முல்லைப் பெரியாறு அணையும் வெளிவராத தகவல்களும்

இதற்கு முன் படிக்க வேண்டிய கட்டுரை: நிலநடுக்கமும் நமது அரசியல்வாதிகளும்

அண்மையில் வாரமிருமுறை வெளிவரும் ‘தமிழக அரசியல்’ இதழில் முல்லைப் பெரியாறு தொடர்பான கேள்வி-பதில் ஒன்றைப் படிக்க நேர்ந்தது. மத்திய அரசு கேரள அரசைக் கண்டிக்க வேண்டும் என்ற தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணனின் வேண்டுகோள் குறித்து பதில் அளித்திருந்த ‘சீனியர்’, முதலில் கேரளாவில் பேபி அணிக்கு கடப்பாரையுடன் சென்ற தங்கள் உறுப்பினர்களை பாஜக கட்டுப்படுத்தட்டும் என்று கூறி இருந்தார்.

உண்மைதான். அது ஒரு துரதிர்ஷ்டமான சம்பவம். கேரளாவில் ஆளும் காங்கிரஸ் கூட்டணியும், ஆண்ட இடதுசாரிக் கூட்டணியும் முல்லைப் பெரியாறு விவகாரத்தில் நடத்தும் அரசியலுக்குப் போட்டியாக பாஜகவும் அங்கு தனது இருப்பை நிரூபிக்க களம் இறங்கியது. பாஜ யுவமோர்ச்சா தொண்டர்கள் முல்லைப் பெரியாறு அணையின் பேபி அணையை உடைப்பதற்காக அங்கு திரண்டு செய்திகளில் இடம் பெற்றார்கள்.

கேரளாவைப் பொருத்த வரை அவர்களது செயல் அர்த்தமுள்ளதே. எனினும் தேசியக் கண்ணோட்டத்துடன் இதை அணுகும்போது, யுவமோர்ச்சாவின் செயல் எவ்வளவு சிக்கலை ஏற்படுத்திவிட்டது என்பது புரிகிறது. ‘தமிழக அரசியல்’ பத்திரிகையின் பதில் பொருத்தமானதே.

இது தொடர்பாக தமிழக பாஜக பொறுப்பாளர்கள் சிலரிடம் பேசினேன். அப்போதுதான், இவ்விஷயத்தில் வெளிவராத பல தகவல்கள் இருப்பது தெரிய வந்தது. பாஜக யுவமோர்ச்சாவின் இடுக்கி மாவட்ட பொறுப்பாளர்கள் சிலர் அவசரக்குடுக்கைத் தனமாக பேபி அணைக்கு சென்று ஆர்ப்பாட்டம் நடத்திய மறுநாளே, இவ்விவகாரம் குறித்து தேசியத் தலைமையின் கவனத்துக்கு கொண்டுசென்றது தமிழக பாஜக.

தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், எச்.ராஜா ஆகியோர் தேசியத் தலைவர் நிதின் காட்கரி, மூத்த தலைவர் அத்வானி ஆகியோரின் கவனத்துக்கு இவ்விஷயத்தைக் கொண்டுசென்றனர். முல்லைப்பெரியாறு அணையின் முழு விபரங்களையும் அதில் தற்போது ஏற்பட்டுள்ள சிக்கலையும் விளக்கிய தமிழகக்குழு, கேரள பாஜக நிர்வாகிகள் சிலரது முன்யோசனையற்ற செயல்பாடுகள் குறித்து புகார் கூறினர்.

இதையடுத்து கேரள பாஜக நிர்வாகிகள் தேசியத் தலைமையால் தொடர்பு கொள்ளப்பட்டனர். அப்போது, முல்லைப்பெரியாறு விஷயத்தில் கேரள பாஜக எந்த நிலைப்பாடும் எடுத்திருக்கவில்லை என்பது விளக்கப்பட்டது. எனினும், நிலநடுக்க பீதியில் உள்ள கேரள மக்களை தகுந்த முறையில் விளக்கமளித்து அமைதிப் படுத்துவது அவசியம் என்று அவர்கள் தரப்பை முன்வைத்தனர்.

தேசியத் தலைமை இரு மாநில கட்சி நிர்வாகிகளிடமும் தீவிரமாக ஆலோசனை நடத்தியது. நதிநீர் உள்ளிட்ட உணர்ச்சிபூர்வமான விஷயங்களில் எந்தத் தரப்பும் ஆவேச அறிக்கைகளை வெளியிடக் கூடாது, குறிப்பாக உச்ச நீதிமன்றத் தீர்ப்பு தமிழகத்துக்கு சாதகமாக உள்ள நிலையில், அதற்கு மாறான செயல்களில் கேரள பாஜக ஈடுபடக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது. அத்வானியே இந்த ஆலோசனையை அளித்ததாகவும், அதன்பிறகு, பேபி அணையில் பிரச்னை ஏற்படுத்திய யுவ மோர்ச்சா நிர்வாகிகளுக்கு அறிவுரை கூறப்பட்டதாகவும், தமிழக பாஜக நிர்வாகிகள் கூறினர்.

இந்தச் சம்பவம் வெளிப்படையாக நடக்கவில்லை. ஆனால், அதன் விளைவு வெளிப்படையாகத் தெரிந்தது. அதன் பிறகு கேரள பாஜக சார்பில் தமிழக நிலைப்பாட்டுக்கு எதிரான எந்தப் பிரசாரமும் நடக்கவில்லை என்பதை அனைவரும் அறிவர். இதற்கு மாறான காட்சிகளையே காங்கிரஸ், மார்க்சிஸ்ட் வட்டாரங்களில் காண முடிகிறது.

கேரளாவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் அந்தோணி, கே.வி.தாமஸ் ஆகியோர் மத்திய அரசில் கேரளாவின் நிலைப்பாட்டுக்கு ஆதரவாக தாக்கம் ஏற்படுத்த தீவிரமாக முயற்சிக்கின்றனர். (அவர்களது செல்வாக்கு காரணமாக, முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்வதற்கான புதிய குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது குறிப்பிடத் தக்கது). கேரள எம்பிக்கள் அனைவரும் கட்சி வேறுபாடின்றி நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் குரல் கொடுத்தனர். முல்லைப் பெரியாறு அணை உடைவது போல சித்தரிக்கும் ‘டேம் 999’ படம் மீதான தடையை நீக்கக் கோரி பெரும் இயக்கமே அங்கு நடந்தது. காங்கிரசுக்கு சற்றும் சளைக்காமல் மார்க்சிஸ்ட் தலைவர்களும் முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் தலைமையில் அங்கு போராடினர். ஒரு கட்டத்தில் தில்லியில் அச்சுவும் உம்மன் சாண்டியும் அருகருகே அமர்ந்து கேரளாவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் அந்தோணி, கேரளாவின் நிலைப்பாட்டை உறுதிப்படுத்த பேட்டி கொடுத்ததையும் காண முடிந்தது.

ஆனால், தமிழகத்தில் அதே கட்சிகளின் தலைவர்கள் முல்லைப் பெரியாறுக்கு ஆதரவாகப் போராடுகின்றனர். எனினும், கேரளாவுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் அரசியல் கட்சிகளிடையே ஒருங்கிணைப்பு பாதிகூட இல்லை. ஒரு வகையில் இது கட்சிகளின் ஜீவாதாரப் பிரச்னை. தங்கள் இருப்பைத் தக்க வைக்கவும் மக்கள் செல்வாக்கை அதிகரிக்கவும் இத்தகைய நிகழ்வுகளில் தங்கள் திறமையை வெளிக்காட்ட வேண்டிய கட்டாயத்தில் அவர்கள் இருப்பது இயல்பானதே. ஆனால், உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கிருஷ்ணய்யர் கூட கேரளாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருப்பதை புரிந்துகொள்ள வேண்டும். அந்த அளவுக்கு அங்கு ‘நிலநடுக்க பீதி’ பிரசாரம் செய்யப்பட்டுள்ளது.

எனினும், இதில் தேசியக் கட்சிகளுக்கு முக்கிய பொறுப்பு உண்டு. காங்கிரஸ், மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட், பாஜக ஆகிய கட்சிகள் பிராந்தியக் கட்சிகள் அல்ல. இவை தேசியக் கட்சிகளாக பதிவு செய்துள்ளன. பல மாநிலங்களில் இயங்கும் இக்கட்சிகள் இருமாநில உறவை சீர்குலைக்கும் பிரச்னைகளில் அவசரப்பட்டு செயல்படக் கூடாது. மாநில எல்லைகளைக் கடந்து இவை செயல்பட வேண்டும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. அவ்வாறு இல்லை எனபது கவலைக்குரியதே. ஆனால், பாஜகவின் தேசியத் தலைமை இவ்விஷயத்தில் தலையிட்டது போல பிற கட்சிகள் செயல்படவில்லை என்பது வருத்தத்துக்குரிய விஷயம்.

இதற்குக் காரணம் தெளிவானது. கேரள அரசியல் அரங்கில் இரு துருவங்களாக இருந்தாலும் ஆட்சி அதிகாரத்தை எட்டும் நிலையில் உள்ளவை காங்கிரசும் இடதுசாரிகளும் தான். அக்கட்சிகளுக்கு மக்கள் கருத்துகள் உருவாக்கும் நிர்பந்தம் அதிகம். எனவேதான், மக்களுக்கு உண்மை நிலையை விளக்கி அமைதிப்படுத்தி இருக்க வேண்டிய இக்கட்சிகள். அதைத் தவிர்த்து உணர்ச்சியூட்டும் எளிய வழிமுறையை தேர்வு செய்தன. அதிலும், மிக விரைவில் இடுக்கி மாவட்டத்திலுள்ள ‘பிரவம்’ தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சட்டசபையில் சரிசமமாக இருக்கும் இரு பிரதானக் கட்சிகளும் மக்களின் உணர்வுகளுடன் வியாளியாடுவதை சகசமாகவே கருதுகின்றன. (காண்க: தினமணி செய்தி )

கேரளாவில் தனது சித்தாந்தத்துடன் அரசியல் களத்தில் வெல்லப் போராடும் பாஜக இவ்விஷயத்தில் நடுநிலையுடன் செயல்பட்டாலே போதுமானது. காங்கிரஸ் போலவோ மார்க்சிஸ்ட் போலவோ பாஜக நாடகமாடத் தேவையில்லை. நல்லவேளையாக தேசியத் தலைமையின் உத்தரவால் கேரள பாஜக இப்போது கட்டுக்குள் வந்துள்ளது. இது பலரும் அறியாதது. காரியம் முக்கியமா, வீரியம் முக்கியமா என்று பார்க்கும்போது, பாஜக தேசியத் தலைமை காரியத்தையே முக்கியமாகக் கருதி இருப்பது தெரிகிறது, குறைந்தபட்சம், பாஜகவின் அபிமானிகளாவது இதை அறிந்திருக்க வேண்டும் என்பதற்காகவே இது இங்கு சுட்டிக் காட்டப்படுகிறது.

அடுத்து ஒரு முக்கியமான விஷயம் குறித்த விவாதம் இப்போது எழுந்திருக்கிறது. கூடங்குளமாயினும் முல்லைப் பெரியாறு ஆயினும், பிரச்னையின் ஆரம்ப விதையைத் தூவியவர்கள் கிறிஸ்தவ மிஷனரிகள் என்பது இப்போது அரசல் புரசலாக தெரிய வந்துவிட்டது. கூடங்குளத்தில் இன்று உதயகுமார் செய்வதையே 1978 -79களில் இடுக்கி மாவட்ட கிறிஸ்தவ பாதிரியார்கள் செய்தனர். முல்லைப் பெரியாறு அணை அமைந்துள்ள நிலப்பகுதியில் நிலநடுக்க அபாயம் இருப்பதாக பிரசாரம் துவங்கியது அப்போதுதான். ஆனால், தேர்ந்த விஞ்ஞானிகள் இந்தப் பிரசாரத்தை அப்போதே மறுத்தனர். (1895 -ல் திறக்கப்பட்டது இந்த அணை) நூறு ஆண்டுகளாக வராத நிலநடுக்கமோ, அதனால் ஏற்படாத பாதிப்போ இப்போது ஏற்பட வாய்ப்பில்லை என்பது புள்ளிவிபரங்களுடன் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். எனினும், மலையாள முன்னணி நாளிதழான ‘மலையாள மனோரமா’ பாதிரியார்களின் பிரசாரத்தை தொடர் செய்தி ஆக்கியது.

1973 ல் கேரள அரசால் கட்டப்பட்ட இடுக்கி அணைக்கு நீர்வரத்து போதிய அளவில் இல்லாததால் தான் இந்தப் பிரசாரம் நடத்தப்படுவதாக தமிழகம் கருதியது. அதிலும் உண்மை இல்லாமல் இல்லை. ஏனெனில் மின் உற்பத்தியை இலக்காகக் கொண்டு கட்டப்பட்ட இடுக்கி அணையின் நீராதாரம் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து உபரியாக வெளியேறும் நீர் மட்டுமே. அணையின் இருப்பு நீரானது தமிழகத்தின் பாசனத் தேவைக்கு என்றே 999 ஆண்டுகால ஒப்பந்தம் உள்ளது. எனவே, முல்லைப் பெரியாறு அணையின் நீர் இருப்பைக் குறைப்பதன் மூலமாக, அதன் நீர்த் தேக்க அளவை 142 அடியிலிருந்து 136 அடியாகக் குறைப்பதன் வாயிலாக, இடுக்கி அணைக்கு அதிகபட்சத் தண்ணீர் சென்று சேரும் என்பது கேரள அரசின் கணக்காக இருக்கலாம். அதற்காகவே, நிலநடுக்க பீதியைக் கிளப்பி, மத்திய நீர்வள ஆணையத்தை நிர்பந்தித்தது. அதன் உத்தரவை ஏற்று அணையின் அதிகபட்ச நீர்த்தேக்க உயரத்தை குறைத்தது தமிழக அரசு.

நீர்த் தேக்க அளவு குறைவதால் பாசனப்பகுதிகள் பாதிக்கப்பட்டதை அடுத்து, தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இது தொடர்பான வழக்கில் தமிழகத்தின் தரப்பு நியாயத்தை உணர்ந்து உச்சநீதிமன்றம் தலையிட்டுள்ளது. ஆனால், அதன் உத்தரவான “142 அடி வரை நீரைத் தேக்க வேண்டும்” என்ற அறிவுரை இந்நாள் வரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. அதனை உச்சநீதிமன்றமும் ஏன் என்று கேட்கவில்லை; மத்திய அரசும் கண்டுகொள்ளவில்லை. (அயோத்தி விஷயத்தில் நீதிமன்றத் தீர்ப்பை அனைவரும் ஏற்க வேண்டும் என்ற மகத்தான அறிவுரைகள் எவ்வாறெல்லாம் கூறப்பட்டன என்பதை இங்கு நினைவு கூரலாம்).

இப்போது நடப்பது அணையின் நீர்த்தேக்க உயரத்தை அதிகரிப்பதற்கான போராட்டம் அல்ல. ஏனெனில், கேரள அரசு அதையும் தாண்டி, அணையையே (அது சுண்ணாம்புக் கலவையால் கட்டப்பட்டது; உடைவதற்கு வாய்ப்புள்ளது என்று கூறி) முற்றிலும் உடைத்துவிட்டு புதிய அணை கட்டுவதாக கேரள அரசு அறிவித்திருக்கிறது. ‘அரசனை நம்பி புருஷனைக் கைவிட முடியாது’ என்பதை உணர்ந்துள்ள தமிழகம் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறது.

இதுதான் மையப் பிரச்னை. கேரள மக்களை நிலநடுக்க பீதியால் ஆவேசம் கொள்ளச் செய்து அரசியல் நடத்தும் காங்கிரஸ், மார்க்சிஸ்ட்களே இதற்குக் காரணம். இப்போது மக்களின் அச்சத்தைப் போக்கியாக வேண்டிய அவசியம் உள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது. இப்போதுதான் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் போன்ற பெரியோரின் தலையீடு தேவையாகி உள்ளது. கூடங்குளத்தில் தலையிட்டு அறிவியல்ரீதியாக விளக்கம் அளித்து மக்களை தெளிவடையச் செய்தது போலவே, இப்போதும் கலாம் நாட்டுநலனை அடிப்படையாகக் கொண்டு அற்புதமான தீர்வை முன்வைத்திருக்கிறார். ‘நதிகள் அனைத்தும் தேசியமயம்’ என்ற சட்டத்தைக் கொண்டுவருவதே இதுபோன்ற அனைத்து சிக்கல்களுக்கும் தீர்வு என்று அவர் கூறி இருக்கிறார். (காண்க: ஒன் இந்தியா செய்தி ). கூடங்குளத்தில் அவரை எதிர்த்த பலர், இப்போது முல்லைப் பெரியாறு அணை விஷயத்தில் அவரது அறிவுரையை மேடைதோறும் முழங்கத் துவங்கி இருக்கின்றனர்.

இப்போது விஷயத்துக்கு வருவோம். அரசியல் கட்சிகள் நிலநடுக்க பீதியைக் கொண்டு அரசியல் நடத்துவதில் ஒரு புரிந்துகொள்ளக்கூடிய நியாயம் இருக்கிறது. இதில் கிறிஸ்தவ மிஷனரிகளுக்கு என்ன வேலை? இங்கு தான் அவர்களது ஐந்தாம் படை ரகசியம் இருக்கிறது. அவர்களது வெறுப்பூட்டும் பிரசாரத்தின் அடிப்படை சபரிமலை என்பதே அது.

‘பரசுராம க்ஷேத்திரம்’ என்றும் ‘கடவுளின் மாநிலம்’ என்றும் போற்றப்படும் கேரளாவின் தன்னிகரற்ற புனிதத்தலம், சபரிமலை. நாடு நெடுகிலும் இருந்து கேரளாவுக்கு கார்த்திகை முதல் தை முடிய செல்லும் கோடிக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் சத்தமின்றி சமய ஒருமைப்பாட்டையும் தேசிய ஒருமைப்பாட்டையும் நிலைநாட்டுகிறார்கள். மதமாற்றத்தை குறிக்கோளாகக் கொண்ட கிறிஸ்தவ பாதிரியார்களின் வர்த்தகத்துக்கு பெரும் இடையூறு சபரிமலை என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஏற்கனவே நிலக்கல் ஆக்கிரமிப்பு மூலமாக சபரிமலை மீதான துவேசத்தை கிறிஸ்தவர்கள் வெளிப்படுத்தி உள்ளனர். இப்போதும் கூட கேரளாவில் ஐயப்ப பக்தர்களை நிலக்கல்லில் கிறிஸ்தவர்கள் தாக்கியுள்ளனர் (காண்க: நிலக்கல்லில் ஐயப்ப பக்தர்கள் மீது தாக்குதல்).

நாடு முழுவதிலும் இருந்து சபரிமலை செல்லும் பக்தர்களில் பெரும்பகுதியினர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். எனவே தமிழகமும் கேரளமும் உணர்வுரீதியாக ஒன்றிணைந்தே உள்ளன. இரு மாநிலங்களிலும் பரஸ்பரம் பரவியுள்ள மலையாளிகள், தமிழர்களின் எண்ணிக்கை பிற மாநிலங்களை விட அதிகம். எனவே, ஐயப்ப பக்தர்கள் வரவைத் தடுப்பதும், அவர்களைத் தாக்குவதும், இரு மாநில உறவுகளை சீர்குலைக்கும்; ஒருமைப்படும் குலையும். அத்தகைய குழம்பிய குட்டையில் தான் மீன் பிடிக்க முடியும் என்பது கிறிஸ்தவ மிஷனரிகளின் நோக்கம் (காண்க: சபரிமலை பயணத்தைக் குலைக்க சதி).

இது புரியாமல், இரு மாநிலங்களிலும் அணை அரசியல் நடத்தும் அரசியல்வாதிகள் தெரிந்தோ தெரியாமலோ கிறிஸ்தவ சதிக்கு இரையாகிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன்னர் தமிழக பாஜக பொறுப்பாளர்களும் கேரள பாஜக பொறுப்பாளர்களும் கலந்துகொண்ட கூட்டம் ஒன்றில் இது குறித்த விவாதம் எழுந்தது. அப்போதே, இந்த சதி குறித்து கேரள பாஜக நிர்வாகிகள் எச்சரித்ததாக தமிழக பாஜக நிர்வாகி ஒருவர் கூறினார். இதை உணர்ந்திருப்பதால் தான் கேரள மாநிலத் தலைமை, பிற கட்சிகள் போல கூச்சலிடாமல் அமைதி காக்கிறது; பேபி அணைக்கு சென்று ஆர்ப்பாட்டம் நடத்திய தனது கட்சியினரையும் மாநிலத் தலைமை கட்டுப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தமிழக பாஜக மாநில செயற்குழு அண்மையில் கோவை- மேட்டுப்பாளையத்தில் நடந்தது. அதில் கூடங்குளம், முல்லைப்பெரியாறு அணை விவகாரங்கள் குறித்து தெளிவான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. நீதிமன்ற ஆணையை மதிக்காமல் செயல்படும் கேரள அரசை மத்திய அரசு நீக்க வேண்டும் என்றும், சபரி மலை பக்தர்களுக்கு அம்மாநில அரசு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுள்ளன. (காண்க: ஹிந்து பத்திரிகை செய்தி). கூடங்குளம், முல்லைப்பெரியாறு விவகாரங்களில் மக்களின் அச்சத்தைப் போக்குவது அரசின் கடமை என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மக்கள் நலனுக்கான திட்டங்கள் மக்களின் பரிபூரண ஒத்துழைப்புடன் செயல்படுத்தப்பட வேண்டும் என்பதே பாஜகவின் நிலைப்பாடு என்கிறார், பாஜக- வர்த்தகப்பிரிவின் தேசிய செயலாளர் எஸ்.ஆர்.சேகர்.

அரசியல் விவகாரம் வெளிப்புறத்தில் அலையடித்துக் கொண்டிருக்கையில், சங்க பரிவார இயக்கமான சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் (எஸ்.ஏ.எஸ்.எஸ் ) சத்தமின்றி அரும்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதை இங்கு சுட்டிக் காட்டியாக வேண்டும். (காண்க: சமாஜத்தின் இணையதளம் ). சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களைத் தாக்குவோர் இந்துவிரோதிகள் என்பது தாக்கப்பட்டவர்களே கூறியுள்ள வாக்குமூலம். எவ்வளவுதான் கோபம் இருந்தாலும் தமிழக ஐயப்ப பக்தர்களுக்கு செருப்புமாலை போடும் அளவுக்கு மலையாளிகள் செல்ல மாட்டார்கள்; மாலை அணிந்துள்ள சிறு குழந்தைகளைக் கூட பிளேடுகளால் கிழிக்கும் (எந்த இடத்தில் என்று சொன்னால் நீங்களும் கொந்தளிப்பீர்கள்) அளவுக்கு கொடூரமானவர்களாக முல்லை பெரியாறு எதிர்பாளர்கள் இருக்க வாய்ப்பில்லை. இதன் பின்புலம் வேறு என்பதையே ஐயப்ப பக்தர்கள் மீதான கொடூரத் தாக்குதல்கள் காட்டுகின்றன.


எனவே, கேரளா செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு அம்மாநிலத்தின் பல பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர் எஸ்.ஏ.எஸ்.எஸ் அமைப்பினர். இரு மாநில எல்லைகளில், பதற்றம் நிறைத்த குறிப்பிட்ட இடங்களில் பக்தர்களை நெறிப்படுத்தும் பணியில் இந்த அமைப்பு ஈடுபட்டுள்ளது. இது குறித்து அமைப்பின் பொது செயலாளரும் ‘ஜன்மபூமி’ பத்திரிகை நிர்வாகியுமான கும்மனம் ராஜசேகரன் கேரளாவில் அறிக்கை வெளியிட்டுள்ளார். (காண்க: ஐபிஎன் செய்தி) ஐயப்ப பக்தர்களை விருந்தினராக பாதுகாத்து பத்திரமாக வழியனுப்ப எஸ்.ஏ.எஸ்.எஸ் பாடுபடும் என்று அவர் கூறி இருக்கிறார். தமிழகத்தைச் சேர்ந்த (எஸ்.ஏ.எஸ்.எஸ் தலைவர்) சுகுமாரன் நம்பியாரும் ஐயப்ப பக்தர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளார் என்கிறார், அமைப்பின் இணை செயலாளரான ஈரோடு ராஜன். (காண்க: தினமலர் செய்தி – ஈரோடு ராஜன் அறிக்கை )

எந்த ஒரு பதற்றமான சூழலிலும் சமூகவிரோதிகளின் கரமே ஓங்குகிறது. ஏனெனில், சமூக விரோதிகள் உணர்ச்சிகரமான சூழலைப் பயன்படுத்தி தங்கள் இலக்கைத் தாக்குவதில் வல்லவர்கள். பாலக்காட்டில் முஸ்லிம் தீவிரவாத அமைப்பினர் சிலர் ஐயப்ப பக்தர்களைத் தாக்கியுள்ளனர். சிறுபான்மையினர் அதிகமுள்ள கேரளா போன்ற மாநிலத்தில் இத்தகைய தாக்குதல்களை நிகழ்த்திவிட்டு தப்புவது எளிது. (ஒரு பகுதியில் ஹிந்துப் பெரும்பான்மை பாதிப்புக்கு உள்ளானால் என்னவெல்லாம் நடக்கும் என்பதற்கும் இச்சம்பவங்கள் உதாரணம்).

எனவே, முல்லைப் பெரியாறு விஷயத்தில் சமூக விரோதிகளை மக்களிடமிருந்து பிரித்துக் காட்ட வேண்டிய தேவை உள்ளது. அதை விடுத்து கேரளாவில் நடக்கும் தாக்குதல்களுக்கு பதிலடியாக தமிழகத்தில் தாக்குதல் நடத்துவதும் பொருளாதார முற்றுகை என்ற பெயரில் போராடுவதும் நிலைமையை மேலும் சிக்கல் ஆக்கும். அங்கு ஏற்கனவே வழிதவறி தடுமாறும் மலையாள மக்களை ஹிந்து விரோதிகளும் தேச விரோதிகளும் மடைமாற்றவே அது வழிகோலும்.

எனவே தான், ‘இவ்விவகாரத்தில் மேலும் காலதாமதமானால் நிலைமை மேலும் கடினமாகவும் சிக்கலாகவும் மாறும். எனவே மத்திய அரசு உடனடியாகத் தலையிட்டு இரு மாநில முதல்வர்களையும் அழைத்துப் பேசி சுமுகத் தீர்வு ஏற்பட துரித நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும் தேவைப்பட்டால் மாற்று யோசனைகளையும் இரு மாநிலத்திற்கும் எந்த பாதிப்பும் ஏற்படாவண்ணம் செயல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசினை தமிழக ஆர்.எஸ்.எஸ். கேட்டுக் கொண்டுள்ளது. (காண்க: தமிழக ஆர்.எஸ்.எஸ். தலைவர் அறிக்கை )

இப்போது தான், புலி வாலைப் பிடித்திருக்கிறோம் என்பதை கேரள முதல்வர் உம்மன் சாண்டி உணர்ந்திருக்கிறார். ‘தமிழகத்துக்கு தண்ணீர்; கேரளத்துக்கு பாதுகாப்பு’ என்பதே தனது அரசின் குறிக்கோள் என்று கூறி இருக்கிறார் அவர். இந்நிலையில் மத்திய அரசு மேற்கொள்ளும் பேச்சுவார்த்தைகளைப் புறக்கணிக்காமல் பங்கேற்று தமிழகத்தின் நிலைப்பாட்டை சுமுகமான முறையில் உறுதிப்படுத்துவது தமிழக முதல்வரின் பொறுப்பு. இரு தரப்பிலும் இப்போது தேவை ‘ஈகோ’ அற்ற அணுகுமுறையே.

விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை; கெட்டுப்போகும் இயல்புள்ளவர்கள் விட்டுக் கொடுப்பதில்லை – என்பதே தற்போதைய காலகட்டத்துக்கான நீதிபோதனை.

இதுதான் நல்ல வழிமுறை!

கடந்த வியாழக்கிழமை (22.12.2011), கேரளத் தலைநகரான திருவனந்தபுரத்தில், மாநில தலைமையகம் முன்பு, சபரிமலை ஐயப்ப சேவா சமாஜத்தின் தமிழக, கேரள நிர்வாகிகள் இணைந்து நடத்திய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், முல்லைப் பெரியாறு பிரச்னையைப் பயன்படுத்திக்கொண்டு ஹிந்து விரோத சக்திகள் தமிழக ஐயப்ப பக்தர்களை தாக்குவதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. (காண்க: மாத்ருபூமி செய்தி )

23 சமூகப் பிரதிநிதிகள் உள்பட 200 க்கு மேற்பட்ட பக்தர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். இதில் தமிழகத்திலிருந்து வந்த ஐயப்ப பக்தர்களுக்கு மாலையிட்டு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்நிகழ்வே மிகவும் உணர்சிகரமாக இருந்தது. ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் மாநில காவல்துறை தலைவர் (டிஜிபி) திரு. ஜேக்கப் புன்னக்கோஸ் அவர்களை எஸ்.ஏ.எஸ்.எஸ் நிர்வாகிகள் சந்தித்து மனு அளித்தனர். அப்போது ஐயப்ப பக்தர்கள் மீதான தாக்குதலில் சமூக விரோதிகள் கரம் இருப்பதை அவர் ஒப்புக்கொண்டார். இது தொடர்பான புகார்களை தெரிவித்தால் உடனடி நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் உறுதி அளித்தார்.

தவிர, கேரள காவல் துறை தலைமை அலுவலகத்தை எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளும் (Toll Free) தொலைபேசி என்னையும் அவர் அளித்தார். அந்த எண்: 0471 – 2556600.

94979 0000 என்ற மொபைல் எண்ணுக்கு குறுஞ்செய்தி (SMS) அனுப்பியும் புகார்களைச் செய்யலாம்.

தொடர்பு எண்கள்:

திரு. கும்மனம் ராஜசேகரன் – கேரளா (பொது செயலாளர், எஸ்.ஏ.எஸ்.எஸ்)- 0484 -2539819 , 9447 970315

திரு. ஈரோடு ராஜன் – தமிழ்நாடு ( இணை செயலாளர், எஸ்.ஏ.எஸ்.எஸ்) – 94430 20118

சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் இணையதளம்: https://swamyayyappa.blogspot.com/

12 Replies to “முல்லைப் பெரியாறு அணையும் வெளிவராத தகவல்களும்”

 1. தமிழ்நாட்டில் இருக்கும் வேளாங்கண்ணி கோவிலுக்கு வரும் கேரளாவைச் சேர்ந்த கிருத்தவர்களைத் தடுக்கலாமே? இந்து இயக்கங்கள் செய்யுமா?

 2. தமிழகத்திலேயே ஐயப்பன் கோவிலை எழுப்புவோம்-தென்காசியில் பரபரப்பு போஸ்டர் —
  https://tamil.oneindia.in/news/2011/12/25/tamilnadu-controversial-poster-displayed-tenkasi-courtallam-aid0175.html ஹிந்துகள் முட்டாள்களாக இருக்கும் போது , கிறிஸ்துவர்களின் எண்ணம் எளிதாக நிறைவேறிவிடும். ம்ம். எம்மதமும் சம்மதம்.

 3. மனிதன் என்ற பெயரில் வெறுப்பை உமிழ்ந்திருக்கும் நண்பருக்கு,

  //தமிழ்நாட்டில் இருக்கும் வேளாங்கண்ணி கோவிலுக்கு வரும் கேரளாவைச் சேர்ந்த கிருத்தவர்களைத் தடுக்கலாமே? இந்து இயக்கங்கள் செய்யுமா?//

  இந்த பதிலடி நடவடிக்கை தவறு என்பதே கட்டுரையின் நோக்கம். கேரளாவில் ஐயப்ப பக்தர்களைத் தாக்கும் விஷமிகள் எதிர்பார்ப்பது இதனையே. வேளாங்கண்ணி, மட்டுமல், நாகூர், பழனி போன்ற புனித தலங்களுக்கு வர மலையாளிகளுக்கு உரிமை உண்டு- தமிழர்கள் சபரிமலை செல்வதுபோல. அது தான் நமது நாட்டைப் பிணைக்கும் ஆன்மிக விசை. அந்த வேரில் வெந்நீர் ஊற்ற முனையும் சதிகார்களுக்கு யாரும் இரையாகக் கூடாது என்பதே நமது நோக்கம்.

  வாசகர்களுக்கு ஒரு கூடுதல் தகவல்:

  இரு மாநிலங்களிலும் அரசியல் கட்சிகள் இருவேறுவிதமாக் நாடகமாடி வரும் நிலையில், கோவை மாவட்ட எல்லையான வாளையாறில் தமிழக, கேரளா பாஜக நிர்வாகிகள் இணைந்து நடத்திய மனிதச் சங்கிலிப் போராட்டம் ஞாயிறன்று (25 ம் தேதி) நடந்துள்ளது. இதில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ஒ.ராஜகோபால் (கேரளா), தமிழக பாஜக செயலாளர் ஜி.கே.செல்வகுமார் உள்பட இருமாநிலங்களைச் சேர்ந்த நூற்றுக் கணக்கானோர் பங்கேற்று இரு மாநில எல்லையில் மனிதச் சங்கிலி அமைத்தனர்.

  ”முல்லைப் பெரியாறு விவகாரத்தால் இருமாநில உறவுகள் சீர்குலைய அனுமதிக்க மாட்டோம்; ஐயப்ப பக்தர்களை பாதுகாப்பாக சபரிமலை சென்றுவரச் செய்வோம்; இரு மாநில பக்தர்களுக்கும் பாஜக பாதுகாப்பாக இருக்கும்; அணை விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு சுமுகத் தீர்வு காண வேண்டும்” என்று இந்தப் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

  இதுவே நாட்டின் நலனுக்கும் ஒருமைப்பாட்டுக்கும் வழிகோலும் அணுகுமுறை.

  -சேக்கிழான்

 4. பா ஜ க நாட்டை ஆள்வதே சரியான தீர்ப்பாக இருக்கும் என்று தோன்றுகிறது. ஆனால் என்று நடக்கபோகிறது என்று தான் தோன்றுகிறது. இதற்கு தமிழக பா ஜ கவும் கேரளா பா ஜ கவும் இணைந்து போராட வேண்டும். கர்நாடகாவை போல மாற்றம் வர வேண்டும்.

 5. சேக்கிழான்
  பலே! பா ஜ க வே பகிரங்கமாக சப்பைக்கட்டு செய்ய தயங்கும் பொது தாங்கள் செய்ய முன் வந்துள்ளீர்கள்.
  //கேரளாவைப் பொருத்த வரை அவர்களது செயல் அர்த்தமுள்ளதே//
  கடப்பாரையுடன் அலைவது அர்த்தமுள்ள செயலா? நீதிமன்றம் சட்டமன்றம் போன்ற ஜனநாயகக் கூறுகளில் மதிப்புள்ள அரசியல் கட்சி செய்யும் வேலையா அது? அதில் நம்பிக்கையில்லையெனில் மையத் தலைமை பகிரங்க அறிக்கை மூலம் தன நிலையைத் தெளிவுபடுத்தியிருக்க வேண்டும். சேக்கிழான் காதுகளில் கிசுகிசுக்க கூடாது? பா ஜ க கடப்பாரைக் கொணர்ந்தபின் தான் கேரளா அராஜகம் அடுத்த கட்டத்திற்குச் சென்றது. ஊழல் எதிர்ப்பு போல் நடுநிலையாளர்கள் இங்கும் கோடாமை பேண வேண்டும். உங்களை இன்னும் நம்புகிறேன் நடுநிலை பேணுவீர்களென!!
  கர்நாடக மாநிலத் தேர்தலையொட்டிய எடியூரப்பாவின் ஒகேனக்கல் பயணத்தைத் தமிழகம் இன்னும் மறக்கவில்லை. காவிரி கதை தென் பகுதியிலும் பாயக்கூடாது.

 6. முல்லைப் பெரியாரின் உண்மை நிலையை இருவரும் உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும்.இங்குள்ள ‘ஈரோடு பெரியார் ‘ பக்தர்களின் பொய் பிரச்சாரத்தை யாரும் நம்பக்கூடாது,இரு மாநிலத்திலுமுள்ள தேச பக்தர்கள் தேச ஒற்றுமைக்கு குந்தகம் நிகழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

 7. நண்பர் ராம்கிக்கு,

  //பா ஜ க வே பகிரங்கமாக சப்பைக்கட்டு செய்ய தயங்கும் பொது தாங்கள் செய்ய முன் வந்துள்ளீர்கள்//

  நான் இக்கட்டுரையில், கேரள பாஜகவின் நடவடிக்கை துரதிர்ஷ்டவசமானது என்று தெளிவாக ஆரம்பத்திலேயே கூறி இருக்கிறேன். ஆயினும், நிலநடுக்க பீதி பரப்பப்பட்டுள்ள கேரளாவில் ஒரு அரசியல் கட்சி என்ற முறையில், அந்த மாநிலத்தைப் பொறுத்த வரை கேரள பாஜகவின் செயல் அர்த்தமுள்ளதே என்று தான் எழுதி இருக்கிறேன். அதைத் தொடர்ந்து வரும் வரிகளையும் நீங்கள் வாசிக்க வேண்டும். ஒரு மாநிலக் கட்சி போல தேசியக் கட்சியான பாஜக செயல்படக் கூடாது என்பதையும் அதில் குறிப்பிட்டிருக்கிறேன். இது சப்பைக் கட்டு அல்ல.

  தேசியக் கட்சியாக முழுமையாகச் செயல்படும்போது ஆரம்பத்தில் பிராந்தியக் கட்சிகளின் சவால்களை வெல்வது கடினமே. இந்தச் சோதனையில் வெல்ல மிகுந்த பக்குவம் தேவைப்படுகிறது. கேரள பாஜக கிளை இச்சோதனையில் ஆரம்பத்தில் சறுக்கிவிட்டது உண்மை. எனினும், தேசியத் தலைமை சரியான நேரத்தில் குட்டு வைத்து அவர்களைக் கட்டுப்படுத்தியது. இதை சரியாகவே சுட்டிக் காட்டி இருக்கிறேன். இதை மற்ற எந்த தேசியக் கட்சியும் செய்யவில்லை என்பதையும் ஒப்புநோக்குமாறு கூறி இருக்கிறேன்.

  இப்போதும்கூட, இருமாநில அரசியல் கட்சிகளும் இணைந்த போராட்டத்தை பாஜகவால் மட்டுமே நடத்த முடிந்திருக்கிறது என்பதை நண்பருக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

  பாஜக- வே இப்படித் தடுமாறினால் பிற கட்சிகளின் நிலையை சொல்ல வேண்டியதில்லை. எனவே தான், நதிகள் அனைத்தையும் தேசிய மயமாக்க வேண்டும் என்பதை இக்கட்டுரையில் வெளிப்படுத்தி உள்ளேன். உண்மையில் இந்தத் திசையில் கொள்கைரீதியான நடவடிக்கைகளை எடுத்தது வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசே. அந்தத் திட்டத்தை ஓரம் கட்டியது காங்கிரஸ்தான்.

  -சேக்கிழான்

 8. கேரளத்துப் பாஜகவின் ஒரு பிரிவினர் பிரச்சினை செய்து, அது செய்தித்தாள்களில் வந்தது உண்மையே. அந்தப் பிரிவுக்குத் தலைமை தாங்கியவர் ஒரு கிறுத்துவராக இருப்பததுதான் கேள்வியை எழுப்புகிறது.

  .

 9. நன்றி சேக்கிழான்!
  உங்கள் கட்டுரை முழுமையையும் படித்த பிறகே பதிவிட்டேன். தாங்கள் தான் என் குறிப்பை முழுவதும் படித்தீர்களா எனத் தெரியவில்லை. மாநில மக்களின் அச்சத்தை கேரளா பா ஜ க செவிமடுப்பதையோ முன்னேடுப்பதையோ தவறு காண்பது ஜனநாயகமாகாது! ஆனால் அதற்கென கடப்பாரையைக் கையிலெடுப்பதா? அதன் பின்னரே அப்போராட்டம் வேறு வடிவம் பெற்றது.
  இதை மையத் தலைமை பகிரங்கமாக கண்டித்திருக்க வேண்டும்; இப்போதும் தாமதமல்ல. அந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம். இப்போது இந்த பூதத்தை யார் அடக்குவது? சபரி மலை யாத்ரிகர்கள் இங்கேயே விரதத்தை முடித்ததாக துக்ளக்கில் படித்தேன். என்ன அவலம்! சபரி மலை மீதும் உள்ள உரிமையை யார் காப்பது.

  பா ஜ க வேறுபாட்டுடன் உள்ள கட்சியா? கடப்பாரையுடன் உள்ள கட்சியா?

 10. மலையாள மனோரமா பத்ரிக்கை குழுமம் இந்த விஷமப் பிரசாரத்தை தொடராமல் இருந்திருக்கவேண்டும். அக்குழுமத்தின் MRF இங்கு ஆலை அமைத்துள்ளதை கவனத்தில் கொள்ளவேண்டும். அதனை மூட உத்தரவிட்டால் என்ன என்று கேட்டவர்களும் உண்டு. முல்லைப் பெரியாறு என்று தான் எழுதவேண்டும். ஆனால் எல்லா ஊடகங்களும் முல்லைப் பெரியார் என்று தவறாக எழுதுகின்றன. கட்டுரை ஆசிரியர் சொல்வது போல் தமிழக முதல்வர் கௌரவம் பார்க்காமல் கூட்டத்தில் கலந்து கொண்டு உரிய முறையில் வாதிட்டால் பயன் விளையக்கூடும். ஒரு இடைத் தேர்தலுக்காக இரு மாநில உறவைக் கெடுக்கும் வோட்டுப் பொறுக்கி காங்கிரசை மத்தியிலிருந்து வரும் தேர்தலில் விரட்டினால் தான் நாடு நன்மையடையும். அதற்குத் தேவை புரிந்துணர்வுள்ள விவரமறிந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள். காலை வாரி விடும் எண்ணமில்லாமல் அதிமுக தலைவி பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேச விரோத இத்தாலிக் காங்கிரஸ் ஊழல் திலக முன்னேற்ற கழக கூட்டணியை தோற்கடிக்கவேண்டும்

 11. The writer emphasises that the human relationship between the two states should be normalised.
  Let us assume that normal situation prevails (as it was in the last four years).

  Let us assume Supreme Court gives an order favouring Tamil Nadu (as it happened in 2006 also) and let us also assume that the Act passed by Kerala Assembly in Mar 2006 is unconstitutional.

  Kerala definitely will not accept the Supreme Court Order and it may pass another Act in the Assembly.Don’t expect Central Government to take steps to implement the Supreme Court Order. Don’t also expect that the Supreme Court Order would have been implemented had NDA ruled at Centre.

  Even till date, BJP Central leadership, has not told in clear terms its stand on Mullaiperiyar issue.
  The main reason – BJP will not say anything as it has no hold politically – in terms of number of seats either in Lok Sabha or Assembly – either in Kerala or Tamil Nadu. (BJP has taken two stands on Kauvery issues, one for TN and one for Karnataka and its central leadership is keeping mum).

  (I am not able to visualise what would happen if the expected order of Supreme Court does not favour Tamil Nadu).

 12. உண்மையை அறியாமல் எதையாவது எழுதி கலகம் உண்டாக்க வேண்டாம்….. lhttps://tamil.oneindia.in/news/2011/12/06/india-iyappa-devotees-from-tn-attacked-nilakal-aid0091.html இந்த முகவரியில் ( சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குச் செல்லும் தமிழக பக்தர்கள் மீதான தாக்குதல் தொடர்கதையாகியுள்ளது.) என்று குறிப்பிட பட்டு உள்ளதே தவிர தாங்கள் குறிப்பிட்டுள்ளபடி கேரளாவில் ஐயப்ப பக்தர்களை நிலக்கல்லில் கிறிஸ்தவர்கள் தாக்கியுள்ளனர் என்று குறிப்பிட பட்டு இல்லை. தாங்கள் கூறியபடி கேரளாவில் ஐயப்ப பக்தர்களை நிலக்கல்லில் கிறிஸ்தவர்கள் தாக்கியுள்ளனர் என்றால் அதற்கு ஆதாரம் என்ன…???? அணை பிரச்சனையை மதகலவரமாக மாற்ற முயல வேண்டாம்.

  பின் குறிப்பு :

  வலைதள முகவரி குடுக்கும்(உதாரணம்:https://tamil.oneindia.in/news/2011/12/06/india-iyappa-devotees-from-tn-attacked-nilakal-aid0091.html முன் அதில் உள்ள செய்தியை நன்றாக படிக்கவும்.)

  இப்படிக்கு

  இந்தியன்………

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *