பக்தி ஓர் எளிய அறிமுகம் – 2

அடுத்த பகுதிக்கு போகும் முன் பக்தி பற்றி நந்திதா என்பவர் எனக்கு அனுப்பிய மின்ஞ்சல் இது.

வணக்கம்.

தங்களுடைய கட்டுரையைப் படித்தேன். மகிழ்ந்தேன், பக்தி என்பது பக என்ற வேரிலிருந்து பிறப்பது. அதன் பொருள் பிளவு படுதல் என்பதாகும். சில சொற்கள் வடமொழிச் சொற்களாக இருப்பினும் தத்பவம் தத் சமம் என்ற வகையில் தமிழிலும் எடுத்து ஆளப் படும். தன்னுடைய ஆதியஞ்சோதியை அங்கு வைத்து இங்கு பிறக்கும் திருமாலுக்கு பகவான் என்பது அசாதாரணமான பெயர். திருக்குறளிலும் இந்த பக என்ற சொல் கையாளப் பட்டிருக்கிறது (குறள் 889 எட்பகவன்ன சிறுமைத்தே ஆயினும்) வேதத்தின் இலக்கணத்தைத் தமிழ் தான் நெருங்கி வருகிறது, வேதம் ஸ்வரத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதை அனைவரும் அறிவர், ப்லூதம் என்பது வேதத்தில் காணப்படும் அது ஒலியைச் சற்று நீட்டி ஒலிக்க வகை செய்யும், இது வடமொழி என்று கூறப் படும் இன்றைய சமஸ்கிருதத்தில் கையாளப் படுவதில்லை, (வடு+அல் – மொழி-குற்றமற்ற மொழி என்பது வேதத்தைத்தான் குறிக்கும் என்பது என் கருத்து) வடல் மொழி வட மொழி என்று சிதைந்து பல்வேறு வாதங்களுக்கு இடம் கொடுத்து விட்டது, அந்தப் ப்லூதம் தமிழில் அளபெடை என்று கையாளப் படுவதும் அனைவரும் அறிந்ததே, காரணம் மாத்திரைக் குறைவு ஏற்படக் கூடாது என்பதற்காகவே.

பக என்ற சொல் விகாரமடைந்து பகுத்தல் ( வ ப யோர் அபேத: என்ற பாணினி சூத்திரத்தின் படி வகுத்தல் என்றாயிற்று) பக்தி என்பது பத்தி என்று கையாளப்படுகின்றது, வைணவப் பெரியாரான வேதாந்த தேசிகர் என்பாரும் பத்தி முதலாமவற்றில் பதியெனக்குக் கூடாமல் என்று கையாண்டுள்ளார்.

உலக பந்தங்களிலிருந்து விடுபட்டு பிளவு பட்டுப் பரம்பொருளுடன் ஒன்று படுவதற்கு பக்தி என்ற சொல் கையாளப் பட்டு வருகிறது.

அன்புடன்
நந்திதா

அழகான விளக்கம் சொன்ன நந்திதாவிற்கு நன்றிகள் சொல்லிவிட்டு மேலும் தொடரலாம்.

கேள்வி கேட்காத திட பக்தி அல்லது மஹா விசுவாசம்தான் முதல் படி என்று போன பகுதியில் பார்த்தோம்.

narasimha1எல்லோருக்கும் தெரிந்த பிரகலாதன் கதையைப் பார்க்கலாம். பிரகலாதன் “ஓம் நமோ நாராயணாய ….” என்ற நாமத்தைச் சொன்னதால் அவன் தந்தை ஹிரணியன் பல தண்டனைகளை அவனுக்குக் கொடுத்தான். எதுவுமே பிரகலாதனிடம் பலிக்காதபோது சோர்ந்து, “அப்படியானால் உன் நாராயணன் எங்கே இருக்கிறான்? கூப்பிடு அவனை” என்று ஹிரணியன் சொல்ல, பிரகலாதன் ”அவன் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்” என்று பதில் சொன்னது வரை பலருக்குத் தெரியும். ஆனால் இந்த இடத்தில் அதிகம் பதட்டமானது யார் தெரியுமா? பிரகலாதனோ, ஹிரணியனோ இல்லை; அது மஹாவிஷ்ணுவான நரசிம்மன்தான். அந்த ஒரு நொடி நரசிம்மன் ஹிரணியன் சொன்ன தூணில், தான் வந்துவிடவேண்டுமே என்று பிரகலாதனுக்கு இருந்த திட பக்தி/விசுவாசம் பெருமாளையே கலங்கடித்தது. அந்த சமயத்தில் பெருமாளுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் எல்லா இடத்திலும் வியாபித்து இருந்தான் என்று பெரியவாச்சான் பிள்ளை உரையில் இருப்பதாக முன்பு யாரோ சொல்லக்கேட்டிருக்கிறேன்.

விஷ்ணு புராணத்தில் பிரகலாதனை ஹிரணியன் மலையிலிருந்து உருட்டி விடும் போது தன் இரண்டு கைகளாலும் நெஞ்சை கெட்டியாக பிடித்துக்கொண்டானாம். ஏன் என்றால் அவன் நெஞ்சில் நாராயணன் குடி கொண்டு இருக்கிறார். அவருக்கு ஏதாவது அடிபட்டுவிட கூடாது என்று. அன்பு!

பக்திக்கு அன்பு தான் முக்கியமானது. நாம் எவ்வளவு பெரியவனாக ஆனாலும் நம் மீது தாய் தந்தையருக்கு அன்பு மாறாது. அதை அடுத்த முறை நீங்கள் கவனிக்கலாம். அவர்கள் நெஞ்சில் நீங்கள் எப்போதும் இருக்கிறீர்கள்!

பெரியாழ்வார் தனது திருமொழியில் சொல்லுவதை பாருங்கள்.

மார்வம் என்பதோர் கோயில் அமைத்து
மாதவன் என்னும் தெய்வத்தை நாட்டி
ஆர்வம் என்பதோர் பூஇட வல்லார்க்கு
அரவ தண்டத்தில் உய்யலும் ஆமே
(பெரியாழ்வார் திருமொழி 4-5-3)

இதில் பெரியாழ்வார் “நெஞ்சில் (மார்வம்) பெருமாளுக்கு கோயில் அமைத்து, அதில் மாதவன் என்ற தெய்வத்தை வைத்து அன்பு (ஆர்வம்) என்ற பூவை சேர்த்தால் யமனின் (அரவதண்டம்) தண்டனையிலிருந்து தப்பித்து பிழைக்காலாம் (உய்யல்)” என்கிறார்.

பக்திக்கு அன்பான நெஞ்சே கோயில்!

ஒரு அழகான ரோஜாவைப் பார்க்கிறீர்கள். உங்கள் மனதில் ஒரு விதமான மகிழ்ச்சி வருகிறது இல்லையா? நீங்கள் அந்த ரோஜாவிடம் ஏதாவது கேட்கிறீர்களா அல்லது அந்த ரோஜாதான் உங்களிடம் எதாவது கேட்கிறதா? இல்லையே!

இரவின் அமைதியில் வீட்டின் பால்கனியில் உட்கார்ந்திருக்கும்போது தூரத்தில் ஒரு ரம்மியமான வயலின் இசையோ, வீணை இசையோ கேட்கிறது. மனதிற்கு ரம்யமாக இருக்கிறது. அந்த இசையிடம் ஏதாவது கேட்கிறீர்களா? அல்லது அந்த இசை உங்களிடம் ஏதாவது கேட்கிறதா? இல்லையே!

அது போலதான் பக்தியும். அது உணர்வுபூர்வமானது, உங்களுக்குப் பூவைப் பார்க்கும்போதும், இசையைக் கேட்கும்போதும் ஏற்படும் உணர்வு ஏற்பட வேண்டும். இன்று முடியாவிட்டாலும் என்றாவது வரும் என்ற நம்பிக்கை வேண்டும்.

sri_chaitanya_devaபழைய சைதன்யர் கதையைப் பார்க்கலாம்.

சைதன்யர் ஒரு யாத்திரை சென்றபோது வழியில் ஒருவன் கீதை படித்துக்கொண்டு இருந்தான். சற்று தூரத்தில் மற்றொருவன் கீதையை கேட்டுக்கொண்டு தேம்பித் தேம்பி அழுதுகொண்டு இருந்தான். சைதன்யர் அழுதுகொண்டு இருந்தவனிடம் சென்று, “கீதை உனக்குப் புரிகிறதா? ஏன் இப்படி அழுகிறாய்?” என்று கேட்டார். அதற்கு அவன், ”எனக்கு சுத்தமாகப் புரியவில்லை. அவன் படிப்பது என்ன என்று கூட தெரியாது,” என்றான். “பின் ஏன் அழுகிறாய்?” என்று சைதன்யர் கேட்டார். அதற்கு அவன் ”அர்ஜுனனின் தேர் தெரிகிறது, அதன் முன்னால் கிருஷ்ணர் தெரிகிறார். அவர்கள் ஏதோ பேசிக்கொண்டு இருக்கிறார்கள்; அவர்களைக் கண்ட சந்தோஷத்தில் அழுகிறேன்,” என்று கூறினான். உண்மையான பக்தி வார்த்தை ஜாலங்களிலும் புறச் சின்னங்களிலும் வருவதில்லை. உணர்வுகளில் வரும்போதே பலவற்றை உணரலாம்.

அடுத்த முறை, ஏதாவது ஒரு சிறு குழந்தையைக் கவனியுங்கள். அதை விட்டுவிட்டு அதன் அம்மா அடுத்த அறைக்குச் சென்றால்கூட, அம்மாவைத் தேடிக்கொண்டு ஏங்கித் தவிக்கும். ஏதாவது பயம், ஆபத்து என்றால் உடனே அம்மாவிடம் போய் அண்டிக்கொள்ளும். தாயிடம் அதற்கு இருப்பது: கேள்வி கேட்காத நம்பிக்கை. அதே போன்ற நம்பிக்கைதான் நமக்குப் பெருமாளிடம் வரவேண்டும்.

draupadiதிரெளபதியை துச்சாதனன் மானபங்கம் செய்தபோது, திரௌபதியின் வெகுநேர இறைஞ்சலுக்குப் பின்தான் கிருஷ்ணர் புடைவை தந்தார். பின்பு ஒருநாள் கிருஷ்ணரிடம் துரௌபதி, “நான் வேண்டியவுடன் ஏன் உடனே வரவில்லை?” என்று கேட்கிறாள். அதற்கு கிருஷ்ணர், “துச்சாதனன் புடைவையை இழுத்தபோது நீயும் உன் இரண்டு கைகளாலும் உன் புடவையை இறுகப் பற்றியபடிதானே என்னை அழைத்தாய். நீயே உன்னைக் காத்துக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை உனக்கு இருந்ததால் நான் வரவில்லை. பின் ஒரு கையினால் புடவையை பிடித்துக்கொண்டு ஒரு கையினால் என்னை அழைத்தாய். அப்பொழுதும் முழு நம்பிக்கை என் மீது உனக்கு வரவில்லை. அதன்பின் உன்னால் முடியாதென முடிவுசெய்து, என் மீது முழு நம்பிக்கை வைத்து புடைவையைப் பற்றிக் கொண்டிருப்பதை விட்டுவிட்டு, இரு கைகளையும் தூக்கி என்னை அழைக்கவே நான் வந்தேன்” என்றாராம். குழந்தைக்குத் தாயிடம் உள்ள நம்பிக்கை மாதிரி பக்திக்கு முழுமையான நம்பிக்கை வேண்டும்

ஆனால் இன்று கடவுள் பக்தியை வியாபாரப் பொருளாக ஆக்கிவிட்டார்கள். பக்தி ஆடம்பரமாகிவிட்டது.

கடவுளுக்கு அன்று பிறந்தநாள். அரசியல் கூட்டம் போல எங்கும் மைக் செட், தோரணம், கட்-அவுட் என்று அமர்க்களப்பட்டது. வயதான ஒருவர் அங்கே வந்தார். அவருக்கு ஒன்றும் புரியவில்லை. வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார். பக்கத்தில் இருந்தவரிடம் என்ன என்று விசாரித்தார் “கடவுளுக்கு இன்று பிறந்தநாள். அதற்காக ஊர்வலம் நடக்கிறது” என்றார் மற்றொருவர்.

முதலில் ஒரு மத குரு வந்தார். அவரைத் தொடர்ந்து பெரிய கூட்டம் கோஷம் போட்டுக்கொண்டு பின்னால் சென்றது. “யார் இவர் என்று அந்த வயதானவர் கேட்க, பக்கதில் இருந்தவர், இவர் தான்.. இன்னார் என்று சொல்லிவிட்டு, அவர் வழியைப் பின்பற்றுகிறவர்கள் அவர்களுக்குப் பின் செல்கிறார்கள் என்றார். அடுத்தபடி இன்னொரு மத குரு வந்தார் அவருக்குப் பின்னும் ஒரு பெரும் கூட்டம் சென்றது. இப்படி வரிசையாக மத குருக்கள் சென்றார்கள். அவர்களுக்கு பின் கூட்டமும் சென்றது. கடைசியாக ஒரு வயதானவர் கூட்டத்துக்குப் பின் சென்றார். ஆனால் அவருக்குப் பின்னால் யாரும் இல்லை. பார்க்கப் பரிதாபமாக இருந்தார். இவர் யார் என்று வயதானவர் விசாரிக்க, பக்கத்தில் இருந்தவர் தெரியாது என்று பதில் சொன்னார். சரி அவரிடமே கேட்டுவிடலாம் என்று அவரைக் கூப்பிட்டு “நீங்கள் யார் ?” என்று கேட்டார்கள். “நான்தான் கடவுள், எனக்குத்தான் இன்று பிறந்தநாள்” என்று பதில் வந்தது.

கடவுளைப் பின்பற்றுவதாக நினைக்கிறார்கள், ஆனால் பாவம் கடவுள் பின்னால்தான் யாரும் இல்லை! இன்று மக்கள் எல்லோரும் பக்தி மார்க்கத்தில் போவதாக நினைத்துக்கொண்டு இப்படித்தான் வழி தவறிப் போய்க்கொண்டு இருக்கிறார்கள்.

சங்கரர் பாடிய பஜகோவிந்தம் 14ஆம் பாடல்: (ராஜாஜி தமிழில் எழுதி விளக்கமும் அளித்துள்ளதை இங்கே தருகிறேன்)

செம்மண் துணியும் முழுத்தலை மொட்டையும்
அம்மணமும் நீள் சடையும் பிறவும்
சண்டாள வயிற்றுக்காம் வேஷம் பலவாம்
கண்ணாற கண்டும் உணரானே மூடன்

thiruvalluvar“துறவு என்பது ஒரு வெளிவேஷமல்ல அது உள்ளத்தில் நிறைவேற வேண்டிய ஒரு வெற்றியாகும். ஆயினும் நாம் உலகத்தில் பார்ப்பதென்ன? மழித்தலும் நீட்டலும் மற்ற வெளிவேஷங்கள் தான். உள்ளத்தில் எரியும் ஆசைகளைத் தணிக்காமல் இந்த வெளிவேஷங்களினால் என்ன பயன்? இந்த மாதிரி துறவு வேஷங்கள் வயிற்றுப்பாடாய் முடிகின்றன” என்று சொல்லுகிறார் சங்கரர்.

“மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின்

என்கிறது குறள்.

உலகம் பழிக்கும் செயல்களைத் துறக்காமல், ஒரு துறவி தனது தலையை மொட்டையடித்துக் கொண்டோ, சடாமுடி வளர்த்துக் கொண்டோ கோலத்தை மட்டும் மாற்றிக் கொள்வது ஒரு ஏமாற்று வித்தையே ஆகும்.

இன்று துறவுக் கோலம் பூண்டுவிட்டபின், பணம், அரசியல், செல்வாக்கு, அவைகளால் கிடைத்த புகழ் போன்றவைகளின் வேட்டையில் ஈடுபடும் ஒரு சிலரையும் நாம் பார்க்கிறோம். இவர்களை நாம் அடையாளம் காண்பது மிக சுலபம்!
(தொடரும்)

10 Replies to “பக்தி ஓர் எளிய அறிமுகம் – 2”

 1. ‘பக’ என்பது வேர்ச்சொல் ஆகாது. அது அகரவீற்று செய வென்னெச்சம். ‘பகு’ என்னும் வேர்ச்சொல்லே பிள என்னும் பொருள்தரும்.
  வட+அல் தமிழ்ச்சொல் என்றால் உடம்படுமெய் பெற்று வடவல் என அரவேண்டும். வடமொழி தீர்க்கசந்தி என்றால் வடால் என வரவேண்டும். வடு என்பதும் தமிழ்ச்சொல் அல் என்பதும் தமிழ்ச்சொல். தமிழ்ச்சொல்லுக்கு வடமொழி இலக்கணம் கூறப்படுவதில்லை. வேதத்தின் இலக்கண்த்தைத் தமிழ் நெருங்கி வருகின்றது என்பது சரியல்ல. தமிழுக்கு இலக்கணம் இல்லையா? தமிழுக்கும் வடமொழிக்கும் பொதுவான இலக்கணம் பிரயோக விவேகம் எனும் நூல் உள்ளது.
  குற்றம் நீங்கிய எனும் பொருள்தரும் ‘வடல்’ பிறிதின் விசேடணம் நீக்கியதா, பிறிதின் விசேடணம் நீங்கியதா ?
  ஐசுவரியம் , திரு, வீரியம் வைராக்கியம், புகழ், ஞானம் ஆகிய ஆறு குணங்கள் ‘பகம்’ எனப்படும். நிகண்டு அமரஸிம்ஹம் “பகச் ஸ்ரீகாம மாஹாத்மிய வீர்யயத் நார்க்க கீர்த்திஷு” என்று நாநார்த்த வர்க்கத்தில் கூறியபடி ஸ்ரீ, காமம், மாஹாத்மியம், வீர்யம், ப்ரயத்னம் அர்க்கன் கீர்த்தி என்பவை பகம் எனப்படும். இந்த ஆறுகுணங்களையுடையவன் பகவான். பகவான் எனுஞ்சொல் பகவன் என்றும் வழங்கும். அன், ஆன் ஆண்பால் விகுதி.
  பத்தி என்பது பெயர்ச்சொல். அன்பு என்று பொருள்படும். பக்தி என்ற வடசொல்லைப் பத்தி என்று தமிழில் ஆயிற்று என்று கூறவேண்டுவதில்லை. இரண்டற்கும் அடிச்சொல் வேராகலின்.

  பத்தியின்(அன்பின்) பிளவு படுதல் அல்ல. பரம்பொருளுடன்
  ஒன்றுபடுதல்.
  “மார்வம் என்பதோர் கோயில் அமைத்து
  மாதவன் என்னும் தெய்வத்தை நாட்டி
  ஆர்வம் என்பதோர் பூஇட வல்லார்க்கு
  அரவ தண்டத்தில் உய்யலும் ஆமே”

  ஆழ்வார் அருளிய திருவாக்கில் காணப்படும் ஆர்வந்தான் பத்தி. அன்பு, பத்தி, காதல் என்பன ஒருபொருட் கிளவி.
  ஆழ்வாரின் அருள்மொழிக்கு நிகரான, சைவதிராவிட வேதம்,
  ” திருகு சிந்தையைத் தீர்த்து செம்மைசெய்து
  பருகி உறலைப் பற்றிப் பதம் அறிந்து
  உருகி நைபவர்க்கு ஊனம் ஒன்றின்றியே
  அருகு நின்றிடும் ஆனைக்க அண்ணலே”
  உள்ளம் உருகி நிற்றலே பத்தி. அதுவே ஆர்வம். மர்ர்வத்தில்(உள்ளத்தில்) மாதவனை நாட்டினால்(பதித்தால்) உள்ளம் உருகிடும். அன்பு (பத்தி) ஊறும் . அன்புடைய நெஞ்சில் மாதவன் நிற்றலால் அங்கு தன்முனைப்பு இல்லை. மாதவனே உள்ளான். அதனால் அரவதண்டம் நிகழ்வதில்லை. மார்க்கண்டேயன் கதை போல.

 2. Dear Desikan and fellow readers,
  This is a nice article. I would like to add a bit about maha-vishvasam or unquestioned bhakthi towards Perumal from a conversation I had recently with Dr. VenkatRangan on Pomona NewYork Ranganatha Temple.
  Whenever Kalyana Utsavam is held in this temple, Dr. Rangan used to give a talk about the significance of Kalyana Utsavam, why Kanyadhan is significant among all dhana, proper method of seeking bride for marriage from groom’s side and how performing this utsavam relieves 21 generation’s paaa (the doer’s papa and also his previous 10 and future 10 generations). In this context, he talked how inadvertently Yudhistra performed a paapa in the Kurukshetra battlefield when he said Ashwathama hathaha, because of which his guru Drona got killed.
  I had a doubt for few months on this. Actually Yudhistra would have said Ashwathama hathaha and then kunjaraha meaning elephant in a lower tone. Actually he didnt tell a lie. So why he should be punished on his death by visiting hell for a muhoortha period. Dr. Rengan gave an answer – Yudhistra had said this only on Krishna’s advise. But he still had a hesitation in his mind if he should really tell a lie. His mind was wavering. To remove his delicate situation, Bheema comes forward and killed an elephant named Ashwathama. So because Yudhistra didnt have full vishwasam (Belief) in Krishna’s word, he was inadvertently responsible for the death of an elephant and that was the reason for his visiting hell.
  If I am not considered making a lengthy reply, I had another query to Dr. Rengan that is sligtly out of context to this blog. Ashwathama was one of the 7 chiranjeevi’s like Hanumar, Markandeya, Mahabhali, Vibheeshana and Parasurama. If he is so, how come Drona accepted Ashwathama is dead. Dr. Rengan replied – It is due to the credibility for the words of Yudhistra. Had Bheema or Sahadeva had said so, he wouldnt have taken heed. But when Yudhistra himself said it he believed it and laid down his weapons and got killed. Even if Yudhistra didnt tell a lie, his word had caused the death of Drona. This is also a Paapa.

 3. பக்தி கட்டுரையும் அதைத் தொடரும் பின்னூட்டங்களும் அருமை தேசிகன்.

 4. நல்ல கட்டுரை. வாழ்த்துக்கள். பணி தொடரட்டும்.
  முனைவர் குறிப்பிட்டதுபோல் சொற்கள் பற்றிய சில ஊகங்கள் சரியாக இல்லாவிட்டாலும், மற்றது தேவையான கருத்துக்களே. தாங்கள் சொன்னது:
  “….அது உணர்வுபூர்வமானது, உங்களுக்குப் பூவைப் பார்க்கும்போதும், இசையைக் கேட்கும்போதும் ஏற்படும் உணர்வு ஏற்பட வேண்டும். இன்று முடியாவிட்டாலும் என்றாவது வரும் என்ற நம்பிக்கை வேண்டும்…..”

  முன்னமொருமுறை சுவாமி சின்மயானந்தர் கூறியதை நினைவு கூர்கிறேன். “..அப்படி இயற்கையில் லயித்து இருக்கும்போது உள்ளத்தால் உணரப்படும் ஓர் அமைதியும், இன்பமும் வர முக்கியக் காரணம்: அச் சமயம் நமக்கு ஓர் ஆசையோ, எதிர்பார்ப்போ கிடையாது- lack of desire. நாம் கேட்கும் பாட்டில் ஓர் அபஸ்வரம் வந்தால்? நமது இசை ஞானத்தால் நமக்குள் ஒரு அசைவு ஏற்படும் அல்லவா? ஆக எதிர்பார்ப்பு இல்லாது இருக்கும்போது நாம் பூர்ண சரணாகதி கொள்கிறோம். அதுவே நமக்கு ஒரு இன்பம் தருகிறது. இது சிறிய இன்பம் என்றால் அவனிலே ஐக்கியமாவதே பேரின்பம்.”

  அதை உணர்வதே எந்த சீவ ராசியின் குறிக்கோள் ஆகும். முதலில் அது தெரிய வேண்டும். அதற்கே புறத்தில் வணங்குவது. பின் அதை உணரவேண்டும். அதுவே அகத்தில் வணங்கல்.

  S Raman

 5. பக்தி என்னும் சொல்லின் வேர்ச் சொல்லுக்கு எனது சிறு பங்களிப்பு:-

  நந்திதா கூறுவது போல், பக்தி என்னும் சம்ஸ்க்ருத சொல் ‘பிளவு படுதல்’ எனப்பொருள் படும் ‘பஜ்’ என்னும் வேர்ச் சொல்லிலிருந்துதான் உருவானது. இந்த வேர்ச் சொல்லுக்கு ‘பகிர்தல்’ அல்லது ‘பகிர்ந்து கொள்ளுதல்’ என்று இன்னொரு பொருளும் உண்டு. ( bhaj = divide, share)
  இந்த வேர்ச் சொல், பக்த, பக்தும், பக்த்வா, பாஜிதும், பஜனைய, பக்தி என்றெல்லாம் உருவாகிறது.

  பக்தி என்னும் சொல், எவ்வாறு பிளவு படுத்தல் அல்லது பகிர்தல் என்ற derivation -இல் வந்தது என்று எனக்குத் தெரியாது. ஆனால், இந்தப் பொருளைத் தரும் வகையில், பக்தி என்னும் சொல் வைணவ ஆச்சார்யர்கள், மற்றும் ஆழ்வார்களால் கையாளப் பட்டிருக்கின்றது என்று சொல்லலாம்.

  பக்தி என்னும் சொல்லுக்கு ராமானுஜர் கூறும் இலக்கணம் ‘ தைல தாராவது’ – அதாவது ‘எண்ணெய் பொழிவதைப் போல’ என்கிறார். எண்ணெயை ஒரு பாத்திரத்திலிருந்து இன்னொரு பாத்திரத்திற்கு மாற்றும்போது, இடைவிடாது, பிசிறில்லாமல், இரண்டு பாத்திரத்தையும் ஓட்ட வைத்தாற்போல விழும். பக்தியும் அதைப் போன்றதுதான் என்கிறார். எண்ணெய் முழுவதும் மற்றொரு பாத்திரத்தைச் சேர்ந்தவுடன், அந்த தாரை அப்படியே பிளவு பட்டு விடும். மிச்ச சொச்சம் என்று முதல் பாத்திரத்திலிருந்து சொட்டிக் கொண்டிருக்காது.

  பக்தியும், பக்தனிடமிருந்து கிளம்பி இடை விடாது ஒட்டிக்கொள்ளும் எண்ணையைப் போல இறைவனை அடைந்து, பக்தனையும், இறைவனையும் இணைக்கும் பொழிவாக இருக்க வேண்டும். இரண்டு பாத்திரங்களுக்கும் பாலமாக இருக்கும் எண்ணைப் பொழிவைப்போல, பக்தன், இறைவன் இருவருக்கும் இடையே இருப்பதால், அது ‘பகிர்வு’ என்ற பொருளில் பயன் படுத்தப்பட்டிருக்கலாம்.

  ஆனால் இந்தப் பகிர்வு எவ்வளவு காலம் தான் இருப்பது? இப்படி ஓட்ட வைக்கும் எண்ணைப் பொழிவாக எவ்வளவு காலம் இருப்பது? ஒரு காலக் கட்டத்தில் எண்ணெய் முழுவதும், இறைவன் என்ற பாத்திரத்தை அடைந்து விட வேண்டாமோ? அபப்டி அடையும்போது பிளவு வரவேண்டும். பக்தன் என்னும் பாத்திரத்திலிருந்து பிளவு பட்டு எண்ணெய் தாரை முழுவதும் இறைவன் என்னும் பாத்திரத்தை அடைய வேண்டும். இந்த நிலையைப் ‘பரம பக்தி’ என்று ஆன்றோர் கூறுகின்றனர்.

  அது எவ்வாறு என்றால், பக்தி என்பது மூன்று அம்சங்களை உடையது. கீதையில் அர்ஜுனன் இந்த மூன்று அம்ச ‘பர பக்தி. பர ஞான, பரம பக்தி’ யைத் தனக்கு அருளுமாறு கண்ணனை வேண்டுகின்றான். நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழி ஆயிரமும் இந்த மூன்று அம்சங்களைக் கொண்டவை.

  திருவாய்மொழிஆயிரத்தில், முதல் 980 பாடல்கள் வரை பர பக்தியைப் பறை சாற்றுபவை.

  980 க்கு மேல் 990 வரை ஆழ்வார் பரம பதம் காணும் காட்சி சொல்லப் படுகிறது. அந்தப் பத்துப் பாடல்கள் பர ஞானத்தைச் சொல்பவை.

  990 க்கு மேல் 1000 -ஆவது பாட்டு வரை ‘முடிந்த அவா’ – அதாவது பரம பக்தி – எண்ணெய் முழுவதும், இறைவன் என்னும் பாத்திரத்தை அடைந்து விட்ட நிலை – அதாவது முக்தி நிலை அல்லது பரம பதம் அடைந்த நிலை.

  கடைசி 10 பாடல்கள் முடிந்த பிறகு ஆழ்வார் கூறுவதன் மூலம் இது நிரூபணமாகிறது.

  10-10 10 இல் ‘அவாவில் அந்தாதிகளால் இவை ஆயிரமும் ..’ என்று
  நம்மாழ்வார் சொல்வது பர பக்தி ஆகும்.
  அவா என்றால் பர பக்தி.

  அப்பாடலின் கடைசி வரியில், “முடிந்த அவாவில் அந்தாதி இப் -பத்து ”
  என்று ‘முடிந்த அவா’ என்று சொல்வது ‘பரம பக்தியை என்று மணவாள மாமுனிகள் உள்ளிட்ட பெரியோர்கள் கூறியுள்ளனர்.

  இவற்றைப் புரிந்து கொள்ள ‘ஆச்சார்யா ஹ்ருதயம்’ 188 – ஆம் சூரணை உதவுகிறது.
  “ நீர், பால், நெய், அமுதாய் நிரம்பின ஏரி நெளிக்குமாப்போலே” எனத் தொடங்கும் வரியில் இவ்வாறு விளக்கப்படுகிறது.

  ஒரு ஏரியில் உள்ள நீரானது, பாலாகி, பிறகு நெய்யாகி, பிறகு அமிழ்தாகிப் பொங்கி, கரையை உடைத்து வெளியே வருதல் போல, பர பக்தி அதிகரித்து, பரம பக்தியாக அவனை அடையும். வெள்ளமாகக் கரை உடைத்து வரும். இந்த பரம பக்தியை ‘முடிந்த அவா’ என்று ஆழ்வார் கூறுகிறார். .

  நீர் = ஞானம்
  பால் = பர பக்தி (அவா)
  நெய் = பர ஞானம்
  அமிழ்து = பரம பக்தி (முடிந்த அவா)

  முடிந்த அவா என்னும் பரம பக்தி நிலை, ‘பிளவுபட்ட ‘ எண்ணைப் பொழிவு. அதனால் பக்தி என்று சொல்லப்பட்டிருக்கலாம்.

 6. மிக அருமையானக் கட்டுரை..

  திருச்சிற்றம்பலம்.

 7. அஃதென்ன தமிழ்ஹிந்து?இதுவரை யாராவது அறிந்திருந்தால்
  சொல்லுங்கள்! பின் தெலுங்குஹிந்து கன்னடஹிந்து ஹிந்திஹிந்து
  என்று யாரவது குழப்புவதற்குமுன்…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *