தேர்தல் களம்: ‘அந்தரடிசான் சாகிப்’களின் அற்புதக் கதை

vaiko2சந்தேகமில்லாமல், இந்தத் தேர்தலில் பல தரப்பினரின் அனுதாபத்தை சம்பாதித்திருப்பவர்   மதிமுக தலைவர் வைகோ தான்.  அவரே ஒரு (விகடன்) நேர்காணலில் கூறி இருப்பது போல, பல ஆயிரம் பொதுக்கூட்டங்களில் பேசிக்  கிடைத்த பெருமையை இந்த இரண்டு வார மௌனம் அவருக்கு பெற்றுக் கொடுத்திருக்கிறது. இதற்காக அவர் ஒரு தேர்தலை இழந்திருக்கிறார். ‘இந்தத் தேர்தலை வேண்டுமானால் இழந்திருக்கலாம்; ஆனால் தேர்தலுக்குப் பின்னும் இருப்போம்’ என்று பூடகமாகக் கூறி இருக்கிறார், வைகோ.

ஆனால்,  பலரும் இப்போது அனுதாபப்படுவது போல, அவர் மிகவும் தெளிவான தலைவராக இருக்கவில்லை என்பது, அவரது அரசியல் வாழ்வைக் கூர்ந்து கவனித்து வந்திருப்பவர்களுக்குத் தெரியும். தேர்தல் காலத்தில் செல்லாக்காசுகள் கூட ஆர்ப்பரிக்கும் நிலையில், கிழிந்த ரூபாய் நோட்டானாலும் வங்கியில் செலுத்துவதற்குரிய  தகுதி கொண்டிருப்பது மதிமுக என்பதில் ஐயமில்லை. அதனால் தான் அன்புச் சகோதரி முதற்கொண்டு தானைத்தலைவர் வரை பலரும் வைகோவுக்கு மடல் எழுதி இருக்கிறார்கள். பிறருக்கு மடல் எழுத வேண்டிய நிலையில் இருந்த வைகோவுக்கு இந்நிலை ஏற்பட்டது ஏன் என்று பார்ப்பதும் அவசியம்.

‘வை.கோபால்சாமி’ என்ற பெயர் திமுக தொண்டர்களின் உள்ளங்களில் உற்சாகத்தை எழுப்பிய காலம் இருந்தது. அண்ணாதுரை, கருணாநிதி படங்களுடன் வை.கோபால்சாமி படத்தையும் அச்சிட்டு சுவரொட்டி ஒட்டுவார்கள் 1980 – 1990  களில். சங்கத்தமிழ் முதல், உலக அரசியல் வரை சிம்மக் குரலில் ஆற்றொழுக்காகப் பேசும் கோபால்சாமி, திமுகவின் ஆஸ்தான பேச்சாளராக இருந்தார். அதனால் தான் அவரை மாநிலங்களவைக்கு அனுப்பி அழகு பார்த்தார் கருணாநிதி. அங்கும் தனது சிறப்பான செயல்பாட்டால் (18 ஆண்டுகள்) திமுகவின் முன்னணி தாரகையாக மிளிர்ந்த கோபால்சாமி, கருணாநிதிக்கே போட்டியாளராக உருவெடுக்கத் துவங்கினார்.

தனது தொண்டனின் வளர்ச்சி தன்னை விடவும் அதிகரிப்பது கண்டு அதிர்ந்த கருணாநிதி, தனது மகன்களை விஞ்சி கோபால்சாமி வளர்வது நல்லதல்ல என்று உணர்ந்தார். அதன் விளைவாக ‘கட்டம் கட்டும்’ திட்டங்கள் அரங்கேறின. அதன் விளைவாக கோவையில் நடந்த திமுக மாநாட்டில் அரங்கம் தீக்கிரையானது. (அதற்கான பழி அப்பாவி பாஜக தொண்டர் மீது போடப்பட்டது!) அடுத்த ஆண்டே, தன்னைக் கொல்ல கோபால்சாமி முயற்சிப்பதாக அபாண்டக் குற்றச்சாட்டை சுமத்தினார் கலைஞர்.

இந்தப் புகாரைப் பொறுக்காத அடிமட்ட திமுக தொண்டர்கள் கோபால்சாமி பின்னால் அணி திரண்டார்கள். கோபால்சாமியை நீக்க முயற்சிக்கும் தலைமைக்கு எதிர்ப்பு தெரிவித்து 5  திமுக தொண்டர்கள் தீக்குளித்து மடிந்தார்கள் (1993, அக்டோபர்). அதன் விளைவாக மயானத்தில் உதித்தது மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்.

திமுக.விலிருந்து எம்ஜிஆர் வெளியேறியபோதுகூட உடையாத கழகம், கோபால்சாமி வெளியேற்றப்பட்டபோது இரண்டாக உடைந்தது. கோபால்சாமிக்கு அநீதி இழைக்கப்பட்டதாக உணர்ந்தவர்கள் அவருடன் வெளியேறினார்கள். 9  மாவட்டச் செயலாளர்களும், 400 க்கு   மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களும் கோபால்சாமியுடன் சென்றார்கள். அப்போது அதிமுக ஆட்சி ஊழலின் உச்சகட்டத்தில் இருந்தது. அதனை எதிர்த்து, குமரியிலிருந்து சென்னை வரை 1,500  கிமீ தூர நடைப்பயணத்தை  துவங்கினார்; 51 நாட்கள் நடந்த அந்த பாத யாத்திரையில் ஜெயலலிதா ஆட்சியின் அத்துமீறல்களை விளக்கி மாநிலத்தில் புதிய விழிப்புணர்வை  உருவாக்கினார் கோபால்சாமி. அப்போது கோபால்சாமிக்கு  கூடிய கூட்டமும் மக்கள் ஆதரவும்  ஆச்சரியப்படத் தக்கதாக இருந்தது.

ஆனால், அந்த விழிப்புணர்வை அரசியல் அறுவடை செய்வதற்கான தேர்தல் (1996) வந்தபோது, திமுக- தமாகா கூட்டணி உதயமும் அதற்கு கிடைத்த ‘பாட்ஷா’ ரஜினிகாந்தின் வாய்சும் கோபால்சாமியின் கனவில் மண் அள்ளிப்போட்டன. அவரது பிரசாரம் அவருக்குப்  பயன்படவில்லை. மார்க்சிஸ்ட், ஜனதாதளம்  உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி கண்ட  மதிமுக  எந்தத் தொகுதியிலும் வெல்லவில்லை; ஆனால், கருணாநிதி முதல்வர் ஆனார். மத்தியிலும் திமுக அங்கம் வகித்த ஐக்கிய முன்னணி ஆட்சியில் அமர்ந்தது.

ஆட்சிக்கு வந்தவுடன் மதிமுகவை உடைக்கும் முயற்சியில் தானைத்தலைவர் ஈடுபட்டார். வேறு வழியின்றி, எதிரிக்கு எதிரி நண்பன் என்ற முறையில், ஜெயலலிதாவுடன் கரம் கோர்த்தார் கோபால்சாமி. அப்போதே அவரது நம்பகத்தன்மை குலையத் துவங்கியது.

ஐக்கிய முன்னணி அரசு கவிழ்ந்து நாடாளுமன்றத் தேர்தல் வந்தபோது (1998), அதிமுகவுடன் இணைந்து வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றது மதிமுக. அந்தத் தேர்தலில் சிவகாசி, பழனி, திண்டிவனம் தொகுதிகளில் வென்று தனது வெற்றிக் கணக்கை மதிமுக துவங்கியது. அப்போதும், பெரும் அரசியல் தவறை கோபால்சாமி செய்தார். தனக்கு கிடைத்த மத்திய அமைச்சர் வாய்ப்பை உதறி, அதை ‘சுயநலமின்மை’ என்று கூறிக் கொண்டார்.

எனினும் ஜெயலலிதா 13  மாதங்களில் வாஜ்பாய் ஆட்சியைக் கவிழ்த்தபோது, எதிரிக்கு எதிரி நண்பன் என்ற முறையில் (இது கருணாநிதியின் முறை!) திமுக, பாஜகவின் புதிய கூட்டாளி ஆனது. திமுக அரசை நீக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு வாஜ்பாய் அடிபணியாததே இந்தக் கூட்டணிக்கு வித்திட்டது. அப்போது மதிமுக எந்த நெருடலும் இல்லாமல் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடர்ந்தது. தமிழகத்தில் தே.ஜ.கூ தலைவராக கருணாநிதி இருந்தபோதும், கோபால்சாமி பழைய கதைகளை மறந்துவிட்டு கைகோர்த்தார். அப்போது மீண்டும் அவரது நம்பகத்தன்மை குறைந்தது. எனினும் அத்தேர்தலில் சிவகாசி, திண்டிவனம், பொள்ளாச்சி, திருச்செங்கோடு தொகுதிகளில் வென்று இரு அமைச்சர் பதவிகளைப் பெற்றது மதிமுக (1999).

வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது மிகவும் மரியாதைக்குரிய கூட்டணித் தலைவராக நடத்தப்பட்டார் கோபால்சாமி. அப்போதுதான் அவரை ‘வைகோ’ என்று பெயர் மாற்றி அழைப்பது தொடங்கியது. இப்போதும், தான் அமைச்சர் ஆகாமல், மு.கண்ணப்பனை அமைச்சராக்கி, மீண்டும் தவறு செய்தார் வைகோ.

அடுத்து தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் (2001) வந்தது. அப்போது பெரிய அண்ணன் மனப்பான்மையில் திமுக நடந்துகொள்வதாகக் கூறி திமுக கூட்டணியிலிருந்து கடைசி நேரத்தில் வெளியேறினார் வைகோ- அதுவும் வெறும் 3  தொகுதிகளுக்காக. அத்தேர்தலில் திமுக தோற்றது. தனித்து நின்ற (211 தொகுதிகள்)  மதிமுகவும் தோற்றது. இருவரது பொது எதிரியான ஜெயலலிதா வென்று முதல்வர் ஆனார்.

ஜெயலலிதா ஆட்சியின்போது (2002) பொடா சட்டத்தில்  கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டபோது தமிழகம் முழுவதும் வைகோ மீது பரிவுணர்ச்சி உருவானது. வெறும் மேடைப்பேச்சுக்காக பொடா சட்டத்தில் தேசவிரோதக் குற்றம் சாட்டி வைகோ கைது செய்யப்பட்டது ஜெயலலிதா மீது மக்களின் அதிருப்தி ஏற்படவும் காரணமானது. அதையடுத்து சிறைக்கே சென்று தனது முன்னாள் தொண்டனைக் கண்டு கண்ணீர் விட்டார் கருணாநிதி. வாழ்க்கையே ஒரு நாடக மேடை என்ற சேக்ஸ்பியரின் தத்துவம் நாட்டு மக்களுக்கு புரிந்தது.

அடுத்து வந்த நாடாளுமன்றத் தேர்தலில் (2004), முக்கியமான தருணத்தில் (பொடாவில் வைகோ கைது செய்யப்பட்டபோது வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது பாஜகவால்!) தன்னைக் கைவிட்ட பாஜகவையும், தன்னை சிறையிலிட்ட அதிமுகவையும் கைவிட்டு, முதல்முதலில் தன்மீது கொலைப்பழி சுமத்திய அதே திமுக தலைவருடன் இணைந்து, அன்னை சோனியா தலைமையிலான காங்கிரஸ் கூட்டணிக்கு தாவினார் வைகோ. அந்தத் தேர்தலில் சிவகாசி, பொள்ளாச்சி, வந்தவாசி, திருச்சி தொகுதிகளில் வென்றது மதிமுக. இப்போதும் கூட்டணி ஆட்சியில் இடம் பெறாமல் மீண்டும் தவறு செய்தார் வைகோ.

2006  ல் மீண்டும் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வந்தது. இப்போதும், திமுக தான் கோரிய 21  தொகுதிகளைத் தர மறுக்கிறது என்று குற்றம் சாட்டி கடைசி நேரத்தில் கூட்டணியிலிருந்து வெளியேறினார் வைகோ. பிறகு தன்னை சிறையில் அடைத்த அதே ஜெயலலிதாவுடன் (மறப்போம்; மன்னிப்போம்- இது அண்ணாவின் வழிமுறையாம்!) கூட்டு சேர்ந்து 35  தொகுதிகளைப் பெற்று மதிமுக போட்டியிட்டது. அவரது நேரம், அதிமுக தோற்று, திமுகவே வென்றது. மதிமுக 6 இடங்களில் மட்டும் வென்றது.  கருணாநிதி ஐந்தாவது முறையாக முதல்வர் ஆனார். ஆயினும் வைகோவின் புண்ணியத்தால் அவரது அரசு ‘மைனாரிட்டி’ அரசானது. தவிர மத்திய காங்கிரஸ் கூட்டணியிலிருந்தும் மதிமுக விலக நேர்ந்தது (2007).

இவ்வாறாக வைகோ மாவு விற்கப் போனால் காற்று அடிப்பதும், உப்பு விற்கப்போனால் மழை பொழிவதும் தொடர்நிகழ்வாகவே இருந்தது. சரியான நேரத்தில் தவறான முடிவு எடுப்பவர் என்ற பெயர் வைகோவுக்கு வந்து சேர்ந்தது.

கதை இத்துடன் முடியவில்லை. ஜெயலலிதா பொடா சட்டத்தை பயன்படுத்தியபோது எதிர்ப்பு தெரிவித்த-  முதலைக்கண்ணீர்  வடித்த – அதே கருணாநிதி, விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசிய குற்றத்திற்காக,  சட்ட  விரோத  நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் வைகோவையும் அவரது கட்சி அவைத்தலைவர் மு.கண்ணப்பனையும் கைது செய்ய ஏற்பாடு செய்தார் (23.10.2008). முன்பு வைகோவை பொடாவில் கைது செய்த ஜெயலலிதா, இதை எதிர்த்து தான் புதுமை. உலகம் ஓர் உருண்டை என்று சும்மாவா சொன்னார்கள்?

ஆயினும் ஜெயலலிதா போல் அல்லாமல், 15  நாளிலேயே பிணையில்  வைகோவையும்  மு.கண்ணப்பனையும் விடுவித்துவிட உத்தரவிட்டார் கருணாநிதி.  அதன் பலன் விரைவில் தெரிந்தது. இனிமேல் வைகோவுடன் இருப்பதில் பலனில்லை என்று உணர்ந்த கருணாநிதியின் முன்னாள் காரோட்டியும் வைகோவின் கழகத் தேரோட்டியுமான கண்ணப்பன், தாயன்புடன் அரவணைத்த அறிவாலயத்திற்கே சென்றுவிட்டார். அடுத்து செஞ்சி ராமச்சந்திரன், எல்.கணேசன், கே.எஸ்.ராதாகிருஷ்ணன்  போன்றவர்களும் விலக, மதிமுக கூடாரம் காலியாகத் துவங்கியது. இதற்கு கருணாநிதி வீசிய வலை தான் காரணம் என்றாலும், கட்சிக் கட்டுப்பாட்டை காக்க முடியாத வைகோ மீது தான் பழி விழுந்தது.

அடுத்து, இலங்கையில் தமிழினம் வேட்டையாடப்பட்ட சூழலில் (2009) நாடாளுமன்றத் தேர்தல் வந்தது.  இதில், பல்வேறு அவமானங்களைத்  தாங்கிக்கொண்டு   (அதை இப்போதுதான் வெளியே கூறுகிறார் வைகோ)  அதிமுக கூட்டணியில் இடம்பெற்று, கிடைத்த 4  இடங்களில் போட்டியிட்ட மதிமுக ஒரு இடத்தில் மட்டும் (ஈரோடு) வென்றது. அவர் சார்ந்த அணி மீண்டும் தோற்றது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சி தொடர்ந்தது. மாநிலத்திலோ கருணாநிதியின் ஆட்சி. உடன் இருப்பவரோ, தன்னை சிறிதும் மதிக்காத அதிமுக தலைவி. இதை விட ஒரு அரசியல் தலைவருக்கு வேறென்ன நெருக்கடி  ஏற்பட முடியும்?

இப்போது தமிழகத்  தேர்தல் களத்தில் தேமுதிக இருக்கும் நிலையில் இருந்திருக்க வேண்டியவர் வைகோ. அவரது தவறான முடிவுகளே அவரது வீழ்ச்சிக்கு வழிகோலின.   1993  ல் கட்சி துவங்கி பல தோல்விகளையும் சில வெற்றிகளையும் ஈட்டிய வைகோவை, 2004  ல் கட்சி துவங்கிய விஜயகாந்த்துடன் இணைவைத்துப் பேசுவதே தவறு. ஆனால் காலம் இரக்கம் இல்லாதது.

வைகோவின் உணர்ச்சிவசப்படும் தன்மையும், இலங்கைத் தமிழர்கள் மீதான அதீத பாசமும், விடுதலைப்புலிகளுடனான நேசமும், எளிதில் பாசத்தாலோ வேஷத்தாலோ   விலைபோய் விடும்  தன்மையுமே அவரை இந்நிலைக்கு ஆளாக்கி இருக்கின்றன.

இப்போதும் கருணாநிதி, ஜெயலலிதாவுக்கு அடுத்தபடியாக எண்ணப்படும் தலைவர் வைகோ தான், சந்தேகமில்லை. அதுவே அவருக்கு அவ்வப்போது சுருக்குக் கயிறாகி விடுகிறது. கருணாநிதியாலும் ஜெயலலிதாவாலும் போட்டியாளராகக் கருதப்படுவதே வைகோவின் பலமும்  பலவீனமுமாக உள்ளது.

இப்போதும்கூட, தொகுதிச்  சண்டையால்தான் சுயமரியாதை உந்த, அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறி இருக்கிறார் மதிமுக பொதுச்செயலாளர். நல்லவேளையாக திமுக பக்கம் சாராமல், களத்திலிருந்து நாகரிகமாக விலகி இருக்கிறார் வைகோ. அந்தமட்டிலும் அவரது தவறான முடிவு பாதியில் நின்றிருக்கிறது.

ஒரு தேர்ந்த பேச்சாளர், முதிர்ந்த அரசியல்வாதி, ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லாதவர் இந்தத் தேர்தலில் களம் காணாதது, தமிழகத்திற்கு, குறிப்பாக அதிமுக கூட்டணிக்கு இழப்பே. இதனால் மதிமுக தொண்டர்கள் சிலர் அணி மாறக்கூடும். 18  ஆண்டுகள் டில்லியில் கோலோச்சிய வைகோவுக்கு அடுத்த 18  ஆண்டுகள் ஏற்றமும்  இறக்கமுமான பரமபத அரசியல் விளையாட்டாக  மாறியது விதியின் வலிமை. இப்போது அவர் காக்கும் அமைதி, எதிர்காலத்தில் இரு கழகங்களும் தொண்டர்களை ஏமாற்றும்போது பயன்படக் கூடும். ஆனால் அவரால் அதுவரை அமைதி காக்க முடியுமா?

***
‘அந்தரடிசான் சாகிப்’களின் கதையில் முதலில் வருபவர் வைகோ. அவர் கதையே கட்டுரையின் பெரும்பங்கை விழுங்கிவிட்டது. நியாயமாகப் பார்க்கப் போனால் இதில் முதலாமவராக இருந்திருக்க வேண்டியவர் பாமக தலைவர் மருத்துவர் அய்யா ராமதாஸ் தான். ஆனால், வெற்றி பெற்றவர்களே சரித்திரத்தை எழுதுவதால், தோல்வியின் நாயகனான வைகோ, ‘அந்தரடிசான் சாஹிப்’களில் முதன்மையானவராக மாறி இருக்கிறார்.

ஒவ்வொரு தேர்தலிலும் புதிய கோட்பாட்டைக் கூறி அன்பு சகோதரியுடனும் திராவிடச் சூரியனுடனும் எந்த வெட்கமும் இன்றி குலாவ ராமதாசால் முடிகிறது. அதற்கு அவரது ஜாதிப் பின்புலமும் உதவுகிறது. இவரால் வாஜ்பாயையும் சோனியாவையும் மாறி மாறி ஆதரிக்க முடிகிறது; அதற்கான அரசியல் விளக்கத்தை சிரிக்காமல் சொல்லவும் முடிகிறது. அவரைத் தான் நாம் அரசியல் ராசதந்திரி என்கிறோம்.

தாழ்த்தப்பட்ட மக்களை பகடையாக்கி கட்சி நடத்தும் திருமாவளவன், கிருஷ்ணசாமி ஆகியோரும் பல்டிகளில் தேர்ந்தவர்களே. தமிழகத்திலுள்ள  ஒவ்வொரு கட்சியும் இரு கழகங்களுடன் கூடியும் ஊடியும் தமிழகம் காத்தவை தான்- காங்கிரஸ், பாஜக உள்பட. இவர்களை நேரத்திற்குத் தகுந்தாற்போல சீட்டு கலைத்து ஆட்டம் ஆடிய திமுக, அதிமுக கட்சிகளின் ‘அந்தர் பல்டி’ சாகசங்களை தனியே தான் எழுத வேண்டும். ஆனால், அவை பெரிய கட்சிகளின் தேர்தல் தந்திரமாக விளக்கப்படுகின்றன.

‘யாருக்கும் வெட்கமில்லை’ என்ற தலைப்பில் ‘துக்ளக்’ சோ எழுதிய நாடகம் தான் நினைவில் வருகிறது. அரசியலில் நிலைக்கவும் வெற்றிகளைக் குவிக்கவும் கொள்கையற்ற கூட்டணிகளில் கும்மாளமிடும் தமிழக அரசியல் கட்சிகளின் இழிநிலையை, மதிமுகவின்  வெளியேற்றம் தற்போது அம்பலப்படுத்தி இருக்கிறது.

அந்த வகையில் நமது நன்றிக்குரியவராக மாறி இருக்கிறார் வைகோ. தாவும் பாவங்களில் அவர் முற்காலத்தில் ஈடுபட்டிருந்தாலும், இப்போது அவர் காக்கும் அமைதி அவரது கௌரவத்தை நிலை நிறுத்தி இருக்கிறது. தேர்தலுக்குப் பின் கூட்டணிகளில் நடக்கவுள்ள இசை நாற்காலி விளையாட்டில் மதிமுக கண்டிப்பாக இடம்பெறாது என்பதை இப்போதே உறுதியாக நம்பி மகிழலாம்.

‘தனித்திரு; பசித்திரு; விழித்திரு’ என்ற வள்ளலாரின் அறிவுரை வைகோவுக்கு பயன்படலாம். தன்னைப் போலவே தனித்து விடப்பட்டிருக்கும் பாஜகவுக்கு வைகோ ஆதரவு தருவதும் அவரது எதிர்காலத்திற்கு உதவக் கூடும்.

குமரி மாவட்டத்தில் மலர்கிறது தாமரை

தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவது என்ற பாரதிய ஜனதா கட்சியின் முடிவு நிர்பந்தம் காரணமாக எடுக்கப்பட்டது என்றாலும், அக்கட்சிக்கு நல்ல பாதையைக் காட்டி இருக்கிறது என்பதை தேர்தல் களத்தில் உணர முடிகிறது. இதே பாதையில் 1993  முதல் வைகோ பயணித்திருந்தால் இன்று அவர் தமிழகத்தின் தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக  மாறியிருப்பார்.

இத்தேர்தல் பாஜக தொண்டர்களிடையே புத்தெழுச்சியை ஏற்படுத்தி உள்ளதை நேரில் காண முடிகிறது. தோல்வி உறுதி என்று தெரிந்தாலும் தங்களுக்கு கிடைக்கும் வாக்குகள் எவ்வளவு என்று பார்த்துவிடும் முடிவுடன் பல தொகுதிகளில் வீறுடன் பாஜக தொண்டர்கள் பணி புரிகின்றனர். வாஜ்பாய், அத்வானி, மோடி ஆகியோரின் பெயர்கள் பாஜக பிரசாரத்தில் உரக்கவே ஒலிக்கின்றன.

வைகோ அதிமுக அணியிலிருந்து வெளியேறியதன் விளைவாக, ஜெயலலிதாவின் நம்பகத்தன்மை குலைந்திருப்பது புலப்படுகிறது. இதன் காரணமாக கருணாநிதிக்கு எதிராக அதிமுகவை ஆதரிக்கத் திட்டமிட்டிருந்த பலர் பாஜக பக்கம் பார்க்கத் துவங்கி இருப்பதும் புலப்படுகிறது. அத்வானி, மோடி, சுஷ்மா ஆகியோர் தமிழகத்தில் பிரசாரம் செய்தால் இந்த வாக்குகளின் எண்ணிக்கை கூடும்.

pon_radhakrishnanகுறிப்பாக, குமரி மாவட்டத்தில் பிற கட்சிகளை விட களப்பணியிலும் பிரசாரத்திலும் பாஜக முன்னணி வகிக்கிறது. அங்கு கட்சியின் மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணனே களம் இறங்கியிருப்பது தொண்டர்களுக்கு உத்வேகம் அளித்திருக்கிறது. இத்தேர்தலில், குமரியில் நாகர்கோவில், பத்மநாபபுரம், குளச்சல், கிள்ளியூர்  ஆகிய 4  தொகுதிகளில் பாஜக வெல்லும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் தளி, ஓசூர் தொகுதிகளிலும் தாமரை  மலர வாய்ப்புள்ளது. கோவையிலும் கூட மேட்டுப்பாளையம், கோவை வடக்கு, கோவை தெற்கு தொகுதிகளில் தீவிரமாக முயன்றால் நல்ல போட்டியை ஏற்படுத்த முடியும்.

16 Replies to “தேர்தல் களம்: ‘அந்தரடிசான் சாகிப்’களின் அற்புதக் கதை”

 1. ஜெயிக்குமா தோற்குமா என்ற் பிரச்சினை இல்லை

  என் வோட்டு பா .ஜா .க விற்கு தான் .

 2. நல்ல வேளை வைகோ பாரதிய ஜனதாவை ஆதரிக்கவில்லை. அப்படி ஆதரித்திருந்தால், அவருடைய தரித்திரம் பாஜவை தொற்றி கிடைக்க வேண்டிய வாக்குகள் கூட கிடைக்காமல் போகக் கூடும்.

 3. Pingback: Indli.com
 4. VAI KO IS UNLUCKY PERSON AND HENCE JJ GOT RID OF HIM FROM THE ALLIANCE AS SHE IS VERY SENTIMENTAL IN HER THOUGHT. IT IS BETTER THAT BJP STANDS ALONE BUT THEY CAN GET MORE VOTES IF NOT WINNING. HWR THEY NEED TO GIVE LOT OF PUBLICITY AND NEED TO REACH ALL WALKS OF PEOPLE. THEY MUST TELL PEOPLE TO VOTE TO MAKE THEM STRONGER SO THAT THEY CAN GROW IN T N STATE IF NOT WINNING OR CAPTURING GOVERNMENT. I FEEL BJP VOTE SHARE WILL INCREASE PROVIDED THEY WORK HARD AND USE LOT OF PUBLICITY STRATEGY. SIMILARLY ANOTHER UNLUCKY PERSON THIRUNAVUKARASAR LEFT BJP AS HE WAS STICKING FOR MP POST WHICH HE GOT THROUGH NOMINATION FROM GUJARATH IN RAJAYASABHA.

  SO IT IS SURE BJP VOTE SHARE WILL BE INCREASED AND EVERY ONE MUST TELL THEIR FRIENDS AND RELATIVES TO VOTE FOR BJP TO MAKE THEM GROW IN T N.

 5. “‘தனித்திரு; பசித்திரு; விழித்திரு’ என்ற வள்ளலாரின் அறிவுரை வைகோவுக்கு பயன்படலாம்”

  இது வள்ளலாரின் அறிவுரை அல்ல. சுவாமி விவேகானந்தா அவர்களின் கூற்று என்பது என் தாழ்மையான கருத்து

  நன்றி

 6. நான் சட்ட மன்ற தேர்தலில் மதிமுகவுக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கும் மட்டுமே வாக்களித்து இருக்கின்றேன். 🙂

 7. வணக்கம்,]

  வை கோ அவர்களது முடிவு பல சமயங்களில் கோமாளித்தனமாகி விடுகிறது, இதன் காரணமாகவே சிலர் அவரை அரசியல் ஜோக்கர் என்றே பெயர் தந்து விட்டனர், வை கோ இன்னும் தெளிய வேண்டும்.

  பா ஜ க, முன்பு போல இல்லாது இப்போது பெரும் வளர்ச்சி கண்டு கொண்டுதான் உள்ளது தமிழகத்தில். இப்போது உள்ள இளைஞர்கள் பலரும் தனது வாக்கை பா ஜ க விற்கே அளிப்பது என்று தீர்மானித்து உள்ளனர். கோவையிலே சிறந்த வளர்ச்சி காண்கிறது பா ஜ க. தனித்து நின்றதே இப்போதைக்கு பா ஜ க வின் பலம். வெல்க வளர்க.

 8. மந்திரியாகி ஊழலில் ஈடுபட்டால் அது எப்படியும் வெளிச்சத்திற்கு வந்து விடும். தனது கைப்பிடிகளை மந்திரி ஆக்கினால் அவர்கள் வாயிலாக தேவையானதை வசூலித்துக் கொள்ளலாம். கெட்ட பெயரும் வராது. அப்படியே மாட்டிக்கி கொண்டாலும் கைத்தடிதான் மாட்டிக் கொள்வார். (தற்போது கருணாவின் கைத்தடி ஆ.ராஜா தில்லி திஹார் சிறையில் ஓய்வு எடுத்துவருவதைப் போன்று).தான் எப்போதும் உத்தமபுத்திரன் என்ற பெயருடன் உலா வரலாம். அந்த பாணியைத்தான் வைக்கோ கடைபிடித்தார். தனிக் கட்சி ஆரம்பித்த பிறகு பினாமிகள் பெயரில் சொத்துக்கள் ஏராளமாக சேர்ந்துள்ளது. இவரது கட்சியைச் சார்ந்த செஞ்சி ராமச்சந்திரன் அடித்துக் கொடுத்தது கொஞ்ச நஞ்சமல்ல. தேசப் பாதுகாப்பிர்க்கு அபாயம் விளைவிக்கக் கூடியவர் வைகோதான். இவரது புலிகள் தொடர்பு, கிறிஸ்துவ மிஷினரிகளின் தொடர்பு, நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வந்த போதே கள்ளத் தொனியில் யாழ்ப்பாணம் சென்று வந்தது இவரது கடந்த காலத்தைப் பார்த்தால் அவர் அரசியல் களத்தை விட்டே அகற்றப் படவேண்டியவர் என்பதில் சந்தேகமே இல்லை. அக்காரியத்தை இறைவனே ஜெ வாயிலாக செய்து முடித்துள்ளார். வைக்கோவின் வீழ்ச்சி தமிழகத்திற்கு நல்லது. தேசியத்திற்கு நல்லது.

 9. வை.கோ.வுடன் தி.மு.க.விலிருந்து வெளியேறிய பலரில் சிலர் மட்டும் தான் இப்போது அவருடன் இருக்கிறார்கள். மற்றவர்களின் பதவி அரிப்பு, பண அரிப்பு, அவர்களை மீண்டும் பழைய இடத்துக்கே அழைத்துச் சென்றுவிட்டது. இந்த நிலையில் அவரையோ, அவரோடு இருக்கும் மிகச் சிலரையோ குறைத்து மதிப்பிட முடியாது. ஆனால் அவர் எதிர்பார்க்கும் இருபத்தியோரு இடம் அவர் கட்சி பலத்துக்கு ஏற்றது தானா என்பதைப் பார்க்க வேண்டும். கூட்டணி பலத்தில் அவர்கள் வென்ற பிறகு அவர்களில் கணிசமானவர்கள் மீண்டும் கருணாநிதி பக்கம் போக மாட்டார்கள் என்ற உத்தரவாதம் இவரால் தர முடியுமா? கொடுத்த பன்னிரண்டு இடத்தில் இவரது நம்பிக்கைக்குப் பாத்திரமான சிலரை நிற்க வைத்து வெற்றி பெற்று அவர் கட்சியை பலப்படுத்தி இருக்க வேண்டும். வீம்பு சில நேரம் அழிவுப் பாதைக்குத்தான் இட்டுச் செல்லும். எதார்த்தம் புரியாமல் இப்போது வீணான விரோதத்தை வளர்த்துக் கொண்டு நட்புடன் பழகியவர்களோடு முட்டிக் கொள்ள நினைக்கிறார். நல்ல தலைவர் வை.கோ. ஆனால் அவரது வரட்டுப் பிடிவாதம் அவர் கட்சியை அழித்து விடும் அபாயம் இருக்கிறது என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும். இருக்கிறபடி இவர் இருந்திருந்தால் மத்தியில் இவருக்கு ஒரு நல்ல பதவி கூட கிடைத்திருக்கலாம். இப்போது எல்லாம் வீண்.

 10. சேக்கிழான் அவர்களுடைய கட்டுரையில் ஒரு விடயத்தை மறுக்கிறேன்.
  //வைகோவின் உணர்ச்சிவசப்படும் தன்மையும், இலங்கைத் தமிழர்கள் மீதான அதீத பாசமும் …//
  புலிகளிடம் மட்டுமே வைகோ அதீத பாசம் வைத்திருந்தார். விடுதலைப்புலிகளிடம் இருந்து அவர் பெற்று கொண்ட பணத்திற்க்கு மிக விசுவாசமாக நடந்து கொண்டார். இன்று வெளிநாடுகளில் சொகுசு வாழ்க்கை வாழும் புலிகள் யாரும் வைகோ வைபற்றி குறை சொன்னது கிடையாது. அயல் நாட்டில் இருந்த ஒரு பயங்கரவாத இயக்கத்திற்க்கு ஆதரவாக இந்தியாவில்/ தமிழகத்தில் அரசியல் நடத்துவது யாருடைய நலனுக்காக?

 11. தமிழகத்தில் 20 தொகுதிகளில் சென்ற தேர்தலில் கணிசமான வாக்குகளை பாஜக பெற்றது. இந்த முறை அவற்றில் 10 தொகுதிகளில் வெற்றி பெற்றாலும் தமிழகத்தில் உள்ள அனைவரையும் நிமிர்ந்து உட்கார வைக்கும்.
  எல்லா தொகுதிகளிலும் 10 சதவீத வாக்குகளை பெற்று சட்டமன்றத்தில் உடகார்ந்தால் மாபெரும் சாதனை என்றே கருதுவோம்

  பாஜகவுக்கு வாக்களிப்போம். எதிர்கால தமிழக்த்துக்கு அச்சாணி அமைப்போம்.

 12. BJP has never faught for the public issues. It comes to picture only when brahmins are suffering.

  Till now BJP did’t try to wipe out the above lines. When it is coming out to fight for ordinary people also, then only it will be treated as a political party. Until then it must be treated as Brahmins Janata Party.

 13. வை கோ அவர்கள் இதுவரை என்ன செய்திருந்தாலும் இந்த தேர்தலில் வாயை மூடிக்கொண்டிருப்பது அவருக்கு எள்ளளவும் உபயோகமில்லை. வை கோவின் கட்சியை முழுவதும் கரைத்த கருணா மற்றும் வைகோவுக்கு மரியாதை தர தவறிய ஜெயா இருவரையும் விட்டு விட்டு, பாஜக வுக்கு ஆதரவு கொடுத்தால் அவருக்கும், அவருடைய கட்சிக்கும் மிக நல்லது. இனியும் தாமதிக்காமல் இதையாவது செய்தால் , அவர் கட்சி அடுத்த தேர்தலிலும் இருக்கும். இல்லை என்றால் காணாமல் போய்விடும்.

 14. ” திமுக.விலிருந்து எம்ஜிஆர் வெளியேறியபோதுகூட உடையாத கழகம், கோபால்சாமி வெளியேற்றப்பட்டபோது இரண்டாக உடைந்தது. “-

  மேலே சொல்லிய இந்த கட்டுரை வரிகளை அலசிப் பார்க்கிறேன் . எம் ஜி ஆர் திமுகவில் இருந்து வெளியேற்றப் பட்டபோது, 90 % திமுக அவருடன் போய்விட்டது. ஆனால் கருணாநிதி அவர்கள் அவருடைய அகட விகட சாமர்த்தியத்தால் எம் எல் ஏக்கள் , மந்திரிகள், மாவட்ட செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் ஆகியோரை வளைத்து வைத்திருந்தார். அதனால் தான் 1976-ஜனவரி 31- அன்று ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்படும் வரை முதல்வராக தாக்குப் பிடிக்க முடிந்தது.

  10-10-1972 அன்று எம் ஜி ஆர் திமுகவிலிருந்து நீக்கப்பட்ட பிறகு, கருணாநிதி பயந்து வாழ வேண்டிய நிலையில் தான் இருந்தார். திண்டுக்கல், பாண்டி, கோவை என்று எங்கெல்லாம் இடைத்தேர்தல் நடந்ததோ அங்கெல்லாம் எம் ஜி ஆர் வென்றார், காமராஜருக்கு இரண்டாம் இடம் கிடைத்தது, திமுக 3- ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டது. எனவே, எம் ஜி ஆர் திமுகவின் அஸ்திவாரத்தையே அரித்து விட்டார் என்பதே சரியாகும். ஆனால் வைகோ விலக்கப்பட்ட போது, மாவட்ட செயலாளர்களில் சிலர் உணர்ச்சி வசப்பட்டு விலகினார்களே தவிர, திமுக என்ற கட்சி அமைப்பு , கருணாநிதி அவர்களுடன் தான் நிரந்தரமாக தங்கி விட்டது. எனவே எம் ஜி ஆர் பாதிப்பால் தான் திமுக வீழ்ந்தது. வைகோ விளக்கம் திமுகவுக்கு அதிக பாதிப்பை தரவில்லை.

 15. வை.கோ. அவர்களின் கடந்த கால அரசியல் நடவடிக்கைகளால் அதிகம் பலன் பெற்றது கருணாநிதி தான். ஆனால் அதனால் வை.கோ.வுக்கோ, நாட்டுக்கோ எந்தப் பயனும் இல்லை. இன்றைய கால கட்டத்தில் அவர் செய்ய வேண்டியது பா.ஜ.க.வின் வெற்றிக்கு உழைத்து, அடுத்த தேர்தலில் மோதி பிரதமர் ஆனால் மத்திய அரசில் ஒரு பொறுப்புள்ள பதவியை வகித்து சிறப்பான முறையில் பனி ஆற்ற வேண்டும், மற்றவர்களுக்கு முன்மாதிரியாக விளங்க வேண்டும். காலம் கனியுமா? காத்திருப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *