இயல்பு என்று எப்படியேனும் திரித்து, மறைத்து, சொன்னதையே சொல்லி, அதை சக மதிப்புடைய சான்றாண்மை நிறுவனங்களைவிட்டு ஆமோதிக்கச் செய்து உண்மை என்பது போன்ற பெரும் மாயத்தோற்றத்தில், படிக்கும், குறிப்பாக வெளிநாட்டில் தங்கிவிட்ட ஹிந்துக் குடும்பங்களிலிருந்து வரும், மாணவ மாணவியரின் சுய மதிப்பைக் குலைத்தல். இந்த விபரீதப் போக்கைக் கண்டு அதிர்ச்சி. அதன் விளைவாக ஏற்பட்ட கிளர்ச்சி. அது கல்விக் கழகங்களின் நியாய இடங்களைத் தட்டிக்கேட்டு, உதாசீனம் கண்டதால் பின் பத்திரிகை, இணையம் என்று விவாதத்திற்கான மையங்கள் விரிந்து… அந்த, பட்ட பாடெல்லாம் இப்பொழுது நூல் வடிவம் பெற்றிருக்கிறது. ஆய்வுகளில் உண்மை, நடுநிலை என்று இருக்க வேண்டிய கல்விக் கழகங்கள் இவ்வாறு மந்திரித்துவிட்ட கோழிபோல் யாரோ மறைமுக மந்திரவாதிகள் கையில் மாட்டிக் கொண்டதுபோல் இயங்க வேண்டியக் காரணம் என்ன? என்ன நடக்கிறது? ஏன் நடக்கிறது? படிப்பு என்ற தூய மனித இயக்கம் ஏன் காளிங்கன் மடுவாகி விட்டது?

0

இந்த நூலை ஒரே கோணத்தில் படித்தல் இயலாது என்றுதான் தோன்றுகிறது. பல நுழைவுகள் உடைய விவாதக் களம் என்றும் சொல்லலாம். இதில் Invading என்பது என்ன? Sacred என்றால் என்ன? படையெடுப்பு என்று கூறலாம் இன்வேடிங் என்பதை. அப்பொழுது மற்றொரு பிரதேசத்தின் மீது நடத்தப்படும் ஆக்கிரமிப்பு. சேக்ரட் என்பதை புனிதம் என்பது அவ்வளவு சரியா? உண்மையில் தெய்வத்துக்கு என்று விடப்பட்ட விஷயம்/ ஸ்தலம் என்பது சேக்ரட் என்பதற்குக் கிட்ட வரும் பொருள். அப்பொழுது தெய்வத்திற்கு என்று விடப்பட்ட ஸ்தலம் / விஷயம் என்பதை நோக்கிப் படையெடுத்தல் என்றால் அவ்வாறு படையெடுப்பவர்கள் கையாளும் ஆயுதங்கள் என்ன? ஆக்கிரமிக்கும் வழிமுறைகள் என்ன? ஆக்கிரமிப்பாளர்களின் உள்மனக் கோணல் எத்தகையதாக அமைந்திருக்கிறது, இது போன்ற அத்துமீறல்களை ஊக்குவிப்பதற்கு? இந்தக் கேள்விகளுக்கான விடைகள் நூலால் பலவிதங்களில் தரப்படுகின்றன.

sigmund-freudமுதலில் கையாளப்படும் ஆயுதங்களில் முக்கியமானது ப்ராய்ட் என்பவரின் உளவியல் கொள்கைகள். க்ரேக்க நாடகங்கள் வடிவாக்கம் நல்கிய ஹெலனியத் தொன்மங்களில் ஒன்றான ‘ஓடிபஸ்’ என்ற கதைப்படிவம், முறைமீறிய உறவுக்கான இச்சைகள் மனிதரின் குழந்தைமை தொட்டே அவர்தம் உள்ளத்தில் புதைந்து விடுகின்றன என்பதைத் தெளிவாக விளக்கப் பயன்படும் கருத்து என்பதை முன்னிறுத்தினார் ப்ராய்ட். இத்தகைய ஓடிபஸ்தனமான, கண்டனத்திற்கு இலக்காகும் முறைபிறழ்ந்த இச்சைகள்தாம் பலவிதங்களில் கடவுள் கருத்து, இலக்கியம், உயர்ந்த விழுமியங்கள் என்று மனிதர் நினைத்துப் போற்றும் பல கருதுகோள்கள் அனைத்திலும் ஊடுருவி வெளிப்படுகின்றன என்பது ப்ராய்டிய அணுகுமுறையின் அடிப்படை.

இன்றைய உளவியல் இந்த மாதிரியான ப்ராய்டின் நிரூபிக்கப் பட்டவை போல் புழங்கிவந்த அபிப்ராயங்களைப் பெரிதும் மதித்துப் போற்றுவதில்லை. வெறுமனே உளவியலின் சரித்திரத்தின்பாற்பட்ட வந்தவழித்தடங்கள் என்ற வகைப்பாட்டில்கொண்டுபோய் வைத்துவிட்டுத் தன் போக்கில் முன்னேறிக்கொண்டு இருக்கிறது உளவியல் படிப்பு. ஆனால் நூல் குறிப்பிடும் சான்றாண்மையற்ற ஆய்வுப்போலிகள் இந்த வீழ்ந்துபட்ட கருத்தை மற்ற கலாசாரங்கள் மேல், இங்கு குறிப்பாக ஹிந்து காலாசாரத்தின் மேல் ஏவுவதற்கு ஆயுதமாகப் பயன்படுத்துகிறார்கள்.

மற்ற கலாசாரங்கள் என்கிறோமே அப்பொழுது இந்த ஆய்வாளர்கள் எந்தக் கலாசாரத்தைச் சேர்ந்தவர்கள்? பெரும் ஆய்வு நாற்காலிகளில் அமர்ந்த இவர்களில் பலர் தம்மைக் கிறித்தவர் என்று கூறிக்கொள்கின்றனரா என்றால் சொல்லமுடியாது. மேலை நாட்டு நிறவெறி, — ’உயர் நாகரிகம் தங்களது; கீழை நாட்டினர் கீழானவர்கள்; நாகரிகம் அற்ற மிருகப் பிராயத்தினர்; காட்டுமிராண்டிகள்; எனவே நாகரிக உலகின் சலுகைகளான பொது நீதி, மதிப்பான அணுகுமுறை, தங்கள் உடைமைகளின் மீதும் கருத்துகளின் மீதும் பிரத்யேக உரிமை பாராட்டத் தகுதியற்றவர்கள்’ — இது போன்ற மனநிலை, இவைதான் அவர்களுக்குள் பொதிந்து இயக்குகிறது என்பது நமது பிரமை பிடித்த பார்வையன்று என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது பல சமயங்களில் அவர்களுடைய சொல்லாடல்களும், அவற்றின் தொனியும்.

0

இந்த நூலில் முன்மொழி(Foreword) எழுதியிருக்கும் Mr S.N Balagangadhara, அறிந்தோர், அன்பர்கள் வட்டாரங்களில் அன்பாக ‘பாலு’ என்று அழைக்கப்படுபவர்; பெல்ஜியத்தில் பேராசிரியராக இருப்பவர். ஆணித்தரமான கருத்துகள் சிலவற்றை விடிவெள்ளி போல் புதிய இந்தியத் தலைமுறைகளுக்குத் தந்திருப்பவர். இவருடைய அருமையான சில கருத்துகளை நாம் பின்னர் பார்க்க இருக்கிறோம். இந்த முன்மொழியிலேயே ‘பாலு’ முக்கியமான கவன ஈர்ப்பு செய்கிறார்.

அதாவது போகிற போக்கைப் பார்த்தால் நிச்சயம் இந்தியா, அகில உலக அளவில் அரசியல், பொருளாதாரம், வர்த்தகம், தொழில் நுட்பம், கணினி என்று பல துறைகளில் கேந்திரமான இடத்தைப் பெறப் போகிறது. அதுகால் இந்தியா தான் யார் என்பதையும், இத்தனை நூற்றாண்டுகளாய்த் தான் என்ன செய்து வந்துள்ளது என்பதையும் தன் நிர்ணயமாகச் சொல்லி நிறுவ வேண்டிய கட்டாயம் வரும். அதுகால் கடந்த முன்னூறு ஆண்டுகளாகச் சொல்லிச் சொல்லி இந்தியாவைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டுமா எங்களிடம் வாருங்கள் என்றபடி கீழைநாட்டியல் வாதிகளும், இந்தியவியல் வாதிகளும் ஏற்படுத்தியுள்ள எழுத்துச் சித்திரங்கள் ஆதார பூர்வமான ஆவணங்கள் போல் எதிர்க்கட்சி பேசும். அப்பொழுதுதான் நாம் இந்தியர்களாக உணர்வு, அறிவு, வாழ்வு என்று அனைத்தும் தோய வாழ்ந்த அனுபவத்தை எவரோ வேலை மெனக்கெட்ட மேலைநாட்டினர் ஆராய்ச்சிக்குரிய பரிசோதனைப்பொருளாய் நம்மை ஆக்கி, நமது அனுபவங்களுக்கு முற்றிலும் அந்நியமான விதத்தில், நமது பண்பாட்டு விழுமியங்களின் அடியூற்றுகள் பலதும் புரியாமலேயே நாம் இதுதான் என்று சாற்றி எழுதியிருக்கும் அச்சுப்பசை நம்மை நமக்கே அந்நியமான விதத்தில் உலக அரங்கில் காட்டிக்கொண்டவாறே நம்மோடு ஒட்டியிருக்கும். அப்பொழுது இந்தியாவின் இளைய தலைமுறை நிச்சயம் நினைக்கும், ‘இவையெல்லாம் எழுதப்பட்ட காலத்தில் நமது முன்னோர் என்னதான் செய்துகொண்டிருந்தார்கள். பேசாமல் பார்த்துக் கொண்டிருந்தார்களா? தங்களது வாழ்வனுபவம் சாட்சி சொல்லும் உண்மை விவரம் இதுதான் என்று எவரும் பதிலாவணம் தரவில்லையா?’ என்று.

நாம் இப்பொழுதும் சும்மாவே இருந்துவிடலாம். அதாவது மேலைநாட்டினர் சிலரோ பலரோ நம்மைப் பற்றி மனம் போனவாறு எழுதியவையெல்லாம் கிட்டிமுட்டிப் பார்க்கப் போனால் உண்மைதானே என்று நினைத்தால். ஜாதிகள் இல்லையா, ஆயிரக்கணக்கான வினோத உருவங்களில் சாமிகள் இல்லையா, பெண்ணடிமை இருந்ததில்லையா, சதி இருந்ததில்லையா, ஊழல் எங்கு பார்த்தாலும் மலிந்து பெருகவில்லையா என்று நாம் நினைக்கலாம். ஆனால் இவையெல்லாம் உண்மை பாதி, வெளியார் திரும்பத் திரும்ப நமக்கு உரைத்தவை பாதி என்று இருக்கின்றன. நாம் நம்மைப் பற்றி நம் மூலமாகவே முழுவிவரமும் அறிய வரும்போது, சொல்லிச் சொல்லி உருவேற்றப்பட்டவையில் உண்மையை விட உள்நோக்கமுடைய திரிப்பும், மறைப்பும், பொய்களும், பாதி உண்மைகளும் அதிகம் என்று உணர நேர்ந்தால் அப்பொழுது என்ன செய்வோம்? நாமே எவர்கள் கூறியவற்றை அதுவரையில் முழுமனத்துடன், அல்லது மனமயக்கத்தில் உண்மை என்று வாக்குமூலம் பகர்ந்தோமோ அவர்கள் கூற்றுகளையே மறு ஆய்வுக்கு உட்படுத்தக் கோரி நமது உண்மை அனுபவமும் விவாத மேடையில் இடம் பெற வேண்டும் என்று உரிமை கோரும் பொழுது நமக்கு நம்மைப் பற்றியே எடுத்துச் சொல்லும் உரிமை மறுக்கப்படும்.

paul-b-courtright‘நீங்கள் எங்கள் ஆய்வுக்குரிய பரிசோதனைப் பொருளாய், உள்ளிருந்து தகவல் தரும் ஊரானாய், இருப்பதற்கே தகுதியானவர்கள். நீங்கள் யார், உங்கள் கடவுள்களும், விழுமியங்களும், அவதாரங்களும், அருள்நிறைச் செல்வர்களும் யாரென்று உங்களால் அறுதியிட முடியாது. நாங்கள்தாம் அதை உங்களுக்குச் சொல்ல வேண்டும். நன்றியுடன் கேட்டு, ‘இப்பொழுதுதான் எங்களுக்கே எங்களைப்பற்றித் தெரிந்தது’ என்று போகவேண்டிய நீங்கள் உங்களைப் பற்றியும், உங்கள் அனுபவங்களைப் பற்றியும் சொல்லி எங்கள் மேலான முடிவுகளை, அதுவும் நாங்களே எங்களுக்கு ஒத்த தகுதியுடையோர் தந்து கொள்ளும் பரஸ்பரச் சான்று என்ற அடிப்படையில் நிரூபித்துவிட்ட தீர்ப்புகளை நீங்கள் வந்து மாற்றுவதா?’ என்று ஹிந்துமத ஆய்வுக் கழகங்கள் மறுத்தால்?

ganesa-lord-of-obstacles-lord-of-beginningsஅவ்வாறு மறுத்த கதைதான் இந்த நூலில், விவாதத் தொடக்கமே. விநாயக சதுர்த்தி கொண்டாடுகிறோம். ஞானப்பிள்ளை என்று ‘ஞானக் கொழுந்தினைப் புந்தியில் வைத்தடி போற்றுகின்றோமே!’ என்றுதான் நம் மனத்தில், வாழ்வில் இதுகாறும் கணேச மாம் பாஹி என்று இடம் பெற்றிருக்கிறார். நமது சாதாரண ஜனங்களின் வாழ்வனுபவமே எங்கோ ஆன்மிக உயரத்தில் இருக்கிறது. யாரும் பிள்ளையார் முன் போய் நின்று அவருடைய துதிக்கையைப் பற்றிப் புதிய கோணத்தில் ப்ராயிடின் கொள்கைகளைக் கையாண்டு, வக்கிரமாக யோசித்துப் பார்த்தால் என்ன என்று நினைப்பதில்லை. ஆனால் இத்தகைய வக்கிர யோசனை பால் கோர்ட்ரைட் என்பவரால் ஆய்வுப் பிரதியாக ஒத்தத் தகுதியுடையோர் சான்றாண்மை அளிக்க, ஒரு கல்விக் கழகத்தால் அங்கீகரிக்கப் படுகிறது. வட அமெரிக்காவில் கேள்வி கேட்கப் போன இந்தியச் சமுதாயத்தினரிடம், ‘உங்களுக்கு என்ன உரிமையிருக்கிறது மிக உயரிய கல்விக் கழகச் சான்றுடன் வெளிவரும் பேராசிரியர் ஒருவரது நூலை மறுக்க?’ என்ற பதில்தான் தரப்படுகிறது.

kalis-childசரி இது இப்படி என்றால், காளியைப் பற்றி? காளியின் குழந்தையான ஸ்ரீராமக்ருஷ்ணரைப் பற்றி? சிவனைப் பற்றி? எல்லாம் புதிய கோண(ல்) ஆய்வுகள், தங்களுக்குத் தாங்களே சான்றாண்மை தந்து கொண்ட ஆய்வுகள். அந்த ஆய்வுக் கழகங்களில் நாற்காலியில் இருப்பது எல்லாம் நம் ஆள்களா? ம்ஹூம். ஹிந்து மதத்தைப் பற்றி ஹிந்துக்களுக்கு என்ன தெரியும்? மேலை நாட்டைச் சார்ந்த நாங்கள், ஐரோப்பிய பண்பாட்டைச் சார்ந்த நாங்கள் ஆய்ந்து உரைத்ததுதான் ஹிந்துமதம். எனவே நாற்காலியில் என்றும் நாங்களே. அப்படியே ஒரு இந்தியருக்கு அளித்தால் கூட அவர் நாங்கள் சொன்னதற்கு ஒப்பி அப்படியே கருத்துத் தெரிவிக்கும் ஒருவராய் இருந்தால்தான் அவருக்கு நாற்காலி.

jeffrey-j-kripalஇந்த வேதனையான நிலவரங்களைப் பதிவு பண்ணியிருக்கிறது இந்த நூல். அதுவும் நம் சிந்தனை தோற்கும் பெரும் ஞான நிதியினை பாரதத்துக்கு நல்கி சுதந்திர இந்தியாவின் மூலவராகிவிட்ட எம்மான் ஸ்ரீராமகிருஷ்ணரைப் பற்றி ஜெப்ரி க்ருபால் (Jeffrey J. Kripal) என்பவர் ஆராய்ச்சி பண்ணுகிறேன் பேர்வழி என்று உளறிக் கொட்டி, வாரி, புழுதியும் சேற்றையும் தன் மூஞ்சியிலேயே பூசிக் கொள்வதைப் பார்க்கணுமே! ஐயோ பாபம்! என்ன ஜந்துக்கள்? என்று தோன்ற வைத்துவிடுகிறார் க்ருபால். வங்காள மூல நூலையே வைத்து ஆய்வு கழட்டுகிறேன் என்று சவடால். ஆனால் சுவாமி தியாகாநந்தா அக்கு அக்கக்காக வங்க மொழியே தெரியாது இவருக்கு என்று நிரூபித்துவிட்டார். வங்க மொழி அகராதியை கையில் வைத்துக்கொண்டு ஒரு சொல்லுக்குப் பல பொருள் இருந்தால் அதில் எங்கே எங்கே என்று தேடி வக்கிரமான பொருள் சாயைகளையே கஷ்டப்பட்டு திணித்து காமா சோமா என்று செய்யப்பட்ட கந்தல் குப்பை, ஆய்வுப் பிரதியாக எப்படித்தான் ஆனதோ? ‘என் குழந்தைகளே வாருங்கள்!’ என்று வங்க இளைஞர்களான நரேன், ராக்கால், சசி முதலிய ஆன்மிகப் புத்திரர்களை ஆற்றொணாது கூவி அழைப்பதை குருவின் ஆச்சரியமான அருள் பெருக்காய் உணர பாரத தேசத்தில் ஜன்மம் எடுத்தால் அன்றோ புரியும்; அன்றேல் பரத்தின் திருவருள் படிந்தால் புரியும். இரண்டும் அற்ற இந்த பாக்ய ஹீனர் உடனே இவருக்குச் சின்ன பசங்களிடத்தில் ஆசை என்று நோண்டிப் பார்க்கிறாராம். ——-க்கொண்டு சிரிப்பதைத் தவிர என்ன செய்வது? ‘படித்தவன் சூதும் வாதும் பண்ணினா போவான் போவான் ஐயோவுன்னு போவான்’ என்று பாரதியின் உடுக்கை ஒலிக்கிறது.

0

எந்த ஒரு கருத்தும் சமுதாயத்தில் தாக்கம் ஏற்படுத்தாமல் போவதில்லை. சில கருத்துக்கள் தகுந்த சூழல் இல்லாததால், முடுக்கி வேலை செய்வோர் இல்லாததால் அமுங்கி நெடுநாள் கூட இருந்துவிடக்கூடும். பின், தகுந்த வாய்ப்பில் முளைவிட்டு நச்சு மரமாகவோ, நலம் தரும் தருவாகவோ வளரும். ஆனால் அந்தக் கருத்து சொல்லப்பட்ட காலத்தில் வெகு அப்பாவியான கருத்தாய் தோற்றமளிக்கும். ஏன் உண்மையிலேயே அப்பாவித்தனமான கருத்தாகவுமே அது இருந்துவிடலாம். ஆனால் மனிதனின் கபடமும், உள்நோக்கமும் எந்த உயரிய கருத்தையும் நாசக் கருவியாக்கி விடும் வன்மை உடையன.

hans-georg-gadamerஉதாரணத்திற்கு கடாமர் (Gadamer) என்பவருடைய கொள்கையை எடுத்துக் கொள்வோம். என்றோ எழுந்த பனுவல்களுக்கும், கருத்துகளுக்கும், இன்று நமது தற்காலச் சூழ்நிலையில் கொடுக்கப்படும் விளக்கங்களின் தகுதி, பொருத்தப்பாடு பற்றிப் பேசும் போது ‘Fushion of Horizons’ என்ற கருத்தைக் கூறுகிறார். அதன்படி என்றோ ஏற்பட்ட கருத்துகள் இன்று உள்ளார் அணுகுமுறையில் விளக்கப்படுவதற்கான நியாயங்கள் உண்டு என்று வாதிடுகிறார். அஃது திறனாய்வியல், விளக்கக் கோட்பாட்டியல் என்ற பிரிவுகளின் கீழ் வாதிக்கப்படுவன. ஆனால் வெண்டியும் அவரது சீடப்பிள்ளைகளும் இந்தக் கருத்தை தம் வாய்ப்பிற்கேற்பப் பயன்படுத்தி தமக்கு முற்றிலும் அந்நியமான பண்பாட்டிலும், அந்நியமான சூழலிலும், அந்நியமான காலத்திலும் உண்டான ஹிந்து மதக் கருத்துகள் பலவற்றை தங்களுக்குத் தோன்றியபடியெல்லாம் சித்திரித்துக் காட்ட வசதியான நியாயப்படுத்துதலாகப் பயன்படுத்துகின்றனர். அந்தக் கருத்துக்களையும், நெறிகளையும் வாழ்வியல் ரீதியாகத் தம் அனுபவமாய் உடையவர்களான நம்முடைய எதிர்ப்பையும், விமர்சனத்தையும் புறக்கணிக்க வசதியான சால்ஜாப்பாகவும், இந்தத் துறைமாறிய வேறொரு சூழலில் தரப்படும் கருத்தொன்றைத் தேடிப் பிடித்து அதைத் தங்கள் குடையாகவும், கவசமாகவும் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

இதே கடாமருடைய அணுகுமுறை மற்ற அறிஞர்களால் விமர்சிக்கவே படாமல் ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்து அன்று என்பதை மேற்கத்திய இந்திய இயல் ஆய்வாளர்களில் ஒருவரான ஃப்ரிட்ஸ் ஸ்டால்(Frits Staal) கடாமரின் முறையைப் பற்றி அலசுவதிலிருந்து அறியலாம்.

Either one disagrees with what Gadamer says, in which case one agree with what he means; or one agrees with what he says by disagreeing with its meaning. One must in all cases agree and disagree, and Gadamer’s originality lies in this combination. He has adopted from the positivist – empiricist tradition its most monumental error — the caricature of the scientific method — and failed to heed its most valuable contribution — the critique of meaninglessness.

இவ்வாறு Frits Staal நெடுக அலசிக் கொண்டே போய் கடாமரைப் பற்றிய வியங்கோள் விடுமொழி ஒன்றைக் கூறுகிறார்.

”And this philosophy aims at instructing us about interpretation!”

(நூலில் மேற்கோளாகக் கையாளப்பட்ட பகுதி பக் 163)

frits-staalஅதாவது கடாமர் கூறும் பொருளோடு நீங்கள் ஒத்துப்போனால் அவர் சொற்களோடு நீங்கள் மாறுபட வேண்டியிருக்கும்; அவர் சொன்னவற்றோடு நீங்கள் ஒத்துப்போனால் அவர் கூறவரும் கருத்தோடு நீங்கள் மாறுபடுவீர்கள். ஆக மொத்தம் ஒரே சமயத்தில் அவரோடு நீங்கள் ஒத்துப்போவதும், மாறுபடுவதும் தவிர்க்க இயலாது. இப்படிப்பட்ட அணுகுமுறை நமக்கு விளக்கமுறையைப் பற்றிக் கற்றுத்தர முனைகிறதே அது ஆச்சரியம்தான்! — இதுவே ஸ்டால் அவர்களுடைய கருத்துகளின் சாராம்சம்.

ஆனால் இதைப் பற்றியெல்லாம் வெண்டிக் கூட்டத்திற்குக் கவலையில்லை. தங்களுடைய பண்பாட்டைப் பற்றியா ஆராய்கிறோம் இவ்வளவு கருத்துக் கறாரெல்லாம் பார்ப்பதற்கு? எல்லாம் ஹிந்து மதக் கருத்துகள் தானே? பழசு பட்டடை, காலாவதியாகிப்போன ஏதாவது அணுகுமுறைகளைத் தூக்கிக்கொண்டுவந்து வசதிக்கேற்ப புகுந்து விளையாடவேண்டியதுதான். அப்படியே தவிர்க்க முடியாத, அமுக்க முடியாத, விமரிசனங்கள் வந்தால் இருக்கவே இருக்கிறது ஓர் ஆயுதம். அது என்ன? இதே போல் ஹிந்துக்கள் அந்தப் பழைய அணுகுமுறைகளையே கையாண்டு மேலைநாட்டுப் பண்பாட்டுக் கூறுகளை சித்திரித்தால் இந்தக் கூட்டத்தின் நிலைப்பாடு என்ன?

(தொடரும்…)

21 Replies to “Invading the Sacred: அமெரிக்காவில் நிகழும் இந்துமத ”ஆய்வுகள்” – பகுதி (1)”

 1. மோகனரங்கன் அவர்களே – இதை பகிர்ந்துகொண்டதற்கு மிக்க நன்றி

  // இதே போல் ஹிந்துக்கள் அந்தப் பழைய அணுகுமுறைகளையே கையாண்டு மேலைநாட்டுப் பண்பாட்டுக் கூறுகளை சித்திரித்தால் இந்தக் கூட்டத்தின் நிலைப்பாடு என்ன?

  நாம் ஒரே நேரத்தில் மேலைநாட்டுப் பண்பாட்டுக் கூறுகளை சித்தரிக்கவும் வேண்டும், நமது பாரத பண்பாட்டின் அர்த்தங்களையும் வலிமையையும் அழுத்தி கூற வேண்டும்

  // only simultaneous pursuit will fetch results

 2. Invading the Sacred: அமெரிக்காவில் நிகழும் இந்துமத ”ஆய்வுகள்” – பகுதி (1)
  ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்

  திரு மோகனரங்கன் எழுதிய இக்கட்டுரை போல ஆயிரம் கட்டுரைகள் வரவேண்டும்,
  இந்தக் கட்டுரை ஆரம்பமாக இருக்கட்டும்

  இந்துமதம் காக்க இன்னும் பலர் இதே பாணியில் கட்டுரைகளும் கவிதைகளும் எழுதவேண்டும்
  அது மட்டுமல்ல ஆக்கபூர்வமாக செயல்பாடுகளிலும் நாம் இறங்கவேண்டும்

  நமக்கெதிராக செயல்படும் புற்று நோய்க் கிருமிகள் போல் நமக்குள்ளேயே இருந்துகொண்டு நம்மையே அழிக்கும் இந்த நோய்க்கிருமிகளை அழிக்க ஆவன செய்ய ஆயத்தம் செய்யவேண்டும்

  அன்புடன்
  தமிழ்த்தேனீ

 3. வித்தியாசமான கட்டுரை – அருமையாக இருக்கிறது.

  //
  இதில் அறிவார்ந்த மீள்பார்வைகளும், உணர்ந்து பயன் கொள்ளும் புனர் செறிவுகளும், உலக பீடங்களில் நீங்கள் போய் அமர்ந்து கொண்டால்தான் தெரியும், எத்தகைய பேதலிக்கச் செய்வதும், வெருவரல் அடையச் செய்வதுமான மகா– மக்கள் — அறிவு — சுய உணர்வு யத்தனம் என்று!
  //

  புனர் செறிவு, வெருவரல் என்றால் என்ன? கடினமான நடை. கொஞ்சம் எளிமைப் படுத்தினால் படிக்க சுவாரசியமாகவே இருக்கும் என்று நினைக்கிறேன். அல்லது அப்படி செய்தால் கருத்தின் கனம் குறைந்து விடுமா தெரியவில்லை. இது உனக்கு புரியவில்லை என்றால் இது உனக்கானதில்லை என்று சொல்ல மாட்டீர்கள் என்று நம்புகிறேன். 🙂

 4. I hope the author would also write about the latest book ‘The Hindus: An alternate history’ from Wendy donigner’s trash factory. The problem with these type of books is that media gives a lot of publicity and many idiots accept the authors as experts. These authors have a hidden agenda and wont stop or listen to reason (Rajiv Malhotra’s attempts were in vain). Only threat of a different nature would make them stop. We have a lot to learn from other religion’s apologists.

 5. // கடினமான நடை. கொஞ்சம் எளிமைப் படுத்தினால் படிக்க சுவாரசியமாகவே இருக்கும்

  எனக்கும் இப்படிய தோன்றியது – இது எனது பலவீனம் என்றே நான் கொண்டடேன் – கொஞ்சம் வருத்தமாகவும் இருந்தது – தமிழில் தான் இருந்தது இதை கூட பட்டிக்க கடினமாக உள்ளதே, நான் எல்லாம் என்ன கற்றேன் என்றும் தோன்றியது !! 🙂 தமிழை ஒழுங்காக கற்க வேண்டும் என்ற ஆர்வமும் தோன்றியது

 6. அருமையான கட்டுரை. மேலை நாட்டினர் எழுதும் இந்துமதம் குறித்த புத்தகங்களைப்படிக்கும் இன்றைய வெளிநாடு வாழ் இந்தியக் குழந்தைகளுக்கு நம் மதத்தின் மீதும், பாரம்பரியத்தின் மீர்தும் என்ன விதமான மரியாதை இருக்கும்??

  அதை செய்துகாட்டவே இதுபோன்ற “ஆராய்ச்சிகளும்” கட்டுரைகளும், புத்தகங்களும்.

  இன்வேடிங் த சேக்ரெட் என்ற தலைப்பே எவ்வளவு சரியாக இருக்கிறது. இதுபோன்ற உண்மையை வெளிக்கொனரும் கட்டுரைகள் தொடர்ந்து தமிழில் வரவேண்டும்.

  இந்தக் கட்டுரைய எழுதிய திரு.வி.மோகனரங்கன் அவர்களுக்கும், வெளியிட்ட தமிழ் ஹிந்துவுக்கும் மிக்க நன்றி.

 7. atleast u u stood that these white people forgot god and making research abt god as all religious belief those who seek god with their heart ll find him not with their mind

 8. கட்டுரையைப் பற்றி எழுதும்முன், கட்டுரை ஆசிரியரைத் தூண்டிவிட்ட என் இனிய நண்பர் திரு.ஜி.பி.ஸ்ரீனிவாசன் அவரைப் பற்றி. ஜி.பி அமைதியானவர்; ஆரவாரம் இல்லாமல் பல காரியங்களைச் செய்பவர்; ஆழம் மிகுந்த இடங்களில் கூட தைரியமாக இறங்கி, போனதும் வந்ததும் தெரியாதவாறு தன் காரியத்தைச் சாதிப்பவர். தன் சாதனைகளை விளம்பரப் படுத்திக்கொள்ள விருப்பமில்லாதவர். அடுத்தவரை ஊக்குவிப்பவர்; அவருக்கு உதவிகளும் செய்பவர். எனக்குத் தெரிந்து கடந்த பதினைந்து வருடங்களுக்கும் மேலாக நம் ஹிந்து சமூகத்துக்காகப் பல சேவைகள் புரிந்துள்ளார். இவர் நம் ஹிந்து சமுதாயத்திற்குக் கிடைத்த ஒரு பொக்கிஷம் என்றால் அது மிகையாகாது. அவர் பல்லாண்டு நீடூழி வாழ்ந்து நம் சமுதாயத்திற்குப் பணி புரியுமாறு ஆண்டவன் அருளட்டும்.

  திரு.வி.மோகனரங்கன் அவர்கள் அருமையாக ஆரம்பித்துள்ளார். தமிழ் இந்துக்களிடம் கொண்டு செல்ல வேண்டியப் பல விஷயங்கள் இப்புத்தகத்தில் உள்ளன. இப்புத்தகத்தைக் கொண்டு வந்ததற்கான பின்னணி என்ன, அந்தப் பின்னனியில் அந்நிய சக்திகள் எவ்வாறு நம் ஹிந்து மதத்திற்கு எதிராகவும், பாரத தேசத்திற்கு விரோதமாகவும் சதிவலைகளைப் பின்னியுள்ளன என்பதையெல்லாம் தமிழ் இந்துக்கள் அவசியம் அறியவேண்டும். தொடரும் பகுதிகளில் கட்டுரை சுவாரஸ்யமாகவும், படிப்பினையாகவும் இருக்கும் என்பது நிச்சயம்.

  இங்கே ஓரிருவர் சொல்லியுள்ளபடி, கட்டுரை சில இடங்களில் கடினமான மொழியும் நடையும் கொண்டுள்ளது. இனி வரும் தொடர்களில் மேலும் சற்று எளிமைப் படுத்தி எழுதினால் கட்டுரை மிகவும் சிறப்பாக அமையும். அங்ஙனமே ஆவன செய்யுமாறு கட்டுரை ஆசிரியரை வேண்டிக் கொள்கிறேன். அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  நன்றி, அன்புடன்

  B.R.ஹரன்.

 9. // ஜாதிகள் இல்லையா, ஆயிரக்கணக்கான வினோத உருவங்களில் சாமிகள் இல்லையா, பெண்ணடிமை இருந்ததில்லையா, சதி இருந்ததில்லையா, ஊழல் எங்கு பார்த்தாலும் மலிந்து பெருகவில்லையா என்று நாம் நினைக்கலாம். ஆனால் இவையெல்லாம் உண்மை பாதி, வெளியார் திரும்பத் திரும்ப நமக்கு உரைத்தவை பாதி என்று இருக்கின்றன.//

  சகோதரர்களே,சொல்லப்பட்ட விஷயங்களில் பாதி,இருப்பவை,இருந்தவை,எனவே அதனை ஒப்புக்கொண்டீர்கள்…ஹிந்து மதத்தின் மீது திரிக்கப் பட்ட,இட்டுக்கட்டப் பட்ட செய்திகளையும்,பதிந்து…அதன் உண்மை நிலையையும் விளக்கி இருந்தால்….நன்றாக இருந்திருக்கும்…

  மற்றபடி,இது எல்லா மதங்களுக்கும் உள்ள நிலைதான்..இஸ்லாம் பற்றி வராத,வரலாற்று திரிபுகளா,அவதூருகளா?…..அதற்காகவே,சில அமைப்புகள்,பெரும் சிரத்தை எடுத்து,பெரும் பொருட்செலவு செய்தன,இன்னும் செய்து கொண்டுதான் இருக்கின்றன…

  இந்த செயல்களுக்கு அஞ்சி வருந்துவதை விட,அவற்றை எப்படி எதிர்கொள்வது என சிந்திப்பதே சிறந்தது…அவர்களது தவறான திரித்தலை ஏற்று வெளியேருபவர்கள் வெகு சிலரே,அவர்கள் எல்லா காலகட்டத்திலும் இருக்கத்தான் செய்வார்கள்….

  அவர்களை போன்றவர்கள் எல்லா மதங்களிலும் உள்ளவர்களே,அவர்கள் அந்த மதத்திற்கு காப்பாளர்கள் அல்ல, ஐயய்யோ அவர்கள் தவறாக விளங்கிகொள்வார்களே என்று அச்சம் கொள்ள,….

  சதிகளை விளங்கிக் கொள்ளவேண்டும் அவ்வள்வே….

  நன்றி

  அன்புடன்
  ரஜின்

 10. கருத்துகள் தெரிவித்த அன்பர்களுக்கு நன்றி. தமிழ்த்தேனி, எட்வின், பாரதபுத்ரன், ரஜின், எழுத்து அத்வானக் குரலாக ஆகிவிடாமல் காப்பதே பின்னூட்டங்கள்தான்.
  சாரங், ஸ்ரீகாந்த், மொழிநடையைப் பற்றி நீங்கள் கூறிய கருத்துக்களை நினைவில் கொள்கிறேன். ஆனால் வெற்றி பெறுவேனா என்று எனக்குத் தெரியவில்லை. கருத்துகளுக்கு ஏற்ற தேர்ந்த சொற்களையிட்டு வெளிப்படுத்த வேண்டும் என்பது என் அவா. இருந்தாலும் படிப்பவர்களின் வசதியும் கவனத்தில் இருத்தப்பட வேண்டியதே. அதுவும் இதுபோன்ற விஷயங்களில்.
  புனர்செறிவு — ஒரு கருத்தை ஆழமாகப் புரிந்துகொள்ள புரிந்துகொள்ள அந்தக் கருத்தின் ஆழமும், விரிவும், அடக்கமும் அடர்த்தி ஆகிக்கொண்டே போவதைக் குறிக்க இந்தச் சொற்கோவையைக் கையாண்டேன். வெருவரல் — போரில் ஒருவர் மற்றவரைக் கண்டு அஞ்சுதல்; இங்கு இன்வேடிங் த சேக்ரட் என்பதில் ஒருவித படையெடுப்பு பற்றிப் பேசுவதால் இந்தச் சொல் விழுந்தது.
  மேலும் இந்தத் தொடரை நான் மின் தமிழ் குழுமத்தில் எழுதுவதால் தமிழ் இலக்கியச் செழுமையும் கலந்து எழுதும் ஆர்வமும், என் இயல்பும் சேர்ந்து இவ்வாறு எழுத வைக்கிறது. தங்களை இவ்வித மொழியாட்சி இடர்ப்படுத்தியிருப்பின் அருள்கூர்ந்து பொறுப்பீராக.

  பி ஆர் ஹரன், ஜிபிஎஸ் பற்றி கனிவான வார்த்தைகள் சொன்னமைக்கு என் நன்றிகள். நல்ல மனிதரும் நறுமணப் பூவும் ஒன்று.

  Dear Shankar, Ideas are the most powerful forces in the world and history. Ideas must be and can be met with only truer and more consistent ideas. Force, which is really a weakness, is always tempting. For, it resents the inevitable victory of ideas. Kindly think over in peace.

  Srirangam V Mohanarangan

 11. தங்கள் கருத்து அருமை. இன்னும் எளிமையாக கூறியிருந்தால் என்னைப்போன்றவர்களுக்கும் நன்கு புரிந்திருக்கும்

 12. அருமையான கட்டுரை. ஐம்பது வருடம் முன்னால் தமிழ் படித்து. அனால் நான் படித்த தமிழும் நீங்கள் எழுதிய தமிழும் மிக வித்தியாசமானது. படிக்க படிக்க இன்பமாயிருந்தது. நீங்கள் தேர்ந்தெடுத்த விஷயம் மிகையும் முக்கியமானது. மற்று மதஸ்தர்கள் அவர்களுடைய மததேபற்றி பெருமை கொள்வது போல் நாம் ஏன் நம்முடைய மதத்தை பற்றி பெருமை கொள்ள கூடாது. நம் மத கொள்கை களை சரியாக புரிந்துகொள்ளாமல் இதை இகழ்துவது தவறு. நாம் நம்மை புரிந்துகொண்டால் தான் மற்றவர் இகழும்போது அவர்களை திருத்த முடியும். எனக்கு இவ்வளவு எழுத வாய்ப்பு அளித்ததற்கு நன்றி. உங்களுடை கட்டுரை போல் ஆயிரம் கட்டுரைகளாவது வரவேண்டும். வணக்கம்.

 13. இப்போது மட்டும் வலிக்கிறதோ? நான் இந்த புத்தகத்துக்கு வக்கலாத்து வாங்கவில்லை. ஆனால், உங்கள் செய்கைக்கும் அவர்கள் செய்கைக்கும் அதிக வித்தியாசமில்லை என்று சொல்லுகிறேன்.

  (comment edited & published)

 14. INVADING THE SACRED – PUBLISHED BY RUPA&CO, 7/16, ANSARI ROAD, DARYAGANJ, NEW DELHI – 110 002.
  SALES CENTRES : ALLAHABAD, BANGALORE, CHANDIGARH, CHENNAI, HYDERABAD, JAIPUR, KATHMANDU, KOLKATTA, MUMBAI, PUNE.
  MAY BE ONE MAY REFER TO: http://www.infinityfoundation.org

 15. சிக்மண்டு ப்ராய்டின் கருத்துக்களை மீளாய்வு செய்து, பதிவு செய்யப்படாத கோணங்களை பதிந்து ஒரு நாவல் எழுதப்பட்டுள்ளது… பெயர் ‘ஒப்பனைகள் கலைவதற்கே’ … காவ்யா பதிப்பகம் வெளியீடு… வாசித்துப் பார்க்கவும்…

 16. ஓரு சிறந்த புத்தகத்திற்கு ஒரு அருமையான விமர்சனத்தினை எழுதியுள்ளார் ஸ்ரீ ரங்கத்தார்.சமீபத்தில் இந்த புத்தகத்தினை இணையத்தில் கண்டேன். ஆர்வமுடையவர்கள் அவசியம் படிக்கவேண்டுகிறேன்.
  https://rajivmalhotra.com/wp-content/uploads/2014/02/Invading-the-Sacred-Final.pdf

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *