ஆதிக்க சாதி இந்துக்களின் மனசாட்சிக்கு ஒரு அறைகூவல்

“உயர் வகுப்பினர் என தம்மை அழைத்துக் கொள்வோர் தங்களோடு இணைந்த சகதோழர்களுக்காக ஆற்ற வேண்டிய அரும்பணிகள் அநேகம் தெளிவாகவும் குறிப்பாகவும் உள்ளன. ஆனால் அவர்களோ மாறாக ”உங்களுடைய தேவைகள் என்ன? நீங்கள் ஏன் திருப்தி ?” என  ஏளனமாகவும் கேலியாகவும் கேட்கும் நிலைதான் உள்ளது. நாங்கள் வேண்டுவது என்ன? நாங்களும் உங்களை போல மனித இனம்தானே?  எங்களைப் போல நீங்களும் உங்கள் விருப்பத்திற்கு மாறாக கலாச்சாரம் என்கிற பெயரால் மாற்று வகுப்பினரின் ஆதிக்கத்தின் பிடியில் நீண்ட காலம் சிக்கி சீரழிந்து போனால் நீங்கள் என்ன விரும்புவீர்கள்? உங்களைச் சுரண்டினால் நீங்கள் என்ன செய்வீர்கள்?  உங்கள் குழந்தைகள் அறிவுப்பசியால் வாடும் போது, தாகத்தால் வாடும் போது, ஆன்மிக உணர்வுடன் தேடும் போது கல்விசாலை, பொதுநீர்நிலை, கிணறு, கோவில் போன்ற பொதுநல வாய்ப்புகள் மறுக்கப்படும் போது என்ன செய்வீர்கள்?

நாங்கள் கற்களோ பாறைகளோ அல்ல. எங்களுக்கும் ஆசாபாசங்கள் இருக்காதா? எங்களுக்கும் தேச பெருமையூனூடே பேரும் புகழும் அடைய வேண்டும் என்கிற உணர்ச்சிகள் இருக்காதா? நாங்கள் எத்தனை கொடுமைகளையும், துன்பங்களையும், சுரண்டல்களையும், அவமானங்களையும், அல்லல்களையும் அனுபவிப்பது? எங்கள் தேசாபிமானத்தை நீங்கள் சிதைத்திருக்கிறீர்கள். அவமதிப்புகளை அளவில்லாமல் எங்கள் மீது குவித்து எங்கள் தன்மானமே அழியும் அளவுக்கு ஆக்கியிருக்கிறீர்கள். … யாருடைய பரிவோ பரோபகாரமோ எங்களுக்கு தேவை இல்லை.  நாங்கள் பெற விரும்புவது சமூக முன்னேற்றம், அரசியல் எழுச்சி, பொருளாதார உயர்வு… தாழ்த்தப்பட்டவர்களின் முன்னேற்றத்தில்தான் இந்தியாவின் பாதுகாப்பு இருக்கிறது.”

– பெருந்தலைவர் எம்.சி.ராஜா அவர்கள்

ஜூன் 17: இன்று அவர் பிறந்த தினம்.

6 Replies to “ஆதிக்க சாதி இந்துக்களின் மனசாட்சிக்கு ஒரு அறைகூவல்”

  1. அன்பர்கள் சரியாக புரிந்து கொள்ள வேண்டுகிறோம். ஆதிக்க சாதியினரின் கொடுமைகள் கண்டிக்கத் தக்கவை.
    நன்றி.
    வாழ்க பாரதம்.

  2. முக்கியமான நிணைவு கூறல். நன்றி

  3. சாதி என்ற அசிங்கம் செய்த கோலத்தின் விளைவு தான் இன்றைக்கு நம் நாடு இருக்கும் நிலைமை. நாம் அனைவரும் ஒன்றே. நிறத்தாலும், பிறப்பாலும், மொழியாலும், கலாச்சாரத்தாலும் பிளவுபட்டு ஒரு தாய் பிள்ளைகள் தங்களுக்குள் அடித்துக் கொள்ளும் அவலம் போகட்டும். நாமனைவரும் பாரதத் தாயின் பிள்ளைகள், இதை நாம் உணராததன் விளைவு எருதுகளைப் பிரித்தழைத்துப் போய் கொன்ற நரியின் கதையின் படி நம் நாட்டிலும் வெகு ஜோராக நடந்தது. விழித்தெழுவோம் சகோதர சகோதரிகளே!

  4. தமிழ்ஹிந்து மிக முக்கியமான பணிகளை செய்து வருகிறது, மிக மகிழ்கிறேன். நம் முன் உள்ள முதல் பணி நம்மை பலபடுத்துவதே,அதற்கு முதலில் இனரீதியாக இருக்கும் ஏற்றத்தாழ்வு மறைய வேண்டும்,பிராமணரிலிருந்து கடைநிலை மனிதன் வரை சகோதரர்களாக என்னும் மனம் அனைவரிலும் உருவாக வேண்டும்.

  5. அவர் 1920களில் சொன்னதை இன்றும் கூறிக்கொண்டு இருங்கள். தொல் திருமாவளவன் நேற்று தனக்கு தங்கத்தினால் அபிஷேகம் செய்ய வேண்டி தொண்டர்களை வேண்டிக்கொண்டராம். மாயாவதியை பின்பற்றி இவ்வாறு கூறுகிறார் போலும். அதற்கு கடலூர் மாவட்ட தலைமை தொண்டர் ஒருவர் 2௦௦ சவரன் தன் தொகுதி பங்கில் கொடுப்பதாக உறுதி அளித்துள்ளார். திரு ராசா காலத்தில் வெறும் பிராமணர்களையே பிரதானமாக எதிர்த்தார். இப்பொழுது தமிழ்நாட்டில் பிராமணர்களே இல்லை, ஆனாலும் சாதி கொடுமைகள் அழியவும் இல்லை ஒடுக்கப்பட்டோர் போராட்டங்கள் குறையவும் இல்லை , காரணம், உயர் வகுப்பினர் என்று கூறிகொள்பவர்கள் பலர் உள்ளனர், மேலும் ஒடுக்கப்பட்ட சமுதாயத்திற்கு ஒழைப்பவர்கள் தன் குடும்பத்திற்கே உழைக்கிறார்கள்.

  6. பெருந்தலைவர் எம் சி ராஜா அவர்களின் வேண்டுகோள் ஹிந்துக்களில் உயர் வகுப்பினர் எனப்படுவோர் சிந்தனைக்கு இன்றைக்கும் உரியதாகவே இருக்கிறது.
    தாழ்த்தப்பட்ட மக்களின் நிலமை இன்னும் பன்மடங்கு முன்னேறவேண்டும். ஆனால்
    பெருந்தலைவர் இந்த வேண்டுகோளில் எங்கும் ஆதிக்க சாதி என்றோ சாதி ஹிந்துக்கள் என்றோ உயர் சாதி ஹிந்துக்களை அவர் குறிப்பிடவில்லை. அவரது பிற எழுத்துக்களில் சாதி ஹிந்து (caste hindhu) என்ற பதம் பயன்படுத்தப்பட்டிருக்கிறதா என்பதை அடியேன் அறியேன். இந்தபதத்தினைப்பயன் படுத்துவதில் ஒரு சிக்கல் இருக்கிறது. சாதி என்பது இங்கே வர்ணத்தினைக்குறிக்கிறது. பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் ஆகியோர் நால்வருணத்தினர். இந்த நாங்குக்கும் வெளியே இருந்தவர்கள் பஞ்சமர் எனப்படுவோர் தாழ்த்தப்பட்டோர் என்பதே சாதி ஹிந்துக்கள் என்ற கருத்தாக்கத்தின் உட்கிடை. இந்த நான்குவர்ணங்களும் தென்னாட்டில் இல்லை. ஏன் எனில் இருபிறப்பாளர்(த்விஜர்) ஆகிய மூன்று வர்ணங்கள் தென்னகத்தில் இல்லை. இங்கே பிராமணர் மட்டுமே த்விஜர். மற்றவர் அனைவரும் சூத்திரரே எனும்போது பஞ்சமர் யாரும் இல்லை. நடைமுறையில் சாதி அமைப்பில் வர்ண அடுக்கமைப்பு என்பது பாரத தேசத்தின் வரலாற்றில் தெளிவாக இருந்ததாகத்தெரியவில்லை. வர்ண அடுக்கமைப்பு ஒரு Textual கருத்தாக்கம் அன்றி நடைமுறையில் ஜாதி அடுக்கமைவு மட்டுமே அங்கங்கு இருந்திருக்கிறது.
    மற்ற சாதியினரை சாதி ஹிந்துக்கள் என்று அழைப்பது தாழ்த்தப்பட்ட மக்களை அவர்ணத்தார் அல்லது பஞ்சமர் என்று கூறுவதாகும். இதைவைத்து தாழ்த்தப்பட்ட மக்கள் ஹிந்துக்களே அல்ல என்றும் ஒரு சில சமூகவியலாளர்கள் கூறுகிறார்கள்.
    இந்த சாதி ஹிந்துக்கள் என்ற கருத்தாக்கத்தை அண்ணல் காந்தியடிகளும் எதிர்த்திருக்கிறார் என்பது இங்கே குறிப்பிடத்தகுந்தது. ஆக சாதி ஹிந்துக்கள் என்ற கருத்துரு தவிர்க்கப்படவேண்டியதே.
    ஆதிக்க சாதி(Dominant Caste) என்ற கருத்தாக்கம் காலம் சென்ற சமூகவியலாளர் பேராசிரியர் எம் என் ஸ்ரீனிவாஸ் அவர்களால் முன்வைக்கப்பட்டது. இது வர்ண அமைப்பில் செல்வாக்குப்பெற்றிருப்பதாகக்கூறப்படும் இருபிறப்பாளர்களுக்கு மாற்றாக உண்மையில் தற்கால அரசியலில் செல்வாக்குப்படைத்த நிலமுடைய, கணிசமான மக்கள் தொகை உடைய, நடுத்தர சாதிகளே(பெரும்பாலும் சூத்திரர் எனப்படும் சாதியினர்) ஆதிக்க சாதியினர் என ஸ்ரீனிவாஸ் அவர்களால் கருதப்பட்டனர். இன்றைக்கு கர்னாடகம், ஆந்திரம், மஹாராஸ்டிரம், பஞ்சாப் போன்ற பல்வேறு மானிலங்களில் ஆட்சியில் உள்ள முதல்வர்கள் ஆதிக்க சாதியினரே என்பது இங்கே சுட்டற்பாலது. இவர்கள் எல்லாம் பெரும்பாலம் நாட்டு விடுதலைக்கு பிறகு நாட்டின் முன்னேற்றத்தில்(குறிப்பாக பசுமைப்புரட்சி, ஜனனாயகம், அனைவருக்கும் வாக்குரிமை, பஞ்சாயத்து ராஜ் காரணிகல்) பெரும் பயன் பெற்று மேல் எழுந்த சூத்திரர்கள் என்பதும் கவனிக்கத்தகுந்தது.
    இந்த இரண்டு கருத்தாக்களையும் தமிழ் ஹிந்து ஆதிக்க சாதி ஹிந்துக்கள் என்று இணைத்து பயன்படுத்துவது அடியேனுக்கு வேடிக்கையாகவே உள்ளது. இதைவிட “உயர் வகுப்பினர் என தம்மை அழைத்துக் கொள்வோர்” என்ற பெருந்தலைவர் எம் சி ராஜா அவர்களின் பிரயோகமே சிறந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *