ஸ்ரீராமன் புகழ்பாடும் சந்திரோதயம்
சீதாவின் முகம் தேடும் அருணோதயம்
என்று ஒரு இனிமையான பழைய தமிழ்த் திரை இசைப் பாடல். சந்திரனும், சூரியனும் இருக்கும் வரையில் இராமகாதை உலகில் சுடர்விட்டு ஒளிரும் என்ற வாக்கை நினைவூட்டுவது போல இருக்கும் அதன் வரிகள்! அதன்படியே, இந்த வருடமும் ஸ்ரீராமநவமி மார்ச்-31, ஏப்ரல்-1 ஆகிய தேதிகளில் பாரத நாடெங்கும், உலகெங்கும் விமரிசையாகக் கொண்டாடப் பட்டது. இந்த விழாவின் வாயிலாக, பற்பல கோயில்களிலும், சமய மன்றங்களிலும் சொற்பொழிவுகளாகவும், இசை வடிவிலும், துதிப் பாடல்களாகவும் நம் மனதைத் தீண்டி, வாழ்க்கையின் உன்னத நெறிகளை நம் நினைவுகளில் நிறுத்துகிறது இராம காதை. ஒவ்வொரு வருடமும் ஸ்ரீராமநவமியின் போது மீண்டும் மீண்டும் அரங்கேறுகிறது இராமாயண காவியம்!
ஆனால் ஆயிரத்து இருநூறு வருடம் முன்பு திருவரங்கக் கோயில் மணிமண்டபத்தில் கம்பன் இராமாயணத்தை அரங்கேற்றியது தமிழ்ப் பண்பாட்டு வரலாற்றில் ஒரு மகத்தான சம்பவம்! இந்த சம்பவம் நிகழ்ந்தது பங்குனி உத்திர நாளில் என்று கூறப் படுகிறது. இவ்வருடம் ஏப்ரல்-6 அன்று பங்குனி உத்திரம் உலகெங்கும் வாழும் தமிழ் ஹிந்துக்களால் மிகச் சிறப்பாகக் கொண்டாடப் பட்டது.
சிதம்பரம் முதலான பற்பல சிவாலயங்களிலும் பங்குனித் தேரோட்டம் களைகட்டியது. பால்காவடி, பால்குடம், பாதயாத்திரை என்று திமிலோகப் பட்டது பழனி! திருவரங்கத்தில் மட்டையடி உற்சவம் போன்ற ரசமான நிகழ்வுகள் உண்டு இந்நாளில். பற்பல பெருமாள் கோயில்களிலும் பங்குனித் திருவிழாக்கள் சம்பிரமமாக நடைபெறும். இப்படி, சைவம் வைணவம் இரண்டு சமயத்தாரும் போற்றும் திருநாள் இது.
கைலாசகிரியில் சிவ-பார்வதி திருமணம் நிகழ்ந்த நாள், தினைப்புனத்தில் முருகன்-வள்ளி திருமணம் நிகழ்ந்த நாள் பங்குனி உத்திரம் என்பது ஐதிகம். அதனால் தான் எல்லா கோயில்களிலும் இந்நாளில் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. இளவேனில் காலத் தொடக்கத்தை இறைவனின் திருமண விழாவாகக் கொண்டாடும் தமிழ்மரபு தான் எத்துணை அழகானது!
திருமணம் என்பது வாழ்க்கையின் அடிப்படையான உறவுகளில் ஒன்று. ஆனால், பாகிஸ்தானில் வாழும் லட்சக் கணக்கான ஹிந்துக்களுக்கு தங்கள் திருமண உறவை சட்டபூர்வமாக அறிவிக்கும் உரிமையைக் கூட அங்குள்ள இஸ்லாமிய அரசு இத்தனை காலமாக மறுத்து வந்திருக்கிறது என்பது சோகம். பாகிஸ்தானிய சட்டப் படி, “நிகாஹ்நாமா” என்ற பெயரில் இமாம்கள், மௌல்விகள் ஆகியோர் மசூதியிலிருந்து தரும் மத ரீதியான சான்றிதழ் மட்டுமே திருமண ஆதாரமாகக் கொள்ளப் படுமாம். இந்துக்களின் திருமணச் சடங்கு ஆதாரங்களும் ஏற்கப்படாது, இந்தியாவில் அடிப்படை உரிமையாக உள்ளது போல சிவில் ரீதியாக திருமணத்தைப் பதிவு செய்யும் வாய்ப்பும் கிடையாது என்ற நிலையில் பாகிஸ்தானில் வாழும் இந்துக்களுக்கு இதனால் பலவகையில் கஷ்டங்கள் ஏற்பட்டன. 2012ம் ஆண்டு மார்ச் மாதக் கடைசியில், ஒரு வழக்கு விசாரணையின் போது, இந்துக்கள் திருமணங்களை பதிவு செய்ய அரசு ஆவன செய்ய வேண்டும் என்று பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. என்னே இஸ்லாமிய நாடு தன் சிறுபான்மையினர் மீது காட்டும் மனித உரிமை மதிப்பீடுகள்!
இந்துஸ்தானத்தின் கதை வேறு. அந்நாட்டின் தென்மேற்குக் கடற்கரையோர மாகாணமான கேரளத்தில் இந்துக்கள் மக்கள்தொகையில் 56%. ஆனால் ஒரு சமூகத்தின் மக்கள்தொகைக்கு ஓரளவு நியாயம் செய்யும் வகையில் அரசியல் பிரதிநிதித்துவம் அமைய வேண்டும் என்ற பொதுவான ஜனநாயக விதியெல்லாம், கேரளத்தை ஆளும் காங்கிரஸ் கட்சியைப் பொறுத்த வரையில் அர்த்தமற்றவை. தற்போதுள்ள கேரள மாநில அமைச்சரவையை முற்றாக கிறிஸ்தவ, முஸ்லிம் உறுப்பினர்களே பெருமளவில் ஆக்கிரமித்திருக்கும் அவலத்தை சுட்டிக் காட்டுகிறது இந்தக் கட்டுரை.
ஆனால் இந்தியாவில் மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு திடீரென்று ஏதோ ஞானோதயம் ஏற்பட்டு விட்டது போல. காலகாலமாக முஸ்லிம்களுக்கு வழங்கப் பட்டு வரும் ஹஜ் யாத்திரை மானியம் ரத்து செய்யப் படலாம் என்கிற வகையில் அரசு யோசித்து வருவதாக மத்திய அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கருத்து தெரிவித்திருக்கிறார். நிஜம்மாவா? கனவு கினவு ஏதும் காணவில்லையே என்று நீங்கள் கேட்பது புரிகிறது.
நிஜம் தான். ஆனால் அவரது அறிக்கையை நீங்கள் கொஞ்சம் கூர்ந்து படிக்க வேண்டும். என்ன சொல்கிறார் அமைச்சர்? ஹஜ் மானியம் நீக்கப் படலாம் – அது அரசின் மதச்சார்பினைக் கொள்கையாலோ, பொருளாதார காரணிகளாலோ அல்ல. முஸ்லிம் அமைப்புகளே அது வேண்டாம் என்று சொல்வதால்! அதாவது முஸ்லிம்களே விரும்பினால் ஒழிய இந்திய அரசு அவர்களை எந்த விதத்திலும் கட்டுப்படுத்த முடியாது என்று உறுதியளித்திருக்கிறார் அவர்.
இதன் விளைவுகள் என்னவாக இருக்கும் என்று மேலே பறந்து கொண்டிருந்த பட்சிராஜனைக் கேட்டோம். இரண்டு விதத்தில் பார்க்க வேண்டும் என்கிறார் அவர் – ஒன்று: வஹாபிய இஸ்லாமிய குழுக்கள் சில காலமாகவே இந்திய அரசு வழங்கும் ஹஜ் மானியம் இஸ்லாமுக்கு விரோதம் என்றூ பேசி வருகின்றனர். அரசு இந்த மானியத்தை ரத்து செய்தால் ஏழை/நடுத்தர வர்க்க இஸ்லாமியர்கள் மீது ஹஜ்ஜுக்கு உதவி செய்கிறோம் என்ற பெயரில் வஹாபிய அமைப்புகளின் பிடி இறுகும். இரண்டு: அதே நேரம், இன்னொரு வகை இஸ்லாமிய குழுக்கள் மானியத்தை ரத்து செய்த இஸ்லாமிய விரோத அரசு என்று இந்திய அரசுக்கு எதிரான உணர்வுகளை முஸ்லிம்களிடையில் விதைக்கும்! ஆக, அடிப்படையிலேயே தவறான இந்த ஹஜ் மானிய சமாசாரம் – இருந்தாலும் சரி, நீக்கப் பட்டாலும் சரி, இஸ்லாமிஸ்ட் குழுக்களால் சாதுர்யமாக தங்களுக்கு சாதகமாகவே பயன்படுத்தப் படும். கொடுமை.
இப்படி இல்லாமல், வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று ஒரு காரியத்தை செய்துள்ளது தீதி மமதா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்க மாநில அரசு. கடந்த 30 ஆன்டுகளாக மார்க்ஸ், எங்கல்ஸ், கம்யூனிச சித்தாந்தம், புரட்சி பற்றியெல்லாம் புளகாங்கிதத்துடன் எழுதப் பட்டிருந்த வரலாற்றுப் பாட நூல்களைத் தான் மாணவர்கள் படித்து வந்தார்கள். இவற்றையெல்லாம் நீக்கி உண்மையான இந்திய வரலாற்றை உருப்படியாக எடுத்துரைக்கும் வகையில் புத்தகங்கள் திருத்தப் படும் என்று மாநில அரசு அறிவித்ததைக் கண்டு அதிர்ந்துள்ளனர் இடது சாரிகள். “மார்க்ஸை ஒரு வரலாற்று அருங்காட்சியப் பொருள் போல வேன்டுமானால் படிக்கலாம், ஆனால் மகாத்மாவை இருட்டடித்து மார்க்சைப் பற்றி சொல்லித் தர முடியாது” என்று பதிலடி கொடுத்துள்ளார் மாநில அமைச்சர் ஒருவர். சபாஷ் தீதி!
கர்நாடகத்தில் கோலார் தங்கவயல் (KGF) பகுதியில் உள்ள சிவில் நீதிமன்றமும் ஒரு நற்செயலைப் புரிந்துள்ளது. மதமாற்ற பிரசாரங்களின் போது இந்து தெய்வங்களை இழிவாகப் பேசி இந்துக்களின் மனதைப் புண்படுத்தியற்காகவும், சமூக அமைதியைக் குலைத்ததற்காகவும் 11 கிறிஸ்தவ மிஷநரிகளுக்கு மூன்றரை ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்குமாறு உத்தரவிடப் பட்டுள்ளது.
இதில் 9 பேர் பெங்களூரில் உள்ள பீட்டர்ஸ் சர்ச் என்ற அமைப்பைச் சார்ந்தவர்கள். இந்த வழக்கில் இந்திய குற்றவியல் சட்டம் 153(B) பிரிவின் படி தண்டனை வழங்கப் பட்டுள்ளது. உங்கள் வீட்டு வாசலிலோ அல்லது தெருமுனையில் நின்று கொண்டோ பொய்யான கடவுளை வணங்காதீர்கள் என்றெல்லாம் சத்தம் போடும் பிரசாரகர்களுக்கு இந்த செய்தியையே எச்சரிக்கையாகக் கொடுங்கள்! அதையும் மீறி, தொல்லைகள் தொடர்ந்தால், உங்கள் பகுதியில் உள்ள சமூக அக்கறையுள்ள நண்பர்கள் ஒன்று சேர்ந்து நீதிமன்றம் செல்லவும் தயங்க வேண்டாம் – உங்கள் நினைவில் இருக்க வேண்டிய எண் 153-B !
ஆனால் அரசு அமைப்புகள் எப்போதும் சரியான நெறிகளின் படிதான் செயல்படும் என்று சொல்வதற்கில்லை. விக்கிரவாண்டி-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையை அகலப் படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக, பனங்காட்டூர் புராதன சிவாலயம் இடிக்கப் படும் என்று திட்ட வரைவில் உள்ளதை கவனித்த அப்பகுதி மக்கள் கொதித்துப் போயுள்ளனர். கோவிலின் மதில் சுவர் மீது நெடுஞ்சாலைத் துறையினர் அம்புக்குறிகள் போட்டு விட்டுச் சென்றுள்ளார்கள் என்பதைக் கவனித்த ஊர்மக்கள், வரைபடத்தில் உள்ளபடி நெடுஞ்சாலை கோயிலின் கருவறை இருக்குமிடம் வழியாக செல்லுமாறு திட்டம் போடப் பட்டுள்ளது என்பதையும் அறிந்து மேலும் கோபமடைந்துள்ளனர்.
ஏனென்றால், இத்திருக்கோயில் இன்று நேற்றல்ல, 1300 ஆண்டுகள் பழமையானது. திருப்புறவார் பனங்காட்டூர் என்ற இப்பழைய தலம் திருஞான சம்பந்தரால் பாடல் பெற்ற பெருமைக்குரிய திருத்தலமாகும். “ராஜராஜன், ராஜேந்திரன், குலோத்துங்கன், சுந்தர பாண்டியன் ஆகிய புகழ்மிக்க தமிழ்மன்னர்களின் கல்வெட்டுக்கள் இக்கோயிலில் உள்ளன” என்று அகழாய்வு நிபுணர் டாக்டர் ஆர்.நாகசாமி கருத்து தெரிவித்துள்ளார். சுந்தரரின் நாயகியாராகிய பரவை நாச்சியாரை சிறப்பித்து பரவைபுரம் என்றும் இவ்வூர் அழைக்கப் படுவதாக அவர் கூறியுள்ளார்.
இத்தகு சிறப்பும் பழமையும் வாய்ந்த கோயிலை மக்கள் விருப்பத்திற்கு மாறாக நெடுஞ்சாலைத்துறை நீக்கக் கூடாது என்று பனையபுரம் பஞ்சாயத்து தலைவரும் கோரியுள்ளார். மக்கள் கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்கும் என்று நம்புவோம்.
ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஈரோடு வந்திருந்த இந்து முன்னணி தலைவர் பெரியவர் ராம. கோபாலன் அவர்கள், குளியறையில் வழுக்கி விழுந்ததில் வலது கை தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் பூரண குணமடைய வேண்டி பிரார்த்திக்கிறோம்.
கொசுறு:
கிறிஸ்தவ கன்யாஸ்திரீகள் பலரது வாழ்க்கை சோகமயமானது. அவர்களது உறைவிடங்களான கான்வென்டுகளில் பல்வேறு வகையான பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கும், வதைகளுக்கும் அவர்கள் ஆட்படுகின்றனர். பல நேரங்களில் இதற்குக் காரண கர்த்தாக்களாக இருப்பவர்கள் கிறிஸ்தவ மத அதிகார பீடங்களில் உள்ளவர்கள் என்பதால், பாதிப்புக்கு உள்ளாகும் பெண்களின் குரல்கள் வெளியே வரக் கூட வழியின்றி மௌனமாக மரணித்து விடுகின்றன. சர்ச்சின் அதிகாரப் பிடியிலிருந்து துணிவுடன் தங்களை விடுவித்துக் கொள்பவர்களே பிறகு வந்து உண்மையை உலகுக்கு உரைக்க வேண்டியுள்ளது. சில ஆண்டுகள் முன்பு, கேரளத்தைச் சேர்ந்த சிஸ்டர் ஜெஸ்மி தனது சுயசரிதையை எழுதி அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம். தற்போது, 67 வயதான சிஸ்டர் மேரி சாண்டி தனது சுயசரிதையை எழுதி வருகிறார். தங்கள் விருப்பத்திற்கு மாறாக கருத்தரித்த கன்யாஸ்திரீகள் மனதைக் கல்லாக்கிக் கொண்டு பிறந்த குழந்தைகளைக் கொன்றுவிட முயல்வது கூட கான்வென்டுகளில் பரவலாக நடப்பதுண்டு என்பது போன்ற அதிர்ச்சிகரமான சம்பவங்களையும் அவர் கூறுகிறார். அப்படித் தப்பிப் பிழைத்த ஒரு குழந்தையையும் சேர்த்து இன்னும் சில ஆதரவற்ற குழந்தைகளுக்காக தனிப்பட ஒரு அனாதை இல்லத்தையும் அவர் நடத்தி வருகிறார். உண்மையை உரத்துச் சொல்லும் சிஸ்டர் மேரிக்கு வந்தனங்கள்.
//இதன் விளைவுகள் என்னவாக இருக்கும் என்று மேலே பறந்து கொண்டிருந்த பட்சிராஜனைக் கேட்டோம்.//
🙂
சிஸ்டர் மேரி சாண்டியின் சுயசரிதைக்கான தமிழாக்க உரிமையை உடனடியாகப் பெற்று, அதைக் குறைந்த விலையில் தமிழ்ஹிந்து பதிப்பகமே வெளியிட வேண்டும்.
ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த தலங்களை வரன்முறைப்படுத்தி யாபேரும் அறியும் வண்ணம் போற்றித் துதிப்பது போல தேவாரம் பெற்ற சிவாலயங்களை நமது சைவச்சான்றோர்கள் ஒரு சீரிய வரன்முறைக்குள் கொண்டு வர வேண்டும் என்று கருதுகிறோம்… அப்படிச் செய்திருந்தால் பனங்காட்டூருக்கு இக்கதி ஏற்பட்டிருக்காது…