[பாகம் -22] இந்து அரசுக்குக் கீழ்படியும் தன்மை முஸ்லீம்களிடம் அறவே இல்லை – அம்பேத்கர்

“புரட்சியாளர் அம்பேத்கர் புத்த மதம் மாறியது ஏன்?” தொடரின் 22-ஆம் பாகம்

[முந்தைய பாகங்களின் சுருக்கம் – இந்தப் பக்கத்தின் கடைசியில்..]

 

இந்தியப் பாதுகாப்பில் மிகுந்த கவனம் செலுத்தியவர் அம்பேத்கர். ‘இந்திய ராணுவம்’ (Army in India) என்ற நூலை எழுதிட அம்பேத்கர் ஏற்கனவே திட்டமிட்டிருந்தார். அதுபற்றி பரோடாவைச் சேர்ந்த ஜி.எம்.ஜாதவிடம் (G.M.Jadhav) மிகுந்த ஆர்வமுடன் கலந்து பேசினார். ஜாதவிடம் இராணுவ விஞ்ஞானம், இந்தியாவின் இராணுவச் சிக்கல் பற்றிப் பல நூல்கள் இருந்தன. இராணுவ விஞ்ஞானத்தைக் கற்க விரும்புகின்ற மாணவர்களுக்காக, புதிய வகுப்பு ஒன்றைத் தொடங்க அம்பேத்கர் விழைந்தார். ஜாதவ் அவ்வகுப்பில் ராணுவ விஞ்ஞானத்தைக் கற்பிக்க வேண்டும் என்று அம்பேத்கர் விரும்பினார். இராணுவ விஞ்ஞான வகுப்பு நடத்த வேண்டும் என்பதில் அம்பேத்கர் மிகுந்த ஆர்வமும் ஈடுபாடும் கொண்டிருந்தார்.

அதனால் அச்சமயத்தில் அவர் சித்ரேவுக்கு (Chitre) எழுதிய கடிதத்தில்,

‘‘இராணுவ விஞ்ஞானத்தைக் கற்பிப்பதைக் கல்லூரி தன்னுடைய ஒரு சிறப்புத் துறையாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். அவ்வாறு செய்வது இந்திய நாட்டிற்கு ஆற்றும் அரிய தொண்டாகும். அத்துடன் தீண்டப்படாத வகுப்பு மக்களுக்கும் தொண்டு செய்வதாக அமையும்’’

என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால் அம்பேத்கரின் இந்த எண்ணம் ஈடேறவில்லை. இருப்பினும் அம்பேத்கரின் சித்தார்த்தா கல்லூரி ஜதாவிடமிருந்து சில நூல்களை வாங்கியது. இந்தியப் பாதுகாப்பு சம்பந்தமான விஷயங்களில் எப்போதுமே அம்பேத்கர் மிக்க கவனம் கொடுத்தார்.

இஸ்லாமிய வல்லரசு நாடு உருவானால் இந்தியாவுக்கு ஆபத்து என்ற எண்ணம் அம்பேத்கருக்கு இருந்தது.

1954, ஏப்ரல் இறுதி வாக்கில் நாக்பூர் மவுண்ட் ஹோட்டலில், தனது அழைப்பை ஏற்று வந்தவர்கள் மத்தியில் அம்பேத்கர் பேசுகையில்.

‘‘ஆட்சிப் பொறுப்பிலிருக்கும் கட்சியை அங்குசம் போல் கட்டுப்படுத்த வலுவான எதிர்க்கட்சி தேவை. இரண்டாம் உலகப் போருக்கு முன்னர் ஜெர்மனி நாலா பக்கங்களிலும் முற்றுகையிடப்பட்டிருந்தது. நமது நாட்டின் நிலைமையும் அவ்வாறே உள்ளது. விரைவிலேயே எல்லா முஸ்லீம் நாடுகளும் சேர்ந்து, ஐக்கிய இஸ்லாமிய வல்லரசு நாடு உருவாகப் போகிறது. அச்சமயம் நமக்கு நண்பரென்று ஒருநாடுகூட இல்லை. ஆகவே நம் நாட்டை ஆயுத வலிமையுடையதாக ஆக்குவதைத் தவிர வேறு வழியில்லை. நமக்குக் குடியரசாட்சி நன்மை தரக்கூடியதா அல்லது பொதுவுடைமைக் கொள்கை நன்மை தருமா என்பதை உடனடியாக முடிவு செய்து அறிய வேண்டும். பிறகு நாம் அக்கொள்கை சார்ந்த நாடுகளுடன் நட்புகொள்ள வேண்டும்’’

என்ற கருத்தை வெளியிட்டார்.

இதைப் பார்க்கும்போது அம்பேத்கர் எவ்வளவு தேசிய உணர்வுடன் தீர்க்கதரிசனமாக யோசிக்கிறார் என்பதை நாம் அறிந்துகொள்ளலாம்.

அதுமட்டுமல்ல, முஸ்லீம்கள் இந்த நாட்டின் அதிகாரத்திற்குக் கீழ்ப்படியும் தன்மை இல்லாதவர்கள் என்றும் கூறுகிறார் அம்பேத்கர்.

‘‘அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மைக்கு நாட்டின் அடிப்படைப் பிரச்சினைகளில் அரசியல் கட்சிகளின் ஒற்றுமை எவ்வளவு இன்றியமையாததோ அவ்வளவு இன்றியமையாதது அரசாங்கத்தின் அதிகாரத்துக்குக் கீழ்ப்படியும் உணர்வாகும். அரசைப் பராமரிப்பதில் கீழ்ப்படிதலுக்குள்ள முக்கியத்துவம் குறித்து எந்த விவேகமுள்ள மனிதனும் ஐயப்பாடு எழுப்ப முடியாது. எனவே, சட்டமறுப்பில் நம்பிக்கை வைப்பது அராஜகத்தில் நம்பிக்கை வைப்பதற்கு ஒப்பாகும்.

சரி, இந்துக்களால் இந்துக்களைக் கொண்டு நடத்தப்படும் ஓர் அரசாங்கத்தின் அதிகாரத்துக்கு முஸ்லீம்கள் எந்த அளவுக்குக் கீழ்ப்படிவார்கள்? இந்தக் கேள்விக்குப் பதிலளிப்பதற்குப் பெரிய ஆராய்ச்சி எல்லாம் தேவை இல்லை. ஒரு முஸ்லீமுக்கு ஓர் இந்து ‘காஃபீர்’ ஆவான். ஒரு காஃபீர் நன்மதிப்புக்கு உரியவனல்ல. இதனால்தான் காஃபிரால் ஆளப்படும் ஒரு நாடு முசல்மானுக்கு தார்-உல்-ஹார்பாகக் காட்சி தருகிறது. இவற்றை எல்லாம் கொண்டு பார்க்கும்போது, ஓர் இந்து அரசாங்கத்துக்கு முஸ்லீம்கள் கீழ்ப்படியமாட்டார்கள் என்பதை மெய்ப்பிப்பதற்கு வேறு சான்றுகள் ஏதும் தேவையில்லை என்று தோன்றுகிறது. இந்து அரசாங்கத்துடனான அதிகாரத்துக்குக் கீழ்ப்படியச் செய்யும் பணிவிணக்க உணர்வும் ஒத்துணர்வும் முஸ்லீம்களிடையே அறவே இல்லை. இதற்குச் சான்றுகள் உள்ளனவா என்று கேட்டால் கணக்கற்ற சான்றுகள் இருக்கின்றன. ஆனால் இவற்றில் எவற்றைக் கூறுவது, எவற்றை ஒதுக்குவது என்பதுதான் பிரச்சினை; அந்த அளவுக்கு மலைமலையாகச் சான்றுகள் உள்ளன.

கிலாபத் இயக்கம் மிக மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த நேரம். இந்துக்கள் தாங்களே முன்வந்து முசல்மான்களுக்கு எத்தனை எத்தனையோ உதவிகளைச் செய்து கொண்டிருந்தனர். இத்தகைய மிக நெருக்கடியான வேளையிலும் தங்களுடன் ஒப்பிடும்போது இந்துக்கள் மிகவும் கீழ்ப்பட்ட, தாழ்ந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை முஸ்லீம்கள் ஒரு கணமும் மறக்கவில்லை. இன்சாஃப் என்னும் கிலாபத் இதழில் ஒரு முசல்மான் பின்வருமாறு எழுதினார்:

“சுவாமி, மகாத்மா என்பதன் பொருள் என்ன? முஸ்லீமல்லாதவர்களைக் குறிப்பதற்கு முஸ்லீம்கள் தங்கள் பேச்சிலும் எழுத்திலும் இவற்றைப் பயன்படுத்த முடியுமா? சுவாமி என்பது ‘குரு’வையும், ‘மகாத்மா’ என்பது மிக உயர்ந்த ஆன்மிக சக்திகள் படைத்தவர்’ என்பதையும் குறிக்கிறது. இது ‘ரு-இ-ஆஜ’ முக்கும், மிக உயர்ந்த புனித ஆவிக்கும் இணையானது என்று அவர் கூறுகிறார்.’’

முஸ்லீமல்லாதவர்களை முஸ்லீம்கள் இவ்வாறு பணிவணக்கத்துடனும், பயபக்தியுடனும் அழைப்பது இஸ்லாமிய சட்டத்துக்கு இசைந்ததுதானா என்பதை முஸ்லீம் சமய அறிஞர்கள் ஒரு ஃபத்வா மூலம் முடிவு செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

1924இல் திரு.காந்தி சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டதைக் கொண்டாடுவதற்கு டில்லியில் ஹக்கீம் அஜ்மல் கானால் நடத்தப்படும் திப்பியா யூனானி மருத்துவக் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில் குறிப்பிடத்தக்கதொரு சம்பவம் நடைபெற்றது. இவ்விழாவில் ஓர் இந்து மாணவர் பங்கெடுத்துக் கொண்டு பேசும்போது திரு.காந்தியை ஹஜரத் ஈசாவுடன் (ஏசு கிறிஸ்து) ஒப்பிட்டுவிட்டார். அவ்வளவுதான், தங்களது மத நம்பிக்கையின் புனிதத் தன்மையை இது அவமதித்துவிட்டதாக முசல்மான்கள் எடுத்துக்கொண்டனர். உடனே அங்கிருந்த எல்லா முகமதிய மாணவர்களும் சீறியெழுந்து அந்த இந்து மாணவரை நையப் புடைக்க முயன்றனர். தங்களது உணர்வுகள் புண்படுத்தப்பட்டதற்கு எதிரான இந்த அமளிதுமளியில் தங்களுடைய சக-சமயத்தினருடன் முசல்மான் பேராசிரியர்களும் சேர்ந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

1923இல் இந்திய தேசிய காங்கிரசின் மாநாட்டுக் கூட்டத்திற்கு திரு.முகம்மது அலி தலைமை தாங்கினார். அப்போது அவர் தமது உரையில் திரு.காந்தியைக் குறிப்பிட்டுப் பின்வருமாறு பேசினார்:

“மகாத்மாவின் போதனைகளையும் அவர் பட்ட துன்ப துயரங்களையும் ஏசுவின் போதனைகளுடனும் அவரது துயரங்களுடனும் ஒப்பிட்டுப் பலர் பேசினர். ஏசு கிறிஸ்து தமது மடாலயத்துக்கு வெளியே ஆரம்பத்தில் உலகைக் கூர்ந்து ஆராய்ந்தபோது, இவ்வுலகைச் சீர்த்திருத்துவதற்கான ஆயுதத்தைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டிய நிலைக்கு ஆளானார். மற்றவர்கள் பொருட்டு துன்புறுவது, சகிப்புத் தன்மை காட்டுவது ஆகியவற்றின் மூலம் சர்வவல்லமை மிக்கவராவது, தூய்மையான உள்ளத்தின் மூலம் வன்முறையின் மீது வெற்றிக்கொடி நாட்டுவது எனும் சித்தாந்தங்கள் எல்லாம் மனிதனின் முதல் வழித்தோன்றல்களான அபல், கெய்ன் போன்றோரது காலத்தவை போன்று பழமையானவை.

எது எப்படியாயிருப்பினும், இது மகாத்மா காந்திக்கும் உரிய தனிச் சிறப்பாகும். ஆனால் ஒரு கிறித்துவ அரசாங்கம்தான் நம் காலத்து ஏசு கிறிஸ்து போன்ற ஒரு மனிதரை பெரும் குற்றமிழைத்தவராக இழிவாக நடத்துகிறது. (வெட்கம், வெட்கம்) அமைதியின் தூதரை ஏறத்தாழ ஒத்தவராக பொதுவிவகாரங்களில் ஈடுபட்டு வரும் ஒரு மனிதரை பொது அமைதிக்குப் பங்கம் விளைவித்தவராகக் குற்றம் சாட்டித் தண்டிக்கிறது. ஏசு வருவதற்கு முன்னர் யூதேயாவின் நிலைமை எவ்வாறு இருந்ததோ அவ்வாறேதான் மகாத்மா வருவதற்கு முன்னர் இந்தியாவின் அரசியல் நிலைமைகளும் இருந்தன. இதுபோன்றே, யூதேயா மக்களுக்கு ஏசு கிறிஸ்து வழிகாட்டிய முறையிலேயே மகாத்மா காந்தியும் இந்தியாவைப் பீடித்துள்ள நோய்களுக்குப் பரிகாரம் கூறினார். துன்புறுத்துவதன்மூலம் ஆத்மசுத்தி, அரசாங்கத்துக்குள்ள பொறுப்புகள் குறித்த ஒரு தார்மீகத் திட்டம், சுயராஜ்யத்துக்கு முன் நிபந்தனையான சுயக் கட்டுப்பாடு இவையே மகாத்மாவின் கோட்பாடாகவும் பற்றுறுதியாகவும் இருந்தன. ஆமதாபாத்தில் காங்கிரஸ் மகாசபை நடைபெற்று முடிந்த புகழ்மிக்க ஆண்டில் வாழும் பெரும்பேறு பெற்றவர்கள் மனித குலத்தின் ஒரு மாபெரும் பகுதியினரின் எண்ணங்களிலும், உணர்வுகளிலும், செயல்பாடுகளிலும் அவர் எத்தகைய துரிதமான, பிரமிக்கத்தக்க மாற்றங்களைக் கொண்டுவந்திருக்கிறார் என்பதைக் கண்டிருக்கக்கூடும்.”

இதற்கு ஓராண்டிற்குப் பிறகு அலிகாரிலும் ஆஜ்மீரிலும் பேசும்போது திரு.முகம்மது அலி பின்கண்டவாறு கூறினார்:

“திரு.காந்தியின் குணப்பண்பு எவ்வளவுதான் தூய்மையானதாக இருந்தாலும் சமயக் கண்ணோட்டத்திலிருந்து பார்க்கும்போது, பண்பே இல்லாத எந்த ஒரு முசல்மானைவிடவும் கீழானவராகவே எனக்குத் தோன்றுகிறார்.”

அவரது இந்தப் பேச்சு மிகுந்த கொந்தளிப்பையும் கோபாவேசத்தையும் கிளர்த்திவிட்டது. திரு.காந்தியிடம் ஆழ்ந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருந்த திரு.முகமது அலியா அவரைப் பற்றி இத்தகைய பெருந்தன்மையற்ற, குறுகிய நோக்குடைய, ஆணவமிக்க கருத்துக்களை வெளியிடுகிறார் என்பதை பலரால் நம்பவே முடியவில்லை. லக்னோவில் அமினாபாத் பூங்காவில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் திரு.முகமது அலி உரையாற்றிக் கொண்டிருந்தபோது, திரு.காந்தியைப் பற்றி இவ்வாறெல்லாம் அவதூறாகப் பேசியது உண்மையா என்று அவரிடம் கேட்கப்பட்டது. அப்போது திரு.முகமது அலி எத்தகைய தயக்கமுமின்றி, மனச்சாட்சி உறுத்தலுமின்றி, பின்கண்டவாறு பதிலளித்தார்:

“ஆம், என்னுடைய மதத்தின்படி, என்னுடைய சித்தாந்தத்தின்படி, ஓர் ஒழுக்கங்கெட்ட, இழிவடைந்த முசல்மானை திரு.காந்தியைவிட மேம்பட்டவனாகவே கருதுகிறேன்’’

ஒரு காஃபிரான திரு.காந்தியை ஏசு கிறிஸ்துவின் அளவுக்கு உயர்த்தி வானளாவ திரு.முகமது அலி புகழ்ந்து பேசியதை பழமை விரும்பிகளான முஸ்லீம் சமுதாயம் முழுவதும் ஒரு பெரும் குற்றமாக எடுத்துக்கொண்டு பலத்த கூக்குரல் எழும்பியதாலே அவர் தாம் பேசியதையே விழுங்கி ஏப்பமிட்டு, வேறுவிதமாகப் பேச வேண்டியதாயிற்று என்று கூறப்படுகிறது. ஒரு காஃபிரை இவ்வாறு ஏற்றிப் போற்றிப் பேசுவது முஸ்லீம் சட்டத்தால் தடை செய்யப்பட்டுள்ளது என்று முஸ்லீம் சமூகம் வாதிட்டது.

1928ஆம் ஆண்டில் இந்து-முஸ்லீம் உறவுகள் பற்றி வெளியிடப்பட்ட ஒரு கொள்கை அறிக்கையில் குவாஜா ஹாசன் நிஜாமி பின்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்:

“முசல்மான்கள் இந்துக்களிடமிருந்து முற்றிலும் வேறுபட்டவர்கள். அவர்கள் இந்துக்களுடன் ஒன்றுபடவே முடியாது. குரூரமான போர்களுக்குப் பிறகு முசல்மான்கள் இந்தியாவை வென்றனர். ஆங்கிலேயர்கள் அவர்களிடமிருந்து இந்தியாவைக் கைப்பற்றிக்கொண்டனர். முசல்மான்கள் எவ்வகையிலும் பிரிக்க முடியாத ஓர் ஒன்றுபட்ட தேசம். அவர்கள்தான் இந்தியாவின் எசமானர்களாக இருக்க முடியும். அவர்கள் ஒருபோதும் தங்கள் தனித்தன்மையை விட்டுக்கொடுக்க முடியாது. அவர்கள் நூற்றுக்கணக்கான ஆண்டுகள் இந்தியாவை ஆண்டு வந்தவர்கள். எனவே, இந்த நாட்டின் மீது அவர்களுக்கு நியாயப்படியான, விதிமுறைப்படியான உரிமை இருக்கிறது. இந்துக்கள் இந்த உலகில் ஒரு சிறுபான்மை சமூகத்தினர். ஒருவரை ஒருவர் அழித்துக்கொள்ளும் உட்பகை சண்டை சச்சரவுகளிலிருந்து அவர்கள் ஒருபோதும் விடுபடுவதில்லை. அவர்கள் காந்தியிடம் நம்பிக்கை வைத்திருக்கின்றனர். பசுவை வணங்கி வழிபடுகின்றனர். அவர்கள் மற்றவர்களின் தண்ணீரைப் பயன்படுத்தி மாசுபடுகின்றனர். தன்னாட்சி பற்றி இந்துக்கள் கவலைப்படுவதில்லை. அதில் கவனம் செலுத்த அவர்களுக்கு நேரமில்லை. அவர்கள் சிண்டுபிடித்துக் கொண்டு தங்கள் சொந்தப் பூசல்களில் மூழ்கிக் கிடக்கட்டும். மற்றவர்கள் மீது ஆட்சி செய்ய அவர்களுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது? ஆற்றல் இருக்கிறது? முசல்மான்கள் ஒரு சமயம் ஆட்சி புரிந்தவர்கள், இனியும் ஆட்சி செய்வார்கள்.”

இந்துக்களுடன் இணங்கிப் போவதற்குப் பதிலாக அவர்களுடன் மீண்டும் பலப்பரீட்சையில் ஈடுபடவே முஸ்லீம்கள் தயாராகி வருவதுபோல் தோன்றுகிறது.

1926ஆம் ஆண்டில் ஒரு சர்ச்சை எழுந்தது. 1761இல் நடைபெற்ற மூன்றாவது பானிபட் போரில் உண்மையில் யார் வெற்றி பெற்றார்கள் என்பதே அந்தச் சர்ச்சை.

இந்தப் போரில் தங்களுக்குத்தான் மகத்தான வெற்றி என்று முஸ்லீம்கள் உரிமை கொண்டனர். 4 லட்சம் முதல் 6 லட்சம் பேர் கொண்ட மராட்டியப் படைகளை 1 லட்சம் பேரே கொண்ட அகமது ஷா அப்தலியின் படைகள் வெற்றி கொண்டது மாபெரும் வெற்றியில்லையா என்று அவர்கள் வாதிட்டனர். இந்துக்களோ இதில் தங்களுக்குத்தான் வெற்றி; தோல்வியடைந்தவரின் வெற்றி; ஏனென்றால் முஸ்லீம் படையெடுப்புகளின் அலையை இது தடுத்து நிறுத்தியது என்று எதிர்வாதம் செய்தனர்.

இந்துக்களிடம் தோல்விடையந்ததை ஒப்புக்கொள்ள முஸ்லீம்கள் எவ்வகையிலும் தயாராக இல்லை. இந்துக்களைவிட தாங்கள் வலுமிக்கவர்கள் என்பதை எப்போது வேண்டுமானாலும் நிரூபிக்கத் தாங்கள் தயார் என்றும் சவால் விட்டனர்.

இந்துக்களை விட முஸ்லீம்கள் எப்போதுமே மிகவும் வலுவானவர்கள் என்பதை நிரூபிப்பதற்கு நஜிபாபாத்தைச் சேர்ந்த மௌலானா அக்பர் ஷா கான் என்பவர் ஒரு விந்தையான யோசனையை வெளியிட்டார். வரலாற்றுச் சிறப்புமிக்க இதே பானிபட் சமவெளியில் இந்துக்களும் முஸ்லீம்களும் நான்காவது போர் ஒன்றைப் பரீட்சார்த்தமாக நடத்திப் பார்த்துவிடலாம் என்று தெரிவித்தார். அத்துடன் நில்லாமல் பண்டிட் மதன்மோகன் மாளவியாவுக்குப் பின்கண்ட அறைகூவலையும் விடுத்தார்:

“மாளவியாஜி, பானிபட் போரின் முடிவை தவறாகத் திரித்துக் கூற நீங்கள் முயற்சி செய்துவந்தால், இதனைப் பரிசோதிப்பதற்கு ஓர் எளிதான, சிறந்த வழியை உங்களுக்குக் காட்டுகிறேன். அதிகாரிகளின் இடையூறு ஏதுமின்றி நான்காவது பானிபட் போர் நடைபெறுவதற்கு உங்கள் செல்வாக்கைப் பயன்படுத்திப் பிரிட்டிஷ் அரசாங்கத்திடமிருந்து அனுமதி பெற்றுத் தாருங்கள். அப்போது இந்துக்கள், முஸ்லீம்கள் ஆகிய இரு சமூகத்தினரது வீர தீரத்தையும், பேராண்மையையும், போரிடும் வல்லமையையும் சோதித்துப் பார்த்து விடுவோம். இதற்கு ஏற்பாடு செய்ய நான் தயாராக இருக்கிறேன்…. இந்தியாவில் 7 கோடி முசல்மான்கள் இருக்கிறார்கள். எனவே அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 700 முசல்மான்களுடன் குறிப்பிட்ட தேதியில் பானிபட் வந்து சேருகிறேன்.

இந்தியாவில் 22 கோடி இந்துக்கள் இருப்பதால் 2200 இந்துக்களுடன் நீங்கள் பானிபட் வந்த சேர அனுமதிக்கிறேன். இந்தப் போரில் பீரங்கிகளையோ எந்திரத் துப்பாக்கிகளையோ அல்லது வெடிகுண்டுகளையோ பயன்படுத்துவது முறையாக இருக்காது. வாட்கள், ஈட்டிகள், வேல்கம்புகள், வில், அம்புகள், பட்டாக்கத்திகள், குத்துவாள்கள் போன்றவற்றை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இந்துப் படைகளின் தளபதிப் பொறுப்பை நீங்கள் ஏற்க இயலவில்லை என்றால் அந்தப் பொறுப்பை சதாசிவராவ் அல்லது விஷ்வாஸ்ராவ் ஆகியோரது வழித்தோன்றல்களில் எவருக்கேனும் அளிக்கலாம்.

1761இல் தங்களுடைய முன்னோர்கள் அடைந்த தோல்விக்குப் பழி தீர்த்துக்கொள்ள இதன்மூலம் அவர்களுடைய சந்ததியினருக்கு வாய்ப்பு கிட்டும். எப்படியாயினும் ஒரு பார்வையாளராகவாவது பானிபட்டுக்கு வந்து சேருங்கள். அங்கு நடைபெறும் போரின் முடிவை நேரில் பார்த்த பிறகு நீங்களே உங்கள் கருத்துக்களை மாற்றிக் கொள்வீர்கள்.

பின்னர் நாட்டில் தற்போது நடைபெற்றுவரும் சர்ச்சைக்கு இதன்மூலம் ஒரு முடிவு ஏற்படும். இறுதியாக ஒன்றைச்சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நான் அழைத்துவரும் 700 பேரில் நீங்கள் அஞ்சி நடுநடுங்கும் பட்டாணியர்களோ அல்லது ஆப்கன்களோ எவரும் இருக்க மாட்டார்கள். ஷரியத்தைப் பற்றுறுதியுடன் பின்பற்றும் சிறந்த குடும்பங்களைச் சேர்ந்த இந்திய முசல்மான்களை மட்டுமே அழைத்து வருவேன்.”

முஸ்லீம்களின் இந்த எண்ணம் எப்போதுமே மாறாதது. முஸ்லீம்களிடம் தேசிய உணர்வு இல்லாதது போலவே எல்லோரையும் போல அரசாங்கத்திற்கு கீழ்ப்படிதல் என்ற உணர்வுகூட இருக்காது என்பது அம்பேத்கரின் ஆய்வு முடிவு.

தாழ்த்தப்பட்டவர்களது மதமாற்றத்தின் மூலம் தேசத்திற்கு கேடுகள் சூழ்ந்துவிடக் கூடாது என்பதால் (பல காரணங்களில் இதுவும் ஒன்று) அம்பேத்கர் இஸ்லாமைத் தேர்ந்தெடுக்கவில்லை.

(தொடரும்…)

 

முந்தைய பாகங்களின் சுருக்கம்:

இந்துமதத்தை சீர்திருத்த அம்பேத்கர் முயன்றார் என்பதையும், அதில் வெற்றிபெற முடியாது என்று சொல்லி மதமாற்றத்தைத் தீர்வாகச் சொன்னதையும் பாகம் 2 மற்றும் 3ல் பார்த்தோம். அந்த அறிவிப்பு மற்றும் அறிவிப்பு நடந்த மாநாடு பற்றி பாகம் 1 அறிமுகம் செய்தது. ஆனால், மதமாற்றம் தீர்வல்ல என்று அந்த அறிவிப்பை மற்ற தலித் தலைவர்கள் நிராகரித்தனர் (பாகம் 4ல்). பாகம் 5ல் உலகியல் அடிப்படையிலான பயன்களுக்காக மதமாற்றத்தின் அவசியம் பற்றியும் பாகம் 6ல் அதன் ஆன்மிகப் பயன் பற்றியும் பார்த்தோம்.

இனி, தீண்டத்தகாதவர்களுக்குளான உள்ஜாதீயப் பாகுபாடுகள், அதன் அரசியல் காரணங்கள், அதன் தீர்வான மதமாற்றத்தின் அவசியத்தை பாகம் 7ல் பார்த்தோம். 8ம் பாகத்தில் இந்துமதத்துக்குள் இருந்தே அதைச் சீர்திருத்த முடியாது என்பதற்கான அம்பேத்கரின் வாதங்களைப் பார்த்தோம். தகுதி வாய்ந்த தலித் ஒருவருக்கு ஒரு வருட கால அளவில் சங்கராச்சாரியாருக்கு இணையான மரியாதைகள் தரும் வேண்டுகோளை அவர் முன்வைத்ததை பாகம் 9ல் பார்த்தோம். தங்கள் மதத்திற்கு மாற்ற “முஸ்லீமாக மதம் மாறுங்கள்” என்று நேரடியாகக் கோரிக்கைகள் விடுத்ததையும், மறைமுக அழுத்தங்கள் கொடுத்ததையும் பாகம் 10ல் பார்த்தோம்.

வாழும் சக்திகளைத் திரட்டிக்கொள்ள தலித்துகளுக்கு மிகச் சாதகமான ஒரு இந்து வெளியாக சீக்கிய மதத்தை அம்பேத்கர் கருதியது பற்றி பாகம் 11ல் பார்த்தோம். கிறுத்துவம் எனும் நிறுவன அமைப்பை வரலாற்றுப் பார்வையில் அம்பேத்கர் ஒதுக்கியது குறித்து பாகம் 12ல் பார்த்தோம். மதமாற்றம் என்பதை ஆக்கிரமிக்க வந்த ஐரோப்பியர்களின் ஒரு சிறப்பான உத்தியாக இருந்ததை பாகம் 13ல் பார்த்தோம்.

இஸ்லாம் என்பது அடிமைகளை உருவாக்கும் மார்க்கம் என்பதை பாகம் 14 விளக்குகிறது. இஸ்லாமியப் பெண்களின் கீழ்த்தர துயர நிலை மற்றும் மனநோய் பரப்பும் இஸ்லாமிய மனப்பான்மை போன்றவற்றைப் பற்றி அம்பேத்கரின் கருத்துக்களை பாகம் 15ல் கண்டு தெளிவு அடையலாம். பதினாறாம் பாகத்தில் இஸ்லாம் எப்படி சமுதாயத்தின் வளர்ச்சிப் பாதைக்கும், முன்னேற்றத்திற்கும் எதிரான பிற்போக்கான மதம், ஏன் அவ்வாறு வளர்ச்சியை எதிர்க்கிறது, பகுத்தறிவுக்கு விரோதமான ஷரியா சட்டம், இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் உள்ள பிரச்னை ஆகியவற்றை அலசுகிறது.பாகம் 17 இஸ்லாத்தில் தேசபக்திக்கு இடமுண்டா என்பதைப் பற்றியும், தலித்துகளின் தேசிய கண்ணோட்டத்திற்கான அவசியத்தைப் பாகம் 18-இல் இஸ்லாம் எப்படி நடைமுறைக்கு ஒவ்வாததாக இருக்கிறது, அதன் தலைவர்கள் எவ்வாறெல்லாம் முரண்படுகிறார்கள் என்றும் பார்த்தோம். பாகம் 19-இல் (இஸ்லாமிய) மதமாற்றாத்தால் தேசிய உணர்வு, தேச பக்தி அழிவது குறித்துப் பார்த்தோம். பாகம் 20,21 தொடங்கி இஸ்லாமியர்களை இந்தியப் படைகளில் குறைக்கவேண்டுவதன் அவசியம் குறித்து அம்பேத்கர் தீவிரமாகத் தன் கருத்துகளை முன்வைக்கிறார்.

முந்தைய பாகங்களைப் படிக்க: பாகம் 1 || பாகம் 2 || பாகம் 3 || பாகம் 4 || பாகம் 5 || பாகம் 6 || பாகம் 7 || பாகம் 8 || பாகம் 9 || பாகம் 10 || பாகம் 11 || பாகம் 12 || பாகம் 13 || பாகம் 14 || பாகம் 15 || பாகம் 16 || பாகம் 17 || பாகம் 18 || பாகம் 19 || பாகம் 20 || பாகம் 21

One Reply to “[பாகம் -22] இந்து அரசுக்குக் கீழ்படியும் தன்மை முஸ்லீம்களிடம் அறவே இல்லை – அம்பேத்கர்”

  1. It is very clear that muslims openly refuse to join the national mainstream. They are “muslim indians” & not “indian muslims”.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *