முதுமை – சில சிந்தனைகள்

உலக சுகாதார நிறுவனம் இன்றைய நாளை (அக்டோபர் 1) உலக முதியோர் தினமாக அறிவித்திருக்கிறது. இன்றைய நாளில் முதுமை வாழ்வு குறித்து சில சிந்தனைகள்.

நமது நாட்டில் தான் இதை எல்லாம் காணமுடியும். பெற்றவர்கள், குடும்பத்தில் மூத்தவர்கள், உடன் பிறந்தவர்களுக்காகவும், பிள்ளைகளுக்காகவும் முழு ஆயுளையும் கூட தியாகம் செய்து விடுவர். தம்பி படிக்கவேண்டுமே என்று அண்ணன் மாடாக உழைப்பதும், பிள்ளைகளை படிக்க வைக்க குடும்பத் தலைவர்கள் தன் ஆயுள் முழுவதும் தனக்கென்று எந்த சுகமும் அனுபவிக்காமல் இருப்பதும் என்று பலவற்றையும் பார்த்திருக்கிறோம். ஓரிரு தலைமுறைகள் முன்னால் பார்த்தால், நேரடி பெற்றோர், உடன் பிறந்தோர் என்று இல்லாமல் வயதான தூரத்து உறவினரைக் கூட குடும்பத்தில் சேர்த்துக் கொண்டு சம்ரட்சனை செய்து வந்ததைக் கேள்விப் பட்டிருக்கிறோம். இப்போது இது ஒரு மாதிரி வழக்கொழிந்து போய்விட்டது என்றாலும் ஆங்காங்கே சில குடும்பங்களில் அரிதாக இன்னமும் காணமுடியும். நமது காலாசாரத்தில் இது போன்ற ஒரு வாழ்க்கைதான் காலங்காலமாக இப்படியே இருந்து வந்ததா அல்லது வேறு மாதிரியான அமைப்புகள் இருந்தனவா என்று ஐயம் எழுகிறது.

தர்ம சாத்திரங்கள் போன்றவற்றை வழிகாட்டியாக எடுத்துக் கொண்டால் அது வாழ்க்கையை நான்காக பிரிக்கின்றது. கல்வி கற்கும் காலம் (பிரம்மசரியம்), இல்லறம் (கிரகஸ்தம்), காடு செல்லுதல் (வானப் பிரஸ்தம்), சந்நியாசம் (துறவு) என்று ஒன்றுக்குப் பின் ஒன்றாக விதிக்கின்றன. இதில் இப்போது யாரும் காட்டுக்குப் போவதோ, துறவு மேற்கொள்ளுவதோ இல்லாவிட்டாலும் முதல் இரண்டு பருவங்கள் நிச்சயம் கடைபிடிக்கப் படுகின்றன.

மூன்றாவது பருவமும் கூட, இன்றைய நாளில் பிள்ளைகளை பிரிந்து பெற்றோர் வாழ்வது என்று எடுத்துக் கொண்டால் அதுவும் கடைபிடிக்கப் படுகிறது என்றுதான் சொல்ல வேண்டும். சில பத்தாண்டுகள் முன்பு, ஒருவர் பிறந்த ஊரிலேயே இறக்கும் வரை வாழ்ந்து வருவார், விவசாயம் சார்ந்த கிராமிய வாழ்க்கையே பெரும்பாலும் இருந்தது. இதனால் ஒரே குடும்பத்தில் மூன்று நான்கு தலைமுறை மனிதர்கள் சேர்ந்து வாழும் சூழ்நிலை இருந்து வந்தது. இன்றைக்கு பேசப் படுகிற “தலைமுறை இடைவெளி’ போன்றவை எல்லாம் கேள்விப் படாத காலம் அவர்களுடையது. குடும்பத்தில் மூத்த, வயதானவர்களே குடும்பத் தலைவர்களாக இருந்து வந்தனர். தங்கள் பிள்ளைகள் ஐம்பது அறுபது வயதானவர்களாக இருந்தாலும், இதை இப்படி செய், அதை அப்படி செய் என்று முப்பாட்டனாராக தொண்ணூறு வயதுக்காரர் ஒருவர் இருந்து வழி நடத்திக் கொண்டிருப்பார். இப்படி வாழ்க்கை ஓடிக் கொண்டிருந்தது.

இப்போது நிலைமை தலைகீழ். எங்கும் மக்கள் நகரங்களை நோக்கி குடும்பம் குடும்பமாக பிரிந்து பிரிந்து ஓடி வருகின்றனர். பல குடும்பங்களில் இரண்டு மூன்று பிள்ளைகள் இருந்தாலும் ஒவ்வொருவரும் வெவ்வேறு தேசங்களில், ஊர்களில் வசித்து வருவதால் பெற்றவர்களுடன் பிள்ளைகள் வாழும் அமைப்பு மாறி வருகிறது. இதில் இரண்டு மூன்று தலைமுறைகளை ஒரே குடும்பத்தில் காண்பதெல்லாம் அரிதிலும் அரிதாகி வருகிறது. அது மட்டும் அல்ல, சிலர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு, பணத்தேவை, முன்னேற்றம் என்று போவதில் பெற்றவர்களை சுமையாக எண்ணி முதியோர் இல்லங்களுக்கு அனுப்பி விடுகின்றனர்.

பார்த்தோமானால், கடந்த சில பத்தாண்டுகளில் நம் குடும்பங்களில் எல்லாவற்றிலுமே ஒரு பேரியக்கமாக அடுத்த தலைமுறையை தன்னிலும் முன்னேற்றுவதே பெரும் குறிக்கோளாக வாழ்க்கையை செலவழித்துள்ளனர். ஆனால் அப்படி முன்னேறிய தலைமுறையினர் முந்தைய தலைமுறையினரை சுமையாக எண்ணுமாறு சூழ்நிலை வளர்ந்து விட்டது. இன்றைய தலைமுறையினரில் கூட்டுக் குடும்பங்களை விரும்புவதே இல்லை. இன்றைக்கு வருகிற திருமண விளம்பரங்களில் கூட “ந்யூக்ளியர் பேமிலி” என்று போட்டுக் கொண்டால் விரைவில் சம்பந்தம் கிடைக்கும், கூட்டுக் குடும்பம் என்று போட்டால் திருமண வாய்ப்பு குறைவுதான்.

வேறு எந்த காரணமும் இல்லாவிட்டாலும் குடும்ப வாழ்க்கை சிக்கலின்றி நடக்க தனிக் குடித்தனங்கள் தான் அவசியம் என்று பெரும்பாலோர் நினைக்கின்றனர். ஒரு மெகா சீரியலில் வந்த சம்பவம் இது, எல்லாவற்றிலும் பெற்றவள் கருத்து ஒன்று, மனைவியின் கருத்து ஒன்று என்று குடும்பத்தில் சண்டை மேல் சண்டை அனுபவித்த பிள்ளை, அம்மாவிடம் போய் சொல்கிறான், “அம்மா நீ என்னை நன்றாக படிக்க வைத்தாய், வளர்த்தாய் எல்லாம் செய்தாய். நீ எனக்கு திருமணமே செய்யாமல் இருந்திருக்கலாம், நான் உன் காலையே சுற்றிக் கொண்டிருந்திருப்பேன். எனக்கு திருமணம் செய்து வைத்து விட்டாய். இப்போது உன்னுடனும், என் மனைவியும் நானுமாக சேர்ந்து வாழவும் முடியவில்லை, பிரிந்து போகவும் முடியவில்லை, ஏனெனில் நீ என் மீது வைத்து விட்ட பாசம். அந்த பாசத்தில் இருந்து எனக்கு விடுதலை கொடு. உன் வாழ்க்கைக்குத் தேவையான பணத்தை கொடுத்து இருக்கும் இடத்தையும் நான் ஏற்பாடு செய்து கொடுத்து விட்டு நாங்கள் தனியாக வாழ்ந்து கொள்கிறோம்” என்று கூறுகிறான். பல குடும்பங்களில் சிக்கலான சூழ்நிலைகள் நிலவி வருவதைப பார்க்கிறோம், கேள்விப் படுகிறோம்.

முந்தைய காலங்களில் பள்ளிக் கல்வி குறைவு. அனுபவம் சார்ந்தே அறிவு சேமித்து வைக்கப் பட்டது. வயது முதிர்ந்தவர்களின் அனுபவ அறிவுச் செல்வத்தைக் கொண்டே குடும்பங்களில் முடிவுகள் ஏற்கப் பட்டு வந்தன. இன்றைக்கு அந்த அனுபவத்தின் தேவை குறைந்து விட்டது. இன்றைக்கு வைத்தியம், வியாபாரம், விவசாயம் என்று அனைத்து துறைகளுமே அனுபவ அறிவைத் தாண்டிச் சென்று கொண்டிருக்கின்றன. அத்தகைய ஒரு சூழலில் நன்கு படித்த பிள்ளை – மருமகளுக்கும், வயதான பெற்றோர்களுக்கும் இடையே உள்ள நெருக்கம் தேவையை விட சுமை என்றே காணப் படுகிறது.

அண்மையில் மரணம் ஒன்று நிகழ்ந்த போது இடுகாட்டுக்கு சென்றிருந்தேன். அப்போது அங்கே உள்ள பணியாளர்களுடன் பேசிக் கொண்டிருந்தேன். வாரம் இரண்டு மூன்று “ஹோம் பாடிகள்” மயானத்துக்கு வருகின்றன. முதியோர் இல்லங்களில் இருந்து வரும் பிணங்களைத்தான் அவ்வாறு “ஹோம் பாடி” என்கின்றனர். அந்த பணியாளர்கள் மேலும் சொன்னார்கள், பெரும்பாலும் பிள்ளைகள் வெளிநாட்டில் இருக்க, இங்கே பெற்றவர்கள் இவ்வாறு இறந்து விடுகின்றனர். பிள்ளைகளால் பல லட்சம் செலவு செய்து இந்தியாவுக்கு வரும் நிலை இல்லை. நாங்களே எடுத்து வந்து தகனக் கிரியைகளை செய்து விடுகிறோம். சிலர் பெற்றவர்களின் தகன காரியங்களுக்கு பணம் அனுப்புகிறார்கள். சிலர் அதுவும் செய்வதில்லை என்றனர். எனக்கு கேட்க சற்று அதிர்ச்சியாகவும் வருத்தமாகவும் இருந்தது.

இப்படி பெற்றவர்களை நல்ல படியாக கண்ணியமாக போய் சேர உதவாத பிள்ளைகள் தங்கள் முதுமையில் என்ன செய்யப் போகிறார்கள் என்று கோபம் கூட வந்தது. இப்போது முதியோர் இல்லங்கள் வெறும் சேவை மையங்களாக செயல் படுவது இல்லை. ஒரு சில ஏழை முதியோர் இல்லங்களை தவிர, பல இடங்களில் உயர்தர முதியோர் இல்லங்களும் பல்கி பெருகி வருகின்றன. சென்னையை அடுத்த ஒரு இல்லத்தில் சேர ஏழு லட்சம் திரும்ப பெற முடியாத தொகை (non-refundable deposit) அல்லது பன்னிரண்டு லட்சம் திரும்பப் பெறக் கூடிய தொகை (refundable) முன்பணமாகத் தரவேண்டும். இது தவிர மாதா மாதம் பன்னிரண்டாயிரம் வாடகை தரவேண்டும். இதில் தங்குகிற முதியோர் எந்த வேலையும் செய்யத் தேவை இல்லை, சாப்பாடு, தங்குமிடத்தை சுத்தப் படுத்துதல், மருத்துவர் எல்லாம் அந்த இல்லமே கவனித்துக் கொள்கிறது. இது ஒரு நல்ல கார்ப்பொரேட் பிசினஸ் ஆகி விட்டது.

பல வளர்ந்த நாடுகளில் பெற்றோர்களும் பிள்ளைகளுக்காக வாழ்க்கையை தியாகம் செய்யும் நிலை இல்லை, பிள்ளைகளும் பெற்றவர்களுக்காக அலட்டிக் கொள்வதில்லை. ஏனெனில் அங்கே பிள்ளைகள் படிப்புச் செலவில் இருந்து, இளைஞர்களுக்கு வாழ்வாதாரம் கிடைப்பதில் இருந்து, முதியவர்களுக்கு உதவிகள், மருத்துவ சேவைகள் வரை அனைத்தையும் அரசாங்கமே கவனித்துக் கொள்கிறது. அதோடு மட்டும் அல்லாமல் முன்னேறிய நாடுகளில் ஒவ்வொருவரும் தமது இருபது வயது துவக்கத்தில் இருந்தே தனக்கே தனக்காக தம் வாழ்க்கைக்காகப் பணம் சேர்த்துக் கொள்ளுகின்றனர். திருமணம் ஆகி குழந்தைகள் பெற்றாலும், அந்த பிள்ளைகளுக்காக என்று இவர்கள் செலவு செய்வது இந்தியாவை ஒப்பிடும் போது மிகக் குறைவே.

ஆனால் இந்தியாவில் பிள்ளைகளின் படிப்புச் சுமை, குடும்பச் சுமை, வயதான பெற்றோர்களின் பராமரிப்பு என்று அதிலேயே ஈட்டிய பொருள் அனைத்தும் செலவாகி, வயதான காலத்தில் பிள்ளைகளிடம் கையேந்தும் நிலையில் இருந்து விடுகின்றனர். வயது காலத்தில் பணம் தனக்கென்று காசு சேர்த்துக் கொள்ளாமல் இவர்கள் இருந்தது கூட, வயதான காலத்தில் பிள்ளைகள் தம்மை பார்த்துக் கொள்வார்கள் என்ற எண்ணத்தில் தான் என்று தோன்றுகிறது. ஆனால் முன்னெப்போதையும் விட மாறிவரும் வாழ்க்கைச் சூழலில் இந்த மாதிரியான திட்டமிடல் நிறைவேறாமல் போவதாகவே தோன்றுகிறது.

இதை வேறு கோணத்தில் பார்த்தால், ஒரு குழந்தை பிறப்பை எவ்வளவு திட்டமிடுகிறோம்.. அந்த குழந்தை பிறந்து வளர வளர திட்டமிட்டுக் கொண்டே இருக்கிறோம். இதே போல தான், முதுமை மற்றும் மரணத்தையும் திட்டமிட வேண்டியது அவசியம். இந்திய பெற்றோர்கள் ஐம்பது வயதுக்குள்ளாகவே ரத்த கொதிப்பு, சர்க்காரை நோய் என்று துவங்கி முதுமையை விரைவிலேயே எட்டி விடுகின்றனர். அறுபது வயதிற்கு பிறகு சிலர் எழுந்து நடக்கவே இயலாத நிலையில் இருக்கின்றனர். முதலில் வயது காலத்திலேயே ஆரோக்கியத்தை பேணி முதுமையினால் வருகிற நோய்களை தள்ளிப் போட வேண்டும்.

இந்தியா போன்ற நாடுகளில் முதுமையில் கையில் தாராளமான சேமிப்பு – கையிருப்பு அவசியம். வேலை ஓய்வு பெறுவதைக் குறித்து வேலையில் சேரும் போதிலிருந்து திட்டமிடவேண்டும். பிள்ளைகளை சார்ந்து இருப்பதை முடிந்த வரை தவிர்க்க வேண்டும். பிள்ளைகள் முன்னேற்றம் என்று நம்மால் முடிந்தவரை உதவுகிறோம். அதற்கு மேல் முன்னேறிப் போவது அவர்கள் பொறுப்பு. அதே சமயம் அவர்கள் மேலே முன்னேற்றம் பெறும் காலத்தில் அவர்களை முன்னேற விடாமல் சுமையாகவும் இருக்க வேண்டாம். இவ்வாறு முதுமை குறித்து திட்டமிடுவதே நடைமுறையில் சிக்கலை தவிர்க்கும் என்று தோன்றுகிறது.

5 Replies to “முதுமை – சில சிந்தனைகள்”

 1. Pingback: Indli.com
 2. திரு.மது,
  உங்கள் கட்டுரை,
  உணர்ச்சி வேகத்தில் ஆரம்பித்து;
  பழங்கால பெருமைகளை பேசி மகிழ்ந்து;
  கூட்டு குடும்ப வாழ்க்கை முறையை சிலாகித்து;
  இன்றுள்ள நிலையை சாடி;
  கடைசியாக கூட்டு குடும்ப வாழ்க்கை சாத்தியமில்ல்லை என்பதை உணர்ந்து எதார்த்தத்தில் முடித்துள்ளீர்கள்.

  முதலில் கட்டுரையின் நல்ல அம்சம்
  (அ) அனுபவத்திற்கு இந்த சமூகத்தின் பல துறைகளில் பங்கு
  குறைந்துள்ளது. இது ஒரு முக்கியமான பார்வை மாற்றம். இதைப் போன்ற
  புதிய சிந்தனைகள் கண்டிப்பாக நமக்கு வேண்டும்.

  கட்டுரையின் குறைகள்
  (1)பல பரிமாணங்களைக் கொண்ட முதியவர்களின் பிரச்சினையை
  (Multi Dimensional) ஒரே பரிமாணத்தில் அவதானித்துள்ளீர்கள். அதாவது
  பிள்ளைகளின் பொறுப்பை மட்டுமே சுட்டிக் காட்டியிருக்கும் நீங்கள்
  முதியவர்களின் பொறுப்பைப் பற்றி ஏனோ எழுத வில்லை.

  (2)”அந்த காலத்திலே எல்லாம் இப்படி நடந்ததில்லை” என்று
  கூறுவதையெல்லாம் என்னால் ஏற்க முடியவில்லை. 1300 ஆண்டுகளுக்கு
  முன்பே சங்கரன் பஜ கோவிந்தத்தில்,
  पुत्रादपि धन भाजां भीतिः
  என்று எழுதியுள்ளான்.அதாவது தன் சொத்துக்களை எடுத்துக் கொண்டு
  தன் பிள்ளை தன்னை நடுத்தெருவில் விட்டு விடுவானோ என்று ஒரு
  தகப்பன் முதிய வயதில் பயப்படுகிறான். இதிலிருந்து இது போன்ற
  சமூக பிரச்சினைகள் காலம் காலமாக இருக்கவே செய்கின்றன என்பதே
  என் புரிதல்.

  (3)அந்த காலத்திய வாழ்க்கை முறை இனி வருவதற்கு சாத்தியமில்லை.
  அந்த வாழ்க்கை முறையை ஆதரித்து பேசும்போதெல்லாம் அதில்
  இருந்த குரூரமான அம்சங்களையும் குறிப்பிட மறக்கக் கூடாது.
  மொத்தத்தில் அந்த கால சமூக முறை இன்றைய தேவைகளை கருத்தில்
  கொண்டு பார்த்தால் முற்றிலுமாக புறம் தள்ளப் பட வேண்டியது.

  (4)நீங்கள் விட்டு விட்ட இன்னொரு முக்கிய அம்சம். இன்றைய கால
  கட்டத்தில் நடுத்தர மக்களில் பெரும்பாலானோர் 80 வயதிற்கு
  குறையாமல் வாழ்கிறோம். நவீன மருத்துவத்தின் சாதனை இது.
  ஆகவே ஓய்விற்கு வயது 58 அல்லது 60 என்பதே மாற்றத்திற்கு
  உட்பட்டது. 2 நாளிற்கு முன்புதான் பிரிட்டனில் ஓய்விற்கான வயது
  முழுவதுமாக நீக்கப் பட்டுள்ளது.

  கடைசியாக பழங்கதைகளிலிருந்து நாம் எடுத்துக் கொள்ள வேண்டியது
  விழுமியங்களை (Values) மட்டும்தான். முறைமைகளை (Methodology)
  அல்ல.

  எனினும் இந்த பிரச்சினையின் பல பரிமாணங்களும் பொதுவில்
  விவாதத்திற்கு வர வேண்டும். அந்த நோக்கில் உங்கள் கட்டுரை
  வரவேற்கத் தக்கதே.

 3. This is a thought provoking and interesting article. Very relevant too ! There are a few things which one must keep in mind when one ages. They are listed below :-
  1. Money is important. Whether one is young or old. But it is THE only thing which can reassure security in old age.
  2. Whether one lives in a Nuclear family or in a joint family one has to do a lot of adjustment and sacrifice to keep the harmony of home as paramount important. One can never be obstinate and can not always have ones views imposed on others just because one has aged.
  3. Keep a good social network. Do not confine oneself into a smaller circle. This may come handy all the time. Try to remain productive and useful to family as well as to the society at large.
  4. Despite all these things there may be disappointments in life, that too when you are aged. As long as you do not have any expectations there will be no disappointments!
  5. Leave the rest to God and never ever feel that you are old after all age is just a number !

 4. மிக அருமையான ஆழ்ந்த சிந்தனைக்குப் பின் எழுந்த கட்டுரை. நம்மை நேரிடையாகப் பாதித்துக் கொண்டிருக்கும் ஒரு பிரச்சினையைப் பற்றிச் சிந்திக்க இக்கட்டுரை நம்மை அழைக்கிறது.

  ஓரிரண்டு மேலோட்டமான கருத்துவினைகளைத் தாண்டி கட்டுரை எழுப்பும் மையக் கேள்விகள் வாசகர் மனதில் பாம்பாய் படமெடுக்கும் என நம்புகிறேன்.

  மானுட உறவுகளை, முக்கியமாகக் குடும்ப உறவுகளைக் கூட, பணத்தின் அடிப்படையில் லாப-நட்டக் கணக்காக (பேலன்ஸ் ஷீட்டாக) மட்டும் பார்க்கும் நிலை இப்போது வந்துவிட்டது. (கட்டுரை பெற்றோர்கள் பற்றிப் பேசினாலும், கணவன் – மனைவி, சகோதர – சகோதரி, நண்பன் – நண்பி, மகன் – மகள் உறவுமுறைகளுக்கும் பொருந்தும்.)

  பணம் மட்டுமே மதிப்பிடு கருவியாக இருக்கும் இந்த யூரோப்பியப் பொருளாதார அணுகுமுறையை இனியும் நாம் மேற்கொள்ள வேண்டுமா ? அதற்கு மாற்றாக இந்தியாவின் தொல்மரபு தந்த Values based societyக்கு மாறலாமா ?

  கட்டுரை எழுப்பும் மையக் கேள்விகள் இவையே.

  .

 5. ஸ்ரீ மதுவின் முதுமை- சில சிந்தனை எனும் கட்டுரை மெய்யாகிலும் நல்ல சிந்தனைகளை முன்வைக்கிறது. இடம்பெயர்வு நகரமயமான வாழ்க்கை, கூட்டுக் குடும்ப சிதைவு போன்றவை முதியவர் வாழ்வில் ஏற்படுத்தும் சங்கடங்களை செல்லி அதற்கு தீர்வாக முதுமைக்கு த்திட்டமிடலை வலியுறுத்துகிறது. முதியவர்களின் வாழ்க்கைத்தரத்தைப் பற்றி என்னிடம் ஆராச்சி செய்த முதுகலை மாணவி தனது முடிவுரையில் சொன்னது இங்கே குறிப்பிடத்தகுந்தது. முதுமையிலும் அதிகம் கஷ்டப் படுபவர்கள், ஆதரவு உதவி இல்லாதவர்கள் வறியவர்களே. நிரந்தர வருவாய் சொத்துக்கள் உள்ளவர்கள் குடும்பத்தினர் உறவினர் நன்கு கவனித்துக் கொள்கிறார்கள். என்று அந்த மாணவி நகர்புறத்து முதியவர்களின் வாழ்க்கைத்தரத்தை ஆய்ந்து சொன்னார். அது ஸ்ரீ மது கூறும் முதுமைக்கு திட்டமிடலை ஆதரிக்கிறது.
  முதுமையில் மகிழ்ச்சியாக ஆனந்தமாக இருத்தலுக்கு ஆன்மீக ஈடுபாடு பெரிதும் துணையாக இருக்கிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன.
  ஸ்ரீ பாலாஜி கூறுகிறார்
  (1)பல பரிமாணங்களைக் கொண்ட முதியவர்களின் பிரச்சினையை
  (Multi Dimensional) ஒரே பரிமாணத்தில் அவதானித்துள்ளீர்கள். அதாவது
  பிள்ளைகளின் பொறுப்பை மட்டுமே சுட்டிக் காட்டியிருக்கும் நீங்கள்
  முதியவர்களின் பொறுப்பைப் பற்றி ஏனோ எழுத வில்லை.

  தவறு முதியவர்கள் முதுமைக்கு த்திட்டமிடவேண்டும் என்று ஸ்ரீ மது கூறுகிறார். மீண்டும் ஒருமுறை க்கட்டுரையை வாசியுங்கள்.

  (2)”அந்த காலத்திலே எல்லாம் இப்படி நடந்ததில்லை” என்று
  கூறுவதையெல்லாம் என்னால் ஏற்க முடியவில்லை. 1300 ஆண்டுகளுக்கு
  முன்பே சங்கரன் பஜ கோவிந்தத்தில்,
  पुत्रादपि धन भाजां भीतिः
  என்று எழுதியுள்ளான்.அதாவது தன் சொத்துக்களை எடுத்துக் கொண்டு
  தன் பிள்ளை தன்னை நடுத்தெருவில் விட்டு விடுவானோ என்று ஒரு
  தகப்பன் முதிய வயதில் பயப்படுகிறான்.
  முதற்கண் ஸ்ரீ பாலாஜி நீங்கள் ஸ்ரீ ஆதிசங்கரரை ஏகவசனத்தில் குறிப்பிடுவது சரியல்ல. அவர் ஞானி. ஹிந்து சமய மறுமலர்ச்சிக்கும் பாரத ஒருமைப்பாட்டிற்கும் அவரது பங்கு அளப்பரியது. மகாபெரியவரான் அவரை நாம் பின்பற்ற இயலவில்லை எனினும் மதிக்கவேண்டும்.
  பெற்றோர்களைக் கைவிடும் பிள்ளைகள் எக்காலத்திலும் இங்கு உண்டு. ஆனால் அது தற்போது அதிகரித்துவிட்டது. தனிமனிதனைக் குடும்பத்தை விட முக்கியத்துவப் படுத்தும் மேலை முதலாளித்துவ விழுமியங்கள் அதற்கு க்காரணம்.
  இங்கே கருதத்தக்கது பெற்றோர்களை ப்பேணுதல் பேரறம். பெற்றோர்கள் நடுத்தெருவில் விட்டவர்க்கு நரகத்திலும் இடம் கிடைக்காது. என்பதே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *