தமிழ் ஹிந்துவில் ஸ்ரீ அரவிந்தன் நீலகண்டன் எழுதிய ஒரு கட்டுரையில் உடல் ரீதியான காமத்தினூடாக ஆன்மிக உணர்வு பெறுதல் தொடர்பான ஒரு கட்டுரை எழுதி, அதன் மீது பெரும் வாதப் பிரதி வாதங்கள் நிகழ்ந்ததாகவும், நமது மரபில் இது பற்றி உள்ள நிலைப்பாடு இன்னதென்று நான் எழுத வேண்டும் என்றும் சில வாசகர்கள் மின்னஞ்சல் அனுப்பியுள்ளனர்.
முதலில் ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்திவிட விரும்புகிறேன். நான் எதிலும் முடிந்த முடிபைக் கூறுபவன் அல்ல. ஆங்கிலத்தில் அத்தாரிட்டி என்கிறார்களே அது மாதிரியானவன் அல்ல. பண்டிதனோ பல்கலைக் கழகங்கள் ஒப்புக்கொள்ளும்படியான ஆய்வாளனும் அல்ல. நான் அறிந்ததை அறிந்தவரையில் பகிர்ந்துகொள்வதுதான் எனது எழுத்தின் / பேச்சின் நோக்கம்.
ஹிந்து மரபின் தோற்றுவாய் மனித குலம் நாகரிகமடையத் தொடங்கிய போதே ஏற்பட்டுவிட்ட நிகழ்வாகும். ஆகவே தொன்மையான இம்மரபில் ஆபாசம், பாபம் என்பதான கருத்தாக்கங்கள் இல்லை. குறிப்பாக நிர்வாணம் ஆபாசம் அல்ல.
உடல் உறுப்புகளின் பெயர்களை இயல்பாக உச்சரிப்பதிலும் மனத் தடை ஏதும் நமது மரபில் இல்லை. பார்வதித் தாயை உண்ணாமுலை (அபீத குஜாம்பா) என்றோ, குன்று அனைய முலையுடையாள் (கிரிகுஜாம்பாள்) என்றோ அழைத்து மகிழ்வதில் நமக்குத் தடையில்லை. ஆற்றல் மிக்க சக்தித் தலங்களை யோனி பீடம் என்றுதான் அழைக்கிறோம். இவ்வாறு அழைப்பதில் ஒரு பிழையும் இல்லை.
எனது தியானத்தில் பிரசன்னமாகும் என் குல தெய்வம் முழு நிர்வாணமாகவே என்முன் தோற்றங் கொள்கிறாள். அது கண்டு பரவசம்தான் உண்டாகிறதேயன்றி சபலமோ, இச்சையோ, அதிர்ச்சியோ, அருவருப்போ, காம உணர்வோ ஏற்படுவதில்லை. நிர்வாணம் மிக இயல்பானதாகவும் மகிழத்தக்க எழிலின் தரிசனமாகவுமே உள்ளது.
செளந்தர்ய லஹரியின் முதல் 41 ஸ்லோகங்கள் ஒவ்வொன்றிலும் மந்திர பீஜங்கள் ஆங்காங்கே பதிக்கப்பட்டிருக்கின்றன. அப்பகுதி ஆனந்த லஹரி எனப்படுகிறது. இதில் 19-வது ஸ்லோகம் உமையவளின் முக மண்டலம், மார்பகங்கள், யோனி பீடம் ஆகியவற்றைத் தியானிக்கச் சொல்கிறது. தியான பலனையும் சொல்கிறது. இதனை ஆபாசம் என்று கருதுவது பேதைமையும் பக்குவமின்மையுமே ஆகும்.
நிர்வாணம் ஆபாசம் என்ற கருத்தாக்கம் ஹிந்துஸ்தானத்திற்கு வெளியிலிருந்து உட்புகுந்த மாற்று மதங்களுடையதே. அதேபோல் உடல் உறவும் ஆபாசம் என்பது அவற்றின் கருத்தாக்கம். ஆகையால்தான் ஒரு ஜீவன் பிறக்கும்போதே பாபச் சுமையுடன் பிறப்பதான கருத்தாக்கமும் தோன்றியது. இவையிரண்டும் நமது மரபுக்குப் புறம்பானவை.
மார்பகங்கள் இருப்பதன் நோக்கம் பிறக்கும் குழந்தைகளுக்கு உணவூட்டி வளர்ப்பதற்காக என்பது நம் மரபு. அவை அழகின் நிமித்தம் அல்ல. ஆனால், அழகாக இருப்பவை. ஆனால், உடல் முழுவதுமே அழகுதான். அழகுக்காக மட்டுமே மார்பகங்கள் என்கிற எண்ணம் பிற்கால வணிக நோக்கின் விளைவு. யோனியும் அவ்வாறே. நம் மரபில் இவை அவற்றின் அடிப்படையான நோக்கம் கருதிக் கொண்டாடப்படுபவை, மதிக்கப்படுபவை. இதேபோல் ஆண் உடலில் இனப்பெருக்கத்திற்காக உள்ள உறுப்பும் அதன் காரணமாக மதிக்கப்படுவதாகும்.
வாத்ஸ்யாயனர் இயற்றிய காமசூத்திரமும் கொக்கோகரின் சாஸ்திரமும் போர்னோகிராஃபி அல்ல.
பிற்காலத்தில் உட்புகுந்த மாற்றுச் சமயங்களது கருத்தாக்கங்களின் பாதிப்பால்தான் நமக்குள் வக்கிர புத்தி தோன்றி, ஆபாசம் என்கிற எண்ணப் போக்கிற்கு ஆளாகிவிட்டிருக்கிறோம்.
காமத்தின் நோக்கம் என்ன? அது மஹாமாயையின் விளையாட்டே அல்லவா?
உயிரினங்களின் சங்கிலித் தொடர் அறுபடாமல் இருப்பதற்காக அவளால் தோற்றுவிக்கப்பட்ட உணர்வே காமம் என்பதில் ஐயம் உண்டா? இனப் பெருக்கப் பணி வெறும் இயந்திர கதியில் நிகழ்வதாக இருந்தால் காலப் போக்கில் அதில் சலிப்புத்தட்டி அந்தப் பணியில் ஈடுபாடு குன்றி உயிரினங்களின் சங்கிலித்தொடர்கள் அறுபட்டுப் போய்விடும் அல்லவா? அதனால்தான் அதில் அளவுகடந்த ஈடுபாட்டைத் தோற்றுவித்திருக்கிறாள், மஹா மாயை. அந்தப் பணியில் மிகுந்த இன்பம் இருப்பதான உணர்வை அவள் தோற்றுவிப்பதால்தான் அதில் உயிரினங்களுக்குச் சலிப்பு ஏற்படுவ தில்லை.
மற்ற உயிரினங்களின் விஷயத்தில் ஆண்டின் ஒரு குறிப்பிட்ட காலத்தில் இனப் பெருக்கத்திற்கான தூண்டுதலை வைத்த மஹா மாயை, மனித இனத்திற்கு மட்டும் பகுத்தறிவைத் தந்து அதற்கேற்ப நடந்துகொள்ளும் வாய்ப்பையும் தந்திருக்கிறாள். மனிதன் அதைத் துஷ்பிரயோகம் செய்தால் அதன் பலனை அவன் அனுபவிக்க வேண்டியதுதான். உயிரினங்கள் பல்கிப் பெருகி சமநிலை கெடலாகாது என்பதற்காகவே பிற உயிரினங்களின் விஷயத்தில் குறிப்பிட்ட பருவ காலத்தில் அந்த உணர்வு பிறக்கச் செய்தாள்.
காமம் என்பதுதான் உடல் மூலமாக உள்ளத்திற்குத் துய்க்கக் கிடைத்துள்ள இன்பங்களிலேயே தலையாயது. ஆனால் அதனைச் சிற்றின்பம் என்று கருதுவதுதான் நமது மரபு. ஏனெனில் பேரின்பம் என ஒன்று உள்ளது. அது ஆன்மிக உணர்வு பெற்று இறைச் சக்தியுடன் கலந்துறவாடுவதாகும். இதில் சரீர சம்பந்தமில்லை. ஆனால் சிறிது நேரம் மட்டுமே நீடிக்கும் சிற்றின்பத்தை அனுபவிக்கையில் கிட்டும் ஆனந்தம் உள்ளத்தால் நிரந்தரமாக உணரப்பட்டுக் கொண்டிருப்பதுதான் பேரின்பம்.
சரீரத்தை ஒரு கருவியாக மட்டுமே கருதுவது நமது மரபு. பணியாற்றுவதற்காக நமக்குத் தரப்பட்டுள்ள கருவியே நமது உடம்பு. ஒரு தொழிலாளி தனது பணி சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக அதற்கு அவசியமான தனது கருவியை மிகவும் ஜாக்கிரதையாகவும் நல்ல முறையிலும் பராமரிப்பது போல நாம் நமது கடமைகளைச் சரிவர ஆற்றும் பொருட்டு நம் உடல் எனும் கருவியை நன்கு கவனித்துக்கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம். திருமந்திரமும் இதைத்தான் அறிவுறுத்துகிறது. உடம்பை ஓம்பாவிடில் உயிரையும் ஓம்ப இயலாது.
புறவய இன்பங்களை உடலும் மனமும்தான் துய்க்கின்றன. அதனைத் தானே அனுபவிப்பதாக ஆத்மா மயக்கமுறுவதால்தான் பிறவிச் சுமை அதன் மீது ஏறுகிறது. பின் தொடரும் நிழலாகக் கரும வினை ஆத்மாவைத் தொடர்கிறது. எப்போது ஆத்மா தன்னை உணர்ந்து, உடலும் உள்ளமும் துய்ப்பவை தனது இல்லை என்பதையும் உணர்ந்து, உடலும் உள்ளமும் துய்ப்பனவற்றை வேடிக்கை பார்க்கிறதோ அப்போது அதன் மீது பிறவிச் சுமை ஏறுவதில்லை.
உபநிடதத்திலும் இதற்கான குறிப்பைக் காணலாம். ஒரு மரக் கிளையில் இரு பறவைகள் அருகருகில் அமர்ந்துள்ளன. ஒரு பறவை மரத்தின் பழங்களைத் தின்று கொட்டைகளை எச்ச்மிட்டுக்கொண்டிருக்கிறது. அருகில் உள்ள பறவை செயல் ஏதுமின்றி அதனை மெளனமாகப் பார்த்துக் கொண்டிருப்பதாகக் காவியச் சுவையுடன் உபநிடதம் வர்ணிக்கிறது.
உடலின் எல்லாச் செயல்பாடுகளுக்கும் ஒத்துழைத்தாலும் எதுவும் தனது சுய நலனுக்காக அல்ல. இதை ஆத்மாவுக்கு அனுசரணையாகப் பக்குவப்பட்ட உள்ளம் உணர்ந்திருக்குமானால் அதன் செயல், காமத்தின் விளைவாக நிகழும் செயலாகவே இருப்பினும் அது உள்ளத்தையும் உள் அந்தரங்கமான ஆத்மாவையும் பாதிப்பதில்லை. இதனால்தான் போகியை யோகி என்று கூற முடிகிறது.
நமது ஞானாசிரியன் ஸ்ரீ கிருஷ்ணனுக்கு நிகரான போகியும் இல்லை யோகியும் இல்லை. ஏனெனில் அவன் தனது உடலாலும் உள்ளத்தாலும் ஆற்றுகிற எந்தப் பணியையும் தனது சுய நலனுக்காகச் செய்வதில்லை. மற்றவர்களின் மகிழ்ச்சிக்காகவும் நன்மைக்காகவுமே அவன் எல்லாப் பணிகளையும் செய்கிறான்.
உடலாலும் உள்ளத்தாலும் துய்க்கும் இன்ப துன்பங்கள் அனைத்தையுமே இறைச் சக்திக்கு அர்ப்பணித்துவிடுவதுதான் ஆன்மிகத்தின் நோக்கம். தற்போது எனது வலது கால் சுண்டு விரலில் கடுமையான வலியை உண்டு பண்ணுகிற பிளவை போன்ற புண் வருத்திக் கொண்டிருக்கிறது. இதற்காக நான் மெய்யாகவே என் அம்பாளுக்கு நன்றி சொல்லிகொண்டிருக்கிறேன்.
உனக்கு உடம்பு என்பதாக ஒன்று உள்ளது, கடமையாற்ற ஒரு கருவி வேண்டும் என்பதற்காகவே உடல் என்பதாக ஒன்று உனக்குத் தரப்பட்டுள்ள்ளது என்று நினைவூட்டுவதற்காகவே எனக்கு இப்படி யொரு வலியுடன் கூடிய புண்ணைத் தந்துள்ளாய் அதற்காக என் மனமார்ந்த நன்றி என்று என் குல தெய்வ தேவியிடம் கூறி வருகிறேன். வலி இல்லையேல் உடலின் பிரக்ஞை இல்லாமல் போகிறது.
இந்த அடிப்படையில்தான் உடலாலும் உள்ளத்தாலும் துய்க்கும் இன்பங்களுள் தலையாயதான காமத்தையும் இறைச் சக்தியை உணர்வதற்கான தேடலாகத் தொடர்ந்து, பின் அந்த இன்பத்தை இறைச் சக்திக்கு அர்ப்பணிக்கவும் வேண்டும். இறைச் சக்தியை உணர்வதற்கான ஆன்மிகத் தேடலாக காமத்தையும் கொள்வது நமது மரபு. ஆனால் இன்று மாற்றுச் சமய, கலாசாரத் தாக்கங்களால் மிகவும் பாதிக்கப்பட்டுவிட்ட நிலையில் நாம் இருக்கிறோம்.
ஆகையால், மிகவும் பக்குவப்பட்டிருந்தால் மட்டுமே காமத்தையும் ஆன்மிகத் தேடலுக்கான மார்க்கமாகக் கருதும் முதிர்ச்சி நமக்கு இருக்கும். நமது முன்னோருக்கு அந்தப் பக்குவம் இருந்தது. சராசரியினரான நமக்கு இல்லை. இதை நன்கு புரிந்துகொள்ள வேண்டும்.
பக்தியின் உச்ச கட்டத்தில் நாயக நாயகி பாவத்துடன் சில பக்குவப்பட்ட ஜீவாத்மாக்கள் காமத்தை ஆன்மிக விழிப்புடன் கொண்டாடுகின்றன என்பதற்காக நானும் அவ்வாறே செய்கிறேன் என்று கிளம்பினால் அது வெறும் வக்கிர புத்தியாகத்தான் இருக்கும்.
நமது கோயில்களில் சிற்பங்களின் வடிவில் காமம் அனைவரும் பார்க்கும்படியாக உள்ளதே என்று கேட்டால் ஆன்மிகத் தேடலுக்கு இதுவும் ஒரு மார்க்கமாகக் கொள், அது வெறும் சுயநலத்திற்கான சுகமல்ல என்கிற அறிவுறுத்தலாக அதனை எடுத்துக்கொள்ள வேண்டுமேயன்றி வீண் விதண்டா வாதங்களில் இறங்குவது சரியல்ல.
திரு. மலர்மன்னன் ஐயா!
அருமை.
நீங்கள் குறிப்பிட்டது போல் சில கட்டுரைகளில் காமத்தை தவறாக
வெளிநாட்டினரின் மனநிலையில் புரிந்துகொண்டு அதைப்பற்றி எழுதவே
கூடாது என்பது மட்டுமல்ல, அதை ஆன்மீகத்துடன் தொடர்பு படுத்த
கூடாது என்றும் சிலர் மறுமொழி இட்டுள்ளனர்.
இவற்றை தெளிவாகவும் தீர்மானமாகவும் ஒதுக்கி தள்ளியுள்ளது உங்கள்
கட்டுரை. இன்றுள்ள சில பிறழ்தல்களை காரணம் காட்டி நம் மரபின்
நீட்சியை குறைத்து கொள்ள / மாற்றி கொள்ள வேண்டிய அவசியம்
ஒன்றுமில்லை. சிலர் துஷ்பிரயோகம் செய்தால் செய்து விட்டு போகட்டும்.
நம் முன்னோர்களில் சிலர், இந்த முறைகளை அனுசரித்துள்ளார்கள்
என்பதை நினைத்து நான் பெருமை கொள்கிறேன். இதற்கான ஆதாரமாக
சௌந்தர்ய லஹரியை எடுத்து காட்டியது அருமை.
மிக்க நன்றிகள்.
இந்து மதங்களில் ஒன்றான பௌத்த தருமமும் காமத்திற்கு எதிரான போக்கை வலியுறுத்தியது என்று சொல்கிறார்களே. அது உண்மையானால், இந்த காமத்தை ஒதுக்கும் வழக்கம் முகம்மதிய, கிறுத்துவ ஆக்கிரமிப்புகளுக்கு முன்பிருந்தே இருக்க வாய்ப்பிருக்கிறதே.
ஸ்ரீ க.க., காமத்தையும் கலவியையும் பாவம் என்று பவுத்தம் சொல்லவில்லை. பவுத்தத்திலும் பாவம் என்கிற கருதுகோள் கிடையாது.
இன்பங்கள் துய்ப்பதில் மூழ்கிக் கிடப்பதும் அவற்றில் ஆசைகொண்டு அலைவதும் துன்பங்களுக்குக் காரணம் என்றுதான் அது சொல்கிறது. பவுத்தம் எதையும் எதிர்மறைக் கண்ணோட்டத்துடன் பார்க்கவில்லை.
சமணம் ஹிந்து ஆன்மிக-தத்துவச் சிந்தனைகளுடன் இணைகோடாக உடன் வருவது. அதுவும்கூட காமத்தையும் கலவியையும் பாவம் என்று சொல்லவில்லை
-மலர்மன்னன்
எனது முந்தைய கூற்றில் பவுத்தம் எதையும் எதிர்மறைக் கண்ணோட்டத்துடன் பார்க்கவில்லை என்று குறிப்பிட்டிருந்தேன். வாழ்க்கை என்பதே ஏதேனும் ஒருவகையில் துன்பத்தை அனுபவித்தல்தான் என்பது பவுத்தத்தின் நான்கு தலையாய கோட்பாடுகளுள் முதன்மையானது. ஆகையால் பவுத்தம் வாழ்க்கையை எதிர்மறைக் கண்ணோட்டத்துடன் பார்ப்பதாகவே தோன்றும். யோசிக்கும் வேளையில் உடல், மன ரீதியான துன்பங்களைச் சகித்துப் பழகச் சொல்வதற்காகவே இந்தக் கோட்பாடு வலியுறுத்தப்படுவது புரிபடும். ஆங்கிலத்தில் endurance என்று சொல்கிறோமே அந்த சகிப்புத்தன்மை பவுத்தத்தில் தலையாய அம்சம். இது தலையெடுத்து ஆழப் பதிந்துபோனதால்தான் ஹிந்துஸ்தானம் போர்க்க்குணம் இழந்து அடிமைப்பட்டுப் போனது.
-மலர்மன்னன்
சிறந்த கட்டுரை. பல சித்தாந்த கருத்துக்கள் உள்ளடக்கிய கட்டுரை.
மெய் என்ன என்று இந்த மெய் யான மெய்யால் மெய் யான மெய் யை உணரவே இந்த மெய் இது மெய்.முடிந்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
மெய் என்ன என்று இந்த மெய்யான மெய்யால் மெய்யான மெய்யை உணரவே இந்த மெய் இது மெய்.
பொய்யான உடலை உயர்வு நவிற்சியாக மெய் எனல் வழக்கம். செயல்பாட்டுக்கு அவசியமாக உள்ள கருவியான அது மற்றெல்லாக் கருவிகளையும் போலவே காலப்போக்கில் தேய்மானம் அடைந்து பயன் அற்றுப் போவதால் நிரந்தரத் தன்மையற்றது என்பதை நினைவூட்டும் பொருட்டுப் பொய் என்று உடலைக் கருதுதலும் வழக்கம். அதனை மெய் எனக் கூறுவதன் நோக்கமே இருக்கும் வரை அதனை முறையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதுதான்.
பிறந்தவுடன் பெற்றவளைச் சார்ந்து இருக்கையிலும் நான் என்கிற பிரக்ஞை இருக்கிறது. உடல் வளர்ந்து வலிமையோடு திரிகையிலும் நான் இருக்க்கிறது. பின் அதே உடல் நலிந்து கிடக்கையிலும் நான் இருக்கிறது. ஆக, நான் எப்போதும் மாற்றமின்றி மெய்யாக நீடிக்கிறது. பொய்யான உடல்தான் பலவாறான மாற்றங்களுக்குள்ளாகி இறுதியில் அழிகிறது. எனினும் அதுவே நமது கருவியாக இருந்து இயங்க உதவுவதால் மெய் என மரியாதை செய்யப்படுகிறது.
-மலர்மன்னன்
உடம்பால் அழிஎஇந் உய்ரால் அழிவர் திறம்பட மெயஜானம் சேரவும் மாட்டார் உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்தேன் உயிர் வளர்தேனே……….திருமந்திரம். உடல் கருவிதான் ஆனால் உடல் சுத்தமானால் ஆன்ம சுத்தமாகும்.சாகதிருக்க கற்கும் கல்வியே மெய் கல்வி………அவ்வையார்.ஆன்ம முக்தி நிலை அடைய உடல் அவசியம்.கண்களே ஆத்மாவின் ஜன்னல்கள் எனவே பார்வைலும் சுத்தம் வேண்டும்.மாணிக்கவாசகரை போல உடலுடன் போக உடல் சுத்தம் அவசியம்……..உலகம் உவப்ப வலம் ஏறு……..நக்கீரர்…….வலம் ஏற உடல் காம இச்சை ஆகாது உடம்பால் ஆனபயன் யாதெனில் திறம்பட ஈசனை தேடு……..நன்றி மலர் மன்னன் அவர்களே.
ஸ்ரீ விவேகானந்தன், உடம்பார் அழியின் உயிரார் அழிவர் என்பதை எனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளேன். நீங்கள் தெரிவித்துள்ள கருத்டதுகளும் அதில் உள்ளன. காம இச்சை வேறு, காம உணர்வு வேறு. காம உணர்வை ஆன்மிக வழியில் திருப்ப வேண்டும், திருப்ப இயலும் என்பதே கட்டுரையின் உட்பொருள். காம உடலை அசுத்தம் செய்வதாகக் கூறுதலும் ந்மது கருத்தாக்கம் அல்ல. இதுவும் கட்டுரையில் கானலாம் ..இவ்வாறெல்லாம் உட்பொருளையும் கட்டுரையாளனே குறிப்பிட்டுவிட்டால் வாசகனுக்குச் சிந்தனைக்கே அவசியம் இல்லாது போய்விடும் அல்லவா? தினமும் திருமந்திரம் ஓதி வருகிறேன், அன்பரே. நன்றி.
-மலர்மன்னன்
பிறகு ஏன் நம்மில் சிலர் ஓவியர் M.F.Hussainஐ துரத்தி துரத்தி அடிக்கிறார்கள்?
நமது ஆதி சங்கரர் வர்ணித்தால் அது புனிதம், அதுவே ஓர் ஹுசைன் வர்ணித்தால் வக்கிரமா?
ஹுசைனை இதுவரை கண்டித்த சிலரில் நானும் ஒருவனே. ஹுசைன் தன தாயையோ அல்லது சஹோதரியயோ ஒரு சரஸ்வதியை வரைந்தது போல வருணிப்பது இயலாது. அதற்காக நம்மில் சிலர் அதனை வக்கிரம் என்று சொல்லி, பொது சொத்திற்கு ஊரு விளைவிப்பது நடை முறையில் பார்கிறோமே.
நான் புனிதத்திற்கும்(இறையை நோக்கியவை– எந்த சந்தேகத்திற்கும் இடமில்லாமல்), வாழ்வியல் இயல்பிற்கும்(காம அனுபவம்– அறம் சார்ந்தது), நடை முறை சாத்தியத்திற்கும்(நிர்வாண சித்திரங்கள் அன்றாட நடைமுறை இல்லை), வக்கிரம் எண்ணங்களுக்கும்(கண்ணோட்டம் சார்ந்தது) தெளிவான சிந்தனைகளை கேட்க விரும்புகிறேன்.
என்னை பொறுத்தவரை இந்துக்களுக்கு இன்னொரு பிரச்சனையும் உள்ளது. இந்து மதத்தினை நாம் எல்லோரும் ஒரு organized and one-book மதமாக அணுக நினைப்பது தான் அது. இங்கே சிலர் காமத்தினை ஆன்மப் பாதையாக கடை பிடிக்கலாம். வேறு சிலர் அது நேர் வழியல்ல என்று மறுத்து கூறி வேறு ஒரு பாதையை தேர்ந்து எடுக்கலாம். (ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹசர் சொன்னது போல — முதலாமத்தை அவர் பின் வழி பாதை (அ) கொள்ளை புரவழியே நுழைதல் என்றார்) ஆஹா இவ்விருவரும் வேறு வேறு மதத்தை சேர்த்தவர்களே அன்றி கிறித்தவம், இசுலாம் போன்று ஒரே மதத்தினர் அல்லர்.
சிவா மஹிம்ன ஸ்தோத்திரத்தில் வருவது போல, ஆறுகள் பல, சிலதுகள் நேர் வழியிலும், வேறு சில குறுகியும் நெடிகியும் வளைந்தும் சமுத்திரத்தை அடைவது போல, மாநிடர்கலகிய நாங்கள் நேராகவோ அல்லது வக்கிரமாகவோ ஒரு இறைவனையே அடைவோம்.
அய்யா, நான் இன்றுதான் இந்த கட்டுரையை வாசித்தேன். அதனால் தான் இந்த தாமதம்.
// வாழ்க்கை என்பதே ஏதேனும் ஒருவகையில் துன்பத்தை அனுபவித்தல்தான் என்பது பவுத்தத்தின் நான்கு தலையாய கோட்பாடுகளுள் முதன்மையானது. //
ஹிந்துயசதில் வாழ்கை எதனால் ஏற்படுகிறது, அதன் காரணம் என்ன? அது கொண்டாடப்பட வேண்டுமா என்பதை பற்றி என்ன சொல்ல பட்டு இருக்கிறது? தயவு செய்து விளக்க முடியுமா?