2009 ஏப்ரல் 27-ம் நாள் அக்ஷய திருதியை. இந்த நாளின் பெயரைச் சொன்னவுடனேயே நகைக் கடை க்யூ நினைவுக்கு வருமாறு செய்துவிட்டனர் நகை வியாபாரிகள், தங்கள் அதீத விளம்பரக் கூச்சலினால்! இதில் உலகத் தங்கக் குழுமத்துக்கும் (World Gold Council) பங்கு உண்டு என்பது வர்த்தக தினசரிகளைப் படிப்பவர்களுக்குத் தெரியும்.
ஆனால் உண்மையில் அக்ஷய திருதியை தினத்தன்று நிரம்பி வழியும் நகைக்கடைகளில் அலைமோதிக் கொண்டு உள்ளே சென்று ஒரு குண்டுமணி தங்கமாவது வாங்க வேண்டும் என்று எந்த சாஸ்திரமும் சொல்லவில்லை. சென்ற சில பத்தாண்டுகளில் வணிக நோக்கத்தில் கிளப்பி விடப்பட்ட மாயை இது. ஒரே நாளில் சந்தைக் கடைபோல முண்டியடித்துக் கொண்டு வாங்கி தங்கத்தின் விலையை ஏற்றாதீர்கள். எதுவானாலும் தேவை என்றால் மட்டுமே வாங்குவதை வழக்கமாகக் கொள்ளுங்கள். இது உங்களுக்கும் நல்லது, நாட்டுக்கும் நல்லது.
அக்ஷய திருதியை தினத்தன்று லட்சுமி குடியிருக்கும் பொருட்களை வாங்க வேண்டும் என்பதே ஐதீகம். அந்த வகையில் பார்த்தால் அன்று குறிப்பாக வாங்க வேண்டிய பொருட்கள் மஞ்சளும், முனை முறியாத (கைக்குத்தல்) பச்சரிசி, கல்லுப்பு ஆகியவைதான்.
உண்மை இவ்வாறிருக்க நகைச் சந்தையினர் மக்களை மூளைச் சலவை செய்து அக்ஷய திருதியை அன்று ஒரு கிராம் தங்கம் வாங்கினால் கூட வருகிற நாட்களில் அவர்கள் கேட்காமலேயே, கனகதாரா ஸ்தோஸ்திரம் சொல்லாமலேயே, அவர்கள் வீட்டுக் கூரையைப் பிய்த்துக் கொண்டு தங்கம் கொட்டும் என்பது போன்ற பிரமையை ஏற்படுத்தியிருக்கின்றனர். அன்று தங்கத் துளி வாங்கி வந்து பீரோவில வைத்து விட்டால் அது தானாகவே குட்டி போட்டு கிலோ கணக்கில் பெருகி விடுமா என்ன! என் சிறு வயதில் எங்கள் கிராமத் தொடக்கப்பள்ளியில் படிக்கும்போது புத்தகத்தினிடையே மயில் இறகின் அடியில் பஞ்சை வைத்து குட்டி போடுமா என்று பார்த்துக் கொண்டிருந்தது தான் நினைவுக்கு வருகிறது!
காதலர் தினம் என்ற பெயரில் அடிக்கும் வணிகக் கூத்துக்கும் இதற்கும் பெரிய வித்தியாசமில்லை – காதலர் தினம் இறக்குமதி செய்யப்பட்ட அசட்டுத்தனம் என்பதைத் தவிர.
அக்ஷய திருதியையில் தங்கம் வாங்கினால் தொடர்ந்து தங்கம் சேரும் என்பது உண்மையானால், போன வருடம் இதே நாளில் தங்கம் வாங்கியதற்கு இந்த வருடம் அதிக தங்கம் இவர்களிடம் ‘தானாக வந்து’ சேர்ந்திருக்கிறதா? ஆனால் அவர்கள் இந்த வருடமும் தங்கம் வாங்க வரிசையில் ஏன் நிற்கிறார்கள்!
செல்போனும் பிற எலக்ட்ரானிக் சமாசாரங்களையும் வாங்கித் தள்ளும் இளைய தலையமுறை தங்கத்துக்கு அதிகம் செல்வழிப்பதில்லை என்று WGC கவலைப்படுகிறது. தங்கம் வாங்குவதற்கு இவர்களைத் தள்ளும் முயற்சியில் ஆண்டுக்காண்டு இதன் விளம்பர பட்ஜெட் அதிகமாகிக் கொண்டே போகிறது. தங்கம் வாங்கச் சொல்லும் விளம்பரங்களுக்காக 2007ல் 80 கோடி ரூபாய் செலவழித்துள்ள WGC அதுவே மிகக் குறைவு என்று அங்கலாய்த்துள்ளது.
பணத்தைப் பாதுகாப்பாக முதலீடு செய்ய தங்கம் ஒரு நல்ல வழி என்று நீங்கள் கூறலாம். உண்மைதான். ஆனால், ஒரு பொருளில் முதலீடு செய்பவர் அது மிகக் குறைந்த விலையில் விற்கும் நாளன்றுதானே போய் வாங்க வேண்டும். இப்படிப் பைத்தியக்காரத்தனமாக ஒரே நாளில் போய் விழுந்து விலையை ஏற்றிவிட்டா முதலீடு செய்வார்கள்? என்றைக்குத் தங்கம் விலை குறைவாக இருக்கிறதோ அன்றுதான் அதை வாங்க நல்ல நாள் என்பதுதானே புத்திசாலித்தனம்!
இதில் வேடிக்கை என்ன வென்றால் இவர் அனைவரும் நன்கு படித்த, வாழ்க்கையின் அடிப்படை வசதிகள் அத்தனையும் கொண்ட உயர் / நடு மத்திய தர வர்ககத்தினரே. இவர்கள்தான் ஆட்டு மந்தைக் கூட்டங்களாக அடித்துப் பிடித்துக் கொண்டு நகைக் கடைக்கு பட்டுப் புடவையணிந்து போய் நிற்கிறார்கள்!
அக்ஷய திருதியை தங்க விற்பனை பற்றி உலக தங்க கவுன்சிலின் மேலாண்மை இயக்குநர் சென்ற வருடம் 55 டன் தஙகத்திற்கும் அதிக அளவு விற்பனையாயிற்று என்கிறார். இந்த ஆண்டு எல்லோரையும் பிளாட்டினம் வாங்குங்கள் என்கிறார்கள். அடுத்த மாதம் சம்பளம் வருமா என்று பலர் பயந்து நிற்கும் இன்னாளில் தங்கத்தை விட இரண்டு பங்கு விலையுள்ள பிளாடினத்தை வாங்கு என்கிறார்கள் இந்த வியாபாரிகள்!
அதிருக்கட்டும். உண்மையில் அக்ஷய திருதியை நாளை இந்துக்கள் எவ்விதம் கடைப்பிடிக்க வேண்டும் என்பதைப் பார்ப்போம்.
ஒவ்வோர் ஆண்டும் சித்திரை மாதம் அமாவாசைக்கு பின்வரும் மூன்றாம் பிறை நாள் (திருதியை) அக்ஷய திருதியை நாளாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. அன்றைய தினம் சூரியனும் சந்திரனும் மிக வீரியத்துடன் காணப்படுவதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன.
‘அக்ஷய’ என்ற சொல் ’குறைவற்ற’ மற்றும் மேன்மேலும் வளர்கின்ற என்னும் பொருள் பெறும். அள்ள அள்ளக் குறையாமல் அன்னம் பெருக்கெடுத்த “அக்ஷய பாத்திரம்” உங்கள் நினைவுக்கு வருகிறதல்லவா!
புனித கங்கைத் தாய் பூமியில் இறங்கி நீர்ப் பெருக்கெடுத்தது அக்ஷய திருதியை அன்றுதான் என்று புராணங்கள் கூறுகின்றன. மேலும் இது பரசுராமர் அவதரித்த நாளாகவும் கருதப்படுகிறது.
இந்த நாளில் எடுத்த காரியம் எதனிலும் வெற்றியே என்பது இந்துக்களின் நம்பிக்கை.
இந்த நாளில் ஹோமம், ஜபம் முதலியவை செய்வதால் நம்முடைய செல்வமும் பலமடங்காகப் பெருகி வளம் செழிக்கும் என்பது நம்மிடையே இருந்து வரும் நம்பிக்கை.
நெல் விதைக்க ஏற்ற நாளாக இது நாடெங்கிலும் கொண்டாடப் படுகிறது. புதிய கட்டிடங்களைத் துவங்க, அஸ்திவாரம் போட, கிணறு வெட்ட ஏதுவான நாள்.
பூரி ஜகன்னாதர் தன் ‘சந்தன் யாத்ரா’வை இந்த நாளில்தான் துவங்குகிறார்.
ஏழைகளுக்கு நம்மால் முடிந்த பொருளுதவி செய்து இறைவன் நினைவில் பஜனை, ஹோமம் செய்து, அதன் மூலம் இறையருளை வேண்டி அக்ஷய திருதியை நாளைக் கொண்டாடுவது சாலச் சிறந்தது.
இந்நன்னாளின் பெருமை பற்றி மேலதிக தகவல்களுடன் நன்கு விளக்குகிறது லிஃப்கோவின் இக்கட்டுரை.
சென்னை வாசிகள் மயிலை இராமகிருஷ்ண மாணவரில்லத்தில் அக்ஷய திருதியை அன்று நிகழவிருக்கும் சண்டி பாராயணம், சரஸ்வதி மகா அபிஷேகம் போன்றவற்றில் பங்கு பெறலாமே. (விரிவான நிகழ்ச்சி நிரலைக் காண இங்கு கிளிக் செய்யுங்கள்.)
நல்ல கட்டுரை. 500 பேருக்கு நோட்டீஸ் அடித்து கொடுங்கள் என்று நோட்டீஸ் அடித்து விநியோகிப்பது போன்றவற்றை போல அட்சயதிருதியை ஆக்கி விட்டார்கள். இது பற்றி சுவாமி ஓம்கார் அவர்களின் கட்டுரை
https://vediceye.blogspot.com/2009/04/blog-post_21.html
மனமுருகி இறைவனிடன் இறைஞ்சினால் இறைவனே கட்டாயம் அருள்வான். வீணாகக் காசை விரயமாக்க வேண்டாம். எது நம்முடையதோ அதுதான் நம்முடையது. பிறருடையது நம்முடையது ஆகாது.
Let this one be an eye opner. People dhould be taught to not fall prey to manipulations and mechanisations of mrciless merchants. A very interesting one.
சில வருடங்களாக அக்ஷய த்ரிதியை ஏக அமக்களப்படுகிறது. இந்த நாளில் தங்கம், வைரம், வெள்ளி மற்றும் அசையும்/அசையா சொத்துக்கள் வாங்கப்படுகிறது. இந்த வருடம் வரும் 27ஆம் தேதி வருகிறது அக்ஷய த்ரிதியை.
இந்த தினத்தை திரேத யுகம் ஆரம்பமான தினம் என்றும், பரசு ராமர் ஜெனித்த தினம் என்றும் கூறுகிறார்கள். அக்ஷயம் என்பதற்கு ஆலமரம் என்றும் பொருள் உண்டு. ப்ரம்மாவின் படைப்புத்தொழிலை ஆலமரத்திற்கு உதாரணம் சொல்வதுண்டு. தமிழில் கூட ஆல்போல் தழைத்து என்று வாழ்த்துவார்கள். எனவே இந்த தினத்தில் செய்யும் எந்த நற்காரியமும் பல்கிப் பெருகும் என்பதே பொருள். இதை வியாபாரிகள் தங்கள் லாபத்திற்கு பயன்படுத்த மக்களை முட்டாளாக்குகிறார்கள்.
இந்த நாள் ஒரு புண்ணிய தினம். நல்ல காரியங்களும், ஜப தபங்கள் செய்யவும், மந்த்ர உபதேசத்திற்கும் இந்த நாள் உகந்த நாளாக கருதப்பட்டது. இந்த நாளில் நிறைய மந்தர ஜபங்கள் செய்வர், சித்தியும் ஆகும். அப்படிப்பட்ட நாளை தங்கம் வாங்கவும், வைரம் வாங்கவும் மக்களை முட்டாளாக்கி ஓடவைக்க பயன்படுத்துவது மிகுந்த வருத்தமளிக்ககிறது.
தற்போது ப்ளாடினமும் வாங்கலாம் என்று விளம்பரப்படுத்துகிறார்கள். இதில் மட்டும் மத வேறுபாடு இன்றி இந்துக்களும், முஸ்லிம்களும், கிறித்துவர்களும், பௌத்தர்களும் போட்டி போட்டு நகை கடையை நிரப்புகிறார்கள்.
இந்து மதத்தில் எவ்வளவோ உயர்ந்த விஷயங்கள் இருக்க அதையெல்லாம் தவிர்த்து மக்கள் தங்கள் பேராசைக்கு தீனி போடும் விஷயங்களை நம்பி ஏமாறுகிறார்கள். ஆன்ம பலம் இல்லாதவர்களை இந்த உலகம் தன் மாயையில் சிக்கிச் சுழல வைக்கும். ஆன்ம பலம் பெற இறை அருள் முக்கியம், இறை அருள் பெற அன்பும் அருளும் இதயத்தில் இருத்தல்வேண்டும். இதயத்தில் அன்பு உண்டாக மனம் அடங்கவேண்டும், மனம் அடங்க உண்மையின்பால் தேடலும், த்யானமும் வேண்டும். த்யானம் கைகூடினால் உள்ளத்தில் ஒளி உண்டாகும், அப்போது, எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய் பொருள் காணும் நம் அறிவு.
எஸ்கே:
\\அன்று குறிப்பாக வாங்க வேண்டிய பொருட்கள் மஞ்சளும், முனை முறியாத (கைக்குத்தல்) பச்சரிசி, கல்லுப்பு ஆகியவைதான்.\\
இந்த வாக்கியத்துக்காகவே உங்களுக்கு க்ஷயமில்லாத விருத்தி எந்நாளும் எல்லாவற்றிலும் உண்டாவதாக! வழக்கம், பாரம்பரியம் என்ற பெயர்களில் வணிகயுக்திகள் மக்கள்மேல் திணிக்கப்படும் போதும், அவர்களும் அவற்றின் பின்னால் வாலைக் குழைத்துக் கொண்டு ஓடும்போதும், உண்மையை உரக்கச் சொல்வதற்கும் ஒரு துணிச்சல் வேண்டுமல்லவா! அந்த வகையில் சொன்ன உங்களுக்கும், வெளியிட்ட தளத்துக்கும் நன்றி.
அது சரி, க்+ஷ தனித்தனியாகத் தெரிய என்ன செய்தீர்கள், என்ன எழுத்துரு பயன்படுத்துகிறீர்கள்? (செக் ஷன் போன்ற சில அவசியமான இடங்களில்) க்கும் ஷவும் ஒட்டிக்கொண்டு தேவையில்லாத க்ஷ உருவாவதைத் தவிர்க்க முடியாமல் அவஸ்தைப் படுகிறேன். உங்களுடைய உபதேசத்தைத் திருவாய் மலர்ந்தருள வேண்டும்.:)
மிகச் சரியான நேரத்தில் மிகச் சரியான கட்டுரை. நம் மூட நம்பிக்கையின் உச்சம் என்பதை தவிர வேறு என்ன சொல்ல முடியும்.
நல்ல கட்டுரை.
// அது சரி, க்+ஷ தனித்தனியாகத் தெரிய என்ன செய்தீர்கள், என்ன எழுத்துரு பயன்படுத்துகிறீர்கள்? //
சம்யுக்தாக்ஷரங்கள் உருவாகுவதை தவிர்க்க யூனிகோடில் Zero Width Non Joiner என்று ஒன்று உள்ளது.
அதை க்’க்கும் ஷவுக்கும் நடுவில் இட்டால் சம்யுக்தாக்ஷர ‘க்ஷ’ வருவது தவிர்க்கப்படும்.
NHM Writer போன்ற மென்பொருட்களில் க்ஷவுக்கு க்ஷ என்று “ஃஜீரோ விட்த் நான் ஜாய்னர்” சேர்ந்து வருமாறு செய்துள்ளனர்.
சம்யுக்தாக்ஷர வடிவத்துக்கு x என்ற எழுத்தை பயன்படுத்த வேண்டும். ksh என்பது ZWNJஉடன் க்ஷ் என்று வருமாறு விசைப்பலைகையினை வடிவமைத்துள்ளனர்.
{க்} + {ஷ}+ = க்ஷ
{க்} + {ZWNJ} + {ஷ} = க்ஷ
நன்றி. வினோத் ராஜன். ஹரிகிருஷ்ணன் அவர்களின் வினாவுக்கு சிறந்த விளக்கம் அளித்துள்ளீர்கள்.
என்.எச்.எம் எழுதி கொண்டு k+sh+a அழுத்தியதால் கிட்டியது இது:
“க்ஷ”
நீங்கள் குறிப்பிட்டுள்ளது போல், அதிலேயே x+a = “க்ஷ”.
எ-கலப்பையில் k+sh+a = ”க்ஷ”
இந்தப் பெட்டியில் ஹைகோபியின் ஜாவாஸ்கிரிப்ட் மூலம் செயல்படும் எழுத்துரு மாற்றியில் கிட்டுவதும் k+sh+a = “க்ஷ”.
தமிழை தூய்மைப் படுத்துவதாக எண்ணிக் கொண்டு சமஸ்கிருத (கிரந்த) எழுத்துக்களை நீக்கி சவர்க்காரம் போட்டு தமிழை துவைத்துக் கொண்டிருக்கும் சில அறிவுஜீவிகள் ஏனோ இப்போது நினைவுக்கு வருகிறார்கள்!
எஸ்.கே
எங்களது இல்ல வழக்கம் (பாரம்பரியமாக) அக்ஷய த்ருதியை நாளில், அன்னமும் வஸ்த்திரமும் தானம் செயவதே. இது இன்றும் தொடர்கிறது.
இத்தகு நல்வழக்கத்தை விளம்பரம் செய்து மக்களை நல்வழிச் செலுத்த எந்த வர்த்தக நிறுவனமும் முன்வராது, அவர்களுக்குப் பணம் ஒன்றே குறி.
//தமிழை தூய்மைப் படுத்துவதாக எண்ணிக் கொண்டு சமஸ்கிருத (கிரந்த) எழுத்துக்களை நீக்கி சவர்க்காரம் போட்டு தமிழை துவைத்துக் கொண்டிருக்கும் சில அறிவுஜீவிகள் ஏனோ இப்போது நினைவுக்கு வருகிறார்கள்!//
ஹ்ம்ம்ம்… என் நினைவுக்கும் கூட வந்தனர்.
சிரிப்பதா வருத்தபடுவதா என்று தான் தெரியவில்லை. :)(
சரியான சமயத்தில் வந்த அருமையான கட்டுரை..இந்துமத நம்பிக்கைகளை அல்ட்ரா மாடர்னாக மாற்றி நம்மை ஏமாற்றுவதற்காக பன்னாட்டு நிறுவனங்கள் விரித்த வலையில் விழுந்த விட்டில் பூச்சிகள் நமது படித்த, மத்தியதர வர்க்கம். இவர்கள் வாங்க வேண்டியது நமது மதம் குறித்தான் விளக்கப்புத்தகங்களேயன்றி தங்கமோ, பிளாட்டினமோ அல்ல.
நல்ல கட்டுரை எஸ் கே. மக்களை முட்டாளாக்கும் இந்த ஏமாற்று-வியாபாரக் கூத்திற்கு, ஊடகங்களும் துணை போவது அவர்களின் வியாபாரம். இந்த வியாபாரத்தில் சமீப காலமாக ஜோதிடர்களும் பங்கேற்கின்றனர்.
ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்.
இன்று தான் இதைப் பற்றி யாராவது கட்டுரை எழுதினால் நன்பர்களுக்கு அனுப்ப வசதியாக இருக்ககுமே என்று நினைத்துக் கொன்டிருந்தேன். என்னுடைய விருப்பத்தை நிறைவேற்றி வைத்தமைக்கு மிக்க நன்றி !