தொடர்ச்சி..
கோயிலொழுகு ஏழாம் பாகம் வெளியீட்டு விழாவில் நான் ஆற்றிய உரையின் சில முக்கியமான கருத்துக்களை, நூல் பற்றிய ஒரு சிறிய அறிமுகமாக இங்கு தருகிறேன்.
கோயிலொழுகு என்ற பெயரில் பரம்பரை பரம்பரையாக ஸ்ரீரங்கம் கோயிலில் தொடர்ச்சியாக எழுதப் பட்டு, பாதுகாக்கபட்டு வரும் சுவடிகளின் அடிப்படையிலான வரலாற்று நூலைத் தான் கிருஷ்ணமாசாரியர் சுவாமி அவர்கள் எழுத ஆரம்பித்திருந்திருக்கிறார். அது முதல் இரண்டு பாகங்களில் முடிந்து விட்டது. பிறகு இக்கோயில் தொடர்பான ஏராளமான மற்ற விஷயங்களையும் சேர்த்து எழுதி, அது இப்போதுள்ள பிரம்மாண்டமான வடிவத்தை அடைந்திருக்கிறது. திருவரங்கம் கோயிலுடன் தொடர்புடைய அனைத்து வைஷ்ணவ ஆசாரியார்களின் வரலாறுகள், ஆசாரியர்களின் திருவரங்க அனுபவம், மன்னர்கள் மற்றும் நிர்வாகிகள், கோயிலில் நடைபெற்ற உத்சவங்கள், அவற்றில் ஏற்பட்ட மாற்றங்கள், கோயில் நிர்வாகம் தொடர்பான ஏராளமான செய்திகள், போர்கள், நீதிமன்ற வழக்குகள், கல்வெட்டுகள் சொல்லும் செய்திகள், ஸ்ரீரங்கம் தொடர்பான பல சம்ஸ்கிருத, தமிழ் பாசுரங்களுக்கான விளக்கங்கள், கோயில் கட்டிடக் கலை, சிற்ப சித்திரக் கலைகள் – இப்படி பல விஷயங்கள் சேர்ந்து இது ஒரு என்சைக்ளோபீடியாவாக, ஸ்ரீரங்கம் பற்றிய ஒரு முழு கலைக்களஞ்சியமாக ஆகிவிட்டிருக்கிறது. ஆசிரியரே தனது உரையில் சொன்னது போல, புத்தகத்தின் அனைத்து பாகங்களையும் முழுதாகப் படிப்பது பொது வாசகர்களுக்கு அசாத்தியமான விஷயம். அவரவர்கள் தங்களுக்கு ஆர்வமுள்ள விஷயங்களையே தேடிப் படிக்கக் கூடும்.
History என்றால் வரலாறு. Historiography என்பதை வரலாற்று வரைவியல் என்று சொல்லலாம். வரலாறு எப்படி, எந்தெந்த பார்வைகளில், எந்தெந்த விஷயஙக்ளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதப் படுறது என்பதைப் பற்றிப் புரிந்து கொள்வது வரலாற்று வரைவியலின் ஒரு அம்சமாகும். உதாரணமாக, முன்பு வரலாறு என்றால் அரச வம்சங்கள், அது தொடர்பான விவகாரங்கள், போர்கள் ஆகியவற்றைப் பற்றியே மையமாகப் பேசப் பட்டது. ஆனால் தற்போது அதை விட முக்கியமாக, பல்வேறு விதமான மக்களும் ஒவ்வொரு காலகட்டத்தில் எப்படி வாழ்ந்தார்கள், அவர்களது பழக்க வழக்கங்கள் எப்படியிருந்தன, வாணிகம் எப்படியிருந்தது, பெண்கள் நிலை, கல்வி, கலைகள் போன்ற பல விஷயங்களையும் பற்றிய சமூக வரலாறு (social history) முக்கியத் துவம் வாய்ந்ததாகக் கருதப் படுகிறது. இந்த அடிப்படையில் கோயிலொழுகு ஒரு முக்கியமான வரலாற்று வரைவியல் ஆவணமாகவும் சிறப்பிடம் பெறுகிறது.
கோயிலொழுகு ஏழாம் பாகம் முதல் பகுதியிலிருந்து ஒரு உதாரணம். தேவர்கள் எல்லாரும் பார்த்திருக்க, நாணமின்றி பெரியபிராட்டி பெருமாளின் திருமார்பின் மேலேறிக் கொண்டாளே, அது சரியா என்று ஒரு சீடர் கேட்க, ஆசாரியார் விளக்கம் சொல்கிறார் – ”அந்தப்புரத்திலே கூனன், பேடு, கிழவன் போன்றோர் இருக்கையிலே, மகாராணி நீராடப் போகும் சமயம், அவர்களும் தாதிமார்களுடன் சேர்ந்து சேவகம் செய்வார்களாகையாலே, மகாராணிக்கு நாணம் ஏற்படுமோ?அது போல, சகல தேவகணங்களும் எம்பெருமானுடைய பரிசாரகர்கள் போன்று ஆகையினாலே, பெரிய பிராட்டி அனைவரும் பார்த்திருக்க பெருமாள் திருமார்பில் ஏறி அமர்ந்தாள்” என்கிறார். இதன்மூலம் அந்தக் காலகட்டத்திய அந்தப்புர நடைமுறை பற்றியும், ஆசாரியர்கள் சம்பாஷணைகளின் போது எப்படி எந்தவிதமான மனத்தடைகளும் இன்றி உரையாடினார்கள் என்பதும் தெரியவருகிறது.
இலக்கியம், தத்துவம், வரலாறு இவை மூன்றும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. ஸ்ரீவைஷ்ணவ சித்தாந்தத்தையே எடுத்துக் கொண்டால், முதலில் ஆழ்வார்களின் பாசுரங்கள். அவற்றை நாதமுனிகள் தொகுக்கிறார். பிறகு ஸ்ரீராமானுஜர் ஆழ்வார்களின் பக்தி அனுபவத்தை மையப் பொருளாக வைத்து வேதாந்த நூல்களுக்கு பாஷ்யம் எழுதுகிறார். பிறகு வருகிற ஆச்சாரியார்கள் இவை இரண்டையும் ஒன்றிணைத்து அற்புதமான வியாக்கியனங்களையும், பல்வேறு தனி நூல்களையும் அருளிச் செய்கிறார்கள். திருவாய்மொழி ஒன்றுக்கே பல்வேறு வியாக்கியானங்கள் தொடர்ந்து எழுதப் பட்டு வந்திருக்கின்றன. தத்துவத்தை கட்டமைக்கும் போது உருவாகும் முரண்பாடுகளையும், கருத்து வேற்றுமைகளையும் ஒவ்வொரு கட்டத்திலும் சமன்செய்து தெளிவு ஏற்படுத்துவதற்காகவே ஒரே நூலுக்கு இத்தனை உரைகள் எழுந்திருக்கலாம் என்று நூலாசிரியரிடம் கூறினேன். தனக்கும் அது ஏற்புடையதே என்று அவர் சொன்னார். இப்படி பல காலகட்டங்களின் ஊடாக ஸ்ரீவைஷ்ணவம் ஒரு உறுதியான கட்டமைப்பு மிக்க சித்தாந்தமாக பரிணாம வளர்ச்சி பெறுவது பற்றிய ஒரு அழகிய சித்திரமும் கோயிலொழுகில் நமக்குக் கிடைக்கிறது.
இன்னொரு விஷயம் hagiography. பிரபலான பெரும் ஆளுமைகளின் வரலாற்றுக் குறிப்புகளை எழுதுவது பற்றிய துறை இது. ஆங்கிலத்தில் இந்தச் சொல்லைப் பயன்படுத்தும்போது,அந்த குறிப்பிட்ட ஆளுமைகள் பற்றிப் போற்றிப் புகழ்ந்து எழுதப் பட்ட மிகைச்சித்திரங்களையே அவை பெரும்பாலும் குறிக்கின்றன. அரசவைக் கவிஞர்களின் பாடல்கள், பாபர் நாமா, அயினி அக்பரி போன்ற அரசவை நாட்குறிப்புக்கள் ஆகியவையும் இதில் வரும். இந்தக் கண்ணோட்டத்தில் கோயிலொழுகை நாம் பார்க்கும்போது, ஒரு விஷயம் தென்படுகிறது. இது அடிப்படையில் மக்களால் எழுதப் பட்ட ஒரு உண்மையான மக்கள் வரலாறு. ஒரு அரசு அதிகாரத்தின், ஆட்சியின் ஆவணம் அல்ல இது. மாறாக, பல்வேறுபட்ட குரல்களின் தொகுப்பு என்று இதைக் குறிப்பிடுவது சரியாக இருக்கும். மன்னர்கள் மற்றும் நிர்வாகிகளைப் பற்றிய புகழுரைகள் மட்டுமல்ல, கண்டனங்களும், எதிர்ப்புக் குரல்களும், விமர்சனங்களும் கூட இதில் பதிவு செய்யப் பட்டுள்ளன. ஒரு கொடுங்கோல் மன்னன் காலத்தில் (கோனேரி ராஜன்??) அவனை நல்வழிப்படுத்தும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைய, தங்கள் மரணமாவது அவனைத் திருத்தக் கூடும் என்ற எண்ணத்தில் இரண்டு ஜீயர்கள் கோபுரத்திலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டார்கள் என்பது பதிவு செய்யப் பட்டுள்ளது. அந்தக் கோபுர வாசலில் அவர்களது உருவங்களும் சிறிய அளவில் செதுக்கப் பட்டிருக்கின்றன. கொடுங்கோல் மன்னனை எதிர்த்து மாண்டவர்களின் நினைவுச் சின்னம் இங்கே பதிவாகியிருக்கிறது, எந்தப் புரட்சி கோஷங்களும் இல்லாமல்.
மாபெரும் கல்விக் கூடங்களும், ஆய்வு நிறுவனங்களும் சேர்ந்து செய்ய வேண்டிய பணியை கிருஷ்ணமாசாரியார் அவர்கள் தனியொருவராக நின்று செய்திருக்கிறார். கண்ணன் தன் சிறுவிரலால் மலையைத் தூக்கியற்கொப்பான காரியம். தனது ஐம்பது வயது வரை இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பணியாற்றி விட்டு, ஓய்வுவாங்கிக் கொண்டு இந்தக் கோயிலைப் பற்றி ஆய்வு செய்வதற்காகவே ஸ்ரீரங்கத்தில் வாசம் செய்யத் தொடங்கியிருக்கிறார். இந்த மாபெரும் பணிக்குத் தன்னை தயார் செய்து கொள்வதற்காகவே அதற்கு முன்பு தமிழ், சமூகவியல், பொது நிர்வாகம் ஆகியவற்றில் தொலைவழிக் கல்வி மூலம் படித்து முதுகலைப் பட்டம் பெற்றிருக்கிறார். கல்வெட்டுகளைப் படித்து, பொருளறியக் கற்றுக் கொண்டிருக்கிறார். சம்பிரதாயமான பார்வையுடனேயே வைஷ்ணவ நூல்களை நன்கு கற்றறிந்தவர். ஆயினும், இந்த நூலை பெருமளவுக்கு அறிவியல் பூர்வமாகவும், ஆதாரங்களின் அடிப்படையிலும், தெளிவான் வரலாற்று உணர்வுடனும் எழுதியிருக்கிறார். இது மிகவும் பாராட்டுக்குரிய விஷயம். வேறு துறைகளில் பணிபுரிந்தாலும் வரலாறு, பண்பாட்டு ஆய்வுகள் ஆகிய துறைகளில் ஆர்வமுடையவர்கள் தங்கள் இடையறாத உழைப்பு மூலம் பல விஷயங்களைக் கற்றறிந்து செறிவான பங்களிப்புகளை நல்க முடியும் என்பதற்கு ஒரு முன்னுதாரணமாகவே அவர் திகழ்கிறார் என்று சொல்வேன்.
ஸ்ரீ கிருஷ்ணமாசாரியர் 18-3-2011 அன்று வெளியீட்டு விழாவில் உரையாற்றுகிறார். அமர்ந்திருப்பவர்கள் (இடமிருந்து வலமாக) டாக்டர் கல்யாணராமன் – சரஸ்வதி நதி ஆய்வு மையம், ஜி.பி.ஸ்ரீனிவாசன், பெரியநம்பி சுந்தரராஜாசாரியார் சுவாமி. மேலும், பழங்காசு ப.ஸ்ரீனிவாசன் (நாணயவியல் ஆய்வாளர்), இரும்பாநாடு பத்மநாபன் (வைணவ அறிஞர்), அரவிந்தன் நீலகண்டன், ஜடாயு ஆகியோரும் உரையாற்றினர்.
இது மிகவும் மகிழ்ச்சியளிக்கும் விஷயம். அதே நேரம் மிகவும் வருத்தமளிக்கும் விஷயமும் கூட. ஏனென்றால், இத்தகையதொரு பணியை உண்மையில் செய்ய வேண்டியவை நமது கல்வி அமைப்புகள், கலாசார அமைப்புகள். என்ன செய்துகொண்டிருக்கின்றன அவை? வரலாறும் கலையும் இலக்கியமும் பண்பாடும் கொட்டிக் கிடக்கும் ஒரு பொக்கிஷம் இந்தக் கோயில். இதே போன்று சிதம்பரம், மதுரை, காஞ்சி என்று பல கோயில்கள் தமிழகமெங்கும் உள்ளன. இவற்றை முறையாக ஆய்வு செய்து, ஆவணப் படுத்தி, மக்களைக் கவரும் வகையில் கோயில் சிறப்புகளை எடுத்துச் செல்வது தமிழ்நாட்டு அரசின், அதன் பல்கலைக் கழகங்களின், நிறுவனங்களின் கடமையாகும். இது போன்றதொரு கலைச் செல்வம் மேலை நாடுகளில் இருக்குமேயானால் கோயில் இயல் என்றொரு துறையே அங்கு உருவாகி, பல பல்கலைக் கழகங்களில் இதில் நிஜ ஆர்வமுடைய கணிசமான அளவு மாணவர்கள் பயிலும் நிலை இருக்கும். அப்படி இல்லாவிட்டாலும் கூட, இங்கே இருக்கும் கலைக் கல்வித் துறைகளாவது (humanities departments) இப்பணிகளைச் செய்யலாம். ஆனால் இத்திறக்கில் ஒன்றுமே நடப்பதாகத் தெரிவதில்லை.
இந்தப் புத்தகத்தை இது போன்ற பிற கோயில் வரலாற்று நூல்களுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதும் தவிர்க்கவியலாதது. குடவாயில் பாலசுப்பிரமணியம் எழுதியிருக்கும் ராஜராஜேஸ்வரம், அ.கா. பெருமாளின் சுசீந்திரம் தாணுமாலயன் கோயில் வரலாறு ஆகிய நூல்கள் உடனடியாக நினைவு வருகின்றன. கோயிலொழுகும் அவைகளைப் போன்றே முழுமையான தரவுகளின் அடிப்படையில் எழுதப் பட்டுள்ளது. ஆனால் அந்த நூல்களின் நடை, மொழி, கூறுமுறை ஆகியவை இன்றைய நவீனத் தமிழ் வாசகனுக்கு நெருக்கமாகவும், நேரடியாகப் பேசும் வகையிலும் உள்ளன. ஒப்பீட்டில் கோயிலொழுகில் வைஷ்ணவ பரிபாஷை மிக அதிகமாக உள்ளது. நிறைய இடங்களில் எளிய தமிழ் விளக்கங்கள் உள்ளன என்றாலும், மணிப்பிரவாள நடை ஓரளவு பரிச்சயம் இல்லாமல் இந்தப் புத்தகத்துள் நுழைவது கடினம் என்றே நினைக்கிறேன்.
வரலாறு எப்போதுமே கடந்த காலத்தின் பிரதிநிதி மட்டும் அல்ல. அதில் நிகழ்காலத்திற்கான பாடங்களும்,எதிரொலிகளும் கூட இருக்கக் கூடும். அதனால் தான் வரலாற்றைப் பயில்வது முக்கியமாகிறது.
ஒரு காட்சி. மறவர் குலத்தவரான பிள்ளையுறங்காவில்லி தாசரை முன்னிறுத்தி ”சாத்தாத முதலிகள்” விஷயமாக முதலியாண்டான் ஸ்ரீராமானுஜரிடம் கேட்கிறார். பூணூல் சாத்தாத, அதாவது பிராமணரல்லாத வைணவர்களை சாத்தாத முதலிகள் என்று கூறுவது வைஷ்ணவ பரிபாஷை மரபு. ”நமக்கும் நம் முதலிகளுக்கும் உள்ள தன்னேற்றத்தை அருளிச் செய்ய வேணும்” என்று கேட்கிறார் முதலியாண்டான். தன்னேற்றம் என்றால் மேன்மை, சிறப்பு என்று பொருள் கொள்ளலாம். இதற்குப் பதிலாக ஸ்ரீராமானுஜர் பத்து வார்தைகள் அருளிச் செய்கிறார் (வார்த்தை என்றால் கருத்து). இவை வார்த்தாமாலை என்ற நூலில் தொகுக்கப் பட்டிருக்கின்றன. ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு உதாரணங்கள் கொடுக்கிறார் –
அணுவுக்கும் மஹாமேருவுக்குமுள்ள தன்னேற்றம். எங்ஙனேயெனில், நாம் ஸம்பந்தமும் குடிகோத்ரமும் ஸூத்ரமுமாகப் பண்ணுவுதோம்.அவர்கள் ஸம்பந்த ஞானானுஷ்டமே (அதாவது தொண்டக் குலத்துக்குரிய ஜீவ பர சம்பந்தம் பற்றிய ஞானமும், அதன் அனுஷ்டானமும்) குடிகோத்ர ஸூத்ரமென்றிருப்பார்கள்.
கரும்புக்கும் கண்டுக்குமுள்ள (கல்கண்டு) தன்னேற்றம். எங்ஙனேயெனில், நாம் வேதமாகிற கரும்பைக் கடித்துப் பல்லு முறிவுதோம். அவர்கள் ஸாரத்வயமாகிற கண்டைக் கடித்து இன்புறுவர்கள்.
பதிவ்ரதைக்கும் பரநாரிக்குமுள்ள தன்னேற்றம். எங்ஙனமேயென்னில், நாம் ஆக்நேயாதிகளுக்கும் (அக்னி முதலான தேவதைகளுக்கும்) சேஷமாயிருப்புதோம். அவர்கள் அவனுக்கே சேஷமென்று அவனையொழிந்தவர்களுக்கு சேஷமன்றென்று அறுதியிட்டிருப்பார்கள்.
இது இருவர்களுக்குமுள்ள தன்னேற்றம்.
– கோயிலொழுகு, பாகம் 7 – பகுதி 1, பக்கம் 10-17.
இங்கு பிராமணர் – பிராமணரல்லாதார் பற்றிய ஒரு 11ம் நூற்றாண்டு உரையாடல் பதிவு செய்யப் பட்டுள்ளதைக் காண்கிறோம். நவீனகாலத்திற்கு முந்தைய மன்னராட்சிக் கால சமூகம் அது. சாதி வேறுபாடுகளை சட்டமாகக் கடைப்பிடித்தமாக சமூகச் சூழல்.அப்போது அக்காலகட்டத்தின் இரு மாபெரும் சமயத் தலைவர்கள், குருவும் சீடனாக உரையாடுகையில், எத்தகைய மனப்பாங்கு, எத்தகைய மொழி புழங்கிற்று என்பதற்கு ஒரு உதாரணம் இது. இருபதாம் நூற்றாண்டில் தமிழக அரசியலை ஆக்கிரமித்த ஒரு பிற்போக்கு இயக்கத்தினர் பிராமணர் – பிராமணரல்லாதார் பிரசினையை முன்வைத்து செய்த கடும் வெறுப்புணர்வு பிரசாரங்களையும், இனவாத திரிபுவாதங்களையும் இதனுடன் வரலாற்று ரீதியாக நாம் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.
இதே போன்று, பிள்ளைலோகாச்சாரியரின் சீடர் விளாஞ்சோலைப் பிள்ளை என்பவர் இருந்திருக்கிறார். இவர் புலையர் சமூகத்தைச் சேர்ந்தவர். தனது உற்ற சீடரான திருவாய்மொழிப் பிள்ளைக்கு உபதேசம் செய்யுமாறு விளாஞ்சோலைப் பிள்ளையை லோகாசாரியர் பணிக்க, அவரும் குருவின் ஆணையை சிரமேற்கொண்டு நிறைவேற்றினார். விளாஞ்சோலைப் பிள்ளை பரமபதம் அடைந்ததும் அவரது ஈமக் கிரியைகளை அந்தணரான திருவாய்மொழிப் பிள்ளையே செய்தார். அதற்கும் முன்பு மாறநேரி நம்பிகள் என்ற பரம வைஷ்ணர் மறைந்த போதும் இதே போன்று பெரிய நம்பிகள் இறுதிக் கடன்கள் செய்திருக்கிறார். மாறனேரி நம்பிகளும் பிறப்பால் புலையர் சமூகத்தைச் சார்ந்தவரே.
பிற்காலத்தில், 17ம் நூற்றாண்டில் வந்த பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் என்ற பெரும் கவிஞர் அஷ்டப் பிரபந்தம் என்று புகழ்பெற்ற எட்டு நூல்களை எழுதியிருக்கிறார். இதில் திருவரங்கக் கலம்பகம் என்ற நூலில், மறவர்குலப் பெண் திருவரங்கநாதன் மீது காதல் கொண்டதை அழகாக விவரித்துப் பாடியிருக்கிறார். அவளைப் பெண்கேட்டு அரச குலத்தினர் ஓலைகொடுத்து தூதர்களை அனுப்ப, அவர்களை நோக்கி அந்த சமூகத் தலைவன் இப்படிக் கூறுகிறான் –
பேசவந்த தூத! செல்லரித்த ஓலை செல்லுமோ?
பெருவரங்கள் அருளரங்கர் பின்னைகேள்வர் தாளிலே
பாசம் வைத்த மறவர் பெண்ணை நேசம் வைத்து முன்னமே
பட்டமன்னர் பட்டதெங்கள் பதிபுகுந்து பாரடா!
ஆய்ச்சியர் குலத்து கோபிகைகளும், அப்படியே தன்னைக் கருதிக் கொண்ட ஆண்டாளும் மட்டுமல்ல, மறவர் குல மாதரசியும் அரங்கன் மீது அன்பு பூண்டவள். அதை முகாந்திரமாகக் கொண்டு அரசர்களது தூதர்களையே மிரட்டும் துணிவும் வீரமும் உடையோராக மறவர்கள் இருந்திருக்கிறார்கள் என்று இந்தப் பாடல் மூலம் தெரியவருகிறது.
நேற்று ஆந்திராவில் இருந்து தரிசனத்திற்கு வந்திருந்த பெரிய கூட்டம் ஒன்றைப் பார்த்தேன். சிவப்புத் தலைப்பாகை கட்டி முறுக்குமீசை வைத்த ஆண்கள். வண்ணச் சேலைகளும் விதவிதமான ஆபரணங்களும் அணிந்த பெண்கள். பயணத்தால் அலுத்து தூசிபடிந்த கரிய திருமேனிகள். செஞ்சுக்கள் என்று சொல்லப் படும் ஆந்திர வனவாசி சமூகத்தினர் இவர்கள் என்று பார்த்தாலே தெரிந்தது. அகோபிலம், ஸ்ரீசைலம் பகுதிகளின் வனப்பிரதேசங்களில் வசிப்பவர்கள். அங்கிருந்து அரங்கனை சேவிக்க வந்திருக்கிறார்கள்!
எனவே, ராமானுஜரின் வார்த்தைகள் அங்கேயே முடிந்து விட்ட உரையாடல் அல்ல. அதனைத் தொடர்ந்து பல்வேறு சாதி சமூகங்களையும் அரவணைக்கும் ஒரு சமூக இயக்கமாகவே அது பரிணமித்தது என்பதை நாம் அறிய முடிகிறது. சாத்தாத வைஷ்ணவர்களின் பெரும் சமூகத் தலைவராக பின்னாளில் கந்தாடை ராமானுச முனி என்பவர் இருந்திருக்கிறார். கோயிலைச் சுற்றியுள்ள வீதியொன்றில் அவர் பெயரில் சாத்தாத வைஷ்ணவர்களுக்கான மடம் இன்றும் இருக்கின்றது. அதில் உள்ளே ஸ்ரீநிவாசப் பெருமாள் சன்னிதியும், பிள்ளையுறங்கா வில்லிதாசர், அவரது மனைவி பொன்னாய்ச்சியார் ஆகியோரது சித்திரத் திருவுருவங்களும் உள்ளன.
மற்ற அனைத்து மடங்களைப் போல இங்கும் பரம்பரையாக வரும் ஆச்சாரியர்கள் இருப்பார்களே என்று கேட்டேன். இல்லை என்பதே பதிலாகக் கிடைத்தது. கடந்த 60 வருடங்களுக்கும் மேலாக இந்த மடத்திற்குத் தலைவர் இல்லையாம். அந்தப் பாரம்பரிய இழை அறுபட்டு விட்டிருக்கிறது, அதுவும் மிக சமீப காலத்தில். சமூக ரீதியாக மிக முக்கியமானதொரு காலகட்டத்தில்.
(ஆனால் இது ஒரு பெரும் இழப்பு என்ற உணர்வு கூட நான் பேசிய சில வைஷ்ணவப் பெரியவர்களுக்கு சிறிதும் இல்லை என்பதை எனது உரையினூடாக வருத்தத்துடன் குறிப்பிட்டேன். நிகழ்ச்சிக்கு வந்திருந்த சில பெரியவர்கள் இதனை ஆமோதித்தனர். வில்லிதாசர், விளாஞ்சோலைப் பிள்ளை முதலான பெரியோர்களின் நினைவைப் போற்றும் வகையில் சிறு கோயில்கள் அமைக்க வேண்டும்.சாத்தாத வைணவர்களின் குரு பரம்பரையைத் தொடரச் செய்ய வேண்டும். இது உடனடியாகச் செய்யவேண்டிய பணி என்று வந்திருந்தவர் ஒருவர் கருத்துத் தெரிவித்தார்.)
கோயிலொழுகு நூலில் இது போன்று பற்பல அருமையான சம்பவங்களும், குறிப்புகளும் உள்ளன. இவற்றில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து குழந்தைகளுக்கும், இளைய தலைமுறையினருக்கும் சென்று சேரும் வண்ணம் காமிக்ஸ் கதைப் புத்தகங்களாகவும், நேர்த்தியான ஆவணப் படங்களாகவும் உருவாக்க வேண்டும்.
வெள்ளையம்மாளின், பஞ்சுகொண்டானின் தியாகத்தின் சின்னங்களாக ஒரு பெரும் கோபுரமும், நுழைவாயிலும் இங்கு நின்று கொண்டிருக்கின்றன. ஆனால்தரிசனம் செய்ய வருபவர்களில் 90 சதவீதத்தினருக்கு இந்த வரலாற்றுச் செய்தி தெரிவதில்லை. அவர்களுக்கு இத்தகவல் சென்று சேர வழியும் இல்லை. இந்தக் கோயிலைக் காப்பாற்றி நமக்களிக்க எப்பேர்ப்பட்ட மகத்தான தியாகங்கள் செய்யப் பட்டிருக்கின்றன என்ற தகவல் தெரிந்தால், ஒருவேளை பக்தர்களின் சுயநல பிரார்த்தனைகளின் பேரிரைச்சல்களில் எங்கோ ஒரு மூலையிலாவது அது கசிந்து கொண்டிருக்கும். இன்றும் திண்டுக்கல்லிலும், தென்காசியிலும், கன்யாகுமரியிலும் கோயில்களை அழிவிலிருந்து பாதுகாக்க ஏழை எளிய மக்கள் செய்யும் தியாகங்களை நினைவில் கொள்ளவும், மதிக்கவும் அது ஒரு உந்துதல் அளிக்கக் கூடும்.
ஒவ்வொரு கோயிலுக்கு அருகிலும் அதன் பல நூற்றாண்டு கால வரலாற்றைக் காட்சிப் படுத்தும் வகையில் அருங்காட்சியகங்கள் அமைய வேண்டும். கோயிலுக்கு உள்ளேயும் இந்த வரலாற்றுச் செய்திகளை அங்கங்கு மக்களுக்கு நினைவுபடுத்தும் வகையில் பலகைகள் வைக்கப் படவேண்டும். அப்போது தான் கோயிலைப் பற்றிய ஒரு கலாசார,பண்பாட்டு,வரலாற்று உணர்வும் மக்கள் மனதில் உண்டாகும். வழிபாட்டுணர்வுடன் கூட, அத்தகைய உணர்வும் இணைந்தால் தான் கோயில்களின் மீது மக்களுக்கு பிரக்ஞை பூர்வமான பற்றும் பிடிப்பும் உண்டாகும். இன்றைய சூழலில் அது தமிழகத்திற்கு மிக அவசியமாகத் தேவைப் படுகிறது. திருவரங்கம் கோயில் விஷயத்தில் அத்தகையதொரு உணர்வினை உண்டாக்குவதில் கோயிலொழுகு நூலின் பங்களிப்பு மகத்தானது என்பதில் சிறிதும் ஐயமில்லை.
கோயிலொழுகு (ஸ்ரீரங்கம் கோயில் வரலாறு) – ஏழு பகுதிகள்
ஆசிரியர்: ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ அ.கிருஷ்ணமாசாரியர்
மொத்தப் பக்கங்கள்: 6000+.வெளியிட்டோர்: ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ, 214, கீழை உத்தரவீதி, ஸ்ரீரங்கம், திருச்சி – 620 006.
தொலைபேசி: 0431-2434398, 98842-89887 , 90424-53934.
மின் அஞ்சல்: krishvasu19@gmail.comஅனைத்து பாகங்களும் சேர்த்து, விலை ரூ. 3000 (ஏப்ரல்-30, 2011 வரை சலுகை விலை ரூ. 2400).
ஏப்ரல்-30 வரை தனிப்பட்ட பாகங்கள் 10% தள்ளுபடி விலையில் கிடைக்கும்.
தபால் செலவுகள் தனி (பதிப்பாளரைத் தொடர்பு கொள்ளவும்).சென்னையில் கிடைக்குமிடம்:
ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ, புதிய எண்: 36, நாயக்கமார் தெரு, மேற்கு மாம்பலம், சென்னை – 33.
தொலைபேசி: 044 – 24715120ஒவ்வொரு பகுதிகளும் பற்றிய சிறு குறிப்பு:
பகுதி 1 (2 பாகங்கள்): புராணக் குறிப்புகள் முதல் ஸ்ரீராமானுஜர் காலம் வரையிலான வரலாறு. மேலும் பராசர பட்டர் தொடங்கி கி.பி 1623 முத்துவீரப்ப நாயக்கன் காலம் வரையிலான வரலாறு.
பகுதி 2 (2 பாகங்கள்): கி.பி 1623 முதல் 1803, கோயில் நிர்வாகம் கிழக்கிந்தியக் கம்பெனி வசம் வரும் வரையிலான வரலாறு. கந்தாடை ராமானுஜ முனி உட்பட இக்காலகட்டத்தில் திருவரங்கத்தில் வாழ்ந்த ஆசாரியர்கள் வரலாறு.
பகுதி 3 (3 பாகங்கள்): கிபி. 1803 முதல் 2003 வரை கோயில் உரிமைகள் தொடர்பாக தென்கலையார் தொடுத்த நீதிமன்ற வழக்குகள், தீர்ப்புகள். சித்திரை முதல் பங்குனி வரை நடைபெறும் பல்வேறு விழாக்கள். ஒழிபியல் என்ற தலைப்பில் கோயில் பற்றிய பல துணுக்குச் செய்திகள்.
பகுதி 4 (2 பாகங்கள்): ஸ்ரீரங்கமஹாத்மியம் நூல் தரும் கோயில் விவரங்கள். பங்குனிப் பெருவிழா மற்றும் அதன் வரலாறு பற்றி விரிவான விவரணங்கள். நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் திருவரங்கம் தொடர்பான 247 பாசுரங்களுக்கான விளக்கம், பூர்வாசாரியர்கள் உரையின்படி.
பகுதி 5 (2 பாகங்கள்): நாதமுனிகள் முதல் ஸ்ரீராமானுஜர் வரையிலான ஆசாரியர்களின் திருவரங்க அனுபவம். விஜயநகர, மதுரை மன்னர்கள், தஞ்சை நாயக்கர் காலத்து கல்வெட்டுகள், செப்பேடுகள் பற்றிய முழுமையான விவரங்கள்.
பகுதி 6 (3 பாகங்கள்): கூரத்தாழ்வான் திருவரங்க வாழ்வும் பணியும். கூரேச வைபவம் என்ற நூல் கூறும் குறிப்புகள். ஆழ்வான் அருளிய 5 சம்ஸ்கிருத தோத்திர நூல்களின் மூலமும் உரையும்.
பகுதி 7 (2 பாகங்கள்): முதலியாண்டான் தொடங்கி மணமாள மாமுனிகள் வரை இராமானுஜருக்குப் பின்வந்த ஆசாரியர்களின் திருவரங்க அனுபவம். திருவரங்க கோயில் அமைப்பு. கோயிலின் அனைத்து பகுதிகள் (கோபுரங்கள், தூண்கள், மண்டபங்கள், சன்னிதிகள்..), சிற்பங்கள், சித்திரங்கள் பற்றிய விரிவான விவரணங்கள். சில வரலாற்றுப் புதிர்கள் குறித்த பிற்சேர்க்கை.
தனித்தனி பகுதிகளின் விலை & மற்ற விவரங்கள் அறிய பதிப்பாளரைத் தொடர்பு கொள்ளவும்.
(முற்றும்).
//அதனைத் தொடர்ந்து பல்வேறு சாதி சமூகங்களையும் அரவணைக்கும் ஒரு சமூக இயக்கமாகவே அது பரிணமித்தது என்பதை நாம் அறிய முடிகிறது.
சாத்தாத வைஷ்ணவர்களின் பெரும் சமூகத் தலைவராக பின்னாளில் கந்தாடை ராமானுச முனி என்பவர் இருந்திருக்கிறார். கோயிலைச் சுற்றியுள்ள வீதியொன்றில் அவர் பெயரில் சாத்தாத வைஷ்ணவர்களுக்கான மடம் இன்றும் இருக்கின்றது. அதில் உள்ளே ஸ்ரீநிவாசப் பெருமாள் சன்னிதியும், பிள்ளையுறங்கா வில்லிதாசர், அவரது மனைவி பொன்னாய்ச்சியார் ஆகியோரது சித்திரத் திருவுருவங்களும் உள்ளன.//
நீங்கள் தந்திருக்கிறது மிகமுக்கியமான தரவு. ஆனாலும் சாத்தாத வைணவர்- சாத்திய வைணவர் என்று சந்நியாசிகளுள் பிரிவினை பார்க்கலாமா? சாத்தாத வைணவ சந்நியாசிகள் எப்படியிருப்பர்? என்பது குறித்தும் தங்களுக்குத் தெரிந்தால் எழுதுங்கள். சாத்தாத வைணவர்களுக்கு சந்நியாசம் வாங்கிக் கொள்ள தகுதி உண்டாகில் அவர்களும் அப்போதேனும் சாத்திக் கொள்ளவும் வழி ஒன்றை கட்டாயம் ராமானுஜாச்சார்யார் செய்திருக்கவில்லையா? (வைணவ சந்நியாசிகள் பூணூல் களைவதில்லை. அணிந்தே இருத்தலால் இதைக் கேட்கிறேன்)
சைவ சமயிகளைப் பொறுத்த வரையில் பிறப்பினால் பிராமணரல்லா ஆதீனங்களில் வீற்றிருக்கும் மஹாசந்நிதானங்களை பிராமணர்கள் ஏற்றுக் கொளகிறார்கள். ஆக, வைணவர்கள் அவ்வாறு ஏற்றுக் கொள்ளும் நிலை இருக்கவில்லையா? இவை பற்றி தாங்கள் மேலும் ஆய்வு செய்ய வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.
What is the price of each volumes, and what each volumes deal with?
திரு மயூரகிரி சர்மா அவர்களே,
நீங்கள் கேட்டுள்ள விஷயத்தை இப்படி அணுகலாம் என்று நினைக்கிறேன்:
(1) தற்காலத்தில் நாம் கருதுவதைப் போல பூணூல் என்பதை ஒரு பெருமைப்பட வேண்டிய சம்ஸ்காரம் என்றும் social empowerment செய்யும் சாதனம் என்றும் அக்காலத்தில் இராமானுஜர் கருதியிருப்பார் என்று தெரியவில்லை.
(2) வைணவ ஜீயர்கள் பூணூலைக் கைவிடுவதில்லை என்று நீங்கள் எழுதியிருப்பது சரியே. பூணூல் அணிவதையும் நித்யகர்மா செய்வதையும் ஒரு பெருமைப்பட வேண்டிய சடங்குகலாகப் பார்க்காமல், அதை ஒரு ஸ்வதர்மமாகவும் கடமையாகவுமே அவர்கள் பார்த்தனர்.
(3) பிராம்மண குடும்பத்தில் பிறந்தவர்கள் கூட ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் ஆகி விட்டால் அவருக்கு உபநயனம் செய்வது எந்த நன்மையையும் தராது என்பது பிரபலமான பெரியோர் வாக்கு.
இப்படி இருக்க, ஒருவருக்குப் புதிதாகப் பூணூல் அணிவிப்பதற்கு ஒரே ஒரு காரணம் தான் இருக்க முடியும் — அதாவது பூணூல் என்பதை மோக்ஷத்துக்கு உபாயமாக ராமானுஜர் கருதியிருப்பாரோ என்னும் possibility ஒன்று தான். ஆனால், இது பிரபன்ன லக்ஷணத்துக்குச் சற்றும் ஒத்து வராது. ‘எந்த தர்மத்தையும் உபாயமாகப் பற்றாமல் என்னையே சரணடைவாய்’ என்னும் சரம சுலோகம் (கீதை 18.66) ஸ்ரீவைஷ்ணவத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அது படி பார்த்தால் இந்த possibility-யும் அடி படுகிறது.
கடைசியாக, சாத்தாத முதலிகளைப் பூணூல் அணிய வைத்திருந்தால் அவர் வைணவத்துவத்தை விட பிராம்மணீயத்துக்குத் தான் முக்கியத்துவம் கொடுத்தார் என்பதாகி விடும்.
என் கருத்தில் உண்மை இருந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள்.
அன்புள்ள கிருட்டிணன்,
ஒவ்வொரு பகுதிகளும் கூறும் விஷயங்கள் பற்றிய சிறுகுறிப்பை கட்டுரையிலேயே இணைத்துவிட்டேன். நன்றி.
கந்தர்வன் கூறும் கருத்து ஏற்புடையதாக இருக்கிறது. வைணவத்தில் எல்லா சமூக பிரிவினரையும் ஆசாரியர்களாகவும், குருமார்களாகவும் ஏற்றுப் போற்றும் நிலை கண்டிப்பாக இருந்திருக்கிறது. சடகோபரான நம்மாழ்வார் முதல் இக்கட்டுரையில் நான் குறிப்பிட்டிருக்கும் விளாஞ்சோலைப் பிள்ளை வரை அதற்கு சான்றுகள்.
ஆனால் சாத்தாத வைணவர்களின் பெருமைமிக்க பாரம்பரிய ஆசாரிய பீடம் மிக அண்மைக் காலத்தில் அறுபட்டு விட்டிருக்கிறது. மற்ற வைணவப் பெரியார்கள் அது பற்றி கவலைப் படாமல், கவனிக்காமல் விட்டுவிட்டார்கள் என்று தோன்றுகிறது. இது மிகவும் வருத்தத்திற்குரிய விஷயம். அந்த வருத்தத்தையே அங்கு பதிவு செய்தேன்.
Jatayu sir,
You are super fast !!
I like this site. It really cares and respects its readers.
தங்களின் கருத்து மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. என்றாலும். தங்களின்
//கடைசியாகஇ சாத்தாத முதலிகளைப் பூணூல் அணிய வைத்திருந்தால் அவர் வைணவத்துவத்தை விட பிராம்மணீயத்துக்குத் தான் முக்கியத்துவம் கொடுத்தார் என்பதாகி விடும்.
என் கருத்தில் உண்மை இருந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள்//
என்ற இக்கருத்தை ஓரளவுக்கு ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கிறது. ஆனாலும் பூணூல் பிராம்மண அடையாளம் என்று ராமானுஜர் காலத்திலேயே ஆகி விட்டதாகவும் கருத இயலாதல்லவா? அக்காலத்தில் அரசரும் வணிகரும் விஸ்வ பிரம்மகுலத்தவர் என்பாரும் இன்னும் வேறு சிலரும் கூட பூணூல் அணிந்து கொண்டார்கள்.
இனி இவைகளை ஆராய்வது கடினம் தான். ஆச்சார்ய பரம்பரையே துண்டிக்கப்பட்டிருக்கிற நிலையில் இவற்றை ஆராய்வது அதனினும் கடினம். ஆக, மீளவும் இப்பீடத்தை வலுச்செய்ய வேண்டும் என்ற கருத்தை சிறியேனும் ஏற்றுக் கொள்கிறேன்.
இவ்விடத்தில் இதனை எழுத முயன்றமைக்கு காரணம்.. இப்பீடம் பற்றி மேலும் சில செய்திகள் வெளிவரட்டுமே என்ற ஆவலினாலேயாகும். குற்றம் இருப்பின் மன்னிக்குக.
// ஆனால் சாத்தாத வைணவர்களின் பெருமைமிக்க பாரம்பரிய ஆசாரிய பீடம் மிக அண்மைக் காலத்தில் அறுபட்டு விட்டிருக்கிறது. மற்ற வைணவப் பெரியார்கள் அது பற்றி கவலைப் படாமல், கவனிக்காமல் விட்டுவிட்டார்கள் என்று தோன்றுகிறது. இது மிகவும் வருத்தத்திற்குரிய விஷயம். அந்த வருத்தத்தையே அங்கு பதிவு செய்தேன். //
கண்டிப்பாக உடன்பட வேண்டிய வருத்தமே. இக் குருபரம்பரை அறுபட்டுப் போனதற்குக் காரணங்களைக் கண்டுபிடித்து முடிந்தால் திருத்துவதே ஏற்றம் என்று தோன்றுகிறது.
திரு மயுரிக்கி சர்மா அவர்களே
// சாத்தாத வைணவ சந்நியாசிகள் எப்படியிருப்பர்? என்பது குறித்தும் தங்களுக்குத் தெரிந்தால் எழுதுங்கள்//
இதற்க்கு சாத்தியம் இல்லை – (மீமாம்ச படி மடத்து சந்யாசம் பெற)
விசிச்டாத்வைதத்தில் மோக்ஷ ப்ராப்திக்கு சந்யாச நிலை தேவை இல்லை என்பதனால் இதற்க்கு (எந்த சந்யாச நிலையும்) அவசியமும் இல்லை
மேலும் மடாதிபதிகள் சந்யாச தர்மம் மேற்கொள்ள வேண்டும் என்ற விதிமுரையும் வைணவத்தில் கிடையாது – பலர் குடும்ப சமேதமாக மடாதிபதிகளாக இன்றும் உள்ளனர்
மயூரிகி ஷர்மா அவர்களே
உறங்கா வில்லி தாசர் மல்லர் வகுப்பை சேர்ந்தவர் – க்ஷத்ரிய வர்ணத்தின் கீழ் வரும் வகுப்பு இது – அக்காலத்திலேயே இவர்கள் நூல் சாற்றிக்கொள்வதை கைவிட்டிருந்ததை காட்டுகிறது
மதிப்பார்ந்த சாரங் அவர்களுக்கு,
///விசிச்டாத்வைதத்தில் மோக்ஷ ப்ராப்திக்கு சந்யாச நிலை தேவை இல்லை என்பதனால் இதற்க்கு (எந்த சந்யாச நிலையும்) அவசியமும் இல்லை
மேலும் மடாதிபதிகள் சந்யாச தர்மம் மேற்கொள்ள வேண்டும் என்ற விதிமுரையும் வைணவத்தில் கிடையாது – பலர் குடும்ப சமேதமாக மடாதிபதிகளாக இன்றும் உள்ளனர்///
நீங்கள் குறிப்பிட்டிருக்கிற இவ்விஷயம் சைவசித்தாந்தத்திற்கும் பொருந்தும். ஏன்? ஓரளவுக்கு அத்வைதத்திற்கும் பொருந்தும் என்றே கருதுகிறேன்.
பழங்காலத்தில் சில முக்கிய சைவாதீனங்கள் மற்றும் சைவமடங்களிலும் இல்லறத்திலுள்ள மடாதிபதிகளும் ஆதீனகர்த்தர்களும் இருந்திருக்கிறார்கள். கால ஓட்டத்தில் பணி செய்வதற்கு வாய்ப்பாகவும்.. இன்னும் குடும்ப ஆட்சியில் மடம் மற்றும் ஆதீனம் வந்து விடாமல் இருப்பதற்காகவுமே பிரம்மச்சர்யம் பூண்டவர்களாகத் தான் மடாதிபதிகள் அமைய வேண்டும் என்ற வழக்கு ஏற்பட்டிருக்கிறது.
ஆயினும் தாங்கள் அறிந்த வகையில் குடும்பஸமேதராக உள்ள மடாதிபதிகளின் கட்டுப்பாட்டில் சிறப்பாக இயங்கும் திருமடங்கள் இன்றும் இருந்தால் அவற்றை குறிப்பிட்டீர்களாகில் நன்றியுடையவனாவேன். அவ்வாறு அமையும் பட்சத்தில் அவர்களின் மடமும் வீடும் வேறு வேறாகத் தானே.. இருக்க வேண்டும்?
ஆனால், தாங்கள் இப்படிச் சொன்னதனூடே .. அது சரியாகில் உடனடியாகவே நல்ல வைணவர் ஒருவர் ஸ்ரீரங்கத்தில் உள்ள சாத்தாத வைணவர் திருமடத்தைப் பொறுப்பெடுத்து நடாத்தலாமே? (சந்நியாசியாகவோ.. நைமிஷ்டிக பிரம்மச்சார்யாகவோ இருக்க வேண்டிய தேவை இல்லை என்கிற பட்சத்தில் கூட மடத்தைப் பொறுப்பெடுத்து நடத்த ஆள் கிடைக்க மாட்டார்களா?)
அன்பிற்குரிய ஜடாயு மற்றும் கந்தர்வன் போன்றவர்களும் முனைவர் கோ.ந.முத்துக்குமாரசாமி போன்ற இன்னோரன்ன பெரியவர்களும் மடங்களைப் பற்றிய முழுமையான ஒரு தரவை சேகரிக்க வேண்டும் என விண்ணப்பிக்கிறேன். குறித்த மடங்கள்-ஆதீனங்கள்-பீடங்கள் பழைய காலத்தில் எப்படியிருந்தன? தற்போது எப்படியுள்ளன? கால ஓட்டத்தில் அவை செய்த பணி என்ன? என்பது குறித்து வருங்காலம் அறிய வேண்டும். அது போல சிறப்பாக விளங்கிய எந்த எந்த மடங்கள் தற்போது செயற்படு நிலையில்- ஆச்சார்ய பரம்பரை அறுந்த நிலையளில் இருக்கின்றன என்பதும் கவனிக்கப்படவேண்டும்
இது ஒரு பெரிய விஷயம்.. ஆக, மிகச்சிறியவனான தத்துவம் அறியாத யான் ஏதும் தவறே சொல்லியிருப்பினும் பெரியீர்களான தாங்கள் அவற்றைப் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று ப்ரார்த்திக்கிறேன். எனது பதிலுரைகட்கு பொறுமையாக பதிலளிக்கும் கந்தர்வன் அவர்களுக்கும் ஜடாயு அவர்களுக்கும் நன்றிகள் பல..
//கண்டிப்பாக உடன்பட வேண்டிய வருத்தமே. இக் குருபரம்பரை அறுபட்டுப் போனதற்குக் காரணங்களைக் கண்டுபிடித்து முடிந்தால் திருத்துவதே ஏற்றம் என்று தோன்றுகிறது.
//
தேற்றிக்கொள்ள ஒரு விஷயம் சதுர்வேதி சுவாமிகளுக்கு (சாற்றின வைனவரானாலும் பிராமணர் அல்லாதவர் ) இன்றும் இருக்கும் சிஷ்ய கோடிகளும், இவரை பல ஜீயர்களும் அபிமானிப்பதும் தான் – இதையும் தகர்க்க சில ஆசாரவதிகள் முற்பட்டனர் என்பது வருந்த வேண்டிய செய்தி – இவர்கள் முயற்சியையும் மீறி அவருக்கு இருக்கும் இன்றும் சிஷ்ய கூட்டம் சற்று நிம்மதியை தருகிறது
மயூரிகி ஷர்ம அவர்களே
//ஆயினும் தாங்கள் அறிந்த வகையில் குடும்பஸமேதராக உள்ள மடாதிபதிகளின் கட்டுப்பாட்டில் சிறப்பாக இயங்கும் திருமடங்கள் இன்றும் இருந்தால் அவற்றை குறிப்பிட்டீர்களாகில் நன்றியுடையவனாவேன்.
//
நிறைய மடங்கள் உள்ளன – சோளிங்கர் மடத்தை எடுத்துக்கொள்ளுங்கள் – இதன் பீடாதிபதி தான் பிரபல ப்ரவச்சகர் வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களின் ஆசாரியர்
இதையும் தவிர வைணவத்தில் ஸ்வயம் ஆச்சார்யா என்ற ஒரு வகை உண்டு (ராமானுஜர் உருவாக்கின 74 சிம்மாஸனாதிபதிகளுள் இந்த வகையினர் தான் அதிகம்) – இதில் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் திருமலை அனந்தாழ்வான் வம்சம் (இவர் தான் திருப்பதியை கட்டிக்காத்தவர்) – TA என்று initial தொடங்கு பல பேரை பார்க்கலாம் – இவர்கள் எல்லாம் இந்த ஆனந்தாக்வான் ஸ்வயமாச்சர்யா கட்டமைப்பில் அடங்குவர் – இவர்கள் அனைவரும் க்ருஹஸ்தர்கள் தான். இவர்களுக்கு மடம் என்று ஒன்று தனியாக கிடையாது – வீடே மடம் குடும்பமே சிஷ்யர்கள்
வேறு பல ஸ்வயம் ஆசார்யர்கள் அதற்க்குண்டான அனுஷ்டானகளை கடை பிடிக்க முடியாமையால் பெரிய மட சிஷ்யர்களாக தங்களை ஆக்கி கொண்டு வருகிறார்கள் (அனுஷ்டானம் என்றால் இங்கு பெரிய விஷயங்கள் இல்லை – ஒரு நூறு பிரபந்தம் கற்பதே இவர்களுக்கு ரெம்ப சிரமமாக உள்ளது)
ஏன் சாத்தாத மடம் நடத்த யாரும் முன் வரவில்லை ? மூன்று காரணங்கள் சொல்லலாம்
௧) மடத்திக்கு முக்கியம் அதிபதியை விட சிஷ்யர்கள் தான் – சிஷ்யர்கள் அதிகம் இல்லாத படியால் மடம் எதற்கு என்று நினைத்திருக்கலாம்
௨) இந்த மடத்து சிஷ்யர்கள் எல்லாம் (சில காலம் பீடாதிபதி இல்லாமையால்) வேறு மடத்தில் ஐக்கியம் ஆகி இருக்கலாம்
௩) இப்படி ஒரு மடம் இப்போது நடத்துவதற்கு அனுகூலமான சந்தர்பங்கள் இல்லாமல் இருக்கலாம் (பனம், அங்கீகாரம் …. ) ஒரு மடத்தை உருப்படியாக நடத்த நிறைய பனம் தேவை – ஒரே ஒரு ஊரில் மட்டும் இருந்தால் நிறைய சிஷ்யர்கள் சேர்க்க முடியாது (சிஷ்யர்கள் இல்லாவிடில் பனம் யார் தருவார்) – பல இடங்களிலும் ஸ்தாபனம் வேண்டும் – இன்றளவில் இப்படி செய்வது மடங்களுக்கு சாத்தியம் இல்லை, கழகங்களுக்கு மட்டுமே இது சாத்தியம். ஏதாவது ஒரு பெரிய மடம் உதவியுடன் மட்டுமே இது சாத்தியப்படும் – இதற்க்கு வேறு மடங்கள் முன் வருமா என்றால் ரொம்ப doubt தான் 🙁
சில பெரிய மடங்களை பற்றின ஆவணங்கள் அந்தந்த மடத்தை அணுகினால் கிட்டும் – ஆனால் இது முழுமையானதாக இருக்க வாய்ப்பே இல்லை – குரு பரம்பரையும், இவர்கள் சில முக்கிய பணிகள், இவர்கள் கீழ் வரும் கோவில்கள் போன்ற விஷயங்களை தான் எளிதில் பெற முடியும் – ஒரு ஆழமான ஆவணம் வேண்டும் என்றால் மிக சிரமப்பட்டு தான் சேகரிக்க/தயாரிக்க வேண்டும்
இங்கு பல அன்பர்கள் மடங்களின் நிலைப்பற்றியும் மடாதிபதிகளின் நிலை (சந்நியாசி/குடும்பஸ்தர்) என்பது பற்றி வினாக்களையும் ஐயங்களையும் எழுப்பியுள்ளனர். ஆழ்வார்கள் காலத்திலேயே திரிதண்டம் ஏந்தும் வைணவ சன்யாசிகள் இருந்தனர் என்பதை திருமழிசை ஆழ்வார் அருளிச் செய்துள்ள திருச்சந்த விருத்தம் எனும் பிரபந்தத்தில் சிற்றெயிற்று முற்றல் மூங்கில் மூன்று தண்டர் ஒன்றினர், அற்றபற்றர் சுற்றி வாழும் அந்தண் நீர் அரங்கமே எனும் வரிகளினால் அறியலாம். வைணவர்கள் அனுசரிக்க வேண்டிய அவசியமான சடங்குகளில் தோள்களில் சங்க சக்ர முத்ரைகளை தரித்தல், இராமானுஜரின் அடியவன் என்கிற தாஸ்ய நாமம் தரித்தல், எம்பெருமானை தவிர வேறு தெய்வம் தொழாதிருத்தல் என்பவை முக்கியமானவை. இதனை நெறிமுறைப்படுத்தி எழுபத்து நான்கு சிம்மாசனாதிபதிகள் (முக்கியச் சீடர்கள்) மூலம் நடத்த அருளாணை இட்டார். அவர்களுள் சந்யாசிகளுமுண்டு. குடும்பஸ் தர்களும் உண்டு. காலப்போக்கில் பல மாற்றங்கள் ஏற்பட்டு பெரும்பாலான சிஷ்யர்கள் துறவிகளின் மடங்களை நாடினர். பல மடங்கள் செல்வாக்கு பெற்றன. சில மடங்கள் தங்கள் ஆதீனத்தில்லுள்ள கோயில்களை நிர்வகிப்பதில் மட்டும் கவனம் செலுத்தின. தற்காலத்தில் பல மடங்கள் வேத ஆகம பாடசாலைகளை நிர்வகிப்பதிலும் கல்வி பணிகளிலும் சமூக நலப் பணிகளிலும் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளன.
ஜடாயு அவர்களின் இந்தக் கட்டுரையைப் பலமுறை படித்தேன். பழைய நினைவுகள் சில எழுந்தன அவற்றை மறுமொழியாகத் தர விரும்புகின்றேன்.
கோயிலொழுகு எனும் இந்த வரலாற்று ஆவணம் திருக்கோவிலின் நிருவாகத்தை மட்டுமன்றி வைணவம் இராமாநுஜரின் வழிகாட்டுதலில் எப்படிச் சமுதாயத்தின் அனைத்துப் பிரிவு மக்களையும் தன்னுள் அணைத்துப் பரவியது என்பதையும் விளக்குகின்றது.
இராமாநுஜர் அருளிய வார்த்தாமாலையின் கவிதைச் சுவைமிக்க அற்புதமான கருத்துக்கள் குலம் கல்வி முதலியனவற்றைக் காட்டிலும் பக்திவிசேடத்தை வலியுறுத்தி சாத்தாத வைணவரின் அவர் கொண்டிருந்த பரிவை வெளிப்படுத்துகின்றது. அந்தப் பரிவு அப்பெரியாரின் தனிப்பட்ட உணர்வேயன்றி வைணவ அனுட்டானத்தில் வலுயுறுத்தப்பட்டு இன்றளவும் தொடரப்படுகின்றதா என்பது ஐயமே.
இது சைவத்துக்கும் பொருந்தும்.
இராமாநுஜரின் விரிந்து பரந்த உள்ளம் சாத்தாத வைணவரையும் வைணவ வொழுக்கத்தில் ஒழுக ஊக்குகின்றது என்பதற்கு என்னுடைய ஆசிரிய அனுபவத்தில் பெற்ற சான்றுகளைப் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன்.
முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த நிகழ்ச்சி. நான் பணிபுரிந்த கல்லூரியில் சேர்வதற்கு பொள்ளாச்சிக்கு அருகிலிருந்த கிராமம் ஒன்றிலிருந்து மாணவரொருவர் வந்தார். அவர் பெயர் ‘பராங்குசம்’ வைணவத்திருக்கோலம் அவருடைய மேனியில் திகழ்ந்தது. அந்த வயதுடைய இளைஞர் அத்தகைய தோற்றம் உடையவராக இருத்தல் மிக அரிது. அவருடைய விண்ணப்பத்தில் சாதி கொங்கு வேளாளர் என்றும் சமயம் வைணவம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இது ஒரு அரிய செய்தி. விசாரித்ததில் அவருடைய முன்னோர்களில் ஒருவர் இராமாநுசரின் வழிவந்த சீடர் ஒருவரால் ஆட்கொள்ளப்பட்டுப் பரம்பரையாகத் தொண்டக்குலத்தவரானார் என அறிந்தேன். கல்லூரி உணவு விடுதியில் உணவு சமைப்பவர் வைணவர் அல்லர். வைணவர் அல்லாதவர் சமைத்த உணவை ஏற்றுக் கொண்டு விடுதியில் தங்குவது எப்படி எனப் பெரிதும் கலக்கமுறார். அவருடைய தீவிரத்தை நான் மிகவும் மதித்தேன். அண்மையில் உள்ள பிராமண வைணவர் இல்லம் ஒன்றில் , paying guest’ ஆகச் சேர்த்து விடலாம் என முயன்று அது இயலவில்லை.. பின்னர், குலாலராகிய வைணவர் ஒருவரைப் பற்றித் தெரியவந்தது. அவர் திருமண் தரித்துப் பஞ்சகச்சம் உடுத்து வைதிகக் கோலத்தில் தானிருப்பார். பராங்குசத்தின் உணவுக்கு அவருடைய இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.
பராங்குசத்தை ஒருநாள் என்னுடைய நண்பராகிய வடகலை ஐயங்கார் ஒருவரிடம் அறிமுகப் படுத்த அழைத்துச் சென்றேன். அந்தணர்கள் ,’அபிவாதயே’ சொல்லி வணங்குதலைப் போலப் பராங்குசம் இருசெவிகளையும் பொத்திக் கொண்டு என்னவோ உச்சரித்து, நண்பரை வீழ்ந்து வணங்கினர். நண்பரும் அதேபோல் அவரை வணங்கினார். பராங்குசம் அபிவாதயேவில் என்னசொல்லி வணங்கினார் என்று கேட்டேன். தங்கள் குலகுருவின் மரபையே கோத்திரமாகச் சொல்லி வணங்கியதாகக் கூறினார்.
மார்கழி மாதம் கோவை சங்கரமடத்தில், பேராசிரியர் அ. சீனிவாசராகவனின் திருப்பாவை தொடர் சொற்பொழிவு நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதனைக் கேட்டுப் பயனடையும்படிப் பராங்குசத்திடம் கூறினேன். திருப்பாவை போன்ற வைணவகிரந்தங்களை சம்பிரதாயப்படி குருமரபில் வந்தோர் கூறக் கேட்டுப் பயன்பெறலே முறையன்றி ‘சமாஸ்ரயம்(?) இல்லாதவரிடத்தில் சமய ஞானம் பெற முடியாது என மறுத்து விட்டார்.
இளஞர் பராங்குசத்தைபோல் , இறைவனே! எனக்கு உறுதியான சிவபக்தியைக் கொடு என வேண்டிக் கொண்டேன்.
மற்றொரு நிக்ழ்ச்சி. இதுவும் முப்பதைந்து ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்தது. நாமக்கல்லுக்கு அருகில் உள்ள முத்துக்காபட்டி என்னும் கிராமத்தில் சீநிவாசன் என்பவரை ஒருகாரியமாகச் சந்திக்க வேண்டியிருந்தது. அவர் அரசு உயர்நிலைப் பள்ளியொன்றில் ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார். அங்கு சென்று அவருடைய இல்லத்தைப் பற்றி விசாரித்தபோது, ‘கறி சாப்பிடாதவர்கள் வீடு’ என்று அடையாளம் கண்டார்கள். ‘ கடாவெட்டிக் காதுகுத்துக் கலியாணம்’ நடத்தும் சமுதாயத்தில் புலால் உண்ணாமையே ஒரு புரட்சிதானே.
நான் அந்த வீட்டுக்குச் சென்றபோது, வைணவர்களின் திருமாளிகைக்கு உரிய சின்னங்களெல்லாம் சுவரிலும் கதவிலும் காணப்பெற்றன. மாவிலைத் தோரணமும் வாழைக் கம்பமும் ஏதோ நிகழ்ச்சி நடக்க விருப்பதைக் காட்டின. விசாரித்ததில் அன்று அங்கு தொண்டரடிப்பொடியாழ்வார் பாசுரங்களின் முற்றோதல் நடைபெற இருப்பதாகவும் அதற்கு வைணவ பரமபாகவதர்கள் வரவிருக்கின்றனர் என்றும் அறிந்தேன். வந்தவர்களிற் பலர் தென்கலை வைணவ அந்தணர்களின் திருக்கோலத்தில் காணப்பட்டனர். ஆனால் பெண்கள் வித்தியாசமாக இருந்தனர். மேலும் விசாரித்ததில் சீநிவாசன் கொங்கு வேளாள சமூகத்தைச் சேர்ந்தவர் என்றும், அவருடைய முன்னோர் திருவரங்கத்து ஜீயர் சுவாமிகளால் ஆட்கொள்ளப்பட்டுப் பரம்பரையாக பரமவைணவர்களாக வாழ்ந்து வருவதாகவும், இதனால், தங்கள் குடும்பத்துப் பெண்களைத் திருமணம் செய்து கொடுக்கும்போது புலால் உண்ணாத மாப்பிள்ளை தேடுவதில் சிக்கலைச் சந்திக்க நேரிடுகின்றது என்றும் கூறினார். குடும்பத்தில் அனைவரும் திருவரங்கத்திலுள்ள அவர்களுடைய குரு ஜீயர்சுவாமிகளிடம் தோளில் முத்திரை பதிக்கப் பெற்றுக் கொள்வதாகவும் கூறினார்.
இந்தச் சமூக மாற்றம் எப்படி விளைந்தது? உடையவரும் அவருடைய சீடர்களும் மடங்களை அலங்கரிப்பதை விட்டுச் சமுதாயத்தொடு கலந்து பழகியதால்தான்.
எங்கள் பகுதியில்’சாத்தாதவ்ர்’ எனப்படுவோர் உடையவரால் வைணவராக ஆக்கபெற்ற தாழ்குடி மக்கள் என்றே கருதப்படுகின்றனர். அவர்கள் திவ்யப்பிரபந்தத்தில் நன்கு பயிற்சி பெற்றவர்கள். தமிழ்ப்புலமையும் செய்யுள் இயற்றும் ஆற்றலும் படைத்தவர்கள். பிற சாத்தாதவர்களெல்லாம் பூணூமின்றி, இராமாநுஜதாசன் போன்ற தாசநாமம் கொள்ள இவர்கள்,பூணூலும் ஐயங்கார் என்ற பட்டமும் பூண்பர். திருமலை ஐயங்கார் என்னும் பெரியவர் என் தந்தையின் நண்பர். பிராமணர் அல்லாதவர்கள் நிருவகிக்கும் பெருமாள் திருக்கோவில்களில் பூசைக் கைங்கரியமும் குடும்பங்களின் வைதிகக் கிரியைகளும் நடத்தி வந்தனர். பலர் திருக்கோயிற் பணியுடன் ஆசிரியப் பணியும் செய்து வந்தனர். தோற்றத்திலும் பேச்சிலும் தென்கலை வைணவப்பிராமணர்களுக்கும் அவர்களுக்கும் அதிக வேற்றுமை புலப்படாது. உரையாடலில் வைணவப் பரிபாஷை சற்றுத் தூக்கலாகவே காணப்படும். பெருமாள் கோவில்களில் பூசைக் கைங்கரியம் பிராமணர்கள் கைக்குச் சென்றபின் திருப்பள்ளித்தாமப் பணி செய்து வந்தனர். தற்சமயம் அதுவும் நீங்கி வருகின்றது. உலகியல் பணிகளிலும் இலெளகிகக் கல்வியிலும் பலர் நல்ல நிலைமையிலுள்ளனர்.
சாத்தாத வைணவர்களை நம்முடைய அரசு முற்பட்டோரில் சேர்த்துள்ளதோ அன்றி தாழ்த்தப் பட்டோர் பட்டியலில் வைத்து உரிய சலுகைகளை வழங்குகிறதோ தெரியவில்லை.
ஆனால் கடவுள் நம்பிக்கையும் வைதிக ஒழுக்கமும் தாழ்குடிமக்களையும் சமுதாயத்தில் உயர்குடி மக்களுக்குரிய தகுதிக்கும் பெருமைக்கும் உயர்த்தும் எனபதற்குச் சாத்தாத வைணவர்களே தக்க சான்று
முனிவர் அவர்களே,
//அந்தப் பரிவு அப்பெரியாரின் தனிப்பட்ட உணர்வேயன்றி வைணவ அனுட்டானத்தில் வலுயுறுத்தப்பட்டு இன்றளவும் தொடரப்படுகின்றதா என்பது ஐயமே//
இது பரவலாக உள்ளதா என்று எனக்கு தெரியாது – ஆனால் ஸ்ரீ பெரும்புதூர் வானமாமலை மடத்தை நிர்மாணிக்கும் பொறுப்பை பிராமணர் அல்லாத ஒருவருக்கு தான் கொடுக்கப்பட்டுள்ளது – அவரது பெயர் தமிழ் தலைவன் (பேயாழ்வாரின் இன்னொரு பெயர்) – ஒரு படி மேலே போய் – சாற்ராத வைணவரான இவருககு உபநயனம் எல்லாம் செய்துவித்து சாற்றிய வைணவராகவே மாற்றிவிட்டார் இவரது ஆசார்யர் (இது எதோ பிராமணன் தான் உருப்படியானவன் என்பதற்காக செய்யவில்லை, இது பாரதியார் செய்ததை போல)
//ஸ்ரீ பெரும்புதூர் வானமாமலை மடத்தை நிர்மாணிக்கும் பொறுப்பை பிராமணர் அல்லாத ஒருவருக்கு தான் கொடுக்கப்பட்டுள்ளது – அவரது பெயர் தமிழ் தலைவன் (பேயாழ்வாரின் இன்னொரு பெயர்) – ஒரு படி மேலே போய் – சாற்ராத வைணவரான இவருககு உபநயனம் எல்லாம் செய்துவித்து சாற்றிய வைணவராகவே மாற்றிவிட்டார் இவரது ஆசார்யர் (இது எதோ பிராமணன் தான் உருப்படியானவன் என்பதற்காக செய்யவில்லை, இது பாரதியார் செய்ததை போல)//
பேரன்பிற்குரிய சாரங் அவர்களே,
என்ன அற்புதமான செய்தி இது… ஆஹா அருமை…
இன்றைய இனிய ‘கர’ சித்திரைப் புத்தாண்டில் எமக்குக் கிடைத்த மாபெரும் நற்செய்தியாக இதைக் கொள்ளலாமோ?
அனைவருக்கும் இனிய கர வருஷ நல்வாழ்த்துக்கள்…
I think the SriVaishanava sampradayam is losing followers due to the lack of interest among mutts and acharyas in keeping their traditional followers in tact. A renewed effort is needed. In particular an emphasis is to be given to learning the philosophical texts. Emphasis on temple visits alone would not suffice.
D Balasundaram
ஜடாயு,
இரண்டு பாகங்களையும் படித்தேன். அருமையான கட்டுரை.
உங்களிடம் அனுமதி பெறாமல் கோவிலொழுகு பற்றிய விவரங்களை(மட்டும்) காப்பி & பேஸ்ட் செய்து இன்றைய துளசிதளம் (ஸ்ரீ ராமானுஜர் பதிவு., ஸ்ரீரங்கம் பயணம்)இடுகையில் வெளியிட்டுள்ளேன்.
மன்னிப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன்,
துளசி கோபால்.
அன்புள்ள sarang ,
” ஆனால் ஸ்ரீ பெரும்புதூர் வானமாமலை மடத்தை நிர்மாணிக்கும் பொறுப்பை பிராமணர் அல்லாத ஒருவருக்கு தான் கொடுக்கப்பட்டுள்ளது – அவரது பெயர் தமிழ் தலைவன் (பேயாழ்வாரின் இன்னொரு பெயர்) – ”
இவ்வளவு இனிமையான தகவலை அறிவித்த தங்களுக்கு என் வணக்கத்த்தை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த செய்தி பொதுமக்களுக்கு போய்ச்சேர்ந்துள்ளதா ? நமது தளத்தில் வரும் செய்திகள் சிலருக்கே போய்ச் சேரும். பொதுஜன மீடியாவில் இதுபோன்ற செய்திகள் மூடி மறைக்கப்படுவதும், அல்லது 20-ஆம் பக்கத்தில் ஒரு வரியில் , நிகழ்ச்சியின் முக்கிய தகவல்கள் மறைக்கப்பட்டு, அர்த்தமே இல்லாத ஒரு நிகழ்ச்சியாக வெளிவரும். இத்தகவலை நான் ஒரு ஆயிரம் பேரிடமாவது கொண்டு சேர்ப்பேன். நன்மைகள் பரவட்டும்.
ஸ்ரீ ஜடாயு அவர்களி கட்டுரை நல்லக்கருத்துரை. பாராட்டுக்கள். ஸ்ரீவைணவஸ்ரீ அவர்களின் கோயிலொழுகு கலைக்களஞ்சியம் போல நம் தென்னகத்தில் உள்ள பழம் பெரும் கோயில்களுக்கு எல்லாம் கோயிலொழுகு நூல்கள் எழுதப்படவேண்டும். கோயிலியல் என்ற துறைகடந்த அறிவியல் துறை வளர்ச்சி பெறவேண்டும். என்ற ஸ்ரீ ஜடாயு அவர்களின் கருத்து வரவேற்கத்தக்கது. அதற்கு விரைவில் தேசிய அளவில் நிகழ இருக்கும் ஆட்சிமாற்றம் உறுதுணை செய்யும் என்று நம்புகிறேன். இருந்தாலும் இதுபோன்று அருங்களஞ்சியங்களை உருவாக்கும் பெருந்த்திறம் படைத்த சைவ, வைணவ, சாக்த அறிஞர்களை நாம் தேடிக்கண்டடையவேண்டும்.
இது குறித்து ஒரு சிறு தகவல். கோயில்களைப்பற்றிய வரலாற்று ஆய்வுகள் தென்னகத்தில் பல்வேறுப் பல்கலைக்கழங்களில் நடைபெற்றுவருகின்றன.அண்ணாமலைப்பல்கலைகழகத்தில் வரலாற்றுத்துறையில் பல ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. கருனாடகத்தில் உள்ள மைசூர் ப்பல்கலைக்கழகத்திலு ஆய்வுகள் நடந்துவருகின்றன. இவற்றையெல்லாம் தொகுத்த நூல்கள் வந்துள்ளனவா என்பதை அடியேன் அறியேன். கோயில்கள் அவற்றின் வரலாற்றினை அறியவும் ஆனால் அவற்றின் தற்கால சமூக, பொருளாதார அரசியல் முக்கியத்துவத்தினை ஆராயவும் முனையவேண்டும் என்ற ஆர்வம் அடியேனுக்கும் உண்டு. நன்றி ஸ்ரீ ஜடாயு.
ஸ்ரீ. மயூரகிரி சர்மா
“சைவ சமயிகளைப் பொறுத்த வரையில் பிறப்பினால் பிராமணரல்லா ஆதீனங்களில் வீற்றிருக்கும் மஹாசந்நிதானங்களை பிராமணர்கள் ஏற்றுக் கொளகிறார்கள்”.
இது ஒரளவு உண்மை ஆனால் பிராமணர்கள் சைவர்களாயினும் ஸ்மார்த்தர்களாயினும் பிராமணரல்லாத துறவிகளை வணங்குவதுகிடையாது. தில்லையில் கொற்றவன்குடி ஸ்ரீ உமாபதி சிவாச்சாரியார் குருபூஜையில் கண்டேன் தீக்ஷிதர் ஒருவர் வீரசைவ ஆதீனகர்த்தர் ஸ்ரீ சிவப்பிரகாஸ சுவாமிகளுக்கு மாலை அணிவித்து வாழ்த்து வடமொழியில் உரைத்தார். அனால் வணங்கவில்லை. இல்லறத்தோர் துறவிகளை வணங்கவேண்டும். துறவிக்கு வர்ணமில்லை என்று எம் சைவர் நினைத்தாலும் வர்ணதர்மம் இன்னும் அதனைத்தடுக்கிறது என்பதே உண்மை.
ஸ்ரீ மயூரகிரி சர்மா
“நீங்கள் குறிப்பிட்டிருக்கிற இவ்விஷயம் சைவசித்தாந்தத்திற்கும் பொருந்தும். ஏன்? ஓரளவுக்கு அத்வைதத்திற்கும் பொருந்தும் என்றே கருதுகிறேன்’.
சைவசித்தாந்தத்திற்கு, சிவாத்வைதத்திற்கு, வீரசைவத்திற்கும் சன்யாசம் அவசியமில்லை. இல்லறத்தில் உள்ள க்ருஹஸ்தர்களுக்கு தீக்கைக்கூட இல்லறத்தாராலெ செய்யப்படுவது சைவசித்தாந்தத்திலும் ஆராத்யாய சைவத்திலும் சிறப்பு. ஞானம் அடைய இல்லறம் தடையில்லை.ஆனால் அத்வைதிகள் சன்யாசம் இல்லாமல் ஞானம் அடையமுடியாது என்றே நம்புகிறார்கள். ஆகவே வயோதிககாலத்தில் ஆபத் சன்யாசம் பெருகிறார்கள். எனவே இல்லறத்தில் வாழ்ந்த ஞானிகளை அத்வைத வேதாந்திகளிடம் காண்பது அறிதாக இருக்கிறது.
ஸ்ரீ ஜடாயுவின் கட்டுரையினைத்தொடர்ந்து பின்னூட்டத்திலும் ஸ்ரீ சாத்தாதவைணவ்ர்களைப்பற்றிய விவாதம் தொடர்கிறது.
1. எனக்கு ஒரு ஐயம். சாத்தாத வைணவர்கள் உபனயனம் செய்விக்கப்படாத வைணவர்கள் என்றால். பிராமணர் அல்லாத ஸ்ரீ வைணவர்கள் அனைவரும் சாத்தாத வைணவர்களா? அப்படியானல் சாத்தாத வைணவர் என்று தனிப்பிரிவினர் இருப்பது ஏன்?அடியேனுக்கு சாத்தாத வைணவ நண்பர்களும் உண்டு. அவரிடம் கேட்டேன் என்னவித்யாசம். உங்களுக்குப் பூனூல் இல்லையா என்று. அவர் சொன்னார். உண்டு ஆனால் நூல் எண்ணிக்கையில் வித்தியாசம் உண்டு என்றார். ஸ்ரீ சார்ங்கர் போன்ற ஸ்ரீ வைணவ அன்பர்கள் இன்னும் கொஞ்சம் தெளிவு படுத்தவேண்டும்.
2. ஸ்ரீ முனைவர் ஐயா அவர்கள் கொங்குமண்டலத்தில் சாத்தாத வைணவர்களைப்பற்றி கூறியுள்ளார். அவற்றை கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களில் அடியேனும் கண்டேன். கிராமப்புறங்களில் உள்ள திம்மராயப்பெருமாள்(திருப்பதி பொருமாளை கன்னடத்திலும் தெலுங்கிலும் இப்படி அழைப்பர் புன்செய்ப்புளியம்ம்பட்டி, மொண்டிபாளையம், கா. புங்கம்பாளையம் இன்னும் பிற), சென்றாயப்பெருமாள், ஆதி நாராயணப்பெருமாள் போன்ற பெருமாள் கோயில்களில் பெரும்பாலும் பூஜை செய்பவர்கள் எளிய வருமானத்திலும் தொண்டு செய்பவர்கள் இந்த குடியினரே. இவர்களை திம்மராயப்பொருமாளை க்குலதெய்வமாகக் கொண்டாடும் குடியினர் யாவரும் பிராமணர் என்றே போற்றி சுவாமி என்றே அழைப்பதனையும்கண்டிருக்கிறேன்.
3. பொருளாதாரத்தில் தாழ்ந்த நிலையில் இருக்கும் சாத்தாத வைணவர்களுக்கு அரசு சலுகைகள் உள்ளனவா? என்பது முனைவர் ஐயா அவர்களின் ஒரு கேள்வி. சாத்தாதவைணவர்கள் தமிழக அரசின் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ளனர்.