ஷங்கர நாராயணன் காட்டும் ”வேற்றூர் வானம்”

sankara-narayananஎஸ்.ஷங்கர நாராயணனுக்கு அறிமுகம் தேவையில்லை. அநேகமாக தமிழ் வாசகர்கள் எல்லோரும் அறிந்த பெயர். சிறுகதைகள், நாவல்கள் கவிதைகள், மொழிபெயர்ப்புகள் என நிறைய, நிறையவே தந்திருக்கிறார்.

பெரும்பாலான பிரபலத் தமிழ் எழுத்தாளர்களைப் போல அல்ல அவர். பிரபலங்கள் அநேகர் தம் எழுத்தைத் தவிர வேறு தமிழ் எழுத்தாளர்களைப் படித்ததாகக் கூட காட்டிக்கொள்ளமாட்டார்கள். அப்படியிருக்க அவர்கள் வேற்று மொழி எழுத்துகளைப் பற்றிப் படித்திருப்பார்களா, அல்லது பேசத்தான் செய்வார்களா?

ஷங்கர நாராயணன் நிறைய தமிழில் எழுதுவது மட்டுமல்ல. நிறைய ஆங்கிலம்வழி உலகளாவிய எழுத்துகளை ஒருவரால் முயன்று பெறும் அளவுக்கு அறிவார். தமிழ் எழுத்துகளையும் அயல்மொழி எழுத்துகளையும் நிறைய தொகுத்தும் கொடுத்திருக்கிறார் என்பது “வேற்றூர் வானம்” தொகுப்பில் அவர் தந்திருக்கும் அவரது படைப்புகள் பற்றிய தகவலிலிருந்து தெரிகிறது. அவர் கவிதைகளும் எழுதியிருக்கிறார் என்பதை அவர் தந்திருக்கும் பட்டியலிலிருந்துதான் நான் தெரிந்து கொள்கிறேன்.

மிகவும் சந்தோஷமான விஷயம்- அவர் மற்ற சக தமிழ் எழுத்தாளர் படைப்புகளையும் உலகளாவிய மற்ற மொழி இலக்கியங்களையும் படிப்பதில் காட்டும் ஆர்வம். நான் பார்த்துள்ள ஒரு தொகுப்பு, ‘ஜூகல் பந்தி’ என்னும் தமிழ்ச் சிறுகதைகளின் தொகுப்பு. சங்கீதம் பற்றிப் பேசும் கதைகளாகவே தொகுத்துள்ளார். அதில் சங்கீத ஞானம் கொண்டவர்கள் எழுதிய கதைகள் மட்டுமல்லாமல், சங்கீதம் பற்றி வெறுமனே பேசும் எழுத்தும் உண்டு. இதை ஏன் ஷங்கர நாராயணன் சேர்த்தார் என்று எண்ணத் தோன்றியது. இருப்பினும், சற்று யோசித்து, இப்படி எல்லா ரகங்களும் தமிழ் எழுத்துலகில் உண்டு என்று அவர் சொல்லும் தொகுப்பாகக் கொள்ளலாமே என்று நான் மனச் சமாதானம் கொண்டேன்.

இத்தொகுப்பில் பன்னிரெண்டு கதைகள் மொழிபெயர்க்கப்பட்டு தரப்பட்டுள்ளன- இஸ்ரேல், ரஷ்யா, நைஜீரியா, தாய்லாந்து, சீனா, ஸ்ரீலங்கா, மலேசியா, இங்கிலாந்து, அமெரிக்கா என்று; இந்தியாவும் கூடத்தான். சொல்லவேண்டிய அவசியமில்லை. எல்லாம் ஆங்கிலம் வழி அறியப்பட்ட, ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட கதைகள். இந்திய எழுத்தாளர்கள் என ரஸ்கின் பாண்டும் திமெரி என் முராரியும் எழுதியவை முறையே தொகுப்பின் முதல் கதையாகவும் கடைசிக் கதையாகவும் இடம் பெற்றிருக்கின்றன.

புத்தகத்தைத் திறந்து முதல் கதையைப் படிக்கத் தொடங்கியதுமே என் அனுபவம் அவ்வளவாக உற்சாகம் தருவதாக இருக்கவில்லை.

நாம் மொழிபெயர்ப்பது தமிழில்தான். தமிழர்கள் படிப்பதற்குத்தான். ஆனாலும் வாசிப்பவர் அறியக் கொடுக்க முயல்வது இன்னொரு மொழியிலிருந்து. வேற்று மொழியில் எழுதப்பட்டதை. வேற்றுமொழிக் கலாசாரத்தைச் சேர்ந்தவர்கள் வாழ்க்கையை, அனுபவங்களை, சிந்தனைகளை… இதில் ‘வேற்று’ என்ற அடைமொழி எத்தனை உள்ளனவோ அவை அத்தனைக்கும் நாம் விஸ்வாசமாக இருக்கவேண்டும். தமிழில் படிப்பவனுக்கு, நாம் ஒரு வேற்றுமொழிக் கலாசார மனிதரின் வாழ்க்கையைப் பற்றிப் படித்துக்கொண்டிருக்கிறோம் என்ற எண்ணம் தோன்ற வேண்டும்.

“மொழி பெயர்ப்பு என்றே தெரியாமல், ஆற்றொழுக்கு போன்ற நடை” என்றெல்லாம் புகழப்படும் மொழிபெயர்ப்பு, மொழிபெயர்க்கப்படும் மொழிக்கும் ஆசிரியருக்கும், அந்த எழுத்து நம்முன் விரிக்கும் உலகத்துக்கும் நியாயம் செய்ததாகாது.

அந்நிய மொழி, கலாசாரம், என்ற நோக்கில் மாத்திரமல்ல, ஒரே மொழியில் ஒரே ஆசிரியர் தன் கதைக்கேற்ப, கையாளும் மொழிக்கு ஏற்ப கூட அந்த உணர்வு தமிழிலும் வாசகன் உணரத் தரவேண்டும்; அந்தத் தொனி தொடர்ந்து அடியோட்டமாக தொடரச் செய்யவேண்டும் என்று தீர்மானித்துக்கொண்டு செல்லப்பா ஃபாக்னரையும் ஹெமிங்வேயையும் ஹென்றி ஜேமஸையும் செகாவையும் மொழிபெயர்க்கும்போது அவரது மொழி நடை வித்தியாசப் பட்டிருக்கும். படிக்க முதலில் சிரமம் தரும்தான். ஆனாலும் படிப்பது ஹெமிங்வே என்றோ இல்லை ஃபாக்னர் என்றோ தெரியும். ஹென்றி ஜேம்ஸின் கதை சொல்லும் பாணியும் ஹெமிங்வேயின் நடையும் மலைக்கும் மடுவுக்குமாக வித்தியாசப்படுபவை. அவற்றை ஒரே நடையில் மொழிபெயர்ப்பது, கதை தரும் அனுபவத்துக்கும் எழுத்தாளனின் மொழிக்கும் கூட விசுவாசமான காரியமாக இராது. எப்போதோ ஐம்பதுகளில் தகழி சிவசங்கரன் பிள்ளையின் நாவல் ஒன்றை, (ரெண்டிடங்கழியோ? நினைவில் இல்லை) ராமலிங்கம் பிள்ளை என்பவர் மொழிபெயர்த்திருந்தார். அவரது தமிழ் மொழிபெயர்ப்பில் தமிழ் அதிகம் இல்லை. நாம் படித்தவுடன் புரிந்துகொள்ளத் தக்க அளவில் மலையாளமே அதிகம் இருந்தது. வாசிப்பவருக்கும் தகழிக்கும் இடையில் யாரும் ராமலிங்கம் என்ற பெயரில் இல்லை. நேரே மலையாளத்திலேயே தகழியே நமக்குக் கதை சொல்கிறார் என்ற உணர்வைத் தந்தது. அது மிகச் சிறப்பான மொழிபெயர்ப்பு என்று எனக்குத் தோன்றிற்று. அது பற்றி அப்போது எழுத்து பத்திரிகையில் எழுதிக்கூட இருக்கிறேன் என்று ஞாபகம். ஆனால் இது மலையாளத்திலிருந்து செய்யப்படும் மொழிபெயர்ப்புக்கு மாத்திரமே சாத்தியம்.

மொழிபெயர்ப்பை விட்டு விடலாம்.. தமிழிலேயேகூட சில புதிய அனுபவங்கள். எழுபதுகளில் பிரக்ஞை என்ற பத்திரிகையில் அந்நாளில் புதியவராக அறிமுகம் ஆன பாலகுமாரன் ஒரு கதை எழுதியிருந்தார். வேலை தேடிச் சென்ற இடத்தில் நடக்கும் ஒரு இண்டர்வ்யூ-வைச் சொல்கிறது அந்தக் கதை. தமிழில்தான்; ஆனால் இண்டர்வ்யூ நடந்தது முழுக்க ஆங்கிலத்தில் என்ற உணர்வை நமக்குத் தரும் வகையில் எழுதப்பட்டிருந்தது. அப்படித் தன் எழுத்து வாழ்க்கையைத் தொடங்கிய பாலகுமாரன் இப்போது வெகுதூரம் அந்தப் புள்ளியைத் தாண்டிச் சென்று விட்டார் என்பது வேறு விஷயம். ஆனால் முக்கியமாக இங்கு குறிப்பிட வேண்டிய விஷயம், அந்தக் கதை அனுபவம் இன்னும் என் ஞாபகத்தில் இருக்கிறது என்பதுதான்.

திரும்ப விஷயத்திற்கு வரலாம். எந்த மொழி பெயர்ப்பும் மூலப் படைப்பின் மொழிக்கும் அதன் படைப்பாளிக்கும் அவர் சொல்ல முயலும் விஷயத்துக்கும் ஏற்ப மொழிபெயர்ப்பவர் தம் மொழியை அணுகும் முறை மாறுபடும் .

ஆனால் இதற்கெல்லாம் அப்பால், ஷங்கர நாராயணின் தொகுப்பில் பாதிக் கதைகளில்– அவையெல்லாம் அதிக பக்கங்கள் நீளாத சிறிய கதைகள்– இந்தத் தமிழ்ப்படுத்தல் மிக அதிகமாக செயல்பட்டிருப்பதாக எனக்குப் படுகிறது. சிறிய கதைகள் என்பதால் தமிழ்ப் படுத்தலில் ஆதிக்கம் அதீதமாகத் தோன்றுகிறதோ என்னவோ.

அமெரிக்கத் தம்பதிகள். மனைவியின் நண்பன் ஒருவன் இவர்கள் வீட்டுக்கு வருகிறான். மனைவி அவனை அழைத்து வருகிறாள் வீட்டுக்கு. புருஷனுக்கு இது அவ்வளவாக உவப்பான சங்கதி இல்லை. அந்தப் பழைய நண்பன் குருடன். அவனுக்கு எப்போதோ உதவியாக அவள் வேலை பார்த்திருக்கிறாள். அவனிடம் மனைவிக்குக் கரிசனம் உண்டு. ”அவர்களுக்கிடையே ஏதோ கொள்வினை கொடுப்பினை” என்று கணவன் எண்ணிக் கொள்கிறான். இந்தச் சொலவடை அவர்களை யாராக இனங் காட்டும்? இது ஏதோ தவறி வந்து விழுந்துவிட்ட வார்த்தைகள் அல்ல. தமிழ் வாசகர்களுக்கு “ஆற்றொழுக்குப் போன்ற நடையில்” எழுத வேண்டும் என்று எண்ணி எழுதியது. புத்தகம் முழுதும் ஷங்கர நாராயணன் மொழிபெயர்ப்பு என்று தெரியாதவாறு எழுதும் திட்டத்தில் இப்படியே எழுதிச் செல்கிறாரோ என்னவோ.. இவர்களிடையே நடக்கும் சம்பாஷணைகள் இப்படிச் செல்கின்றன.

“ஆத்தாடி, நல்லாதான் இருக்கு ராபர்ட்”

“வரணும், உன்னைப் பத்தி இவ பேசாத நாளெல்லாம் பிறவா நாளே”

“வாத்யாரே, நானே ஸ்காட்ச் ஆசாமிதான்”

”இல்லை. இப்ப என்னான்றே அதுக்கு?”

“ஒரு குருட்டுக் கம்மனாட்டியோடு தனியே இப்படிக் கழிக்கறாப்லே ஆயிட்டதே. என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை.”

“இது ஜூஜூபி. சமாளிச்சிக்கலாம். ஆளை விழுத்தாட்டிறாது.”

“எல்லாமே த்ராபை. இதுவே தேவலை. ஒத்தக்கண்ணர் ராஜ்யத்தில் ஒண்ணரைக் கண்ணன் பேரழகன்”.

“அதுல என்ன இருக்கு. ஒரு குசுவும் இல்லை. அர்த்த ராத்திரிலே தொலைக்காட்சிலே பாக்கலாம். அம்புடுதேன்.”

இதெல்லாம் கனெக்டிக்கட்டில் வாழும் ஒரு அமெரிக்க குடும்பத்தில் நடக்கும் சம்பாஷணைகள்; ஆனால் ஷங்கர நாராயணனின் மொழிபெயர்ப்பில் நமக்கு இந்த உணர்வு வருதல் சாத்தியமா என்ன? இது ஏதோ கலப்படமான, பேசுபவர் கேட்பவர் தமிழ் நாட்டுக்காரர்தான் ஆனால் எந்த ஊர், எந்த மாதிரியான சமூக நிலையில் உள்ளவர் என்ற நிச்சயமில்லாத கலப்படம் போலும் என்ற உணர்வைத்தான் தரும். மண்ணடியா, மைலாப்பூரா, இல்லை மதுரையா விழுப்புரமா தெரியாது. ஆனால் நிச்சயமாக சியாட்டிலோ கனெக்டிகட்டோ இல்லை. .

இந்த மாதிரியான மொழிபெயர்ப்புகள்தான் புத்தகம் முழுதிலும் விரவியிருந்தபோதிலும், ஷங்கர நாராயணனுக்கு விமர்சனப் பார்வை இல்லையென்று சொல்லிவிட முடியாது. அமெரிக்கர்கள் நம்மூர் பாஷையில் பேசினால் சுவாரஸ்யமாக இருக்கும் என்று நினைத்துச் செய்கிறாரோ என்று நினைக்கிறேன்.

அவர் தேர்ந்தெடுத்திருக்கும் அநேகக் கதைகளில் அவர் காணும் குறைகளை அவரே கதை முடிவில் ஆசிரியரைப் பற்றியும் கதையைப் பற்றியும் தரும் சிறு குறிப்புகளில் சொல்லிவிடுகிறார். அவர் குறிப்பிடுபவை எல்லாம் ஒரு கூரிய பார்வையில் பிறப்பவை. சந்தேகமில்லாமல் அவர் செய்வது எதையும் தேர்ந்து காரணத்தோடுதான் செய்கிறார். எந்தக் கதையைத் தேர்ந்தெடுப்பது, எவ்வாறு மொழிபெயர்ப்பது என்பன பற்றியெல்லாம் அவர் கட்டாயம் யோசித்திருக்கிறார்.

தொகுப்பில் உள்ள பன்னிரண்டு கதைகளில் சிறிய கதைகளாக உள்ள ரஸ்கின் பாண்டின் கண்ணுக்குள் உலகம், எட்கர் கேரத்தின் (இஸ்ரேல்) மூன்று கதைகள், லூசா வாலென்சூலா (அர்ஜெண்டினா) வின் பெட்டிக்குள் வயலின், இஸ் சின்னின் (மலேசியா) காட்டில் விழுந்த மரம், சாம்ராம் சிங்கின் (தாய்லாந்து) கழனி, ரொமேஷ் குணசேகராவின் (ஸ்ரீ லங்கா) இரண்டு கதைகள் எல்லாம் அவற்றின் மூல மொழியில் எப்படி இருந்திருக்குமோ தெரியாது. இங்கு நமக்குப் படிக்கக் கிடைப்பது ஷங்கர நாராயணனின் மொழிபெயர்ப்பில்தான். அவை பற்றியும் ஷங்கர நாராயாணனும் நான் முன்சொன்னபடி தன் குறிப்புகளைத் தந்துள்ளார். இவை சிறிய கதைகளாக இருப்பதால், இவை ஷங்கர நாராயணன் தமிழ்ப்படுத்தும் பாணியில் பாதிப்பு மிக அதிகமாகத் தெரிகிறது. எட்கர் கேரத்தின் கதையில் வரும் இன்றைய தலைமுறை வாலிபன் (நாஜிகளின் ஹோலோகாஸ்டில் பாதிக்கப்பட்டவரின் பேரன்), “ஜெர்மன் கம்பெனியின் அடிடாஸ் ஷூவையா போட்டுக்கொள்வது?” என்ற குற்றச்சாட்டுக்கு அண்ணனிடமிருந்து வரும் பதில் “எலேய், சாதாரண உள்ளூர் மட்டமான ஐட்டம்னு நினைக்கண்டாம் கேட்டியா, குரூயிஃப் மாதிரி பெரிய பெரிய ஆட்டக்காரன்லாம் மாட்டிக்கிட்டு விளையாடற ஐட்டம்டா” என்று சமாதானம் சொல்கிறான். இஸ்ரேலில் வாழும் போலந்து நாட்டுக்கார யூதனுக்கு பாலக்காட்டு அய்யர் தமிழ் எப்படி இவ்வளவு ஸ்பஷ்டமாக வருகிறது? என்று நாம் யோசிக்க வேண்டிவருகிறது. இப்படி அநேகக் கதைகளில்- திரும்பச் சொல்கிறேன்- அநேகக் கதைகளில் வரும் பாத்திரங்கள் அவர்கள் எந்த நாட்டுக்காரராக இருந்தாலும் சரி, ”லவ்டேகா பால்” என்று தான் திட்டிக்கொள்கிறார்கள். வட இந்தியாவில் கடை நிலை சமூகத்தினர் அடிக்கடி வீசும் வசை மொழி இவர்களுக்கு எப்படிச் சித்தித்தது? அதன் மேல் இவர்களுக்கு என்ன இவ்வளவு ஆசை? ஆச்சரியம்தான். இப்படிப்பட்ட ஆச்சரியங்கள் நிறையவே விரவியிருப்பதான உணர்வு அதிகம் இருப்பது சிறிய கதைகளில்.

ஆனால் மிகுந்திருக்கும் நீண்ட கதைகள் மிக சுவாரஸ்யமானவை

  • ஜேம்ஸ் லாஸ்டனின் பள்ளத்தாக்கு (இங்கிலாந்து) அந்நாட்டு கீழ்த்தட்டு மக்களின் முரட்டு வாழ்க்கையையும் அவர்களிடையேயான பாலியல் உறவுகளையும் பற்றியது.
  •  நொபகோவின் மூன்று கனவுகள்— நோயாளியும் முதியவருமான அப்பாவுக்கு சிசுரூஷை செய்துகொண்டிருக்கும் நடாஷா ஒரு நாள் உல்ஃப் அழைத்தான் என்று அப்பாவின் அனுமதியோடு வெளியே சுற்றப்போய், திரும்பி வரும்போது அப்பா கிரனோவின் மரித்த உடலைத்தான் காணமுடிகிறது.
  • சீனாவின் மா ஃபெங்கின் முதல் வேலை முதல் அதிகாரி கதை சீனாவின் 70-களின் தீவிரமான கட்டுமானப் பணிக்காலச் சமுகத்தின் ஒரு காட்சி. பிரசாரம் போல இருந்தாலும் சுவாரஸ்யமான கதை. கொஞ்ச நாளைக்கு மகனாக வந்தவன் திமெரி என் முராரி எழுதும் நாவலின் ஒரு பகுதி என்று ஷங்கர நாராயணன் அறிமுகப்படுத்துகிறார்.
  • அறுபது வயதைக் கடந்த தம்பதிகள் ஓர் அநாதைக் குழந்தையை வளர்ப்பதும் பின்னர் அதைப் பிரிவதுமான மெல்லிய, மனதை நோகவைக்கும் உணர்வுகளை எழுப்பும் கதை மிக நன்றாக எழுதப்பட்டுள்ள ஒன்று. அந்தக் குழந்தைக்கு ஒரு நல்ல எதிர்காலத்தைக் கொடுக்கும் வசதியும் மனமும் உள்ள தம்பதியருக்கு கடைசியில் தத்துக்கொடுக்கப்படவிருக்கும் குழந்தை என்ற நினைப்பை மனத்தில் இருத்தியே வளர்ப்பது சிக்கலான ஒன்றுதான். அதுவும் நிறைய நிபந்தனைகள் கொண்ட ஏற்பாடு. அப்படியிருக்க அந்த அறுபது வயது தம்பதியினரிடம் தொட்டிலிடப்படும் சிசு எப்படி முதலில் வந்து சேர்ந்தது? அதற்கு ஏதும் நிபந்தனைகள் இல்லையா என்று கேள்விகள் எழுந்தாலும் அதை மறந்து படிக்கத் தொடங்கி விட்டால் மனித நேய உணர்வுகள் மிகவும் நுணுக்கமாகச் சித்தரிக்கப் பட்டுள்ளதைக் காணலாம்.
  • எல்லாவற்றையும் விட எனக்கு மிகவும் முக்கியமாகவும் எனக்குப் பிடித்ததாகவும் உள்ள கதை நைஜீரியாவின் சீமாமந்தா ‘இங்கோசி அடிச்சி’யின் தகதகக்கும் காலை தலைகாட்டும் சூரியன். காலைச் சூரியனே தகதகக்கும் ஒன்றானால், எதிர்கொள்ளவிருக்கும் நாளும் வாழ்வும் எப்படி இருக்கும்?. நைஜீரியாவில் கொந்தளித்த பயாஃப்ரா உள்நாட்டுப் போரில், இனவெறியும் மதவெறியும் சேர்ந்து, நாட்டை, மக்களைச் சூறையாடிய வதைபடலதில் சிக்கிய ஒரு குடும்பத்தின் சோகத்தையும் பயாஃப்ரா கடைசியில் ஒரு கனவாகவே தோன்றி மறைந்துவிட்ட அவலத்தையும் சொல்கிறது. தொகுப்பின் சிகரமாகக் கருதப்பட வேண்டிய கதை.

அவரவர் பார்வையும் ருசியும் அவரவர்க்கு. அதையும் மீறி இத்தொகுப்பில் ஒரு பெரும் அளவுக்கு ஷங்கர நாராயணனின் பார்வையும் தேர்வும் எனக்கும் நிறைவளித்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். அது போதும்.

 
 

“வேற்றூர் வானம்: உலகச் சிறுகதைகள்” (தொகுப்பு)

வெளியீடு:
இருவாட்சி இலக்கியத் துறைமுகம்,
41, கல்யாணசுந்தரம் தெரு,
பெரம்பூர்,
சென்னை-11

பக்கங்கள் – 215
விலை ரூ. 120.

3 Replies to “ஷங்கர நாராயணன் காட்டும் ”வேற்றூர் வானம்””

  1. வேற்றூர் வானத்தின் விமர்சனம் வழக்கமான வெ.சாவினுடையதாக இல்லை. புதிய முயற்சிகளை ஊக்குவிப்பதற்காக இந்த சலுகை காட்டப்பட்டிருக்கிறது என நினைக்கிறேன்.

    கதை குறித்த உங்களின் நியாயமான கேள்விகளை சங்கர நாராயணன் புரிந்து கொள்ள வேண்டும்.

  2. இந்த புத்தகத்தை அறிமுகப் படுத்தியதற்கு மிக்க நன்றி சார். இது போல அவ்வப்போது யாராவது நன்றாக இருக்கிறது என்று எழுதினால் தான் மொழிபெயர்ப்பு நூல்களை படிப்பது. பெரும்பாலும் மொழி பெயர்ப்பு புத்தகங்கள் படிக்க கடினமாக இருக்கும் என்று ஒரு எண்ணம். இந்த புத்தகம் எளிமையாக இருக்கும் போல.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *