வீரத்தின் வித்தான வீரபத்திரர் வழிபாடு

“ஆளுடைத் தனி ஆதியை நீத்தொரு
வேள்வி முற்ற விரும்பிய தக்கனோர்
நீள் சிரத்தை நிலத்திடை வீட்டிய
வாள் படைத்த மதலையைப் போற்றுவாம்”

இப்படி திருச்செந்தூர்ப் புராணத்தால் வீரபத்திரக் கடவுள் போற்றப்படுகிறார். இங்கே வீரபத்திரப் பெருமான் கையில் வாளுடன் விளங்குவதாகவும், பரம்பொருளை நிந்தனை செய்து நாஸ்தீகத் தனமாக வேள்வி செய்த தக்கப் பிரஜாபதியின் கொட்டத்தை அழித்த வீரராகவும் போற்றப்படுகிறார்.  இப்பெருமானின் வணக்க முறைமை இந்துக்களின் வீரத்தின் சாட்சியாகவும், வீரத்தின் விளை நிலமாகவும் விளங்குகிறது.

சிவனாய செல்வன்

வீரம் என்பதற்கு அழகு என்றும் பத்திரம் என்பதற்குக் காப்பவன் என்றும் பொருள் கொண்டு வீரபத்திரர் என்பதற்கு அழகும் கருணையும் கொண்டு அன்போடு காப்பவர் என்று பொருள் காண்பர் சைவச் சான்றோர்.

இந்த வீரபத்திரப் பெருமானின் வழிபாடு பாரதம் எங்கும் அதற்கு அப்பாலும் பரவியிருக்கிறது. சிவபெருமான் ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், ஸத்யோஜாதம் என்கிற ஐந்து திருமுகங்களைக் கொண்டு ஐந்தொழிலாற்றுகிறான். இம்முகங்களில் அகோராம்சமாக ஆணவாதி மலங்களை அழிப்பதற்காக வீரபத்திரரைப் படைத்தான் என்று குறிப்பிடுவர்.

மரகத மணிநீலம் கிண்கிணீ ஜாலபத்தம்
ப்ரகடித ஸமுகேச’ம் பானு ஸோமாக்னி நேத்ரம்
… சூ’ல தண்டோக்ர ஹஸ்தம்
விருதல மஹிபூஷம் வீரபத்ரம் நமாமி

என்று வீரபத்திரர் பற்றிய ஒரு தியானஸ்லோகம் சொல்கிறது. இதில், மரகத மணியில் ஒளியுடையவர், கிண்கிணி அணிந்த கழலினர், சூரியன், சந்திரன், நெருப்பு இவை மூன்றையும் முக்கண்களாய் கொண்டவர், சூலம், தண்டம் ஆகியவற்றை ஏந்தியவர் அழகியவரான (கோரம் என்பதன் எதிர்ச் சொல் அகோரம்) வீரபத்திரரை வணங்குவோம் என்று சொல்லப் பெற்றிருக்கிறது.

வீரபத்திரரை திருஞானசம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர் ஆகிய தேவாரமுதலிகளும் மாணிக்கவாசகரும் பலவாறாக, தேவாரங்களில் பெயர் சுட்டாமல் போற்றிப் பாடியிருக்கிறார்கள்.  வீரபத்திரர் வரலாற்றுச் செய்திகளை முழுவதும் புராணக்கதைகள் என்று ஒதுக்குவது சிறப்பாகத் தெரியவில்லை. இவற்றில் பல தத்துவச் செய்திகள் இருப்பினும், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் நடந்த, நடக்கக் கூடிய செய்தியாகவே இதனைக் காண முடிகிறது.

வட மாநிலத்தில் ஹரித்வாரில் தான் தக்ஷன் யாகம் செய்ததும் தாக்ஷாயணி யாக குண்டத்தில் விழுந்ததும் நடந்ததாய்க் கூறுகின்றனர். கங்கால் என்ற பெயரில் உள்ள இடத்தில் தக்ஷேஸ்வர மஹாதேவர் என்ற பெயரில் ஈசன் கோயில் கொண்டிருக்கிறார்.

இங்கே தான் வீரபத்திரரும் காளியும் தக்ஷனையும் அவன் கூட்டத்தாரையும் அழித்ததாயும் கூறுகின்றனர். தக்ஷன் சாகாவரம் பெற்றிருந்ததால் அவன் தலையை வெட்டி அதற்குப் பதிலாக ஆட்டுத் தலையை வைத்ததாகவும் கூறுவார்கள். மேலும் இங்கே சதிகுண்டம் என்ற பெயரிலேயே குண்டம் ஒன்றும் இருக்கிறது.

வீர சைவர்களின் வீரன்

சைவப்பெருமக்கள் வீரபத்திரரை சிவகுமாரராகவும், சிவாம்சமாகவும், சிவவடிவமாகவும் (சிவமூர்த்தமாகவும்) கண்டு வழிபட்டு வருகிறார்கள். தட்சனின் யாகத்தை நிர்ரூலம் செய்து சிவபரத்துவத்தை நிலை நிறுத்த அவதரித்த மூர்த்தியே வீரபத்திரர் என்பதே பரவலாகப் பேசப்படும் கருத்து நிலையாக இருந்தாலும், வீரபத்திரர் குறித்து நமது புராணங்களில் மேன் மேலும் பல செய்திகள் சொல்லப்பெற்றிருப்பதைக் காண முடிகிறது.

விநாயகர், முருகன் போலவே சைவர்களின் சிறப்பிற்பிற்குரிய வழிபடு தெய்வமாக அமைந்திருக்கிற வீரபத்திரரின் வரலாறும் வழிபாட்டு முறைமையும் விநாயகர், முருகக் கடவுளுக்கு இருப்பது போலவே பரந்ததாகவும், ஆழமானதாகவும் பல செய்திகளை உள்வாங்கியதாகவும் அமைந்திருப்பதைக் காணலாம்.

யஜூர் வேதத்தின் உயிர்நாடியாக விளங்குகிற ஸ்ரீ ருத்ரத்தினை அடுத்து வரும் சமகம் தட்சனால் பாடப்பெற்றது என்றும் சிலர் நம்புகிறார்கள். அதற்கு ஆதாரமாக அவர்கள் அதில் வரும் “மே” என்ற சப்தத்தையே எடுத்துக் கொள்கிறார்கள். இது கொஞ்சம் சுவாரஸ்யமாக இருப்பினும் சிந்திக்கத்தக்கது.

அவர்கள் கூற்றின் படி, சிவபெருமானால் மறு உயிர் பெற்ற ஆட்டுத் தலை கொண்ட தக்ஷன் சிவனைத் துதித்துப் பாடியது தான் யஜுர் வேதத்தின் முக்கிய பகுதியாகிய ஸ்ரீ ருத்ரத்தினை அடுத்து வரும் சமகம் என்பது. ஒவ்வொரு பதத்திலும் ஆட்டின் சப்தமாகிய “மே” என்ற சப்தம் வரும் வகையில் அமைந்தது. ‘மே’ என்றால் வேண்டும் என்பது அர்த்தமாகும். “ச’ஞ்சமே மயச்’சமே ப்ரியஞ்சமே” என்று ஒவ்வொரு பதத்திலும் “மே” என்று அமையும்.

அந்தகாசுரனை சம்ஹாரம் செய்வதற்காக வீரபத்திரர் சப்தமாதர்களுடன் சென்று அவனைப் பொருது வென்றார் என்றும், சிங்க உருவம் பூண்டு நீலன் என்ற அரக்கனை அழித்தார் என்றும், இவரைப் பற்றிய செய்திகள் கிடைக்கின்றன.

வீரபத்திரர் தக்கனை அழித்துப் பின் உயிர்பெற்றெழச் செய்த போது அவனது தலையானது யாககுண்டத்தில் இடப்பட்டு அழிந்து விட்டதால் அவனுக்கு ஆட்டுத்தலை பொருத்தி உயிர்ப்பித்தார் என்பர். இது உறுப்புக்களை மாற்றிப் பொருத்தும் இன்றைய சத்திர சிகிச்சையுடனும் இணைத்துச் சிந்திக்கத் தக்கதாயிருக்கிறது.

மகாபாரதத்தின் சாந்திபருவத்திலும், மத்ஸயபுராணயத்தின் 72-ம் அத்தியாயத்திலும், பாகவதபுராணத்திலும், லிங்கபுராணம், வராஹபுராணம், கூர்மபுராணம், போன்றவற்றிலும் வீரபத்திரரைப் பற்றிய செய்திகள் நிறைவாக இருக்கின்றன.

வீரபத்திரரை வீரசைவர்கள் தங்கள் பிரதான குருவாகக் கொண்டு போற்றி வழிபடுகிறார்கள். கும்பகோணத்தின் மகாமகக் குளத்தருகில் வீரபத்திரர் கங்காதேவியைக் காக்கும் பொருட்டு இறைவன் கட்டளைப்படி எழுந்தருளியிருப்பதாக வீரசைவர்கள் நம்புகின்றனர். அங்கே பரசிவனே வீரபத்திரருக்கு சிவதீட்சையும் லிங்கதாரணமும் செய்து, வீரசிங்காசனத்தில் அமர்வித்து, வீரசைவமரபு உருவாக வழி செய்தான் என்பதும் நம்பிக்கை.

காவலாய் நிற்கும் கடவுள்

சிவப்பரம்பொருளின் ஜடையிலிருந்து பிறந்தவர் என்றும் வியர்வையிலிருந்து பிறந்தவர் என்றும் வீரபத்திரரின் அவதாரம் பற்றிய செய்திகள் கிடைக்கின்றன. இது எவ்வாறாயினும், வீரபத்திரர் சிவாம்சம் என்றே பொதுவான கருத்து நிலை அமைந்திருக்கிறது.

ஆந்திரா எங்கும் வீரபத்திரர் வழிபாடு பரவியிருப்பதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். ஸ்ரீ சைலம் மல்லிகார்ஜூன ஸ்வாமியை ஆந்திர மக்கள் மல்லர் என்று போற்றுவதுடன் அவரை வீரபத்திரர் என்றே கருதி வழிபடுகின்றனர்.

விஜய நகர அரசரான ஹரிஹரரின் காலத்தில் கன்னடத்தில் இராகவையங்கார் என்பவர் வீரபத்திரர் வரலாறு பற்றி “வீரேச விஜய” என்ற நூலைப் படைத்திருக்கிறார். (பொ.பி 1400களில்) பத்ரகாளியை வீரபத்திரரின் தோழியாகவும், மனைவியாகவும் போற்றுவர். சரபேஸ்வரர் என்பதும் வீரபத்திரர் நரசிங்கப் பெருமானைச் சாந்தப்படுத்த எடுத்த மூர்த்தமே என்று கொள்வர். யோகப்பயிற்சியிலும் “வீரபத்ராசனா” என்று ஒரு வகை ஆசனம் அமைந்திருக்கிறது.

தமிழகத்தில் சென்னையிலும் கும்பகோணத்திலும் திருவானைக்காவிலும் இன்னும் எத்தனை எத்தனையோ கிராமங்களிலும் வீரபத்திரருக்கு ஆலயங்கள் அமைந்திருக்கின்றன. முக்கிய சிவாலயங்களில் எல்லாம் வீரபத்திரர் தனிச்சந்நதி கொண்டு அருள் பாலிக்கிறார்.

இது போலவே, வீரபத்திரமூர்த்தி காவல் தெய்வமாக சேத்திரபாலகராக வழிபாடாற்றப்பெறுவதும் உண்டு. சென்னை வில்லிபாக்கம் அகத்தீஸ்வரர் கோயிலில் அகத்தியரின் சிவபூஜையைக் காப்பதற்காகவும், மூகாம்பிகை கோயிலில் அம்பாளைக் காப்பதற்காகவும் வீரபத்திரர் எழுந்தருளியிருப்பதாகச் சொல்லப்பெறுகிறது.

முகலாயப்  படையெடுப்பாளர்கள் மதவெறி கொண்டு தென்னகத்துச் சிவாலயங்கைள எல்லாம் அழித்தும் சூறையாடியும், இறுதியில் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் புகுந்தார்களாம். அங்கே தூணில் அமைந்திருக்கிற அஷ்புஜ அக்னி அகோர வீரபத்திரரின் வனப்பையும் நேர்த்தியான வேலைப்பாட்டையும் கண்டு பொறாமல் அதனை உடைக்க முற்பட்டார்களாம். அப்போது, அந்த வீரபத்திரர் ஜீவ ஓட்டம் மிக்கவராக எழுந்து மிகுந்த கோபக்கனலைச் சிந்தி முகலாயப் படைகளை ஓட ஓட விரட்டியதாகவும் சொல்லப் பெறுகிறது.

தமிழ் இலக்கியங்களும் நாட்டாரியலும் ஏத்தும் திறன் வீரபத்திரர் குறித்த பல செய்திகள் நமது தமிழ் இலக்கியங்களிலும் காணக்கிடைக்கின்றன. செவ்வைசூடுவார் பாரதத்தில் வீரபத்திரர் எழுச்சியும் வீரச்செயலும் பேசப்படுகிறது.

சூடாமணி நூலில் வீரபத்திரரின் பெயர்களாக

“உக்கிரன் அழல்க்கண் வந்தோன்
ஊமைமகன் சிம்புள் ஆனோன்
முக்கண்ணன், சடையோன், யானை
முகவற்கு இளையோன், வில்லி
செக்கர் வான் நிறத்தோன், குரோதன்,
சிறுவிதி மகம் சிதைத்தோன்
மிக்கப் பத்திரைக் கேள்வன்,
வீரபத்திரன் பேராமே”

என்று பன்னிரு பெயர்கள் பேசப்பட்டிருக்கின்றன.

கர்நாடக நாட்டுப்புறவியலில் “வீரகசே” என்ற கூத்து மரபு பேணப்பட்டு வருகிறது. இதே போல இலங்கையில் யாழ்ப்பாணத்து கட்டுவன் பகுதியில் பாரம்பரியமான வீரபத்திரக் கூத்து அப்பகுதியில் வதியும் தாழ்த்தப்பட்ட சமூகத்தினரால் ஆடப்பட்டு வருகிறது. இவைகளில் வீரபத்திரர் வரலாறு கூத்து வடிவில் காண்பிக்கப்படுகிறது.

கவிச்சக்கரவர்த்தி ஒட்டக் கூத்தர் வீரபத்திரப்பரணி என்ற தக்கயாகப்பரணி பாடியிருக்கிறார். பரணி என்பது போர் குறித்த நூலாயினும் வீரபத்திரரை முன்னிறுத்தி இந்நூல் அவர் தம் பெருவீரத்தைப் புகழ்ந்து பாடுகிறது.

வீரபத்திரர் பற்றி சிறப்பாகப் பேசும் நூல்களில் “சைவசித்தாந்தக் களஞ்சியமாக” கச்சியப்ப சிவாச்சார்யார் பாடிய “கந்தபுராணம்” முதன்மையானது. கந்தபுராணத்தின் கந்தன் வரலாற்றுக்கு ஆதாரக் கதையாக வீரபத்திரர் வரலாறு பேசப்பட்டிருக்கிறது.

இறைவனை மதியாது தக்கன் செய்த யாகத்திற்குச் சென்று அவிர்பாகம் பெற்றதால் தான் சூரபத்மனால் தேவர்கள் துன்புற நேர்ந்தது என்று சொல்லி கந்தன் கதைக்கு ஆதாரமான கதையாக வீரபத்திரர் வரலாறு இங்கு எழுச்சி உணர்வுடன் எடுத்துரைக்கப்பெற்றிருக்கிறது.

“அடைந்தவி உண்டிடும் அமரர் யாவரும்
முடிந்திட வெருவியே முனிவர் வேதியர்
உடைந்திட மாமகம் ஒடியத் தக்கனை
தடிந்திடும் சேவகன் சரணம் போற்றுவாம்”

என்று கந்தபுராணம் கடவுள் வாழ்த்திலே வீரபத்திரக் கடவுளைப் போற்றுவதுடன் அமையாது, சிறப்பாக தட்ச காண்டத்தில் வீரபத்திரர் வரலாறு குறித்து விரிவாகப் பேசுகிறது. அவற்றுள்ளும் உமை வரு படலம், வேள்விப்படலம், வீரபத்திரப்படலம், யாகசங்காரப்படலம் ஆகியன சிறப்பாக வீரபத்திரர் தக்கன் வேள்வி அழித்த வரலாறு பேசப்பட்டிருக்கிறது.

“அந்திவான் பெரு மேனியன் கறைமிடற்றணிந்த
எந்தை தன் வடிவாய் அவனுதல் விழியிடை
வந்து தோன்றியே முன்னுற நின்றனன் மாதோ
முந்து வீரபத்திரன் எனும் திறலுடை முதல்வன்”

பார்த்த திக்கினில் கொடுமுடி ஆயிரம் பரப்பிச்
சூர்த்த திண்புய வரையிரண்டாயிரம் துலக்கி
போர்த்த தாள்களில் அண்டமும் அகண்டமும் பெயர
வேர்த்தெழுந்தனன் வீரரில் வீரன்”

இப்பாடல்களில் கச்சியப்ப சிவாச்சார்யாரின் கவி ஆளுமையும் பக்தியும் வீரபத்திரப் பெருமான் பேரெழுச்சியும் சிறப்பாகப் புலப்படுகிறது. வீரபத்திரருக்கும் வாகனம் நந்தியே.. சிவ வடிவமான வீரபத்திரர் அந்தணரும் அரசரும் மட்டும் பணியும் கடவுள் அல்லர். அவர் பழங்குடி மக்களின் சிறுகுடில் தோறும் கல் வடிவிலும் , திரிசூல வடிவிலும் நின்று இந்த மக்களுள் மக்களாகிக் காக்கிற கருணைக் கடவுள்.

கருணையின் கடவுள்

வீரபத்திரப் பெருமானின் அவதார நோக்கங்கள் தர்மம் தவறியவரை, இறைவனை மதியாது தாமே என்று இறுமாப்புக் கொண்டவர்களை அழிப்பதாக அமைகின்றன. ஆனால், இவற்றின் முக்கிய நோக்கம் அவர்கள் பேரில் கொண்ட பெருங்கருணையேயாம்.

வைணவர்களுக்கு நரசிம்மாவதாரம் எத்துணை சிறப்புப் பெற்றதோ, அத்துணை சிறப்புடையவராக சைவர்கள் வீரபத்திரரைக் கண்டு வழிபடுகிறார்கள். இங்கெல்லாம், இறைவனின் இயல்பான பெருங்கருணை வெளிப்படுகிறது.

தவறு செய்தாரைத் தண்டித்துத் திருத்துவது என்பது அவர் இனி வரும் நாளில் தவறு செய்யாமலிருக்க உதவும். அவருக்குக் கிடைத்த தண்டனையைக் கண்டவர்கள் தாமும் வாழ்வில் தவறு இழைக்காமலிருக்க உதவும். சில வேளைகளில் இறைவனின் இந்த அவதாரங்களின் போது அசுரர்கள் இறந்து போயினும், அவர்கள் இன்னும் இன்னும் இங்கிருந்து தவறே புரிந்த வாழாமல் அவர்கள் பேரில் தமது திருக்கைகளை வைத்துப் பரமபதம் அனுப்பியதாய் அமையும்.

இதுவன்றி, ஒருவன் செய்கிற தவறுகளைக் கண்டும் காணாமல் விட்டு விடுவது தான் அவன் மேன்மேலும் தவறுகள் செய்வதற்கு ஊக்குவிப்பாக அமைந்து அவனை கீழ்நிலைக்கு இட்டுச் செல்லும், ஆக, வீரபத்திரப் பெருமானின் செயல்கள் கருணையின் உயர் நிலையிலிருப்பதையே காணலாம்.

செவ்வாய்க்கிழமைகளில், பரணி நாள்களில், அஷ்டமித் திதிகளில் வீரபத்திரரைச் சிறப்பாக வழிபாடு செய்கிற வழக்கம் இருக்கிறது. தும்பைப்பூமாலை சாற்றியும் வெண்ணெய் அணிவித்தும் வணக்கம் செலுத்துவர். கிராமங்களில் பறை முழங்க, பாமரமக்கள் தெய்வீக உணர்வில் திழைத்துக் கூத்தாட நிசி தாண்டும் வரை நடக்கிற வீரபத்திர வழிபாடு எழுச்சி மிக்கதாயிருக்கிறது.

வீரபத்திரர் வெளித்தோற்றத்தில் உக்கிரமாக இருந்தாலும், அவர் மிகவும் குளிர்ச்சியான உள்ளம் படைத்தவராக இருக்கிறார் என்பதை அவரது உடலில் உள்ள ஜீவராசிகளும் காட்டி நிற்கின்றன. குளிர்ச்சியான இடத்தில் மட்டுமே வசிக்கும் தேள்கள் இவருக்கு மாலையாகின்றன. சிலந்திப்பூச்சி இவருடலில் விளையாடி மகிழ்கிறது. பதின்நான்கு பாம்புகள் அங்கங்கள் தோறும் ஆபரணமாகின்றன. இவை இயற்கையுடன் இணைந்த தெய்வீகத் தோற்றமாகவும், குளிர்ச்சியின் பிரதிபலிப்பாகவும் அமைகின்றன.

அநேகமான வீரபத்திரர் ஆலயங்களில் பெருமானின் அருகில் தட்சன் கூப்பிய கரங்களுடன் வழிபாடாற்றும் நிலையிலான திருவுருவத்தையும் அமைத்திருப்பார்கள். தவறே செய்த தட்சனுக்கும் தயை செய்து காத்த பேரருட் திறனை இது வெளிப்படுத்துகிறது.

வீரம் என்பது பல்திறப்படும். தன்னைத் தான் வெல்வதே பெரு வீரம் என்றும் கொள்வர். இத்தகு ஆன்மபலமாகிய வீரத்திற்கும் வீரபத்திர வணக்கம் துணை செய்யும் எனலாம்.

வீரபத்திரரின் யாக சங்காரம் என்பது பல செய்திகளைப் பக்திமான்களாய சைவசமயிகளுக்கு எடுத்துரைக்கிறது. சிவவழிபாட்டாளர்கள் அந்த தேவதையை, இந்தத் தேவனை, அந்தக் கிரஹத்தை, இந்தக் கிரஹத்தை என்று ஓடி ஓடி வழிபடத்தேவையில்லை.. அவற்றை எல்லாம் தண்டித்து ஆட்கொண்டவராய வீரபத்திரன் விரைகழலை வழிபட்டால் போதுமல்லவா..?

இப்பொருள் பெற திருநாவுக்கரசர் பாடுகிறார்.

“எச்சன் நினைத் தலை கொண்டார் பகன் கண் கொண்டார்
இரவிகளில் ஒருவன் பல்  இறுத்திக் கொண்டார்
மெச்சன் வியத்திரன் தலையும்  வேறாக் கொண்டார்
விறல் அங்கி கரங் கொண்டார்  வேள்வி காத்த
உச்ச ந(ய)மன் தாள் அறுத்தார்  சந்திரனை உதைத்தார்
உணர்விலாத் தக்கன் தன்  வேள்வியெல்லாம்
அச்சமெழ அழித்துக் கொண்டு அருளும் செய்தார்
அடியேனை ஆட்கொண்ட அமலர் தாமே”

16 Replies to “வீரத்தின் வித்தான வீரபத்திரர் வழிபாடு”

 1. Pingback: Indli.com
 2. //அவர்கள் கூற்றின் படி, சிவபெருமானால் மறு உயிர் பெற்ற ஆட்டுத் தலை கொண்ட தக்ஷன் சிவனைத் துதித்துப் பாடியது தான் யஜுர் வேதத்தின் முக்கிய பகுதியாகிய ஸ்ரீ ருத்ரத்தினை அடுத்து வரும் சமகம் என்பது. ஒவ்வொரு பதத்திலும் ஆட்டின் சப்தமாகிய “மே” என்ற சப்தம் வரும் வகையில் அமைந்தது. ‘மே’ என்றால் வேண்டும் என்பது அர்த்தமாகும். “ச’ஞ்சமே மயச்’சமே ப்ரியஞ்சமே” என்று ஒவ்வொரு பதத்திலும் “மே” என்று அமையும்.//

  மிகவும் சுவாரசியமாகவுள்ளது.

 3. திரு மயூரகிரியாரின் ஸ்ரீ வீரபத்திர சுவாமி பற்றியக் கட்டுரை சிறப்பாக அமைந்துள்ளது. அவரைப்பற்றி தமிழ் இலக்கியத்தில் சிறப்பாகக் கூறப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிகும் செய்தி. சிவாலயத்தில் ஸ்ரீ வீரபத்திரரை வழிபடும் போது சொல்வதற்கு திரு சர்மா அளித்துள்ள தமிழ் மற்றும் சமஸ்கிருத மந்திரங்கள் நிச்சயம் பயன்படும். தவிர தமிழ் மக்கள் கிராமப்புறத்தில் வழிபடும் வீரன் சாமிகளை வழுத்தவும் நிச்சயம் அவை பயன்படும். திரு சர்மா அவர்கள் இது போன்று ஸ்ரீ பைரவர் வழிபாட்டினைப் பற்றியும் எழுத வேண்டுகிறேன்.

  இங்கே அடியேன் கண்ட அறிந்த சில செய்திகளையும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
  சிதம்பரத்தில் ஸ்ரீ வீரபத்திர சுவாமி ஸ்ரீ வீரமாகாளீ யுடன் தனிக்கோயில் கொண்டு விளங்குகிறார். அதே தில்லையில் கொற்றவன்குடி(இன்று அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கொத்தங்குடி தோப்பு) ஸ்ரீ உமாபதி சிவாச்சாரியார் கோயிலிலும் ஸ்ரீ வீரபத்திரர் மூர்த்தம் வழிபாட்டில் உள்ளது. கோவைப் பேரூர் பட்டீஸ்வரர் ஆலயத்திலும் அவருக்கு மூர்த்தம் உள்ளது.
  திரு சர்மா அவர்கள் கருனாடகத்திலும் ஆந்திரத்திலும் ஸ்ரீ வீரபத்திரர் வழிபாடு உள்ளது என்று கூறுகிறார். ஆம் அது சரிதான்.
  தமிழகத்தில் கன்னடம் தாய்மொழியாகக்கொண்ட ஒக்கலிகர், தேவாங்கர் ஆகிய இரு சமூகங்களிலும் ஸ்ரீ வீரபத்திரர் மற்றும் ஸ்ரீ பைரவர் வழிபாடு ஒரு சில குலங்களின் குலதெய்வ வழிபாடாக நடைபெறுகிறது. வீரபத்திரன் போரப்பன்(பைரவர்) என்ற பெயர்கள் அவர்களிடம் வழங்கிவருகின்றன.
  செவ்வாய் ஸ்ரீ வீரபத்திரர் வழிபாட்டிற்கு உகந்தது என்கிறார் திரு சர்மா. ஆம் வீரபத்திரரை வீட்டு தெய்வமாக வழிபடுவோர் செவ்வாய் அன்று புலால் உண்பதில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

  இன்னொரு செய்தி ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் அருகே பவானிசாகர் அணைக் கட்டப்பட்ட போது மூழ்கிய டணாய்க்கன் கோட்டையிலிருந்த வீரபத்திரர் கோயில் இடம் மாற்றி பவானிசாகர் நகருக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ளது.

 4. வீரபத்ரஸ்வாமியைப் பற்றிய விரிவான வ்யாசமளித்த ஸ்ரீ மயூரகிரிஷர்மா மஹாசயருக்கு நமஸ்காரம்.

  நித்யானுஷ்டானமாக இல்லையெனினும் துரித சாந்திக்காகவும் குறைவில்லா ஞானம் வேண்டியும் அவ்வப்போது சூர்யாஸ்தமன வேளையில் நித்யானுஷ்டானங்கள் முடிந்த பின் விபூதியை அபிமந்த்ரித்து ஜபம் செய்யப்பெறும் மந்த்ரம் இந்த்ராக்ஷி மற்றும் சிவகவசம். இதில் சிவமூர்த்தங்களில் ஒருவரான வீரபத்ரமூர்த்தி வணங்கப்பெறுகிறார்.

  ஸ்காந்த மஹாபுராணத்தில் ப்ரம்மோத்தர கண்டத்தில் பனிரெண்டாம் அத்யாயத்தில் வ்யாஸாசார்யரால் அருளப்பட்டது இந்த சிவகவச ஸ்தோத்ரம்.

  கல்பாந்தகாலோக்ர படு ப்ரகோப
  ஸ்புடாட்டஹாஸோச்சலி தாண்டகோச:
  கோராரி சேனார்ணவ துர்நிவார
  மஹாபயாத் ரக்ஷது வீரபத்ர:

  ப்ரளய காலாக்னி போல் தஹிக்கத்தக்கவரும் லோகா லோகங்களை மேல் கீழாகத் தள்ளத்தக்க வல்லமை படைத்தவருமான் வீரபத்ரர் பகைவர்களின் படைகளால் தாக்கப்படுவதான் எனது பெரும் பயத்தைப் போக்கட்டும்.

  இந்த ஸ்தோத்ரத்தில் கத்ய வடிவில் இருக்கும் பகுதியில் சிவ தத்வம் விளக்கி வருகையில் தேஜோரூபாய, தேஜோமயாய, தேஜோதிபதயே, ஜெய ஜெய ருத்ர, மஹாரௌத்ர என்பதற்குப் பிறகு பத்ராவதார என்ற படிக்கு காக்கும் கடவுளாக சிவபெருமான் ஸ்துதிக்கப்பெறுகிறார்.

  \\\\\\\\\பரம்பொருளை நிந்தனை செய்து நாஸ்தீகத் தனமாக வேள்வி செய்த தக்கப் பிரஜாபதியின் கொட்டத்தை அழித்த\\\\\

  சிவபூஜா துரந்தரரான தாங்கள் அடியேன் தோஷாரோபணம் செய்வதாக எண்ணினால் முதற்கண் க்ஷமாயாசனம். தக்ஷப்ரஜாபதி சிவநிந்தை செய்ததை புராணங்கள் சொல்கின்றன. ஆனால் நாஸ்திகராக தக்ஷ ப்ரஜாபதி சொல்லப்படுவதில்லையே.

  \\\\\\\மகாபாரதத்தின் சாந்திபருவத்திலும், மத்ஸயபுராணயத்தின் 72-ம் அத்தியாயத்திலும், பாகவதபுராணத்திலும், லிங்கபுராணம், வராஹபுராணம், கூர்மபுராணம், போன்றவற்றிலும் வீரபத்திரரைப் பற்றிய செய்திகள் நிறைவாக இருக்கின்றன.\\\\\\\

  ஸ்ரீமத் பாகவத மஹாபுராணத்தில் சதுர்த்த ஸ்கந்தத்தில் ஸதீ உபாக்யானம். தன் தந்தையாகிய தக்ஷ ப்ரஜாபதி செய்த சிவ நிந்தை பொறுக்காத தேவி தாக்ஷாயணி யோகாக்னியில் தன்னை த்யாகம் செய்து கொண்டாள் என்பதை தேவரிஷி நாரதர் சொல்லக்கேட்டு கடும் கோபம் கொண்ட சிவபெருமான் தன் ஜடாபாரத்திலிருந்து அக்னி போல் ஜ்வலிக்கும் ஒரு ஜடையை உன்மத்தர் போல் சிரித்து தரையில் வீசி எறிகிறார். அதனின்று

  தத: அதிகாய: தனுவ ஸ்ப்ருசந்திவம்
  ஸஹஸ்ரபாஹு: கனருக் த்ரிஸூர்யத்ருக்
  கராலதம்ஷ்ட்ரோ ஜ்வல்தக்னி மூர்த்தஜ:
  கபாலமாலீ விவிதோத்யதாயுத:

  கருமை நிறமுடையவராயும் மூன்று ஸூர்யர்களுக்கு சமான ப்ரகாசம் உடையவராயும் ஆகாசத்தைதொடுவதாகிய மிகப்பெரும் உருவமுடையவராகியும் பற்பல ஆயுதங்கள் ஏந்திய ஆயிரம் கைகளையுடையவராகியும் மிகுந்த பயமளிக்கும் பற்களையுடையவராகியும் கபாலங்களை மாலையாய் அணிந்தவராகியும் ஒரு பெரும் மூர்த்தி ஆவிர்பவமானார் (ஸ்ரீமத் பாகவதம் – 4-5-3)

  பரம வைஷ்ணவமான ஸ்ரீமத் பாகவத மஹாபுராணத்தில் நான்காவது ஸ்கந்தத்தில் சொல்லப்படும் ஸதீ உபாக்யானத்தில் தக்ஷ ப்ரஜாபதியை சிக்ஷிக்க ஆவிர்பவமாகும் மூர்த்தி பற்றி சொல்லப்பட்டுள்ளது. ஆனால் அந்த மூர்த்தியின் பெயர் வீரபத்ரர் என சொல்லப்படவில்லை.

  \\\\ சரபேஸ்வரர் என்பதும் வீரபத்திரர் நரசிங்கப் பெருமானைச் சாந்தப்படுத்த எடுத்த மூர்த்தமே என்று கொள்வர். \\\\\

  சரபேஸ்வரர் என்பவர் வீரபத்ரஸ்வாமியின் ஆவிர்பவம் என்பது ஐதிஹ்யமா அல்லது புராணாந்தரங்களில் சொல்லப்பட்டுள்ளதா தெரியவில்லை. சரபேஸ்வரர் ந்ருஸிம்ஹ பெருமாளை சாந்தப் படுத்த ஆவிர்பவமானவர் என சரப மூர்த்தியை உபாசிக்கும் சைவர் கொள்வர்.

  ஆனால் நித்யானுஸந்தானத்தில் இருக்கும் விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில்

  அதுல: சரபோ பீம:
  ஸமயக்ஞோ ஹவிர்ஹரி:

  என்ற ச்லோகத்தில் சரப நாமமும் உள்ளது.

  திருமாலின் ஆயிரம் நாமங்களில் சரப: என்பதும் ஒரு நாமம். இதற்கு பாஷ்யமிட்ட ஆதிசங்கரர் சரா: சரீராணி, சீர்யமாணத்வாத், தேஷு ப்ரத்யகாத்மதயா பாதீதி சரப: என அழியக்கூடிய சரீரத்தினுள் ஆத்மஸ்வரூபமாய் ப்ரகாசிப்பவர் சரபர் என சொல்கிறார்.

 5. ப்ரம்மஸ்ரீ சர்மா அவர்கள் வீரபத்திரக்கடவுள் வழிபாடு குறித்த பலசெய்திகளைத் திரட்டிச் சுவைபடத் தந்துள்ளார். வீரபத்திரர் வழிபாட்டுநெறி பிற்காலச் சோழர்கள் காலத்திலும் கர்நாடகத்தில் வீரசைவர்களிடத்திலும் மிகுந்த செல்வாக்குப் பெற்றமைக்கு வரலாற்றுக் காரணங்கள் இருக்கும் என நம்புகின்றேன். தமிழ் நாட்டில் கன்னடம் பேசுகின்ற மக்கள் வாழ்கின்ற பகுதிகளில் வீரபத்திர வழிபாடு சிறப்பாக நடைபெறுகின்றது. அவ்வழிபாடு ஆகம முறையிலன்றி சிறுதெய்வ, அல்லது குலதெய்வவழிபாட்டு நெறியில் அச்சம் விளைவிப்பதாகவே காணப்படுகின்றது.

 6. வணக்கத்திற்குரிய கிருஷ்ணகுமார், வீபூதிபூஷண், முனைவர் முத்துக்குமாரஸ்வாமி மற்றும் குமரன் ஆகியோருக்கு நன்றிகள்..

  இங்கு சிறியேன் தந்திருக்கிற வீரபத்ர த்யான ஸ்லோகத்தில் ஒரு வரி எழுதப்படாமல் விடப்பெற்று விட்டது.. அதன் முழு வடிவம் கீழ் வருமாறு அமைய வேண்டும்..

  கிரந்த நூலொன்றில் கிடைத்ததன் படியான இதே த்யானம் இவ்வாறு அமைகிறது.. இவ்வடிவமே சரியென்றும் தற்போது தெரிகிறது… முன்னர் முழுமை பெறாத த்யானத்தை இங்கு இடுகை செய்தமைக்கு என்னை மன்னிக்க வேண்டும் என்று ப்ரார்த்திக்கிறேன்.

  “மரகத மணி நீலம் கிங்கிணி யுக்தபாத3ம்
  ப்ரகடிதமுக2மீசம் பானுசோமாக்2நி நேத்ரம்/
  ஹரித4ரமணிகே2டம் சூ’ல தண்டோக்ர3 ஹஸ்தம்
  விதி4தரமஹிபூ4ஷம் வீரப4த்3ரம் நமாமி//

  பெருமதிப்பிற்குரிய க்ருஷ்ணகுமார் அவர்கள் பல்வேறு நுஸல்களை மேற்கோள் காட்டிச் சிறப்பான விரிவான பதிவொன்றை இங்கு இடுகை செய்திருக்கிறார்கள்.. அதில் சம்ஸ்கிருதத்தில் அமைந்த ஸ்ரீமத் பாகவதத்திலிருந்து பல ஸ்லோகங்களை மேற்கோள் காட்டியிருக்கிறார்கள்..

  தமிழகத்தில் வேப்பத்தூரில் கௌண்டின்ய மரபில் பிறந்தவரான செவ்வைசூடுவார் என்னும் பெரும்புலவர் தமிழில் பாகவதபுராணத்தைப் பாடியிருக்கிறார்.. அது “செவ்வை சூடுவர் பாகவதம்” என்று புகழப்பெறுகிறது.. இந்நுஸலிலும் வீரபத்திரர் வரலாறு க்ருஷ்ணகுமார் அவர்கள் காட்டியிருப்பது போலவே பேசப்பெறுவதாகத் தெரிகிறது.

  மணிதயங்கு முடிவான் முகடு முட்ட வரைநேர்
  திணிபுயந் திசைகள் எட்டையும் நெருக்க எழுதீ
  அணிநிறங் கிளரும் வீரனவன் நின்று முளையா
  பணி என் என்று பவன் வார் கழல் பணிந்தனன் அரோ

  இங்கு .. தகக்ன் சிரத்தை அறுத்து வீரபத்திரர் தட்சணாக்னியில் இட்டார் என்கிற விஷயம் வருகிற போது, செவ்வை சூடுவார் தட்சணாக்னியை “தென்தலை அழல்’ என்று சிறப்பாக மொழி பெயர்திருக்கிறார் என்றும் பேராசிரியர் ஹேமா சந்தானராமன் அவர்கள் எழுதிய ஒரு கட்டுரையில் படித்திருக்கிறேன்.

  இன்னொன்றும் குறிப்பிடுதல் அவசியம்.. திருமுறைகளில் முருகனை சிவன் மகனாகன் என்று பேசப்பட்டிருக்கிறது.. ஆனால் வீரபத்திரரை..பைரவரை.. சிவனாகவே, திருமுறைகள் பேசுகின்றன..

 7. வன்னிய சங்கம், பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர், அவரது குல தெய்வ கோயிலில் வீரபதிரருக்கு மஹா ரூப சிற்பம் வேலை நடக்கிறது, ஐயன் ஐயனாருக்கு தைலாபுரம் அருகே நல்லாவ்ரில் அழகான அடிப்படை வசதியுடன் கோயில் கட்டி வீரபதிரருக்கு வீர கம்பிர சிற்பம் உண்டு.

 8. பெரு மதிப்பிற்குரிய மயூரகிரி சர்மா அவர்களுக்கு,

  வீரபத்திரரை மட்டுமல்ல , முருகப்பெருமானை ஆறுமுக சிவன் என்றும், விநாயக பெருமானை ஆனைமுக சிவன் என்றும் அழைப்பது தமிழர் மரபு. ஒரே பரம்பொருளே எல்லா வடிவங்களையும் ஏற்கிறது என்பதே உண்மையும், நமது சனாதன தர்மத்தின் அடிப்படை தத்துவமும் ஆகும்.

  சிவபிரான் கயிலையில் மட்டும் உறைபவர் அன்று. கயிலையிலும் உறைபவர் ஆவார்.

  என் தந்தையாரிடம், நான் சிறுவயதில், ஏன் இவருக்கு இத்தனை பெயர்கள் வேண்டுமா , ஒரே ஒரு பெயர் போதாதா என்று கேட்டேன்.

  அதற்கு அவர் சொன்ன பதில் :- பெயர்கள் எல்லாமே மனிதர்கள் சூட்டுபவை தான். நமக்குள்ளேயும் எங்கும் நிறைந்தவன் உள்ளான். எனவே, மனிதர்கள் சூட்டிய பெயர்களும் இறைவனால் சூட்டப்பட்டவையே ஆகும் என்றார்.

  மேலும், மனிதன் என்ற தோற்றம் பல எல்லைகளுக்கு உட்பட்டது. ஆனால் இறை என்ற தோற்றம் வர்ணனைகளுக்கும் , எல்லைகளுக்கும் அப்பாற்பட்டது. எனவே, இறைவனின் பெயர்களுக்கும் தோற்றங்களுக்கும் எல்லைகளே கிடையாது. இப்போது இருக்கும் பெயர்கள் மற்றும் தோற்றங்களையும் தவிர மேலும் எதிர்காலத்திலும் பல புதிய உருவங்களும், பல புதிய பெயர்களையும் மக்கள் உருவாக்குவார்கள் என்றார் என் தந்தை.

  மேலும் பெயரில்லா, உருவில்லாமலும் அவனே உள்ளான். அந்த சிறு வயதில், அவர் சொன்னவை எனக்கு சரியாக புரிபடவில்லை. இப்போது, அனுபவம் கூடும்போது, அறுபதிலே எனக்கு புரிகிறது.

 9. ஸ்ரீ க்ருஷ்ணகுமார் மஹாசய்
  “தக்ஷப்ரஜாபதி சிவநிந்தை செய்ததை புராணங்கள் சொல்கின்றன. ஆனால் நாஸ்திகராக தக்ஷ ப்ரஜாபதி சொல்லப்படுவதில்லையே”.
  சிவ நிந்தனை நாஸ்திகம் தான். கொஞ்சம் ஆழ்ந்து கூர்ந்து நோக்கினால் அது விளங்கும்.
  பரம் பொருளான சிவபெருமான் தன்னை எழுந்து நின்று வணங்கவேண்டும் என்று எண்ணிய அகங்காரி பிரம்ம குமாரன் பிரஜாபதி தக்கன். அவன் சிவ பெருமானை இழிவாக நிந்தை செய்து பேசினான் என்பது உண்மை. அவரை அவமானப்படுத்த சோமயாகம் என்ற சிவபெருமானின் ப்ரீதிக்காக செய்யப்படு யக்ஞத்திற்கு அவரை அழைக்காமல் நடத்தியவன் தக்கன்.
  இன்றைய திராவிட கழக நாத்திகர் செய்வன அனைத்திற்கும் வழிகாட்டி இந்த தக்கப் பிரஜாபதி தான். அந்த வேள்வியை செய்த வேதியர்கள் அடுத்தபிரவியிலும் வைதீகத்தினின்றும் விலக்கப்பட்டனர்.
  சுருங்கச்சொன்னால் இறைவனை மறுப்பது நிராகரிப்பது நாத்திகம். எதிர்ப்பதும் நாத்திகம் தான். சிவ பெருமானே இறையாம் பரம் பொருள் என்ற எம் துணிபின் படி இவ்விரண்டிலும் தக்ஷப்பிரஜாபதி நாஸ்த்திகனே.
  ஐயா முத்துக்குமாரசுவாமி
  “வீரபத்திரர் வழிபாட்டுநெறி பிற்காலச் சோழர்கள் காலத்திலும் கர்நாடகத்தில் வீரசைவர்களிடத்திலும் மிகுந்த செல்வாக்குப் பெற்றமைக்கு வரலாற்றுக் காரணங்கள் இருக்கும் என நம்புகின்றேன்”.
  பிற்கால சோழர்கள் சாளுக்கிய கன்னட அரசர்களோடு மண உறவு கொண்டமை இதற்கு காரணமாக இருக்கலாம்.
  ஐயா
  “தமிழ் நாட்டில் கன்னடம் பேசுகின்ற மக்கள் வாழ்கின்ற பகுதிகளில் வீரபத்திர வழிபாடு சிறப்பாக நடைபெறுகின்றது. அவ்வழிபாடு ஆகம முறையிலன்றி சிறுதெய்வ, அல்லது குலதெய்வவழிபாட்டு நெறியில் அச்சம் விளைவிப்பதாகவே காணப்படுகின்றது”. கொங்கு மண்டலத்தில் காணப்படும் கன்னடம் பேசும் ஒக்கலிகர் மற்றும் தேவாங்கர் ஸ்ரீ வீரபத்திர சுவாமியை அகோர வீரபத்திரராக வழிபடுகின்றனர் சிறு தெய்வ வழியில் வழிபாடு செய்வதில்லை. வீரசைவ நெறியின் தாக்கம் வீரபத்திரர் வழிபாட்டில் அமைதியை ஏற்படுத்திவிட்டது போலும். ஸ்ரீ வீரபத்திரருக்குறிய செவ்வாய்கிழமை அசைவ உணவு மறுக்கும் பழக்கம் இவர்களிடம் காணப்படுகிறது.
  ஆனால் சிதம்பரத்தில் சலவைத்தொழிலாளர் வீரபத்திரர் பூசை செய்கிற முறையில் சாராயம் படைக்கப்படுவதாக அறிந்துள்ளேன்.

 10. \\\\\\\சிவ பெருமானே இறையாம் பரம் பொருள் என்ற எம் துணிபின் படி இவ்விரண்டிலும் தக்ஷப்பிரஜாபதி நாஸ்த்திகனே.\\\\\\\

  ஸ்ரீ சிவஸ்ரீ விபூதிபூஷண் மஹாசய, சிவ பெருமானே பரம்பொருள் என்ற துணிபின் படி தக்ஷப்ரஜாபதியை நாஸ்திகராக தாங்கள் எண்ணுவதை புரிந்து கொள்ள முடிகிறது. அந்த துணிபின் பாற்பட்டு அதை மதிக்கவும் செய்கிறேன்.

  ஆனால் சிவபெருமான் தான் பரம்பொருள் அல்லது மஹாவிஷ்ணு தான் பரம்பொருள் என்று ஏற்காது இருவரையும் பூஜிப்பவருக்கு சிவபெருமானையோ அல்லது மஹாவிஷ்ணுவையோ ஒரு வ்யக்தி நிந்தனை செய்தால் அவர் சிவநிந்தை செய்கிறார் அல்லது விஷ்ணு நிந்தை செய்கிறார் என்றே இயம்ப இயலும். நாஸ்திகர் என சொல்ல இயலாது. அடியேனுடைய ப்ரஸ்தாபம் அவ்வாறே.

  வீரபத்ரஸ்வாமியின் ராஜஸிகமான வழிபாடுகள் கூட சில சம்சயங்களை துலக்கவும் செய்கின்றன. பல மித்ரர்கள் சிறுதெய்வ வழிபாடு என்ற சொல்லை விரோதித்ததை பல உத்தரங்களில் வாசித்துள்ளேன். பரமவைதிகர்களும் வைதிகமுறையில் ஒழுகாதோரும் பின்பற்றும் வழிபடுமுறையில் வேண்டுமானால் ஸாத்விக ராஜஸிக வித்யாசங்கள் இருக்கலாமேயன்றி வழிபடும் வீரபத்ரஸ்வாமி ஒருவரேயன்றோ.

 11. ஸ்ரீ க்ருஷ்ணகுமார் மஹாசய் நாஸ்திகம் என்பது என்ன? என்பது இங்கே எழும் அடிப்படையான கேள்வி? இறை நம்பிக்கையாளர் ஆஸ்தீகர். இறை மறுப்பாளர் நாஸ்தீகர். வேதத்தினை மறுப்பவர்களும் நாஸ்தீகர் என்றும் கொள்ளப்படுகிறது.
  தூஷணம் நிந்தனை ஆகியன நாஸ்தீகத்தின் கூறு(characteristic element, dimension or component) என்று கொள்ளவேண்டும்.
  இறை நம்பிக்கை வழிபாட்டுக்கு ஒரு மனிதரை இட்டுச்செல்கிறது. மறுப்பு நிந்தனை தூஷணத்திற்கு இட்டுச்செல்கிறது. தன்னை சிவபெருமானுக்கும் உயர்வாகக் கருதி அப்பெருமானை அவமதித்த தூஷித்த தக்ஷப்பிரஜாபதி நாஸ்திகனே. வேதம் கூறும் சோமயாகம் சிவபெருமானை ப்போற்றுகிறது. சிவ மற்றும் உமா சேர்ந்ததே சோம எனும் அம்ருதமான சிவ நாமம். அந்த யாக முறையை மாற்றி சிவபெருமானை ஒதுக்கிய தக்ஷன் நாஸ்திகனே(வேதத்தினை மறுத்தலால்).
  இதில் relativism தேவையில்லை. தெய்வனிந்தனை நாத்திகமே. தெய்வ வடிவம் யாதாகினும் அதை நிந்திப்பது நாத்திகமே.
  இங்கே ஒரு செய்தி சமீபத்தில் ரிக் வேதம் தக்ஷனைப் புகழ்வதாகக் கூறி சைவத்தமிழ் அறிஞர் ஒருவர் எழுதியதை படிக்க நேர்ந்தது. வேதம் சிவ நிந்தனை செய்பவர்களை ஏற்கிறது என்று அவர் எழுதியிருந்தார். வேதம் நான்கும் போற்றும் நாயகன் பரமேஸ்வரன் என்று போற்றும் அடியேனுக்கு மிகுந்த வருத்தம் ஏற்பட்டது.
  உங்களைப் போன்ற பெரியவர்கள் சிவ நிந்தனை சிவனடியார் அல்லாதவர்க்கு நாஸ்திகம் அன்று என்று சொன்னால் ஏற்படும் விளைவு இதுபோல இருந்துவிடுமோ என்று அஞ்சுகிறேன்.

 12. அன்பார்ந்த ஸ்ரீ சிவஸ்ரீ விபூதிபூஷண் மஹாசய,

  அடியேன் சைவனும் அல்லேன் வைஷ்ணவனும் அல்லேன். நித்ய பூஜை சிவன், விஷ்ணு, சூர்யன், கணபதி, தேவி என பஞ்சாயதன பூஜையாய் இருப்பினும் சொல்வழக்கில் சிவபூஜை செய்வதாகவே சொல்லப்படுகிறது. மிகுந்த ஆர்ஜவத்துடன் ப்ரத்யேகமாக சிவாராதனம் செய்யும் சைவர்களும் ப்ரத்யேகமாக விஷ்ணுவை ஆராதனம் செய்யும் வைஷ்ணவர்களும் அடியேனுக்கு வணக்கத்திற்குறியவர்களே. அவர்களுடைய ஆத்ம குணங்களும் ஆர்ஜவமும் கற்றுக்கொண்டு பேணப்படவேண்டியவை எனக்கருதுபவன்.

  ஆத்மானாத்ம விசாரம் செய்ய விழையும் வேதாந்திகளுக்கு வேண்டிய தகுதியாக சமதமாதி ஷட்குணசம்பத் இருக்க வேணும் என ஆதிசங்கரர் விவேகசூடாமணியில் சொல்கிறார். கொக்கைப்போலிருப்பான் கோழியைப்போலிருப்பான் உப்பைப்போலிருப்பான் உம்மைப்போலிருப்பான் என வைஷ்ணவசான்றோர் வைஷ்ணவ லக்ஷணஞ்சொல்லிக்கேட்டிருக்கிறேன். ப்ரத்யேகமாக திருமுறைகளிலோ அல்லது புராணங்களிலோ சொல்லப்பட்ட சிவபக்த லக்ஷணங்கள் யாவை என்று கேட்டதில்லை. இங்குள்ள சிவபூஜா துரந்தரர்கள் இது பற்றி ப்ரத்யேகமாக வ்யாசமெழுதினால் அதை வாசித்து க்ருதார்த்தனாவேன்.

  ஆயினும் தெய்வ நிந்தனையென்ன மனுஷ்ய நிந்தனையென்ன ஆன்மீகத்தில் ஈடுபட விழைபவருக்கு அவசியமான குணம் தூஷணம் – நிந்தனை செய்வதிலிருந்து அறவே விலகியிருத்தல் என அறிகிறேன். சிவநிந்தை செய்பவன் சிக்ஷைக்கு பாத்ரனாவான் என்பதும் அவன் சிக்ஷிக்கப்பட்டான் என்பதும் பரம வைஷ்ணவமான ஸ்ரீமத் பாகவத மஹாபுராணத்தில் சொல்லப்பட்டுள்ளது.

  \\\\\\இங்கே ஒரு செய்தி சமீபத்தில் ரிக் வேதம் தக்ஷனைப் புகழ்வதாகக் கூறி சைவத்தமிழ் அறிஞர் ஒருவர் எழுதியதை படிக்க நேர்ந்தது. வேதம் சிவ நிந்தனை செய்பவர்களை ஏற்கிறது என்று அவர் எழுதியிருந்தார். வேதம் நான்கும் போற்றும் நாயகன் பரமேஸ்வரன் என்று போற்றும் அடியேனுக்கு மிகுந்த வருத்தம் ஏற்பட்டது.\\\\

  நிரீஸ்வரவாதம் பேசும் பூர்வமீமாம்ஸகர்களிலிருந்து, அத்வைதம், விஸிஷ்டாத்வைதம், த்வைதம், சிவாத்வைதம், த்வைதாத்வைதம், பேதாபேதம் என பற்பல சித்தாந்தங்களை நிர்த்தாரணம் செய்பவர்கள் ச்ருதியையே ஆதாரமாகக்கொண்டு சித்தாந்தங்களை நிர்த்தாரணம் செய்கின்றனர்.

  பெருமதிப்பிற்குறிய கயிலைமாமுனிவர் திருவாளர் திரு காசிவாசி முத்துக்குமாரசுவாமித் தம்பிரான் அவர்கள் ச்ருதி பற்றி எழுதியதை வாசித்தால் தங்கள் தாபம் தணியும். ஸ்ரீ தம்பிரான் ஸ்வாமிகள் அவர்களது அருள்வாக்கு கீழ்க்கண்ட சுட்டியில். அவசியம் வாசிக்கவும்.

  http://groups.yahoo.com/group/devaram/message/4018

  ஸோம என்ற பதத்திற்கு தாங்கள் அளித்த வ்யாக்யானத்தில் இருந்து பூர்வமீமாஸ்கர்களின் வ்யாக்யானம் வேறுபடுகிறது என தெரிகிறது.

  வேதாந்தம் கற்கையில் பூர்வமீமாஸமும் படிப்பது ஒரு பத்ததி. அதன்படி என் வேதாந்த ஆசிரியர் கற்பித்த, ஜைமினியின் பூர்வ மீமாம்ஸ ஸூத்ரங்களுக்கு வார்த்திகம் எழுதிய குமரில பட்டரின் மங்கள ச்லோகம் நினைவில் வருகிறது.

  விசுத்த க்ஞான தேஹாய த்ரிவேதீ திவ்ய சக்ஷுஷே
  ச்ரேய: ப்ராப்த நிமித்தாய நம: ஸோமார்த்ததாரிணே

  சந்த்ரகலையை பூஷணமாக அணிந்தவரும் ஞானஸ்வரூபியும் ரிக் யஜுஸ் சாம வேதங்களை தமது த்ரிநேத்ரங்களாகக் கொண்டவரும் மற்றும் எவர் அடையவேண்டிய எல்லா ச்ரேயஸுக்கும் ஆதாரமோ அந்த பெருமானுக்கு நமஸ்காரம் என ஸ்தூலமாக அர்த்தம் கொள்ளலாம். இங்கு ஸ்தூலமாக ப்ரதிபாத்யரான தேவன் சிவபெருமான் எனத்தெரிகிறது.

  ஆனால், பட்டர் எழுதிய வார்த்திகத்தில் அவர் ஸர்வவ்யாபியான ஸர்வகாரணகர்த்தனான ஈஸ்வரன் என்ற தத்வத்தை தன் வார்த்திகம் முழுதும் ஏற்றுக்கொள்ளாததால் “ஸோமார்த்ததாரிணே” என்ற படிக்கு அவர் த்ரிநேத்ரனான சிவபெருமானை சொல்லாது ஸோமரஸகலசங்களைக் கொண்ட யக்ஞஸ்வரூபியான ச்ருதியை ஸ்துதிக்கிறார் என்று கொள்வர்.

  பூர்வ மீமாஸ்கர்கள் ஸோம வாஜபேயாதி அனைத்து யாகங்களையும் செய்தவராயினும் நிரீஸ்வரவாதிகளாய் இருந்தனர். வெளிப்படையாய் நிரீஸ்வரவாதமும் செய்தனர். எனவே அவர்கள் நிலை தெளிவாகப் புரிகிறது.

  ஆனால், தக்ஷப்ரஜாபதியின் பரதேவதா நிந்தனை மற்றும் நாஸ்திகம் என்பது பற்றி தாங்கள் அடிப்படையாக எழுப்பிய வினா இவற்றை எப்படி ஒன்றுக்கொன்று சேர்த்து நாஸ்திகத்தை நிர்த்தாரணம் செய்வது என்பதில் அடியேனுக்கு தெளிவு கிட்டவில்லை என்று சொல்வது தான் சரியாக இருக்கும்.

  “நிந்தனை” தவறானது என்ற தங்கள் கருத்து எனக்கு முழு சம்மதமே.

  சிவபெருமானை ப்ரத்யேகமாக சிவாரதனை செய்யாதவர்களும் ஆராதிக்கிறார்கள் என்றாலும் ப்ரத்யேகமாக சிவாராதனம் செய்பவர்களது சிவதத்வ விசாரத்தை அப்படியே அறிவது தான் சாலச்சிறந்தது என்பது புரிகிறது.

  சிவமார் திருப்புகழை எனுநாவினிற் புகழ
  சிவஞான சித்திதனை அருள்வாயே
  அருணாசலத்தில் உறை பெருமாளே

  என்று எங்கள் வள்ளல் அருணகிரிப்பெருமான் அருளிய திருப்புகழை இன்னும் ச்ரத்தை மிகுந்து ஓத தமிழ்த்ரயப்பெருமான் சித்தசுத்தியையும் அதன்பயனாக குறைவற்ற ஞானத்தையும் அருள சம்சயங்கள் ஒளிபெருக விலகும் இருள் போல விலகும் போலும்.

  பின்னும் சிவனடியார்கள் மனம் நோகுமாறு எனது உத்தரத்தில் ஏதும் எழுதி இருப்பின் அதற்கு எனது க்ஷமாயாசனம்.

 13. அன்புள்ள ஸ்ரீ க்ருஷ்ணக்குமார் மஹாசய் உங்களதுக்கருத்துக்களால் எந்த அளவிலும் மனம் புண்படவில்லை. அவற்றை அடியேன் ஏற்றுக்கொள்ளவில்லை அவ்வளவு தான்.
  தாங்கள் பஞ்சாயதனப் பூஜை செய்வதால் ஸ்மார்தர் ஆகிறீர்கள். ஸ்ரீ சங்கராச்சாரியாரின் வழி வருகிறவர்கள் தாங்கள் எனவே சைவர் ஆகமாட்டீர்கள். ஆனால் பஞ்சாயதன ப்பூஜையில் சிவ பஞ்சாயதனம், விஷ்ணு பஞ்சாயதனம், சக்தி பஞ்சாயதனம் என வகைகள் உண்டு. எந்த மூர்த்தி மையத்தில் வைக்கப்படுகிறதோ அது முக்கியத்துவம் பெறுகிறது. சிவ பஞ்சாயதனப் பூஜை செய்ய பஞ்சாக்ஷரி தீக்கைப் பெற்று இருக்கவேண்டும் என்பது விதி என அறிகிறேன். அதன் நிறைவில் ஜபம் கூட பஞ்சாக்ஷர ஜபமாகவே இருக்கிறது.ஆதலால் சிவ பஞ்சாயதன பூஜை சிவ பூஜை எனப்படுகிறது.
  பரதெய்வ தூஷணம் நிந்தனை யாருக்கும் ஏற்றதல்ல எனும் தங்கள் கருத்து அடியேனுக்கும் ஏற்புடையதே.
  நாஸ்தீக மதங்கள் வைதீகத்திலும் உண்டு. சாங்கியம், பூர்வ மீமாம்சை அத்தகையன. அவை எமக்கு ப்புற சமயங்களே.
  பூர்வ மீமாம்சையின் ஆச்சாரியார் ஸ்ரீ குமரில பட்டர் தனது உரைனூலில் சிவ வணக்கத்தோடு துவங்கு கிறார். என்றே இந்தியத்தத்துவ ஞானம் எனும் நூலில் படித்திருக்கிறேன். கர்மக் காண்டத்தினை மந்திரத்தின் சக்தியை மட்டும் போற்றும் மீமாம்சகர்கள் கொஞ்சம் கொஞ்சமாக க்கடவுளை நம்பும் அளவிற்கு வந்தார்கள் என்று தத்துவ அறிஞர்கள் கருதுகிறார்கள். அவ்வகையில் ஸ்ரீ குமரிலர் சிவ வணக்கம் செய்தவர் என்று கருதலாம்.
  பூர்வ மீமாம்சை சாஸ்திரம் படித்தல் அனைவருக்கும் இன்றும் பயன் தரும். வேதத்தின் பொருளை உணர்வதற்கு மீமம்ச தர்சனம் பயன்படும். மொழியியல் ஆராய்சியின் முன்னோடிகள் அவர்கள். எனினும் வர்ணாசிரமம் கடவுள்க்கொள்கை ஆகியவற்றில் மீமாம்சகரின் முடிவுகள் எமக்கு ஏற்புடையன அல்ல.

 14. இறைவன் பல ரூபத்தில் நாம் வழிபட்டாலும் அவன் ஒருவனே என்பது இந்து சமயத்தில் திரும்ப திரும்ப கூறப்பட்டுள்ளது

  அதனால் அவர் அவர் தமக்கு பிடித்த அல்லது தமக்கு விளங்கின முறையில் வழி படுவது என்பது இந்து சமயத்தின் ஒரு தனித்தன்ன்மை.

  எனவே இந்த முறையின்படி வேற்றுமையிலும் ஒற்றுமை காண முடியும்.

  இதை நாம் மேலே எடுத்து பார்த்தல் இந்து சமயத்தினர் மற்றும் சமயத்திலும் அந்த ஒற்றுமையைக் காணலாம்.

  இதை பல இந்து சமய விற்பனர்கள் கூறி இருக்கிறார்கள்.

 15. அன்புள்ள திருவாசகம்,

  ” இறைவன் பல ரூபத்தில் நாம் வழிபட்டாலும் அவன் ஒருவனே என்பது இந்து சமயத்தில் திரும்ப திரும்ப கூறப்பட்டுள்ளது”-

  ஆம் நமது முன்னோர்கள் இந்த கருத்தை வேதங்களிலும், உபநிஷதங்களிலும் பல் வேறு இடங்களில் திரும்ப திரும்ப வலியுறுத்தி உள்ளனர்.

  ஆனால், பிற சமயத்தினர் தங்கள் வழி மட்டுமே உயர்ந்தது என்று கூறி , பிற வழிகளை பின்பற்றுவோரை கொன்றுவிடும்படியும், அதனால் சொர்க்கத்தில் மட்டும் இருக்கும் அந்த கடவுளின் கருணை கிடைக்கும், குளிர்ந்த தண்ணீரும், இனிய திராட்சை ரசமும் , அழகிய இன்னபிற பெண்களும் கிடைப்பார்கள் என்று , எழுதிவைத்துள்ளனர்.

  அவர்களில் சிலர், இது போன்ற காட்டுமிராண்டி வாசகங்களை உண்மை என்று நம்பி , பல கோயில்களையும், பிற மதத்தினரின் வழிபாட்டு தளங்களையும் இடித்து , கோடிக்கணக்கான பிற மதத்தவரையும், நாத்திகர்களையும், கொன்று, பாழும் நரகத்துக்கு சென்றார்கள்.

  இந்து சமயத்தினர் பிற சமயத்தினரின் மீது, எந்த காலத்திலும் அங்கீகாரம் கொடுத்தே வந்துள்ளனர். ஆனால் ஆபிரகாமிய மதத்தினர், கொலை வெறியுடன் நூறாண்டு போர் நடத்தி பல பேரரசுகளை அழித்தனர்.

  இதில் இன்னும் ஒரு பெரிய கேலிக்கூத்து என்னவென்றால், எல்லாம் வல்ல கடவுள் உலகத்தை படித்தபோது, சாத்தான் என்ற தீய சக்தியை படைத்ததாகவும், அந்த சாத்தானின் போதனைகளை கேட்டு, மனித இனம் தீய வழிகளில் செல்வதாகவும், அவர்களின் கடவுள் அந்த சாத்தானை தடுக்காது வேடிக்கை பார்ப்பதாகவும் கூறி, இறைவனை மேலும் இழிவும் செய்கின்றனர்.

  எனவே, ஆபிரகாமிய மதங்கள் திருந்தினால் ஒழிய, உலகில் அமைதி இருக்காது.

 16. தமிழ் இலக்கியங்களில் பரணி என்ற ஒரு வடிவம் உண்டு. கலிங்கத்துப்பரணி அவ்வடிவுள் அடங்கும். பெரும்பாலும், பரணிகள் அரசர்களின் வெற்றிகளை போற்றியே பாடப்படும். ஆனால், வீரபத்திரக் கடவுளின் வெற்றி குறித்து பேசுவது கவிக்கோ ஒட்டக்கூத்தரின் தக்கயாகப்பரணி. தக்கயாகப்பரணியின் பாட்டுடைத் தலைவன் குலோத்துங்க சோழன் ஆயினும், இறைவன் வீரபத்திரக்கடவுளே அதன் முதற்பொருளாகிறார்.

  சில காலைம் முன்னர், கும்பகோணத்தில் மகாமகக் குளம் அருகில் உள்ள வீரபத்திரக்கடவுளின் கோவிலில் விசாரித்த போது சற்றுத் தொலைவில் ஒரு வீரபத்திரர் திருக்கோவில் இருப்பதாகவும், அதில் ஒட்டக்கூத்தரின் ஜீவ சமாதி இருப்பதாகவும் தெரிவித்தார்கள். அங்கு சென்று தரிசனம் செய்து வந்த அனுபவம் மறக்க முடியாத ஒன்று.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *