சுவாமி சித்பவானந்தர் உடனான வாழ்க்கை அனுபவங்கள் குறித்த “வாழ்ந்து காட்டியவரோடு வாழ்ந்தேன்” தொடரின் 3வது பாகம்.
இந்தப் பாகத்தில், தபோவன முன்னாள் மாணவரான மதுரை திரு. K. ராமமூர்த்தி அவர்களது அனுபவம்:
ஒருவர் தம் பணி அமையப் போகிற களம் எது என்பதை வரையறை செய்வது முக்கியம். எந்தத் துறையிலே நாம் பணி செய்ய வேண்டும் என்பதை முதலிலேயே தீர்மானமாகச் செய்து கொண்டார்கள் ஸ்வாமிஜி. கடைசிவரை அந்த வரையறையை மீறவில்லை. என்ன வரையறை ? ஆன்மீகத்தோடு கலந்த கல்வி.
இந்த நாட்டினுடைய வறுமைக்கும், கீழ்மைக்கும் என்ன காரணம் என்று கேட்டபோது, விவேகானந்த சாமி சொன்னாராம் “Ignorance, ignorance, ignorance” என்று.
அதனாலேயே, அந்த அறியாமையை நம் நாட்டில் இருந்து போக்கக் கல்வியை ஒரு சாதனமாக எடுத்துக் கொண்டார் நம் சுவாமிஜி. வெறும் கல்வி மட்டும் என்றால் மெக்காலே கல்வித் திட்டம் போதும்.
ஆனால், குருகுல வாழ்க்கை முறையை நமக்குத் தந்தார் சுவாமிகள். இந்தப் பணியில் இருந்து தன்னை விலக்கிக் கொள்ளவே இல்லை அவர். அவர் செய்த அன்னதானம், மருத்துவமனை போன்ற சமூகத் தொண்டுகளால் அவருக்கு நற்பெயர்களும், பாராட்டுக்களும் குவிந்தன. ஆனால், சுவாமிஜி கல்வி அளிப்பதில் தான் கவனம் குவித்தார். தன்னுடைய வேலையின் பரப்பை அதிகப்படுத்த சுவாமிஜி விரும்பியதே இல்லை. ஒரு உதாரணம்.
இராமநாதபுரத்திலே தாயுமானவ சுவாமிகளுடைய கோயில் கட்டி முடித்த உடனே சுவாமிஜி அவர்களுக்கு ஒரு எண்ணம் வந்தது. இராமநாதபுரத்தில் இருந்து சிறிது தொலைவில் உள்ள இராமேசுவரம் இந்தியாவில் முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே, இராமேசுவரத்தில் தபோவனத்தின் ஒரு கிளை இருந்தால் விவேகானந்தர், குருதேவர், சாரதா தேவியார்களுடைய கருத்துக்களைப் பரப்பும் இடமாகும் என்று யோசித்தார். அதனால், இராமேசுவரத்திலே ஒரு இடம் தேடவேண்டும் என்று சொன்னார்கள். உடனே இடத்தைத் தேடிப் போனோம். இராமேசுவரம் கோவிலைச் சுற்றி இருக்கக் கூடிய தேர்வீதியிலே ஏதாவது ஒரு இடம் பார்க்கலாம் என்றே போனோம். இடம் பார்த்து அதில் கட்டிடம் கட்ட வேண்டுமானால், தங்கி மேற்பார்வை பார்க்கத் தற்காலிகமாக ஒரு இடம் தேவை. அதனால் தங்குவதற்காக ஒரு இடத்தை முதலில் பார்க்கலாம் என சாந்தானந்த சுவாமிகள் அபிப்ராயப் பட்டார்கள். சாதுக்கள் தங்குவதற்கு முகுந்தராவ் வெங்கட்ராவ் சத்திரம் என்று ஒரு சத்திரம் இருந்தது. சத்திர உரிமையாளர் மதுரையில் இருந்ததால், மதுரைக்குப் போனோம். பேசினோம். தபோவனம் பற்றி அவருக்கு ஏற்கனவே தெரிந்திருந்தது. அவர் கேட்டார்:
“என்ன காரணத்திற்காக இராமேசுவரத்திலே கிளை அமைக்க வேண்டும் என நினைக்கிறீர்கள்?”
இராமேசுவரத்தில் கிளை ஒன்று இருந்தால் அங்கு தபோவன வெளியீடுகளை விற்போம், அந்தர்யோகம் நடத்துவோம் என்று சாந்தானந்த சுவாமிகள் சொன்னார். அதைக் கேட்ட உரிமையாளர்,
“உங்களுக்கு ஒரு வருஷத்துக்கோ, ஆறு மாதத்திற்கோ கொடுக்க எனக்கு விருப்பமில்லை. இந்தக் கட்டிடத்தையே எடுத்துக் கொள்ளுங்கள்.”
எங்கே தற்காலிகமாகத் தங்க வேண்டும் என்று போனோமோ, அந்த இடத்தின் சொந்தக்காரர் நிரந்தரமாக அதையே வைத்துக் கொள்ளச் சொல்லி விட்டார். ஆனால், அது அவ்வளவு எளிதான விஷயம் இல்லை.
அந்த மாதிரி சத்திரங்கள் மூன்று இருக்கின்றன. திருப்புல்லாணி, இராமேசுவரம், தேவிப்பட்டினம் என்ற இந்த மூன்றும் சேர்ந்து ஒரு யூனிட். அதிலே மதிய உணவு இலவசமாகப் போட வேண்டும். அது அந்த அறக்கட்டளையின் விதி. கஜானா சம்போ சங்கரராவ் என்பவரால் உருவாக்கப்பட்டது. இந்த விதியின் காரணமாக, மதுரையில் இருந்து இராமேசுவரம் போகும் ஒருவன் சாப்பிடுவதற்குக் கையில் காசு தேவை இல்லை. ஏனெனில், ஒவ்வொரு இருபது மைலிலும் அவருடைய சத்திரம் இருக்கிறது. சாப்பாட்டுக்கு என அவன் ஒரு பைசா செலவழிக்க வேண்டாம். அந்த அளவு தருமம் செய்து கொண்டு இருந்திருக்கிறார்கள்.
எனவே, அந்த உரிமையாளர், “அந்த தர்ம கைங்கரியத்தின் ஒரு பகுதியாக உள்ள இராமேசுவரம் சத்திரத்தோடு, திருப்புல்லாணியில் உள்ள ஒரு சத்திரத்தையும், தேவிப்பட்டிணத்திலே உள்ள ஒரு சத்திரத்தையும் சேர்த்து மூன்று சத்திரங்களையும் சேர்த்துக் கொடுத்து விடுகிறேன். இந்தச் சத்திரங்களின் செலவுக்கு மான்யமாக ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களும் இருக்கின்றன. ஆனால், ஜமீந்தார் ஒழிப்புச் சட்டத்தைப் பயன்படுத்தி அந்த நிலங்களை எல்லாம் அரசாங்கம் எடுத்துக் கொண்டு விட்டார்கள். அந்த நிலங்களுக்குப் பதிலாக அலவன்ஸ் என்று 33,000 ரூபாய்களை வருடத்திற்கு ஒரு முறை 3 சத்திரங்களுக்கும் சேர்த்துக் கொடுக்கிறார்கள். இவற்றில் ஒரு சத்திரத்தில் ஒரு வாட்ச்மேன்போடக்கூட அந்த ரூபாய் போதாது. இருந்தாலும், மூதாதையர் செய்த தர்மம் என்பதால் தொடர்ந்து கஷ்டப்பட்டு நடத்திக் கொண்டிருக்கிறோம். எங்களுடைய பிள்ளைகள் இங்கே இல்லை. எல்லாரும் அமெரிக்கா போய்விட்டார்கள். ஆனால், அந்த தர்மத்தை விட மனசில்லை. அரசாங்கத்தில் சுற்றுலாத் துறையில் இருந்தும், கோயிலில் இருந்தும் கேட்கிறார்கள். அவர்களுக்கு விடவும் மனசில்லை. ஏனென்றால், இந்த தர்மம் கெட்டுப்போய் விடுமே.
இப்படி நான் யோசித்துக் கொண்டிருக்கும் போது நீங்கள் வந்திருக்கிறீர்கள். இந்தச் சொத்தை அப்படியே எடுத்துக் கொள்ளுங்கள்.
இராமேசுவரத்திலே 2 ஏக்கர், தேவிப்பட்டிணத்திலே 8 அல்லது 9 ஏக்கர், திருப்புல்லாணியிலே மதிலை ஒட்டி ஒரு சத்திரம்.
எல்லாவற்றையும் எடுத்துக் கொள்ளுங்கள். எதுவுமே பேச வேண்டியதில்லை. ஒரு நல்ல கையிலே கொடுத்த ஒரு அமைதி, திருப்தி எங்களுக்கு இருக்கும்” என்றார்.
தலைகால் புரியவில்லை எனக்கெல்லாம். “பழம் நழுவிப் பாலில் விழுந்து, அதுவும் நழுவி வாயில் விழுந்த மாதிரி கிடைத்துவிட்டதே” என்று சாந்தானந்த சுவாமிகளிடம் சொன்னேன்.
அவர் எப்போதும் போல் “சுவாமிஜியிடம் சொல்வோம்” என்றார். சுவாமிஜியிடம் சொன்னோம். பொறுமையாகக் கேட்டார். கேட்டுவிட்டு,
”இது நம் திட்டத்தோடு ஒத்து வரவில்லை. வேண்டாம்.” என்று கூறிவிட்டார்.
“சுவாமிஜி, இவ்வளவு பெரிய சொத்து நமக்குக் கிடைக்கிறது. நாம் என்னவேண்டுமானாலும் செய்துகொள்ளலாம். ட்ரஸ்ட்டின் நோக்கம் என்ன? மத்தியானம் சாப்பாடு இலவசமாகப் போடுவது. அவ்வளவுதானே.” என்றோம்.
“நாம் அந்த மாதிரித் திட்டம் வைத்துக் கொள்ளவில்லையே. இலவசமாகச் சாப்பாடு போடும் திட்டம் எல்லாம் நம்மிடம் கிடையாது.” என்றார்.
ஆனால், சாந்தானந்த சுவாமிகள் கொஞ்சம் கொஞ்சமாக இந்த சத்திரம் பற்றிச் சித்பவானந்த சுவாமிகளிடம் சொன்னார்.
“சுவாமிஜி, நம் அன்பர்களில் பலபேர் அன்னதானம் செய்வதை வாழ்க்கையின் சிறந்த சாதனமாகச் செய்து கொண்டு இருக்கிறார்கள். எங்கெங்கோ யார்யாரிடமோ கொடுத்து இந்த அன்னதானத்தைச் செய்து கொண்டு இருக்கிறார்கள். உதாரணமாகப் பழனியில் சாது சுவாமிகளின் மடம்.”
சித்பவானந்த சுவாமிக்கு சாது சுவாமிமேல் ஒரு soft corner உண்டு !
“தினமும் சாது மடத்திலே அன்னதானம் செய்கிறார்கள். அதற்காகப் பழனிக்குப் போய் நம்முடைய அன்பர்கள் பலபேர் பணம் கட்டிக் கொண்டு வருகிறார்கள். அவர்களுக்கு எங்கேயாவது ஒரு இடத்திலே நம் ஸ்தாபனத்தில் சம்பந்தப் பட்டவர்களே இந்தத் தொண்டு செய்தால் அவர்களுக்குத் திருப்தி இருக்கும். நமக்காகச் செய்ய வேண்டியதில்லை. அந்த அன்பர்களுக்காக எடுத்துச் செய்யலாம்” என்று சொல்லிய பிறகு, கடைசியில்தான் சுவாமிஜி சம்மதித்தார்கள்.
பணி செய்யும் துறையை வரையறுத்துக் கொண்டு அதை மீறி எதுவும் செய்ய மாட்டார்கள். இன்று இராமேசுவரத்தில் பள்ளிக்கூடம் ஒன்று நடைபெற்று வருகிறது. மதியம் அன்னதானமும் நடக்கிறது.
தொலைநோக்கும் ஞான வழி
சாதாரண மனிதர்கள், மனிதர்களைப் பற்றிப் பேசுவார்கள். கொஞ்சம் பக்குவப்பட்ட மனிதர்கள் நிகழ்ச்சிகளைப் பற்றி விவாதம் செய்வார்கள். அதைவிட உயர்ந்த ஞானம் உடையவர்கள் கருத்துக்களைப் பற்றி விவாதிப்பார்கள்.
சுவாமிஜியிடம் மனிதர்களைப் பற்றிப் பேசினாலும், நிகழ்ச்சிகளைப் பற்றிப் பேசினாலும் அதிலிருந்து கருத்துக்களைப் பற்றித்தான் பேசுவார்கள்.
உதாரணமாகக் கம்யூனிசத்தைப் பற்றி இருபது வருடங்களுக்கு முன்பு சுவாமிஜி கூறியது மிகப் பிரமாதமாக இருந்தது. அப்போது சோவியத் யூனியன் ஓகோவென்று இருந்தது. அது சிதறுண்டு போகும் என யாருமே கற்பனை கூடப் பண்ணியிருக்க மாட்டார்கள். முதன் முதலில் விண்வெளியில் சாட்டிலைட் அனுப்பிய ருஷ்யாவைப் பற்றி மகோன்னதமான பிம்பங்கள் இருந்தன.
அந்தக் காலக்கட்டத்தில் ருஷ்யாவின் கம்யூனிசத்தைப் பற்றி சுவாமிஜியிடம் கேட்டோம். சுவாமிஜி மிக அழகாகப் பதில் சொன்னார்கள்:
“நம்முடைய கருத்தை எதுவும் தடைசெய்யவோ, கட்டுப்படுத்தவோ கூடாது. பழைய காலங்களிலே கருத்துச் சுதந்திரம் எந்த அளவு இருந்தது என்பதற்கு நம்முடைய சாஸ்திரங்களே சாட்சி.
நாஸ்திக வாதத்திற்கும் தத்துவ அந்தஸ்து கொடுத்து, அதை ஒரு a system of logic, a system of philosophy என்று வகுத்துக் கொடுத்திருக்கிறோம்.
உலகத்திலேயே “லோகாயாத வாதம்” என்பதை நாம்தான் செய்திருக்கிறோம். அதைச் சொன்ன “ஜாபாலி” என்பவரும் ரிஷியாக நம்மால் அங்கீகரிக்கப் பட்டிருக்கிறார்.
நம்முடைய உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம் ஆகியவற்றுக்கு வாக்கியங்கள் தோறும் உரை சொல்லுவார்கள்.
அதற்கு ஒருவர் மறுப்புச் சொல்லுவார்.
மறுப்புக்கு உரையாசிரியர் மறுபடியும் பதில் சொல்வார்.
மறுப்புக்குப் “பூர்வபட்சம்” என்றும், அதற்கு அளிக்கப்படும் பதில் விளக்கத்திற்கு “சித்தாந்தம்” என்றும் பெயர்.
சூத்திரத்திலே என்ன சந்தேகங்கள் வரும், அதை எப்படி விளக்க வேண்டும் என்று சூத்திர பாஷ்யத்திலேயே கூறுவார்கள்.
இது நம் ஹிந்துப் பண்பாட்டில் உள்ள சிந்தனா சுதந்திரம்.
எனவே, சிந்தனா சுதந்திரம் இல்லாமல் எந்த அமைப்பும் சரிவராது. சிந்தனா சுதந்திரம் இல்லாமல் ஒரு அமைப்பு வந்தால், அது சிறிது காலம் நன்றாக இருப்பது போலத் தெரியும். பின்பு, அது உடைந்து போய் விடும்” என்றார்கள்.
சுவாமிஜி இவ்வாறு கூறிய 15 வருடங்களுக்குள் அந்தக் கம்யூனிச அமைப்பே உடைந்து போய்விட்டது.
இந்தத் தொலைநோக்குப் புரிதல் அவருக்கு ஏற்படக் காரணம் அவர் மனிதர்களைப் பற்றி விமர்சனம் செய்யாமல், கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதுதான். பலவிதமான செய்திகளிலிருந்து, அவற்றில் ஊடாடி இருக்கக்கூடிய கருத்து என்ன என்பது கருத்தால் தெளிந்த உள்ளத்திற்குத்தான் தெரியும்.
அந்தத் தெளிவின் அடிப்படையில் உருவாகும் செயல்பாடுகள்தான் பண்பாடு.
இந்த இந்து மதப் பண்பாட்டின்படிதான் எங்களை சுவாமிஜி வளர்த்தார். ஏதாவது ஒரு பிரச்சினை என்றால் நாங்கள் எல்லோரும் பேசி ஒரு முடிவு வைத்திருப்போம். சுவாமிஜியிடம் போய் பிரச்சினையையும், எங்கள் முடிவையும் கூறுவோம்.
சில சமயங்களில், சுவாமிஜி நாங்கள் எடுத்த முடிவு சரிவராது. அதனை மாற்றிக் கொள்ளலாமே என்பார்கள். நாங்கள் ஒத்துக் கொள்ள மாட்டோம்.
சுவாமிஜியும் நாங்களும் அது குறித்து விவாதம் செய்வோம். பின் சுவாமிஜி, “சரி, செய்” என்று கூறிவிடுவார்கள். அப்படிச் சொன்னால் “உன் இஷ்டம் போலச் செய்” என்று அர்த்தம் !
நாங்களும் செய்து முடித்துவிடுவோம். ஒரே வாரத்தில் எங்கள் முடிவின் அபத்தம் தெரியவரும். சுவாமிஜி கூறியபடி செய்திருந்தால் சரியாக இருந்திருக்கும் என்று நினைப்போம். சுவாமிஜியிடம் போய், “இப்படித்தான் செய்ய வேண்டும் என்று எங்களுக்கு நீங்கள் கட்டளை இட்டிருக்கலாமே” என்று கேட்போம். ஒரே ஒரு புன்சிரிப்புத்தான்.
“நான் அவ்வாறு சொல்லி இருந்தால் உனக்குப் புத்தி வராது. அனுபவம் வந்திருக்காது. உன்னுடைய முடிவின் தவறை இவ்வளவு தூரம் உணர்ந்திருக்க மாட்டாய். என் முடிவுப்படி செய்திருந்தாய் என்றால், உன் முடிவு சரிதானோ என்ற சந்தேகம் இருந்து கொண்டே இருக்கும். இப்போது, அப்படி நீ நினைக்க மாட்டாய்” என்று கூறினார்.
தன் கருத்தை, அது சரியாக இருக்கும்போது கூட, தனக்குக் கீழே இருக்கிறவர்களைப் பழக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக, அவர்களது தவறான முடிவின் விளைவுகள் தன்னைப் பாதிக்கும் என்பது தெரிந்தும், எங்களுக்காக நஷ்டங்களை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டுதான் அவர் செயல்பட்டார்.
எல்லாவற்றையும் தன்னிடம் கேட்டுத் தான் சொன்னபடிதான் செய்ய வேண்டும் என்று சுவாமிஜி நினைப்பவர் அல்லர்.
சிறுவர்களுக்கான ஒரு பள்ளிக்கூடம் கட்ட வேண்டி இருந்தது. அதில் குளியலறை, கழிப்பறை போன்றவற்ரை எங்கு வைக்க வேண்டும் என்பது பற்றி எங்களுக்குள் ஒரு பெரிய விவாதம். எங்களால் தீர்மானம் பண்ண முடியவில்லை. சுவாமிஜியிடம் கேட்டோம்.
“நான் இல்லாவிட்டால் என்ன செய்வீர்கள்?” என்று கேட்டார்.
“நாங்கள் எங்கள் இஷ்டப்படி எப்படியோ கட்டுவோம்” என்றோம்.
“இப்போதும் அப்படியே செய்யுங்கள். நீங்களே ஆர்வத்தோடு முயற்சி எடுத்துச் செய்ய வேண்டும்” என்றார்.
சில சமயங்களில் உபச்சாரத்திற்காக அவரிடம் “சுவாமிஜி சொன்னபடி செய்கிறோம்” என்று கூறினால் அவருக்குக் கோபம் வந்து விடும். உடனே, “அப்படியானால் உனக்கு அதிலே நம்பிக்கை இல்லையா ? நான் சொல்கிறபடிதான் செய்கிறேன் என்றால் என்ன அர்த்தம் ?” என்பார்.
சுவாமிஜியிடம் பேசும்போது ஜாக்கிரதையாகப் பேச வேண்டும்.
சுவாமிஜி காலத்திலே எத்தனையோ பேருக்கு வித விதமான அனுபவங்கள் வந்திருக்கும். ஒவ்வொருவரும், தனக்கும் சுவாமிஜிக்கும் இடையேயான உறவுதான் அலாதியானது, வேறு யாருக்கும் அந்த மாதிரியான உறவு இருக்காது என்று நினைத்துக் கொண்டிருப்போம். சுவாமிஜியின் ஆசியை தாங்கள் தான் பெற்றிருப்பதாக நினைத்துக் கொண்டிருப்பார்கள். அவர்கள் நினைப்பதும் உண்மைதான். ஏனெனில், பூரணத்தில் இருந்து தரப்படுவது பூரணம்தானே.
அப்படிக் கிடைத்த பூரணத்தை எப்படிப் பயன்படுத்தினோம் என்பதன் அடிப்படையில்தான் எங்களது வளர்ச்சியும் வாழ்க்கையும் இப்போது இருக்கின்றன.
சுவாதி நட்சத்திரம் வானத்தில் தோன்றுகிற போது, சிப்பியின் வாயில் விழும் மழைத்துளி முத்தாகிறது. சுவாமிஜி, எங்களை ஏற்றுக்கொண்டு சமுதாயத்திற்கு முத்துக்களாக தந்திருக்கிறார்கள். சாதாரணச் சிறுவர்களைத் தனிச் சிறப்புடைய தரமுடைய மனிதர்களாக்கித் தந்ததுதான் சுவாமிஜி சமூகத்திற்குச் செய்த மிகப் பெரிய பங்களிப்பு.
ஆனால், எங்களுக்கு அப்போது அதெல்லாம் தெரியாது. To be young was very heaven. சுவாமிஜியின் அருள் வானை நோக்கி நாங்கள் அம்பெய்து விளையாடி இருக்கிறோம். சுவாமிஜியாகிய அளப்பரிய ஆகாயத்தை எங்கள் அம்புகளால் அளக்க முடியவில்லை. அம்புகள் தீர்ந்து போய்விட்டன.
(தொடரும்)
இக்கட்டுரை ஆசிரியர் திரு.வ.சோமு அவர்கள் தனது பன்னிரெண்டாம் வயதிலிருந்து சுவாமி சித்பவானந்தரை அறிந்தவர். 1974 முதல் 1985 வரை உடனிருந்தவர். இன்றும் தபோவனத்துடன் தொடர்பில் இருந்து தொண்டுகள் புரிந்து வருகிறார்.
www.rktapovanam.org மற்றும் https://rkthapovanam.blogspot.com ஆகிய இணையதளங்களை நடத்தி வருகிறார். தர்ம சக்கரம், ஆன்மீக ஆலயம், ராமகிருஷ்ண விஜயம், வாராஹி விஜயம் ஆகிய பத்திரிகைகளில் ஆன்மீக கட்டுரைகள் எழுதி வருகிறார்.
திரு சோமு அவர்களின் கட்டுரை மனதில் பழைய நிகழ்ச்சிகளை அசைபோட வைக்கிறது. எழுபதுகளின் தொடக்கத்தில் ( 70-72 என்று ஞாபகம்) தினமணி தமிழ் நாளிதழில் கணக்கன் என்ற புனைபெயரில் திரு ஏ.என். சிவராமன் அவர்கள் சுமார் ஒரு வருடத்துக்கு மேல் பொருளாதார மாணவர்களுக்கு பயன்படும் வகையில் “இந்தியாவின் வறுமை பற்றி கணக்கன் ஆராய்ச்சி ” என்ற தலைப்பில், நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் “குன்னார் மிர்தல் “என்பவரின் புத்தகத்தை பற்றி ஆய்வு செய்து, எழுதினர். அதில், ஆசிய நாடுகளின் பொருளாதாரத்தை பற்றி தெளிவாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
” சிந்தனா சுதந்திரம் இல்லாமல் எந்த அமைப்பும் சரிவராது. சிந்தனா சுதந்திரம் இல்லாமல் ஒரு அமைப்பு வந்தால், அது சிறிது காலம் நன்றாக இருப்பது போலத் தெரியும். பின்பு, அது உடைந்து போய் விடும் “- என்ற சுவாமி சித்பவானந்தரின் கருத்தை அந்த நூலில் திரு ஏ.என். சிவராமன் அவர்களும் எதிரொலித்தார். ” great men think alike” என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். பெரியோர் கூறியபடியே ரஷ்யா உடைந்து கம்யூனிசம் காலாவதியானது. சுவாமிகளை போன்ற ஞானிகள் வாழ்ந்த நாட்டில் நாமும் வாழ்கிறோம் என்பது நாம் பெற்ற வரம் ஆகும்.
இதே நிலை , சீனாவிற்கும் வராதபடி, சீனா தன் பொருளாதார கொள்கைகளில் ஏராளமான மாறுதல்களை செய்துவிட்டது. எனவே, சீனாவின் அழிவு சிறிது தள்ளி போடப்பட்டுள்ளது.அவ்வளவு தான். உலகில் கருத்து சுதந்திரம் இல்லாத எந்த நாடும் இனி எதிர்காலத்தில் உலக வரைபடத்திலேயே இருக்காது.
சோமு அவர்களின் பனி தொடரட்டும்.
பேராயிரம் பரவி
மிகவும் நன்று.
அருமையாக இருக்கிறது – தெரிந்துகொள்ளவும் மனதிலே இருத்தி அசை போடவும்.
இப்பேர்ப்பட்ட மகான்கள் நம்மிடையே உலவி வந்ததும், உலவி வருவதும் நம் அதிர்ஷ்டம்தான்.
பல விஷயங்களைத் தொட்டு நம் அகண்ட பாரதத்தின் அளப்பரிய மேன்மையை இந்த தொடர் – இன்னமும் விரிவாக வெளியிடும் பகுதிகளுக்கு என காத்திருப்பேன்.
நமஸ்கரிக்கிறேன் .
அந்த மனானின் பாதங்களுக்கும் அவர் காட்டிய வழியிலே மேலும் பலரை வார்த்து வளர்க்கும் – இன்ன பிற மகானுபாவர்களுக்கும் வந்தனம்.
நமஸ்கரிக்கிறேன்.
நன்றி.
அன்புடன்,
ஸ்ரீனிவாசன்.
சுவாமி சித்பவானந்தரைப்பற்றிய தொடர் கட்டுரை சிறப்பாக தொடர்கிறது. சுவாமி விவேகனந்தரையும் ஸ்ரீ ராமகிருஷ்ணரையும் தமிழக மக்களிடையே பரப்புவதில் பெரும் பங்கு வகிப்பவர் ஸ்ரீ ஸ்ரீ சித்பவானந்த சுவாமிகள் என்றால் அது மிகையாகாது. அது மட்டுமன்று சங்கக்குடும்பத்தின் மீது அடிகள் காட்டிய அன்பு ஆதரவு நினைந்து போற்றுதலுக்கு உரியது.
அடிகளின் கம்யூனிசம் தொடர்பான புரிதல் மிக ஆழமானது. அது ஒரு ஏதேச்சதிகார சர்வாதிகார சித்தாந்தம் என்பதை கம்யூனிஸ்டுகள் கூட மறுக்கமுடியாது. கம்யூனிச ஆட்சிக்குள் போய்விட்டால் அதிலிருந்து மீண்டு வருவது இருண்ட குகையிலிருந்த் மீண்டு வருவதைக்காட்டிலும் கடினமானது. அதிலினொரு கொடுமை தங்கள் கொள்கை அமைப்பு தவிற மற்ற எல்லாமும் பொய் தவறு என்று அபிராகாமிய மதங்களை ப்போன்றே இந்த கம்யூனிஸ்டுகளும் நம்புவதுதான்.
கம்யூனிஸ்டுகள் ரஷ்ய மற்றும் சீன புரட்சிகள் மற்றும் கலாசாரப்புரட்சிகள் என்ற பெயரில் தங்கள் நாட்டை சேர்ந்த பல கோடி மக்களை கொன்று குவித்தனர். கம்யூனிஸ்ட்களின் நாடுகளில் ஒரே ஒரு சுதந்திரம் உண்டு. கம்யூனிஸ்டுகளுக்கு மட்டும் ஓட்டு போட்டு , கம்யூனிஸ்ட் சுப்ரீம் சோவியத் போன்ற அமைப்புக்களின் உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் உள்கட்சி தேர்தல் முறை மட்டும் உண்டு. எதிர்க்கட்சிகள் எதுவும் கிடையாது. அப்படி எதுவும் எதிர்க்கட்சிகள் இருந்தால் அவற்றுக்கு , அந்த நாட்டின் சிறைச்சாலைகளில் இடம் கொடுப்பார்கள்.
பேச்சுரிமை கூட உண்டு. கம்யூனிஸ்ட் கட்சியை புகழ்ந்து பேச மட்டும் எல்லோருக்கும் உரிமை உண்டு. எழுத்துரிமையும் அப்படித்தான்.கம்யூனிசத்தையும், கம்யூனிஸ்ட் கட்சியையும் புகழ்ந்து எழுத மட்டும் அனுமதி உண்டு.
கம்யூனிசத்துக்கு என்ன ஆயிற்று என்று பலரும் வினவுகிறார்கள். கம்யூனிசம் ஒருவகை அராஜகமே ஆகும். அங்கு என்ன கோளாறு என்று பார்ப்போம்.
ஒன்று:-
அரசாங்கமே இல்லாத ஒரு கற்பனை சூழலை கம்யூனிஸ்டுகள் கற்பனை செய்துள்ளனர் . இது காரல் மார்க்சின் தாஸ் கேபிடல் ( மூலதனம்) மூலம் தெளிவாகிறது.இது இன்றைய உலகில் மட்டுமல்ல , என்றுமே நடக்காத விஷயம். மன்னராட்சி, மக்களாட்சி, சர்வாதிகார ஆட்சி, மற்றும் கம்யூனிஸ்ட் என்ற பெயரில் நடக்கும் ஆட்சிக்கும் அரசு என்று ஒன்று அவசியம் தேவை. கம்யூனிசத்தின் வேரிலேயே கரையான் அரித்த கொள்கை இது.
இரண்டு:-
மனித உழைப்பே பொருள்களின் மதிப்பை கூட்டுகிறது என்று சொல்லி, உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்று மார்க்ஸ் எழுதியுள்ளார். முதலாளித்துவ நாடுகள் என்று சொல்லப்படும் நாடுகள் கூட, human resource accounting என்ற தலைப்பில் பாடங்களை சேர்த்து, தங்கள் கொள்கைகளில் தேவையான மாறுதல்களை செய்துவிட்டனர். ஆனால் , கம்யூனிசம் தேங்கிப்போய் விட்டது.மாற்றம், வளர்ச்சிக்கு வழி இல்லாத எதுவும் இப்படித்தான் ஆகும்.
மூன்று:-
மனித இனத்தை ஒரு சடப்பொருளை போலவே , உயிரற்ற இனமாக கம்யூனிசம் கருதுவதால், பேச்சு, எழுத்து, வாக்கு ஆகிய உரிமைகள் எதுவும் கம்யூனிஸ்ட் நாடுகளில் வாழும் மனித இனத்துக்கு இல்லை.மனித உரிமைகளை அடக்கிவைக்கும் எந்த கொள்கையும் காலப்போக்கில் காலாவதியாகும்.எனவே அது காலாவதி ஆகிவிட்டது.
நான்கு:-
தனி மனிதனுக்கு சொத்துரிமை கிடையாது. எல்லா சொத்தும் அரசுக்கே உரிமை என்பது , ஒரு முட்டாள் தனமான கொள்கை. நம் வீட்டில் மின்விசிறி, மின்விளக்குகள் ஆகியவை தேவை இல்லாதபோது அணைத்து விடுவோம். ஆனால் பொது சொத்தான அரசு அலுவலகங்கள் மற்றும் உள்ளாட்சி நிறுவனங்களில் ஆளில்லாத போதும் விளக்கும், விசிறிகளும் சுழல்வதையும், மின்சாரம் வீனடிக்கப்படுவதையும் பார்க்கிறோம். இதுபோலத்தான் கம்யூனிசமும் வீணானது. ஏனெனில் பொது சொத்து எதுவும் ஒழுங்காக பராமரிக்க படமாட்டாது.
ஐந்து:-
காரல் மார்க்ஸ் கற்பனை செய்த வர்க்கப்போர் உலகில் எங்குமே நடக்கவில்லை. ஏனெனில், முதலாளிகள் அனைவரும், தொழிலாளிகளை சுரண்டி , தாங்கள் நீண்ட காலம் தொழில் செய்ய முடியாது என்ற உண்மையை புரிந்து கொண்டுள்ளனர். எனவே, தொழிலாளர்கள் நலனுக்கு தேவையான பல நடவடிக்கைகளை நல்லவிதமாக சீரமைத்து, கம்யூனிஸ்டு நாடுகளைவிட முதலாளித்துவ நாடுகளும், கலப்பு பொருளாதார நாடுகளும் தான் முன்னணியில் உள்ளன. கம்யூனிஸ்டு நாடுகளில் தொழிலாளர்களுக்கு எந்த உரிமையும் இல்லை.
ஆறு:-
இறை வழிபாடு மற்றும் மத சுதந்திரம் என்பது கம்யூனிஸ்டுகளுக்கு மறுக்கப்பட்டுள்ளது. மதம், கடவுள் என்பது ஒரு அபின் போல என்று யாரோ ஒரு முன்னாள் கம்யூனிஸ்டு சொல்லியுள்ளதாக பலரும் கூறுகிறார்கள். வழிபாட்டு உரிமை மறுக்கப்படும் எந்த நாடும் இனி இந்த பூமியில் இருக்காது. அதே கதி தான் கம்யூனிஸ்டுகளுக்கும்.
காரல் மார்க்ஸ் கற்பனை செய்த கம்யூனிசம் இந்த உலகில் என்றும் இருந்ததில்லை, இனியும் இருக்க முடியாது. அது ஒரு முழு மோசடி ஆகும்.
கம்யூனிசம் என்பது இல்லாத ஒன்றை உலகு முழுவதும் பங்கிடுவதாக பொய்யுரைக்கும் வீணர்கள் கட்டிய கற்பனைக்கதை ஆகும்.
கம்யூனிஸ்டுகள் உலகில் எந்த மூலையிலும் இனி அதிகாரம், ஆட்சியை கைப்பற்ற முடியாது. ஏனெனில், முழுக்க நனைந்து சுயரூபம் தெரிந்துவிட்டது. இந்தியாவிலோ படு கேவலமான சூழலில் கம்யூனிஸ்டுகள் இருக்கிறார்கள்.பாஜக காலை கழுவி வாழமுடியாது. ஆனால் சோனியா காலைக்கழுவி வாழலாம் என்றாலோ, கம்யூனிஸ்டுகளுக்கு சிறிது செல்வாக்கு உள்ள கேரளம், திரிபுரா, மேற்கு வங்காளம் ஆகிய பகுதிகளில் , காங்கிரசை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம். எனவே, சோனியா காலையும் கழுவி வாழமுடியவில்லை. கழுவ கால் கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள். அய்யகோ, என்ன புண்ணியம் செய்தனரோ ?
எதிர்காலத்தில், கம்யூனிஸ்டுகளில் பெரும்பான்மையினர் முக்கிய கட்சிகளான காங்கிரசு அல்லது பாஜக இரண்டில் ஒன்றில் சங்கமம் ஆகி வாழ்வை நடத்தவேண்டியது தவிர வேறு வழி இல்லை. அவர்களின் கட்சி காலாவதி ஆகும் முன்னரே அவர்களின் கம்யூனிஸ்டு தத்துவம் பரலோகம் போய் பலவருடங்கள் ஆகிறது. மோசடி தத்துவங்களுக்கு இதுதான் கதி.