ரிக்வேதத்தின் அக்னி சூக்தங்கள்

ரிக்வேதம் – முதல் மண்டலம், முதல் சூக்தம் (ரிஷி: மதுச்சந்தா விஸ்வாமித்ரர்)

ஓம்
அக்னியே புரோகிதன்
வேள்வியின் தேவன்
ரித்விக், ஹோதா
செல்வங்களின் இருப்பிடம்.
போற்றுவோம்!  

(புரோகிதன் – வேள்விச் சடங்கின் முக்கிய பூசாரி; ரித்விக்,ஹோதா – வேள்வியில் மந்திரங்கள் ஓதும் துணை பூசாரிகள்) 

பழைய ரிஷிகளும் புதியோரும் போற்றும் அக்னி  
தேவர்களை இங்கு அழைத்து வருக!   

புகழும் உன்னத வீரியமும் கொண்டு
நாள்தோறும் வளரும் செல்வம்
அக்னியால் பெறுகிறோம்.  

அக்னி! நீ எங்கும் சூழ்ந்து நிறையும் வேள்வி
தவறாமல் தேவர்களைச் சென்றடைகிறது.

முதல் புரோகிதன்
உட்பொருள் உணரும் கவி
சத்தியமானவன்
உன்னத மேலோன் தேவன்
அக்னி
தேவர்களுடன் இங்கு வருக!

ஓ அக்னி! அங்கிரஸ்!
நீ தரும் நன்மையும் செல்வமும்
உண்மையில் உனக்கே உடைமையாகிறது.

தீமையழிக்கும் அக்னி!
ஒவ்வொரு நாளும்
உன்னையே எண்ணிப் போற்றி
உன்னிடம் வருகிறோம்.

சுடர்விட்டு ஒளிர்வோன்
வேள்வியின் வேந்தன்
மாறாத சத்தியத்தின் காவலன்
தன்னகத்தே வளர்வோன்
அக்னி.
 
மகனுக்குத் தந்தை போல
நீ எமக்கு எளியவன்
அக்னி! எம் நல்வாழ்விற்காக
எம்முடனே இருந்திடுக! 

முதல் வேதமான ரிக்வேதத்தின் முதல் சூக்தம் இது.

இத்தகைய சூக்தங்கள் வேதங்களின் ஆதிப் பழங்கால இயற்கை வழிபாட்டுப் பாடல்கள் என்றும், கர்மகாண்டம்  என்று அழைக்கப்படும் சடங்குகளை மையமாகக் கொண்ட சமயப் பிரார்த்தனைகள் என்றுமே பொதுவாக அறியப்படுகின்றன. ஆனால் ஆலமரத்தைத் தன்னுள் அடக்கிய விதை போல, இந்து ஞான மரபின் வளர்சிதை மாற்றங்களுக்கான கூறுகள் ரிக்வேதத்திலேயே உருவாகத் தொடங்கிவிட்டன என்பதே வேத அறிஞர்கள் பலர் கொண்டுள்ள கருத்தாகும். வேத இலக்கியத்திற்கும் உலகின் மற்ற பல கலாசாரங்களின் பழங்குடிப் பாடல்களுக்கும் உள்ள முக்கிய வித்தியாசம் இதுவே. ரிக்வேதத்தின் தொல்பழம் பாடல்கள்கூட காலம் கடந்து இன்றளவும் நமது கூட்டுப் பிரக்ஞையில் சிந்தனைகளாகவும், உணர்வுகளாகவும் நிற்பதும் வேத இலக்கியத்தின் தனிச்சிறப்பு என்று கூறலாம்.

உதாரணமாக, இந்த சூக்தத்தின் முதல் மந்திரத்தை எடுத்துக் கொள்வோம். ஆதி வேத ரிஷியின் வேள்விச் சடங்குக்கான இந்தத் துதிப் பாடலிலேயே கூட, இந்து மெய்ஞானம் கண்டடைந்த தத்துவத்தின் உச்சமாக உள்ள ஒரு தரிசனம் இருக்கிறது.

பல ஆண்டுகள் முன்பு நான் எல்லோரா சென்றிருந்தேன். ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் பழைய குகைக்கோயில்கள் அங்குள்ளன. இந்திய சிற்பக் கலையின் மகோத்தனங்களான இந்த குகைக் கோயில்களில் மையமானதும் மிக அழகானதும் கைலாசநாதர் கோயில். இரண்டு தளங்களில் அமைக்கப்பட்டுள்ள இந்த சிவாலயம் வழக்கமான முறையில் கட்டப்பட்டதல்ல. மாறாக ஒரே மிகப் பெரிய பாறையை உள்பக்கமாகக் குடைந்து அதிலிருந்து உருவாக்கப்பட்டது. கோயிலுக்கு உள்ளிருந்து பார்க்கும்போது வெளியே விரியும் பரந்த ஆகாய வெளியே கோயிலுக்கு உள்ளும் பிரதிபலிப்பதாக ஒரு பிரமிப்பு ஏற்படும்.

கோயிலுக்குள் சென்றேன். அங்குள்ள சிவலிங்கத்தை வணங்கினேன். அப்போது சட்டென்று அந்த விஷயம் உறைத்தது– இது ஒரே கல்லால் கட்டிய கோயில். அந்த மாபெரும் ஒரே கல்தான் இந்தக் கோயிலும் அதன் விமானமும் அதன் பிராகாரங்களும்; அதன் சிவலிங்கமும் கூட. அதன் மீது நான் நின்று கொண்டிருக்கிறேன். அதையே வணங்கிக் கொண்டிருக்கிறேன். அந்த உணர்வு தந்த பிரமிப்பில் ஒரு நிமிடம் கல்லாய்ச் சமைந்துவிட்டேன்.

ஓம் அக்3னிமீளே புரோஹிதம் யக்ஞஸ்ய தே3வம் ரு’த்விஜம் ஹோதாரம் ரத்ன தா4தமம்…

ஆம்! அக்னியே புரோகிதன். அக்னியே வேள்வியின் தேவன். அக்னியே வேள்வியில் கானம் பாடுவோன். வேள்விப் பயனான செல்வஙகளின் இருப்பிடமும் அவனே.

‘அறிவும் அறிபடு பொருளும் அறிபவனும் ஒன்றாகும் நிலை’ என்று வேதாந்த தரிசனம் குறிப்பிடும் நிலையை இந்த மந்திரம் மறைபொருளாகச் சொல்கிறது என்று கொள்ளலாமா? அதற்கு இடமிருக்கிறது என்று நினைக்கிறேன். ஏனென்றால் வேதம் உரைத்த ரிஷிகள் மறைஞானிகள். அவர்களது வாய்மொழிகள் வெறும் சொற்கள் அல்ல, மெய்யுணர்வின் உச்ச நிலையின் வெளிப்பாடுகள்.

வேள்வி என்பதை செயலின் குறியீடாகக் கொண்டால், செயலும், செய்வோனும், அந்தச் செயலுக்கான கருவிகளும், செயலின் இலக்கான தேவதையும், செயலின் பயனான செல்வங்களும் எல்லாம் அக்னியே என்று இந்த மந்திரம் கூறுகிறது. ‘ஒன்றாகக் காண்பதே காட்சி’ என்ற உணர்வினால் அது சாதாரணச் செயலாக இல்லாமல் யோகமாக ஆகிறது. இத்தத்துவம் கீதையில் இன்னும் அழகாக தெளிவான சொற்களில் பேசப்படுகிறது. வேள்வி என்ற வைதீகச் சடங்கையே ஓர் உருவகமாகக் கொண்டு பிரபஞ்ச இயக்கம் முழுவதையும் அந்தச் சுலோகத்தில் கீதை காட்டிச் செல்கிறது – “அர்ப்பணம் செய்தல் பிரம்மம்; அவிப் பொருள்களும் பிரம்மம்; பிரம்மமாகிய அக்னியில் பிரம்மத்தால் கொடுக்கப் படுகிறது. பிரம்மமாகிய கர்மத்தில் மனம் குவிந்துள்ளவனால் பிரம்மமே அடையப்படுகிறது”.

இது போன்று, ரிக்வேத சூக்தங்களில் உறைந்துள்ள மறைபொருள் குறித்து ஸ்ரீஅரவிந்தர் விரிவாக எழுதியுள்ளார். The secret of the Veda என்ற நூலில் வேத முனிவர்களின் பாடல்கள் அனைத்தையும் குறியீடுகளாகவும் தத்துவங்களாகவுமே கண்டு வேத இலக்கியம் பற்றிய தனது புரிதலை அவர் முன்வைக்கிறார். Hymns to the Mystic fire என்ற நூலில் ரிக்வேதத்தில் உள்ள 36 அக்னி சூக்தங்களை இந்தக் கோட்பாடு கொண்டு விளக்கியுள்ளார். இந்த நூலை அவரது சீடரும் மாபெரும் வேத அறிஞருமான கபாலி சாஸ்திரி 1940-களில் தமிழாக்கம் செய்தார். பண்டித நடையில் அமைந்திருந்த அந்த மொழியாக்கம் ஓரளவு எளிமைப்படுத்தப்பட்டு சமீபத்தில் வெளிவந்துள்ளது  (அரவிந்தர் அருளிய அக்னி சூக்தங்கள், SAKSI பதிப்பகம், பெங்களூர்)

ஆனால், இந்த மந்திரங்களை இவ்வாறு குறியீட்டுரீதியாக, தத்துவார்த்தமாக மட்டுமே கண்டாக வேண்டும் என்பதில்லை. அடிப்படையில் அவை மிக அழகிய தொன்மக் கவிதைகள். ரிஷிகளின் மெய்த் தேடலும், ஆதிப் பழங்குடியினருக்கான குழந்தைத் தனமும், சம்ஸ்கிருத மொழியின் ஆரம்ப கணங்களிலேயே அதில் உருவாகிக் கொண்டிருந்த உயர்கவித்துவமும் எல்லாம் கலந்து இந்த மந்திரங்களில் மிளிர்கின்றன என்று கருதுவதே சரியாக இருக்கும்.

ரிக்வேதம் முதல் மண்டலத்திலிருந்து பத்தாம் மண்டலம் வரையிலான மந்திரங்கள் பல்வேறு ரிஷிகளால் அருளப் பெற்றவை. அக்னியைக் குறித்த பாடல்களே இவற்றில் மிகப் பிரதானமாக உள்ளன. இந்தப் பாடல்களில் சிலவற்றை ஒரு பறவைப் பார்வையாகப் பார்த்தோமானால், ரிக்வேத இலக்கியம் தன்னுள் அடைந்துவந்த பரிணாம வளர்ச்சியின் ஒரு சித்திரமும் காணக் கிடைக்கும்.

அக்னியே இந்திரனாக, எமனாக, ருத்ரனாக, விஷ்ணுவாக, தாய் அதிதியாக, தேவ சொரூபங்கள் அனைத்தும் கொள்வதாக மந்திரங்கள் பகர்கின்றன. அனைத்து இந்தியர்களின் தொல்மூதாதைகளான ரிஷிகள் வளர்த்த அக்னியே வேள்வித் தீயாக, ஆசைத் தீயாக, சக்தித் தீயாக, உயிர்த் தீயாக, அறிவுத் தீயாக, கலைத் தீயாக, யோகத் தீயாக, ஞானச் சுடராக பல்வேறு தோற்றம் கொண்டு வளர்ந்து இன்றும் சுடர்விட்டு எரிந்து கொண்டிருக்கிறது.

மேலும் இரண்டு சூக்தங்களையும் கீழே அளிக்கிறேன்.

*****

ரிக்வேதம் – இரண்டாவது மண்டலம், நான்காவது சூக்தம் (ரிஷி: க்ருத்ஸமதர்)

நல்லொளி கூர்தர நற்சொற்களுடன்
மாந்தர்க்கு விருந்தாய் வந்து
நல் ஆகுதிகள் ஏற்கும் அக்னி
மித்திரன் போல் இனியவன்
மனிதர் தேவர் ஈறாக அனைத்துமறியும்
ஜாதவேதஸ்
அவனை அழைப்போம்.

நீர்களில் உறையும் அவனைப் பணிந்து
மானிடர் கூட்டங்களில் நிறுவினர் பிருகுக்கள்
விரிந்த உலகெங்கும் ஆள்க அக்னி !
விரைந்தோடும் பரிகளுடையோன்!
தேவர்களின் மேலாளன்!

குடிபுகுமிடம் வரும் மித்திரன் போல
அன்பு அக்னியை
தேவர் மனிதரிடையே அமைத்தனர்
அலைபாயும் இரவுகளின் தவிப்பை
ஆற்றும் அவன் சுடர்
வேள்வி தரும் வீடுகள் அவனை உபசரித்திடுக.
 
இன்பம் அவனது சுடரின் புஷ்டி
வாழ்வில் வளப்பம் போல
இன்பம் அவன் கனன்று முன்செல்லும் காட்சி
வனச்செடிகளை நாவால் தீண்டி
பிடரிமயிர் குலுங்க ஓடும்
தேர்க்குதிரை அவன்!

காடுகளை உண்ணும் அவன் வலிமை
போற்றுகிறது என் மனம்
விருப்புற்றுத் தன்வண்ணம் காட்டுகிறான்
இன்புற்று அவன் காட்டும் எழிலார்ந்த சுடரொளி!
ஓ! மூப்படைந்த அவன் மீண்டும்
இளமையுறுகிறான்!

தாகத்தால் தவிப்பது போல்
காடுகளில் ஒளிர்கிறான்
நீரோட்டம் போல் அவனது முழக்கம்
வழியெங்கும் அவனது வெய்யக் கருமை
விண்ணின் மேகப் புன்முறுவலென. 

பேருலகெங்கும் எரிந்து பரவுகிறான்
கட்டில்லாது சுயமாய்த் திரியும் மிருகமென.
உலகையே உண்டுவிடுவது போல்,
உலர்ந்த அடிமரத்தைப் பொசுக்கிக்
கரிய சுவடாக்கும் அக்னி!

உனது பழைய ஆசிகளின் நினைவில்
மூன்றாம் வேள்வியில் உன்னைப் பாடுகிறோம்
அக்னி!
வீரர் கூடும் பெரும்பரப்பும்
நற்சந்ததிகளும் நிறைந்த செல்வமும்
தருக!

அக்னி!
உன்னைப் புகழும் க்ருத்ஸமதர்கள்
வலிமை பெறுக! 
நிறைந்த வீரர்களுடன்
எதிரிகளை அடக்கி முன்சென்று வெல்க!
மறைபொருள் எமக்கு வசப்படுக!

*****

ரிக்வேதம் – ஆறாவது மண்டலம் முதல் சூக்தம் (ரிஷி: பரத்வாஜர்)

அக்னி
இந்த எண்ணத்தை முதலாக எண்ணியவன் நீ
அற்புதன் 
வேள்வியில் தேவர்களைக் கூவியழைப்போன்
வெல்லுதற்கரிய காளை நீ
உன் ஆற்றலால் உலக ஆற்றல்கள் அனைத்தும் ஆள்பவன்.

வேள்வி நடத்துவோன் நீ
யாம் வேண்டி வழிபட
விருப்புற்று வந்தமர்ந்தாய்
செல்வப் பெருநிதியின் வழி உன் மனம்
உன்னையே முதலாய்ப் பற்றி
தேவர்களைச் சமைப்பர் உணர்ந்தோர். 

ஊண்செறிந்து
மேன்மேலும் ஒளிர்ந்து சுடரும்
பெரியோய் !
கண்ணுக்கினிய அக்னி! 
நீ விழித்து நோக்கிட
வழிப்போக்கர் பின்செல்வார் போல
செல்வங்களைப் பின்தொடர்வர் மாந்தர். 
 
தெய்வ உலகம் தேடிச் சென்றோர்
போற்றிப் புகழ்ந்து அவற்றையடைந்தனர்
வேள்வித் திருநாமங்கள் தரித்து
உனது மங்கலக் காட்சியில் மகிழ்ந்தனர்.  

இம்மை மறுமை
இருமைக்கும் செல்வமென
மாந்தர் வளர்ப்பது உன்னை.
நீயே துணைபுரிவோன், காப்போன்!
நீயே மானிடர்க்கு என்றும் தாயும் தந்தையும்!

வேள்வித் திறலோன்
மாந்தர்க்கு இனிய அன்பன்
கூவி அழைக்கும் புரோகிதன்
வீற்றிருக்கிறான்
உன்னிடத்தில் நீ சுடர்ந்தெரிய
நெருங்கி முழந்தாளிட்டு வணங்குகிறோம்!

தூய மனதுடையோர்
தேவர்களைச் சமைப்போர்
யாம்
இன்பம் வேண்டி
உரத்துப் பாடி உன்னை நாடினோம்
அக்னி
பொலிவுறும் உன்னொளி பரவிய விண்ணின் வழி
நீயே எம்மை நடத்திச் செல்கிறாய்

உண்மை காணும் கவி
உலகனைத்தின் பதி
நிலைபெற்றோன்
மாந்தருள் காளை
வரமருள்வோன் 
அக்னி
செலுத்துவோன்
தூயதாக்கும் புனிதன்
செல்வங்களின் தனியரசன்!

உழைத்து, உன்னைப் போற்றி
சுள்ளியிட்டு, அவி சொரிந்து
வேள்வியின் நெறியறிந்த மானிடன்
உன் துணையும் காப்பும் தொடர
அனைத்து இன்பமும் அடைவான்.

பெரியோய் அக்னி!
பெருமிதத்துடன்
வேள்வி மேடையிட்டு
சுள்ளியிட்டு அவி சொரிந்து
பாடல்களும் துதிகளும் கூடிப்
போற்றுகிறோம்.  
சக்தி மகனே
உனது மங்கல நல்லருளே வேண்டி
முயல்கிறோம்.

புகழோய்
விண்ணும் மண்ணும் நிறைத்தன
உன் ஒளியும் புகழும்
அக்னி
பெருங்கனமுள்ள உன் செல்வக்குவைகளுடன்
இடையறாது எம்மிடத்தில்
சுடர்க!

செல்வங்களுக்கரசே வசுவே
எம் புதல்வனுக்கும் சந்ததியினர்க்கும்
நிறைந்த பசுமந்தைகளை
என்றென்றும் தருக
தீமையற்ற நல்லுணவும்
இன்பமளிக்கும் உண்மைப் புகழும்
எம்மிடம் நிலைத்திடுக

அக்னியே அரசே
உனதன்பும் அருளும் கொண்டு  
செல்வம் பலவும் நுகர்வோன் ஆகுக யான்! 
அடியார்க்கு வரம் தரும்
செழுமையும் உரிமையும் உனதே!

17 Replies to “ரிக்வேதத்தின் அக்னி சூக்தங்கள்”

 1. ஜடாயுவுக்கு மிக்க நன்றி. நல்ல மொழி பெயர்ப்பு. பஞ்ச பூதங்களாகிய மண், நீர், நெருப்பு, வாயு, ஆகாயம் என்ற ஐந்தில் மையத்தில் இருப்பது அக்னி. ஐம்புலன்களாலும் உணரமுடிந்தாலும் இதற்கு ஒரு வடிவம் என்று தனியாக ஏதும் கிடையாது. இதிலிருந்து வரும் ஒளிதான் இன்றும் பௌதிக உலகில் இருப்பதற்குள் வேகமானது. மற்றும் இதன் தன்மை முழுமையாகப் புரியப்படவில்லை, ஏனென்றால் அந்த ஒளியே அசலமான ஜடமாகவும் இருக்கிறது, சலமான அலையாகவும் இருக்கிறது. அதன் ஒன்றிய சிவ-சக்தி ஐக்கிய சொரூபத்தைத்தான் நாம் கார்த்திகையன்று தீபமாக வழிபடுகிறோம். அத்தகைய அக்னியின் தலமாகிய திருவண்ணாமலை பற்றி தொடர்புடைய பதிவுகளில் ஏதும் வராததன் காரணம் எனக்குப் புரியவில்லை.

 2. ஜடாயு அவர்களே

  //
  கோயிலுக்குள் சென்றேன். அங்குள்ள சிவலிங்கத்தை வணங்கினேன். அப்போது சட்டென்று அந்த விஷயம் உறைத்தது– இது ஒரே கல்லால் கட்டிய கோயில். அந்த மாபெரும் ஒரே கல்தான் இந்தக் கோயிலும் அதன் விமானமும் அதன் பிராகாரங்களும்; அதன் சிவலிங்கமும் கூட. அதன் மீது நான் நின்று கொண்டிருக்கிறேன். அதையே வணங்கிக் கொண்டிருக்கிறேன். அந்த உணர்வு தந்த பிரமிப்பில் ஒரு நிமிடம் கல்லாய்ச் சமைந்துவிட்டேன்.
  //

  ஆத்ம சாக்ஷாத்கார அனுபவமாகவே இது இருந்திருக்க வேண்டும். உத்தமம்

 3. தேவாரம் வேத சாரம் என்பர் ஆன்றோர். வேத மந்திரங்கள் இலக்கியச் சுவையும் பத்தி உணர்வும் கலந்து திருமுறைகளில் ஓதப்படுகின்றன. சிவபரம்பொருள் ‘வேதமும் வேள்வியும் ஆயினான்’ . அப்பரம்பொருளே எரிசுடராக உள்ளது. தியாக உள்ளது அச்சிவமே . அத்தீயை அப்பர் பெருமான்,
  “ஊழித்தீ யாய்நின்றாய் உள்குவார் உள்ளத்தாய்
  வாழித்தீ யாய்நின்றாய் வாழ்த்துவார் வாயானே
  பாழித்தீ யாய்நின்றாய் படர்சடைமேற் பனிமதியம்
  ஆழித்தீ ஐயாறர்கு ஆளாய்நான் உய்ந்தேனே”
  என்று திருவையாற்ருத் திருநேரிசையில் பாடுகின்றார்.

  பிரளய காலத்தில் காலாக்கினியாகி அண்டங்களை அழிக்கிஉம் அத்துணைப் பெரியதாக இருந்தாலும், உள்குவார் உள்லத்தில் உறையும் அத்துணை நுண்மையையானவன் ஐயாறன். பிரளயாக்கினி எனும் ஊழித்தீயாகப் புறத்தே நின்றாலும் உள்குவார் உள்ளத்தே அன்புடன் நிற்கும் ஈரியல்பு உடையவன் ஐயாறன்.

  வாழித்தீ என்பது உடம்பினுள் இருந்து உயிர்வாழ்க்கைக்கு உதவும் தீ. உடலில் முத்தீ உள்ளன என்பது வேதக் கருத்து. பிரச்சோபநிடதம் அவ்வாறு கூறும் என்பர். அபாநன் காருகபத்தியம், பிராணன் ஆகவனீயம், வியாநன் தாக்கினாக்கினி. எனும் முத்தீயாய் உடலில் இருந்து வழ்ழ்வித்தருளுவத்தால் ஐயாறன் வாழித்தீயானான்.
  அழிப்பது ஊழீத்தீ; வாழ்விப்பது வாழித்தீ.
  பாழி என்றால் பெருமை.. ‘நீண்டமாலும் அயனும் வெருவ நீண்ட நெருப்பு’ ஆதலின் ஐயாறன் பாழித்தீ எனப்பட்டான்.

  ஆழி என்றால் கடல். கடலில் தோன்றி எழும் நெருப்புக்கோளம் போல ஒளியுடைமையால் ஆழித்தீ ஐயாறர் எனப்பட்டார்.

 4. NO WORDS TO THANK, YET THIS SERVICE IS CERTAINLY NOT DONE EXPECTING THANKS AND/OR APPRECIATION. THIS MESSAGE SHOULD REACH FAR AND WIDE AND IN ALL LANGUAGES OF THIS COUNTRY WHICH IS THE BIRTHPLACE OF SUCH GREAT THOUGHTS.

 5. அன்பர் ஜடாயுவுக்கு மனம் நிறை நன்றிகள்.

  ரிக் வேதத்தின் முதல் மண்டலத்தின் முதல் சூக்தத்தில் தொடங்கியுள்ள உங்கள் கட்டுரை, பொருத்தப் பாட்டுக்காக இரண்டாம் மண்டலம் நான்காம் சூக்தம், ஆறாம் மண்டலம் முதல் சூக்தம் என்று தாவியிருக்கிறது.

  நல்ல முயற்சி.

  இயன்றால், நால் வேதங்களையும், ஒவ்வொரு சூக்தமாக, மூலத்தையும் தமிழ் எழுத்தில் கொடுத்து, தமிழ்ப் பொருளையும் தர முயற்சி செய்ய வேண்டுகிறேன். இன்றைய ஹிந்து சமுதாயத்துக்கு அவசியம் செய்ய வேண்டிய கைங்கர்யமாக நான் இதைப் பார்க்கிறேன். மிகப் பெரிய காரியம்தான். முயலுங்கள்.

 6. கருத்துத் தெரிவித்த அன்பர்கள் அனைவருக்கும் நன்றி.

  // வாழித்தீ யாய்நின்றாய் வாழ்த்துவார் வாயானே
  பாழித்தீ யாய்நின்றாய் படர்சடைமேற் பனிமதியம் //

  முனைவர் அவர்களே, முத்தீ பற்றிய விளக்கம் அருமை. “வாழித் தீ” என்ற அப்பர் பெருமான் சொல்லாட்சியே அற்புதமாக இருக்கிறது.

 7. // இயன்றால், நால் வேதங்களையும், ஒவ்வொரு சூக்தமாக, மூலத்தையும் தமிழ் எழுத்தில் கொடுத்து, தமிழ்ப் பொருளையும் தர முயற்சி செய்ய வேண்டுகிறேன் //

  பெருந்துறையான் அவர்களே,

  1950களில் வேத அறிஞர் ம.ஜம்புநாதன் நான்கு வேதங்களையும் தமிழில் மொழியாக்கம் செய்தார். சமீபத்திலும் புதிய பதிப்பாக வந்துள்ளது. ஆனால், அதன் மொழிநடையும், வடிவடையும் பழமையாகி வி்ட்டது, இப்போது நவீனத் தமிழ் வாசகர்கள் புரிந்து கொள்வது அசாத்தியம். படித்த எனது நண்பர்கள் சிலரும் இதைக் கூறினார்கள்.

  எனவே, நான் இங்கு தந்திருப்பது போன்று, நவீன கவிதை வடிவத்திற்கு நெருக்கமான மொழியில் வேத சூக்தங்களைக் கொண்டுவர வேண்டியது ஒரு முக்கியமான பணி ஆகிறது. ஆழ்ந்த வேதப் புலமையும் பல்லாண்டுகள் உழைப்பும் கோரும் பணி இது. எனது சொற்ப சம்ஸ்கிருத அறிவையும், ஆங்கில மொழியாக்கங்களின் துணையும் கொண்டு, அவ்வப்போது இயன்ற அளவு செய்து வருகிறேன். சிறுதுளி பெருவெள்ளமாகலாம்.

  பார்ப்போம்.

 8. ஜடாயுவுக்கு…
  தாங்கள் குறிப்பிட்டுள்ள நூல் ஏழு பாகங்களாக அலைகள் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டு, நானும் அதை ஒரு பிரதி வாங்கி வைத்திருக்கிறேன். அதில் சூக்தங்கள் (மூலம்) தமிழ் வரி வடிவில் தரப்படவில்லை. வெறும் மொழி பெயர்ப்பு மட்டுமே உள்ளது. மூலத்தைத் தமிழ் வரி வடிவில் தந்து பொருளையும் தந்தால்தான் பயனுள்ளதாகும். மேலும் அந்த மொழி பெயர்ப்பு சரியானதாகவும் (எனக்குத்) தோன்றவில்லை. கவி நடையில் எழுதுவது சிரமமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் கவி நடையைத் தவிர்த்துவிட்டு உரை நடையிலேயே மொழி பெயர்ப்பு வருவது நல்லது. இல்லையெனில் கவி நடைக்கு ஒரு உரை நடை தேவைப்படும் (பலருக்கு).

 9. துர்கா சூக்தமும் அக்னியைப் போற்றும் மந்திரங்களே என்று கேள்விப் பட்டிருக்கிறேன். ரிக் வேதத்திலும் துர்கா சூக்தம் வருகிறதா? துர்கயைப் பற்றிச் சொல்லவந்தவர்கள் அக்னியை ஏன் புகழ வேண்டும்? ஜடாயு தயை செய்து விளக்க வேண்டும்.

 10. மரியாதைக்குரிய ஜடாயு அவர்களின் வேதம் தமிழ் செய்யும் முயற்சி தொடர்ந்து நடைபெற வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்… இவற்றைப் படிப்பதன்றி கருத்துச் சொல்ல நம் அறிவு போதா…

  ஆபஸ்தம்பர் போதாயனர் செய்த ஸ்மிருதிகள் பற்றியும் இவை குறித்த ஆய்வாளர்கள் எவராயினும் எழுதினால் எம் போன்றவர்களுக்கு மிக்க பயனுடையதாயிருக்கும் என்றும் இத்தருணத்தில் விண்ணப்பிக்கிறேன்..

 11. // Shekar Raghavan on April 11, 2012 at 2:40 pm
  துர்கா சூக்தமும் அக்னியைப் போற்றும் மந்திரங்களே என்று கேள்விப் பட்டிருக்கிறேன். ரிக் வேதத்திலும் துர்கா சூக்தம் வருகிறதா?
  துர்கயைப் பற்றிச் சொல்லவந்தவர்கள் அக்னியை ஏன் புகழ வேண்டும்? ஜடாயு தயை செய்து விளக்க வேண்டும். //

  நீங்கள் குறிப்பிடும் துர்கா சூக்தம் கிருஷ்ண யஜுர்வேதம் தைத்திரிய ஆரண்யகம் 4.10.2 என்று நினைக்கிறேன் (ஜாதவேதஸே ஸுனவாம..). சில மந்திரங்கள் இரண்டு அல்லது மூன்று வேதங்களிலும் தொகுக்கப் பட்டிருக்கும்.. இம்மந்திரம் ரிக்வேதத்திலும் இருக்கலாம்.

  அந்த சூக்தம் அக்னியைப் பற்றியதே. அக்னியின் தெய்வீக சக்தியை பெண்பாலில் போற்றிப் பாடும் சூக்தம் இது. அதில் ‘துர்காம் தேவீம்’ என்ற சொல் ‘இடர் களையும் தேவி’ என்ற பொருளில் வருகிறது. பின்னாளை சக்தி வழிபாட்டு பூஜை முறைகளில் வேத மந்திரங்கள் தொகுக்கப் பட்ட போது ‘துர்கா’ என்ற மந்திரச் சொல் அமைந்துள்ள இந்த சூக்தம் அப்பெயரிலேயே அழைக்கப் பட்டு இன்றளவும் தொடர்ந்து வருகிறது.

  வேத மந்திரங்களில் எல்லா தேவதைகளையும் பற்றிய துதிகள் ஒன்றுகலந்தே உள்ளன. ஒன்றாக நின்றிலங்கும் பரமாத்ம சொரூபத்தையே அவை பாடுகின்றன. பின்னாளைய சைவ வைணவ சமய கோட்பாடுக்ளை வைத்து வேதத்திலும் மந்திரங்கள் அப்படி தனித்தனியாக இருக்க வேண்டும் என்றெல்லாம் கொள்ள முடியாது. சமயப் பிரிவுகள் பின்னாளில் உருவான போது, ஒவ்வொரு பிரிவினரும் தமக்கு உகந்த வேத மந்திரங்களை அவரவர்கள் பூஜை முறைகளில் சேர்த்துக் கொண்டனர், அவ்வளவே.

 12. அருமையான, மிகவும் தேவையானக் கட்டுரையை; வேத தமிழ் கவியைப் படைத்து இருக்கிறீர்கள்… அதை பகிர்ந்தமைக்கு எனது நன்றிகள்.

  /////கோயிலுக்குள் சென்றேன். அங்குள்ள சிவலிங்கத்தை வணங்கினேன். அப்போது சட்டென்று அந்த விஷயம் உறைத்தது– இது ஒரே கல்லால் கட்டிய கோயில். அந்த மாபெரும் ஒரே கல்தான் இந்தக் கோயிலும் அதன் விமானமும் அதன் பிராகாரங்களும்; அதன் சிவலிங்கமும் கூட. அதன் மீது நான் நின்று கொண்டிருக்கிறேன். அதையே வணங்கிக் கொண்டிருக்கிறேன். அந்த உணர்வு தந்த பிரமிப்பில் ஒரு நிமிடம் கல்லாய்ச் சமைந்துவிட்டேன். ////

  இந்த வரிகளை நான் படிக்கும் பொது எனக்குத் தோன்றிய விசயங்களையே நீங்களும் பிற்பகுதியில் பேசி இருக்கிறீர்கள்….

  எனக்குத் தோன்றியது என்ன அருமையான வேதாந்த கூறும் பிரபஞ்சத் தத்துவம் இது வாக இருக்கிறது… அதை உணர்த்தவே தான் இந்த குகைக் கோயிலை படைத்து இருக்கிறார்களோ என்று எனக்குத் தோன்றியது… தங்களின் புரிந்துணர்வும் அதுவே என்பதை அதற்கு மேலேக் கண்டேன்.

  ///அக்னியே இந்திரனாக, எமனாக, ருத்ரனாக, விஷ்ணுவாக, தாய் அதிதியாக, தேவ சொரூபங்கள் அனைத்தும் கொள்வதாக மந்திரங்கள் பகர்கின்றன. அனைத்து இந்தியர்களின் தொல்மூதாதைகளான ரிஷிகள் வளர்த்த அக்னியே வேள்வித் தீயாக, ஆசைத் தீயாக, சக்தித் தீயாக, உயிர்த் தீயாக, அறிவுத் தீயாக, கலைத் தீயாக, யோகத் தீயாக, ஞானச் சுடராக பல்வேறு தோற்றம் கொண்டு வளர்ந்து இன்றும் சுடர்விட்டு எரிந்து கொண்டிருக்கிறது. ////

  காலம், காரணம் இவைகளைக் கடந்த பர பிரம்மத்தின் ஒட்டு மொத்த தோற்றம் தானே இவைகள் அனைத்தும் என்பர். பஞ்சபூதங்கள் அனைத்திலும் இருக்கும் சக்தி (பிராணன்) அந்த மகா சக்தியில் இருந்து பிரிந்து வந்த பரா சக்தி என்பதும் பெரியோரின் துணிபும்…

  “தீயிற்குள் விரலை வைத்தால் நந்தலாலா நின்னைத் தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா”

  தங்களின் அக்னிக் கவிதை மொழி பெயர்ப்பும் மிளிர்கிறது…
  பகிர்வுக்கு நன்றிகள் ஐயா!.

 13. அக்னியே இந்திரன், ருத்திரன், விஷ்ணு, எமன் , அதிதி, மற்றும் தேவ சொரூபங்கள் என்பது நூறு விழுக்காடு உண்மை. ஜடாயுவின் கவிதை ஆக்கம் தொடரட்டும். அவரது பங்களிப்பு தமிழ் இந்துவுக்கும், மற்றும் முழு தமிழ்நாட்டுக்கும் ஒரு வரப்பிரசாதமாக ஆகும். நன்றிகள் ஏராளம்.

 14. ஐயா, நான் படித்த ஒரு கட்டுரையில் அக்னி என்பது சமஸ்க்ருத மொழியில் நெருப்பையும் அதன் காரணி, வகைகளை மட்டும் குறிப்பிடுவன அல்ல என்றும் மாறாக அக்னி என்றால் ஞானமடைந்த, ஞானமடைவிக்கின்ற என்றும் பொருள் தரும் என்று படித்தேன். இது மிக நல்ல முயற்சி. தொடருங்கள். நம் வேதங்களை அவைகளின் சரியான பதத்தில் சரியான அர்த்தத்தில் புரிந்து கொண்டு அவற்றைப் பின் பற்ற வேண்டும். தொடருங்கள்.

 15. பெருமைக்குரிய திரு ஜடாயு அவர்களுக்கும் தமிழ் ஹிந்து வலைத் தளத்தாருக்கும் உளமார்ந்த நன்றி
  பேரா. திரு ராதா கிருஷ்ணன் அவர்கள் நம்முடைய வேத நூல்களைப் படித்தறிய நாம் அன்னியர்களையே நம்பி இருக்க வேண்டிய துரதிருஷ்டம் இருக்கிறது என்று வருத்தப் பட்டு எழுதினார், அக்குறை இக்கட்டுரையால் நீங்கியது என்றே நினைக்கிறேன். வேதம் வகுத்த வியாசனும், பரப்புரை செய்தல் நின்கடன் (ப்ரவசன(கும்) சந்தானம் என்றாணையிட்ட வேத ரிஷிகளும் திரு ராதாகிருஷ்ணன் அவர்களும் நிச்சயம் உங்களை ஆசீர்வதிப்பார்கள். என்னைப் போன்றவர்களும் பயனடைவார்கள். தலை வணக்கி நன்றி கூறுகின்றேன்
  என்றும் மாறா அன்புடன்
  நந்திதா

 16. நாகரீகம் என்றபெயரில் அனைத்து பழைய ஒழுக்க நெறிகளையும் மறந்து விட்ட இக்காலத்தில் ரிக்வேதத்தை இனையதளத்தில் பதிவேற்றம் செய்தது மிகவும் பாராட்டுதற்குறியது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *