தொடர்ச்சி..
12.1 தனக்கு உதவி தங்கையா தன் கையா?
ஜனஸ்தானில் ஒற்றனாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் ஆகம்பனா என்பவன் பதினான்காயிரம் பலம் கொண்ட சேனை அடியோடு நிர்மூலம் ஆனதையும், அதன்பின் தளபதி கர களத்தில் மாண்டதையும், ராவணனுக்கு விவரமாகத் தகவல் கொடுக்கிறான். மேலும் அவன் ராவணனை நேரடித் தாக்குதலில் ஈடுபடவேண்டாம் என்றும், மாறாக சீதையை அபகரித்துச் சென்றால் ராமன் நடப்பதை மேலும் கவனத்தில் எடுத்துக்கொண்டு, தனது மனைவிக்கு நேர்ந்துள்ள கதியை நினைத்து வெறுத்துப்போய், மனமுடைந்து ஒருவேளை காட்டிலேயே இறந்தும் போகலாம் என்றும் ஆலோசனை தருகிறான். இந்த அறிவுரை தீய சக்தியான ராவணனுக்குப் பிடித்துப்போகவே, அவன் இதை செய்துமுடிக்க மாரீசன் உதவியை நாடுகிறான். மாரீசனுக்கோ ஏற்கனவே, விஸ்வாமித்திரர் முனிக்குக் கொடுத்த இடையூறுகளின்போது, ராமனிடம் சூடு பட்டுக்கொண்ட அனுபவம் உண்டு. அப்போது ராமனுடைய வில்லால் கிடைத்த அடியால் அவன் கடல்களுக்கும் அப்பால் தூக்கி எறியப்பட்டிருந்ததால், அந்த வலி அவனுக்கு நன்றாகவே தெரியும். அதனால் அவன் ராமனைச் சாதாரணமாக எடைபோட வேண்டாம் என்றும், ராவணனது திட்டம் முட்டாள்தனமானது என்றும் சொல்லி அவனை அதிலிருந்து பின்வாங்கச் சொன்னான். “ராமன் காட்டிலே நிம்மதியாக இருந்துவிட்டுப் போகட்டும், நீயும் சந்தோஷமாக இலங்கையை ஆண்டுவிட்டுப் போ” என்று சொன்னதைக் கேட்டு, ராவணனும் அதில் உள்ள நியாயத்தை ஒத்துக்கொண்டு இலங்கைக்குத் திரும்பிவிட்டான்.
ஆனால் விதி யாரை விட்டது? அரக்கர்கள் சேனை முழுவதுமே அழிந்துபோனதைப் பற்றியும் கவலைப்படாமல் ராவணன் இருப்பதை அறிந்து அதிர்ச்சிகொண்ட சூர்ப்பனகை, அவனைப் பார்க்க இலங்கைக்கு வருகிறாள். சேனை அழிந்தது தெரியாதா? ஒற்றர்கள் ராவணனிடம் அதைப் பற்றிச் சொல்லவில்லையா? இல்லை ராவணன்தான் வேறெதுவும் செய்ய விரும்பாத சோம்பேறியாகி, அந்தப்புரத்திற்குள் உல்லாசமாக இருப்பதையே விரும்புகிறானா? என்ற கேள்விகள் எல்லாம் அவளைத் துளைக்க, அவள் ராவணனிடம் சில ராஜாங்க விஷயங்களை கூர்ந்து கவனித்து, உடனுக்குடன் ஆவன செய்யாவிட்டால் அரசுரிமையே பறிபோய் ஆட்சியை இழக்கும் அபாயம் வந்துவிடும் என்று எச்சரிக்கிறாள்.
ஸ்வயம்ʼ கார்யாணி ய: காலே நானுதிஷ்ட²தி பார்தி²வ:|
ஸ து வை ஸஹ ராஜ்யேன தைஸ்²ச கார்யைர்வினஸ்²யதி|| 3.33.4||
பார்தி²வ: king, அரசன்
காலே at right time, தக்க நேரத்தில்
கார்யாணி actions, செயல்கள்
நானுதிஷ்ட²தி does not carry out, செய்யாதிருப்பது
ராஜ்யேன ஸஹ along with kingdom, ஆட்சிப்பீடத்துடன்
தை: with them, அவைகளுடன்
கார்யைஸ்²ச ஸஹ along with those assignments, அரசுரிமையும்
வினஸ்²யதி is destroyed, இழக்கப்படும்.
ஓர் அரசன் தக்க நேரத்தில் தான் செய்யவேண்டிய கடமையை செய்யாவிட்டால், அந்த ஆட்சிப்பீடத்தையும் விட்டிறங்கி அரசுரிமையும் இழந்து தானும் தவிப்பான்.
சூர்ப்பனகைக்குத் தனக்கென்று ஆகவேண்டிய காரியம் ஒன்று இருக்கிறது. சேனையே அழிந்துபோயும் இப்படி ராவணன் ஒன்றும் செய்யாதிருப்பது அவள் விரும்பும் காரியத்துக்கு எந்த விதத்திலும் உதவாது. அரசனாகட்டும், சாதாரண மக்களாகட்டும் சில சமயம் சில சமயங்களில் ஒன்றும் செய்யாது அமைதியாய் இருப்பது நல்லது; அதே போல சில சமயங்களில் தள்ளிப் போடாமல் ஆகவேண்டியதை உடனே செய்து முடிப்பதும் நல்லது. ஆதலால் எதை எப்போது உடனே செய்யவேண்டும், அல்லது தள்ளிபோட்டுவிட்டு அமைதி காக்கவேண்டும் என்பதெல்லாம் நன்கு அறிந்தவனே அறிவாளி. அதே சமயம் தன்னை மற்றவர் அவர்களுக்காக உபயோகப்படுத்திக் கொண்டு ஒரு காரியத்தில் அனாவசியமாக நம்மை இழுத்து விடுகிறார்களோ என்பதையும் அவன் கண்காணித்துக் கொள்ளவேண்டும். இங்கு சூர்ப்பனகை ராவணன் மூலம் தன் காரியத்தை முடித்துக்கொள்ளப் பார்க்கிறாள் என்பதால் தான் மேதாவிபோல் இப்படி ஒரு அறிவுரை கொடுக்கிறாள்.
12.2 ஆட்சி ஒன்றே மாட்சிமை தரும்
வால்மீகி இராமாயணத்தின் ஆரண்ய காண்டம் முப்பத்திமூன்றாம் சர்க்கம் முழுவதும் சூர்ப்பனகையின் விஷம் கலந்த பேச்சானாலும், விஷயம் நிறைந்த பேச்சாக இருக்கிறது. அவையெல்லாம் நல்ல கொள்கைகள் அடிப்படையின் மேல் கூறப்படுவது போல வரும் கண்டனங்களும், ஏளனங்களும், அறிவுரைகளும் கலந்த ஒரு கலவையே. அவைகளின் உண்மை மற்றும் நேர்மைத் தன்மைக்கும் சொல்பவரின் குணாதிசயங்களுக்கும் சம்பந்தம் இருப்பதுபோலவே தெரியாது. சூர்ப்பனகைக்கு ராவணன் மூலம் தன் காரியம் ஆக வேண்டும் என்பதில் மட்டுமே குறி. அது தெரியாமல், அவள் பேசப் பேச ராவணன் தனது ஆசனத்தில் ஒரு புழுவைப்போல நெளிந்து கொண்டிருந்தான். ஆம்! ஒன்றல்ல, இரண்டல்ல, பதினான்காயிரம் ஆட்கள் கொண்ட சேனை அழிக்கப்பட்டிருப்பதைப் பார்த்துக்கொண்டு ஒரு அரசன் எப்படி சும்மா இருக்க முடியும்? அப்படியும் ஒன்றும் செய்யாது அரசன் இருந்தான் என்றால், அவனது ஆட்சிக்குக் கெடு வந்துவிட்டது என்றுதான் அர்த்தம். ஆட்சியை இழந்துவிட்டால் அவனை ஈ எறும்பு கூட மதிக்குமா? என்றெல்லாம் சொல்லிக்கொண்டு அவள் ராவணனுக்குத் தூபம் போட்டுக் கொண்டிருந்தாள்.
ஸு²ஷ்கை: காஷ்டை²ர்ப⁴வேத்கார்யம்ʼ லோஷ்டைரபி ச பாம்ʼஸுபி⁴:|
ந து ஸ்தா²னாத்பரிப்⁴ரஷ்டை: கார்யம்ʼ ஸ்யாத்³வஸுதா⁴தி⁴பை:|| 3.33.18||
ஸு²ஷ்கை: with dried up, காய்ந்து போன
காஷ்டை²: logs of wood, மரத் துண்டுகள்
லோஷ்டைரபி even with clods of earth, மண் குவியல்கள்
பாம்ʼஸுபி⁴ரபி ச even with the dust, தூசியுடன் கூட
கார்யம் may have some value, மதிப்பு இருக்கும்
ப⁴வேத் will be, இருக்கும்
து but, ஆனால்
ஸ்தா²னாத் from the kingship, ஆட்சி பீடத்தில் இருந்து
பரிப்⁴ரஷ்டை: thrown out by the people, மக்களால் தூக்கி எறியப்பட்ட
வஸுதா⁴தி⁴பை by the kings, அரசர்களால்
கார்யம் work, காரியம்
ந ஸ்யாத் will not be, இருக்காது.
காய்ந்துபோன சருகானாலும் உபயோகம் உண்டு; அதேபோல களிமண்ணுக்கும் மதிப்பு உண்டு. ஆனால் தூசிக்கு இருக்கும் மதிப்பு கூட தன் ஆட்சியிலிருந்து மக்களால் தூக்கி எறியப்பட்ட அரசனுக்கு இருக்காது.
தன்னைப் பற்றியும், தன் சாகசங்களைப் பற்றியும் பெருமையாக நினைத்து, தான் தான் எல்லாமே, தனக்கு மேல் ஒன்றுமில்லை என்று அகம்பாவத்துடன் இருக்கும் ஆட்சியாளர்களை வால்மீகி இங்கு வஞ்சப்புகழ்ச்சி அணியில் விளாசுகிறார். உண்மை என்னவென்றால், பதவியில் இருப்பதால் நல்லது செய்வார்கள் என்றெண்ணியே அவர்களுக்கு மரியாதையும், அவர்கள்மேல் மதிப்பும் மக்கள் வைக்கின்றனர். ஆனால் ஆட்சியிலிருந்து இறக்கப்பட்டால் அந்த மதிப்பும், மரியாதையும் கானல்நீர் போல் ஆகிவிடும். வால்மீகி சொல்வது போல் காய்ந்த மரமாவது வீடு கட்டவோ, அடுப்பில் எரிவதற்கோ பயன்படும், களிமண்ணோ பானை செய்வதற்குப் பயன்படும். ஆனால் பதவி இழந்த அரசனோ எதற்கும் உதவாதவனாகவே கருதப்படுவான்.
12.3 சொல்பவர் சிலரே, சொல் கேளார் பலரே
சூர்ப்பனகையின் விஷம் கலந்த பேச்சால் தூண்டிவிடப்பட்ட ராவணனுடைய கேடு கெட்ட மதிக்கு, சீதையை அபகரித்து வரும் திட்டமே உசிதமானது என்று படுகிறது. அதனால் அவன் மறுபடியும் மாரீசன் உதவியை அதற்கு நாடினான். ராவணனது திட்டப்படி மாரீசன் ஒரு அழகான தங்க மானாக உருவெடுத்து சீதை முன் வளைய வந்தால், அதனால் அவள் கவரப்பட்டு அவள் ராம-லக்ஷ்மணர்களை அதைப் பிடித்துத் தரச் சொல்வாள். அப்போது மாரீசன் அவர்களை வெகு தொலைவிற்கு துரத்திக்கொண்டு போக வைத்துவிட்டால், சீதை தனிமைப்பட்டுவிட ராவணன் அவளை அபகரித்து இலங்கைக்கு எடுத்துக்கொண்டு வந்துவிட முடியும்.
சீதையை இழந்த கவலையில் ராமன் நிலை தடுமாற, தான் ராமனை எளிதில் போரிட்டு வெல்ல முடியும் என்று ராவணன் விவரிக்க மாரீசன் திடுக்கிட்டுப் போனான். ராவணனோ அவனது அமைச்சர்களோ இராமனின் பலத்தைப் பற்றிச் சிறிதும் தெரிந்து கொள்ளவில்லை என்பதை மாரீசன் உணர்ந்தான். அமைச்சர்களாவது அதைத் தெரிந்து கொண்டிருந்தால் அவர்கள் இராமனை எதிர்க்கவேண்டாம் என்று ராவணனுக்கு ஆலோசனை தந்திருப்பார்கள். ராவணனை இப்படிச் செய்யவிடுவது அரசனை எதிர்க்காத அவர்களுடைய தலையாட்டித்தனம் என்று புரிந்துகொண்ட மாரீசன், ராவணனுக்குப் பிடிக்காமல் இருக்கலாம் என்றாலும் அவனது நன்மை கருதி சொல்வதாக தன்னுடைய எண்ணத்தைத் தெரிவிப்பதாகச் சொன்னான்.
ஸுலபா⁴: புருஷா ராஜன்ஸததம்ʼ ப்ரியவாதி³ன:|
அப்ரியஸ்ய து பத்²யஸ்ய வக்தா ஸ்²ரோதா ச து³ர்லப⁴:|| 3.37.2||
ராஜன் O king, அரசே!
ப்ரியவாதி³ன: men sweet in talk, இனிப்பாகப் பேசும் ஆட்கள்
புருஷா: men, மனிதர்கள்
ஸததம் always, எப்போதும்
ஸுலபா⁴: easy to find, காண எளிது
அப்ரியஸ்ய unpleasant to hear, பிடிக்காததைக் கேட்டு
து but, ஆனால்
பத்²யஸ்ய in the long run, காலா காலத்தில்
வக்தா speaker, பேசுபவர்
ஸ்²ரோதா ச audience, கேட்பவர்கள்
து³ர்லப⁴: is difficult to find, கடினம்.
அரசே! உங்களுக்குப் பிடித்த மாதிரி பேசுவதற்கு நிறையப் பேர் இருப்பார்கள். ஆனால் பிடிக்காவிட்டாலும் நல்லதைச் சொல்வதற்கு வெகு சிலரே இருப்பார்கள்; அத்தகைய பேச்சைக் கேட்டு அதன்படி நடப்பதற்கும் அவரைவிட மிகக்குறைவாகவே இருப்பார்கள்.
தவறானாலும் மற்றவர்க்குப் பிடித்ததைச் சொல்லி அவரால் தனக்கு வேண்டியதைப் பெற்றுக் கொள்வதிலேயே குறியாய் இருக்கும் மனிதர்கள் எப்போதும் இருப்பதால், இந்த அறிவுரை என்றைக்குமே பொருத்தமானது. பிடிக்காததைச் சொல்லி வம்பில் மாட்டிக்கொள்ளப் பலரும் விரும்புவதில்லை. அப்படியே ஓரிருவர் இருந்தாலும், பிடிக்காததைக் கேட்டு அதன் வழி நடப்பவர்களைப் பார்ப்பதும் அரிதாகவே இருக்கிறது.
12.4 பாவிகளின் நடுவில் அப்பாவியின் கதி
ராவணனுக்குச் சரியான அறிவுரை வழங்கப்படவில்லை என்று மாரீசனுக்குத் தெரிந்தது. அதனால் இராமர் மானிட வடிவில் இருக்கும் தர்மத்தின் உருவம், எல்லோருடனும் அமைதியாய் வாழ்வதே அவர் விருப்பம், உண்மை வழி ஒன்றில் மட்டுமே எப்போதும் நடப்பதாலேயே அவரிடம் எல்லாவிதமான சக்திகளும் குடியிருக்கின்றன என்று அவன் ராவணனுக்கு எடுத்துச் சொன்னான்.
அப்படிப்பட்ட இராமரிடம் வீண்பழிச் சண்டை வளர்த்துக்கொள்வது ராவணனுக்கு நல்லதல்ல, இராமரின் பலத்தைத் தவறாக எடைபோட வேண்டாம் என்றும் சொன்னான். மேலும் ராவணனுக்கு அவன் சொல்வதில் நம்பிக்கை வருவதற்காக இராமரிடம் தனக்கு ஏற்கனவே நடந்த மோதல்களில் தனக்கு ஏற்பட்ட அவமானத்தையும் விவரமாகச் சொன்னான். மாரீசனும் அவனுடன் கூட இருந்த அரக்கர்களும்தான் முன்பு விஸ்வாமித்திரர் அழைத்து வந்து இராம-லக்ஷ்மணர்களால் ஓட ஓட விரட்டப்பட்டு அடி வாங்கியவர்கள்; இராமர் அப்போது இளம்வயது பாலகனாய் இருந்தும், அவர் எய்திய அம்பால் வாங்கிய அடி எப்படி தன்னை வெகுதூரம் கடல்களுக்கும் அப்பால் தூக்கி எறிந்தும், நல்ல வேளையாக அவன் பிழைத்து எழுந்து வந்ததால்தான் இப்போது ராவணனுக்கு இராமரின் வலிமையைப் பற்றிச் சொல்ல முடிகிறது என்றான். மாரீசனின் கணிப்பில் இராமரைச் சீண்டிப் பார்ப்பது நல்லதல்ல, தவறிப்போய் அப்படி ராவணன் ஏதாவது செய்ய நேர்ந்தால் ராவணன் மட்டும் அன்றி ராக்ஷசர் குலமே அடியோடு நாசமாகிவிடும்; அதோடு ஒன்றும் அறியாத அப்பாவிகளான இலங்கை மக்களும் ராவணன் செய்யும் பாவச் செயல்களுக்காகத் தண்டனைக்கு உள்ளாவார்கள்
அகுர்வந்தோ(அ)பி பாபானி ஸு²சய: பாபஸம்ʼஸ்²ரயாத்|
பரபாபைர்வினஸ்²யந்தி மத்ஸ்யா நாக³ஹ்ரதே³ யதா²|| 3.38.26||
பாபானி sins, பாவங்கள்
அகுர்வந்தோ(அ)பி even though they do not commit, அவர்கள் செய்யாவிடினும்
ஸு²சய: pure men, நல்லவர்கள்
பாபஸம்ʼஸ்²ரயாத் by mixing with sinners, பாவிகளுடன் சேரும்போது
நாக³ஹ்ரதே³ in a pool of serpents, பாம்புகள் மத்தியில்
மத்ஸ்யா: யதா² like the fish, மீனைப்போல
பரபாபை: by others sins, மற்றவர்களின் பாவங்களுக்காக
வினஸ்²யந்தி will be destroyed, அழிவார்கள்.
பாவிகளின் கூட இருந்தால், பாம்புகளின் இடையில் மாட்டிக்கொள்ளும் மீன்களுக்கு வருவது போல, பாவம் எதுவுமே செய்யாத நல்லவர்களுக்குகூட அழிவு வரும்.
“ராமோ விக்ரவான் தர்ம” என்று இராமரைப் பற்றி ராவணனிடம் மாரீசன் சொல்வதைப் போன்ற ஒரு உண்மையான, மனப்பூர்வமான நற்சான்றிதழை ஒரு பகைவனிடமிருந்து பெறுவது மிகக் கடினம். ஆம், அவன் தன் அனுபவத்தின் மூலம் சொல்கிறான். மற்ற நல்லவர்கள் செய்யும் நற்காரியங்களினால் நமக்கு நன்மை கிடைப்பது போல, சில தீயவர்கள் செயலால் நமக்குத் தீமையும் வரலாம் என்பது எவரது வாழ்க்கையிலும் ஒரு அனுபவமே. அதேபோல நாம் செய்யும் செயல்களும் நல்லதோ, கெடுதலோ மற்றவரையும் பாதிக்கும். நீரில் உள்ள விஷப் பாம்புகளை பிடித்துக் கொல்ல முயலும்போது அவை நடுவில் சிக்கும் மீன்களும் இரையாகின்றன என்ற வால்மீகியின் உவமை மிகவும் பொருத்தமானதே.
12. 5 அமைச்சர்களின் பொறுப்பு
ராவணின் சீதையை அபகரித்துக் கொண்டுவரும் முட்டாள்தனமான செய்கையை நிறுத்துவதற்காக மாரீசன் சொன்னதைக்கேட்டு ராவணனுக்கு எரிச்சலும் கோபமும்தான் வந்தன. தன் வரம்பை மீறி மாரீசன் தனக்கு அறிவுரை கொடுப்பதாக அவன் நினைத்தான். அவனிடம் தான் ஆலோசனை கேட்கவரவில்லை என்றும், தான் சொன்னபடி செய்யவில்லை என்றால் அவனை அங்கேயே அப்போதே கொன்றுவிடுவதாக ராவணன் மிரட்டினான். நிலைமை தன்னை மீறிப் போவதை உணர்ந்த மாரீசனும் இறுதியாக ஆனால் உறுதியாக இப்படிச் சொன்னான். ராவணன் அரக்கர்களுக்கு அரசன் தான்; அவனுக்கு ஆலோசனை சொல்லவென்று அமைச்சர்களும் இருக்கிறார்கள். அந்த அமைச்சர்களுக்குத்தான் அவன் அழிவுப்பாதையில் போகாமல் தடுக்கவும், தான்தோன்றித்தனமாக நடக்காமல் இருக்கவும் செய்யவேண்டிய கடமை இருக்கிறது. ஓர் அரசன் எடுக்கும் முடிவுகளின் விளைவுகள் அந்த அரசனை மட்டுமன்றி, மக்களின் பிரதிநிதிகளாக உள்ள அனைவரையுமே பாதிக்கின்றன. ராவணன் இப்போது அழிவுப்பாதையைத் தேர்ந்தெடுத்துச் செல்வதை தடுக்காத அமைச்சர்கள் தங்கள் கடமையைச் செய்யவில்லையே என்று வருந்தினான்.
அமாத்யை: காமவ்ருʼத்தோ ஹி ராஜா காபத²மாஸ்²ரித:|
நிக்³ராஹ்யஸ்ஸர்வதா² ஸத்³பி⁴ர்ன நிக்³ராஹ்யோ நிக்³ருʼஹ்யஸே|| 3.41.7||
காமவ்ருʼத்த: passionate, ஆசையில்
காபத²ம் bad path, தவறான பாதையில்
ஆஸ்²ரித: resorted to, செல்லுகின்ற
ராஜா king, அரசன்
ஸத்³பி⁴: by the good people, நல்ல மனிதர்களால்
அமாத்யை: by ministers, அமைச்சர்களால்
ஸர்வதா² in all ways, எந்த வழியிலும்
நிக்³ராஹ்ய: ஹி should be stopped, நிறுத்தி இருக்கவேண்டும்
நிக்³ராஹ்ய: resist, தடுத்து
ந நிக்³ருʼஹ்யஸே not resisted, தடுக்கப்படவில்லை.
ஆசையிலும், ஆத்திரத்திலும் உள்ள ஓர் அரசன் தவறான பாதையில் போக முடிவெடுக்கும்போது, அவன் அதில் செல்லாதிருக்கும்படி அவனது அமைச்சர்கள் தடுக்க ஆவன செய்யவேண்டும். நல்ல மனிதர்கள் அறிவுரை சொல்லி, அழிவுப் பாதையில் போவதிலிருந்து ஏன் உன்னை மீட்கவில்லை?
இராமயணக் காலத்தில் ஓர் அரசன் ஆலோசனை கூறும் பலருடைய எண்ணங்களையும் ஒதுக்கித் தள்ளி, தன்னிச்சைப்படியே எல்லாம் நடக்க வேண்டும் என நினைக்கும் சர்வாதிகாரியாக மாறுவது என்பது வழக்கத்தில் இல்லை. ஆலோசனை கூறவும் பல அமைச்சர்கள் இருந்தனர். ஒருவேளை அரசன் அப்படிச் செல்லும்போது, அதன் விளைவுகளின் பாதிப்புக்களைச் சொல்லி, அரசனை அதைச் செய்யாமல் இருக்கச் செய்வதே அவர்களின் தலையாய கடமை. இது எக்காலத்துக்கும் பொருந்தும் ஒரு வழிமுறை என்பதை அறிவுடைய யார்தான் ஒத்துக்கொள்ள மாட்டார்கள்.
(தொடரும்)