எழுமின் விழிமின் – 2

சுவாமி விவேகானந்தரின் எழுச்சியூட்டும் சிந்தனைகள்

தொகுப்பு:  ஏகநாத் ரானடே (Rousing call to the Hindu nation)
தமிழில்:  ஆர்.கோபாலன்
வெளியீடு: விவேகானந்த கேந்திர பிரகாசன் டிரஸ்ட், சென்னை.

<—  முந்தைய பகுதி

தொடர்ச்சி..

நமது புண்ணிய பூமி – அதன் புகழோங்கிய பண்டைக் காலம்

ந்தப் பூவுலகில் புனிதமான புண்ணிய பூமி என்று உரிமை கொன்டாட ஏதாவது ஒரு நாடு இருக்குமானால், பூவுலக ஆன்மாக்கள் தம் கர்ம பலன்களைக் கழிக்க வேண்டிய ஒரு நாடு என்று இருக்குமானால், இறைவழியை நோக்கிச் செல்லும் ஒவ்வோர் ஆன்மாவும் தன் இறுதி வீடாக வந்தடைய வேண்டிய நாடு என்று ஒன்று இருக்குமானால், மனிதகுலம் அன்பின் சிகரத்தை, பரந்த உள்ளத்தின் உச்ச நிலையை, தூய்மையின் உயரத்தை, அமைதியின் எல்லையை, எல்லாவற்றுக்கும் மேலாக ஆன்மீக உள்நோக்கின் சிகரத்தை எட்டிய நாடு என்று ஒன்று இருக்குமானால் – அது தான் பாரதமாகும்.

பண்டைக்கால வரலாறு:

பாரதத்தின் பண்டைக்கால வரலாறு முழுவதும் பிரம்மாண்டமான சக்திகளின் பலதரப்பட்ட செயல்வகைகளும், பல்வேறு சக்திகளின் ஒடுக்க முடியாத தாக்குதல்களும் எதிர்த்தாக்குதல்களும் இணைந்து நிறைந்து விளங்குவதாகும். இவையனைத்துக்கும் மேலாக, தெய்வீகப் பரம்பரை ஒன்றின் ஆழ்ந்து பரந்த சிந்தனைக் கருவூலங்களால் நிரம்பியதும் ஆகும். சரித்திரம் என்ற சொல்லுக்கு மன்னர்கள், சக்கரவர்த்திகளின் வரலாறு என்றும், வெற்றுக் கதை என்றும், சமூகத்தின் சித்திரம் என்றும் மட்டும் பொருள் கொள்வதானால் – அவ்வப்பொழுது ஆண்ட மன்னர்கள் தமது தீய விருப்பங்கள், இறுமாப்பு,பேராசை முதலிய தீய குணங்களால் சமூகத்தை ஒடுக்கிய விவரங்களும், மன்னர்களின் நல்ல குணங்கள், தீய குணங்களால் விளைந்த செயல்களின் விவரங்களும், அந்த செயல்களால் சமூகத்தில் என்ன விளைவு ஏற்பட்டது என்ற விவரங்களும் ஆகிய இவை தான் சரித்திரம் என்று கருதப் படுமானால் – அத்தகைய வரலாற்று நூல்கள் பாரதத்துக்குக் கிடையாது என்று கூறிவிடலாம்.

ஆனால் குறிப்பிட்ட சில மன்னர்கள், சக்கரவர்த்திகள் இவர்களின் வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்களையும் அவர்களுடைய வம்சாவளியையும் விட, பாரத நாட்டின் எண்ணற்ற சமய இலக்கியங்களின் ஒவ்வொரு வரியும், கடலையொத்த பாடல்களும், தத்துவ ஞான, விஞ்ஞான நூல்களும், உலகில் நாகரிகம் உதயமாவதற்கு முன்பே மனிதக் கூட்டம் பசி தாகத்தினாலும் ஆசை மோகத்தினாலும் தூண்டப் பட்டு எவ்வாறு, எந்தெந்த நிலையிலிருந்து படிப்படியாக முன்னேறி, மேலே சென்றது என்பதை நமக்கு ஆயிரம் மடங்கு தெளிவாகக் காட்டுகின்றன.

அவர்களுடைய உள்ளத்தை அழகு கொள்ளை கொண்டது. அந்த மக்கள் தொகுதிக்கு மகத்தான, வெல்லுதற்கரிய அறிவுச் சக்தி இருந்தது. பலவிதமான உணர்ச்சிகள் அவர்களுடைய உள்ளங்களில் அலைவீசின. அவர்கள் சிறப்பான ஒரு மேல்நிலையைப் பலவித வழித் துறைகளின் மூலம் எட்டிப் பிடித்தார்கள். இயற்கையுடன் அவர்கள் பற்பல நூற்றாண்டுகளாக நடத்திய போர்களில் எண்ணிலடங்காத வெற்றிகள் பெற்றனர். அப்பொழுது அவர்கள் திரட்டிய வெற்றிக் கொடிகள் மலைபோல் குவிந்தன. ஆனால் அவை சமீப காலமாக, பாதகமான சந்தர்ப்பச் சூழ்நிலைகளால் கிழிந்து சிதைந்து போயின. காலப்போக்கினால் அவை மக்கி மாய்ந்தன. இருப்பினும் பண்டைப் பாரதத்தின் புகழ், பெருமைகளை அவை உலகுக்குப் பறைசாற்றுகின்றன.

ஆரிய இனம்:

ந்த மக்கள் இனத்தவர் மத்திய ஆசியாவிலிருந்தோ, வட ஐரோப்பாவிலிருந்தோ, வடதுருவப் பிரதேசங்களிலிருந்தோ புறப்பட்டு மெல்ல முன்னேறி, படிப்படியாகக் கீழே வந்து, கடைசியாகப் பாரதத்தில் குடிபுகுந்து, அதைப் புனிதப் படுத்தினார்களா அல்லது பாரதமாகிற புனித பூமிதான் அவர்களது தாயகமாக விளங்கியதா என்று அறிய நமக்கு இப்போது தக்க சான்றுகள் கிடையா.

அல்லது மிக விரிந்துள்ள இந்த இனம, பாரதத்திற்குள்ளோ அல்லது வெளியிலோ வசித்திருந்து இயற்கையின் சட்டதிட்டங்களுக்கு ஏற்ப, தனது ஆதி வீட்டிலிருந்து குடி பெயர்க்கப் பட்டு, காலப் போக்கில் ஐரோப்பாவிலும் மற்ற இடங்களிலும் குடிபுக வேண்டி வந்ததா? அந்த மக்கள் நிறம் வெளுப்பா,கறுப்பா? அவர்களது கண்கள் நீலமா, கறுப்பா? அவர்களது தலைமயிர் தங்க நிறமா, கறுப்பு நிறமா? இது போன்ற விவரங்களை எல்லாம் நிரூபிக்க இப்பொழுது போதுமான ஆதாரம் கிடையாது. ஆனால் விதிவிலக்காக ஓர் ஆதாரம் மட்டும் உண்டு, அதாவது சில ஐரோப்பிய மொழிகளுடன் சம்ஸ்கிருதத்துக்கு ஆழ்ந்த உறவு உள்ளது என்பதே அது.

சுவாமி விவேகானந்தர் (பாராநாகூர், 1887)

அதே போன்று, இன்றைய நவீனகால பாரத மக்கள் அனைவரும் கலப்பின்றித் தூய்மையாக அந்த இனத்தின் வழிவந்தவர்கள் தானா? இவர்களின் இரத்தக் குழாய்களில் முந்தைய இனத்தின் இரத்தத்தில் எவ்வளவு அம்சம் ஓடுகிறது? அல்லது அந்த அளவுக்காவது இரத்தபாசம் இக்குலத்துக்கு இருக்கிறதா? – இது போன்ற கேள்விகளுக்கு முடிவான பதில் கிடைப்பது எளிதல்ல (*).

இருப்பினும் இதைப் பற்றி நாம் முடிவு கட்டாததால் அதிகமாக எதையும் இழந்து விடவில்லை.

ஓர் உண்மையை மட்டும் நாம் நினைவிற் கொள்ளவேண்டும். எங்கே நாகரீக சூரியன் முதலில் உதயமாயிற்றோ, ஆழ்ந்த சிந்தனை தனது முழுச் சிறப்புடன் எங்கு முதலில் வெளிப்பட்டதோ, அந்த உள்ளத்தில் பிறந்த மைந்தர்கள் நூறாயிரக் கணக்கானவர்கள் இன்றும் இருக்கிறார்கள். இந்த இனத்தின் சிந்தனைகளையும் உணர்ச்சிகளையும் குலச்செல்வமாகக் கொண்டாடுகிறவர்கள் இன்றும் அவற்றின் மீது உரிமை கொண்டாட ஆயத்தமாக இருக்கிறார்கள்.

மலைகளையும், நதிகளையும் கடந்து, தூரம், காலம் ஆகியவற்றின் எல்லைகளையெல்லாம் தாண்டி, பாரதச் சிந்தனையாகிற இரத்தம் உலகிலுள்ள பிற நாடுகளின் உதிரக் குழாய்களில் ஓடிப் பாய்ந்துள்ளது; இன்றும் பாய்ந்து வருகிறது. அது சில சமயங்களில் தெளிவான முறையிலும் வேறு சில வேளைகளில் யாரும் அறியாத நுண்ணிய முறையிலும் ஓடுகின்றது. உலகிலுள்ள பண்டைய ஞானச் செல்வத்தின் பெரும்பங்கு ஒருவிதத்தில் நமக்கே சொந்தமானதாக இருக்கும்.

[ (*)-சுவாமிஜி ஏறக்குறைய 120 வருடங்கள் முன்பு கூறியது இது. தற்போது அகழ்வாராய்ச்சிகளும், நவீன அறிவியல் துறைகளின் பங்களிப்பும், ஒரு நூற்றாண்டு வரலாற்று ஆராய்ச்சிகளும், வேத மந்திரங்களை அளித்த ஆரியரின் தாயகம் பாரதமே என்பதையும், காலனியம் விதைத்த இனவாதக் கோட்பாடுகள் முற்றிலும் பொய்யானவை எனபதையும் அனேகமாக நிரூபித்து விட்டன என்றே கருதலாம். கவனிக்க வேண்டியது என்னவென்றால், இனவாதமும் இனத்தூய்மை வாதங்களும் உலகெங்கும் கோலோச்சிய அந்த காலகட்டத்திலும் சுவாமிஜி, அந்த கருத்தாக்கங்களை புறம் தள்ளி பாரதத்தின் பண்பாட்டுச் செழுமையையே முன்வைக்கிறார் என்பது தான்]

பகுத்தறியும் உள்ளம்:

“நாஸத: ஸத் ஜாயதே”. இல்லாததிலிருந்து (ஒரு பொருளிலிருந்து) இருப்பது என்பது உண்டாகாது.

எது இருக்கிறதோ, அதற்கு இல்லாத ஒன்று காரணமாக ஆக முடியாது. ஒன்றும் இல்லாததிலிருந்து ஏதோ ஒன்று வர முடியாது. சர்வ வல்லமையும் பெற்ற காரணகாரிய விதி இல்லாத காலமோ, இடமோ இருந்ததேயில்லை. ஆரிய இனம் எத்தனை தொன்மை வாய்ந்ததோ அத்தனை தொன்மையானது இந்தக் கொள்கை. ஆதி கவிகளாலும், தத்துவ ஞானிகளாலும் நிலை நாட்டப் பட்டுள்ள இந்த எல்லைக் கல்லின் மீது தான் ஹிந்து இன்றைக்கும் தன் வாழ்வின் திட்டத்தை எழுப்புகிறாள்(ன்).

ஆரம்ப நிலையில் இருந்த இனத்தவருக்கு விஷயங்களைத் தெரிந்து கொள்வதில் ஓர் ஆர்வம் இருந்தது. அது விரைவிலேயே துணிச்சலாகப் பகுத்தாராய்ந்து பார்க்கும் திண்மை பெற்றது. தொடக்கத்தில் ஆரம்பகாலச் சிற்பியின் கை நடுக்கத்தைப் போல இந்த முயற்சி இருந்தாலும், நாளாவட்டத்தில் அந்த முயற்சி ஒழுங்கான சாஸ்திரமாக உருப்பெற்று, துணிச்சலான முயற்சியாக மாறி, வியப்பூட்டக் கூடிய பெரும் பலன்களைத் தந்தது.

இந்த இனத்தவரின் (#) துணிவு தம் யாக குண்டங்களின் ஒவ்வொரு கல்லையுமே துருவி ஆராயத் தூண்டியது. புனிதமான நூல்களின் ஒவ்வொரு சொல்லையும் அலசிப் பார்த்து, ஒட்டியும் இணைத்தும் பொடிப்பொடியாக்கியும் பார்க்க வைத்தது. சடங்குகளை ஓர் ஒழுங்கில் அமைத்தது; மாற்றியமைத்தது; சந்தேகித்ததது; மறுத்தது அல்லது விளக்கியது.

[ (#) இங்கு இனம் என்பது இந்துக்கள் அனைவரையும் குறிக்கிறது]

அந்தப் பகுத்தறிவால் தமது கடவுளைக் கீழ்மேலாக மாற்றினார்கள். எங்கும் நிறைந்த – எல்லாம் வல்ல – எல்லாமறிந்த – தமது பரம்பரைக்கே தந்தையாய் விண்ணில் வாழ்கின்ற – பிரபஞ்சத்தையே படைத்த கடவுளுக்கு – இரண்டாந்தர இடம் தான் தந்தார்கள்; அல்லது அவனை உபயோகமற்றவனாகக் கருதி எடுத்து வெளியே வீசி விட்டார்கள். பிறகு உலகச் சமயம் ஒன்றை (பௌத்தம்) இன்றும் பலர் பின்பற்றும் சமயத்தை, அவனில்லாமலே துவக்கினார்கள்.

பலவிதமான யாகமேடைகளைக் கட்டுவதற்காகக் கற்களைப் பல வடிவ முறைகளில் அமைத்து வைத்ததன் மூலம் ‘ஜியோமிதி’ விஞ்ஞானத்தை வளர்த்தார்கள். தமது வழிபாட்டையும், அர்க்கிய ஆகுதிகளையும் சிறிதும் காலந்தவறாமல் நடத்துவதற்காக முயன்றபோது எழுந்த வான சாஸ்திர அறிவால் உலகைத் திடுக்கிட வைத்தார்கள்.

கணித சாஸ்திரத்தை வளப்படுத்த முற்காலத்தவரோ, நவீன காலத்தவரோ செய்த பணியில், எந்த இனத்தவரையும் விட அதிகமாக ஆரிய இனத்தவரின் பங்கினை அமைய வைத்தது அந்தப் பகுத்தறிவு. ரசாயன சாஸ்திரம், மருந்தில் உலோகங்களின் கலவை, சங்கீத ஒலிகளின் ஒழுங்குமுறை, நரம்பு வாத்தியக் கருவிகளைப் புதிதாகக் கண்டுபிடித்தல் ஆகிய இந்த ஞானமெல்லாம் நவீன ஐரோப்பிய நாகரீகத்தை வளர்க்கப் பெரிதும் துணை செய்தன.

அழகான கற்பனை நீதிக்கதைகள் வழியாக குழந்தை உள்ளத்தை வளர்க்கும் விஞ்ஞானக் கலையை அப்பகுத்தறிவு கண்டுபிடிக்க வைத்தது. நாகரீகம் வாய்ந்த ஒவ்வொரு நாட்டிலுமுள்ள ஒவ்வொரு குழந்தையும் அதனை இன்று தனது குழந்தைப் பள்ளியிலோ, பாலர் பள்ளியிலோ கற்று, வாழ்க்கை முழுவதும் அந்த நினைவு முத்திரையைக் கொண்டு செல்கிறது.

[சுவாமிஜி அவருக்கு இயல்பாக அமைந்த தேசப் பற்றால் மட்டுமே இந்தப் புகழ்மொழிகளைக் கூறவில்லை, நன்கு ஆய்ந்தறிந்த பின்னரே இவ்வாறு கூறினார் என்பது தெளிவு. அவருக்கு சமகாலத்தில் வாழ்ந்த புகழ்பெற்ற அமெரிக்க எழுத்தாளர் மார்க் ட்வெய்ன் (1835 – 1910) பாரதம் பற்றிக் கூறியதையும் இதனுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம் –

“India is the cradle of the human race, the birthplace of human speech, the mother of history, the grandmother of legend, and the great grand mother of tradition. Our most valuable and most astrictive materials in the history of man are treasured up in India only!”]

கவியின் ஞானதிருஷ்டி:

ந்த இனத்தின் இந்தக் கூர்மையான பகுத்தாய்வுக்கு முன்னும் பின்னும் பட்டு உறை போட்டாற்போல, மற்றொரு மகத்தான, சிறப்பான மனசக்தி ஒன்று உள்ளது. அது தான் கவியின் ஞானதிருஷ்டி. அந்த இனத்தின் சமயம், அதன் தத்துவம், அதன் வரலாறு, அதன் அறநெறி, அதன் அரசியல் அறிவு ஆகியவையெல்லாம் கவிஞனின் சொல்லோவியமாகிய பூந்தொட்டிகளில் மலரும்படி செய்யப் பெற்றன. மொழிகளிலே அதி அற்புதமான சம்ஸ்கிருதம் (அல்லது பண்பட்ட மொழி) அந்தத் தத்துவங்களை விளக்கவும், எளிதில் கையாளவும் மற்றெல்லா மொழிகளையும் விட நன்றாகத் துணை புரிந்தது. கணிதத்திலுள்ள கடினமான உண்மைகளை வெளியிடுவதில் கூட, கேட்பதற்கு இனிமையான கவிதைகள் துணை செய்தன.

ஹிந்து இனத்தினை உள்ளூர உந்தி உருவாக்கப் பெரிதும் காரணமாக இருந்த இரு பெரும் சக்திகளாக இந்தப் பகுத்தறியும் சக்தியும், கவிஞரின் திவ்ய திருஷ்டியுமே இருந்தன. தேசீய ஒழுக்கத்திற்கு இந்த இரண்டும் ஆதார சுருதி போல் அஸ்திவாரமாக அமைந்தன. இந்த இரண்டின் இணைப்புச் சேர்க்கை தான் ஐம்புலன்களுக்கு அப்பாற்பட்டு மேலே செல்ல இந்த இனத்தை முன் தள்ளுகிறது. இது தான் அவர்களது ஞான ஆராய்ச்சியின் ரகசியம். கொல்லர்கள் படைத்துத் தரும் ரம்பத்தைப் போல அவர்களது கற்பனைச் சக்தி இருந்தது. அந்த ரம்பத்தால் இரும்புப் பாளங்களையும் அறுக்க முடியும். ஆனால் அதே சமயத்தில் வட்டமாக அதனை வளைக்கவும் முடியும். அத்தகைய ரம்பம் போல இருந்தது அவர்களது சிந்தனை.

வெள்ளியிலும் தங்கத்திலும் கூட அவர்கள் கவிதைகளைச் செதுக்கினார்கள். நகைகளின் எழிற்கோவை, பிரமிப்பூட்டும் சலவைக்கல் அற்புதங்கள், வர்ண ஜாலங்களின் இன்னொளி, அருமையான ஆடையணிகள் – இவையெல்லாம் இந்த உலகத்துக்கல்ல, கனவிற்காணும் அற்புத உலகத்துக்கே சொந்தமெனத் தோன்றும். இவற்றுக்கெல்லாம் பின்னணியாக, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தத் தேசீய சிறப்புக் குணம் வேலை செய்து வந்துள்ளது.

கலைகளும் விஞ்ஞானங்களும், ஏன், வீட்டு வாழ்க்கையில் காணப்படும் கசப்பான நிகழ்ச்சிகள் கூட, ஏராளமான கவிதைக் கருத்துக்களில் தோய்ந்திருக்கின்றன. இவை வளர்ந்து முன்னேறின. புலனுணர்ச்சிகள், புலன்களுக்கு மேற்பட்ட ஒன்றைத் தொடும் அளவுக்கு உயர்ந்து சென்றன. எது உண்மை என்று மதிக்கப் படுகிறதோ, அதுவே ரோஜா இதழ் நிறம் போல் கவித்திறன் வழியாக ஒரு மாய எழில் பெறுகிறது.

இந்த இனத்தின் ஆரம்பகாலக் காட்சி கூட இந்த குணப்பண்பு ஏற்கனவே அதனிடம் இருந்ததைக் காட்டுகிறது. இந்த குணப்பண்பைத் தன் கைக் கருவியாக அது ஓரளவுக்குப் பயன்படுத்தியது குறித்த வர்ணனையை வேதங்களில் காண்கிறோம். அந்நிலையை அடையுமுன் பலவித சமய, சமூக அமைப்புகளைத் தாண்டி அது முன்னேறி வந்திருக்க வேண்டும்.

வேத காலத்தில் ஒழுங்கான முறைப்பட்ட தெய்வ வடிவங்களைக் காண்கிறோம். விரிவான சடங்குகள் இருந்தன. பல்வேறு தொழில்கள் இருந்ததால் வழிவழியான ஜாதிகளாகச் சமூகம் பிரிக்கப் படவேண்டிய அவசியமிருந்தது. எத்தனையோ விதமான தேவைப் பூர்த்திகளும், வாழ்க்கையின் பலதரப்பட்ட சுகபோக சாதனங்களும் அப்பொழுதே இருந்தன.

(தொடரும்)

அடுத்த பகுதி  —>

One Reply to “எழுமின் விழிமின் – 2”

  1. ஜியோமிதி, கணித சாஸ்திரம், வான சாஸ்திரம், நீதிக் கதைகள்… புலன் உணர்ச்சிகள் புலன்களுக்கு மேம்பட்ட ஒன்றைத் தொடுதல் என்று எல்லாம் புராதன இந்தியாவின் சொத்துக்கள். இவற்றோடு இந்தப் பெருமைக்குரியவர்களின் தோற்றம் பூமியின் எந்தப் புள்ளியில் என்கிற ஆராய்ச்சி தேவையற்றது என ஸ்வாமிஜி அருளியிருப்பது அற்புதம். கட்டுரையாளருக்கு வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *