பெரியாரின் மறுபக்கம்- 20[இறுதிப் பாகம்]: வீரமணியின் முரண்பாடுகளும் மூடநம்பிக்கைகளும்

veeramaniஈ.வே. ராமசாமி நாயக்கர், மற்றும் மணியம்மையாரின் மூடநம்பிக்கைகளையும், பொய் பித்தலாட்டங்களையும் பார்த்தோம். இந்த அத்தியாயத்தில் ஈ.வே. ராமசாமி நாயக்கருடைய சீடர் வீரமணியின் முரண்பாடுகளையும் மூடநம்பிக்கைகளையும் பார்க்கலாம்.

மூடநம்பிக்கை: 1

இந்து புராணங்களில் முனிவர்கள் பலர் சாபம் இடுவர். இந்தச் சாபம் பலிக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. இந்தச் ‘சாபத்தை’ கேலி செய்தவர்கள்தான் பகுத்தறிவாளர்கள். ஆனால் வீரமணி சொல்வதைச் சற்றுக் கூர்ந்து கவனியுங்கள்.

வீரமணி கூறுகிறார்:-
… தமிழர்கள் எவ்வளவு காலம் தான் ரத்தக் கண்ணீர் சிந்தி, உலகத்திடம் நியாயம் கேட்டு பேசி வருவதோ புரியவில்லை! தமிழினத்திற்கு இப்படி ஒரு ‘சாபக்கேடா’?
(விடுதலை 23-4-1996)

சாபம் என்பதெல்லாம் பொய். அது மூடநம்பிக்கை என்றெல்லாம் சொன்ன இந்தப் பகுத்தறிவாளர்கள், தமிழினத்திற்கு இப்படி ஒரு ‘சாபக்கேடா?’ என்று கேட்கிறார். அதாவது தமிழர்கள் ரத்தக் கண்ணீர் சிந்த யாரோ சாபம் கொடுத்திருக்கிறார்கள் என்று சொல்கிறார்.

சாபத்தை நம்புகிறவர்கள் மூடநம்பிக்கைகாரர்கள் என்று சொல்லும்போது அதே சாபத்தை வீரமணியும் நம்பும்போது அவரும் மூடநம்பிக்கைக்காரர்தானே!
மூடநம்பிக்கை 2

வீரமணி கூறுகிறார்:-
…மது விலக்கினால் இப்படி ஏழை, எளிய குடிப் பழக்கமுடைய கிராம மக்கள் விஷச் சராயத்தாலும், கள்ளச் சாராயத்தாலும், குடல் வெந்து சாகின்ற நிலை தவிர்த்து நல்ல சாராயம், கள்ளைக் குடித்தாவது இருக்க, அக்கடைகளையே திறக்கலாமே!
(விடுதலை 30-8-1998)

அதாவது கள்ளச் சாராயம் குடிப்பதைத் தடுக்க, நல்ல சாராயம் குடிக்க கடைகளைத் திறக்கலாமே என்கிறார்.

உண்மையில் சொல்லப் போனால் இது ஒரு தலைவருக்கு அழகல்ல. கள்ளச் சாராயத்தை அரசு கடுமையான சட்டங்கள் போட்டு தடுக்க வேண்டுமே ஒழிய அதற்குப் பதிலாக நல்ல சாராயத்தைத் தரும் கடைகளைத் திறக்கக்கூடாது.

வீரமணி சொல்கிற கருத்துப்படி-  அதுதான் சரியான கருத்தும் என்று பார்த்தாலும் கூட- நமக்கு ஒரு கேள்வி எழுகிறது.

…கஞ்சா குடித்து சாவதைவிட சிறிது நல்ல கஞ்சாவை அரசே கடைகள் மூலம் கொடுக்கலாம் என்று வீரமணி சொல்வாரா?

…அபின் சாப்பிட்டு சாவதைவிட நல்ல அபினை அரசே கடைகள் மூலம் விற்கலாம் என்று வீரமணி சொல்வாரா?

கண்டிப்பாகச் சொல்லமாட்டார். ஏனென்றால் இது எவ்வளவுப் பெரிய முட்டாள்தனம் என்று அவருக்கே தெரியும்.

நல்ல அபின் அல்லது நல்ல கஞ்சாவை சாப்பிட்டாலும் உடலுக்குக் கெடுதிதான். அதே போல நல்ல சாராயம் குடித்தாலும் உடலுக்குக் கெடுதிதான். அதை எப்படித் தடுக்கவேண்டும் என்றுதான் பார்க்கவேண்டுமே ஒழிய அதற்கு பதில் நல்ல சாராயம் என்பதெல்லாம் முட்டாள்தனமான கருத்தாகும்.

மூடநம்பிக்கை: 3

வீரமணி கூறுகிறார்:-
…கிராமங்களில் தோற்றுவிக்கப்பட்ட பகைவுணர்ச்சிப் ‘பேயை’ விரட்டியாக வேண்டும்.
(விடுதலை 20-7-1997)

இதில் வரும் ‘பேய்‘ என்பது என்ன? ஆத்திகர்கள்தான் ‘பேயை’ நம்புவார்கள். நாத்திகர்கள் – பகுத்தறிவாளர்கள் நம்பமாட்டார்கள். ஆனால் நாத்திகரான – பகுத்தறிவாளரான – வீரமணி என்ன சொல்கிறார்?

பகைவுணர்ச்சிப் ‘பேயை’ விரட்டியாக வேண்டுமாம். ‘பேய்’ என்ற ஒன்று இருப்பதை நம்பித்தானே பேயோடு பகையை ஒப்பிடுகிறார்!

அப்படியானால் ‘பேய்’ என்பது இருக்கிறதா? ‘பேயி’ன் இலக்கணம் என்ன? என்று கேட்ட வீரமணிகளுக்கு – அதே கேள்வியை இப்பொழுது ஆத்திகர்கள் கேட்கிறார்கள்.

வீரமணியின் பதில் என்ன?

மூடநம்பிக்கை : 4

வீரமணி கூறுகிறார்:-
உலகின் புராதன மிகப்பெரிய தொழிலான விவசாயம் மேல்சாதியினர் செய்யக்கூடாது என்றே மனு கட்டளையிட்டுள்ளார். விவசாயத் தொழிலாளர்களின் பிரச்சினை, ஐம்பது ஆண்டு சுதந்திரத்திற்குப் பின்னரும் தீராததற்கு இதுவே அடிப்படை! பார்ப்பனர் பங்கேற்ற தொழில் துறையாக அது இருந்திருப்பின் இன்றுள்ள கஷ்டங்கள் இருந்திருக்கவே இருக்காது. இது ஒரு கசப்பான உண்மை.
(விடுதலை 30-04-1998)

வீரமணி என்ன கூறுகிறார் தெரியுமா?

பார்ப்பனார் பங்கேற்ற தொழில் துறையாக அது இருந்திருப்பின் இன்றுள்ள கஷ்டங்கள் இருந்திருக்கவே இருக்காது. இது ஒரு கசப்பான உண்மையாம். சரி.

அப்படியென்றால் இதில் ஓன்று தெளிவாகிறது.

அதாவது புராதன மிகப்பெரிய தொழிலான விவசாயத்தில் பார்ப்பனர் பங்கேற்கவில்லை. இதில் பங்கேற்றவர்கள் பார்ப்பனர் அல்லாதவர்கள் என்றாகிறது. இதன் மூலும் பார்ப்பனர் அல்லாதவர்கள் பங்கேற்றதனால்தான் விவசாயத் தொழிலாளர்களின் பிரச்சினை, ஐம்பது ஆண்டு சுதந்திரத்திற்குப் பின்னரும் தீரவில்லை என்றாகிறதல்லவா? பார்ப்பனர் அல்லாதவர்கள் பங்கேற்றதனால்தான் இன்றுள்ள கஷ்டங்கள் இருக்கின்றனவா?

எப்படி சுயமரியாதைகாரன்?

periyarதாய்-தந்தையை இழந்தவர்கள்- சுயமரியாதைகாரர்களாக ஆன பிறகு அவரவர் தாய்க்கோ, தந்தைக்கோ ஆண்டுதோறும் நினைவு நாள் கொண்டாடுகிறார்களா? இல்லையே? இன்றைய சமாதிகள்தான் நாளைய கோவில்கள் என்கிற மூடநம்பிக்கை வளர்ச்சி வரலாற்றில் பாலபாடத்தை மறந்துவிட்டு, பெரியார் சமாதிக்கு மரியாதை, பெரியார் சிலைக்கு மலர் மாலை போடுகின்ற ஒருவன் எப்படி சுயமரியாதைக்காரன்?
— வே. ஆனைமுத்து, நூல்; பெரியார் கொள்கைக்குக் குழிதோண்டிய திராவிடர் கழகம்

மூடநம்பிக்கை : 5

வீரமணி கூறுகிறார்:-
ஈரோடு, காஞ்சி என்று சொன்னால் – நமக்கு ஒரு வரலாற்றுக்கு உரியவர்கள் பிறந்த இடம் என்ற வரலாற்றுச் சிறப்பே தவிர, அதில் வேறு ஒன்றும் கிடையது.
(நூல்: சங்கராச்சாரியார்?)

மேலும் வீரமணி கூறுகிறார்:-
(நினைவிடங்களுக்கு) அங்கே போகக்கூடியதோ, மற்றதோ அது ஒரு பிரசார நிகழ்ச்சி, ஒரு வரலாற்றுக் குறிப்பு – மற்றபடி அந்த நினைவுச் சின்னங்களுக்கு மகத்துவம் உண்டு, சக்தி உண்டு என்று நாம் சொல்லவும் இல்லை, நம்பவும் இல்லை.
(நூல்: சங்கராச்சாரியார்?)

நினைவுச் சின்னங்களுக்கு மகத்துவம் உண்டு, சக்தி உண்டு என்று நாம் சொல்லவும் இல்லை, நம்பவும் இல்லை என்று கூறுகிறார். அப்படியானால் அந்த நினைவுச் சின்ன இடங்களில் செருப்பு போட்டுக்கொண்டு போகக்கூடாது என்று சொல்வது ஏன்?

பெரியார் திடலில் உள்ள பெரியார் சமாதியின் மேல் கால்வைக்க – உட்கார அனுமதிப்பீர்களா?

பெரியார் சமாதியின் மேல் கால்வைக்க – உட்கார அனுமதிப்பீர்களானால் அப்போது மட்டுமே நினைவுச் சின்னங்களுக்கு மகத்துவம் உண்டு. சக்தி உண்டு என்று நாம் சொல்லவும் இல்லை, நம்பவும் இல்லை என்று வீரமணி சொல்வது உண்மையாகும். அப்படி அனுமதி இல்லை என்று மறுக்கப்படுமானால் பகுத்தறிவாளர்களான உங்களுக்கும் நினைவு சின்னங்களுக்கு மகத்துவம் உண்டு, சக்தி உண்டு என்ற நம்பிக்கை உண்டு என்றுதான் அர்த்தம்.

ஈரோடு, காஞ்சி என்று சொன்னால் – நமக்கு ஒரு வரலாற்றுக்கு உரியவர்கள் பிறந்த இடம் என்ற வரலாற்று சிறப்பே தவிர, அதில் வேறு ஒன்றும் கிடையாது என்று சொன்ன வீரமணி கூறுகிறார்:-

ஈரோடு – நமது அறிவு ஆசானை அகிலத்திற்கு அளித்த இன்பபுரி; லட்சியப் பயணத்திற்கு விதைவிதைத்த சுயமரியாதை இயக்கமாம், ஈடுஇணையற்ற மனித நேய இயக்கம் பிறந்து வளரக் காரணமான மண்.
(விடுதலை 19-05-1998)

இந்த ஈரோடு வர்ணனையைப் பார்க்கும்போது, மேலே சொன்ன ஈரோடு, காஞ்சி என்று சொன்னால் – நமக்கு ஒரு வரலாற்றுக்கு உரியவர்கள் பிறந்த இடம் என்ற வரலாற்று சிறப்பே தவிர, அதில் வேறு ஒன்றும் கிடையாது என்பதற்கும் இந்த வர்ணனைக்கும் உள்ள முரண்பாடு உள்ளங்கை நெல்லிக்கனிப்போல் தெளிவாகத் தெரிகிறதல்லவா!

ஈரோடு – நமது அறிவு ஆசானை அகிலத்திற்கு அளித்த இன்பபுரி என்று சொல்லும்போதும் லட்சியப் பயணத்திற்கு விதைவிதைத்த சுயமரியாதை இயக்ககமாகும் ஈடு இணையற்ற மனித நேய இயக்கம் பிறந்து வளரக் காரணமான மண் என்று சொல்லும்போதும் நமக்கு ஒன்று புரிகிறது.

அதாவது ஆத்திகர்கள் எவ்வாறு கடவுள்கள் பிறந்த இடங்களான அயோத்தி, மதுரா, காசி, மதுரை, பழனி போன்ற இடங்களை பக்திப் பரவசத்துடன் எவ்வாறு இன்பபுரி என்றும் அருள்புரியக் காரணமான மண் என்றும் சொல்லுகின்றார்களோ அதே போல வீரமணியும் பக்திப் பரவசத்துடன் ஈரோடை இன்பபுரி என்றும் காரணமான மண் என்றும் சொல்லுகிறார்.

ஆத்திகர்கள் கடவுள்கள் பிறந்த இடங்களைப் புகழும்போது அது மூடத்தனம் என்றால் ஈ.வே.ராமசாமி நாயக்கர் பிறந்த இடமான ஈரோடை வீரமணி புகழும்போது அதுவும் மூடத்தனம்தானே!

அது மூடத்தனம் இல்லையென்றால் ஈரோடு – நமது அறிவு ஆசானை அகிலத்திற்கு அளித்த இன்பபுரி என்று சொல்லுகின்றாரே அந்த ஈரோடு – மற்றொரு அறிவு ஆசானை ஏன் அகிலத்திற்கு அளிக்கவில்லை?

ஈரோடு – லட்சியப் பயணத்திற்கு விதைவிதைத்த சுயமரியாதை இயக்கமாம் ஈடு இணையற்ற மனித நேய இயக்கம் பிறந்து வளரக் காரணமான மண் என்று சொல்லுகின்றாரே – அந்த ஈரோடுதான் காரணமா? அப்படியென்றால் அதே மண் மற்றொரு ஈடு இணையற்ற மனித நேய இயக்கம் பிறந்து வளரக் காரணமாக இல்லையே ஏன்? இதனால் லட்சியப் பயணத்திற்கு விதைவிதைத்த சுயமரியாதை இயக்கமாம் ஈடு இணையற்ற மனித நேய இயக்கம் பிறந்து வளர அந்த மண்தான் காரணம் என்று சொன்னால் அது மூடநம்பிக்கைத்தானே!

மேலும் இங்கு மற்றொரு விஷயத்தையும் கூற விரும்புகிறேன்.

அமைச்சர் அன்பில் தருமலிங்கம், “அய்யா திருச்சியைத்தான் தனது தலைமையிடமாக கொண்டு பெரும்பாலும் வாழ்ந்தார். ஆகவே திருச்சியில்தான் அடக்கம் செய்து அண்ணா சதுக்கம் போல எளிய நினைவுச்சின்னம் எழுப்பிடவேண்டும் என்று பிடிவாதமாகக் கூறிக்கொண்டிருந்தார். ஆனால் அதைப் போல் பிடிவாதமாக மணியம்மை ”அய்யா வாழும் போதே தன்னை பெரியார் திடலில்தான் அடக்கம் செய்யவேண்டும்” என்று தன்னிடம் இடத்தைக்கூட குறிப்பிட்டுள்ளதாகவும் கூறினார். அதற்கு வீரமணியும் ஆமாம் ஆமாம் என்றார்.
(நூல்:- வரலாற்று நாயகன், திருவாரூர் கே. தங்கராசு)

ஈ.வே.ராமசாமி நாயக்கர் தன்னை பெரியார் திடலில்தான் அடக்கம் செய்யவேண்டும் என்றும் இடத்தைக்கூட குறிப்பிட்டுள்தாகவும் சொன்னால் அது மூடநம்பிக்கைத் தானே!”

எப்படி மூடநம்பிக்கை என்று கேட்கிறீர்களா?

இறந்த பிறகு எங்கு புதைத்தால்தான் என்ன?

பெரியார் திடலில்தான் அடக்கம் செய்யவேண்டும் என்று சொன்னால் பெரியார் திடலில் அப்படி என்ன மகிமை இருக்கிறது?

அந்த பெரியார் திடலில்தான் அடக்கம் செய்ய வேண்டும் என்று சொன்னால் ஏதோ மகிமை இருக்கிறது என்றுதானே அர்த்தம்?

நமது ஹிந்து புராணங்களில் இறைவன் ஒரு இடத்தைச் சொல்லி தன்னை அங்குதான் பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று சொல்லுவார். இது மூடநம்பிக்கை என்று பகுத்தறிவாளர்கள் சொல்லுகின்றார்கள்.

அப்படியானால் இறைவன் ஒரு இடத்தைச் சொல்லி தன்னை அங்குதான் பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று சொல்லுவதற்கும் பெரியார் திடலில்தான் அடக்கம் செய்யவேண்டும் என்று சொல்லுவதற்கும் என்ன வித்தியாசம்?

இப்பொழுது சொல்லுங்கள்! பெரியார் திடலில்தான் அடக்கம் செய்யவேண்டும் என்று சொன்னால் அது மூடநம்பிக்கைத்தானே!

மூடநம்பிக்கை : 6

வீரமணி கூறுகிறார்:-
…இதற்கு முன் உ.பி.யே இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் என்கிற நிலைமாறி, தென்கோடியிலுள்ள…
(விடுதலை 20-03.1998)

ஹிந்துக்கள்தான் தலையெழுத்தை நம்புவார்கள். அதாவது ஒவ்வொருவருக்கும் தலையெழுத்தை பிரமன் எழுதுகிறான். அந்த தலையெழுத்துப்படிதான் வாழ்க்கை நடக்கிறது. அதை மீறி எதுவும் நடப்பதில்லை. அதாவது தலையெழுத்துதான் வாழ்க்கையை நிர்ணயிக்கின்றது என்று ஹிந்துக்கள்தான் நம்புகிறார்கள்.

இது மூடநம்பிக்கை என்று பகுத்தறிவாளர்கள் சொல்கிறார்கள்.

ஆனால் வீரமணி என்ன கூறுகிறார்?

‘உ.பி.யே இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் என்கிற நிலைமாறி, தென்கோடியிலுள்ள….’ என்று கூறுகிறார். அதாவது தலையெழுத்துதான் நிர்ணயிக்கும் என்பதை ஒப்புக்கொள்கிறார்.

ஹிந்துக்கள் சொல்கிற தலையெழுத்துக்கும் வீரமணி சொல்கிற தலையெழுத்துக்கும் என்ன வித்தியாசம்?

ஒரு வித்தியாசமும் இல்லை.

அப்படியென்றால் ஹிந்துக்கள் சொல்கிற தலையெழுத்தை மூடநம்பிக்கை என்று பகுத்தறிவாளர்கள் சொல்வார்களானால் வீரமணி சொல்கிற தலையெழுத்தையும் நாம் மூடநம்பிக்கை என்று சொல்லலாம் அல்லவா?

இதன்படி வீரமணி மூடநம்பிக்கைக்காரர்தானே!

முரண்பாடு 1

பா.ஜ.க. ஐந்து அணுகுண்டுகளை வெடித்தது. உலகத்திலே பாரத நாட்டின் பெருமை உயர்ந்தது. ஒவ்வொரு பாரதக் குடிமகனும் பெருமை கொண்டான். ஆனால் இதைக் கூட பொறுத்துக் கொள்ளாமல் வீரமணி என்ன கூறினார் தெரியுமா?

50ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 5 அணுகுண்டுகள்; இந்த தரித்திர நாராயணர்கள் வாழும் பூமிக்கு இப்போது அவசியம்தானா?
(விடுதலை 10-06-1998)

இதைப் பார்த்ததும் நமக்கெல்லாம் ஒன்று தோன்றும். அடடா! வீரமணிக்குத்தான் நமது நாட்டு தரித்திர நாராயணர்கள் மீது எவ்வளவு பச்சாதாபம்! எவ்வளவு பரிதாபம்! எவ்வளவு இரக்கம்!

ஆனால் நமக்குத் தோன்றும் இந்த எண்ணம் கூட தவறானது. வீரமணியின் பச்சாதாபம், பரிதாபம், இரக்கம் எல்லாம் உண்மையானது அல்ல. இதை ஆதாரம் இல்லாமல் சொல்லவில்லை.

இதோ வீரமணி கூறுகிறார்:-
நாகையில் அறிவு ஆசான் தந்தை பெரியார் தம் சிலை – சுமார் 2 லட்சம் ரூபாய்களுக்கு மேல் செலவழிக்கப்பட்டு சிலை, பீடம், பூங்காவெல்லாம் உருவாகி, நாகை நகரத்திற்குள்ளே நுழைவோர் அனைவரையும் வரவேற்கும் துவக்க சிலையாக கம்பீரத்துடன் அமைக்கப்பபட்டுள்ளது.
(விடுதலை:- 13-09-1998)

இப்பொழுது சொல்லுங்கள், வீரமணியின் பச்சாதாபம், பரிதாபம், இரக்கம் எல்லாம் உண்மையானது தானா?

இப்பொழுது அதே கேள்வியை நாமும் கேட்கிறோம்.

நாகையில் பெரியார் தம் சிலை – சுமார் 2 லட்சம் ரூபாய்களுக்கு மேல் செலவழிக்கப்பட்டு சிலை, பீடம், பூங்காவெல்லாம் உருவாகி, நாகை நகரத்திற்குள்ளே நுழைவோர் அனைவரையும் வரவேற்கும் துவக்க சிலையாக கம்பீரத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. இப்போது அவசியம்தானா? அந்த இரண்டு லட்சத்தையும் நமது நாட்டு தரித்திர நாராயணர்களுக்குக் கொடுத்து உதவியிருக்கலாமே! அதுதானே உண்மையான பச்சாதாபம், பரிதாபம், இரக்கம் ஆகும்? அதைவிட்டுவிட்டு பறவைகள் மலம் கழிக்க சிலையும், பீடமும், மனிதர்கள் பொழுதுபோக்க பூங்காவும் அமைக்க இரண்டு லட்சம் செலவழிப்பது இரக்கத்தைக் காட்டவில்லை. மாறாக ஆடம்பரம் மற்றும் விளம்பர மோகத்தைத்தான் காட்டுகிறது.

முரண்பாடு 2

வீரமணி கூறுகிறர்:-
ஒரு அறக்கட்டளையின் பணம் என்பது பொதுப்பணம். கோடியாக இருப்பது என்பது பற்றி யாருக்குமே மறுப்பு இல்லை. அந்தக் கோடியை வைத்துக்கொண்டு நாங்கள் யாரும் வட்டிக்கு விட்டு சம்பாதிப்பதில்லை. அதன் மூலம் பொதுப்பணிகள் செய்கிறோம்.
(சன் தொலைக்காட்சியில் கி.வீரமணி பேட்டி)

ஆனால் வீரமணி தலைமையிலிருந்து விலகியவர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா?

வட்டிக்கடை திறப்பதிலும், சீட்டு நிறுவனங்களை நடத்துவதிலும், காட்டும் ஆர்வம், பெரியார் நூல்களைக் காப்பாற்றுவதில் இல்லாமல் போய்விட்டது கொடுமையிலும் கொடுமை.
(நூல்:- வீரமணி தலைமையிலிருந்து விலகியது ஏன்?)

வீரமணி தலைமையிலிருந்து விலகியவர்கள் தங்கள் குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக திராவிடன் நல நிதியைக் குறிப்பிடுகிறார்கள். திராவிடன் நல நிதி வட்டிக்கு விடுவதல்லாமல் வேறு என்ன என்று கேட்கிறார்கள். நியாயம்தானே! பதில் சொல்வாரா வீரமணி?

முரண்பாடு: 3

சாதி ஒழிப்புதான் எங்களுக்கு முக்கியம் என்று சொல்கின்ற தி.க.வினர்தான் யார் யார் என்ன என்ன சாதி என்று நமக்கு நினைவூட்டுபவர்கள். ஆனால் அதில் கூட அவர்கள் பொய் சொல்லித்தான் பிழைப்பு நடத்த வேண்டியுள்ளது. அதற்கு ஒரு நல்ல உதாரணம் வீரமணியையே கூறலாம்.

வீரமணி கூறுகிறார்:-
…சிவசேனையின் தலைவரான பால்தாக்கரே என்ற பார்ப்பனர்.
(விடுதலை 16-07-1997)

அதாவது பால்தாக்கரே ஒரு பார்ப்பனர் என்று சொல்கிறார். பால்தாக்கரே ஒரு பார்ப்பனர் என்று 1997-ம் ஆண்டு சொன்ன அதே வீரமணி கூறுகிறார்:-
…பால்தாக்கரே ஒரு சூத்திரர்தான். சாஸ்திரப்படி, சாதியில் அவர் ஒரு காயஸ்தா (நம் பகுதியில் உள்ள சில பிரபு முதலியார்கள், சைவப் பிள்ளைமார்கள் போன்ற பிரிவு அது!)
(உண்மை – ஜனவரி (16-31)-2001)

1997-ம் ஆண்டு பார்ப்பனராக இருந்த பால்தாக்கரே 2001-க்குள் எப்படி சூத்திரரானார்?

பால்தாக்கரே பார்ப்பனராக இருந்தால் சூத்திரர் என்று சொன்னது பொய்யாக இருக்கவேண்டும். அல்லது பால்தாக்கரே சூத்திரராக இருந்தால் பார்ப்பனர் என்று சொன்னது பொய்யாக இருக்க வேண்டும். கடைசியாகக் கேட்கிறோம், பால்தாக்கரே பார்ப்பனரா? சூத்திரரா?

முரண்பாடு : 4

‘துக்ளக்’ ஆசிரியர் சோ அவர்கள் ஒரு கட்டுரையில் ‘விவரமறிந்தவர்கள்’ என்று கூறிவிட்டாராம்! அதை விமர்சித்து வீரமணி கூறுகிறார்:-

…இன்னொருயிடத்தில் விவரமறிந்தவர்கள் கூறுகிறார்கள் என்கிறார். அது என்ன புதிர்? யார் அந்த விவரமறிந்தவர்கள்? ஊர், பெயர் தெரியாதவர்களா அவர்கள்? இப்படி யாரும் கூறிவிடமுடியுமே! இதற்குப் பெயர்தான் ஆதாரமா?
(விடுதலை 21-09-1996)

ஆனால் இப்படி அவர்களை விமர்சித்து எழுதிய வீரமணி அவருடைய மற்றொரு கட்டுரையில் எழுதுகிறார்:-

…சாதி ரீதியாக, மத ரீதியாகக் கலவரங்கள் நடக்க வேண்டும் என்பதற்காக வெளிநாட்டிலிருந்து பணம் வருகிறது. குறிப்பாக திருச்சி, மதுரை ஆகிய மாவட்டங்களில் கலவரங்களைத் தூண்டி விடுவதற்காகப் பணம் வருகின்றது. – இந்த இரண்டாவது செய்தி பற்றித் தென்மாவட்டங்களில் விவரம் அறிந்தவர்களிடையே பரவலான பேச்சு இருக்கிறது.
(விடுதலை 20-02-1997)

சோ அவர்களை வீரமணி கேட்ட அதே கேள்வியை இப்போது நாமும் கேட்கலாம் அல்லவா! அதனால்தான் கேட்கிறோம்.

அது என்ன புதிர்? யார் அந்த விவரமறிந்தவர்கள்? ஊர், பெயர், தெரியாதவர்களா அவர்கள்? இப்படி யாரும் கூறிவிடமுடியுமே! இதற்குப் பெயர்தான் ஆதாரமா? இதற்கு வீரமணிதான் பதில் சொல்ல வேண்டும்.

வீரமணியைப் பற்றி சங்கமித்ரா!

sangamithraசாதி ஒழிப்புப் பணியில் சென்ற 20ஆண்டுகளில் வீரமணி செய்தது என்ன? மாறாக ஒரு கொள்கை அமைப்பாக – போராளி நிறுவனமாக இருந்த இதை(தி.க) வீரமணி ஒரு வட்டிக் கடையாக – கல்வி வணிக அமைப்பாக மாற்றிவிட்டார். இந்தத் துரோகத்தைத் தமிழ் மக்களாகிய நாம் ஏன் அனுமதிக்க வேண்டும்? துரோகங்களை எல்லாம் எதிர்த்துக் குரல் கொடுத்த பெரியாருக்கே துரோகம் செய்ததில், இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய துரோகி வீரமணி ஆகிறார்.

பெரியார் தந்த வேலைத் திட்டத்தில் வீரமணியின் – சாதனை – பங்களிப்பு என்ன?

வீரமணி பட்டியலிடுகிறார். கிட்டத்தட்ட 44 அறப்பணி அமைப்புகள் தோழர் வீரமணி – பெரியார் தந்த பணத்தில் நடத்துகின்ற அமைப்புகளாகும். இதில், எந்த அமைப்பு பெரியாரின் உயிர்க்கொள்கையான சாதி ஒழிப்புக்குப் பாடுபடுகிறது? பெரியாருடைய எத்தனை பள்ளிகளில் -கல்லூரிகளில் – பெரியாரின் பார்ப்பன, வருணாசிரம எதிர்ப்புக் கொள்கைள் – பாடமாக – பயிற்சியாக போதிக்கப்படுகின்றது? இதில் பெரியார் பால்பண்ணை, பெரியார் கணினிக் கல்லூரி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிகுலேசன் மேனிலைப்பள்ளி, பெரியார் ஆங்கிலக் கல்விப் பயிலகம், மகளிர் பாலிடெக்னிக், மகளிர் தொழில் பயிலகம், முதலிய பணம் பண்ணுவதற்கென்றே தோழர் வீரமணியால் நடத்தப்படுகின்றன என்று நாம் சொன்னால் அதில் தவறு என்ன? மேலும் பெரியார் அமைப்புகளில் பீராய்ந்த பணத்தில் முழுக்க முழுக்க வட்டிக் கடைகளாக – திராவிடன் நல நிதியும் – குடும்ப விளக்கு நிதியும் நடத்தப்படுகின்றன என்றால், அதை யார்தான் மறுக்க முடியும்?

(சங்கமித்ரா உண்மை இதழில் பணியாற்றியவர். ஏப்ரல் 84 முதல் சூலை 85 வரை 15 மாதங்கள் உண்மை இதழ் இவர் தயாரிப்பில் வந்ததாகக் கூறுகிறார் சங்கமித்ரா.)

[முற்றும்]


25 Replies to “பெரியாரின் மறுபக்கம்- 20[இறுதிப் பாகம்]: வீரமணியின் முரண்பாடுகளும் மூடநம்பிக்கைகளும்”

 1. “போகப் போகத் தெரியும்” மிகச் சிறந்த ஆய்வு நூல்களில் ஒன்றாக விளங்கும்; ஆனால் இந்த 40 வது பகுதி இறுதிப்பகுதியாகவும் முத்தாய்ப்பாகவும் இருப்பதற்கு இன்னும் கொஞ்சம் வீரமணியை அலசலாம்; விஷயங்கள் கிடைக்கும்; வீரமணியின் மிகச்சிறந்த உளரல்கள் மார்க்கெட்டில் கிடைக்கும்; எதை விடுவது எதைச்சேர்ப்பது என்று முடிவு செய்யமுடியாமல் நீங்கள்தான் திணற வேண்டும்.

  இது புத்தகமாகும்போது இந்த முத்தாய்ப்புப் பகுதி இன்னும் சிறப்பாகவும் conclusive ஆகவும் முழுமையாக அம்மணப்படுத்தப்பட்டவர்களாக வீரமணியும் தி.க.வும் இருக்கவேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பு.

  கண்ணன், கும்பகோணம்.

 2. இது “பெரியாரின் மறுபக்கம்”. தொடரின் இறுதிப் பகுதி. தவறாக ‘போகப் போகத் தெரியும்’ என்ற பெயரில் வெளியிடப் பட்டிருந்தது. இப்போது திருத்தப் பட்டு விட்டது. தவறுக்கு வருந்துகிறோம்.

  அன்புடன்,
  ஆசிரியர் குழு.

 3. அய்யா, மீண்டும் ஒரு நல்ல கட்டுரை. ஆனால், போகப் போக தெரியும்- 40 என்று போடுவதற்கு பதிலாக பெரியாரின் மறுபக்கம்- 40 என்று எழுதியிருக்கிறீர்கள். உண்மையில், அது பெரியாரின் மறுபக்கம்-20 ஆக இருந்திருக்க வேண்டும். இதைவைத்து, இதையொரு குற்றம் என்று சொல்லி பெரியார்தாசர்கள் உங்களைப் பழிப்பார்கள்… எனவே, பெயரை மாற்றிவிடுங்கள்!

 4. அய்யா, அவன் ரூட்டுலேயே போயி மடக்குரின்களே அருமையோ அருமை. திராவிட மற்றும் இன்ன பிற மடையர்கள் வெட்டி பேச்சு பேசிய சொத்து செர்தவங்க என்பதை வெளிச்சம் போட்டு காட்டிருக்கிங்க – உங்கள் தொண்டுக்கு தலை வணங்குகிறோம்

 5. .

  பெரியார் ஆர‌ம்பித்த‌ இய‌க்க‌த்திலே, “மான‌மிகு” த‌ள‌ப‌தியார்,

  ந‌வீன‌ வ‌ர்ணாசிர‌ முறையிலே
  -பிர‌த‌ம‌ரின் ம‌க‌ன் பிர‌த‌ம‌ர், முத‌ல‌வ‌ரின் ம‌க‌ன் முத‌ல்வ‌ர் என்ற‌ குல‌த் தொழிலின் அடிப்ப‌டையிலே-
  த‌ள‌ப‌தியின் ம‌க‌னுக்கே ப‌ல‌ பொறுப்புக‌ள் கொடுக்க‌ப் ப‌டுவ‌தாக‌ ப‌ல‌ ப‌த்திரிகையிலே செய்திக‌ள் வந்த‌ வ‌ண்ண‌ம் உள்ள‌ன‌.

  இப்ப‌டி ம‌னு த‌ர்ம‌, வ‌ர்ணாசிர‌ம‌, பிறப்பு அடிப்ப‌டையிலே ப‌த‌வி வ‌ழ‌ங்க‌ப் ப‌டுவ‌து ஏன்?

 6. தரித்திர நாராயணர்கள் — what is the meaning of this? is the from some epic?

 7. பெரியாரின் மறுபக்கம் நூலை தொடர்ந்து வெளியிட்டு வந்த தமிழ்ஹிந்து தளத்துக்கு நன்றி. ம. வெங்கடேசன் நிறையப் படித்து, பெரியாரின் முரண்பாடுகளைத் தொகுத்திருக்கிறார். சில இடங்களில் வீம்பு வாதங்கள் தெரிந்தாலும், இம்முயற்சி மிக முக்கியமான ஒன்றே.

 8. அட மாண்புமிகுவாக இருந்து சொத்து சேர்த்தா, சொந்தக் காரன் பேர்ல இருந்தாக் கூட பின்னால பல விசாரணை, வழக்கு வரக் கூடும் ஐயா.

  மானமிகுவாக இருந்த பில்லியன் கணக்கிலே சொத்து சேர்த்தால், எந்த சட்டத்தை உபயோகப்படுத்துவீங்க?

  அது மட்டும் அல்ல. மாண்பு மிகு வாக இருந்தால் ஆட்சி இருக்கும் வரைக்கும் தான்.

  மானமிகுவாக இருந்தால் எந்த ஆட்சி வந்தாலும் நமது ஆட்சிதான்.

  என்ன, ஒவ்வொரு முறையும் இன்னும் பெரிய ஜால்ரா வாங்கிக் கொண்டே இருக்க வேண்டும்.

  இந்த அறிவு உலகத்திலே எவனுக்காவது இருக்கா? இதைத்தான்யா பகுத்தறிவுனு சொல்லுறோம்.

  இதை எல்லாம் சிந்திக்காமல் மூட நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.
  எங்களுக்கு பகுத்தறிவு இருக்கிறது. பில்லியன்கள் குவிகிறது. ஆனால் நம் மீது பொறாமைப் பட்டு பேசுகிறார்கள்.

  நான் சவால் விடுகிறேன்.

  நாங்கள் பகுத்தறிவின் அடிப்படையிலேயே கடந்த முப்பது ஆண்டுகளாக நாங்கள் சேர்த்த சொத்துக்களைப் போல, உங்களால குபேரனுக்கு பூசனை போட்டு அதே அளவு சொத்துக்களை குவிக்க முடியுமா?

 9. //பெரியார் ஆர‌ம்பித்த‌ இய‌க்க‌த்திலே, “மான‌மிகு” த‌ள‌ப‌தியார்,

  ந‌வீன‌ வ‌ர்ணாசிர‌ முறையிலே
  -பிர‌த‌ம‌ரின் ம‌க‌ன் பிர‌த‌ம‌ர், முத‌ல‌வ‌ரின் ம‌க‌ன் முத‌ல்வ‌ர் என்ற‌ குல‌த் தொழிலின் அடிப்ப‌டையிலே-
  த‌ள‌ப‌தியின் ம‌க‌னுக்கே ப‌ல‌ பொறுப்புக‌ள் கொடுக்க‌ப் ப‌டுவ‌தாக‌ ப‌ல‌ ப‌த்திரிகையிலே செய்திக‌ள் வந்த‌ வ‌ண்ண‌ம் உள்ள‌ன‌.

  இப்ப‌டி ம‌னு த‌ர்ம‌, வ‌ர்ணாசிர‌ம‌, பிறப்பு அடிப்ப‌டையிலே ப‌த‌வி வ‌ழ‌ங்க‌ப் ப‌டுவ‌து ஏன்?//

  திருசிக்காரரே, இது வர்ணாச்ரம தர்மம் அல்ல, இது இன்று காணப்படும் மட்டமான சதி தான். வர்நாச்ரமதர்மம் என்பது குலத்தொழில் அல்ல. அப்படி இருந்திருந்தால், ஒரு மீன்காரியின் மகன் வேத வியாசர் ஆகியிருக்க முடியாது, ஒரு திருடன் வால்மிகி ஆகியிருக்க முடியாது, ஒரு தீண்டத்தகாதவன் மதங்க முனி ஆகியிருக்க முடியாது, ஒரு அரசன் விச்வாமித்ராராகி இருக்கமுடியாது, ஒரு வீட்டுவேலைக்காரியின் மகன் தேவரிஷி நாரதர் ஆகியிருக்க முடியாது, எனவே இங்கு வீரமணி குறிப்பிடுவது (வீரமணி- ‘வீரம்’ என்பது தமிழ்ச்சொல் அல்லவே) இன்று காணப்படும் சாதிமுறைதான்…

  //தரித்திர நாராயணர்கள் — what is the meaning of this? is the from some epic?//

  கார்கில் ஜெய் அவர்களே, “தரித்திர நாராயணன்” என்பது மகாலக்ஷ்மியை தேடி செல்வத்தை இழந்து மண்ணுலகம் வந்து சோற்றுக்கே வழியில்லாமல் வாடிய பரந்தாமனை குறிக்கும்.. இது திருமலை வேங்கடவனின் கதை! இதைத்தான் சுவாமி விவேகானந்தர் ‘தரித்திர நாராயண சேவை” என்று தொடங்கினார். அதாவது மனிதனுக்கு உதவுவதே இறைவனுக்கு செய்யும் திருப்பனை ஆகும்..

  “jeeva is shiva”- மனிதனே கடவுள்!

  “nara seva is narayana seva”- மனிதனுக்கு செய்யும் தொண்டே இறைவனுக்கு செய்யும் திருப்பணி…

 10. அடாடா அருமை நண்பர் வள்ளுவர் அவர்களே,

  வெள்ளை உள்ளம் கொண்ட நல்லவராக இருக்கிறீர்கள்.

  சோத்துக்கும், துணிக்கும் வழியில்லாமல் பிக்ஷை எடுத்துப் பிழைத்துக் கொண்டு வறுமையிலே வாடிய பார்ப்பனன், தன் மகனையும் அதே வறுமையில் செம்மை என்கிற படிக்கு கஷ்டப் படும்படியாக விட்டது அந்தக் கால வருணாசிரமம்.

  அந்தக் காலத்திலே வீட்டிலே மணி அரிசி இல்லாமல் பார்ப்பன் வர்ணத்திலே பட்ட சிரமம் தான் வர்ணாசிரமம்.

  ————

  இந்தக் கால வர்ணாசிரமம் வேறு.

  ————–

  ந‌டிக‌ர் ம‌க‌ன் , திரைப் ப‌ட‌த் துறையினர் ம‌க‌ன்க‌ள் தான் அதிக‌ அள‌வில் ந‌டிக‌ராக‌ வ‌ருகின்ர‌ன‌ர்.

  முத‌ல்வ‌ர் ம‌க‌ன் தான் துணை முத‌ல்வ‌ராக‌ முடிகிர‌து.

  என் வாரிசை அரசிய‌லுக்கு கொன்டு வ‌ந்தால் என்னை ச‌வுக்கால் அடியுங்க‌ள் என்று வாய் ச‌வ‌டால் விட்டு விட்டு , இற்தியில் வாய்ப்பு கிடைக்கும் போது த‌ன் ம‌க‌னை த‌ன் க‌ட்சியின் முத‌ல் காபினெட் அமைச்ச‌ர் ஆக்குப‌வ‌ர்க‌ள்.

  இதே வழியிலே மான மிகு தளபதியாரும் செயல் படுவதாக பத்திரிகைகள் புழுதி வாரித் தூற்றுகின்றன.

  இதுவும் சிரமமமான வர்ணம் தான். பில்லியன் கணக்கில் சொத்துக்கள் உள்ள அமைப்பை மகன்கள் பெயருக்கு பட்டா போடுவது கொஞ்சம் சிரமமாக தான் உள்ளது.

 11. ஆஹா, முடிஞ்சு போச்சே! ம வெங்கடேசன் அவர்களுக்கு நன்றி. உங்கள் புத்தகம் கிடைக்கும் இடம் கொஞ்சம் சொல்லுங்களேன்.

 12. தயவு செய்து திரு வெங்கடேசன் அவர்கள் எழுதிய Ee.Ve.Ramasamy naickarin marupakkam book எங்கு வாங்குவது என்று முகவரி தெரியப்படுத்தவும். அது ethanaiபாகம், என்ன விலை என்றும் தெரிவிக்கவும்.

 13. தயவு செய்து திரு M.வெங்கடேசன் அவர்கள் எழுதிய Ee.Ve.Ramasamy naickarin marupakkam book எங்கு வாங்குவது என்று முகவரி தெரியப்படுத்தவும். அது ethanaiபாகம், என்ன விலை என்றும் தெரிவிக்கவும்.

 14. தயவு செய்து திரு M.வெங்கடேசன் அவர்கள் எழுதிய Ee.Ve.Ramasamy naickarin marupakkam book எங்கு வாங்குவது என்று முகவரி தெரியப்படுத்தவும். அது ethanaiபாகம், என்ன விலை என்றும் தெரிவிக்கவும்

 15. Mr. Vallu(van) அவர்களே,
  //வீரமணி குறிப்பிடுவது (வீரமணி- ‘வீரம்’ என்பது தமிழ்ச்சொல் அல்லவே)// – even மணி is not tamil ‘mani’.. it is english ‘money’ 🙂
  //கார்கில் ஜெய் அவர்களே, “தரித்திர நாராயணன்” என்பது மகாலக்ஷ்மியை தேடி செல்வத்தை இழந்து மண்ணுலகம் வந்து சோற்றுக்கே வழியில்லாமல் வாடிய பரந்தாமனை குறிக்கும்.. இது திருமலை வேங்கடவனின் கதை! இதைத்தான் சுவாமி விவேகானந்தர் ‘தரித்திர நாராயண சேவை” என்று தொடங்கினார் -// So seems that Veera money believes epics and agrees with vivekananda 🙂

 16. பார்ப்பன கும்பல் கூடி நின்று எப்படி பம்மாத்து சதி செய்கிறது என்பதையே இது காட்டுகிறது.

  என்ன வேண்டுமோ எழுதி விட்டுப் போங்கள். பெரியார் சந்திக்காத எதிர்ப்பா? அவருடைய வாரிசான நாங்களும் இது போல எதிர்ப்புகளை சந்திக்க தானே வேண்டியுள்ளது?

  எனவே நாங்கள் கொள்கையின் படி செயல்பட வில்லை என்று எழுதுவதனால் எழுதி விட்டுப் போங்கள். நாட்டுப் பற்று இல்லை…. மாற்றிப் பேசினோம்….. பிற மதத்தவருக்கு பயந்து இந்து மதத்தை மட்டும் திட்டினோம்…இப்படி என்ன வேண்டுமானாலும் எழுதி விட்டுப் போங்கள்.

  ஆனால் எங்கள் சொத்து கணக்கை பற்றி மட்டும் எழுத வேண்டாம் , அது தவறு, அந்த உரிமை உங்களுக்கு இல்லை என்று எச்சரிக்கிறேன்!

  மானம், அது எங்களிடம் மிகுதியாக இருக்கிறது- அது உங்களுக்கே தெரியும்- அதனால் தான் மானமிகு என்ற பதவி உலகிலேயே வேறு யாருக்குமே இல்லை. எனவே ஏதாவது குறை கூறுவது, நக்கலடிப்பது…..இதையெல்லாம் செய்து விட்டுப் போங்கள் – மானம் மிகுதியாக இருப்பதால் – பிரச்சினை இல்லை.

  ஆனால் சொத்து, அறக் கட்டளை, கல்லூரிகள் ….. இவை தான் பகுத்தறிவின் ஆதாரமே. இவற்றை விட்டு விட்டால் பகுத்தறிவு போணியாகாது என்பதால், சொத்துக் கணக்கை யாரும் டச் பண்ணக் கூடாது.

  அதோடு நாங்கள் ஜால்ராவை எந்தக் கடையிலே வாங்குகிறோம், என்பதையும் தெரிவிக்கவே கூடாது என்பதை வர்புறுத்திக் கூறுகிறோம். ஜால்ரா போடும் தொழில் முதலீடு இல்லை, இலாபம் பில்லியன்கள் என்பதால், எல்லோரும் ஜால்ரா தொழிலுக்கு வருவது

  – ஒருவர் மட்டுமே இந்த தொழிலை செய்யலாம் என்ற குலத் தொழில் முறைய நாங்கள் எதிர்த்தாலும்-

  எங்களுக்கு சிறந்த தொழில் ஜால்ரா தொழில் என்பதால் இதில் எல்லோரும் வந்து மொய்ப்பதை அனுமதிக்க முடியாது.

 17. // அதோடு நாங்கள் ஜால்ராவை எந்தக் கடையிலே வாங்குகிறோம்

  🙂

  திருச்சிகாரர் –
  உங்களுக்கு ஜால்ரா வாங்கத்தான் தெரியும் – எங்களுக்கு செய்யவே தெரியும் – எங்கள அடிச்சிக்க யாராலும் முடியாது

  இப்படிக்கு – வீரமணி

 18. //அடாடா அருமை நண்பர் வள்ளுவர் அவர்களே,

  வெள்ளை உள்ளம் கொண்ட நல்லவராக இருக்கிறீர்கள்.

  சோத்துக்கும், துணிக்கும் வழியில்லாமல் பிக்ஷை எடுத்துப் பிழைத்துக் கொண்டு வறுமையிலே வாடிய பார்ப்பனன், தன் மகனையும் அதே வறுமையில் செம்மை என்கிற படிக்கு கஷ்டப் படும்படியாக விட்டது அந்தக் கால வருணாசிரமம்.

  அந்தக் காலத்திலே வீட்டிலே மணி அரிசி இல்லாமல் பார்ப்பன் வர்ணத்திலே பட்ட சிரமம் தான் வர்ணாசிரமம்.

  ————

  இந்தக் கால வர்ணாசிரமம் வேறு.

  ————–

  ந‌டிக‌ர் ம‌க‌ன் , திரைப் ப‌ட‌த் துறையினர் ம‌க‌ன்க‌ள் தான் அதிக‌ அள‌வில் ந‌டிக‌ராக‌ வ‌ருகின்ர‌ன‌ர்.

  முத‌ல்வ‌ர் ம‌க‌ன் தான் துணை முத‌ல்வ‌ராக‌ முடிகிர‌து. //

  திருசிக்காரரே, நானும் அதைத்தானே சொன்னேன், அந்த காலத்தில் இருந்த வர்ணாச்ரமம் வேறு, இப்பொழுது இருக்கும் மதிகெட்ட சாதி கொடுமை வேறு, இதைஎல்லாம் சீர்திருத்துவதாக கங்கணம் கட்டிக்கொண்டு கிளம்பிய ஈ.வே.ரா.வும் அவரது அடியார்கள் செய்ததும்தான் உண்மையில் கேவலமான வேலை…

  //So seems that Veera money believes epics and agrees with விவேகனந்தா//

  கார்கில் ஜெய் அவர்களே, உண்மையை யாராலும் நிராகரிக்க முடியாது என்பதற்கு இதுதான் சரியான எடுத்துக்காட்டு…

 19. புராணமோ என்ன வெங்காயமோ உங்களின் ஆரிய, பார்ப்பன சூழ்ச்சிகளை எல்லாம் பிரச்சாரம் செய்யாதீர்கள் என்றால், கேட்கவா போகிறீர்கள்?

  எப்படியோ இந்த புராணங்களில் காட்டும் அக்கரையிலே எங்கள் மானமிகு தலைவன் குவித்த சொத்துக்களையோ, அவரின் வாரிசு பட்டத்துக்கு வரத் தயாராக இருப்பதைப் பற்றியோ அதிகம் கவனம் செலுத்தாத வகையிலே இருப்பது, இப்படி உருப்படாத கதைகளை நீங்கள் பேசிக் கொண்டு இருப்பது எங்களுக்கு நல்லதுதான். நாங்களும் எங்கள் “பணி”களை தங்கு தடையின்றி நிறைவேற்ற இயலும்.

  சவாலை மீண்டும் வைக்கிறேன்.

  நாங்கள் பகுத்தறிவின் அடிப்படையிலேயே கடந்த முப்பது ஆண்டுகளாக நாங்கள் சேர்த்த சொத்துக்களைப் போல, உங்களால குபேரனுக்கு பூசனை போட்டு அதே அளவு சொத்துக்களை குவிக்க முடியுமா?

 20. பண்டைய இந்திய வில் குறு நிலா மன்னர்களின் ஒற்றுமை இன்மை காரணமாக முகலாயர்களும் ஆங்கிலேயர்களும் இந்தியாவை கொள்ளை adithanar, அது போல் இப்போது vijayakanth, siranjeevi, மகாராஷ்டிரா நவ நிர்மான் சென தலைவர் ராஜ் தாக்கரே மற்றும் பல சிறு கட்சிகளின் இந்து தலைவர்கள் ஓட்டுக்களை பிரித்து சோனியா ஆள வழி வகுக்கின்றார்கள். கிறிஸ்துவர்களோ இஸ்லாமியர்களோ அவர்கள் மதத்தை சேர்ந்தவர்களுக்குத்தான் ஓட்டளிப்பார்கள், மற்ற மதத்தினர்க்கு எப்போதும் ஓட்டளிக்க மாட்டார்கள். இதை அவர்களுக்கும் அவர்களின் மத மாற்ற முயற்சிகளுக்கும் உதவி புரியும் தலைவர்கள் மனதில் கொள்ளவேண்டும்.
  கட்டுரையாளர் வெங்கடேசன் போன்றவர்கள் முன் முயற்சி எடுத்து ஒத்த கருத்துடைய அன்பர்களை இணைத்து ஹிந்து மத நற்பண்புகளை போதிக்கும் பள்ளிகளை உருவாக்க வேண்டும், அதற்கு என் போன்றவர்கள் நிதி உதவி அளிக்க தயாராக வுள்ளோம். எங்கிருந்தோ வந்து வெளி மதங்களை நம்மிடம் விஷ விதைகளாக விதைக்கும் இவர்களின் முயற்சியை முறியடிக்க நம் தலைவர்களை நம்பி பயனில்லை, நாமே செயலில் இறங்கினால்தான் இதற்கு நல்ல விடிவு ஏற்படும்.

 21. இத்தொகுப்பு அடோபி பி டீ எப் வடிவில் கிடைக்கசெய்ய இயலுமா

 22. தோழரே! நீங்கள் எழுதுவதற்கும் பேசுவதற்கும் அடிப்படை வசதியைப் பெற்று தந்தது நீதிக்கட்சியும் பெரியாரின் சுயமரியாதை இயக்கமும். ருசுயாவில் பொதுவுடமை தோற்றதாக சொல்லப்பட்டது என்றால் அது ஆட்சியாளர்களின் கோளாறே தவிர காரல் மார்க்சு சொன்ன தத்துவத்தில் அல்ல.
  வீரமணி கோளாறு அவருடைய கோளாறே தவிர பெரியாரின் தத்துவத்தின் கோளாறு அல்ல.
  பெரியாரை பற்றி எழுதும் நீங்கள் காஞ்சி சங்கராச்சாரி ஆர்.எசு.எசு பற்றியும் எழுதுங்கள்.
  இறுதியாக பெரியார் உங்களுக்காகத் தான் பாடுபட்டாரே ஒழிய தனக்காக அல்ல.
  நன்றி
  கவி

  (Edited and published.)

 23. அன்புள்ள ஆசிரியருக்கு;
  பல ஆண்டுகள் பெரியாரின் கொள்கைகளுக்காக கடுமையாய் உழைத்து பின்பு Dr. பெரியார் தாசன் முஸ்லிமாக மதம் மாறியது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

 24. பெரியாரிசம் என்பது காலாவதியான் ,நீர்த்துப்போன கடை சரக்கு .எதோ பிழைப்புக்காக வீரமணி போன்றோர் இந்த ஊசிப்போன உளுந்து வடைகளை விற்க வேண்டி ஆளில்லாத சந்தையில் நின்று கூவிக்கொண்டிருக்கிறார்கள் .இவரின் புளுகு மூட்டைகளை மக்கள் ஓரம் கட்டி வெகு நாட்களாகின்றன .டோன்ட் கிவ் தெம் இம்போர்ட்டேன்சி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *