“திருவள்ளுவர் காலத்துல துப்பாக்கி கண்டுபிடிச்சுட்டாங்க தெரியுமா?”
இப்படி நண்பன் கேட்டதில்தான் அந்த குறள் அறிமுகமானது எனக்கு. பலருக்கும் அப்படித்தான் என்று பிறகு தெரிந்தது. குறள் எதுவென நீங்கள் கண்டுபிடித்திருப்பீர்கள்.
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.
இக்குறளின் பொருள் இனிமையானது. எளிதானது.
துப்பார்க்குத் துப்பு ஆய துப்பு ஆக்கி – உண்பார்க்கு நல்ல உணவுகளை உளவாக்கி துப்பார்க்கு துப்பு ஆயதூஉம் மழை – அவற்றை உண்கின்றார்க்குத் தானும் உணவாய் நிற்பதூஉம் மழை
இது பரிமேலழகர் உரை.
காளிங்கர் உரையில் “உண்பவர் யாவர்க்கும் உணவுப் பொருளாய் இன்னும் அவற்றை உளவாக உறுதி பண்ணிக் கொடுப்பதூஉம் செய்து.” என்கிறார்.
துப்பார் என்றால் உண்பார். அது எப்படி நீரை உண்ண முடியும்? தானும் உணவாதலாவது தண்ணீராய் உண்ணப் படுதல் என்கிறார் பரிமேலழகர்.
தண்ணீரை அருந்தத்தானே செய்வார்கள். அதனை உண்ணுவதாக சொல்லமுடியுமா?
இருக்குமாயிருக்கும்.
புறநானூற்றில் ஒரு பாடல் ”உணவு எனப்படுவது நிலத்தொடு நீரே” எனக் கூறுகிறது.
தைத்திரீய உபநிடதத்திலும் நீரே உணவு என சொல்லப்படுகிறது. பொதுவாக சமூக சிந்தனையாளர்களும் பொருளாதார நிபுணர்களும் உணவைப் படைப்பது நிலமும் உழைப்பும் என்றே கருதுவர். அது திருவள்ளுவருக்கும் தெரியும். அதனால்தான் அவர் உழவர் சிறப்பை தனியாக போற்றியிருக்கிறார்.
ஆனால் உணவைப் படைக்க இயற்கை வளமும் உள்ளே உள்ளிடு-பொருளாகின்றது. பொதுவாக மேற்கத்திய பொருளாதாரம் ஒதுக்கிய பரிமாணம் இது. சூழலியல் பொருளாதாரம் உருவான காலகட்டத்தில்தான் இயற்கை வளத்தையும் உற்பத்தியில் ஒரு உள்ளிடு பொருளாகக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மேற்கத்திய மனதுக்கு ஏற்பட்டது. ஆனால் இன்றைக்கு நீர் ஒரு மிக முக்கியமான உள்ளிடு-பொருளாகக் கணக்கில் எடுக்கப்படுகிறது.
நாம் உற்பத்தி செய்யும் ஒவ்வொரு பொருளிலும் இந்த இயற்கை – நம்முன்னோர்களின் பார்வையில் பஞ்ச பூதங்கள்- உள்ளுறைகின்றன. அவற்றை நாம் நம் பொருளாதாரச் சமன்பாடுகளில் கண்டு கொள்வதே இல்லை. ஆனால் அவ்வாறு மானுடம் வெகுநாட்கள் காலந்தள்ள முடியாது. இன்றைக்கு சூழலியல் மற்றும் சூழலியல் சார்ந்த பொருளாதாரக் கணக்கிடுதல்கள் சர்வதேச உறவுகளை நிச்சயிக்கும்
அளவுக்கு வளரத் தொடங்கியுள்ளன.
அண்மையில் உலக நீர்வள மேம்பாட்டு அறிக்கையை (மார்ச் 2009) மேற்கோள் காட்டி ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச்செயலாளர் பான் கி-மூன் (Ban Ki-moon) நீருக்கான தேவை அமைதியான கோரிக்கையிலிருந்து வன்முறையாக மாறிக்கொண்டிருப்பதாகச் சுட்டிக்காட்டினார். இன்றைக்கு எந்த உணவுப் பதார்த்தத்தின் விலையுடனும் அதன் உள்ளுறை நீர் (embedded water) கணக்கிடப் படவேண்டும் என்கின்றனர் சூழலியல் வல்லுனர்கள். இந்த கணக்கிடுதல் சில உண்மைகளை வளரும் நாடுகளுக்கு காட்டுகின்றன. மேற்கத்திய நாடுகளின் முக்கிய உணவுப் பதார்த்தங்கள் மிகக்கொடூரமான விதத்தில் நீரை உள்ளீடாக்குகின்றன. உதாரணமாக 150 கிராம் பர்கருக்கு(burger) 2400 லிட்டர்கள் நீர் உள்ளீடாகிறது. பர்ஜரின் விலையில் இந்த நீரின் விலை வருவதே இல்லை.
இந்த உள்ளுறை நீர் எனும் பார்வை மேற்கின் அதீத அசைவ உணவு கலாச்சாரம் உலக இயற்கை வளத்தின் மீது ஏற்படுத்தும் கடுமையான பாதிப்பை வெளிக்கொணர்கிறது. நாம் காப்பியடிக்க விரும்பும் அந்த மேற்கத்திய உணவு பழக்கவழக்கத்தின் மீது ஒரு தீவிரமான பச்சைக் கேள்விக்குறியை எழுப்புகிறது. உதாரணமாக இங்கிலாந்தில் ஒரு கிலோ கிராம் கோதுமையை விளைவிக்க உள்ளீட்டு நீர் 1000 லிட்டர்கள் ஆனால் ஒரு கிலோ கிராம் மாட்டிறைச்சிக்கோ உள்ளீட்டு நீர் 16000 லிட்டர்கள்.
ஆனால் நீர் குறித்த கேள்விகள் சைவ-அசைவ உணவு பழக்க வழக்கத்துடன் நின்றுவிடவில்லை. இன்னும் ஆழமான பிரச்சனைகளை அவை உள்ளடக்கியுள்ளன.
பாரதத்தின் நீர்நிலை மேலாண்மை பாரம்பரியமாக ஊர் குழுக்களிடம் இருந்தன. நீர்வளம் அரசினைச் சார்ந்ததான பிறகு இந்த பிராந்திய உள்ளூர் பாரம்பரிய அமைப்புகளிலிருந்து அந்தந்த உள்ளூர் சமூகங்களிலிருந்தும் அந்த மேலாண்மை சுத்தமாக அன்னியப்பட்டுப் போயிற்று. இதனுடைய விளைவாக நீர்ப் பயன்பாடு அதிகரித்தது. விளைச்சலையும் அதன் அடிப்படையிலான இலாபத்தையும் மட்டுமே கணக்கில் எடுக்கிற விவசாயியின் மனப்பாங்கும் மின் இயந்திரங்களின் வலுவுமாகச் சேர்ந்து, நிலத்தடி நீர் தீரலானது.
பொதுவாக நம் ஊர்ப்புறங்களில் சொல்வார்கள்: ஒருவனுக்கு அவனது புண்ணியபலம் மிச்சமிருக்கும் வரை நல் வாழ்வு இருக்கும். அதனைப் பயன்படுத்தி அவன் மேலும் நல்லவனானால் அவனுக்கு நல்லது. இல்லாமல் அவன் அந்த புண்ணியபலத்தை விரயம் செய்து கொண்டிருந்தால் பிறகு கஷ்டத்தை அனுபவிப்பான் என்று. நிலத்தடி நீரும் நம் முன்னோர்களும், பாரம்பரியமும் சேர்ந்து உருவாக்கிய நீர்நிலைகளின் புண்ணியபலன்தான். அது வெகுவாகக் கரைந்து கொண்டே வருகிறது. நம்முடைய இன்றைய ஆட்சியாளர்கள் குளமா வெட்டுகிறார்கள்? நம் சமுதாயத்தை வெட்டி கூறு போட்டு அதில் ஓட்டு வங்கி அரசியல் நடத்துவது மட்டுமே அல்லவா அவர்களின் பிழைப்பு!
மேற்கத்திய அசைவ உணவுப் பண்பாடு மட்டுமல்ல, நம்மைப் போன்ற வளரும் நாடுகளின் பாரம்பரிய நீர்ப் பயன்பாட்டு உதாசீனமும் கூட இருக்கும் நிலத்தடி நீரை விரயம் செய்வதும் நம் மானுடத்தைப் பெரும் பேரழிவுக்கு இட்டுச்சென்று கொண்டிருக்கிறது.
பூகோளம் முழுவதுமாக ஒரு வருட விவசாயத்துக்கு பயன்படுத்தப்படும் நீர் 6390 பில்லியன் சதுரமீட்டர்கள் என்கிறார்கள் சூழலியலாளர்கள். அதாவது ஒரு நொடிக்கு உணவு உற்பத்திக்கு 200,000,000 லிட்டர்கள் நீர் துப்பு ஆகிக்கொண்டே உள்ளது.
அண்மையில் நாஸாவின் GRCE (Gravity Recovery and Climate Experiment) எனும் சுற்றுச்சூழல் பரிசோதனைக்கான செயற்கைக் கோள் மிக வேகமாக வடஇந்தியாவின் நிலத்தடி நீர் அதிர்ச்சியூட்டும் வேகத்தில் காலியாகிக் கொண்டிருப்பதை காட்டியுள்ளது. நிலத்தடி நீர்நிலைகளுக்குள் இயற்கையாக நீர்
நிரம்பும் வேகத்தைக் காட்டிலும் பன்மடங்கு அதிக வேகத்தில் மானுடசெயல்பாடுகள் அந்த நீரை உறிஞ்சி எடுத்து பூமியின் அக ஈரத்தை துடைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
ஆக, ”உணவாகிறது நீர்” என பொய்யாமொழிப் புலவரும், வேதங்களும், சங்க இலக்கியமும் சொன்ன வார்த்தைகள் மிகைப்படக் கூறியதல்ல. கவிக் கற்பனையுமல்ல. அச்சொற்கள் ஒரு ஆதார உண்மையைத்தான் நமக்கு சொல்லியுள்ளன. நம் பண்பாடும் அந்த உண்மையின் மீதுதான் எழுப்பப்பட்டுள்ளது. ஆக, பிட்ஸாவும் பர்கரும் உண்டு மேற்கத்தியமாகி நம் உயிர் வாழ்தலின் அடிப்படையான பண்பாட்டு மரத்தையே வெட்டி வீழ்த்தி நம்மை நாமே “நீருக்கான உலகப் போரில்” அழிக்கும் மேற்கத்திய நாகரிக தலைமுறையாக நாம் முழுமையாக மாறுவதற்கு முன்னால்
“உணவாகும் நீரை” கட்டிக்காத்த பண்பாட்டின் சுவடுகளை நாம் சிறிது பின் நோக்கலாம்.
பிரிட்டிஷ் கெஸெட்டின் கணக்கின்படி 1871 இல் கர்நாடகத்தில் 36,235 குளங்களும் தமிழ்நாட்டில் 39,202 ஏரிகளும் இருந்தன. ஏன் இன்றைக்கு வறட்சியின் பூமியாக கருதப்படும் ஆந்திர பிரதேசத்தில் முதல் ஐந்தாமாண்டு திட்டத்தின் முடிவில் 58,518 பாரம்பரிய நீர் நிலைகள் இருந்தன. தமிழ்நாட்டின் நீர்ப்பாசன வசதி என்பதே மூன்றிலொரு பங்கு ஏரிகளினால் ஏற்பட்டதால இருந்தது. நம் பண்பாட்டின் ஆகப்பழமையான பொறியியல் கலையின்-அறிவியலின் அடிப்படை அமைப்புகளில் ஒன்றாக குளங்கள் மற்றும் ஏரிகளின் வடிவமைப்பையே குறிப்பிடலாம். அவை வடிவியல் அமைப்புகளாக மட்டுமல்லாது சமுதாயத்தின் மேலாண்மையாலும் ஒரு சேர வளங்குன்றா வளமையை இந்த மண்ணுக்கு தந்தன. ஏன் இத்தனை முக்கியத்துவம் இவற்றுக்கு? ஏனெனில் இந்த பண்பாடு ஒரு அடிப்படை அறிவியல் உண்மையை வாழ்வியலாக மாற்றியிருந்தது: “உணவு எனப்படுவது நிலத்தொடு நீரே”.
துப்பார்க்கு துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.
இல்லை, இந்த குறளில் திருவள்ளுவர் துப்பாக்கியைக் கண்டுபிடிக்கவில்லை.
ஆனால் அவர் காட்டியிருக்கும் வாழ்வியல் உண்மையின் அடிப்படையை இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் நாம் உணர்கிறோம் – மானுடம் நீடிக்க வேண்டியதன் அடிப்படை ஆதாரமாக. அதே சமயம் அவர் மற்றொன்றையும் சொல்லியிருக்கிறார் நம் பிட்ஸா-பர்கர் தமிழனுக்கு, ஆற்றுப்படுகை மண்ணை கொள்ளையடிக்கும் தமிழனுக்கு எச்சரிக்கையாக:
நீரின்றி அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வானின்றி அமையாது ஒழுக்கு.
தொடர்பான சில இணையச்சுட்டிகள்:
- https://www.nasa.gov/topics/earth/features/india_water.html
- Dr Narayana Shenoy K, Traditional water harvesting methods of India, Organiser Aug-16-2009
- https://en.wikipedia.org/wiki/Virtual_water
எனது பள்ளி நாட்களில் கோடைவிடுமுறைக்காக தஞ்சை மாவட்டத்துக்கு செல்வோம்(இப்பொழுது போல் “சம்மர் க்ளாஸ், ஸ்போக்கன் இங்லீஷ்” போன்ற அனாவசியத் தொந்தரவுகள் அப்பொழுது கிடையாது- 60 -70 களில் நிஜமான விடுமுறை)காவிரியிலும் அதன் கிளை நதிகளிலும் பல கால்களாய் மெல்லிய நீரோட்டம் உண்டு. பால் நிலா பாய்வது போல் வெண்மணற்பரப்பு. ஒடியாடிக் களித்து வியர்வையும் களைப்பும் அடங்க நீராடி மகிழ்ந்தது பொய்யாய் பழங்கதையாய் போயிற்று. கருவேலமரங்கள் கரையில் வளர்ந்தது போக ஆற்றின் பரப்பிலும் ஆக்ரமிக்கத் தொடங்கின. விளைவு நீரோட்டம் தடைப்பட்டு கரைகள் உடைந்தன. நிலங்களும் பயிர்களும் அழிந்தன. முறையான பராமரிப்பின்றியும், ஆக்ரமிப்பினாலும் ஆறுகளும்,குளங்களும் பாழ்பட்டன. ஏரிகள் வீட்டுமனைகளாயின. பொதுப்ப(பி)ணித்துறை என்று ஒன்று உள்ளது. அதில் ஆற்று பராமரிப்புக் கோட்டம் என்று உள்ளதாகத் தெரிகிறது. அதன் பணி என்ன என்பது தேவ ரகசியம்! கோடைக்காலத்தில் குடி மராமத்து என்பது ஒருகாலத்தில் முறையாக நடந்தது. தமிழ்நாட்டின் ஆறுகள் வருடத்தின் பெரும்பான்மையான நாட்களில் கணுக்கால் அளவாவது நீரோட்டத்துடன் இருந்தன.
கழகங்களின்ஆட்சிகளில் எல்லாம் காணாமல் போனது. குடிமக்களும் விழிப்புணர்வுடனும் பொறுப்புணர்வுடனும் இல்லாமல் போனார்கள். சில வருடங்களுக்கு முன்னால் கர்நாடகத்துக்கு சென்றிருந்தேன். கோடையின் உச்சக்கட்டம். எல்லா வாய்க்கால்களிலும் இடுப்பளவுத் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. வறண்ட வாய்க்கால்களையே பார்த்த எனக்கு ஆச்சர்யம். எனது கர்நாடக நண்பர் “நாங்கள் முறையாக வாய்க்கால்களைப் பராமரிக்கிறோம்” என்று சொல்லிவிட்டு அமைதியாயிருந்தார். அவர் அமைதியின் பொருள் நம் தமிழ்நாட்டின் “லக்ஷணத்தை” வெகு நன்றாக உணர்த்தியது. அது சரி! நாலு கூட்டத்தில் வாய்சாலத்துடன் பேச மட்டும் தான் திருக்குறள் கைதட்டல் வாங்கித் தரும். பணம் கிடைக்குமா? நாலு லாரி லோடு மணல் காசு பெற்றுத்தரும்.” துப்பார்க்குத் துப்பாய” அதுமாட்டில் புத்தகத்தோடு இருக்கட்டும்.
அன்பின் நீலகண்டன்,
உங்களையும், வஜ்ராவையும் ஓட ஓட துரத்தினோம் என்று பீற்றிக்கொள்கிறார்களே வினவு பக்கத்தில். உண்மையா?
அந்த கும்பல், பொதுவாக எதிர்கருத்துக்களை அனுமதிக்காமல், தனக்குத்தானே கிரீடம் சூட்டிக்கொள்ளும் வகையறா என்பது தெரிந்ததுதான். இருந்தாலும், அப்படி என்ன ஓட ஓட துரத்தினார்கள் என்று அறிந்துகொள்ள ஆவல்.
தற்போது உங்கள் எழுத்துக்கள் சிறப்பாக வெளிவரும் வகையில் இந்த இணைய தளமே உள்ளது. அவர்களது ஓட்டைகளை விலாவாரியாக போடலாமே?
நட்புடன்
Timely and well written article.
Water wars have already started-soon even ” sembulapeyal neer” will be a dream and future generations will wonder about the Sangam verse.
At the moment its more important for people to watch dance shows, TV serials that promote Tamil [ !] culture-listen intently to actresses say pongal means having a holiday to watch TV!
Vazhga new Tamil kalaachaaram!
அருமையான கட்டுரை. பிட்ஸா, பர்கருக்கு எதிரான பச்சைக்காய்கறி, ஸ்டீக்கிற்கு எதிராக மீன் மற்றும் lean meat போன்றவை அமெரிக்காவில் பிரபலமாகி வர இந்தியாவின் மாபெரும் சந்தை மெக்டொனால்டுகளுக்கும், பர்கர் கிங்குகளுக்கும், பிட்ஸா ஹட்டுகளுக்கும் நாக்கில் லாப நீரை வரவழைக்கின்றன.
ஒரு விஷயம் கவனித்தேன். ”உதாரணமாக 150 கிராம் பர்கருக்கு(burger) 2400 லிட்டர்கள் நீர் உள்ளீடாகிறது. பர்ஜரின் விலையில் இந்த நீரின் விலை வருவதே இல்லை”. பர்கரின் விலையில் இந்த நீரின் விலை வருவது இல்லை என்பது எப்படி? ஏனெனில் ஒவ்வொரு தொழிற்சாலையும் தண்ணீரை விலை கொடுத்து வாங்குகின்றது. விரல் விட்டு எண்ணக்கூடிய மாமிச பேக்கிங் கம்பெனிகளே உள்ளன. மெக்டொனால்டும், பர்கர் கிங்கும் ஒரே மாபெரும் மாமிச பேக்கிங் கம்பெனியிடமிருந்து வாங்கும் மாமிசத்தையே உபயோகிக்கின்றன. இந்த மாமிச பேக்கிங் தொழிற்சாலைகளின் உற்பத்தி அளவைச் சரிபார்க்க அரசு நிறுவனங்கள் உபயோகிக்கும் முக்கிய அளவுமானி அவைகளின் மாதாந்திர நீர் உபயோகக் குறியீடு. அதிக நீர் உபயோகத்திற்கு அதிக விலை தர வேண்டும். அவைகளது உற்பத்தி அளவையும் சரிபார்க்க இது உபயோகப்படுகிறது. (இப்படித்தான் எல்லா நாடுகளிலும் பெரும்பாலும் இருக்கும் என்று நினைக்கிறேன்).
ஆக, பர்கரின் விலையில் உபயோகித்த நீருக்கும் ஒரு பங்கு இருக்கும் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. ஆனால் மெக்டொனால்டும் பர்கர் கிங்கும் பிரம்மாண்ட சந்தையைக் கையில் வைத்திருப்பதால் அவற்றின் உணவுப்பொருள்களின் உற்பத்தி சங்கிலியில் இருக்கும் பல கண்ணிகளை இஷ்டத்துக்கேற்றவாறு வளைக்க முடிகிறது. உதாரணத்திற்கு கோழிப்பண்ணைகள் ஃப்ரான்ஸைஸ் முறையில் இயக்கப்பட்டு, முட்டையிலிருந்து, ஊசியிலிருந்து, கோழித்தீவனம் வரை கட்டுப்படுத்தப்பட்டு வழங்கப்படுகிறது. குறித்த நாளில் வந்து கம்பெனி எடுத்துக்கொண்டு போய்விடும். கோழிப்பண்ணையாளர்களுக்கு மிகக்குறைந்த லாபமே கையில் நிற்கும். இடையில் கோழிகள் நோய்வாய்ப்பட்டாலோ, இறந்தாலோ நஷ்டம்தான். இதைவிடக்கொடுமை மாடு வெட்டும் பேக்கிங் கம்பெனிகள். 1 டாலர் மாட்டு பர்கரை உருவாக்க விலையில் கடும் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கிறது. வேலை செய்பவர்கள் மெக்ஸிகோவில் இருந்து மூன்றாம் ஏஜெண்டு மூலம் கம்பெனி தொடர்பின்றி சட்டத்திற்குப்புறம்பாக உள்ளே கொண்டு வரப்படுகிறார்கள். ஹெல்த் கேர் உத்தரவாதம் கிடையாது. மாடு வெட்டும் கத்தி கைகளை வெட்டினால் வேலையும் இல்லை, சம்பளமும் போச்சு, மருந்தும் கிடையாது. பெண்கள் கற்பழிப்பும், போதை மருந்து உபயோகமும் வெகு சகஜம்.
(மாடுகளும் கோழிகளும் பன்றிகளும் பண்ணையில் அடைக்கப்பட்டிருக்கும் சித்ரவதை நிலையைப்பற்றி நான் இங்கே பேசவேயில்லை என்பதைக் கவனியுங்கள், அது தனிக்கதை. சிறிய உதாரணம்- கோழிகள் ஒரே இடத்தில் கழுத்தை மட்டும் சாப்பாட்டுக்கு வெளியே நீட்டும் நிலையில் நெரிசலாக அடைத்து வைக்கப்படுகின்றன- இதனால் சில நாட்களிலேயே கடும் கோபமும் எரிச்சலும் அடைந்து பக்கத்தில் உள்ள கோழிகளோடு சண்டை, கொத்தல், ரத்தம், மரணம் என்று முடிகிறது, இதனால் பக்கத்தில் உள்ள கோழிகளைப்பார்க்கமுடியா வண்ணம் கோழிகளுக்கு ஒரு வகை காண்டாக்ட் கூடு பொருத்தப்படுகிறது).
இது போன்ற பல உண்மைகளை வெளிக்கொணர்ந்த துரித உணவு தேசம் (Fast Food Nation) என்ற பத்திரிகைத்தொடருக்குப்பின் தான் சில பச்சைக்காய்கறி உணவையே மெக்டொனால்டும் பர்கர் கிங்கும் அறிமுகப்படுத்தின.
சொல்ல வந்தது என்னவென்றால், இந்த பர்கர்களின் விலை இவ்வளவு குறைவாக இருப்பதற்கு நீர் உள்ளீட்டு விலை அதில் கணக்கில் வரவில்லை என்பதை விட இதுபோன்ற தயவு தாட்சண்யமற்ற கொடுமையான விலைக்கட்டுப்பாட்டு உத்திகளே முதற்காரணமாகின்றன. பர்கரின் உள்ளீட்டு நீரில் பல கண்ணீர்களும் உள்ளன. தண்ணீருக்கு விலை தரப்படுகின்றது. கண்ணீர் இலவச இணைப்பு.
Was all well in the past.Did all sections have equal access to water and other resources.Did everyone get enough food and water and other basic facilities in the pre-british india.Industrial agriculture and food processing including mass production of meat,animal farming consume huge quantities of water and cause pollution. The solution is to opt for small scale and water efficient units.Water is needed to grow wheat, rice.Sugar cane and rice are more water intensive than jowar or maize.Sugar cane has been promoted recklessly in many states.Because it is a cash crop and an industry has been built around it.The option would be to go for jaggery and reduce usage of sugar.But over the years sugar or surcose or sweeteners have become common ingridients in many foods and drinks including biscuits, and soft drinks.There are no easy answers to these issues because life style and food choices are linked with culture and notions of taste,good food etc. The world can save enormous resources even if it reduces meat consumption by 10%. Growing animals for food is an inefficient way of producing food. But that is possible because either the resources are under-priced or subsidised and for factors like pollution and energy consumption are not fully accounted for and the real cost is hidden or not known. That 10% reduction would result in lesser emission of Greenhouse Gases but to suggest vegetarian food as a solution to global warming would be unfashionable because we think that food is a question of personal choice and taste.’I know it is bad but I like meat for its taste’ or ‘I take meat because meat eating is ipart of our food culture’ will be typical answers.
We need slow food type movements and campaigns to reduce consumption of meat and to stop spreading of factory farming.There are vested interests in all these and factory farming is very profitable. Hence working against their interests is not easy.
பர்கரின் உள்ளுறை நீர் 2400 லிட்டர்கள் என்பதில் பசுவுக்கு அளிக்கப்படும் 10,000 கிலோ தீவனத்தை உருவாக்க பயன்படுத்தப்படும் நீரும் அடங்கும். இது கணக்கில் வருவதில்லை. அமெரிக்காவுக்கு பசு இறைச்சி தென்னமெரிக்க நாடுகளிலிருந்தும் மெக்ஸிகோவிலிருந்தும் வருகிறது. அமெரிக்க பெரும் கம்பெனிகள் வாங்கும் இந்த இறைச்சியை உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படும் நீரை அவை கணக்கில் கொள்வது கிடையாது. அமெரிக்க மாட்டிறைச்சி வாழ்க்கை முறையே 1980களில் தென்னமெரிக்கா சந்தித்த மிக மோசமான காட்டழிவுகளுக்கு அவற்றை மேய்ச்சல் நிலங்களாக்குவதற்கு காரணமாக அமைந்தது. இந்த காட்டழிவுகளால் தென்னமெரிக்க நாடுகளுக்கு ஏற்பட்ட நிலத்தடி நீர் இழப்பு மற்றும் பருவநிலை மாற்ற நீர் இழப்பு ஆகியவற்றுக்கான விலை அமெரிக்காவால் அளிக்கப்படவே இல்லை.
அன்புள்ள திரு .அரவிந்தன் அவர்கள் அருமையான கட்டுரையை பதிவு செயிது இருக்கிறார்…விஷயம் ரொம்ப சின்னதுதான் ..நாம் பயன்படுத்தும்போது ஒவொரு துளி நீரையும் ரத்தம் போல் செலவழிக்க வேண்டும் ..என் வீட்டிலேயே எனக்கும் என் குடும்பத்தாருக்கும் பெரிய பிரச்சனை இந்த தண்ணீர் தான் ..நாங்கள் இருந்த இடங்களில் எல்லாம் தண்ணீர் கஷ்டம் அப்பறம் இயற்கை மதிக்க வேண்டும் என்ற எண்ணத்திலும் ,அதிகமாக தண்ணீர் கிடைத்தாலும் சிக்கனமாக பயன்படுத்த ஆரம்பித்தேன்..அவர்கள் சில சமயம் தண்ணீரின் அருமை தெரியாமல் அலட்சியமாகவும் ,சில சமயம் சுத்தம் என்ற பெயரில் அதிகமாகவும்,நான் வீட்டில் இல்லாத போது அதிகமாகவும் பயன் படுத்துவார்கள்..ரொம்ப காலம் போராடி இப்போதுதான் கொஞ்சம் அவர்களுக்கு புரிய வைத்து தண்ணீர் பண்பாட்டை கட்டுக்குள் கொண்டு வர முடிந்தது ….சின்ன வயதிளிருந்தே பிள்ளைகளுக்கு இந்த ஒரு விஷயத்தையாவது புரிய வைக்க வேண்டும் ..இல்லை என்றால் வருங்காலம் மிகவும் மோசம் ஆகிவிடும் …..
தஞ்சை கட்டட கல்லறைகளாக ஆகி வருகிறது …தண்ணீரை பல அடி ஆழ்திளுருந்து நீர்முழுகி மோட்டார்களை வைத்து உறிஞ்சுகிறார்கள் ..இயற்கைக்கு துரோகம் செய்கிறார்கள் ..தன் தாய் மார்பிலிருந்து இயந்தரத்தை வைத்து தாய்பாலை உறிஞ்சு எடுப்பதற்கு சமமாக பூமியை கெடுக்கிறார்கள் …இவர்கள் தன் தலைமுறைகளையே அழிக்கிராரர்கள் …விலங்குளை போல …விழிப்புணர்வு அவசியம் ..தொடரட்டும் உங்கள் பணி ..நன்றியுடன் ஒரு சகோதரன்