பள்ளிக்கல்வி – 1

இடைநிலைக்கல்வி போதிப்பவனாக சுமார் 35 ஆண்டுகள் இருந்ததால் பல உண்மைகளை உணர நேர்ந்தது. யதார்த்தமான சூழ்நிலைகளையும், அனுபவங்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

குழந்தைகளுக்கு கல்வி புகட்டும் விஷயத்தில் புத்திசாலித்தனம், புத்திகூர்மை, அறிவுத்திறன் என்ற பதங்களை நாம்  குறிப்பிடுகிறோம்.  தேர்வுகளில்  நல்ல  மதிப்பெண்களை  பெறுவதையோ அல்லது  பள்ளியிலோ  கல்லூரியிலோ  சிறந்து விளங்குவதையோ  மட்டும்  இவ்வார்த்தைகள் குறிப்பிடமாட்டா. ஒருவன் வாழ்க்கையை  வாழும்  விதம்,  பல்வேறு மாறுபட்ட சந்தர்ப்பங்களில்,  புதிய சூழ்நிலைகளில், மிகக்குழப்பமான  நேரங்களில் அவன் நடந்து கொள்ளும் விதத்தையே  புத்திகூர்மை என்போம். நாம் எவ்வளவு  விஷயங்களைத் தெரிந்து வைத்திருக்கிறோம் என்பது முக்கியமல்ல; தெரியாத ஒரு சந்தர்ப்பத்தில் நாம் எப்படி நடந்து கொள்கிறோம் என்பதைப் பொறுத்தே தம்மை புத்தி கூர்மையுடையவர் என ஒத்துக்கொள்ளலாம்.

புத்திசாலிக் குழந்தை வாழ்க்கையைப் பற்றியும் அதன் மகத்துவங்கள் பற்றியும் அறிவதில் ஆர்வம் காட்டுகிறது. புத்திசாலிக் குழந்தைக்கும் வாழ்க்கைக்கும் இடையில்  எந்தவித  தடையும் இருப்பதில்லை. மந்தமான குழந்தை ஆர்வம் மிகக் குறைந்தும், சுற்றி நடப்பவைகளில் ஆர்வமின்றி அலட்சியமாகவும், தானாகவே கற்பனை செய்து கொண்ட உலகத்தில் வாழவும் விரும்புகிறது.  புத்திசாலி  குழந்தை  ஒரு  செயலை  ஒரு  வழியில்  செய்ய முடியாவிடின்  மாற்றுவழியை  பயன்படுத்தி  செய்ய முயல்கிறது.  தோல்விகளை  சகித்துக் கொள்வதோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து தன் பிரச்சனைக்கு தீர்வு வரும் வரை முயற்சி மேற்கொள்கிறது. மந்தமான குழந்தை  புதிய வழிமுறைகளை  பற்றிச் சிந்திக்கவே பயப்படும்.

புத்திசாலிக் குழந்தை  சோதித்துப் பார்க்க விரும்புகிறது. எந்த ஒரு புதிருக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட வழிகள் உள்ளன என்னும் விதியை உணர்ந்து வாழ்கிறது. ஒரு செயலை ஒரு வழியில் செய்ய முடியா விட்டால் புத்திசாலிக் குழந்தை மற்றொரு வழியைத்  தேர்ந்தெடுத்து முயற்சி செய்கிறது. மந்தமான குழந்தை புதியமுறைகளைப் பற்றி சிந்திக்கவே பயப்படுகிறது ; மற்றவர்கள் தூண்டினாலும் முயற்சிப்பதில்லை. தானே செயல்படும் சூழ்நிலையையே புத்திசாலிக் குழந்தை விரும்புகிறது. மற்றவர்கள் உதவி செய்து கற்கும் நிலையை விரும்புவதில்லை. ஆனால் மந்தமான குழந்தை யாராவது சொல்லிக் கொடுத்து விடையை கண்டுபிடிக்க உதவி செய்வார்களா? என எதிர்பார்க்கிறது.

பல இடங்களில் இந்த 2வது நிலைக் குழந்தைகளையே அதிகம் கவனிக்கிறார்கள். சிந்தனையாளர்களைப் பற்றிக் கவலைப்படாதீர்கள்.  மந்த  நிலையில் உள்ளவனை  மட்டும் கடைத்தேற்றுங்கள். நமக்குத்  தேவை  100%  தேர்ச்சி  என்று  என் பள்ளியின் தலைமையாசிரியர் என்னிடம் அடிக்கடி கூறுவார். புத்திசாலிப்பையன்  தனக்குப்  புரியாத  புத்தகத்தைப்  படிக்க ஆர்வத்துடன்  முயல்வான்.  அவனது எண்ணம் சிறிது படிக்க ஆரம்பித்தால் புரிய ஆரம்பித்துவிடும் என்பதே. மாறாக மந்தமான மாணவன் நழுவி விட முயல்வான். ஒரு குழந்தை தன் 3 வயதுக்குள் கற்றுக் கொள்ளும் அளவு மிகவும் அதிகமானது. வயது முதிர்ந்த மற்ற பருவங்களில் ஒருவன் இந்த அளவு கற்பது என்பது மிக அரிதான ஒன்று. நமது கற்றுக் கொள்ளும் திறன் நமக்கு வயதாக ஆக குறைந்து விடுகிறது? ஏன்? *

பெரியவர்களாகிய நாம் தான் குழந்தைகளின் புத்திசாலித்தனம் மற்றும் சுயமுன்னேற்றத்திறனை பெரும்பாலும் அழித்துவிடுகிறோம்.  ஆசிரியரை  திருப்திப்படுத்தப்  பழக்குகிறோம். பெற்றோரை  குஷிப்படுத்த  பழக்குகிறோம்.  புதியவைகளை சிந்திக்க அனுமதிப்பதில்லை. கடினமான விஷயங்களில் ஈடுபடவே விடாமல் பயமுறுத்தி வைத்துள்ளோம். நல்ல குழந்தை என்றால் நாம் விரும்புவதை செய்யும் குழந்தையாக இருக்க  வேண்டும் என விரும்புகிறோம். சிறிய வயதிலேயே நட்சத்திரம் அளிப்பது, நூற்றுக்கு நூறு என்றால் சபாஷ் போடுவது, பள்ளியின் ரிப்போர்ட் கார்டில் 0 என்ற (Out Standing) குறிப்பு – ஆசிரியரின் மற்றும்  தலையாசிரியரின் அட்டவணையில்  நம் குழந்தை இருக்க வேண்டும் என விரும்புகிறோம். முதல்  மார்க் வாங்க  வேண்டும் – படிப்பதின்  நோக்கமே  Best Marks என்னும்  எண்ணத்தை  வளர்த்து விடுகிறோம்.  ஆக  குழந்தைகளின்  விருப்பங்களும், திறமைகளும் ஜாலியன் வாலாபாக்கில் நடந்த படுகொலையைப் போல சுட்டுப் பொசுக்கப்படுகின்றன. இது போன்ற மனப்பாடச் சூழலில் வாழும் குழந்தை 10 வயதாவதற்குள் கேள்வி கேட்பது என்பதையே மறந்து விடுகிறது. அதுமட்டுமல்ல. ஏன்? எதற்கு? எப்படி? எனக் கேட்பவர்களையும் கிண்டல் செய்ய ஆரம்பிக்கிறது.

குழந்தைகள்  அவர்களது  சொந்தமான  அறிவை  பயன்படுத்த  நாம்  விடுவதில்லை. அவர்களது புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்த விடாமல் test, test test எழுவதையே வாழ்க்கையின் லட்சியமாக்கி விடுகிறோம். இந்த method ல் தான் குழந்தைகள் வாழ்க்கையில் பிரகாசம் அடைவார்கள் என்று குழந்தைகளை Brain Wash செய்து விடுகிறோம்.

ஆசிரியர்  என்ன  செய்வார்,  தனக்கு முன் மலைபோல குவிந்துள்ள  பேப்பர்களை திருத்தி மதிப்பெண் வழங்க  வேண்டும். இது ஒன்றை  மட்டும்  செய்வதே  தன்  ஜென்ம  சாபல்யமாக  அவர்  நினைக்கிறார். அதிகம்  கேள்வி  கேட்கும்  மாணவர்களை  அவர் விரும்புவதில்லை. ஒரு மாணவனை பொறுத்தவரை பள்ளி என்பது தினசரி ஆசிரியர்கள் கூறும் வேலைகளை செய்து முடிக்கும் இடம் என்று ஆகிவிட்டது. ஒரு பையன் (அ) பெண் தாம் சிந்திப்பதை விட்டு விட்டு, அவர்கள் என்ன நினைக்க வேண்டும் என்று நாம் கருதுகிறோமோ அதைத் திணிக்கிறோம். குழந்தைகளிடம் உண்மைகளை உள்ளபடி கூறுவதில்லை. நாம் நினைக்கும் விதத்தில் உண்மைக்குப்  புறம்பாகத்  தான் கூறுகிறோம்.  ஏதோ  நாம்  கடவுளைப்  போன்றும்,  அனைத்தையும் அறிந்தவர்களைப் போன்றும் சர்வ வல்லமைகளை உடையவர்களைப் போன்றும் எப்போதும் நியாயமே வடிவெடுத்த நீதி தேவதை போலவும் குழந்தைகளிடம் நம்மைக் காட்டிக் கொள்கிறோம். தனக்குத் தெரியாத விஷயத்தை மாணவர்களிடம் எனக்குத் தெரியாது என்று ஆசிரியர்கள் சொல்வதில்லை. அப்படி ஒப்புக் கொள்ள அவர்கள் விரும்புவதில்லை. சொன்னால்தானே குழந்தைகள் பெரியவர்கள் என்றால் எல்லாம் தெரிந்தவர்கள் அல்ல என்ற உண்மையைப் புரிந்து கொள்ள முடியும்?

திறந்த மனத்துடன் குழந்தைகளிடம்  பேசவேண்டும்;  நடந்து  கொள்ள  வேண்டும்.  ஆசிரியர் தன்னிடம்  ஒப்படைக்கப்பட்ட  அனைத்துக் குழந்தைகளிடமும் சமமாக அன்பு செலுத்த வேண்டும் என்று சொல்கிறார்கள். எந்த கல்வி நிறுவனமாவது “சட்டம் நீங்கள் பள்ளிக்கு சென்றாக வேண்டும் என்கிறது. ஆனால் அந்த சட்டம் நீங்கள் பள்ளியையும் ஆசிரியரையும் விரும்பித்தான் ஆக வேண்டும் எனக்கூறவில்லை. “இப்படிக் கூறினால் பல குழந்தைகள் சந்தோஷமாக பள்ளிக்கு வருவார்கள். பள்ளிக்  குழந்தைகள்  தாங்கள்  நினைப்பதையும்,  உணர்வதையும்,  தம் ஆர்வங்களையும், கவலைகளையும் வெளிப்படையாகப்  பேசக்கூடாது  என்பதை ஆரம்ப  கட்டத்திலேயே உணர்ந்து கொண்டு விடுகிறார்கள். தங்கள் எண்ணங்களைப்  பற்றிப்  பேசக்கூடிய ஒருவரை அவர்கள் மிக அரிதாகவே வகுப்பறையில்  சந்திக்கிறார்கள். சில பெற்றோர் மனநல மருத்துவரிடம் பிரச்சினைக்குரிய தம் குழந்தைகளை அனுப்புகிறார்கள். அங்கு அது தன் மனம் விட்டுப் பேசுகிறது.  இந்த  உரிமையை  வீட்டிலேயே  (அ)  வகுப்பறையிலேயே  கொடுத்து விடலாமே!

குழந்தைக்குத்  தேவையான அவசியமான அறிவை கொடுப்பதற்கு பதிலாக நம் விருப்பங்களைத் திணிக்கிறோம். அவர்கள் விரும்புகிறார்களா? அல்லது பயமுறுத்தப்படுகிறார்களா?  என்பது  பற்றி நமக்குக் கவலையில்லை. Harmoniuos Development of Hand Head and Heart என்று ஆசிரியர்கள் கல்வியியல் கல்லூரியில் படிப்பதோடு சரி! வகுப்பறை என வரும்போது ஏட்டுச் சுரைக் காய் கறிக்கு உதவாமல் போய்விடுகிறது.

பள்ளி நடைமுறைகள் குழந்தைகளின் இயல்பான கற்கும் திறனுக்கு எதிராகச் செயல்படுகின்றன என்று சொன்னால் எல்லோரும் என்னை அடிக்க வந்து விடுவார்கள். ஆனால் அது தான் உண்மை. இந்த நடைமுறைகளை மாற்றி குழந்தையின் இயல்புக்  கேற்ற  கல்வியை  தர  எந்த ஆசிரியரேனும் முயல்வாராயின் அது  தனியார் நிறுவனமாக இருந்தால் அவர் விலக்கப்பட்டு விடுவார். அரசு நிறுவனமாக இருந்தால் சட்டத்தில் இடம் இல்லை என அமுக்கப்பட்டு விடுவார். மாற்ற முயன்றவர்கள் மாற்றப்பட்டார்கள். மாணவர்கள் ஒரு விஷயத்தைப்  புரிந்து முயற்சி செய்து உள்வாங்கி விட்டால் பின்னர் அதை வேண்டாம்  என்று  தூக்கி  எறிய  மாட்டார்கள்.  மாணவர்கள்  புரிந்து கொள்வதில்லை  ;  அதை  விரும்புவதும்  இல்லை  ; கவனிப்பதும்  இல்லை  என்று  ஆசிரியர்களின்  வழக்கமான  குற்றச்சாட்டு அர்த்தமற்றது.  மாணவர்கள்  விடைகளைத் தேடுவோர் எனவும், சிந்தனையாளர் எனவும் 2 வகைப்படுவர். சிந்தனையாளர்கள் வழக்கமான வகுப்பறையிலிருந்து சற்று மாறுபட்டே காணப்படுவார்கள். விடைகளைத் தேடும் மாணவர் குழாம் தங்கள் முயற்சியில் வெற்றி அடைய வில்லையானால் தோல்வி  மனப்பான்மையில்  துவண்டு  விடுவார்கள்.  நம்பிக்கை  இழந்து விடுவார்கள்.  மாறாக  சிந்தனையாளர்  குழாம் தொடர்ந்து முயற்சிகள் செய்ய தயாராக இருப்பார்கள். பள்ளிப்படிப்பு இவர்களுக்குப் போதாது எனக் கருதிய நான் 5 பேரை 8 ஆம் வகுப்பு படிக்கும் போதே மதுரைப் பல்கலைக்கழக Micro Biology Dept க்கு அழைத்துச் சென்றது எனக்குப் பெரிய வெற்றியாக  இருந்தது.  அந்த  5  பேரில்  3  பேர்  தற்போது  நல்ல நிலையில்  இருக்கிறார்கள்.

என்னுடைய  வகுப்பறை வழக்கமான வகுப்பறையிலிருந்து மாறுபட்டே காணப்படும். அந்தக் காலத்தில் tape recorder ஒன்றுதான் Audio Aid. 6 மாணவர்களும் நானும் வினா விடை கேட்கும் விதமான ஓர் உரையாடலாக ஒரு கேஸட்டில் ல் பதிவு செய்து வகுப்பறையில் போட்டுக் காட்டினோம். அதனுடைய விளைவு அபரிமித‌மாக இருந்தது. கடைத்தரத்தில் இருந்த அன்பர் கூட ரசித்துக்கேட்டார்.

.

பாலங்களைப் பற்றிய ஒரு பாடம் இருந்தது. அருகில் அப்போதுதான் காவிரியில் குறுக்கே முக்கொம்பு என்ற சிறு அணை கட்டி வந்தார்கள். நேராக அங்கு அழைத்துச் சென்று காட்டினேன். அங்கிருந்த சிவில் இன்ஜினியர்கள் இவர்களுக்கு பாலங்கள் பற்றி விளக்கிச் சொன்னதில் மாணவர்களுக்கு மிக சந்தோஷம். இதேபோலத்தான் எத்தில் ஆல்கஹால், அசிட்டிக் அமிலம் தயாரித்தல் என்ற பாடம் நடத்தவில்லை. பதிலாக திருச்சியில் உள்ள Trichy Distilleries and Chemicalsதொழிற்சாலைக்கு அழைத்துச் சென்றது மிகப் பயனுள்ளதாக இருந்தது. பள்ளியில் Photographic Club, Transistor Radio Club, Volve Radio Club, Drawing Club அனைத்தும் செயல்பட்டன. குருகுல மாணவர்களை வெளியே அழைத்துச் செல்வதில்லை என்றாலும் என் செயல்பாடுகளைக் கவனித்த சுவாமி சித்பவானந்தர் எனக்கு எந்தத் தடையும் விதிக்கவில்லை.

ஒரு மாணவனுக்கு அறிவியல் பாடத்தில்  33  தலைப்புகளில்  பாடங்கள்  இருக்கிறது  என  வைத்துக் கொள்வோம்.  ஒவ்வொரு  சனிக்கிழமை  மாலையும் மாணவர்கள்  மிகவும் free யாக  relaxed ஆக  இருப்பார்கள்.  அந்த நேரங்களில்  திருச்சி, தஞ்சை,  புதுக்கோட்டை மாவட்டங்களில்  கல்லூரிகளில்  பணிபுரியும்  பேராசிரியர்களை  வாரத்திற்கு ஒருவராக  பள்ளிக்கு  அழைத்துவருவேன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வாரத்திற்கு ஒரு தலைப்பில் சொற்பொழிவு நிகழ்த்துவார்கள். Audio Visual aids கொண்டு வந்து காட்டுவார்கள். ராமாயண  தொடர்  சொற்பொழிவுகள்,  மகாபாரத  தொடர் சொற்பொழிவுகள்  போல  குருகுலத்தில்  விஞ்ஞான தொடர்  சொற்பொழிவுகள்  70களிலும்  80களிலும்  நிகழ்ந்தன.  அந்தக் காலகட்டத்தில்  தமிழகத்தின்  எந்தப்  பள்ளியிலும் மாணவர்கள் பரிசோதனைகளைத் தாமே செய்து பார்த்ததில்லை. ஆசியரியர்களும் செய்து காட்டி பொழுதை வீணாக்காமல் மனப்பாடம் செய்யக்கூறிவிடுவார்கள். Learning by doing என்று ஒரு திட்டம் வகுத்து 7ஆம் வகுப்பு முதல் 11 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் தாங்களாகவே தங்கள் பாடப்பகுதியில் வரும் ஆய்வுகளை செய்து கற்றார்கள். ஆய்வகம் ஒய்வகமாக இல்லாமல் போர்க்களம் போல் Activ ஆக இருந்தது. எனக்குப் பின்னால் வந்தவர்கள் இதைக் கடைப்பிடித்தார்களா என்பதை நாம் அலச வேண்டாம்.  ஆசிரியப்  பணி  அறப்பணி;  அதற்கு  உன்னை  அர்ப்பணி  என்று ஒரு  வாசகம்.  அதை  நான்  உள்வாங்கிக் கொண்டேன். முழுக்க முழுக்க என்னை அப்பணிக்கு அர்ப்பணித்தேன்.

ஒருமுறை எங்கள் கோசாலையில் லட்சுமி என்ற மாடு இறந்து விட்டது. அதைப் புதைத்து வைத்து சிறிது காலம் கழித்து தோண்டி எடுத்து அதன் எலும்புகளை கம்பி கொண்டு சேர்த்து நிற்க வைத்து மாவட்ட கல்வி அலுவலர்க்கு காட்டினோம். அவர் ரொம்ப சந்தோஷப்பட்டு இந்த காரியத்தில் ஈடுபட்ட மாணவர்கள் 8 பேருக்கு தன் பாராட்டுகளைத் தெரிவித்தார். இவ்வாறு ஆரம்பித்து நீர்வாழ்வன,  நீர்நில  வாழ்வன, ஊர்வன,  பறப்பன, பாலூட்டி  என அனைத்து  இன  எலும்புக்கூடுகளும் மாணவர்களால் தயாரிக்கப்பட்டன. ராமேஸ்வரத்திற்கு சுற்றுலா போன  போது கடல்வாழ் உயிரினங்களை  பல மாணவர்கள்  சேகரித்தார்கள்.  நாம்  லேசாக ஊக்கம்  கொடுத்தால்  போதும்  அவர்களை இயல்பான  நிலையில்  வைக்கலாம்.  செயற்கரிய செயல்களைச் செய்வார்கள். பிறக்கும்  போதே ஞானியாகப் பிறக்கிறார்கள் என்று சொல்வதெல்லாம்  பற்றி நாம் ஆராய்ச்சி செய்ய வேண்டாம். சிந்தனையாளர்கள் உருவாக்கப்பட முடியும் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு. வகுப்பறையில் உள்ள மாணவன் வெளிச்சூழ்நிலையில் அபரிமிதமான ஆற்றல்களை வெளிப்படுத்துவதை நான் பார்த்திருக்கிறேன். அந்தத் திறமை வகுப்பறையில் முடக்கப்பட்டுவிட்டது என்பதை நாம் ஒத்துக் கொண்டே ஆக வேண்டும். ஒரு புத்திசாலிப் பையனோ பெண்ணோ வகுப்புக்குள் வந்தவுடன் முட்டாளாக மாறுவது ஏன்? அதற்கு காரணம் யார்?

நாம் தான்.

தேர்வில் தோல்வியடையும் மாணவர்களுக்காக ஓர் பரிசோதனை செய்தேன்! அது பற்றி அடுத்த பதிவுகளில் சொல்கிறேன்!

(தொடரும்…)

 

4 Replies to “பள்ளிக்கல்வி – 1”

  1. ஒரு மாணவர் என்பவர் இன்று ஆசிரியர் திணிக்கும் பணியை மட்டுமே செய்ய வேண்டியுள்ளது. மாணவருடைய சிந்தனைக்கெல்லாம் இங்கு இடம் இல்லை.

    Fail ஆகும் நிலையில் இருக்கும் மாணவரை, அதிக மதிப்பெண்கள் கொடுத்து, Pass ஆனவராகக் காட்டுவதே பெரும்பாலும் நடப்பது. வகுப்பறை என வரும்போது எல்லாம் ஏட்டுச் சுரைக்காய் தான்.

    Science என்று வந்தால், பல தனியார் பள்ளிகள், கல்லூரிகளில் கூட Paper Practical தான் இன்றும் நடைமுறை (விதி விலக்குகள் இருக்கலாம்).

    இவ்வளவு யதார்த்தமாக எழுத ஒரு உண்மையான ஆசிரியரால்தான் முடியும். ஆனால், உண்மையை எழுத எந்த ஆசிரியரும் (பல காரணங்களால்) முன் வரமாட்டார்கள்.

    பின் எப்படி இவர் எழுதுகிறார் என்று புதிர் மனத்தோடு இந்தக் கட்டுரையை மேலே மேலே படித்துவந்த போதுதான் ஸ்வாமி சித்பவானந்தரின் திருப்பெயர் கட்டுரையின் இடையில் இடம் பெற்றதைக் கண்டேன். எல்லாம் புரிந்தது.

    நல்லது செய்யவும் சொல்லவும் ஒவ்வொரு இடத்திலும் போராட வேண்டியிருக்கிறது. நல்ல கட்டுரையைப் படித்த நிறைவு.

  2. நன்றி
    மிகவும் உபயோகமான உயர்ந்த சிந்தனைகள்.
    உரத்த சிந்தனைகள்.
    என்னைப்போன்ற இன்றைய பெற்றோர்களுக்கு வழிகாட்டும் இத்தகைய கருத்துக்களை எழுதிப் பகிர்ந்து கொள்வதற்கு மிகவும் நன்றி.
    வணங்கி மகிழ்கிறேன்.
    தமிழ் ஹிந்துவுக்கும் ஆசிரியர் சோமு சாருக்கும் வந்தனம்.
    அன்புடன்,
    ஸ்ரீனிவாசன்.

  3. excellent article thanks for the author Mr.Somu sir…..

    @armchaircritic
    already we are learning and searching how our people went this stage, the answer is Lord Mccalley’s education system only. We will remove the system slowly it cann’t be remove quikly. will see……

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *