உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளில் விவேகானந்தரின் தாக்கம்

ஆக்கம்: மோகனா சூரியநாராயணன்

(ராமகிருஷ்ண விஜயம் இதழில் வெளியானது)

swami-vivekananda-quotes1உச்சநீதிமன்றத் தீர்ப்புகளில் கீதை, திருக்குறள் போன்ற நூல்களிலிருந்து மேற்கோள்கள் காட்டப்படுகின்றன.  தீர்ப்பிற்கு அவை வலுசேர்க்கின்றன.

ஒரு முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ளப்படாவிட்டாலும் முறையாகச் சட்டப் பிரிவுகளின்படி, எடுத்த முடிவிற்கு வலுவூட்ட சேர்க்கப்பட்ட காரணம் அது என்று அவற்றிற்கு ஒரு முக்கியத்துவம் உண்டு.

சுவாமி விவேகானந்தரின் காலத்திற்கு சுமார் 50 வருடங்களுக்குப் பின்னரே இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம் வடிவமைக்கப்பட்டது.  ஆனால் அவர் தாம் வாழ்ந்த காலத்திலேயே இந்தியாவிற்கு என்னென்ன தேவை, எதையெல்லாம் தவிர்க்கவேண்டும், ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு எவற்றையெல்லாம் பின்பற்ற வேண்டும் என்பதையெல்லாம் கூறிவிட்டார்.

நிகழ்காலத்தின் பல வழக்குகளின் தீர்ப்பில் சுவாமிஜியின் கருத்துகள் நீதிபதிகளால் மேற்கோள்களாக வழிகாட்டிகளாக எடுத்தாளப்பட்டுள்ளன.

இந்தக் கண்ணோட்டத்தில் நாம் நீதிமன்றத் தீர்ப்புகளில் இடம் பெற்றுள்ள சுவாமிஜியின் கருத்துகளை காண்போம்.  – ராமகிருஷ்ண விஜயம் ஆசிரியர்.

______________________________________________________________________________

மடத்துப் பணியாளர் ஒருவர் தவறு செய்துவிட்டதால் அவரை இனி மடத்திற்குள் வர வேண்டாம் என்று உத்தரவிட்டார் சுவாமிஜி.  தண்டனை பெற்றவரோ அன்னை ஸ்ரீசாரதா தேவியைத் தஞ்சமடைந்து, அவரது சொற்படி மறுபடியும் மடத்திற்குச் செல்கிறார்.

நடந்ததை அறிந்த சுவாமிஜி, ‘அன்னையின் முடிவு உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு ஒப்பானது. அதற்கு மேல்முறையீடு இல்லை’ என்று கூறி அவரை மீண்டும் பணியில் அமர்த்துகிறார்.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்குப் பிறகு மேல் முறையீடு செய்ய நம் நாட்டில் எந்த நீதிமன்றமும் கிடையாது.

அத்தகைய உச்சநீதிமன்ற வழக்குகள் சிலவற்றிலேயே சுவாமிஜியின் தீர்க்க தரிசனக் கருத்தகள் மேற்கோள்களாகக் காட்டப்பட்டன. அவை இங்கு தொகுத்துக் கூறப்பட்டுள்ளன.

இட ஒதுக்கீடு வேண்டுமா?

இந்தியச் சமுதாயம் சமச்சீருடன் பீடுநடை போடவேண்டுமானால் பின் தங்கிய மக்களை வேகமாக முன்னேற்ற வேண்டும்.  முன்னேறி வரும் மற்றவர்களுடன் அவர்கள் இணைய வேண்டும்.

இதற்காகவே அரசியல் நிர்ணய சட்டத்தில் சில ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஒரு பிரிவினருக்கு ஒரு சலுகையைத் தருவதும் மற்றொரு பிரிவினருக்கு அதைத் தராமல் இருப்பதும் சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்ற சிந்தனைக்கு விரோதமானது.

நெடுங்காலமாகப் பிற்பட்ட நிலையிலிருக்கும் சமூகத்தினருக்கு இட ஒதுக்கீட்டுச் சலுகைகள் நியாயமானவை என அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் உச்சநீதிமன்றம் முடிவு செய்து, அந்தமுடிவிற்கு ஆதரவாக சுவாமிஜியின் கருத்துகளை மேற்கோளாகக் காட்டுகிறது.

Akhil Bharatiya Soshit Laramchari Sangh Rly. Vs. Union of India (1981) 1 SCC 246.

 ‘இனப்பாகுபாடு காரணமாக, ஹரிஜனங்களைக் காட்டிலும் கல்வி கற்பதில் அந்தணர்கள் அதிக நாட்டம் காட்டுகிறார்கள் என்றால் அந்தணர்களின் கல்விக்காகப் பணம் செலவழிக்காதீர்கள்; எல்லாவற்றையும் ஜரிஜனங்களுக்காகச் செலவிடுங்கள்.  பலவீனர்களுக்குக் கொடுங்கள்; ஏனெனில் உங்கள் கொடை அங்குதான் தேவை.’ சுவாமி விவேகானந்தர்.

jaipurprobably-1891-2ஷெட்யூல்டு வகுப்பினருக்கு அளிக்கப்பட்ட இடஒதுக்கீடு நியாயமானதே என்று கூறும் கர்நாடகா – அப்பாபாலு இங்கலே வழக்கின் தீர்ப்பிலும், 1995 SUPP 4 SCC 469 Para 19)

‘என்னைத் தீண்டாதே; என்ற வாக்கியத்துடன் எங்களை நாங்கள் அடையாளம் காட்ட விரும்பவில்லை.  அது இந்துமதமல்ல இது நமது எந்த நூலிலும் இல்லை.  இது நமது தேசிய வாழ்வில் குறுக்கிட்டுவிட்ட ஒரு மூடநம்பிக்கை’ என்ற சுவாமிஜியின் ஆணித்தரமான சொற்கள் எடுத்தாளப்பட்டுள்ளன.

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குத் தரப்பட்ட இட ஒதுக்கீடு சரியானதே என்று கூறும் பிரபல இந்திரா சஹானி வழக்கிலும் நீதிமன்றம்,

’ஜாதியோ ஜாதி இல்லையோ, கொள்கைகளோ அவை இல்லையோ, தனி நபரின் சிந்தனைச் சுதந்திரம் மற்றும் செயற்சுதந்திர ஆற்றலை – அந்த ஆற்றலால் பிறருக்குக் கேடு உண்டாகாதவரை – தடுக்கின்ற மனிதன், வகுப்பு, ஜாதி, நாடு, அமைப்பு என்று எதுவானாலும் அது சனியன்தான்; அது ஒழிந்தே ஆகவேண்டும்’ (ஞானதீபம் – சுடர் 9, பக்கம் 227)

என்ற சுவாமிஜியின் கருத்துகளுடன் தனது தீர்ப்பிற்கு வலுசேர்த்தது.

உண்மையான கல்வி

அரசியலமைப்புச் சட்டம் அளித்திருக்கும் உரிமைகளுள் ஒன்றுதான் ‘கல்வி கற்பதற்கான உரிமை’.

’இனாம்தார்-மகாராஷ்டிரா மாநிலம் வழக்கில்’ கல்வி என்றால் என்ன என சுவாமிஜி கூறிய கல்வியின் இலக்கணம் மேற்கோளாகப் பயண்படுத்தப் பட்டுள்ளது:

‘… ஒருவனைத் தன் சொந்தக் கால்களில் நிற்கும்படிச் செய்வதே உண்மையான கல்வி’

மதம் எங்கே இருக்கிறது?

‘மதம் என்பது கொள்கைகளில் இல்லை; கோட்பாடுகளில் இல்லை.  அறிவுபூர்வமான பேச்சுக்களில் இல்லை.  அது வாழ்வதும் வளர்வதும் ஆகும்.’

சுவாமி விவேகானந்தரின் இந்தக் கூற்றைப் பரபரப்பான ராமஜன்ம பூமி தீர்ப்பில் எடுத்துக்காட்டாகக் காட்டியுள்ள நீதிபதி ஜே.எஸ். வர்மா, ‘இந்தச் சர்ச்சையின் வேர்களைப் பற்றி சிந்திக்கும்போது என் மனதில் சுவாமிஜியின் கருத்து எழுகிறது’ என்று கூறினார்.

அடிப்படை உரிமை பாதுகாப்பு

இந்தியக் குடிமகனுக்கு இந்தியாவில் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குச் செல்லும் உரிமை அடிப்படை உரிமைகளில் ஒன்று என்று தீர்ப்பளிக்கப்பட்ட மனேகா காந்தி – இந்திய யூனியன் வழக்கில் ‘பாரதம்’ தன்னைச் சுருக்கிக் கொண்டதைப் பற்றியும் அதனால் ஏற்பட்ட விளைவுகளைப் பற்றியும் நீதிபதி, சுவாமிஜியின் இந்த வாக்கை மேற்கோள் காட்டுகிறார்.

vivekananda_with_sara-bull‘இந்தியாவின் துன்பத்திற்கும் வீழ்ச்சிக்குமான முக்கிய காரணங்களுள் ஒன்று, அது தன்னைக் குறுக்கிக் கொண்டதாகும்;  முத்துச்சிப்பி தன் வாயை இறுக்கமாக மூடிக்கொள்வதுபோல் தனது பொக்கிஷங்களைப் பிற இனத்தினருக்குத் தர மறுத்ததாகும்.

‘….பிற நாடுகளுக்கு உயிர்ச் சக்தி அளிக்கின்ற உண்மைகளைத் தர மறுத்ததாகும்.  நாம் வெளிநாடுகளுக்குச் செல்லவில்லை; சென்று பிற இனங்களையும் நம்மையும் ஒப்பிட்டுப் பார்க்கவும் இல்லை என்ற அளவில் நம்மைக் குறுக்கிக்கொண்டு விட்டோம்.’

லட்சிய ஆசிரியர் வேண்டும்

அவினாஷ் நாகரா – நவோதயா வித்யாலயா சமிதி வழக்கில் ஆசிரியர்களின் கடமைகளையும் உரிமைகளையும் பற்றிக் கூறும்போது சுவாமி விவேகானந்தரின்,

‘நெருப்பு போன்ற களங்கமற்ற ஒழுக்கம் உடையவர்களுடன் இளமையிலிருந்தே சிறுவர்கள் வாழவேண்டும்; அத்தகைய உதாரண புருஷர் ஒருவரை முன்னால் வைத்துக்கொள்ள வேண்டும்; காலங்காலமாக நமது நாட்டில் துறவிகளே கல்வி கற்பித்து வந்தார்கள்.  துறவுமிக்கத் தியாகிகள் கல்வி கற்பித்த நாள்வரை இந்தியா எல்லா வளங்களும் பொருந்தியதாகத்தான் இருந்தது; (பக்கம் 88 எனது பாரதம் அமர பாரதம்)’

 என்பது மேற்கோளாகக் காட்டப்பட்டது.

எது மதம்?

நாரயண தீக்ஷிதலு- ஆந்திரபிரதேஷ் அரசு வழக்கில் எது மதம் என்பதைத் தெளிவாக்க உச்சநீதிமன்றம் சுவாமி விவேகானந்தரின் உரைகளையே முழுவதும் சார்ந்திருந்தது.

ஒவ்வோர் ஆன்மாவும் உள்ளடக்கிய தெய்விகம் நிறைந்தது.  புற-அக இயற்கைகளை அடக்குவதன் மூலம் இந்த அக தெய்வீகத்தை வெளிப்படுத்துவதே நோக்கம்.

‘செயல் அல்லது வழிபாடு அல்லது பிராணனை கட்டுப்படுத்தல் அல்லது ஆராய்ச்சி இவற்றுள் ஒன்றாலோ பலவற்றாலோ எல்லாவற்றாலுமோ, இதனைச் செய்து சுதந்திரனாக இரு!’ (பக்கம் 122 எனது பாரதம் அமரபாரதம்)

என்று எது மதம் என்பதை விளக்கும் பதிலுரைகள் கொடுக்கப்பட்டு ‘நாங்கள் சகிப்புத்தன்மையை நம்புவதோடு எல்லா மதங்களையும் உண்மை என்று ஏற்றுக்கொள்கிறோம்’ என்ற சுவாமிஜியின் உரை முத்தாய்ப்பாக விளங்குகிறது.

vivekananda_san_francisco-1900-seated-4‘பல்பீர் கௌர் – ஸ்டீல் அதாரிடி ஆஃப் இந்தியா’ மற்றும் லிடரேட் டெய்லி வேஜஸ் எம்ப்லாயிஸ் அஸோசியேஷன் (படித்த தினக்கூலி தொழிலாளர் சங்கம்) வழக்குகளில் ‘மனித உரிமையை நிலைநாட்டும் தீர்ப்புகளில் நீதிபதிகள் அரசியல் சட்டங்களின் மூலம் அளிக்கப்படும் வசதிகள் சாதராண மனிதனைச் சென்றடைவதில்லை.  அவை சட்டப் புத்தகங்களின் காகிதங்களிலேயே உள்ளன’ என்று கூறும் நீதிபதி ‘சுவாமி விவேகானந்தர் வேறு ஒரு சூழ்நிலையில் கூறியவை, இந்தியாவை நல்லமுறையில் விரைவில் மாற்றியமைத்து அரசியல் நிர்ணய சட்டத்தின் தந்தையர்கள் கண்ட கனவுகளை நனவாக்கப் பயன்படும்’ என்ற தமது நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார்.

சுவாமிஜி கூறியது: ‘எல்லா யோகங்களும் செயல்படுத்தப்பட வேண்டும்.  அவற்றைப் பற்றிய வெறும் தத்துவங்கள் நன்மை செய்யா.  நாம் அவற்றைக் கேட்க வேண்டும், அவற்றைப் பற்றிச் சிந்திக்க வேண்டும், காரணகாரியங்களை ஆராய்ந்து மனதில் பதிவு செய்துகொண்டு அவை நம் வாழ்வின் பகுதியாக மாறும்வரை தியானித்து உணரவேண்டும்.

 ‘சமயம், சிந்தனைகள், தத்துவங்கள் இவற்றின் மூட்டையாக, அறிவுஜீவிகளுக்கு மட்டுமே உரிமையானதாக இருக்கக்கூடாது.  நமது அறிவினால் இன்று சில முட்டாள்தனமான வேலைகளைச் செய்யலாம்.  நாளைக்கே அவற்றை மாற்றிக்கொள்ளலாம்.  ஆனால் உண்மை சமயம் மாறுவதே இல்லை…’

ஸ்ரீராமகிருஷ்ணர் – சுவாமி விவேகானந்தர் உபதேசங்களினால் பெரிய சமுதாய மாற்றமே நிகழ்ந்துள்ளது என்கிறது உச்ச நீதிமன்றம்.  ஓர் உதாரணம் இதோ :

ஹரிஜனங்களை ஆலயத்திற்குள் அனுமதிக்க மறுத்த வழக்கில் (AIR 1966 SC 1119: Page 37), இந்து மதம், அதன் கோட்பாடுகள் இவற்றைச் சற்று ஆராய்ந்த நீதிமன்றம் காலப்போக்கில் தோன்றிய பல மத அமைப்புகளைப் பட்டியலிட்டு இறுதியாகக் கூறியது:

’ராமகிருஷ்ணர் – விவேகானந்தரின் உபதேசங்களால் இந்துமதம் மிகுந்த வசீகரமாக, முற்போக்குச் சிந்தனையுடன் செயல்துடிப்புடன் கூடிய வடிவில் மலர்ந்தது’.

ஒரு குறிப்பிட்ட இந்து ஆலயத்தில் நுழையவும், வழிபாடு செய்யவும் ஹரிஜனங்களுக்கு உரிமை மறுக்கப்பட்டது.  ஆனால், உச்சநீதிமன்றம் அந்த உரிமையைத் தந்தது.

shillong‘ஜாதி, பிறப்பு, பலவீனம், பலம் இவற்றைக் கடந்து எல்லா ஆண்களும், பெண்களும், சிறுவர்களும் இதைக் கேட்டு அறிந்து கொள்ளட்டும்.  உயர்ந்தவன், தாழ்ந்தவன், பலவீனன், பலம் பொருந்தியவன் எவராயினும் ஒவ்வொருவரிடமும் அந்த எல்லையற்ற ஆன்மா இருக்கிறது.  அது ஒவ்வொருவருக்கும் எதையும் சாத்தியமாக்கும், எல்லையற்ற சக்தி, ஆற்றல் இருப்பதால் யாரும் சிறந்தவனாகவும் நல்லவனாகவும் ஆகமுடியும் என்ற திடமான உறுதியை அளிக்கிறது.  ஆகவே நாம் ஒவ்வோர் ஆன்மாவிடமும் ‘எழுந்திரு, விழித்திரு, லட்சியத்தை அடையும் வரை நில்லாதிரு’ என்று சொல்வோம், நம்பிக்கை அளிப்போம்’

(Akil bharatiya Soshit Karamchari Sangh Rly. Vs. Union Bank of India (1981) 1 SCC 246) என்ற சுவாமிஜியின் உரை ஒட்டுமொத்த இந்தியர்களையும் தட்டி எழுப்பும் பிரகடனமாக உள்ளது.

பிரிவினைகளே இல்லாத இந்தியா உருவாக வேண்டும் என்று சுவாமி விவேகானந்தர் விரும்பினார்.  நம் நாட்டின் இன்றைய பிரச்சனைகளுக்கான தீர்வுகளைப் பற்றிய சிறந்த கருத்துகளும் கூறியுள்ளார்.

அவரது முடிவுகள் மேலோட்டமானவை அல்ல; மிக மிக ஆழமானவை.  வரலாறு காட்டும் பாடங்களையும் சூழ்நிலைகளையும் கருத்தில் கொண்டு காணப்பட்டவை.  அவை என்றென்றும் நம்மை வழிநடத்தும்.

5 Replies to “உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளில் விவேகானந்தரின் தாக்கம்”

 1. Pingback: Indli.com
 2. சுவாமி விவேகானந்தரிடம் இருந்து எவ்வளவோ தெரிந்து கொண்டோம்.

  ஆனால் எனக்கு தெரியாத ஒன்று அவருக்கு எப்படி மரியாதை செலுத்துவது என்பதுதான்.

  இந்த உலகிற்கு, மனிதத்துக்கு சுவாமி செய்த சேவைக்கு நான் அவருக்கு எவ்வளவு மரியாதை செலுத்தினாலும் வணங்கினாலும், அது அவருக்கு செலுத்த வேண்டிய மரியாதையின் மிகச் சிறிய பகுதியாகவே உணர்கிறேன்.

 3. இந்திய மக்கள் அனைவரும் விழிப்புணர்வு பெற வேண்டும்! பலம் மிக்கவர்களால் மட்டுமல்ல சிறந்த அறிவாளிகளாலும் தேசம் பெருமை அடையும்!
  ஒன்று படுவோம்! அனைவரையும் ஒன்று படுத்துவோம்! தேசத்தின் மதிப்பை உயர்த்துவோம்!
  வாழ்க பாரதம்! வெல்க மக்கள்!

 4. மக்கள் அனைவரும் விழிப்புணர்வு பெற வேண்டும்! பலம் மிக்கவர்களால் மட்டுமல்ல சிறந்த அறிவாளிகளாலும் தேசம் பெருமை அடையும்!
  ஒன்று படுவோம்! அனைவரையும் ஒன்று படுத்துவோம்! தேசத்தின் மதிப்பை உய‘ஜாதி, பிறப்பு, பலவீனம், பலம் இவற்றைக் கடந்து எல்லா ஆண்களும், பெண்களும், சிறுவர்களும் இதைக் கேட்டு அறிந்து கொள்ளட்டும். உயர்ந்தவன், தாழ்ந்தவன், பலவீனன், பலம் பொருந்தியவன் எவராயினும் ஒவ்வொருவரிடமும் அந்த எல்லையற்ற ஆன்மா இருக்கிறது. அது ஒவ்வொருவருக்கும் எதையும் சாத்தியமாக்கும், எல்லையற்ற சக்தி, ஆற்றல் இருப்பதால் யாரும் சிறந்தவனாகவும் நல்லவனாகவும் ஆகமுடியும் என்ற திடமான உறுதியை அளிக்கிறது. ஆகவே நாம் ஒவ்வோர் ஆன்மாவிடமும் ‘எழுந்திரு, விழித்திரு, லட்சியத்தை அடையும் வரை நில்லாதிரு’ என்று சொல்வோம், நம்பிக்கை அளிப்போம்’ர்த்துவோம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *