பாரதி: மரபும் திரிபும் – 3

பாரதி: மரபும் திரிபும் – பாகம் 1 | பாகம் 2

(தொடர்ச்சி…)

மதிமாறனைப் பார்த்துச் சிரிக்கும் நீதிக்கட்சித் தலைவர்கள்!

நீதிக்கட்சி அரசு பொறுப்பேற்றவுடன் தாழ்த்தப்பட்டவர்களுக்கு என்னென்ன நன்மைகள் செய்தது என்பதை விளக்குகிறார் மதிமாறன். (பக்.72-73)

அதற்கு ஆதாரமாக திராவிடர் கழக வெளியீடான முனைவர் பு.ராசதுரை எழுதிய ‘நீதிக்கட்சி அரசு பாடுபட்டது யாருக்காக’ என்ற நூலைக் காட்டுகிறார்.

அந்த நூலே பொய்களால் ஆனது. தாழ்த்தப்பட்டவர்களை ஏமாற்றும் நோக்கத்துடன் வெளியிடப்பட்டது.

மதிமாறன் எடுத்துக்காட்டியுள்ள பகுதிகளில், ‘இச்செய்திகள் 11.08.1920 நாளிட்ட 1934-ஆம் எண் ஆணையில் காணப்பெறுவன’ என்று இருக்கிறது. அதாவது 1920-இல் நீதிக்கட்சி ஆட்சியில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு செய்த நன்மைகள் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றை மதிமாறன் எடுத்துக்காட்டுகிறார்.

ஆனால் உண்மை என்ன தெரியுமா?

1919-ஆம் ஆண்டைய மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்த சட்டப்படி அமைந்த அரசியல் அமைப்பு இரட்டை ஆட்சி. இச்சட்டம் இயற்றப்பட்டபின் சென்னை மாநிலச் சட்டமன்றத்துக்கு தேர்தல் நடந்தது 30.11.1920.

நீதிக்கட்சியின் முதல் அமைச்சரவை பொறுப்பை ஏற்றது 17-12-1920. முதல் சட்டமன்றக் கூட்டம் 1921 ஜனவரி 12-ஆம்நாள் நடைபெற்றது.

முதல் சட்டமன்றக் கூட்டமே 1921-இலேதான் நடைபெற்றது என்கிறபோது 1920-இல் நீதிக்கட்சி எப்படி தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஆணைகளைப் பிறப்பித்து இருக்க முடியும்?

அடுத்து, நீதிக்கட்சி செய்ததாகக் குறிப்பிடுவது 16-12-1921 நாளிட்ட 2815 எண் ஆணையிலுள்ள செய்திகள். இதற்கும் நீதிக்கட்சிக்கும் எந்தவிதச் சம்பந்தமுமே இல்லை. ஏனென்றால் அது பிரிட்டிஷ் ஆட்சி கொண்டுவந்த திட்டமாகும். 1902-இல் தரிசு நிலங்களை டி.சி.நிலங்கள் என்ற பெயரில் தாழ்த்தப்பட்டோருக்கு ஒப்படை செய்ய மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு அதிகாரம் அளித்து ஆணை பிறப்பித்தது பிரிட்டிஷ் ஆட்சி. அதனுடைய தொடர்ச்சிதான் மேற்கண்ட ஆணைகள்.

தாழ்த்தப்பட்டோருக்கு நீதிக்கட்சி தொண்டு செய்தது என்று சொன்னால் இறந்துபோன நீதிக்கட்சி ஆட்சியாளர்களே மதிமாறனின் கனவில் தோன்றி அவரைப் பார்த்து கைகொட்டிச் சிரிப்பார்கள்.

நீதிக்கட்சி தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஏராளமான நன்மை செய்தது என்று சொல்லும் மதிமாறனின் மழுங்கிய மூளையில் ஓங்கி குத்துவிடுகிறார் ஆதிதிராவிட மகாஜன சபையின் செயலாளரும் தாழ்த்தப்பட்டவர்களின் புகழ்பெற்ற தலைவருமான எம்.சி.ராஜா (1883-1945).

நீதிக்கட்சி குறித்து எம்.சி.ராஜா (1927-இல்) எழுதுகிறார்:

‘‘இப்போது அதிகாரத்திலிருக்கிற கட்சி நம்முடைய தாழ்த்தப்பட்ட மக்களுக்காகப் பல நன்மைகளைச் செய்தது என்று நான் கேள்விப்பட்ட போது வியப்பில் ஆழ்ந்து போனேன். ஆதிதிராவிடர்களின் செலவிற்காகச் சில மானியங்களையும் ஒதுக்குகின்றது என்று சில அரசியல்வாதிகள் என்னிடம் கூறினர்.

….இதே சூழ்ச்சிக் கொள்கையை மக்கள் முன் வைத்துத்தான் கபடநாடகமாடி நீதிக்கட்சிக்காரகள் ஆட்சிக்கு வந்தனர். நமக்காக ஒதுக்கப்பட்ட தொகை, நம் நலனுக்காகையாலும் முறை, துறை என்று காணப்படும் வரவுசெலவுப் புள்ளி விபரங்கள் யாவும் உண்மையானவை அல்ல; பொய்யே. மேலும் உண்மையாகக் கூறப்போனால், ‘ஒதுக்கப்பட்ட இலாக்காக்கள்’ ஆட்சியாளரிடம் கேட்ட செலவுப் புள்ளிகளைத்தான் நமக்காகச் செலவிடப்படுவதாய் வெளியிடுகின்றனர். ஆனால் உண்மையில் அந்தப் புள்ளி விவரப்படி இவர்கள் நமக்குச் செலவிடவில்லை.

…..1921-22ஆம் ஆண்டில் 6.47 லட்ச ரூபாய் செலவிட உத்தேசித்து, தொழிலாளர் நலத்துறையும், மற்ற துறைகளும் கேட்டன. இந்த வேண்டுகோள் சட்டமன்றத்திற்கு வந்தது. இச்சட்டமன்றம் 6.47 லட்சம் மானியம் கோரியதை ஒரு லட்சமாகக் குறைத்தது.

…..தற்போதுள்ள நாட்டாண்மைக் கழகத் துறைகளில் ஆதிதிராவிடர்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் இத்திட்டம் கூட இன்று ஆட்சிபீடத்தில் இருக்கும் அமைச்சரவையால் நமக்கு வழங்கப்படவில்லை. அதற்கு முன்பே வேறுஒருவரால் வழங்கப்பட்ட ஒன்றாகும். இவர்கள் ஒரேஒரு இடத்தைக்கூட நமக்குப் புதிதாக ஒதுக்கவில்லை.

……திருவண்ணாமலை நகராண்மைக் கழகத்தில் நம் பிரதிநிதி இறந்தபோதும், செங்கற்பட்டிலும், கடலூரிலும் வட்டக் கழக உறுப்பினர்கள் பதவி இழந்தபோதும் நமக்கே உரித்தான இவ்விடங்கள் சாதி இந்துக்களால் மீண்டும் நிரப்பப்பட்டன.

…..’வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம்’ என்ற பெயரால் செய்யப்படும் எந்தத் திட்டத்திலும் மருந்துக்குக்கூட உண்மை இல்லை. ஆனால் உண்மையில் நிலைத்திருப்பது ‘வகுப்புவாத ஏகாதிபத்தியமும், சாதியின் கொடுங்கோன்மை’யுமே ஆகும்.

…..1923-ஆம் ஆண்டில் சட்டமன்றத்தில் ஆதிதிராவிடப் பிள்ளைகளுக்கு உபகாரச் சம்பளங்களை அதிகரிக்க வேண்டுமென்று நான் ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தேன். அன்று கல்வி அமைச்சராக இருந்தவர் ஒரு சாதி இந்து. அவர் ‘ஏழைமை என்பது ஆதிதிராவிடருக்கு மட்டும்தான் உள்ள தனிச்சொத்தல்ல. மற்ற வகுப்பாரிலும் ஏழைகள் இருக்கின்றனர்’ என்று கூறி என் தீர்மானத்தை எதிர்த்தார்.’’

(நூல்: ஒடுக்கப்பட்ட இந்துக்கள்)

இப்படி மதிமாறனின் மூளையைக் குத்திக்கொண்டே போகிறார் எம்.சி.ராஜா. ‘நீதிக்கட்சியே தாழ்த்தப்பட்டர்களுக்கு நன்மை செய்தது’ என்று பூக்களால் மூடப்பட்ட பாறாங்கல்லைத் தூக்கி தாழ்த்தப்பட்ட மக்களின் தலையில் போடுகிறார் மதிமாறன்.

“தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தொண்டாற்றிய நீதிக்கட்சிக்காரர்களைத்தான் தேசத்துரோகிகள் என்கிறார் நம் வரகவி” என்று விமர்சனம் வைக்கும் மதிமாறனுக்கு எம்.சி.ராஜாவின் விமர்சனத்தையே பதிலடியாக நாம் கொடுத்திருக்கிறோம்.

ஆனால் இதில் ஒன்று கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் பாரதி, தாழ்த்தப்பட்ட மக்களுக்காகப் போராடியதால்(?) நீதிக்கட்சிக்காரர்களை விமர்சிக்கவில்லை. நீதிக்கட்சிக்காரர்கள் பிரிட்டிஷாருக்கு வால்பிடித்ததினால்– ஆதரவாக இருந்ததினால்– பிரிட்டிஷாருக்கு ஆதரவாக இந்துமதத்தை அவர்கள் கடுமையாக விமர்சித்ததினால்–  மட்டுமே பாரதி அவர்களை தேசத்துரோகிகள் என்று விமர்சித்தார்.

(நீதிக்கட்சி இருந்த கடைசி காலக்கட்டம்வரை ஏகாதிபத்தியத்திற்கு– பிரிட்டிஷாருக்கு ஆதரவாகவே இருந்தது என்பதையும் இங்கு கவனத்தில் கொள்ளவேண்டும்.)

பாரதி மட்டுமல்ல அன்று தேசிய விடுதலைப்போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த அனைவரும் விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக இருந்த நீதிக்கட்சியை எதிர்த்தனர்.

பிராமணர்-பிராமணரல்லாதார் அரசியல் பிரச்சினை  பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு ஆதரவாக ஆகிவிடக்கூடாது எனும் கருத்துக் கொண்ட காங்கிரசில் இருந்த பிராமணரல்லாத தலைவர்கள் நீதிக்கட்சியை எதிர்க்க காங்கிரசிற்குள்ளேயே ஒரு தனி அமைப்பை நிறுவினார்கள். இதற்கு ‘மெட்ராஸ் பிரசிடென்சி அசோசியேஷன்’ என்ற ‘சென்னை மாகாணச் சங்கம்’ என்ற ஓர் அமைப்பை 1917-இல் நிறுவினார்கள்.

திவான் பகதூர் கேசவப்பிள்ளை தலைவராகவும், லாட் கோவிந்ததாஸ், சல்லா குருசாமிச் செட்டியார், ஈ.வெ.ராமசாமி நாயக்கர், நாகை பக்கிரிசாமிப் பிள்ளை, சீர்காழி சிதம்பரநாத முதலியார், தஞ்சை ஸ்ரீநிவாசப் பிள்ளை, ஜார்ஜ் ஜோசப் ஆகியோர் உதவித் தலைவர்களாவும் தெரிந்தெடுக்கப்பட்டனர். அமைச்சராக தி.வி.கோபால சாமி முதலியாரும், குருசாமி நாயுடுவும், டாக்டர் வரதராஜுலு நாயுடுவும், சர்க்கரைச் செட்டியாரும், திரு.வி.கவும் தெரிந்தெடுக்கப்பட்டனர்.

இதில் கவனிக்கப்பட வேண்டியது, காங்கிரசில் இருக்கும்வரை ஈவெராவும் நீதிக்கட்சியை எதிர்த்தார் என்பதுதான். திரு.வி.க.வும் நீதிக்கட்சி நடத்தும் கூட்டங்களுக்குச் சென்று நீதிக்கட்சிக்காரர்களை கேள்வி கேட்பார். கூட்டம் கலவரத்தில் முடியும். இப்படியும் நீதிக்கட்சிக்காரர்களை கடுமையாக எதிர்த்தனர்- அன்றைய தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவளித்துப் போராடியவர்கள்.

இந்தச் சென்னை மாகாணச் சங்கம் மிகக் கடுமையாக நீதிக்கட்சியை எதிர்த்தது. பிராமணரல்லாதார் பிரச்சினைகளில் அக்கறை கொண்ட வ.உ.சி.யும் நீதிக்கட்சியை ஏற்றுக்கொள்ளவில்லை.

‘‘பிராமணர்-பிராமணரல்லாதார் பிரச்சினையில் வ.உ.சியின் நிலைப்பாடு பற்றி விடுதலைப் போராட்ட வீரரும் ஆய்வாளருமான ம.பொ.சிவஞானம் கூறியுள்ள கருத்து கவனத்திற்குரியது.

‘‘நீதிக்கட்சி வ.உ.சியை இணைத்துக்கொள்ள முயன்றது. சுயராஜ்யத்தைக் குறிக்கோளாகக் கொண்ட வ.உ.சி. சாதி வேற்றுமைகளை வளர்த்த நீதிக்கட்சியில் சேர மறுத்துவிட்டார். பிராமணரல்லாதவர்களின் நிலைமைகளை மேம்படுத்துவதில் அவர் மிகவும் ஆர்வம் கொண்டிருந்தார். பல துறைகளில் பெரும்பான்மையான பிராமணரல்லாதார் பின்தங்கியிருந்ததைப் பற்றி அவர் பெரிதும் வருத்தமுற்றிருந்தார். தமது ஆழ்ந்த வருத்தத்தை தம்முடைய பேச்சுகளில் வெளியிட்டுள்ளார். ஆனால் அதற்காக பிராமணர்-பிராமணரல்லாதார் சாதிவேற்றுமைகளின் அடிப்படையில் ஓர் அரசியல் இயக்கத்தை அவர் ஒப்புக்கொள்ளவில்லை.’’

 (நூல்: வ.உ.சிதம்பரம்பிள்ளை, பப்ளிகேஷன்ஸ் டிவிஷன்)

ஆகவே பாரதி மட்டும் நீதிக்கட்சியை எதிர்க்கவில்லை. தேசிய விடுதலைப் போராட்டம் இதனால் பின்தங்கி விடுமோ என்ற ஆதங்கத்தில் அன்று போராட்ட வீரர்கள் அனைவரும் எதிர்த்தனர்.

பாரதி வெறும் வெறுப்பியல் காரணமாக நீதிக்கட்சியை விமர்சிக்கவில்லை. பிராமணரல்லாதவர்கள் எல்லா நிலைகளிலும் முன்னேற வேண்டும் என்று நினைத்தவன் அவன். ஆகவேதான் நீதிக்கட்சிக்காரர்கள் மந்திரிகளாக ஆனவுடன் தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தினான் பாரதி.

‘‘பிராமணரில்லாமல் மற்றவர் மந்திரிகளாக நியமிக்கப்பட்டது எனக்கு ஸந்தோஷந்தான். தாங்களே ஐரோப்பியக் கல்விக்குப் பிறப்புரிமை கொண்டோரென்றும், ஆதலால் ஐரோப்பியக் கல்வியில் தாம் பெறக்கூடிய தேர்ச்சி மற்ற ஜாதியாரால் எய்தவே முடியாதென்றும், ஆதலால் உயர்ந்த ஸர்க்கார் ஸ்தானங்களெல்லாம் தங்களுக்கே கிடைக்குமென்றும் சென்னை மாகாணத்து பிராமணரில் சிலர் மிகவும் கர்வம் பாராட்டி வருகிறார்கள். அவர்களுடைய கர்வத்தைத் தீர்க்க இது நல்ல மருந்தாகி வந்தது.’’

 (சுதேசமித்திரன்: 24-12-1920)

ஆகவே பாரதியை வெறும் நீதிக்கட்சி எதிர்ப்பாளர் என்று குறுக்கிவிட முடியாது. பிராமணரல்லாத மந்திரி சபையைப் பாராட்டியவன் பாரதி என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

நீதிக்கட்சிக்காரர்களின் ‘பஞ்சம பாசம்’ எப்படிப்பட்டது என்பதையும் உணர்ந்தவர் பாரதி.

பாரதி எழுதுகிறார்:

‘‘சில தினங்களின் முன்பு அமலாபுரத்தில் பஞ்சமர்களின் பிரதிநிதிக் கூட்டமொன்று நம் மாகாணத்துப் புதிய பிராமணரல்லாத மந்திரிகளை ஸந்தித்தபோது அம்மந்திரிகளில் ஒருவராகிய ஸ்ரீமான் ராமராயனிங்கார் மிகவும் ரஸமாகப் பேசியிருக்கிறார். இதுவரை பிராமணரல்லாத வகுப்பினர் பஞ்சமர்களிடம் தக்கபடி அனுதாபம் செலுத்தாமல் இருந்துவரும் காரணம் பிராமணர்களுக்கு மன வருத்தமுண்டாகுமென்ற பயத்தைத் தவிர வேறில்லையென்றும், இப்போது பிராமணரல்லாதாரில் மேற்குலத்தார் பிராமணர்களின் ஆதிக்கத்தை உதறி எறிந்து விட்டபடியால், இனிமேல் பிராமணரல்லாதார் பஞ்சமர்களை மிகவும் ஆதரிக்கத் தொடங்கிவிடுவார்களென்றும் இந்த மந்திரி சொன்னார். மேலும், இனிமேல் பிராமணரல்லாதோரில் மேற்குலத்தார் பஞ்சமர்களைப் பரிபூர்ண ஸமத்துவத்துடனும் சொந்த ஸகோதரர் போலவும் நடத்த முற்றிலும் விருப்பத்தோடிருக்கிறார்கள் என்றும் இவர் சொன்னார்.

இங்ஙனம் இவர் பிராமணரல்லாதோரும், பஞ்சமரல்லாதோருமாகிய மற்ற ஹிந்துக்கள் அனைவரும் இப்போதே பஞ்சமர்களை முழுதும் ஸமானமாக நடத்த உடம்படுகிறார்களென்று எந்த ஆதாரத்தை வைத்துக்கொண்டு உறுதி சொல்லுகிறாரென்பது நமக்கு விளங்கவில்லை.

ஏற்கனவே ஹிந்துக்களில் பிராமணர் முதலிய எல்லா வகுப்புகளிலும் அங்கங்கே ஜாதிக் கட்டுக்களை உதறிவிட்டு எல்லா ஜாதியாரையும் ஸமானமாக நடத்த வருகிறார்களென்பது மெய்யே. பொதுப்படையாக எல்லா வகுப்புகளிலும் ஜாதிக்கட்டுக்கள் தளர்ச்சி பெற்று ஸமத்துவக் கொள்கை ஓங்கிக் கொண்டு வருகிறதென்பது மெய்யே.

ஆசாரத் திருத்த முயற்சி ஆரம்ப முதல் நீதிபதி ரானடே முதலிய பிராணர்களாலே அதிக சிரத்தையுடன் போற்றப்பட்டு வருகிறதென்பதை நாம் மறக்ககூடாது. ஆனால், இவற்றைக்கொண்டு, இன்றைக்கே பிராமணரல்லாதாரில் மேல் வகுப்பினர் பஞ்சமர்களோடு ஸமானமாக உறவாடத் தயாராக இருக்கிறார்களென்று சொல்லுதல் அதிசயோக்தி.

எனிலும் ஸ்ரீ ராமராயனிங்கார் தம்மளவிலேனும் தாம் சொல்லியதை மெய்ப்படுத்திக் காட்டுவாரென்று நம்புகிறேன்.

இவ்விஷயத்தில் இவர் மனத்தோடு பேசினாரா அல்லது வெறுமே வெளிப்பேச்சுத்தானா என்பதைப் பஞ்சமத் திராவிட நண்பர்கள் பரிசோதனை செய்து பார்க்கும்படி வேண்டுகிறேன்.’’

(சுதேசமித்திரன் 8-2-1921)

பாரதியின் இந்த விமர்சனம் தொலைநோக்குப் பார்வை கொண்டது. ஸ்ரீ ராமராயனிங்கார் தம்மளவிலேனும் தாம் சொல்லியதை மெய்ப்படுத்திக் காட்டுவாரென்று நம்புகிறேன் என்ற பாரதியின் நம்பிக்கையை சம்மட்டியால் அடித்துத் தூள்தூளாக்கியவர் இவர்தான்.

‘‘பொதுச்சாலைகள், பொதுச் சத்திரங்கள், கிணறுகள், பள்ளிகள் முதலியவற்றை மக்கள் சாதி மதவேறுபாடின்றிப் பயன்படுத்துவதில் எவ்விதத் தடை செய்தாலும் தண்டனை அளிப்பதற்கான சட்டத்தை வெகுவிரைவில் கொண்டு வருமாறு அரசாங்கத்திற்கு இக்கவுன்சில் சிபாரிசு செய்கிறது’’

என்ற தீர்மானத்திற்கு ராமராயனிங்கார் சொன்ன பதிலே போதும்.

‘‘பொதுச்சாலைகள் முதலியவற்றை இந்த மக்கள் பயன்படுத்துவதைத் தடுப்பதைத் தண்டிக்கப் புதிய சட்டம் நிறைவேற்றப்படுவது தேவையாகும் என்று தோன்றவில்லை. உண்மையான தடை, சமூகக் கொடுமையே. இது சமுதாய சீர்திருத்தத்தினால் உடைக்கப்பட வேண்டும்.’’

இதுதான் நீதிக்கட்சி முதலமைச்சர் ராமராயனிங்காரின் பரிகாரம். அரசியல் தளத்தில் பிரிட்டிஷாருக்கு ஆதரவளித்தவர்கள், சமூகத்தளத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராகவே இருந்தார்கள். நீதிக்கட்சிக்காரர்களின் ‘பஞ்சம பாசம்’ வெளிப்பேச்சுதான் என்பதை பலமுறை நிரூபித்து இருக்கிறார்கள். தங்களுடைய செல்வாக்கு மக்களிடையே குறைந்துவருவதைப் பார்த்து அவர்கள் ஒரு தீர்மானத்திற்கு வந்தார்கள். அதாவது பார்ப்பனர்களையும் நீதிக்கட்சியில் சேர்த்துக்கொள்வது என்பதுதான் அது. இதுவரை எந்தப் பார்ப்பனரை எதிராக நிறுத்தி பிராமணரல்லாதவர்களிடையே பிரசாரம் செய்தார்களோ அதே பார்ப்பனர்களை நீதிக்கட்சியில் சேர்ப்பதற்குத் தீர்மானம் போட்டார்கள். பார்ப்பனர்கள் எங்களை நீதிக்கட்சியில் சேர்த்துக்கொள்ளுங்கள் என்று கேட்கவில்லை. ஆனாலும் நீதிக்கட்சிக்காரர்கள் அப்படி ஒரு தீர்மானத்தைக் கொண்டுவந்தார்கள்.

இவர்களைத்தான் ‘தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஆதரவாகப் போராடியவர்கள்’ என்று மதிமாறன் வாய்கூசாமல் பொய்யை அள்ளிவிடுகிறார். என்ன செய்ய தாழ்த்தப்பட்டோரின் தன்னகரில்லாத தலைவர் எம்.சி.ராஜா இல்லையே இப்போது!

(தொடரும்..)

7 Replies to “பாரதி: மரபும் திரிபும் – 3”

 1. 1921ஆம் ஆண்டு சென்னை பின்னி ஆலை வேலைநிறுத்தப் போராட்டத்தைஒட்டியெழுந்த கலவரத்தின் பின்னணியில் ஆதிதிராவிடன் இதழ் நீதிக் கட்சிக்கு எதிராக எழுதியது. இப்போராட்டத்தின் போது, எம்.சி. ராஜா தலித் மக்களை வேலைக்குத் திரும்பும்படி கோரியதால் அம்மக்களும் வேலைக்குத் திரும்பினர். அதனால் இம்மக்கள் கடுமையாகத் தாக்கப்பட்டனர். வீடுகள் எரிக்கப்பட்டன. புளியந்தோப்பு கலவரம் என்று சொல்லப்பட்ட இக்கலவரத்தைத்தான் பறையர்களைச் சென்னையைவிட்டே அப்புறப்படுத்த வேண்டுமென எழுதப்பட்ட சர்.பி.டி. தியாகராயரின் அறிக்கையைத் திராவிடன் இதழ் வெளியிட்டது. நீதிக்கட்சியும் திராவிடன் இதழும் தலித்துகளுக்கு எதிராக நேரடியாகப் பேசின…..

  “ஆதிதிராவிடன்” இதழ் பற்றிய விமர்சனம் சுதேசமித்திரன் இதழிலும் வெளியானது…
  https://www.kalachuvadu.com/issue-93/page11.asp

  செப்டம்பர் 16, 1921 அன்று சென்னை கடற்கரையில் பின்னி ஆலை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை நோக்கி காந்தி ஆற்றிய உரை…..
  https://www.gandhitoday.in/2012/05/blog-post.html
  [காந்தி பெரும்பான்மையினர் சிறுபான்மையினர் மேல் செலுத்தும் ஆதிக்கத்தை கண்டிக்கிறார். துணிவோடு தொழிலாளர்கள் செய்த தவறை சுட்டிக்காட்டுகிறார். அவர்களுக்கு முன் இருக்கும் கடமையை நினைவூட்டுகிறார்]

  “வே.மதிமாறன் எழுதிய “காந்தி நண்பரா? துரோகியா?” – என்ற வரலாற்று முக்கியத்துவம்(?) உள்ள படைப்பில் காந்தி தாழ்த்தப்பட்டவர்களுக்கு மட்டும் துரோகம் இழைக்கவில்லை. வ.உ.சி போன்றவர்களுக்கும் கூட துரோகமிழைத்திருக்கிறார் என்பதையும் ஆதாரத்தோடு நிரூபிக்கிறார்.வ.உ.சியின் குடும்ப வறுமையைப் போக்க தென்னாப்பரிக்க தமிழர்கள் ரூ.5000 ம் நிதியை திரட்டி அதை வ.உ.சியிடம் ஒப்படைக்குபடி காந்தியிடம் கொடுத்திருக்கிறார்கள்.
  வ.உ.சி கடிதம் மூலமும் நேரிலும் பலமுறை கேட்டும் உத்தமர் அகிம்சாமூர்த்தி மகாத்துமாக அநதப் பணத்தை வ.உ.சியிடம் தரவே இல்லை. இதுதான் தேசப்பிதாவின் வண்டவாளம் என்று காந்தியின் திருட்டை தண்டவாளத்தில் ஏற்றுகிறார் மதிமாறன்”
  🙂

  ஆதாரம் இல்லாமல் அவதூறை அள்ளிவீசுவதில் வல்லவர் தான் இந்த மதிமாறன்.

  On February 4, 1916, VOC wrote to a friend, in Tamil, “Rs. 347-12-0 has come from Sriman Gandhi … https://www.hindu.com/mag/2003/01/26/stories/2003012600160200 என்ற பதிலுக்கு அவரிடம் விடையில்லை.

  அவதூறுகளை வரலாறாக திரிக்கும் மதிமாறன் போன்ற அற்பர்களின் முகமூடியை கிழித்தெறியும் திரு ம.வெங்கடேசன் அவர்களுக்கு நன்றி.
  வாழ்க வளமுடன்

 2. கட்டுரையாளரின் ஆய்வுத்திறன் அனைவரும் அறிந்த ஒன்றுதான். எனவே அவர் எடுத்து வைக்கும் ஆணித்தரமான வாதங்களை மதிமாறன் போன்றோர் எதிர் கொள்ள முடியாது. ஒரு உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலைமையை நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். சரியான வரலாற்று அறிவு படைத்த ம.வெங்கடேசன் போன்றோர் ஆய்ந்தறிந்து பல உண்மைகளை இது போல சொல்லாவிட்டால், பொய்யர்கள் தங்கள் அண்டப் புளுகுகளை அவிழ்த்து விட்டுக் கொண்டே இருப்பார்கள். தாழ்த்தப்பட்ட மக்களிடம் இவர்கள் சொல்லுகின்ற பொய்கள் அவர்கள் இவைகளை உண்மை என்றே நம்ப இடம் இருக்கிறது. ஒரு நிகழ்ச்சியை இங்கு சொல்ல விரும்புகிறேன். நான் பணி செய்த இடத்தில் ஒரு தாழ்த்தப்பட்ட இளைஞர் பணி செய்தார். அவர் முதுகலை பட்டம் பெற்றவர். அவரிடம் கேட்டேன். நீங்கள் சமூக வாழ்வில் உயர் நிலை எய்த பாடுபட்டவர்களில் எவரைக் குறிப்பிடுவீர்கள் என்று கேட்டேன். அவர் ஈ.வே.ரா. என்றார். உங்கள் ஜாதியார்களை ஆலயங்களில் அனுமதிக்காமல் இருந்தார்களே தெரியுமா? அந்த நிலை மாற போராடி உங்களை எல்லாம் மதுரை கோயிலினுள் அழைத்துச் சென்றவர்கள் யார் தெரியுமா? என்றேன். தெரியாது என்றார். மதுரை வைத்தியநாத ஐயர் என்பவர் பற்றி கேள்விப் பட்டு இருக்கிறீர்களா என்றேன். தெரியாது என்றார். ராஜாஜி பற்றி தெரியுமா என்றேன். அவர் பார்ப்பனர் தலைவர் என்றார். நான் சொன்னேன், தன்னைப் பற்றியும், தங்கள் வரலாறு பற்றியும் உண்மை நிலைமையைத் தெரிந்து கொள்பவன்தான் முழு மனிதன். உண்மையான மனிதன், ஆகையால் உண்மைகளைத் தெரிந்து கொண்டு வாருங்கள் என்றேன். இப்படி இவர்களை மூளைச் சலவை செய்து வைத்திருக்கிறார்கள். என்ன கொடுமை இது. சரியான வரலாற்று உண்மைகளை மக்கள் முன் கொண்டு வந்து வைக்க வேண்டாமா? அந்தப் பணியை திரு ம.வெங்கடேசன் நல்ல முறையில் செய்து வருகிறார்.

 3. @v.gopalan; இன்றும் நிலமை அதே அளவில் தான் உள்ளது.இதில் என்ன கொடுமை
  எனில் அண்டை மாநிலத்த பிராம்மணால்லதோர் பிழைப்புக்காக இங்கு வந்து இங்குள்ள தமிழ் பிராம்மணர்களை ஏதோ ஒரு புழுவைப்பார்ப்பது போல் பார்த்து
  ஏளனம் செய்தும்/இழிந்த வார்த்தைகளை பேசுவதுமாக இருக்கின்றனர்.”ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்”என்பது உண்மை நிலை.

 4. நீதி கட்சி பிரமுகர்கள் மட்டுமல்ல புலே ,அம்பேத்கர் ,அயோத்திதாசர் போன்றோர் ஆங்கில ஆட்சியை எப்படி பார்த்தனர் என்பதை அவர்களின் எழுத்துக்களை படித்தாலே புரிந்து கொள்ள முடியுமே
  ஆஷ் துரையை தாழ்த்தப்பட்ட மக்களின் பாதுகாவலனாகவும் அந்த காரணத்தினால் அவனை வாஞ்சிநாதன் சுட்டதாக தானே அயோத்திதாசர் எழுதியிருக்கிறார்.
  அம்பேத்கர் தன் குருவாக ஏற்று கொண்ட புலே ஆங்கிலயேர் தான் மேல்சாதி ஆதிக்கத்தில் இருந்து சூத்திர மக்களை விடுவிக்க முடியும் என்பதை கருத்தாக கொண்டவர் தானே
  பா ஜ க அரசில் மந்திரியாக இருந்த அருண் சௌரி அம்பேத்கரின் எழுத்துக்களில் இருந்து எடுத்த மேற்கோள்களை வைத்து அவர் பிரிட்டிஷ் அரசுக்கு ஆதரவாக செயல்ப்பட்டதை விளக்கும் worshipping false gods புத்தகத்தை படித்தால் மேல்சாதி தலைவர்களை விட ஆங்கிலேயரை அவர் நம்பியது தெளிவாக விளங்குமே.
  தாழ்த்தப்பட்ட பிறபடுத்தப்பட்ட மக்களுக்கு உழைத்த எல்லா தலைவர்களும் வெள்ளைக்காரன் விஷயத்தில் ஒரே நிலையில் தான் உள்ளனர்

  https://marudhang.blogspot.in/2012/05/blog-post.html

  ஆங்கிலேயர்களைப் பார்ப்பனர்களின் அடிமைத்தனத்தில் இருந்து மீட்டவர்களாகப் பார்த்தார் புலே. பார்ப்பனர்கள் தங்கள் ஆதிக்கத்தை இழப்பதற்கு அஞ்சியே அனைத்து பிரிவினரையும் வேறு வழியின்றி ஒருங்கிணைக்க முயன்றனர். ஆங்கிலேயர்களை அவர்கள் எதிர்த்ததற்குக் காரணம் தங்களுடைய அதிக்கம் பறிக்கப்படக்கூடாது என்பதற்காகத்தான். கிறிஸ்தவத்தையும் அதே காரணத்துக்காகத்தான் பார்ப்பனர்கள் எதிர்த்தனர். ஆங்கிலேயர்கள் பற்றிய புலேவின் பார்வை வித்தியாசமானது. ‘ஆங்கிலேயர்கள் இன்று இருப்பார்கள், நாளை போய்விடுவார்கள். அவர்களை நாம் ஏன் எதிர்க்கவேண்டும்? சூத்திரராகிய நாம் எல்லோரும் பார்ப்பான் (நம் மீது சுமத்திய) வழிவழி அடிமைத்தனத்தில் இருந்து நம்மை மீட்டுக்கொள்ள அதிகபட்ச அவசரத்துடன் முயலவேண்டும் என்பதே உண்மை ஞானத்தின் தீர்ப்பு.’
  https://www.jeyamohan.in/?p=4488
  பின்னர் அந்தக் கதையின் மூலத்தை நானே கண்டேன். அயோத்திதாசப் பண்டிதர்தான் இந்தக் கதையைச் சொல்கிறார். நிகழ்ச்சி நடந்து ஒருமாதத்துக்குள் அவர் தன் இதழில் எழுதிய குறிப்பில் இதைச் சொல்கிறார். அப்போது அவர் கர்நாடகத்தில் கோலாரில் இருந்தார். அவருக்கு இங்கே நடக்கும் நிகழ்ச்சி ஏதும் தெரிய நியாயமில்லை.

  ஒருவகை வன்மத்துடன் வெள்ளைய ஆட்சியை ஆதரிக்கும் போக்கை நாம் அயோத்திதாசரின் கட்டுரைகளில் காணலாம். அந்த வன்மத்துடன் தான் இந்தக் கதையையும் சொல்கிறார். இதையும் ஓரிரு வரிகளில் ‘இப்படிக் கேள்விப்பட்டேன்’ என்று சொல்கிறார். ஆஷ் மட்டுமல்ல எல்லா வெள்ளைக்காரர்களுமே மனிதாபிமானிகள், நல்லவர்கள் என்பதே அவரது கொள்கை.

  https://arunshouri.blogspot.in/2008/05/arun-shourie-interview-rediffcom.html

  In a word, a quarter century of Ambedkar’s public career overlapped with this struggle of the country to free itself from British rule. There is not one instance, not one single, solitary instance in which Ambedkar participated in any activity connected with that struggle to free the country. Quite the contrary–at every possible turn he opposed the campaigns of the National Movement, at every setback to the Movement he was among those cheering the failure.

 5. பூவண்ணன்,

  எனது முந்தைய பதிவுகளான ருவாண்டா மற்றும் சூடான் பற்றி கொஞ்சம் படித்தால் உங்களுக்கு கிறித்துவ வெள்ளை இன வெறியர்கள் பற்றி புரியும். சாதி பற்றியும் கொஞ்சம் புரியும்.

  இது ஒன்றும் 1960 இல்லை நீங்கள் சொல்வதை எல்லாம் நம்பி ஏமாறுவதற்கு…

 6. மதிமாறன் அவர்களுக்கு ஆய்ந்தறிந்து பதில் தந்து வரும் உங்கள் கடும் உழைப்பை, முயற்சியை, இந்த சமூகம் மகிழ்ச்சியோடு வரவேற்கும்.

  காலக் கிராமத்தில் எது முன்பு எது பின்பு என்பதெல்லாம் நடு நிலை நின்று விவாதிப்பவர்களுக்குச் சரி. கை இருக்கிறது, பேனா இருக்கிறது, paper இருக்கிறது என்று எதையாவது எழுதி மக்களை உண்மையிலிருந்து வெகு தூரம் திசை மாற்றி அழைத்துச் செல்லத் துடிப்பவர்களுக்கு இவையெல்லாம் சரிப்பட்டு வருமா என்ன?

 7. நானும் பாரதியை போற்றுபவனே,ஆனால் தாங்கள் பெரியாரை மிகவும் தவறாக சித்தரித்து உள்ளீர்கள் தாங்கள் தயவு கூர்ந்து யார் இந்த காந்தி?பெரியார் என்ற வலை பதிவை பார்க்கவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *