எங்கே பெண்ணுரிமைகள்?: சர்வதேச மகளிர் தினத்தை முன்வைத்து

மார்ச் 8, 2010 – சர்வதேச மகளிர் தினம். நூறு ஆண்டுகளுக்கு முன் கோபன்ஹேகன் நகரில் ஒரு சிறிய அறையில் கூடியிருந்த மாநாட்டில் உழைக்கும் பெண்களின் பிரதிநிதிகளாகக் கூடியிருந்த மகளிர் உலகெங்கும் பெண்ணுரிமைகளை வலியுறுத்திப் போராடுவதற்கு உரிய நாளாக இந்த நாளை முரசறைந்தார்கள். அதற்கு இரண்டு ஆண்டுகள் முன்பு (1908) இந்த நாளில் தான் நியூயார்க் நகரின் பஞ்சாலைப் பெண் தொழிலாளர்கள் ஆண்களுக்கு நிகராக, அதே வேலையைச் செய்யும் தங்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும் என்று வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தினர். பின்னர் ஐ.நா சபையால் 1975ல் உலக அளவிலான மகளிர் தினமாக இது அறிவிக்கப் பட்டது.  பெண்ணியம் ஒரு இயக்கமாக பல நாடுகளில் வளரத் தொடங்கிய போது மகளிர் தினம் அதன் குறியீடாயிற்று.

louise_weiss_french_women_must_vote
Louise Weiss along with other Parisian suffragettes in 1935. The newspaper headline reads “THE FRENCHWOMAN MUST VOTE.”

இந்த நூறு ஆண்டுகளில் தங்களது தொடர்ச்சியான செயல்பாடுகள் மூலமாக பெண்ணுரிமை இயக்கங்கள் உலகெங்கிலும், குறிப்பாக மேற்குலகில் பெற்றிருக்கும் வெற்றிகள் மகத்தானவை. மேற்குலகின் அரசியல், சமூகத் தளங்களில் நிரந்தரமான, மிகப் பெரிய மாறுதல்களையே அவை உருவாக்கின என்று சொன்னால் மிகையாகாது. அரசாங்கமும், ஆணாதிக்க கிறிஸ்தவ சர்ச் அதிகாரமும் தங்கள் உடல்கள் மீதும், உள்ளங்கள் மீதும், உரிமைகள் மீதும் போட்டிருந்த பல தளைகளைப் பெண்கள் அறுத்தெறிந்தனர். கல்வி உரிமைகளையும், வாக்குரிமைகளையும், சொத்துரிமைகளையும், பணி புரியும் உரிமைகளையும், வேறு பல சிவில் உரிமைகளையும் வென்றெடுத்தனர். ஆட்சியாளர்களாகவும், சட்டம் இயற்றுபவர்களாகவும் ஆயினர். இந்த சாதனைகள் சாதாரணமானவை அல்ல. பல ஐரோப்பிய நாடுகள் இன்னமும் தந்தை வழி சமுதாய (patiarchy) தன்மையிலான அரசியல் தலைமைகளின் கீழ் தான் இருக்கின்றன; ஆயினும் பொதுத் தளத்தில் பெண்ணுரிமைகள் சிறந்த வகையில் உள்ளன என்றே சொல்ல வேண்டும். குறிப்பாக நார்வே, ஸ்வீடன் ஆகிய நாடுகளில் அரசாட்சியில் பெண்கள் பங்களிப்பு மற்ற நாடுகள் அனைத்திற்கும் முன்னுதாரணமாக விளங்கும் வகையில் உள்ளது. இதில் பாதியளவு இந்தியாவில் நிகழ்ந்தால் கூட இந்தியாவின் சமூக முன்னேற்றம் பிரமிக்கத் தக்க வகையில் இருக்கும்.

பெண்கள் அதிகமாக பொதுத் தளங்களில் செயல்படுவது இயல்பாகவே பெண் உரிமைகளை வளர்த்தெடுத்து வரும் இந்து ஆன்மிக, சமூக அமைப்புகளுக்கு மிகப் பெரிய வலிமையை அளிக்கும். இதன் தாக்கத்தால், அரபுக் கலாசாரத்தை காப்பியடித்து மதம் என்ற போர்வையில் கடும் பெண்ணடிமைத் தனத்தைத் தங்கள் சமூகப் பெண்களின் மீது வன்முறையாகத் திணிக்கும் இஸ்லாமிய அடிப்படைவாதம் அந்த சமூகத்திற்கு உள்ளிருந்தே எழும் மாபெரும் பெண்ணிய எழுச்சிக்கு பதில் சொல்ல வேண்டி வரும். இந்து உணர்வும், சுதந்திர எண்ணமும் கொண்ட பெண்கள் பொதுத் தளத்தில் அதிகம் இறங்குவது கிறிஸ்தவ மதப்பிரசார, மதமாற்ற சக்திகளையும் தொய்வடையச் செய்யும்.

இதன் கீற்றுகள் ஏற்கனவே புலப்பட்டு விட்டன. இது பேரொளியாக வேண்டும்.

ardhanareeshwaraஆண்மையின் இயல்பே காட்டுத் தனமான வரம்பு மீறல்கள் (wretched excesses) தான் என்று ஒரு பக்கமும், பெண்ணை ஜீவனுள்ளவளாகப் பார்க்காமல் இயந்திரமாகக் கருதும் பெண்-ஏளனப் (misogynist) பார்வை இன்னொரு பக்கமுமாக, சமநிலை குலைந்த ஒரு கண்ணோட்டம், பெண்ணுரிமைகள் வளர்ந்து வரும் மேற்குலக நாடுகளிலேயே ஊடாடுகிறது. வளர்ந்து வரும் நாடான இந்தியாவில் இது தொடர்பான குழப்பங்கள் இன்னும் அதிகம். இந்த சூழலில், ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையே பகிர்தல் உணர்வும், பரஸ்பர மதிப்பும் கூடுவது குடும்பங்களுக்கும், அதன் மூலம் ஒட்டுமொத்த சமூகத்திற்குமே பெரிய நன்மை செய்யும். பரம்பொருளின் திருவுருவை மாதொரு பாகனாக, அர்த்த நாரீஸ்வரனாகத் தன் மெய்யுணர்வில் கண்ட நம் கலாசாரத்தில், நம்மில் பெரும்பாலருக்கு மறந்து விட்டிருக்கும் உணர்வு தானே அது!

இன்று இந்தியப் பாராளுமன்றத்தில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு என்ற பிரசினையை வைத்து பெரும் கூச்சல்களும், குழப்பங்களும் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. பாலினம், சாதி, சமயம் இவற்றின் அடிப்படையில் எந்தப் பாகுபாடும் செய்யப் படக்கூடாது என்று கூறும் அரசியல் சட்டத்திற்கே எதிரானதில்லையா இது? மக்கள் தொகையில் 50%க்கும் அதிகமாக இருக்கும் மகளிருக்கு அரசியலில் 33% தான் உச்சவரம்பு என்று ஏன் சட்டம் போடவேண்டும்? பெண்களின் அரசியல் பங்கேற்பு அதை விட அதிகமாகி விட்டால், பின்னர் சட்டத் திருத்தம் செய்யவேண்டிய நிலை கூட ஏற்படுமே! ஏற்கனவே சாதி ரீதியான கல்வி, வேலைவாய்ப்பு இடஒதுக்கீடுகள் இந்திய சமூகத்தைக் குறுக்கும், நெடுக்குமாகப் பிளந்து வருகையில், அரசியலில் பாலின ரீதியான இடஒதுக்கீடுகள் வாரிசு/குடும்ப அரசியல் பெருச்சாளிகளுக்குத் துணை செய்து, ஆணாதிக்க அரசியல்வாதிகள் பெண்களைப் பகடைக் காய்களாகப் பயன்படுத்தத் தான வழிவகுக்கும். அனைத்துக் கட்சிகளும் தாமாக முன்வந்து மேன்மேலும் பெண்கள் அரசியலில் ஈடுபடுவதற்கு வழி செய்வது தான் சிறந்த முறையாக இருக்குமே அன்றி இடஒதுக்கீடுகள் அல்ல.

working_womenஇந்த வருட மகளிர் தினத்தின் வெளிச்சம் முழுவதும் இந்த இட ஒதுக்கீட்டுப் பிரசினைக் கூச்சலிலேயே வீணாகிக் கொண்டிருக்கிறது என்று தோன்றுகிறது, இந்தியாவைப் பொறுத்தவரையில் ஏராளமான மகளிர் பிரசினைகள் உள்ளன. கற்பழிப்புக் குற்றங்களுக்கு சட்டபூர்வமாக கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று பொதுவான கருத்து நிலவுகையில், மகளிர் தினத்தன்று ஜஸ்டிஸ் பாலகிருஷ்ணன் கற்பழிப்புக்கு இரையான பெண் விரும்பினால் குற்றவாளியுடன் அவர் திருமணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற மோசமான, எதிர்மறையான கருத்தைத் தெரிவித்திருக்கிறார். இந்தியாவின் பல பகுதிகளில் பெண்களைக் கடத்தி, பாலியல் தொழிலில் தள்ளும் வன்கொடுமை நடந்து வருகிறது; இந்தப் பெரும் கொடுமை செய்பவர்களை ஒடுக்குவது பற்றியும், கண்டுபிடித்து சட்டபூர்வமாக கடும் தண்டனைகள் அளிப்பது பற்றியும் அரசு கவலைப் படுவதாகத் தெரியவில்லை. கிராமப் புறங்களில் பல பள்ளிகளில் சிறுமிகளுக்குக் கழிப்பிடங்கள் கூட இல்லாத அவல நிலை உள்ளது. பணியிடங்களிலும், கல்வி நிறுவனங்களிலும் பாலியல் ரீதியாக பெண்கள் கேலி செய்யப் படுதல், உளவியல் ரீதியாக துன்புறுத்தப் படுதல் ஆகியவை இயல்பான விஷயங்கள் போலத் தொடர்கின்றன. சுயதொழில்கள், சிறு வியாபாரம் ஆகியவற்றில் முனையும் பெண்களுக்கு கடன் உதவி உள்ளிட்ட பல பிரசினைகள் உள்ளன. விவசாயத் தொழிலாளிகளாக இருக்கும் பெண்கள், வீட்டில் வேலைக் காரிகளாகப் பணிபுரியும் பெண்கள், கட்டுமானப் பணிகளில் ஈடுபடும் பெண்கள் போன்ற கடும் உழைப்பு கோரும் பணி செய்பவர்களின் நிலையை மேம்படுத்த திட்டங்கள் தேவை. ஏழை மக்களுக்கான மகப்பேறு மற்றும் தாய்-சேய் நல மருத்துவ மையங்கள் இந்தியாவின் ஒரு சில மாநிலங்கள் தவிர்த்து மற்ற இடங்களில் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. இந்த அனைத்துப் பிரசினைகளையும் தேசிய அளவில் வலியுறுத்த மகளிர் தினம் ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தப் படவேண்டும்.

மகளிர் தினம் என்பது “இடது சாரி” சித்தாந்தங்களின், பொதுவுடைமை சிந்தனைகளின் ஒரு பகுதியாக உருவானது தான். ஆனால் இதனை அதிகார வெறியும், பிளவுபடுத்தும் தன்மையும் கொண்ட மார்க்சிய பொதுவுடைமையாக அல்ல, அதற்கு மாற்றான ஜனநாயக சித்தாந்தத்தின் ஒரு பகுதியாகவே பார்க்க வேண்டும். மனித உறவுகளில் தனிமனித சிந்தனைகளையும், சுயத்தையும் நிலைநிறுத்தி, அதே நேரம் சமுதாய ஏற்றத் தாழ்வுகளையும், சுரண்டலையும் எதிர்க்க உந்துதலும் அளிக்கும் இத்தகைய ஜனநாயக வழிமுறைகள் முன்னேறும் எல்லா சமூகங்களிலும் முக்கியத் தேவையாக இருக்கின்றன. அந்த வகையில் மகளிர் தினம் உலகெங்கும் உள்ள பல நாடுகளில் பெண்கள் தொடர்பான பிரசினைகள் பலவற்றை பொதுத் தளத்தில் முன்வைக்கவும், விவாதிக்கவும் ஒரு சமூகக் களம் அமைத்துத் தந்திருக்கிறது.

sisterniveditaமேற்குலகில் சோஷலிச பெண்கள் இயக்கம் முகிழ்த்த அதே காலகட்டத்தில், நம் நாட்டிலும் பெண் விடுதலைக்கான குரல்கள் சிலிர்த்தெழுந்தன. அதனைக் கட்டியம் கூறி அறிவித்தவர்கள் இந்து எழுச்சியின் நாயகர்களே. இந்து சீர்திருத்தவாதியான ராஜாராம் மோகன்ராய் தான் சதி என்ற பழக்கத்தை சட்டபூர்வமாக ஒழிக்கப் பாடுபட்டவர். 1898ல் இந்தியாவில் முதன்முதலாக எழுந்த பெண்கள் பள்ளியை நிறுவியர் சுவாமி விவேகானந்தரின் சீடரான சகோதரி நிவேதிதா. மகாகவி பாரதியின் மனதில் பெண் விடுதலை பற்றிய உணர்ச்சிகளை ஊட்டியவரும் அவரே. அவரைத் தனது ஞானகுருவாகவே பாரதி ஏற்றுக் கொண்டார். இந்தியாவின் முதல் பெண் மருத்துவர்களில் ஒருவராக விளங்கிய டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பெண்களுக்கான சமூகப் பணிகளில் முனைந்து ஈடுபட்டதற்கு அவருக்கு உத்வேகம் அளித்தவை ஸ்ரீ ராமகிருஷ்ணர் மற்றும் சாரதா தேவியாரின் உபதேசங்களும், டாக்டர் அன்னிபெசண்ட் அவர்களின் தொடர்புமே ஆகும்.

இடைக்காலங்களில் இந்து சமூகத்தில் நடைமுறையில் பெண்ணடிமைத் தனம் ஊடுருவியிருக்கலாம்.. ஆனால் அதன் வேர்களிலும், ஆன்மிக மையத்திலும் பெண் மிக உயர்ந்த இடத்திலேயே வைத்துப் போற்றப் பட்டிருக்கிறாள்.

தவளே இவள் எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம்
அவளே அவர் தமக்கு அன்னையும் ஆயினள் ஆகையினால்
இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியும் ஆம்
துவளேன் இனி ஒரு தெய்வம் உண்டாக மெய்த் தொண்டு செய்தே
(அபிராமி அந்தாதி, 44)

என்று பெண்மையை மனைவியாகவும், அன்னையாகவும், அரசியாகவும், தெய்வமாகவும் போற்றும் பாடல் முன்வைப்பது ஒரு முழுமையான பெண்ணிய தரிசனம் அன்றி வேறென்ன?

வரலாற்று ரீதியாகப் பார்த்தால் காதலர் தினம், மதர்ஸ் டே, ஃபாதர்ஸ் டே போன்று மேற்கத்திய நுகர்வுக் கலாசாரம் உருவாக்கிய தினம் அல்ல மகளிர் தினம். உண்மையான சுதந்திர தாகத்தின், மானுட சமத்துவத்தின் குரலாக எழுந்த தினம் அது. அதனால் இந்த “டே”க்களையும் மகளிர் தினத்தையும் ஒரே தட்டில் வைத்து, எல்லாமே இந்தியக் கலாசாரத்திற்கு எதிரானது என்று தள்ளும் போக்கு தவறானது என்று நினைக்கிறேன். இத்தகைய பொத்தாம் பொதுவான நிராகரிப்புக்கள் இந்து அரசியல், சமூக இயக்கங்களை ஓரத்தில் தள்ளிவிடும் அபாயம் உள்ளது – இதை உணர்ந்து அவை செயல்படவேண்டும்.

நவீன பெண்ணிய சித்தாந்தங்களை இந்து தர்மத்தின் ஆழமான, வீரியமிக்க பெண்ணியப் பார்வையுடன் இணைத்து ஒரு மாபெரும் சமூக இயக்கமாக அதனை முன்வைக்க வேண்டும். அதற்கு இந்த நூற்றாண்டு மகளிர் தினம் ஒரு நுழைவாயிலாக இருக்கட்டும்.

8 Replies to “எங்கே பெண்ணுரிமைகள்?: சர்வதேச மகளிர் தினத்தை முன்வைத்து”

 1. //மகளிர் தினத்தன்று ஜஸ்டிஸ் பாலகிருஷ்ணன் கற்பழிப்புக்கு இரையான பெண் விரும்பினால் குற்றவாளியுடன் அவர் திருமணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற மோசமான, எதிர்மறையான கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.//

  This opinion of Chief justice is the manifestation of misunderstanding about the definition between Rape and Relationship Cheating. In india it is common for girls to allege rape after having consensual sex. In many cases the girls withdraw their allegation of rape after monetary settlement or marriage with him.
  In india Laws defines Relationship cheating as Rape and and men who indulge in consensual sex is hounded as Rapists if the women claims it is against her wish!

  Pseudo women empowerment groups use is as tool to extort money in the name of women!
  The CJI should clarify that the girls who claims relationship cheating should be given the option to marry her consensual partner.
  Otherwise asking a girl to marry her rapist is Barbaric and insensitive.
  visit and find more at http://www.tamil498a.com

 2. மகளிர் தினத்தை பற்றி நன்றாக எழுதி இருக்கிறீர்கள்! நன்று,

 3. பாவம் கட்டுரை ஒரு பத்து பன்னிரண்டு வருடத்திற்கு முன் வந்திருந்தால் நன்றாக, பொருத்தமாக இருந்திருக்கும்.

  ஜடாயு தைரியசாலி மற்றும் நேர்மையானவர் என்று எனக்குத் தெரியும். வேறு யாரவது எழுதியிருந்தால், கட்டுரை ஆசிரியர், மனைவியின் அல்லது காதலியின் மிரட்டலுக்கு பயந்து, தன் தாய் தந்தையரின் நிலையை எண்ணி பீதியில் இக்கட்டுரையை எழுதியிருக்கிறார் என்றே நினைத்து தைரியம் சொல்லி இருப்பேன்.

  ஹிந்துமதம் பெண்களுக்கு அதிக உரிமை அளிக்கிறது என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் அது பெருமை இல்லை, தற்போதைக்கு அது பிரச்னை. சர்ச்களில் பெண்டிருக்கு எப்படி கணவனிடம் நடந்துகொள்ள வேண்டும், புகுந்த வீட்டில் பிரச்னைகள் இல்லாமல் இருக்காது, எனவே கனிவாக எதிர்கொள்ள வேண்டும் என்பதெல்லாம் சொல்லி அனுப்புகிறார்கள். ஹிந்து பெண்களுக்கு சொல்லப்படுவது இதுதான் : 498A

 4. 33% இட ஒதுக்கீடு என்பது தனிப்பட்ட அளவில் எனக்கு ஏற்புடையது அல்ல. அதுவும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டமே எல்லா அடிப்படை உரிமைகளையும் பாலின பாகுபாடுகள் இன்றி உறுதி செய்திருப்பதால் இது redundant தான் என்றே இன்னும் கருதுகிறேன்.

  ஆனால் இன்று காங்கிரசும், பாஜகவும் இணைந்து ஆக்கபூர்வமாக இந்த இட ஒதுக்கீடு சட்டமாகுவதற்கான முதல் கட்டத்தை சாத்தியமாக்கி இருக்கின்றன – ராஜ்யசபையில் தீர்மானத்தை நிறைவேற்றியதன் மூலம். இத்தகைய ஒருமித்த ஜனநாயக செயல்பாடு உண்மையிலேயே பிரமிப்பூட்டுகிறது.

  இந்த இடஒதுக்கீடு உண்மையிலேயே அனைத்துத் தரப்புப் பெண்களும் அரசியலில் பங்கேற்க உதவுமாறு நடைமுறைப் படுத்த வேண்டும் – அதில் பல சிக்கல்கள், வழிதவறல்கள் வரலாம்.. அவற்றையும் இந்திய ஜனநாயகம் திறனுடன் எதிர்கொள்ளும் என்று எதிர்பார்ப்போம்.

  இதே போன்ற ஒருமித்த கருத்துடன் தேசப் பாதுகாப்பு, பயங்கரவாத ஒழிப்பு போன்ற விஷயங்களிலும் ஆளுங்கட்சி, எதிர்க் கட்சிகள் இணைந்து செயல்பட்டால், எவ்வளவு நன்றாக இருக்கும்!

 5. அன்புள்ள ஜடாயு,
  திறமையாக எழுதி இருக்கிறீர்கள். படிக்க சுலபமாகவும் நேராகவும் இருக்கிறது. இதில் உள்ள பெரும்பாலான கருத்துகளோடு எனக்கு உடன்பாடு உண்டு. ஆனால், எல்லா கருத்துகளையும் நான் ஏற்க மாட்டேன்.

  காட்டாக, பெண்களுக்கு சட்ட சபையில் இட ஒதுக்கீடு அளிப்பதை நான் வரவேற்கிறேன். நீங்கள் சொல்வது போல 33% அல்ல, 50% தான் அவர்களுக்குக் கொடுக்க வேண்டும். அதை நீங்கள் ஒரு பிரச்சினையாகக் கருதுகிறீர்கள், நான் ஒரு விடையாகக் கருதுகிறேன். Representative Democracy என்னும் ஒரு அமைப்பில் பிரதிநிதித்துவம் என்பது தன்னியல்பாகச் சரியாக எல்லாக் கூறுகளையும் பிரதிபலிப்பதாக அமையாது. அதற்காக சமூகத்தில் உள்ள ஒவ்வொரு கூறுக்கும் சரிவிகிதமாகப் பிரதிநிதித்துவம் கிட்ட ஒரு அமைப்பு கொணர முடியுமா என்று கேட்பது சரியல்ல. சமூகத்தில் 50% உள்ள மனிதர்களுக்குப் பிரதிநிதித்துவம் கொடுப்பதற்கும், 2.5% இருக்கும் மனிதருக்கு அதே விகிதம் தரச் சொல்லி வற்புறுத்துவதற்கும், அந்த 2.5% த்துக்குள் உள்பிரிவுகளுக்குப் பங்கு கொடுக்க வழி செய்வதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. முடியைப் பிளக்கச் சொல்லி வற்புறுத்துவதும், முடியை ஒரு வகிடெடுத்து வாருவதற்கும் இடையே வேறுபாடுகள் உண்டு. பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு என்பது முடியை வகிர்ந்து வாருவதை ஒத்தது. அழகு, பாந்தம், செயல் திறமை உள்ளது, எதார்த்தமானது, நேர்மையானது, அவசியமானது.

  பெண்கள் அரசியலில் மேலும் சமூகத்தில் எல்லாம் வெளிவந்து பங்கெடுக்க வேண்டும் அதன்வழியே அவர்களுக்குப் பொருத்தமான, தேவையான பங்கெடுப்பு கிட்டும் என்பதெல்லாம் கருத்தளவில் சரிதான், ஆனால் ஆண்கள் குடும்பங்களில் அதிகப் பொறுப்பெடுத்து, குழந்தை வளர்ப்பிலிருந்து, சமையல், வீட்டைச் சுத்தம் செய்வது, துணிகளைத் துவைப்பது என்பன போன்ற பல வேறு நச்சு வேலைகளிலும் பங்கெடுத்தால் பெண்களுக்கு வெளி உலகில் போய் பங்கெடுப்பது சாத்தியமாய் இருக்கும்.

  தவிர பெண்களுக்குப் புத்தி மட்டு, உடல்வலு குறைவு, எளிதில் வசப்படுத்தலாம், ஒரு முறை கற்பழித்தால் அடங்கி விடுவாளுக இத்தியாதி ரகச் சிந்தனைதான் இன்னமும் இந்தியாவிலும், பல இதர நாடுகளிலும், குறிப்பாக இஸ்லாமிய நாடுகளிலும் பரவலாக உள்ளது. இவற்றைக் களைவது ஆண்களின் கடமை, பெண்களின் கடமை அல்ல. இவை அவர்களது பொதுவெளிப் பங்கெடுப்பை வெகுவாகக் குறைக்கின்றன.
  எப்படி இந்துக்களின் பொதுவெளிப் பங்கெடுப்பு இஸ்லாமியர், கிருஸ்தவர்களின் பங்கெடுப்போடு ஒப்பிட்டால் மிகக் குறைவாகவும், வன்முறையைக் கண்டால் ஓடி ஒளிபவராகவும் அமைகிறதோ அதே காரணங்கள். பல நூறாண்டு அடிமை வாழ்வு இன்னமும் இந்துக்கள் மனதிலிருந்தும், மதிப்பீடுகளிலிருந்தும், அரசமைப்பிலிருந்தும் மறையவில்லை. அந்த வகைத் திணிக்கப்பட்ட கோழைத்தனம், enforced sumbmissiveness, பெண்கள் மனத்திலிருந்தும், வாழ்க்கை மதிப்பீடுகளில் இருந்தும், எதிர்காலத்துக்கான நோக்கிலிருந்தும் போக இன்னும் பல பத்தாண்டுகள் ஆகலாம். அதுவரை தம்மைச் செப்பனிட்டுக் கொண்டு உண்மையான சமத்துவத்தை நோக்கி தூல வெளியிலும், அகவெளியிலும் பயணிக்க ஆண்களுக்குக் கடமை உள்ளது.

  இது தவிர பெண்களை இந்து சிந்தனை அவர்களுடைய உறவு வடிவுகள் மூலமே பார்ப்பது என்பதைச் சிலாகிக்கிறீர்கள். அதனளவில் அதை ஒரு பகுதித் தெளிவு (partial clarity) என்றுதான் என்னால் பார்க்க முடியும். என் நண்பர்களில் பல பெண்ணிய வாதிப் பெண்கள் உண்டு. அவர்கள் இந்த அறிக்கையைக் கேட்டால் எரிச்சலடைவார்கள். ஏனெனில் பாத்திரம் வகிப்பதைத் தவிர அவற்றுக்கு மேலெழுந்து தம்மளவில் தனிநபர்களாகவும், செயல்படும் அறிவாகவும், சமூக சிந்தனையாளராகவும், கலைத் திறனாளிகளாகவும் எழுத்தாளர்களாகவும் எல்லாம் பெண்களுக்கு ஆண்களளவு அல்லது இன்னமும் கூடுதலாகக் கூட செயல்பாடு உண்டு, அவற்றைச் சாதிக்கும் திறனும் உண்டு. குடும்பத்திலேயே அவர்களைச் சிறைப்பிடிப்பது அவர்களுடைய மனிதத்துக்கு நியாயம் செய்ததாகாது. இதையும் ஆண்கள் உணர வேண்டும் என்பார். பெண்களைத் தெய்வமாகக் கும்பிடுவதால் எதார்த்தத்தில் உள்ள பெண்களுக்கு ஒரு பயனும் இல்லை. ஆண்கள் பெண்களைத் தெய்வமாகக் கும்பிடுவதை இந்தப் பெண்ணிய வாதிகள் சிறிது இளப்பமாகக் கூடக் கருத வாய்ப்புண்டு. தாமாக மனித இனத்தை விருத்தி செய்ய முடியாத ஆண்களுக்குப் பெண்கள் மூலம் அடுத்த தலைமுறை தொடர்வதைக் கண்டு இன்னமும் பெருவியப்பு உள்ளது என்றுதான் அவர்கள் அதைப் பார்க்கிறார்கள்.

  இதில் பல பரிமாண்ங்கள் உள்ளன. அவற்றைப் பற்றிப் பேச இங்கு இடம் போதாது. தம்போன்றவரே பெண்கள் என்று ஆண்கள் சகஜமாகக் கருத உலகெங்கும் பெரும் பண்பாட்டு மாறுதல்களும், சிந்தனைத் தெளிவும் நிகழ வேண்டும். அதை நாம் அறிந்து இந்து சிந்தனையை முன்னெடுத்துப் போனால், இதர எல்லா கருத்தியல்களையும் நாம் புறங்கட்டி இந்தியரை அவற்றுக்குப் பலியாகாமல் காக்க முடியும்.

  சுரேஷ் ராம் என்பவர் சொன்னதில் ஒரு உண்மை இருக்கிறது. அது போலிப் பெண்ணுரிமை இயக்கம் என்பதால் என்கிறார். அதனால் என்று நான் கருதவில்லை. தம்மைப் பலியாடுகளாகவே பாவித்து அந்தப் பாத்திர வகிப்பு மூலமே ‘நீதி’ பெறமுடியும் என்ற ஒரு பாதையைப் போட்டு விட்டனர் பல பெண்ணிய வாதிகள். எல்லாக் கருத்தியல் பாதைகள் போலவும், அதில் பயணிப்பவர் அனைவரும் நேர்மையானவராக இருக்க அவசியம் இல்லை.

  எப்படி வக்கிரங்கள் இந்துத் துறவறத்தைச் சீரழிக்கின்றனரோ, எப்படிக் கிருஸ்தவ உலக சிந்தனையை அதிகார வெறியர்களும், கொலைஞர்களும் பயன்படுத்தி உலகை ஆக்கிரமிக்கத் துடிக்கிறாரோ, அதே போல பெண்ணியத்தின் போர்வையில் ஒளிந்து பிறரைச் சுரண்ட நினைக்கும் பெண்களும் நிச்சயம் இருக்கவே செய்வர். அது சட்டம், நீதி ஆகியன நன்கு செயல்படும் ஒரு அமைப்பில்தான் அனேகமாகத் தடுக்கப் பட முடியும். எந்த அமைப்பிலும் துளியாவது அநீதி ஜெயிக்கவே செய்யும். அது stochastic reasoning தெரிந்த எவருக்கும் புதுக் கருத்தாக இராது.

 6. //தம்மைப் பலியாடுகளாகவே பாவித்து அந்தப் பாத்திர வகிப்பு //

  We recognize and affirm:

  The existence of natural differences as well as the biological and chemical attraction between the genders.

  The necessity of cooperation between the genders, and at the same time the inevitability of conflicts of interest between them.

  The scientific inconsistency and dubious morality of any claim by one gender to describe the state, condition, needs, experiences, or the value of the other gender.

  We reject all patriarchal beliefs of men and women which attribute traits of low esteem, self pity, vagrancy, vulnerability and helplessness to women as a group, and presumptions that ALL women are inherently incapable of committing harassment, violence and crimes.

  We also reject patriarchal attitudes which impose and enforce duties and responsibilities on men, and indulge women with irrational protection and privileges.

  The importance of family for the well-being of men, and at the same time, the need to redefine roles for men and boys considering the fact that women have transcended their traditional roles and barriers within the family.
  https://aimwa.in/aimwa-charter

 7. பெண்ணை அடிமைபடுத்துவதும் தவறு, பெண்ணுக்கு அடிமை ஆவதும் தவறு. ஆண் பெண் சமம் இதுவே அம்மையப்பனின் தாரக மந்திரம். நாம் அர்த்தனாரிஸ்வரரின் பிள்ளைகள் என்பது மறுககலாகாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *