பக்தியும் செல்வமும்

வைகுண்டத்தில் ஜகத்தைப் பரிபாலனம் செய்கிற ஸ்ரீமந் நாராயணன் அனந்தசயனத்தில் இருந்தார்கள். வெண் மேகங்கள் அமுதத் திவலைகளைத் தூவிக் கொண்டிருந்தன. அவர்களுடைய பாதக் கமலங்களுக்கு அருகில் ஸ்ரீ மகாலட்சுமி அமர்த்திருந்தார்கள். அனைத்துலக நாயகராய் விளங்கும் ஸ்ரீ விஷ்ணு லக்ஷ்மிதேவியுடன் ஆனந்தமாக உரையாடிக் கொண்டிருக்கும்போது சொன்னார்கள், “பூலோகத்தில் என்னைக் குறித்துப் பிரார்த்திப்பவர்களை விட, உன்னைக் குறித்துப் பிரார்த்திப்பவர்கள்தான் அதிகம்.”

இறைவனுடைய திருமுக மண்டலத்தையே பார்த்தவண்ணம் ஸ்ரீலக்ஷ்மிதேவி சொன்னார்கள், “அவர்கள் அன்பிற்கு உகந்தவர் தாங்கள்தான். உங்களைக் குறித்து தியானிப்பவர்கள்தான் அதிகம் என்பது என் அபிப்பிராயம்.”

அதைச் சோதிப்பதற்கு ஒருநாள், பெருமாள் பூலோகத்தில் ஓர் அந்தணரின் வீட்டிற்கு, களையான முகத்தோடு ஒரு சந்நியாசி வேஷத்தில் வந்து இறங்கினார். அந்த அந்தணர் சாது சன்னியாசிகளை அழைத்து உபசரிப்பதையே தமது வாழ்க்கையின் இலட்சியமாகக் கொண்டு இல்லறத்தை நடத்துபவர். இறைவனுடைய மெய்யடியார்களைப் பூஜித்து அவர்களுக்கு தினமும் உணவளிக்காமல் சாப்பிடும் பழக்கமில்லாதவர்.

அந்த அந்தணர் சந்நியாசியின் பாதங்களில் விழுந்து வணங்கினார்.

சந்நியாசி வேஷத்திலிருந்த பெருமாள் சொன்னார், “நான் உங்கள் வீட்டில் உணவருந்த வேண்டுமானால் ஒரு நிபந்தனை. நானாக உங்கள் வீட்டை விட்டுப் போகிற வரையில் என்னை யாரும் எக்காரணத்தைக் கொண்டும் வெளியேபோகச் சொல்லி நிர்பந்திக்கக் கூடாது. சம்மதமா?”.

அந்த அந்தணர், “பரிபூரண சம்மதம். வாருங்கள், வாருங்கள். நீங்கள் இங்கேயே தாராளமாகத் தங்கிக் கொள்ளலாம். அதுவும் நீங்கள் விரும்பும் வரையில்” என்று சொன்னார்.

“அப்படியா சரி” என்று சந்நியாசி அங்கேயே காலவரையின்றி தங்கிக் கொண்டுவிட்டார்.

அந்த அந்தணரும் அவருடைய இல்லத்தரசியும் சந்நியாசிக்கு ஆசார உபசாரம் செய்து விருந்தளித்தார்கள். அன்பைப் பொழிந்து பணி செய்யலானார்கள்.

இவ்வாறு சன்யாசியை நாள்தோறும் விருந்தோம்பி, உபசரித்துக் கொண்டே வந்த காலத்தில் அந்தணருடைய வருமானம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துகொண்டே வந்து கடைசியாக அஸ்தமித்து விட்டது. நகை-நட்டுக்களை விற்றாகி விட்டது, தோட்டம்-துரவுகளை விற்றாகிவிட்டது, வீடு-வாசல்களையும் விற்றாகி விட்டது, வாடகை வீட்டில் இடம்பெயர்ந்து விட்டார்கள். அந்தணரும், அவருடைய மனைவியும் சந்நியாசிக்கு ஒரு குறையும் வைக்கவில்லை. அவர்களுக்கு வந்த சிரமங்களை எல்லாம் பொருட்படுத்தாமல் சந்நியாசியைக் கவனித்துக் கொண்டார்கள். ஆனால், சந்நியாசியோ தான் ஒரு சுமையாக இருந்ததையோ, அவர்களுடைய கஷ்டங்களைப் புரிந்துக் கொள்கிற மாதிரியோ, அவர்களை விட்டு அசைகிற மாதிரியோ தெரியவில்லை.

சொல்லி வைத்தாற்போல், காஷாயமணிந்த ஒரு வசீகரமான தபஸ்வினியின் வேஷத்தில் ஸ்ரீலக்ஷ்மி தேவியின் பிரவேசம் ஆயிற்று.

அந்த அந்தணத் தம்பதிகள் சந்நியாசினியையும் வணங்கி அன்போடு அழைத்துச் சென்று உபசரித்தார்கள்.

சந்நியாசினியும் ஒரு நிபந்தனை வைத்திருந்தார்கள். சாப்பிடும் உணவு அந்தணத் தம்பதிகளுடையதாக இருந்தாலும், சந்நியாசினி தனக்கென்று வைத்திருக்கும் பாத்திரம்-பண்டங்களைத்தான் உபயோகிப்பார்களாம்.

சந்நியாசினி தன்னுடைய துணி மூட்டையிலிருந்து வெளியே எடுத்த கனமான பாத்திரம்-பண்டங்கள் என்ன தெரியுமா? அத்தனையும் தங்கம். அந்தணத் தம்பதிகள் தங்கள் ஆச்சிரியத்தை வெளிக்காட்டிக்கொள்ளாமலேயே அவர்களுக்கு உணவு படைத்தார்கள். இப்படியாக முதல்தடவை சந்நியாசினிக்கு உபசாரம் நடந்து முடிந்தது. சந்நியாசினியும் அந்தணத் தம்பதிகளின் உபசரிப்பில் மகிழ்ந்து உள்ளம் குளிர்ந்து போனார்கள்.

அடுத்த தடவை அந்தத் தம்பதிகள் சந்நியாசினிக்கு விருந்து படைக்க அதே தங்கப்பாத்திரங்களை அதாவது, தாம்பாளம், கிண்ணம் இத்யாதிகளை துப்புபரவாகத் துலக்கி நன்றாக அலம்பி அவர்கள் முன்னால் கொண்டுவந்து வைத்தார்கள்.

அப்போது சன்யாசினி சொன்னது அந்தத் தம்பதிகளை ஆச்சிரியப்பட வைத்து விட்டது.

சந்நியாசினி சொன்னார்கள், “இல்லை, இல்லை, இந்தப் பாத்திரங்கள் எல்லாவற்றையும் எடுத்து விடுங்கள். நான் ஒரு தடவை உபயோகித்த பாத்திரங்களை மறுபடியும் உபயோகிப்பதில்லை” என்று சொல்லிவிட்டு தன் மூட்டையிலிருந்து உபரியாக இன்னும் ஒரு தங்கப் பாத்திர வரிசையை எடுத்துக் கொடுத்தார்கள்.

அந்தணர் வினவினார், “அப்படியென்றால், இதற்கு முந்தின பாத்திரங்களை எல்லாம் என்ன செய்வது?”

சன்யாசினி சொன்னபதில் அவர்களை அதிர வைத்து விட்டது, “வீட்டுக்குப் பின்பக்கம் தூக்கி எறிந்துவிடுங்கள்!”.

அந்தணரும் அவருடைய மனைவியும் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டனர்.

விருந்து முடிந்த பிறகு, அந்தணர் மனைவியிடம் சொன்னார், “அடியே, கேட்டாயா, இந்த அபார மதிப்புள்ள தங்கப் பாத்திரங்களை வீட்டுப் பின்பக்கம் தூக்கிக் கடாசி விட வேண்டுமாம். எப்படி இருக்கிறது! நீ ஒன்று செய். இந்தத் தட்டு, கிண்ணம் இவைகளை ஒன்றொன்றாகத் தூக்கி எறிவதுபோல் எறி. நான் அங்குப் போய் நின்றுகொண்டு அவைகளைப் பிடித்துக்கொள்கிறேன்.

அப்புறம் கேட்கவா வேண்டும்? இப்படி ஒவ்வொரு வேளை பரிமாறல் முடிந்ததும் அந்தணருடைய மனைவி தங்கப் பாத்திரங்களை வீட்டுக்குப் பின்பக்கம் தூக்கி எறிவதும், அந்தணர் அவற்றைப் பிடித்துக் கொண்டு வருவதுமாக நாள்கள் சென்றன. சந்நியாசினியின் வருகை அந்தணத் தம்பதிகளுக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்து விட்டது. லக்ஷ்மி தேவியின் க்ருபா கடாக்ஷத்தில் அவர்களுடைய ஐசுவரியம் வளர்ந்தது. ஏழ்மை ஒழிந்தது என்று ஆனந்தமடைந்தார்கள். விருந்தாளிகளை இன்னும் பரிவுடன் உற்சாகமாக கவனித்துக் கொண்டார்கள்.

ஒரு நாள், சந்நியாசினி அந்த அந்தணரைக் கூப்பிட்டார்கள். அவரும் விழுந்தடித்துக் கொண்டு ஓடி வந்தார்.

“என்ன தேவி, எல்லாம் சீராக இருக்கிறதா? குற்றங் குறைகள் ஒன்றும் இல்லையே? உங்களுக்குப் பணிவிடை செய்யக் காத்திருக்கிறேன்.”

“எல்லாம் சரியாகத் தான் இருக்கிறது. ஆனால் ஒரேயொரு சின்ன தொந்தரவு”

தினமும் மூன்று வேளை தங்கமாய் பொழியும் சந்நியாசினிக்குத் தொந்தரவா? அந்தணர் பதறி விட்டார். “சொல்லுங்கள், எதுவாயிருந்தாலும் நிவர்த்தி செய்து விடுகிறேன்”

“இதைக் கேளுங்கள். இந்த வீட்டில் என்னைப் போலவே இன்னொரு சந்நியாசியும் தங்கி இருக்கிறார் இல்லையா?”

“ஆமாம். அவரால் உங்களுக்கு இடைஞ்சல் ஏதுமில்லையே?

“இடைஞ்சல் ஒன்றுமில்லைதான் ஆனால் அவருடைய பூஜை புனஸ்காரங்கள், இரைந்து உச்சரிக்கும் மந்திரங்கள், எழுப்பும் மணிச் சத்தம் – இவைகள் மட்டும் எனக்கு ஒத்துப் போகவில்லை. கேட்டுக் கேட்டுக் காது புளித்துவிட்டது. தலையும் வெடித்துவிடும் போலிருக்கிறது”

“இப்போது நீங்கள் சொன்னீர்களே, ஆயிரத்தில் ஒரு வார்த்தை!”

அந்தணர் ஒரு கணம்கூட தாமதிக்கவில்லை. சந்நியாசி இருப்பதால்தானே ஓசை எழுகிறது. அந்தச் சந்நியாசினியின் விருப்பத்தை இப்போதே அமல்படுத்த வேண்டும். விருட்டென்று கிளம்பி தவக்கோலமாய் வீற்றிருக்கும் சந்நியாசியின் முன்னால் வந்து நின்று அவரை நிஷ்டூரமாகப் பார்த்தார்.

“என்ன சாமியாரே, எப்போது புறப்படுவதாக உத்தேசம்?”

“அதற்கென்ன, இப்போது புறப்பட்டு விட்டால் ஆயிற்று” என்று சொல்லி விட்டு அந்த சந்நியாசி அங்கிருந்துப் புறப்பட்டு அந்தர்தியானம் ஆகி விட்டார்.

அந்தணத் தம்பதிகள் சந்நியாசினியிடம் வந்து, “அப்பாடா, சந்நியாசி ஒருவழியாகக் கிளம்பி விட்டார். இனிமேல் நீங்கள் இங்கு வசதியாக இருந்துகொள்ளலாம்”.

சந்நியாசினியாக இருந்த ஸ்ரீலக்ஷ்மிதேவி சொன்னார்கள், “என்ன, சந்நியாசி புறப்பட்டுப் போய் விட்டாரா? காரியத்தைக் குழப்பி விட்டீர்களே. நான் அவர் செய்யும் பூஜையால் எழுகின்ற ஓசைகளைத்தான் தவிர்க்கும்படியாகக் கேட்டுக் கொண்டேன். நீங்கள் அவரையே அனுப்பி விட்டீர்களா? அவரை யார் என்று நினைத்தீர்கள்? அவர் என் கணவர். கணவரில்லாத இடத்தில் மனைவிக்கென்ன வேலை?”

லக்ஷ்மிதேவியும் புறப்பட்டுப் போய்விட்டார்கள்.

அந்த அந்தணர்தான் அடுத்த ஜன்மத்தில் ஸ்ரீருக்மணியின் தமையனார் ருக்மியாகப் பிறந்தார்.

16 Replies to “பக்தியும் செல்வமும்”

  1. நல்ல கருத்துள்ள கதை இது. இது தங்கள் சொந்த ஆக்கமா அல்லது எந்தப் புராணத்திலும் இடம்பெற்றுள்ளதா?

    //…அடுத்த ஜன்மத்தில் ஸ்ரீருக்மணியின் தமையனார் ருக்மியாகப் பிறந்தார்.//

    என்கிற பதிவு வந்திருப்பதால் கேட்டேன்.

    எங்கிருந்து வந்திருந்தாலும் அல்லது சொந்தப் படைப்பாக இருந்தாலும் ‘நல்ல, கருத்துள்ள, கதை’ என்பதில் மறு பேச்சுக்கு இடமில்லை. சுவையாகவும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

  2. இக்கதை படிப்பவர்களுக்கு பெரும் பீதியை ஏற்படுத்துவதாக அல்லவோ.. இருக்கிறது… என் பார்வையில் இந்த அந்தணருக்கு ஏற்பட்டது போல சோதனை வந்தால் நம் நிலை அந்தோ… நாம் எல்லாம் கண்ணன் கருணை கடல் என்று நம்பி அல்லவா.. இருக்கிறோம்..

    மஹா விஷ்ணுவுக்கு சிறப்பான குணம் என்று வாத்ஸல்ய பிரபாவத்தை அல்லவா குறிப்பிடுவர்… இவ்வளவும் செய்த அந்தணருக்கு கடைசியில் சோதனையைக் கொடுத்து ருக்மியாகப் பிறக்க வைத்தும் தண்டித்தது என்ன நியாயம்..?

  3. @ மாலடியான் இது பிருந்தாவனப் பிரதேசத்தில் வழங்கி வரும் கதை.

    @ T.Mayoorakiri sharma பாகவதத்தின் கடைசியில் பெருமாள் சொல்கிறார், ‘என்னை வழிபடுபவர்களிடமிருந்து, என் மேல் பக்தி வைப்பவர்களிடமிருந்து, நான் சொத்து சம்பத்துக்களை பிடுங்கிக் கொள்கிறேன். அவர்களுடைய உற்றார், உறவினர்கள் பிணங்கி, தூர விலகிப் போகுமாறு செய்து விடுகிறேன். பிறகு நாலாவிதமான கஷ்ட நஷ்டங்களைத் தருகிறேன்’.

    இப்படி பகவான் சொன்னார் என்றால் யார் அவரை வழிபடுவார்கள், பக்தி செய்வார்கள்?

    பகவான் மேலே சொல்கிறார், ‘இத்தனைக் கஷ்டங்களை அனுபவித்த பிறகும், எந்த பக்தன் என் மேலுள்ள பக்தியை விடாமல் இருக்கிறாரோ, அந்த பக்தன் என்னையே விலைக்கு வாங்கி விடலாம். நான் அவருக்கு அடிமையாகி விடுகிறேன். இது என்னப் பிரமாதம், நான் அவருக்குப் பரமபதத்தையே வழங்கி விடுகிறேன்’.

    (சிவபெருமான் பஸ்மாசுரனுக்கு வரமளித்து விட்டு அவஸ்த்தைப் பட்டது போலல்லாமல்)

  4. திரு மாதவன் அவர்களே! பஸ்மாசுரன் கதை யார் கட்டி விட்டது? அது சைவ புராணங்களிலோ அல்லது பதினெண்புராணங்களிலோ இல்லாத கதை. சிவனுக்கு இழிவு கற்ப்பிக்கப் புனைந்த கதை. சிவன் பிரம்ம கபாலத்தைக் கிள்ளினான். அது அவன் கையில் ஒட்டிக்கொண்டது. விஷ்ணு காப்பாற்றினார். இதுபோன்ற கதைகள் பயனற்றவை. சிவன் .”வேண்டுவார் வேண்டுவதே ஈவான்” ஆயினும் பெற்ற வரத்தின் பலத்தால் எளியவரை வலியவர் நலியும்போது அவனுடைய நடுவுநிலைமையே தண்டிக்கும். இக்கருத்தை வலியுறுத்தும் கதைகள் இத்தளத்திலேயே வந்துள்ளன. இறைவன் அடியவரின் அன்பை பத்தியை அனுப்பவிப்பானே ஒழிய சோதனை செய்வதில்லை. ப்ர்ம்மஸ்ரீ சர்மா அவர்கள் ஐயம் நியாயமானதே.

  5. திருவாளர் மயூரகிரி ஷர்மா அவர்கள் எவ்வளவோ ஆழமான கட்டுரைகளை எழுதியவர். ஆனால், திருமாலின் செயலில் பொதிந்திருக்கும் ஞாயத்தைப் பற்றி அவர் எழுதியுள்ள மறுமொழி எனக்கும் சற்று வியப்பாகத்தான் இருக்கிறது. சரி, ‘அவர்தான் அப்படி’, என்று நினைத்தால், டி. ஜே. மாதவனின் மறுமொழியில் பஸ்மாசுரன் வரம் பெற்றது பற்றிய குறிப்பு பொருத்தமில்லாத சிவ நிந்தனை போலல்லவா தோன்றுகிறது..! தமிழ் ஹிந்துவில் எதையும் எழுதும் முன்னர், மூர்த்தி பேதங்கள் பற்றிய சரியான பார்வை இருந்தால் நன்றாக இருக்கும்.

  6. டி.ஜே. மாதவன்,

    இது என்ன வம்பாய் போச்சு..? நான் ஏதோ சொல்ல வர நீங்கள் ஏன் சிவபெருமானை இங்கே வம்புக்கு இழுக்கிறீர்கள்..

    பஸ்மாசூரன் கதை பெருமான் நடத்திய நாடகம்., அது ஹரிஹரதத்துவத்தை சிறப்பாக உணர்த்தும் சம்பவமும் கூட (அரியல்லால் தேவியில்லை – அப்பர் தேவாரம்)

    ஆனால், நீங்கள் சொல்வது சிவனை குறைத்து மதிப்பிடுவது போலிருக்கிறது.. ஹிந்து மத ஒருமைப்பாட்டை குலைப்பது போல இப்படி எழுதுவதை நிறுத்துமாறு வேண்டுகிறேன்..

    அரியும் அரனும் ஒண்ணு… அறியாதவர் வாயில் மண்ணு

  7. இத் தளத்தில் பதிவிடுவோரும் கருத்துப்பதிவோரும் மிகப்பெரும் அறிஞர்களும் மெத்தப்படித்த அறிவாளிகளும் என்பதனால் மிக அருமையாகவே நான் எனது கருத்தை பதிவது வழக்கம். இக் கதை வெளியானதும் வாசித்த முதல் சிலரில் நானும் ஒருவன். என்றாலும் சில மணித்துளிகள் கழித்து எனது கருத்தை பதிவதற்கு முன் திருவாளர் மயூரகிரி சர்மா அவர்களின் கருத்து வெளிவந்துவிட்டது. அக் கருத்தையே நானும் பதியத் துணிந்திருந்தேன்.அத்துடன் ஆபிரகாமிய மதச் சந்தைகள் எம்மவர்களைப் பிடிப்பதற்காக வலை வீசியிருக்கும் இக்கால கட்டத்தில் இப்பேர்பட்ட கடினமான சோதனைகள் நிறைந்த ஆன்மீக முனேற்றம் எம்மவர்களை திசைதிரும்பிவிட காரணமாக அமைந்துவிடலாம் என்பதுவும் என் கருத்து. திரு மயூரகிரி சர்மா அவர்கள் என் வயதில் பாதியை தாண்டாதவர் என்னமாக எழுதிகின்றார். சைவமும் தமிழும் தழைக்க வாழ்க பல்லாண்டு. நன்றியுடன் லோகன் சுப்ரமணியம். நோர்வே.

  8. அன்பர்களே,

    // சிவபெருமான் பஸ்மாசுரனுக்கு வரமளித்து விட்டு அவஸ்த்தைப் பட்டது போலல்லாமல் //

    ஸ்ரீமத் பாகவதத்தில் இப்படித் தான் கூறப்பட்டுள்ளது (திரு சர்மா அவர்களின் விளக்கத்தை இங்கு விமர்சிக்க வரவில்லை). இருப்பினும், அக்கதையைக் கூறுவதற்குக் காரணம் பரீக்ஷித் மகாராஜா சுகரிடம் கேட்ட வேறொரு கேள்வி. அதற்கும் இக்கட்டுரையின் கருத்துக்கும் தொடர்பில்லை என்பது என் தாழ்மையான கருத்து.

    //இத்தனைக் கஷ்டங்களை அனுபவித்த பிறகும், எந்த பக்தன் என் மேலுள்ள பக்தியை விடாமல் இருக்கிறாரோ, அந்த பக்தன் என்னையே விலைக்கு வாங்கி விடலாம். நான் அவருக்கு அடிமையாகி விடுகிறேன்.//

    என்று சொல்ல வந்த கருத்துக்கு சிவனைப் பற்றிப் பேசத் தேவையே இல்லை என்பது எனது அபிப்பிராயம்.

    //பஸ்மாசுரன் கதை யார் கட்டி விட்டது? அது சைவ புராணங்களிலோ அல்லது பதினெண்புராணங்களிலோ இல்லாத கதை.//

    இக்கதை ஸ்ரீமத் பாகவதத்தில் உள்ளது. (வைணவ) பாகவதம் பதினெண் புராணங்களுள் ஒன்று என்பது குறித்துச் சிலருக்குச் ஆட்சேபங்கள் உண்டு என்பதை அறிவேன். ஆயினும், அவை எதுவும் வலுவானவையாக எனக்குத் தெரியவில்லை.

    பதினெண் புராணங்களில் ஒன்றாக இது பாரதம் முழுதும் (சங்கர, ராமானுஜ, மத்வ, வல்லப, சைதன்ய, நிம்பர்க, சங்கரதேவ சம்பிரதாயங்களில்) பெரிதும் ஏற்கப்பட்டு வருகிறது. இதற்கும் மேல் இது பற்றிச் சர்ச்சையை வளர்க்க வேண்டாம் என்பது ஏன் கருத்து.

  9. திரு சர்மா குறிப்பிட்டது தவறல்ல. யாருக்கும் தோன்றகூடிய ஒன்று தான். தெய்வம் எந்த வடிவத்திலும் தன பக்தர்களை கடுமையாக சோதிப்பதை பார்க்கிறோமே .
    .
    நான் சிறுவனாக இருந்த போது என் பாட்டி என்னை வற்புறுத்தி ” வடை மாலை” என்ற தமிழ் படத்திற்கு அழைத்துப்போனார்கள்.
    படத்தைப்பார்த்து விட்டு,” பக்தர்களை பல வேதனைகளுக்கு ஆளாவதாக இப்படி காண்பிக்கிறார்களே? ஏன் இப்படி ?இப்படி இருந்தால் நம் போன்ற அல்ப சக்தர்கள் என்ன தான் செய்வார்கள் ” என்று புலம்பினார்.

    அவர் நிஜ வாழ்வில் துன்பம் வரும் போதெல்லாம் பூஜை அறையின் முன்னின்று வாய்விட்டுப்புலம்புவார். பின் ” மனசில வெச்ச்சுக்காதே, எனக்கு உன்னை விட்டா வேறேது போக்கிடம் ?” என்று எதிரில் நிற்பவர்களிடம் பேசுவது போல் பேசுவார்.அது எளிய பக்தர்களின் உரிமை.

    என்னை பொறுத்த வரை சிவன் , விஷ்ணு இருவரும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்.
    ஐயப்பனோ இருவரையும் ஒன்றாக வணங்க விரும்பும் பக்தர்களின் ஆசையை பூர்த்தி செய்யும் வடிவம்.
    அன்புடன்
    சரவணன்

  10. ஹிந்து சமயத்தின் அடிப்படைக் கோட்பாடு கர்மமும் தர்மமும். ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக ஏகாக்கிர சித்தத்துடன் தீவிரமாக மேற்கொள்ளும் முயற்சி தான் தபஸ் என்பது. தவம் எவ்வளவு தீவிரமாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதைப் படிமங்களால் உணர்த்துவதே தீயின் நடுவில், ஒற்றைக் காலில், காற்றையே புசித்து என்றெல்லாம் தவத்தைப் பற்றிய வர்ணனைகளின் நோக்கம். இவ்வாறு ஒருமுகப்பட்ட தீவிரத்துடன் மேற்கொள்ளப்பட்டதன் நோக்கம் நிறைவேறுவதை இறைவனாலேயே மறுக்க முடியாது, அது தனக்குப் பாதகமாகவே இருந்தாலும் என்ற கருத்தைச் சொல்வதுதான் பஸ்மாசுர புராணக் கதை. இது கருத்தை வலியுறுத்த மிகைபடச் சொல்லும் முறை.கர்மம் என்ற கோட்பாட்டை உணர்த்தும் கதையுங் கூட. தெய்வத்தா லாகாதெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும் என்கிறார், வள்ளுவரும். செய்யும் கருமத்திற்கு உரிய எதிர்வினை இருந்தே தீரும். மேலும் இறைச் சக்தி எவரையும் சோதிப்பதில்லை. தீதும் நன்றும் பிறர் தர வாரா. ஆன்மிகத்துடன் எல்லாவற்றையும் போட்டுக் குழப்பிக் கொள்ளலாகாது. எவ்வித உள் நோக்கமும் இன்றி பக்திக்காகவே பக்தி செய்தால் அதற்கும் கர்மவினைப் பிரகாரம் பலன் உண்டு. நீ பக்தி செய்யும் தெய்வம் எந்த வடிவம் கொண்டதாய் உன்னால் வரித்துக் கொள்ளப்படுகிறதோ அதே வடிவில் உனக்கு விமோசனம் அளிப்பதும் உனது கர்ம வினையின் பயனே. உனது தர்மம் இன்னதென்று அறிந்து அதனை அனுசரித்தலும் அதே போல் கர்மத்தையும் இன்னதெனத் தெரிந்து சரிவரச் செய்து முடித்தலும் அவற்றுக்கு உரிய பலனை அளித்தே தீரும். நமது புராணங்களை ஆழ்ந்து நோக்கினால் தர்மம்-கர்மம் என்ற தூண்களை வலியுறுத்துவது புலப்படும். இறைச் சக்தி நமக்கு சகாயம் செய்வதற்காகவே உள்ளது. துன்புறுத்துவதற்காக அல்ல. ஆனால் எதை விதைக்கிறோமோ அதுவே விளையும். புராணங்களை ஸீரியஸாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்றுதான் சித்த புருஷன் மகாகவி பாரதியும் ஒரு கட்டுரையில் குறிப்பிடுகிறான். ஆனால் சிவபிரான், உமையம்மை, திருமால் திருமகள் என்றெல்லாம் இருக்கிறார்களா என்றால் நிச்சயமாக இருக்கிறார்கள் அவரவர் இறைச் சக்தியை ஆராதிக்கும் விருப்பத்திற்கு ஏற்ற வடிவில் நம் மனதுள் பதிவது இறைச் சக்தியால் ஆகாத காரியமாக இருக்க முடியுமா?
    -மலர்மன்னன் ,

  11. சகோதரரே! இந்த தலத்தில் ஏகாதசி விரதம் பற்றிய கட்டுரையை எதிர்பார்கிறேன். மற்றும் இன்றைய மக்கள் பின்பற்ற குறிப்புகளையும் எதிர்பார்கிறேன். “ஜெய் காளி”

  12. ஸ்ரீமான் கந்தர்வன், க்ஷமிக்கவும். நான் ச்ரத்தைக்குறைவுடன் பாகவதம் வாசிப்பதால் என் நினைவுக்கு எட்டவில்லையா தெரியவில்லை. பஸ்மாஸுர உபாக்யானாம் பாகவதத்தில் எங்கே என நினைவில் வரவில்லையாதலால் தாங்கள் ஸ்கந்தம் மற்றும் அத்யாய விபரம் கொடுத்தால் தன்யனாவேன்.

  13. அன்புள்ள கிருஷ்ணகுமார்,

    //பஸ்மாஸுர உபாக்யானாம் பாகவதத்தில் எங்கே என நினைவில் வரவில்லையாதலால் தாங்கள் ஸ்கந்தம் மற்றும் அத்யாய விபரம் கொடுத்தால் தன்யனாவேன்.//

    பத்தாம் ஸ்காந்தம் எண்பத்து எட்டாம் அத்தியாயம்.

  14. திரு கந்தருவன் அவர்கள் கூறியபடி பசுமாசுரன் கதை அல்லது மோகினி கதை பற்றிய சர்ச்சையை வளர்க்க விரும்பவில்லை யெனினும் இலக்கிய சுவை பற்றிய ஒருசெய்தியைத் தமிழ் ஹிந்து வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.
    அப்பைய தீட்சிதேந்திரர் ஒருசமயம் திருவிரிஞ்சிபுரத்திலோ வேறெங்கோ ஒரு ஐயனார் திருவுருவச் சிலையைக் காண நேர்ந்தது. அவ்வுருவம் வலக்கை சுட்டுவிரலை மூக்கின் மேல் வைத்திருந்தது.
    அத்திருவுருவத்தைக் கண்ட கவியரசர் அப்பைய தீட்சிதேந்திரருக்கு ஒரு கற்பனை பிறந்தது. ஒருவர் தீவிரமாகச் சிந்திக்கும்போது அல்லது யோசனை செய்யும்போது அவருடைய வலக்கைச் சுட்டுவிரலை அவரையும் அறியாமல் மூக்கின் மேல் வைத்தலை உலகில் காண்கிறோம். அப்படித் தீவிரமான யோசனை சாத்தனாருக்கு என்னவாக இருக்கும்?
    மோகினி அவதாரம் எடுத்த திருமால் சிவனுக்காக(!!) பசுமாசுரனைப் பஸ்மம் செய்து பின் தேவர்களுக்கு அமுதத்தைப் பகிர்ந்தளித்தார். அப்பொழுது, (‘கொண்டதன் தவத்தை அழிக்க வந்த காமவேளை, அவனுடைய தாதை காண எரித்த”(சுந்தரர் தேவாரம்) சிவன், மோகினியின் அழகைக் கண்டு மோகம் கொண்டு புணர்ந்தார். சாத்தன் பிறந்தான். சாத்தன் தன் பிறப்புக்குக் காரணமான திருமால், சிவன் இருவரையும் கண்டார். அன்பால் “எந்தாய்” என்றார். எந்தாய் என்ற இச்சொல் ‘என்னுடைய தாயே’, என்றும், ‘என்னுடைய தந்தையே’ என்றும் இருபொருள் பட நிற்கும். மோகினியாகிய திருமாலைத் தாயென்றும் சிவனைத் தந்தையென்றும் இருவரையும் ஒருசேரச் சாத்தன் ‘எந்தாய்’ என்ற ஒரு பெயரில் விளித்தார்
    இவ்வாறு இவ்விருவரையும் சாத்தன் அழைத்தபோது அங்கு திருமாலின் பத்தினியாகிய திருமகள் வந்தார். மோகினியாகிய திருமாலை ‘எந்தாய்’ என்று அழைத்த சாத்தன், திருமாலின் பத்தினியாகிய திருமகளை எந்த முறைப் பெயரால் அழைப்பது என்று தீவிரமாக யோசிக்கும்போது மூக்கின்மேல் விரலை வைத்தார். மூக்கின்மேல் வைத்த விரலை இன்னும் அவர் எடுக்கவில்லை!.
    இக்கருத்தமைய அப்பைய தீட்சிதேந்திரர் அவர்கள் வடமொழிச் சுலோகம் ஒன்றைப் பாடினார்.( இப்பாடலைத் தெய்வத்தின் குரலில் காஞ்சிப் பரமாச்சாரியர் ஓரிடத்தில் கூறியுள்ளதாக என் நினைவு)
    அப்பைய தீட்சிதேந்திரரின் வடமொழிச் சுலோகத்தை ஒரு தமிழ்க்கவிஞர் ஒருபிள்ளைத்தமிழில் மாசாத்தன் துதியாக மொழிபெயர்த்துள்ளார்.
    அப்பாடல் வருமாறு:
    ”வேலையமு தத்தைவிபு தர்க்குதவு மோகினி
    விடத்தைநுகர் அரன்மகிழுமா
    வீழிவாய் யமுதருத்திப் பெற்ற பாலகன்
    விண்டுவை விடைப்பாகனைக்
    கோலவெந்தாய் யென்றழைத்துக் குலாவிநற்
    கோகனக மகளை முறையென்
    கூறுவ தெனத்திகைத் தின்னமுந் தேறாத
    குழவிவந் தினிது காக்க”

  15. இந்தக் கட்டுரையில், நிச்சயமாக, சிவ நிந்தனைப் பொருளில்தான் பஸ்மாசுரப் படலம் இடம்பெற்றிருக்கிறது.

    ஸ்ரீமத் பாகவதம் நாராயணனின் பரம்பொருட் தன்மை குறித்து வரும் புராணம். அதில் மட்டுமல்ல. பெரும்பாலான புராணங்களில் அது யாரைப் பரம்பொருள் என்று குறிப்பிடுகிறதோ அந்த மூர்த்தியைத் தவிர மற்ற தெய்வங்களைக் குறைத்துத்தான் பேசப்பட்டுள்ளது. அது வேறு கதை.

    திருமால் திருமகள் மூலம் பக்தியை விளக்க வந்த இந்தக் கட்டுரை தேவையே இல்லாமல் இறுதி வரிகளில் சிவபெருமானைப் பற்றி அவதூறு செய்கிறது. அந்த வரிகளை நீக்கிவிட்டுப் படித்துப் பாருங்கள். கட்டுரை மிகச் சிறப்பாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *