ஹிந்து தர்மத்தின் அதிகாரி யார்?

murugan_skandanதிகட சக்கரச் செம்முகமைந்துளான்” எனத் தமது கந்த புராண அரங்கேற்றத்தைத் தொடங்குகிறார் கச்சியப்ப சிவாச்சாரியார். அவரது கனவில் கந்தக்கடவுளே தோன்றி கந்த புராணத்தைத் தமிழில் பாடச் சொல்லி “திகட சக்கரம்” என அடி எடுத்துக்கொடுத்திருக்கிறார். பாடலைச் சொல்லி “திகட சக்கரச் செம்முகமைந்துளான்” என்பதை “திகழ் தசக் கர செம்முகம் ஐந்து உள்ளான்” என்று பதம் பிரித்தார். சபையில் இருந்த ஒரு புலவர் எழுந்தார். “திகழ் தசக்கரம் என்ற இரு சொற்கள் திகட சக்கரம் எனப் புணர விதி இல்லை” என்று ஆட்சேபித்தார்.

அது அன்றைய தமிழகம். தலைவரைப் போற்றி கவிதை பாடி காக்கா பிடிக்கும் கூலிக் கவிஞர்களும் வால் பிடித்து பிழைக்கும் வாலிக் கவிஞர்களும் தமிழை மாசு படுத்தாத காலம். கூர்மையான கேள்விகள் கேட்பார்கள். பதில் சொல்லியாக வேண்டும். “இறைவன் சொன்ன வரி” என்றா சொல்ல முடியும்? அரங்கேற்றம் நின்றது. கச்சியப்பர் அன்றிரவு உணவு உண்ணாது வெறுந்தரையில் படுத்தார். மறுநாள் பதில் சொல்ல வேண்டும். சபை கூடியது. அப்போது அங்கே ஒரு புலவர் வந்தார். வீரசோழியம் என்ற இலக்கண நூலைக் கற்றோர் கூடிய சபையில் நீட்டினார். அந்நூலில் சந்திப்படலத்தில் பதினெட்டாம் செய்யுளில் திகடச்சக்கரம் என்பதற்கான விதி இருந்தது. சபையோர் ஏற்றனர். கொண்டு வந்த புலவர் மறைந்தார். இது ஐதீகக்கதை.

milkmaid1பொது வழக்கிலும் இத்தகைய கதை ஒன்று உண்டு. கம்பரின் சேது பந்தனப் பாடலில் “துமி தம் ஊர் புக, வானவர் துள்ளினார்” எனும் வரியில் துமி என்னும் வழக்கை சோழ அரசவைக் கவிஞர் ஒட்டக்கூத்தர் ஆட்சேபித்தார். கம்பர் அவ்வாறு உண்டு என வாதிக்க அதனை அறிய இருவரும் ஊருக்குள் அத்தகைய வழக்கு இருக்கிறதா என அறியச் சென்றனர். ஊர்ப்புறத்தில் ஆயர் குடியில் ஒரு அம்மை தன் நான்கு குழந்தைகளை தயிர் கடையும் போது துமி பட்டுவிடும் விலகுங்கள் என்று சொல்ல ஒட்டக்கூத்தர் அச்சொல்லாட்சி இருப்பதை ஒத்துக்கொண்டார். அப்படி ஆயர் குலப் பெண்ணாக சரஸ்வதியும் நான்கு குழந்தைகளாக வேதங்களும் வந்ததாகச் சொல்வர்.

இந்த ஐதீகங்களும் கதைகளும் சொல்லும் செய்தி தான் என்ன?

ஒரு இலக்கண நூலுக்குள் நம் தமிழ் மொழியை அடைக்க இயலாது. ஒரு சமுதாய வட்டத்துக்குள் பேச்சு நடை மட்டுமே செம்மை எனச் சொல்ல முடியாது. இது நம் பண்பாட்டில் ஊறிய விஷயம். ஆனால் மனித மனத்தின் ஒரு ஆதாரப் போக்கு அப்படியல்ல. அதற்கு ஒரு நூலுக்குள், ஒரு சட்டகத்துக்குள் எல்லாவற்றையும் போட்டு அடைத்திட வேண்டும். அடங்காததை சிறுமைப்படுத்தி, அன்னியப்படுத்தி அழித்துவிட அது துடிக்கும். ஒற்றைத்தீர்வே, ஒரு சட்டமே,  ஒரு வழக்கே சரியென அது கூறும். இந்த ஒற்றைத்தீர்வு அது புனித வெளிப்பாடாகட்டும் அல்லது ஒரு மனிதனின் சிந்தனையில் உதித்த பெருங்கனவாகட்டும் (மார்க்சியத்தைப் போல) அது என்னதான் மாபெரும் கருணை பொங்கும் இதயத்திலிருந்து மானுடத்துயரனைத்தையும் நீக்க உருவெடுத்ததாகத் தன்னைக் காட்டிக்கொண்டாலும், அத்தகைய ஒற்றைப்பார்வைகளும், ஒற்றை அதிகார பீடங்களும் அழிவைத்தான் ஏற்படுத்தும்.

ஆனால் இந்த ஒற்றைத் தன்மையைத்தான் மேற்கத்தியப் பண்பாடு சென்ற இரண்டு நூற்றாண்டுகளில் முன்வைத்தது.  உலகெங்கிலும் காலனியம் மூலமாக பரப்பியது. ஆனால் இப்பிரச்சனையின் வேர்கள் இன்னும் ஆழமானவை. யூதர்களான உளவியலாளர் டானா ஸோகரும், இயற்பியலாளர் இயான் மார்ஷலும் தங்கள் குழந்தைகளை பௌத்த கோவில்களுக்கு அழைத்து வருகின்றனர். ஆசியத் தொன்மங்களையும் தரிசனங்களையும் கூறுகின்றனர். யூதேய-கிறிஸ்தவ சூழலிலேயே வளர்ந்த குழந்தைகள் மிகவும் சங்கடமாக உணர்கின்றனர். “அப்படியானால் எது உண்மை?” என அவர்கள் வினவுகின்றனர். ஸோகரும் மார்ஷலும் இதனைக் குழந்தைகளின் பிரச்சனையாகக் காணவில்லை. யூதேய-கிறிஸ்தவ-மேற்கத்திய பண்பாட்டின் ஆழமான பிரச்சனையாகக் கருதுகின்றனர்:

ஒற்றை எளிய உண்மைக்கான விருப்பம் இந்த குழந்தைகளின் பிரச்சனை மட்டுமல்ல. மோஸஸ் சினாய் மலையிலிருந்து ஒற்றைக் கடவுள் எனும் கோட்பாடுடன் வந்த காலந்தொட்டு மேற்கு பலதெய்வ வழிபாட்டை அதன் அனைத்து விதங்களிலும் நிராகரித்து வருகிறது. மோஸஸின் பொறாமை கொண்ட தேவன் தனது வழிபாட்டையும் தனக்குக் கீழ்ப்படிதலையும் பிற தெய்வங்களை நிராகரிப்பதன் மூலமே ஏற்றுக்கொள்ளும் தேவன். இந்த தேவனின் கதையே அவனது மக்களுக்கு “உண்மை”க் கதை. (the true story), அவனது கட்டளைகளே உண்மையான கட்டளைகள். அதனை ஏற்பவர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப் பட்ட மக்கள். ஏற்காதவர்கள் வெளியாட்கள் (outsiders:அல்லது விவிலிய மொழியில் புறசாதியார்) .

கிறிஸ்தவமும் இஸ்லாமும் இதே ஏக-தெய்வக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டவை. அதே சமயம் இந்த ஒரே உண்மை மார்க்கம், ஒரே வெளிப்படுத்தப்பட்ட சத்தியம் எனத் தங்களைத் தாமே பிரகடனப்படுத்துவதில் அவை இன்னும் பிடிவாதமான நிலைப்பாட்டை எடுக்கின்றன. கிறிஸ்தவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் தம் உண்மையை ஏற்காதவர்கள் வெளியாட்களைக் காட்டிலும் கீழானவர்கள். அவர்கள் பாகனியர்கள் அல்லது அவிசுவாசிகள்; …. மோசஸும் பிளேட்டோ வுமே நம் மேற்கத்திய சம்பிரதாயத்தின், ஒற்றைத் தேடலின், மருண்மை-வெறுப்பின் இரு தூண்கள். அறியப்பட முடிந்த ஒரு அடிப்படை ஆதார ஒரே உண்மை குறித்த அவர்களின் (மோஸஸும் பிளேட்டோ வினுடையதுமான) பார்வையே கிறிஸ்தவ ஆன்மிகத்தின் அடிப்படையாயிற்று.

நவீனத்துவம் மோஸஸின் ஒற்றைக் கடவுள் என்பதை நீக்கி அந்த இடத்தில் ஒற்றை அறிதல் என்பதைப் பிரதிஷ்டை செய்தது …. நாம் இந்த “ஒரே தேவன்” அல்லது ஒற்றை உண்மை எனும் கோட்பாட்டின் ஆதிக்கத்தில் இருந்தமையால் மேற்கத்திய சமுதாயத்தில் சிலுவைப்போர்களும், புனித விசாரணை எரித்தல்களும், கில்லட்டின் தலைவெட்டுக்களும், ஹோலேகாஸ்ட் இன அழிப்புகளும் சாத்தியமாயிற்று.

மேற்கத்திய காலனிய ஆதிக்கம் பிற பண்பாடுகளிலும் இதே ஒற்றை ஆக்கத்தை செய்ய முயற்சித்தது. ஆனால் ஹிந்து தர்மத்துக்கு ஒற்றை அதிகாரி உண்டா? போப் போல? அல்லது விவிலியத்தின் மோசேனிய கட்டளைகள்/சட்டங்கள் போல சட்டங்கள் உண்டா? இந்த கேள்வி அடிக்கடி கேட்கப்படும் கேள்வி ஆகும். சில ஹிந்துக்களுக்கே இத்தகைய ஓர் அமைப்பு ஹிந்துக்களுக்கு இருக்க வேண்டும் என்கிற எண்ணம் கூட உண்டு.

17 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பியர்கள் இந்தியாவுக்கு வந்த போது இடத்துக்கு இடம் காலத்துக்கு காலம் மக்கள் குழுவுக்கு மக்கள் குழு சட்டங்கள் மாறிக்கொண்டே இருப்பதைக் கண்டார்கள். ஒற்றைச் சட்டத்துக்குப் பழக்கப்பட்ட அவர்களுக்கு இது பெரிய எரிச்சலை உண்டு பண்ணியது. இந்தப் பன்மையை புரோகிதத் தந்திரமாகப் பார்த்தார்கள். ஆங்கிலேயர்கள் இங்கு ஆட்சியாளர்களாக மாற ஆரம்பித்த 18 ஆம் நூற்றாண்டில் அவர்கள் ஆட்சிக்கு உட்பட்ட ஹிந்துக்கள் அனைவருக்கும் ஒற்றையான ஒரு ஹிந்து சட்டத்தை அளிக்க ஆலோசனைகளும் முயற்சிகளும் எடுத்தார்கள். இந்த முயற்சியில் முக்கிய பங்கு வகித்தவர் வில்லியம் ஜோன்ஸ் ஆவார்.

jonesஉறைந்துவிடாமல் பரிணமித்தபடி இருக்கும் ஹிந்து சட்டதிட்டங்கள் இவருக்கு எரிச்சல் ஏற்படுத்தின. ஜோன்ஸ் எழுதினார்:

“தங்கள் இஷ்டப்படியும் சரியான காலகதியிலும் ஹிந்து சட்டங்களை உருவாக்கியபடியே இருக்கும் இந்த பண்டிதர்களின் தயவில் நாம் காலந்தள்ள முடியாது. தங்களால் ஒரு குறிப்பிட்ட பிரச்சனைக்கு சாஸ்திர ரீதியாக தீர்வு காணமுடியாத போது இவர்களே சாஸ்திர விதிகளை உருவாக்கிக் கொள்கிறார்கள்.” (I can no longer bear to be at the mercy of our pandits who deal out Hindu law as they please, and make it at reasonable rates, when. they cannot find it ready made)

”இத்தகைய ஒற்றை சாஸ்திர விதிகளால் ஒன்றாகக் கட்டப்பட்ட சமுதாயமே ஹிந்துக்கள்; அதுதான் பிராம்மணீய ஹிந்து மதம்” என்கிற ஐதீகத்தை உருவாக்கியவர்கள் பிரிட்டிஷ்காரர்களே ஆவர். ஆனால் ஹிந்து சட்ட திட்டங்களோ குவித்தன்மையற்றவை. கலாச்சார ஆன்மிக சரடுகளால் பிணைக்கப் படுபவையே அல்லாமல் மதக்கோட்பாட்டு அடிப்படையிலான கறாரான விதிகளால் திணிக்கப் படுபவை அல்ல. இத்தகைய அதிகம் அறியப்படாத வரலாற்றுப் போக்குகளை விவரிக்கும் பெண்ணியலாளர் மது கிஷ்வர் ”புனிதச்சட்டங்களைக் காட்டிலும் அந்தந்த வட்டார வழக்கிலிருக்கும் சம்பிரதாயங்கள் முக்கியமானவையாகக் கருதப்பட வேண்டும்” என நாரத ஸ்மிருதி கூறுவதையும், மனு ஸ்மிருதியே ”சட்டங்கள் திணிக்கப்படலாகாது” எனச் சொல்வதையும் சுட்டிக்காட்டுகிறார்.

mill-jamesஆனால் மோஸானிய சட்டகத்துக்குள் அல்லது ’ஏக-இறை’ சட்டகத்துக்குள் இந்திய சட்டத்தைத் தொகுத்தளிப்பதுடன் இந்தியப் பன்மையை திரிபாகவும் வீழ்ச்சியாகவும் பார்க்கும் பார்வையே வரலாற்றுப் பார்வையாக முன்வைக்கப் பட்டது. ஜேம்ஸ் மில் ”பிரிட்டிஷ் இந்தியாவின் வரலாறு”  (The History of British India) என்ற தன்னுடைய புகழ்பெற்ற நூலை  1817 இல் வெளியிட்டார் (1857க்கு பிறகுதான் இந்தியா முழுமையாக பிரிட்டிஷ் காலனியாகிறது என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்).  இந்நூலில் இவர் மனு தர்மசாஸ்திரம் என்பது மிக உயர்ந்த மானுடர்களின் மிகச்சிறந்த சாதனை என குறிப்பிடுகிறார். அத்துடன் பின்னாட்களில் மனு ஸ்மிருதிப்படி நடக்காததால் வீழ்ச்சி ஏற்பட்டது என்று இந்திய ஐதீகங்களில் கூறப்படுவதாகச் சொல்கிறார்.

பிற இந்தியவியலாளர்கள் இத்தகைய வழக்கு எதுவும் இந்திய மரபில் இல்லை என்று சொன்னது அரங்கேறவில்லை. ஏனெனில் இதற்குக் காலனிய தேவைகள் இருந்தன. பத்தொன்பதாம் நூற்றாண்டின் படித்த தலைமுறைகள் (இந்தியர்கள்-ஐரோப்பியர்கள்) மில்லின் நூலையே வரலாறாக நம்பிப் படித்தனர். மார்க்ஸிய பெண்ணியலாளரும் சமூகவியலாளருமான ஹிமானி பானர்ஜி மில்லின் இந்த நூல் உருவாக்கிய சமுதாய-வரலாற்றுப்பார்வை தாக்கம் குறித்து கூறுகிறார்:

ஐரோப்பா போலல்லாமல் “ஆசிய” அரசு அமைப்புக்களும் பொருளாதாரங்களும் மிருகத்தனமான சக்தியாலும் மூடநம்பிக்கையாலும் சர்வாதிகாரத்தாலும் சம்பிரதாயங்களாலும் நடத்தப்படுபவையாக மில் ஒரு பிம்பத்தை உருவாக்கினார். அரசனைக் குறித்த விவரணங்களையும் பல வரலாற்றுக்காலங்களில் யதார்த்தமாக நிகழ்பவற்றையும் ஒன்றோடொன்று மிகைப்பட இணைத்துக் காட்டுவதன் மூலம் இதனை மில் செய்தார். மனு சொல்லும் விஷயங்களை அப்படியே நேரடி பொருள் கொள்வதன் மூலமும் அதற்கிணையான ஐரோப்பிய அரச சம்பிரதாயங்களின் விவரணங்களை ஒப்பிடாமலும் (உதாரணமாக ஹோப்பிஸின் லெவியாதன்) மில் ஒரு ராட்சசத்தனமான சர்வாதிகார ஆட்சி அமைப்பே இந்தியாவுக்கு உகந்ததான ஆட்சி அமைப்பு எனும் கருத்தை உருவாக்கினார்.

மில்லின் இந்த உருவகத்தின் அடிப்படையிலேயே ஹிந்து மதத்தின் மீதான தாக்குதல்கள் பின்னாட்களிலும் இன்றுவரையிலும் மிஷினரிகளாலும்,  மற்றவர்களாலும்  நிகழ்த்தப் பட்டு வருகின்றன.

ஹிந்துப் பண்பாட்டிலும் தருமத்திலும் அதிகாரித்துவம் என்பது தொடர்ந்து பரிணமித்து வரும் ஒரு விஷயமாகும். உறைந்து போன விஷயமன்று. ஆபிரகாமியப் பண்பாட்டில் அனைத்துச் சட்டங்களுக்கும் அடிப்படையாகப் பத்து கட்டளைகள் இருப்பது போல பாரதப் பண்பாட்டில் எவ்விதக் கட்டளைகளும் இல்லை. அத்தகைய கட்டளையிடுதல்கள் உள்ளார்ந்த எதிர்ப்புகளை சந்தித்துள்ளன. “நான் உன் பிதா என்னையே நீ வணங்க வேண்டும்” என்கிற கட்டளையைப் பிறப்பித்த இரணியன் ஒரு அரக்கனாகவே ஹிந்து ஐதீகத்தில் அறியப்படுகிறான்.  இரணியன் முன் நின்று பேசும் பிரகலாதன்  முதல் அவுரங்கசீப் முன் நின்று  “தலையைத்தான் இழந்தேன் என் தர்மத்தை அல்ல” எனச் சொல்லும் குரு தேஜ்பகதூர் வரை,   திணிக்கப்படும் மதக் கோட்பாடுகளுக்கான எதிர்ப்பையும், வழிபாட்டு சுதந்திரத்துக்கான  உரிமைக் குரலையும் நாம் நம் பண்பாட்டில் தொடர்ந்து காணமுடியும்.

இத்தகைய பண்பாட்டுச் சூழலில் எவ்வாறு சமுதாய நீதிகள் உருவாக்கப்படுகின்றன?  “வேதத்தைக் கேட்டால் காதில் ஈயம் காய்ச்சி ஊற்றும் தண்டனை”  போன்ற தண்டனைகள் எவ்வாறு ஏற்பட்டன? இதனைச் சற்றே சிந்தித்துப் பார்த்தால் பாரத பொது பிரக்ஞை இத்தகைய மனிதத் தன்மையற்ற சட்டங்களை ஒருவித  “கண்காட்சி வஸ்துவாக” பார்த்ததே ஒழிய அவற்றை நடைமுறைச் சட்டங்களாக ஆக்கிடவில்லை என்பது புரியும்.

துளசிதாசரும் கம்பரும் ஏன் எண்ணற்ற ராம பக்தர்களும் ஸ்ரீராமனின் சம்பூக வதத்தைக் குறித்து எதுவும் பேசுவதில்லை.  ஸ்ரீராமன் அந்தணனான ராவணனை வதைத்ததே நாடெங்கிலும் பெரும் விஷயமாக பாடப்படுகிறதே ஒழிய சூத்திரனான சம்பூகனைக் கொன்றது எவ்வித முக்கியத்துவமும் பெறவில்லை. கிறிஸ்தவ பிரச்சாரகர்கள் அந்த நிகழ்வை தூசி தட்டி ராமனை ஒரு குற்றவாளியாகக் காட்ட பெரும் முயற்சி எடுத்துக்கொண்ட காலம் வரை. அந்த நிகழ்ச்சி வால்மீகி ராமாயணத்தின் பிற்சேர்க்கை என்றே கருதப்படும் உத்தர காண்டத்தில்தான் உள்ளது. சுருக்கமாக சொன்னால் ”மரியாதா புருஷோத்தமன்” வாழ்வாங்கு வாழ்ந்தவனேயெனினும் ஸ்ரீராமனின் அனைத்து செயல்களையும் சரியென எடுத்துக்கொள்ளவேண்டிய கட்டாயத்தை பாரத மனம் என்றைக்கும் உணர்ந்ததில்லை. அது எந்த புனிதத்தையும் விவாதத்துக்கு உள்ளாக்கத் தயங்கியதில்லை. அதே நேரத்தில் புனிதத்தின் மகத்துவத்தையும் தனிமனித-சமுதாய-ஆன்மிக தேவையையும் பாரத பிரக்ஞை அறிந்திருந்தது. எனவே அது அத்தேவைகளின் அடிப்படையில் புனிதங்களை மீள்-உருவாக்கியபடியே இருந்தது/இருக்கிறது. இலக்கிய இலக்கணங்கள் என்றல்ல, சமுதாய பிரச்சனைகளுக்கும்   கூட –  மிக அண்மைக்காலம் வரை அப்படியே.

sribodhendralகாஞ்சி காமகோடி பீடத்தின் 58-ஆவது ஆச்சாரியராகக் கருதப்படும் ஆத்மபோதர் அவரது வடநாட்டு யாத்திரையின் போது தனது சீடரான புருஷோத்தமன் என்பவருக்கு போதேந்திர சரஸ்வதி என துறவுத்திருநாமம் அளித்தார்;  அவரை காஞ்சிபுரம் செல்லவும், போகும் வழியில் பூரி ஜெகந்நாத தலத்தில் லட்சுமி ஸ்ரீதரர் என்பவர் வசமிருக்கும் “பகவன் நாம கௌமுதி” என்ற நூலைப் பெற்று அதன் அடிப்படையில் இலட்சம் சுலோகங்களை இயற்றவும் உத்தரவிட்டார். அவ்விடத்தை போதேந்திரர் அடைந்த போது அப்பெரியவர் காலமாகிவிட்டதாக அவரது மகனான ஜகன்னாத பண்டிதரின் மூலம் அறிந்தார். அப்போது அங்கு ஓர் நிகழ்ச்சி நடந்தது.

ஓர் தென்னிந்திய தம்பதிகள் அங்கு வந்திருந்தனர். இவர்கள் தீர்த்த யாத்திரை செல்லும் போது மனைவியை சில இஸ்லாமியர்கள் அபகரித்து சென்றுவிட்டனர். மனமுடைந்த கணவர் கால் போன போக்கில் சென்று கொண்டிருந்தார். சில மாதங்களுக்குப் பின்னர் தற்செயலாக ஒரு ஊரில் நதிப்புறத்துக்கு செல்லுகையில் அங்கு இஸ்லாமிய மாதர் குளித்துக் கொண்டிருந்தனர்.  அவர்களில் ஒரு இஸ்லாமியப் பெண் இவரிடம் ஓடோடி வந்துவிட்டார். அப்பெண்மணி அபகரிக்கப்பட்ட இவரது மனைவியே ஆவார். அவர் தற்போது இஸ்லாமியரின் மனைவியாக வாழ்வதாகவும் தம்மை மீண்டும் ஏற்றுக்கொண்டு அவ்விடத்திலிருந்து தப்பிக்க உதவுமாறும் அவர் தம் கணவனைக் கேட்டுக்கொள்ள, இருவருமாக இணைந்து  ஜகன்னாத தலத்திற்கு வந்திருந்தனர்.

மற்றொருவர் வீட்டில் அவருடைய மனைவியாகவே வாழ்ந்துவிட்ட இப்பெண்மணியை மீண்டும் மனைவியாக ஏற்க சாஸ்திரம் இடங்கொடுக்குமா என கேள்விகளுடன் இத்தம்பதிகள் மனம் வருந்தினர். இதனைக் கண்ட ஜகந்நாத பண்டிதர் தம்பதிகளுக்கு ஆறுதல் அளித்து இதற்கு பிராயசித்தமாக கோவில் புஷ்கரணியில் மூழ்கி ராமநாமத்தை உச்சரித்தாலே போதுமானது என்று கூறினார். அங்கு அப்போது வந்திருந்த போதேந்திர சரஸ்வதி இந்த பிராயசித்தத்துக்கு சாஸ்திர சம்மதம் உண்டா என வினவ பண்டிதர் தமது தந்தை எழுதிய  “பகவன் நாம கௌமுதி” என்ற நூலைக் கொடுத்தார். அப்பெண்மணி அவ்வாறே புஷ்கரணியில் மூழ்கி ராமநாமத்தை சொல்லி கணவனுடன் இணைந்து தீர்த்த யாத்திரையை முடித்து தென்னகம் திரும்பினார்.  (இதில் உபரியாக, ஜகன்னாதர் அப்பெண்மணியிடம் மூன்று முறை ராமநாமத்தை சொல்லி நீரில் மூழ்கி எழச் சொன்னதாகவும் அதனைக் கேட்டுக்கொண்டிருந்த அவரது அன்னை “ஏன் இப்படி ராமன் மீது நம்பிக்கை இல்லாமல் இருக்கிறாய்? மூன்று முறை எதற்கு? இராம நாமத்தை ஒரு முறை சொன்னாலே போதுமே!” எனக் கூறியதாகவும் சொல்லுவர். பின்னாளில் மகாத்மா காந்தியின் சிஷ்யரான வினோபா ராம நாமத்தால் விடுதலை பெற்றுவிட முடியாத அளவு கொடூரமான பாவத்தை மனிதன் இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்பாராம்.)

இந்நிகழ்ச்சி கூறும் பலவிஷயங்களை நாம் இப்போது கவனிக்கலாம்.

agalyaபெண்ணின் கற்பு/புனிதம் உடல் தொடர்பானது அன்று, உள்ளத் தூய்மையே முக்கியம்.  சாஸ்திரங்கள் கூறும் கடுமையான விதிமுறைகளை இறை நாமத்தாலும், மானுட இருதய சுத்தத்தாலும் நாம் எளிதாகக் கடந்துவிட முடியும். இவ்விதிகள் அனைத்துமே மீண்டும் மீண்டும் உருவாக்கப் படுபவையே ஆகும். இத்தகைய விதி உருவாக்கல்களுக்கு அதிகாரியாக ஒரு நல்ல மனிதர் போதும். அவர் தொன்மையானவராக இருக்கவேண்டியதில்லை. நம் சமகாலத்தவராகவே கூட இருக்கலாம்  – இவையே அந்த விஷயங்கள்.

பிரிவினைக் கலவரங்களின் போது முஸ்லீம்களால் அபகரிக்கப்பட்ட ஹிந்து மாதர்களை ராமநாமம் சொல்லி ஹிந்து வீட்டார்கள் சேர்த்துக்கொள்ள வேண்டுமென காந்திஜி கூறியதையும் இங்கு கவனிக்கவேண்டும். தனது மனைவியையே மக்களின் சொல் கேட்டு தியாகம் செய்த ராமனின் பெயர் அத்தகைய விஷயம் தொடர்பான சமுதாய மனவீழ்ச்சிக்கு மருந்தாக பயன்படுத்தப்படுவதைக் கவனிக்க வேண்டும்.

ராமன் கருவுற்றிருந்த தன் மனைவியைக் காட்டில் விட்டது பொதுவாக பெண்ணியவாதிகளால் பெரும் பழியாகக் கூறப்படும். ராமனுக்கு சீதையின் தூய்மையில் எவ்வித சந்தேகமும் இல்லை. அப்படியிருக்க ராமன் ஏன் அவ்வாறு செய்தார்? அது மக்களின் மனநிலைக்கு அவர் கொடுத்த தண்டனை. இன்றைக்கு அதே சமுதாயம் அதே ராமனின் பெயரால் பெண்மைக்கு ஏற்பட்ட தீங்கினை துடைப்பது ஒருவிதத்தில் பாரத மக்கள் (ராமன் அல்ல) சீதைக்குச் செய்த அநியாயத்துக்கு திரும்பச்செய்யும் பிராயசித்தம்.

ஹிந்து தர்மத்தில் சாஸ்திர சம்பிரதாயங்கள் உறைநிலை கொண்டவை அல்ல. அவை நெகிழ்ச்சித்தன்மை கொண்டவை. காலந்தோறும் பரிணாம மாற்றம் அடைபவை.  மானுட நலத்தையே தம் இலட்சியமாகக் கொண்டவை. அனைத்துயிரும் அனைத்துலகும் இன்புற்றிருப்பதையே அவை நோக்குகின்றன. அவற்றின் நோக்கம் சனாதனமானது, அழிவற்றது. அதற்கான வடிவங்கள் மாறிக்கொண்டே இருக்கும்.

எனவே சாஸ்திரத்தின் பெயரால் தீண்டாமையும், பெண்ணடிமையும், தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமைகளும், வழிபாட்டுரிமைத் தடுப்புகளும் இல்லாத ஹிந்து சமுதாயத்தை உருவாக்குவதும் ஒவ்வொரு ஹிந்துவின் சாஸ்திர சம்பிரதாய கடமையாகும். அதிலிருந்தே தொடங்குகிறது ஹிந்து தேசத்தின் மகோன்னத மீள்உருவாக்கம். அதுதான் ஹிந்து ராஷ்டிரத்தின் பிள்ளையார் சுழி.

திகட சக்கரச் செம்முகம் ஐந்துளான்
சகட சக்கரத் தாமரை நாயகன்
அகட சக்கர வின்மணி யாவுறை
விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்.

ஓம்.

பயன்படுத்தப்பட்ட நூல்கள் கட்டுரைகள்:

 • திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின்  ”கந்தன் கருணை”, அத்தியாயம் ஒன்று: சரித நாயகன் சரிபார்த்த கதை, கல்கி நவம்பர் 8 1964
 • சிவா, ஏணிப்படிகளில் மாந்தர்கள், நர்மதா பதிப்பகம், 1994, பக். 413-4
 • டானா ஸோகர், இயான் மார்ஷல் The quantum society, Mind Physics and a new social vision, Falmingo 1994, பக். 107-110
 • மது கிஷ்வார், Manu and the Brits, Hinduism Today, ஜனவரி-பிப்ரவரி 2001
 • ஹிமானி பானர்ஜி, Beyond the Ruling Category to what actually happens: Notes on James Mill’s Historiography in The History of British India, (in Inventing Subjects Studies in Hegemony, Patriarchy and Colonialism, Anthem Press, 2001) பக். 54-71

45 Replies to “ஹிந்து தர்மத்தின் அதிகாரி யார்?”

 1. அருமையான கட்டுரை. ஸ்ரீ ராமபிரானின் ஆசிகள் இந்த கட்டுரையை படிக்கும் அனைவருக்கும் உரித்தாகுக.

 2. வாராது வந்த மாமணிகளுள் ஒருவர் திரு. அரவிந்த நீலகண்டன். கொஞ்சம் சிந்திக்கத் தெரிந்துவிட்டாலே ” நான் மேம்பட்டவன்; கீழான நிலையில் உழன்று, பொய் பிம்பங்களைக் கட்டிக்கொண்டு மாரடிக்கும் ம்னச்சிக்கல் மிகுந்தவர்கள் இங்குள்ளவர்கள்; இவர்களை உய்விக்க வந்த அறிவு ஜீவி நான்; முயலுக்கு மூன்று கால்கள்தான்; நானாக்கும் அதை எடுத்துச்சொல்ல வேண்டியிருக்கிறது” என்று நிர்தாரண, உத்தாரண கிருத்தியங்களை செய்ய வந்த அவதார அறிவு ஜீவியாக தன்னை நினைத்துக் கொள்ளாமல் இயல்பாக(unassuming) எழுதுகிறாரே; தன் நம்பிக்கை எதுவாயிருந்தாலும் அதன் வேர் இங்குள்ளது என்ற புரிதலோடு சிந்திக்கும் அவர் என்றென்றும் இப்படியே வளர்க ! வாழ்க!

  கண்ணன், கும்பகோணம்.

 3. அருமையான கட்டுரை அய்யா (எப்போவும்போல). ஆனால் எனக்குப் புரியாது இது ஒன்றுமட்டும்தான். படகோட்டியான குகனை தம்பி என்றான், தாழ்த்தப்பட்ட துறவியான சபரி அன்னை கொடுத்த பழங்களை உண்டான், அவர்னர்களான வானர வீரர்களை சகோதரர்கள் என்றான், எதிரியின் தம்பியான விபீஷணனை தன தம்பி என்றான். இவ்வளவு பாசம், சகோதரத்துவத்துடன் இருந்த அண்ணல் எதற்காக சம்பூகனனை மட்டும் கொன்றான்? இதை யாரும் எனக்கு விளக்கவில்லை. சற்று விளக்குங்கள் அய்யா.

 4. Thank you Aravindan for authoring a wonderful article. Our intellectual mules who have no faith over our future and pride over our past should read this type of articles.
  Umayorubhagan

 5. வணக்கம்,

  இப்படி தெளிந்த நீரோடை போல விஷயங்களை சொல்வது ஸ்ரீ அரவிந்தன் அவர்களின் கடமை என்று கொண்டுள்ளார் போலும், . அவருக்காக எத்தனை புத்தக பக்கங்கள் புரண்டது, புரளப் போகிறதோ அத்துணைக்கும், அவருக்கும் வெகு நன்றிகள்.வாழ்க நீவிர், வளர்க உமது பணி

 6. அரவிந்த என்ற சாகரத்தில் மற்றும் ஒரு முத்து.

  தொடருங்கள் ஐயா தங்கள் நற்பணியை

  அன்புடன்

  கால்கரி சிவா

 7. அரவிந்தன்,
  அக்கரம் கோடி தகும் அற்புதமான கட்டுரை! தங்களைச் சகோதரராய்க் கொண்டதில் பெருமிதம் கொள்கிறேன்.
  ஜாகு

 8. எப்படி இதர மதங்களெல்லாம் இறைகட்டளை எனப்படுகிற ஆனைகளுக்குள்ளும், ஒரேயொரு புத்தகத்தின் பிடியிலும் சிக்கி தனது சிந்திக்கும் திறனை இழந்த ஆட்டுமந்தைக்கூட்டங்களாக இருக்க, இந்து மதம் எனும் ஆலமரம் எப்படி கிளை பரப்பி தானும் வாழ்ந்து பிறரையும் வாழவிடுகிறது என்பதை இதைவிட அருமையாய் விளக்க முடியுமா??

  அரவிந்தனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்..

 9. மிக அருமையான கட்டுரை..
  பலரும் அறிந்து தெளிய வேண்டிய கருத்துக்கள்..
  ஆசிரியருக்கு நன்றி..

 10. படிப்பவர் உள்ளம் கரைந்து கசிந்துருகுமாறு எழுதப்பட்டிருக்கும் கட்டுரை.!அரவிந்தன் நீலகண்டன் நிச்சயம் வாராது வந்த மாமணிகளுள் ஒருவர்தான். தொடரட்டும் உங்கள் நற்பணி.

  ஓகை நடராஜன்.

 11. // மானுட நலத்தையே தம் இலட்சியமாகக் கொண்டவை. அனைத்துயிரும் அனைத்துலகும் இன்புற்றிருப்பதையே அவை நோக்குகின்றன. அவற்றின் நோக்கம் சனாதனமானது, அழிவற்றது. அதற்கான வடிவங்கள் மாறிக்கொண்டே இருக்கும். //

  சங்கரர் தனது பிரம்ம சூத்திர பாஷ்யத்தின் அறிமுகத்தில் தர்மத்தின் இலக்கணம் என்ன என்று கேட்டு “ஜகத ஸ்திதி காரணம்; ப்ராணினாம் அப்யுதய நி:ஷ்ரேயஸ ஹேது:” (உலகின் இருப்பிற்குக் காரணமான மானுட அறம்; அனைத்து உயிர்களின் இக உலக இன்பம், பிறவித் தளையிலிருந்து விடுதலை இரண்டுக்குமே ஏதுவாக இருக்கும் அறம்) என்று பதிலளிக்கிறார். மேற்கண்ட வாசகங்கள் இந்த சாரமான கருத்தை அழகாக எடுத்துரைக்கின்றன.

  அற்புதமான கட்டுரை அரவிந்தன்.

 12. // வள்ளுவன்
  2 November 2009 at 2:54 pm

  இவ்வளவு பாசம், சகோதரத்துவத்துடன் இருந்த அண்ணல் எதற்காக சம்பூகனனை மட்டும் கொன்றான்? இதை யாரும் எனக்கு விளக்கவில்லை. சற்று விளக்குங்கள் அய்யா. //

  வள்ளுவன், அரவிந்தனே குறிப்பிட்டது போல சம்பூக வதம் என்கிற பிரசங்கம் உத்தர காண்டத்தில் உள்ள ஏராளமான சரிதங்களில் ஒன்றாக உள்ளது.. சத்ருக்கன் லவணாசுரனை வதம் செய்தது, ராவணன் முதலிய அசுரர்களின் பூர்வ சரிதங்கள் – இப்படி பெருமளவு உபகதைகள் உத்தரகாண்டத்தில் உள்ளன.. ராமாயணத்தின் பொதுவான “இதிகாச” நடைக்கு மாறாக, பிற்காலத்திய புராண நடையில் இந்தக் காண்டம் உள்ளது. இதில் உள்ள பெரும்பாலான சம்பவங்களில் அவலம்/அழிவு என்பவையே மையப் பொருளாக உள்ளன.. வால்மீகியே இதில் ஒரு கதாபாத்திரமாகவும் வருகிறார்.. உத்தரகாண்டம் பிற்சேர்க்கையாக இருக்கலாம் என்று பல ராமாயண அறிஞர்கள் கருதுகிறார்கள்.

  கம்பர், தியாகராஜர், அருணாசல கவி, ராமதாசர் என்று அனைத்து ராமபக்தர்களும், காவிய கர்த்தர்களும் சரி, ராமாயணக் காட்சிகளை சிற்பங்களாகவும், இசையாகவும், நாட்டியமாகவும் வெளிப்படுத்திய கலைஞர்களும் சரி, உத்தர காண்ட சம்பவங்களை அனேகமாக எடுத்தாளவே இல்லை என்பது இதற்கு மேலும் வலு சேர்க்கிறது.

  சம்ஸ்கிருதத்தில் பவபூதியின் உத்தர ராம சரிதம் என்ற காவியம் ஒன்று தான் இது குறித்து எழுதப் பட்டவற்றில் பிரபலமானது. அக்காவியத்தின் தொடக்கத்திலேயே அவலச் சுவையிலும், கருணா ரசத்திலும் வாசகனைத் திளைக்க வைப்பதற்காகவே தான் இந்தக் காவியத்தை எழுதியதாக கவி சொல்கிறார். தமிழில் உத்தர ராமாயணம் ஒட்டக் கூத்தரால் எழுதப் பட்டிருக்கிறது, கம்பராமாயணத்தின் கீர்த்தியில் நூறில் ஒரு பங்கு கூட அது பிரபலமாகவில்லை.

  இந்துக்கள் நெடுங்காலமாக மூலையில் போட்டுவிட்ட உத்தரகாண்டத்தில் ஒரு சிறு பிரசங்கத்தை எடுத்து ஏதோ அது தான் ராமாயணத்தின் மையக் கருத்து என்பது போல பிரசாரம் செய்யும் துவேஷிகளின் உள்நோக்கம் மட்டுமே இதில் புலனாகின்றதே அன்றி வேறேதும் அல்ல.

 13. அவரவர் இஷ்டம் போல மாற்றிக் கொள்ளுவதையெல்லாம் வேதம் என்று சொல்லமா,அண்ணா..? அது கதை தானே..?

 14. I omitted first few paras and read only from the paras beginning with the description of Hindu dharama and their nature.

  Nowadays I am reading Subramania Bharati’s essays that appeared in various Tamil newspapers connected with him during the early 1900s.

  Arvinadan’s general concept of Hindu dharma is more or less akin to that poet’s, esp. the last two paras.

  Bharati ran into deep trouble with the orthodox Hindus. Hope Arvindan does not meet with the same fate. The orthodox hindus did not agree with Bharati on many points. He even dropped all his achaarams, which he had scrupulously followed during his youthful days, as unnnecessary, when he became deeply involved in the nationalist struggle.

  I am not being sarcastic; rather, only realistic.

  It is no doubt that the dharma sastras are flexible. Yet, its core is unassailable – a point Arvindan agrees with it. But the core – immutable and unchangeable – gives the foundation for the religion, and may it remain so – immutabale and unchangeable!

  There cant be two opinions on the last para here and its gist is:

  Hinduism, shorn of such evils perpetrated in the name of Shastras, will be most welcome by common people.

  Thanks.

 15. // இவ்வளவு பாசம், சகோதரத்துவத்துடன் இருந்த அண்ணல் எதற்காக சம்பூகனனை மட்டும் கொன்றான்? //
  நல்ல கேள்வி.

  எனக்கு தோன்றுவது – சம்பூகன் கதை யாரோ பின்னால் சேர்த்துவிட்டதாக இருக்க வேண்டும். வேடன் குகனோடு ஐவரான ராமன், குரங்கு சுக்ரீவனோடு அறுவரான ராமன், அரக்கன் விபீஷனனோடு எழுவரான ராமன் சூத்திரன் என்ற காரணத்துக்காக சம்பூகனை கொல்ல முடியாது. சரி ராமனின் காரக்டர் ஊர் உலகம் சொல்வதை கேட்கவேண்டும், தான் நினைப்பது இரண்டாம் பட்சம் என்று வருகிறதே என்று சொல்லலாம். அகலிகைக்கு சாப விமோசனம், சீதைக்கு அக்னி பிரவேசம், வனவாசம் போன்ற முரண்பாடுகள் உள்ளது ராமனின் காரகடர் என்று வாதிடலாம். ஆனால் இதை விட பெரிய முரண்பாடு இந்த கதையில் இருக்கிறது.

  வால்மீகி ரிஷி, வேதம் ஓதுகிறார், நாரதர் வந்து அவரிடம் பேசுகிறார், உத்தர காணடத்தில் ராமனின் பிள்ளைகள் அவரிடம் வளர்கிறார்கள், சீதை அவர் ஆசிரமத்தில் வாழ்கிறாள். அவரை கொல்லும்படி ஏன் எந்த பிராமணனும் ராமனிடம் கேட்கவில்லை? ராமன் ஏன் அவரை கொல்ல முயற்சியே செய்யவில்லை? அவர் வேடர் ஆயிற்றே? வேடர் ஜாதியில் பிறந்த வால்மீகி அதை எழுதி இருக்க வாய்ப்பே இல்லை. இது நிச்சயமாக பிற்சேர்க்கையாகத்தான் இருக்க வேண்டும்.

 16. கோடி கோடி வார்த்தை கழிவுகளுக்கு நடுவே மாமணியாய் ஒரு கட்டுரை. ஆனால் கட்டுரையின் மைய கருத்தை கவனியாமல் இருப்பது கூட …… ஹ்ம்ம்… மனித இயல்புதான்.

  ராமாயணத்தை யாரும் வேதம் என்று சொல்லுவதில்லை. அதை கதை என்றே ஹிந்து மனம் அழைக்கிறது.

  ஸம்பூகனை கொன்றது ராமநே ஆனாலும் அது தவறுதான். அதை உரத்து சொல்ல ஒரு ஹிந்து தயங்குவதில்லை.

  ஆனால், இது ராமனின் குணத்தை ஒத்தது இல்லை என்பதால் ஹிந்துக்கள் அதை இடைச்சொருகலாகவே கருதுகிறார்கள்.

  மிக முக்கியமாக, இது பிந்பற்றக்கூடிய காரியம் இல்லை. கண்டிக்கப்பட வேண்டிய, தவிர்க்க வேண்டிய விஷயம் – அந்தச செயல் ராமனின் பெயரில் வந்தாலும்.

  கடவுளே ஆனாலும் தப்பு தப்புத்தான். அதனால்தான், திருவிளையாடலில் நக்கீரன் இருக்கிறான். ஹிந்து மதத்தில் மட்டுமே நக்கீரர்கள் மதிக்கப்படுவர்.

  இதுதான் இந்து மதம். இப்படி இருப்பதுதான் இந்து மனம்.

  அதைத்தான் கட்டுரை சொல்லுகிறது.

 17. நண்பர்கள் ஜடாயு, ஆர்.வீ மற்றும் களிமிகு கணபதி, விளக்கங்கட்கு நன்றி!

 18. //வால்மீகி ரிஷி, வேதம் ஓதுகிறார், நாரதர் வந்து அவரிடம் பேசுகிறார், உத்தர காணடத்தில் ராமனின் பிள்ளைகள் அவரிடம் வளர்கிறார்கள், சீதை அவர் ஆசிரமத்தில் வாழ்கிறாள். அவரை கொல்லும்படி ஏன் எந்த பிராமணனும் ராமனிடம் கேட்கவில்லை? ராமன் ஏன் அவரை கொல்ல முயற்சியே செய்யவில்லை? அவர் வேடர் ஆயிற்றே? வேடர் ஜாதியில் பிறந்த வால்மீகி அதை எழுதி இருக்க வாய்ப்பே இல்லை. இது நிச்சயமாக பிற்சேர்க்கையாகத்தான் இருக்க வேண்டும்.//

  RV அவர்களே, தேவரிஷி நாரதரே சூத்திரர் தான்! கந்தர்வராக இருந்தவர், ஒரு சாபம் காரணமாக சூத்திரராகப் பிறந்து பிறகு தேவரிஷி ஆனார் என்று பாகவத புராணம் கூறுகிறது!
  பின்னர் வந்தவர் சேர்த்தனர் என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை! இதற்க்கு வேறு ஒரு காரணம் இருக்கவேண்டும் என்பது என் அபிப்பிராயம்!

 19. //அவரவர் இஷ்டம் போல மாற்றிக் கொள்ளுவதையெல்லாம் வேதம் என்று சொல்லமா,அண்ணா..? அது கதை தானே..?//

  அக்கதையே ஒரு வேதம் தான், அக்கதானாயகனே வேதத்தின் ரூபம் ஆவான்!

 20. வணக்கம்,

  //அவரவர் இஷ்டம் போல மாற்றிக் கொள்ளுவதையெல்லாம் வேதம் என்று சொல்லமா,அண்ணா..? அது கதை தானே..?//

  ஆமாம் அது கதைதான், ஆனால் புராணங்கள் என்றாலே கதைகள் என்றாலும் அதை எந்த இந்துவும் அதை மறுப்பது இல்லையே? ஆனால் அக்கதைகளே வேதங்கள் அல்ல, அக்கதைகளின் கருவே வேதங்கள்தானே, ஆனால் அக்கதைகளே உண்மை என்று ஆதாரம் தேடி இன்னொரு மதத்தில் உள்ள வேதங்களை திருடுவது எமது மரபுமல்ல.

  வேதங்களே ஆனாலும் அதில் தவறு என்று தெரிந்த பின்னர் அதை அப்படியே கண்மூடித் தனமாக ஏற்றுக் கொள்வது இந்துக்களின் மரபல்ல, வேதத்தில் சொல்லப் பட்டுள்ளது என்று செம்மறியாட்டுக் கூட்டங்களாக வாழும் அடிமை வாழ்க்கையில் என்ன ஆனந்தம் கண்டுவிட முடியும், இறைவனே கூட அதை அப்படியே ஏற்றுக்கொள்ள சொல்லவில்லை. வேதமோ இறைவனோ, எங்கேயானாலும் குற்றம் குற்றமே. ”நெற்றிக் கண் திறப்பினும்”.

 21. ராமன் சம்புகனைக் கொன்றது எதற்காக என்று கேட்கிறார் வள்ளுவன்.அந்த ரகசியம் போக போக தெரியும் இருபதாவது பகுதியில் இருக்கிறது.

 22. //அவர்களே, தேவரிஷி நாரதரே சூத்திரர் தான்! கந்தர்வராக இருந்தவர், ஒரு சாபம் காரணமாக சூத்திரராகப் பிறந்து பிறகு தேவரிஷி ஆனார் என்று பாகவத புராணம் கூறுகிறது!
  பின்னர் வந்தவர் சேர்த்தனர் என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை! இதற்க்கு வேறு ஒரு காரணம் இருக்கவேண்டும் என்பது என் அபிப்பிராயம்!
  //

  Isn’t Naradhar son of Brahma?

 23. /
  /அவரவர் இஷ்டம் போல மாற்றிக் கொள்ளுவதையெல்லாம் வேதம் என்று சொல்லமா,அண்ணா..? அது கதை தானே..?//

  க‌தைதான், ந‌ட‌ந்த‌ க‌தை, உண்மைக் க‌தை.

 24. // ஸம்பூகனை கொன்றது ராமநே ஆனாலும் அது தவறுதான். அதை உரத்து சொல்ல ஒரு ஹிந்து தயங்குவதில்லை.

  ஆனால், இது ராமனின் குணத்தை ஒத்தது இல்லை என்பதால் ஹிந்துக்கள் அதை இடைச்சொருகலாகவே கருதுகிறார்கள்.
  //

  and even if we assume that it had not been inserted – One also needs to analyze what Sambugan did – He resorted to learning Vedas himself without approaching a Guru – this will be a wrong precedent as this can lead to wrong interpretations and misuse of knowledge – the punishment was not based on Varna – but based on the prevalent dharma – approach Guru for knowledge – we all know to what use we have put the knowledge of making dynamites

 25. இராம‌ர், த‌ன‌க்கு வ‌ர‌ வேண்டிய‌ நாட்டையே விட்டுக் கொடுத்த‌வ‌ர்!

  கைகெயி அம்மையார், “சாகும் வ‌ரை இராம‌ன் காட்டிலே இருக்க‌ வேண்டும்” என்று கேட்டு இருந்தாலும், அதையும் இராம‌ர் ம‌றுத்து இருக்க‌ப் போவ‌து இல்லை!

  குக‌னை த‌ன் ச‌கோத‌ர‌னாக‌ ஏற்ற‌வ‌ர்!

  ”ம‌னித‌ குல‌ம்” என்னும் நிலையை இன்னும் அடைந்திராம‌ல், குர‌ங்கு நிலையில் இருந்து ம‌னித‌ நிலைக்கு மாறும் ப‌ரிணாம‌ வ‌ள‌ர்ச்சி க‌ட்ட‌த்தில் இருந்த‌ வான‌ர‌ங்க‌ளோடு க‌லந்து வாழ்ந்து, டீம் வொர்க் செய்து வெற்றி பெற்ற‌வ‌ர்!

  க‌ங்கை க‌ரையினிலே அம்பைக் குத்தி வைத்து விட்டு குளிக்க‌ப் போய், திரும்பி வ‌ந்து அம்பு முனையை வெளியே எடுத்த‌ போது, அதில் ம‌ண்ணுக்குள் இருந்த‌ தேரை குத்த‌ப் ப‌ட்ட‌தைக் க‌ண்டு ம‌ன‌ம் வ‌ருந்திய‌வ‌ர் இராம‌ன்.

  இப்ப‌டிப் ப‌ட்ட‌வ‌ர் இந்த‌ ச‌ம்பூக‌ன் என்று சொல்ல‌ப் ப‌டுப‌வ‌ரை எந்த‌க் கார‌ண‌மும் இல்லாம‌ல், எந்த‌ வித‌மான நியாய‌மும் இல்லாம‌ல் கொல்ல‌ வேண்டிய‌ அவ‌சிய‌ம் என்ன‌?

  ச‌ம்பூக‌ன் த‌வ‌ம் செய்வதை நிறுத்த‌ வேண்டுமானால் எத்த‌னையோ வ‌ழிக‌ள் உள்ளனவே!

  மாரீச‌ன், தாட‌கை, க‌ர‌, தூஷ‌ன‌ர், போன்ற‌ அர‌க்க‌ர்க‌ள் அட்டூழிய‌ம் செய்த போதுதானே, இராம‌ர் த‌ன் வில்லில் இருந்து அம்பு பூட்டி அவ‌ர்க‌ளை த‌ண்டித்தார்.

  இந்த‌ ச‌ம்பூக‌னார் ஒரு சாதார‌ண‌ குடிம‌க‌ன் என்று இருந்தால், அவ‌னை தண்டிக்க‌ இராம‌ரே வில்லை எடுக்க‌ வேண்டிய‌ அவ‌சிய‌மே இல்லையே?

  ச‌ம்பூக‌ன் ஒரு பெரிய‌ அர‌க்க‌னாக‌ இருந்தாலேய‌ன்றி அவ‌னை அழிக்க‌ இராம‌ரே வில்லை எடுக்க‌ வேண்டிய‌ அவ‌சிய‌மே இல்லை.

  அப்ப‌டி இராம‌ர் இராஜாவாக‌ இருக்கும் போது, இராம‌ர் தானே வில்லை எடுத்துக் கொண்டு போகும் வ‌ரைக்கும், அவ‌ரை சுற்றி இருக்கும் ப‌டையின‌ர், சேனாதிப‌திக‌ள், அனும‌ன், ச‌த்துருக்க‌ன், ப‌ர‌த‌ன், இல‌க்குவ‌ன், இவ‌ர்க‌ள் எல்லாம் பார்த்துக் கொண்டு சும்மா இருந்திருப்பார்க‌ளா?

  அச்வ‌ மேத‌ யாக‌த்தில் குதிரைக‌ளை ல‌வ‌,குச‌ர்க‌ள் பிடித்து வைத்துக் கொண்ட‌ போது, முத‌லில் ச‌ம‌ருக்கு போன‌து யார், இராம‌ரா?

  எந்த‌ எதிரியாக‌ இருந்தாலும் முத‌லில் ச‌த்துருக்க‌ன், ப‌ர‌த‌ன், இல‌க்குவ‌ன் இவ‌ர்கள் எல்லாம் வெல்ல‌ முடியாவிட்டால் தான், இராஜாவாக‌ இருந்தாலும் ஆய‌த‌த்தை எடுக்க‌ வேண்டிய‌ அவ‌சிய‌ம் இராம‌ருக்கு வ‌ரும்.

  என‌வே இந்த‌ இர‌ண்டினில் ஏதாவ‌து ஒன்று ந‌ட‌ந்திருக்க‌லாம்.

  1) இந்த‌ ச‌ம்பூக‌னார் என்ப‌வ‌ர் ஒரு பெரிய‌ அர‌க்க‌னாக‌ க‌ர‌, தூஷ‌ன‌ர் , மாரீச‌ன் போல‌ இருந்திருக்க‌க் கூடும். அவ‌ர் ப‌ல‌ அட்டூழிய‌ங்களை செய்து இருக்க‌க் கூடும்.

  2) இல்லையேல் இந்த‌ ச‌ம்பூக‌னார் நிக‌ழ்வே ந‌டைபெறாம‌ல் இருந்திருக்க‌ வேண்டும்.

  கைப்புள்ள‌ போன்ற‌ ஆட்க‌ளுக்கு எதிராக‌ எல்லாம் இராம‌ர் வில்லை வ‌லைத்திருக்க‌ப் போவ‌து இல்லை.

  அர‌விந்த‌ன் நீல‌க‌ண்ட‌ன் அவ‌ர்க‌ள், வால்மிகி இராமாயண‌த்தில் இந்த‌ ச‌ம்பூக‌ன் ச‌ம்ப‌ந்த‌ப் ப‌ட்ட‌ வ‌ட‌மொழி சுலொக‌ங்களை எழுதி, அத‌ற்க்கு த‌மிழிலே ப‌த‌வுரையும் அளித்தால் ந‌ட‌ந்த‌து என்ன‌ என்று புரிந்து கொள்ள இய‌லும்.

  அவ‌ச‌ரப் ப‌ட்டு இதிலே “தப்பு தப்புத்தான்” என்று க‌ட்ட‌ப் ப‌ஞ்சாய‌த்து தீர்ப்பு வ‌ழ‌ங்க‌ வேண்டிய‌தில்லை என்றே நினைக்கிறேன்.

 26. வணக்கம்,

  //அவரவர் இஷ்டம் போல மாற்றிக் கொள்ளுவதையெல்லாம் வேதம் என்று சொல்லமா,அண்ணா..? அது கதை தானே..?//

  அவரவர் இஷ்டம் போல மாற்றியது அல்ல எதுவும், கட்டுரையை மீண்டும் ஒரு முறை நன்றாக படியுங்கள், மாறுதல் என்பது மட்டுமே மாறாது என்பது உண்மையான தத்துவம், இந்துத்துவமும் அதுதான், ஆனால் அதில் உள்ள மாற்றம் என்பது மானுட நன்மைக்கே என்பது புரியும்.

 27. வணக்கம்,

  மாற்றம் என்பது கடவுள் அவதாரங்கள் வரை உள்ளது, இறைவனின் அவதாரங்கள் கூட பரிணாம வளர்ச்சிப் படியே அமைந்துள்ளன. அவர் ஒரே அவதாரமாக வந்து ஒரே நிலைப் பாட்டை உறுதி சொல்லவில்லை.

 28. Shri Rama did not do any injustice to Shri Seetha Nor did people’s mentality force Rama to put Seetha through tough times – Ramayanam is all about Bhakthi – Four forms of Bhakthi are expounded in Ramayana 1) Seetha’s bhakthi 2)Bharathan’s bhakthi 3) Lakshmana’s and 4) Hanumans – all are so different… Let us now focus on why Seetha had to undergo difficulties – for one simple fact because she doubted Lakshmanas Bhakti and ordered him to break/Cross (Rama’s Word) go in search of Rama when Maricha had allured Rama deep in to the foreat – Seetha shouted at Lakshmana and said you are not going because you have some immoral interest in me – After Seetha said this, Laksmana had no way but to go away…..

  This act of doubting a great Bhaktha has what lead to the sufferings of Seetha – she had to live in Lanka for a year, go through Agni Prathistai, go through Vanavaam again….. Bagavatha Apacharam is considered so bad in Hindu religion – you can even do apacharam to God (which we do anyway), but not to a bhakta….

  This is one of the true highlights of our culture and religion -this is how we spread humanity- You can even get away doing unholy things to god, but never hurt a fellow human being….

  It is also said that Rama had no intention to kill the abductor of Seetha (he did not know it was Ravana until Jatayu told him) – he rose in anger and decided to kill Ravana only when he saw what Ravana had done to a great Bhakta like Jatayu

  “sInattinal” then ilangai kOmanai sEtrra – Thiruppavai – Rama’s anger killed Ravana – anger due to a great bagavatha(jatayu) being unmercifully killed by Ravana

  There are so many intricate messages and learning that remain buried within Ramayana – Lord need not to the earth to to kill Ravana – he came down to teach and exemplify….

  – There is no need for us to certify Rama on whether he was right or not in doing certain actions – let us be seekers of truth

 29. வால்மீகி வேடர் குளத்தில் பிறந்ததாக ராமாயணத்தில் எங்கு சொல்லப்பட்டிருக்கிறது?

 30. இங்கே நாட்டாண்மை என்ற பெயரில் எழுபவர், முதலில் கொஞ்சம் விஷயம் தெரிந்து கொண்டு எழுத வேண்டும். இராமாயணம் எனபது வரலாற்று நிகழ்வு.

  அதைப் பலரும் தங்களுடைய மொழியிலே பார்த்து பதிவு செய்து வைத்து உள்ளனர்.

  வேதங்கள் என்று சொல்லப் படுபவை வேறு.

  பெரிய அறிவாளி போல, நக்கலாக எழுதுவதாக நினைத்துக் கொண்டு எழுதி இருக்கிறார்.

  உங்கள் மார்க்கம் பற்றி எழுதினால் பலருக்கும் குமட்டல் வரும். நாகரீகம் கருதி தவிர்க்கிறோம்

 31. அற்புதமான கட்டுரை. அ நீ ஐயாவிற்கு என் மனமார்ந்த நன்றி.

  தமிழ்இந்துவின் பணி வியக்கவைக்கிறது.

  நன்றி

 32. //வால்மீகி வேடர் குளத்தில் பிறந்ததாக ராமாயணத்தில் எங்கு சொல்லப்பட்டிருக்கிறது?

  இராமாயணம் இராமரை பற்றியதே ஒழிய வால்மிகியை பற்றியது அல்ல

 33. what sarang told is excellent & mentioned the original purpose of SriRama’s Avatar and Srimad Ramayana

 34. இங்கே நாட்டாமை என்ற பொய்ப் பெயரில் எழுதுவது வேறு யாரும் இல்லை. அவர் PASTOR இறையன்பு ஜாண் என்று வலைப்பூவில் தனது பெயரைக் குறிப்பிட்டிருக்கிறார். சொந்தப்பெயரில் எழுதி வாதிடும் அளவுக்கு அவர்களுக்கு முதுகெலும்பை அவர்களது மதம் கொடுக்கவில்லை போலும். பரிதாபத்திர்குரிய நபர். நாட்டாமை என்ற பெயரில் க்ளிக் செய்து சூதைப் பார்க்கலாம்.

 35. //அவரவர் இஷ்டம் போல மாற்றிக் கொள்ளுவதையெல்லாம் வேதம் என்று சொல்லமா,அண்ணா..? அது கதை தானே..?//

  நாட்டாமே பதிவ பாத்து எழுது.

  உங்க வலைப் பூவை போய் பார்த்தேன், ( நன்றி ராம்), ஒரு பழ மொழி ஞாபகம் வந்தது “ஈயத்தை பார்த்து இளித்ததாம் பித்தாளை”.

  ஆனால் இங்கே தங்கத்தை பார்த்து அல்லவா தகர டப்பா இளிக்கிறது?

  அவரவர் இஷ்டம் போல மாற்றி பழைய மற்றும் புதிய ஏற்பாடு செய்தது யார் என்று நண்பர் தேவிப்ரியா சாலமோன் லட்சம் பதிவு எழுதி போகஸ் லைட் போட்டுக் காட்டி விட்டபின்னும் எதற்கு நண்பரே இப்படி ஒரு சந்தேகம் உங்களுக்கு?
  முதலில் உங்கள் அழுக்கை நன்றாக போகும்படி தேய்த்து ஸ்நானம் செய்யுங்கள்.
  பூனை கண்ணை மூடியது போல கதைக்கும், புராணத்துக்கும், வேதத்துக்கும் வித்தியாசம் தெரியாமல் வந்து குழப்பக் கூடாது.பேசாமல் குச்சி மிட்டாயும், குருவி ரொட்டியும் சாப்பிட்டு விட்டு சமத்தா இருக்கணும், கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தா விட மாட்டீங்களே?

 36. விடுங்க ராம் சார் – இந்தா நாட்டாமை போல இருக்கிறவங்க அவங்க மத பூக்செல்லாம் டெய்லி விக்கிபீடியாவில வெச்சு எடிட் பண்றாங்கன்னு இங்க வந்து ஆதங்க படறாரு, அவ்வளோ தான் – latest edition 2009-I-309.1.1.4

 37. naataamai
  3 November 2009 at 9:04 am
  அவரவர் இஷ்டம் போல மாற்றிக் கொள்ளுவதையெல்லாம் வேதம் என்று சொல்லமா,அண்ணா..? அது கதை தானே..?

  New American Standard Bible (NASB)
  2kINGS 24:8
  jehoiachin was eighteen years old when he became king, and he reigned three months in Jerusalem; and his mother’s name was Nehushta the daughter of Elnathan of Jerusalem.

  2 Chronicles 36:9 (New American Standard Bible)

  Jehoiachin was eight years old when he became king, and he reigned three months and ten days in Jerusalem, and he did evil in the sight of the LORD.

 38. naataamai
  3 November 2009 at 9:04 am
  அவரவர் இஷ்டம் போல மாற்றிக் கொள்ளுவதையெல்லாம் வேதம் என்று சொல்லமா,அண்ணா..? அது கதை தானே..?
  சாமுவேல் 6:23
  அதினால் சவுலின் குமாரத்தியாகிய மீகாளுக்கு மரணமடையும் நாள் மட்டும் பிள்ளை இல்லாதிருந்தது.

  சாமுவேல் 21:8
  ஆயாவின் குமாரத்தியாகிய ரிஸ்பாள் சவுலுக்குப் பெற்ற அவனுடைய இரண்டு குமாரராகிய அர்மோனியையும், மேவிபோசேத்தையும், சவுலின் குமாரத்தியாகிய மீகாள் மேகோலாத்தியானான பர்சிலாவின் குமாரனாகிய ஆதரியேலுக்குப் பெற்ற அவனுடைய ஐந்து குமாரரையும் பிடித்து…//

  2சாமுவேல் 24:1
  கர்த்தருடைய கோபம் திரும்ப இஸ்ரேலின் மேல் மூண்டது. இஸ்ரவேல் யூதா என்பவர்களை இலக்கம்பார் என்று அவர்களுக்கு விரோதமாய்ச் சொல்லுகிறதற்கு தாவீது ஏவப்பட்டான்.

  1நாளாகமம் 21:1
  சாத்தான் இஸ்ரவேலுக்கு விரோதமாய் எழும்பி, இஸ்ரவேலைத் தொகையிடுகிறதற்கு தாவீதை ஏவி விட்டது.

  Sathan and Karththar – all or same

 39. //இங்கே நாட்டாமை என்ற பொய்ப் பெயரில் எழுதுவது வேறு யாரும் இல்லை. அவர் PASTOR இறையன்பு ஜாண் என்று வலைப்பூவில் தனது பெயரைக் குறிப்பிட்டிருக்கிறார். சொந்தப்பெயரில் எழுதி வாதிடும் அளவுக்கு அவர்களுக்கு முதுகெலும்பை அவர்களது மதம் கொடுக்கவில்லை போலும். பரிதாபத்திர்குரிய நபர். நாட்டாமை என்ற பெயரில் க்ளிக் செய்து சூதைப் பார்க்கலாம்.//
  அப்போ சில்சாம்தான் பாஸ்டர் இரையன்புவா? என்ன குழப்பம் இது. என்ன சில்சாம் சார் இது?
  ஆனால் ஒரு கேள்வி வருது ராம். தன் அடையாளம் மறைக்க அவர் நினைத்து இருந்தால் எதற்க்காக அவர் தன் வலைப்புவை இங்கே கொடுத்து இருக்க வேண்டும்?
  இங்கே சொந்த பெயரில் எழுதாதவர்கள் எல்லாம் முதுகெலும்பில்லாதவர்கள் என்றால், நண்பர் திருச்சிக்காரனும் முதுகேலும்பில்லாதவர் என்று சொல்லுகிறீரா?
  சரி, நான் இதை எழுதியது குழப்பத்தை உண்டு பண்ண அல்ல. நம் கவனம் சிதாராமல் இருக்க.
  இப்போதெல்லாம் நாம் கட்டுரையில் கவனம் செலுத்தாமல், பின்னூட்டத்தில் அதிக கவனம் செலுத்துகிறோம். பின்னூட்டத்திற்கு பின்னூட்டம் இடுகிறோம். நம்மையறியாமல் நம் கவனத்தை சிதைக்கும் யுக்தியை அவர்கள் கையாள்கிறார்கள். இவர்களை கண்டுகொள்ளாமல் நாம் நமது கருத்துகளில் லயிக்கலாமே.
  திருச்சிக்காரன் என்னை தப்பாக நினைக்க மாட்டார். ஒரு நல்ல விஷயத்திற்குதான் அவர் பெயரை உபயோகப்படுத்தியுள்ளேன்.
  இவன்,
  ஆனந்த்

 40. ஐயா, ஆனந்த்,

  நான் திருச்சிக் காரன் என்ற ஒரே பெயரிலே தான் பதிவு இடுகிறேன்.

  ஒரு பதிவை chillsam என்ற பெயரிலும் இன்னொரு பதிவை naattamai என்ற பெயரிளிமாக எழுதுவது நேர்மையல்ல.

  ஒருவரே பத்து பெயரில் அதே கருத்தை எழுதி அந்தக் கருத்துக்கு ஆதரவு இருப்பது போல காட்டுவது பழக்கமாகி விடக் கூடாது.

  //இப்போதெல்லாம் நாம் கட்டுரையில் கவனம் செலுத்தாமல், பின்னூட்டத்தில் அதிக கவனம் செலுத்துகிறோம். பின்னூட்டத்திற்கு பின்னூட்டம் இடுகிறோம். நம்மையறியாமல் நம் கவனத்தை சிதைக்கும் யுக்தியை அவர்கள் கையாள்கிறார்கள். இவர்களை கண்டுகொள்ளாமல் நாம் நமது கருத்துகளில் லயிக்கலாமே// இதுதான் மின் வூடகத்தின் சிறப்பு. கருத்துப் பகிர்வு. கட்டுரையிலும் கவனம் செலுத்துவோம். பின்னூட்டம் என்ற பெயரில் முக்கிய கருத்துக்கள் வர்க கூடும். பின்னூட்டம் என்ற பெயரில் பொய் பிரச்சாரம் நடை பெரும் போது கை கட்டி இருக்க முடியாது.

 41. //ஒருவரே பத்து பெயரில் அதே கருத்தை எழுதி அந்தக் கருத்துக்கு ஆதரவு இருப்பது போல காட்டுவது பழக்கமாகி விடக் கூடாது.//
  மிக சரி, திருச்சிக்காரன். அனுபவமின்மையால் எனக்கு சரியாக கணிக்க தெரியவில்லை.
  இவன்,
  ஆனந்த்

 42. Respected Shri Aravindan

  Your views are in tune with the Upanishadic thinkers regarding the the deciding authority (adhikari). Two verses (anuvaka 10, verses 9 and 10)in the Shikshavalli (taittireeya shakha, krishna yajurveda ) testify to the fact

  this is the advice of a guru to his student who is about to enter the society after completing his gurukulavasa.

  atha yadi te karma vichikitsa va vritta vichikitsa vaa syat
  ye tatra brahmanaa: sammarshina: yuktaa aayukta alooksha dharmakaamasyu:
  yatha te tatra varteran tathaa tatra vartethaa: (verse 9).

  if you have a doubt regarding a deed or a conduct consult and follow the advice of a brahmana who is thoughtful, zealous, well-versed, not hard (at heart), desirous of Dharma .

  athaa bhyakhyateshu…. (verse 10)
  Regarding an accused person also consult and follow the advice a brahman who is thoughtful, zealous, well-versed, not hard (at heart), desirous of Dharma .

  ( note the epithets do they not show the farsighted nature of ancient hindu social scientists regarding an adhikari for an ever evolving society)

  We are indebted to you for such a lucid presentation.

  mjraman

 43. அற்புத கட்டுரை திரு அரவிந்தன். எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  த.வர்த்தமானன்

 44. @
  //“நான் உன் பிதா. என்னையே நீ வணங்க வேண்டும்,” என்கிற கட்டளையைப் பிறப்பித்த இரணியன் ஒரு அரக்கனாகவே ஹிந்து ஐதீகத்தில் அறியப்படுகிறான். இரணியன் முன் நின்று பேசும் பிரகலாதன் முதல் அவுரங்கசீப் முன் நின்று, “தலையைத்தான் இழந்தேன்; என் தர்மத்தை அல்ல,” எனச் சொல்லும் குரு தேஜ்பகதூர் வரை, திணிக்கப்படும் மதக் கோட்பாடுகளுக்கான எதிர்ப்பையும், வழிபாட்டுச் சுதந்திரத்துக்கான உரிமைக் குரலையும் நாம் நம் பண்பாட்டில் தொடர்ந்து காணமுடியும்//

  ஹிந்து சமுதாயத்தைப் பற்றிய மிக அருமையான தெரிவு. சரியான விதத்தில், இடத்தில், வெளிப்பட்டுள்ள இவ் வரலாற்று மேற்கோள்களை உங்களுக்கு அளித்த இறைவனுக்கு நன்றி மலர்கள் உரித்தாகுக..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *