ஆன்ம விழிப் பாவைகள்:
மாணிக்கவாசகர் அருளியது திருவெம்பாவை. ஆண்டாள் அருளியது திருப்பாவை. முன்னது திருவண்ணாமலையில் மலர்ந்தது. பின்னது ஸ்ரீவில்லிப்புத்தூரில் மலர்ந்தது. இரண்டுமே இசைப் பூங்கொத்துக்கள். திருவெம்பாவையில் 20 செஞ்சொற்சித்திரங்கள் மிளிர்கின்றன. திருப்பாவையில் 30 செஞ்சொற்சித்திரங்கள் ஒளிர்கின்றன.
மாணிக்கவாசகர் திருவாதவூர் தந்த அருட்செல்வர். பாண்டிய நாட்டு அமைச்சராகப் பணியாற்றியவர். கல்வியும் ஒழுக்கமும் மிக்கவர். மன்னரால் தென்னவன் பிரமராயன் என்னும் பட்டமும் பெற்றவர்.
ஆண்டாள் ஸ்ரீவில்லிப்புத்தூர் தந்த அருட்செல்வி. நந்தவனத் துளசியருகே விஷ்ணுசித்தர் என்னும் பெரியாழ்வாரால் கண்டெடுக்கப் பட்ட அற்புதக் குழந்தை. இதயத் துடிப்பெல்லாம் கடவுட் தாகமாக வளர்ந்த சின்னஞ்சிறுமி. பெருமை மிக்க பெரியாழ்வாரிடம் வளர்ந்தமையால் ஆழ்வார் திருமகளார் என்னும் நற்பெயரும் பெற்றார்.
மன்னருக்காகக் குதிரைகள் வாங்கச் சென்று திருப்பெருந்துறையில் குருந்த மரத்தடியில் குருவருள் பெற்றார் மாணிக்கவாசகர். குதிரைக்குரிய பணத்தை அறச்செயல் புரிந்து அரசுப் பணியில் பிழைபட்டார். கோதையோ கடவுளுக்குக் கட்டிய மாலையைத் தானே சூடி அழகு பார்த்தபின் கோயிலுக்குத் தந்து சமயாசாரத்தில் பிழைபட்டாள். மாணிக்கவாசகரைச் சிவபிரான் ஆட்கொண்டார். சூடிக் கொடுத்த நாச்சியாரைப் பெருமாள் ஆட்கொண்டார். இருவருமே இறை ஒளியில் கலந்த பெருமையினர். இருவருமே இறை ஒளியைத் தம்தம் அழகிய பாடல்களில் வழங்கிய அற்புதமான திவ்ய ஞான தீபங்கள்.
திருவாசகத்தின் அங்கமாகப் பன்னிரு திருமுறையில் குடியேறியது திருவெம்பாவை. நாச்சியார் திருமொழியுடன் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் குடியேறியது திருப்பாவை. பன்னிரு திருமுறையும், நாலாயிர திவ்யப் பிரபந்தமும் தமிழகத்தின் ஆன்மீகப் பண்பாட்டு விழிகள். பாவைப் பாட்டுகளோ அவ்விரு விழிகளின் ‘பாவைகளாக’ ஒளிர்பவை.
’உத்திஷ்டத ஜாக்ரத’ என்னும் உபநிடதக் குரல்:
துயில் நீக்கம் என்னும் ஆன்மீக மையம் கொண்ட ஆன்மீக அலைகள் இரு பாவைகளிலும் விரிகின்றன. சிறுமியர் தம்மொத்த வயதினரை அதிகாலையில் எழுப்புகின்றனர். நீராட அழைக்கின்றனர். துயில் எழுப்புதலும், நீராட அழைத்தலும் இனிய ராகங்கள். வைகறையில் மானுடத்துக்கு இதைவிட இனிமை வேறு எதுவுமில்லை. துயில் எழுப்புதல் ஆன்மாவின் துயில் நீக்கம் உணர்த்துகின்றது. ஆன்மீக அருளாளர்கள் அனைவரும் அழைத்த அழைப்பின் சாரம் இதுவே. ‘உத்திஷ்டத ஜாக்ரத’ என்னும் உபநிடதக் குரலுக்கு மாணிக்கவாசரும் ஆண்டாளும் தந்த செந்தமிழ்ச் சொல்லோவியங்கள் இவை. துயில் எழுப்புதல் என்னும் ஆன்ம விழிப்பூட்டல் உலக இலக்கிய அரங்கில் இத்துணை அழகியல் (aesthetic) நலத்துடன் பதிவுற்றுள்ளதா என்பதனை அறிதல் வேண்டும். பாவைப் பாட்டுக்கள் நிச்சயம் தமிழ்ப் பெருமிதங்களில் முக்கியமானது.
வைகறை வாசலின் இன்சொற்கோலங்கள்:
‘எழுமின் விழுமின்’ என்னும் உபநிடதக் குரலுக்கு மணிவாசகரும், ஆண்டாளும் தந்த இன்னமுதப் பாவைப் பாடல்களின் நுழைவாயில் நாடகப் பாங்கினது.
உள்ளே துயில்வோர்; வாசலில் எழுப்புவோர். நேரமோ இருள் நீங்கும் அதிகாலை. எழுப்பும் குரலிலோ நட்புரிமை. சிலபோது எள்ளல், சிலபோது நகையாடல், சிலபோது செல்லக் கடிந்துரைகள்; ஆனால் எப்போதும் நேயமிகு நெருக்கம் (intimacy).
”வன்செவியோ நின்செவிதான்?” (1*) என்று கேட்பவள் திருவெம்பாவைத் தோழி. “ஊமையோ அன்றிச் செவிடோ?” (9) என்று வினவுபவள் திருப்பாவைத் தோழி.
”ஒள்நித்தில நகையாய் இன்னம் புலர்ந்தின்றோ?” (4) என்பது திருவெம்பாவைக் குரல். “எல்லே இளங்கிளியே இன்னும் உறங்குதியோ?” (15) என்பது திருப்பாவைக் குரல்.
“நாளை வந்துங்களை நானே எழுப்புவன் என்றவள் நாணாமே போனதிசை பகராய்!” (5) என்பது திருவெம்பாவையின் செல்லக் கடிந்துரை. “கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்பகரணனும் தோற்றும் உனக்கே பெருந்துயில் தான் தந்தானோ?” (10) என்பது திருப்பாவையின் செல்லக் கடிந்துரை.
இவ்வழகிய உரையாடல் சித்திரங்கள் பாவைப் பாட்டுக்களின் நுழைவாயில் வரவேற்பு இனிமைகள்; அழகியல் ஆர்வமும், ஆன்மீகத் தேடலும் உடையவர் தம் உள்ளத்தை எளிதில் பிணிக்கும் எழிலார்ந்த கோலங்கள்; ஆழ்ந்து நோக்குவோர்க்கோ லௌகீகத் துயிலுணர்த்தும் அற்புதக் குரல்கள்!
[*: அடைப்புக் குறிப்புக்குள் உள்ளவை திருவெம்பாவை, திருப்பாவைப் பாடல் எண்கள்]
நீராடல் சித்திரச் சோலையும் நோன்பின் சித்திரகூடமும்:
இரு பாவைப் பாடல்களுக்கும் அமைந்த பொதுமையம் ஆழமானது. எனினும் அவற்றிடையே நுட்பமான வேறுபட்ட பரிமாணங்களும் (dimensions) உள. நீராடலின் சித்திரம் திருவெம்பாவையில் விரிகிறது. நோன்பின் சித்திரம் திருப்பாவையில் விரிகிறது.
வாழ்க்கையை இனிய நோன்பின் புனித நீராடலாக அனுபவிக்கும் ஆழப்பார்வையின் விகசிப்பாகவே திருவெம்பாவை ஒளிர்கின்றது. இயற்கை அரங்கின் அழகெல்லாம் உருகி நிற்கும் தடாகம் மணிவாசகக் கண்களில் இறைத் தடாகம் ஆகின்றது. பொய்கையின் கருங்குவளையும் செந்தாமரையும், நீலமேனியாள் உமையையும் செந்தழல் வண்ணன் சிவனையும் நினைவூட்ட – அங்கம் குருகினம் அம்மையின் கைவளையையும், பின்னும் அரவம் அப்பனின் பாம்பணியையும் நினைவூட்ட – தங்கள் மலம் கழுவுவார் வந்து சார்தல் நீராடும் பொய்கையினையே பரம்பொருட்சுனை ஆக்குகின்றது.
பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்
அங்கம் குருகினத்தால் பின்னும் அரவத்தால்
தங்கள் மலம்கழுவுவார் வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்று இசைந்த
பொங்குமடு ..
என ஆனந்தமடைகிறது பாடல். இப்பார்வையின் பரவசத்தில் இன்னும் ஆழங்காற்படும்போது வாழ்க்கை அரங்கே இறைத்தடாகமாகின்றது. வாழும் வாழ்க்கையே பரமானந்த நீராடல் ஆகின்றது. பாய்ந்து பாய்ந்து – பாடிப் பாடி – குடைந்து குடைந்து – ஆடி ஆடி – தோழியருடன் ஆனந்த நீராடும் வைகறை இனிமையே – திருவெம்பாவையின் ஞானமொழியில் – ஆன்மீக வாழ்க்கையின் அற்புதக் குறியீடாகின்றது.
மாமத யானை மரத்தில் மறைந்திடும் அழகியல் நுட்பமிது; பார்முதல் பூதம் பரத்தில் மறைந்திடும் ஆன்மவியல் பரவசம் இது.
வாழ்க்கையை உன்னதமான இறைக்காதல் நோன்பின் சித்திரகூடமாகக் காணும் காட்சிக்கு இட்டுச் செல்கிறது திருப்பாவை. ”மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் நீராடப் போதுவீர்” என்று தொடங்குகிறது கோதையின் பாவை. நெய்யும் பாலும் நீக்கிடல், மலரும் மையும் ஒதுக்கிடல், செய்யத் தகாதன தவிர்த்திடல் – என்னும் விரத நெறிச் சித்திரங்களை அது தருகிறது. “குள்ளக் குளிர்ந்து நீராடல்” இங்கு விரத அங்கமே. துயில் எழுப்பும் குரலே நீட்சி கொள்கிறது. நந்தகோபன் மாளிகைக் காவலனை உணர்த்தி – நந்தகோபனைத் துயிலெழுப்பி – அன்னை யசோதையைத் துயிலெழுப்பி – பூவைப்பூ வண்ணனைத் துயிலெழுப்பி – அவனைப் போற்றி மகிழ்கின்றது கோதையின் பாவை. நோன்பின் நிறைவில் அவன் அருளால் பற்ற நல்லுடையும் பல்கலனும் அணிந்திடும் குதூகலம் அங்குண்டு. “மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக் கூடி இருந்து குளிர்ந்து” உண்ணும் பேறு உண்டு. அனைத்துக்கும் மேலாக, சிங்கமென நடந்துவந்து கண்ணன் சிங்காதனமிருந்து அருளும் பேரருட் காட்சியும், பறை பெற்றுய்தல் என்னும் கைங்கரியப் பிராப்தியின் பேரானந்தமும் சித்திரகூடச் சிகரக் காட்சியாகின்றன.
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும், உன் தன்னோடு
உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்று..
என்பதுவே வாழ்க்கையையே நோன்பாகக் காணும் கோதைப் பார்வை.
திருவெம்பாவையின் சிவமணமும், திருப்பாவையின் மால்மணமும்:
இறைமுகட்டின் புகழை இடையறாது ஒலிக்கும் இன் அருவி ஓசை பக்தி இலக்கியங்களின் பொதுமை. இறைப்புகழ் ஒன்றே பக்தர் நோக்கில் ‘பொருள்சேர் புகழ்’. “போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்யாதலே” நோக்கம். எனவே “என்னானாய் என்னானாய் என்னின் அல்லால் – ஏழையேன் என் சொல்லி ஏத்துகேனே” என்னும் நெகிழ்வொலியை அனைத்துப் பக்தி இலக்கியங்களிலும் பொதுப் பண்பாகவே காணலாம்.
மாணிக்கவாசகரின் திருப்பாவை சிவமணம் கமழ்வது. ஆண்டாளின் திருப்பாவை மால்மணம் கமழ்வது. மத்திட்டுக் கடைந்த தயிரில் மிதக்கும் வெண்ணெய்த் திரட்சியாக இறைமுன்பு நின்று நெகிழும் போற்றித் துதிகளை இரு பாவைகளும் ஏந்துகின்றன.
போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரிகம்
போற்றி யாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றியாம் மார்கழி நீராடேலோர் எம்பாவாய்
எனப் பாடித் துதிக்கின்றது திருவெம்பாவை.
அன்று இவ்வுலகம் அளந்தாய்! அடிபோற்றி
சென்றங்கு தென்னிலங்கை செற்றாய்! திறல் போற்றி
பொன்றச் சகடம் உதைத்தாய்! புகழ் போற்றி
கன்று குணிலா எறிந்தாய்! கழல் போற்றி
குன்று குடையா எடுத்தாய்! குணம் போற்றி
வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல் போற்றி
என்றென்றும் உன் சேவகமே ஏத்திப்பறை கொள்வான்
இன்றுயாம் வந்தோம் இறங்கேலோர் எம்பாவாய்
எனப் பாடித் துதிக்கின்றது திருப்பாவை.
நெஞ்சம் நெகிழ்தலே பக்திவயல்களின் வளமை ஆதாரம். இறைப்புகழ்த் தொடர்களே நெஞ்சம் நெகிழ்தலின் ஊற்றுக்கண்கள். இறைப்புகழ்த் தொடர்கள் தத்துவக் களத்திலோ – புராணக்களத்திலோ – உரிமை கெழுமிய உறவுப் பிணைப்பிலோ – அல்லது இவை மூன்றும் விரவிய இனிய சுரப்பிலோ கிளர்ந்தெழுகின்றன. இரு பாவைகளும் இவ்வகையான இறைப்புகழ்த் தொடர்களால் மனம் பிணிக்கின்றன. மனம் நெகிழச் செய்கின்றன. இருபாவைகளின் சிவமணமும், மால்மணமும் ஒன்றையொன்று வெல்லும் வண்ணம் உன்னதம் பெறுகின்றன.
”தேசன் சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத்து ஈசன்” (2) என்றும், “ஆரழல்போல் செய்யா, வெண்ணீறாடி – மையார் தடங்கண் மடந்தை மணவாளா” (11) என்றும், ”செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனை – அங்கண் அரசே அடியோங்கட்கு ஆரமுதே”(11) என்றும், “கண்ணார் அமுதமுமாய் நின்றான்” (18) என்றும், “என்னானை என்னரையன் இன்னமுது” (7) என்றும், இன்னும் பலவாறாகவும் தித்திக்கும் தொடர்களில் சிவமணம் தருகின்றது திருவெம்பாவை.
”ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம் – கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்” (1) என்றும், “ஆழி மழைக்கண்ணா” (4) என்றும், “மாயன் மணிவண்ணன்” (16), ”சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்” (14) என்றும் பலவாறு புகழ்கின்றது திருப்பாவை. “மாயனை மன்னு வடமதுரை மைந்தனை – தூய பெருநீர் யமுனைத் துறைவனை – ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை – தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை” (5) என வேகப் படிக்கட்டுகளேறித் துரத்தித் தொட முயல்கிறது கோதை தமிழ்.
மழைக்காட்சி:
மழைக்காட்சியின் மனக் குளிர்ச்சியில் இரு பாவைகளும் பெறும் பரவசமும் குறிக்கத் தக்கது. இறையருளின் சாசுவதக் குறியீடு மழை. விண்ணும் மண்ணும் இணையும் அழகிய மழைக்காட்சி அழகியலாரின் கலைக்கண்களுக்கு என்றுமே பெருவிருந்து. எங்குமே பெருவிருந்து. உலகின் அனைத்து மொழிகளிலும் இதன் ஈர்ப்பும் பதிவும் உண்டு. ஆன்மீகத் தளம் கொண்ட அகப்பார்வையிலும் மழைக்காட்சி அற்புத விருந்தேயாகும். உலக ஆன்மிக இலக்கியச் சொல்லோவிய அருங்காட்சியகத்துக்கு இரு பாவைகளும் தந்த அற்புதச் சித்திரங்கள் இவை.
கார்மேகத்தில் உமையவள் திருமேனி அழகையும், மின்னல் தெறிப்பில் அவளது இடையொளிக் கீற்றையும், இடிமுழக்கில் அன்னையின் பொன்னஞ் சிலம்போசையினையும் காண்கிறது திருவெம்பாவை.
முன் இக்கடலைச் சுருக்கி எழுந்து உடையாள்
என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையாள் இட்டிடையின்
மின்னிப் பொலிந்து எம்பிராட்டி திருவடிமேல்
பொன்னஞ் சிலம்பில் சிலம்பித் திருப்புருவம்
என்னச் சிலை குலவி நந்தம்மை ஆளுடையாள்
தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு
முன்னி அவள் நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய். (16)
என்பது திருவெம்பாவைப் பாடல்.
திருப்பாவையோ மேகநிறத்தில் திருமாலின் திருமேனியினையும், மின்னல் சுழற்சியில் திருக்கைச் சக்கர அருள் சீற்றத்தையும், இடுமுழக்கத்தில் பாஞ்சஜன்யத்தின் பேரொலியையும், வீசும் மழைச் சரங்களில் சார்ங்கக் கணைப் பொழிவையும் கண்டு பரவசங் கொள்கிறது.
ஆழிமழைக் கண்ணா! ஒன்று நீ கை கரவேல்
ஆழியுள் புக்கு முகந்து கொடு ஆர்த்தேறி
ஊழிமுதல்வன் உருவம்போல் மெய்கறுத்துப்
பாழியந்தோளுடைப் பற்பநாபன் கையில்
ஆழிபோல் மின்னி, வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய் (4)
என்பது திருப்பாவைப் பாட்டு.
‘உவமை என்னும் தவலருங் கூத்தி’ பாங்குற ஆடும் பல்வண்ணக் கூத்தில் ஒன்றே இப்பாடல்களின் உத்தியாக மிளிர்கின்றது என்னும் ‘உத்தி ஆய்வு – மனச்சித்திர எல்லை’ தாண்டிய ஸஹ்ருதய நோக்குடைய அனுபூதித் தேடலார்க்கே இப்பாடல்களின் விஸ்வ விசாலமும், ஆன்மிக ஆழமும் வசப்படும். பழகிய பாதையின் குறுகிய ஓடையில் சுழலும் எந்திரச் சிந்தனைத் தளைப்பட்டு ஆன்மிகம் நிராகரிக்கும் நுனிப்புல்லர்க்கும், கலகப்பிரியச் சித்தாந்த நிறக் கண்ணாடியர்க்கும் இங்கு நுழைதிறம் வாய்ப்பதில்லை.
ரிச்சர்ட் பாக் எழுதிய ஜோனதன் லிவிங்ஸ்டன் ஸீகல் (Jonathan Livingston Seagull – Richard Bach) ஓர் அழகிய சுட்டு. அலைதழுவும் கடற்கரையில் தாம் பறப்பதெல்லாம் ஊனும் மீனும் தேடவும் தின்னவுமே என்பது பெரும்பான்மைக் கடற்பறவைகளின் பார்வை. ஊனும் மீனும் தின்பது வான்வெளி நீந்தலின் உயர்சுகத்துக்காக என்பது நாயகப் பார்வையின் பார்வை. பசியாற்றும் தரையிறக்கம் இலட்சியமன்று; வான் ஏறும் உயர்பறப்பே இலட்சியம். இப்பார்வைத் தகுதியே பாவை மழைப்பாட்டுக்கும் தேவை. எனில் படிப்பவர் பாட்டில் நுழைவர்; பாடல் படிப்பவருள் நுழையும்.
திருவெம்பாவையின் ஞானச் சிறகும், திருப்பாவையின் காதல் சிறகும்:
மாணிக்கவாசகரின் பக்தி நெகிழ்வில் ‘ஞானக் காட்சிகளே’ ததும்புகின்றன. ஞானப் பார்வையின் சொற்சித்திரங்களே திருவெம்பாவையின் பரம்பொருட்காதல் அனுபவத்தை இனிமை செய்கின்றன. “ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் – சோதியை யாம் பாடக் கேட்டேயும், வாள்தடங்கண் மாதே வளருதியோ?” (1) என்னும் தொடக்கமே ஆதியந்தமில்லா அற்புதச் சோதியாகப் பரம்பொருளைச் சுவைக்கிறது. “பாதாளம் ஏழினும் கீழ் சொற்கழிவு பாதமலர் – போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே” (10) என்னும் போது (அதலம், விதலம், சுதலம், தராதலம், இரசாதலம், மகாதலம், பாதாளம் எனப்) புராண மொழியில் தரப்படும் ஏழுநிலைத் தாழ்மன மண்டலங்களிலும் ஊடுருவி நீளும் பாதமலர் அழகும்; எவ்வகைப் பொருள் முடிவிலும் நீட்சிகொண்டு நிமிரும் போதார் புனைமுடி நலமும் ஞானச் சித்திரங்களாகவே அகம் நுழைகின்றன. அடிமுடி தேடிய அண்ணாமலைப் புராணத்தின் அற்புதச் சுட்டாக உணரினும் இவ்வரிகளின் ஞான மணத்தை நன்கு உணரலாம்.
முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப் பெற்றியனே (9)
என்னும் போதும் பரம்பொருளின் காலாதீதச் சித்திரமே மனம்கொள எடுத்துரைக்கப் படுகின்றது.
”விண்ணுக்கொரு மருந்தை வேதவிழுப்பொருளை” (4) என்னும் போதும், “ஆர்த்தபிறவித் துயர்கெட நாம் ஆர்த்தாடும் தீர்த்தன்” (12) என்னும் போதும், “பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர் – விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகி” (18) என்னும் போதும் ஞானச் சுவையே காதற் சுவையாகின்றது.
ஆண்டாளின் இனிய பிரவாகம் காதல் வெள்ளம். பள்ளமடை திறந்த உணர்ச்சி வேகம். அழகியல் மீதூர்ந்த அமுதச் சித்திரங்களும், புராணக் கால்வழி எழும் புனைவுச் சித்திரங்களும் அவள் ஆழ்மனம் உணர்ந்த அற்புத சத்தியங்கள்; அவளது பாவனா சக்தியின் அற்புத தரிசனங்கள்.
கோதைக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆயர்பாடி ஆகின்றது. தோழியர் ஆயர் கன்னிகையர் ஆகின்றனர். வடபத்ரசாயி திருக்கோயில் நந்தகோபன் மாளிகை ஆகின்றது. அங்கு எழுந்தருளியவன் ஆயர்பாடிக் கண்ணனாகின்றான். ‘இடைப்பேச்சும் இடைநடையும்’ இயல்பாகின்றன. தானே இடைச்சிறுமி ஆகின்றாள்.
கோதை வாழ்வது “சீர்மல்கும் ஆய்ப்பாடி” (1). அங்கு புழங்கும் நெய்யும் பாலும் விரதவிலக்குப் பெறுகின்றன (2). சூழநிற்பவை “வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்” (3). “காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து” ஆய்ச்சியர் மத்தினால் எழுப்பும் தயிர் அரவம் (7)ஒலிக்கின்றது. எருமைகளைப் பனிப்புல்லுக்குச் சிறுமேய்ச்சலிடும் காட்சியும் (8), எருமை தன் கன்றுக்கிரங்கிப் பால்சோர நனைத்து இல்லம் சேறாகும் காட்சியும் (12) அங்கு காணலாம்.”பாற்சோறு மூட நெய்பெய்து முழங்கை வழிவாரக் கூடியிருந்து குளிர்ந்து” (27) உண்ணல் என்னும் குதூகல மாட்சியும் அங்கு உண்டு.
இந்த ஆயர்பாடி நாயகன் கண்ணன். அவன் “ஆயர்குலத்து அணிவிளக்கு” (5). அவனை “ஓங்கி உலகளந்த உத்தமன்” (3) என்றும், “பேய்முலை நஞ்சுண்டு – கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி – வெள்ளத்தரவில் துயில் அமர்ந்த வித்து” (6) என்றும், “புள்ளின் வாய் கீண்டான்” (13) என்றும், “ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓர் இரவில் – ஒருத்தி மகனாய் ஒளித்து வளர்ந்தான்” (25) என்றும் பலவாறு புராணக் கீற்றுகளால் புனைந்து மகிழ்கிறாள் ஆண்டாள்.
புராணக் கீற்றுகள் மாணிக்கவாசகரிடம் ஞானச்சிறகு விரிக்கும்; ஆண்டாளிடம் காதல் சிறகு விரிக்கும். இருவர்தம் பாவைப் பறவைகளும் ஆன்மவெளியில் பறக்கும் உயரங்களோ ஒன்றுக்கொன்று தாழ்ந்ததன்று; பறக்கும் எழிலோ ஒன்றுக்கொன்று குறைந்ததன்று. வாதவூரரும், வில்லிப்புத்தூரியும் தந்த அழகிய பாவைப் பாடல்களில் நாம் காண்பதெல்லாம். நாம் ருசிப்பதெல்லாம் ஆன்மீக அமுதவளமே.
என்.எஸ்.பி. என்று அன்புடன் அழைக்கப் படும் பேராசியர் என்.சுப்பிரமணியம் அவர்கள் நாகர்கோவில் தெ.தி.இந்துக்கல்லூரி தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தமிழ் பக்தி இலக்கியங்களில் ஆழ்ந்த புலமையும், ஆன்மீக ஈடுபாடும் கொண்டவர். ”வாழ்வியல் சிந்தனைகள்” (விவேகானந்த கேந்திர வெளியீடு) என்ற நூலின் ஆசிரியர். விவேகவாணி (விவேகானந்த கேந்திர இதழ்) உள்ளிட்ட ஆன்மிக, இலக்கிய இதழ்களில் தொடர்ந்து எழுதிவருகிறார்.
மணிவாசகரின் ஞானச்சிறகோடும் நாச்சியாரின் காதற் சிறகோடும் ஞானவெளியிற் பறந்து ஞான அமுதுண்டோம். என்.எஸ்.பி அவர்களின் எழுத்துக்களை எதிர்நோக்குகின்றோம்
வாதபுரீசரையும் கோதையையும் திருவெம்பாவை திருப்பாவை மூலம் ஸ்மரித்து மனதை பாவனமாக்கிய ஸ்ரீ என்.எஸ்.பி அவர்களுக்கு வணக்கம். எனது எண்ணக்கோவைகள் :-
கோபிகைகள் கண்ணனை அடைய காத்யாயனி தேவியை வேண்டி வ்ரதம் இருந்தனர் என்று ஸ்ரீமத் பாகவதம் சொல்கிறது.
காத்யாயனி மஹாமாயே மஹாயோகின் யதீஸ்வரி
நந்தகோப ஸுதம் தேவி பதிம் மே குருதே நம: (10-22-4)
ஹே மஹாமாயே நந்தகோபன் ஸுதன் எம் பதியாக அருள்வாய் என ப்ரார்தித்தனர்.
அது சரி, இந்த குழந்தைகள் இப்படி கண்ணனிடம் எப்படி குறையாக் காதல் கொண்டார்கள் என ஒரு மஹான் சொல்லக் கேட்டதை பகிர்ந்து கொள்கிறேன்.
“வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்” என்று கோதை பாடினாள் அல்லவா
அந்தப் பசுக்களெப்படி?
ஆயர்பாடியில் ஆனிறை மேய்க்க கண்ணன் பசுக்களை அழைத்துச்சென்று ஆங்கே யமுனைக்கறையில் குழலூதும்போது, புல் தின்ன மறந்து நித்ய ஸூரிகளைப்போல் “விஷ்ணோர் யத் பரமம் பதகும் ஸதா பஸ்யந்தி ஸூரய:”என, தன் குழலொலியில் தானே மயங்கி சிரம், இடை, பாதம் வளைய த்ரிபங்கி லலிதாகாரமாக நிற்கும், கண்ணனையே கண் கொட்டாது காணுமாம் பசுக்கள். அந்த காட்சியே அவற்றுக்கு ஆஹாரம். பின் அந்த ஆராவமுதனின் அருகே வந்து யவ வஜ்ராதி ரேகைகள் பளிச்சிடும் சற்றே தூக்கிய அவன் பாதத்தை நாவால் ருசிக்குமாம் அந்த பசுக்கள். அப்பசுக்களுக்கு தினவு தீர்வதும் இந்த த்ரிபங்கிலலிதாகார மூர்த்தியிலேயே. அப்பேர்ப்பட்ட பசுக்கள் குடத்தில் நிறைக்கும் பால் கிடைத்தற்கறிய க்ருஷ்ணரஸமேயல்லவா. குடம் நிறைக்க பால் கொடுத்ததற்கா கோதையந்தப் பசுக்களை வள்ளலென்றியம்பினாள்? கண்ணனையே கண்டு கண்ணனையே உண்டு கண்ணனிடமே தினவும் தீர்க்கும் பசுக்கள் குடத்தில் நிறப்பியது க்ருஷ்ணரஸமே என்பதால் வள்ளலென்றாள் போலும்!
அந்த ஆய்ப்பாடிப் பசுக்களுக்கு இப்படி ஒரு பாக்யமென்றால் அதன் க்ருஷ்ணரஸமான க்ஷீரத்தை அருந்தும் கோபியரின் எண்ணமும் அந்த கண்ணனின் கழலிணையயே நாடுமல்லவா?
அப்பேர்க்கொத்த க்ருஷ்ணரஸ பானத்தாலேயே
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும், உன் தன்னோடு
உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்
என கோதை இயம்பினாள் போலும்!
இவ்வாறியம்பிய கோதை நமக்காக வேண்டி
மற்றை நம் காமங்கள் மாற்று என்றும் இறைஞ்சுகிறாள்.
தவ கதாம்ருதம் தப்த ஜீவனமென
வாழ்க்கை செல்ல கண்ணனை இறைஞ்சுவோம்
நன்றி! அருமை! படிக்கப் படிக்கத் தேனினும் இனிய சுவை! நன்றிகள் பல!
அன்புள்ள திரு சுப்பிரமணியம் மற்றும் திரு கிருஷ்ணகுமார்,
பாவைப்பாடல்களின் தமிழ் மொழி வளமும் , மனித மனத்தை பண்படுத்த தேவையான பல நற்கருத்துக்களும் ஏராளம் உள்ளன. நன்றாக அமைந்த அற்புதமான தொகுப்பு. திரு சுப்பிரமணியம் அவர்களின் பணி மேலும் சிறக்கட்டும், தொடரட்டும். மனத்திற்கு அளவு கடந்த மகிழ்ச்சியை உண்டாக்கியது.
கிருஷ்ணகுமார் அவர்களின் ஒத்த கருத்துக்களின் ஒப்பீடு ( comparative analysis) சிறந்த மக்களின் சிந்தனை உலகெங்கும் ஒன்றே( great men think alike ) என்பதை ஊர்ஜிதம் செய்வதாக அமைந்துள்ளது. மனமாரப்பாராட்டுகிறோம். வாழ்க வளமுடன்.
அன்புள்ள
சு பாலச்சந்திரன்
உங்கள் கட்டுரை மார்கழி மாதத்து வசந்தம்.
இந்தப் பாவைப் பாடல்களை ஒரு கோஷ்டியாகத் திருமால்/சிவன் கோயிலகளைச் சுற்றிச் சென்று பாடுவது பலகாலமாக இருந்து வரும் மரபு.
அவரவர் வசிக்கும் பகுதிகளில் இதற்கு ஏற்பாடு செய்வது பாவைப் பாடல்களை பக்தர்கள் உள்ளத்தில் நித்திய வாசம் செய்ய வைக்கும். பாவை இலக்கியங்கள் வெகுஜனங்களிடையில் பரவ உதவவும் செய்யும்.