பெரியபுராணம்: இளைஞர் வாழ்வியலுக்கான ஒரு சமுதாயக் காவியம் – 1

sekkizharஇளமைக்கே உரிய பண்புகள் பொருந்திய இளைஞரான சுந்தரரை பாட்டுடைத்தலைவனாகக் கொண்டது பெரியபுராணம். இப்புராணத்தில் அரைப்பாகம் இன்னொரு இளைஞரான ஞானசம்பந்தர் பற்றிச் சொல்கிறது. இளைஞனான அநபாயனின் இளமைத் தாக்கத்திற்கு இன்னொரு பரிணாமம் தருவதற்காக இளைமை உள்ளம் பூண்ட சேக்கிழார் ஆக்கித்தந்ததே பெரியபுராணம். பெரியபுராணம் என்பது அன்புநூல்; பக்திநூல். அது காட்டும் அன்பு உண்மையன்பு. திருவள்ளுவனார்,

அன்போடியைந்த வழக்கென்பர் ஆருயிர்க்கும்
என்போடு இயைந்த தொடர்பு

என்று அன்பைப் பற்றிக் கூறுவார். உடலுக்கும் உயிருக்கும் இடையில் வந்த உறவே அன்பின் வழியில் உண்டானதுதான் என்று இக்குறளில் வள்ளுவர் காட்டுவார். யாருக்கு அன்பில்லை? எந்த ஒரு கெட்டவனும் தன்னைச் சார்ந்த ஒரு சிலரிடமேனும் அன்புடையவனாகவே இருக்கிறான். எந்தப் பிராணிகளிடம் அன்பில்லை? எங்கும் அன்பிருக்கிறது. அந்த அன்பையே இறைவனாகக் கண்டார்கள் இந்துக்கள். அன்பின் நிறையுருவமான இறைவனைச் சிவமாகக் கண்டார்கள் சைவர்கள். (அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்திருமந்திரம்) அந்த அன்பின் நிறையுருவமாய இறைவனை அன்பினால் ஆராதித்த அறுபத்து மூன்று பேர்களின் வரலாற்றை எடுத்து ஓர் அன்புக் காவியம் உருவானது. அதுவே பெரியபுராணம். இப்புராணத்தில் பேசப்பெறும் அறுபத்துமூவர் பெருமக்களும் அன்பின்வழி நின்றவர்கள். அந்த அன்பு கனிந்து, முற்றிப் பழுத்து, பக்தி அன்பாகப் பரிணமித்திருக்கிறது.

இருபத்தியோராம் நூற்றாண்டின் இரண்டாம் தசாப்தம் பிறந்திருக்கிறது. இயற்கையாகவும் செயற்கையாகவும் ஏற்பட்ட அவலங்கள் கடந்த காலத்தில் நம்மை நிலைகுலைவுக்கு உள்ளாக்கி விட்டன. ஆகவே, சமயங்கள் காட்டும் வாழ்வியலைச் சரியாக அறிந்து, புரிந்து, அதன் வழியில் அமைதியைத் தேட வேண்டியவர்களாக இருக்கிறோம்.

இந்த நிலையில் நமது வாழ்வியலைப் புதுப்பித்துக் கொள்ளவும் நம் பண்பாட்டைப் புரிந்து கொண்டு வாழ்வைச் செம்மையான வழியில் வழிநடாத்தவும் பெரியபுராணம் என்ற நூல் ஒரு வழித்துணையாக அமைய வல்லது. முக்கியமாக, பல்வேறு இளைஞர்களதும் இளமை உள்ளங் கொண்டவர்களதும் கதைகளைச் சொல்வதால் இந்நூல் இளைஞர்களின் நூல்.

இளைமைக்காலத்தில் ஏற்பட்ட சோதனைகளைச் சாதனைகளாக மாற்றுவதை அடியவர்களின் வாழ்வில் காண முடிகின்றது. ஞானசம்பந்தப் பெருமானின் இளமை, துணிந்து நின்று சமணத்தை எதிர்த்து சைவத்தை பாண்டிய நாட்டில் தாபிக்கிறது.

மானினேர்விழி மாதராய் வழு திக்கு மாபெருந்தேவி கேள்
பானல் வாயொடு பாலனீங்கிவன் என்று நீ பரிவெய்திடேல்
ஆனைமாமலையாதியாய இடங்களில் பல அல்லல் சேர்
ஈனர்கட்கெளியேன் அல்லேன் திருவாலவாய் அரன் நிற்கவே

என்று அந்த அச்சமில் இளமை பாடுகிறது. அஞ்சுகிற அப்பருக்கு கோளறுபதிகம் பாடிக் காட்டி அச்சம் எனக்கில்லை என்று கூறுகிறது. ஜோதிடமும் கிரகசாரமும் சிவன் அருள் பெற்ற இளைஞனை ஒன்றும் செய்யாது என்று துணிவுற நவில்கிறது.

sundaramoorthy-nayanar

சுந்தரரின் இளமை- கேட்டதை உடனே இறைவன் கொடுக்க வேண்டும் என்று கேட்கிறது. கேட்டதைக் கொடுக்காத இடத்து, ‘நீர் வாழ்ந்து போதீரே’ என்று தயங்காமல் நிந்தாஸ்துதி பாடுகிறது. பித்தாப்பிறை சூடி என்று அது பரம்பொருளைப் பற்றியே பேசுகிறது. பெண் மீது கொண்ட காதலும் அதற்கிடையில் ஏற்பட்ட பேதைமைமிக்க ஊடலையும் நீக்க, அந்தப் பரமனையே தன் மானிடக் காதலியிடம் தூதனுப்புகிறது அந்த சுந்தரரின் இளமை. வியாசசர்மனின் இளமை அவனை சண்டேஸ்வரனாக்கி சிவபூஜா பலனைக் கொடுக்க வல்ல உயர்வுடையவனாக்கிற்று. இப்படியெல்லாம் இளமையின் ஒருபக்கத்தைப் பேசியவர் இளமையினால் விளைந்த சவால்களையும் பேசுகிறார்.

thiruneelakanda-nayanar

இயற்கையின் இளமையும் இளமைமிக்க அவர்தம் மனையாளின் அழகும் ஒரு சவாலை அவருக்குத் தந்து நாயன்மார்களுள் இடமும் தருகிறது. திருநீலகண்டர் என்பார் தம் இளமைக் காலத்தில் உண்டான காமத்தால் விலைமகளின் இன்பம் நாடிச் சென்று அதனால் ஏற்பட்ட பிணக்கால் வாழ்நாள் முழுதும் எந்தப் பெண்ணையும் மனதாலும் தீண்டா விரதம் நோற்று உயர்ந்தார்.

karaikkal-ammaiyar1காரைக்கால் அம்மையோ, தன் கணவனே தன்னைக் கண்டு அஞ்சி, ‘இவள் தெய்வப்பெண்’ என்று வணங்கித் தொழுவதைக் கண்டு பொறுக்காமல், இளமையைத் துறக்கிறார். அந்த பெண்ணாகிய புனிதவதி தன் இளம் உடம்பை உதறிப் பேய்வடிவம் பெற்றுக் கொண்டு இறைவனாலேயே ‘அம்மையே’ என்று அழைக்கப்படுகிறார். தமிழில் பக்தி இலக்கியத்திற்கு வித்திட்டு பக்தி எனும் பெரும் பயிர் செழிக்க வழிசெய்கிறார். இப்படியாக புராணங்களில்- இளைமைக்கான, இளைஞர்களுக்கான புராணமாக பெரியபுராணம் நம் முன்னே காண்கிறோம். இப்புதிய பார்வையுடன் பெரியபுராணத்துள் பயணிப்போம்.
பெருமை மிக்க பெரியபுராணத்தின் உள்ளடக்கம்-

பெரியபுராணம் தமிழகத்துப் புராணம். தென்னகப் புராணம். ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் உருவெடுத்த இந்தப் புராணம் வெறும் சமயக்கதையல்ல.. தமிழர்களின் வாழ்வியலைப் பறைசாற்றும் அற்புதக்கதை. சோழப்பேரரசு துங்கபத்ரா நதியிலிருந்து கன்னியாகுமரிக்கு அப்பால் ஈழமண்டலம் வரை பரவியிருந்த காலத்தில் பெரியபுராணம் உருவெடுத்தது. இச்சோழர்களில் அநபாயச் சோழன் காலத்தில் இப்புராணம் உருவானது.

அக்காலத்திலும் சமணம் செல்வாக்குப் பெற்று விளங்கியது. அக்காலத்தில் புகழ் பெற்று விளங்கிய சமணமுனிவர் திருத்தக்க தேவர். தமிழின் ஐம்பெருங்காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, சிந்தாமணி, குண்டலகேசி, வளையாபதி என்பவற்றுள் சிந்தாமணி என்ற சீவகசிந்தாமணி என்ற காவியத்தை இவரே இயற்றினார். காமச்சுவை நிறைந்த இக்காவியத்தில் சீவகன் என்ற அரசனின் வரலாறு பேசப்படுகிறது. இக்காவியமே பெரியபுராணத்தின் எழுச்சிக்கு ஆதாரமாக விளங்கியது என்பர்.

அதாவது அநபாயச்சோழனின் மந்திரியாக விளங்கியவர் சேக்கிழார். குன்றத்தூர் என்ற தமிழகத்துக் கிராமத்தில் உழுதுண்டு வாழும் உயரிய குலத்தில் பிறந்தவர் அருண்மொழித்தேவர் என்ற சேக்கிழார். அரசன் இவரது திறனையும் அறிவையும் செயற்திறனையும் கண்டு மந்திரிப்பதவி தந்து சிறப்பித்து அவருக்கு ‘உத்தமசோழப் பல்லவராயர்’ என்ற விருதும் கொடுத்திருந்தான். இவ்வாறாக, அநபாயச் சோழனின் மந்திரியாக இவர் பதவி வகித்து வந்த காலத்தில் அநபாயன் சீவகசிந்தாமணியில் ஆழ்ந்து போயிருந்தான். அந்நூலும் உண்மையிலேயே தமிழ்ச்சுவை நிறைந்தது. மிகவும் இலக்கியச்சுவையுடையது. ஆனால் தன் கடமைகளை எல்லாம் விட்டுவிட்டு காமச்சுவை நிறைந்துள்ள ஒரு சமணகாவியத்தில் நாட்டரசன் மூழ்கியிருப்பதை சேக்கிழார் விரும்பவில்லை. எனவே, மந்திரிக்கான உரிமையுடனும் நட்புரிமையுடனும் உரிய வேளையில் தட்டிக்கேட்டு திருத்தவேண்டிய நிலைக்கு ஆளானார் சேக்கிழார்.

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும்
(-திருகுறள்)

அரசனின் மதிமயக்கத்தைத் தீர்ப்பதற்காக சேக்கிழார் பெருமான் முயன்றார். சுந்தரமூர்த்திசுவாமிகள் அருளிச் செய்த திருத்தொண்டர் தொகையையும் அதன் பின் நம்பியாண்டார் நம்பி அடிகள் அருளிச் செய்த திருத்தொண்டர் திருவந்தாதியையும் முன்னிட்டுக் கொண்டு, தான் அறிந்த வகையில் மிகச்சிறப்பாக, அரசன் வியந்துபோய் பரமசைவனாக மாறும் வண்ணம், அறுபத்து மூன்று நாயன்மார்களின் கதைகளை அவனுக்கு ஓதினார்.

கேட்டவன் வியந்தான். ‘ஆஹா.. இத்தனை அருமையான உண்மைச் சம்பவங்கள் நம் சைவத்தில் உண்டாகில் எவ்வளவு ஆச்சரியம்!’ என்று மனப்பூரிப்பு எய்தினான். அவனது வேண்டுகோளை ஏற்று சேக்கிழார் அவனுக்குச் சொன்ன கதைகளை இன்னும் விரிவாகவும், ஆய்வியல் ரீதியாகவும், சிதம்பரத்தலத்தில் உறைந்து எழுதிய பக்திக்காவியமே பெரியபுராணம்.

பெரியபுராணம் பாடிய சேக்கிழாரின் வரலாற்றைக் கூட உமாபதி சிவாச்சார்யார் என்ற குரவர் ‘சேக்கிழார் புராணம்’ என்று பாடி வைத்திருக்கிறார். இதன் மூலம் நாம் அவரது வரலாற்றைத் தெளிவாக அறியக்கூடியதாக இருக்கிறது. பெரியபுராணம் இருபெருங் காண்டங்களை உடையது. புதின்மூன்று சருக்கங்கள் கொண்டது. 4,253 பாடல்களால் பாடப்பெற்றது. தொழில்நிலையில் கண்ணப்பர் என்ற வேடுவத் தொழிலாளருக்கும் ஆனாயர் என்ற மாடு மேய்ப்பவருக்கும் திருக்குறிப்புத்தொண்டர் என்ற உடை துவைக்கும் தொழிலாளிக்கும், அதிபத்தர் என்ற மீனவத் தொழிலாளிக்கும் பாணரான நீலகண்டயாழ்ப்பாணருக்கும் பறையர் என்ற ஒடுக்கப்பட்ட வகுப்பில் பிறந்த நந்தனாருக்கும் நாயனார்கள் பட்டியலில் இடம்கொடுத்து உயர்வு தந்தது பெரியபுராணம். பெரியபுராணம் பேசும் நாயன்மார்களில் பிறப்பு நிலையில் அரசரும் அந்தணரும் பன்னிருவர். வேளாளர் பதின்மூவர். ஆதிசைவர் நால்வர். வணிகர் அறுவர். ஆனாலும் யாவரும் சிவனடியார்கள். இவர்களுள் பேதமில்லை என்பதே பெரியபுராணம் சொல்லும் பெரிய செய்தி.

சேக்கிழார் தமது பெரியபுராணத்தைப் பாட திருத்தொண்டர் தொகையை முதல்நூலாகவும் திருத்தொண்டர் திருவந்தாதியை வழிநூலாகவும் கொண்டார் எனவும் கொள்வர்.
சேக்கிழார் காலம்

சேக்கிழார் நாயன்மார்கள் வரலாற்றைப் பாடியிருப்பதால் அவர் அவர்களின் காலத்திற்குப் பிற்பட்டவர். அதிலும் இராஜராஜசோழன் காலத்தில் வாழ்ந்த நம்பியாண்டார் நம்பியடிகள் பாடிய திருத்தொண்டர் திருவந்தாதியை வழிநூலாகக் கொண்டவர். எனவே, இராஜராஜசோழன் காலத்திற்குப் பிற்பட்டவர். ஆனால் சந்தனாச்சார்யார்களுள் ஒருவரான உமாபதி சிவாச்சார்யார் சேக்கிழாரைப் பாராட்டி அவருக்கே ஒரு புராணம் எழுதியிருப்பதால் அவர் காலத்திற்கு முற்பட்டவர்.

ஆகவே, பெரியளவில் இவ்விடயம் தொடர்பில் சர்ச்சைப்படுவதற்கில்லை. இவர் காலத்தில் சோழப்பேரரசு சிறப்புற்று விளங்கியது என்பதையும் நம்மால் நன்கு அறியமுடிகிறது. அதிலும் சேக்கிழாரே தமது புராணத்தில், தம் கால மன்னன் குலோத்துங்கன் என்று கூறியிருக்கிறார்.

‘சென்னிய பயன் குலொத்தங்க சோழன் தில்லைத் திருவெல்லை
பொன்னின் மயமாக்கிய வளவர் போரென்றும் புவி காக்கும்
மன்னர் பெருமான் அநபாயர்..’
(– சண்டேஸ்வரநாயனார் புராணம்)

ஆனால் பிரச்சினை என்ன என்றால் வரலாற்றில் மூன்று குலோத்துங்கன்கள் இருந்திருக்கிறார்கள்.

எனினும், சேக்கிழாரே தமது காவியத்தில் தம் காலத்துக் குலோத்துங்கனுக்கு இரண்டு சிறப்பாதாரங்கள் தருகிறார். அதாவது அவனுக்கு அநபாயன் என்ற சிறப்புப் பெயரே பெரிதும் வழங்கி வந்திருக்கிறது. மேலும் அவன் தில்லைச் சிற்றம்பலத்திற்குப் பொன் வேய்ந்திருக்கிறான்.

இவ்வாறான தரவுகளை வைத்துப் பார்க்கும் இடத்து சேக்கிழார் இரண்டாம் குலோத்துங்கன் காலத்தவர் என்றே கருதலாம். அவனது காலம் பொ.பி.1133 தொடங்கி 1150 வரையாகும். ஆக, இவன் காலத்திலேயே சேக்கிழார் வாழ்ந்து பெரியபுராணத்தைப் படைத்தார் என்று கருத இடம் உண்டு.

எனினும் இவர் கந்தபுராணம் படைத்த கச்சியப்பர் காலத்திற்கும் கம்பராமாயணம் செய்த கம்பநாடர் காலத்திற்கும் முன்னையவரா, பின்னையவரா என்று திடமாக அறிய இயலவில்லை. கம்பர் காலத்திற்குப் பின்னர் சோழஅரசு சிதைவடைந்ததாகவே கருதப்பெறுவதால் சேக்கிழார் கம்பருக்கு முந்தையவர் அல்லது சமகாலத்தவர் என்று கருதுவதே கூடும். ஆனால் சமகாலத்தவர் என்று கருதுதற்கு எங்குமே இடமில்லை ஆதலில் கம்பருக்கு முன்னையர் என்றே சொல்லலாம்.

சேக்கிழார் இஸ்லாமியம், கிறித்தவம் முதலாய மதங்கள் இந்தியாவில்- தமிழகத்தில் புகமுன் வாழ்ந்தவர். எனவே அவர் காலத்தில் ஓரளவு உண்மையான இந்து தர்மம் பலவிடங்களிலும் வாழ்ந்திருக்கிறது. இளையான் குடிமாறனாரை அறிமுகம் செய்ய விழையும் போதே அவர்

அம்பொன் நீடிய அம்பலத்தினில் ஆடுவார் அடிசூடுவார்
தம்பிரான் அடிமைத் திறத்துயர் சாற்று மேன்மை தரித்துளார்
நம்புவாய்மையின் நீடு சூத்திர நற்குலம் செய்தவத்தினால்
உம்பர் ஞாலம் விளக்கினார் இளையான்குடிப்பதி மாறனார்

என்கிறார். இங்கே சூத்திரர் குலம் வாய்மையிற் சிறந்தது. இறையன்பு மிக்கது. நற்பண்புகளில் உயர்ந்தது. மேன்மை தங்கியது. என்றெல்லாம் சொல்வதன் ஊடாக அவரது காலத்தில் சாதி, வருண பேதங்களின் விளைவான ஏற்றத்தாழ்வுகள் பெரிதும் இருக்கவில்லை என்றும் கருதலாம். இதனையும் கருத்தில் கொண்டு அவரது காலத்தினை 13-ஆம் நூற்றாண்டுக்கு முந்தையவர் என்று நிர்ணயிக்க முடிகின்றது.

தெய்வச் சேக்கிழார் தந்த தெய்வீக நூல்

‘உபமன்யுபக்த விலாசம்’ என்ற பெயரில் சம்ஸ்கிருதத்தில் பெரியபுராணம் மொழிபெயர்ப்புச் செய்யப்பெற்றுள்ளதாகக் கூறுவர். அவ்வாறாகில் பழங்காலத்திலேயே தமிழிலிருந்து சம்ஸ்கிருதத்திற்கு மொழிபெயர்ப்புச் செய்யப்பெற்ற பெரிய நூல் பெரியபுராணம். தமிழிலேயே இந்நூல் முதன்முதலில் ஆக்கப்பெற்றது. கம்பராமாயணம் வான்மீகியைத் தழுவி கம்பன் செய்தது. கந்தபுராணமும் வடமொழிக் காந்தத்தைத் தழுவிச் செய்யப்பெற்றது. வியாசபகவானின் மகாபாரதத்தைத் தழுவியே வில்லிபுத்தூரார் தமிழில் பாரதம் படைத்தார். ஆனால் சேக்கிழார் பாடிய நூல் இவ்வாறன்று. இதுவும் இதன் தனிப்பெருஞ்சிறப்பாகும். இவ்வாறான சிறப்புக்களால் சேக்கிழார் ‘தெய்வப்புலவர்’ என்று அழைக்கப்பெறுகிறார். இப்பெயரில் வழங்கப்பெறும் இரு தமிழகப் பெரியவர்கள் ஒருவர் வள்ளுவர்; மற்றையவர் சேக்கிழாரே.

தூக்கு சீர்த்திருத்தொண்டர் தொகை விரி
வாக்கினால் சொலவல்ல பிரான் எங்கள்
பாக்கியப் பயனாப்பதிக் குன்றை வாழ்
சேக்கிழானடி சென்னி இருத்துவாம்

என்று காஞ்சிப்புராணமும் இவரை வழுத்திக் கூறுவதாலும் இப்பெருமகனாரின் சிறப்பறியலாம். சைவத்திருமுறைகளான பன்னிரண்டில், பன்னிரண்டாவது பெரியபுராணம். பெரியபுராணம் இறைவனே அடியெடுத்துக் கொடுக்கப் பாடப்பெற்றது.

உலகெலாம் உணர்ந்தோதற்கரியவன் நிலவுலாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்தாடுவான் மலர்ச் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்

இதுவே பெரியபுராணத்தின் காப்புச் செய்யுள். முதற்செய்யுள். இதிலுள்ள ‘உலகெலாம்’ என்ற அடி தில்லை ஆடவல்ல பெருமானே அசரீரியாகக் கொடுத்த அடி என்பர்.

sekkizhar1

தில்லைச்சிற்றம்பலத்தில் வைத்துப் பாடப்பெற்ற இக்காவியம் அங்கேயே அரங்கேறிற்று. ‘தொண்டர் சீர் பரவுவார்’ என்ற விருதினை அப்பொழுது அவருக்கு சோழன் வழங்கி அவரை பட்டத்து யானையில் ஏற்றி, தானே கவரி வீசி, ஊர்வலமாக அழைத்துச் சென்று பெருஞ் சிறப்பளித்தான்.

பெரியபுராணத்திற்கு சேக்கிழார் இட்ட பெயர், ‘திருத்தொண்டர் புராணம்’. ஆனால், இப்புராணத்தின் பெருமை இதனைப் பெரியபுராணமாக்கிற்று. இதனை ஓரளவுக்கு முன்கூட்டியே அறிந்திருந்ததால் உண்மைப் பெரியார்களான நாயன்மார்கள் கதை பேசவந்த சேக்கிழார், ‘எடுக்கும் மாக்கதை இன் தமிழ்ச் செய்யுளாய் நடக்க..’ என்று விநாயகர் வணக்கத்திலேயே குறிப்பிடுகிறார். இங்கே ‘மாக்கதை’ (பெரியகதை) என்று குறிப்பிட்டிருப்பது அவதானித்தற்குரியது.

நாம் பெற்ற பெருஞ்செல்வமாய், இப்பெரியகதையின் பெருமையைக் காண்பிக்க, ஒரு சிலவற்றை எடுத்து நோக்கலாம்.

(தொடரும்…)

5 Replies to “பெரியபுராணம்: இளைஞர் வாழ்வியலுக்கான ஒரு சமுதாயக் காவியம் – 1”

  1. Pingback: Indli.com
  2. மிக சிறந்த கட்டுரை. மேலும் பல கட்டுரைகள் உங்களிடம் இருந்து எதிர்பார்கின்றோம்.
    நமசிவாய.

    சோமசுந்தரம்

  3. அருமையான தொடர்.

    ஒரு கேள்வி.

    //…ஜோதிடமும் கிரகசாரமும் சிவன் அருள் பெற்ற இளைஞனை ஒன்றும் செய்யாது என்று துணிவுற நவில்கிறது….//

    சமணர்களில் ஒரு பிரிவினர் முக்தியை மறுக்கும் பொருள்முதல்வாதிகள். மேலும், பெரும்பாலான சமணப் பிரிவினர்கள் தங்களது கவனத்தை உளவியலிலும், வானியலிலும், கணிதத்திலும் செலுத்தினர்.

    ஒருவேளை இந்த சோதிட சாத்திரம் என்பதை உருவாக்கியதில் சமணர்களின் தத்துவப் பின்புலம் முக்கியமான ஒன்றாக இருந்திருக்க வாய்ப்பிருக்கிறதா?

    ஏனெனில், அவர்கள்தான் “ஊழ்வினை” பற்றி அதிகம் பேசுபவர்கள்.

    இந்த ஊழ்வினையும், கிரகங்களின் சக்தியும் சிவபக்தர்களைப் பாதிப்பதில்லை என்று சிவனடியார்கள் அடிக்கடி சொல்வதை (கோளறு பதிகம் etc.) பார்க்கிறோம்.

    இதுவும்கூட சமண மறுப்பாக இருக்க சாத்தியங்கள் உள்ளனவா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *