The Last Emperor – கோப்பையில் நிரம்பித் தளும்பும் வெறுமை

the_last_emperorவாழ்க்கை எங்கிருந்து துவங்குகிறது? சிலருக்கு பிள்ளை பிராயத்தில், சிலருக்கு பதின்பருவ கேளிக்கைகளில், சிலருக்கு நடுவயது வெற்றிகளில், இகுருவின் வாட்டன்பே போல சிலருக்கு மரணத்தின் விளிம்பில் – இப்படி எல்லோருக்கும் ஒரு புள்ளி இல்லாமல் இல்லை. உண்மையில் மனம் விழிக்கும் வேளைகளில் துவங்குகிறது வாழ்க்கை. ஆனால் வாழ்வை துவக்குவதற்கான தீர்மானத்தையே எடுக்க முடியாத மனிதர்களின் வாழ்க்கை எங்கிருந்து துவங்குகிறது? அம்மனிதர்களின் மனங்கள் அலைதலால் ஆனவை. அம்மனங்கள் சஞ்சலமானவை – எங்கும் எதிலும் நிலைப்பதில்லை. சதா பயணித்துக் கொண்டே இருக்கின்றன – எதைத் தேடுவது என்பதைத் தேடி. அம்மனங்கள் தேடுவது சுயத்தைதான் என்பது அறியப்படும் போது முடிவுக்கு வந்து விடுகிறது பயணம். நிற்பதறியாது முன்னோக்கி மட்டுமே பயணிக்கத் தெரிந்த காலம் போல் மாறிக்கொண்டே இருக்கிறது சுயமற்றவர்களின் வாழ்க்கை.

சீனாவின் சரித்திர பக்கங்களில் ஒரு மைல் கல்லாக மாறிவிட்ட ஒரு மனிதனின் வாழ்க்கை இத்தகையது என்று சொன்னால் ஆச்சரியமாக இருக்கக்கூடும் உங்களுக்கு. ரத்தமும் சதையுமாக வாழ்ந்த ஒரு மனிதனின் கதை. சீனாவின் வரலாற்றில் பச்சாதபத்துக்குரிய நாயகனின் கதையை 3 மணி நேரம் ஓடும் திரைப்படத்தில் நிரப்பியிருக்கிறார்கள். சீனாவை ஆண்ட Qing என்னும் அரச வம்சாவளியின் கடைசி பேரரசனாக பட்டம் சூட்டப்பட்ட ”பூ யி”-இன் வாழ்க்கையை சிதைவின்றி சித்தரிக்கிறது The Last Emperor திரைப்படம் – 9 ஆஸ்கர் விருதகளைப் பெற்றது. ஒரு கோப்பையில் தளும்ப தளும்ப வெறுமையை நிரப்பி நமக்கு குடிக்கக் குடுத்த படம்.

வரலாற்று பக்கங்களில் வெறும் தகவல்களாக சொல்லப்படும் ஒரு மனிதனின் வாழ்க்கையில், தேதிகளையும், பெயர்களையும் தாண்டி மழுங்கடிக்கப்பட்ட உணர்வுகளை ஒரு கலைஞனால் மட்டுமே வெளிக் கொணர முடியும். இந்தத் திரைப்படத்தின் இயக்குனர் அதையே செய்கிறார்.

பிற்காலத்தில் மேலை நாட்டு கலாசார ஆதிக்கத்தால் தன் பெயருடன் Henry-ஐ சேர்த்துக் கொண்ட ”பூ யி”-இன் சித்திரத்தை இந்தத் திரைப்படத்தில் மூன்று கோணங்களில் வரைகிறார் இயக்குனர். “பூ யி”-இன் சுய பார்வை, இரண்டாவது அவரின் மேலை நாட்டு உபாத்தியாரான Reginald R J Johnston (இவர் பிற்காலத்தில் Twilight in the forbidden city என்ற புத்தகத்தை எழுதுகிறார் – இந்த புத்தகம் இந்தத் திரைப்படத்தின் ஒரு பாத்திரம் பயன்படுத்துவதாக வருகிறது), மூன்றாவது – ஒரு சாமானிய மூன்றாவது மனிதனின் பார்வை (இந்த பார்வை, படம் முழுவதும் அங்கங்கே விரவியிருக்கிறது – கதை நடந்த காலத்தில் சீனாவின் அரசியல்/ சமுக சூழ்நிலைகள் இந்த பார்வை வழியாக வருகின்றன). இந்த மூன்று பார்வைகளையும் கோர்த்து தான் ஒரு மாயாஜாலத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர்.

இந்தத் திரைப்படத்தை நியாயமாக அணுக சீனாவின் வரலாறு பற்றி கொஞ்சம் அறிமுகம் தேவைப்படுகிறது. இல்லாவிட்டால் இந்த படம் கொஞ்சம் பிடிபடாமலே போய் விடக்கூடும்.

அரசியல் மற்றும் கலாசார புரட்சிகள் மூலம் மன்னராட்சி முறையிலிருந்து மக்களாட்சி முறைக்கு சீனா மாறிக்கொண்டிருக்கும் சமுக சூழல் அது. கொந்தளிப்பான, அமைதியற்ற சூழல் நிலவிய சமயம். பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்த பழக்கவழக்கங்களுடனே சீனா 20வது நூற்றாண்டையையும் எதிர் கொண்ட சமயம்.

இந்த சூழலில் சீனாவை ஆண்ட கடைசி மன்னர் வம்சாவளி க்யுங் (Qing) வம்சாவளியின் கடைசி மன்னனாக 3 வயதில் முடிசூட்டப்பகிறார் பு யி. இந்த அரச வம்சத்தை கவிழ்க்க வேண்டும் என்றும் Qing மன்னர்களையும் நாட்டை விட்டே விரட்ட வேண்டும் என்பது சுன் யாட் சென்னுக்கு ஒரு கனவாகவே இருந்தது. காரணம், அயல் நாட்டு சக்தியிடமிருந்து சீனாவை மீட்டு ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்ட சுயாட்சியை தோற்றுவிக்க வேண்டும் என்பது அவர் விருப்பமாக இருந்தது. ஆம், Qing வம்சாவளி சீனாவின் அரச பரம்பரை இல்லை.

Qing எனப்படுவது இன்றைய சீனாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்திருக்கும் மாஞ்சுரியாவை அடித்தளமாகக்கொண்டு அரசாண்ட ஒரு பேரரசு. இவர்களின் ஆட்சிக்குட்பட்டு தான் தற்போதைய சீனா அப்போது இருந்தது. சீனாவை 1644 ஆம் ஆண்டு மிங் வம்சாவளியை அழித்ததன் மூலம் Qing அரச வம்சம் கைப்பற்றுகிறது. இந்த மிங் அரசவம்சம் சீனாவை தனது எதிரிகளின் படையெடுப்பிலிருந்து பாதுகாக்க புராதான எல்லை சுவர்களை வலுப்படுத்தி இப்போது இருக்கும் எல்லை சுவரை (Great wall of china) கட்டுகிறது. இந்த எல்லை சுவரைத் தாண்டி தான் உள்ளே நுழைந்து சீனாவை கைப்பற்றுகிறது Qing அரசவம்சம். அதைத் தவிர, தனது ஆட்சிகாலத்தில் தாய்வான் (1683), மங்கோலியா (1697), திபெத் (1751), உய்குர் (1757) போன்ற தேசங்களையும் கைப்பற்றியது Qing அரச வம்சம்.

Qing பேரரசர் க்ஸியன்ஃபெங் (Xianfeng) இறந்த பின்னர் அவருடைய அந்தப்புர நாயகியான Cixi (Dragon Lady என்றும், சில சரித்திர ஆய்வாளர்களால் Qing பேரரசின் வீழ்ச்சிக்கு காரணமானவர் என்று வர்ணிக்கப்படுபவர்) தனது மகனை (Guangxu பேரரசர்) சீனாவின் அரியணைக்கு ஏற்றுகிறார். ஆனால் திரைமறைவில் சீனாவை ஆள்வது இவரே. Guangxu பேரரசர் தனது ஆட்சி காலத்தில் சீனாவை சீர்திருத்தவும் புதுமைபடுத்தவும் சில திட்டங்களை அமல்படுத்த முனைகிறார் – ஆனால் அம்முயற்சிகள் வெற்றி பெறுவதற்கு முன்னரே அவர் இறக்கிறார். இவரது மரணம் இயற்கைனாதல்ல என்றும் அவர் பல புரட்சிகளை செய்ய விரும்பியதால் கொல்லப்பட்டார் என்று கூறப்படுகிறது. யார் கொன்றது என்பதற்கும் சில உப கதைகள் இருக்கின்றது. (அவரது தாயே கொன்றதாக ஒரு கோணம்.) வாரிசில்லாமல் Guangxu பேரரசர் இறந்த மறு தினமே அவரது தாயான Cixi இறக்கிறார் – ஆனால் இறப்பதற்கு முன் பூ யி-யை சீனப் பேரரசின் மன்னராக நியமிக்கிறார். ஒருவிதத்தில் பூ யி-இன் தாத்தா Xianfeng பேரரசரின் சகோதரர் ஆகிறார். அந்த அரச வம்ச உறவின் அடிப்படையில் தான் பூ யி-ஐ Qing வம்சாவளியின் பேரரசராக மரணப்படுக்கையில் இருக்கும் Cixi தேர்ந்தெடுக்கிறார்.

திரைப்படத்தில் மேலே சொன்ன கதாபாத்திரங்களோ/ சம்பவங்களோ எவையும் காட்சிப் படுத்தப்படவில்லை – Cixi முடிசூட்டிவிட்டு இறக்கும் காட்சியிலிருந்து தான் கதை துவங்குகிறது. Guangxu பேரரசர் பற்றிய குறிப்புகள் சில, ஓரிரு இடங்களில் பூ யி-இன் வாய் மொழி குறிப்பாக வருகிறது, அவ்வளவே.

மூன்றாவது வயதில் மன்னராக முடி சூட்டப்படுவதற்காக மஞ்சூரியாவிலிருந்து பெய்ஜிங்-இற்கு அழைத்து வரப்படுகிறார் பூ யி, அவரது செவிலி தாயோடு. மன்னரை தெய்வமாக தொழும் சீன கலாசாரத்தில் பசியை கூட சரியாக சொல்லத் தெரியாத ஒரு குழந்தை தெய்வமாக்கப்படுகிறது. குழந்தையாக அல்லாமல் பேரரசராக சீன அரச சமுகத்தால் வளர்க்கப்படுகிறார் பூ யி.

1912 ஆம் ஆண்டு Xinhai புரட்சியை தொடர்ந்து மன்னராட்சி முறை சீனாவில் முடிவுக்கு வரும் ஆவணம் கையெழுத்திடப்பட்டு, பால்மணம் மாறுவதற்கு முன்பே பேரரசர் அந்தஸ்தை இழக்கிறார் – அவர் அதை இழந்த போது எதை இழந்தோம் என்று கூட அவருக்கு தெரியாது.

பேரரசர் பட்டத்தை இழந்தவுடன் Forbidden Cityக்குள் மட்டும் மன்னர் என்ற கௌரவத்துடன் வலம் வருகிறார் பூ யி. (Forbidden City என்பது மிங் மற்றும் க்யுங் மன்னர்கள் பயன்படுத்திய அரண்மனைகள் கொண்ட கட்டடம். இதன் வாயில் தாண்டி உள்ளே வர சாமானியர்களுக்கு அனுமதி கிடையாது. இந்தத் திரைப்படமே Forbidden Cityக்குள் படமாக்கப்பட்ட முதல் திரைப்படம் என்பது கொசுறு தகவல்).

இவரது பதின்ம வயதில அறிமுகமாகும் ஸ்காட்லாந்துகாரரான Johnston மூலம் ஆங்கில அறிவோடு உலகத்தைப் பற்றிய பார்வையையும் பெறுகிறார் பூ யி. ஒரு விதத்தில் சொல்லப்போனால் அவை அனைத்துமே மேற்கத்திய கலாசாரத்தை புகட்டும் வகுப்புகளே. சமகால அரச பரம்பரை பழக்கங்களில் இருக்கும் பழமை சார்ந்த அபத்தங்களை எதிர்க்கிறார், பூ யி. அதன் அடையாளமாக பூ யி – தனது நீண்ட கூந்தலை அறுத்து எறிகிறார். 20ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் புரட்சியின் அடையாளமாக சீனர்கள் கூந்தலை அறுத்து எறிந்தனர். புரட்சியாளர்கள் ஒரு பெரிய கத்தரியை கையில் வைத்துக்கொண்டு கூந்தலை வெட்டி மக்களை புரட்சியாளர்களாக மாற்றிக் கொண்டிருந்தனர். பூ யிக்கும் தனக்கு முந்தைய அரசரை போல சீனாவை சீர்திருத்தும் எண்ணம் தீவிரமாக மேலெழுகிறது – ஆனால் அதை செய்யும் உரிமையும் அதிகாரமும் அவர் கைகளிலிருந்து எப்போதோ பறிக்கப்பட்டுவிட்டதை மெல்லமாகத்தான் அறிகிறார். பத்தம்போதாம் நூற்றாண்டின் இறுதியிலேயே வலுவிழக்கத் துவங்கிவிட்ட ஒரு மாபெரும் அரசவம்சத்தின் எச்சமாக தான் இருப்பதை உணர்கிறார்.

தனக்கென எதுவுமில்லாத சீனாவிலிருந்து விலகி Oxford சென்று கல்வி கற்று தன் மனைவியுடன் மேலை நாட்டிலேயே இருந்து விட விழைகிறார். இதற்கிடையில் மக்களாட்சி தோற்றுவிக்கப்பட்ட சீனாவில் Forbidden City-ஐவிட்டு விலக ஒரு மணி நேரம் அவகாசம் தருகிறது சீன அரசு. தன் மனைவிகள் மற்றும் பரிவாரங்களுடன் வாழ்க்கையை தேடி Forbidden City-ஐவிட்டு விலகுகிறார் மன்னர் – எந்த கோட்டை சுவர்கள் தனக்கு தடைகற்கள் என்று நினைத்தாரோ அந்த கோட்டைகள் மிகப்பெரிய பாதுகாப்பாக அவரை அரவணைத்திருந்த உண்மை நகைமுரணாக வெளிப்படுகிறது.
சீனாவில் Qing மன்னராட்சி முடிவுக்குகொண்டு வரப்பட்டபின் Qing கட்டுபாடிலிருந்த ஐந்து நாடுகளும் சுதந்திரமடைகின்றன. பின்னர் இரண்டாம் உலகப்போருக்குப் பின் மஞ்சூரியாவை சீனா சொந்தமாக்கிக் கொண்டது. (திபெத்தை சீனா சொந்தம் கொண்டாடுவதற்கும் ஏறக்குறைய இதே லாஜிக்தான்.)

இதற்கு மத்தியில் ஜப்பானுக்கு ஒரு கனவு இருந்தது – இந்த உலகத்தை ஆள. உலகின் ஓரத்தில் ஒரு சிறிய தீவாக இருப்பினும் மிகவும் வலிமையான ராணுவத்தை வைத்திருந்தது ஜப்பான். முதலாம் உலகப்போருக்குப் பின் பொருளாதார தேக்கநிலை உருவானபின், ஜப்பனுக்கு வளமைமிக்க ஒரு தேசம் தேவைப்பட்டது. மன்னராட்சி முடிவுக்கு வந்தபின் பல்வேறு அதிகார மையங்களால் சிதறிக் கொண்டிருந்த சீனாவில் மாஞ்சு பிரதேசத்தை சேர்ந்த மன்னரான் பூ யி-ஐ ஆதரிப்பதன மூலம் மஞ்சூரியாவை தன் வசப்படுத்த ஜப்பான் விரும்புகிறது. ஜப்பான் தன் சொல்படி கேட்கும் ஒருவர் தன் கட்டுப்பாடிலிருக்கும் மஞ்சுகோவை ஆள வேண்டும் என்பதற்காக “பூ யி”-ஐ மன்னராக நிறுவியது.

பூ யி ஜப்பானின் உதவியியுடன் மஞ்சூரியாவின் உட்பகுதியில் “மஞ்சுகோ” என்ற தேசத்தை (!) உருவாக்குகிறார். ஆம், மஞ்சுகோவிற்கு தனி கொடி, தேசிய கீதம் எல்லாம் கூட இருந்தது. ஜப்பானைத் தவிரவும் – இத்தாலி, ஸ்பெயின், ஜெர்மனி, தாய்லாந்து, போன்ற சில தேசங்கள் (இவை அணைத்தும் இரண்டாம் உலகப்போரின் போது ஒரே அணியில் இருந்தன) மஞ்சுகோவை தேசமாக அங்கீகரித்தன. ஆனால் சீனாவின் சரித்திர ஆய்வாளார்கள் மாஞ்சுகோவை ஒரு பொம்மை அரசு வர்ணிக்கின்றனர் – அதை ஒரு தேசமாக அங்கிகரிப்பதில்லை. மஞ்சுகோ வில் அவர் பெயரளவில்தான் மன்னராக இருக்கிறார். ஜப்பானின் ஆதிக்கம் எல்ல இடங்களிலும் இருக்கின்றது. ஒரு வெளிநாட்டு படையை நம்பி அமைக்கப்பட்ட ஒரு தேசம் எந்த அளவிற்கு சுதந்திரமாக இருந்து விட முடியும். ஜப்பான் மஞ்சுகோவையும் பூ யி-ஐ யும் தன் இஷ்டத்திற்கு பயன்படுத்திக் கொள்கிறது.

அதிகார மயக்கத்தில் இருந்த பூ யிக்கு இதெல்லாம் தெரியவே இல்லை.

பூ யி தன் வாழ்க்கையில் தன்னிச்சையாக எதையும் செய்யவில்லை – அரண்மனையில் தனது அடிமையாக இருக்கும் பால் நிலை திரிந்தவர்களை எடுபிடி வேலை வாங்குவதைத் தவிர. மற்ற விஷயங்கள் அனைத்துமே அவரைச் சுற்றியிருக்கும் சமுகமும் சூழல்களுமே முடிவு செய்கின்றன. சீனா, தனது சொந்த மன்னர் பரம்பரை, ஜப்பான் என எதோ ஒரு ஆதிக்க சக்தியின் கட்டுபாட்டில்தான் அவரது வாழ்க்கை முழுவதுமாக சுற்றித்திரிகிறது.

ஜப்பானின் கை பொம்மையாக இருந்த பூ யி, இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் சரணடைந்த பின், சீனாவின் வசம் வந்த மஞ்சுரியாவிலிருந்து விரட்டப்பட்டு போர் குற்றவாளியாக சீனாவுக்கு வருகிறார். சீனா அவரை தன் தவறுகளை பட்டியலிடச் சொல்கிறது – அவற்றை அனைத்தையும் ஒத்துக்கொள்ளச் சொல்கிறது. சீனாவின் வரலாறு என்று சீன அரசு வெளியிட்ட ஒரு புத்தகத்தை படிக்கக் கொடுக்கிறது – சீனா எழுதிய சீனா வரலாற்றை இதற்கு முன் சீனாவை ஆண்டவனை அங்கிகரிக்கச் சொல்கிறது. இந்த காட்சிகள் எல்லாம் திரைப்படத்திலிருகின்றன. சீனாவின் அரசு, சிறைவாசத்துக்குப் பின் “பூ யி”-ஐ சீன குடிமகனாக அங்கிகரிக்கிறது. யோசித்துப்பாருங்கள், மன்னனாக ஆண்ட ஒரு தேசத்தில் வேறு ஒரு ஆட்சியில் ஒரு சாதாரண குடிமகனாக, வேறு ஒரு சரித்திரத்திற்கு சாட்சியாக தன் சுயம் அழிந்து வாழும் ஒரு வாழ்க்கை எத்தகையதாக இருக்க முடியும்.

இந்தத் திரைப்படத்தின் கடைசி சில நிமிடங்கள் மிகவும் நெகிழ்ச்சியானவை. தான் யார் என்ற அடையாளம் பூ யிக்கு புரிந்த தருணங்களின் பதிவு அவை. அந்த சமயங்களில் தலைக்கு மேல் கிரிடம் இல்லை. முன்னாள் மன்னர் என்ற அடையாளம் இல்லை. பணிவிடை செய்ய பணிஆட்கள் இல்லை. தன்னைச் சுற்றி இருந்ததாக நினைத்த ஒளி வட்டமும் முற்றிலுமாக கரைந்து விட்டிருந்தது. எந்த விதமான அடையாளமுமற்று ஒரு மனிதனாக தன்னை அவர் உணர்ந்த தருணங்கள் அவை. அந்த சமயத்தில், தான் வாழ்ந்த அரண்மனைக்கு ஒரு சாதாரண பார்வையாளனாக வருகிறார் பூ யி. அங்கே இருக்கும் தன் பழைய அரியணையை பார்க்கிறார். ஒரு சிறு குழந்தைக்கு தான் மன்னராக இருந்ததை நிரூபிக்க தான் சிம்மாசனத்திலிருந்து பல வருடங்களுக்கு முன் ஒளித்து வைத்த கிரிக்கெட் பூச்சியை எடுத்துத் தருகிறார். படத்தின் ஆரம்பத்தில் சிறுவனாக இருக்கும்போது ஒரு போர் வீரன் தருவதாக காட்டப்படும். ஒரு கவிதையை அதன் உச்சத்திற்கு எடுத்துச் செல்லும் வரி போன்றது இந்தத் திரைப்படத்திற்கு அந்த காட்சி. மன்னரின் மரணமும் அமெரிக்க சுற்றுலா பயணிகளுக்கு அரண்மனையை சுற்றிக் காட்டும் ஒரு உதவியாளரின் வாய் மொழிக்கூற்றாக வெளிப்படுவதுடன் படம் நிறைவடைகிறது.

திரைப்படத்தைப் பொருத்தவரை சரித்திர பிண்ணனியை மிகவும் அதிகமாக தொடவில்லை இயக்குனர் – இலைமறை காயாகத் தான் சரித்திரம் வெளிப்படுகிறது. இது சீனாவின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் படமோ அல்லது சரித்திரத்தின் பிரதிநிதியோ கிடையாது. சமுக மற்றும் அரசியல் குழப்பங்களில் சிக்கி சிதைந்த ஒரு மனிதனின் வாழ்வைப்பற்றியது. இயக்குனருடைய கோணம் முழுக்க முழுக்க “பூ யி” என்ற மனிதனை மட்டுமே சுற்றி வருகிறது. எப்படி அந்த உணர்வை திரைக்குள்கொண்டு வந்திருக்கிறார் என்பதிலேயே இயக்குனர் வெற்றி பெற்றவராகிறார். ஆனால் சரித்திர தகவல்களின் அடிப்படையில் நீங்கள் இந்தத் திரைப்படத்தைப் பார்த்தால் பூ யி-இன் கதாபாத்திரத்திற்கான கனம் நன்றாக புரியும். இந்தியர்கள் காந்தி திரைப்படத்தை பார்ப்பதற்கும் ஸ்லோவெனியாவில் இருக்கும் ஒருவர் பார்ப்பதற்குமான வித்தியாசம் அது.

இந்தத் திரைப்படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தால் தவற விட வேண்டாம்.

3 Replies to “The Last Emperor – கோப்பையில் நிரம்பித் தளும்பும் வெறுமை”

  1. Dear Mr. Writer,

    What way this relates to our TAMIL HINDU website, what you are trying to tel out of this article, it is a nice film description, that much we can appreciate.

    regards

    G. Murugan
    Madurai

  2. ஐயா, இந்தியாவுக்கு விடுதலை கிடைச்சிடுச்சி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *