அணு மின்சக்தி நமது அத்தியாவசியத் தேவை

எச்சரிக்கை-1:

“நாங்கள்ளாம் அந்த காலத்திலே” என்று கவுண்டமணி நீட்டி முழக்கி கிண்டல் அடிக்கும் “அந்த காலத்தில்” நாம் வாழ வில்லை. வீட்டு உபயோகத்திற்காக தண்ணீர் தொட்டிக்கு தண்ணீரை ஏற்றுவதிலிருந்து, சமையல், பொழுதுபோக்கு என்று நம் வாழ்வின் அனைத்து படிகளும் இன்று மின்சாரத்தின் அடிப்படையில்தான் நடக்கின்றன.

தமிழ்நாட்டில் சென்னை தவிர்த்த பிராந்தியங்களில் தினமும் 3 மணிநேரம் மின்தடை அதிகாரபூர்வமாக அறிவிக்கப் பட்டாலும், நான் வாழும் தஞ்சாவூர் மாவட்டத்தில் தினமும் 4 முதல் 5 மணிநேரம் மின்தடை அமலில் உள்ளது. சுட்டெரிக்கும் இந்த கோடை வெயிலில் மின்சாரம் இல்லாமல் வாழ்வதன் துயரத்தை எழுத வேண்டியதில்லை. “மின்சாரம் அன்றி ஒரு அணுவும் அசையாது” என்ற நிலையில்தான் இன்றைய வாழ்க்கையை நாம் கழிக்க வேண்டியுள்ளது.

எச்சரிக்கை-2:

சமீபத்தில் ஜப்பானின் ஃபுக்குஷீமா அணு உலைகளில் ஏற்பட்ட நிகழ்வுகள் அணுமின்சக்தியின் அவசியம் பற்றிய விவாதங்களை உலகம் முழுவதும் ஆரம்பித்து வைத்துள்ளது. விவாதங்கள் ஜனநாயகத்தில் அவசியமான ஒரு வழிமுறையாக இருந்தாலும், முன் அனுமானங்களுடனும் முன் முடிவுகளுடனும், உணர்ச்சி வேகத்திலும் இந்த விவாதத்தை அணுகுபவர்கள், ஏற்கெனவே உணர்ச்சி வசத்தில் உள்ள மக்களை மேலும் குழப்பி உலகை வேறு திசையில் கொண்டு செல்ல முயல்கின்றனர். தற்பொழுதைய நிலவரப்படி ஃபுக்குஷீமா அணு உலைகள் 6 முதல் 9 மாதங்களுக்குள் முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் வரும் என்று அணு நிலைய அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

ஆனாலும் சில வார்த்தைகள் உலகில் உள்ள அனைத்து விவரம் அறிந்த மக்களுக்கிடையேயும் அதிர்வுகளையும், பயத்தையும் உண்டாக்கி உள்ளன. Meltdown, Radiation, Radio Active Leakage போன்றவை.

எச்சரிக்கை-3:

அணு சக்தியின் மூலம் மின்சாரத்தை உருவாக்குவது மிகவும் அபாயகரமானது. இது மனித சமுதாயத்திற்கு மிகவும் ஆபத்தானது. இந்த துறையைப் பற்றின வேறு விவாதங்கள் அவசியமில்லை என்பவர்களுக்காக இந்த கட்டுரை எழுதப்பட வில்லை.”தூங்குபவர்களை எழுப்பி விடலாம்.ஆனால் தூங்குபவர்களைப் போல் பாசாங்கு செய்பவர்களை எழுப்ப முடியாது என்பது நம் முன்னோர் மொழி.”

அணு சக்தியின் மூலம் மனித சமுதாயத்திற்கு தேவையான மின்சக்தியில் ஒரு பகுதியை பெறுவது புத்திசாலித்தனமானது. அணு உலைகளின் நம்பகத்தன்மை, பாதுகாப்பு உள்ளிட்ட சந்தேகங்கள் இருந்தாலும் நிபுணர்களின் கருத்துகளின் படியும், Transparency and Accountabilityஐ அதிகாரிகளின் மேல் திணிப்பதன் மூலமும் அறிவுபூர்வமான முடிவுகளை எடுத்தால் மின்சாரத்தை பாதுகாப்பாக உருவாக்க முடியும் என்று சிந்திப்பவர்களுக்காகவும், சரியான தொனியிலும் இந்த கட்டுரை எழுதப்படுகிறது.

எச்சரிக்கை-4:

நான் ஒரு அறிவியலாளர் இல்லை. ஆகவே இந்த கட்டுரையில் அணுத்துறையின் சொல்லாடல்கள் இருக்காது. ஒரு சாதாரண பார்வையாளன் என்ற முறையிலும், என் உலக அனுபவங்களின் அடிப்படையிலும் மட்டுமே இந்த கட்டுரை எழுதப்பட்டுள்ளது. வெற்றுப் புனைவுகளை (Myths) மறுதலித்து, அறிவியல் உண்மைகளின் படியும், நடைமுறை யதார்த்தத்தின் படியும், எந்த நவீன மின்சார உருவாக்க முறைகளும் ஆபத்துக்களை உள்ளடக்கியுள்ளது என்பதை உணர்ந்தும் இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

முன்னுரை:

orangemoonபௌர்ணமியில், சந்திரனை தொடுவானில் (Horizon) காண்பவர்கள் அது அளவில் பெரியதாக இருப்பதாக உணர்வார்கள். ஆனால் அதே சந்திரன் சில மணிநேரம் கழித்து வானத்தின் நடு உச்சியில் வரும்பொழுது அளவில் சிறியதாக நம் கண்களுக்கு தோன்றும். உண்மையில் சந்திரனுக்கும் பூமிக்கும் உள்ள தூரம் சில மணி நேரங்களில் மாறுவதில்லை. சந்திரனின் அளவு மாறுபடுவதை Optical Illusion என்று அழைப்பார்கள்.

இதே போன்று மனிதர்களுக்கு “Cognitive Illusion“ம் ஏற்படுகிறது. ஒவ்வொரு முறையும் இரயில் விபத்து ஏற்படுகையில் அது ஊடகங்களில் மிக அதிக முக்கியத்துவம் பெறுகிறது. உயிர் இழப்பு ஏற்படுத்தும் இரயில் விபத்துக்கள் வருடத்திற்கு ஒன்றோ அல்லது இரண்டோதான். அதிகபட்சமாக 200 முதல் 300 பேர் வரை வருடத்திற்கு இறக்கலாம். ஆனால் சாலை விபத்துகளில் மட்டும் இந்தியாவில் வருடத்திற்கு 1,30,000 பேர் இறக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் சராசரியாக 350 பேர் சாலை விபத்துகளில் இறக்கிறார்கள். ஆயிரக்கணக்கானோர் காயம் அடைகின்றனர்.

சாலையில் செல்லும் வாகனங்களை விட இரயில் பயணம் பற்பல மடங்கு பாதுகாப்பானது. இதைப் போன்றே விமானப் பயணமும்அதிக பாதுகாப்பு உடையதுதான்.

இக்கட்டுரை மேலே கூறிய அணுசக்தியைப் பற்றின Cognitive Illusionஐ போக்க முயற்சி செய்யும்.

மின்சாரத்தின் தேவை:

மின்சாரத்தைப் பற்றின புரிதலில் சில விவரங்களை நாம் அறிவது அவசியம்.

(1) எண்ணெய், எரிவாயு, நிலக்கரி, அணு சக்தி போன்றவற்றின் மூலமாகவே உலகின் பெரும்பான்மையான மின்சாரத்தேவை பூர்த்தி செய்யப் படுகிறது.

(2) நீர்மின்சக்தி உலகின் எல்லா பிராந்தியங்களிலும், எல்லா பருவங்களிலும் கிடைப்பதில்லை.

(3) காற்றாலைகள் மூலம் மின்சாரம் எடுப்பதிலும் பருவகால சிக்கல்கள் உள்ளன. மேலும் முதலீடுகளும் மிக அதிகம்.

உதாரணமாக தமிழகத்தில் காற்றாலைகள் மூலம் மின்சாரம் எடுக்கப்படக் கூடிய அனைத்து தெற்கு மாவட்ட பிராந்தியங்களிலும் காற்றாலைகள் பொருத்தப்பட்டு விட்டன. கடற்கரையின் ஓரங்களில் வீசும் காற்றில் இருந்து மின்சாரம் எடுப்பது எல்லாம் ஆராய்ச்சி அளவிலேயே உள்ளன. மேலும் தமிழகத்தில் காற்றாலை மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் ஒரு யூனிட்டிற்கு 11 ரூபாய்கள் என்ற அளவில் விற்கப்படுகிறது.

windmills-in-tamilnadu

(4) சூரிய ஒளியின் மூலம் கிடைக்கும் மின்சாரத்தின் அளவு மிகவும் குறைவு. கால்குலேட்டர்கள் போன்ற சிறிய உபகரணங்கள் இந்த சக்தியைக் கொண்டு உருவாக்கப்பட்டன. தற்காலத்தில் வீடுகளில் குளிக்கத் தேவைப்படும் வெந்நீருக்காக சூரிய சக்தி பயன்பட்டாலும், பெரிய அலுவலகங்கள், பெரிய தொழிற்சாலைகளில் தேவைப்படும் பெரிய உபகரணங்கள் போன்றவற்றை சூரியசக்தியின் மூலம் இயக்க முடியவில்லை.

(5) Alternative Energy என்று கூறப்படும் இம்முறைகளால் மக்களின் மின்சாரத்தேவை முழுவதையும் பூர்த்தி செய்ய இயலவில்லை. வரும் காலங்களில் அறிவியல் மேலும் முன்னேறி இந்த நிலை மாறலாம். ஆனால் தற்பொழுதைய நிலவரப்படி நிலக்கரி போன்றவற்றை முற்றும் முழுவதுமாக நம்மால் ஒதுக்க முடியாது.

(6) இந்தியா போன்ற வளரும் நாடுகளில் நம்மால் மிகப்பெரிய அளவில் முதலீடுகளை செய்து நம் மின் தேவையின் ஒரு சிறிய பங்கை பூர்த்தி செய்து கொள்வது நடைமுறை சாத்தியமல்ல.

(7) மனிதருக்கோ, நம் புவி கிரகத்திற்கோ ஒரு துளியும் சேதம் விளைவிக்காத மின் உற்பத்தி முறைகள் தற்பொழுதைய சூழலில் உருவாகவில்லை.

குறைந்த அளவிலாவது இயற்கையை துவம்சம் செய்தால் மட்டுமே மனிதர்கள் வாழ முடியும் என்ற நிலைதான் இன்று உள்ளது. இந்த நடைமுறை யதார்த்தத்தை ஒப்புக்கொண்டு மேலே பயணிக்கலாம்.

ஒரு அறிவியல் பூர்வமான ஒப்பீடு: சாலை விபத்துகளையும், இரயில் விபத்துகளையும் ஒப்பீடு செய்ததைப் போலவே, அணு மின்சக்தியையும், மற்ற மின் உற்பத்தி முறைகளையும் அலசலாம்.

எண்ணெய் மற்றும் நிலக்கரியின் வாயிலாக நாம் உருவாக்கும் மின்சக்தி எவ்வித ஆபத்துகளை உள்ளடக்கி உள்ளது என்பதை நாம் முழுமையாக உணருவதில்லை.

(1) கடந்த வருடம் ஏப்ரல் மாதத்தில், அமேரிக்காவில் பிரிட்டிஷ் பெட்ரோலியம் (BP) நிறுவனத்தின் ஒரு எண்ணெய் உற்பத்திக்கிடங்கில் ஏற்பட்ட விபத்தை நாம் மறந்திருக்க வாய்ப்பில்லை. தீவிபத்து ஏற்பட்ட உடனேயே 11 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். 17 பேர் காயமுற்றனர். மேலும் முக்கியமாக சுமார் மூன்று மாத காலத்தில் 4.9 மில்லியன் பேரல் எண்ணெய் கடலுக்குள் கலந்தது.

birds-ducked-in-oilஇதனால் நேரடியாக சுற்றுலாத்துறை, மீன் பிடிப்பு போன்ற அப்பிராந்திய மக்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டன. மறைமுகமாக அக்கடல் பகுதியில் வாழ்ந்த உயிரினங்கள் பெரும் சேதத்திற்கு ஆளாகின. விளிம்பு நிலையில் வாழ்ந்து வந்த சில உயிரினங்கள் முற்றும் முழுவதுமாக அழிந்திருக்கலாம் என்று நம்பப் படுகிறது. அக்கடல் பகுதி இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு இயல்பு நிலைக்கு திரும்பாது என்றும் கணிக்கப்படுகிறது. வரும் காலங்களில் கடல்வாழ் உயிரினங்களுக்கும் அக்கடல் பகுதியை சுற்றி வாழும் மனிதர்களுக்கும் ஏற்படப்போகும் பாதிப்புகள் குறித்து முழுமையாக கணிக்க முடியவில்லை என்பது நிபுணர்களின் கருத்து.

இந்த விபத்தைத் தொடர்ந்து அமேரிக்க அரசாங்கம் புதியதாக 6 மாதத்திற்கு எண்ணெய் உற்பத்தி தொழில் தொடங்க அனுமதி அளிப்பதை நிறுத்தி வைத்தது. சரியாக 6 மாதம் கழித்து அனுமதியை வழங்க ஆரம்பித்தது. விபத்து ஏற்பட்டது அல்லது ஏற்படலாம் என்பதற்காக எண்ணெய் உற்பத்தியை நிறுத்துவது சிறுபிள்ளைத்தனமாகவும்
யதார்த்தத்திற்கு விரோதமாகவும் அமையும். புதிய கடினமான விதிமுறைகளுடன் எண்ணெயை தோண்டி எடுப்பதுதான் நம்மால் செய்யக்கூடியது. அதைத்தான் அமேரிக்க அரசாங்கமும் செய்தது.

(2) சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள Paul Scherrer Instituteன் கணக்குகளின் படி, 1969 முதல் 2000 வரையிலான 32 ஆண்டுகளில் மட்டும் 20,000க்கும் அதிகமான மக்கள் எண்ணெய் சம்பந்தப்பட்ட விபத்துகளால் உயிரிழந்தனர். 15,000க்கும் அதிகமானவர்கள் நிலக்கரி சம்பந்தப்பட்ட விபத்துகளில் இறந்துள்ளனர். (Oil and Coal Supply Chains). இதில் 11,000 பேர் சீனாவில் மட்டும் இறந்துள்ளனர்.

ஒவ்வொரு யூனிட் மின்சார தயாரிப்பிலும் இறக்கும் மனிதர்களை கணக்கில் கொண்டால், எண்ணெய் மற்றும் நிலக்கரியினால் ஏற்படும் உயிரிழப்புகள் அணுசக்தியினால் ஏற்படும் உயிரிழப்புகளை விட 18 மடங்கு அதிகம்.

பொருளாதார கூட்டுறவு மற்றும் முன்னேற்றத்திற்கான 34 நாடுகளின் கூட்டமைப்பு OECDன் கணக்கின் படி, மாசடைந்த வளி மண்டலத்தினால், வருடம் 2000த்தில் மட்டும் 10 இலட்சம் பேர் இறந்திருக்கலாம் என்று கணித்துள்ளனர். ஒரு ஒப்பீட்டளவில் இந்த உயிர் இழப்புகள் 500 செர்னோபில் அணு விபத்துகளை விட அதிகமானது.

(3) நம் போன்றவர்களுக்கு வரும் அடுத்த சந்தேகம் உடல் பாதிப்புகளைப் பற்றியது. விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் அணுசக்தியில் குறைவாக இருந்தாலும் தலைமுறைகளாக தொடரும் உடல் ரீதியான பாதிப்புகள் கண்டிப்பாக நம்மை அச்சுருத்துகின்றன.

இதிலும் எண்ணெய் மற்றும் நிலக்கரியின் பங்கு சிறிய அளவில் இல்லை. மனிதர்களால் உருவாகியிருக்கும் மாசடைந்த வளி மண்டலத்தினால் பல இலட்சம் மக்களுக்கு, (குழந்தைகளுக்கும்தான்) சுவாசக்குழாய் சம்பந்தமான பல வியாதிகள் ஏற்படுகின்றன. சுரங்கங்களில் வேலை செய்பவர்களுக்கும், அதை சுற்றி வாழும் மக்களுக்கும் நுரையீரல் சம்பந்தமான நோய்கள் வரத்தான் செய்கின்றன. ஆகவே உயிரிழப்பானாலும் சரி, உடல்ரீதியான பாதிப்புகளாக இருந்தாலும் சரி, ஒப்பீட்டளவில் அணுசக்தியினால் ஏற்படும் பாதிப்புகள் குறைவுதான்.

மனிதர்களுக்கு துளியும் சேதம் விளைவிக்காத மின் உற்பத்தி முறைகள் இன்றைய நிலையில் நம் வசம் இல்லை. அதற்கான தொழில்நுட்பம் வரும்வரை விபத்துகளினால் கிடைக்கும் படிப்பினைகளை கொண்டு மேலும் விதிமுறைகளை கடினப்படுத்துவதுதான் நாம் செய்யக்கூடியது.

Kundankulam Nuclear Reactor Interior
Kundankulam Nuclear Reactor Interior

அணு விபத்துகள்:

கடந்த 50 வருடங்களாக இரண்டு விபத்துகளைத் தவிர உலகம் முழுவதிலும் (இந்தியா உட்பட) பல நூறு அணு உலைகள் பாதுகாப்பாகவும், அமைதியாகவும் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

அணு விபத்துகள் என்றவுடன் நமக்கு ஹிரோஷீமா மற்றும் நாகசாகி போன்ற பெயர்கள்தான் ஞாபகத்துக்கு வரும். ஆனால் அது 2ம் உலகப் போரின் போது நாடுகளுக்கு இடையேயான வேண்டுமென்றே உருவாக்கப் பட்ட நிகழ்வு. அதையும் அணு விபத்துகளையும் ஒன்றாக ஒப்பிட முடியாது.

கடந்த 50 ஆண்டுகளில் 2 மிகப்பெரும் அணு விபத்துகள் ஏற்பட்டுள்ளன. உக்ரேய்ன் நாட்டின் செர்னோபில் மற்றும் அமேரிக்காவின் “த்ரீ மைல் ஐலேந்து“.

அமேரிக்காவில் நடந்த விபத்தில் ஒருவரும் உயிரிழக்க வில்லை. ஆனால் செர்னோபில்லில் நடந்த அணு விபத்தில் 31 பேர் நேரடியாக உயிரிழந்தனர். மேலும் அதைத் தொடர்ந்த கதிர்வீச்சின் தாக்கத்தினால் 9000த்திலிருந்து 31000 பேர் வரை இறந்திருக்கலாம் என்று ஒரு கணிப்பீட்டிலிருந்து தெரிகிறது.

இதில் பல கணிப்பீடுகள் வெளி வந்துள்ளன. புற்று நோய் ஏற்பட காரணங்கள் தற்காலத்தில் அதிகமாக உள்ளதால் கதிர்வீச்சினால் ஏற்படும் புற்றுநோயை வகைப்படுத்தி கணிப்பதில் சிரமங்கள் ஏற்படுகின்றன.மேலும் உலகின் மற்ற பிராந்தியங்களில் ஏற்படும் புற்றுநோய் ஏற்படும் மனிதர்களின் எண்ணிக்கையும் செர்னோபில் பிராந்தியத்தில் ஏற்படும் புற்றுநோய்க்கும் வித்தியாசம் இல்லாததாலும் இந்த ஆய்வினால் சரியான எண்ணிக்கையை எதிர்காலத்திலும் தர இயலாது என்பதே இன்றைய நிலை.

ஜப்பானில் ஏற்பட்டிருக்கும் அணு நெருக்கடியைத் தொடர்ந்து இந்தியாவின் மகாராஷ்ட்ரா மாநிலத்தின் ஜைட்டாபூரில் அமையவிருக்கும் அணு உலைகளுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது.

இந்த 3 விபத்துகளின் சம்பந்தப் பட்ட அணு உலைகளும் ஒன்றுக்கொன்று வித்தியாசம் கொண்டவை. ஒன்றைவிட மற்றொன்று அதிக பாதுகாப்பை உள்ளடக்கிய வடிவமைப்பை கொண்டவை (Better Design).

அணு உலைகளினால் கிடைக்கும் மின்சாரத்தைப் போன்றே அதன் வெப்பமும் அதிகமாகவே இருக்கும். அணு உலைகளின் இயக்கத்தை தடாலடியாக நிறுத்த முடியாது. படிப்படியாகவே நிறுத்த முடியும். வெப்பத்தின் அளவும் படிப்படியாகவே குறையும்.

(1) 1ம் தலைமுறை அணு உலை:

செர்னோபில் அணு உலை 1ம் தலைமுறை தொழில்நுட்பத்தை சார்ந்தது. அணு சக்தியின் மூலம் மின்சார உற்பத்தி செய்த பிறகு உருவாகும் கதிர்வீச்சு பொருட்களை விபத்தின் பொழுது வெளியில் கசியவிடாத பாதுகாப்பு அரண் இல்லாதது. எனவேதான் 1986ல் விபத்து ஏற்பட்ட உடனேயே கதிரியக்கம் நாற்புறங்களிலும் பரவி அழிவை ஏற்படுத்தியது.

(2) 2ம் தலைமுறை அணு உலை:

அமேரிக்காவின் “த்ரீ மைல் ஐலேந்தில்” இருந்த அணு உலையில் 1979ல் விபத்து ஏற்பட்டது. ஆனால் அணு உலையைச்சுற்றி எஃகு மற்றும் கான்க்ரீட் கலவையிலான பாதுகாப்பு அரண் இருந்ததால் கதிரியக்கம் குறைந்த அளவே வெளியில் விடப்பட்டது. இந்தக் கதிர் வீச்சினாலும் மனிதர்களுக்கு எந்த கெடுதலும் ஏற்பட வில்லை.

ஜப்பானின் ஃபுக்குஷீமா அணு உலையிலும் இந்த பாதுகாப்பு அரண் உள்ளது. அதனால்தான் கதிரியக்க வீச்சு இன்னும் முழுவதுமாக வெளியேற வில்லை. இங்கே இன்னொரு விஷயத்தையும் குறிப்பிட்டாக வேண்டும்.

2ம் தலைமுறை அணு உலைகள் பூகம்பம், சுனாமி போன்றவற்றை உத்தேசித்துத்தான் அமைக்கப் படுகின்றன. பூகம்பம் ஏற்பட்ட சில நிமிடங்களில் ஃபுக்குஷீமா அணு உலைகள் தானாகவே இயக்கத்தை நிறுத்தி விட்டன. வெப்ப அளவு 100லிருந்து 6 சதவிகிதமாக குறைந்து விட்டது. ஆனால் இந்த 6 சதவிகித வெப்பமும் படிப்படியாக குறைக்கப்பட வேண்டும்.

the-damaged-fukushima-daiichi-power-plant

பூகம்பத்தினால் குளிரூட்டிகளுக்கு தேவையான மின்சாரம் செயல் இழந்தது. ஆனால் ஜெனரேட்டர்கள் மின்சாரத்தை அளிக்கத் தொடங்கின. பிறகு வந்த சுனாமி ஜெனரேட்டர்களை செயலிழக்க செய்தது. உடனே பேட்டரிகளைக் கொண்டு குளிரூட்டிகள் செயல்பட ஆரம்பித்தன. ஆனால் அந்த பேட்டரிகள் 8 மணி நேரம் மட்டுமே செயல்பட முடியும். 8 மணி நேரம் கழித்துதான் பிரச்சினை ஆரம்பமானது.

இந்த நிகழ்வில் நாம் கவனிக்க வேண்டிய விஷயங்கள். ஜெனரேட்டர்கள் பூமி மட்டத்தில் தாழ்வாகவே அமைக்கப் பட்டதால் சுனாமியால் செயலிழந்தன. பேட்டரிகள் வெறும் 8 மணி நேரங்களுக்காகவே உருவாக்கப் பட்டன. இந்த 2 அம்சங்களும் சரி செய்யப்பட்டால் அணு உலை வெப்பமடையும் பிரச்சினையிலிருந்து தப்ப முடியும் என்பது நிபுணர்களின் கருத்து.

1ம் தலைமுறை அணு உலையை விட 2ம் தலைமுறை அணு உலை 1600 மடங்கு பாதுகாப்பானது. பின் ஏன் ஜப்பானில் பிரச்சினை ஏற்பட்டது? இந்தியாவில் ஏற்படுமா?

(3) 3ம் தலைமுறை அணு உலை:

ஜப்பானின் அணு உலை பிரச்சினை ஆரம்பிப்பதற்கு முன்னரே 3ம் தலைமுறை அணு உலை வடிவமைப்புக்கான தொழில்நுட்பம் வந்து விட்டது. இந்த விபத்து மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை நம்மை எடுக்கத் தூண்டும்.

3ம் தலைமுறை அணு உலைகள் குளிரூட்டிகள் செயல் இழந்தாலும் தானாகவே படிப்படியாக வெப்பத்தை குறைத்து கொண்டு தன் இயக்கத்தை நிறுத்தும் வல்லமை வாய்ந்தவை. ஆகவே மின்சாரம் இல்லை. ஜெனரேட்டர்கள் இல்லை. பேட்டரிகள் இல்லை என்றெல்லாம் நாம் கவலைப் பட வேண்டியதில்லை.

இந்தியாவில் கட்டப்பட இருக்கும் புதிய அணு உலைகள் 3ம் தலைமுறை தொழில்நுட்பத்தின் அடிப்படையில்தான் உருவாகப் போகின்றன. ஜைட்டாப்பூரில் மட்டுமல்லாது இந்திய-அமேரிக்க அணு ஒப்பந்தத்திற்கு பிறகு உருவாகப்போகும் 20க்கும் அதிகமான அணு உலைகள் 3ம் தலைமுறை தொழில் நுட்பத்துடன்தான் அமையப் போகின்றன.

ஜைட்டாப்பூரில் சில அமைப்புகள் தாங்களும் முழுமையான புரிதல் இல்லாமல், அப்பாவி மக்களையும் பயத்தில் ஆழ்த்தி இந்த அணு உலைகள் கட்டப்படுவதை தடுக்க முயல்கின்றன. சிலர் சொந்த மற்றும் அரசியல் ஆதாயத்திற்காகவும் எதிர்க்கின்றனர்.

jaitapurmarch

வளரும் இந்தியாவிற்கு அடுத்த 25 ஆண்டுகளில் தற்பொழுதைய அளவை விட 2 மடங்கு மின்சக்தியை அதிகப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. இந்நிலையில் நாம் எண்ணெய், எரிவாயு, நிலக்கரி, அணு சக்தி என்று அனைத்து முறைகளிலும் மின்சாரத்தை உற்பத்தி செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். நம் அனைத்து மின் தேவையையும் ஒரு முறை நிரப்ப முடியாது.

சில தகவல் துளிகள்:

 • ஜப்பானின் அணு உலைகளிலிருந்து வெளியேறிய கதிர் வீச்சு அமேரிக்காவின் மேற்கு கடற்கரைப் பகுதி வரை வந்து விட்டது. ஒரு வருடம் முழுவதும் இந்த கதிர்வீச்சின் பாதையில் இருப்பவர்களுக்கு,ஒரு C.T. Scan செய்யும் போது உடலில் ஏற்படும் கதிர்வீச்சின் அளவு இருக்கும்.
 • ஃபுக்குஷீமா அணு உலைகளிலிருந்து கதிர்வீச்சுடன் கூடிய கடல் நீர் பசிபிக் பெருங்கடலில் கலக்கப்பட்டுள்ளது. இது 5 நீச்சல் குளத்தில் இருக்கும் தண்ணீரின் அளவு. பசிபிக் பெருங்கடல் 300 ட்ரில்லியன் நீச்சல் குளங்கள் அளவிற்கு பெரியது. கடலில் கரைந்த பெருங்காயம் போல இந்த கதிர்வீச்சு தண்ணீர் உருத்தெரியாமல் மறைந்து விடும்.(பொழுது போகவில்லையென்றால் தினமும் கதிர்வீச்சு தண்ணீரை கலக்க வேண்டும் என்று கூற வில்லை. ஒப்பீட்டை நிதானமாக புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக எழுதினேன்.)
 • அணு உலைகளின் கதிர்வீச்சு குறிப்பாக இரண்டு தனிமங்களால் ஆனது. ஒன்று Iodine-131. இரண்டு Caesium-137. ஜப்பானின் அணு உலைகளில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சில் அதிகமாக Iodine-131தான் உள்ளது. இதன் ஆயுள் 8 நாட்கள் மட்டுமே. அணு உலைகளின் பிரச்சினைகள் தீர்ந்தவுடன், 8 நாட்கள் கழித்து மக்கள் குடியேறலாம். ஆனால் குறைந்த அளவில் Caesium-137ம் வெளியேறியுள்ளது. இதன் ஆயுட்காலம் 30 வருடங்கள். ஆகவே பாதிக்கப்பட்ட இடங்களிலிருந்து முழுவதுமாக நீக்கப்பட்டவுடன்தான் மக்கள் குடியேற முடியும். தற்பொழுதைய நிலவரப்படி மிகக் குறைந்த அளவே இது வெளியேறி உள்ளது.

படிப்பினைகள்:

எந்த விபத்தும் சில படிப்பினைகளை மனிதனுக்கு அளிக்கும். அதிலிருந்து தொழில் நுட்பத்தை மேம்படுத்திக் கொண்டுதான் மனித சமுதாயம் முன்னேறியுள்ளது. ஜப்பானில் ஏற்பட்ட விபத்தும் நமக்கு பல படிப்பினைகளை அளித்துள்ளது.

(1) விபத்து நடந்ததாக அறிவிக்கப் பட்டு பல நாட்களுக்கு உண்மையான தகவல்கள் வெளிவரவில்லை.

(2) எந்த தனியார் கம்பெனியும் இலாப நோக்குடன்தான் செயல்படும். அமேரிக்காவில் எண்ணெய் விபத்தை ஏற்படுத்திய British Petroleum ஆக இருந்தாலும் சரி, ஜப்பானில் விபத்தை ஏற்படுத்திய TEPCO நிறுவனமாக இருந்தாலும் சரி, விபத்திற்கு பிறகு அளிக்கப்பட வேண்டிய இழப்பீட்டின் பயம்தான் கம்பெனிகளுக்கு இருக்கும்.

bp-oil-spill-underwaterBP நிறுவனம் எண்ணெய் விபத்து நடந்த பல வாரங்களுக்கு சரியான தகவல்களை தரவில்லை. ஒவ்வொரு நாளும் 1000 பேரல்கள்தான் எண்ணெய் வெளியேறுகிறது என்று கூறி வந்தது. கடைசியாகத்தான் 50000 முதல் 75000 பேரல்கள் வெளியேறுகிறது என்று ஒப்புக்கொண்டது. இதற்கு காரணம் சுலபமானது. ஒரு பேரல் எண்ணெயை கடலில் கலந்தால் அதற்கு ஒவ்வொரு நாளும் 1000 டாலர்கள் நஷ்ட ஈடு தர வேண்டும் என்பது ஒப்பந்தம்.

இதே நிலைதான் ஜப்பானிலும் ஏற்படுகிறது. கதிர்வீச்சின் அளவை குறைத்து காண்பிக்கவே அந்த கம்பெனி முற்பட்டது. ஆனால் சில வாரங்களுக்கு பிறகு உண்மையான அளவு வெளிவர ஆரம்பித்தது.

அமேரிக்காவிலும் ஜப்பானிலும் ஜனநாயகம் வலுவாக உள்ளதால் மக்களை ஏமாற்ற முடியாது. சில நாட்கள் தவறான தகவல்கள் வெளிவந்தாலும் முடிவில் சுயாதீன நிபுணர்களின் குரல் ஓங்கி விடும்.

(3) விபத்து நடந்த சில வாரங்களுக்கு சர்வதேச நிபுணர்களை TEPCO நிறுவனம் அனுமதிக்க வில்லை.

(4) சில விஷயங்களை கடினமாக இருந்தாலும் எழுதித்தான் தீர வேண்டும்.

அமேரிக்காவில் எண்ணெய் விபத்து ஏற்பட்டவுடன் அதிபர் ஒபாமா BP கம்பெனியுடன் பேசி 20 பில்லியன் டாலர்களை இழப்பீட்டிற்கு முன்தொகையாக செலுத்த வைத்தார். ஒரு அதிகாரியை இந்த தொகை சரியாக பாதிக்கப்பட்ட மக்களை சென்றடைய நியமித்தார். இந்த அதிகாரி கிட்டத்தட்ட 8 இலட்சம் மக்களின் மனுக்களை விசாரித்து இழப்பீட்டு தொகையை அளித்து வருகிறார்.

இந்த நிகழ்ச்சியை நம் நாட்டில் 80களில் நடந்த போபால் விஷவாயு விபத்துடன் ஒப்பிட்டு பார்த்தால் நமக்கே நம் வலு புரிந்து விடும்.

ஜப்பானிய அரசும் முதல்கட்டமாக 640 மில்லியன் டாலர்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு TEPCO நிறுவனத்தை அளிக்க வைத்துள்ளது.

(5) ஆனால் இதற்கு தீர்வாக, இடதுசாரிகள் முன்வைக்கும் அரசாங்கமே கம்பெனிகளை நடத்துவதை ஒப்புக்கொள்வது சிக்கல் தீர்வதை விட மேலும் அதிக சிக்கல்களுக்குத்தான் வழிவகுக்கும்.

தனியார் நிறுவனங்களாவது சில நாட்களுக்குத்தான் மக்களை ஏமாற்ற முடியும். சுயாதீன நிபுணர்களும் ஊடகங்களும் ஏற்படுத்தும் அழுத்தம் அரசாங்கத்தை சரியான முடிவை நோக்கி நகர்த்தி விடும். ஆனால் கம்பெனி அரசாங்கத்தால் நடத்தப் பட்டால் அந்த பிராந்தியத்திற்கே யாரையும் உள்ளே விடாமல் தகவல்களை இருட்டடிப்பு செய்து விடுவார்கள்.

வலி தனக்கு வந்தால்தான் தெரியும்:

இந்திய-அமேரிக்க அணுமின்சக்தி ஒப்பந்தத்தை முழுமையாக ஆதரிப்பவன் நான். ஒரு நண்பரிடம் பேசிக்கொண்டிருந்த போது, உன்னால் ஜைட்டாப்பூரில் தைரியமாக வாழ முடியுமா என்று வினவினார். சில விஷயங்கள் நடந்தால் அங்கு வாழ எனக்கு எந்த பயமும் இல்லை என்றேன்.

 • முதலில் அந்த அணு உலையை ஒரு தனியார் கம்பெனிதான் நடத்த வேண்டும்.
 • அரசாங்கத்திற்கும் அந்த கம்பெனிக்கும் இடையிலான ஒப்பந்தம் மக்கள் மன்றத்தில் சமர்பிக்கப்பட வேண்டும்.
 • விபத்து ஏற்படுகையில் உடனடியாக சுற்றி வாழும் மக்களுக்கு அபாய சங்கு போன்ற வசதிகள் வேண்டும்.
 • விபத்து ஏற்பட்டவுடன் அற்பமான திமிரை விட்டு மேற்கத்திய நிபுணர்களை உதவிக்கு அழைக்க ஒப்பந்தம் வழி செய்ய வேண்டும்.
 • விபத்தின் அளவிற்கேற்ப இழப்பீடுகள் வழங்கப்பட ஒப்பந்தத்தில் இடம் இருக்க வேண்டும்.
 • அப்பிராந்தியத்தில் உள்ள வீடுகள் மற்றும் பிற சொத்துகளுக்கு காப்பீடு வழங்குவதை மறுப்பது, காப்பீட்டு நிறுவனங்களுக்கு எதிரான குற்றமாக கருதப் பட வேண்டும்.
 • விபத்து ஏற்படின் விளைநிலங்களை வைத்துள்ளவர்களுக்கு வேறு பகுதியில் விளைநிலங்களை அளிக்க ஒப்பந்தம் வழி செய்ய வேண்டும்.

மேற்கூறிய விஷயங்கள் ஒப்பந்தத்தில் இருந்தால் ஜைட்டாப்பூரிலோ அல்லது வேறு அணு உலைகள் இருக்கும் இடத்திற்கு அருகிலோ வாழ எனக்கு எந்த பயமும் இல்லை.

முடிவுரை:

“நினைப்புதான் பிழைப்பை கெடுக்கும்” என்பது முதுமொழி.

Alternative Energy என்றழைக்கப் படும் சூரிய, காற்று போன்றவற்றிலிருந்து மின்சாரம் உற்பத்தியை நம் தேவைக்கேற்ற அளவில் செய்ய இன்னும் பல காலம் பிடிக்கலாம். தற்பொழுதே இதற்கான தொழில்நுட்பம் உலகில் உள்ளது என்று நம்புவது வெறும் நினைப்புதான்.

அணுசக்தியின் மூலம் நாம் பெறும் மின் உற்பத்தியில் (மட்டுமே) ஆபத்து உள்ளது என்பது வெறும் நினைப்புதான்.

இந்த நினைப்புகள் நம் பிழைப்பை கெடுப்பதற்கு முன் நம் சந்தேகங்களுக்கு சரியான புத்தகங்களிலிருந்தும், நிபுணர்களிடமிருந்தும் தகவல்களைப் பெற்று அணு சக்தியின் மூலமும், நம் மின்சக்தி தேவையின் ஒரு பகுதியைப் பெற்று வளமுடன் வாழ்வோம்.

கட்டுரையை முடிக்கும் முன்பாக ஜெர்மானிய அதிபர் அஞ்செலா மர்கல் ஜப்பானில் ஏற்பட்ட விபத்தைப் பற்றி கூறியதை அவதானிக்கலாம் –

“The disaster in Japan means that not only Germany, but the entire world, is suddenly confronted with an entirely different situation. We should take this as an opportunity to review the situation with an entirely open mind.”

அவர் கூறிய “Open Mind” என்னும் பதத்தை மறக்காமல் இருப்பதுவே நாளைய தலைமுறைக்கு நாம் அளிக்கும் கொடை.

ஒரு நிபுணர் குழு ஜைட்டாபூரில் அணு உலை வருவதை அறிவியல் பூர்வமாக ஆதாரங்களுடன் எதிர்த்து, அதை அரசாங்கம் ஏற்று கொண்டால் அது சரியான முடிவுதான்.

ஆனால் இந்தியா முழுவதும் எந்த இடத்திலும் அணு உலைகள் வரக் கூடாது என்று முழங்குபவர்கள் தயவுசெய்து சத்தியமங்கலம் காடுகளுக்கோ முதுமலை காடுகளுக்கோ சென்று விடட்டும்.

மின்சாரம் ஆடம்பரம் அல்ல, அது அடிப்படை மனித உரிமை.

15 Replies to “அணு மின்சக்தி நமது அத்தியாவசியத் தேவை”

 1. கவண்டமனியில் ஆரம்பித்து நாடு கடத்தலில் முடிக்கும் கட்டுரை ஆசிரியர் எவ்வளவு திறந்த மனத்துடன் இருக்கிறார் என்பது தெரியவில்லை. அதனால் நான் மிகச் சுருக்கமாக சொல்கிறேன். வேதியியல் தொழிற்சாலைகளை இயக்குவதில் பாதுகாப்பை வலியுருத்துவதற்கென ஒருவான அமைப்பு CCPS அதன் வரலாற்று பக்க முகப்பை அலங்கரிப்பது போபால் (http://www.aiche.org/CCPS/About/History.aspx )

  அணு உலையை இயக்குவதும் வெடிபொருட்கள் தயாரிப்பதும் ஒன்றல்ல என்பதை நான் அறிவேன். ஆயினும் இதை இயக்குவதிற்கானஒழுங்கை ஒப்பிட இதை சுட்டினேன். இது ஓர் தனியார் முயற்சி. இன்றளவும் மீட்சியில்லை.

  Enron அனல் மின் நிலையத்தை (விபத்தில்லையாயினும் ) அப்படியே விட்டு ஓடிப் போனது.

  இன்னும் தனியார் மீது எந்த ளவில் நம்பிக்கை வைக்கிறீர்கள்?

 2. வேதிப்பொருட்கள் என்பதை வெடிபொருட்கள் என்று அச்சேற்றிவிட்டேன். மன்னிக்கவும்

 3. My impression after reading quite a bit in the net and other sources for the last few years
  Pros: Nuclear plants emit very little greenhouse gases, can generate a lot of power, has reasonable record of safety with present technology
  Cons; It will take 10-15 years to build a plant,expensive to build one, Uranium is scarce, limited source available at present, continuous supply beyond next 30-40 years doubtful.
  Nuclear waste storage is a real problem. It can remain active for tens of thousands of years.Leakage causing irreparable damage to plants/animals/humans is a real possibility. What about terrorist attack on the Nuclear plants or stored radioactive materials? Pakistan will target our Nuclear plants first in case of war and it will be a disaster if they manage to bomb even one of the plants. You cannot just turn down other nuclear plants in this scenario as the core will get hot and explode.
  My suggestion:1) Solar energy in a large scale for India.It is clean, technology is here now and wastage is less as energy can be fed into the power grid straight from the house rather than being transmitted from a power plant from a long distance.Hot Indian climate will generate immense Solar power, for most of the day usage. China is building huge Solar power stations. India can follow their example. In Australia we are putting solar panels in the roofs of our homes and the resulting energy is fed into the power grid and the government pays for the the energy the household produces.2) Wave energy,from the sea. Clean, unlimited supply, no greenhouse gases 3) Hydro/Geothermal energy is a real winner. It is clean, no Co2 emissions, huge plants are being built in South Australia. I am sure India will have similar ” Hot rocks/springs ” to be tapped for energy 4) Wind energy. I have seen many wind mills in the Madurai-Tirunelvelli corridor. I am sure there are other areas where wind energy can be generated and utilized for medium sized towns.
  A combination of all of the above alternative energy source should be given serious consideration before thinking of Nuclear plants.Nuclear plants can cause more problems than solving the present energy crisis. What happens when planet earth runs out of uranium?

 4. அணு சக்தியின் அவசியம் என்ற பாலாஜி அவர்களின் கருத்துக்கள் ஏற்புடையன அல்ல. அணு ஆலைகளின் பாதுகாப்பு ஐயத்திற்கு இடமானதாகவே இருக்கிறது. போராலோ, இயற்க்கை சீற்றத்தாலோ அல்லது தேசவிரோத சக்திகளாலோ அணு ஆலைகளுக்கு அழிவு ஏற்பட்டால் அதன் விளைவு மக்களை கடுமையாக பாதிக்கும். அப்படி நிகழாது என்பவர்கள் உறுதிதரமுடியாது. ஆற்றலை உற்பத்திசெய்ய சிறுசிறு வழிகள் ஆயிரம் உள்ளன. அவற்றை விடுத்து அணு வழியை எடுப்பது பெறு முதலாளிகளிக்கும் கமிசன் அடிக்கும் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரவர்கத்தினர்களுக்கே பலனழிக்கும். மக்களையும் சொழளையும் அழிக்காமல் வளர்ச்சி பெறுவோம்.

 5. மறுமொழி எழுதிய அனைவர்க்கும் நன்றி.

  திரு. Rama
  நீங்கள் எழுதிய Prosலேயே அணுமின் உலைகள் வர வேண்டும்
  என்பதற்கான காரணங்கள் உள்ளன. நீங்கள் சுட்டிக்காட்டும் Cons
  பெரியதாக இருந்தாலும் சில உண்மை அல்ல. குறிப்பாக மதுரை-
  திருநேல்வேலி பிராந்தியங்களில் அமைக்கப்பட்டுள்ள காற்றாலைகள்.

  காற்றாலைகள் அமைக்கப்படக்கூடிய அனைத்து இடங்களிலும் ஏற்கெனவே
  நிர்மானித்தாகி விட்டது. விந்திய மலைகளின் நடு வழியாக தமிழ்நாட்டில்
  பயணிக்கும் காற்று நீங்கள் கூறும் பிராந்தியத்தில் முழு வேகத்துடன்
  வீசுகிறது. அதை முழுவதும் Tap செய்தாகி விட்டது. தொழில் நுட்பம்
  மேலும் சிறந்து குறைந்த காற்றிலும் மின்சக்தி உற்பத்தி செய்யும் நிலை
  ஏற்பட்டால்தான் இனி தமிழ்நாட்டில் காற்றாலைகளை அமைக்க முடியும்.

  கடல் அலை மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் தொழில் நுட்பம் இன்னும்
  வளர வேண்டும். அந்த கம்பெனிகளுக்கு வரி விலக்கு, கட்டமைப்பு
  வசதிகள் செய்ய உதவி என்பதெல்லாம் நம் வரும் காலத்திற்கு. அதை
  என்னைப் போன்றவர்கள் நிறுத்த சொல்ல வில்லை.

  ஆஸ்திரேலியாவில் வசிக்கும் நீங்கள் ஒருமுறை நான் வசிக்கும் தஞ்சாவூர்
  மாவட்ட கிராமத்திற்கு வந்தால் தெரியும்.

  முதலில் மின் உற்பத்தி திறன், மின் உற்பத்தி அளவு, நம் தேவை
  போன்றவற்றை பற்றின தெளிவான புரிதல் அவசியம்.

  தமிழ்நாட்டின் மின் உற்பத்தி திறன் கிட்டத்தட்ட 11000 மெகாவாட்.
  மின் உற்பத்தி 7500 மெகாவாட். 1000 மெகாவாட் அளவிற்கு பக்கத்து
  மாநிலங்களில் இருந்து வாங்குகிறோம். (ஒரு யூனிட்டின் விலை 19 ரூபாய்.
  ஒரு நாளின் செலவு 50 கோடி ரூபாய்) நம் தேவை கிட்டத்தட்ட 10000
  மெகாவாட். 1500 மெகாவாட் பற்றாக்குறையினால் மின்வெட்டு அமலில்
  உள்ளது.

  உற்பத்தி திறன் 11000 மெகாவாட் இருந்தும் உற்பத்தி 7500 மெகாவாட்
  தான். இதற்கு முதல் காரணம் காற்றாலைகள்தான். அவை 2000
  மெகாவாட் மின்சாரத்தை வருடம் முழுவதும் அளிப்பதில்லை. குறிப்பாக
  தற்பொழுது அவை ஓடுவதே இல்லை. அடுத்து நம் அனல் மின் நிலையங்கள்
  முழு தரத்தில் ஓடுவதில்லை.

  என் போன்றவர்கள் முன் வைக்கும் வாதம் மிக மிக எளிமையானது. நம்
  மின் தேவைக்கு ஏற்ற 24×7, 365 நாளும் கிடைக்கும் மின்சாரத்தை
  மட்டுமே நம்ப முடியும். காற்றாலைகள், சூரிய ஓளி போன்றவை கிடைக்கும்
  காலங்களில் அதற்கு சரியான அளவில் அனல் மின் உற்பத்தியை குறைத்து
  விடலாம். அதாவது அனல், அணு, எரிவாயு, எண்ணெய் போன்றவற்றின்
  மூலம் கிடைக்கும் மின்சாரம் மட்டுமே 365 நாளும் கிடைக்கக்கூடியது.

  என்னைப் போன்றவர்கள் முன் வைக்கும் வாதம் மிக எளிமையானது.
  எதார்த்தமானது. ஆனால் பாதுகாப்பு, வளி மண்டலம் என்று மட்டுமல்லாது
  எங்களைப் போன்று பேசும் முக்கிய புள்ளிகளை பெரும் பணக்காரர்களின்
  கைக்கூலிகளாக சித்தரிக்கும் வேலையும் நடக்கிறது.
  நாங்கள் ஒன்றும் பொழுது போகாமல் இயற்கையை துவம்சம் செய்யச்
  சொல்லவில்லை.

  காற்று, சூரிய ஒளி, கடல் அலை முதலியவற்றிலிருந்து மின்சாரம்
  உருவாக்க பணமுதலீடு மிகவும் அதிகம். அதைப்பற்றியும் நீங்கள்
  எழுதியிருக்கலாம். ஏற்கெனவே நான் கூறியபடி வரி விலக்கு,
  தொழிற்சாலை துவங்க கடன் உதவி போன்றவற்றை அரசு அளிக்க
  வேண்டாம் என்று நாங்கள் கூறவே இல்லை.

  நீங்கள் கூறும் Geothermal Energy இந்தியாவில் இருந்திருந்தால் இத்தனை
  நேரம் ONGC உற்பத்தியை ஆரம்பித்திருக்கும்.

  கடைசியாக ஆஸ்திரேலியாவின் மொத்த மின் உற்பத்தியில்
  காற்றாலையின் பங்கு 1.3% (1877 மெகாவாட்). சூரிய சக்தியின் மூலம்
  கிடைப்பது வெறும் 300 மெகாவாட் 0.2%.

  ஒரு 3kwh Solar Panel Kitன் விலை கிட்டத்தட்ட 5 இலட்சம் ரூபாய்.
  ஒரு நடுத்தர குடும்பத்தின் இன்றைய மின் தேவை 4 முதல் 5 கிலோவாட்.

  கடைசியாக அணுமின்சக்தியே தேவை இல்லை என்பவர்கள் அனல்மின்
  சக்தியை பெரிய அளவில் உருவாக்க மனம் ஒப்ப வேண்டும்.

  அனல்மின்சக்தி,எரிவாயு, எண்ணெய் என்றால் Pollution.
  அணுமின்சக்தி என்றால் புற்றுநோய்.

  மத்தியானம் 12 முதல் 3 மணி வரை நான் கையினால் விசிறியை வீசிக்
  கொண்டிருக்கிறேன். நீங்கள் விசிறிக் கொண்டதுண்டா?

 6. கட்டுரை ஆசிரியர் போன்ற அந்நிய அடிவருdiகள் ஒன்றை மனதில் கொள்ளட்டும். இந்திய மக்கள் தொகை 9 கெஜம் புடைவை என்றால், அந்நிய நாடு ஒவ்வொன்றும் கோமணம் அளவே உள்ளவை. அவற்றில் என்ன அணுவுலை வைத்துக்கொண்டாலும் அழிவு வந்தால் சாகப்போகின்றவர்கள் எண்ணிக்கையும் கோமணம் அளவே. மேலும் ” சில விஷயங்கள் நடந்தால் அங்கு வாழ எனக்கு எந்த பயமும் இல்லை என்றேன்” என்பது போன்ற உச்சாடனங்கள், தான் மட்டுமே அறிவுஜீவி என்பதுபோலவும், தான் மட்டுமே வாழ்ந்தால் போதும் என்ற தன்னல வெளிப்பாடுகளே அன்றி, பொதுநல வெளிப்பாடு அல்ல. அண்ணா ஹஜாரே அரசாங்கத்துடன் நடத்தும் பேச்சு வார்த்தைகளை நேரடியா ஒளிபரப்பக்கூட முடியாத நிலையில், யார் என்ன பேசுகிறார்கள் என்று தெரியாத நிலையில், மக்கள் வுயிர் குடிக்கும் யுநியன் கார்பைடு ஆண்டேர்சன்களும் இத்தாலிய சொனியாயாக்களுமே கதியென்று நொந்துகொள்ள வேண்டி வரும்.

 7. Mr Balaji, I take your point. No, I have not used a hand held fan for > 35 years. I can understand about people living in ivory tower lecturing to the masses etc, etc. If my views sounded patronizing, then I am sorry.
  My reply is to highlight the dangers of nuclear energy, including terrorist attacks, lack of uranium in future,natural disasters affecting the Nuclear plants as happened in Japan recently, etc. If you rather have electrical fan working 24 hours a day on nuclear energy and damn all the associated risks, then I do not have anything to contribute to this discussion.
  The cost of solar panels will come considerably less if there is Government subsidy ( money from building a nuclear plant could be used for this) and if there is a high intake of people who are willing to invest in clean energy.
  Another point. Money from 2 G scams( Rs 176,000 crores) and other illegal sources, if pursued properly, will be enough to fund ALL alternative energy sources for India!

 8. Dear Balaji, fantastic write up. Apart from Atomic energy you have given glimpses of alternate sources of energy. May be inadvertently you have missed the important renewable source, i.e Hydel Energy. Against a desirable hydro thermal mix of 40:60, in Hindustan, currently hydel energy accounts about roughly 25% of total energy generation. This is clean energy. No pollution. No cancer. Nothing. But to conceive and complete a hydel project is a complex task.
  Although hydel projects are taken up after thorough geological survey and investigation, to start executing a project itself is a big challenge. Two big problems, viz., Environmental clearance and land acquisition are encountered. The former in most of the cases, if I may say so, is manipulated. The latter, the most painful and forceful action. Depending on the size of the project, the intensity of the problem differs.
  On execution, it is extremely difficult to execute the project as designed. Depending upon obstacles encountered, changing design at the time of execution is badly felt. Under “run of the river schemes” where by constructing a barrage you divert the course of the river, it may not be that cumbersome. But when it is a mega project, that too multipurpose one, involving construction of tunnels, thats a challenging job. Earlier tunnels were made by what you call DBM (Drilling and blasting Method) which used to be quite hazardous. One may encounter sudden landslides, slush floods, emission of poisonous gases et al. Latter, under new technology TBM (Tunnel Boring Machine) came to be used. The work is fast and tunnel is finely cut by the TBM. But encountering nature is not so easy. I know a couple of occasions where TBMs were literally buried while boring due to landslide. In one case the machine had to be abandoned and tunnel had to be redesigned. All these, after thorough geological survey. The impact – terrible time and cost overrun.
  After commissioning of a Hydel Station, one encounter the problem of silt. At the time of Annual Maintenance, one can see what sort damage it causes to the turbine and the expenditure involved in maintenance. Somewhere down the line, the oft quoted thing that hydel projects do not require raw materials gets somehow diluted considering the scheduled special repairs undertaken periodically and the routine maintenance involving huge expenditure.
  If the project comes under any international treaty ( many Hindustani projects are infact) that’s another headache.
  But in spite of all these, compared to other sources of energy, I would still consider Hydel as the best choice being clean energy. And Hindustan has tremendous Hydel potential to explore. Although, Chernobil and Fukushima are exceptions, I would rank Atomic power plants as the most hazardous.
  As the wheel of progress moves, the requirement of energy increases. You have to somehow meet it. But irrespective of your choice, in some way or the other you confront nature, the impact of which is disastrous and unpredictable. But still you require energy for development.

 9. திரு.கிருஷ்ணகுமார்,
  நன்றி,

  நீங்கள் ஒன்றை கவனித்திருக்கலாம். என் கட்டுரையிலும் சரி, என்
  மறுமொழியிலும் சரி. எளிமையான ஒரு கருத்து உள்ளது.

  “சந்தைக்கு போனும்;ஆத்தா வையும்;காசு கொடு” ஞாபகம் உள்ளதா!

  (ஒரு கற்பனையில் 25% இயற்கை முறையில் மின்சாரம் தயாரிக்கப் படுகிறது
  என்று வைத்துக் கொள்வோம்.)

  தமிழ்நாட்டிற்கு தேவை 10000 மெகாவாட்.
  அதில் இயற்கை முறை மின்சாரம் 2500 மெகாவாட்.
  காற்றாலை வழியாக இருந்தாலும் சரி, சூரிய சக்தியாக இருந்தாலும் சரி.
  4 முதல் 6 மாதங்களுக்கு இந்த வகை மின்சாரம் கிடைக்காது. ஆகவே
  உற்பத்தித் திறனை கணக்கிடுகையில் நம்மிடம் இருப்பது 7500
  மெகாவாட்தான். இயற்கை முறை மின்சாரம் கிடைக்காத போது நம்
  வாழ்க்கை என்ன ஆகும். நான் கூறுவது உற்பத்தித் திறன் அளவிற்கு,
  அதாவது 10000 மெகாவாட் அளவிற்கு 365 நாளும் கிடைக்கும் வழி
  மின்சாரத்தை மட்டுமே கணக்கில் கொள்ள வேண்டும். இயற்கை முறை
  மின்சாரம் கிடைக்கும் மாதங்களில் அனல், எரிவாயு போன்றவற்றை
  மட்டுபடுத்தி விடலாம்.

  சாதாரணமாக இதைப் பற்றி எவரும் யோசிப்பதில்லை.2500 மெகாவாட்
  மின்சாரத்திற்கு எங்கு போவது?

  வேறு ஒரு கோணத்தில் இதைப் போன்று Dynamicஆக வேண்டிய
  மின்சாரத்திற்கு ஏற்றபடித்தான் நம் மின்சார தொழிற்சாலைகளும்
  அமைக்கப் பட வேண்டும். “வேலை உத்திரவாத” தொழிலாளிகள்
  போன்ற முறைகள் இனி செல்லுபடியாகாது. ஒப்பந்த முறை
  தொழிலாளர்களை பெரிய அளவில் கொண்டதாகவே வரும் கால
  மின்உற்பத்தி தொழிற்சாலைகள் இயங்க முடியும். இதனாலேயே
  மிகப் பெரிய அளவில் தனியார் இந்த தொழிலில் ஈடுபடுத்தப் பட
  ஏதுவாக தொழிற் கொள்கைகள் அமைய வேண்டும். அரசாங்க
  கம்பெனியால் இது போன்று சில மாதங்களுக்கு முழு உற்பத்தி, சில
  மாதங்களுக்கு மட்டுப் படுத்தப் பட்ட உற்பத்தி போன்றவற்றை செய்ய
  முடியாது.

  இது ஒருபுறம் இருக்க, இந்த அணுமின் சக்தியைப் பற்றின இன்னொரு
  கோணமும் உள்ளது. என்றோ ஒருநாள் ஏற்படக்கூடிய அணுமின்
  விபத்தைப் பற்றி இவ்வளவு கவலைப் படுபவர்கள், அதைப் போன்றே
  புற்றுநோய் ஏற்படுத்தக்கூடிய செல் தொலைபேசியைப் பற்றி எவ்வளவு
  கவலைப் படுகிறார்கள். இதுவும் இன்று உபயோகித்து நாளை
  புற்றுநோய் வரப் போவதில்லை. கண்டிப்பாக வரும் என்றும்
  சொல்வதற்கில்லை. ஆனால் மூளை மருத்துவர்கள் பரிந்துரைக்கும் ஒரு
  பரிந்துரையையாவது அனுசரிக்கிறார்களா! (Ear phone, Keep the
  mobile phone about an inch away from ears etc..).

  பல கோடி பேர்களுக்கு உருவாக வாய்ப்பு உள்ள புற்று நோயைப் பற்றி
  அலட்டிக் கொள்ளாதவர்கள், சில ஆயிரம் பேர்களுக்கு மட்டுமே பாதிப்பை
  ஏற்படுத்தக் கூடிய அணுமின்சக்தியைப் பற்றி ஏன் இவ்வளவு அலட்டிக்
  கொள்கிறார்கள்?

  1998ல் போக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்தப் பட்டதனால்
  அந்த பிராந்தியத்தில் பல வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டன. அதைப் பற்றி
  பேசும்போது திரு.வாஜ்பாயி, மிகப் பெரிய பலன் நம் நாட்டிற்கு கிடைக்க
  சிலர் சில தியாகங்களை செய்துதான் தீர வேண்டும் என்றார்.

  ஃபுக்குஷீமா விபத்தால் இன்னும் ஒருவரும் உயிரிழக்க வில்லை. சிலருக்கு
  கதிர்வீச்சு ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தை பெரிய அளவில் ஊடகங்கள்தான்
  ஊதி பெரிதாக்கின.

 10. பாலாஜி, இன்று ஜேர்மன் பார்லிமென்ட் ஒரு சட்டம் கொண்டு வந்துருக்கு – அனைத்து அணு மின் நிலையங்களுய்ம் 2022 குள் மூட வேண்டாம் என்று. because they know the reality and certainly should have done cost-benefit analysis and risk analysis of holding such nuclear threats. For those EU countries only natural calamity is the issue. but for poor country like us – we have big terrorism on top of us and our highly inefficient Govt. with its poor security system is in place. so we are running with huge risk of loosing millions of people. Instead of this, even if we run out of power, let us find other solutions; if they didnot give enough, REDUCE our consupmtion – thats the only way. how many IT & corporate companies are running with HUGE AC system (consuming huge power) – they have to switch to fans !! and stop the uselss ‘free’ curent and there are many other ways to reduce the usage.

 11. A simple correction – all nuclear plans to be SHUT DOWN is the bill !! ..by mistake i put ‘வேண்டாம்’

 12. तमिल हिन्दू वेबसाइट देखकर अच्छा लगा. इसमें तमिल हिंदुत्व के बारे में काफी जानकारी मिली.

  राजशेखर दीक्षित

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *