உருமி: சந்தோஷ் சிவனின் சாகசம்

வாஸ்கோ ட காமா –  1500 களில் ஐரோப்பாவில் இருந்து இந்தியாவுக்கு ஆப்பிரிக்கா  வழியாக   கடல் வழியைக் கண்டுபிடித்த மாலுமி என்று சரித்திரத்தில் போற்றப்படுபவர். இந்தியாவில் முதல் ஐரோப்பிய குடியேற்றத்தை ஏற்படுத்திய போர்ச்சுக்கீசியர் என்று தான் நாம் வரலாற்றில் படிக்கிறோம்.  இது எவ்வளவு தூரம் உண்மை?

இந்தியாவுக்கு பல ஆயிரம் மைல் தொலைவில் இருந்து மிளகு வாங்க வந்த வாஸ்கோ ட காமா எவ்வாறு இந்தியாவில் போர்ச்சுக்கல் நாட்டின் வைஸ்ராயாக மாற முடிந்தது? அவருக்கு இந்திய மண்ணில் எந்த எதிர்ப்பும் இல்லையா? உண்மையிலேயே அவர் வணிக நோக்கம் கொண்டவர்  தானா? அவரது கடல் பயணத்தில் கிறிஸ்தவ மதப் பரப்பு நோக்கம் இருந்து குறித்து ஏன் மழுப்பப்படுகிறது? இந்தக் கேள்விகள் சாமர்த்தியமாக நமது வரலாற்று நூல வடிவமைப்பாளர்களால் மறைக்கப்படுகிறது. உண்மையில் நடந்தது என்ன?

வாஸ்கோ ட காமாவின் வருகை அன்றைய கேரளாவைப் பொறுத்த வரை மிகவும் பீதியூட்டும் கொடிய அனுபவம். இதை பல ஐரோப்பிய நூலாசிரியர்களே பதிவு செய்திருக்கிறார்கள். கிறிஸ்தவ மத வெறியும் நாடு பிடிக்கும் பேராசையும் கொண்ட ஒரு கடற் கொள்ளையன் தான் வாஸ்கோ ட காமா என்பது நம்மில் எவ்வளவு பேருக்குத் தெரியும்?

இந்தக் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் விதமாக ஒளிப்பதிவுத் திலகமான சந்தோஷ் சிவன் இயக்கியுள்ள திரைப்படம் தான் உருமி. மலையாளம், தமிழ்,  தெலுங்கு,  ஹிந்தி ஆகிய மொழிகளில்  ரூ. 20 கோடி செலவில் வெளியாகி உள்ள இப்படம், வாஸ்கோ ட காமா குறித்து நம் நாட்டில் நிறுவப்பட்டுள்ள பல பொய்க் கதைகளை அம்பலப்படுத்துகிறது.

வருத்தமில்லா வாலிபர்களான கே.டி என்கிற கிருஷ்ணதாசும் (பிருத்வி-2)  டார்ஜானும் (பிரபுதேவா-2) பாரில் வேலை செய்பவர்கள். அவர்களது கடன் தொல்லைக்கு ஒரே தீர்வு, கிருஷ்ணதாஸ் நாயனாரின்  வம்சாவழி சொத்தான கண்ணாடிக்காடு நிலத்தை விற்பது தான் என்ற முடிவுக்கு வருகின்றனர் இருவரும். அதை கபளீகரம் செய்ய உள்நாட்டு அரசியல்வாதி  (ஜெகதி ஸ்ரீகுமார்-2)  உதவியுடன் பன்னாட்டு நிறுவனம் ஒன்று முயற்சிக்கிறது. அதே  இடத்தில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு பள்ளி நடத்தும் என்.ஜி.ஒ நிர்வாகி பூமி (வித்யாபாலன்), கே.டி.யிடம் மன்றாடுகிறார். அப்போது, பழங்குடியின வீரன் தங்கச்சன் (ஆர்யா-2) வாலிபர்களைக் கடத்தி, அவர்களிடம் அவர்களது முன்னோரின் பெருமை மிக்க சரித்திரத்தை பின்நோக்கு உத்தியில் கூறுகிறார். தனது வம்சாவழியின் தியாக சரித்திரம் அறிந்து முடிவை மாற்றுகிறார் கே.டி. இது தான் கதை.

இந்தக் கதைக்குள் கதையாக வாஸ்கோ ட காமாவின் ஆக்கிரமிப்பையும் அதை எதிர்த்துப் போராடிய வீரர்களின் அழிவையும், ஊடே இந்து- முஸ்லிம் ஒற்றுமையையும் சொல்லிச் சென்றிருக்கிறார்   சந்தோஷ் சிவன். நல்ல திரைக்கதை அமைப்பு. இனி உள்கதை…

மலையாளக் கரையில் விளையும் மிளகின் புகழ் வாஸ்கோ ட காமாவை வசீகரிக்கிறது. போர்ச்சுக்கலில் துவங்கிய அவனது கடற்பயணம் கோழிக்கோட்டில் முடிகிறது. அங்குள்ள ராஜாவுடன் நட்பு பாராட்டி விடைபெறும் காமாவுக்கு இந்தியாவின் செல்வச் செழிப்பு பேராசை ஊட்டுகிறது. அடுத்த பயணத்தில் பெரும் படையுடன் வரும் காமா, மெக்காவுக்கு புனிதப்பயணம் மேற்கொண்டு திரும்பும் 400 இஸ்லாமியர்களை கொன்று கொள்ளை அடிக்கிறான். அதைத் தடுக்க, கொளத்துநாடு அரசின் கொத்துவாள் (சேனாபதி- ஆர்யா -1) தனது மகனையும் தலைமை நம்பூதிரியையும் பேச்சுவார்த்தைக்கு அனுப்புகிறார். ஆனால், நம்பூதிரியின் நாக்கையும் காதையும் அறுத்த காமா,  கொத்துவாளின்  மகனை சிறைப் பிடிக்கிறான். அவனை மீட்டு தப்புவிக்கச் செய்யும் கொத்துவாள், அங்கு போரில் கொல்லப்படுகிறார்.

சிறுவனாகத் தப்பும் அவரது மகன் கேளு நாயனார், ஒரு முஸ்லிம் வீட்டில் அடைக்கலம் புகுகிறான். அங்கு வவாலியுடன் (பிரபு தேவா-1) வளர்த்து பெரியவன் ஆகிறான் (பிருத்விராஜ் -1). புனிதப்பயணத்தில் கொல்லப்பட்ட இஸ்லாமியப் பெண்கள் அளித்த தங்க நகைகளை உருக்கி அதைக்கொண்டு சுருள்வாள் (உருமி) ஒன்றை தயாரித்து,  தந்தையையும் மக்களையும் கொன்ற காமாவை பழி தீர்க்க காத்திருக்கிறார் கேளு நாயனார். அதற்கான படைசேர்ப்பிலும் அவர் ஈடுபடுகிறார்.

இதனிடையே கொளத்துநாடு அரசின் சிறக்கல் இளவரசி  பாலாவை  (நித்யா மேனன்- 1) காமா கும்பலிடமிருந்து  காக்கின்றனர் வவாலி, கேளு நாயனார் இருவரும். இதனால் மகிழ்ந்த கொளத்துநாடு அரசின்  மன்னன் சிறக்கல்  தம்பூரான், காமாவின் மகன்  எஸ்தாலியோ காமாவை  கைது செய்து வருமாறு உத்தரவிடுகிறார். நண்பர்கள் இருவரும் அதை நிறைவேற்றுகின்றனர். அப்போது அறக்கல் சமஸ்தான இளவரசி ஆயிஷா (ஜெனிலியா -1) உள்ளிட்ட முஸ்லிம் பெண்களையும்  அமைச்சர் சதித்திட்டப்படி சிறக்கல் வீரர்கள்  சிறைப்பிடிக்கின்றனர்.  அவர்களை தந்திரமாக தப்புவிக்கச் செய்கிறார் கேளு நாயனார்.


சிறக்கல் சிறையில் உள்ள மகனை மீட்க காமா தீவிரமாக முயற்சிக்கிறான். இதனிடையே கேளு நாயனார் மீதான பொறாமையில் அமைச்சர் செனிசேரியும் (ஜெகதி ஸ்ரீகுமார்-1) இளவரசன் பானு விக்கிரமனும் (அன்கூர்) சதித்திட்டம் தீட்டி, எஸ்தாலியோ காமாவை தப்புவிக்கின்றனர்; மன்னனையும் கொல்கின்றனர். மன்னருக்கு விசுவாசமானவர்கள் மகளுடன் தப்புகின்றனர். தன்னை  காமா ஆதரிப்பான் என்ற நப்பாசையுடன் கைகுலுக்கும் இளவரசனை காமாவின் மகன் கொல்கிறான். பிறகு கொளத்துநாடு அவர்களது ஆதிக்கத்தில் வருகிறது.

இதை எதிர்த்துப் போராடி உயிர் நீக்கின்றனர் கேளு நாயனாரும், வவாலியும், அவர்களது படைவீரர்களும். துப்பாக்கி, பீரங்கி குண்டுகளின்  தாக்குதலுக்கு முன்னர் நமது வீரர்களின் வீரம் வீணாகிறது. கேளு நாயனாரின் காதலியாக மாறும் அறக்கல்  ஆயிஷா  தனது கருவில் ஆக்கிரமிப்பாளருக்கு எதிரான துடிப்பை சுமக்கிறார். போரில் சாகும் இஸ்லாமிய வீரர் வவாலியின்  நினைவுகளுடன் சிறக்கல் இளவரசி பாலா வாடுகிறார்.

இந்த உள்கதைக்கு ஒப்பனையாக பல நிகழ்வுகளைக் கட்டி அமைத்து, பிரபல நடிகர்களை களம் இறக்கி, தயக்கமின்றி துணிச்சலாக பல உண்மைகளை அம்பலப்படுத்தி இருப்பதற்காகவே சந்தோஷ் சிவனைப் பாராட்ட வேண்டும். நடிகர் பிருத்விராஜ்,   சந்தோஷ் சிவன், ஷாஜி நடேசன் ஆகியோருடன் இணைந்து இப்படத்தை தயாரித்திருக்கிறார். கதை: சங்கர் ராமகிருஷ்ணன்; இசை: தீபக் தேவ்; ஒளிப்பதிவு: சந்தோஷ் சிவன்.

160 நிமிடங்கள் திரையில் வரும் காட்சிகளில் பெரும்பகுதி காட்சிப்படுத்தலுக்காகவே பாராட்டப்பட வேண்டியவையாக  உள்ளன என்பதை முதலில்   சொல்ல வேண்டும்.   இப்படத்தின் பல காட்சிகள், ஒளிப்பதிவு நுட்பத்துக்கான முன்மாதிரிகளை உருவாக்கி உள்ளன. ஒளிப்பதிவாளரே  இயக்குனர் என்பதால் இது சாத்தியமாகி இருக்கிறது. கடற்பயணக் காட்சிகள், போர்க்களக் காட்சிகள், வனக் காட்சிகள் போன்றவை மட்டுமல்லாது, அறக்கல் இளவரசியின் வீரத்தை வெளிப்படுத்தும் காட்சிகளும் குறிப்பிடத் தக்கவை. உருமி ஒவ்வொரு முறை  சுழலும்போதும் காமிராவும் அழகாகச் சுழல்கிறது.

அந்நிய ஆக்கிரமிப்பாளனை எதிர்த்து முதல்முதலாக 1500 லேயே மலையாள மண்ணில் இந்துக்களும் முஸ்லிம்களும் இணைந்து போராடி உள்ளனர் என்பதை இப்படம் அற்புதமாக பதிவு செய்திருக்கிறது. தவிர, வாஸ்கோ ட காமா கடல் வழி கண்டுபிடித்த கனவான் அல்ல; அவன் ஒரு கிறிஸ்தவ மதவெறி பிடித்த கடற்கொள்ளையன் என்பதும் சமரசமின்றி பதிவு செய்யப்பட்டுள்ளது. இது இந்திய திரைப்பட வரலாற்றில் துணிச்சலான ஒரு முயற்சியே.


நவீனப் போர்க்கருவிகளின் உதவியால் தான் போர்ச்சுக்கீசியர்கள் இந்தியாவில் காலூன்ற முடிந்தது. அவர்களைத் தொடர்ந்து ஒவ்வொரு ஐரோப்பிய நாடும் இந்தியா மீது படையெடுத்து பல பகுதிகளை ஆக்கிரமித்தது. காமாவுக்கு எதிரான போரின் முடிவை யூகத்தில் விட்டுச் செல்லும் இயக்குனரின் திறமை, கூடுதல் யூகங்களையும் மேற்கொள்ள வைக்கிறது. ஆயுத பலம் இல்லாத எந்த நாட்டுக்கும் இது தானே கடைசி முடிவு?

காமா எதிரி என்றபோதும் அவனது மகனை கொல்லாமல் சிறையில் அடைக்கும் சிறக்கல் தம்பூரானுடன்,   ஹஜ் புனிதப் பயணிகளை வேட்டையாடும் காமாவின் வெறியை  ஒப்பிடலாம். காரியம் முடிந்தவுடன் இளவரசனைக் கொல்லும் காமாவின் நயவஞ்சகத்தையும் சிந்தித்துப் பார்க்கலாம். ஆக்கிரமிப்பாளனுக்கு உதவும் அரவாணி அமைச்சரின் துரோகச் செயல்கள் சுதந்திர  இந்தியாவிலும் அரசியல் வாதிகளால் தொடர்வதை குறியீடாக காட்டி இருப்பது அற்புதம். பன்னாட்டு அமைச்சருக்கு உதவ வரும் அரசியல்வாதிக்கு உள்ளூர் மக்கள் செருப்படி  கொடுக்கிறார்கள். அரவாணி அமைச்சராகவும் உள்ளூர் அரசியல்வாதியாகவும் ஜெகதி ஸ்ரீ குமாரே நடித்திருப்பது முக்கியமான குறியீடு.

அந்நிய ஆதிக்கத்தை எதிர்க்கும் சேர நாட்டு சேனாதிபதியாக வரும் கொத்துவாள்  ஆகவும், பழங்குடியின தலைவனாகவும் நடித்திருப்பவர் ஆர்யா.  அறக்கல்  ஆயிஷாவாகவும்  குழந்தைகள் காப்பகத்தில் உள்ள பிரமை பிடித்த பெண்ணாகவும் நடித்திருப்பவர் ஜெனீலியா.  வருத்தமில்லாத வாலிபராக வரும் அதே பிருத்விராஜ், 500 ஆண்டுகளுக்கு முன் அன்னியரை எதிர்த்த வீரராக வருகிறார். காலம் மனிதரை மாற்றிவிடுகிறதா? இதுபோலவே வித்யாபாலன்,  நித்யா மேனன் ஆகியோரும் இரட்டை பாத்திரங்களில் இருவேறு படிமங்களில் தோன்றுகின்றனர். உருமி கதை பழையதைக் கிளரச் செய்து புத்துணர்ச்சி அளிக்கிறது என்பதும்  கதையின் பின்புலத்தில் ஒளிரும் முக்கியமான படிமம்.

படத்தின் மற்றொரு பலம் வசனங்கள். ”ஈசன் தந்த கடலுக்கு சுங்கம் வாங்க வெள்ளையனுக்கு என்னடா உரிமை? இதை (கடிதத்தை) தந்தவன் தொண்டையில் செருகி வை” என்று கொளத்துநாடு மன்னன் கர்ஜிக்கும் போதும், ”இந்த மண்ணில் பிறந்து வாழ்ந்தவங்களோட கனவு… அந்தக் கனவு இப்ப என்னோடது.. அந்தக் கனவை நனவாக்குவது  என்னோட கனவு” என்று கே.டி சொல்லும்போதும்,  வசனத்தின் வீச்சு  தெரிகிறது.  ”என் உயிருக்குள் உயிராய் இரு பெண்ணே… எனக்காக உன் உயிருடன் திரும்புகிறேன்” என்ற கேளு நாயனாரின் குரல் காதருகில் ஒலிப்பது போலிருக்கிறது. தமிழில் வசனம்: சசிகுமரன்.

திரைப் பாத்திரங்கள் பலவும் கச்சிதமான  தேர்வு. கேளு நாயனாராக வரும் பிருத்விராஜின் கம்பீரமான உடல்மொழியும் கே.டி.யாக வரும் பிருதிவிராஜின் கோமாளித்தனமும் அற்புதம். வவாலியாகவும் டார்ஜானாகவும் வரும் பிரபு தேவா இலக்கற்ற மனிதராக மிளிர்கிறார்.  வாஸ்கோ  ட காமாவாக வரும் ராபின், எஸ்தாலியோ காமாவாக வரும் அலெக்ஸ்,  அரவாணி அமைச்சராக வரும் ஜெகதி ஸ்ரீ குமார் ஆகியோரின் படைப்புகள் சிறப்பானவை. ஜெனீலியாவை விளையாட்டுப் பெண்ணாகவே கண்ட ரசிகர்களை, அவர் இப்படத்தில் மிரட்டி இருக்கிறார்.

500 ஆண்டுக்கு முந்தைய சரித்திரப் படம் என்பதால் மெனக்கெட்டு செட் அமைப்பதில் கவனம் செலுத்தாமல், இயற்கையான காட்சிகளையும் எளிய செட்களையும் சார்ந்து ஒளிப்பதிவில் நம்பிக்கை வைத்து படமாக்கி இருப்பதும் சிறப்பு. தெளிவான  திரைக்கோர்வையும் (ஸ்ரீகர் பிரசாத்) சரசரவென்று படத்தைக் கொண்டு செல்கிறது. கேரளப் பகுதியில் காமா படையினர் நடத்திய அத்துமீறல்கள் பலவற்றை பதிவு செய்திருந்தால் இன்னமும் சிறப்பாக இருந்திருக்கும்.

சென்சார் போர்டு கையில் வைத்திருக்கும் கத்திரியை கருத்தில் கொண்டே படத்தை எடுக்க முடியும் என்பதால், இந்தக் குறையை விட்டுத் தள்ளலாம். ஆனால், படம் வெற்றி பெறுவதற்காக வலிந்து திணிக்கப்பட்ட நித்யா மேனன், தபு, வித்யா பாலன் தொடர்பான கவர்ச்சிக் காட்சிகள் தேவை இல்லாதவையே. பின்னணி  இசையில் உள்ள துடிப்பு பாடல்களில் இல்லாதது (மலையாளத்தில் இருந்து ‘டப்’ செய்யப்பட்டதால் இப்படி இருக்கிறதோ?) முக்கியமான குறை.

இப்படத்தில் நடித்தவர்கள் பலர் பிரபலமானவர்கள் என்றபோதும், படத்தின் முக்கியத்துவம் கருதி குறைந்த ஊதியத்தில் நடித்துக் கொடுத்ததாக படத் தயாரிப்பாளரும் கதாநாயகனுமான பிருத்விராஜ் கூறி இருக்கிறார். நடிகர்களுக்கும் சமூகப் பொறுப்புணர்வு இருப்பது உண்மையிலேயே பாராட்டிற்குரியது. கலாபாணி, பழசிராஜா வரிசையில் இப்படமும் இடம்பெற்றுவிட்டது. வரலாற்றைத் திரித்து தவறான சங்கதிகளைப் புகுத்தி நம்மை மடையர்களாக்கும் கல்வியாளர்களுக்கு ஓர் எச்சரிக்கையாக உருமி படத்தைச் சொல்லலாம்.

இப்படத்தை துணிவுடன் இயக்கிய சந்தோஷ் சிவனுக்கும், உடன் தோள் கொடுத்த பிருத்விராஜுக்கும் சக நடிகர்களுக்கும் பாராட்டுக்கள். வழக்கம் போல நமது மசாலா படங்களின் பெரும் குவியலிடையே இப்படம் மறைந்து கிடக்கிறது. சரித்திரத் தேர்ச்சி கொள்ள விரும்பும் தேசிய அன்பர்கள் தேடிப் பிடித்தாவது பார்க்க வேண்டிய படம் இது.

11 Replies to “உருமி: சந்தோஷ் சிவனின் சாகசம்”

 1. திரு.சேக்கிழான்,

  உருமி படத்தைப் போன்றே, தெலுங்கில், கடந்த சில வருடங்களில் 2 தெலுங்கு படங்களிலும் சில காட்சிகள் இடம்
  பெற்றுள்ளன. “மகதீரா” (தமிழில் மாவீரன்) திரைப்படத்தில், ஆந்திர பிரதேசத்தில் முஸ்லீம் படையெடுப்பையும்,
  நாங்கள் “சைத்தானின் படைகள்” என்று கொக்கரிப்பதையும் வெளிப்படையான வசனத்துடன் காணலாம். அந்த படைக்கு
  எதிராக, கதாநாயகன் கால பைரவனைப் போன்று உங்களை கொன்று போடுவேன் என்று கூறுவதையும், கால பைரவனின்
  ஒரு சன்னதிக்கு முன்னதாகவே இந்த போர் நடப்பதையும் ஒரு குறியீடாக காணலாம்.

  அதே போல், பத்ரிநாத் என்னும் தெலுங்கு படத்தின் முதல் காட்சியிலும், எவ்வாறு, பாரதத்தின் ஹிந்து கோயில்கள்
  முஸ்லீம் ஆக்கிரமிப்பாளர்களால் தகர்க்கப்பட்டன (அயோத்தியாவையும் சேர்த்தே வசனம் வருகிறது) என்பதை வெளிப்படையான வசனத்துடன் காணலாம்.

  உருமி படத்தையும் சேர்த்து நோக்குகையில், வரலாற்றை தைரியமாக காட்சிப்படுத்தவும், வசனங்கள் எழுதவும் தமிழ்
  சூழலில்தான் ஆட்கள் இல்லை என்று முடிவுக்கு வர வேண்டியுள்ளது.

 2. படத்தைப் பார்க்க வேண்டும் என்கிற ஆவலைத் தூண்டும் எழுத்து.

 3. மகா மோசமான படம். இதை சேக்கிழான் புகழ்வது வியப்பளிக்கிறது.

 4. நல்ல விமர்சனம். படத்தைக் கண்டிப்பாக பார்த்தே ஆக வேண்டும். நான் ஏதோ வாஸ்கடகாமாவை ஹீரோவாக்கியிருப்பார்கள் என்றெண்ணியிருந்தேன். நீங்கள் சொல்வது போல் இருந்தால் சந்தோஷ் சிவனைக் கண்டிப்பாகப் பாராட்ட வேண்டும்.

 5. ஸ்ரீ ஆர் வி மோசமானப்படம் என்று மொட்டையாய் சொன்னால் எப்படி. எப்படி அது மோசம் என்று சொல்லவேண்டும். ஸ்ரீ சேக்கிழார் கருத்துக்களை ஆதாரத்தோடு மறுப்பது நலம்.
  அடியேனுக்கு ஒரு சந்தேகம் மெய்யாகவே வாஸ்கோட காமாவை கிறித்தவ மதவெறியனாகக் காட்டியிருக்கிறார்களா. அப்படியெனில் நிச்சயம் பாராட்டிற்குரியவர்கள் இயக்குனரும் தயாரிப்பாளரும்.

  நீலகிரியில் கன்னேரி முக்கு என்ற படகர் கிராமத்திற்கு ஆராய்ச்சி நிமித்தம் சென்றபோது சலீவன் என்ற வெள்ளையனுக்கு நினைவாக அங்கே ஒரு பங்களா நிர்மானிக்கப்பட்டு(ஒரிஜினல் இடிந்து போய்விட்டது) மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்பட்டடைக் கண்டு அதிர்ந்தேன். அங்கு வருகையாளர் பதிவேட்டில் நீலகிரியின் சுற்றுசூழல் கெட பழங்குடி நிலமெல்லாம் காடெல்லாம் அன்னியர் வசமாக வகுத்தவனுக்கு ஒரு நினைவு மண்டபம் தேவையா? என்று எழுதினேன். நம்மவர்களின் அந்நிய மோகம் அத்தகையது. அத்தகு மோகத்திலிருந்து மீண்டு நாட்டுணர்வு கொண்டவர்களாக விளங்கும் இயக்குனர் தயாரிப்பாளர் வாழ்க.

 6. அப்படியே கோவாவில் உள்ள “வாஸ்கோ” என்ற தொடர்வண்டி நிலைய பெயரையும் மாற்ற வேண்டும்.

 7. உருமி படம் நான் பார்க்கவில்லை. படத்தைப் பார்க்காது எதுவும் சொல்வது நியாயமில்லை. ஆனால் என் வழ்க்கம் படத்தின் துணுக்குகள் சிலவற்றை அவ்வப்போது காண்பிப்பார்கள். அது எனக்கு ஒரு சோறு பதமாக இருந்து வந்துள்ளது தமிழ்ப் படங்கள், ஹிந்தி படங்களைப் பொறுத்தவரை.

  உருமி படத்தில் ஒரு துணுக்கு, சில நிமிடங்கள் நீண்ட துணுக்கு, இருவர் பேசிக்கொண்டிருக்கின்றனர். அவர்கள் பேசியது அனாவ்சிய நாடகத்தனம் கொண்டதாக இருந்தது. இரண்டாவது அதன் ஒளிப்பதிவும் சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவுப் புகழை, இதோ பார் நான் எவ்வளவு பெரியவர் இந்த விஷயத்தில் என்ற் show off கொண்டதாக இருந்தது என்று எனக்குப் பட்டது.

  இது எவ்வளவு தூரம் சரியென்று சேக்கிழான் தான் சொல்லவேண்டும். அவர் எழுத்துக்களுக்கு நான் மதிப்புக் கொடுப்பவன். என் நினைப்பில், “இதோ பார், என்னமா பண்ணியிருக்கேன் பார் “ என்று காட்டிக்கொள்ளாத, ஒளிப்பதிவு பற்றி நம்மை கவனிக்கச் சொல்லாத ஒளிப்பதிவு தான் சிறந்தது என்பது என் நினைப்பு.

  இப்போதைகு இது என் நினைப்பு. மூன்று நான்கு நிமிட் துணுக்கு பார்த்தபின். முழுப்படத்தையும் பார்த்த பின் ஒரு வேளை நான் என் கருத்தை மாற்றிக் கொள்ளலாம்.

  சேக்கிழான் எதுவும் இப்போது சொல்லத் தோன்றினால் சொல்லலாம்.

  கடைசியாக, அவர் சொல்லும் கதைச் சுருக்கம், படம் ரொம்பவும் சிக்கலான கதை கொண்டதாக இருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது. ,

 8. அன்பிற்குரிய வெ.சா. ஐயா அவர்களுக்கு,

  தங்கள் பின்னூட்டம் உற்சாகம் அளிக்கிறது. உருமி படத்தைப் பொறுத்த வரை மிகவும் தெளிவான் கதையோட்டம். கதைக்குள் கதை. அதை தெளிவாகவே எடுத்துள்ளனர். அதே சமயம், இயக்குனரே ஒளிப்பதிவாளராகவும் இருப்பதால், ஒளிப்பதிவுக்கு சற்று கூடுதல் முக்கியத்துவம் அளித்துள்ளனர். சில காட்சிகள் அதற்காகவே செதுக்கப்பட்டுள்ளன. (அதையே டிரைலர்களில் காட்டினார்கள்). அந்த அடிப்படையில் பார்த்தால், நீங்கள் கூறும் இலக்கணப்படி (ஒளிப்பதிவு பற்றி நம்மை கவனிக்கச் சொல்லாத ஒளிப்பதிவு தான் சிறந்தது) இந்தப் படத்தை சிறந்த ஒளிப்பதிவு செய்யப்பட்ட படமாகக் கருத முடியாது தான். அதே சமயம், பல்வேறு கோணங்களில், நீர்ப் பாய்ச்சலில், போர்க்களக் காட்சிகளில் காமெராவின் துல்லியம் வசீகரிக்கிறது.

  அதேபோல, பிரமாண்டமான செட்டிங் அமைத்து வியப்பூட்டாமல், கேரளக் கொட்டாரங்களிலேயே ஒளியை (லைட்டிங்) மட்டுமே பிரதானமாகக் கொண்டு படமாக்கப்பட்டிருக்கும் காட்சிகள் பாராட்டிற்குரியவையே. கலை இயக்கம் உறுத்தாததாகவே உள்ளது. நான் இந்தப் படத்தை மிகவும் பாராட்டுவதற்கான காரணத்தை கட்டுரையின் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டிருக்கிறேன். சரித்திரத்தைத் திரித்து ஆக்கிரமிப்பாளனை நாயகனாக வழிபடும் நம் அறிவுஜீவிகளின் கருத்துக்கு மாறாக இந்தப் படம் எடுக்கப்பட்டிருப்பதே முக்கியமானது.

  இதிலும் கூட மதச்சார்பின்மை குறித்த உபதேசம் உண்டு. (கேளு நாயனாரின் படையில் கிறிஸ்தவர்களும் இருப்பதாகக் காட்ட சிலுவை அணிந்த வீரர்களைக் காட்டுவது) துணிச்சலான முயற்சியில் இறங்கும் இயக்குனரின் சங்கடத்தை கருத்தில் கொண்டு பார்த்தால் அதனை பெரிதுபடுத்த வேண்டியிருக்காது. அதிலும் கேரளம் போன்ற பல சமய மக்கள் வாழும் நிலப்பகுதியில் எடுக்கப்படும் திரைப்படம், உண்மையை சொல்வதானாலும் நெளிவு சுழிவுகளுடன் தானே சொல்ல முடியும்?

  இந்தப் படத்தின் கதையமைப்புக்காக பேச்சு வழக்கில் அல்லாத இலக்கணத் தமிழ் வசனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதனால் ஒருவித நாடகத்தன்மை ஏற்பட்டிருக்கலாம். ஆனால், பிற மசாலா தமிழ்ப் படங்களுக்கு இந்தப் படம் பரவாயில்லை என்றே கூறுவேன். இந்தப்படத்தின் ஒரு முக்கியமான குறைபாடு, கதையை நம்பாமல் சதையை நம்பி சில காட்சிகளை எடுத்திருப்பது தான். பிரபல நடிகைகளை களம் இறக்கிவிட்டு, அவர்களை வெறுமனே நடிக்கச் செய்வதில் சந்தோஷ் சிவனுக்கு திருப்தி இல்லை போல.

  திரு. சிவஸ்ரீ.விபூதிபூஷண்,

  காமாவின் மதவெறியை இந்தப் படத்தில் தீவிரமாகக் காட்சிப்படுத்தவில்லை. இது குறையே. எனினும் ஹஜ் புனிதப் பயணிகள் கேரளா திரும்பும் வழியில் காமா படையால் கொல்லப்படுவது (இதற்கு சரித்திர ஆதாரம் உண்டு: https://en.wikipedia.org/wiki/Vasco_da_Gama), இளங்கன்றுகளை வெட்டுவது போன்ற சில காட்சிகள் உள்ளன. வாஸ்கோ ட காமாவின் சுயரூபத்தை தோலுரிப்பதில் இந்தப்படம் வெற்றி அடைந்திருக்கிறது. இதனைக் காணும் இளம் படைப்பாளிகள் அடுத்தகட்டத்தை நோக்கிச் செல்ல வாய்ப்பிருக்கிறது.

  திரு. ஆர்.பாலாஜி,

  நீங்கள் சொல்வதுபோல தெலுங்குப் படங்களில் இஸ்லாமிய ஆக்கிரமிப்புக்கு எதிரான காட்சிகள் இருக்கலாம். மணிரத்தினத்தின் ரோஜா, மும்பை படங்களிளிலும் கூட சில விஷயங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. ஆனால், ஒரு கடற்கொள்ளையனை சரித்திர புருஷனாக வழிபடும் நமது போதுமனநிலைக்கு எதிராக (காமா இந்தியா வந்ததன் 500 வது நிறைவு ஆண்டுவிழாவை நாம் 1998 ல் கொண்டாடி இருக்கிறோம்) சரித்திர உண்மைகளை அம்பலப்படுத்தும் படம் என்பதே உருமி-யின் சிறப்பு.

  திரு. ஆர்.வி,

  இந்தப்படம் உங்களுக்குப் பிடிக்காமல் இருக்கலாம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ருசி உண்டு. அதுகுறித்து நான் எதுவும் கூற முடியாது. நான் இந்தப்படத்தைப் புகழ்வதற்கான காரணங்களை கட்டுரையிலும் இந்த பின்னூட்டத்திலும் குறிப்பிட்டிருக்கிறேன்.

  மற்றபடி, கருத்து தெரிவித்த சகோதரர்கள் அனைவருக்கும் நன்றி.

  -சேக்கிழான்

 9. ஒவ்வொரு பாரத பிரஜைகளும் பார்க்கவேண்டிய படம், துணிச்சலாக தேசவிரோதியையும் தேசத்துரோகிகளையும் தேடி சாடியுள்ள பிரமாண்டமான படம்.

  க. வ. கார்த்திகேயன்.

 10. //வரலாற்றை தைரியமாக காட்சிப்படுத்தவும் வசனங்கள் எழுதவும் தமிழ் சூழலில்தான் ஆட்கள் இல்லை என்று முடிவுக்கு வர வேண்டியுள்ளது.//
  பாலாஜி அவர்கள் சொன்னதே உண்மை. உருமி படமும் ஒரு பாசியத்தை காட்டி இன்னொரு பாசியத்திற்க்கு வெள்ளை அடிக்கும் முயற்சி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *