ஆங்கில மூலம்: எஸ். லக்ஷ்மிநாராயணன்
தமிழாக்கம்: எஸ். ராமன்
4.1 மனம் ஒரு குரங்கு
தசரத மகாராஜா தனக்குப் பிறகு அரசாட்சி செய்ய தனது மூத்த மகன் இராமனை வாரிசாக அங்கீகரித்து பட்டம் சூட்டிவிட, அயோத்யா மக்களின் பொதுக்குழு ஒன்று கூட்டி, கலந்தாலோசித்தார். தாம் அதிக நாட்கள் வாழமாட்டோமோ என்ற சந்தேகமும் தசரதருக்கு வரவே, அவர் அந்த முடிவில் சற்று அவசரம் காட்டினார். அவரது மற்ற இரண்டு மகன்களான பரதனும், சத்ருக்குனனும் அச்சமயம் அயோத்தியில் இல்லை. அவர்கள் பரதனுடைய தாய் மாமனின் அழைப்பின் பேரில் கேகய நாட்டிற்குச் சென்றிருந்தனர். தசரதரோ கேகய நாட்டு அரசனுக்கு பட்டம் சூட்டுதல் தொடர்பான முக்கியமான கூட்டத்திற்கு அழைப்பும் அனுப்பவில்லை; ஒரு தகவலும் சொல்லி அனுப்பவில்லை. ஒன்று ராமனே பட்டத்திற்குரிய இளையராஜா என்பதால் அதை வரவேற்பார்கள் என்றும், மேலும் தூர தேசமான கேகய நாட்டிற்குத் தகவல் சொல்லி அனுப்புவதால் காலதாமதம்தான் ஆகும் என்றுமாக இரண்டு நொண்டி சாக்குகள் அவருக்கு இருந்தன.
ஒரு அரசனுக்கு பல மகன்கள் இருந்தால், அடுத்து ஆளப்போவது யார் என்பதில் அவர்களிடையே சண்டை, சச்சரவு சாதாரணமாக வருவதுதான். ராமன்தான் ஆளப்போவது என்று அறிவித்துவிட்டால், பரதன் ஆட்சிக்குப் போட்டி போடமாட்டான் என்று தசரதர் திடமாக நம்பினார். என்னதான் நல்லவன், மனதில் திடமானவன் என்றாலும் சில சமயம் அவர்களுக்கே சபலமும் வந்து மனமும் மாறக்கூடும் என்று தசரதருக்கு ஒரு பயமும் இருந்தது. ஆதலால் பரதன் என்ன செய்யக்கூடும் என்பதில் தசரதருக்குக் கொஞ்சம் சந்தேகமும் இருந்தது. அதனால் பட்டாபிஷேக விழாவை அவசரம் அவசரமாக அறிவித்து, ராமனை மறுநாளே விழாவிற்குத் தயாராக இருக்குமாறும் சொன்னார்.
பரதனுக்கோ தன் அண்ணனாகிய இராமன் மேல் அன்பும், மரியாதையும் மிகுதியாகவே இருந்தது. மேலும் அவன் நியாய-அநியாங்களைப் பற்றி நன்றாகவே தெரிந்திருந்ததும் அல்லாமல், நல்ல பண்பு, ஒழுக்கம் உடையவனாகவும் இருந்தான். அதெல்லாம் தசரதருக்கு நன்கு தெரிந்திருந்தும், ஒருவனுக்கு ஆசை என்று வந்துவிட்டால் அவன் எப்படி இருப்பான் என்பதை முன்கூட்டியே சொல்லமுடியாது என்பதும் அவரது எண்ணமாக இருந்தது. புகழ் மிக்க நல்ல குணவான்களே கடைசி நிமிடத்தில் மனம் மாறி பாதை தடுமாறி தவறாகச் சென்றிருக்கிறார்கள் என்பதையும் அவர் அறிவார்.
கிந்து சித்தம்ʼ மனுஷ்யாணாமனித்யமிதி மே மதி:|
ஸதாம்ʼ ச த⁴ர்மனித்யானாம்ʼ க்ருʼதஸோ²பி⁴ ச ராக⁴வ!|| 2.4.27||
கிந்து yet, இருந்தாலும்
த⁴ர்மனித்யானாம் those fixed in righteousness, தர்ம சிந்தனையுள்ள
ஸதாம்ʼ ச virtuous people, நற்குணம் மிகுதியான
மனுஷ்யாணாம் men(அ)s, மனிதர்கள்
க்ருʼதஸோ²பி⁴ made propitious, (இடம், காலம், மற்றும்) தேவைக்கேற்றபடி
சித்தம் mind, மனம்
அனித்யம் இதி is fickle, நிலையில்லாதது
மே my, என்
மதி: my opinion, எண்ணம்.
இருந்தாலும் தர்ம சிந்தனை மிக்கவும், பண்பு, ஒழுக்கம் மிக்கவும் உள்ள மனிதர்களின் மனம்கூட இடம், காலம், தேவைக்கேற்ப நிலையில்லாத வண்ணம் மாறலாம் என்பதே எனது எண்ணம். அதற்கேற்றபடி அவர்கள் தங்கள் ஆசைக்குப் பணியக்கூடும்.
ஒருவன் ஒரு சமயத்தில் நல்லவனாக நடக்கிறான் என்பதால், அவனுக்குச் சாதகமாக வாய்ப்புகள் வந்து அவனும் அதில் மயங்கிவிட்டால், அவன் நல்லவனாகத்தான் தொடர்ந்து நடப்பான் என்று சொல்லமுடியாது. பழைய கால நடவடிக்கைகளைக் கொண்டு ஒருவனை எடைபோடுதல் பல சமயம் தவறுதலாகப் போயிருக்கிறது. ஆதலால் நேர்மையான வழியில் ஒரு நல்லவன் செல்வான் என்பது பூவா-தலையா ஆட்டத்தின் முடிவு போன்றதுதான். எதிர்பாராமல் அவன் தவறான வழியில் செல்வதற்கும் வாய்ப்புகள் இருக்கின்றன என்பதை அனைவரும் உணரவேண்டும்.
4.2 வெள்ளம் வடிந்தபின் பாலமா?
கூனி எனச் சிறுவர்களால் கேலியாக அழைக்கப்படும் மந்தரா, கைகேயியின் அணுக்கத் தொண்டர்களில் ஒருவள். மறுநாளே ராமனுக்கு மணிசூட்டு விழா என்று அவளுக்குத் தெரிந்த உடனேயே அவள் கைகேயியிடம் போய் அந்தச் செய்தியைச் சொல்கிறாள். ராமனைத் தனது மகனாகவே கருதிய கைகேயிக்கு அது தெரிய வந்ததும் அவள் மனமகிழ்ந்து மந்தராவுக்கு பல வெகுமதிகள் கொடுக்கிறாள். ஆனால் மந்தராவுக்கோ ராமனின் பட்டாபிஷேகம் நடந்தால், அதன் பலாபலன்களைப் பற்றிப் புரிந்துகொள்ளாமல் கைகேயி இருக்கிறாளே என்று அதிர்ச்சி அடைகிறாள். முடிசூட்டப்படுவதால் ராமனின் அன்னையான கௌசல்யாவுக்கு மகாராணி என்கிற அந்தஸ்து கிடைத்து, அதனால் கைகேயி கீழ்நிலைக்குத் தள்ளப்படுவாளே என்று நினைக்கிறாள். மாறாக பரதனுக்கு மணிசூட்டு விழா நடந்து, அவனே ஆள்வதற்கும் தகுதி வந்தால், கைகேயி மகாராணி ஆகலாமே என்றும் நினைக்கிறாள். ஆதலால் கைகேயிக்கு தசரதன் எப்போதோ முன்பு கொடுத்த இரண்டு வரங்களை ஞாபகப்படுத்தி, ராமனுக்குப் பதிலாக பரதன் ஆட்சிக்கு வருவதற்கு யோசனை சொல்கிறாள். அன்று இரவே தசரதனைப் பார்த்து அதைக் கேட்டு அவரை நிர்பந்தப்படுத்தாமல் விட்டுவிட்டால் நிலைமை அவளுக்குச் சாதகமாக இருக்காது என்று சொல்லி, கீழ்க்கண்டவாறும் சொல்கிறாள்.
க³தோத³கே ஸேதுப³ந்தோ⁴ ந கல்யாணி! விதீ⁴யதே|
உத்திஷ்ட² குரு கல்யாணி! ராஜானமனுத³ர்ஸ²ய|| 2.9.54||
கல்யாணி O fortunate one, பாக்கியவதியே!
க³தோத³கே after the water has flown out, வெள்ளம் வடிந்தபின்
ஸேதுப³ந்த⁴: construction of a bridge, பாலம் கட்டுவது
ந விதீ⁴யதே not undertaken, செய்வதில்லை
உத்திஷ்ட² you may arise, எழுந்திரு
கல்யாணம் auspicious act, நல்ல காரியத்தை
குரு perform, செய்
ராஜானம் (to the) king, அரசனிடம்
அனுத³ர்ஸ²ய show(such act) காட்டு.
எனதருமை கைகேயியே! வெள்ளம் வடிந்தபின் பாலம் கட்டுவது வேண்டாத காரியம்; அதனால், சொல்லவேண்டிய செய்தியை கூடிய சீக்கிரம் அரசனிடம் சொல்லி நடக்க வேண்டிய நல்லதைச் செய்.
இதைப் போலவே வெள்ளம் வந்தபின் அணை கட்டுவதா என்றும் சொல்வார்கள். இதையெல்லாம் படித்தால், ஆங்கிலத்தில் உள்ள “closing the gate after the horse has bolted” என்றதொரு வழக்குச் சொற்றொடர் ஞாபகம் வருகிறதோ? ஆம், மந்தரையின் வாயிலிருந்து இங்கு வந்திருந்தாலும், சரியான அறிவுரை என்பது எக்காலத்திலும், எந்தத் தேசத்திலும் ஒரே மாதிரியானதுதான். காலத்தில் செய்யவேண்டியதைச் செய்யாமல் இருப்பது நன்மை பயக்காது என்பதை உணர்தல் அவசியம்.
4.3 சொன்னதைச் செய்பவன்
மந்தராவின் அந்த சூழ்ச்சி யோசனை கைகேயியின் மனதை வெகுவாகவே பாதித்துவிட்டது. முன்பு ஒருமுறை போர்க்களத்தில் சத்தியம் செய்து வாங்கிய வரங்களை தசரதரிடம் ஞாபகப்படுத்தி, தான் வேண்டுவதைச் சொல்லி அவைகளை நிறைவேற்றச் சொல்கிறாள். அன்றைய போர்க்களத்தில் தசரதருக்கு உதவியாக அருகில் கைகேயிதான் இருந்தாள். ஒரு சமயத்தில் அவரால் போர் புரியமுடியாது அவரது உயிருக்கே ஆபத்தான சூழ்நிலை உருவானபோது கைகேயிதான் அவரை ஒரு பாதுகாப்பான இடத்திற்கு இட்டுச் சென்று அவரைக் காப்பாற்றினாள். அதற்கு நன்றிக்கடனாக தசரதரும் அவளுக்கு இரண்டு வரங்கள் கொடுக்க, சத்தியப் பிரமாணம் வாங்கிக்கொண்டு அவள் தான் வேண்டும்போது அவைகளைப் பின்பு கேட்டுப் பெறுவதாகச் சொல்லியிருந்தாள். காலம் சென்ற பழைய நிகழ்ச்சி என்பதால் தசரதருக்கு அது மறந்துகூட போய்விட்டது. அதை இப்போது ஞாபகப்படுத்தி அவைகளை நிறைவேற்றக் கோருகிறாள். இரண்டு வரங்களில் ஒன்றின்படி இராமனுக்கு அல்லாது தன் மகன் பரதனுக்கு முடிசூட்ட வேண்டும்; மற்றதன்படி அடுத்த பதினான்கு ஆண்டுகளுக்கு இராமன் வனவாசம் செய்யவேண்டும்.
இதைக்கேட்ட தசரதருக்குத் தலையில் இடிவிழுந்தது போல ஆயிற்று. முதலில் அவள் கேட்பதில் உள்ள அநியாயங்களைப் பற்றி அவளுக்கு விளக்க ஆரம்பித்தார். அதற்கு அவள் செவி சாய்க்காதபோது அவளைக் கடிந்துகொண்டு அவச்சொற்களை வீசினார். இதற்குள் கைகேயிக்கு மனம் இறுகிப்போயிருந்தது. அவள் என்ன வந்தாலும் தனக்கு வேண்டியதைப் பெறாமல் விடுவதாக இல்லை. அவள் தசரதரைக் கோழை என்றும், கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற இயலாத கையாலாகதவன் என்றும் ஏசினாள். அதற்குத் துணையாகத் தங்களுக்கு என்னதான் இழப்பு வந்திருந்தாலும், தங்கள் வாக்கைக் காப்பற்றியவர்களைப் பற்றிப் பேச ஆரம்பித்துவிட்டாள்.
ஸம்ʼஸ்²ருத்ய ஸை²ப்³யஸ்²ஸ்²யேனாய ஸ்வாம்ʼ தனும்ʼ ஜக³தீபதி: |
ப்ரதா³ய பக்ஷிணே ராஜ ந்ஜகா³ம க³திமுத்தமாம்|| 2.14.4||
ராஜன் O king, ஏ! அரசனே!
ஜக³தீபதி: king, ராஜா
ஸை²ப்³ய: Saibya, சைபியர்
ஸ்²யேனாய பக்ஷிணே to a hawk, a bird, ஒரு கழுகுக்கு
ஸ்வாம் his own, தனது
தனும் body, உடலை
ஸம்ʼஸ்²ருத்ய having promised, கொடுத்த வாக்கால்
உத்தமாம் highest, உன்னதமான
க³திம் state, பதவி
ஜகா³ம attained, அடைந்தார்.
அரசனே! ஒரு கழுகுக்கு தான் கொடுத்த வாக்கால் தனது உடலையே கொடுக்கத் துணிந்த சைபிய என்னும் ராஜா உன்னதமான மேலுலகப் பதவி அடைந்தார்.
ததா² ஹ்யலர்கஸ்தேஜஸ்வீ ப்³ராஹ்மணே வேத³பாரகே³|
யாசமானே ஸ்வகே நேத்ரே உத்³த்⁴ருʼத்யாவிமனா த³தௌ³|| 2.14.5||
ததா² In the same way, அதே போன்று தேஜஸ்வீ powerful, சக்திவாய்ந்த அலர்க: king Alarka, ராஜா அலர்க்கர் வேத³பாரகே³ to a person who mastered vedas fully, வேதவிற்பன்னர் ஒருவருக்கு யாசமானே while he was soliciting, யாசித்தபோது ப்³ராஹ்மணே (to) the brahmin, அந்தணருக்கு ஸ்வகே his own, தனது நேத்ரே eyes, கண்களையே உத்³த்⁴ருʼத்ய having plucked, தோண்டிப் பறித்து அவிமனா: without hesitation, தயக்கமின்றி த³தௌ³ ஹி gave it indeed, ஈன்றார்.
அதே போன்று, வேதவிற்பன்னரான ஒரு அந்தணர் யாசித்தார் என்பதற்காக, எவ்விதத் தயக்கமும் இல்லாமல் மகாராஜா அலர்க்கரும் தனது கண்களையே தோண்டிப் பறித்துத் தானமாக அவருக்குக் கொடுத்தார்.
இப்படியாக இரண்டு சம்பவங்களைச் சொல்கிறாள். ஒரு வல்லூறிடம் மாட்டிக்கொண்ட குருவியொன்று தப்புவதற்காக, சிபி என்னும் அரசனின் மகனான சைபிய என்னும் ராஜாவிடம் தஞ்சம் புகவே, அவரும் அதைக் காப்பாற்ற முயலும் போது, அந்த வல்லூறோ குருவி தனது இயற்கையான உணவு என்று கூறுகிறது. அதன் வாதத்தை ஏற்றுக்கொண்ட ராஜாவும் குருவிக்குப் பதிலாக தனது உடலிலிருந்து சதையைக் கொடுப்பதாகக் கூறினார். தான் சொன்ன வாக்குப்படி குருவியின் எடைக்குச் சமமாக தனது சதையை ஒரு தராசில் வெட்டிவைக்க, எவ்வளவுதான் அப்படி வைத்தாலும் எடை சரிசமமாக ஆகாததால், தானே தராசில் ஏறி தன்னையே தானமாகக் கொடுக்கிறார். அப்போதுதான் அவ்விரு பறவைகளும் சைபியனின் வாக்கு, மற்றும் வள்ளல் தன்மையைச் சோதிக்க வந்த தேவர்கள் என்று தெரியவருகிறது. தான் கொடுத்த வாக்கைக் காப்பாற்றும் எண்ணம்தான் அரசனுக்கு இருந்ததே தவிர தனது உயிரையும் அதற்காகக் கொடுக்கத் துணிந்த விவரத்தை இங்கே கைகேயி தசரதருக்குச் இடித்துக் காட்டுகிறாள். அதேபோன்று அலர்க்கா என்ற அரசன் எவ்விதத் தயக்கமும் இன்றி தன் கண்களைப் பறித்தே செய்த தானம் பற்றியும் சொல்கிறாள்.
ஸரிதாம்ʼ து பதிஸ்ஸ்வல்பாம்ʼ மர்யாதா³ம்ʼ ஸத்யமன்வித:|
ஸத்யானுரோதா⁴த்ஸமயே ஸ்வாம்ʼ வேலாம்ʼ நாதிவர்ததே|| 2.14.6||
ஸரிதாம்ʼ பதி: து as regards the lord of rivers, ஆறுகள் அனைத்தையும் கொள்ளும் கடல்
ஸத்யம் அன்வித: one who follows the truth, என்றும் உள்ளதை மதிக்கும்
ஸ்வல்பாம் very little, மிகச் சிறிய
மர்யாதா³ம் as boundary, எல்லையாக
ஸ்வாம் his own, தனது
வேலாம் shore, கரை
ஸமயே even during parva days, பருவ காலங்களிலும்
ஸத்யானுரோதா⁴த் in obedience to truth, உள்ளதை மதிக்கும் வண்ணம்
நாதிவர்ததே does not transgress, தாண்டுவதில்லை.
பருவ காலங்களிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடினாலும், ஆறுகள் அனைத்தின் நீரையும் தன்னகத்தே கொள்ளும் கடல் என்றும் உள்ள தனது கரை என்னும் சிறிய எல்லையை மதித்து அதைத் தாண்டுவதில்லை.
ஸத்யமேகபத³ம்ʼ ப்³ரஹ்ம ஸத்யே த⁴ர்ம: ப்ரதிஷ்டித:|
ஸத்யமேவாக்ஷயா வேதா³ ஸத்யேனைவாப்யதே ஸ்பரம்|| 2.14.7||
ஸத்யம் truth, உண்மை
ஏகபத³ம் in the form of one word, ஒரு வார்த்தையில்
ப்³ரஹ்ம Brahman, பிரம்மம்
ஸத்யே on the truth, உண்மையைப் பற்றி
த⁴ர்ம: righteousness, தர்மம்
ப்ரதிஷ்டி²த: is established firmly, நன்கு வேரூன்றி
ஸத்யமேவ truth alone, உண்மை மட்டுமே
அக்ஷயா: is imperishable, என்றும் உள்ளது
வேதா³: in vedas, வேதங்களில்
ஸத்யமேவ by truth alone, உண்மையால் மட்டுமே
பரம் supreme state, உன்னத நிலை
ஆப்யதே will be attained, அடையப்படும்.
பிரம்மம் என்பதை ஒரே வார்த்தையில் விளக்கச் சொன்னால் அந்த வார்த்தைதான் “உண்மை” என்றாகும். உண்மை இருந்தால்தான் அங்கு தர்மம் என்பதும் இருக்கும். உண்மை என்றும் மாறாதது. வேதங்கள் கூறும் உண்மையை ஒருவன் சொன்னால் அது அவனை மிக உன்னத நிலைக்கு எடுத்துச் செல்லும்.
நாம் மேலே பார்த்தவாறு கைகேயி நடந்த நிகழ்ச்சிகளை விவரித்துவிட்டு, கொடுத்த வாக்கைக் காப்பாற்றினால்தான் ஒருவன் உண்மையாக இருக்கிறான் என்று பொருள் என்பதைச் சொல்கிறாள். உண்மையைக் காப்பாற்றுவது எந்த ராசிகளுக்குமே பொருந்தும். அதனாலேயே ஆற்றில் நீர் பெருகினாலும், அதைக் கொள்ளும் கடலோ தனது கரையாகிய உண்மையை மீறுவதில்லை. மனிதர்களைப் பொறுத்தவரை, உள்ளத்தே ஒன்று உள்ளதே உண்மை எனப்படுகிறது. உண்மையாகிய சத்தியம் இருக்குமிடத்தில்தான் தர்மம் தழைக்க முடியும். அப்போதுதான் ஒருவன் வாழ்வில் உன்னத நிலையான பிரம்மத்தை உணரமுடியும். ஆதலால் என்ன நடந்தாலும் – சாவோ, பிரளயமோ, தாழ்வோ எது வந்தாலும் – ஒருவன் தான் கொடுத்த வாக்கைக் காப்பாற்றி உண்மையாக இருக்கவேண்டும்.
(உண்மை எனும் சொல்லின் பரிமாணங்கள் பற்றி மேலும் யதார்த்தமாக அறிந்துகொள்ள “வாய்மை வெல்கிறதா? வாய் மெய்யை மெல்கிறதா?” என்ற இத்தளத்தில் வந்த கட்டுரையைப் பார்க்கலாம்)
(தொடரும்)
நல்ல தொடர். மிக்க மகிழ்ச்சி. பாராட்டுக்கள். ராமனின் புகழ் கூற கூற நாடும், வீடும், உள்ளமும் நலம் பெரும். இது சத்தியம்.
today is the ramanavami day for us. Chaitra suklapaksha navami is celebrated as Sriramanavami in Srirangam Ranganathar Temple and also in SriKanchi Varadharajar Temple
வாசகர்கள் அத்விகா, பெருந்துறையான், மற்றும் ரவி அவர்களின் முன்பும் இப்போதும் கூறும் தொடருக்கான வரவேற்பிற்கும், மறுமொழிகளுக்கும் மிக்க நன்றி. முதல் பகுதியில் குறிப்பிட்டுள்ளதுபோல மூலத்தைப் படித்த நான் இத்தள வாசகர்களுக்கும் பயனுள்ளதாய் இருக்கும் என்றுதான் ஆரம்பித்துள்ளேன். மூல ஆசிரியர் கொடுத்த ஊக்கத்தால் வெகுசில இடங்களில் எனது இடைச்செருகல்கள் தவிர மற்றபடி தொடரில் வரும் அனைத்துக்கும் திரு. லக்ஷ்மிநாராயணன் அவர்களுக்கு உங்களுடன் சேர்ந்து நானும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இப்போது வந்திருக்கும் ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீராம நவமி பற்றி மகிழ்ச்சி. என்னைக் கேட்டால் என்றுமே அவர் திருநாமம் புகழப்படுவது எல்லோருக்கும் நன்மை பயக்கும்.
திருசேர் எஸ். இராமன் ஸ்ரீ ராமரின் பரிபூரண அருள் பெறட்டும். மஹாத்மா காந்தியடிகள் தம் சுய சரிதையில் “…முன்பு கடவுளை உண்மை என்று கருதிய நான், தற்போது உண்மையே கடவுள் என்று தெளிந்திருக்கிறேன்…” என்று பொருள் பட எழுதியுள்ளதை ஸ்ரீ ராமரின் சிற்றன்னை கைகேயியின் வாக்கு நினைவுப் படுத்துகிறது. நிச்சயம் தங்களைப் பாராட்டுவதற்காக மட்டும் இப்பதிவுகளை நாங்கள் செய்வதில்லை. உண்மை எப்போதும் உயர்ந்தே நிற்கும்; நிற்க வேண்டும். இப்படியான மேன்மையான கருத்துக்கள் மூல ராமாயணத்தில் இருக்க, இந்தியர்களிடையே அவதூறுகளைப் பரப்பி உலகியல் வெற்றி கண்டுள்ளவர்களின் பித்தலாட்டங்களை அப்பட்டமாக வெளிப்படுத்திட உதவும் உங்கள் பணியை நினைந்து மகிழ்கிறேன்.