நமது பண்பாட்டின் ஊற்றுமுகம் ராமாயணம்

புகழ்பெற்ற ஆங்கிலக் கவிஞரும், மொழிபெயர்ப்பாளருமான ஏ.கே.ராமானுஜன் தனது ஒரு நூலில் குறிப்பிடும் ஒரு சம்பவம். கர்நாடகத்தில் பல பகுதிகளிலும் நாட்டார் மரபுகளில் வாய்மொழியாகவே புழங்கும் ராமாயணக் கதைகளை அவர் தொகுத்துக் கொண்டிருந்தார். அதில் ஒரு கதையில் இப்படி ஒரு பிரசங்கம். ராமன் வனவாசம் ஏற்றுக்கொண்டு காட்டுக்குக் கிளம்பும் நேரம்; சீதை தானும் வருவேன் என்று அடம் பிடிக்கிறாள். காட்டில் என்னவெல்லாம் கஷ்டங்கள் உண்டு என்று எடுத்துச் சொல்லி ராமன் அவளைத் தடுக்க முயல்கிறான்.

”கரும்பு முறித்தாற் போல சொல்லல் ஆச்சுதோ – ஒரு
காலும் பிரியேன் என்று சொன்ன சொல்லும் போச்சுதோ”

என்று அருணாசலக் கவிராயர் பாட்டில் வருவது போல, சீதை அவற்றையெல்லாம் கேட்டுக் கொண்டும் தன் பேச்சிலேயே நிற்கிறாள். ராமன் அவளுக்கு மேலும் மேலும் எடுத்துச் சொல்கிறான். அப்போது சீதை இறுதியாக “எனக்குத் தெரிந்த எல்லா ராமாயணத்திலும், ராமனோடு கூடவே சீதையும் காட்டுக்குப் போவாள். எனவே, எப்படி நீங்கள் என்னைத் தடுக்க முடியும்?”  என்று கேட்கிறாளாம்!

நமது பண்பாட்டில், நெடுங்காலம் முதலே ராமாயணம் என்கிற மாபெரும் காவியம் இங்ஙனம் தனக்குத் தானே ஆதாரமாகும் தன்மை (intertextuality) கொண்டிருக்கிறது  என்று ராமானுஜன் விளக்கிச் செல்கிறார்.

*  * * * *

valmiki_smஅன்பில் கட்டுண்ட அன்றில் பறவைகளின் துயரத்தைக் கண்டு மனமுருகிய வால்மீகி என்கிற மகரிஷியின், மகா கவிஞனின் வாக்கிலிருந்து மானிட குலத்தின் ஆதிகாவியம் நம் மண்ணில் உதித்தது.  பின்னர் அந்த தெய்வீகக் கவிதை நம் நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும், பல்வேறு மகா கவிகளாலும், மக்களாலும் பல்வேறு விதங்களில் மீண்டும் மீண்டும் பாடப் பட்டுள்ளது.

”இந்தியாவில் ஏராளமான வேறுபட்ட மொழிகள் பேசப் படுகின்றன. ஆனால் எல்லாருக்கும் புரியக் கூடிய இரண்டு மொழிகள் உண்டு – அவை ராமாயணமும், மகாபாரதமும் ஆகும்” என்று கன்னட இலக்கிய எழுத்தாளர் யூ.ஆர்.அனந்தமூர்த்தி ஒரு கட்டுரையில் சொல்வார். எவ்வளவு உண்மையான விஷயம்!  கவிச்சக்கரவர்த்தி கம்பன்  தமிழ் மொழியில் தனது  மகோன்னத பேரிலக்கியமான கம்பராமாயணத்தை இயற்றினான், ஆனால் அதற்கு வெகுகாலம் முன்பே தமிழகத்தில் ராமகாதை வேரூன்றியிருந்தது. பெரும்பாலான இந்தியமொழிகளின் இலக்கிய வரலாறு என்பதே அம்மொழிகளில் எழுதப் பட்ட ராமாயண நூலில் தான் தொடங்குகிறது. மலையாளத்தில் துஞ்சத்து எழுத்தச்சனும், அஸ்ஸாமிய மொழியில் மாதவ கந்தாலியும், வங்க மொழியில் கிருத்திவாசரும் எழுதிய ராமாயண காவியங்களும்,  தெலுங்கின் மொல்ல ராமாயணம், கன்னட தொரவே ராமாயணம் ஆகியவையும் இவ்வகையிலானவை.  பண்டிதர்களின் சம்ஸ்கிருத மொழியை விடுத்து, பொதுமக்களின் “அவதீ” மொழியில் பக்திரசம் ததும்பும் ராமசரிதமானஸ் என்ற காவியத்தை துளசிதாசர் எழுதினார்; அதற்குப் பின்னர் தான் இந்தப் பேச்சுமொழி வளர்ச்சி பெற்று, இன்று நாம் கச்சிதமான வடிவில் காணும் ஹிந்தி மொழியாயிற்று.

கம்பராமாயணத்தின்  பாயிரப் பாடல் ஒன்று மொழிகளை இணைக்கும் இராமகாதையின் இந்தப் பாங்கினை அழகாகக் கூறுகிறது –

வடகலை, தென்கலை, வடுகு, கன்னடம்,
இடம் உள பாடை யாதுஒன்றின் ஆயினும்,
திடம் உள ரகு குலத்து இராமன் தன் கதை
அடைவுடன் கேட்பவர் அமரர் ஆவரே

(வடகலை – சம்ஸ்கிருதம், தென்கலை – தமிழ், வடுகு – தெலுங்கு, பாடை – பாஷை, அடைவுடன் – பக்தியுடன்)

இந்திய தேசிய உருவாக்கத்தில் ராமாயணத்தின் பங்கு மகத்தானது. அயோத்தியையும், ராமேஸ்வரத்தையும், இலங்கையையும், கங்கையையும், கோதாவரியையும் உணர்வுபூர்வமாக இணைக்கும் சரடு ராமாயணத்தில் உள்ளது.  இந்தியப் பண்பாட்டின் அடிநாதமான குரல் என்று சொல்லத் தக்க ஒன்று இருக்குமானால் அது ராமாயணம் தான்.

இன்றைய இந்தியாவிற்கு வெளியே, நேபாளம், இலங்கை, தாய்லாந்து, கம்போடியா, மலேசியா, இந்தோனேசியா என்று ஆசியக் கண்டம் முழுவதும் ராமகாதை பரவியுள்ளது. ராமகாதை பரவிய ஒவ்வொரு பகுதியிலும்  வாழும் கலாசாரத்தின் குறியீடாகவும், எண்ணற்ற பழம்பெரும் கலை வடிவங்களின் அங்கமாகவும் உள்ளது. அது மட்டுமல்ல, வாழ்க்கை நெறிகளை உணர்த்தும் அற நூலாகவும், வழிபாட்டுக்குரிய புனித நூலாகவும் உள்ளது. நூற்றாண்டுகளாக ஆபிரகாமிய மதங்கள் இந்தப் பகுதிகளை ஆக்கிரமித்திருந்த போதிலும், இந்து, பௌத்த மத அடையாளங்கள் தென்கிழக்கு ஆசியாவின் பல பகுதிகளில் ஒரேயடியாக மறைந்து விட்ட போதும், இன்னும் ராமாயணம் மக்களின் வாழ்வில் ஒரு அங்கமாக இருக்கிறது என்பது சிலிர்ப்பூட்டும் விஷயம்!

பார்க்க: ஏழ்கடல் சூழ் தீவுகளில் இராமன் புகழ்!

*  * * * *

சென்ற நூற்றாண்டின் இந்திய தேசிய மறுமலர்ச்சியின் நாயகர்கள் ராமகாதையையும், அதன் நாயகர்களையும் தேசியப் பெருமிதத்தின் குறியீடுகளாகவே கண்டனர்.

முன்னை இலங்கை அரக்கர் அழிய
முடித்தவில் யாருடை வில்? – எங்கள்
அன்னை பயங்கரி பாரததேவி நல்
ஆரியராணியின் வில்.

இந்திர சித்தன் இரண்டு துண்டாக
எடுத்தவில் யாருடை வில்?-எங்கள்
மந்திரத் தெய்வதம் பாரத ராணி
வயிரவி தன்னுடை வில்

என்று மகாகவி பாரதி முழங்கினார்.

சுவாமி விவேகானந்தர் சென்னையில் நிகழ்த்திய இந்தியப் பெரியோர்கள் (The Sages of India) என்ற உத்வேகமூட்டும் உரையில் கூறுகிறார் –

sita_agnipariksha”ராமன் முற்காலத்து வீரம் நிறைந்த மக்களுக்கு லட்சியமாய், உண்மைக்கும் ஒழுக்கத்திற்கும் உறைவிடமாய், ஒரு லட்சியமான புத்திரனாயும், கணவனாயும், அரசனாயும் திகழ்வதை நாம் ராமாயணத்தில் காண்கிறோம். மிகத் தெளிவாகவும், சுத்தமாகவும், அழகாகவும், எளிமையாகவும் உள்ள மொழியில் ராமனுடைய சரித்திரம் அந்த மகாகாவியத்தில் எழுதப் பட்டிருக்கிறது. சீதையைப் பற்றி என்ன சொல்வது! சீதை போன்ற மற்றொரு பெண்மணியை இதுவரை தோன்றியிருக்கும் உலக இலக்கியங்கள் ஒன்றிலும் காணமுடியாது. இனிமேலும் காண்பதரிது. சீதை ஒப்பற்றவள். இதுவரை பல ராமர்கள் தோன்றியிருக்கலாம்; ஆனால் ஒரு சீதைக்குமேல் உலகில் தோன்றியதில்லை. அவளே இந்திய மாதர்களின் லட்சியமாய் விளங்குகிறாள். இந்திய மாதர்களிடம் இருக்கும் நற்குணங்கள் அனைத்தும் அவளிடமிருந்தே பிறந்திருக்கின்றன என்று தோன்றுகிறது.  இந்தப் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தியா முழுவதிலும் உள்ள ஆண்,பெண்,குழந்தைகளுடைய வழிபாட்டையும் பெற்று அவள் வாழ்ந்து வந்திருக்கிறாள். அவள தூய்மையை விடத் தூய்மையானவள். அவளே பொறுமைக்கும் சகிப்புத் தன்மைக்கும் இருப்பிடம். அவள் கற்புக்கு அணிகலமாய், எல்லாக் கஷ்டங்களையும் சலிப்பின்றிச் சகித்தாள். இத்தகைய அவள் மனிதர்களுக்கும், தேவர்களுக்கும் தெய்வமாய், நமது தேசீய லட்சியமாய் எப்போதும் இருந்து வருவாள்..

நமது புராணங்கள், வேதங்கள், சம்ஸ்கிருத பாஷை முதலிய அனைத்தும் ம்றையலாம்; ஆனால் ஐந்து இந்துக்கள் இருந்தாலும் சீதையின் சரித்திரம் மறையாமலிருக்கும். சீதை நமது லட்சியமாய் நமது ரத்தத்தில் கலந்திருக்கிறாள்.”

தனது இந்திய உரைகளிலும் சரி, மேற்கத்திய உரைகளிலும் சரி சுவாமி விவேகானந்தர் வேதாந்த தத்துவங்களையும், ராஜயோகத்தையும் மட்டும் பேசவில்லை. ராமாயணம், மகாபாரதம், புராணங்கள் ஆகியவை அளிக்கும் கலாசார விழுமியங்கள் பற்றியும் தவறாமல் பேசினார். Story of Ramayana என்ற தனது உரை ஒன்றில், ராமாயணக் கதை முழுவதையும் தனது மேற்கத்திய சீடர்களுக்குப் புரியும் வகையில் குழந்தைகளுக்குக் கதை சொல்வது போல் சுவாமிஜி கூறியிருக்கிறார்.  இன்றைய நவீன ஆன்மிக குருமார்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டிய, நினைவில் கொள்ள வேண்டிய விஷயம் இது.

மகாத்மா காந்தி துளசிதாசரின் ராமசரிதமானஸ் என்ற நூலை ஈடு இணையற்ற பக்தி நூலாகக் கருதினார்.  ராம நாமத்தை தனது தனிப்பட்ட வாழ்வில் தீமைகளிலிருந்து காக்கும் கவசமாகவும், தெய்வ வழிபாட்டுக்குரிய உன்னத மகா மந்திரமாகவும் கொண்டார். ராமசரிதமானசில் அவருக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று “ராம ரதம்” (Rama Rath). ராவணனிடம்  மகா ரதம் இருக்கிறது, உங்களிடம் இல்லையே என்று விபீஷணன் கேட்கிறான். அதற்கு ராமன் சொல்கிறான் –

கேளாய், நண்பனே
எப்பேர்ப் பட்ட இடர்களிலும் வெற்றி தரும் தேர் என்னுடையது.
வீரமும், துணிவும் அதன் சக்கரங்கள்
சத்தியமும், சீலமுமே அதன் திடமான வெற்றிக் கொடி.
வலிமை, விவேகம், புலனடக்கம், தன்னலமின்மை  என்று நான்கு குதிரைகள்.
பொறுமை, கருணை, சமநிலை என்பவை அவற்றைப் பிணைக்கும் கயிறுகள்.
தெய்வ அருள் அதன் சாரதி.
பேராசையின்மை, ஈகை, நல்லறிவு, தளராத மனம் ஆகியவை அத்தேரின் கண் உள்ள ஆயுதங்கள்.
இந்தத் தர்மமயமான தேரில் ஏறிச் சென்று
சம்சாரம் என்ற பெரும்பகையையே ஒருவன் வென்று விட முடியும்.
அப்படியிருக்க, அசுரர்களுடன் போரிடுவதில் என்ன கவலை?

ராமாயணம் லட்சியமாகக் கூறும் சமூக, அரசியல் சித்தாந்தங்களையே காந்திஜி ராம ராஜ்யம் என்ற கருத்தாக்கமாக முன்வைத்தார்.

இங்ஙனம், இந்திய தேசிய எழுச்சியில், ராமகாதையின் பங்கு மகத்தானது. 1980களில் தொடங்கிய ராமஜன்ம பூமி இயக்கம் தான் நாடு தழுவிய இந்து மறுமலர்ச்சிக்கு வித்திட்டது. நமது பண்பாட்டைப் பற்றிய புதிய பிரக்ஞையை நமக்கு அளித்தது.

*  * * * *

காலனிய ஆட்சிக் காலத்தில் கிறிஸ்தவ மிஷநரிகளும், இந்தியவியலாளர்கள் என்ற பெயரில் உலவிய சில திரைமறைவு-மிஷநரிகளும் சேர்ந்து இந்துமதம், இந்து தத்துவங்கள், மற்றும் கலாசாரம் பற்றிய திரிபுகளையும், அவதூறுகளையும் திட்டமிட்டு உருவாக்கினர். இதற்கு ராமாயணமும் தப்பவில்லை. ஆனால், நமது பண்பாட்டுப் பொக்கிஷமான ராமாயணம் பற்றிய எதிர்மறைப் பிரசாரங்கள் இன்னும் பொதுத்தளத்தில் தொடர்கின்றன. திராவிட இயக்கம் தமிழகத்தில் உச்சத்தில் இருந்த நாட்களில் ஆரிய திராவிட இனவாதத்தின் அடிப்படையில், ராமாயணத்திற்கு எதிரான அபத்தப் பிரசாரங்கள் கட்டவிழ்த்து விடப் பட்டன. உண்மையான தமிழ்ப் பண்பாட்டுக் காவலர்களால் அப்போதே அவை கடுமையாக நிராகரிக்கப் பட்டு கண்டனம் செய்யப் பட்டன.  சமீபத்தில் ராமசேது விவகாரத்தின் போது கூட சிறிய அளவில் அவை தலைதூக்கின. ஆனால் தமிழகம் அந்த இருண்ட காலங்களில் இருந்து மீண்டெழுந்து விட்டதால் இது எந்த சலனத்தையும் ஏற்படுத்தவில்லை.

ராமாயணத்திற்குப் பல வடிவங்கள் உள்ளன; இவற்றில் பலவாறு மாறுபாடுகள் உள்ளன. எனவே ராமாயணத்தை வைத்து மக்களை இணைப்பது இந்துத்துவ சதி என்று ஒரு அறிவுஜீவித் தரப்பு தொடர்ந்து ஓலமிட்டு வருகிறது.  (ஒட்டுமொத்த இந்துமதம் பற்றியே அவர்கள் இப்படிக் கூறுகிறார்கள்).  ஆனால் என்ன செய்வது? இந்த ”சதி” இன்று நேற்றல்ல, சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஆரம்பித்து விட்டது போலிருக்கிறது :))

வால்மீகி ராமாயணம் எழுதப் படுவதற்கு முன்பே இந்த மாபெரும் காதை உருவாகி வந்திருக்க வேண்டும், அதன் மையக் கரு வரலாற்று நிகழ்வுகளிலிருந்தே பெறப் பட்டிருக்க வேண்டும் என்று பெரும்பாலான ஆய்வாளர்களும் இப்போது ஏற்றுக் கொள்கின்றனர். ஆனால் வால்மீகி தான் முதன் முதலில் ஒரு பிரதியாக (text) இதனை உருவாக்கியவர். அவருக்குப் பின்வந்த இந்து மரபைச் சேர்ந்த அனைத்து ராமாயணங்களிலும்  மையக் கருத்துக்களில் மாறுபாடுகள் இல்லை, சிற்சில சம்பவங்களும், சித்தரிப்புகளுமே மாறுபடுகின்றன.  ஜைன, பௌத்த ராமாயணங்கள்  ராமகாதையின் பிரசித்தியைப் பயன்படுத்தி தங்கள் சமயக் கருத்துக்களைப் பரப்புவதற்காக அந்தச் சமயத்தினர் உருவாக்கியவை – எனவே அவற்றில் உள்ள திரிபுகளையும், கதை மாற்றங்களையும் வைத்து  மையநீரோட்டமான  ராமகாதை மரபினை மதிப்பீடு செய்வது என்பது ஏற்றுக் கொள்ளத் தக்கதன்று.

ravivarma_rama_sita_lakshmana_smallமேலும், ராமாயணத்தின் பல வடிவங்கள் இந்துமதத்தின், இந்து கலாசாரத்தின் பன்முகத் தன்மைக்கு மிகப் பெரிய வாழும் உதாரணங்களாக இன்றுவரை நின்று கொண்டிருக்கின்றன.  அவற்றில் எவையும் அழிக்கப் படவில்லை, அதனாலேயே அவை நமக்கு இன்று கிடைத்துள்ளன.  மாறாக, கிறிஸ்தவ மத அதிகார பீடம்,  ஒற்றைப் படையான மதத்தையும், மையப் படுத்தப் பட்ட மத அதிகாரத்தையும் உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், 300 ஆண்டுகளுக்கும் மேலாக,  வன்முறை மூலமும்,  அடக்குமுறை மூலமும்  தொடக்க கட்ட விவிலியத்தின் பல்வேறு பிரதிகளையும், வேறு பல கிறிஸ்தவ ஆவணங்களையும் மறைத்தும், ஒழித்தும் இருப்பது   தெளிவாக வரலாற்றில் பதிவு செய்யப் பட்டுள்ளது. கருத்துச் சுதந்திரத்தையும், பன்முகத் தன்மையையும் ஆதரிப்பதாகக் கூறும் அறிவுஜீவிகள், ஏனோ இந்த விஷயத்தைக் கவனிக்க மறந்து விடுகிறார்கள்!

வால்மீகி ராமாயணம் என்பதே ஒற்றைக் குரலாக ஒலிக்கும் நூல் அல்ல. ராமனை தர்மச் சிக்கலுக்கு உள்ளாக்கும் வாலி வதம் பற்றிய பிரசங்கத்தையும், அதில் வரும் வாத விவாதங்களையும் முனிவர் தவறாமல் பதிவு செய்கிறார், வெள்ளையடித்து மறைத்து விடவில்லை. தர்மத்தையும், வேதநெறியையும் வலியுறுத்தும் காவியத்தில்  ஜாபாலி முனிவர் ராமனுக்கு அளிக்கும் உலகாயத உபதேசமும் உள்ளது – தந்தை சொல் காப்பாற்றுதல் போன்ற விஷயத்தையெல்லாம் பற்றி ஏன் கவலைப் படுகிறாய், அயோத்திக்குத் திரும்பிப் போய் ஆட்சியை ஏற்றுக் கொள், வாழ்க்கையை அனுபவி என்று pragmatism பேசுகிறார் அந்த முனிவர்.  ராமாயணத்தை ஆழ்ந்து கற்கும் எவருக்கும் வால்மீகி சத்தியத்தைத் தேடும் ஒரு கவி-ரிஷி என்ற தன் இயல்பு மாறாமல், தர்மத்தின் பல பரிமாணங்களும் வெளிப்படுமாறு இந்தக் காவியத்தை ஆக்கி அளித்தார் என்பது புலனாகும்.

*  * * * *

ராமயணம் தன்னளவில் ஒரு மகத்தான தரிசனம்.  மகாபாரதம் பேசுவது போன்ற தர்மக் குழப்பங்களும், சிக்கல்களும், தத்துவ விவாதங்களும் ஆதி காவியமான ராமாயணத்தில் இல்லை. ஆனால் வாழ்க்கையின் பல்வேறு கூறுகளை அது தனக்கே உரிய அழகியல் கண்ணோட்டத்துடன் கம்பீரமாகக் கூறிச் செல்கிறது. கம்பனைப் பற்றி பாரதி கூறுகையில்,

“எல்லையொன்றின்மை எனும் பொருளதனைக்
கம்பன் குறிகளால் காட்டிட முயலும் முயற்சியைக் கருதியும்”

என்கிறான். இதில் எல்லையொன்றின்மை என்று அவன் சொன்னது எதை?  வாழ்க்கையை, அதன் வர்ண ஜாலங்களை என்று தோன்றுகிறது. தியாகத்திற்கு எல்லை உண்டா? சகோதர பாசத்திற்கு எல்லை உண்டா? பக்திக்கு எல்லை உண்டா? ஆசைக்குத் தான் எல்லை உண்டா?

லட்சுமணனும், பரதனும், கைகேயியும், குகனும், வாலியும், ஜடாயுவும், லங்கா தகனமும், அக்கினிப் பிரவேசமும், மாயமானும் வாழ்க்கையின் சில பரிமாணங்களின் ஆழ்ந்த படிமங்களாகவே நம் கலாசார வெளியில் பதிந்துள்ளனர். இந்த மண்ணின் பண்பாட்டுடன் பரிச்சயம் கொண்ட மனம் அவற்றை மிக சகஜமாகவே உணர முடியும்.  இதைத் தான் பாரதி கூறியிருக்கிறானோ?

யாவத் ஸ்தாஸ்யந்தி கிரய:  ஸரிதஸ்ச மஹீதலே
தாவத் ராமாயண கதா லோகேஷு ப்ரசரிஷ்யதி

இப்புவியில் மலைகள் மண்ணில் நிற்கும் வரை, நதிகள் ஓடும்வரை, ராம காதை உலகில் நிற்கும்.

(வால்மீகி ராமாயணம் 1.2.36)

12 Replies to “நமது பண்பாட்டின் ஊற்றுமுகம் ராமாயணம்”

  1. I have seen arguements in many blogs about the controversy(??) about Rama’s birth and most of these people are looking for written books or other evidences. Whatever the controversies (created by vested interests) may be, I see the Avatar of Lord Rama is to define “Ideal Man”. The Lord could have overcome all troubles by showing that he is God and could have easily rescued Sita. If Kaikeyi had a hint that Rama is Lord, then could not have prevented Rama ruling the Rajya. We all should understand the essence of Rama Avatar and put our best efforts to become ideal human beings.
    All around the world, no one supports an evil doing villain to win over the righteous Hero in any movie. It shows that upholding Righteousness is the important message to human beings and Ramayana is the starting point for that. Lord Rama is the symbol of Righteousness in human life.

  2. ராமநவமியன்று அற்புதமான ஒரு கட்டுரை தந்தமைக்கு ஸந்தோஷம்
    இந்தியாவிற்கு அப்பால் இலங்கையின் பலபாகங்களிலும் ராமாயணத்தின் உண்மைகளை நிறுவும் அரிய இடங்களிருக்கின்றன.
    ப்ரியமுடன்…
    தி.மயூரகிரி

  3. நான் பல கோவில்களில் எதோ ஒரு வகையில் ராமயணத்தின் எதாவது ஒரு நிகழ்வை குறிப்பதை கண்டு வியந்திருக்கிறேன்; அதுவும் நிறைய சிவன் கொவிளில்களில். இதை பற்றி எழுதவும் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.
    என்னை உங்களுக்கு அனுபவம் அதிகம் இருக்கும் என்று தோன்றுகிறது. நீங்கள் எழுதலாமே

    https://www.virutcham.com

  4. {{{{{இந்து, பௌத்த மத அடையாளங்கள் தென்கிழக்கு ஆசியாவின் பல பகுதிகளில் ஒரேயடியாக மறைந்து விட்ட போதும், இன்னும் ராமாயணம் மக்களின் வாழ்வில் ஒரு அங்கமாக இருக்கிறது என்பது சிலிர்ப்பூட்டும் விஷயம்!}}}}}

    நல்லபதிவு !
    பகிர்வுக்கு நன்றி நண்பரே!!
    வாழ்த்துக்கள்!!!

  5. Very good article..
    Thanks to the author and tamil hindu web site..

  6. // அப்போது சீதை இறுதியாக “எனக்குத் தெரிந்த எல்லா ராமாயணத்திலும், ராமனோடு கூடவே சீதையும் காட்டுக்குப் போவாள். எனவே, எப்படி நீங்கள் என்னைத் தடுக்க முடியும்?” என்று கேட்கிறாளாம்! // இது கவிதை!

    ஜடாயு அவர்களே, உங்கள் ஞானம் பிரமிக்க வைக்கிறது. மிக அருமையான பதிவு!

  7. ராமாயணம் பாரதத்தின் வட கோடிக்கும் தென் கோடிக்கும் ,இலங்கைக்கும் ஒரு சேது பாலம். ஒருத்திக்கு ஒருவன் என குழந்தை குட்டிகளுடன் குடும்பம் நடத்தும் ஒவ்வொரு குடும்பமுமே ராமாயண குடும்பம்தான்.நமது ஹிந்து குடும்பத்தில் கணவனுக்கு நேரும் துன்பத்தில் தானும் பங்கு கொண்டு இன்றும் ஒவ்வொரு வீட்டிலும் ராம காதை நடந்து கொண்டுதான் இருக்கிறது.

  8. பல இணையதளங்கள் நமது பண்பாட்டினையும் நமது ஹிந்து மதத்தினையும் பழித்தும் ஏசியும் வரும் இந்த நேரத்தில் தமிழ் ஹிந்து டாட் காம் மிக உயரிய சேவை செய்து வருகிறது.அதற்காக எனது மனம் நிறைந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.தொடரட்டும் தமிழ் ஹிந்துவின் தேசப்பணி.என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள். அன்புடன், ஈஸ்வரன், பூலாம்பட்டி, பழனி.

  9. jadayu avargale enakku therindha ella ramayanathilum seetha ramanudan kaattukku sevaal endru seethaye kettiruppalanal ? ramayanam enbathu enndha yugatil ezuthappattadhu?

  10. ராமாயணத்தை பற்றி மிக அருமையான பதிவு. இதே ராமாயணத்தை பற்றி விவேகானந்தர், காந்தி ஆகியவர்கள் சொல்லாதது எல்லாம் சொன்னதாக விக்கி பீடியாவில் இருக்கிறது. அது சம்பந்தமாக நீங்கள் ஏதேனும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் சம்பந்தமே இல்லாமல் கிரிஸ்துவத்தை விமர்சித்து இருப்பது கண்டனத்துக்கு உரியது. ஏசு ஒரு பெரிய ஞாநி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *