[பாகம் -18] இஸ்லாமிய அரசு,சட்டங்கள்,சமயப் போர் – அம்பேத்கர்

“புரட்சியாளர் அம்பேத்கர் புத்த மதம் மாறியது ஏன்?” தொடரின் 18-ஆம் பாகம்

[முந்தைய பாகங்களின் சுருக்கம் – இந்தப் பக்கத்தின் கடைசியில்..]

நடைமுறைக்கு ஒத்துவராத இஸ்லாமிய சட்டம்:

திரு. சி.ஆர்.தாஸுக்கு லாலா லஜபதிராய் எழுதிய கடிதத்திலும் இதே போன்ற அச்சத்தை அம்பேத்கர் வெளியிட்டுள்ளார் :

“ஒரு விஷயம் அண்மைக் காலத்தில் எனக்கு மிகுந்த கவலையை அளித்துவருகிறது. நீங்களும் அதைப் பற்றி கவனமாக சிந்திக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அதுதான் இந்து முஸ்லீம் ஒற்றுமைப் பிரச்சினை. கடந்த ஆறு மாதங்களில் என் நேரத்தில் பெரும்பகுதியை முஸ்லீம் வரலாற்றையும் முஸ்லீம் சட்டத்தையும் ஆராய்வதில் செலவிட்டேன். முஸ்லீம் சட்டம் சாத்தியமானதோ, நடைமுறைக்கு உகந்ததோ அல்ல என்ற முடிவுக்கே என்னால் வரமுடிந்தது. ஒத்துழையாமை இயக்கத்தில் முகமதிய தலைவர்களின் நேர்மையை ஏற்றுக் கொண்டாலும், இவ்வகையான விஷயத்தில் அவர்களது மதம் ஒரு பெரும் தடையாக இருக்கிறது என்றே கருதுகிறேன்.

முஸ்லீம் தலைவர்களின் முரண்பாடு:

ஹக்கீம் அஜ்மல்கானுடனும் டாக்டர் கிச்சுலுவுடனும் நான் நடத்திய உரையாடலைப் பற்றி கல்கத்தாவில் உங்களிடம் கூறியது நினைவிருக்கலாம். ஹக்கீம் சாகேபை விடவும் மிகச்சிறந்த ஒரு முகமதியரை இந்துஸ்தானில் காணமுடியாது. எனினும் எந்த முஸ்லீம் தலைவரும் குரானைப் புறக்கணித்துவிட முடியுமா? இஸ்லாமிய சட்டத்தை நான் புரிந்துகொண்டது தவறாக இருக்கக்கூடும் என்று நம்பவே விரும்புகிறேன். இத்தகைய நம்பிக்கையைவிட எனக்கு ஆறுதல் அளிக்கக்கூடியது வேறு எதுவும் இருக்க முடியாது. ஆனால் இஸ்லாமிய சட்டத்தை நான் சரியாகவே புரிந்துகொண்டிருக்கிறேன் என்றால் அப்போது பின்கண்ட முடிவுக்கே வரவேண்டியிருக்கிறது.

ஆங்கிலேயர்களை எதிர்ப்பதில் நாம் ஒன்றுபட்டாலும் பிரிட்டிஷ் விதிமுறைகளில் இந்துஸ்தானை ஆள்வதில், ஜனநாயக முறையில் இந்துஸ்தானில் ஆட்சி நடத்துவதில் நாம் ஒன்றுபட முடியாது. அப்படியானால் இதற்குப் பரிகாரம்தான் என்ன? இந்தியாவிலுள்ள ஏழு கோடி முஸ்லீம்களைப் பற்றி நான் அஞ்சவில்லை. ஆனால் இந்த ஏழு கோடியுடன் ஆப்கானிஸ்தான், மத்திய ஆசியா, அரேபியா, மெசபோட்டோமியா, துருக்கி போன்ற நாடுகளின் ஆயுதப்படைகளும் சேர்ந்துகொண்டால் வெல்லற்கரிய வலிமை பெற்றுவிடுமே என்றுதான் அஞ்சுகிறேன். இந்து முஸ்லீம் ஒற்றுமை அவசியமானது, விரும்பத்தக்கது என்று உண்மையாகவே, மனப்பூர்வமாகவே நம்புகிறேன். முஸ்லீம் தலைவர்களை முற்றிலும் முற்றிலும் நம்புவதற்கு தயாராகவே இருக்கிறேன்.

ஆனால் குரான் மற்றும் ஹாதிஸ்களின் கட்டளைகள் இருக்கின்றனவே, அதற்கு என்ன செய்வது? முஸ்லீம் தலைவர்கள் இவற்றை மீற முடியாது. அப்படியானால் நம் கதி அதோகதிதானா?

அவ்வாறு நடைபெறாது என்றே நம்புகிறேன். நன்று கற்றறிந்தவர்களும் விவேக மிக்கவர்களும் இந்த இக்கட்டிலிருந்து விடுபட ஏதேனும் வழி காணுவார்கள் என்றே நம்புகிறேன்.

1924ல் ஒரு வங்காளி இதழின் ஆசிரியர், புகழ்பெற்ற கவிஞரான டாக்டர் ரவீந்திரநாத் தாகூரைப் பேட்டி கண்டார். அந்தப் பேட்டியில் கூறப்பட்டிருப்பதாவது :

‘கவிஞரின் கருத்துப்படி, இந்து-முஸ்லீம் ஒற்றுமையைக் கிட்டத்தட்ட அசாத்தியமாக்கும் மற்றொரு முக்கியமான காரணக்கூறு முகமதியர்கள் தங்கள் தேசபக்தியை எந்த ஒரு குறிப்பிட்ட நாட்டுடனும் நிலைநிறுத்திக் கொள்ள முடியாததேயாகும். எந்த ஒரு முகமதிய நாடாவது இந்தியாவின் மீது படையெடுக்குமாயின் உங்கள் தாய்நாட்டைப் பாதுகாப்பதற்கு உங்களது இந்து சகோதரர்களுடன் தோளோடுதோள் இணைந்து நின்று போராடுவீர்களா என்று பல முகமதியர்களைத் தாம் ஒளிவுமறைவின்றி, மனம் திறந்து கேட்டதாக கவிஞர் தெரிவித்தார். ஆனால் அவர்களிடமிருந்து கிடைத்த பதில் அவருக்குத் திருப்தியளிக்கக்கூடியதாக இல்லை.

‘எந்தச் சந்தர்ப்பத்திலும் ஒரு முகமதியன் அவன் எந்த நாட்டைச் சேர்ந்தவனாயினும் இன்னொரு முகமதியனை எதிர்த்து நிற்பது என்பது அனுமதிக்க முடியாதது என்று முகமது அலி போன்றவர்களே தம்மிடம் கூறினார்கள் என்பதைத் தம்மால் நிச்சயமாகக் கூறமுடியும்’ என்றும் அவர் குறிப்பிட்டார்.’’

இவ்வாறு அம்பேத்கர் எழுதுகிறார்.

மேலும் கூறுகிறார் :

இஸ்லாமின் கோட்பாடுகளில் நம் கவனத்திற்குரிய ஒரு கோட்பாடு பின்வருமாறு கூறுகிறது : முஸ்லீம் ஆட்சி நடைபெறாத ஒரு நாட்டில் முஸ்லீம் சட்டத்துக்கும் அந்நாட்டின் சட்டத்துக்கும் இடையே முரண்பாடு ஏற்படுமாயின் முந்தைய சட்டத்தையே பிந்தைய சட்டத்தைவிட மேன்பாடுடையதாக, பின்பற்றத்தக்கதாக ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒரு முஸ்லீம் அந்த நாட்டின் சட்டத்தை மீறி முஸ்லீம் சட்டத்துக்குக் கீழ்ப்படிவது முறையானதும் சரியானதும் ஆகும். இத்தைகய நிலைமைகளில் முசல்மான்களின் கடமை என்ன என்பதை மௌலானா முகமது அலி சுட்டிக்காட்டி இருக்கிறார். அவர் 1927ல் கைது செய்யப்பட்டு கராச்சி குற்றவியல் நடுவர் முன்னர் நிறுத்தப்பட்டு, அவர் மீது அரசாங்கம் சுமத்திய குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்துத் தந்த வாக்குமூலத்தில்தான் முசல்மான்களின் கடமையை வலியுறுத்தியிருக்கிறார். 1921 ஜூலை 8ம் தேதி கராச்சியில் நடைபெற்ற அகில இந்திய கிலாபத் மாநாட்டுக்குத் தலைமை தாங்கி அவர் முன்மொழிந்த ஒரு தீர்மானம் ஏற்கப்பட்டதைத் தொடர்ந்தே அவர் கைது செய்யப்பட்டு அவர்மீது வழக்குத் தொடரப்பட்டது.

அந்த மாநாட்டில் ஏற்கப்பட்ட தீர்மானம் வருமாறு : ‘இன்றைய நிலைமையில் ஒரு முசல்மான் பிரிட்டிஷ் படைகளில் தொடர்ந்து சேவை செய்வதோ, சேருவதோ அல்லது படையில் சேரும்படி மற்றவர்களைத் தூண்டி ஊக்குவிப்பதோ எல்லை வகைகளிலும் சமய ரீதியில் சட்ட விரோதமானது என்று இந்த மாநாடு தெளிவாகப் பறைசாற்றுகிறது. படைகளிலுள்ள ஒவ்வொரு முசல்மானுக்கும் இந்த மதக்கட்டளைகள் எட்டும் படிச் செய்வது பொதுவாக எல்லா முசல்மான்களின் குறிப்பாக உலேமாக்களின் கடமையாகும்’

மெளலானா முகமதுவின் வாதம்:

…. மௌலானா முகமது அலி தாம் குற்றவாளி அல்ல என்று வாதாடி அதற்கு ஆதரவாகப் பின்கண்ட வாக்குமூலத்தை அளித்தார் : இந்த அதீதமான குற்றச்சாட்டின் பொருள்தான் என்ன? எவருடைய சித்தாந்தங்களால் நாங்கள் வழிகாட்டப்படுவது? முஸ்லீம்களாகிய எங்களுடைய சித்தாந்தங்களாலா அல்லது இந்துக்களுடைய சித்தாந்தங்களாலா? முசல்மான் என்ற முறையில் பேசுகிறேன். நான் நேர்வழியிலிருந்து விலகி தவறு செய்கிறேன் என்றால் அதை மெய்ப்பிப்பதற்கு ஒரே வழிதான் இருக்கிறது. புனிதமான குரானைக்கொண்டோ அல்லது கடைசி தீர்க்கத்தரிசியின் – அவருக்கு ஆண்டவனின் பேரருளும் அமைதியும் கிட்டுவதாக – உண்மையான பாரம்பரியங்களைக் கொண்டோ அல்லது கடந்த கால மற்றும தற்கால முஸ்லீம் சமயத்துறை அறிஞர்கள் பிரகடனம் செய்த சமயக் கருத்துக்களைக் கொண்டோதான் அதனை மெய்ப்பிக்க முடியும். இஸ்லாமின் இந்த இரு ஆதார மூலங்களின் பெயரால் கேட்கிறேன். பேய்த்தனமான, கொடிய அரசாங்கம் என்று அழைக்கப்படுவதற்கு விரும்பவில்லை என்றால் எனது எந்தச் செயலுக்காக அது இன்று என் மீது வழக்குத் தொடுத்துள்ளது என்பதைக் கூற வேண்டும் நான் ஒன்றைப் புறக்கணித்தாலும் குற்றம், புறக்கணிக்காவிட்டாலும் குற்றம் என்றால் எப்படித்தான் இந்த நாட்டில் நான் பாதுகாப்பாக வாழ முடியும்? நான் ஒன்று பாவியாக இருக்க வேண்டும் அல்லது குற்றவாளியாக இருக்க வேண்டும்….

 இஸ்லாம் ஏற்பது எதனை?

இஸ்லாம் ஒரே ஒரு மேலாண்மையைத்தான் ஏற்கிறது. அதுதான் கடவுளின் மேலதிகாரம், அந்த மேலாண்மை ஒப்புயர்வற்றது, கட்டுப்பாடுகளுக்கு உட்படாதது, பிரிக்க முடியாதது, பராதீனம் செய்ய முடியாதது…. ஒரு முசல்மான் அவர் குடிமகனாக இருந்தாலும் சரி, படை வீரனாக இருந்தாலும் சரி, முஸ்லீம் ஆட்சியில் வாழ்பவனாக இருந்தாலும் சரி, முஸ்லீமல்லாத ஆட்சியில் வாழ்பவனாக இருந்தாலும் சரி அவனது முழுமுதல் விசுவாசமும் ஆண்டவனிடமும், தீர்க்கத்தரிசியிடமும், அவருடைய சீடர்களிடமும், முஸ்லீம் சமயத் தலைவர்களிடமும்தான் இருக்க வேண்டும் என்று குரான் கட்டளையிடுகிறது…. இந்த ஒற்றுமை சித்தாந்தம் எளிதில் புரிந்துகொள்ள முடியாத யாரோ ஒரு சிந்தனையாளர் வகுத்தளித்த கணித சூத்திரம் போன்றதல்ல. மாறாக அது படித்த அல்லது படிக்காத ஒவ்வொரு முசல்மானது அன்றாடக் கோட்பாடாகும்….

இஸ்லாத்தின் இருப்பிடமும், யுத்தத்தின் இருப்பிடமும்:

முசல்மான்கள் இதற்கு முன்னரும் வேறு இடங்களிலும் முஸ்லீம் அல்லாத ஆட்சியின் கீழ் அமைதியாக வாழ்ந்து வந்திருக்கின்றனர். ஆனால் முசல்மான்கள் எப்போதுமே ஒரு மாற்ற முடியாத விதிமுறையைக் கடைபிடித்து வந்திருக்கின்றனர். இப்போதும் கடைப்பிடித்து வருகின்றனர். இனியும் கடைப்பிடித்து வருவர். அனைவருக்கும் மேலான ஆளுநர் என்று புனிதமான குரான் போற்றும் ஆண்டவனின் கட்டளைகளுக்கு மாறுபடாத முறையில் தங்களது சமய சார்பற்ற ஆட்சியாளர்கள் பிறப்பிக்கும் சட்டங்களுக்கும் ஆணைகளுக்கும் மட்டுமே முசல்மான்கள் கீழ்ப்படிந்து நடப்பது குறித்த இந்த மிகத்தெளிவான, கண்டிப்பான, திட்டவட்டமான வரையறைகள் முஸ்லீமல்லாத ஆட்சியாளர்களை மட்டுமே கருத்திற்கொண்டு நிர்ணயிக்கப்பட்டவை அன்று; மாறாக இவை முழுதளாவியவை. எங்கும் எல்லோருக்கும் எல்லாவித ஆட்சிகளுக்கும் பொருந்தக் கூடியவை, எவ்விதத்திலும் விரிவுபடுத்தவோ, குறுக்கவோ, சுருக்கவோ முடியாதவை’’

ஒரு நிலையான அரசை விரும்பும் எவரையும் இது மிகுந்த அச்சம் கொள்ளவே செய்யும். ஆனால் ஒரு நாடு முசல்மான்களின் தாயகமாக இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி வகுத்தளிக் கப்படும் இந்த முஸ்லீம் கோட்பாடுகளுக்கு இது குறித்து எந்தக் கவலையும் அக்கறையும் இல்லை. முஸ்லீம் பொது ஒழுங்குச் சட்டத்தின்படி, உலகம் தார்-உல்-இஸ்லாம் (இஸ்லாமின் இருப்பிடம்) என்றும், தார்-உல்-ஹார்ப் (யுத்தத்தின் இருப்பிடம்) என்றும் இரு முகாம்களாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. ஒருநாடு முஸ்லீம்களால் ஆளப்படும்போது தார்-உல்-இஸ்லாம் என அழைக்கப்படுகிறது. முஸ்லீம்கள் ஆட்சியாளர்களாக இல்லாமல் குடிமக்களாக மட்டுமே இருக்கும் ஒருநாடு தார்-உல்-ஹார்ப் எனப்படுகிறது.

முஸ்லீம்களின் பொது ஒழுங்குச் சட்டம் இவ்வாறிருக்கும்போது, இந்துக்களுக்கும், முஸ்லீம்களுக்கும் இந்தியா பொதுத்தாயகமாக இருக்க முடியாது. அது முஸ்லீம்களின் நாடாக இருக்கலாம் – ஆனால் இந்துக்களும் முஸ்லீம்களும் சமமானவர்களாக வாழும் ஒரு நாடாக இருக்க முடியாது. மேலும், அது முஸ்லீம்களால் ஆளப்படும்போது முசல்மான்களின் நாடாக மட்டுமே இருக்க முடியாது. அதேபோன்று எந்தக் கணத்தில் நாடு முஸ்லீமல்லாதோரின் ஆளுகையின் கீழ் வருகிறதோ அந்தக் கணம் முதலே அது முஸ்லீம்களின் நாடு என்ற நிலையை இழந்து விடுகிறது. அது தார்-உல்-இஸ்லாமாக இருப்பதற்குப் பதிலாக தார்-உல்-ஹார்பாக மாறிவிடுகிறது. இதனை ஏதோவொரு கோட்பாட்டளவிலான கருத்தாக மட்டுமே எடுத்துக்கொள்ளக்கூடாது. ஏனென்றால் முஸ்லீம்களின் போக்கையே நிர்ணயிக்கக்கூடிய அளவுக்கு செயலூக்க மிக்க ஒரு சக்தியாக மாறும் ஆற்றல் அதற்கு இருக்கிறது.

பிரிட்டிஷார் இந்தியாவைக் கைப்பற்றிக் கொண்டபோது அது முஸ்லீம்களின் போக்கில் மிகப்பெரிய பிரதிபலிப்பை ஏற்படுத்திற்று. பிரிட்டிஷ் ஆக்கிரமிப்பு இந்துக்களிடம் அவ்வளவாக மனசாட்சி உறுத்தலை ஏற்படுத்தவில்லை. ஆனால் அதேசமயம் முஸ்லீம்களைப் பொறுத்தவரையில் இனியும் இந்தியா முஸ்லீம்கள் வாழ்வதற்குரிய ஒரு நாடுதானா என்ற கேள்வியை அது எழுப்பியது. இது குறித்து அச்சமயம் முஸ்லீம் முதாயத்திடையே ஒரு விவாதமே நடைபெற்றது. இந்தியா தார்-உல்-ஹார்பா அல்லது தார்-உல்-இஸ்லாமா என்ற இந்த விவாதம் அரை நூற்றாண்டுக்காலம் நடைபெற்றதாக டாக்டர் டைட்டஸ் கூறுகிறார்.

ஜிகாத் என்னும் சமயப் போர்:

முஸ்லீம்களில் மிகவும் வெறி உணர்வு கொண்ட சில சக்திகள் சையத் அகமத் தலைமையில் உண்மையில் ஒரு புனிதப் போரையே பிரகடனம் செய்தனர். முஸ்லீம் ஆட்சி நடைபெறும் நாடுகளுக்கு குடிபெயர்ந்து செல்ல வேண்டிய (ஹிஜ்ரத்) அவசியத்தை வலியுறுத்திப் பிரகடனம் செய்தனர். இது சம்பந்தமாக இந்தியா முழுவதும் ஒரு கிளர்ச்சியையும் நடத்தினர். இச்சமயம்தான் அலிகார் இயக்கத்தின் நிறுவனரான சர் சையத் அகமத் தலையிட்டார். இந்தியா முஸ்லீம் ஆட்சியில் இல்லாமல் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருப்பதை வைத்து அதனை தார்-உல்-ஹார்பாகக் கருத வேண்டாம் என்று முஸ்லீம்களின் மனத்தை மாற்றுவதற்கு தமது அறிவுத்திறம் முழுவதையும் பயன்படுத்தி அரும்பாடுபட்டார். பிரிட்டிஷ் ஆட்சியில் முஸ்லீம்கள் தங்களது சமய வினைமுறைகள், சடங்குகள் முதலியவற்றைச் செய்வதற்கு முழுச் சுதந்திரம் பெற்றிருப்பதால் இதனை தார்-உல்-இஸ்லாமாகக் கருத வேண்டும் என்று அவர் முஸ்லீம்களை வலியுறுத்தினார். அவரது அயராத முற்சி காரணமமாக ஹிஜ்ரத் இயக்கம் அப்போதைக்கு ஓய்ந்தது. எனினும் இந்தியா தார்-உல்-ஹார்ப் எனும் கோட்பாடு கைவிடப்படவில்லை.

கிலாபத் கிளர்ச்சி நடைபெற்று வந்த 1920-21ஆம் ஆண்டுகளிலல் முஸ்லீம் தேசபக்தர்கள் இந்தத் தத்துவத்தை மீண்டும் பிரச்சாரம் செய்வதில் முனனைந்து ஈடுபட்டனர். இந்தப் பிரசாரத்திற்கு முஸ்லீம் மக்கள் திரளிடையே ஆதரவு இல்லாமல் போகவில்லை. முஸ்லீம்களில் ஒரு கணிசமான பகுதியினர் முஸ்லீம் பொது ஒழுங்கு சட்டத்தின்படிச் செயல்படுவதற்குத் தாங்கள் தயாராக இருப்பதாக அறிவித்ததோடு நில்லாமல் உண்மையில் இந்தியாவில் உள்ள தங்கள் வீடுவாசல்களைதத் துறந்து விட்டு ஆப்கனிஸ்தானில் போய்க் குடியேறவும் செய்தனர். தார்-உல்-ஹார்ப் நிலையிலுள்ள முஸ்லீம்கள் அதிலிருந்து தப்புவதற்கு ஹிஜ்ரத் மட்டுமே ஒரே மார்க்கமாக இருக்கவில்லை என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும். முஸ்லீம் சட்டத்தில் இதற்கு மற்றொரு உரிமைக் கட்டளையும் இடம் பெற்றிருந்தது. அதுதான் ஜிஹாத் (சமயப்போர்) என்பது. இதன்படி ‘உலகம் முழுவதுமே இஸ்லாமின் ஆதிக்கத்தின் கீழ் வரும்வரை இஸ்லாம் ஆட்சியை மேன்மேலும் விஸ்தரித்துச் செல்ல ஒரு முஸ்லீம் ஆட்சியாளர் கடமைப்பட்டுள்ளார். உலகம் தார்-உல்-இஸ்லாம், தார்-உல்-ஹார்ப் என்று இரண்டு முகாம்களாகப் பிரிக்கப் பட்டிருக்கும் நிலைமையில் எல்லா நாடுகளுமே இவற்றில் ஏதேனும் ஒரு முகாமைச் சேர்ந்தவையாகவே இருக்கும். கோட்பாட்டளவில், தார்-உல்-ஹார்ப்பை தார்-உல்-இஸ்லாமாக மாற்றுவது ஆற்றல் மிக்க ஒரு முஸ்லீம் ஆட்சியாளரது கடமையாகும்.’’

இந்தியாவிலுள்ள முஸ்லீம்கள் ஹிஜ்ரத்தில் ஈடுபட்ட நிகழ்ச்சிகளைப் போலவே ஜிஹாதைப் பிரகடனம் செய்யவும் அவர்கள் தயங்கவில்லை என்பதைக் காட்டும் நிகழ்ச்சிகளும் உள்ளன. 1857ஆம் வருடக் கலக வரலாற்றை நுணுகி ஆராயும் எவரும் அந்தக் கலகத்தில் குறைந்தபட்சம் ஒரு பகுதியாவது உண்மையில் பிரிட்டிஷாருக்கு எதிராக முஸ்லீம்கள் பிரகடனம் செய்த ஜிஹாத்தாக இருப்பதைக் காண்பார்கள். பிரிட்டிஷார் இந்தியாவை ஆக்கிரமித்துக் கொண்டுவிட்டதால் அந்நாடு தார்-உல்-ஹார்பாக ஆகிவிட்டது என்று பல பத்தாண்டுக்காலம் சையத் அகமத் ஓயாது ஒழியாது நடத்தி வந்த பிரச்சாரத்தின் விளைவாக ஏற்பட்ட கலகத்தின் ஒரு பதிப்பாகவே 1857ஆம் வருட எழுச்சியை இந்தியாவை மீண்டும் தார்-உல்-இஸ்லாமாக்கும் முஸ்லீம்களின் முயற்சி எனக் கூறலாம்.

இவ்வகையில் மிக அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி 1919ல் இந்தியா மீது ஆப்கனிஸ்தான் நடத்திய படையெடுப்பாகும். பிரிட்டிஷ் அரசாங்கத்தின் மீது வெறுப்பு கொண்ட கிலாபத் இயக்கத்தினரின் தலைமையில் இருந்த முசல்மான்கள்தான் இந்தியாவை விடுதலை செய்தவற்கு ஆப்கனிஸ்தான் உதவியை நாடி இந்தப் படையெடுப்பைத் தூண்டிவிட்டனர். இந்தப் படையெடுப்பின் விளைவாக இந்தியா விடுதலை பெற்றிருக்குமா அல்லது ஆப்கனிஸ்தானுக்கு அடிமைப் பட்டிருக்குமா என்பதைச் சொல்வதற்கில்லை. ஏனென்றால் அந்தப் படையெடுப்பு செயல்படுத்தப்படுவதில் தோல்வியடைந்தது ….

(தொடரும்…)

 

முந்தைய பாகங்களின் சுருக்கம்:

இந்துமதத்தை சீர்திருத்த அம்பேத்கர் முயன்றார் என்பதையும், அதில் வெற்றிபெற முடியாது என்று சொல்லி மதமாற்றத்தைத் தீர்வாகச் சொன்னதையும் பாகம் 2 மற்றும் 3ல் பார்த்தோம். அந்த அறிவிப்பு மற்றும் அறிவிப்பு நடந்த மாநாடு பற்றி பாகம் 1 அறிமுகம் செய்தது. ஆனால், மதமாற்றம் தீர்வல்ல என்று அந்த அறிவிப்பை மற்ற தலித் தலைவர்கள் நிராகரித்தனர் (பாகம் 4ல்). பாகம் 5ல் உலகியல் அடிப்படையிலான பயன்களுக்காக மதமாற்றத்தின் அவசியம் பற்றியும் பாகம் 6ல் அதன் ஆன்மிகப் பயன் பற்றியும் பார்த்தோம்.

இனி, தீண்டத்தகாதவர்களுக்குளான உள்ஜாதீயப் பாகுபாடுகள், அதன் அரசியல் காரணங்கள், அதன் தீர்வான மதமாற்றத்தின் அவசியத்தை பாகம் 7ல் பார்த்தோம். 8ம் பாகத்தில் இந்துமதத்துக்குள் இருந்தே அதைச் சீர்திருத்த முடியாது என்பதற்கான அம்பேத்கரின் வாதங்களைப் பார்த்தோம். தகுதி வாய்ந்த தலித் ஒருவருக்கு ஒரு வருட கால அளவில் சங்கராச்சாரியாருக்கு இணையான மரியாதைகள் தரும் வேண்டுகோளை அவர் முன்வைத்ததை பாகம் 9ல் பார்த்தோம்.  தங்கள் மதத்திற்கு மாற்ற “முஸ்லீமாக மதம் மாறுங்கள்” என்று நேரடியாகக் கோரிக்கைகள் விடுத்ததையும், மறைமுக அழுத்தங்கள் கொடுத்ததையும் பாகம் 10ல் பார்த்தோம்.

வாழும் சக்திகளைத் திரட்டிக்கொள்ள தலித்துகளுக்கு மிகச் சாதகமான ஒரு இந்து வெளியாக சீக்கிய மதத்தை அம்பேத்கர் கருதியது பற்றி பாகம் 11ல் பார்த்தோம். கிறுத்துவம் எனும் நிறுவன அமைப்பை வரலாற்றுப் பார்வையில் அம்பேத்கர் ஒதுக்கியது குறித்து பாகம் 12ல் பார்த்தோம். மதமாற்றம் என்பதை ஆக்கிரமிக்க வந்த ஐரோப்பியர்களின் ஒரு சிறப்பான உத்தியாக இருந்ததை பாகம் 13ல் பார்த்தோம்.

இஸ்லாம் என்பது அடிமைகளை உருவாக்கும் மார்க்கம் என்பதை பாகம் 14 விளக்குகிறது. இஸ்லாமியப் பெண்களின் கீழ்த்தர துயர நிலை மற்றும் மனநோய் பரப்பும் இஸ்லாமிய மனப்பான்மை போன்றவற்றைப் பற்றி அம்பேத்கரின் கருத்துக்களை பாகம் 15ல் கண்டு தெளிவு அடையலாம். பதினாறாம் பாகத்தில் இஸ்லாம் எப்படி சமுதாயத்தின் வளர்ச்சிப் பாதைக்கும், முன்னேற்றத்திற்கும் எதிரான பிற்போக்கான மதம், ஏன் அவ்வாறு வளர்ச்சியை எதிர்க்கிறது, பகுத்தறிவுக்கு விரோதமான ஷரியா சட்டம், இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் உள்ள பிரச்னை ஆகியவற்றை அலசுகிறது.பாகம் 17 இஸ்லாத்தில் தேசபக்திக்கு இடமுண்டா என்பதைப் பற்றியும்,தலித்துகளின் தேசிய கண்ணோட்டத்திற்கான அவசியத்தைப் பற்றியும் பார்த்தோம்.
முந்தைய பாகங்களைப் படிக்க: பாகம் 1 || பாகம் 2 || பாகம் 3 || பாகம் 4 || பாகம் 5 || பாகம் 6 || பாகம் 7 || பாகம் 8 || பாகம் 9 || பாகம் 10 || பாகம் 11 || பாகம் 12 || பாகம் 13 || பாகம் 14 || பாகம் 15 ||  பாகம் 16 || பாகம் 17

7 Replies to “[பாகம் -18] இஸ்லாமிய அரசு,சட்டங்கள்,சமயப் போர் – அம்பேத்கர்”

  1. நன்றி
    அடுத்த பகுதியை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கிறேன்,

  2. இவ்வளவு தெரிந்த அம்பேத்கர், முஸ்லிம்களுக்கு ஓட்டுரிமை கிடையாது என்ற சட்டம் கொண்டுவந்து இருக்கவேண்டும். தெரிந்தே,தனக்குத்தானே பள்ளம் தோண்டிக்கொள்வது என்பது இதுதான்.

  3. அவர் புத்த மதத்திற்கு சென்ற போதே ஒடுக்க பட்டவர்களக்கு ஏற்ற மதம் இஸ்லாம் அல்ல என்பதை உணர்ந்து விட்டார் போலும் …ஆனாலும் அடங்கவில்லை தொலைக்காட்சி பிரசாரம் muslim means பீஸ்!!!!!!!எங்கைய்யா உங்க பீஸ் ?????சவுதில கார் ஓட்டின 2 பெண்களை சவுக்கால அடிச்சது தன உங்க பீசா?????? ஷரியா உங்களக்கு சரினா அதை அங்கேயே வச்சுகோங்க …இவ்ளோ இருந்தும் ஐ.நா வின் அமைதிகுறிகாட்டில எந்த இஸ்லாமிய நாடுமே வரலையே ???? .

    சாதி வாரி ஒதுக்கீடு முறைமை நன் அறிந்த வகையில் ஆங்கிலயேர் காலத்திலும் இருந்தது,சீர்திருத்த வாதிகளான கிறிஸ்தவா மேதைகள் அதை தடுக்க மறந்ததன் உள் நோக்கம்தான் என்ன ??????

  4. நமது பாரத நாட்டின் அரசியல் சாசனத்தை உருவாக்கிய தலைவர்களின் பங்களிப்பை நாம் குறைத்து மதிப்பிட முடியாது. எனினும் கடந்த 60 ஆண்டுகளாக அரசியல் சாசனத்தில் இருக்கும் குறைகளால் நமது சமுதாயம் சந்தித்த பிரச்சினைகளை ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. காலத்தின் கட்டாயத்தினால் நமது அரசியல் சாசனமே இதுவரை நிறைய திருத்தங்களை கண்டுள்ளது. நமது நாட்டின் பாரம்பரியமான ஹிந்து சிந்தனாமுறையின் அடிப்படையில் பாரதம் ஒரே நாடு, வழிபாட்டு முறைகள் வேறுபட்டாலும் நாம் ஒரே கலாச்சாரத்தை பின்பற்றும் சமுதாயம் என்ற அடிப்படையில் நமது சட்டங்கள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். சிவில் சட்டங்களில் ஹிந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் வெவ்வேறு சட்டங்கள் அமைத்து கிரிமினல் சட்டங்களில் அனைவருக்கும் பொதுவான சட்டம் வகுத்தது, சிறுபான்மை என்ற போர்வையில் மத மாற்றத்தின் மூலம் நமது சமுதாயத்திலிருந்தே துரோகிகளையும் எதிரிகளையும் உருவாக்க நாம் அனுமதி அளித்தது, மத அடிப்படையில் தனிநாடு கேட்டு போராடியவர்களுக்கு நமது நாட்டிலேயே சிறப்பான சலுகைகள் வழங்கி ஹிந்துக்களுக்கு தீராத நிரந்தர பகைவர்களை உருவாக்கி அவர்களுடனேயே சேர்ந்து வாழ நிர்பந்தப்படுத்தியது என்று நாம் செய்த குளறுபடிகளை பட்டியலே போடலாம்! நாம் நமது சமீபகால சரித்திரத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய முக்கியமான பாடம் என்னவென்றால், கடந்த கால தவறுகளிலிருந்து இதுவரை நாம் எந்தப்பாடமும் கற்றுக்கொள்ளவில்லை என்பதே!

  5. அம்பேத்கர் ஏன் முஸ்லிமாக மாறவில்லை என்றால் அவர் முஸ்லிமாக மாறி இருந்தால் பணத்துக்காக மாறிவிட்டார் எனப்பொய் பிரச்சாராரங்கள் செய்து அதைக்கொண்டு அவரின் உண்மையான குறிக்கோளை கொச்சைப் படுத்துவார்கள் என்பதால் மட்டுமே.மேலும் தலித்களை சாதிக்கொடுமையிலிருந்து காக்க முடியாமல் போகுமே என அவர் நுண்ணறிவுடன் செயல் பட்டதும் விளங்கும்..அம்பேத்காரை பற்றிப்பேச சாதிவெறியர்களுக்கு என்ன அருகதை உள்ளது?

    (edited and published)

  6. sathi veri yarukku irunthalum thappu. athu mel jathiyaa irunthaalum sari kilzh jathiyaa matrapattavurukkum sari. ini yellorum samam enbathe sari……..

  7. அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு இந்து மதம் என்று அழைக்கபடும் வேத மதத்தின் மீது இருந்த கோபத்தின் அளவிற்கு இணையான நம்பிக்கையின்மை மற்ற மதங்களான கிறிஸ்த்துவம். இஸ்லாத்தின் மீது இருந்தது அதற்கு காரணம், வேதமதத்தை போலவே மற்ற மதங்களும் முதலாளித்துவ சார்புவுடைய, அடிமைத்தனத்தை ஆதரிக்கின்ற மூடத்தனம் நிறைந்த மத நிறுவனங்களே அவர்களும் முன்னாள் சாதி இந்துக்கள் என்பதே, எனவேதான் அண்ணல் தலித்துகளின் தாய் மதமான பௌத்தத்திற்கு திரும்பினார், இங்கே ஆசிரியர் அண்ணல் இந்து மதத்தை எவ்வாறு சமரசமற்று எதிர்த்தார் என்பதை வசதியாக மறைத்துவிடுகின்றார் மேலும் அண்ணலின் மற்ற மத கருத்துகளில் குளிர்காய ஆசைபடுகின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *