பக்திச் சிறகால் வசப்பட்ட ஞானவானம்: காரைக்காலம்மையார்

பெரிய புராணத்தில் திகழும் காரைக்காலம்மையார் வாழ்க்கை பக்திநலம் பேணுவது. ஆன்மீக அனுபவ-உலக வரலாற்றில் அம்மையின் பார்வை தனிச்சிறப்புடையது; தனி முத்திரை உடையது.smashan-cremation
சத்தியத்தை – சிவத்தை – சுந்தரத்தை, சுடுகாட்டு அரங்கின் மைய நடனமாக அனுபவிக்கின்றது அம்மையின் மனம். பக்திச் சிறகால் வசப்பட்ட ஞானவானம் ஆன்மீக அமுதம் பொழிகின்றது.

சுடுகாடு.
கள்ளியின் புதர்களிடையே சிறு இடைவெளி.
அச்சந்திலே கால் நீட்டி இருக்கின்றது பேய்.
அதன் கை சும்மா இருக்குமா?
அருகில் எரியும் சிதையில் கைநீட்டுகின்றது.
ஒரு கடைக்கொள்ளியை இழுக்கின்றது.
இழுத்த கொள்ளிக்கட்டையை நசித்துக் குழைக்கின்றது.
கரிய மையைக் கையில் எடுக்கின்றது.
எடுத்த மையை விளக்கமாகக் கண்களில் தீட்டுகின்றது.
இப்பூச்சால் பெற்ற பெருமிதத்தாலோ அல்லது, மையின் சூட்டாலோ
கடுமையாகச் சினக்கின்றது.
சினத்தால் சிரிக்கின்றது; வெகுண்டு பார்க்கின்றது;
பார்வையோ கழுத்தைச் சாய்த்த குறுக்குப் பார்வை.
தீடீரென்று துள்ளுகின்றது;
விளைவு, சுடலைப் பிணத்தீ சுடுகின்றது.
இப்போது முழுவதும் சினந்து வெறிகொள்கின்றது பேய்.
புழுதியை அள்ளிச் சுடலையை அவிக்கத் தொடங்குகின்றது.

இக்காட்சி நடுவே, ஆலங்காடே இடமாக எம் அப்பன் ஆடுகின்றான் என்று பாடிச் சிலிர்க்கின்றார் அம்மை.

பாடல் இது:

கள்ளிக் கவட்டிடைக் காலை நீட்டி
கடைக் கொள்ளி வாங்கி மசித்து மையை
விள்ள எழுதி வெடுவெடென்ன
நக்கு வெருண்டு விலங்கு பார்த்துத்
துள்ளிச் சுடலைச் சுடுபிணத்தீச்
சுட்டிட முற்றுஞ் சுளிந்து பூழ்தி
அள்ளி அவிக்க நின்றாடும் எங்கள்
அப்பனிடந் திரு ஆலங்காடே

[கவடு = சந்தி; கடைக்கொள்ளி = கொள்ளியின் கடை;  வாங்கி = இழுத்து; கழற்றி;  மசித்து = நசித்துக் குழைத்து; விள்ள= விளங்க; வெடுவெடென்ன = கடுமையாகச் சினந்து; நக்கு = சிரித்து; வெருண்டு = அஞ்சி (நீடுநில்லாத அச்சம்);  விலங்கு= குறுக்கு; சளிந்து = சினந்து;  பூழ்தி = புழுதி]

கள்ளிக்கவட்டில் கால் நீட்டி இருக்கும் பேய் ஒரு துல்லியக் குறியீடு. உலகின் ஒப்பனைகள் கலந்திருக்கையில் கள்ளிக் கவட்டிடைக் கால்நீட்டி இருக்கும் பேயின் பிரதிபலிப்பே நாம் என்பதை உணரலாம்.

karaikkal_ammaiyarகள்ளி பற்றிய அருவருப்பும் அச்சமும் இன்றி, கால் பற்றிய பாதுகாப்புச் சிந்தனையுமின்றிக் கால்நீட்டி இருக்கும் இருப்பிலாவது நீடிப்பு உண்டா? இல்லை! அருகிருக்கும் சிதைத்தீ கையில் எட்ட, அதில் கிடக்கும் கொள்ளிக்கட்டை கைக்கு வர, அதை நசித்துக் கண்தீட்டும் காமம் மனம் முகிழ்க்க …

சுட்ட பின்புதான் தெரிகின்றது. தெரிவது சூட்டுக்குக் காரணமான நமது வினையன்று. சுற்றிக்கிடக்கும் சிதையின் தீதான் தெரிகின்றது. புழுதி அள்ளி அவிக்க முயல்கின்றது பேய்! பூச்சுக்கள் உதிர்கையில், சாயம் வெளுக்கையில், புழுதி அள்ளி அவிக்க முயலும் கைகளும் நம் கைகளே என்பது புலனாகின்றது.

கவட்டிடைக் கால்நீட்டல், கடைக்கொள்ளி மசித்தல், மையை விள்ள எழுதல், வெடுவெடென நக்கல், வெருளல், விலங்கு பார்த்தல், துள்ளல், சுட்டிட்ட பிணத்தீயினைப் புழுதி வீசி அணைத்தல் – இவை அனைத்தும் நமது உலக ஆரவாரங்களின் உண்மை முகங்கள். கற்பனைச் சிறகடிப்பில் வாழ்க்கையை மறக்கடிக்கும்  பேயுலகச் சிருஷ்டி அல்ல இது. ‘மார்க்சீய அபினி’ யும் அல்ல. திருவாலங்காட்டில் அம்மை கண்ட அக அனுபவக் காட்சியே பாடலாக மலர்ந்துள்ளது.

மற்றொரு காட்சி.

சுருண்டு சுருங்கிய மார்பகம்.  நரம்பு எழுந்த தோல். குழிவிழுந்த கண்கள். வெள்ளைப் பற்கள். பள்ளமான வயிறு. சிவந்த மயிர்கள். நீளமிக்க இரு பற்கள்; உயர்ந்த கால் கணு. இத்தகு காட்சியது பெண்பேய்.

இப்பேய் தங்குமிடம் சுடுகாடு. அங்கு அப்பேய் அலறும். கோபக்குறியுடன் ஒலிக்கும். இச்சுடுகாட்டில் தாழ்சடை எண்திசை வீச ஆடல் புரிகின்றான்; அங்கம் குளிர ஆடல்புரிகின்றான்; அனல் ஏந்தி ஆடல் புரிகின்றான். அவன் எம் அப்பன்; அவன் ஆடி அருளும் இடம் திருவாலங்காடு.

karaikkal-ammaiyarகொங்கை திரங்கி நரம்பெழுந்து
குண்டு கண் வெண்பற் குழிவயிற்றுப்
பங்கி சிவந்திரு பற்கள் நீண்டு
பரடுயர் நீள்கணைக் காலோர் பெண்பேய்
தங்கி யலறி யுலறு காட்டில்
தாழ்சடை எட்டுத் திசையும் வீசி
அங்கம் குளிர்ந்து அனலாடும் எங்கள்
அப்பன் இடம் திருவாலங்காடே

[திரங்கி = சுருண்டு; குண்டு = உருண்டை, குழி; பங்கி = மயிர்; பரடு = கால்கணு;  கணைக்கால் = முழங்காலின் கீழது; உலறு = கோபக்குறியுடன் கூவும்]

உலகத் தோற்றம் திருவாலங்காட்டில் கிழிகின்றது. உலக அரங்கின் பாத்திரங்கள் மற்றும் நிகழ்வுகளின் அடிப்படைக் கட்டமைவின் (Basic structure) புரிதலில் ருசிக்கும் அனுபவம் இது.

இப்பேயுலகின் ஊடே தான் தோய விரும்பும் ஆனந்த அனுபவ நடனக்காட்சி வழங்குகின்றது. அது எண்திசை வீசிய தாழ் சடையுடன், அங்கம் குளிர்ந்து அனலாடும் அப்பனாகக் காரைக் காலம்மையின் ‘கண்’ணுக்குப் படுகின்றது.

பேய்களின் தோற்றம் – அலறல்,  உளறல் – சுடுகாடு என்னும் காட்சி மெய்ஞானக் காட்சியாக மலர்கின்றது. ஒப்பனைகளின் ஆற்றலில், புலன்களின் பூச்சுக்களில் இவ்வுலகம் வழங்கும் காட்சி அழிகையில் – இந்த மாயாவினோதச் சாயம் வெளுக்கையில் – பீத்தோவனும், மொஸார்ட்டும் கூடப் பேய்களின் அலறலும் உளலறலும் ஆகிவிடும். ஒப்பனைகளின் அழிவில் பேயரங்கமும், அதன் மைய நிகழ்வாம் அப்பனின் ஆட்டமும் தெரிகின்றன. அந்த ஆட்டமே பிரபஞ்சத்தின் இயக்க மையம்; இலட்சிய மையம்.

பாஷோவின்
பழைய குளத்தில்
தவளை தாவிய குதிப்புக்குள் ***
கால நெடுஞ்சாலையின்
அனைத்துக் குறிப்புகளும்!

யசோதையின் அதட்டலில்
மண்ணுண்டு திறந்து காட்டிய
கண்ணனின் மாம்பழவாயில்
அண்ட சராசரங்களின்
அனைத்து இயக்கமும்!

காரைக்காலம்மையின்
திருவாலங்காட்டுப் பேயரங்கில்
அங்கம் குளிர்ந்து அனலாடும்
அப்பன் திருநடனக் காட்சியில்
அனைத்து ஆன்ம உலகின் சாராம்சமும்!

காரைக்காலில் இல்லச் சிறையில் வாழ்ந்த சிறுமிக்குள்ளே இந்தப் பார்வை எப்படி விகசிக்கிறது?
அவனருளாலே அவன் தாள் உணர்ந்தமைக்கு இதுவும் ஓர் அடையாளமா?
பக்திச் சிறகுகளுகு ஞான வானம் என்றும் வசப்படும் என்பதன் நிருபணமா?

பின்குறிப்புகள்:

*** – இங்கு குறிப்பிடப்படுவது 16ஆம் நூற்றாண்டின் ஜப்பானிய கவி-ஞானியாகிய பாஷோ (Matsuo Basho) வின் ஒரு புகழ்பெற்ற ஹைக்கூ கவிதை.  ஆழ்ந்த உட்பொருள் கொண்ட இக்கவிதை தத்துவார்த்தமாக பல தளங்களில் விளக்கப் பட்டுள்ளது.

furu ike ya / kawazu tobikomu / mizu no oto

an ancient pond
a frog jumps in
the splash of water

10 Replies to “பக்திச் சிறகால் வசப்பட்ட ஞானவானம்: காரைக்காலம்மையார்”

  1. சில வருடங்களுக்கு முன்பு நம்ம ஊர் கிறிஸ்தவ ஆங்கில டி வீ சானல்கள் ஒரு நாள் ஓவென்று அலறிக் கொண்டிருந்தன
    என்னவென்றால் -இந்தியாவின் முதல் பெண் துறவி அவதரித்து விட்டார் என்பது
    எனக்கு ஒன்றும் புரியவில்லை -மீரா பாயும்,காரைக்கால் அம்மையாரும் நூற்றுக் கணக்கான வருடங்களுக்கு முன்னமேயே இந்தப் புண்ணிய பூமியில் அவதரித்து விட்டனரே என்று குழம்பினேன்.
    அப்புறம் தான் தெரிந்தது- போப்பு கேரளாவில் அல்போன்சா என்ற ஒரு கன்யா ஸ்திரீயை செயின்ட் என்று ‘அறிவித்து ‘ விட்டாராம்!
    அவரைத்தான் இந்தியாவின் முதல் பெண் துறவி என்று நம்மை மூளை சலவை செய்து கொண்டிருந்தனர்
    என்ன அயோக்கியத் தனம்?

    முதல் கிறிஸ்தவ பெண் துறவி என்றால் கூட போகிறதென்று ஒப்புக் கொள்ளலாம் .
    ஆனால் ஒருவரை துறவி என்று ‘அறிவிப்பது’ கேலிக் கூத்தாகும்.
    நம் பாரம்பரியத்தில் அவர்கள் தங்கள் தவத்தாலும்,சீலத்தாலும்,கருணையாலும் மேன்மை அடைந்து மக்களே அவர்களை துறவி என்று அடையாள படுத்துவதுதான் வழக்கம்.

    அவ்வையாரும்,ஆண்டாளும்,மீரபாயும்,மணிமேகலையும்,திலகவதியாரும்,மன்கையர்க்கரசியாரும் ,கவுந்தி அடிகளும்,என் இல்லறத் துறவி சாரதா மணி அம்மையாரும் தோன்றிய பூமி இது
    அதை குள்ளநரித் தனமாக் மறைத்து எதோ கிறிஸ்தவ பெண் தான் பாரதத்தின் முதல் பெண் துறவி என்று கூறுவது மிகப் பெரிய பித்தலாட்டமாகும்
    ஏன் நாம் பாண்டிச்சேரி அன்னை ,சகோதரி நிவேதீதை இவர்களைக் கூட இந்த பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம்
    ஏனென்றால் அவர்கள் பாரதத்தின் உயரிய பாரம்பரியத்தின் மீது பெரும் மரியாதை கொண்டிருந்தனர்
    இந்த கிறிஸ்தவர்கள் போல் அதை அழிக்க வரவில்லை , இழிவு படுத்தவில்லை.

  2. இந்த கட்டுரை சுத்தமாக புரியவில்லை.

  3. நிலையாமையை நினைவு படுத்தும் அருமையான பாடல்கள். காரைக்கால் அம்மையாரின் அனுபவத்தை பாடலாகப் பார்க்கிறோம். பல தமிழ் சொற்களைத் தெரிந்து கொள்ளவும் இப்பகுதி உதவுகிறது. பழம் தமிழ் இலக்கியப் பாடல்களோடு இன்றைய ஐகூ பாடல்களையும் கொடுத்து அசத்தி விட்டீர்கள் போங்கள். தமிழின் சொல் வளம் தெரிய இப்படிப்பட்ட கட்டுரைகள் அவசியம். ஆங்கிலம் கலந்த தமிழால் தமிழ் செத்துக் கொண்டிருக்கும் போது இப்படிப்பட்ட கட்டுரைகள் தாம் புதுக் குருதியை ஊட்டி தமிழ் சொல்லாற்றலை அனைவரும் அறிய உதவுகிறது. மிக்க நன்றி.

  4. I agree with mr.Amarnath Malli Chandrasekaran. At the same time I request any one of you all to write an article about karaikal ammaiyar in detail. I read somewhere ( long time ago) Ammaiyar lived before Christ and visited Eelam (Sri-Lanka) and she is the first of 63 Naiyanmar.
    sarvam sivamayam
    Love Logan

  5. காரைக்கால் அம்மை என்று அழைக்கப்படும் சிவ பகதை திருமணம் ஆனவர். சிவன் கொடுத்த மாம்பழ லீலையால் அவர் கணவர் பயந்து
    போய் அவரை விட்டு நீங்கி மறுமணம் செய்து கொண்டார். இரண்டாவது
    மனைவியுடனும் குழந்தை உடனும் அவர வந்து அம்மையாரை பார்த்து
    கீழே விழுந்து வணங்கினார். அதன் முதல் அம்மையார் துறவி கோலம் பூண்டார். கைலாசத்திற்கு காலால் நடக்காமல் தலையால் நடந்து
    சென்று சிவ பார்வதியிடம் செல்ல, சிவன் அவரை எழுந்து நின்று அம்மா என்று கூறி நமஸ்கரித்தார். இவர் மோக்ஷம் பெரும் முன் சிவ தாண்டவம் பார்க்க விரும்பினார். சிவன் அவரை திரு ஆலங்காடு என்ற
    தலத்திற்கு வரும்படி வேண்ட அவர் அங்கே சென்று சிவ தாண்டவம் கண்டு களித்தார். பின்னர் மோக்ஷ நிலை அடைந்தார். இந்த ஊர் சென்னைக்கு பக்கத்தில் நூறு கிலோ தூரத்தில் உள்ளது. அறுபத்து
    மூன்று நாயனமார்களில் இவர் ஒருவரே உட்கார்ந்து இருப்பார். அந்த பெருமை இவருக்கு உண்டு. சுந்தர மூர்த்தி சுவாமிகள் இவரை பேய
    அம்மை என்றே தம் பாடலில் கூறியுள்ளார். காலத்தால் எல்லா நாயன்மார்களையும் விட மூத்தவர்.

    அன்புடன்,
    சுப்ரமணியன்.இரா

  6. Karaikkal Ammaiyar probably lived in the 10th or 11th century C.E. in the east coast of Tamilnadu. She is considered to be the ancestor of the present day Natukottai Nagarathars of Chettinad. There are no records of Karaikkal Ammaiyar visiting Sri Lanka. Ammayar is definitely from a period much earlier than any other Nayanmar. There was some confusion in the iconography of Karaikkal Ammayar. Most South Indian and Sri Lankan sculptures/bronzes show her accompanying Nataraja, as a thin, frail, scary looking lady with spread out hair and sagging breasts. A few icons show her with shaved head. She is shown playing the drums. These are definitely images of Karaikkal Ammayar.

    There are some similar images dating to a period before her time. There are also many similar images in Cambodia and other South East Asian countries. All accompanying Nataraja. Hence it was thought that Karaikkal Ammaiyar was from a much earlier period and that her popularity was spread to a larger geographical area. This created some conflicts in the iconographic studies. I am not going into the details here. Now it has been confirmed that most of these icons are actually “Peys” that accompany Siva in his Siva-Tandava dance. During the medieval period in Tamilnadu and Sri Lanka, artists replaced the “Peys” with Karaikkal Ammayar in Nataraja sculptures. But in the far east, the concept of Karaikkal Ammayar was not known. The older idea that “Peys” are rejoincing during the dance of Siva was always portrayed in Far-East Nataraja sculptures.

    There are also several icons of her seated in a row with 63 Nayanmars, which are undoubtedly that of Karaikkal Ammayar. These are mostly found in Siva temples of Tamilnadu and Sri Lanka, a few in Andhra and Karnataka. Sadly, much of her life history is shrouded in myths and legends. It will be hard to pull out her real biography from all the mythology that surrounds her life. We have to be content with the fact that she was a great devotee of Siva, provided us with some thought provoking philosophical poems and inspired the medieval Tamil sculptors to portray her rejoicing at Siva’s celestial dance.

  7. அன்பர் இரா. சுப்ரமணியன் அவர்களுக்கு ,
    வணக்கம் . காரைக்கால் அம்மை இறைவனை கண்டதும் இறைவன் அம்மையே என அன்பால் அழைத்தது அன்றி அவரை நமஸ்கரிக்கவில்லை .
    பிறவா யாக்கை பெரியோன் ஆகிய சிவபெருமான் யாரையும் வணங்கியதாக எங்கும் இல்லை . “வரும் இவள் நம்மைப் பேணும் அம்மை காண் உமையே மற்று இப் 1
    பெருமை சேர் வடிவம் வேண்டிப் பெற்றனள் என்று பின்றை
    அருகு வந்து அணைய நோக்கி அம்மையே என்னும் செம்மை
    ஒரு மொழி உலகம் எல்லாம் உய்யவே அருளிச் செய்தார்

    59. அங்கணன் அம்மையே என்று அருள் செய அப்பா என்று
    பங்கயச் செம் பொன் பாதம் பணீந்து வீழ்ந்து எழுந்தார் தம்மைச்
    சங்க வெண் குழையினாரும் தாம் எதிர் நோக்கி நம்பால்
    இங்கு வேண்டுவது என் என்ன இறைஞ்சி நின்று இயம்பு கின்றார் ”
    என்னும் பெரிய புராணம் காண்க .இங்கு அப்பன் அம்மையே என்ன அம்மை மகனே என கூறாது அப்பா என்று அவர் பாதம் பணிந்தது காண்க. முக்தி நிலையிலும் உயிர்கள் இறைவனுக்கு அடிமையே என்பது சைவத்தின் நிலை. இதனை திருவாசகம் -சிவபுராணத்தின் இறுதியில் ” செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடி கீழ் பல்லோரும் ஏத்த பணிந்து.” என அருளுவார்.இதனையே உண்மை அடியாரும் விரும்புவர் அன்றி தலைவன் தன்னை வணங்க வேண்டும் என விரும்பார். நன்றி.

  8. அன்புடையீர்,
    காரைக்கால் அம்மையார் தம் ‘அற்புதத்திருவந்தாதி’ யினையும் ‘திருவிரட்டை மணிமாலை’யினையும் எந்த ஊர்களில், எந்த தலங்களில் பாடினார் என்பது பற்றிய குறிப்புக்கள் ஏதும் எனக்குக் கிடைக்கவில்லை. இந்த இரண்டு நூல்களும் காரைக்காலிலேயே பாடியவையா அன்றி வேறு தலங்களில் பாடியவைகளா?. தங்களுக்குத் தெரிந்தால் எளியேனுக்குத் தெரிவிக்க வேண்டுகிறேன்.
    அன்புடன்,
    அரங்க. இளங்கோவன், காரைக்கால்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *