தொடர்ச்சி..
பொதுவுடைமை மனித இயற்கைக்கு முரணானது:-
ஒரு சமூகம், தலைமுறை தலைமுறைகளாக உயிர்ப்புடன் வாழவும், வரலாற்றில் பெருமையாக பேசப்படவும் பணம் காரணமல்ல. ஆனால் அந்த கலாச்சாரத்தை உருவாக்கவும் உயிர்ப்புடன் வைத்துக்கொள்ளவும், மேம்படுத்தவும் பணம் மட்டுமே ஆதார ஸ்ருதி.
கலாச்சாரத்தின் பெருமைகளுக்கு காரணிகளாக தனிமனித வருமானம், தேசத்தின் பொருளாதார வல்லமை போன்றவை இருப்பதில்லை. பதிலாக மனித நேயம், கலை, இலக்கியம், ஆன்மீகம், அறிவியல் போன்ற பல்துறை சிறப்புகள்தான் காலத்திற்கு அப்பாற்பட்டு பேசப்படும். ஆனால் அதே நேரத்தில் பொருளாதார வல்லமை இருந்தால்தான் இந்த துறைகள் செழிக்க முடியும் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.
உதாரணமாக ஹெய்தி நாட்டின் கலாச்சாரத்தைப் பற்றி எவரேனும் பேசுகிறார்களா? காரணம் மிக மிக எளிமையானது. அந்நாடு ஏழைகளின் உறைவிடம்.
அடுத்து, மேலே கூறப்பட்ட பல்துறைகளில் சிறப்பிடம் பெறுவது என்பது அவற்றில் ஈடுபடும் மக்களுக்கு அமைந்துள்ள சூழ்நிலையை பொறுத்து இருக்கும். உதாரணமாக சிற்பி ஒருவர் தன் திறமையை வெளிபடுத்த சரியான சூழ்நிலை இருக்க வேண்டும். அதாவது அவருக்கு வேண்டிய பொருட்கள், தேவையான பணம், கலா ரசிகர்களின் அரவணைப்பு, கலையை வெளிப்படுத்தும் உரிமை போன்றவை கிடைத்தால்தான் அவரால் தன் வேலையை சரியான தரத்தில் செய்ய முடியும்.
அதே நேரத்தில், முக்கியமாக, பல சிற்பிகள் இருக்கும் ஒரு சமூகத்தில், எந்த சிற்பி சிறந்தவரோ அவருக்கானஅங்கீகாரமும் தெளிவாகவும், தீர்மானமாகவும் அரசாலும், சமூகத்தாலும் வழங்கப்பட்டே ஆக வேண்டும். சராசரிகளை அகற்றி திறமையை அங்கீகரிப்பதன் மூலமே நாம் அற்புத படைப்புகளை உருவாக்க முடியும். அதைவிடுத்து இன்றைய உலக சூழலைப் போல், இனம் போன்ற குப்பையான காரணங்களின் அடிப்படையில் திறமையை அங்கீகரிப்பதால் சில தலைமுறைகளிலேயே கலை போன்றவை தேக்க நிலையை அடைந்து விடும்.
திராவிட இயக்கங்களைச் சேர்ந்த கத்துக்குட்டி எழுத்தாளர்களை தமிழ்நாட்டில் ஆதரிக்கும் போக்கை இதற்கு நல்லஉதாரணமாக கொள்ளலாம். இவர்களில் பெரும்பான்மையானோர் எழுத்தாளர்களோ அல்லது வரலாற்று ஆசிரியர்களோஅல்ல. வெத்து வேட்டுகள்தான். ஆனால் நாங்களும் எழுத்தாளர்கள்தான், வரலாற்று ஆய்வாளர்கள்தான் என்று அவ்வப்பொழுது நகைச்சுவையாக பேசிக் கொண்டிருப்பர்.
முன்பு கூறிய ஹெய்தியில் 80 சதவிகிதம் மக்கள் இரண்டு வேளை உணவுக்கே “ததிங்கினத்தோம்” போடுகின்ற சூழலில் இது போன்ற கலைகளுக்கு ஆதரவு இருக்காது. என்னைப்பொறுத்தவரை பொருளாதார நிலையில் மேம்பட்டால் மட்டுமே ஒரு கலாச்சாரத்தின் பன்முகத்தன்மை வெளிப்பட வாய்ப்பு உருவாகும்.
இந்தியாவிற்கு 1700கள் வரை கூட உலக வர்த்தகத்தில் சுமார் 22 சதவிகிதம் பங்கு இருந்ததாக சில புத்தகங்களில் படித்திருக்கிறோம். அந்த பொருளாதார மேன்மையால்தான் நம் பாரத கலாச்சாரத்தின் கலை, இலக்கியம், ஆன்மீகம் போன்றவை செழித்தன. நாம் இன்றும் பழம் பெருமைகளை பேசி மகிழ்கிறோம்.
சரி, ஒரு சமூக அல்லது கலாச்சார விழுமியங்கள் பணத்தை அடிப்படையாக வைத்தே செழிக்கும்போது அந்த பணம் எங்கிருந்து உருவாகும் என்பது அடுத்த கேள்வி! முதலில் ஒரு விஷயத்தை விளங்கிக் கொள்ள வேண்டும். மனிதர்களின் தரத்தை மூன்று விதமாக பிரிக்கலாம். புத்திசாலி, நடுத்தர அறிவுள்ளவன், கீழ்நிலை அறிவுள்ளவன் அல்லது முட்டாள்.
எந்த சமூகத்திலும் புத்திசாலிகள் மிக குறைந்த அளவில்தான் இருப்பார்கள். நடுத்தர அறிவுள்ளவர்கள் பெரும்பான்மையாகவும் கீழ்நிலை அறிவுள்ளவர்கள் அதற்கு குறைந்த அளவிலும் இருப்பார்கள். இது இயற்கை நியதி. இதை மாற்றும் வல்லமை நமக்கு இல்லை. நான் கூறிய கலாச்சார விழுமியங்களை உருவாக்குபவர்கள் அல்லது மேம்படுத்துபவர்கள் புத்திசாலிகள்தான் என்பதை கூறவேண்டியதில்லை!
சோவியத் யூனியனில் இருந்த புத்திஜீவிகளில், சுதந்திரமாக சிந்திக்க முனைந்த அனைவரும், சிறையில் அடைக்கப்பட்டார்கள் அல்லது கொல்லப்பட்டார்கள். இந்தியாவில் நிலைமை அதை விட மோசமாகி இருக்கிறது. இங்கு நாம்சிந்தனையாளர்களை உதாசீனம் செய்கிறோம். கத்துகுட்டிகளுக்கும், சராசரிகளுக்கும் விருதுகள் வழங்கிகௌரவிக்கிறோம். சோவியத் யூனியனில் இருந்த நிலையே தேவலை. ஒரு சிந்தனையாளனுக்கு தேவை சமூகஅங்கீகாரமே! சிறைவாசமோ, மரணமோ கூட அவனுக்கு கால்தூசிதான்.
இந்தியாவில் நிலைமை முற்றிலும் மோசமாகி விடவுமில்லை. சமூக அங்கீகாரம் இல்லாவிடினும், சில சிந்தனையாளர்கள் போராடுகின்றனர். எதிர்காலத்தில் திறமைக்கு மட்டுமே அங்கீகாரம் அளிக்கப்படும் என்ற நம்பிக்கையில் அவர்கள் உள்ளார்கள் என்றே நான் நம்புகிறேன். காலம் கனியுமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதே நேரத்தில் பொருளாதார நிலையில் மேம்பட்டு இருப்பவர்களை நம்மால் எந்த ஒரு காரணத்தைக் கொண்டும் அடையாளப்படுத்த முடியாது. அதில் அனைத்து வகை மனிதர்களுமே, இன்று நேற்றல்ல, என்றுமே இருந்து வந்திருக்கிறார்கள்.
இக்கட்டுரையைப் பொறுத்தவரை மனிதர்களை இந்த 2 விதமாக பார்க்க முயலும். கலாச்சார விழுமியங்களை உருவாக்குபவர்கள் அல்லது மேம்படுத்துபவர்கள். அடுத்து பொருளாதார மேன்மையை முன்னெடுப்பவர்கள்.
கலாச்சார விழுமியங்களைப் பொறுத்தவரை, எந்த விதமான சமரசத்தையும் செய்து கொள்ளக் கூடாது. அதிபுத்திசாலிகளின்வெளி அது.
பொருளாதார வெளியில் என்றுமே பல சமரசங்களை செய்து கொண்டுதான் மனித சமூகம் வரலாற்றை கடந்துவந்துள்ளது. இன்றும் சமரசங்களை செய்து கொண்டிருக்கிறது. நாளையும் செய்யும்.
இக்கட்டுரையைப் பொறுத்தவரை, பொருளாதார விவகாரத்தைப் பற்றியே அதிகமாக எழுதப்படும். நாம் இன்றுசெய்து கொள்ளும் சமரசங்கள், இதுவரை எந்த கலாச்சாரங்களிலும் செய்து கொள்ளாதவை. எப்படி கணக்கு போட்டு பார்த்தாலும், பொதுவுடைமை நிலையை நாம் அடைய முடியாது. இது தெரிந்தும் ஏன் நாம் அந்த வழியில் செல்ல வேண்டும் என்பதையே இக்கட்டுரை முன்னிலைபடுத்தி வாதிடும்.
சரி, ஒரு சமூகத்தின் பணத்தேவைகள் இப்படி இருக்க, ஒரு தனி மனிதனின் பொருளாதார தேவைகளை அவனின் மனநிலைக்கு ஏற்ப புரிந்து கொள்ள முயற்சிப்போம்.
கற்பனையில் ஒரு குடும்பத்தை எடுத்து கொள்வோம்.
குடும்ப தலைவர் பொருள் ஈட்டுவது எதற்காக? தானும், தன் மனைவி மக்களும் வாழ்வாதாரங்களை பெற.
பொருளை சேர்த்து வைப்பது எதற்காக? தனக்கோ, தன் குடும்பத்தில் உள்ளவருக்கோ மருத்துவ தேவை அல்லது வரும் காலத்தில் உருவாகக்கூடிய பொருளாதார சிக்கல்களை தீர்த்துக் கொள்ள.
அடுத்து நாம் ஒரு முக்கிய சமூக தேவையை புரிந்து கொள்ள வேண்டும்.
“எவ்வளவு வேண்டுமானாலும் பொருளை சேர்த்து வைத்துக்கொள்ளவும், சேர்த்த பொருளை தன் விருப்பம்போல் செலவு செய்யவும், தன்னுடைய வாழ்நாளிற்கு பிறகு தன் குழந்தைகளுக்கு விட்டு செல்லவும் ஒருவருக்கு உரிமை வேண்டும். இந்த உத்திரவாதத்தை ஒரு சமூகம் தன் அங்கத்தினர்களுக்கு கொடுத்தால் மட்டுமே மேலும் மேலும் சம்பாதிக்க ஒருவருக்கு ஊக்கம் ஏற்படும்.”
இந்த தனி மனிதரைப் போன்ற பலர் சம்பாதிக்கும் போது அது அந்த சமூகத்தின், நாட்டின் பொருளாதார நிலையை உயர்த்தும். கலாச்சாரத்தின் பல கூறுகளும் அதில் செழிக்கும்.
மேலே கூறிய விஷயம் இந்த கட்டுரைக்கு வேர் போன்றது. என் தந்தை சம்பாதித்து வைத்துள்ள 5 இலட்சம் ரூபாயாக இருந்தாலும் சரி, திருபாய் அம்பானி சேர்த்து வைத்த 1 இலட்சம் கோடி ரூபாயாக இருந்தாலும் சரி, அவர்களின் காலத்திற்கு பிறகு தங்களின் குழந்தைகளுக்கே செல்ல வேண்டும் என்று விரும்புவார்கள் என்ற எளிமையான தேவையை நாம் எக்காலத்திலும் மறக்கலாகாது.
“ஏழைகளுக்காக ஏழைகளுக்காக” என்று கம்யூனிஸ்டுகள் நீலிக்கண்ணீர் வடிக்கும் போதெல்லாம் நாம் இந்த சமூகத்தேவையை மனதில் இருத்திக் கொள்ள வேண்டும்.
மனிதர்கள் பலவிதம், ஒவ்வொருவரும் ஒரு விதம்:-
கம்யூனிஸ்டுகள் எல்லா மனிதர்களுக்கும் எல்லாம் என்று ஒரு பிட்டை போடுவார்கள். கேட்பதற்கு மிகவும் சந்தோஷமாக இருக்கும் இந்த கோஷத்தை நடைமுறைபடுத்தினால் ஒன்று அல்லது இரு தலைமுறைகளில் அந்த சமூகம் அழிந்து விடும்.
அறிவு பூர்வமாக யோசிப்போம். (1) எல்லா பணக்காரர்களிடமிருந்தும் சொத்தை எடுத்து கொண்டு (கொள்ளை அடித்து) ஏழைகளுக்கு கொடுத்தால் எவ்வளவு காலத்திற்கு இருக்கும்?. அது தீர்ந்தவுடன் என்ன செய்வார்கள்? (2) இந்த கேவலம் நடந்துவிட்டால் பிறகு எந்த மனிதனாவது சொத்து சேர்த்து வைப்பானா! எப்படியும் அரசாங்கம் எடுத்து கொள்ளும் என்னும் போது தன் அறிவையும் திறமையையும் வெளிக்காட்டாமல் சோம்பேறியாகத்தான் திரிவான். [இங்கு உடனே ஒரு விமர்சனம் வரும். சிலர் சட்டத்திற்கு புறம்பாக சொத்து சேர்க்கிறார்களே! சட்டபூர்வமாக சொத்து சேர்ப்பவர்களை பற்றித்தான் இந்த விளக்கங்கள்]
சற்று முன் நாம் அவதானித்த சப்பாத்தி கணக்கை நினைவு படுத்திக் கொள்ளுங்கள். பொதுவுடைமையை அனுசரித்தநாடுகள், சப்பாத்தியின் அளவை பெரிது படுத்த முடியாது. தனி மனித பொருளாதார சுதந்திரம் இல்லாத நிலையில் வளங்கள் சேராது. ஆகவே, சப்பாத்தியின் அளவு கிட்டத்தட்ட ஒரே நிலையில் தங்கி விடும். எதேச்சதிகாரத்தினால்,தற்காலிகமாக சப்பாத்தியின் அளவு பெரிதானாலும், அந்த வளர்ச்சியை தக்க வைத்துக் கொள்ள முடியாது. அளவிலோ அல்லது தரத்திலோ அதிகமாக பங்களிப்பவர்கள் சோம்பி விடுவார்கள். “நாம் மட்டும் இவ்வளவு பங்களிக்கிறோம். சிலர்ஒன்றும் செய்யாமலேயே சப்பாத்தியை பெற்று விடுகிறார்களே என்று மனிதன் எண்ணவே செய்வான். இது இயற்கை”.சமூக உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமாக ஆக, சப்பாத்தியின் பங்குக்கான போட்டி எல்லை மீறிப் போகும் போது, அச்சமூகம் அழிந்தே போகும்.
2000 வருடங்களுக்கு முன் வாழ்ந்த நீரோ மன்னன், தன் ரோமாபுரியை பூகம்பத்திற்கு பின், மீள் கட்டமைக்க அதிக வரியைவசூலித்தான். அதுவும் போதாத நிலை வந்தபோது, தன் படைவீரர்களைக் கொண்டு, தன் நாட்டில் இருந்த பணக்காரர்களிடமிருந்து தானே கொள்ளை அடித்து பணத்தை கஜானாவில் சேர்த்தான். ஒரு நிலையில், எதிர்ப்பு அதிகமாகிஅவன் கொல்லப்பட்டான் என்பது சரித்திரம்.
20ம் நூற்றாண்டில் கூட இப்படிப்பட்ட ஒரு கோரம் நிகழ்ந்தது. சாதாரணமாக குரங்கே கொஞ்சம் ஏடாகூடமாகவேBehave செய்யும். அத்துடன் அது தேனையும் குடித்து விட்டால், பித்தமும் தலைக்கேறி விட்டால், உடல் காயமும்ஏற்பட்டு விட்டால் அந்த குரங்கின் சேட்டைகளுக்கு பஞ்சமே இருக்காது. வெறித்தனத்தில் அதற்கு என்ன செய்கிறோம்என்றே தெரியாது.
அதைப் போல, நம் அண்டை நாடான சீனாவில், மாவோ என்னும் கம்யூனிஸ்ட் கிறுக்கனுக்கு வெறித்தனமும் பிடித்தது. “The Great Leap Forward” என்பதைப் பற்றி நாம் அனைவரும் அறிவோம். அதில் கிட்டத்தட்ட ஒன்றரை கோடி மக்கள் இறந்து போனதாக, கம்யூனிஸ்டுகளால் நியமித்த குழுவே அரசுக்கு அறிவித்தது. இந்த அறிக்கை சில வருடங்களுக்கு முன் பொதுவில் கசிந்ததில், அந்த நிகழ்வில் பலரால் கவனிக்கப்படாத ஒரு கொடூரமும் நடந்தது தெரியவந்தது.
நிலங்களை கட்டாயமாக அரசாங்கம் கையகப்படுத்தும் முனைப்பில் மாவோவின் அல்லக்கைகள் இருக்கையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்த நில சொந்தக்காரர்கள் 7 இலட்சம் பேர் வரை கொடூரமாக கொல்லப்பட்டு அவர்களின் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. பல காலமாக தங்கள் குடும்ப சொத்தாக நிலங்களை வைத்திருந்தவர்களும், நிலங்களை தங்களின் உழைப்பின் மூலம் வாங்கியவர்களும் கொல்லப்பட்டதும் வரலாற்றில் நினைவு கூறத்தக்கது.
7 இலட்சம் நில சொந்தக்காரர்கள் கொல்லப்பட்டது, ஒன்றரை கோடி மக்கள் கொல்லப்பட்டதை விட எந்த வகையிலும் மறக்கத் தக்கது அல்ல.(Source-Triumph and Turmoil-Channel 4 Documentary)
அதே வெட்கம் கெட்ட சீன கம்யூனிஸ்ட் அரசு, 1979க்கு பின், சீனர்கள் நிலங்களை வாங்கி சொந்தமாக்கிக் கொள்ளவும்,தொழில்களை தொடங்கவும் அனுமதி அளித்தது. இன்று சீனா அடைந்துள்ள பிரம்மாண்டமான வளர்ச்சிக்கு பின்னால் இந்த ஒரே ஒரு விஷயமே முக்கியம் என்பது என் தீர்மானமான கருத்து. நாட்டிற்காக மட்டுமே உழைக்க வேண்டும் என்பதெல்லாம் மனித இயற்கைக்கு முரணானது. தனக்காகவும், தன் சந்ததிக்காகவும் உழைத்து, சேர்ப்பதில்தான் ஒரு மனிதனுக்கு ஊக்கம் ஏற்படும். அதனாலேயே, நாட்டின் பொருளாதாரம் முன்னேறும் என்பதே சரியான வழியே தவிர,பணக்காரர்களை கொன்று போடுவதால், நாடு முன்னேற வாய்ப்பே இல்லை. இன்றைய சீன முன்னேற்றத்தில்,பெரும் பணக்காரர்கள் உருவாகி உள்ளார்கள். அவர்களின் சாமர்த்தியமான வர்த்தகங்களினால்தான் சீன அரசிற்குவரி வருமானம் பெருகியுள்ளது. அதைக் கொண்டே, மக்கள் நல திட்டங்களை செயல்படுத்த முடிகிறது.
சரி, நாம் விஷயத்திற்கு வருவோம். ஒரு மனிதன் பொருளாதார நிலையில் மேம்பட ஐந்து காரணிகள் உண்டு.
(1)அறிவுக்கூர்மை (2)திறமை (Skill) (3)உழைப்பு (Hard Work) (4)ஆபத்தை எதிர்கொள்ளும் திறன் (Risk Taking Capability) (5)அதிர்ஷ்டம் (Luck)
மேற்கூறியவற்றில் முதல் 4 காரணிகளைப் பற்றி நான் எழுத வேண்டியது இல்லை. ஆனால் 5வது காரணியைப் பற்றி பேச பலர் முன் வருவதில்லை. ஏனென்றால் அது மனித முயற்சிக்கு முரணாக உள்ளது. மேலும் இந்த அதிர்ஷ்டம் இல்லாதவர்கள் முதல் 4 காரணிகளில் ஒன்றோ அல்லது நான்குமோ இருந்தாலும் கூட கீழ் நிலையில் உள்ளதை நாம் நேரடியாக காணலாம். இந்த அதிர்ஷ்டம் மற்ற காரணிகளை Supercede செய்கிறது என்று கூட நான் கூறுவேன்.
படித்தவர்கள் மட்டுமே இந்த 4 காரணிகளை, குணாதிசயங்களை கொண்டிருப்பார்கள் என்று கூறவே முடியாது.
உதாரணமாக, மேற்கு வங்கத்தில், சிங்கூரில், டாடா குழுமம், கார் தொழிற்சாலையை உருவாக்கி வந்தது. அதைச்சுற்றி, பல சிறிய தொழிற்சாலைகளும் கட்டப்பட்டு வந்தன. இந்த முன்னேற்றத்தை பயன்படுத்திக் கொள்ள முனைந்த22 பேர், வங்கிக் கடனின் மூலம் 3 சக்கர வாகங்களை (Auto) வாங்கினார்கள். சிங்கூரில் டாடா தொழிற்சாலைமூடப்பட்டவுடன் இவர்களின் நிலை என்ன ஆனது என்று தெரியவில்லை. எப்படி இருப்பினும், என்னைப் பொறுத்தவரை இவர்கள் ஆபத்தை எதிர்கொள்ளும் திறன் படைத்தவர்கள். வியாபாரத்தில் இலாபம் கிட்டுவதைப் போலவே நஷ்டத்தையும் அடைய வேண்டி வரும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இலாபம் அடைந்தால், தன் உழைப்பு மட்டுமே காரணம் என்றும், நஷ்டம் ஏற்படுகையில், அரசு மானியம் அளிக்க வேண்டும் என்றும் கூறுவது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல.
அடுத்து, அதிர்ஷ்டம் என்னும் காரணி. அறிவியலை நம்புகையில் அதிர்ஷ்டத்தை எவ்வாறு நியாயபடுத்த முடியும்? நான் என் அனுபவத்திலேயே அதிர்ஷ்டத்தின் விளைவுகளை நேருக்கு நேராக கண்டிருக்கிறேன்.
நான் கம்ப்யூட்டர் துறையில் 12 வருடங்கள் வேலை செய்தவன். 1990களிலேயே கிட்டத்தட்ட 25 ஆயிரம் ரூபாய் மாத சம்பளமாக பெற்றவன். என்னை விட நன்றாக வேலை செய்யும் திறமை பெற்றவர்கள் வெறும் 6000 ரூபாய் சம்பளம் பெற்றதையும், என்னை விட பல மடங்கு திறமை அற்றவர்கள் ஆஸ்திரேலியாவுக்கும், கனடாவுக்கும் சென்று 80000, 1 இலட்சம் என்று சம்பாதித்ததையும் நான் கண்டிருக்கிறேன். அதிர்ஷ்டம் என்ற ஒரு காரணியை புகுத்தாமல் இந்த விநோதத்தை நம்மால் விளக்க முடியாது.
இதைக் கூட வேறு சமாதானங்களின் மூலம் நியாயபடுத்த முடியலாம். ஆனால் திருபாய் அம்பானிக்கு பிறந்தவர்கள் என்ற தகுதியினால் மட்டுமே முகேஷ் மற்றும் அனில் அம்பானிகளுக்கு தலா 50000 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. சிலருக்கு கோடி ரூபாய் லாட்டரியில் பணம் விழுகிறது. இதை அதிர்ஷ்டம் என்ற காரணி இல்லாமல் விளக்க முடியாது.
பல நேரங்களில் நம்மால் இந்த இயக்கங்களை விளக்க முடியா விட்டாலும் இவற்றை “இயற்கை நியதி” என்று ஏற்று கொள்வது மட்டுமே நாம் செய்ய கூடியது.
இந்த ஓட்டத்தை மாற்றி காட்டுகிறோம் என்று வீராப்புடன் பேசும் பொதுவுடைமைவாதிகள் அறிவுக்கும் திறமைக்கும் வேட்டு வைப்பதால் ஒரு சில தலைமுறைகளிலேயே சமூகம் சோம்பி விடுகிறது.
மேலும் எந்த பொருளாதார முறை இயற்கை நியதியை பெரிய அளவில் ஒட்டியதோ, எதன் மூலமாக கலாச்சார விழுமியங்களை உருவாக்கவும் மேம்படுத்தவும் முடிகிறதோ, அதை அனுசரிப்பதுதான் புத்திசாலித்தனமாகும்.
நான் ஏற்கெனவே எழுதியதைப் போல், பொருளாதார விவகாரங்களில் நாம் சமரசங்களை செய்து கொண்டுதான் ஆகவேண்டும். பணக்காரர்களுக்கு பிறந்த வாரிசுகள், எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும், அந்த சொத்து அவர்களுக்கே கிடைக்க வேண்டும் என்பது ஒரு முக்கிய சமரசம்.
மாறாக எல்லா ஏழைகளையும் நடுத்தர வர்க்கத்தினர்களாக மாற்றுகிறோம் என்னும் பெயரில் எல்லா பணக்காரர்களையும் ஏழைகளாக்குவது, அறிவு மற்றும் திறமைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பது, பெரிய அளவில் சோம்பேறிகளை உருவாக்குவது போன்றவற்றைத்தான் பொதுவுடைமை செய்து வந்திருக்கிறது.
அந்த காலத்திலே, அந்த காலத்திலே என்று நாம் பேசி மகிழும் பழங்காலத்தில் பணக்காரர்களும், ஏழைகளும் வாழத்தான் செய்தார்கள். இந்தியாவிலும் இதே நிலைதான். மற்ற சமூகங்களிலும் இதே நிலைதான். நிலப்பிரபுக்களான மிராசுதாரர்கள் இறந்தவுடன் அந்நிலங்களை அரசன் பறித்துக் கொள்ளவில்லை. அவரின் மகனுக்குத்தான் சென்றது. தலைமுறை தலைமுறையாக அந்த குடும்பத்தினர் பண்ணயம் செய்துதான் வந்தார்கள். இந்த முடியாட்சி முறையில் இருந்த ஒரு பிரச்சினையும் இதுதான். சொத்துக்கள் இருந்த இந்த குடும்பங்கள் மட்டுமே நிலச்சுவான்தாரர்களாகவும், அதிகாரம் கொண்ட பதவியிலும் இருந்தார்கள். வெளியிலிருந்து அந்த இடத்தைப் பிடிப்பது மிகவும் கடினமாக இருந்தது.
இந்த முடியாட்சி முறைகளை மாற்றிய ஜனநாயகம் முதல் கட்டத்தில் பல பொதுவுடைமை கூறுகளை கொண்டுதான் இருந்தது. பொதுவுடைமை கூறுகளை அதீதமாக கொண்டவை ஒரு பக்கத்திலும் தனி மனித பொருளாதார உரிமைகளை மதித்தது வேறு புறத்திலும் இயங்கின. 1989க்கு பிறகு பொதுவுடைமை கிட்டத்தட்ட முற்றிலும் செயல் இழந்துவிட்டது.
மேற்கூறியபடி, புதியதாக பணக்காரர்களாக மாற முடிவதும், தற்பொழுதைய சமூகத்தில் ஏற்பட்டுள்ளது. பணக்காரர்களுக்குபிறப்பதால் மட்டுமே பணக்காரர்களாக இருக்க முடியும் என்ற பழைய கால முறைகள் தற்பொழுது இல்லை.அதற்காக, பணக்காரர்கள் சேர்த்து வைத்த பணம் அவர்களின் குழந்தைகளுக்கு செல்வது தடுக்கப்படுவதும் இல்லை.அப்படித் தடுக்கப்பட்டால், அந்த மனிதன் தன் திறமையை வெளிப்படுத்தி வளங்களை சேர்க்க மாட்டான் என்பதைமீண்டும் நினைவு படுத்துகிறேன்.
சப்பாத்தி கணக்கின் படி, புதிய பணக்காரர்களின் மூலம், சப்பாத்தியின் அளவு பெரிதாகிக் கொண்டே போகிறது. தங்களின்சாமர்த்தியத்தின் மூலம் எத்தனையோ சாதாரண மனிதர்கள் பெரும் பணக்காரர்களாக இன்று உலகம் முழுவதும்உருவாகி இருக்கிறார்கள். இதற்கான அடித்தளத்தை உருவாக்கியதே, சந்தை பொருளாதாரம்தான்.
பொது உடைமை கூறுகளை எந்த அளவிற்கு சமூகத்தில் கொள்வது என்பதில் மட்டுமே இன்று வாத பிரதிவாதங்கள் உள்ளன.
மீண்டும் அதே பிரச்சினைக்கு வருவோம். எந்த முறை சமூகத்திற்கு ஏற்றது என்ற வாத பிரதிவாதங்கள் இருக்கிறது என்றாலும், ஒரு கலப்படமான முறையே பல தலைமுறைகளுக்கு தாக்குப் பிடிக்கக் கூடியது என்பதே நிதர்சனமான உண்மை.
சரி, ஏழைகளுக்கு விடிவே கிடையாதா? இது மிகவும் சிக்கலான விஷயம். இருந்தாலும் சில விளக்கங்களை பெற முயற்சிக்கலாம். முதலில் ஏழை என்றால் யார்? ஏழை என்பது ஒரு “Relative Term”. பணக்காரர்களுடன் ஒப்பிட்டு அழைக்கப்படுபவர்கள்.
ஆனால், பச்சையாக கூறுவதென்றால், ஏழைகள் ஒவ்வொரு சமூகத்திலும், எந்த காலத்திலும் இருக்கவே செய்வார்கள்.அவர்களில் பெரும்பான்மையானோர்க்கு “சமவாய்ப்பு” அளிப்பதில் நாம் வெற்றி அடைந்தாலே போதும். நாம் நாகரீகம்அடைந்து விட்டோம் என்று மார்தட்டிக்கொள்ளலாம். நன்றாக கவனியுங்கள். நான் “சமவாய்ப்பு” என்றுதான் கூறினேனேதவிர “சமவசதிகள்” என்று கூறவே இல்லை. சமவாய்ப்பு அளித்தாலும், அதை உபயோகப்படுத்திக் கொள்ளாதவர்கள்இருக்கவே செய்வார்கள். அவர்களுக்கு சப்பாத்தின் சிறிய பங்குதான் கிடைக்கும். இதுவும் இயற்கை நியதிதான்.
ஆனால், 100 சதவிகித மக்களுக்கும் “சமவாய்ப்பு” ஏற்படவும் வாய்ப்பே இல்லை. இதையும் ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும். இது பொருளாதார விவகாரத்தில் நாம் செய்து கொள்ள வேண்டிய முக்கியமான அடுத்த சமரசம். ஆனாலும்பழங்காலத்தைப் போலல்லாமல், “சமவாய்ப்பு” என்பது சமூகத்தின் பெரும்பாலானோரை சென்று அடைந்துள்ளது.மேலும் இதை விரிவு படுத்தும் சக்தியும் நமக்கு உள்ளது.
இதை “யோக வசிஷ்டத்தில்” இராமனே கேள்வியாக வசிஷ்ட மகரிஷியிடம் கூறுகிறான்.
முதல் பிரகரணத்தில், 3வது அத்தியாயத்தில் வரும் ஸ்லோகம் இது. இராமன் வசிஷ்டரிடம் கேட்பது.
“உலகில் மக்களால் கண்டிக்கப்படாத செல்வந்தரும், தற்பெருமை கூறாத வீரனும், எல்லோருக்கும் சரிசமமான நியாயம் வழங்கும் தலைவனும் கிடையாது”
பணக்காரர்களை திட்டுவது எந்த காலத்திலும் இருந்திருக்கிறது. என்னைப் பொருத்தவரை பணக்காரர்களாலேயே,ஒரு சமூகம் அல்லது நாடு பொருளாதார நிலையில் முன்னேற்றம் அடைய முடியும். அதனாலேயே பணத்தால் அளக்கமுடியாத கலை, இலக்கியம் போன்றவையும் செழிக்க முடியும்.
அதைப் போலவே “சரிசமமான நியாயம்” எந்த காலத்திலும் அளிக்கப்பட வில்லை என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.”நியாயம்” என்பதை நாம் வெறும் நீதி என்ற அர்த்தத்தில் மட்டுமல்லாமல் சமவாய்ப்பு என்றும் புரிந்து கொள்ளமுடியும்.
கொஞ்சம் கணக்கு-கொஞ்சம் அரசியல்:-
வருடம்-1971. இந்திரா காந்தி தன் கட்சியிலேயே தனக்கிருந்த எதிர்ப்பை கட்டுப்படுத்தவும், வீராவேச பல்புகளை வாங்க என்றுமே தயாராக இருக்கும் ஏழைகளை வசப்படுத்தவும் ஒரு கோஷத்தை கண்டெடுத்தார். இந்திய அரசியலையே புரட்டிப்போட்ட கோஷம் என்று அதை கூறலாம்.
गरीबी हठाओ “Abolish Poverty” “ஏழ்மையை ஒழி” என்பதுதான் அது.
[நகைச்சுவையாக இந்த கோஷத்தை ஆராய்ந்தால், இது விளிச்சொல்லால் ஆனது. யாரையோ விளித்து ஏழ்மையை ஒழி என்று கூறப்பட்டதே தவிர தான் ஏழ்மையை ஒழிக்கப்போகிறேன் என்று வாக்குறுதி எதையும் இந்திரா கொடுக்க வில்லை.]
இந்திரா காந்தி ஏழ்மையை ஒழிக்கிறேன் பேர்வழி என்று பல நடவடிக்கைகளை மேற்கொண்டார். அவற்றில்முக்கியமானவை. நாட்டின் பொருளாதாரத்தை நேரடியாக கட்டுபடுத்தும் அனைத்து வங்கிகளையும் அரசுடைமையாகசெய்து விட்டார். இதனால் விளைந்த தீமைகளை இன்றும் நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். இந்தநடவடிக்கையால், ஏற்கெனவே நடுத்தர நிலையில் இருந்தவர்கள், அரசு உத்திரவாதத்துடன் நடுத்தர நிலையிலேயேதொடர முடிகிறது.
அடுத்து, மொத்த வணிகத்தை கட்டுபடுத்த (WholeSale Trade) அவற்றை முற்றிலுமாக அரசுடைமையாக மாற்றிவிட்டார். இந்தியாவையே நடுநடுங்க வைத்த முடிவு அது. பத்தே நாட்கள்தான் தாக்குபிடிக்க முடிந்தது. 10 நாட்கள்கழித்து தன் முடிவை மாற்றிக் கொண்டு விட்டார். இந்தியா தப்பித்தது. இந்த முறை மட்டும் நீண்ட காலம்நீடித்திருந்தால், கத்திரிக்காய் விலையிலிருந்து, தொலைக்காட்சி பெட்டியின் விலை வரை அனைத்தும் மத்தியஅரசே கட்டுபடுத்தும் கொடூரமான நிலையில் இந்தியா இருந்திருக்கும்.
வருடம்-2006. வறுமை ஒழிந்த பாடில்லை. ஆனால் கோஷத்திற்கு மவுசு இருந்தது. மீண்டும் அதே கோஷத்தை UPA அரசாங்கம் கைக்கொண்டது. “மாமியார் உடைத்தால் மண்சட்டி, மருமகள் உடைத்தால் பொன்சட்டி” என்பது முதுமொழி. பழைய மொழி. மாமியார் ஏழைகளுக்கு கொடுத்த மண்சட்டி பல்புகள் அவ்வேழைகளின் அடுத்த தலைமுறையினருக்குவெள்ளைக்கார மருமகளால் கொடுக்கப்பட்டன.
சொல்ல முடியாது; வெள்ளைக்கார மருமகளுக்குப் பிறகு, அவரின் மகன், அதற்குப் பிறகும் அவர்களின் வாரிசுகள்இதே பல்புகளை கொடுக்கலாம். உயிரோடிருப்பவர்கள் அந்த விளையாட்டையும் பார்த்து ரசிக்கலாம்.
(எவ்வளவோ பார்த்துட்டோம்;இதே பார்க்க மாட்டோமா!)
வெளிப்படையாக, பட்டவர்த்தனமாக கூறுவதென்றால், எந்த சமூகத்திலும் ஏழைகள் இருக்கவே செய்வார்கள். “எல்லார்க்கும் எல்லாம்” என்பதை ஏற்காத போது, ஏழைகள் இருப்பதில் அதிசயமே இல்லை.
(தொடரும்)
சக்கரைவள்ளி கிழங்காக இல்லாமல் பாகற்காய போன்ற கட்டுரையை தந்து இருக்கிறீர்கள். கசப்பு தான் ஆனாலும் இது தான் உண்மை.
அதே சமயத்தில் மக்கள் அனைவருக்கு கிடைக்க வேண்டிய அடிப்படை வசதி கிடைக்க பெற வேண்டும்.
பன்னாட்டு பரதேசிகளுக்கு வரி விலக்கும், நமது மக்கள் செய்யும் தொழிலுக்கு வரி சுமையும் செய்யும் அரசியல் வியாதிகள் விரட்டி அடிக்கப்பட வேண்டும்.
எல்லோர்க்கும் எல்லாம் என்ற வார்த்தையை விட எல்லோர்க்கும் சமமான வாய்ப்பு என்ற வார்த்தை சரியாக இருக்கும்.
அருமையானத் தொடர். அடுத்த பதிவை ஆவலாக எதிர்பார்க்கிறேன். அரவிந்த நீலகண்டனின் பஞ்சம், படுகொலை, பேரழிவு – கம்யூனிசம் புத்தகத்தின் வெற்றியைப் போல் இந்தத் தொடரும் வெற்றி பெறும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.
ரஷ்யா, சீனா போன்ற நாடுகளில் உள்ள கம்யூனிஸ்ட் அரசாங்கங்களின் கூத்துகள் அடிக்கடி வெளிவந்தவண்ணமே உள்ளன. ஆனால் கியூபா, வடகொரியாவில் நடக்கும் அக்கிரமங்கள் பற்றியும் எழுதினால் நன்றாக இருக்கும் என்பது என் எண்ணம்.
திரு பாலாஜி அவர்களுக்கு,
உங்களின் ஏழ்மை பற்றிய கருத்தை மறுபரிசீலனை செய்ய கேட்டுகொள்கிறேன். இங்கு, எது ஏழ்மையை தீர்மானிக்கின்ற காரணி என்பது உணர வேண்டியது அவசியம், இது நமது தேசத்திற்கும் மற்ற தேசத்திற்கும், ஏன் சரியாக இயங்காத ஒரு தேசத்தின் மாநிலத்திற்கு மாநிலம் கூட மாறுபடும். எனவே ஏழ்மையை இருந்தே ஆகவேண்டிய காரணி என்பதை ஏற்கமுடியாது இந்த நாடு பஞ்சம் இல்லாது செழித்திருந்தது என்பது நம் உணர்வோமானால் அது எப்படி வசப்பட்டது என்ற கேள்விவரும்.
ஒரு மந்திரம் எனக்கு தோன்றுகிறது, அது
ஒருவனின் கல்வியோ, செய்யும் தொழிலோ அவன் உண்ணும் உணவின், உடுத்தும் உடையின், உறங்கும் இடத்தின் தரத்தை தீர்மானிக்க கூடாது. (இங்கு தரம் என்பது எல்லோரும் முந்திரி அல்வா சாப்பிட்டு, பட்டுஉடை உடுத்தி, மாளிகையில் உறங்கும் தரமல்ல) இந்த தேசத்தில் அநாதி காலமாக ஒருவன் நான் மேற்கூறிய அடிப்படை தேவைகளை பெற்று தன் சுய மற்றும் சமுதாய கடமைகளை செய்து வந்துள்ளான்……
அது இப்படிதான் நடந்தது,
1 ) அன்று உணவு அச்சகத்தில் உற்பத்தியாகவும் இல்லை அதை கணினியில் சமைத்து சேமித்தும் வைக்கவில்லை இதை இன்னும் தெளிவாக விளக்கவேண்டுமென்றால் ஒரு கட்டுரையே எழுத வேண்டும்.
2 ) அன்று அறிவியல் மனிதனின் புறத்தேவைகளை மட்டும் செய்துகொடுக்கும் சேவகனாக அல்லாமல் மேலும் அது விலை போகும் மூளையாக இல்லாமல். கலையாகும், கர்மமாகவும் இருந்தது. இன்று நம் அறிவியலை உணவை வாங்கும் காரணியாக பயன் படுத்துகிறோம் அதனால் உணவையும் உழவனையும் நவீன அறிவியல் பூதம் விழுங்கிவருகிறது.
எனவே அடிப்படை தேவையை அடையாத ஒரு நிகழ்வைத்தான் ஏழ்மை என்று எடுத்துகொள்ளவேண்டும். இது எந்த ரூபத்திலும் அச்சடித்த உணவை அடிப்படையாக வைத்தல்ல எனவே ———-பச்சையாக கூறுவதென்றால், ஏழைகள் ஒவ்வொரு சமூகத்திலும், எந்த காலத்திலும் இருக்கவே செய்வார்கள்———– இதை ஸ்ரீ ராமனின் வரலாற்றை எடுத்தியம்பும் உங்களிடமிருந்து எதிர்பார்கவில்லை.
நீங்கள் கூறியுள்ளபடி ஏழ்மை இருந்தே ஆகும் என்றல் இருந்துவிட்டு போகட்டும் ஆனால் அது நான்கூறிய அடிப்படை தேவைகளை ஒரு தனிமனிதனுக்கு தடுக்கும் என்றால் நீங்கள் கூற விரும்பும் பொருளாதரத்தை இன்றே தடுத்தாகவேண்டும். மேலும் நாமும் இன்று நரகமாக மாறியுள்ள நமது இன்றைய பொருளாதரத்தை குறை சொல்லும் தகுதியை இழந்து விடுகிறோம்.
வணக்கத்துடன்,
க வ கார்த்திகேயன்.
karl marx is a legent so don’t blame him. communism is most suitable to the world do you understand that?
mao kirukkana? tell me? unga website waste!!!!!
அன்புள்ள மாரியப்பன்,
பல கோடி பொதுமக்களை கொன்ற கொலைகார இயக்கம் ரஷிய மற்றும் சீன கம்யூனிஸ்டு கட்சிகள்.. மாவோ கிறுக்கர் அல்ல. பல கோடி பொதுமக்கள் கொலைசெய்யப்பட்ட , படுகொலைகளை நிகழ்த்திய கொலைகாரப் பெருமகனார்.
கம்யூனிசம் உலகிற்கு தேவையானது என்று உளரும் உங்களைப்பார்த்து என்ன சொல்வது என்று தெரியவில்லை. கம்யூனிசம் மனித இனத்துக்கு எதிரானது. கம்யூனிசத்தினை பற்றி , மிக அழகாகவும், விரிவாகவும் , இந்த வலைத்தளத்தில் பல அற்புதமான கட்டுரைகள் வந்துள்ளன. அவற்றை படித்துவிட்டு , ஏதாவது தக்க பதில் எழுதமுடியுமா என்று பாருங்கள். தமிழ் இந்து தமிழர்களுக்கு என்று நடத்தப்படும் தளம். இங்கு , தமிழில் எழுதவேண்டுகிறேன். தமிழில் எழுத தெரியாது என்றால், உங்களைப்போன்றோர் , ஆங்கிலத்தில் நடத்தப்படும் பிற தளங்களில் உங்கள் கருத்தை எழுதி மகிழலாம்.
கம்யுனிஸ்டுகள் நம் நாட்டில் ஜனநாயகம் ,தொழிலாளர் உரிமை என்றெல்லாம் வாய் கிழியப் பேசுகின்றனர்.
அனால் சீனாவில் நடப்பது என்ன?
தேர்தல் கிடையாது. கம்யுனிஸ்டு கட்சி மட்டுமே ஒரே கட்சி, வேறு கட்சிக்கு அனுமதி இல்லை. பேர் தான் கம்யுனிஸ்டு கட்சியே தவிர அதிலும் சிலரே முழுதுமாக அதிகாரம் செலுத்துகின்றனர். ஊழல்கள் வெளியில் தெரியாமல் பார்த்துக் கொள்ளப் படுகின்ன்றது.
அடுத்து ஆட்சிக்கு வருவார் என்று எதிர் பார்க்கும் ஒருவர் பில்லியன் கணக்கில் டாலர்களை வெளி நாட்டு ரகசிய வங்கிக் கணக்குகளில் வைத்திருப்பதாக கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.ஆனால் அதை வெளியிட ஊடகங்களுக்கு அனுமதி இல்லை.
தங்கள் சாயம் வெளுத்து விடும் என்று , பேஸ் புக், ட்விட்டர் போன்ற வலைத் தளங்களுக்கு தடை விதிக்கப் படுகின்றது.
அதிகார பூர்வ வெளி நாட்டு குழுக்கள் வந்தால் அவர்களுக்கு பள பள என்று மின்னும் கட்டிடங்களும் , மாளிகைகளும் நிறைந்த செல்வச் செழிப்புள்ள இடங்கள் மட்டுமே காண்பிக்கப் படுகிறது.ஏழ்மை தாண்டவமாடும் இடங்களுக்குச் செல்லவோ புகைப் படம் எடுக்கவோ அவர்களுக்கு அனுமதி இல்லை. பெருவாரியான மக்கள் இன்னும் ஏழ்மையில் தான் உள்ளனர்.
மக்களுக்கு ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்குச் சென்று வாழக் கூட அரசின் அனுமதி பெற வேண்டும்
கம்யூனிசத்தை குப்பைத் தொட்டியில் போட்டு விட்டு சந்தைப் பொருளாதரத்தை புகுத்தி விட்டனர்.
இவ்வளவு ஊழல்கள் நிறைந்த சர்வாதிகாரப் போக்கு கொண்ட ஒரு கொள்கையை நம் நாட்டு கம்யுனிஸ்டுகள் சொல்லிக் கொண்டு மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர்.
தங்கள் கட்சி மாநாடுகளுக்கு சீனாவிலிருந்து பிரதிநிதிகளை அழைக்கின்றனர்
வெட்கக்கேடு!.
உண்மையில் கம்யூனிசம் என்பது சில பேர் ஆட்சியைப் பிடித்துக் கொண்டு ஊழல்களும், அடாவடிகளும் செய்து கொண்டு கோடானு கோடி மக்களை அடக்கி ஆள்வதுதான் !
தங்கள் கையில் ஆட்சி வரும் வரை ஜனநாயகம், உரிமை, தொழிலாளர் ஒற்றுமை என்றெல்லாம் பாட்டுப் பாடிக் கொண்டிருப்பார்கள். அதிகாரம் வந்ததும் அவ்வளவுதான் . பிறகு அவர்கள் வைத்தது தான் சட்டம்.
கேரளாவில் கம்யூனிஸ்டு கட்சிகள் கிட்டத்தட்ட நாலாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து வைத்திருப்பதாக நான் படித்தேன்
டி வீ சேனல்கள்கள், கல்வி ஸ்தாபனங்கள் , செய்தித்தாள்கள், வார ,மாதப் பத்திரிகைகள், ,நிலங்கள் , கட்டிடங்கள் என்று ஏராளமான் சொத்துக்களைக் குவித்துள்ளனர்
ஏழை மக்களின் பாதுகாவலர்கள் என்று சொல்லிக் கொள்ளும் இவர்கள் மேற்கு வங்காளம் நந்திக்க்ராமத்தில் ஏழை மக்களின் நிலங்களை பிடுங்கியதும், பின்பு அதை எதிர்த்த ஏழைகளின் மீது நடத்திய காட்டுமிராண்டித் தாக்குதல்களும் கம்யூனிஸ்டு குண்டர்கள் பெண்களை மான பங்கப் படுத்தியதும் நாடே அறியும்.
.
இரா.ஸ்ரீதரன்
பல கோடிக்கணக்கில் செலவு செய்து நீர்பாசன உரிமை பெற்ற நிலங்கள் குடியிருப்பு நிலங்களாக மாறும் போது பொருளாதாரம் என்னவாகும் என நீண்ட ஒரு கட்டுரை எழுதலாமே
உலகில் மனிதர்கள் வாழ்க்கையை ஆறு அம்சங்களில் அடக்கிவிடலாம் அதை மீறி எவனும் இல்லை
1 நாடு
2 மொழி
3 கலாச்சாரம் (அதாவது மதம் காட்டிய வழி )
4 பணம்
5 அறிவியல்
6 அரசியல்
காட்டுவாசியாக பிறந்தாலும் ஏதேனும் ஒரு நாட்டின் எல்லைக்குள்தான் பிறக்கவேண்டும், ஏதேனும் ஒரு மொழியில் தான் தொடர்புகொள்ளவேண்டும், ஏதேனும் ஒரு கலாச்சாரத்தை ஏற்று கொண்டு வாழவேண்டும் இவையெல்லாம் பிறப்பால் வருவது. இவை மட்டும் இருந்தால் வாழமுடியுமா நாகரீகமாக வாழ பணம் அவசியம் வேண்டும் அறிவியல் இன்றி சுகமாக ஒரு நாளும் கழியாது. அரசியல் ஒவ்வொரு நாட்டின் குடிமகனின் வாழ்விலும் தவறாது தலையிட்டு அவனை அடக்கி ஆள்கிறது.
இதில் இந்த ஆறு அம்சங்களில் பணமே பிரதானம் அதாவது முதலில் நாடு — உலகில் பணக்கார நாடு — அந்த நாட்டின் பணம் எல்லா நாடுகளிலும் செல்லுபடியாகவேண்டும் அந்த நாட்டின் மொழியே உலக மொழி அந்த நாட்டின் கலாச்சாரமே உயர்ந்த கலாசாரம் (அதாவது மதம்) ,இருதயத்தின் ஒரு ஜீன் தன்மையை மாற்றம் செய்வதால் இருதய நோயே வராமல் செய்யும் அளவிற்கு அறிவு இருந்தாலும் அதை ஒரு பணம் பண்ணும் கம்பெனி கையில்தான் செய்யமுடியும். அரசியல் என்பது பணம் பண்ணும் பன்னாட்டு நிறுவனங்களின் சொல்படிதான் செய்யமுடியும் எனவே ஆறிலும் பிரதானம் பணம் என்றால் அதுதான் முதலாளித்துவம்
இந்த ஆறையும் ஒரு சிறு அரசியல் குழு தீர்மானித்தால் அதுவே கம்யூனிசம் அதுவே சிறு மதக்குழுவனால் அதுவே இஸ்லாம் அரசியல் இதுவே இன்றைய யதார்த்தம்
ஆனால் விதிவிலக்காக நம் பாரத தேசத்தில் மட்டும் இந்த ஆறிலும் அடிப்படையான ஒரு Validation அதுவே தர்மம். நாடு — தர்மமாக இருக்கவேண்டும் மொழி — மந்திரமாக இருக்கவேண்டும் அதாவது பயன் விளையும் சொற்கள் தர்மமான வாழ்வே கலாசாரம், பணம் பண்ணுவது தர்மத்தின் அடிப்படையில் மிஞ்சியது தானமாக்கப்படவேண்டும், அறிவு — அரசியல் –தர்மத்தை காப்பதே கடமை. அதர்மத்தின் பக்கம் யார் இருந்தாலும் அவர்களை எதிர்த்து போரிட வேண்டும். பூர்வ பக்ஷம் என்ற முறையில் துடிப்பான கருத்து விவாதித்தினுடே ஞானத்தை நோக்கிய பயணம் மரபு விடாமல் இன்றும் தொடர்கிறது.
பாரதத்தின் பொருள் நீங்கியவுடன் (அதாவது கொள்ளை போனவுடன் ) அருள் சாம்பல் (அதாவது இடதுசாரி மயக்கம் ) பூத்து மறைந்துள்ளது. கம்யுனிச மயக்கம் தெளிந்தால் உழைப்பின் அருமையும் தர்மத்தின் சுகமும் (மனதிற்கு) தெரியவரும் இன்று இந்தியாவின் இரு மிகப்பெரிய சாபக்கேடு வெள்ளையர் காலத்து நிர்வாகமும்,கம்யூனிச கூச்சலும் தான் இவை முற்றிலுமாக நீக்கப்பட்டு (அறிவுரீதியான விவாதித்தினுடே) ஞான பெருமையுடன் நாகரீகமான, பொறுப்புடன் கூடிய நிர்வாகம் ஏற்படவேண்டும். இன்று பரதத்தில் அறிவுஜீவிகள் என்ற போர்வையில் இயங்கும், மற்றும் நாட்டின் அணைத்து துறைகளிலும் ஊடுருவி கடமைக்கு எதிரான உரிமை போராட்டங்களை தூண்டிவிட்டு லஞ்ச லாவண்யங்களை தந்திரமாக செய்துகொண்டு எல்லா அமைப்புகளையும் சீர்குலைக்கும் உண்மைகளை வரும் பின்னுட்டங்களில் விவாதிப்போம் நன்றி