இமயத்தின் மடியில் – 2

முந்தைய பகுதி

தொடர்ச்சி…

த்ரிநாத் கோவிலில் கிடைத்த அருமையான தரிசனத்தினாலோ அல்லது மிகக்  குளிரான புதிய சூழ்நிலையினாலோ,  நல்ல தூக்கமில்லாமல் கழிந்த அந்த இரவிற்குப் பின் மறுநாள்  தொடர்ந்த பயணம் கேதார்நாத் கோவிலுக்கு. கேதாரும் இமயத்திலிருந்தாலும் அது வேறு ஒரு மலைப் பகுதியிலிருப்பதால்,  பத்ரிநாத்திலிருந்து கிழே இறங்கி மீண்டும் மற்றொரு மலைச்சாலையில் பயணம் செய்ய வேண்டும். கேதார்நாத்திலிருக்கும் சிவன் கோவில் மிகப்பழமையானது, உருவான காலம் பற்றிய குறிப்புக்கள் எதுவும்  கண்டுபிடிக்கப் படவில்லை என்றாலும் பாரதப் போருக்குப் பின் பாண்டவர்கள் வழிபட்ட தலம் என்கிறது புராணக் கதைகள். மிகவும் சக்தி வாய்ந்த இந்தச் சன்னதியைக் கண்டுபிடித்து முதலில் ஆராதித்தவர் ஆதிசங்கரர் எனறும் இப்போது இருப்பது அவர் எழுப்பிய கோவில் என்றும் நம்பப்படுகிறது.

த்ரிநாத்திலிருந்து கிழே இறங்கி வரும் மலைப்பாதை பல இடங்களில் மண்சரிவினால் மிகமோசமாக இருந்ததினாலும் திட்டமிட்டபடியில்லாமல் பயணம் தாமதமாயிற்று. அனாயாசமாக இங்கு பஸ்களையும் வேன்களையும் ஒட்டும் சர்தார்ஜிக்கள் ரோட்களின் சின்ன சேதங்களை, அவர்களே மற்ற டிரைவர்களின் உதவியுடன்  சரி செய்து கொண்டு மேலே பயணத்தைத் தொடர்கிறார்கள். நீண்ட பயணத்திற்குப்  பின்  சீதாப்பூர் என்ற இடத்திற்குப் போகும்போது  மாலையாகிவிட்டதால்  அங்கு தங்கி மறுநாள் காலையில் தொடர்ந்த பயணத்தில் அடைந்த இடம் கெளரிகுண்ட் என்ற  மிகச் சின்ன மலைக்கிராமம். இங்கு ஒரு வெந்நீர்ச் சுனை. சுனையிலிருந்து வரும் சுடுநிரை ஒரு முகப்பு வழியாக வரும்படி வசதியாக அமைத்திருக்கிறார்கள்.குளிருக்கு இதமான அந்த குளியலுக்குபின் மலையேற்றம். கேதார் கோவில் வரை  வாகனங்கள் செல்ல சாலை கிடையாது.  இந்த  இடத்திலிருந்து 15 கீமீ மலைப்பாதையில் நடக்க வேண்டும். அல்லது குதிரையில் போக வேண்டும், அது நல்ல பாதையாகயில்லை எனபதால் நடக்க எல்லோரும் ஒரு தடி வாங்கிக் கொள்கிறார்கள். மட்டரகக் குதிரைகள். நூற்றுக்கணக்கில் இருக்கின்றன.  ஆனால் அதில் அமைக்கப்பட்டிருக்கும் சேணமும் குதிரையைப் போலவே மோசமாக இருப்பதால் முதல் முறை முயற்சிப்பவர்கள் கஷ்டப்படுவார்கள். கோவில் நிர்வாகம்  நிர்ணயித்திருக்கும் கட்டணங்கள் போர்டுக்கு மட்டுமே. கூட்டம், கால்நிலை,  உங்கள் அவசரம் உடல் எடை போன்றவைகளின் அடிப்படையில்  ரேட்டுக்கள் பேசப்படுகிறது. பேரம் பேச உங்கள் நல்ல ஹிந்தி உதவாது.  டோலிகளும் நிறைய. வசதியான சாய்வு நாற்காலிகளில் கூட இருக்கிறது. குதிரைகளின் கூடவே ஒரு கைடு வருகிறார். 12 வயதுப் பையன்கள் கூட இப்படி கைடாகயிருக்கிறார்கள். வரும்போது பேசிக்கொண்டே வருகிறார்கள். பயப்படவேண்டாம் இது நல்ல குதிரை எனபது போல ஏதேதோ. நடுவிலேயே அவர்கள் குதிரையுடனும் பேசுவதால், சொல்வது நமக்கா குதிரைக்கா என்பது புரியவில்லை. கரடுமுரடான பாதையில் அந்தக் குதிரையில் போகும் போது காணும் காட்சிகள் எவரையும் கவிஞனாக்கிவிடும். தொலைவில் பளிச்சிடும் நீல்கண்ட் சிகரம், பனிமூடிய பல சிகரங்கள், அருகில் பசுமையான மலைகளின் இடையே சிலநாட்களுக்கு முன் பெய்த மழையினால் ஆங்காங்கே தோன்றியிருக்கும் அருவிகள், மலயின் கீழே பள்ளதாக்கில் மந்தாகினி நதி  மலைக்காடுகளுக்கே உரியமணம், தீடிரென வந்து நம்மை கடந்து மிதந்துபோகும்  பனிமேகங்கள். அவ்வப்போது படபடவென வந்து பயமுறுத்தும் மழைச்சாரல்கள்  எல்லாம் நம் முதுகுவலியை மறக்கச் செய்கிறது.  டோலிகளைத் தூக்கி வரும் 4 பேரும் ராணுவ ஸ்டைலில் மிகச் சீராகப் பக்கவாட்டில் மட்டுமே அடிகள் வைத்து இம்மி பிசகாது நடை போட்டவண்ணமே முன்னோக்கி வேகமாக நடக்கிறார்கள்  நம்மால் சாதாரணமாக கூட  அப்படி நடக்கமுடியாது. செங்குத்தான பாதையாக இருப்பதாலும்  இப்படி லாகவகமாக நடப்பதால் பளு தெரியாதது மட்டுமில்லை பாதுகாப்பானதும் கூட என்கிறார்கள். அவர்கள் அப்படி மிக அருகில் வரும்போது நம் குதிரைகள் தாமகவே சற்று ஒதுங்கி நிற்கிறது. நடுவில் இரண்டு  சிறு கிராமங்களில் சற்று ஓய்வு,  நமக்கும் குதிரைக்கும். ஒரிடத்தில் குதிரைகள் சாப்பிடத் தனியாக வரிசையாகத் தொட்டிகள் கட்டப்பட்ட  ஒரு அமைப்பு. அவைகளுக்கும் சாப்பிட  டோக்கன். நம் குதிரைக்காரர் நம்மை வாங்கித்தரச் சொல்லுகிறார். ரேட்டைப் பார்த்து அதிர்ந்த நாம் இதை ஏன் முதலில் சொல்லவில்லை எனக் கேட்டதற்கு அவர் தந்த பதில்  “பயணத்தில் உடன் வருபவருக்கு நாம் சாப்பிடும்போது உணவு வாங்கித் தருவது உலக வழக்கம் தானே! “

கேதாரை அடைந்தபோது மாலை 4 மணி. ஆனால் நன்கு இருட்டிவிட்டது. குதிரைகள் அனைத்தும் ஒரிடத்தில் நிறுத்தப்படுகிறது. அங்கிருந்து ஒரு கி.மீ. நடக்க வேண்டும். பின்னர் வருவது நாம் ஆவலுடன் பார்க்கக் காத்திருந்த கேதார் கோவில்; இருட்டில் அதிக விளக்குகள் இல்லாதால் அந்தச் சின்னக் கோவிலைச் சரியாகப் பார்க்கமுடியவில்லை. இருக்கும் ஒரே மின்விளக்கின் வெளிச்சத்தில் பளீச்சென்று தெரியவில்லை.. மாலை பூஜைகள் முடிந்துவிட்டதால் கோவில் மூடப் பட்டிருந்தது. மாலை ஆரத்தி பார்க்க முடியாத வருத்தத்துடன்  மறு நாள் காலைப் பூஜைக்கான ஏற்பாடுகளை செய்கிறோம். எல்லாக் கட்டளைக் கட்டணங்களும் அதிகம். ஆனாலும் எல்லோரும் எதாவது ஒரு பூஜைக்குப் பணம் செலுத்துகிறார்கள். பகல் 12 மணிக்குக் கூடக் குளிர் தாக்கும் இந்த இடத்தில் காலை 5.30க்கு  மணிக்குப் பூஜை;  5 மணிக்கு வந்துவிடவேண்டும் என்றார்கள்.

று நாள் காலையில் அரையிருட்டில் தெளிவாகத் தெரியாத  அந்தக் கோவிலின் கதவுகள் முன் காத்திருக்கிறோம். கல்பாவிய தரையின்  ஜிலிர்ப்ப்பு உள்ளங்காலிலிருந்து  உச்சந்தலைவரை பாய்கிறது. விறைக்கும் குளிரில் நனைந்த சால்வையின் கிழ் ஸ்வெட்டருக்குள் நடுங்கும் உடல்.  கண்மூடிக் காத்திருந்தபோது மணிகளின் ஓசையையுடன்  திறக்கபட்ட அந்தக் கதவுகள் நிஜமாகவே  கைலாயத்தின் கதவுகளாகவே தெரிந்தது. உள்ளே சற்று விஸ்தாரமான ஹால்..  மூடியே இருந்ததாலோ அல்லது கட்டிட அமைப்பினாலோ சற்று வெதுப்பாக  இருக்கிறது. கர்ப்பகிரஹம் சன்னதி, மூர்த்திகள் எதுவும் இல்லை. தரையில் துண்டு துண்டாக வெவேறு வடிவத்தில்  பாறைகள். அவைகள் தான் கேதாரநாதரின் வடிவங்கள். சதுரமான அந்த இடத்தைச்  சுற்றி நான்கு புறமும் சிவப்புக் கம்பளி விரிப்புகள். ஒவ்வொரு புறத்திலும் தம்பதிகளாக வந்திருப்பவர்களை உட்கார்த்தி வைத்து  நட்சத்திரம் கேட்டு சங்கல்பம் செய்வித்துவிட்டு நீங்களே பூஜை செய்துகொள்ளுங்கள் என்கிறார்கள். நாமே அபிஷகம் செய்வித்து மலர் சார்த்தி ஆராதிக்கவேண்டும். தீபாராதனை எதுவும் கிடையாது. இதைப்போல நான்கு பக்கங்களிலும் காத்திருப்பவர்கள் வரிசையாகச் செய்கிறார்கள். நம்முறை வந்தவுடன் பூஜை செய்கிறோம்.அவரவர்களுக்கு தெரிந்த மந்திரத்தையும் சொல்லி பூஜிக்கலாம். பத்ரியைப்போலவே இங்கும் ராவல் இருக்கிறார். அவரும் தெனிந்தியாவிலிருந்து வருபவர். கர்நாடகத்திலிருந்து சிவபெருமானைத் தவிர வேறு எவரையும் வணங்காத லிங்காயாத்  இனத்தவர். நேரடியாகப் பூஜை செய்வதில்லை. அங்கு பூஜை செய்யும்  “பண்டா” க்களின் பணியை மேற்பார்வையிடுகிறார்.  அதிகம் பேசுவதில்லை. பூஜைகள் முடித்து பக்க வாயில் வழியாக வெளியே வரும் போது பொழுது புலர ஆரம்பித்திருக்கிறது. சூரிய ஓளியில் கோவிலை நன்கு பார்க்க முடிகிறது. சின்னக் கோவில்தான். சன்னதியாகக் கருதி நாம் வழிபட்ட இடத்தின் மேற்கூரை கோபுரமாகக் கட்டப்பட்டிருக்கிறது. கோவிலின் மற்ற இடங்கள் கல்லால் ஆன கட்டிடம்.  மேற்கூரை இரும்புத்தகடுகளால் மூடப்பட்டிருக்கிறது. பனி உறையும் காலங்களில் இதுதான் பாதுகாப்பானதாம். முகப்பில் படிகள் ஏறி நுழையுமிடத்தில் இரும்பு கம்பிகளாலான ஒரு வரவேற்பு வாயிற்தோரணம் அதில் ஒரு பெரிய மணி. பூஜை துவங்குபோது மட்டுமே அடிக்கப்படும், சற்றுத் தள்ளி நந்தி. சிறியது ஆனால் அழகாக வடிக்கப்பட்டிருக்கிறது சிலையில் தமிழ் நாட்டுச் சாயல்.  கோவிலின் வெளிப்புறத்தில்  திறந்த வெளியாக ஒரு சின்னப் பிரஹாரம். அதன் பக்கச் சுவர்களில் திருஞானசம்பந்தர் உருவத்துடன் இந்த ஸ்தலத்தை பற்றி அவர் அருளிய பாடல்கள்  கருங்கல்லில்   தமிழில் பொறிக்கப் பட்டிருக்கின்றன. இத்தனை  உயரத்தில், சிறப்புமிக்க இடத்தில் தமிழ் எழுத்துக்களை அதுவும் சம்பந்தர் பாடல்களை பார்த்தில் மகிழ்ச்சியாக இருக்கிறது. இதை பதிப்பிக்க ஏற்பாடு செய்த புண்ணியவான்கள் காசி திருப்பனந்தாள் மடத்தினர்.  அதே பிரஹாரத்தின் இறுதியில் ஒரு  மலைப்பாதை பின்னணியில் பெரிய செங்கல் சுவர். அதில்  மணிக்கட்டிலிருந்து தெரியும் ஒரு வலது கையின் பிடியிலிருக்கும் ஒரு சன்யாஸியின் தண்டம் சிற்பமாக வடிக்கப்பட்டிருக்கிறது.  ஆதிசங்கரர் தனது இறுதி நாளில் இங்கு தவமிருந்து பின் தன் தண்டத்தைக் களைந்து விட்டு இறைவனுடன் கலந்துவிட்டதாக வரலாறு. அதை குறிக்க இந்தச் சின்னம் எழுப்பப்பட்டிருக்கிறது.

ந்தச் சின்னக் கேதார் கிராமத்தில் அனைவரின் வாழக்கையும் கோவிலுடன் ஏதாவது ஒருவகையில் சம்பந்தப்பட்டிருக்கிறது. வாழும் குடுமபத்தினர் வரும் டூரிஸ்ட்டுகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வியாபாரங்களைச் செய்கின்றனர். அன்போடு பேசும் இவர்கள்  உணவு வகைகளை வியாபாரத்திற்காகச் செய்தாலும்  நாம் கேட்கும் வகையில்  சந்தோஷமாகச் செய்து தருகிறார்கள். தண்ணீரைத்  தவிர எல்லாமே நாம் வந்த கரடுமுரடான பாதையில் தலைச்சுமையாகத் தான்  வந்திருக்கிறது என்பதை நினைத்த கணத்தில் விலையைப் பற்றிய எண்ணம் மறைந்துபோகிறது.

லகின் பல இடங்களில் பனிமலைகள் அழகான விடுமுறைத் தலங்களாகவும் சுகவாச ஒய்வுத் தலங்களாகவும் இருக்கின்றன.  இயற்கையின் அழகிலேயே ஆண்டவனைக் காணும்  நம் நாட்டில் மட்டும்தான் அந்த அழகானப்  பனி  மலைகள், வாழ்வில் ஒருமுறையாவது போக வேண்டும் என பல இந்துக்கள் விரும்பும் புனிதமான வழிபாட்டுத் தலங்களாக இருக்கிறது.

 

 -o0o-

(முற்றும்)

3 Replies to “இமயத்தின் மடியில் – 2”

  1. திரு ரமணன் அவர்களுக்கு

    மிக்க நன்றி. இரண்டு ஆண்டுகளுக்கு முன் நான் தவற விட்ட அந்த நல்ல பயணத்தை இன்று செய்ததைபோல உணர்ந்தேன். கேதார்நாதத் பார்க்காதாவ்ர்களுக்கு அதன் தரிசனமும் பார்த்தவர்களுக்கு அந்த இனிய நினைவுகளை மீண்டும் எழுப்பும் அருமையான் கட்டுரை .இது போல மற்ற இடங்கள் பற்றியும் எழுதுங்கள்.
    ஜெயேந்திரன்

  2. நான் இந்தியவம்சாவளி இந்து என்பதில் பெருமை கொள்கிறேன்.இந்த கட்டுரையை படிக்கும் போதே கேதாரின் குளிர்ச்சியும்,அங்கே கிடைக்கும் ஆன்மீக அமைதியும் மனதினுள்ளே எழுகின்றன..கண்டிப்பாக என் வாழ்வில் ஒருமுறையேனும் வட-இந்திய திருதலங்கலக்கு சென்று அதன் ஆன்மிகஅழகை ரசிக்க விரும்புகிறேன் ..

    நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *