கூடங்குளம் அணு மின் நிலையம்: சர்ச்சைகளும், தீர்வுகளும் – 1

கூடங்குளம் அணு மின் நிலையம் குறித்து மக்கள் போராட்டமும் அந்தப் போராட்டத்துக்கு ஆதரவாக எண்ணற்ற இயக்கங்களும், பெரிய சர்ச்சைகளும்,  தமிழ் நாட்டு அமைச்சரவைத் தீர்மானமும் நிகழ்ந்து வருகின்றன.  இது குறித்தான எனது எண்ணங்கள் சில.

 >>>> கூடங்குளத்தில் நிறுவப் பட்டுள்ள தொழில் நுட்பம் ரஷ்யாவின் செர்னோபிலில் விபத்திற்குள்ளான அதே தொழில்நுட்பம் என்றும், இந்தியாவை ஏமாற்றி ரஷ்யா விற்று விட்டது என்றும் சொல்கிறார்கள்.

இந்தியாவை ரஷ்யா ஏமாற்றி காயலான் கடைச் சரக்குகளை விற்பது நேரு காலத்தில் இருந்தே நிகழ்ந்து வருவதுதான். இது முதலோ கடைசியோ அல்ல. மேலும் ராஜீவ் காந்தியின் பெயரில் ஸ்விஸ் வங்கியில் பத்து மில்லியன் டாலர்களை ரஷ்யா அரசு ராஜீவுக்கு அளித்த விபரத்தை ரஷ்ய அரசே ஒப்புக் கொண்டுள்ளது. இந்தக் கூடங்குளம் ஒப்பந்தத்திற்கும் அந்த லஞ்சப் பணத்திற்கும் ஏதேனும் தொடர்புள்ளதா என்பதையும் ஆராய வேண்டும்.

ஆக, ரஷ்யா இந்தியாவை ஏமாற்றியிருக்கலாம் என்பதிலும், இந்திய அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் லஞ்சம் வழங்கப் பட்டு இந்தத் திட்டம் நிறைவேற்றப் பட்டிருக்கலாம் என்பதிலும், நமது ஊழல் அரசியல்வாதிகளை அறிந்தவரை சந்தேகமே கிடையாது; நிச்சயம் நடந்திருக்கும். ஆனால் ஊழல் விளையாடி வாங்கப் பட்ட போஃபோர்ஸ் பீரங்களை நம் ராணுவம் பயன் படுத்தாமல் விரையமாக்கி விடவில்லையே? கார்கில் போரின் பொழுது அவைதானே பயன் படுத்தப் பட்டன? ரஷ்யா அளிக்கும் டப்பா போர் விமானங்களையெல்லாம் இன்று வரை விமானப் படை பயன் படுத்தியே வருகின்றது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் நடந்து விட்டபடியால் யாரும் செல்ஃபோனில் பேசாமல் இருக்கிறோமா?

ஊழல் நடந்திருந்தால் அதை விசாரித்து சம்பந்தப் பட்டவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கலாம். ஆனால் 5 பில்லியன் டாலர்கள் வரை செலவு செய்து விட்டு அதைப் பயன் படுத்தக் கூடாது என்று போராடுவது எந்த வகையிலும் நன்மை விளைவிக்கப் போவதில்லை.

அணுசக்தித் தொழில் நுட்பம் குறித்து இந்தத் துறையின் விஞ்ஞானிகளும், பொறியாளர்களும் மட்டுமே கருத்துச் சொல்லத் தகுதியானவர்கள். ஆனால் துரதிருஷ்டவசமாக இந்தப் பிரச்சினையைப் பற்றி பாதிரியார்களில் இருந்து சினிமா நடிகர் சீமான் வரை  எவரும் அவரவருக்குத் தோன்றிய கருத்துக்களைச் சொல்கிறோமே அன்றி, முறையான தொழில் நுட்ப நிபுணர்களின் கருத்துக்களையும், விஞ்ஞானிகளின் முடிவுகளையும் நாம் அதிகம் பேசுவதோ அலசுவதோ கிடையாது.

>>>>> “அணு மின் நிலையங்கள் பாதுகாப்பானதுதான் என்று விஞ்ஞானிகள் கூறும் நிலையில், அணு உலைகள் அமைந்துள்ள பகுதிகளில் விபத்து ஒத்திகை நடத்துவது ஏன்?” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

எந்தவிதமான அடிப்படை அறிவும் இல்லாத கூறு கெட்ட கேள்வி இது.  இந்த அளவில்தான் இது சம்பந்தமாகப் பேசும் நம் அரசியல்வாதிகளின் அறிவுத் திறன் உள்ளது. விபத்தே நடக்காதென்றால் ஏன் ஹெல்மெட் போட்டு வாகனம் ஓட்டச் சொல்கிறோம்? ஏன் சாலை விதிகளைக் கடைப் பிடிக்கச் சொல்கிறோம்?  விபத்து நடக்கிறதோ இல்லையோ, இவையெல்லாம் ஒரு அடிப்படை பாதுகாப்பு முறைகள். அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ள ஒவ்வொரு பெரிய கட்டிடங்களிலும் ஃபயர் டிரில், எர்த் க்வேக் டிரில் எல்லாம்  சில மாதங்களுக்கு ஒரு முறை நடந்து கொண்டே இருக்கும். அலுவலகங்களிலும், பள்ளிக் கூடங்களிலும்  இந்த ஒத்திகைகள் நடக்கும். ஒத்திகை என்பது ஒரு ஆபத்து வந்தால் எப்படி தற்காத்துக் கொள்வது என்பதை மக்களுக்கு பயிற்றுவிப்பதற்காக நடத்தப் படுவது. அதற்காக விபத்து நடக்கும் என்று அர்த்தம் அல்ல. இந்த வழக்கம் எல்லாம் நம் நாட்டில் கிடையாது என்பதினால், இவரைப் போன்ற முட்டாள்களுக்கு இவை புதிதாகத் தெரிகின்றன. ஒத்திகை ஏன் நடத்துகிறார்கள் என்று லூசுத்தனமாகக் கேள்வி கேட்க்கிறார். இப்படிப் பட்டவர்கள் பேசுவதைத்தான் மக்களும் கேட்டுக் கொண்டு உண்மை என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

>>>>> கேரளாவில் ஐ டி பார்க்குகள் நிறுவப் படுவதற்குத் தேவையான மின்சாரத் தேவைக்காக இந்த அணு மின் நிலையம் கட்டப் படுவதாகச் சொல்லப் பட்டு,  காழ்ப்புணர்வுடன் பிரிவினைவாதம் வளர்க்கப் படுகிறது.

2000 மெகா வாட்டுக்களைக் குடிக்கும் ஐ டி பார்க்குகளை யாராவது கேள்விப் பட்டிருக்கிறீர்களா? மக்களிடம் துறைசார்ந்த அறிவு இல்லாதபடியால் எதை வேண்டுமானாலும் சொல்லலாம் என்று மேடையில் பேசுபவர்கள் நினைக்கிறார்கள்.

இந்த அணு மின் நிலையம் என்றில்லை. எந்தவொரு அறிவுசார் பின்புலத்துடன் பேசப் பட வேண்டிய பிரச்சினைகள் குறித்தும் அந்தத் துறை பற்றிய குறைந்த பட்ச அறிவு கூட இல்லாதவர்கள்தான் எப்பொழுதுமே அலசி, ஆராய்ந்து, பிழிந்து காயப் போடுகிறார்கள். இந்தப் பிரச்சினை குறித்து எத்தனை பத்திரிகைகளில், எத்தனை மேடைகளில் துறைசார் நிபுணர்கள் தங்கள் கருத்தைச் சொல்லக் கேட்க்கப் பட்டிருக்கிறார்கள் அல்லது அணுகப் பட்டிருக்கிறார்கள்? அவர்களில் பலரும் சொல்லட்டும். இதே பகுதியைச் சேர்ந்த சிலர் உலக அணு சக்தி கமிஷனின் ஆய்வாளர்களாக இருக்கிறார்கள். உலகம் முழுவதும் நிறுவப் படும் அணு சக்தி நிலையங்களை பரிசோதித்துச் சான்றிதழ் வழங்கும் விஞ்ஞானிகளாக இருக்கிறார்கள். அவர்களிடம் யாராவது எப்பொழுதாவது கருத்துக் கேட்க விரும்பியதுண்டா? அப்படி யாரேனும் இருக்கிறார்கள் என்ற விபரமாவது இதைப் பற்றிப் பேசும் பாமரர் எவருக்கும் தெரியுமா? ஆகவே தொழில் நுட்பம் என்று வரும் பொழுது, அணு சக்தி நிலையத்தின் பாதுகாப்பு என்று வரும் பொழுது அந்தத் துறையின் வல்லுனர்களின் கருத்துக்களை முதலில் கேட்டு விட்டு நாம் நமது கருத்துக்களைத் தெரிவித்தால் நல்லதாக இருக்கும்.

 ***********************

இந்த அணு மின் நிலையம் அமைய எதிர்ப்பாளர்கள் வைக்கும் காரணங்களையும் அவற்றிற்கான பதில்களையும் காணலாம்:

1.   ”இந்த மின் நிலையம் அமைப்பதில் ஜனநாயக முறைப் படி மக்களைக் கலந்தாலோசிக்கவில்லை”.

”கூடங்குளம் அணுமின் நிலையங்கள் 1, 2 உள்ளூர் மக்களை கலந்தாலோசிக்காது, ஜனநாயக, மனித உரிமை மரபுகளை மீறி கட்டப்படுகின்றன. 1, 2 உலைகளுக்கான சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை மக்களோடு பகிர்ந்து கொள்ளப்படவில்லை. கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்படவில்லை. 1, 2 உலைகள் அமைக்கப்பட்டிருக்கும் தலங்கள் பற்றிய ரசிய விஞ்ஞானிகளின் ஆதங்கங்கள் மூடி மறைக்கப்பட்டதோடு, தல ஆய்வறிக்கை  மக்களுக்கு தரப்படவில்லை. பாதுகாப்பு ஆய்வறிக்கையும்  பொதுமக்களுக்கு, மக்கள் பிரதிநிதிகளுக்கு, பத்திரிக்கையாளர்களுக்கு அளிக்கப்படவில்லை. இப்படி மக்களுக்கு எந்தத் தகவலும் தராமல், உண்மைகளைச் சொல்லாமல், ஜனநாயக மரபுகளை மீறி நிறைவேற்றப்படுவது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது.”

இது எதிர்ப்பாளர்களின் வாதம்.

ஜனநாயக முறை பின்பற்றவில்லை என்று 20 வருடம் கழித்து ஏன் சொல்கிறார்கள்? அன்றே அடிக்கல் நாட்டும் அன்றே அதை வலியுறுத்தி இன்று நடத்தும் அதே போராட்டத்தை ஏன் நடத்தவில்லை?  ஐயா, எங்கள் கருத்தைக் கேட்ட பின்பே நீங்கள் இதை அமைக்க வேண்டும்; இல்லாவிட்டால் அமைக்க விட மாட்டோம் என்று போராடியிருக்கலாமே?

கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தாதது தவறுதான். மத்திய மாநில அரசுகள் செய்த பெரும் தவறே இதுதான். மக்களை மதித்துப் பேசாததும், மக்களை தங்கள் நம்பிக்கைக்கு எடுத்துக் கொள்ளாததும் அவர்கள் தவறே. அதை இப்பொழுதும் கூட நிவர்த்தி செய்து விடலாம். மக்களை மூடர்களாகவும் அடிமைகளாகவும் நினைக்காமல் நாட்டின் முக்கியமான அணு விஞ்ஞானிகள் அனைவரும் அங்கு ஆஜராகி மக்களிடம் விளக்கக் கடமைப் பட்டிருக்கிறார்கள். அப்துல் கலாம் மாதிரியான மக்களின் அபிமானத்தையும் மரியாதையையும் பெற்ற அணு ஆற்றல் துறையில் இதற்கு முன்பாகப் பணியாற்றிய அனுபவம் உடைய விஞ்ஞானிகளை அழைத்து வந்து மக்களிடம் விளக்கம் அளிக்கச் சொல்வது அரசாங்கத்தின் கடமை. அதை அவர்கள் உடனடியாகச் செய்ய வேண்டும்.

இன்று மக்களுடன் பேசிக் கொண்டிருப்பவர்களில் பலருக்கும் நியூக்ளியார் ஃபிஸிக்ஸ் என்பதன் ஸ்பெல்லிங் கூடத் தெரியாது என்பதே உண்மை. மக்களுடன் பேசி அவர்களிடம் பாதுகாப்பு உணர்வையும், நம்பிக்கையும் வளர்க்க வேண்டியவர்கள் எம்.ஆர்.ஸ்ரீநிவாசன், டாக்டர் சிதம்பரம், கலாம் போன்றவர்களே அன்றி பாதிரியார்களும், கோபாலசாமிகளும், நடிகர்களும், பேட்டை அரசியல்வாதிகளும் அல்ல.

பாதுகாப்பு குறித்த அறிக்கைகளையும், பிற அறிக்கைகளையும் அப்படியே மக்களுக்கு அளித்து விட்டாலும் கூட,  எத்தனை பேர்களுக்கு அவை புரிந்து விடப் போகிறது? அறிக்கைகளை விட, அதன் சாரம்சத்தை விளக்கும் எளிய கையேடுகளும், துறைசார் நிபுணர்களின் எளிய உரைகளுமே தேவை. மேலும் அணு மின் நிலையம் என்பது மின்சார உற்பத்தியையும் தாண்டி, பல்வேறு தேசிய பாதுகாப்பு குறித்த ஆராய்ச்சிப் பணிகளுக்கும் சேர்ந்தே உருவாக்கப் படுவது. அவற்றின் அனைத்துத் தகவல்களையும் அப்படியே பொதுவில் வைக்க முடியாது. அவை தேச நலனுக்குக் குந்தகம் விளைவிக்கும். ஆகவே மக்களுக்குத் தேவையான பாதுகாப்புகள் குறித்த அறிக்கைகளின் சாராம்சத்தை நிபுணர் குழுக்கள் மக்களிடம் விளக்குதல் வேண்டும். இத்தனை காலம் அதைச் செய்யா விட்டால் இப்பொழுதாவது உடனடியாகச் செய்ய வேண்டும். இதைச் செய்யாத படியால் நாங்கள் அதை அமைக்க விட மாட்டோம் என்பது சரியல்ல. மாறாக  மின் நிலையம் செயல் படத் துவங்கும் முன்னால் செய்யுங்கள் என்று வலியுறுத்துவதே நியாயமான கோரிக்கையாக இருக்கும்

2.  “குறிப்பிட்ட சுற்றளவுக்குள் இத்தனை மக்கள் தொகைதான் இருக்க வேண்டும் என்று விதிமுறைகள் உள்ளன”.

”தமிழ்நாடு அரசின் அரசாணை எண். 828 (29.4.1991 – பொதுப்பணித்துறை) அணுமின் நிலையத்திலிருந்து 2 கி.மீ தூரத்திற்குள் அணுமின் கட்டிடங்களைத் தவிர வேறு எதுவும் இருக்கக்கூடாது என்றும், 2 முதல் 5 கி.மீ சுற்றளவிலான பகுதி நுண்ம ஒழிப்பு செய்யப்பட்ட பகுதியாக  இருக்க வேண்டும் என்றும் சொல்கிறது. வீடுகளோ, மனிதர்களோ இருக்கக்கூடாது என்பதை நேரடியாகக் குறிப்பிடாமல், திசை திருப்பும் வார்த்தைகள் உபயோகப்படுத்தப்பட்டுள்ளன. அரசின் உண்மைநிலை என்ன என்பதை தெளிவாக தெரிவிக்கவில்லை. அணுசக்தி ஒழுங்காற்று வாரியத்தின் விதிமுறைகள் படி 5 கி.மீ. சுற்றளவுக்குள் 20,000 பேருக்கு மேல் வசிக்கக்கூடாது. அணுமின் நிலையத்திலிருந்து 10 கி.மீ தூரத்திற்குள்ளேயே கூடங்குளம் கிராமத்தில் 20,000 மக்களும், இடிந்தகரை கிராமத்தில் 12,000 மக்களும், காசா நகரில் 450 குடும்பங்களும் வசிக்கிறார்கள்.

அ) 10 கி.மீ சுற்றளவுக்குள் மாநிலத்தின் சராசரி மக்கள் அடர்த்தியின் மூன்றில் இரண்டு பங்குக்கு குறைவாகவே மக்கள் இருக்க வேண்டும். ஆனால் மாநில சராசரியை விட மிக அதிகமான மக்கள் இந்த பகுதியில் நெருக்கமாக வாழ்கிறார்கள்.  ஆ) 30 கி.மீ சுற்றளவுக்குள் 1,00,000-க்கும் அதிகமான மக்கள் வாழும் நகரங்கள் இருக்கக்கூடாது. ஆனால் 2,00,000 மக்கள் வாழும் நாகர்கோவில் நகரம் 28 கி.மீ தூரத்திற்குள் இருக்கிறது. இவ) 20 கி.மீ சுற்றளவுக்குள் சுற்றுலாத் தலங்களோ, சரித்திர பிரசித்தி பெற்ற இடங்களோ இருக்கக்கூடாது என்று ஆணை சொன்னாலும் உலக பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி 15 கி.மீ சுற்றளவுக்குள் இருக்கிறது.

இப்படி கூடங்குளம் அணுமின் நிலையத்திலிருந்து 30 கி.மீ சுற்றளவுக்குள் 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வரும் நிலையில் எங்களை வெளியேற்றுவதோ, பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்துவதோ, எங்களுக்கு தேவையான இருப்பிட வசதிகளை செய்வதோ, மருத்துவ வசதிகள் செய்து தருவதோ, பள்ளிகள் அமைத்து தருவதோ, மாற்று வேலைகள் ஏற்படுத்திக் கொடுப்பதோ கற்பனையில் கூட நடக்காத காரியம்.”

இது எதிர்ப்பாளர்களின் வாதம்.

இப்படி பட்ட ஒரு விதிமுறை இருக்கின்றதா என்பதை அணுசக்தித் துறை உறுதி செய்ய வேண்டும். அப்படி இருந்தால் பிற நாடுகளில் என்ன விதிமுறைகள் அனுசரிக்கப் படுகின்றன என்பதை கவனிக்க வேண்டும்.

முதலில், 10 கீமீ சுற்றளவுக்குள் 20000 பேர்களுக்குக் குறைவான பேர்களே இருக்குமாறு நிச்சயமாக அரசு ஏற்பாடு செய்யலாம். அதற்கு மேலே இருப்பவர்களுக்கு அவர்கள் விரும்பும் அருகேயுள்ள நகர் ஒன்றில்  நிலமும், வீடும், வேலையும் தந்து இடமாற்றம் செய்யலாம். உரிய விதத்தில் திட்டமிட்டால் இது எளிதாகச் செய்யக் கூடிய ஒரு காரியமே.

அடுத்து, 30 கீ மீ சுற்றளவுக்குள் 1 லட்சத்துக்கும் மேலாக மக்கள் தொகை இருக்கக் கூடாது என்ற விதி முறை கல்பாக்கத்திலோ, டிராம்பேயிலோ பின்பற்றப் படவில்லை. கல்பாக்கத்தில் இருந்து 30 கி மீக்குள் இருக்கும் மதுராந்தகத்தின் மக்கள் தொகையே 2.5 லட்சத்திற்கும் மேலே. ஆகவே இந்த விதி முறை ஏற்கனவே மீறப் பட்டுள்ளது. இங்கு மட்டும் புதிதாக மீறப் படவில்லை.

விபத்து ஏற்படுமானால் அருகேயுள்ள நகரங்களில் வாழும் மக்கள் எவ்வித தற்காப்பு நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற ஒத்திகையை ஆண்டுக்கு ஒரு முறை நடத்துவதும், உரிய பயிற்சியும் ஒரு வேளை பெரிய விபத்து ஏதும் ஏற்படும் பட்சத்தில் மக்களுக்குப் போதிய விழிப்புணர்வு கிடைக்கச் செய்யும்.

இது போன்ற விதி முறைகள் இருப்பது குறித்தும் அது மீறப் படுவது குறித்தும் எதிர்ப்பாளர்களுக்குத் தெரியாதா என்ன? ஏன் இந்த நிலையம் அமைக்கப் படும் முன்பே ஒரு வழக்குப் போட்டு நிறுத்தியிருக்கக் கூடாது? இப்பொழுது எப்படி போதுமான பாதுகாப்புகக்ளை உருவாக்கிக் கொள்வது என்பது குறித்தே அரசும் மக்களும் கவனம் செலுத்த வேண்டுமே அன்றி 5 பில்லியன் டாலர்களை வீணடிப்பதில் அல்ல.

3.   ”அணு மின் நிலையம் அமைப்பதில் குளறுபடிகள் நிகழ்ந்துள்ளன.”

”2004 டிசம்பர் சுனாமியில் மத்திய மாநில அரசினர் கொண்டிருந்த பேரிடர் மேலாண்மையை நாடே அறியும். அணூலைக் கட்டிடங்களின், குழாய்களின் மோசமான தரம், கட்டிடம் கட்டியதை உடைத்து மீண்டும் கட்டுவதான திருவிளையாடல்கள், உள்ளூர் காண்டிராக்டர்களின் கைங்கரியங்கள், ரசியாவில் இருந்து தாறுமாறாகவும் தலைகீழாகவும் வந்த உதிரிபாகங்கள், நிர்வாக குழப்பங்கள், குளறுபடிகள் என அடிவயிற்றை புரட்டிப் போடும் தகவல்கள், அனுதினமும் வந்து கொண்டே இருக்கின்றன.”

என்பது எதிர்ப்பாளர்களின் வாதம்.

வதந்திகளை எல்லாம் நம்பிக் கொண்டிருக்க முடியாது. ஒரு முழுமையான பாதுகாப்பு சோதனை நடத்தி அதில் குறைபாடுகள் இருப்பின் அவற்றைக் களைய வேண்டிக் கோரலாம்; அதற்காக அணு சக்தித் துறையை வற்புறுத்தலாம்;  அப்படி ஒரு பாதுகாப்பு சோதனை நடத்தாமல் இயக்கத்தைத் துவங்கக் கூடாது என்று கோரலாம். அது நியாயமாக இருக்கும். மாறாக, குழாய்கள் மோசம் ஆகவே நிலையத்தையே நிறுத்து என்று சொல்வது அடாவடித்தனம்.

முக்கியமான  இன்னொரு குற்றசாட்டு சுனாமி வந்து தாக்கினால் இந்த அணு மின் நிலையம் ஜப்பானில் பாதிக்கப் பட்டது போல பாதிக்கப் பட்டு விடும் என்பது. இதன் பெரும் பகுதியை 2004 சுனாமிக்குப் பின்னாலேயே நிர்மாணித்திருக்கிறார்கள். ஆகவே அதன் விளைவுகளைக் கருத்தில் கொண்டே நிறுவியிருப்பார்கள். மேலும் அணு சக்தித் துறையின் விஞ்ஞானிகள் அனைவருமே,  “சுனாமி தாக்கும் பட்சத்தில் தானகாவே அதன் இயக்கம் நின்று விடும் வண்ணம் திட்டமிடப் பட்டிருக்கிறது” என்கிறார்கள். அவர்கள் சொல்வதில் நம்பிக்கையில்லை என்றால், ஒரு நடுநிலையான அமைப்பிடம் இதன் பாதுகாப்பை ஒரு ஆடிட் செய்யுமாறு கோரி, அவர்களது அறிக்கையைப் பெற்று, அவற்றில் திருத்தம் இருந்தால் அவற்றை செய்து முடித்து, அவர்களிடம் சான்றிதழ் வாங்கிய பின், இந்த நிலையத்தை இயக்கலாம். அதை விடுத்து, நிலையத்தையே இழுத்து மூடு என்று சொல்வது முறையற்ற ஒரு பேச்சு.

4.   “கட்டடம் கட்டும்போதே  விபத்துக்கள் நிகழ்ந்தன”

”26.9.2006 அன்று அப்போதைய குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு வருகை தந்தார். அணுசக்தித் துறை உயர் அதிகாரிகளோடு அவர் நின்று கொண்டிருந்த போது கூரையில் இருந்து ஊழியர் ஒருவர் ஓரிரு அடி தூரத்தில் பொத்தென்று விழுந்து அனைவரையும் கதி கலங்கச் செய்தார். குடியரசுத் தலைவர் வந்தபோதே இந்த நிலை என்றால், குடிமக்களுக்கு என்ன நிலை?”

ஒரு பெரிய கட்டிட வேலை நடக்கும் பொழுது விபத்துக்கள் நேர்வது சகஜமே. எந்தவொரு பிருமாண்டமான கட்டுமானப் பணியிலும் மனித விபத்துகள் நடந்து கொண்டுதான் உள்ளன. இதையெல்லாம் காரணம் காட்டி இவ்வளவு பெரிய திட்டத்தை நிறுத்த முடியாது. சாலையில் போகும் பாதசாரியை மோட்டார் வாகனங்கள் இடித்துக் கொன்று விடுகின்றன என்பதற்காக சாலையே கூடாது என்பார்களா அல்லது வாகனங்களே இனி ரோட்டில் ஓடக் கூடாது என்பார்களா?

5. “சுற்றுச் சூழல் பாதிப்புக்கள் பெருமளவில் இருக்கும்”

”உலைகளை குளிர்விக்கும் சூடான கதிர்வீச்சு கலந்த தண்ணீரையும், உப்பு அகற்றி ஆலைகளில் இருந்து வெளிவரும் உப்பு, சேறு, ரசாயனங்களையும் கடலில் கொட்டி, ஊட்டச்சத்து மிகுந்த கடல் உணவையும் நச்சாக்கப் போகிறோம். உணவு பாதுகாப்பு கேள்விக்குறியாகும். மீனவர்களின் விவசாயிகளின் வாழ்வுரிமையும், வாழ்வாதார உரிமைகளும் முற்றிலுமாக அழிக்கப்படும். விபத்துக்களோ, விபரீதங்களோ நடக்கவில்லை என்றாலும் அணு உலைகளில் இருந்து அனுதினமும் வெளியாகும் கதிர்வீச்சு நச்சுப் பொருள்களை உண்டு, பருகி, சுவாசித்து, தொட்டு அணு அணுவாய் சிதைந்து போவோம். பேரிடர்கள் வராது, நடக்காது, என்று தரப்படும் வெற்று வாக்குறுதிகளை ஏற்க முடியாது.”

இது நியாமமான ஒரு கவலை. நிச்சயம் கவனிக்கப் பட வேண்டிய ஒன்று. இதற்கான பதிலை அரசாங்கம் அளிக்க வேண்டும். மாற்று ஏற்பாடுகள் உறுதி செய்யப் பட நிர்ப்பந்திக்க வேண்டும். இதற்கான உரிய பாதுகாப்பான மாற்று ஏற்பாடுகளைச் செய்து விட்டு அதை உறுதிப் படுத்திய பின்னர் நிலையத்தை செயல் பட அனுமதிக்கலாம்.

அணு மின் நிலையத்தைச் சுற்றி வசிப்பவர்களிடம் எத்தனை ரெம்கள் கதிர் வீச்சு ஒரு மனிதனை அடைகிறது என்பதை எளிதாக அளக்கலாம். ஆண்டுக்கு ஒரு முறை அந்த அளவை அளந்து அது அபாயகரமான அளவில் இருந்தால் அப்பொழுது நிலையத்தை நிறுத்தலாம் அல்லது உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யலாம்.

1 ரெம் அளவு என்பது சாதாரணமாக எந்த அணு நிலையத்தின் அருகில் வசிக்காதவர்களிடம் கூட பூமியில் இருந்து வெளியேறும் ரேடான் நாம் சுவாசிக்கும் காற்றில் கூட உள்ளது, சாப்பிடும் வாழைப்பழத்தில், உணவுகளில் கூட மெல்லிய கதிர் வீச்சு உள்ளது. அது காஸ்மிக் கதிர்கள் மூலமாகவோ நாம் அன்றாடம் பயன் படுத்தும் செல்ஃபோன், கடிகாரம், டெலிவிஷன், எலக்ட்ரானிக் சாதனங்கள் , மருத்துவ சாதனங்கள், மருத்துவ சிகிச்சைகள், அழகு சாதனங்கள், மூலமாகவோ ஏற்படலாம். அது அளவுக்கு மீறும் பொழுதே அபாய நிலையை அடைகிறது. இந்த அணு மின் நிலையத்தின் உட்புறத்திலும் வெளியேயும் எந்த அளவுக்கு கதிர் வீச்சு உள்ளது என்பதைத் தொடர்ந்து அவதானித்தே வருவார்கள். சாதாரணமாக ஒரு மனிதன் வருடத்திற்கு 85 மில்லி ரெம் ரேடியஷன் வரை எதிர் கொள்கிறான். உதாரணத்திற்கு 5000 மில்லிரெம்கள் ஒரே நேரத்தினால் தாக்கினால் அது ஆபத்தானது. அந்த அளவை எட்டாதிருக்க என்ன விதமான பாதுகாப்புகள் செய்யப் படுகின்றன என்பது உறுதி செய்யப் பட வேண்டும். அதை மக்களுக்கு விளக்க வேண்டியது அவசியம்.

(தொடரும்)

22 Replies to “கூடங்குளம் அணு மின் நிலையம்: சர்ச்சைகளும், தீர்வுகளும் – 1”

  1. தமிழ் பேப்பர் தளத்தில் நண்பர் களிமிகு கணபதி இந்த போராட்டத்தை முன்னின்று நடத்தும் சர்ச்களை [ அவர்கள் போராட்டத்தின் பின்னணியில் உள்ள பிளாக்மெயில் ] பற்றி எழுதியிருந்தார்………அந்த விஷயத்தை பற்றியும் விஸ்வாமித்திரர் விசாரித்து எழுதலாமே?

  2. 1)அணுசக்தியை பயன்படுத்தி மின்சாரம் எடுக்கும் நாடுகள் மொத்தம் 30.
    2)அதிக அளவில் அணுமின் உற்பத்தி செய்யும் நாடு அமெரிக்கா. உலகின் 30%-அமெரிக்கா, 18% ஃபிரான்ஸ்,12% ஜப்பான் அணு மின்சக்தியை உற்பத்தி செய்கிறன.
    3)அமெரிக்கா உற்பத்தி செய்யும் மின்சக்தியின் அளவு 799 பில்லியன் கிலோவாட். இது மொத்த உலக மின் உற்பத்தி 20%
    4) 1978க்கு பிறகு அமெரிக்கா அணு உலைகளை கட்டவில்லை.
    5)ஜப்பான் ஃபூக்கிஷிமா அணு உலை நிகழ்வுக்கு பிறகு சீனா, ஜெர்மனி, இஸ்ரேல், சுவிஸ், மலேசியா,பிரிட்டன் போன்ற நாடுகள் தங்கள் நாட்டில் அணுஉலை அமைப்பது சரியா பற்றி தீவிரமக யோசித்து வருகிறது.
    6)ஆஸ்த்ரேலியா, ஆஸ்த்திரியா, டென்மார்க், கிரீஸ் இஸ்ரேல், நார்வே போன்ற நாடுகள் அணு மின்சாரத்திற்க்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
    7)கூடங்குளம் அணு உலை அமைப்பதற்க்கான செலவு 5 பில்லியன் டாலர்கள்.
    8) ஒரு கிலோவாட் மின் உற்பத்தி செய்வதற்க்கான செலவு த்ண்ணீர்-1.23ரூ, அணு-1.8ரூ, நிலக்கரி- 2ரூ, காற்றாலை-3.6ரூ, இயற்க்கை வாயு- 4.95ரூ, சூரியன்-10ரூ
    9) ஃபிரான்ஸின் மொத்த மின் உற்பத்தியில் 75% அணு மின்.
    10)ஃபிரான்ஸ் சராசரியாக வருடத்திற்க்கு 575 பில்லியன் கிலோவாட் உற்பத்தி செய்கிறது. 70பில்லியன் கிலோவாட் மின்சக்தியை ஏற்றுமதிசெய்கிறது, இதன் மூலம் 60 பில்லியன் யூரோ வருமானமாக கிடைக்கிறது.

  3. மாவோயிஸ பட்டதாரிகளால் நடத்தபடும் புதிய தலைமுறை தொலைக்காட்சி இதை பற்றி தொடர்ந்து ஒளிபரப்பும் பொழுதே இதை பற்றி தெரிந்து கொண்டேன். உலகம் முழுவதும் நூற்று கணக்கான அனுமிண் நிலையங்கள் எந்த ஒரு பிரச்சனையும் இன்றி நடைபெறும் பொழுது இவர்கள் உள்ளே நுழைந்து செய்யும் போராட்டங்களுக்கான் காரணம் அணைவரும் அறிந்ததே.

  4. கண்டிப்பாக அமெரிக்க உளவு அமைப்பான CIA க்கு இந்த போரட்டத்தில் தொடர்பு இருக்கவேண்டும் , ஏனென்றல் இன்று உலகில் வேகமாக வளர்ந்து வரும் நாடு நமது இந்தியா, இதை கண்டிப்பாக அமெரிகாவுக்கு சகிக்க முடியாது , இஸ்லாமிய நாடுகளின் எண்ணை வழத்தை தனது கட்டுக்குள் கொண்டு வர எதுவெல்லாம் உக்தி முடியுமோ அவை அனைத்தையும் செய்து இன்று இஸ்லாமிய நாடுகளை தனது கட்டுபாட்டிற்குள் வைத்திருகிறது அமெரிக்கா.
    மேலும் சீனாவை நமக்கு நல்லவே தெரியும் இந்தியாவின் ஒவ்வொரு வளர்ச்சியிலும் முட்டுக்கட்டை இடுவதையே குறிக்கோளாக கொண்டுள்ளது , உலகில் உள்ள எல்லா அனுவுலைகளும் விபத்துகுள்ளவதில்லை ,
    மேலும் விபத்து என்று பார்க்க போனால் எங்கும் எப்போதும் எப்படியும் நடக்கலாம் . வானில் பறக்கும் விமானம் நமது ஊரின் மீது விழலாம் , ஏவுகணை சோதனை செய்யும்போது திசை மாறினால் ஆடு நாட்டில் எங்கும் விழலாம் , இப்படி பல விபத்து காரணிகளை அடுக்கி கொண்டே போகலாம் , அதற்காக எல்லாத்தையும் நாம் தடை போட்டோமானால் நாம் மீண்டும் திரும்பி கற்காலத்திற்கு தான் செல்லவேண்டும் .
    மேலும் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டம் நீரோடி முதல் தூத்துக்குடி மாவட்டம் வேம்பர் வரை உள்ள கடற்கரையை தனது வசம் தனி நாடு போல வைத்திருகிறது ரோமன் கதோலிக சபை, இவர்கள் அமெரிக்காவின் கையாள்கள் , இவர்கள் முன்னின்று நடத்தும் போராட்டம் கண்டிப்பாக நமது நாட்டின் நன்மையில் அக்கறை இருக்காது .
    எனவே இந்த 20 வருடம் பிந்திய இந்த போரட்டத்தின் அடித்தளம் குறித்து இந்தியா புலனாய்வு துறை விசாரணை நடத்த வேண்டும் . இல்லையேல் இதுபோன்ற போராட்டங்களை நமது சந்ததியினர் பெருவாரியாக சந்திக்க நேரிடும் என்பதில் ஐயமில்லை .

  5. This website’s readers are not that type of real intelligents. They just show that they are intelligents. Who ever supports this and argues that in world 100 of nuclear reactors are running safely, please check in net regarding Japan and Germany.
    Since christians are opposing this project, it is not necessary Hindus must support.
    Please come out of this bad mindset. I am also a HIndu but don’t have this type of dirty mindset.
    Tamilhindu, please don’t publish this type of articles. Now, I ask Tamilhindu readers and editors, how many of you are ready to go and stay near by this nuclear reactor? At least 5 Kms away.

  6. In 1960s CIA moles and agents became pastors and fathers in christian missionaries to penetrate in south american countries and panama island nations either to assasinate their dictaters or presidents and ensured only american supporters were appointed as head of state to support missionaries
    to spread their religion.
    why in this kudamkulam atomic project, christian missionaries are involved in larger numbers in the protest while hindu forums are in silent mood. is to due to the involvement of american missionaries indirectly which exposes
    that christians do not have any patriotism but serve their masters in america. American companies like General motors would have paid to missionaries money to create a problems to the project as our secularist government would drop the project once they find either muslims or christians are opposing to this as our governement always surrender to their interest and do not care for the national interest which only hindus are concerned about this. so all news media and news papers must investigate the role or move behind the missionaries in tuticorin which prompted them to bring in larger numbers of fathers and pastors for negotiation or representation before Jayalalitha. i found the leader of
    AIYA vaikund sects who are also powerful and opposed to christians missionaries in this district along with the protestor to represent the hindu forums protest on this project. pl throw some light on this subject as to why these missioanries are involved in protest and make this as political move – with the eye to start a political party in future by christians. ?

  7. சாரவ் அவர்களே

    Tamilhindu, please don’t publish this type of articles. Now, I ask Tamilhindu readers and editors, how many of you are ready to go and stay near by this nuclear reactor? At least 5 Kms away.

    ஏஞ்சாமி தமிழ் ஹிந்து ஆசிரியர்களையும், வாசகர்களையும் இழுக்கிறீர்கள்? அவர்கள் என்ன எல்லோரும் என் கருத்தை ஒத்துக் கொள்வதாக எங்கேயும் கூட்டம் போட்டு உங்களிடம் சொன்னார்களா என்ன? நாளைக்கே கூடங்குளத் திட்டத்தை எதிர்த்து ஒரு கட்டுரையையும் தமிழ் ஹிந்து தளம் பிரசுரித்தாலும் பிரசுரிக்கலாம். ஆகவே கேட்ப்பதை கட்டுரையாசிரியராகிய என்னிடம் மட்டுமே கேட்க்கவும் சரியா?

    கூடங்குளத்தில் போய் வசிக்க நான் ரெடி. 5 கீ மிக்கு அப்பால் என்ன உள்ளே கூட வசிக்கத் தயார். ஒரு வேலை செய்யுங்கள். எனது தற்போதைய வீடு கூடங்குளத்தில் இருந்து ஒரு 40 மைல் தொலைவில் அமைந்துள்ளது. காற்று வசதி வேறு போதவில்லை. கொஞ்சம் கூடங்குளம் கடற்கரையில் ரெண்டு கிரவுண்டு வாங்கி அதில் வீடும் கட்டிக் கொடுங்கள் நாளைக்கே நான் வந்து குடியேறி வசிக்கிறேன். எப்படி வசதி?

    விஸ்வாமித்ரா

  8. கூடங்குளத்தில் போய் வசிக்க நான் ரெடி. 5 கீ மிக்கு அப்பால் என்ன உள்ளே கூட வசிக்கத் தயார். ஒரு வேலை செய்யுங்கள். எனது தற்போதைய வீடு கூடங்குளத்தில் இருந்து ஒரு 40 மைல் தொலைவில் அமைந்துள்ளது. காற்று வசதி வேறு போதவில்லை. கொஞ்சம் கூடங்குளம் கடற்கரையில் ரெண்டு கிரவுண்டு வாங்கி அதில் வீடும் கட்டிக் கொடுங்கள் நாளைக்கே நான் வந்து குடியேறி வசிக்கிறேன். எப்படி வசதி?

    விஸ்வாமித்ரா

    அய்யா தயவு செய்து எனக்கும் ஒரு பிளாட் குடுங்க. கடற்கரையில வீடு கட்டணம்னு ரொம்ப நாளா எனக்கு ஆசை

    முதா

  9. ஐயா கனவான்களே இங்க பேசுறவங்க எத்தனை பேர் திருநெல்வேலி தூத்துக்குடி காரங்க…?

  10. Pingback: Indli.com
  11. இந்திய வல்லரசு அக வேண்டும் என்று வாய் வலிக்க சொன்னால் மட்டும் போதாது.இந்திய வல்லரசு அக மிக முக்கிய மான ஓன்று மின்சாரம்.இந்தியாவிற்கு மட்டும் அல்லாமல்.தமிநாட்டின் மின்சார பற்றகுரைகும் தேவை.உடனே கூடங்குளம் அணுமின் நிலையம் செயல் பட வேண்டும்.போராடகரர்களை கைது செய்யா வேண்டும்……………………..

  12. அணுசக்தித் தொழில் நுட்பம் குறித்து இந்தத் துறையின் விஞ்ஞானிகளும் பொறியாளர்களும் மட்டுமே கருத்துச் சொல்லத் தகுதியானவர்கள். ஆனால், துரதிருஷ்டவசமாக இந்தப் பிரச்சினையைப் பற்றிப் பாதிரியார்களில் இருந்து சினிமா நடிகர் சீமான் வரை எவரும் அவரவருக்குத் தோன்றிய கருத்துக்களைச் சொல்கிறார்கள்.

    அணு உலை பாதுகாப்பானதுதான் என்று விஞ்ஞானிகள் கூறும் நிலையில், அணு உலைகள் அமைந்துள்ள பகுதிகளில் விபத்து ஒத்திகை நடத்துவது ஏன்? என்னும் கேள்விக்கு ‘எந்தவிதமான அடிப்படை அறிவும் இல்லாத கூறு கெட்ட கேள்வி இது’ என்ற ‘நச்’ பதில்.

    எந்தவொரு அறிவுசார் பின்புலத்துடன் பேசப் பட வேண்டிய பிரச்சினைகள் குறித்தும், அந்தத் துறை பற்றிய குறைந்த பட்ச அறிவு கூட இல்லாதவர்கள்தான் எப்பொழுதுமே அலசி, ஆராய்ந்து, பிழிந்து காயப் போடுகிறார்கள். ‘ஹிந்து சமயம்’ பற்றிய பெரும்பாலான விமர்சனங்கள்கூட இந்த ரகம்தான் என்பது, இத்தகைய விமர்சனங்களின் மூலம் எது என்று காட்டுகிறது.

    விஞ்ஞானிகளை அழைத்து வந்து மக்களிடம் விளக்கம் அளிக்கச் சொல்வது அரசாங்கத்தின் கடமை. பாதுகாப்பு உணர்வையும், நம்பிக்கையையும் வளர்க்க வேண்டியவர்கள் எம்.ஆர்.ஸ்ரீ நிவாசன், டாக்டர் சிதம்பரம், கலாம் போன்றவர்களே அன்றிப் பாதிரியார்களும் கோபாலசாமிகளும் நடிகர்களும் பேட்டை அரசியல்வாதிகளும் அல்ல.

    //தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டம் நீரோடி முதல் தூத்துக்குடி மாவட்டம் வேம்பர் வரை உள்ள கடற்கரையைத் தனது வசம் ‘தனி நாடு’ போல வைத்திருகிறது ரோமன் கத்தோலிக்க சபை. இவர்கள் அமெரிக்காவின் கையாள்கள்// என்பது அரசு விழித்துக்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டிய விஷயம்.

    //Please don’t publish this type of articles// இந்த வகைக் கட்டுரைகளையே தடை செய்யச் சொல்லும் இவர் போன்றவர்கள் தான் ஜனநாயக உரிமைகள் பற்றி வாயைக் கிழித்துக் கொள்வார்கள்.

    //Our (pseudo)secularist government would drop the project, once they find either Muslims or Christians are opposing this, as our government always surrender to their interest and do not care for the National Interest// நடைமுறை உண்மை.

    //கொஞ்சம் கூடங்குளம் கடற்கரையில் இரண்டு Ground வாங்கி அதில் வீடும் கட்டிக் கொடுங்கள். நாளைக்கே நான் வந்து குடியேறி வசிக்கிறேன்// இதே கருத்துத்தான் எனதும். தேசத்தில் இவ்வளவு மின்சாரப் பிரச்னை இருக்கும்போதே இந்த அடாவடிகள் நடந்தால், மின்மிகை மாநிலமாகத் தமிழகமோ அல்லது மின்மிகை நாடாக இந்தியாவோ இருந்துவிட்டால் கேட்க வேண்டாம்.

    விரைவில் அணு உலை செயல்படத் தொடங்கட்டும்.

  13. I am a fan of tamil hindu for long time, but while reading this article I just wonder This article might be written by a person who know science or after knowing science. This article is just like a illiterates view on their beliefs on the bogus Indian scientists. There is no secret in science, you can google and know that there is lot of problems for generations to go with the nuclear power. Even the countries like USA struggle with the nuclear wastes with out knowing what to do with it, and they are not able to spend money for the safe disposal, what countries like India will do which has no sympathy for their citizens?

  14. உங்களுக்கு தேவையான அறிவியல் பூர்வமான கேள்விகள் கீழே உள்ள பதிவில் உள்ளது. உங்கள் கேள்விகளை அதில் கேட்கலாம்.

    https://tamilhindu.com/2012/01/atomic-energy-2/

    அடுத்து அமெரிக்கா அணு உலை கழிவுகளினால் சிரமப்படுகிறது என்று சொன்னீர்கள், அதற்கான ஆதார பூர்வ தகவல்கள் ஏதேனும் உண்டா?

    டாக்டர் பட்டம் பெற்ற அறிவியல் வல்லுனர்களை நம்பாமல் கிறித்துவ கை கூலியான உதய குமாரையா நம்புவது…தங்களுடைய கருத்து நகைப்புக்கு உரியது.

    சரி இருந்தும் ஏன் அமெரிக்கா, சீனா, பிரான்ஸ், பிரேசில் என்ற அனைத்து நாடுகளும் புதிய அணு உலைகளை கட்டி கொண்டு இருக்கிறது? இதற்கான விடையை தேடினால் இந்திய அரசாங்கம் ஏன் அணு உலை கட்டுகிறது என்பதற்கான விடை தெரியும்…

  15. //This article is just like a illiterates view on their beliefs on the bogus Indian scientists.//
    So you are one of Lord Mccaulay’s students who is always ashamed of what ever your country men say or do??!!

  16. posukal nattu kudimakkal yappati india nattukku atharavaka irupparkal. antha pakuthi makkal anaivarum 1580 andu muthal nadu marivittanar.

  17. கோவா கத்தோலிக்க பிஷப் வெளிநாட்டுக்கு கடிதம் எழுதி உரேனியம் இந்தியாவுக்கு கொடுக்கவேண்டாம அணுகுண்டு தயார் செய்வார்கள் எனகூறினர்.

  18. இரண்டாவது கூடங்குள ரஷ்ய அணுமின் உலை 1000 மெகாவாட் ஆற்றல் உச்சத்திறனில் இயங்குகிறது
    Posted on June 29, 2017
    1
    June 29, 2017 சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++ https://www.npcil.nic.in/main/AllProjectOperationDisplay.aspx https://en.wikipedia.org/wiki/Nuclear_Power_Corporation_of_India
    1. https://www.world-nuclear.org/information-library/country-profiles/countries-g-n/india.aspx https://en.wikipedia.org/wiki/Nuclear_power_in_India Click to access news_30aug2016_01.pdf news_30aug2016_01 Kudungula unit 2 https://npcil.nic.in/main/MOEF_clearance_EIA_KKNPP.aspx +++++++++++++++ இரண்டாவது கூடங்குளம் ரஷ்ய அணுமின்சக்தி நிலையம் உச்சத் திறனில் இயங்குகிறது. 2017 மார்ச் 31 தேதி முதல் இரண்டாவது கூடங்குளம் ரஷ்ய … Continue reading →

    Posted in அணுசக்தி, பொறியியல், விஞ்ஞானம் | 1 Reply

    2. வடக்கு வளர்கிறது ! தெற்கு தேய்கிறது ! அணுமின் உலை எதிர்ப்பாளிகள் ! அணுமின் உலை அபாய எதிர்பார்ப்புகள் !

    3. இந்திய அணு மின்சக்தித் துறையகச் சாதனைகளும், பொறிநுணுக்க யந்திர சாதன அமைப்புத் திறனும்

    4. கூடங்குள ரஷ்ய அணுமின் உலை 1000 மெகாவாட் உச்சத்திறனில் இயங்குகிறது

    5. அணு உலை எதிர்ப்பாளி ஞாநி பரப்பி வந்த தவறான கருத்துகளுக்கு எனது பதில்

    6. கூடங்குளம் அணுமின்னுலை, கடலிலிருந்து குடிநீர், அசுரப்படை எதிர்ப்புகள் !

    7. அணுமின்னுலைக் கதிரியக்கக் கழிவுகள் கண்காணிப்பும், நீண்டகாலப் புதைப்பும் -1

  19. கூடங்குளம் மின்சக்தி ஆலையம்

    சி. ஜெயபாரதன், கனடா

    கூடங்குள அணுமின் உலை
    கூவத்து நதியில்
    கட்டப் பட்ட
    குப்பை மாளிகை அல்ல !
    சாம்பலான செர்நோபில்
    சமாதி அல்ல !
    வெந்து வெடித்த ஜப்பான்
    புத்துயிர் பெறும் புகுஷிமா அல்ல !
    இந்தியர் வரிப்பண
    ஊதிய உப்பைத் தின்று
    வளரும்
    ஒப்பிலா விஞ்ஞானிகள்
    உன்னத பொறித் துறை
    வல்லவர் கட்டி
    எழுப்பிய
    பிரம்மாண்ட மின்சாரப்
    பிரமிட்கள் !
    ஊரே தீப்பற்றி எரிய
    வீணை வாசித்த
    நீரோ மன்னன்
    எழுப்பிய
    கோர உலைகள் அல்ல !
    இவை மூடிக் கிடந்தால்
    பூனை தூங்கும்
    பொங்கிய அடுப்பில் !
    கணினிகள்
    மிளகாய்ப் பெட்டிகளாய்
    கண்ணீர் சிந்தும் !
    மின் விசிறிகள் மூச்சிழக்கும் !
    மின்சார மின்றி
    சம்சாரம்
    மங்கலம் பாடும் !

    சினிமாக் கொட்டகை
    மாட்டுக்
    கொட்டமாய்க்
    கொட்டாவி விடும் !
    கவச குண்டல மாய்த்
    தொங்கும்
    செல்லரித்துப் போன
    கைபேசிகள் !
    மாட்டு வண்டிகள் இழுக்கும்
    சாணி யுகம் மீண்டும்.
    காணி நிலத்தில்
    பாம்பாய்ப் படமெடுக்கும்
    எரிந்த
    சாம்ப லிருந்து !

    ++++++++++++

  20. 1.https://jayabarathan.wordpress.com/2011/10/23/%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b3-%e0%ae%b0%e0%ae%b7%e0%af%8d%e0%ae%af-%e0%ae%85%e0%ae%a3%e0%af%81-%e0%ae%89%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2/

    [கூடங்குள ரஷ்ய அணு உலையில் 2011 ஜப்பான் சுனாமியில் நேர்ந்த புகுஷிமா விபத்துகள் போல் நிகழுமா ?]

    2. https://jayabarathan.wordpress.com/2011/03/14/kudungulam-atomic-reactor-2/

    3. https://jayabarathan.wordpress.com/2012/03/16/kudungulam-opposition/

    4. https://jayabarathan.wordpress.com/2012/03/24/gnanis-objection-1/

    [அணு உலை எதிர்ப்பாளி ஞாநி பரப்பி வந்த தவறான கருத்துகளுக்கு எனது பதில்]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *