திருவாசகத் தேன் தந்த பெருவள்ளல்

இன்று (15-ஜூலை-2010) ஆனி மகம். மாணிக்க வாசகர் குருபூஜை நாள்.

வான் கலந்த மாணிக்க வாசக! நின் வாசகத்தை
நான் கலந்து பாடுங்கால்: நற்கருப்பஞ் சாற்றினிலே
தேன் கலந்து பால்கலந்து செழுங்கனித்தீஞ் சுவைகலந்து
ஊன் கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே

என்று அருட்ஜோதி இராமலிங்க வள்ளலாரால் உருகி உருகிப் பாராட்டப்பெறும் உயர்வாளர் மாணிக்கவாசகர்.

தொல்லையிரும்பிறவிச் சூழும் தளை நீக்கி
அல்லல் அறுத்து ஆனந்தம் ஆக்கியதே –எல்லை
மருவா நெறியளிக்கும் வாதவூர் எங்கோன்
திருவாசகம் என்னும் தேன்

என்று திருவாசகம் பாடப்படும் இடம் எங்கும் போற்றித் துதிக்கப்படும் அருளாளர் திருவாதவூரர் என்ற மாணிக்கவாசகப் பெருமான். இப்பெருமானின் குருபூஜைத் தினமான ஆனிமகத் திருநாள் தமிழர்கள் யாவரும் போற்றவேண்டிய நன்னாளாகும்.

மாணிக்கவாசகர் காலம்

தமிழ்ப்புலவர் பெருந்தகைகள் பலரினதும் வாழ்க்கைக் குறிப்புக்கள் தெளிவற்றதாயும் சர்ச்சைக்குரியதாயும் இருப்பது மாணிக்கவாசக சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்றிற்கும் பொருத்தமாகவே அமைகிறது. இதனால் மாணிக்கவாசகப் பெருமானின் வாழ்க்கைக் குறிப்புகளுள் பலவும் அவரது சரித்திரத்திலேயே உள்ளவை தானா? அல்லது வேறு அருளாளர்களின் சரித்திரத்தில் உள்ளவை பிற்காலத்தில் மாணிக்கவாசகர் மீது ஏற்றிக்கூறப்பட்டதா? என்ற நிலைக்குக் கூட சில தமிழ் அறிஞர்கள் சென்றிருக்கிறார்கள்.

கடவுள்மாமுனிவர் அருளிய திருவாதவூரடிகள் புராணம் முழுவதும் மாணிக்கவாசகரின் வரலாற்றையே கூறினும், அவ்வரலாற்று எடுத்துரைப்பு முறை சேக்கிழார் பெருமானின் திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணத்திற்கு ஒப்பாக அமையவில்லை என்பது அறிஞர்கள் சிலரது கருத்து. இதனைத் தவிர பரஞ்சோதிமுனிவர் அருளிய திருவிளையாடற் புராணத்திலும் மாணிக்கவாசகப் பெருமானின் வரலாறு பேசப்பட்டுள்ளது.

இந்நிலையில் தேவார முதலிகள் மூவருக்கும் மாணிக்கவாசகர் முற்பட்டவரா? அல்லது மாணிக்கவாசகர் காலத்தால் பிற்பட்டவரா? என்ற வாதம் பரவலாக அறிஞர்களிடம் உள்ளது. ஒரு சாரார் மாணிக்கவாசகர் தேவாரமுதலிகள் மூவருக்கும் முற்பட்டவர் என்பர். இதற்கு திருநாவுக்கரசர் தேவாரத்தில்

”நரியைக் குதிரை செய்வானும்..” (தேவா- 4-4.2)

“மணியார் வையைத் திருக்கோட்டினின்றதோர் திறமும் தோன்றும்..” (தேவாரம் 6-18.9)

என்ற வரிகளைக் காணலாம். இவை நேரடியாக மாணிக்கவாசகர் வரலாற்றை வெளிப்படுத்தவில்லை. பத்திரிகையியலில் செய்தி என்றால் என்ன? என்ற வினாவிற்கு சுவாரஸ்யமாக “நாய் மனிதனைக் கடித்தால் அது செய்தி அல்ல. மாறாக மனிதன் நாயைக் கடித்தால் அது செய்தி” என்று விளக்கம் சொல்லப் படுவதுண்டு. இது போல எழுமாறாக அல்லது தீர்க்கதரிசனத்துடன் நாவுக்கரசர் இவ்வாறு இறைவன் கருணையைக் குறிப்பிட்டிருக்கலாம். என்றே கருதவேண்டியுள்ளது.

ஆனால் ஸ்ரீ கே.ஜி.சேஷய்யர் – பரிதிமாற்கலைஞர்- பொன்னம்பலம்பிள்ளை- மறைமலையடிகள் போன்ற சில அறிஞர்கள் மாணிக்கவாசகர் காலம் முற்பட்டது (பொ.பி* 4ம்நூற்றாண்டுக்கு முன்) என்றே கருதி வந்திருக்கிறார்கள். ஆனால் மாணிக்கவாசகர் வரகுணபாண்டியனின் அமைச்சராக இருந்தவர் என்றே அவர் பற்றிய வரலாறு யாவும் கூறும். ஆகவே இரண்டாம் வரகுணபாண்டியனின் காலம் பற்றியும் இவ்விடத்தில் நோக்கவேண்டும். செப்பேடுகளும் கல்வெட்டுகளும் பொ.பி 9ம் நூற்றாண்டே அவன் காலம் என்று தெளிவுறுத்துகின்றன. மாணிக்கவாசகர் தமது திருக்கோவையாரில்

“வரகுணனாம் தென்னவன் ஏத்தும் சிற்றம்பலம்”

என்று நிகழ்காலத்தில் கூறுவதும் இதை வெளிக்காட்டி நிற்கிறது.

[*: பொ.பி (CE) – பொது சகாப்தத்திற்குப் பின், Common Era, Circa]

நந்திவர்ம பல்லவன் பொ.பி 730ல் அரசனானவன். அவனே தில்லைக் கோயிலின் உள்ளே கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதியைக் கட்டினான் என்று கூறுவர். திருமங்கையாழ்வார் “பல்லவர் கோன் பணிந்த செம்பொன் மணிமாடங்கள் சூழ்ந்த தில்லைத் திருச்சித்திர கூடம்” என்று போற்றுவது கவனிக்கத்தக்கது. இந்த வகையில் தேவாரமுதலிகள் கோவிந்தராஜப்பெருமாளைப் பற்றி ஏதும் சொல்லாமலிருக்க, மாணிக்கவாசகர்,

“கிடந்தான் தில்லை அம்பலமுன்றிலில் மாயவனே”

என்று பாடுவதும் இவர் பொ.பி 8ம் நூற்றாண்டுக்குப் பிந்தையவர் என்பதையே காட்டி நிற்கிறது.

மேலும் சுந்தரமூர்த்தி சுவாமிகள் தனது “திருத்தொண்டர் தொகையில்” தனது காலத்திலும் தனக்கு முற்பட்ட காலத்திலும் வாழ்ந்த அறுபத்து மூன்று நாயன்மார்களைப் பற்றிக் குறிப்பிட்ட போதும் மாணிக்கவாசகர் பற்றி குறிப்பிடாமையும், இதனால் இப்பதிகத்தையே முதல்நூலாகக் கொண்டு எழுந்த பெரியபுராணத்திலும் மாணிக்கவாசர் சரிதம் இல்லாமையும் கூட, மாணிக்கவாசகர் சுந்தரர் பெருமானுக்கு காலத்தால் பிற்பட்டவர் என்ற கருத்தையே ஏற்படுத்துகின்றது.

இவ்வாறு மாணிக்கவாசகர் பொ.பி 9ம் 10ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்று இன்னிஸ்- நெல்ஸன், கோபிநாதராயர் போன்றோர் கருதியுள்ளனர். இதுவே தற்பொதைய ஆய்வுகளின் வண்ணம் சரியாயிருக்கும் என்று கருதமுடிகிறது.

மாணிக்கவாசகப் பெருமான் வரலாறு

திருவாதவூரடிகள் புராணம் மாணிக்கவாசகப் பெருமானின் வரலாற்றை வெளிப்படுத்தும் அற்புத நூல் ஏழு சருக்கங்களை உடைய செந்தமிழ் நூல். இந்நூலின் கதாநாயகராகிய மாணிக்கவாசகர் பாண்டிய நாட்டிலுள்ள திருவாதவூரில் செந்தண்மை பூண்ட தமிழ் அந்தண மரபில் கைலையம்பதியின் காவலாராயும் சிவபெருமானின் திருவூர்தியாயும் விளங்கும் நந்தியம் பகவானின் அம்சமாய் அவதரித்தவர்;. இன்றும் அங்கு திருமறைநாதர் கோயிலும், மாணிக்கவாசகரே கட்டியதாக நம்பப்படும் “நூற்றுக்கால் மண்டபம்” ஒன்றும் காணப்படுகின்றது. இவரது அறிவொழுக்கங்களைக் கண்ட ‘அரிமர்த்தன பாண்டியன்’ என்ற இரண்டாம் வரகுணன் இவரைத் தனது முதல் மந்திரியாக்கி “தென்னவன் பிரமராஜன்” என்ற சிறப்பு விருதும் வழங்கினான். இதைப் புராணம்,

தென்னவன் பிரமராயன் என்றருள் சிறந்த நாமம்
மன்னவர் மதிக்க நல்கி வையகம் உய்வதாக
மின்னவ மணிப்பூணாடை வெண்மதிக்கவிகை தண்டு
பொன்னவிர் கவிரி வேழமளித்தனன் பொருநை நாடன்

என்று கூறுகிறது.

avudaiyarkoyil_diksha_to_manikkavasagar
ஆவுடையார் கோயில் - மாணிக்கவாசகர் தீட்சை

இக்காலத்தில் தான் திருப்பெருந்துறை வழியாக அரபிக் குதிரைகள் வாங்கச் சென்ற மாணிக்கவாசகர் அங்கே ஞானகுருவாக எழுந்தருளியிருக்கும், எல்லா ஆத்மாக்களுக்கும் உள்ளுறையும் ஆத்மநாதனான இறைவனால் ஆட்கொள்ளப்பட்டார். குதிரை வாங்க எடுத்துச் சென்ற பணம் யாவற்றையும் சிவசேவையில் செலவிட்டார். திருப்பெருந்துறையில் இன்றைக்கும் சிறப்போடு திகழும் ஆத்மநாத சுவாமி திருக்கோயிலைக் கட்டினார். இதனால் வந்த வேலை மறந்திருந்த வாதவூரர் மேல் பாண்டியன் கோபங்கொண்டான். பிடியாணை பிறப்பித்தான். ஆனால் குருநாதர் கட்டளைப் படி ஆவணிமூல நாளில் குதிரை வரும் என்று அறிவித்தார் வாதவூர் வள்ளல்.

இந்த வகையில் தான் ஆவணிமூலத்தில் பாண்டியனுக்குக் குதிரைகள் வந்தன. இறைவனே குதிரைச் சேவகனாக வந்தான்.

தந்தை என்பவர் மைந்தர் வாதை தவிர்ப்பதே கடனாதலால்,
அந்தமின்றிய காதல் அன்பர் அழுங்கல் கண்டபின், நரியெல்லாம்
வந்து வெம்பரியாகவும், பரி வீரர் வானவர் ஆகவும்
சிந்தை கொண்டனர், அந்த மால்-விதி தேடுவார், மதி சூடுவார்

என்கிறது இச்சம்பவத்தை திருவாதவூரடிகள் புராணம் (குதிரையிட்ட சருக்கம்- 1)

ஆனால் இரவே அப் பரிகள் நரிகளாகி காட்டிற்கு ஓடிவிட்டன. மாணிக்கவாசகர் சுடுமணலில் நிறுத்தப்பட்டு துன்புறுத்தப்பட்டார். வைகை பெருக்கெடுத்தது. இதை “மதுரைப் பெருநன் மாநகரிருந்து குதிரைச் சேவகனாகிய கொள்கையும்” என்றும் ‘நரியைக் குதிரையாக்கிய நன்மையும்’ என்றும் இதை மாணிக்கவாசகர் பாடுகிறார்.

மண் சுமந்த மாதேவன்

மாணிக்கவாசகர் பொருட்டும் யாருமற்ற அநாதையாகிய செம்மனச் செல்வி என்ற வந்திக்கிழவி பொருட்டும் சிவபெருமானே கூலியாளாகி மண்சுமந்தார். ஒழுங்காக வைகைக் கரையை அடைக்காமல் அறிதுயில் கொண்டதால் பாண்டியனிடம் பிரம்படியும் வேண்டிக் கொண்டு மறைந்தருளினார். இதனை விளக்க ஆவணி மூலத்தன்று சிவாலயங்களில் பிட்டுக்கு மண் சுமந்த திருவிழா கொண்டாடும் வழக்கம் உண்டானது. இக்காட்சியை சொற்களால் வர்ணிப்பது மிகக் கடினம். சர்வலோக நாயகனான இறைவன் மண் சுமக்க வந்த காட்சியை திருவாதவூரடிகள் புராணம் (மண்சுமந்த சருக்கம் 29)

ஆடையும் துணிந்த சீரையாக்கியே கூலியாளாய்
கூடையும் தலைமேல் கொண்டு கொட்டுடைத் தோளராகிப்
பீடை கொண்டயர்வாள் காணப் பெரும்பசியுடையார் போல
வேடைகொண்டொல்லை வந்தார் வேண்டிய வடிவம் கொள்வார்

என்று விவரிக்கிறது.

வடமதுரையில் குசேலரிடம் அவல் வேண்டி உண்ட கண்ணபிரானும் தானும் ஒருவரே என்பது போல தென்மதுரையில்,

“நன்று நன்று இன்னும் அன்னே (அம்மா)
நயந்து பிட்டு அளிக்க வேண்டும்”

என்று தனது கிழிந்த சீலையில் நிறைய வாங்கி இட்டுக் கொண்டு, உண்பதும் உறங்குவதும் சிறிது வேலை செய்வதும் பின் களைத்தவர் போல நித்திரை செய்வதும் என்று விளையாடல் செய்ததால், வேலையைக் கண்காணிக்க வந்த பாண்டியன் வெகுண்டு கோபங்கொள்ள, அதனைக் கண்ட பாண்டியனின் பரிசனர்கள் பிடித்திழுத்து வந்து பாண்டியனிடம் காட்டினர். இதை திருவிளையாடற்புராணத்தில் பரஞ்சோதிமுனிவர்

மதுரை பொற்றாமைரைக் குளக்கரை ஓவியம்வள்ளல் தன் சீற்றம் கண்டு மாறு கோல் கையரஞ்சி
தள்ளரும் சினத்தராகித் தடக்கை தொட்டிழுத்து வந்து
உள்ளொடு புறங்கீழ் மேலாய் உயிர்தொறும் ஒளித்து நின்ற
கள்வனை இவன் தான் என்று வந்திக்காளெனக் காட்டி நின்றார்

என்று பாடுகிறார்.

இதில் அவர் ‘உயிர் தொறும் ஒளித்து நின்ற கள்வனை’ என்று குறிப்பது நயக்கத்தக்கது. இச்சந்தர்ப்பத்தில் பாண்டியனிடம் பிரம்படியும் பட்டார்.

பண் சுமந்த பாடற் பரிசு படைத்தருளும்
பெண் சுமந்த பாகத்தன் பெம்மான் பெருந்துறையான்
விண் சுமந்த கீர்த்தி வியன் மண்டலத்து ஈசன்
கண் சுமந்த நெற்றிக் கடவுள் கலி மதுரை
மண் சுமந்து கூலி கொண்டு அக்கோலால் மொத்துண்டு
புண் சுமந்த பொன் மேனி பாடுதுங்கான் அம்மானாய்

என்று உருகி உருக வைத்து இந்நிகழ்ச்சியை பாடலாக்குகிறார் மாணிக்கவாசகர். மேலும்

“பிட்டு நேர்பட மண்சுமந்த பெருந்துறைப் பித்தனே”

என்று உரிமையோடு தனக்காக அருளிய பெருமையை திருவாசகத்தில் பதிவு செய்கிறார். இச்செயலால் வருந்திய பாண்டியன் தான் கொடுத்த தண்டனைகளிலிருந்து வாதவூர்ப் பெருமானை விடுவித்ததுடன் இனி உங்களுக்கே இப்பாண்டி நாடுடையது என்று சொன்னதுடன் ‘இனிமேல் அடியேன் தங்கள் அடிமை’ என்றும் விண்ணப்பித்தான். எனினும் ‘எனக்குப் பட்டமும் பதவியும் இனிமேற் போதும்…. அடியேனுக்கு மந்திரிப் பதவியிலிருந்து விடுதலை தந்தாற் போதும்’ என்று வேண்டிக்கொண்டு பாண்டியனிடம் விடைபெற்று துறவு வாழ்வை ஏற்று மீண்டும் தம் குருநாதரின் அருளாசியை வேண்டி திருப்பெருந்துறைக்குச் சென்றார்.

அங்கே மீண்டும் தம் குருநாதர் திருவடிகளில் தம்மை முழுமையாக ஒப்புக்கொடுத்தார். அவரது ஞானம் முதிர்ச்சியடையவே குருந்தமர நீழலில் குருவாக வந்து ஆட்கொண்ட குருபரன் தன்னிருக்கையாகிய திருக்கைலை சென்றடைந்தார். இதன் பின் அச்சிவகுருநாதன் இட்ட கட்டளையின் வண்ணம் பல தலங்களையும் சென்று பாடிப்பரவிய பின் திருச்சிற்றம்பலமாகிய தில்லையை அடைந்தார். மாணிக்கவாசகர்.

வாதவூரர் செய்த வாதம்

திருத்தில்லையம்பலத்தே தன்னுடல் உயிர் யாவற்றையும் ஆடவல்ல பெருமானுக்கே அர்ப்பணித்து வாழ்ந்தார் மாணிக்கவாசகர். அவரது இறையனுபவங்கள் பாடல்களாக மலர்ந்து “திருவாசகம்” ஆயின. அவரது உணர்வலைகள் பாடல்களில் பதிந்தன. தனக்காகவே மட்டுமன்றி உலகத்தாருக்காயும் உருகினார் நம் பெருமானார்.

சிந்தனை நின் தனக்கேயாக்கி நாயினேன் தன் கண்ணினை நின் மலர்ப்போதுக்கேயாக்கி
வந்தனையும் அம்மலர்க்கேயாக்கி வாக்கும் மணிவார்த்தைக்காக்கி ஐம்புலங்களார
எந்தனை ஆட்கொண்டு உள்ளேபுகுந்தஇச்சை மாலமுதப்பெருங்கடலே மலையேயுன்னை
தந்தனை செந்தாமரைக்காடனையமேனித் தனிச்சுடரே இரண்டுமிலித் தனியனேற்கே

(திருச்சதகம்)

இக்காலப் பகுதியில் ஒரு சிவபக்தன் எங்கெங்கு தமிழும் சைவமும் இருக்கின்றனவோ அங்கெல்லாம் சென்று “என்றென்றும் வாழி திருச்சிற்றம்பலம்” என்றும் “பொன்னம்பலம் நீடூழி வாழ்க” என்றும் கூவித் திரியலானான். இந்த வகையிலேயே ஈழநாடாகிய இலங்கைக்கும் சென்று அங்குள்ள பௌத்த நெறிமன்னன் முன்னும் இவ்வாறே கூறினான். (இன்றைக்கும் எக்காரியம் செய்யும் போதும் இவ்வாறு கூவிக்கொள்ளும் தமிழ் இந்துக்கள் இலங்கையில் உள்ளனர்). இதனால் எரிச்சலடைந்த இலங்கை மன்னன் அங்கிருந்த பௌத்தத் துறவியருடன் சிதம்பரத்தில் பௌத்தத்தை நிலைநாட்டி அங்கே புத்தரின் உருவை ஸ்தாபிக்க எண்ணி வந்தான்.

manickavasagar_in_chidambaramஅப்பொழுது அங்கே வசித்த மாணிக்கவாசகப் பெருமானுக்கும் இலங்கை அரசனின் பௌத்தகுருமார்களுக்கும் இடையில் சொல் வாதம் இடம்பெற்றது. இதன் போது அவர்கள் செய்த தவறை வெளிப்படுத்தியதுடன் (அதாவது பௌத்தம் சைவத்திற்கு விரோதமல்ல, ஆனால் சைவத்திற்கு விரோதமாய் தில்லையில் பௌத்தத்தை நிலைநாட்ட முயன்றது அவர்களின் அறியாமையாகும்) அரசனின் ஊமைப் பெண்ணையும் பேச வைத்தார். இதன் போது இலங்கையினின்று வந்த பௌத்தர்களின் மனங்களிலிருந்த சைவம் பற்றிய வினாக்களை அவள் மூலமாகவே பதிலளித்து அவற்றை நீக்கியருளினார். இதுவே திருச்சாழல் என்ற பதிகமாக உருவெடுத்தாயும் கூறுவர். இதன் போது வந்தவர்கள் யாவரும் நீறணிந்து சைவராயினர் என்றும் வரலாறு கூறும்.

ஆனால் இந்த வரலாறு எந்தச் சான்றும் அற்றது என்று முக்கிய சில பெரியவர்கள் புறக்கணித்திருக்கிறார்கள். ஆனால் இவ்வரலாறு ‘புத்தரை வாதில் வென்ற சருக்கம்’ என்ற பகுதியில் திருவாதவூரடிகள் புராணத்தில் 96 பாடல்களில் பேசப்படுகிறது. எது எவ்வாறாகிலும் பொ.பி 9ம் 10ம் நூற்றாண்டுகளில் மாணிக்கவாசகர் வாழ்ந்திருந்தால் இலங்கையில் இரண்டு அரசுகள் இருந்திருக்க வாய்ப்புகளுண்டு. ஒன்று யாழ்ப்பாணத்தை தலைநகராகக் கொண்டு தமிழரசர்கள் ஆண்ட யாழ்ப்பாண இராச்சியம். மற்றையது அநுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு விளங்கிய அரசு. இந்த அநுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்ட பெரிய அரசு சைவத்திற்கு இக்காலப் பகுதியில் மாறியதற்கு எந்தச் சான்றும் இல்லை.

எனினும் யாழ்ப்பாணத்தரசர் அக்காலத்தில் பௌத்தராக இருந்திருக்கலாம். ஏனெனில் யாழ்ப்பாணத்தில் இன்று பௌத்தசமயிகள் இல்லாதவிடத்தும் பல புராதன பௌத்தவிகாரைகள் ஆங்காங்கே கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இத்தமிழ்ப் பௌத்தர்களே மாணிக்கவாசகர் காலத்திற்குப் பின்னர் தமிழ் இந்துக்களாக மாறியிருக்க வேண்டும் என்று கருத இடமுண்டு. தவிர மாணிக்கவாசகப் பெருமானுக்கு இன்றைக்கும் இலங்கையில் மிகுந்த சிறப்பிடம் செய்யப்பட்டு வருகின்றது.

திருவாதவூரடிகள் புராணம் மார்கழித் திருவாதிரைக்கு முந்தைய பத்து நாட்களாகிய திருவெம்பாவைக் காலத்தில் இன்றைக்கும் இலங்கையில் சிவாலயங்கள் தோறும் சுவாமியையும் மாணிக்கவாசகப் பெருமானின் திருவுருவத்தையும் எழுந்தருளச் செய்த பின் அத்திருவுருவங்களின் முன் படனம் (ஓதும்) வழக்கம் உள்ளது. ஒருவர் பாடலை வாசிக்க இன்னொருவர் பதம் பிரித்து விளக்குவார். ஏராளமான மக்கள் கூடியிருந்து கேட்பர். இவ்வாறாக இவ்விழாக்காலத்தில் இப்புராணம் முழுமையாகப் படிக்கப்பெறும். இதை விட இத்திருவாதிரை உற்சவகாலத்தின் நிறைவாக இலங்கைச் சிவாலயங்களில் நடைபெறும் தீர்த்தவாரியில் இறைவனின் பிரதிநிதியான “சிவாஸ்திர தேவருக்கு” பதிலாக அத்தேவருக்குச் செய்யப்பெறும் உபசாரங்கள் யாவற்றையும் மாணிக்க வாசகருக்கே வழங்கி நிறைவில் திருக்குளத்தில் மாணிக்கவாசகரின் திருவுருவத்தையே திருநீராட்டும் வழக்கமும் உண்டு. இது வேறு எந்த நாயன்மார்களுக்கும் செய்யப்பெறாத உபசாரமாகும்.

சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கிய சிறப்பு

shiva_writes_thiruvasagam_for_manikkavasagarதில்லையிலே மாணிக்கவாசகர் வாழ்ந்த காலத்தில் தில்லை ஆடலரசனே வேதியருருவம் கொண்டு அவர் வாழ்ந்த குடிலையடைந்து “நீர் எழுதியுள்ள திருவாசகம் முழுமையையும் ஏட்டில் எழுத விரும்புகிறேன்” என்று பெருமானார் சொல்லச் சொல்ல திருவாசகம் முழுமையையும் தன் கையாலேயே எழுதி அதன் பின் “பாவை (திருவெம்பாவை) பாடிய வாயால் ஒரு கோவையும் பாடும்” என்று திருக்கோவையார் பாடச் செய்து அதனையும் ஏட்டில் தன் திருக்கரங்களாலேயே எழுதி அவ்வேடுகளையும் கொண்டு மறைந்தருளினார். இது இவ்வாறிருக்க…

இதன் பின் தில்லைப்பெருமான் அந்த திருவாசக ஏடுகளை கொண்டு சென்று பிரம்மனுக்கும் மஹாவிஷ்ணுவிற்கும் தேவர்களுக்கும் ‘நம் அடியவன் எழுதிய இந்தத் தேன்தமிழைப் பாருங்கள் பருகுங்கள்’ என்று கொடுத்ததாய் திருவாதவூரடிகள் புராண ஆசிரியர் பாடம் போது அவரின் தமிழ்ப்பற்றும் வெளிப்படுவதையும் சைவம் தமிழுக்குச் செய்த உயர்வு புலப்படுவதையும் காண முடிகிறது.

செந்தமிழ்க்கு அன்பு மிக்கார் சென்று தம் மன்றிலெய்தி
அந்தரத்தவரை மாலை அயனை நன்முகத்து நாடி
நந்தமக்கு அடிமை பூண்டு நயந்தவன் ஒருவன் சொன்ன
இந்த நற்பாடல் கேண்மின் என்றவர்க்கு எடுத்துச் சொன்னார்

(திருவடி பெற்ற சருக்கம்14)

இதன் பின்னர் “வாதவூரன் விளம்பிட தில்லை அம்பலவாணன் எழுதியது” என்று கைச்சாத்திட்டு சிற்றம்பலத்து பஞ்சாட்சரப் படியிலே தில்லை மூவாயிரவர் மறுநாள் காணும் வண்ணம் வைத்தருளினார். அதிகாலையில் தில்லைவாழந்தணர்கள் இந்தத் திருவேட்டைக் கண்ணுற்று அதிசயித்து வியந்த போற்றி மாணிக்கவாசகரை அழைத்து வந்து துதி செய்து பரவி மகிழ்ந்து “இந்நூலின் பொருள் யாதோ?” என்று பணிவன்போடு வினாவினார்கள். அப்பொழுது தில்லை பொற்சபையில் நடமாடும் பெருமானைக் காட்டிய கையினராய் யாவரும் காண அத்திருவுருவுடன் மாணிக்கவாசக சுவாமிகள் மறைந்தருளினார். அத்திருநாள் ஆனி மகம் ஆகும்.

பூதங்கள் ஐந்தாகிப் புலனாகிப் பொருளாகிப்
பேதங்கள் அனைத்துமாய்ப் பேதமில்லாப் பெரியோனை
கேதங்கள் கெடுத்தாண்ட கிளரொளியை மரகதத்தை
வேதங்கள் தொழுதேத்தும் விளங்கு தில்லை கண்டேனே

(கண்டபத்து 10)

தேன் தமிழும் தெய்வத் திருவாதவூரரும்

திருவாதவூரராகிய மாணிக்கவாசகருக்கு தமிழ் கூறும் நல்லுலகெங்கும் பெருமரியாதையுண்டு. தமிழகத்தின் தேனி மாவட்டத்திலுள்ள சின்னமனூரில் தென்திசை நோக்கி குருவடிவாய் நிற்கும் நிலையில் விளங்கும் மாணிக்கவாசகரை மூலவராகக் கொண்டு ஒரு திருக்கோயில் உள்ளது. ஒவ்வொரு மாதமகநாளிலும் சிறப்பு வழிபாடுகளும் நடக்கிறது.

09_01-puttukku-mansumandhaமாணிக்கவாசகரால் கட்டப்பட்ட திருப்பெருந்துறை யோகாம்பாள் சமேத ஆத்மநாதசுவாமி கோயிலில் மாணிக்கவாசகரின் வரலாற்றைக் கூறும் எழில்மிகு சிற்பங்கள் உள்ளன. ஆனி மகத்தன்று மதியம் கருவறையுள் மாணிக்கவாசகர் எழுந்தருளி இறைவனுடன் கலக்கும் காட்சியும் இடம்பெறுகிறது. இது தவிர மார்கழி மாதத்தில் நடக்கும் மஹோத்ஸவம் மாணிக்கவாசகருக்கேயாகும். மாணிக்கவாசகரை முதன்மைப்படுத்தி நிகழும் இவ்விழாவினை பக்தோத்ஸவம் என்று கருதமுடியாத வண்ணம் சிவமாகவே பெருமானாரைப் பாவித்து பிரம்மோத்ஸவமாகவெ கொண்டாடுகின்றனர். சுவாமி மாணிக்கவாசகருக்கு திருத்தேர் உத்ஸவமும் உண்டு.

தில்லை நடராஜர் கோயிலில் நடக்கும் மார்கழி மஹோத்ஸவத்திலும் மாணிக்கவாசகருக்கு பெரியளவு முதன்மை உண்டு. திருவிழா நிறைவில் சுவாமிக்கு விடையாற்றித் திருவிழா நிகழ்ந்த மறுநாள் மாணிக்கவாசகருக்கும் விடையாற்றி உத்ஸவம் உண்டு. ஈழத்துச் சிதம்பரம் என்ற இலங்கைக் கோயிலிலும் இவ்வாறு மாணிக்கவாசகருக்கு முதன்மை செய்கிறார்கள். கோயில் சார்ந்தவர்களாலும் குருமார்களாலும் மார்கழி மாதத்தில் மூன்று நாட்கள் மிகச்சிறப்பாக “மாணிக்கவாசகர் விழா”வும் செய்கிறார்கள்.

எத்தனையோ இலக்கியங்கள் இருந்தும் ஜி.யு.போப் திருவாசகத்திற்கும் திருக்குறளிற்கும் முதன்மை தந்து மொழி பெயர்த்தமை ஏன்? ஏன்ற கேள்வி பிறக்கும் போது இவ்விலக்கியங்களின் வலிமை புலப்படுகிறது. இதே வேளை முனைவர் கோ.ந.முத்துக்குமாரசுவாமி அவர்கள் ஜி.யு.போப் அவர்கள் மொழிபெயர்ப்பின் பின் தான் எழுதிய மாணிக்கவாசகர் வரலாறு மற்றும் விளக்கங்களில் விட்ட தவறுகளை மிகத்தெளிவாக ஜி.யூ.போப் அவர்களும் திருவாசகமும் என்று எழுதியிருப்பதும் சிந்திக்கத்தக்கது. இளையராஜா அவர்களும் எத்தனையோ இசைத்தமிழ் நூல்கள் இருக்க இந்தத் திருவாசகத்திற்கு சிம்பொனி இசையமைத்ததும் இதன் வலிமையையே பறை சாற்றுகின்றது.

manikkavasagar_festivalதாய்லாந்து முடிசூட்டு விழாக்களிலும் ஊஞ்சல் விழாக்களிலும் ஆண்டாள் அருளிய திருப்பாவை மற்றும் மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை பாடல்களையே திரித்துப் பாடுகிறார்கள் என்கிறது ‘தமிழ்ப் பண்பாடு’ (1955) என்ற காலாண்டிதழ். கோங்கு நாட்டிலுள்ள அவினாசியில் உள்ள சிவாலயத்தில் வரலாற்றுச் சிறப்பும் கலையெழிலும் கொண்ட மாணிக்கவாசகப்பெருமானின் செப்புத்திருமேனி ஒன்றுண்டு. ஞானமுத்திரை காட்டும் வலது திருக்கரமும் புத்தகம் ஏந்திய இடது திருக்கரமும் கொண்டு உருத்திராக்கம் தரித்த திருமேனியராய் அழகுற விளங்குகிறார் மாணிக்கவாசக மாமுனிவர். இத்திருவுருவின் பீடத்தில் பொறிக்கப்பட்டுள்ள நாகரஎழுத்துக்களில் கன்னட நாட்டுப்பெண் ஒருத்தி இத்திருவுருவை வழங்கியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆக- பழைய காலத்திலேயே மாணிக்கவாசகரின் சிறப்பு தமிழகத்திற்கு அப்பாலும் பரவி விரவி போற்றப்படுவதாயிருந்தது என்பது தெளிவு.

பண் சுமந்த பாடலுக்காய் மண்சுமந்து தன்திருவுடலில் புண்சுமந்த பெம்மானிடம்,

“…. சங்கரா ஆர்கொலோ சதுரர்?
அந்தமொன்றில்லா ஆனந்தம் பெற்றேன்
யாது நீ பெற்றது என்பால்?”

என்று வினா எழுப்பி தானே மிக்க மகிழ்வு பெற்றேன் என்று சொல்லி மகிழும் நம் பெருமானார் தனது வாழ்வில் கண்ட முக்கிய இறையுணர்வு “நாயகீ பாவம்” என்ற மதுரபாவம். அவர் பெற்ற முக்தி “சாயுச்சியம்” என்ற சிவானந்தம் என்பர் சைவச் சான்றோர். “அழுதால் உன்னைப் பெறலாமே” என்பது அவர் திருவாக்கு. திருவாசகம் படித்தால் அழுகை வருவது புதுமையுமல்லவே…. “திருவாசகத்திற்கு உருகாதார் ஒருவாசகத்திற்கும் உருகார்” என்பதல்லவா பழமொழி?

வாட்டம் இல்லா மாணிக்க வாசக! நின் வாசகத்தைக்
கேட்டபொழுது அங்கிருந்த கீழ்ப்பறவைச் சாதிகளும்
வேட்டமுறும் பொல்லா விலங்குகளும் மெஞ்ஞான
நாட்டமுறும் எனில் இங்கு நானடைதல் வியப்பன்றே

என்பது வள்ளலார் வாக்கு. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரும் காசியில் பத்தாண்டுகள் வசித்தவரும் 1917ல் “தேவாரம் வேதசாரம்” என்ற அரிய நூலை எழுதியவருமான சி.செந்திநாதையர் “திருவாசகம் உபநிடத சாரம்” என்று தெளிவுபடக் குறிப்பிடக்காணலாம். யாழ்ப்பாணத்திலுள்ள அனைத்து கல்வி நிலையங்கள் மற்றும் கல்லூரிகளிலும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் திருவாசகத்தின் ஒரு பகுதியாகிய “சிவபுராணம்” முழுமையும் பாராயணம் செய்யப்படுகின்றது. இவ்வாறு செய்வதன் மூலம் பெரியோரும் பாடம் செய்யக் கடினப்படும் நீண்ட சிவபுராணம் யாழ்ப்பாணத்திலுள்ள கிறிஸ்தவச் சிறுபிள்ளை கூட சொல்லும் நிலை ஏற்பட்டுள்ளது என்றால், அதற்கு ஆறுமுகநாவலர் பெருமான் போன்றோரின் வழிகாட்டுதலே காரணம் எனலாம்.

பன்னிரு திருமுறைகளில் எட்டாம் திருமுறையாக நம்பியாண்டார் நம்பியடிகள் திருவாசகத்தை வகுத்திருக்கிறார். திருவாசத்தை மோஹன ராகத்திலேயே பாடி வரும் வழக்கமும் உள்ளது. திருப்படையாட்சிப் பதிகமும் அச்சோப்பதிகமும் விதிவிலக்கு. 656 பாடல்களை உடைய இந்தத் திருவாசக நூலை மாதந்தொறும் முற்றோதல் செய்யும் வழக்கத்தைக் கொண்ட பெரியவர்களும் இருக்கிறார்கள். திருவாசகம் படிப்பதையே தம் வாழ்வின் குறிக்கொளாகக் கொண்டொழுகும் அன்பர்களும் இன்றும் உள்ளனர்.

வண்டு பல்வேறு பூக்களிடத்தும் சென்று தேனை எடுப்பது போல வாதவூரராகிய வண்டு வேத உபநிடதங்களிலிருந்து திருவாசகமாகிய தேனை எடுத்து நமக்கு வழங்கியுள்ளார் என்பார் வாரியார் சுவாமிகள். இதனால் அவர் மாணிக்கவாசகரை “வாதவூர் வண்டு” என்று போற்றுவார். நாமும் மாணிக்கவாசகர் பெருமான் திருவடிகளைப் போற்றி செய்து வாழ்வோம். சிவனருள் பெறுவோம்.

“அவன் அருளாலே அவன் தாள் வணங்கி”
(சிவபுராணம்)

20 Replies to “திருவாசகத் தேன் தந்த பெருவள்ளல்”

  1. “செந்தமிழ்க்கு அன்பு மிக்கார் சென்று தம் மன்றிலெய்தி
    அந்தரத்தவரை மாலை அயனை நன்முகத்து நாடி
    நந்தமக்கு அடிமை பூண்டு நயந்தவன் ஒருவன் சொன்ன
    இந்த நற்பாடல் கேண்மின் என்றவர்க்கு எடுத்துச் சொன்னார் ”

    (திருவடி பெற்ற சருக்கம்14)
    தமிழுக்கு இந்து மதத்தில் முதன்மை கொடுக்கப்படுவதில்லை என்ற கூற்று எவ்வளவு மடமையானது என்பதை சிறப்பாக இக்கட்டுரை காட்டுகிறது. மிக்க நன்றிகள்…

  2. மெய்மறந்து படித்தேன். கட்டுரை ஆசிரியருக்கு நன்றிகள் பல.
    திருவாசகத்தை பற்றி பேசிக்கொண்டே இருக்கலாம். தமிழுக்கு கிடைத்த சிறந்த பொக்கிஷம். ஒவ்வொரு முறை படிக்கும் பொது ஒருவித புது அனுபவம்.
    ஊழிமலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி.

  3. இங்கு பாவிக்கப்பெற்றுள்ள தமிழ் மிகச்சிறப்பாக உள்ளது. கட்டுரையாசிரியரின் முன்னைய கட்டுரைகளைக் காட்டிலும் தனித்துவமாயும் உள்ளது. ஆனால்…. மாணிக்கவாசகர் காலம் பற்றியும் அவரது வரலாறு பற்றியும் இன்னும் நிறை நிறைய விவாதிக்கலாம்…. எனினும் இதைக் குறிப்பிடத்தக்க மாணிக்கவாசகர் பற்றிய ஆவணக்கட்டுரையாகக் கொள்ள முடியும்.

  4. சிவமிகு மயூரகிரி சர்மா அவர்களின் தேனூறும் வாசகங்கள் அடங்கிய இக்கட்டுரையைச் சிலிர்ப்புடன் வாசித்துப் பயன் பெற்றேன். ஆனிமகத்தன்று இக்கட்டுரை வெளிவந்தது மிகப் பொருத்தமாகும். ஈழநாட்டில் சைவத்திற்கும் தமிழுக்கும் பேரிடுக்கண் வந்துற்றபோதும் இன்னும் அங்கே வைதிகசைவம் பிரகாசமுடன் இருப்பது இக்கட்டுரையில் நன்கு தெளிவாகின்றது. சுன்னாகம், அச்சுவேலி முதலிய இடங்களில் வாழ்ந்த பெரியோர்கள் இருமொழி வல்லுநர்களாய் வைதிக சைவத்தைப் பேணிவளர்க்கலுற்றார்கள். அந்தப் பாரம்பரியம் சிவமிகு மயூரகிரி சர்மா அவர்களிடம் நன்குபுலனாகின்றது. தேவர்கோ அறியாத தேவதேவன், தன்னடியவராகிய திருவாதவூரருக்காகக் கோவால் மொத்துண்டு புண்சுமந்து ‘பிட்டு நேர்பட மண்சுமந்த’ பெருங்கருணையை, எளிவந்த தன்மையை, சர்மா அவர்கள் உளம் நெகிழ உரைத்துள்ளார்கள். ‘பிட்டு நேர்பட மண்சுமந்து’ என்ற வரியில் அடிகள் பெருமான் செய்த கூத்தினைச் சுவைபடக் கூறியுள்ளார். பிட்டு எந்த அளவுக்குக் கிடைத்ததோ அந்த அளவுக்குத்தான் கூலியாளாக வந்த பெருமான் மண் சுமந்தாராம். ஒருகை அளவு பிட்டு என்றால் அந்த ஒருகை அளவு மண்தான் ஐயன் சுமந்தாராம். இப்படிச் செய்தால் எந்த அரசனுக்குத்தான் கோபம் வராது? உயிர்தொறும் ஒளித்து நின்ற கள்வன் அக்கோவால் மொத்துணட கருணையை நினைத்தால் ஆவியோடு ஆக்கை ஆனந்தமாய்க் கசிந்துருகும். சர்மா அவர்களின் கட்டுரைகளைத் தமிழ்ஹிந்துவில ஆவலோடு எதிர்நோக்குகின்றேன்.

  5. மாணிக்கவாசகர் TEMPLE AT THIRUVANAMALAI [ADI OR AADHI ANNAMALAI TEMPLE NEAR AND ALSO GIRIVALAPADHI.] THIS IS A ANIESENT HARIGANTAL TEMPLE.

    BY

    R. NATARAJAN

  6. திரு மயூரகிரி சர்மா அவர்களுக்கு மிக்க நன்றி. தேனொழுகும் தமிழ் நடையில் திருவாசகத் தேனமுது படைத்த மாணிக்கவாசகப் பெருமானின் நினைவு போற்றும் வண்ணம் ஆனி மகத்தன்று இக்கட்டுரையைக் கொடுத்தமை வெகு பொருத்தம். திருப்பெருந்துறையில் மாணிக்க வாசகப் பெருமானுக்கான மார்கழி மகோத்சவத்தை பக்தோத்சவமாக அல்லாமல் சிவபெருமானுக்கான பிரம்மோத்சவமாகவே கொண்டாடுவதாகக் கொடுத்திருக்கும் தகவலால் சிவாலயங்களில் சண்டேசர் முதலாக சிவத்தொண்டருக்குச் செய்யப்படும் சிறப்பு வெளிப்படுகிறது. மாணிக்கவாசகப் பெருமானின் தமிழின் சிறப்பால் அவர் பாட ஈசன் தாமே எழுதியதோடல்லாமல், பெருமானைச் சிவமாகவே பரிமளிக்கும் வண்ணம் அருளினார் என்றே கொள்ளவேண்டும். பக்தனின் பக்திக்கும் மொழிக்கும் இறைவன் செய்த சிறப்பு அளவிடற்கரியது.

  7. எனது சிற்றறிவுக்கு எட்டிய வகையில் எழுதப்பெற்ற இக்கட்டுரையை பாராட்டி எழுதிய செந்தூர்- சோமசுந்தரம்- முனைவர் முத்துக்குமாரசுவாமி- நடராஜன்- உமாசங்கர் அனைவருக்கும் மிக்க நன்றிகள்….
    இக்கட்டுரையை வாசித்துவிட்டு தில்லையைச் சேர்ந்த ஆன்மீக எழுத்தாளரும் அர்ச்சகருமாகிய நி.த. நடராஜ தீக்ஷpதர் அவர்கள் “திருவாதவூரான் சொல்லக் கேட்டு தில்லையம்பலவாணன் எழுதிய ஓலைக் கட்டு இன்றும் இருக்கின்றது.
    சிதம்பரத்தில் உள்ள அம்பலத்தாடி மடத்தில் பாதுகாக்கப்பட்டு, தற்பொழுது அவ்வோலைகள் பாண்டிச்சேரி (பஜாஜ் ஆட்டோ ஷாப் எதிரில்) அம்பலத்தாடி (தலைமை) மடத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.
    மார்கழித் திருவாதிரை அன்று மட்டும் ஓலைச்சுவடிப் பேழை திறக்கப்பட்டுஇ சிறப்பு தைலங்கள் ஓலைகளுக்குச் சாற்றப்படும். வருடம் ஒருமுறை மட்டுமே திறக்கப்படும்.” என்ற தகவலைத் தெரிவித்தார்கள். இத்தகவலையும் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்வடைகிறேன்.

  8. திரு மயூரகிரிசர்மா அவர்களுக்கு

    இறைவன் திருக்கரங்களால் எழுதிய ஓலைச்சுவடியைக் காண ஆவலாக இருக்கிறது. தகவலுக்கு மிக்க நன்றி. அச் சுவடியிலி உள்ள தமிழ் எழுத்துக்கள் மாணிக்கவாசகப் பெருமான் இம்மண்ணில் அவதரித்த, வாழ்ந்த காலம் குறித்த சந்தேகங்களைப் போக்கவல்லன.

    இதைப்போலவே உ.வே.சா அவர்கள் கண்டெடுத்த ஓலைச்சுவடிகளில் உள்ள தமிழ் எழுத்துக்களும் நமது சரித்திரத்தின் பல்வேறு காலங்களில் உள்ள சந்தேகங்களைப் போக்கவல்லன.

  9. மிக்க நன்றி, மேலும் மாணிக்கவாசகர் பற்றி ஆவலை தூண்டியுள்ளார் திரு
    நீர்வை. தி.மயூரகிரி சர்மா அவர்கள். மாணிக்க வாசகர் திரு அண்ணாமலைக்கு செய்த தமிழ் சேவை மிகவும் இனிதாக இருக்கும் என கேள்வி பட்டுள்ளேன்.

    மிக்க நன்றி

  10. I shed tears when I read the article. I strongly believe that non of the literature will match “Thiruvasagam” in bakthi segment.

    I salute the author for providing such wonderful article and I request him to write more about Thriuvasagam.

  11. அன்புள்ள ஐயா

    நான் திருவாசக த்தை சென்ற ௧௫ வருழங்கள்லாஹா படித்து வருகிறேன். ஆத்மா ஞானத்தை தருகின்ற புஸ்தகம் எதுவும்
    இதற்கு ஈடாகாது. நான் பண்ணுகிற பகவான் ஸ்ரீ ரமணரின் ஆத்மா விசாரதிற்கு இந்த நூல் பெரும் துநையை இருக்கின்றது.

    நமஸ்காரம் சுப்ரமணியன். இரா .

  12. மாணிக்கவாசகரின் கால ஆராய்ச்சி தேவையற்றது. காலத்தால் முற்பட்டது என்பதால் எந்த விஷயமும் உயர்வு எனவோ, காலத்தால் பிற்பட்டது என்பதால் எந்த விஷயமும் உயர்வல்ல என்றோ கருத முடியாது. திருவாசகத்தில் ‘ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க’ என்று அற்புதமாக உண்மையை தெரிவித்து விட்டார்.

    மேலும் நம் நாட்டில் வாழ்ந்த காலம் குறித்து ரிகார்டுகள் உருவாக்கிக்கொள்ளும் பழக்கம் அந்த நாளில் ் இல்லை. மேலும் ரிகார்டுகளை பராமரிக்கும் விதமும் அந்தக்காலங்களில் நம் நாட்டில் வளர்ச்சி பெறவில்லை. எனவே கால ஆராய்ச்சி தேவையற்றது. கருத்தே முக்கியம்.

    மயூரகிரி சர்மாவுக்கு இறை அருள் ஓங்கட்டும். திருவாசகம் உயர்ந்த செம்மொழி ஆகும். தினசரி ஓதுபவர்கள் வாழ்வு உயரும்.

  13. மணிவாசகர் கண்டிப்பாய்ச் சுந்தரருக்கு முந்தையவரே என்பதில் யாதொரு ஐயமும் இல்லை. நரியைப் பரியாக்கிய திருவிளையாடலை அப்பர் பெருமான் சுட்டிப் பாடுவதால் அவர் களப்பிரருக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்தவராகவே இருத்தல் வேண்டும்.

    ஆயின் அவர் திருத்தொண்டர் தொகையில் சேர்க்கப்படாத காரணம் என்ன? மணிவாசகர் வழி சன்மார்க்கம் என்பதே. அது மற்றீண்டு வாரா வீடுபேறு எனும் பரமுக்திக்கு இட்டுச் செல்வது. பற்றற்றான் மீதும் பற்றை விடும் வழியது. ஈசனோடாயினும் ஆசை அறுக்கச் சொல்லும் வழியது. அதில் தீயன நல்லன என்ற பேதமில்லை. சோதியும் துன்னிருளும் அவர்க்கொன்றே.

    ஆயின் திருக்கூட்டமரபினர் அந்தக் கொள்கை கொண்டவரல்லர் என்பதை சேக்கிழார் பெருமான் முன்னதாகவே சூக்குமமாய் அறிவித்து விடுகிறார். ‘கூடும் அன்பினில் கும்பிடலே அன்றி’ வீடும் வேண்டாமல் நிற்பவர் அவர்.

    ‘வீடுற்றேன்’ என்று அறிவித்து விட்டவரை ‘வீடும் வேண்டா’ திருக்கூட்டத்தில் சேர்க்காத காரணத்தைச் சுட்டியது சரிதானே?

  14. சு பாலச்சந்திரன்

    மாணிக்க வாசகர் திருத்தொண்டர் தொகையில் சேர்க்கப்படாததற்கு பல காரணங்கள் உள்ளன.

    1 . அவர் இறைவனே ஆனவர். இந்த சிறப்பு வேறு எந்த அடியவர்க்கும் கிடைத்துள்ளதாக நான் படித்த வரையில் தெரியவில்லை. திருவாசகத்தில் “தந்தது உன் தன்னை , கொண்டது என் தன்னை , சங்கரா யார் கொலோ சதுரர் ?” என்று மாணிக்க வாசகர் சிவபெருமானை கேட்கிறார். இறைவன் தன்னையே மணிவாசகரிடம் தந்துவிட்டமையால் அவரே இறைவன் ஆகி விட்டார் . எனவே அவரை திருத்தொண்டர் தொகையில் சேர்க்கவில்லை. அதனால் தான் தில்லை மூதூர் ஆடிய திருவடியாம் நடராஜப்பெருமானுக்கு ஆனி மற்றும் மார்கழி மாதங்களில் முறையே ஆனித்திரு மஞ்சனம் மற்றும் மார்கழி திருவாதிரை திருநாள் 10 + 10 = 20 நாட்கள் கொண்டாடும் போது, திருப்பெருந்துறை என்கிற ஆவுடையார் கோவிலில் ஆத்மநாத சுவாமிக்கு ( சிவபெருமானுக்கு) திருவிழா நடத்தாமல், சிவனே ஆகிய மாணிக்க வாசக பெருமானுக்கு, சிவபெருமானுக்குரிய அனைத்து வாகனங்கள் மற்றும் அலங்காரங்களுடன் மேற்கூறிய 20 நாட்களிலும் திருவிழா நடத்தப்படுகிறது.

    மேலும் இன்னொரு காரணமும் சொல்லலாம்:-

    மணிவாசகர் சிவபக்தரே ஆயினும் திருவாசகத்திலேயே “சக்தியை வியந்தும் பாடியதாக சில பதிகங்களின் தலைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது “. இந்த தலைப்புக்கள் ( headings ) மணிவாசகரால் கொடுக்கப்பட்டவையா அல்லது பிற்காலத்தில் தொகுத்தவர்கள் இந்த தலைப்புக்களை சேர்த்தனரா என்று தெரியவில்லை. எனவே சக்தியையும் வியந்து பாடியுள்ளதால் சிலர் அவரை சிவ மற்றும் சக்தி தொண்டர் என்று கருதி திருத்தொண்டர் தொகையில் சேர்க்காது விட்டிருக்கலாம். நான் முதலில் சொன்ன காரணத்தையே கருதுகிறேன். எது எப்படி ஆயினும் மணிவாசகரின் திருவாசகமும் திருக்கோவையாரும் காலத்தால் அழிக்கவொண்ணா அற்புதங்கள் ஆகும்.

    தேன் தமிழ் மயூரகிரி ஷர்மா அவர்களுக்கு இந்த அற்புதமான தொகுப்பினை வழங்கியதற்காக மீண்டும் அனைத்து வாசகர்கள் சார்பிலும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

  15. இன்றைக்கு இன்னொரு இனிய ஆனிமகத்திருநாளில் … மாணிக்கவாசகப் பெருமானின் மகத்துவம் பொருந்திய குருபூஜை நாளில் இப்பதிவை மீள நினைவூட்ட விழைகிறேன்.

    இங்கே முன்னர் பதிவிட்ட இப்பதிவைக் கண்ணுற்ற அன்பர்கள் யாவருக்கும் நன்றிகள்..

    குமார் அவர்களுக்கு,

    தாங்கள் குறிப்பிடுவது போன்ற திருக்கூட்ட மரபினருக்கு மாணிக்கவாசகப் பெருமானின் கோட்பாடு புறம்பானது என்ற செய்தியை என்னால் ஏற்க இயலவில்லை… சிவசம்பந்தம் உடையவர்கள்… சிவபக்தர்கள் ஒரு நிலையுற்று… சிவானுபூதியில் ஒன்றித்துத் திழைப்பார்கள் என்றே நம்புகிறேன்.

    அதே போல மதிப்பிற்குரிய பாலச்சந்திரன் அவர்கள் குறிப்பிடும் கருத்தும் ஏற்கத்தக்கதோ அறிகிலேன்…மாணிக்கவாசகர் சிவமானவர்..ஆனாலும் அப்படியேயே சுந்தரரையும் சொல்கிறோமே..? அது நிற்க..

    இன்றைய மாணிக்கவாசகப் பெருமானின் திருநாளில் அந்தச் சிவானுபூதிச் செல்வர் திருவடி வாழ வாழ்த்துவோம்..

  16. திருவாசகத்தேன் தந்த பெருவள்ளலின் ஜன்ம நக்ஷத்ரம் நினைவூட்டிய ஸ்ரீ சர்மா மஹாசயருக்கு நன்றிகள் பல. நெம்மேலி ஸ்ரீ பாலக்ருஷ்ண சாஸ்த்ரி அவர்கள் படைத்த சிவலீலார்ணவத்தின் தமிழ்ச்சுருக்கம் இந்த வ்யாஜத்தில் வாசிக்க நேர்ந்தது. மஹான் ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரின் ஸஹோதரின் பௌத்ரரான ஸ்ரீ நீலகண்ட தீக்ஷிதர் அவர்கள் தமிழ்த் திருவிளையாடல் புராணத்தினை ஸம்ஸ்க்ருத பாஷையில் “சிவ லீலார்ணவம்” என்ற காவ்யமாக படைத்தார்.

    இதில் 58ம் திருவிளையாடலான மாணிக்கவாசகருக்கு ஸாக்ஷாத் இறையனாரே தீக்ஷையளித்த திருவிளையாடல் துவங்கி 61ம் திருவிளையாடலாம் பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்டது பர்யந்தம் மாணிக்க வாசகப் பெருமானது. தாங்கள் நினைவூட்டியதன் வ்யாஜமாக இது வாசிக்க நேர்ந்தது. இதே புஸ்தகத்தில் ஸ்ரீ சாஸ்த்ரிகள் அவர்கள் வ்ருத்த லக்ஷணங்களுஞ்சொல்லியுள்ளார்கள்.

    இதில் மாணிக்கவாசகரை ஸ்ரீ தீக்ஷிதர் அவர்கள் வாதபுரீசர் என்று குறிப்பிடுகிறார். இது நாமத்திலேயே மங்களப்ரதனான சிவபெருமானின் நாமமும் கூட. வாதபுரீசராகிய பக்தருக்காக வாதபுரீசராகிய பகவான் நரிகளைப் பரிகளாக்கி துரகாரூடராய் அந்த பரியின் மீதாரோஹணித்து வருமழகை வருணிக்கும் ச்லோகம் பல முறை வாசிக்க வைத்தது. ச்லோகமும் அதன் பதவுரையும்

    உதாத்தேஷ்வாரோஹன் ப்ரஸபமனுதாத்தேஷு அவதரன்
    சனை: க்ராமன்னேவ ஸ்வரிதபதம் ஏகச்ருதிமபி
    ஸமுத்யன் மீமாஸாத்வயநயகலீனை கவித்ருத:
    புர: ப்ராதுர்பூத: புரமதிதுராம்நாய துரக:

    த்ரிபுரஸம்ஹாரகனான இறைவன் குதிரையிலாரோஹணித்து வருகிறான். இறைவனுக்கு வேதம் தான் குதிரை. வேதங்களின் ஏறுமுகமான ஸ்வரமான உதாத்தஸ்வரம் இறங்குமுகமான அனுதாத்தஸ்வரம் மற்றும் ஏற்ற இறக்கமில்லா ஸ்வரித மற்றும் ஏகச்ருதி ஸ்வரம் கலந்து வேதம் சொல்லப்படல் போன்று குதிரை ஏற்ற இரக்கங்களுடன் வருவதை கவி வர்ணிக்கிறார். வேதத்தின் பொருள் இப்படித்தான் என வரையரை செய்யும் சாஸ்த்ரங்கள் பூர்வ மற்றும் உத்தர மீமாம்ஸை. இவைகள் வேதமாகிய குதிரைக்கு கடிவாளங்களாக உபமானிக்கப்படுகிறது. இப்படி மிகுந்த தேஜஸுடன் வணக்கம் சொல்லிக்கொண்டு குதிரையிலேறிவரும் இறைவனை ஆச்சரியம் மிகுந்த கண்களுடன் அரிமர்த்தன பாண்டியன் கண்டான்.

    பற்பல லலிதமான வ்ருத்தங்களால் இந்த காவ்யம் படைக்கப்பட்டுள்ளது. இந்த ச்லோகம் சிகரிணீ என்ற வ்ருத்தத்தில் அமைந்ததாக சொல்கிறார். ஆதிசங்கரரால் இயற்றப்பட்ட ஸௌந்தர்யலஹரீ முழுதும் இதே வ்ருத்தத்தில் அமைந்துள்ளதையும் குறிப்பிட்டுள்ளார்.

    வந்தே வாதபுரீசம்.

  17. குருபூஜைத்திருநாளை ஜன்ம நக்ஷத்ரமெனத் தவறுதலாக குறிப்பிட்டதற்கு க்ஷமிக்கவும். மற்றொரு விஷயம். திருத்தொண்டத்தொகை மற்றும் பெரியபுராணம் இவற்றின் பின் அறுபத்துமூவரை பாடியவர் ஊத்துக்காடு ஸ்ரீ வேங்கட மஹாகவி. இவரது ஸப்தரத்ன கீர்த்தனைத்தொகுப்பில் இரு கீர்த்தனைகள் சைவ பக்ஷமான கீர்த்தனைகள்.

    அதிலொன்றான அபூர்வமான பரஸ் என்ற ராகத்தில் இயற்றப்பட்ட “ஆளாவதென்னாளோ சிவனே உன்னடியார்க்கடியார்க்கடியனாய் ஆளாவதென்னாளோ” என்ற கீர்த்தனையில் “இன்னவரில் ஒருவரைப் போலே ஆளாவதென்னாளோ” என அறுபத்துமூவரையும் பாடுகிறார். இந்த கீர்த்தனையை கேழ்க்குங்கால் மணிவாசகப்பெருமான் ஏன் அறுபத்துமூவரில் சேர்த்தி இல்லை என ஸம்சயமேற்படும் வாதபுரீச பக்தர் வாதபுரீச பகவானுக்கு துல்யர் என்றாலும் தாங்கள் இக்கருத்தைச் சுந்தரருக்குமது பொருந்தும் என்று சொல்லியுள்ளீர்கள். பின்னும் இவ்விஷயம் ஒரு புதிரே!

    தவறுதலுக்கு மீண்டும் க்ஷமாயாசனம்.

  18. அருமையான கட்டுரையை மீண்டும் வழங்கியிருக்கிறார் மயூரகிரியார். வாதவூர் அடிகளின் காலம், வரலாறு, ஏற்றம், புகழ், வழிபாடு என்று பலபல அருமையாக சொல்லியிருக்கிறார் சர்மாஜி அவர்கள்.
    வாதவூர் அடிகளின் பெருமை தமிழத்தில் மட்டுமல்ல கர்நாடகத்திலும், ஆந்திரத்திலும் பரவியுள்ளது. மைசூர் நஞ்சன்கோடு ஸ்ரீ கண்டேஷ்வர் ஆலயத்தில் நால்வர் அறுபத்து மூவரோடு எழுந்தருளி இருப்பதை தரிசித்தேன். திருப்பருப்பதம் என தமிழில் வழங்கும் ஸ்ரீ சைலம் மல்லிகார்ஜுனர் ஆலயத்திலும் ஸ்ரீ நடராஜப்பெருமானுக்கு ஒருபுறம் ஸ்ரீ மாணிக்க வாசகர் பெருமான் எழுந்தருளி உள்ளதைக்கண்டு மெய்சிலிர்த்தேன்.
    மாணிக்க வாசகர் பெருமான் அறுபத்து மூவரில் வராமைக்கு காரணம் என்ன என்பது ஒரு நெடிய வினா. ஆனால் அப்பர், சம்பந்தர் போல அவரும் சிவத்தோடு கலந்ததால் அவரை மூவர் முதலிகளிளிருந்து அவரை பிரித்துப்பார்ப்பது சரியில்லை.
    ஆனால் மாணிக்க வாசகர் வீரசைவர் என்றும் லிங்கதாரணம் உடையவர் என்பது தமிழக வீரசைவ பெருமக்களின் நம்பிக்கை.
    உடலிடங்கோண்டாய் யான் இதற்க்கு இலன் ஓர் கைமாறே
    என்ற சுவாமிகளின் வரி அதற்க்கு ஆதாரமாய் சுட்டப்படுகிறது.
    சில அத்வைத நண்பர்கள் மணிவாசகர் அத்வைதம் சார்ந்தவர் என்றும் கருதுகிறார்கள். எவ்வாராகினும் மாணிக்கவாசகர் நம் ஞானாசிரியர். அவர் திருவடிபோற்றுவோம்.

  19. மதிப்பிற்குரிய கிருஷ்ணகுமார் அவர்கள் இங்கே சிவலீலாவர்ணம் என்ற பெயரில் அழகாக தமிழ்த்திருவிளையாடற்புராணம் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிற செய்தியைச் சொன்னமைக்கு நன்றிகள்.. இப்புதிய செய்தியை அறிந்தமை குறித்து மகிழ்ச்சி…

    தமிழ் பாடிய ஆழ்வார்கள் பேரில் வேதாந்ததேசிகர் போன்ற மஹான்கள் கோதாஸ்துதி முதலிய அற்புத ஸ்துதிகளைத் சம்ஸ்கிருத மொழியில் பாடி அவர்களின் பெருமையை பாரதம் எங்கும் வியாபகமாகச் செய்தது போல நாயன்மார்கள், மாணிக்கவாசகர் குறித்தும் சம்ஸ்கிருத மொழியில் ஸ்தோத்திரங்கள் எழுந்தனவா..? என்பது குறித்தும் எவரேனும் அறிந்தால் தெரிவிப்பின் அதுவும் முக்கியமானதாக இருக்கும். இவ் ஆச்சார்யார்களின் குருபூஜை மற்றும் ஜன்ம தின உற்சவங்களில் அப்பாடல்களையும் சொல்லிச் சேவிக்கலாமல்லவா..?

    வணக்கத்திற்குரிய வீபூதிபூஷண் அவர்கள் குறிப்பிடுகிறமை போல மாணிக்கவாசகர் அத்வைத சிந்தாதி என்றும் அதனாலேயே சேக்கிழார் போன்றவர்கள் அவரைப்புறம் தள்ளி விட்டனர் என்றும் கொள்வாரும் உண்டு… ஆனால், சாக்கிய நாயனாரையும் புராணத்துள் காட்டிய சேக்கிழார் பெருமான் மாணிக்கவாசகரை அத்வைதி என்று புறம் தள்ளினார் என்று கருத முடியாதல்லவா?

  20. இந்த கட்டுரை ஆசிரியரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். தமிழும் தெய்வீகமும் பிரிக்க முடியாதது. தமிழின் பெருமையே திருமுறைகளிலும், திவ்யப்ரபந்தங்களிலும் தான் அடங்கி இருக்கிறது. இதை தமிழக மக்கள் எல்லோரும் உணர்ந்து போற்ற வேண்டும். எத்தனை மத மாற்ற சக்திகள் நம்மை சீரழிக்க முயற்சித்தாலும் நமது நாயன்மார்களின் அருளாற்றல் நம்மை காப்பாற்றி கரை சேர்க்கும். இக்கட்டுரை ஆசிரியருக்கு எனது அன்பையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *