இனிப்பு [சிறுகதை]

தமஸோமா….

வெயில் சுட்டெரித்துக் கொண்டிருந்தது என்ற போதிலும் அந்தப் புல்வெளியில் ஆங்காங்கே படுத்தபடியும் அமர்ந்தபடியும் அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். தமிழ், தெலுங்கு, குஜராத்தி, ஆங்கிலம் என எல்லா மொழிகளும் அவர்களின் உரையாடல்களில் கலந்து தெறித்துக் கொண்டிருந்தன. அனைவர் முகங்களிலும் களைப்பு தெரிந்தது. சிறிது தொலைவில் சிலர் தீமூட்டி கஞ்சி காய்ச்சிக் கொண்டிருந்தனர். அப்புல்வெளியின் ஓரத்தில் சில கற்பாறைகள் கிடந்தன. அவற்றில் ஒரு சிறிய கற்பாறையிலிருந்து ஏதோ எழுதிக் கொண்டிருந்தார் மோகன். அந்த வெயிலிலும் அவர் போட்டிருந்த கோட்டும் தொப்பியும் அவரை விசித்திரமாகக் காட்டின. கழுத்துக்கு அருகே கடைசி பட்டன் வரை போட்டுக் கொண்டு விறைப்பாக அமர்ந்தபடி எழுதிக் கொண்டிருந்தார்.

பேப்பரின் மேல் நிழலாடியதைக் கண்டு நிமிர்ந்த மோகன் நாயுடுவைப் பார்த்தார். “உட்காருங்கள் நாயுடோ” என்றார் ஆங்கிலத்தில். பாறையிலிருந்து எழுந்து புல்வெளியில் அமர்ந்தார் மோகன்.

“நன்றி மோகன்” என்றபடி நாயுடு பாறையில் அமர்ந்த போது அவர் முட்டுக்கள் வலித்தன. “ஒரு வழியாக போர் முடிவுக்கு வந்துவிட்டது அல்லவா? உயிர் பிழைப்போமா என்பதே ஐயத்துக்குரியது ஆகிவிட்டது. எப்போது நம்மை ஊருக்குள் போக அனுமதிப்பார்கள்?”

”தெரியவில்லை”

“மோகன் இப்போது குடும்பங்கள் ஆங்காங்கே இருந்து இங்கு வர ஆரம்பித்துவிடுவார்கள். பெண்கள் குழந்தைகள்… அதன் பிறகு இந்த வெட்டவெளி நாடோடி வாழ்க்கை சரிப்படாது… நாம் ஆண்கள்… நம்மிலேயும் கூட வயதானவர்கள்…”

”நான் செகரட்டரிக்கு எழுதியிருக்கிறேன்… ஒரு சில நாட்களுக்குள் நாம் ஊருக்குள் செல்ல முடியும்”

நாயுடு வானத்தைப் பார்த்தார், “ஏழு குண்டலவாடா…”

“மோகன் நீங்கள் எடுத்த முடிவு சரியாக போய்விட்டது. இப்போது நாம் உரிமையுடன் போராட முடியும் இல்லையா?”

மோகன் ஒன்றும் சொல்லாமல் தலை குனிந்திருந்தார். நாயுடு முகத்தில் லேசான கவலை திரையிட்டது. “ஏதாவது பிரச்சனையா என்ன? சான்றிதழ்களை மறுத்துவிட்டதாகச் சொன்னீர்கள்… வேறு ஏதாவது?”

”இரண்டு விஷயங்கள் நாயுடோ” என்றார் மோகன். அவர் குரல் கம்மி இருந்தது. ”நேற்று எனக்கு இரண்டு கடிதங்கள் வந்தன. இரண்டுமே பதில்கள்…”

நாயுடு தலையை மட்டும் அசைத்தார். அவருக்கு ஏதோ புரிந்தது. எதுவானாலும் விஷயம் நல்ல செய்தியாக இருக்கப் போவதில்லையோ…

“முதல் கடிதத்தில் அவர்கள் சான்றிதழ்களை தலைவர்களுக்கு மட்டும் தருவார்களாம் ஆனால் போர்க்களத்தில் இறங்கி வேலை செய்தவர்களுக்கு தனித்தனியாகத் தர முடியாதாம்.”

“இது துரோகம்… நம்மை நம்பி களமிறங்கியவர்கள் என்ன நினைப்பார்கள் நம்மை? எந்த அடிப்படையில் தரமாட்டார்களாம்?”

மோகன் தன் கையில் வைத்திருந்த அட்டையின் கிளிப்பை அழுத்தி, தான் எழுதிக் கொண்டிருந்த காகிதத்தின் கீழே இருந்த ஒரு காகிதத்தை எடுத்தார். வெளிர் நீல நிறத்தில் இருந்த அந்த காகிதத்தின் முகப்பில் அரசு இலச்சினை கம்பீரமான அழுத்தமான கருப்பு அச்சில் தெரிந்தது. அரசாங்க செக்கரட்டரி அலுவலகத்திலிருந்து…

மோகன் குறிப்பிட்ட வரிகளை சுட்டிக் காட்டினார், நாயுடு கண்களைச் சுருக்கியபடி அந்தக் கடிதத்தை வாசிக்க ஆரம்பித்தார் …

“…தங்கள் கோரிக்கையில் கண்டுள்ளவாறு ஒவ்வொரு ஸ்ட்ரெச்சர் தூக்கிக்கும் சான்றிதழ் அளிப்பது இயலாது. அவர்கள் பிளாண்டேஷன் உரிமையாளர்களால் அரசாங்கத்துக்கு அனுப்பப்பட்ட கூலி உதவியாளர்களாகவே கருதப்பட வேண்டும் என்பதைத் தங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகிறோம். இருப்பினும் தங்கள் நிபந்தனையற்ற ஆதரவையும் பேரரசுக்கு தாங்கள் காட்டிய விசுவாசத்தையும் கருத்தில் கொண்டு தாங்கள் கோரிய சான்றிதழ்களை தங்களுக்கும் தங்கள் அமைப்பின் இதர நிர்வாகிகளுக்கும் அளிக்க எம் அரசுக்கு உடன்பாடே. தங்கள் ஏற்பை எழுத்து மூலமாக செயலாளர் அலுவலகத்துக்கு இக்கடிதம் கண்ட ஏழு நாட்களுக்குள் அனுப்புவதாக இருந்தால்…”

கடிதத்தை மீண்டும் மோகனிடம் கொடுத்த நாயுடு மிக மெதுவாகக் கேட்டார், “என்ன செய்ய போகிறீர்கள் மோகன்… இவர்கள் எல்லாரும் பிளாண்டேஷன் முதலாளிகள் சொல்லி வரவில்லை… நீங்கள் சொல்லி வந்தார்கள்… அவர்கள் எப்படி நடத்தப்பட்டார்கள் என்பதும் நமக்குத் தெரியும்..”

“கால்நடைகளைப் போல டிரக்குகளில் ஏற்றி நாட்கணக்கில் பயணம் செய்ய வைக்கப்பட்டதை நானே அறிந்திருக்கிறேன். இருந்தாலும் விசுவாசத்துக்கு, பேரரசு நீதியும் தயையும் வழங்கும் என நான் நம்பினேன் நாயுடோ… இன்னமும் நம்புகிறேன். எனவேதான் இந்த…”

மோகன் எதுவும் பேசாமல் தன் அருகில் இருந்த செய்திதாளை நாயுடுவுக்கு நீட்டினார். அதில் பென்சிலால் வட்டம் செய்யப்பட்ட செய்தியை நாயுடு பார்த்தார்…

“புரியவில்லை…”

“இனிப்புகள்… பேரரசி பிரத்யேக இனிப்புகளை போர்வீரர்களுக்கு அனுப்பியிருக்கிறாராம்… தனது கையால் பொட்டலம் கட்டி அனுப்பியிருக்கிறாராம்”

“ஆமாம்… அதற்கென்ன?”

“நான் நம்மவர்களுக்கும் அவற்றை அளிக்க வேண்டும் என கோலனியல் செகரட்டரிக்கு கடிதம் எழுதினேன்… சான்றிதழ்களை விட அது இன்னும் உணர்ச்சிபூர்வமானது…”

”பதில் வந்ததா?”

“ஆம் நாயுடோ… ஒருவாரத்துக்குள்ளேயே வந்துவிட்டது”

திடீரென்று எவரோ அழும் குரல் கேட்டது. மோகனும் நாயுடுவும் குரல் வந்த திசையில் பார்த்தார்கள்… ஒரு பெண்ணும் இரு குழந்தைகளும் ஓர் ஆணைப் பற்றியபடி அழுது கொண்டிருந்தார்கள்…

“சொன்னேனல்லவா மோகன்… குடும்பங்கள் தங்களவர்களைத் தேடி இங்கே வர ஆரம்பித்துவிட்டன. சீக்கிரமாக நாம் ஊருக்குள் குடியேற வேண்டும்… வெட்டவெளிகளும் புல்வெளிகளும் இன்னும் முழுவதும் பத்திரமாகிவிடவில்லை…. சரி சொல்லுங்கள், என்ன பதில் வந்தது?”

மீண்டும் கிளிப்பை அழுத்தி மற்றொரு வெளிர்நீலக் கடிதத்தை நாயுடுவுக்காக நீட்டினார் மோகன். பிரிட்டோரியாவில் இருந்து வந்த பதிலில் காலனியல் செகரட்டரி, பேரரசியின் இனிப்புகள் வெள்ளை சோல்ஜர்களுக்கு மட்டுமேயான மரியாதை என்றும் கூலிகளுக்கு அவை அளிக்கப்படமுடியாது என்பதை தெரிவிப்பதாகவும் கண்டிருந்தது.

”நீங்கள் ஒரு நம்பிக்கையாளர் மோகன்..” நாயுடு விரக்தியாகச் சிரித்தார்…” ஆனால் இன்றைக்கு எல்லாராலும் வெறுக்கப்படுகிற ஒரு சமுதாயமாக நாம்தான் இருக்கிறோம். இரண்டு பக்கங்களிலும் நம் மீது வெறுப்பு… இப்படிப்பட்ட தருணங்களில் நாம், அதாவது நீங்கள் எடுத்த முடிவு சரியா என்றுகூட ஐயம் வரத்தான் செய்கிறது… சரி இப்போது அடுத்து என்ன எழுதினீர்கள்? செயலாளருக்கு நன்றி கடிதமா?”

தன் பேச்சிலிருந்த விரக்தி கலந்த கிண்டலை நாயுடுவால் தவிர்க்க முடியவில்லை.

“இந்த நிலை மாறும் என்று எனக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது நாயுடோ” என்று மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, தன் குஜராத்தி அழுத்தம் கொண்ட ஆங்கிலத்தில் சொன்னபோது நாயுடுவுக்கு மனதில் ஏற்பட்ட உணர்ச்சி சிரிப்பா அழுகையா எனச் சொல்ல முடியவில்லை…

 

ஜோதிர்கமய…

 

வெயில் சுட்டெரித்துக் கொண்டிருந்தது. அந்த மைதானத்தின் புல்வெளியில் ஆங்காங்கே உலகப் போர்களின் பீரங்கிகள் இப்போது நினைவுச் சின்னங்களாக நின்று கொண்டிருந்தன. அலைகளின் ஆர்ப்பரிப்பும் சிறைக் காவலர் பிரிவுகளின் அணிவகுப்புப் பயிற்சி ஓசைகளும் கலந்து விசித்திரக் கலவைகளாக ஒலிகள் தெரித்துக் கொண்டிருந்தது அப்பெரிய புல்வெளி.

அவர்கள் இருவருமே நடுத்தர வயதினர். அசௌகரியமான பயணத்தின் விளைவுகளை இருவர் உடல்மொழியிலும் பார்க்க முடிந்தது.

அவர்களில் ஒருவர் கையில் ஒரு பார்சல் இருந்தது. இருவரும் அந்தப் புல்வெளியில் போட்டிருந்த பெஞ்சில் அமர்ந்திருந்தனர். ஒருவரையொருவர் பார்த்தபடி அமைதியாக இருந்தனர். நிமிடங்கள் மெல்ல ஓடிக் கொண்டிருந்தன.

திடீரென அவர்கள் எதிரில் பிரசன்னமான சோல்ஜர் மிகவும் பளீரென இருந்தான். கால் பூட்ஸிலிருந்து தோள்பட்டை வரை மதிய வெயிலில் மின்னியது. “வார்டன் அழைக்கிறார் வாருங்கள்”

அவர்கள் மெதுவாக அவன் பின்னால் சென்றார்கள்.

“கோவிந்தர், பெர்மிஷன் ரிக்கிசிஷன் ஜெராக்ஸ் காப்பி கொண்டு வந்திருக்கீங்களா?”

அந்த சோல்ஜர் வெட்டென திரும்பி “டாக் இன் இங்க்லீஷ் ப்ளீஸ்” என்றான்.

“ஓ சதித்திட்டம் ஒன்றும் இல்லை… அவர் அனுமதி விண்ணப்பத்தாளின் ஜெராக்ஸைக் கொண்டு வந்திருக்கிறாரா எனக் கேட்டேன்” என்றார் கோவிந்தர் என அழைக்கப்பட்ட மனிதர் ஆங்கிலத்தில்.

அவன் அதைக் கேட்டது போலவே காட்டிக் கொள்ளாமல் அந்த பெரிய கதவுகளின் அருகில் சென்றான். மேலே ஒரு இயந்திரம் செந்நிறக் கண்ணைச் சிமிட்டியது; கதவு திறந்தது. அந்த மதிய வேளையிலும் உள்ளே அடர்ந்திருந்த இருளுடன் மஞ்சள் மின்விளக்குகள் போராடிக் கொண்டிருந்தன.

“இங்கே உட்காருங்கள்” என மர பெஞ்ச் ஒன்றைக் காட்டினான் சோல்ஜர். சற்று தூரத்தில் பார்வையாளர்களுக்கான குஷன் இருக்கையில் ஏதோ அதிகாரியின் குடும்பப் பெண்கள் இருவர் இருந்து தங்களுக்குள் பேசிச் சிரித்துக் கொண்டிருந்தனர்.

சிறிது நேரம் கரைந்த பிறகு, மற்றொரு இளம் அதிகாரி வந்தான், விண்ணப்பத்தாளை அவர் அவனிடம் கொடுத்தார்.

“கைதி எண் 46664?”

“ஆம்”

அவன் அவர்களை வெறுப்பு கலந்த எரிச்சலுடன் பார்த்தபடி விண்ணப்பத்தாள் பிரதியை அலட்சியமாக உதறிக் கொண்டே உள்ளே சென்றான்.

சென்ற வேகத்தில் வந்து, “உங்கள் இருவரையும் வார்டன் வரச் சொன்னார்” என்றான்.

வார்டன் குண்டாக இருந்தார். அகலமான கண்கள். கொஞ்சம் முன்வழுக்கை. வார்டனின் அறை சிவப்பு செங்கற் வடிவ சுவரமைப்புடன் இருந்தது. ஏசியும் மெல்லிய ஸ்காட்ச் மணமும் அறையில் மிதந்தன. சுவரில் போட்டோக்களாக உறைந்த வெள்ளைக்கார பிரபுக்களின் விறைப்பான பார்வைகளுடன் ஒரு காண்டாமிருகத்தின் பதப்படுத்தப்பட்ட தலையும் உள்ளே நுழைந்தவர்களைப் பார்த்தபடியே இருந்தன.

“முக்கியமான தலைவர்களைக் காக்க வைத்ததற்கு மன்னிக்க வேண்டும்…” மன்னிப்பின் சிறுதுளியும் தெரியாத குரலில் சொன்னார் வார்டன். எழுந்திருக்காமல் எதிரே இருந்த இருக்கைகளுக்குக் கை காட்டினார். அருகில் அந்த இளம் அதிகாரி அவர்களைப் பார்த்தபடி நின்று கொண்டிருந்தான்.

”இதோ கைதியை வரச் சொல்கிறேன்… பத்து நிமிடங்கள் நீங்கள் பேசலாம்.”

அந்த இளம் அதிகாரி உள்ளே சென்றான்.

”ஆனால் அரசியல் கூடா… ஆமாம் அதென்ன பார்சல்?”

கோவிந்தர் மெதுவான குரலில் சொன்னார், “இது எங்கள் பண்டிகைக் காலம். எனவே நாங்கள் செய்த பட்சணங்கள்…”

”ஹெஹெ “ என்று சிரிப்புக்கும் செருமலுக்கும் இடைப்பட்ட ஒரு ஒலியை எழுப்பினார் வார்டன். “இது கூலி கிறிஸ்துமஸ் சீசனா இல்லையே?”

கோவிந்தர் மிக அமைதியாகச் சொன்னார் “இல்லை தீபாவளி”

“ஹிண்டு பெஸ்டிவல்… ஹிந்துக்களின் விழாவுக்கும் கைதிக்கும் என்ன சம்பந்தம்?”

காலடி ஓசைகள் கேட்டன. அந்த அதிகாரியுடன் கைதியும் வந்திருந்தார்,

கைதியின் முகத்தின் இளமைக்கும் அவரது உடலின் அயர்ச்சிக்கும் பெரும் பொருத்தமின்மை இருந்தது. கைகளும் கால்களும் மெதுவாக நடுங்கியபடியே இருந்தன. சிறிதே கூன் விழுந்தது போல் தோள்கள் குவிந்திருக்க எதிரிலிருப்பவர்களை முகத்தை நிமிர்ந்தே பார்க்க வேண்டியிருந்தது. இளமையையும் மீறி கண்களுக்கு கீழ் மெல்லிய தோல் வட்டங்கள் இருந்தன. வந்தவர்களைப் பார்த்து, அடையாளம் கண்டு, மிக மெல்லிதாகப் புன்னகைத்த அவர் முகத்தில், கண்களில் மட்டும் ஒரு பிரகாசம்.

கோவிந்தர் அனிச்சையாக அவரிடம் சென்றார்,. “நெல்சன்…என் நெல்சன்” அதிர்ச்சியும் வருத்தமும் அவரை நிறைத்தது. குரல் மெல்லிய அழுகையின் விசும்பலாக மாறுவதை கோவிந்தர் தடுப்பது தெரிந்தது “மோசமாக இருப்பீர்கள் என எதிர்பார்த்தேன் இத்தனை மோசமாக அல்ல…”

“போதும்” என்றார் வார்டன்… “நாங்கள் நன்றாகத்தான் வைத்திருக்கிறோம். ஆப்பிரிக்க சீக்கு… நாங்கள் இல்லை என்றால் செத்திருப்பான்… காப்பாற்றியிருக்கிறோம்… நன்றி என்று ஒரு சமாசரம் உண்டு தெரியுமல்லவா… சரி சரி இந்த பட்சணங்கள்…. இவற்றை நீங்கள் இவருக்குக் கொடுக்க முடியாது… இவர் ஹிந்து அல்ல…”

நெல்சன் மெதுவாக இருமினார், அவர் தோற்றத்துக்கு அவரது குரல் கணீரெனவே இருந்தது. “அன்புள்ள வார்டன், அடக்குமுறையின் சிறையிருந்து சீதை விடுதலை பெற்றதைக் கொண்டாடும் நாள்… ராமன் வனவாசம் முடித்து விடுதலை பெற்ற சீதையுடன் அயோத்தி திரும்பியதைக் கொண்டாடும் தினம் இது… வார்டன்… இருளில் சிறைவாசம் இருக்கும் எவரும் இந்நாளை ஒளியின் நம்பிக்கை தரும் நாளாகக் கொண்டாடலாம். நீங்களும் கூட வார்டன்..” மிக மெதுவாக கோவிந்தரின் கையிலிருந்த பார்சலை வாங்கிய நெல்சன் மண்டேலா அதைப் பிரித்து அதிலிருந்து ஒரு இனிப்பை எடுத்து வார்டனிடம் கொடுத்தார்.

ஏதோ சக்தியால் ஆட்பட்டவரைப் போல வார்டன் அதைத் தன் வாயில் போட்டபோது… கோவிந்த நாயுடுவின் காதில் எங்கோ தூரத்திலிருந்து ஏதோ காலத்திலிருந்து அவரின் ஏதோ ஒரு மூதாதை கேட்ட ஒரு குரல் கேட்டது, குஜராத்தி வாசனையடிக்கும் ஆங்கிலத்தில்: ”எனக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது நாயுடோ”

 

குறிப்புகள்:

1. போயர் போரில் காந்தி இந்தியர்களை பிரிட்டிஷாருக்கு உதவ சொன்னார். அதற்காக அவர்களுக்கு சான்றிதழ்கள் கிடைக்கும் பட்சத்தில் அவை பின்னர் உரிமை போராட்டங்களுக்கு பயன்படும் என காந்தி கருதினார். ஆனால் பிரிட்டிஷ் அரசாங்கம் அதற்கு மறுத்துவிட்டது. பிளாண்டேஷன் முதலாளிகள் அனுப்பிய கூலிகளாகவே அவர்கள் கருதப்படுவார்கள் என அது சொல்லியது. அதே போல பிரிட்டிஷ் சோல்ஜர்களுக்கு ராணி அனுப்பிய பிரத்யேக சாக்லேட்களை இந்திய ஸ்ட்ரெச்சர் தூக்கியவர்களுக்கும் காந்தி கோரினார். அதுவும் ‘வெள்ளையர்களுக்கு மட்டுமே’ என மறுக்கப்பட்டது.  இவை Inside Indian Indenture‘  எனும் நூலில் உள்ளன.

2. 1860கள் முதல் கொத்தடிமைகளாக ஆயிரக்கணக்கான இந்து குடும்பங்கள் பிரிட்டிஷினரின் ஆப்பிரிக்க காலனிகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். காலனிய பிரதேசங்களில் இந்து தருமம் ஒரு அங்கீகரிக்கப்பட்ட மதமாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை (இத்தாலி போன்ற நாடுகளில் இன்றைக்கும் தொடரும் நிலை இது). எனவே தீபாவளி உள்ளிட்ட இந்து பண்டிகைகள் கொண்டாட அங்கெல்லாம் கொத்தடிமை இந்திய தொழிலாளர்களுக்கு தடை விதிக்கப் பட்டிருந்தது. இந்நிலையில் 1860களிலிருந்தே இந்து தொழிலாளர்கள் இப்பண்டிகையை கொண்டாடுவதை காலனிய-இனவாதத்துக்கு எதிரான ஒரு போராட்ட குறியீடாகவே கொண்டிருந்தனர். மேற்குறிப்பிட்ட நூலில் கொத்தடிமை தொழிலாளர்களின் போராட்டத்தில் தீபாவளியின் முக்கிய இடத்தை நூலாசிரியர்கள் குறிப்பிட்டுப் பேசுகின்றனர்.

விடுதலை வேட்கையின் சின்னமாக விளங்கிய தீபாவளி, இந்திய கொத்தடிமை தொழிலாளர்களின் தொடர்ந்த ஏறத்தாழ அரை நூற்றாண்டு போராட்டத்தினால் 1906 இல்தான் கொண்டாட அனுமதிக்கப்பட்டது. அதே ஆண்டில் தான், இனவாத சட்டமொன்றுக்கு எதிராக சத்தியாகிரகம் எனும் புதிய போராட்ட வழிமுறையை மோகன்தாஸ் கரம் சந்த் காந்தி எனும் இளம் குஜராத்தி வழக்கறிஞர் உலகுக்கு அறிமுகப்படுத்தினார்.

இது குறித்த பிரசண்டேஷன் இங்கே.

7 Replies to “இனிப்பு [சிறுகதை]”

 1. தேசப்பற்றையும் … பக்திமையையும் .. ஊட்டவல்லதாக தீபாவளித் திருநாளுக்குப் பொருத்தமாக அமைந்திருக்கிறது இக்கதை.. நமது முன்னோர்களின் தூய வாழ்வைக் காட்ட வல்ல இச்சிறுகதையை மனமகிழ்வுடன் பாராட்டுகிறோம்..

  ஆலத்தூர் மள்ளன் அவர்களின் வழமையான சிறுகதைப் பாணியிலேயே இதுவும் அமைந்தாலும் வலிமை சேர்க்கும் அவரது வார்த்தைகள் வசீகரிக்கின்றன.. தீபாவளியை விடுதலையின் நாளாக காட்டியிருக்கும் அழகு அற்புதமானது..

  ஹிந்துக்களின் அற்புதப் பண்டிகையான தீபத்திருநாளின் மகிழ்ச்சி எங்கும் பரவ ப்ரார்த்திக்கிறோம்..

 2. இனிய தீபாவளி வாழ்த்துகள்.. காலை விஜய் டிவியில் நடிகர்(!) சிவகுமார் ஈரோடு புத்தக விழாவில் பேசியதை (கூடுதலாக புகைப்படங்கள்,வீடியோக்கள் கோர்த்து) ஒளிபரப்பினர். நம் பாரத தேசத்தின் மணியான மைந்தர்கள், சுதந்திரப் போராட்டம் இதைச் சார்ந்த சொற்பொழிவு! நிஜமாகவே தங்கு தடையற்ற சொற்களின் பொழிவு.. சன்டிவி , கலைஞர் டிவி போல சினிமா, காமெடி பட்டிமன்றங்களாக(பட்டிமன்றம் தானா இவை?) இல்லாமல் நல்ல தேசிய சிந்தனை தூண்டும் பேச்சு..காலையிலேயே கேட்கவும் நல்ல உற்சாகம்… சிதம்பரம், சோனியா காந்தே ,பிரணாப் எல்லாருக்கும் அவரவர் மொழியில் மொழி மாற்றம் செய்து காண்பிக்கப் பட வேண்டிய நிகழ்ச்சி!! கூடவே இந்தக்கதையையும்!

 3. நல்ல சிறுகதை.

  அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

 4. அற்புதம் ஆலந்தூர் மல்லன்!

  சரித்திர நிகழ்வுகளை கற்பனையில் கொண்டுவந்து உணர்ச்சிகரமான முடிவுடன் சிறுகதையாக்கி இருக்கிறீர்கள். உங்கள் சிறுகதைகள் மெருகேறி வருகின்றன. முந்தைய சிறுகதைகளை விட, இந்தக் கதை வடிவிலும் செறிவிலும் நேர்த்தியாக உள்ளது. வாழ்த்துக்கள்.

  தமிழ் ஹிந்துவின் பவர் பாயிண்ட் பிரசன்டேசன் – இனிய தீபாவளி கொண்டாட்டத்திற்கு வலு சேர்ப்பதாக உள்ளது. நன்றி.

 5. @ஆலந்தூர் மன்னன்

  ஆலந்தூர் மன்னன் சரவெடி வெடித்திருக்கிறார் ,இந்த தீபாவளிக்கு மழையால் பட்டாசு வெடிக்க முடியவில்லையே என்ற மனக்குறை தங்களால் தீர்ந்தது ….தீபாவளி நல் வாழ்த்துக்கள்

 6. “சிதம்பரம், சோனியா காந்தே ,பிரணாப் எல்லாருக்கும் அவரவர் மொழியில் மொழி மாற்றம் செய்து காண்பிக்கப் பட வேண்டிய நிகழ்ச்சி!! கூடவே இந்தக்கதையையும்!”
  சிதம்பரம் எந்த மொழிக் காரர் ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *