முன்குறிப்பு: கொழும்புவில் 2004, ஜூலை 29-ஆம் நாள் பேராசிரியர் செல்வநாயகம் அறக்கட்டளையின் முதல்விருது ஐராவதம் மகாதேவன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. அப்போது எழுதப்பட்ட கட்டுரை..
=+=
ஈழத்தமிழ் இலக்கியம் பற்றி தமிழகத்தமிழர்கள் அக்கறை கொள்வதில்லை, அங்கீகரிப்பதில்லை, பொருட்படுத்துவதுமில்லை என்ற குறை எப்போதும் ஈழத்தமிழர்களிடம் உண்டு. ஒரு சில விதிவிலக்குகள் உண்டுதான். கலாநிதிகள் கைலாசபதி, சிவத்தம்பி போன்றோர் கல்வித்துறையில் ஒரு காலும் முற்போக்கு எழுத்தில் ஒரு காலும் பதித்த காரணத்தாலும் இவ்விரு நிறுவனங்களின் அறிமுகமே போதுமானதாலும், உடன் அங்கீகாரம் பெற்றனர். மற்றபடி படித்தறிந்து, தேர்ந்து யாரையும் அங்கீகரிக்கும் வழக்கம் தமிழகத்தில் கிடையாது. தமிழகத்தில் உள்ளவர்களில் சிறப்பான பங்களிப்பு தந்துள்ளவர்களுக்கே தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாத போது ஈழத்துத்தமிழ் எழுத்துலகம் தங்களைக் கண்டுகொள்ளவில்லையே என்ற ஆதங்கம் ஏதும் நியாயமோ, அர்த்தமோ கொண்டதாகத் தெரியவில்லை. இதை நான் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் சொல்லி வந்திருக்கிறேன்.
ஆனால் ஈழத்தமிழர் எங்கிருந்தாலும் தமிழக இலக்கிய பிரவாஹத்தை தொடர்ந்தே வந்திருக்கிறார்கள். அது அவர்களது இயல்பு என்பதும் தமிழகத்தில் எழும் சீரிய முயற்சிகளுக்கு தமிழகத்தார்களைவிட ஈழத்தமிழர்களே அதிக ஆர்வம் காட்டி, ஆதரவும் தந்துள்ளார்கள் என்பதும் எனக்கு எழுத்துப் பத்திரிகை காலத்திலிருந்து தெரிந்த விஷயம். அது வரலாறு. இப்போது இன்னொரு சான்றைப் பற்றிச் சொல்லப்போகிறேன்.
இலங்கையில் கொழும்புவிலிருந்து இவ்வருடம் தொடங்கப்பட்டிருக்கும் பேராசிரியர் செல்வநாயகம் அறக்கட்டளை தன் முதல் விருதுக்கு, ஐராவதம் மகாதேவனின், “ஆரம்ப காலக் கல்வெட்டுகள்: தொடக்கத்திலிருந்து ஆறாம் நூற்றாண்டு வரை” (Early Tamil Epigraphy: From the earliest Times to the 6th century A.D) என்னும் கல்வெட்டு ஆராய்ச்சி நூலுக்கு, அவரது ஆயுட்கால சாதனையாக, 2003-ம் ஆண்டின் மிகச்சிறந்த ஆராய்ச்சி நூலை அறக்கட்டளையின் நிர்வாகக்குழு ஏகமனதாகத் தேர்ந்து எடுத்துள்ளது. முதல் விருதே எவ்வித சந்தேகத்திற்கும் இடமின்றி, தமிழ் மொழியின், தமிழ் வரலாற்றின் ஆரம்ப காலம் பற்றிய புதிய பார்வைகளை உருவாக்கித் தந்துள்ள, ஒரு மைல்கல் என கருதப்படத்தக்க ஓர் ஆராய்ச்சி நூலுக்கு தரப்பட்டுள்ளதன்மூலம், இவ்வீழத்து அறக்கட்டளையின் நிர்வாகிகளின் உயர்ந்த லட்சியங்களும் அதற்கேற்ற செயல்பாடுகளும் அச்சமூகத்தின் கௌரவத்தை உயர்த்தியுள்ளன. இவ்வாராய்ச்சி நூல் ஐராவதம் மகாதேவனின் தன் நீண்ட கால உழைப்பின், தேடல் தாகத்தின் விளைவு. குறிப்பாக, அவர் இந்திய நிர்வாகத் துறையிலிருந்து ஓய்வு பெற்றபின் கடந்த 14 வருட காலக் கடுமையான உழைப்பில் பெற்றது. அறக்கட்டளையின் முதல் அடிவைப்பே அதற்குச் சிறப்புதரும் ஒன்றாக அமைந்ததற்கு சிவத்தம்பியின் தலைமையில் இயங்கும் நிர்வாகக் குழுவைப் பாராட்டவேண்டும்.
தமிழ்நாடு அரசோ, பண்டித உலகமோ, இலக்கிய உலகமோ, இந்த கௌரவத்தையும் அங்கீகாரத்தையும் அவருக்குத் தரவில்லை. இந்த நூலை வெளியிட்டுள்ள நிறுவனங்கள், தமிழ்நாட்டில் ஒரு தனி மனித ஆர்வமும் (எஸ்.ராமகிருஷ்ணன், கிரியா, சென்னை) Harvard University, Cambridge, Massachusetts-ம் தான். இதைப் புரிந்துகொள்ள ஒரு பழம் செய்தியை நினைவுப்படுத்திக்கொள்ளலாம். 1967-லோ என்னவோ, உலகத்தமிழ் மாநாடு சென்னையில் நடந்தது, தமிழ் அறிஞர்களின் நிகழ்வாக இல்லாது, ஓர் அரசியல் மாநாட்டு ஆரவாரத்தோடும் திருவிழா கோலாகலத்தோடும் நடத்தப்பட்டது. ஐராவதம் மகாதேவன் அளித்த ஆராய்ச்சிக் கட்டுரை, தமிழர் பழம்பெருமைக்கு அணிகலனாக இல்லாது போன காரணத்தால், கடும் கண்டனங்களுக்கு உள்ளாகி, மகாதேவன் அவமானப்படுத்தப்பட்டார். இதற்குத் தலைமை தாங்கியவர், திராவிட அரசியல் சார்பு கொண்டவரும் தமிழ் பண்டிதருமான இலக்குவனார் என்பவர். பொதுவாகவே தமிழ் பண்டித உலகமே திராவிட அரசியல் வகுக்கும் அறிவார்த்த நிலைப்பாட்டை கேள்வியின்றி மேற்கொண்ட உலகம்தான். அதை கோஷமாகவே முன்வைக்கும் உலகம்தான். அதனால் இலக்குவனாரை மாத்திரம் இதற்கு இலக்காக்குவது தவறு.
ஐராவதம் இந்திய அரசின் நிர்வாகத்துறை அதிகாரி. அரசியல் சார்புகள் அவர் துறைக்கு அப்பாற்பட்டன. ஆனால் தமிழ் ஆராய்ச்சிக்குத் தடையில்லை; அதிலும் சிவராம மூர்த்தி போன்ற கலைத்துறை, வரலாற்று அறிஞர் ஆதரவில் செயல்படுபவர்க்கு. அமைதியாக தன் தேடலில் அரசுப்பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, ஐராவதம் மகாதேவனால் முழுநேரமும் ஓர் ஆர்வலர் குழுவையும் தன்னுடன் சேர்த்துக்கொண்டு தீவிரமாக தன் ஆராய்வில் ஈடுபட முடிந்துள்ளது.
அவரது ஆராய்ச்சி, இதுகாறும் அதிகம் கவனம் பெறாத ஆரம்பகாலக் கல்வெட்டுகளை மாத்திரமே களனாகக் கொண்டது. மிக நீண்ட கால நாகரிகமும், சரித்திரமும், இலக்கியப் பதிவுகளும் கொண்ட நாடுகளில் தமிழ்நாடும் நாகரிகமும் ஓன்று. தமிழ்நாட்டின் ஒவ்வொரு ஊரும், கல்லும் ஒரு நீண்ட வரலாற்றைக்கூறும். அவ்வரலாறு அதன் கட்டிடங்களிலும், கல்வெட்டுகளிலும், இலக்கியங்களிலும் பதிவாகியுள்ளது. இலக்கியத்துக்கு முந்திய பதிவுகள் கல்வெட்டுகளில். கல்வெட்டுகள் இவ்வளவு பரவலாகவும், அதிக எண்ணிக்கையிலும் தென்னிந்தியாவில் பரவியிருப்பதுபோல் வேறு எங்கும் காணக்கிடைக்காது. அதிலும் தமிழ்நாட்டில் காணப்படுபவை கி.மு.மூன்றாம் நுற்றாண்டிலிருந்து தொடங்கும் வரலாறு கொண்டவை.
ஐராவதம் மகாதேவன் தன் தீவிர ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொண்டுள்ளவை, கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. ஆறாம் நுற்றாண்டு வரையான காலகட்டத்தில், மௌரிய சாம்ராஜ்யத்தின் காலத்தில், தெற்கு நோக்கிப் பயணத்தை தொடங்கிய ஜைனர்கள், பௌத்தர்கள் கொண்டு வந்து தமிழ்நாட்டுக்கு அறிமுகம் செய்த பிராஹ்மி எழுத்துகள் கொண்ட கல்வெட்டுகள். இன்றைய தமிழ் எழுத்துகளின் வரிவடிவத்தின் ஆரம்பங்கள் நாம் தெரிந்துள்ள கோவில் கல்வெட்டுகளோ, செப்புத்தகடுகளோ அல்ல. இவை பிந்திய வடிவங்கள்; சாசனங்கள். ஜைனர்கள் வாழ்ந்த மலைக்குகைகளில் சாசனங்களாகப் பொறிக்கப்பட்டவை தாம் ப்ராஹ்மி கல்வெட்டுகள். வெகு குறைவான எழுத்துகளே கொண்டவை. சிதைந்த நிலையில் உள்ளவை. எளிதில் சென்றடைய முடியாத இடங்களில் படித்து, படிஎடுக்கமுடியாத நிலையில் உள்ளவை. இவற்றை முதலில் 1924 வாக்கில் கண்டறிந்து, இவை ப்ராஹ்மி வடிவில் உள்ளவை என்று சொன்னவர் கே.வி.சுப்பிரமணிய அய்யர். ஆனால் இவை தென்னிந்தியாவில் மற்ற இடங்களில் காணும் ப்ராஹ்மியிலிருந்து மாறுபட்டு, சில புதிய அம்சங்களைக் கொண்டதாகக் கண்டு, அந்த மாற்றங்கள், தமிழ் மொழி உச்சரிப்புக்கேற்ப செய்யப்பட்ட மாற்றங்கள் எனவும் கண்டறிந்தார். ஆனால் இந்த இழையைப்பற்றி மேற்கொண்ட ஆராய்வை அவரோ, பின் யாருமோ தொடரவில்லை. அப்பயணமே மறக்கப்பட்டுவிட்டது.
இப்போது மகாதேவன் அந்த 120 கல்வெட்டுகளும் இருக்கும் இடங்களுக்குச்சென்று, புகைப்படமாக, கைஎழுத்தாக, இன்னும் பல நவீன சாதனங்ளில் படியெடுத்துப் பிரசுரித்துள்ளார். அவற்றை வாசிக்கும் முறை, அக்காலத்தில் வழங்கிவந்த 18 மெய்யெழுத்துக்களும் 8 உயிர் எழுத்துகளுமே கொண்ட மொழியின் ஒரளவு கட்டமைக்கப்பட்ட நெடுங்கணக்கு போன்றவற்றையெல்லாம், தொல்காப்பியம், மற்றும் பல் நிகண்டுகளின் உதவியோடு கொடுக்கப்பட்டுள்ள விரிவான விளக்கங்கள், இக்கல்வெட்டுகள் ஒவ்வொன்றினதுமான கால நிர்ணயம், கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ள மனிதர்கள், கிராமங்கள், ஊர்களின் பெயர்கள், சொல்லாக்க வரலாற்று விளக்கம், சொற்களின் இலக்கணக்கூறுகள், இப்படியாக எல்லாவற்றின் விளக்கத்தொகுப்பு என எல்லாம் அடங்கிய களஞ்சியம் இது. மேற்கொண்டு ஆராய்வைத் தொடங்குகிறவர்கள் ஐராவதம் சென்றவிடங்களுக்கெல்லாம் போய் கல்வெட்டுகளை மீண்டும் தேட வேண்டாது, ஒரு நீண்ட காலகட்டம் வரை, அவரே உடன் அழைத்துச் செல்வது மட்டுமல்லாமல், தான் கடந்துவந்த பாதையின் வரைபடத்தையும் தந்துள்ளார்.
போன வருடம் ஏப்ரல் மாதத்தில் ஒரு நாள் இந்நூல் வெளியிட சென்னையில் உள்ள பாரதீய வித்யா பவனில் ஒரு சின்ன அரங்கில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்திருந்தார்கள். அவ்வரங்கு சுமார் 100 பேர் மட்டுமே அமரும் வசதி கொண்டது. இலக்கியக் கூட்டங்களுக்கே 100 பேர் கூடுவது துர்லபமாக இருக்கும்போது, கல்வெட்டு ஆராய்வு பற்றிய ஆங்கில நூலின் வெளியீட்டுக்கு எத்தனை பேர் வருவார்கள் என்று கடந்த அனுவபவம் அவர்களுக்குச் சொன்னது. ஆனால் அன்று வந்த கூட்டத்தின் பெருக்கத்தைப் பார்த்து, நிகழ்ச்சி உடனே கீழ்த்தளத்தில் இருந்த பெரிய அரங்கிற்கு இடம் மாற்றம் செய்யப்பட்டது. கிட்டத்தட்ட 1000 பேருக்கு மேல் இருக்கை தரும் பெரிய அரங்கு அது. அன்று நிற்போர் பெருக்கத்தையும் சேர்த்து அரங்கு நிறைந்து வழிந்தது. இது தமிழ்நாட்டின் அதிசயங்களில் ஒன்று.
இந்நூல் தமிழ் இலக்கியம், தமிழ்நாடு, அக்காலச் சமூகம், தமிழ் மொழியின் வளர்ச்சி, அது வளர்ந்த வரலாறு போன்ற பல சுவாரஸ்யம் நிறைந்த நாம் புதிதாகக் கேட்கும் செய்திகளைத் தருகிறது. இச்செய்திகள் தமிழ்நாடு மட்டுமின்றி, இலங்கை உள்ளிட்ட தென்னிந்தியப் பரப்பு முழுதையும் உள்ளடக்கிய பின்னணியில் தமிழ் மொழியின் ஆரம்பங்களையும் சொல்கிறது.
தமிழ்-ப்ராஹ்மி கல்வெட்டுகள்
முன்னர் சொன்னது போல அசோகன் காலத்திலிருந்து ப்ராஹ்மி எழுத்துகள் ப்ராக்ருத மொழிக்கானவை என்பதை முதன் முதலில் 1850-களில் ஜேம்ஸ் ப்ரின்ஸெட் என்பவர் கண்டறிந்தார். ஆனால் தமிழ்நாட்டில் காணப்பட்ட ஆரம்பகாலக் கல்வெட்டுகள் ப்ராஹ்மி வகையினதாக இருந்தாலும், ப்ராகிருத மொழிக்கான ப்ராஹ்மி எழுத்துகளிலிருந்து மாறுபட்டிருந்த காரணத்தால் அவற்றைப் படித்தறிவது சிரமமாகவே இருந்தது. ஏழாம் நூற்றாண்டுக்குப் பிற்பட்ட வட்டெழுத்துகள், கிரந்த எழுத்துகள், அவற்றின் காலகட்ட வளர்ச்சிப்படிமங்களில், இன்றைய தமிழ் எழுத்துகளுடன் கொண்டுள்ள நெருங்கிய தோற்றத்தால் அவற்றைப் படியெடுத்துப் புரிந்து கொள்ளுதல் இவற்றிற்கு முந்தைய, மாறிய ப்ராஹ்மி எழுத்துகளைக் காட்டிலும் சுலபமாகவே இருந்தன. 1924-ல் தான் கே.வி.சுப்பிரமணிய ஐயர், இவை தமிழ் மொழியின் சப்தங்களை வெளிப்படுத்துதற்கு ஏற்ற வகையில் மாற்றப்பட்ட ப்ராஹ்மிதான் எனவும், ஆகவே, இவற்றை தமிழ்-ப்ராஹ்மி என வேண்டும் என்றும் கண்டுபிடித்தார். ஆனால், இதன் பிறகு, இதைத் தொடர்ந்து இவற்றை, இப்புதிய பார்வையில் ஆராயவில்லை.
ஐராவதம் மஹாதேவனின் பல்துறை ஆராய்வில் எழுத்துக்கூட்டு முறை (orthography), தொல் எழுத்துக்கலை (palaeography), தமிழ் இலக்கணம், ஆரம்ப சங்க இலக்கியங்களில் காணும் ஒத்திசைவின் சாட்சியங்கள் என இவற்றைப் படிக்க முடிந்துள்ளது. இக்கல்வெட்டுகள் ஒன்றிரண்டு வரிகள் அல்லது வாக்கியங்களே கொண்ட மிகச் சிறிய சாசனங்களால் ஆனவை. பெரும்பாலும் மனித நடமாட்டமற்ற மலைக்குகைகளில், பாறைப்பிளவுகளில் காணப்படுபவை. இக்குகைகள் ஜைன புத்த (பெரும்பாலும் ஜைன) பிக்குகளுக்கான தங்குமிடமாக அமைந்தவை. கற்படுக்கைகள் கொண்டவை. இத்தகைய கல்வெட்டுகள் மொத்தம் 89. பின்னர் இன்னும் 21 கல்வெட்டுகள் தமிழ்-ப்ராஹ்மிக்கும் அடுத்தக்கட்ட வளர்ச்சியின் ஆரம்பமான வட்டெழுத்துக்களால் ஆனவை. இவற்றிலுருந்து தான் இன்றைய தமிழ் எழுத்துகள் பரிணாமம் பெற இருந்தன.
இக்கல்வெட்டுகள் காணப்படும் இடங்கள், அக்காலத்தில் கிழக்குக் கடற்கரையையும் (தமிழ்நாட்டையும்) மேற்குக் கடற்கரையையும் (சேர நாட்டையும்) இணைக்கும் வாணிக நெடுஞ்சாலையைப் புள்ளியிட்டு வரைந்து காட்டுவதாகவே உள்ளன. அக்கால ரோமானிய நாணயங்கள், ப்ராஹ்மி எழுத்துகள் கீறப்பட்ட பானை உடைசல்கள் (shreds) எல்லாம் கண்டெடுக்கப்பட்டுள்ள இடங்கள், கல்வெட்டுகள் புள்ளியிட்டுக் கோடிழுக்கும் பாதையோடு ஒத்துள்ளன. பானை உடைசல்களில் காணப்படும் ப்ராஹ்மி கீறல்கள் கிராமப்புறங்களிலும் கல்வி பரவியிருந்ததையும், மொழி வாய் மொழி மரபிலிருந்து, வரிவடிவ மரபிற்கு மாற்றமடைந்துள்ளதையும் குறிக்கும்.
இந்த ப்ராஹ்மி எழுத்துகளைத் தமிழ்நாட்டுக்கு அறிமுகப்படுத்தியவர்கள், அசோகர் காலத்திற்குப் பின்வந்த ஜைனர்கள். அக்காலத்தில் மக்கள் மொழியாகவும், அரசு மொழியாகவும், வளமான இலக்கிய மொழியாகவும் தமிழ் இருந்த காரணத்தால், ஜைனர்கள் தமிழ் மொழியைக் கற்றனர். அம்மொழிக்கு வரிவடிவம் கொடுக்க, தாம் அறிந்த ப்ராஹ்மி எழுத்துகளைப் பயன்படுத்தினர். தாம் கற்ற தமிழ் மொழியில் இலக்கண நூல்கள் பெரும்பாலானவற்றையும் காப்பியங்கள் பலவற்றையும் நீதி நூல்களையும் அவர்கள் இயற்றினர்.
பானை உடைசல்களில், முத்திரைகளில், கல்வெட்டுகளில் காணப்படும் ப்ராஹ்மி எழுத்துகளையும், அதனைத் தொடர்ந்து வட்டெழுத்துகள் பெற்ற மாற்றத்தையும் ஆராய்ந்த ஐராவதம் மஹாதேவன் இவை தமிழில் இருப்பதாலும், நகர்ப்புறம் மட்டுமின்றி, கிராமங்களிலும் பரவியிருப்பதாலும், அக்கால கட்டத்திலேயே, தமிழ்நாட்டில் கல்விப்பெருக்கம் சமூகத்தின் சகல மட்டங்களிலும் பரவியிருந்தது என்ற முடிவிற்கு வருகிறார். இதற்கான இரண்டு சாட்சியங்கள், தென்னிந்தியாவின் வட பகுதிகளில் (கன்னடமும் தெலுங்கும் பேசப்படும் பகுதிகளில்) காணப்படும் கல்வெட்டுகள், ப்ராகிருத மொழிக்கான கல்வெட்டுகளே அல்லாது, கன்னட, தெலுங்கு மொழிகளுக்கான (தமிழ் போல்) மாற்றப்பட்ட ப்ராஹ்மி எழுத்துகள் கொண்டவை அல்ல. அப்பகுதிகளில் ஜைனர்கள் ப்ராகிருத மொழியிலேயே– அது அரசு மொழியுமாக இருந்த காரணத்தால், தம் செயல்பாடுகளுக்குப் போதுமானதாக இருக்கக் கண்டனர்– தாம் கற்ற தமிழ் மொழிக்கு, தாம் கொணர்ந்த ப்ராஹ்மி எழுத்துகளை, தமிழ் ஓசைக்கு ஏற்ப மாற்றி புதிய வரிவடிவங்களை உருவாக்கினர். ஆனால் தமிழ்நாட்டில், தமிழ் மக்கள் ப்ராகிருத மொழியின் மேலாண்மையை அனுமதிக்கவில்லை. அதுவே மக்கள் மொழியாகவும், அரசு மொழியாகவும், இலக்கிய மொழியாகவும் இருந்ததால், ஜைனர்கள் தமிழ் கற்றனர்; தம் மதத்தைப் பிரச்சாரம் செய்ய வந்த கிறிஸ்துவப் பாதிரிமார்கள் தமிழ் கற்று, தமிழில் அகராதிகளும், காப்பியங்களும் இயற்றியது போல; தம் பிரச்சாரங்களைத் தமிழிலேயே செய்தது போல.
தமிழ் சமூகத்தின் எல்லாத் தரப்பினரிடையேயும் கல்வி பரவியிருந்ததற்கு, அக்காலகட்ட சங்ககாலப் புலவர்களில், மன்னர்கள், வாணிகர், பிராமணர், பல்வேறுவகை தொழில் வினைஞர்கள், பெண்கள் என சமூகத்தின் எல்லாத்தரப்பினரும் இருந்ததே ஒரு பனமான சாட்சியமாகும். தமிழ்நாட்டில் அரசும் நிர்வாகமும், கிராமங்களின் சுய நிர்வாக அமைப்புகளிருந்து படிபடியாக அரசன் வரை கட்டமைக்கப்பட்டிருந்தது. சங்க இலக்கியங்களில், அம்பலம், மன்றம் பொதியல் என அவ்வமைப்புகள் பேசப்படுகின்றன. தமிழ்நாடு அக்காலங்களில் பல சிற்றரசுகளாக இருந்தபோதிலும் அவை சுதந்திர அரசுகளாக இருந்தன. மௌரிய சாம்ராஜ்யம் இப்போதைய ஆந்திரப் பகுதிகளை உள்ளடக்கியதாக இருந்ததை கல்வெட்டுகள் கூறுகின்றன.
தமிழ் ப்ராஹ்மி 18 மெய்யெழுத்துகளையும், 8 உயிர் எழுத்துகளையும் மட்டுமே கொண்டதாக இருந்தது. பனை ஓலையும், எழுத்தாணியும், எழுத்தறிவு பரவ, ஜன நாயகப்படுத்தப்பட, எளிதான, மலிவான, தமிழ்நாட்டில் குறையின்றி எங்கும் இறைந்து கிடக்கும் சாதனங்களாயின. இப்பனையோலையின் அறிமுகமே எழுதுவற்கு எளிதான வட்டெழுத்துகள் ஒரு சில நூற்றாண்டுகளிலேயே– ஆறு-ஏழாம் நூற்றாண்டுகளில்– வருகைதருவதற்கும் காரணமாயிருந்திருக்கக்கூடும். இக்கட்டத்தின் ஆரம்பத்தில், தமிழ் எழுத்துகள் ஒரு நிலைபெற்ற வளர்ச்சிக்கட்டத்தை அடைந்துவிட்டன.
தமிழ்நாட்டின் வாணிகப் பெருக்கம் சங்ககாலக்கட்டத்தில், வட மேற்கே ரோமானியப் பேரரசையும், தெற்கே இலங்கையையும், கிழக்கே மலேயா, தாய்லாந்து எனவும் தன் எல்லைகளை நீட்டித்திருந்தது. எகிப்தில் சமீபத்தில் நடந்த புதைபொருள் ஆராய்வில், தமிழ் ப்ராஹ்மி எழுத்துகள் கீறப்பட்டிருந்த பானை உடைசல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் தமிழ்ப் பெயர்கள் காணப்படுகின்றன. கிரேக்க மொழியில் எழுதப்பட்டுள்ள கி.பி.இரண்டாம் நூற்றாண்டு ஆவணம் ஒன்று வியன்னா அரும்பொருள் காப்பகத்தில் உள்ளது. அது முசிரியிலிருந்து அலெக்ஸாண்ட்ரியாவுக்கு பொருள் ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தம் என ஆராய்ந்து அறியப்பட்டுள்ளது.
முடிவில், சுருக்கமாக, தமிழ்நாட்டில் எங்கும் ப்ராகிருத மொழி பேசும் கல்வெட்டுகள் அக்காலகட்டத்தில் காணப்படவில்லை. மாறாக கன்னடம், தெலுங்கு மொழி பேசும் பிராந்தியங்களில் காணும் கல்வெட்டுகள் ப்ராகிருத மொழியிலேயே காணப்படுகின்றன. தமிழ்நாடு வந்த ஜைனர்கள் தமிழ் கற்க வேண்டிய கட்டாயம் எற்பட்டது போல அல்லாது, தென்னிந்தியாவின் வடபகுதிகளில் ஜைனர்கள் ப்ராகிருத மொழியிலேயே செயல்பட முடிந்துள்ளது. கன்னட மொழியில் முதல் இலக்கிய வெளிப்பாடு 9-ஆம் நுற்றாண்டு கவிராஜ மார்க்கமாகவும், தெலுங்கில் 11-ஆம் நுற்றாண்டு நன்னய்யனின் மகாபாரதமாகவும் இருந்தன. தமிழ்நாடு சிற்றரசுகளால் ஆளப்பட்டாலும், அவர்கள் சுதந்திர அரசுகளாக இருந்தனர். பலமான பரந்த நிர்வாகக் கட்டமைப்புகள் இருந்தன. தமிழ் அரசு மொழியாக, மக்கள் மொழியாக, இலக்கிய மொழியாக, சமூகம் சகல மட்டங்களிலும் கல்விப் பெருக்கம் கொண்டதாக இருந்த காரணங்களால், தமிழ்நாட்டுக்கு ப்ராகிருத மேலாண்மையின் தேவை இருக்கவில்லை. இவை அரசியல் மேடைப்பேச்சுக்களில் வெற்றுப் பெருமையின் முரசொலி அல்ல. கி.மு.இரண்டாம் நூற்றாண்டிலிருந்து கி.பி.ஆறாம் நூற்றாண்டு வரையான தமிழ்-ப்ராஹ்மி கல்வெட்டுகள் தரும் சாட்சியம்.
வெங்கட் சாமிநாதன் ஐம்பது வருடங்களாகத் தமிழில் எழுதிவரும் கலை, இலக்கிய விமர்சகர். இலக்கியம், இசை, ஒவியம், நாடகம், திரைப்படம், நாட்டார் கலை போன்ற பல்வேறு துறைகளிலும் ஆழ்ந்த ரசனையும், விமர்சிக்கும் திறனும் கொண்டவர். இலக்கியம் வாழ்க்கையின் முழுமையை வெளிப்படுத்துவதன் மூலமாக உன்னதத்தை உணர்த்தும் முயற்சி என நம்பிச் செயல்டுபவர் வெங்கட் சாமிநாதன். மேலும் விவரங்கள் இங்கே.
சார்
அருமையான எளிமையான கட்டுரை
சில கேள்விகள். அசோகர் காலத்திற்குப் பின்னால் ஜைன மதத் துறவிகளால் அறிமுகப் படுத்தப் பட்ட அல்ல்து உருவாக்கப் பட்ட தமிழ் ப்ராஹ்மி எழுத்து முறைக்கு முன்னால் எந்த வகை எழுத்துக்கள் பயன் படுத்தப் பட்டன? தமிழ் கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து மூத்த மொழி என்கிறார்களே, அப்படியானால் வரி வடிவம் அல்லது எழுத்து வடிவம் இல்லாத பேச்சு மொழியாக மட்டுமே தமிழ் ஜைனர்களின் வருகைக்கு முன்னால் இயங்கி வந்ததா? சங்கப் பாடல்கள் தொல்காப்பியம் எல்லாம் முதன் முதலில் எந்த எழுத்து வகையில் எழுதப் பட்டிருக்கக் கூடும்? எழுத்து முறை இல்லாமல் வாய் வழியாக மட்டுமே பேசப் படும் மொழிகளை அறிவேன் அது போலவே தமிழும் இருந்திருக்கக் கூடுமா? ஐராவதன் மகாதேவன் அவர்களின் காலக் கணக்கைத் தீவீரத் தனித் தமிழ் வெறியர்களும் கோமாளிகளும் ஏற்றுக் கொள்வது இல்லை மாறாக அவரை வசை பாடும் கும்பலும் உள்ளது. எப்படியோ இந்த செம்மறி மாநாட்டில் அவரை ஆட்டைக்குச் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள் அதற்கான உள் அரசியல் என்னவென்பதை ஏற்கனவே டாக்டர் கல்யாணராமன் அவர்கள் இங்கு எழுதியுள்ளார்கள்.
அன்புடன்
ச.திருமலை
சார், ஐராவதம் அவர்களின் சிக்கலான தீவிர ஆய்வுகளை ஒரு பறவைப் பார்வையாக அனைவரும் புரிந்து கொள்ளும் வண்ணம் எழுதி உணர்த்தியிருக்கிறீர்கள். மிக்க நன்றி.
தமிழின் தொன்மையைப் பற்றிய வரலாற்று நிரூபணங்களில் இந்தக் கல்வெட்டு ஆய்வுகள் மகத்தான இடம் பெறும் என்பதில் ஐயமில்லை.
ஈழத் தமிழர்கள் உண்மையான தமிழ்ச் சேவையைக் கண்டறிந்து போற்றுபவர்கள் என்று நீங்கள் கூறியது முற்றீலும் சரி. கடந்த பல பத்தாண்டுகளாக தமிழ்நாட்டில் தமிழ் கோஷப் படுத்தப் பட்டு, வேஷப் படுத்தப் பட்டு சுயநல அரசியல் கயவர்களின் கையில் சிக்கிச் சீரழிகிறது.. இந்த சூழலிலும் ஐராவதம் போன்ற உணமையான அறிஞர்கள் தாமதமாகவாவது கௌரவிக்கப் படுகிறார்கள் என்பது ஆசுவாசம் தரும் செய்தி.
திருமலை சரியான கேள்வி கேட்டிருக்கிறார். தமிழ் எழுத்து வடிவம் ப்ராஹ்மி என்ற அகில இந்திய (pan-indian) எழுத்து வடிவத்துடன் தொடர்புடையது என்று ஐராவதம் கூறும் வரலாற்று உண்மையைத் தமிழின் பெயரால் வெறிக் கூச்சல் போடும் கும்பல்கள் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. அவரை ஒருபுறம் கௌரவித்து விட்டு, மறுபுறம் தங்கள் காழ்ப்புணர்வுகளையும், துவேஷங்களையும் இன்னும் பெரிதாக பரப்புகிறார்கள்.
தேவரனையர் கயவர் அவரும் மேவன செய்தொழுகலான்
என்ற குறள் நினைவு வருகிறது.
கட்டுரையில் உள்ள கருப்பு-வெள்ளைப் படங்கள் அபூர்வமானவை. அவற்றைத் தேடித் தொகுத்து இணைத்ததற்குப் பாராட்டுக்கள்.
However Iravatham Mahadevan has recently been reinventing himself as a Dravidianist or rather a Dravidian Dhimmi. Worse he allowed the use of Indus seals for a racist propaganda by Dravidianist claiming full appropriation of those seals based on mere linguistic speculations whereas in reality culturally Indus legacy is Pan-Indic. In his overemphasis of Jain doing educational missionary work is Iravatham reading social situations backwards?
வெ.சா.வின் எப்போதும் போல இப்போதும் மிகவும் அருமையாக உள்ளது.
//சில கேள்விகள். அசோகர் காலத்திற்குப் பின்னால் ஜைன மதத் துறவிகளால் அறிமுகப் படுத்தப் பட்ட அல்ல்து உருவாக்கப் பட்ட தமிழ் ப்ராஹ்மி எழுத்து முறைக்கு முன்னால் எந்த வகை எழுத்துக்கள் பயன் படுத்தப் பட்டன? தமிழ் கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து மூத்த மொழி என்கிறார்களே, அப்படியானால் வரி வடிவம் அல்லது எழுத்து வடிவம் இல்லாத பேச்சு மொழியாக மட்டுமே தமிழ் ஜைனர்களின் வருகைக்கு முன்னால் இயங்கி வந்ததா? சங்கப் பாடல்கள் தொல்காப்பியம் எல்லாம் முதன் முதலில் எந்த எழுத்து வகையில் எழுதப் பட்டிருக்கக் கூடும்? எழுத்து முறை இல்லாமல் வாய் வழியாக மட்டுமே பேசப் படும் மொழிகளை அறிவேன் அது போலவே தமிழும் இருந்திருக்கக் கூடுமா? //
பிராமிக்கு முன்னால், அகண்ட இந்தியாவின் வடமேற்கு பகுதிகளில் (இன்றைய பாகிஸ்தானும் அஃப்கானிஸ்தானும் 🙁 ) அரமேய எழுத்துக்களில் இருந்து உருவா(க்)கிய கரோஷ்டி எழுத்துக்கள் பயன்பாட்டில் இருந்தன. பிராகிருத காந்தாரி மொழி அதைக்கொண்டே எழுதப்பட்டது.
தமிழ் நாட்டில், அது போல ஏதும் இருந்த்தாக (எனக்கு) தெரியவில்லை. தாங்கள் கூறுவது போல பெரும்பாலும் தமிழ் வாய்மொழியாகிய இருந்திருக்கக்கூடியதற்கான சாத்தியங்கள் அதிகம்.
V
வணக்கம்
நண்பர்களே
உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்
http://www.thalaivan.com
You can add the vote button on you blog:
https://thalaivan.com/page.php?page=blogger
THANKS
Regards,
Thalaivan Team FRANCE
thalaivaninfo@gmail.com
IM “has recently been reinventing himself as a Dravidianist or rather a Dravidian Dhimmi. …”
இவை மிகைப் படுத்தலாகும். ஐ.மா. தான் ஐடியாலஜி சார்பில்லாத ஆய்வாளர் என்று சொல்லிக் கொண்டு வருகிறார். அப்படியே இருக்கட்டும். அவர் 45 வருடங்களாக தொல் வரிவடிவு ஆய்வுகளை செய்து வருகிறார். அதனால் அவர் கருத்துக்களுக்கு ஓரளவு மதிப்பு தர வேண்டும். தமிழ் எழுத்து ஆராய்வுகளில் அவர் ஒரு அதாரிடிதான், அவர் அதை உழைப்பினாலும், சர்வதேச ஆய்வு தளத்தில் அங்கீகாரத்தையும் பெற்று சம்பாதித்துள்ளார்.
அதே சமயம் பர்போலா-மகாதேவன் சிந்து சமவெளி தீர்வுகள் நீரின் மீது நடக்கும் மண்குதிரை. ஸ்பெகுலேஷன்களை அடுக்கடுக்காக வைத்து கட்டப்பட்டது. அந்த ஸ்பெகுலேஷன்களை ஒன்றாக வைத்திருக்கும் சிமெண்ட் `ட்ரவிடியன்` என்ற சொல். அதனால் அவருக்கு தமிழ்நாட்டு அரசியல் மேல்தட்டத்திலிருந்து ஆதரவு கிடைக்கிறது. அதனால் அவரை Dravidianist or rather a Dravidian Dhimmi என சொல்லுவது தவறு என நினைக்கிறேன். தமிழ்நாட்டுக்கு வெளியே பர்போலா-மகாதேவன் தீர்வுகளை யாரும் முக்கியத்துவம் கொடுத்து நேரத்தை வீண் செய்வதில்லை..
விஜயராகவன்
அதிர்ஷ்டவசமோ இல்லை துரதிர்ஷ்டமோ, என்னிடம் லாப் டாப் இல்லை. இந்த டப்பாவை ஒழுங்காகக் கற்றுக்கொள்ளாத நிலையில் லாப் டாப் அனாவசியம் என்று படுகிறது.
எதற்குச் சொல்ல வந்தேன் என்றால், இந்த 2004 கட்டுரை இங்கு பதிவாகியிருப்பதை இன்று தான் (19.7.2010) பார்க்கிறேன். ஒரு வாரம் இங்கு இல்லை.
2004-ல் ஒரு நாள் இப்புத்தகத்தின் வெளியீடு பாரதிய விதயா பவனில் நடந்த போது, மேடையில் ஐராவதம் மகாதேவனோடு, குழந்தை சாமியும் பக்கத்தில் அமர்ந்து மகாதேவனைப் பாராட்டிப் பேசியது எனக்கு என்னவோ போல் இருந்தது. எனக்குப் பிடிக்கவில்லை. அன்றிலிருந்து இந்த ஆறு வ்ருடங்களில் மகாதேவனிடம் எவ்வளவோ மாற்றங்களை ப்பார்த்து விட்டேன் எல்லாம் மேடையில் தான், அவரது சகவாசங்களைப் பார்த்துத் தான். என்னென்னவெல்லாம் பேசவேண்டியிருக்கிறது.
அண்ணாதுரையின் காலத்தில் நடந்த உலகத் தமிழ் மாநாட்டில் அவர் அவமானப்படுத்தப்பட்டார். அப்போது கருணா நிதி அண்ணாதுரையிடம் ஐராவதத்தின் பேச்சு பற்றிபுகார் செய்தாராம். “ கருத்தரங்கு என்றால், எல்லா கருத்துக்களும் தான் வரும் அதற்குத்தான் கருத்தரங்கே” என்று சொல்லி சிரித்துக்கொண்டே கருணாநிதியின் மறுப்பை சீரியஸாக எடுத்துக்கொள்ளாது நகர்ந்தார்” என்று செய்தி சொல்லப்பட்டது. ஆறு வருடங்களில், அந்த கருணாநிதி ஐராவதம் மகாதேவனின் பங்களிப்பை ஏற்றுக்கொள்ளவேண்டி வந்திருக்கிறது. ஐராவதம் மகாதேவனுக்கும் கருணாநிதியின் ஆதரவு தேவைப்பட்டிருக்கிறது. காரணம், சிவத்தம்பியா, இல்லை கு.ச. குழந்தைசாமியா, தெரியவில்லை.
மேடையில் ஒருவர் கருணாநிதிக்கு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து அபிவாத்யே சொல்லி பிரார்த்தனை செய்தால், அத்ற்கு அர்த்தம் கருணாநிதி மாறிவிட்டார் என்பதல்ல. என்றைக்கும் கருணாநிதி தன் லட்சியத்தில் திடமாக இருப்பவர்.