தீபிகா படுகோன் இவரைத்தான் இளைஞர்களுக்கான மிகச்சிறந்த முன் உதாரணம் என்றார். அழகிய சிவந்த தோற்றம். வழு வழுப்பான கன்னங்கள். அறிவாளி என்று பறை சாற்றும் கண்ணாடி அணிந்த பார்வை. நேரு – இந்திரா – ராஜீவ் என்ற அரச பாரம்பரியம். நாட்டில் பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் முதற்கொண்டு எல்லோருடைய பாராட்டும் புகழ்ச்சியும் சொரியப் படும் ஆளுமை. ராகுல் காந்தியை ஏறக்குறைய எல்லோருமே பிரதமர் ஆவார் என்றே எதிர்பார்க்கிறார்கள். ஆனால் இந்த பிம்பத்துக்கு பின்னால் இருக்கும் உண்மையான மனிதர் யார்? அவரது நடவடிக்கைகள் என்னென்ன? மக்களில் எத்தனை பேர் இந்த திசையில் யோசிக்கிறார் என்று தெரியவில்லை.
பொதுக் கூட்டங்களில், யாராவது ஒரு கிழவியைக் கட்டிப் பிடித்து, அம்மா என்று கதறுவது போன்ற ஸ்டன்ட்களை எல்லாம் எம்.ஜி.ஆர் காலத்திலேயே பார்த்து விட்டோம். இப்போது ராகுல் காந்தி, இதை ஒரு கடமையாகவே வைத்துக் கொண்டு, பாதுகாப்பு வளையத்தை தாண்டிக் குதித்து மக்களுக்கு கை கொடுப்பது, கூலிக்கு மண் சுமந்து வேலை செய்பவர்களுடன் வலிக்காமல் பிளாஸ்டிக் கூடை சுமப்பது, தலித்துகளுடன் உட்கார்ந்து உணவு உண்பது போன்ற நாடகங்களைப் பார்க்கும் போது சிரிப்புதான் வருகிறது. ராகுலின் பேச்சும், நடவடிக்கைகளும் கடைந்தெடுத்த அரசியல் தந்திரப் பேச்சாகவே இருப்பது ஒன்றும் அதிசயம் அல்ல.
நமது பத்திரிக்கைகளுக்கும் இந்த ராகுல் காந்தி பில்டப்பில் பங்கு உண்டு. ராகுல் ஒரு கடையில் மாம்பழம் வாங்கிச் சாப்பிட்டார். ஒரு ஏழைக் கிழவியைக் கட்டிப் பிடித்து அம்மா என்றார். ஒரிசா மக்களுடன் ஒரியா மொழியிலேயே பேசினார் என்று பழங்காலத்தில் மன்னர்களை புலவர்கள் புகழ்வது போல புகழ்ந்து தள்ளுகின்றன. ஒரு பத்திரிகை இந்தியாவிலேயே பிரபலமானவர் ராகுல்
காந்தி என்று கருத்துக் கணிப்பு நடத்துகிறது. டைம்ஸ் ஆப் இந்தியா, “காமன் வெல்த் போட்டிகள் நடத்துவதில் உள்ள ஊழல் பிரச்சினையில் நேர்மைத் திறன் உள்ள ஒருவர் தலையிட வேண்டும். ராகுல் காந்தியைப் போல ஒருவர் தேவை.” என்று எழுதுகிறது. ராகுல் காந்தியின் நேர்மை பற்றி யாருக்கு என்ன தெரியும்? இதெல்லாம் வாசகர்களை மூளைச் சலவை செய்யும் வழி இல்லாமல் வேறு என்ன? இன்னும் மன்னராட்சி மன நிலையிலிருந்து மக்களை மீண்டு வராமல் பார்த்துக் கொள்ளுகிற பத்திரிக்கை தந்திரம்தான் இவை.
மக்களைப் பற்றி கவலைப் படாமல் அரசு இயந்திரத்தை நடத்துவது காங்கிரசின் வேலை. மக்கள் ஏதாவது பிரச்சனை என்று பொங்கி எழும்போது, அந்த கோபத்தை தணித்து ஒட்டு வங்கியைக் காப்பாற்றுவது சோனியா-ராகுல் ஆகியோரின் வேலை என்று ஒரு ராஜ தந்திர அமைப்பு உருவாகி இருக்கிறது. சோனியாவே பிரதமர் என்று உட்கார்ந்திருந்தால் காங்கிரஸ் தேர்தல்களில் வெல்வது கடினம் – எதிர் கட்சிகளுக்கு குறிப்பிட்டு குற்றம் சாட்டுவது மிக எளிதாகி இருக்கும். இதை எல்லாம் எண்ணிப் பார்த்து தானோ என்னவோ, அன்றே “பதவியைத் தியாகம் செய்கிறேன்” என்று சோனியா தியாகத்தின் சின்னமாக உட்கார்ந்து, மக்கள் மத்தியில் தன் ஆளுமையை காப்பற்றிக் கொண்டிருக்கிறார்.
வெளிப்புறத்தில் பதவியைத் துறந்து, தியாகம் செய்தது சோனியா காந்தியின் மிகப் பெரிய ராஜ தந்திரம். ஆளும் கட்சிக்கு உட்புறத்தில் இருந்து கொண்டு, பதவியில் இருந்தால் கிடைக்கும் எல்லா அதிகாரங்களையும் இப்போது பெற்று, அதற்கு மேல் எடுக்கப் படும் முடிவுகளின் விளைவுகளுக்கு பதில் சொல்ல வேண்டிய தேவையும் இல்லாத வசதியும் பெற்று இருக்கிறார். அவரின் வழியில் ராகுலும் எந்த மந்திரி பதவியும் ஏற்காமல் இருப்பது ஆச்சரியமானது அல்ல.
ராஜீவ் இறந்த சமயத்தில் சுவிஸ் நாட்டு பத்திரிகை ஒன்று, ஆயிரம் கோடி ரூபாய்கள் (அல்லது இருநூறு கோடி டாலர்கள்) கொண்ட வங்கி கணக்குக்கு ராகுல் உடைமையாளர் – சோனியா அந்த கணக்குக்கு கார்டியன் என்று எழுதியது. அப்போது ராஜீவின் மரணத்தில் இந்த செய்தி கவனிப்பு இல்லாமல் போய் விட்டது. போபர்ஸ் க்வோட்டோரோச்சி சம்பந்தப் பட்ட ஊழலும், அது அண்மையில் புதைக்கப் பட்டதும் தெரிந்ததே. இந்தியாவில் மற்ற மாநிலத்தவர் ஹிமாசல பிரதேசத்தில் சொத்து வாங்க முடியாது. ஆனால் பிரியங்காவிற்கு சிம்லாவில் வீடு கட்ட இடம் வாங்க முடிந்திருக்கிறது. இவ்வாறு நேரு குடும்ப நடவடிக்கைகள் இருந்து வருகின்றன.
பழி ஒரு இடம் – பாவம் ஒரு இடம் என்பது ஒரு பழைய சொல்வழக்கு. யாரோ செய்த தீமைக்கு யாரோ பொறுப்பாளி ஆவது நடை முறைதான். மறுபக்கத்தில் யாரோ செய்த நல்ல காரியத்துக்கு யாரோ மாலை மரியாதை பெறுவதும் நடப்பது தான். நமது நாட்டை ஆளும் அரசின் நடவடிக்கையே இப்படித்தான் இருந்து வருகிறது. அரசின் நடவடிக்கையில் நல்லது ஏதாவது நடந்தால் முன்னிலைப் படுத்தப் படுவது நேரு குடும்பம் – ஆனால் தவறு ஏதாவது நிகழ்ந்தால் அவர்கள் வசதியாக ஒதுங்கிக் கொள்ள, வேறு யாராவது பொறுப்பேற்க வேண்டியிருக்கிறது.
இதற்கு நிறைய உதாரணங்கள் அண்மையில் நிகழ்ந்த சம்பவங்களிலிருந்தே கிடைக்கும். ஸ்பெக்ட்ரம் ஊழலை எடுத்துக் கொண்டால், மத்திய மந்திரி ராஜா மட்டுமா தன்னந்தனியாக இதை செய்திருக்க முடியும்? கிரிக்கெட் ஊழல், காமன் வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்காக கொட்டப் படும் பல்லாயிரம் கோடி ரூபாய்களில் ஊழல் இதெல்லாம் தற்போதைய அரசாங்கத்தின் ஆணி வேரான நேரு குடும்பத்துக்கு சம்பந்தமில்லாமலா இருக்கும்? இவை பற்றி சோனியா காந்தியோ, ராகுல் காந்தியோ எதுவும் அறிக்கை விடுவது இல்லை. பேசுவது இல்லை. சம்பந்தம் இல்லாதது போல இருக்கிறார்கள்.
அதே நேரத்தில் ஒரிசா மாநிலம் நியமகிரியில் உத்தேசிக்கப் பட்ட வேதாந்தா நிறுவனத்தில் சுரங்கத் திட்டம், சட்ட விரோதமானது என்று தடை செய்யப் பட்ட இரண்டு நாட்களுக்குள், தானே முன் நின்று தடுத்து நிறுத்தியதாக சொல்லிக் கொண்டு அங்கே ராகுல் காந்தி ஆஜர். சென்ற ஆகஸ்ட் மாத இறுதியில், டோங்க்ரியா பழங்குடியினர் கூடிய பெருங்கூட்டத்தில், “நானே உங்களுக்காக டெல்லியில் முழங்கினேன். உங்களுக்காக ஒரு சிப்பாய் டில்லியில் இருக்கிறான் என்று எண்ணிக கொள்ளுங்கள்” என்று ராகுல் அறிவித்தார். இவ்வாறு வெற்றி அறிவிப்புக்கு முன்னால் எப்போது அவர் அந்த பழங்குடியினரை சந்தித்தார் என்று செய்திகளைப் புரட்டினால், இருபது மாதங்களுக்கு முன் 2009 சனவரியில் தான். இடைப்பட்ட காலத்தில் வேதாந்தா நிறுவனம் அரசின் அனுமதி பெறும்போது என்ன பி.ஜே.பியா ஆட்சியில் இருந்தது? அப்போதெல்லாம் ராகுல் எங்கே போனார் என்று யாரும் கேட்டதாக தெரியவில்லை.
2010 மே மாதத்தில் சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம், ஒரிசாவின் நியாம கிரி மலைகளில் பாக்சைட் வெட்டி எடுக்கும் சுரங்கம் அமைத்தால், காடுகள், பழங்குடியினர், நீர் ஆதாரங்கள் ஆகியவை பாதிக்கப் படாது என்று ஆராயப் பட்டு விட்டது என்று கூறி அனுமதி வழங்கியது. இதற்கு முன்னிருந்தே அந்த பகுதியில் வாழ்ந்து வந்த டோன்க்ரியா பழங்குடியினர் இந்த சுரங்கம் வெட்டுவதை எதிர்த்து போராடி வந்தார்கள். இவர்களின் குரல் இங்கு மட்டுமல்லாது லண்டனிலும், எதிரொலித்தது அவர்கள் அதிருஷ்டம். சர்வைவல் இன்டர்நேஷனல் என்கிற அமைப்பு நமது நாட்டு பழங்குடியினருக்காக லண்டனில் போராடியது. இங்கிலாந்தின் பத்திரிகைகள், அவதார் படத்தில் தம் வாழ்வுக்காக போராடும் நாவி பழங்குடியினரை உதாரணமாகச் சொல்லி, ஆங்கிலேயர்கள் மனதில் கலக்கத்தை உருவாக்கினார்கள். இந்திய உச்ச நீதி மன்றமும் இந்த சுரங்கத் திட்டம் சட்ட விரோதமானது என்று அறிவித்தது.
இவ்வாறு சட்ட விரோதம் என்று ஆன பின்னால் தான், அமைச்சர் ஜெயராம் ரமேஷ் இந்த திட்டம் கைவிடப் பட்டதாக அறிவித்தார். அப்போது “இதில் அரசியல் எதுவும் இல்லை. சட்டப் படியே நடக்கிறது” என்றார். இவ்வளவு நடந்த பின்னால், ராகுல் கூலாக ஆஜராகி என்னால் தான் தடுக்கப் பட்டது என்று மார் தட்டினார். இவர்களது ஆட்சிதானே நடக்கிறது? ஒரு வருடம் முன்பே இவர் இதை செய்திருக்கலாமே! சட்டப் படி தவறு என்று ஆகி கைவிட்ட ஒன்றை எதோ தான் பார்த்து பழங்குடியினருக்கு செய்த நன்மை என்று சொல்வது, மக்களை முட்டாள்கள் என்று நம்பி செய்யப்படும் மிகக் கீழ்த்தரமான அரசியல். ஒரிஸ்ஸாவின் நான்கு கோடி மக்கள் தொகையில் பழங்குடியினர் சுமார் இருபத்தி இரண்டு சதவீதம். இவர்களின் ஓட்டுக்களைப் பெற இந்த ஸ்டன்ட் உபயோகப் படும் என்று காங்கிரசில் பலர் எண்ணுகிறார்கள்.
இந்த பாக்சைட் சுரங்கத் திட்டத்தில் குரல் கொடுத்த ராகுல், இதே போல ஒரிஸ்ஸா பகுதியிலேயே நடக்கும் மற்ற போராட்டங்களுக்காகக் குரல் கொடுப்பாரா? ஆந்திர – ஒரிசா எல்லையில் மல்கான்கிரி என்ற பகுதியில் அணை கட்டப் படுகிறது. இந்த அணை கட்டினால் வருடா வருடம் வெள்ளம் வந்து அங்கு மக்கள் அதிகமாக பாதிக்கப் படுவார்கள் என்று சில அறிவியலாளர்கள் கருத்து தெரிவித்து உள்ளார்கள். அங்கே ஏன் இந்த பழங்குடியினரின் சிப்பாய் வாயை திறக்க வில்லை? ஆந்திராவில் காங்கிரஸ் ஆட்சிதானே நடை பெறுகிறது? நினைத்தால் ஆந்திர அரசை அணைத்திட்டத்திலிருந்து பின்வாங்கச் செய்திருக்கலாமே.
ஒரிஸ்ஸாவிலேயே ஜகத்சிங்புரா என்னும் இடத்தில் POSCO என்னும் தென்கொரிய நிறுவனம் நிலங்களைக் கையகப் படுத்தி உள்ளது. இதை எதிர்த்து மக்கள் போராடி வருகிறார்கள். அது பற்றி பி.ஜே.பி கூட போராட்டங்கள் நடத்தி வருகிறது. அங்கேயும் ராகுலைக் காணவில்லை. இந்த வேதாந்தா நிறுவனமே, வேதாந்தா பல்கலைக் கழகம் என்ற பெயரில் ஆறாயிரம் ஏக்கர் நிலங்களை ஒரிசாவில் வளைத்துப் போட்டுள்ளது. இதற்கு முன் எந்த பல்கலைகழகம் இவ்வளவு பெரிய இடத்தில் கட்டப் பட்டுள்ளது? இது நிச்சயம் வேதாந்தாவின் சதி என்று சந்தேகப் பட இடம் இருக்கிறது. அதைப் பற்றி எல்லாம் ராகுல் பேசியதாகவே தெரியவில்லை.
உண்மையிலேயே ஒரு தொழிற்சாலை அல்லது சுரங்கத் திட்டத்தில் பயன் இருக்கும் போது, இவருக்கு நேர்மைத் துணிவு இருந்தால் எதிர்த்து போராடும் மக்களின் பயத்தைப் போக்கி, அந்த திட்டத்தால் ஏற்படும் நீண்ட நாள் நன்மைகளை எடுத்துச் சொல்லி, பொறுப்பான ஆளும் கட்சியைச் சேர்ந்தவராக நடந்து கொண்டிருக்க வேண்டும். எதைச் சொன்னால் மக்கள் கூட்டம் வரவேற்கும், எந்தப் பக்கம் சாய்ந்தால் ஒட்டு கிடைக்கும் என்று நடந்து கொள்வது அல்ல.
அமேதி தொகுதியில் எம்.பி ஆனபின் ராகுல் பாராளுமன்றத்தில் எதற்காவது வாயைத் திறந்திருக்கிறாரா? காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் நடைபெறும் ஊழலைப் பற்றி அவரின் கருத்து என்ன? காஷ்மீர் பிரச்சினையில் என்ன சொல்கிறார்? தீவிரவாதம் குறித்து அவரது கருத்து என்ன? நக்சலைட்டுகள் குறித்து அவர் திட்டம் என்ன? பாகிஸ்தான் குறித்து என்ன எண்ணம் அவருக்கு? இதெல்லாம் யாருக்கும் தெரியாது. ஏன் அவருக்கே தெரியாது. இவர்தான் நமது வருங்கால பிரதமர் என்றால் ஆச்சரியமாக இருக்கிறது.
ஒரு எம்.பி.யாகவே இவர் எதுவும் செய்யாத போது பிரதமராக அமர்ந்து அரசாட்சி செய்வதில் இவருக்கு என்ன அனுபவம் இருக்கிறது? அவரது படிப்பு குறித்த விவரங்கள் எதுவும் நம்பக் கூடியதாகவே இல்லை. இந்தியாவின் அடித்தட்டு மக்களின் நிலை குறித்து அவருக்கு எதுவும் தெரிந்ததாகவே அவர் நடவடிக்கைகள் இல்லை. ரவுல் வின்சி என்ற இத்தாலியப் பெயரை புனைப் பெயராகக் கொண்டு ஒரு நிறுவனத்தில் இரண்டு ஆண்டுகள் வேலை பார்த்தது ஒன்றே அவரது மொத்தமாக வேலை பார்த்த அனுபவம்.
எம்.ஜே. அக்பரின் ஒரு சமயம் ராகுலின் அரசியல் முன்னேற்றம் குறித்து எழுதியது இங்கே கவனத்திற்குரியது, “பெரும்பான்மையாக வறுமையில் வாழும் ஒரு தேசத்தில், ஏழைகள் தமக்குள் ஒருவராக அடையாளம் கண்டு கொள்ள ஒரு அரசியல் கட்சி தேவை. அப்படி ஒரு கட்சியாக காங்கிரஸ் பகலில் ஏழைகளுடனும், இரவில் பணக்கார கார்போரேட்டுகளுடன் கைகோர்த்தபடியும் இருந்து வருகிறது. இக்கட்சியின் பகல் நேர திட்டங்கள் ஓட்டுக்களைப் பெற்றுத் தரும், இரவு நேர தோழமைகள் அரசு நடத்த உதவும். இது ஒரு மிக சாமர்த்தியமான நாடகம். இந்த நாடகத்தின் முதல் காட்சிகள், இந்திரா காந்தியை லேசாக நினைவு வைத்திருக்கிற, நேருவை சுத்தமாகவே மறந்து போய்விட்ட ஒரு இளம் தலைமுறையினருக்காக அரங்கேறி வருகிறது. இந்த நாடகத்தில் ஹீரோ, பகல் நேரத்தில் ஏழைகளுக்கான மிகப் பெரிய ஆளுமையாக திகழ வேண்டும். இரவில் பணக்காரர்களுக்கு வளைந்து கொடுக்க வேண்டும். இது தான் அந்த ஹீரோ ராகுல் காந்தியின் முன்னால் இருக்கும் சவால்.”, என்கிறார்.
ராகுலை தவிர்த்து பார்த்தால், காங்கிரஸ் கட்சி ஒன்றும் அவ்வளவு தூரம் பெரும் பெயர்கள் எதுவும் இல்லாமல் போகவில்லை. மன்மோகன் சிங், பிரணாப் முகர்ஜி, சிதம்பரம் எல்லாம் உலகம் முழுக்க புகழ் அடைந்த பெயர்கள் தான். ஆனால் இவர்கள் பெயருக்கு இந்தியத் தேர்தல்களில் ஓட்டுக்கள் விழுவது என்பது மிகக் குறைவே. நேரு-காந்தி குடும்பத்திலிருந்து ஒருவர்தான் காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டுக்களைப் பெற்றுத் தரமுடியும் என்ற காங்கிரசின் பரிணாம வளர்ச்சி துரதிருஷ்ட வசமானது. “ராகுல் கட்சிக்கும் நாட்டுக்கும் தலைவனாகப் ஆகப் போவதை கண்டு கொள்ள ஒரு பெரிய அரசியல் விஞ்ஞானி தேவை இல்லை” என்கிறார் மணி சங்கர ஐயர். ஜனநாயக ரீதியில் சரியானதோ இல்லையோ, சோனியா இன்னும் பல பத்தாண்டுகள் காங்கிரசின் தலைவராக இருப்பதும், ராகுல் பிரதமராவதும், அவர்களே மறுத்தாலும், தவிர்க்க இயலாத ஒன்று என்றே தோன்றுகிறது.
அதற்கு உதவியாக இருப்பது பி.ஜே.பியின் பலவீனங்கள் என்றும் சொல்லித்தான் ஆக வேண்டும். இந்திரா காந்திக்கு பிறந்த பிள்ளைகளில், சஞ்சய் காந்தி அரசியலில் நேருவின் வழியில் தன் தாயைப் போல பெரிதாக எழ இயலவில்லை. ராஜீவ் கூட இந்திராவின் மரணத்தை ஒரு காரணமாக வைத்தே தேர்தலில் வெல்ல முடிந்தது. அந்த ஒரு தேர்தலுக்கு பின் அவராலும் பெரிய ஆளுமையாக உருவாக இயலவில்லை. பிரியங்கா வதெராவும் எதிர் பார்த்த அளவு அரசியல் சக்தியாக உருவாகவில்லை. சோனியாவின் அரசியல் அரங்கேறுவதும், எத்தனையோ குறைபாடுகள் இருந்தாலும் ராகுல் பிரதமாராவதும் அவர்கள் கையில் மட்டும் இல்லை. பி.ஜே.பியின் கையிலும் தான் இருக்கிறது. கொள்கை வலிமையும், தீர்மானமும், சரியான தலைமையும், மக்கள் ஆதரவும் பெரிதாக பி.ஜே.பி.க்கு இல்லாத வரை காங்கிரசின் அரசியல் நாடகங்களுக்கு மக்கள் பலியாவது உறுதி.
//
காங்கிரசின் தலைவராக இருப்பதும், ராகுல் பிரதமராவதும், அவர்களே மறுத்தாலும், தவிர்க்க இயலாத ஒன்று என்றே தோன்றுகிறது. அதற்கு உதவியாக இருப்பது பி.ஜே.பியின் பலவீனங்கள் என்றும் சொல்லித்தான் ஆக வேண்டும்.
//
100% Right!
காங்கிரஸ் கட்சியை தங்களது குடும்ப சொத்தாக மாற்றி,அறுபது வருடங்களுக்கு மேலாக நாட்டை சீரழித்துக் கொண்டிருக்கும் இந்த நேரு குடும்பத்தின் வாரிசு ராகுல்.
மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக இவர்களது தகிடு தத்தங்களைப் புரிந்து கொண்டு வரும் நிலையில் போடோவுக்காக மண் சுமப்பது,எழை் மூதாட்டிகளுடன் கை குலுக்குவது போன்ற ஸ்டன்ட்களை அடித்தாவது எப்படியாவது ஆட்சியைப் பிடித்து விட வேண்டும் என்ற குயுக்தி தான் தெரிகிறது.
ஏன் தான் இப்படி அலைகிறார்களோ?
அவர் எதற்கு ஏழைகளுடன் கை குலுக்கிறார்?
‘ஆஹா ,எங்கள் குடும்பம் இவ்வளவு வருடங்களாக உங்களை இப்படியே வைத்திருக்கிறதே ,உங்களுக்கு எவ்வளவு பொறுமை, சகிப்புத்தன்மை,வெரி குட்’ என்று பாராட்டுகிறாரா?
சமீபத்தில் அயோத்யா தீர்ப்பு பற்றி கேள்வி கேட்டதற்கு, தனக்கு அதை விடவும் முக்கியமான பணிகள் உள்ளன என்று ராகுல் கூறினார். ஹிந்துக்கள், முஸ்லிம்கள் என்று கோடி கணக்கான மக்களின் எதிர்பார்ப்பு உள்ள அந்த நீதி மன்ற தீர்ப்பு அவருக்கு ஒன்றும் முக்கியம் இல்லை. இதிலிருந்து அவர், ஹிந்து, முஸ்லிம் ஆகிய இருவருக்கும் எந்த ஈடுபாடும் செலுத்தவில்லை என்று அறியலாம். தாமரை இல்லை தண்ணீர் போல எதிலும் ஒட்டாமல் எது எப்படி உள்ளதோ, அது அப்படியே இருக்கட்டும் என்ற மனப்பான்மை அவருக்கு மேலோங்கி உள்ளது. ஒரு பிரச்சினை எடுத்து அதற்கு தீர்வு காண வேண்டும் என்ற எண்ணம் கூட இல்லாமல், தனக்கு தானாகவே சேர்ந்த பெயரையும், வாய்ப்பையும் உபயோகம் செய்யாமல் இருக்கும் ஒருவர் தான் நம்முடைய எதிர்கால பிரதமர் என்பதை மக்கள் அறிய வேண்டும்.
I am not a supporter of MGR. However, he was genuninely concerned about the poor citizens. He did not loot money meant for them. Hugging poor women in public was a tactic of Karunanidhi and not MGR. Rahul is a good follower of Karunanidhi.
மக்களுக்கு தெரியாததை சொல்லுவதில் நியாயம் இருக்கும் பட்சத்தில் அக்கருத்து ஏற்புடையது. இவ்விசயத்தில் மதுவின் கட்டுரை அற்புதம். மாற்றி சிந்திக்கும் பழக்கம் மக்களுக்கு வரவே வராதா?
If BJP continues like this, that is if it acts like Congress-B Team, Rahul will win hands down in 2014 too.
சொல்றேனேன்னு கோவிச்சுக்கக் கூடாது… அந்த மண் சுமக்கும் பெண்மணி பின்னாடி ராகுல் போறது அவ்ளோ நல்லா இல்லை.. அதே மாதிரி ஒழுங்கு கட்டிட்டு போறதா பாத்தா ஈவ் டீசிங் மாதிரின்னா இருக்கு..
கொள்கை வலிமையும், தீர்மானமும், சரியான தலைமையும், மக்கள் ஆதரவும் பெரிதாக பி.ஜே.பி.க்கு இல்லாத வரை காங்கிரசின் அரசியல் நாடகங்களுக்கு மக்கள் பலியாவது உறுதி.
கடைசி endha வார்த்தை உண்மையான வார்த்தை
ஹிந்துத்வா கொள்கையில் உறுதி
நரேந்திர மோடி யின் தலைமை மட்டுமே இதற்கு தீர்வு
பிஜேபி vajbaye தலைமையில் ஆட்சி அமைக்கும் முன்புவரை மக்களுக்கு பிஜேபி ஆட்சி ஒரு ethirparpodu இருந்தது
ithanai koottani அமைத்து vajbaye amaitha அரசாங்கம் மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்கிய maathirithan இருந்தது
மீண்டும் அந்த கூட்டணியை கட்டிக்கொண்டு aluvatharkku
இன்னும் பல ஆண்டுகள் காத்திருந்தாலும் தனித்தே ஆட்சி அமைக்க முயற்சிக்கலாம்
அதுவரை நரேந்திர மோடி தலைமையில் குஜராத் போல ஒவ்வொரு மாநிலத்திலும் ஹிந்து ஓட்டு வங்கி ஏற்படுத்த பாடுபட வேண்டும்
ஜெய் ஹிந்த் !