மீண்டும் ஒரு சிறுமி எரிக்கப்பட்டாள்

மூலம்: தருண் விஜய்
தமிழில்: ஆர்.கோபால்

hisar-caste-atrocities

அநாதரவான ஒரு தலித் பெண் எரிக்கப்பட்டது, பணம் செழித்தவர்களும் அரசியல் அதிகாரம் மிக்கவர்களும் விளையாடும் ஐபிஎல் சாக்கடை பற்றிய செய்திகளைவிட எந்த விதத்தில் முக்கியத்துவம் குறைந்தது? ஊழல்வாதிகளைப் பற்றிய செய்திகள் முதல் பக்கத்தில் வருவதும், அரசாங்க அதிகாரத்தின் அராஜக ஏஜெண்டுகள் செய்த இந்த தலித் பெண்ணின் கொலை செய்தித்தாள்களில் இடம் பெறாமலேயே போவதும் ஏன் நடக்கிறது?

ஐந்து வருடங்களுக்கு முன்னால், கோஹானா நடந்தது. இப்போது ஹிஸார். நான் கோஹானா பற்றி எழுதியதை பிடிஐ வெளியிட்டது இங்கே.

தலித்தின் நாய் பற்றி தலித்தும் ஜாட்டும் செய்த வாக்குவாதம் ஹிஸார் மாவட்டத்தில் கட்டுப்படுத்த முடியாத வன்முறைக்கு இட்டுச்சென்றது. புதன் கிழமை ஊனமுற்ற ஒரு தலித் பெண்ணும் அவளது தந்தையும் உயிரோடு எரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வியாழக்கிழமை மாவட்டம் முழுவதும் பதட்டம் நிலவுகிறது.

என்னுடைய ஜாதி மற்ற இந்துக்களின் ஜாதியை விட உயர்ந்தது என்று கருதுபவர்கள் காலம் புதைத்துவிட்ட காட்சிப்பொருள்கள்; காப் மக்களைப் போல. தங்களை மேல்ஜாதியினர் என்று அறிவித்துக்கொள்பவர்கள்தான் உண்மையில் கீழ்ஜாதியினர் .

தங்களை மேல்ஜாதி என்றும் மற்றவர்களை கீழ்ஜாதி என்றும் அழைக்க இவர்களுக்கு யார் உரிமை கொடுத்தது? தங்களை மேல்ஜாதி என்று கூறிக்கொள்பவர்கள் உண்மையில் மானுட மதிப்பீடுகளில் கீழானவர்களாக இருக்கிறார்கள். இந்து என்று தங்களைக் கூறிக்கொண்டே இந்து அறத்தினைக் கேவலப்படுத்துகிறார்கள்.

ஹிஸார் நிகழ்வு இந்த நாட்டைக் கோபப்படுத்தவேண்டும். ஆனால் அதுவோ ஐபிஎல் சேற்றில் மூழ்கிக்கிடக்கிறது. நமது போலி ஜனநாயகம் ஜாதி வெறியையும் பணக்கொழுப்பையும் தூண்களாகப் பெற்றிருக்கிறது. வால்மீகிகள் மற்றும் பழங்குடியினர் ஆகிய இந்த நாட்டின் விளிம்பு நிலை மக்களே இந்த நாட்டின் பெரும்பான்மையானவர்கள். இருப்பினும், அவர்கள் இந்த நாட்டின் பிரச்சினைகளில் முடிவெடுப்பதிலிருந்து ஒதுக்கப்பட்டிருக்கிறார்கள். ஒருபக்கம் அவர்கள் வெறுக்கப்படுகிறார்கள். மறுபக்கம், அதிகாரம் செலுத்தும் இரண்டு மூன்று ஜாதிகளைக் கொண்ட கூட்டணிகள் அவர்களுக்குப் பிச்சை போடுவதன் மூலம் அடக்க முயற்சிக்கின்றன.

“ஆமாமாம்.. அவர்களையும் சேர்த்துக்கொள்ளவேண்டும். எஸ்.ஸியையும் சேர்க்கவேண்டியிருக்கிறதே… “ அதிகாரம் செலுத்தும் சபைகளில் எரிச்சலூட்டும் இந்த வார்த்தைகளைக் கேட்கிறோம். தலித் தலைவர்களும் போலிகள். மற்ற ஜாதிகளைப் பற்றிய விஷத்தைப் பரப்புவதன் மூலம் தங்களது அதிகாரத்தையும் புகழையும் நிலைநிறுத்திக்கொள்ள விழைகிறார்கள். கடுமையான அசிங்கமான பேச்சுகள் மூலம் தங்களது ஜாதிகளைப் பற்றிய கேவல உணர்வை மற்ற ஜாதிகளிடம் பரப்புகிறார்கள். தீவிரவாத ஜிகாதி இஸ்லாமியக் குழுக்களுடன் உறவுகொண்டு இந்து ஒற்றுமைக்கு ஊறுவிளைவிக்க முயல்கிறார்கள். இந்தத் தலைவர்களில் ஒருவர்கூட தங்களது சமுதாயத்திற்கு நல்ல பள்ளிக்கூடங்களை அமைப்பதையோ, அவர்களுக்கு மருத்துவ உதவி, சுகாதார அமைப்புகளை உருவாக்குவதையோ செய்வதில்லை. தங்களுக்கு எம்.எல்.ஏ, எம்.பி பதவி கொடுக்கவிரும்பும் மற்ற ஜாதித் தலைவர்களின் கால்களை நக்கியோ தங்களது ஜாதியின் உரிமைகளை விட்டுக்கொடுத்தோ அரசியலதிகாரத்தின் மேலே ஏறவே விரும்புகிறார்கள்.

ஜாதிகளற்ற சமுதாயம் அமைக்கவிரும்புவதாக நீட்டி முழக்கிப் பேசுபவர்களில் சிறந்தவர்களேகூட கீழ்ஜாதி என்று சொல்லப்படுபவர்களிடம் ஆழமான வெறுப்புக் கொண்டவர்களாக இருப்பதைப் பார்த்திருக்கிறேன். நான் ஆர்.எஸ்.எஸ்ஸில் கற்றுக்கொண்டதன் பேரில் என்னுடைய பெயரில் உள்ள ஜாதி அடையாளத்தைத் துறந்தேன். ஆர்.எஸ்.எஸ்ஸில் கற்றதன் அடிப்படையில் என்னுடைய இந்து சகோதரர்களின் உரிமைக்குரலை நான் ஒலித்த போதெல்லாம், அதிகாரத்தில் உள்ளவர்களால் அச்சுறுத்தப்பட்டேன்; தாக்கப்பட்டேன். இன்று ஒரு தலித் பெண் எரிக்கப்பட்ட விஷயத்தை எடுத்துப் பேசவோ, இந்து சமுதாயத்தை எதிர்நோக்கியுள்ள சவால்களை ஆராயவோ போலியாக தங்களை உயர்ஜாதி என்று அழைத்துக் கொள்ளுபவர்களின் கூட்டமைப்புகள் நடத்தும் தொலைக்காட்சி நிலையங்களாலும், பத்திரிகைகளாலும் முடியவில்லை. இப்படிப்பட்ட செய்திகளைப் பேசாமல் ஒரு கள்ளமௌனம் சாதிக்கின்றன. சானியா ஷோயப் திருமணத்தைப் பற்றியும், ஐபிஎல்- தரூர் மசாலாவையும் விநியோகித்து தங்களது கடமைகளை ஆற்றும் இந்த சேனல்கள் தலித்துகள், முக்கியமாக வால்மீகிகள் மீதான வன்கொடுமை தாக்குதல்களை ஆயிரம் செய்திகளில் ஒன்றாக மென்று முழுங்கிவிட்டு கடுமையான மௌனத்தில் ஆழ்ந்திருக்கின்றன.

dalits1ஷெட்யூல்ட் வகுப்பினர், ஷெட்யூல்ட் பழங்குடியினர் என்று நாம் குறிப்பிடும் மக்கள் மீது வெறுப்பையும், இன்னும் அதிகமாகச் சொல்லப்போனால், விலகி நிற்கும் மனநிலையையும் நாம் நமது தினசரி வாழ்க்கையில் கொண்டிருக்கிறோம். மேல்ஜாதிகள் என்று கூறிக்கொள்ளும் குழுவினருக்குக் கொடுக்காமல் ‘பிடுங்கி’ இவர்கள் எப்படிப்பட்ட வசதிகள், சலுகைகளை பெற்றுகொண்டிருக்கிறார்கள் என்ற வாதங்களை எல்லாம் நான் அறிவேன். மேல்ஜாதிகள் என்று கூறிக்கொள்ளும் குழுவினரில் எவ்வளவு பேர்கள் வசதிவாய்ப்பின்றி வறுமையில் அன்றாடங்காய்ச்சிகளாக இருக்கிறார்கள் என்ற வாதங்களையும் அறிவேன். இப்படிப்பட்ட போலி வாதங்களுக்கெல்லாம் என் பதில்-

“அதிகார வர்க்கத்தில் உள்ளவர்களில் நண்பர்களோ, சொந்தக்காரர்களோ இல்லாமல் ஒரு தீண்டத்தகாதவராக, உதாசீனம் செய்யப்பட்டவராக, “இந்த ஏழைகளுக்கு ஏதாவது போடு” என்று உங்களை உதாசீனம் செய்யும் நிலையில் ஒரே ஒரு நாள் வாழ்ந்து பாருங்கள். அலுவலகங்களில் வேலை மந்தமாக நடப்பதற்குக் காரணம் காட்டப்படுபவர்களாகவும் முட்டாள்களாகவும் மற்றவர் போடும் பிச்சையில் வாழ்பவர்களாகவும் நீங்கள் வாழ்ந்து பாருங்கள். அதன் பின்னால், வால்மீகியாக வாழ்வது என்றால் என்ன என்று உணருங்கள். பொருளாதார ரீதியில் ஏழையாக வாழ்வது மோசமானதுதான். ஆனால், ஏழையாகவும் தீண்டத்தகாதவராகவும் வாழ்வது என்பது மனிதத்தன்மையே மறுக்கப்பட்டு வாழ்வது. இதில் இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுங்கள்”

untoucability-practiceஇந்து மதப் புத்தகங்களையும், சமத்துவத்தையும் ஒற்றுமையையும் பேசாமல், உங்களது பரந்த மனதையும், அனைவரையும் அரவணைத்துச் செல்லும் பழக்கத்தையும் சுயபரிசோதனை செய்துகொள்ள இங்கே ஒரு பரிசோதனை இருக்கிறது. வெறுமே கீதையையும் இராமாயணத்தையும் வால்மீகிகளிடம் சொல்லவேண்டாம். அவர்களுக்கு அதில் என்ன எழுதியிருக்கிறது என்பதும் தெரியும், அவற்றை நீட்டி முழக்கும் சமத்துவ சொற்பொழிவாளர்கள் நடைமுறையில் பயன்படுத்துவதில்லை என்பதும் தெரியும்.

1. தீண்டத்தகாதவர்கள் என்று சொல்லப்படுபவர்களோடு இணைந்து தீபாவளியையோ அல்லது ரட்சா பந்தன் (ராக்கி) விழாவையோ நீங்கள் கொண்டாடியிருக்கிறீர்களா?

2. உங்களுடைய நெருங்கிய நண்பர் வட்டார வரிசையில் நீங்கள் அடிக்கடி குடும்பத்தோடு செல்லும் வீடுகளில் எவ்வளவு வீடுகள் தீண்டத்தகாதவர்கள் என்று சொல்லப்படுபவர்களின் வீடுகள்?

3. உங்கள் வீட்டு பூஜைகளிலும் குடும்பக் கொண்டாட்டங்களிலும், உங்களோடு இணைந்து உட்கார்ந்து புரோகிதரோடு இணைந்து, இப்படிப்பட்ட ‘தீண்டத்தகாதவர்கள்’ எத்தனைபேர் பங்கெடுத்துக்கொள்கிறார்கள்?

4. உங்களது மகள் ஒரு வால்மீகியைத் திருமணம் செய்ய விரும்பினால், நீங்கள் அனுமதிப்பீர்களா அல்லது அனுமதி மறுப்பீர்களா?

5. உங்களைச் சுற்றியும் உங்களது மூதாதையர்களைச் சுற்றியும் இருந்த இந்த மக்கள் நல்லவிதமாய் நடத்தப்பட்டதில்லை–

இன்று அவர்கள் எப்படி தம் வாழ்க்கையை வாழ்கிறார்கள் என்று அறிந்துகொள்ள எப்போதேனும் முயற்சி செய்தீர்களா?

தீண்டதகாதவர்கள் என்று சொல்லிஅவர்களை தொட அருவருக்கிறீர்கள். உங்களது குழந்தைகள் படிப்பது போன்ற பள்ளிகளில்தான் அவர்களது குழந்தைகளும் படிக்கிறார்களா?

பிறகு அரசாங்கம் அவர்களுக்கு ஏராளமான சலுகைகளையும் வசதிகளையும் தருகிறது என்று கோரஸில் முழங்குகிறீர்கள்? உங்களுடைய ஒரே பாவம் நீங்கள் “மேல்ஜாதியில்” பிறந்ததுதான் என்று புலம்புகிறீர்கள்.

6. நீங்கள் ஏன் “மேல்ஜாதி” என்றும் மற்றவர்கள் ஏன் “கீழ்ஜாதி” என்றும் விளக்க முடியுமா?

7. தற்போதைய பூசாரிகள் அமைப்பு சீரமைக்கப்படவேண்டும் என்றும், சமஸ்கிருதத்திலும் பொது அறிவிலும் சிறந்தவர்களாக இருக்கவேண்டுமென்றும், அவர்கள் தட்சிணை அதிகம் பெற வேண்டும் என்றும், வால்மீகி இளைஞர்கள் இந்த வேலைக்கு நன்றாகப் பயிற்சி அளிக்கப்பட்டு ஹரித்வார் போன்ற பெரிய கோயில்களிலும், தீர்த்தயாத்திரை ஸ்தலங்களிலும் பூசாரிகளாக அமர்த்தப்படவேண்டும் என்றும் விரும்புகிறீர்களா? தகவல் தொழில்நுட்பத் துறை, மருத்துவக் கல்வி போலவே பூசாரிகளாக ஆவதற்கும் அனைத்து இந்து சமூகத்தினருக்கும் அனுமதி இருக்கவேண்டும் என்றும், அதில் ஜாதிவாரிப் பிரிவினை இருக்கக்கூடாது என்றும் விரும்புகிறீர்களா?

8. எத்தனை ஆஸ்ரமங்கள், ஆன்மிகப் புத்துணர்வு மையங்கள் வால்மீகி மக்களையும் பழங்குடி மக்களையும் தங்களது பக்தர்களாகவும் சமமான பங்கெடுப்பாளர்களாகவும் ஏற்றுக்கொள்ளும்? உங்களது ஜாதிகளை விட அதிகமாக இருக்கும் இவர்கள் இங்கே மிகவும் குறைவானவர்களாகவே பங்கெடுக்க அனுமதிக்கப்படுகிறார்கள் என்பது உங்களை உறுத்தவில்லையா?

9. இந்த ஆஸ்ரம சுவாமிகளிடம், இவர்கள் கடந்த 10 வருடங்களில் எத்தனை முறை வால்மீகிச் சேரியிலோ அல்லது அவர்களைப் போன்ற மக்கள் வாழும் பழங்குடி மக்களிடமோ தர்மம், கலாசாரம் ஆகியவற்றைப் பேசியிருக்கிறார்கள் என்று கேட்டதுண்டா? அந்த இடங்களுக்கும் ஆன்மிகக் கல்வி முதற்கொண்டு அனைத்தும் செல்லவேண்டும் என்று விரும்பியதுண்டா?

10. நமது பொது முன்னோர்களால் பஞ்சமர்கள் என்று அறிவிக்கப்பட்டவர்களின் சந்ததியர்களுக்கு தற்போது நல்ல வாழ்க்கை வேண்டுமென்று கருதி, அவர்களுடைய வீடுகளுக்குச் சென்று அவர்களது நிலைமையை கண்டு அவர்களுக்கு ஒரு நட்புக்கரம் நீட்டியதுண்டா?

வேறெந்த உதவியும் செய்யாவிட்டாலும் பரவாயில்லை, குறைந்தது ஒரு நட்புக்கரத்தை நீட்டும் இந்தச் செயலையேனும் செய்ய வேண்டும்; அது உண்மையில் சேவை கிடையாது; நம்முடைய மூதாதையர் தங்களது அன்றைய நெறிகெட்ட செயலுக்கு வருத்தப்பட்டுக்கொண்டிருப்பர் என்று கருதி செய்யப்படும் பரிகாரச் செயல் அது. யாரையும் காயப்படுத்த இதை எழுதவில்லை. தாசில்தாரின் ஜாதியில் இல்லாமல் வேறு ஜாதியில் பிறந்த ஒரே காரணத்துக்காக அங்கஹீனமடைந்த அந்தச் சிறுமி கருகி சாவதற்கு உதவி வேண்டிக் கதறிய இறுதிக் கூக்குரலைக் கேட்க முயலுங்கள் என்றே கூறுகிறேன்.

இந்த கட்டுரையின் இறுதி வரிகளாக ஒன்று சொல்கிறேன்…

தீர்வு: ஏராளமான தலித் பத்திரிகையாளர்களை உருவாக்குவோம்.

இட ஒதுக்கீடு என்ற ஊன்றுகோல் இல்லாமல், ஏராளமான தலித் மற்றும் பழங்குடி இளைஞர்கள் மைய நீரோட்ட ஊடகங்களில் பத்திரிகையாளர்களாக ஆவதற்கு உதவுவது எனக்கு தெரிந்த ஒரு நல்ல தீர்வு. பல்வேறு ஜர்னலிஸப் பள்ளிகளில் மல்ட்டி மீடியாவில் பயிற்சி கொடுக்க வையுங்கள். நான் தேசிய ஜர்னலிஸப் பல்கலைக்கழகத்தின் வாரிய உறுப்பினராக (போர்டு மெம்பராக) இருக்கிறேன். என்னால் உதவ முடியும். மற்றபடியும், இதற்காகவே உருவாக்கப்பட்ட படிப்புத்துறைகளிலும் ஏராளமான இளைய நண்பர்களுக்கு உதவ முடியும். எல்லாத் திசைகளிலும் உதவ ஏராளமான நண்பர்கள் இருக்கிறார்கள். இப்போது நாம் பார்க்கும் பெரிய இடைவெளியை நிரப்ப இது உதவும். நமது சேனல்களிலும், பத்திரிகையாளர்களிலும், மீடியா அலுவலங்களிலும் இவர்களைக் காண்பதில்லை. ஏன்?

“அவர்கள் தன் திறமை மூலம் வரவேண்டும்,” என்ற குப்பை வாதத்தை முன்வைக்காமல் இதற்கு ஒரு தீர்வைக் கண்டுபிடிக்க முயலுவோம்.

tarun_vijayபிரபல பத்திரிகையாளரும், கட்டுரையாசிரியருமான தருண் விஜய், உலகெங்கும் உள்ள இந்துக்களின் சமூக அரசியல் பிரசினைகள் குறித்து தொடர்ந்து எழுதி வருபவர்.  ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின்  முரசான “பாஞ்சஜன்ய” இதழின் ஆசிரியராக  நெடுங்காலம் பணியாற்றியவர்.  தற்போது புதுதில்லியில் இயங்கும் “டாக்டர் சியாமாபிரசாத் முகர்ஜி ஆய்வு மையத்தின்” இயக்குனரும் ஆவார்.

15 Replies to “மீண்டும் ஒரு சிறுமி எரிக்கப்பட்டாள்”

  1. கட்டுரையின் இறுதியில் அமைந்துள்ள பத்து வினாக்களும் நம்மை நாமே ஆன்ம சோதனை செய்து கொள்ளும் வினாக்கள். இந்துக்களின் ஆன்மபலத்துக்கு வழிகாட்டும் வினாக்கள். ஒவ்வொரு இந்துவும் இவ்வினாக்களுக்கு , எல்லா வினாக்களுக்கும் இல்லாதபோனாலும் சில வினாக்களுக்காவது செயல்முறையில் விடைகண்டால் இந்து சமுதாயம் வலிமையும் ஆற்றலும் பெறும்.

  2. ஹிந்துக்கள் ஒற்றுமையை பலப்படுத்த இவர்களின் முன்னேற்றம் முக்கியம்!

  3. தமிழ் ஹிந்து ,இஸ்லாம் என்று சொல்லி கொள்வதற்கும் ….கீழ்ஜாதி ,உயர்ஜாதி என்று சொல்லி கொள்வதற்கும் பெரியதாக வேறுபாடு இருப்பது போல தோன்ற வில்லையே …………..

  4. ஹிந்து சமுதாயம் சாதியத்தை வேரும் வேரடி மண்ணுமற களைய வேண்டும்.

  5. கழனியில் முளைத்திருக்கும் களைகளை நீக்காவிடில் கழனிப் பயிரும் பாதிக்கப்படும்.

  6. சாதியத்தை ஒழித்தபின் ஹிந்து என்பதில் கண்டிப்பாக பெருமை கொள்ளமுடியும். நடக்குமா ? மனமாற்றம் ஏற்பட எவ்வளவு காலம் தேவை ? நூறு ? ஐநுறு வருடங்கள் ?

  7. //சாதியத்தை ஒழித்தபின் ஹிந்து என்பதில் கண்டிப்பாக பெருமை கொள்ள முடியும். நடக்குமா ? மனமாற்றம் ஏற்பட எவ்வளவு காலம் தேவை ? நூறு ? ஐநுறு வருடங்கள் //

    அய்யா உலகம் முழுவதும் சாதியமும் பிறப்படிப்படையில் தான் உயர்ந்தவன் என்பதும் இருக்கிறது. இந்தியாவில் மட்டும்தான் அதை எதிர்த்து போராடுகிறோம்…குறைந்த பட்சம் தங்கள் மதங்களில் இருக்கும் குறைகளை வெளிப்படையாக பிற மதங்கள் பேசக்கூட இயலாத சூழலில் ஜனநாயகத்தன்மையுடன் அதனை களையக்கூடிய வலு ஹிந்து தர்மத்துக்கு இருக்கிறது. சாதியம் ஹிந்து தர்மத்தின் மீது ஏற்றப்பட்ட ஒரு சமூக பொருளாதார அநீதிதானே தவிர ஹிந்து தர்மத்தின் அங்கம் அல்ல. சாதியத்தை வளர்ப்பதில் ஓட்டு வங்கி அரசியலுக்கும் பெரிய பங்கு இருக்கிறது. வெறுப்பை வளர்ப்பதன் மூலமும் ஒரு குறிப்பிட்ட சாதியின் மீது பழியை போட்டுவிட்டு தலித்துகள் வாயில் மலம் திணிக்கும் கட்சிக்காரர்களை கொண்டிருக்கும் கட்சிகள் மூலமும், லல்லுபிரசாத் யாதவ்களும், கருணாநிதிகளும் சமூகநீதி என்கிற பெயரால் வ்ளர்த்து விடும் ஆதிக்கசாதி ஓட்டுவங்கி அரசியல் மூலமும் அது நடக்காது. அத்தகைய வெறுப்பு சித்தாந்தங்களுக்கும் இனவாத சட்டகங்களுக்கும் ஒத்து ஊதி போலித்தனமான செய்கைகளில் ஈடுபடுபவர்களாலும் அது இயலாது. சாதியத்தை அழிப்பது ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகளால்தான் சாத்தியமாகும்.

  8. //…. சாதியத்தை ஒழித்தபின் ஹிந்து என்பதில் கண்டிப்பாக பெருமை கொள்ளமுடியும். நடக்குமா ? ….//

    நடக்கும். சாதியால் பொருளாதார பலன் கிடைக்காது என்ற நிலமை எப்போது வருகிறதோ, அப்போது நடக்கும்.

    சாதியைத் தோற்றுவித்ததோ, பாதுகாப்பதோ இந்து மதம் இல்லை. இந்து சமூகத்தில் “சாதி” என்பது வெறும் சமூக-பொருளாதாரக் காரணிகளாலேயே உருவாக்கப்பட்டது. உயிர் வாழ்கிறது. இந்த அமைப்பால் பலன் பெறும் அனைத்துச் சாதியினராலும் அது பாதுகாக்கப்படுகிறது. இதை அண்ணல் அம்பேத்கர் தனது நூல்களில் உறுதிப்படுத்துகிறார்.

    இந்த சாதியும், சாதிவெறியும் இருந்தால்தான் இந்து மதத்தை அழிக்கும் தொழில் நடக்கும். அந்தத் தொழிலில் செய்பவர்களின் வாழ்க்கை வளமாக இருக்கும். அதனால்தான் கிறுத்துவ, இசுலாமிய, மற்றும் கம்யூனிசவாதிகள் சாதிக்கு எதிராகக் கோசம் போட்டுக்கொண்டே அது அழிந்துவிடாமல் பாதுகாக்கின்றனர்.

    அவர்களைப் போலவே சாதி வெறிமிக்க இந்துக்கள், தங்களின் பொருளாதார லாபத்திற்காக அதை அழியவிடாமல் பாதுகாக்கின்றனர்.

    சாதி என்ற ஒரு அமைப்பு பொருளாதார லாபம் தரும்வரை அந்தப் பொருளாதார லாபத்திற்காக அதைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, அதைப் பாதுகாக்க விரும்புபவர்கள் பாதுகாக்கவே முயல்வார்கள்.

    அவர்களைத் திருத்த முடியாது. ஆனால், அவர்களது சாதி மனப்பான்மையை வெளிச்சம் போட்டுக் காட்டலாம். அதன் குறைகளை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லலாம்.

    //……மனமாற்றம் ஏற்பட எவ்வளவு காலம் தேவை ? நூறு ? ஐநுறு வருடங்கள் ?….//

    மற்றவர்களுக்கு ஏற்படுவது, ஏற்படுத்துவது ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால், நமக்கு மனமாற்றம் ஏற்பட ஒரு நொடி போறும்.

    நமக்கு ஏற்பட்ட மனமாற்றத்தை அஞ்சாமல் நடைமுறைப்படுத்தினால் நமது குடும்பத்தில், உறவுகளில் ஒரு ஐந்து வருடங்களில் ஏற்பட்டுவிடும்.

    நான் பார்த்தவரை, மற்ற இந்துக்களிடம் இருக்கிற சாதிவெறி ஆர்.எஸ்.எஸ் காரர்களிடம் இல்லவே இல்லை. “இந்து” என்ற அடையாளத்தை ஏற்றுக்கொள்வதன் மூலம், அவர்களுடைய சாதி என்னும் கிணற்றுத் தவளை மனப்பான்மை தானாகவே கழன்றுவிடுகிறது.

    இந்து மதம் பற்றிய உண்மைத் தகவல்கள் அவர்களுக்கு மீண்டும் மீண்டும் சொல்லப்படுவதாலும், எந்தவித ஒளிவு மறைவுமின்றி உரையாட திறந்த மனத்தோடு இருப்பதாலும் ஆர்.எஸ்.எஸ் சார்ந்தவர்கள் பலர் சாதியுணர்விலிருந்து தப்பித்து விடுகின்றனர்.

    தனது சமீபத்திய அறிக்கையில்கூட ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் கலப்புத் திருமணம் செய்வதன் முக்கியத்துவத்தை, அவசியத்தை இந்தியர்களுக்குத் தெரிவித்துள்ளார்.

  9. சிலர் தாங்கள் மேல் ஜாதியினர் என்று என்னும் நிலை உடனடியாக ஒழிக்கபட வேண்டும். அதே போல் தாழ்த்தப்பட்ட மக்கள் தாங்கள் கிழ் ஜாதியினர் என்று என்னும் நிலையும் உடனடியாக ஒழிக்க பட வேண்டும்.
    அனைவரும் சமம் என்ற நிலை எட்டப்படவேண்டும். இங்கே கூட்டங்களை கூட்டி சண்டை போடுவது தடுத்து நிறுத்த படவேண்டும்.

  10. good article.

    One thing to remember or analyze is who OR which caste is getting profit from the caste system. That will reveal the root cause.

  11. பதிவு மிக அருமை. தமிழ் ஹிந்து தளத்தின் பலமே இது போன்ற பதிவுகள்தான். வாழ்த்துக்கள்!

  12. தமிழ்ஹிந்துவின் மிகச்சிறந்த பதிவு. RV யே பாராட்டியிருக்கிறாரென்றால் மிக மிக மிக சிறந்த பதிவுதான் இது.

  13. one thing is for sure.
    We cannot say which caste is profiting from the socalled caste system
    we can say that the brahmin caste is not profiting from the socalled caste system.
    also the very poor people in villages are not getting any benefit even though there is reservation for the backward.

    But the politicians are reaping a rich harvest by talking of caste.
    it is wrong to call it a ‘system’
    who thinks about caste except when they conduct marriages ?
    But in some rural areas it plays havoc when the so-called lower castes are discriminated against in the name of caste.
    it is the only negative effect of caste in the present day

  14. மிக அருமையான கட்டுரை. மனித இனத்தில் யாரும் யாரையும் விட உயா்ந்தவரும் இல்லை. தாழ்ந்தவரும் இல்லை. ஒவ்வொருவருக்கும் ஒரு தனிச்சிறப்பு இருக்கும். இதை அறியாமல் படித்தவன் படிக்காதவனையும், பணக்காரன் ஏழையையும், அதிகாரி தனக்கு கீழ் இருப்பவனையும் கேவலமாக நினைக்கிறார்கள். இந்த மனோபாவம் நீங்க வேண்டும். தெரு ஓரங்களில் இருக்கும் மனநிலை பாதிக்கப்பட்டவா்களைக்கூட ஏளனமாக நினைக்கக்கூடாது. பகவான் இராமகிருஷ்ணா் பிறர் பார்வைக்கு பைத்தியமாகத்தான் தெரிந்தார். தன் மதம்தான் உயர்ந்தது என்ற எண்ணமும் தவறானது. அனைவரையும் காத்து ரட்சிக்கும் இறைவன் உயிர்களிடத்தில் பேதம் பார்ப்பது இல்லை.

    இந்து சமுதாயத்தைத் திருத்த இது போன்ற கட்டுரைகள் அவசியம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *