கறுப்புப் பண முதலைகளிடம் மண்டியிடும் பிரணாப் முகர்ஜி

14.12.2011-ஆம் தேதி பாராளுமன்றத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அமைப்பாளருமான திரு.அத்வானி அவர்கள் கறுப்புப் பண விவகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டு வந்தார். பாராளுமன்றத்தில் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிராகரிக்கப்பட்டது. இந்த ஒத்திவைப்புத் தீர்மானத்தின் மீது அத்வானி அவர்கள் அரசு மீது தொடுத்த கேள்விகளுக்கு முறையான பதிலை அவை முன்னவரும் நிதி அமைச்சருமான பிரணாப் முகர்ஜி பதிலளிக்கவில்லை.

கறுப்புப் பண விவகாரம் இந்த நாட்டின் பொருளாதாரத்தை நாசப்படுத்தும் ஒரு காரணி என்பதை மறந்துவிட்டு, மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கறுப்புப் பண முதலைகளிடம் மண்டியிடும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. 2009-ஆம் ஆண்டு மே மாதம் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தனது தேர்தல் அறிக்கையில், மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வருமானால் அந்நிய நாடுகளில் உள்ள இந்தியர்களின் கறுப்புப் பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி கொடுத்தது. முந்தைய ஆட்சியில் கறுப்புப் பணத்தை இந்தியாவிற்கு மீட்டு வர இயலாது என ஓலமிட்ட காங்கிரஸ் கட்சியிலும் தேர்தல் நேரத்தில், பிரதமர் மன்மோகன்சிங், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 100 நாட்களில் கறுப்புப் பணத்தை மீட்க தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்தார். தேர்தலில் வெற்றி பெற்று ஆண்டுகள் மூன்று மறைந்த பின்னும் கறுப்புப் பணத்தை மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்கத் துணிவில்லை.

விலைவாசி உயர்வை 100 நாட்களில் குறைப்போம் எனக் கூறி ஆட்சிக்கு வந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, கறுப்புப் பணத்தை இந்தியா கொண்டு வர 100 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என கொடுத்த வாக்குறுதியையும் காற்றில் பறக்கவிட்டுவிட்டார்கள். இந்தப் பிரச்சினையை மையமாக வைத்து பொது மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த அத்வானி அவர்களின் ஜன் சேத்தன ரத யாத்திரை நடந்தது.

பாராளுமன்றத்தில் திரு.அத்வானி கொண்டுவந்த ஒத்திவைப்புத் தீர்மானத்தில் எழுப்பிய பல கேள்விகளுக்கு முறையான வகையில் நிதி அமைச்சர் பதில் கொடுக்கவில்லை. விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்சே 2012-இல் பட்டியலை வெளியிடுவேன் என்கிறார், அவர் மூலம் அறிவதை விட பிரதமர் மன்மோகன் சிங் அல்லது நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி மூலமாகவே அறிய விரும்புகிறோம் என்று அத்வானி வைத்த வாதத்திற்கு நிதி அமைச்சர் பதில் கொடுக்கவில்லை. 2011ஆம் ஆண்டு மத்தியில் விக்கிலீக்ஸ் இந்தியாவில் உள்ள சிலர் சுவிஸ் வங்கியில் வைத்துள்ள கறுப்புப் பணம் சம்பந்தமாக சில பெயர்களை வெளியிட்டது. இவ்வாறு வெளியிட்ட பட்டியலில் அமைச்சர்களும் முன்னாள் முதல்வர் ஒருவரும் அவரது மகன்களின் பெயரும் இடம் பெற்றிருந்தன. அதில் முன்னாள் மத்திய அமைச்சர்களின் பட்;டியலும் இடம் பெற்றிந்தன. விக்கிலீக்ஸ் வெளியிட்ட இந்தப் பட்டியலில் உள்ளவர்களில் பெரும்பாலோனோர் மறுப்புத் தெரிவிக்கவில்லை அல்லது இந்தத் தகவல் தொடர்பாக மத்திய அரசு எவ்வித விசாரணையும் நடத்தவில்லை. பாராளுமன்றத்தில் அத்வானி பேசிய போது தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு எவரும் தெரிவிக்கவில்லை என்பதையும் கவனிக்கும்போது, விக்கிலீக்ஸ் வெளியிட்ட பட்டியல் உண்மை என்பது தெரியவருகிறது.

2011ஆம் வருடம் ஏப்ரல் மாதம் உச்ச நீதிமன்றத்தில் கறுப்புப் பணம் சம்பந்தமாக தாக்கல் செய்த மனுவின் மீது உச்ச நீதிமன்றம், “வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களின் கறுப்புப் பணத்தை வெளிக்கொண்டு வருவதற்காக மத்திய அரசு இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துவருகிறது; அரசின் விசாரணை அமைப்பு இதுவரை தூங்கிக் கொண்டுதான் இருக்கின்றனவா? அசன் அலியைத் தவிர வேறு யாரும் கறுப்புப் பணத்தை வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருக்கவில்லையா? அப்படியென்றால் அவர் ஒருவர்தான் பதுக்கி வைத்திருக்கிறாரா? நாட்டுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் தீவிரவாதிகள், போதை மருந்து கடத்தல்காரர்களின் பணமாகக் கூட இருக்கக் கூடும் எனக் கூறி மத்திய அரசு சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களின் கறுப்புப் பணம் பற்றி விசாரித்து அறிக்கையை உச்ச நீதி மன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என தனது உத்திரவில் தெரியப்படுத்தியுள்ளது. உச்ச நீதி மன்றத்தின் உத்திரவுக்குக் கூட மத்திய அரசு செவிசாய்க்கவில்லை. ஏன் என்றால் காங்கிரஸ் கட்சியில் உள்ள சிலரின் பெயர்களையும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் திமுக, தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் பெயர்களும் இருந்ததால் மத்திய அரசு வாய்முடி மௌனியாக இருந்தது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சியில் இருக்கும் போதே பல்வேறு நாடுகளிலிருந்து இந்தியர்களின் கறுப்புப் பணத்தைப் பற்றிய தகவல்கள் இந்திய அரசுக்குத் தெரிவித்த பின்னும் கூட இந்த அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பிரான்ஸ் நாட்டில் உள்ள வங்கிகளில் இந்தியாவில் வரி ஏய்ப்பு செய்தவர்கள் முதலீடு செய்த விவரத்தை இந்திய அரசுக்குத் தெரிவித்தது. இது சம்பந்தமாக இந்திய அரசுக்குக் கொடுத்த பட்டியலில் 1000 யெர்களையும், இதில் 100 பேர்கள் மும்பையைச் சார்ந்தவர்கள் என்றும் தெரிவித்து நான்கு ஆண்டுகள் முடிந்தும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 2006-இல் Swiss Banking Association அறிக்கையில், “வெளிநாட்டு வங்கிகளில் முதலீடு செய்துள்ள கறுப்புப் பணத்தில் உலக நாடுகளில் இந்தியர்களின் கறுப்புப் பணம் தான் அதிக அளவில் உள்ளது” (India has more block money than the rest of the world combined) என தனது அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளது. இந்த அறிக்கையைப் போலவே ஜெர்மனிக்கு விஜயம் செய்த தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயண் பெர்லினில் தெரிவித்த கருத்து இந்தியர்களின் கறுப்புப் பணத்தைக் கொண்டுவருவதில் இந்திய அரசு முயற்சியை மேற்கொள்ளும் எனக் கூறியதையும் மத்திய அரசு நினைத்திருந்தால் பாராளுமன்றத்தில் நிதி அமைச்சர் பட்டியலை வெளியிட இயலாது என்று கூறியிருக்க மாட்டார்.

2010-ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜெர்மனி அரசு இந்தியாவிடம், ஜெர்மனியில் உள்ள லிச்டென்ஸ்டெய்ன்(Liechtenstein) எனும் நகரில் உள்ள எல்.ஜீ.டி(L.G.T) வங்கியில் போட்டுள்ள 50 பெயர்களை தெரிவித்தார்கள். இந்திய அரசுக்குக் கிடைத்த இந்தத் தகவல்களின் அடிப்படையில் கூட முழு விசாரணை நடத்தப்படவில்லை. அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் சுவிஸ் அரசு இந்திய அரசுடன் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டது, சுவிஸ் வங்கியில் இந்தியாவில் மோசடி செய்து முதலீடு செய்தவர்கள் பட்டியலை இந்தியாவிடம ஒப்படைப்பது சம்பந்தமான ஒப்பந்தமாகும். ஆனால் இந்த ஒப்பந்தம் போடப்பட்டு பல மாதங்கள் முடிந்த பின்னும் இந்தியாவின் மாண்புமிகு பிரதமரோ அல்லது நிதி அமைச்சரோ இந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

23.9.2011-ஆம் தேதி ஜெர்மனியின் இந்தியத் தூதர் Mr.Thomas Matussek என்பவர் கொடுத்த பேட்டியில் ஜெர்மனியில் உள்ள வங்கியில் போடப்பட்டுள்ள முதலீடு செய்தவர்கள் பற்றிய உறுதியான நம்பகமான தகவல்களைக் கொடுத்துள்ளோம் என்றார். இதைப் போலவே ஜெர்மனி கொடுத்த தகவல்களைப் பெற்ற அமெரிக்கா உடனடியாக தகவல்களைப் பெற்று ரூ.1,000 கோடிக்கு மேலான அபராதத் தொகையை விதித்துள்ளது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். உலகில் பல நாடுகள் சுவிஸ் அரசுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு தங்களது நாட்டின் பணத்தை மீட்ட சம்பவங்களும் உண்டு. ஆனால் இந்திய அரசுக்கு மட்டும் இதில் அக்கறை இல்லை.

இரண்டாவதாக, இந்திய ரிசர்வ வங்கியிடம் முறையான அனுமதி பெற்று வெளிநாடுகளில் பணத்தை முதலீடு செய்திருக்கலாம். பட்டியலை வெளியிட்டால் இந்திய வர்த்தகர்களின் நலனும் பாதிக்கப்படும் என நிதி அமைச்சர் கூறியது சிரிப்பாக இருக்கிறது. முறையாகக் கணக்கு வைத்திருந்து, உரிய வரியையும் கட்டிவிட்டு, ரிசர்வ வங்கியின் முழு அனுமதியுடன் அந்நிய நாடுகளில் முதலீடு செய்திருப்பவர்கள் பாதிக்கப்படுவர்கள் என்பதை சுய சிந்தனையுடைய எவரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். தேச நலனில் அக்கறை கொண்ட இந்தியக் குடிமக்கள் நிதி அமைச்சரின் கருத்தில் ஏதோ கோளாறு உள்ளதாக எண்ணத் தோன்றும்.

இதையெல்லாம் விட கறுப்புப் பணத்தைப் பற்றிய வெள்ளை அறிக்கை வெளியிடத் தயார் என நிதி அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்திருப்பது, இந்திய மக்களின் முகத்தில் கரியைப் பூசும் வேலையைச் செய்கிறார். வெள்ளை அறிக்கை என்பது உண்மையை எடுத்துக்காட்டும் காலக் கண்ணடியாகும். வெளிநாடுகளிலிருந்து 36,000 தகவல்களைப் பெற்றுள்ளோம் எனக் கூறிவிட்டு, பெயர்களை வெளியிட மாட்டோம் என்று சொல்லும் நிதி அமைச்சர் எவ்வாறு வெள்ளை அறிக்கை வெளியிடுவார். ஸ்விஸ் வங்கிகளில் இருந்து கறுப்புப் பணத்தைக் கொண்டுவர, படைகளை அனுப்பியா கொண்டு வர முடியும் எனக் கேட்டிருப்பது, மூத்த அமைச்சருக்கு அழகாகத் தெரியவில்லை. ஒரு வாதத்திற்கு வைத்துக் கொண்டாலும் காங்கிரஸ் ஆட்சியில், கடந்த 1947 அக்டோபர் மாதம் பாகிஸ்தானுடன் நடந்த யுத்தம், 1962-இல் சீனாவுடன் நடந்த போர், 1971-இல் நடந்த பாகிஸ்தான் போர் போன்றவற்றில் இந்தியா இழந்த பகுதிகள் ஏராளம். இழந்த பகுதிகளை மீட்க இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காங்கிரஸ் கட்சியா கறுப்புப் பணத்தை மீட்கப் படையெடுக்கும்?

18.3.2009-ஆம் தேதி இந்தியாவிற்கு ஜெர்மன் நாட்டில் கறுப்புப் பணம் வைத்திருக்கும் இந்தியர்கள் பட்டியலை கொடுத்தது. இந்தப் பட்டியலில் உள்ளவர்களின் பெயர்களில் டெஹல்கா எனும் பத்திரிகை 12.2.2011-ஆம் தேதி இதழில் 16 பெயர்களை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் உள்ள முக்கியமானவர்களைப் பற்றிய விவரங்களைக் கூட இந்திய அரசு விசாரணைக்கு உத்திரவிட்டுள்ளது. டெஹல்கா பத்திரிகையில் உள்ள ராஜ் ஃபவுன்டேஷன் மற்றும் ஊர்வசி ஃபவுன்டேஷன் என்ற இரண்டு நிறுவனங்களின் பெயரும் விக்கிலீக்ஸ் வெளியிட்ட பட்டியலிலும் இருக்கிறது. இந்தப் பெயர்கள் உண்மையில்லை என்று ஆளும் கட்சியினர் கருத்துத் தெரிவித்த பின்னும்கூட இந்த அரசு விசாரணை நடத்தி உண்மையை வெளியில் கொண்டு வர வேண்டும், அரசின் நம்பகத்தன்மையை நிருபிக்கக்கூட தயாராக இல்லை.

டெஹல்கா பத்திரிக்கையில் 15 பெயர்கள் உள்ளன. மனோஷ் துப்பிளியா (Manoj Dhupelia), ரூபள் துப்பிளியா (Rupal Dhupelia), மோகன் துப்பளியா (Mohan Dhupelia), ஹச்முக் காந்தி (Hasmukh Gandhi), சிந்தன் காந்தி (Chintan Gandhi), தீலிப் மேத்தா (Dilip Mehta), அருண் மேத்தா (Arun Mehta), அருண் கோசர் (Arun Kochar), கன்வந்தி மேத்தா (Gunwanti Mehta) ரஜினிகாந்த் மேத்தா (Rajnikant Mehta), பிரபோத் மேத்தா (Prabodh Mehta), அசோக் ஜெய்பூரியா (Ahsok Jaipuria), ராஜ் ஃபவுன்டேஷன் (Raj Foundation) ஊர்வசி பவுன்டேஷன் (Urvashi Foundation) அம்ப்ருனோவா ட்ரஸ்ட் (Ambrunova Trust) ஆகிய பெயர்கள் வெளியிடப்பட்டன. இவர்கள் மீது வரி ஏய்ப்பு செய்தது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது என இரண்டு விதமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக வருமான வரி அலுவலகர்கள் தெரிவித்தார்கள். இந்தப் பட்டியலில் உள்ளவர்கள் ஜெர்மன் வங்கியிலும் தங்களது பணத்தை முதலீடு செய்துள்ளார்கள்.

இது சம்பந்தமாக ஜெர்மன ஃபெடரல் இன்டலிஜின்ஸ் சர்வீஸ் அமைப்பினர் தெரிவித்த தகவல் ஜெர்மனியில் உள்ள லிச்டென்ஸ்டெய்ன் (Liechtenstein) எனும் நகரில் உள்ள எல்.ஜீ.டி (L.G.T) வங்கியில் போடப்பட்டுள்ள தொகையின் கணக்கு ஐந்து மில்லியன் யூரோவிலிருந்து 7.4 மில்லியன் டாலர் உள்ளதாகத் தெரிவித்தார்கள். மேற்படி வங்கியில் இந்தியர்கள் போட்டுள்ள கறுப்புப் பணத்தின் அளவு சுமார் 65 லட்சம் கோடியாக இருக்கும் எனத் தெரிவித்தார்கள்.

டெஹல்கா பத்திரிகையில் வெளிவந்த பெயர்களில் குறிப்பிட்ட மூன்று குடும்பத்தின் உறுப்பினர்களின் பெயர்கள் மட்டுமே உள்ளன. Dhupelia என்ற குடும்பத்தின் அங்கத்தினர்கள், காந்தி குடும்பத்தில் உள்ள சிலர், மேத்தா குடும்பத்தைச் சார்ந்த ஐந்து பேர்கள், மற்றும் சில ஃபவுன்டேஷன்கள் இடம் பெற்றன. இவர்கள் அரசாங்கத்தை ஏமாற்றி வெளிநாடுகளில் தங்களது கறுப்புப் பணத்தை முதலீடு செய்தார்களா அல்லது அரசியல்வாதிகளின் பினாமிகளாக செயல்பட்டார்களா என்பதைத் தெரிந்துகொள்ள இந்தியர்கள் அனைவருக்கும் உரிமை உண்டு என்பதை நினைத்தால் நிதி அமைச்சர் தங்களுக்குக் கிடைத்த தகவல்களை பாராளுமன்றத்தின்முன் வைத்திருப்பார்கள்.

வெளியிடப்பட்ட பெயர்களில் ஒருவர் இந்திய அரசியலில் பிரபலமானவருக்கு நெருக்கமானவர் என்றும் தெரிவித்தார்கள். ஆகவே அந்நிய நாடுகளில் கறுப்புப் பணத்தை முதலீடு செய்தவர்களுக்கு ஆளும் கட்சியின் முக்கியப் பிரமுகர்களின் முழு ஆதரவு இருப்பதால் இநத அரசு நடவடிக்கை எடுக்கத் தயக்கம் காட்டுகிறது.

கறுப்புப் பணத்தின் காரணமாக இந்தியாவின் வளர்ச்சிப் பணிகளில் முடக்கம் ஏற்பட்டுள்ளது என்பதைக் கூட புரிந்துகொண்டு செயல்பட ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு முன்வரவில்லை. 60 லட்சம் கோடி இருப்பதாக சில தகவல்களும், 2008 வரை 20,79,000 கோடி இருப்பதகாவும் சில தகவல்கள் வெளிவருகின்றன. ஆனால் உண்மையில் உலகில் உள்ள எல்லா நாடுகளில் உள்ளவர்கள் அந்நிய வங்கியில் கறுப்புப் பணம் மூலம் முதலீடு செய்துள்ளதைப் போல இரண்டு மடங்கு முதலீடு செய்துள்ளவர்கள் இந்தியர்கள் என்பதை 2006-இல் வெளியிடப்பட்ட உலக வங்கியின் அறிக்கை தெரியப்படுத்தியுள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், ஃபிரான்ஸ் போன்ற நாடுகள் சுவிஸ் அரசாங்கத்துடன் ஒப்பந்தத்தைப் போட்டு தங்கள் நாட்டினரின் பட்டியலைப் பெற்றார்கள். ஆனால் ஒப்பந்தம் போடப்பட்டும் இன்று வரை பட்டியல் கேட்கக் கூட இந்திய அரசாங்கம் முயலவில்லை என்பதை நினைத்தால் கறுப்புப் பண முதலைகளிடம் இந்த அரசு சரணாகதி அடைந்துவிட்டதோ என எண்ணத் தோன்றுகிறது.

உலகில் உள்ள இந்தியர்களின் கறுப்புப் பணத்தை மீட்டு வந்தால் வெளிநாடுகளில் இந்தியா வாங்கிய கடனை அடைத்து, கடனைப் போல் இன்னும் 12 மடங்கு பணம் கையிலிருக்கும், இந்தியாவில் உள்ள 45 கோடி பேர்களுக்கு தலா ரூ.1 லட்சம் கொடுத்தாலும் மீதிப் பணம் இந்திய வங்கியில் இருக்கும், நாட்டில் உள்ள அனைத்து பஞ்சாயத்து யூனியன்களுக்கும் தலா ரூ.1 கோடி ஒதுக்கக் கூடிய அளவிற்கு இந்தியர்களின் கறுப்புப் பணம் உலக வங்கிகளில் உள்ளது. எனவே ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மக்கள் மீது வரி சுமத்தாமல் வளர்ச்சிப் பாதையில் செல்வதற்கு கறுப்புப் பணத்தைக் கொண்டு வருவது நல்லது என்கின்ற சிந்தனைகூட இல்லாமல் செயல்படுகிறது.

தொழிலதிபர்கள் மட்டுமே கறுப்புப் பணம் வைத்திருப்பதாகவும், அவர்களின் பெயர்களை வெளியிட்டால் தொழில் அமைப்புகள் பாதிக்கப்படும் என நிதி அமைச்சரின் வாதம் ஏற்படையது கிடையாது. ஏன் என்றால் 1947-லிருந்து இன்று வரை ஊழல், முறைகேடுகள் சம்பந்தமாக கொள்ளையடித்த அரசியல்வாதிகள், அதிகார வர்க்கத்தினரும் கறுப்புப் பணத்தை அந்நிய நாடுகளில் உள்ள வங்கிகளில் முதலீடு செய்துள்ளார்கள் என்பதை சற்று நினைத்துப் பார்த்து பாராளுமன்றத்தில் பேசியிருக்க வேண்டும். இந்த ஆண்டு மத்தியில் விக்கிலீக்ஸ் வெளியிட்ட தகவல்களில் அனைவருமே அரசியல்வாதிகள்; அதிலும் குறிப்பாக பல தலைமுறையாக அரசியல் வானில் கொடிகட்டிப் பறப்பவர்கள் என்பதை மறந்துவிடக் கூடாது.

இந்தியாவிலிருந்து ஆண்டுதோறும் 80,000 இந்தியர்கள் சுவிஸ் நாட்டிற்கு சுற்றுலா விசாவில் செல்கிறார்கள். இவர்களில் 25,000 பேர் ஆண்டுக்குப் பலமுறை செல்கிறார்கள். அவ்வாறு செல்கிறவர்கள் இந்தியாவில் நடத்திய மோசடியின் காரணமாக பெற்ற பணத்தை முதலீடு செய்யச் செல்கிறார்கள் என தனியார் நிறுவனங்கள் வாய்கிழியக் கத்துகிறார்கள். ஆனால் அதிகாரத்தைத் தன் கையில் வைத்திருக்கும் மத்திய அரசு இதுவரை இவ்வாறு செல்பவர்களின் பட்டியலைப் பெற்றதும் கிடையாது, கிடைத்த சில பெயர்கள் மீது முழு விசாரணையையும் நடத்தவில்லை. 2011-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் உச்ச நீதிமன்றத்தில் இந்தியாவின் சொலிட்டர் ஜெனரல் திரு.கோபால சுப்பிரமணியம் உச்ச நீதிமன்றத்தில் லிச்டென்ஸ்டெய்ன் (Liechtenstein) நகரில் உள்ள LGT வங்கியில் சட்ட விரோதமாக முதலீடு செய்துள்ள 26 பெயர்களைக் குறிப்பிட்டு மனு தாக்கல் செய்தார். உச்ச நீதிமன்றத்தில் கொடுத்த பெயர்களை ஜனநாயக நாட்டின் மிகப் பெரிய சக்தியான பாராளுமன்றத்தில் தெரிவிக்க மறுப்பது என்ன நியாயம் என்பதை நிதி அமைச்சர் திரு.பிரணாப் முகர்ஜிதான் தெரிவிக்க வேண்டும்.

6 Replies to “கறுப்புப் பண முதலைகளிடம் மண்டியிடும் பிரணாப் முகர்ஜி”

 1. பிஜேபி யும் தன அளவில் பொறுப்பாக நடந்து கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது. சரியான முறையில் பிரசாரம் செய்யாமல் மக்களை மதி மயக்கும் மீடியாவின் பிடியிலிருந்து மக்களை விழிப்படைய செய்ய வேண்டும். நன்றி. வாழ்க பாரதம்.

 2. இந்த வலைதளம் நன்றாஉள்ளது.வாழ்த்துக்கள்

 3. பிரபாப் முகர்ஜியின் வாய் செம காமெடியா வரைய பட்டுள்ளது!

 4. நண்பர் snkm
  உங்கள் கருத்து தவறு.

  பாஜக இந்த அளவுக்கு நாடாளுமன்றத்திலும் வெளியிலும் கூச்சல் போடாமல் இருந்திருந்தால், கறுப்புப் பண விவகாரமே வெளிவந்திருக்காது.
  ஆனால், ஊடகங்களின் ஒருசார்பான அணுகுமுறையே தில்லாலங்கடிப் பேர்வழிகளான காங்கிரஸ்காரர்களைக் காப்பாற்றி வருகிறது.

  பாஜக மீதான மதச்சாயத்தைக் காட்டியே ஊடகங்கள் எத்தனை நாட்களுக்கு காலம் தள்ளுவார்கள் என்று பார்ப்போம்.

  ௦ – சேக்கிழான்

 5. பா.ஜ.க.வின் பிரச்சாரங்கள் உழலுக்கு எதிரான போராட்டங்கள் கொஞ்சமல்ல.ஆனால் அது பிரபலமாகவில்லை என்பதில் ஏதோ கோளாறு உள்ளது, அதை சரி செய்ய வேண்டும். மீடியா மிகவும் வலிமையான ஆயுதம் என்பதை அவர்களுக்கு சொல்லித் தர வேண்டியது இல்லை. ஆனால் மீடியாவின் மூலம் பா.ஜ.க.வின் விசயம் அதிகமாக மக்களுக்கு சென்று சேர்வதில்லை என்பதை யாராவது சொல்லி தெளிவிக்க வேண்டும்

 6. இன்று பிரணாப் ஜனாதிபதி !!! பிரதமர் ஸ்ரீ .மொடிஜி பொருத்தம் என்ன ? இதுவே ஜனநாயகம்? இன்று நாள் 9.6.12 ஜனாதிபடி உரையில் கருப்பு பணம் மீப்பு?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *