கம்யூனிசமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 9

முந்தைய பகுதிகள்: பகுதி 1 | பகுதி 2 | பகுதி 3 | பகுதி 4 | பகுதி 5 |  பகுதி 6 | பகுதி 7  | பகுதி 8 

தொடர்ச்சி…

மருத்துவத்துறையில் சீர்திருத்தம் காலத்தின் கட்டாயம்:-

முதலில் ஒரு விஷயத்தை கூறி விடுகிறேன். மருத்துவத்துறை என்னும்போது, நவீன மருத்துவத்தையே (Allopathy) நான் குறிப்பிடுகிறேன். இக்கட்டுரை பொருளாதார பார்வையைக் கொண்டே எழுதப்படுகிறது. நவீன மருத்துவத்தின் செலவுகளைக் கணக்கில் கொண்டுதான் இந்த பகுதி எழுதப்படுகிறது.

பொன்னியின் செல்வன் சரித்திரக்கதையை நீங்கள் படித்திருக்கலாம். அதில் வரும் குந்தவைப் பிராட்டி சோழ நாடெங்கும் பல வைத்திய சாலைகளை அமைத்தாள் என்பது சரித்திரம். ஆயுர்வேத மருத்துவ முறைக்கான செலவு மிகவும் குறைவு. மேலும் ஒரு வைத்திய சாலையின் செலவுகளுக்காக, நிலங்களையும் மானியமாக அளிக்கும் வழக்கமும் இருந்தது. ஆகவே, Recurring Cost-தொடர் செலவு என்பதும் இல்லை. ஆனால், நவீன காலத்தில் மருத்துவ செலவு விண்ணைத் தொட்டுள்ளது. இந்த செலவுகளை இலவசமாக அனைத்து மக்களுக்கும் அளிப்பது நடைமுறை சாத்தியம் இல்லாதது.

இதை ஒப்புக்கொள்ள முடியாதவர்களுக்கு ஒரு தகவலை தருகிறேன். அமேரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 17 சதவிகிதம் சுகாதாரத் துறையில் செலவிடப்படுகிறது. 2030ம் ஆண்டு வாக்கில் இது 60 சதவிகிதமாக உயரும் என்று கணக்கிடப் பட்டுள்ளது. முதியவர்களின் எண்ணிக்கை, உயர்ந்து கொண்டே போகும்போது மருத்துவச்செலவும் அதிகரித்துக் கொண்டே போகும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

மருத்துவத்துறையையும் கல்வியைப் போன்றேதான் நான் பார்க்கிறேன். குழந்தைகளுக்கான மருத்தவ தேவையை பூர்த்தி செய்யும் பொறுப்பை பெற்றோர்களே ஏற்றுக் கொண்டாக வேண்டும். பெரியவர்களுக்கான மருத்துவ தேவையை அவர்களே பூர்த்தி செய்து கொள்ள வேண்டும். நவீன காலத்தில் சில தொற்றும் நோய்கள் ஏற்படவே செய்கின்றன. இந்த பொறுப்பில் இருந்தெல்லாம் அரசு விலக வேண்டும் என்று நான் கூற வில்லை. அதுபோன்றே ஏழையாக இருந்தாலும், சமூக பங்களிப்பு அளிப்பவர்களுக்கு,(அதாவது இலவச கல்வி அளிக்க வேண்டிய 27 இலட்சம் புத்திசாலிகளுக்கு) இலவச மருத்துவ சேவை அளிப்பது சரியாகவே இருக்கும்.

என்னைப் பொறுத்தவரையில் விதிவிலக்கான சிலருக்கு இலவசமாகவோ, மானிய விலையிலோ மருத்துவ சேவை அளிக்க வேண்டி வரலாம். அனைவர்க்கும் அல்ல.இப்பொழுது மட்டும் என்ன வாழ்கிறது என்று கேட்கிறீர்களா? உண்மைதான். ஏற்கெனவே நான் எழுதியது போல், மத்திய அரசும், மாநில அரசுகளும் வெறும் 50000 கோடி ரூபாய்களை மட்டுமே ஆண்டொன்றிற்கு மருத்துவ செலவுகளுக்காக ஒதுக்குகின்றன. மீதமுள்ள 1.6 இலட்சம் கோடி ரூபாய்களை, ஏழைகள் முதற்கொண்டு தனியார் மருத்துவ மனைகளில் அவர்களே தங்கள் சொந்த பணத்தில்தான் செய்து கொள்கின்றனர்.

இந்த நிலை தொடரவே வேண்டும். மேலும் அதிக ஒதுக்கீடு மருத்துவ துறைக்கு தேவையில்லை. இருக்கும் நிதியை ஆராய்ச்சிக்கு பயன்படுத்துவதுதான் புத்திசாலித்தனம்.தடாலடியாக இப்படிப்பட்ட மாற்றங்களை செய்ய முடியாது என்பதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால், ஒரு துவக்கமாக, இதை எளிமையாக செயல்படுத்த 2 வழிகளைக் கொள்ளலாம். ஒன்று, சுயமான முடிவுகளால் ஒருவருக்கு வரும் நோய்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படாது என்று அறிவுறுத்தலாம். வேறு காரணங்களால் ஏற்படும் நோய்களுக்கு மட்டுமே இலவச சிகிச்சை அளிக்கப்படும் என்று ஆரம்பிக்க முடியும்.

உதாரணமாக, குடித்து விட்டு உடலை கெடுத்துக் கொள்பவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படக் கூடாது. கண்டதை தின்றுவிட்டு உடலை கெடுத்து கொள்பவர்களுக்கும் இதே வழிமுறைதான். மொத்தமாக பார்த்தால், சமூக விதிகள் என்று நாம் சிலவற்றை வைத்திருக்கிறோம். அவற்றை மீறுபவர்கள் அதற்கான தண்டனையை அனுபவித்துத்தான் ஆக வேண்டும்.

இரண்டாவதாக, தொற்று நோய்கள் போன்றவை, நம் முடிவுகளினால் ஏற்படுவதில்லை. அவர்களுக்கு மானியம் அளிக்க வேண்டி வரலாம். வரும்காலத்தில் இதை சரிசெய்வதைக் குறித்து நாம் பிறகு யோசித்துக் கொள்ளலாம்.மேலும், ஆயுர்வேத மருத்துவ முறைகளை பெரிய அளவில் இந்தியாவில் முன்னெடுக்க வேண்டும். பழம் பெருமையை பேசுவதற்காக நான் இதை எழுத வில்லை. நவீன மருத்துவத்தை ஒரே தரத்தில் அனைத்து மக்களுக்கும் அளிக்க முடியாது என்ற பச்சையான பொருளாதார காரணங்களுக்காகத்தான் நான் இதை எழுதுகிறேன். நம் சமூகத்தின் மருத்துவ தேவைகளை குறைந்த முதலீட்டிலும், குறைந்த தொடர் செலவிலும் செய்து கொள்ள ஆயுர்வேதம்தான் ஒரே வழி. வசதி உள்ளவர்கள் நவீன மருத்துவத்தை, தங்களின் சொந்த பணத்தில் செய்து கொள்வார்கள். இதுவே நெடுங்காலத்திற்கு நாம் அனுசரிக்க சாத்தியமான வழி.

நேர்மையும் இலாபமும்-சிந்தனை மாற்றம் அவசியம்:-

பணக்காரர்களைக் குறித்து என்றுமே பெரும்பான்மையானவர்கள் கீழான கருத்துகளையே கொண்டுள்ளனர் என்பதை யோக வாசிஷ்டத்திலிருந்து, இன்றுள்ள நிலை வரை உதாரணங்களுடன் பார்த்தோம். பழங்காலத்திய திரைப்படங்களிலிருந்து நவீன திரைப்படங்கள் வரை இதையே வெவ்வேறு வழியில் காண்பிக்கப் படுகிறது. சமீபத்திய திரைப்படமான “வழக்கு எண் 18/9″ஐ அவதானியுங்கள். இரு ஜோடி காதலர்கள். ஒரு ஜோடி ஏழைகளாக காண்பிக்கப்படுகிறார்கள். மற்றொரு ஜோடி உயர்நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள். ஏழை கதாநாயகி, மனநலம் குன்றிய குழந்தைக்கு உதவுவதாக காட்டப் படுகிறாள். ஏழை கதாநாயகன் ஒரு விபச்சாரிக்கு உதவுவதாக காட்டப்படுகிறான். ஆனால் உயர்நடுத்தர ஜோடி, ஊதாரிகளாகவும் ஒழுக்கம் கெட்டவர்களாகவும் சித்தரிக்கப்படுகிறார்கள். எம்.ஜி.ஆர் காலத்திலிருந்தே இதே வழிமுறைதான். ஏழைகள் அனைவரும் உத்தமர்கள். பணக்காரர்கள் காமாந்தகர்கள் அல்லது ஊர் சொத்தை கொள்ளை அடிப்பவர்கள். இது ஒரு அப்பட்டமான, குப்பையான, பேத்தலான சிந்தனை.

என்னைப் பொறுத்தவரை, பணக்காரர்களானாலும் சரி, ஏழைகளானாலும் சரி, நல்லவர்களும் கெட்டவர்களும் சேர்ந்தே இருந்து வந்துள்ளார்கள். என்றுமே இதே நிலைதான். தனியார்மயமாக்கம் என்றவுடன் பலருக்கு அச்சம் ஏற்படுவது இந்த காரணங்களால்தான். பாதுகாப்பு போன்ற சில துறைகளைத் தவிர, மற்ற அனைத்துமே இலாப நோக்குடன் தனியார் துறையால் நிர்வகிக்கப்பட வேண்டும், ஒழுங்குமுறை விதிகளை காலத்திற்கேற்றபடி கட்டமைப்பதை மட்டுமே அரசாங்கம் செய்ய வேண்டும் என்ற என் கருத்தை எழுதினேன்.

நவீன மருத்துவ துறையை எடுத்துக் கொள்ளுங்கள். உலகின் அனைத்து மருத்துவர்களும் ஒன்றாம் நம்பர் அயோக்கியர்கள் என்றுதான் சித்தரிக்கப் படுகிறார்கள். இது மருத்துவ துறையை கொஞ்சம் கூட புரிந்து கொள்ளாமல்,பிரச்சினைகளை எளிமைப் படுத்தி விவரிக்கும் போக்குதான். நேர்மையான மருத்துவர்கள் சமூகத்தில் இல்லவே இல்லை என்றும் பரப்பப் படுகிறது.

நேர்மை என்பதன் விளக்கத்தை காலத்திற்கேற்றபடி புரிந்து கொள்ளாததால்தான் இப்படியெல்லாம் உளறுகிறார்கள். ஒரு முறை மாண்புமிகு. தலாய் லாமா அவர்கள் ஒரு பேட்டியில் கூறியது நினைவுக்கு வருகிறது. தனக்கு ஒவ்வாத உணவை மனிதன் சாப்பிட மாட்டான். தனக்கு பயன் தரும் உணவையே சாப்பிடுவான். அதாவது, “சுய அக்கறை” “Self Interest” இருப்பதாலேயே அவன் “சுய ஒழுங்கை” “Self Discipline” கடை பிடிப்பான். சமூக அக்கறை என்பது இங்கு பேசப்படவில்லை. சுய ஒழுங்கை அனுசரிப்பதால் இலாபம் அடைய முடியும் என்றால் மனிதன் அதை கண்டிப்பாக அனுசரித்து விடுவான்.

நவீன மருத்துவமுறைகளில் ஈடுபடும் மருத்துவர்களால், நேர்மை என்பதன் பண்டைய காலத்திய விளக்கங்களை அனுசரிக்கவே முடியாது. பண்டைய காலத்தில், ஆயுர்வேதம் கற்பதற்கு பல இலட்சங்கள் தேவைப் படவில்லை. ஆனால் இன்று நிலை முற்றிலும் வேறுபட்டது. அதே போல், சமூகமும் நவீன மருத்துவர்களை அதே பண்டைய காலத்திய அளவுகோல்களின்படி மதிப்பிடுவதும் சரியல்ல. என்னைப் பொறுத்தவரை, செய்யும் வேலைக்கு சரியான, நியாயமான பணத்தை பெற்றுக் கொள்ளும் அவ்வளவு மருத்துவர்களும் நேர்மையாளர்களே!

மாண்புமிகு. தலாய் லாமா கூறியதை அனைத்து தனியார் கம்பெனிகளுக்கும் நம்மால் விரிவாக்கி புரிந்து கொள்ள முடியும்.

சமீபத்தில் நான் ஒரு தொலைக்காட்சி பெட்டியை வாங்கினேன். அந்த நிறுவனத்திற்கு இந்தியா முழுவதும் 25 நகரங்களில் பழுதுபார்க்கும் சேவை நிறுவனங்கள் இருக்கின்றன. மேலும் பல்லாயிரம் சிறு நகரங்களில் அந்த கம்பெனியால் அங்கீகரிக்கப்பட்ட சேவை நிறுவனங்கள் இருக்கின்றன. நாம் இன்று எந்த தொலைக்காட்சி பெட்டியை வாங்கினாலும், அந்த கம்பெனிக்கு இது போன்ற கட்டமைப்புகள் இருக்கின்றன.

சோஷலிஸ காலத்தில், நிலை எப்படி இருந்தது? கொஞ்சம் நினைவு படுத்திக் கொள்ளுங்கள். ஒன்றோ, இரண்டோதான் தொலைக்காட்சி பெட்டி கம்பெனிகள் இருந்தன. அரசாங்கமும் தன் பங்குக்கு இவற்றைப் போன்ற கம்பெனிகளை நடத்தியும் வந்தது. இன்று 10க்கும் மேற்பட்ட கம்பெனிகள் உள்ளன. எந்த கம்பெனியின் பொருளை வாங்க வேண்டும் என்பதை வாடிக்கையாளர்கள்தான் முடிவு செய்கின்றனர்.

சரி, நாம் விஷயத்திற்கு வருவோம். உதாரணமாக ஒரு கம்பெனியின் தொலைக்காட்சி பெட்டி சரியில்லை என்றால், வாய் வார்த்தையின் மூலமே, விவரங்களைப் பெற்று வாடிக்கையாளர்கள் அதை வாங்குவதை நிறுத்தி விடுவார்கள். அதே போல், வாங்கியபின், பழுதுபார்க்கும் சேவை சரியாக இல்லையென்றாலும், அந்த கம்பெனியைக் குறித்து வாடிக்கையாளர்கள் தங்கள் சமூகத்தில் பரப்பி விடுவார்கள்.

அதாவது, வாங்கும் பணத்திற்கு ஏற்ற தரத்தை காண்பிக்கும் நிறுவனம் மட்டுமே நெடுங்காலத்திற்கு வியாபாரம் செய்ய முடியும். இல்லையெனில் கம்பெனிக்கு மூடுவிழாதான். இன்னொரு வகையில் கூறுவதானால் நேர்மையாக இருக்கும் வரை மட்டுமே வியாபாரம் நடக்கும்.

இதுதான் நேர்த்தியான வியாபாரம் என்று நான் கூறவில்லை. இருப்பதிலேயே நேர்த்தியான வியாபார வழிமுறை இதுதான். தவறு செய்யும் சில கம்பெனிகள் இருக்கும்போது, நஷ்டப்படும் வாடிக்கையாளர்கள் இருக்கத்தான் செய்வார்கள். அவர்கள் நஷ்டம் அடைவதை ஒப்புக்கொள்ள முடியாது என்று அரசே இந்த வியாபாரத்தை செய்யும் போது, மிகப்பெரிய நஷ்டங்களை வாடிக்கையாளர்கள் அடைவார்கள். 100 சதவிகிதம் சரியான வியாபார முறையெல்லாம் எந்த காலத்திலும் உலகில் இருந்ததில்லை. இருப்பதிலேயே நேர்த்தியான வழிமுறை சந்தை பொருளாதார முறைதான்.

நம் முன்னோர்களின் சிந்தனை:-

என் கருத்துப்படி நம் முன்னோர்கள், பொதுவுடைமையை அங்கீகரித்ததே இல்லை. ஆனால் சமூகத்தின் அனைத்து வகை மனிதர்களும் சந்தோஷமாக வாழ பல்வேறு அஸ்திரங்களை கைக்கொண்டார்கள்.

நம் முன்னோர்கள் பொதுவுடைமையை அங்கீகரிக்காததற்குக் காரணம், மனிதர்களுக்கு இடையேயான இயற்கையான வித்தியாசங்களை ஒப்புக்கொண்டதுதான் என்றே நான் கருதுகிறேன். சமீபத்தில் யோக வாசிஷ்டத்தை படித்துக் கொண்டிருந்தேன். அது ஆன்மீக நூலாக இருந்தாலும், மனிதர்கள் அடிப்படையில், ஒருவருக்கொருவர் வித்தியாசப்பட்டவர்கள் என்பதை கூறிச்செல்கிறது. குறிப்பாக 6ம் பிரகரணத்தில் சில ஸ்லோகங்கள் இதுகுறித்து எழுதப்பட்டுள்ளன.

“பலவித நம்பிக்கைகளையும், குணாதிசயங்களையும் கொண்ட மனிதர்கள் உள்ளார்கள். வெவ்வேறு பிராந்தியங்களில் வாழ்வதைப் போலவே, மனிதர்கள் வெவ்வேறு பழக்கவழக்கங்களையும், கலாச்சாரங்களையும் கொண்டுள்ளனர். சிலர் மற்றவர்களுக்கு ஒரு பயனும் இல்லாமல் வாழ்கின்றனர். உடல் அமைப்பிலும் சரி, குணாதிசயங்களிலும் சரி மனிதர்கள் வேறுபட்டுள்ளனர்.”

என் தானைத்தலைவர்களான கைப்புள்ள, ஒண்டிப்புலி, சுனா-பானா, வெட்டி, அறிக்கி, பாஸ் போன்றவர்களைப் போல் வாழ்வதைக் கூறுகிறார்கள். நான் கனவுகாணும் சமூகத்தில் இவர்களுக்கும் இடம் உண்டு. ஆனால் சப்பாத்தியின் சிறிய துண்டுதான் இவர்களுக்கு கிடைக்கும். அதை மறக்க வேண்டாம்.

நம் பழம் நூல்களில் பொருளாதார ஏற்றத்தாழ்வைப் பற்றி நேரடியாக கூறியுள்ளனரா என்று தெரியவில்லை. ஆனால் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்குமாக பல விஷயங்களை எழுதியுள்ளனர்.

பணக்காரர்களுக்காக கூறப்பட்ட விஷயங்கள் புதியவை அல்ல. அனைத்து மனித சமூகங்களிலும் இதை நாம் காண முடியும்.

 • இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு தங்களால் இயன்றதை தானம் செய்ய வேண்டும்; உதாரணமாக விதுர நீதியில் பணம் படைத்தவன் தானம் அளிக்க வில்லையேல், கல்லைக் கட்டி அவனை தண்ணீரில் போட்டு விட வேண்டும் என்றெல்லாம் கூறப்பட்டிருக்கிறது.
 • அன்னதானம் இருப்பதிலேயே உயர்ந்த தானம்; உணவை அனைவர்க்கும் பகிர்ந்தளிக்க வேண்டும்;
 • காதறுந்த ஊசியும் வாராதே காணும் கடைவழிக்கே;

மேற்கூறியதைப் போன்ற அறிவுரைகள் மூலமாக பணக்காரர்களுக்கு இருக்க வேண்டிய கடமையை அறிவுறுத்தியதோடு, இன்று நம்மில் பலர் விமர்சிக்கும் கொடூரமான பணக்காரர்களின் செயல்பாடுகளையும் (Crony Capitalist) கட்டுக்குள்ளே வைத்திருந்திருப்பார்கள்.

மேலும், இவை அனைத்தையும் பணக்காரர்கள் தங்களின் விருப்பத்தோடு செய்ய அறிவுறுத்தப்பட்டார்கள். அரசன் வலுக்கட்டாயமாக பணக்காரர்களிடமிருந்து பிடுங்கி ஏழைகளுக்கு அளிக்கவில்லை.

இவற்றைத் தாண்டி ஏழைகளை குறித்தும் நம் முன்னோர்கள் சிந்தித்துள்ளார்கள்.

 1. வெறும் பணத்தைக் கொண்டிருப்பதால் பயனில்லை.
 2. ஏழைகளைத்தான் கடவுளுக்கு பிடிக்கும்
 3. சந்தோஷம் என்பது பணத்தால் வருவதில்லை. மன அமைதியினால் மட்டுமே பெறக்கூடியது. இது அடிப்படையிலேயே மற்ற நாகரீகங்களிடமிருந்து வித்தியாசப்படும். சந்தோஷம் என்பதை புலன் வழியான சந்தோஷமாகவே பார்க்க பழகின மேற்கத்திய சமூகங்களுக்கு இது புரிய வாய்ப்பில்லை. நம் முன்னோர்கள் கூறிய சந்தோஷம், Contentment (சம்ஸ்கிருதத்தில் சமாதானம்) என்பதை சுட்டும். இந்த மன நிலையை அடைய பணம் அவசியமே இல்லை.
 4. புராணங்கள் முழுவதும் இதை குறியீட்டாக கூறும் கதைகள் ஏராளம்.

மேற்கூறியவையெல்லாம் எனக்குப் புரிந்தவரை அற்புதமான உளவியல் சாதனங்கள். பச்சையாக கூறினால், ஏழைகளை கட்டுக்குள் வைத்திருக்க உபயோகப்பட்ட உளவியல் சாதனங்கள் என்றே நான் புரிந்து கொள்கிறேன்.

பொதுவுடைமையை முழுமையாக சமூகத்தில் நடைமுறை படுத்த முடியாது என்பதை தெளிவாக உணர்ந்தவர்கள் நம் முன்னோர்கள். ஆனாலும், பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை உடைய ஒரு சமூகத்தை நிர்வகிக்க சட்டங்கள் மட்டும் போதாது என்பதையும் தெளிவாகவே உணர்ந்திருந்தார்கள். மேலே கூறப்பட்ட பல உளவியல் சாதனங்களை பயன்படுத்தி ஏழ்மையிலும் சந்தோஷமாக வாழ முடியும் என்பதை மக்களுக்கு உணர்த்தினார்கள். கதைகள் மூலம் இதை பட்டி தொட்டிகளுக்கும் பரப்பியதால், தலைமுறை தலைமுறையாக சமூகம் அமைதியாகவே வாழ்ந்து வந்தது.

அன்னதானம்

சமீபத்தில் அமேரிக்காவில் “Occupy Wall Street” என்ற போராட்டம் சில குழுக்களால் முன்னெடுக்கப்பட்டது. நான் அந்த போராட்டக்காரர்களை மனிதர்களாகக் கூட பார்ப்பதில்லை. ஏனெனில் அவர்கள் மனம் முழுவதும் அழுக்குப்பிடித்த கம்யூனிஸ்டு கொரில்லாக்கள். அது வேறு விஷயம். அக்காலகட்டத்தில் எனக்கு ஒரு பயம் ஏற்பட்டது. இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான ஏழைகளில் ஒரு 1 கோடி பேர் சேர்ந்து இது போன்ற போராட்டத்தில் ஈடுபட்டால் நம் நிலை என்ன ஆகும் என்று சிந்தித்துப் பார்த்தேன். அடி வயிறு கலங்கியது. நிச்சயமாக பல பணக்காரர்கள் கொல்லப்படுவார்கள். பணக்காரர்களை முழுமூச்சுடன் ஆதரிக்கும் என்னைப் போன்ற நடுத்தர மக்களுக்கும் ஆபத்துதான். நான் எங்கு வசிக்கிறேன் என்பதை கூறப் போவதே இல்லை. “உடல் மண்ணுக்கு-உயிர் என் சிந்தனைகளுக்கு” என்றெல்லாம் என்னால் வீர வசனம் பேச முடியாது.

ஆனால், நம் முன்னோர்களின் உளவியல் சாதனங்களின் தாக்கம் இன்றும் இருப்பதாலேயே இது போன்ற போராட்டங்கள் இந்தியாவில் ஏற்படுவதில்லை என்று நினைக்கத் தோன்றுகிறது.

மற்ற நாகரீகங்களுக்கும், நமக்கும் உள்ள அடிப்படை வித்தியாசங்களில் இதை முக்கியமான ஒன்றாக நான் பார்க்கிறேன். டார்வினின் பரிணாமக் கொள்கை, அறிவியலின் அடிப்படையில் நிரூபிக்கப்பட்டு பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. குரங்குகளிலிருந்து, கொஞ்சம் கொஞ்சமாக மாறி வந்த மனிதன் பல நிலைகளை கடந்து, இன்று நம்மைப் போல் உள்ள Homo Sapiens என்ற வகைக்கு வந்துள்ளோம். மாற்றத்தின் ஆரம்பம் ஆப்பிரிக்காவில் துவங்கியது என்றும் அறிவியல் கூறுகிறது. அங்கிருந்து வெளிக்கிளம்பிய நம் முன்னோர்களுக்கு முன்னோர்கள் (ஆப்பிரிக்கர்கள்) உலகின் பல பகுதிகளில் குடியேறி வாழத் தொடங்கினார்கள். பல பகுதிகளில் பல்வேறு நாகரீகங்கள் தோன்றின. அதில் ஒன்றாக உருவான நம் ஹிந்து நாகரீகத்தில் தோன்றிய நம் முன்னோர்கள் மட்டும் சமூகத்தை, இயற்கை நியதிக்கு முடிந்தவரை இயைந்தே நடத்தி சென்றார்கள். ஆனால், இந்த சிந்தனையை அடையாத பிற சமூகங்கள் கொலைவெறி சண்டையிலேயே காலம் கடத்தின. அதற்கு அவர்களின் இறையியல் முக்கிய காரணமென்றாலும், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும் ஒரு அதிகப்படி காரணமாக இருந்தன என்பது என் கருத்து.

ஏன் நம் முன்னோர்களுக்கு மட்டும் இது போன்ற உயரிய சிந்தனைகள் தோன்றின? விசேஷமாக எதையாவது சாப்பிட்டார்களா! எனக்கு புரியவில்லை.

(தொடரும்)

9 Replies to “கம்யூனிசமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 9”

 1. ” இதுதான் நேர்த்தியான வியாபாரம் என்று நான் கூறவில்லை. இருப்பதிலேயே நேர்த்தியான வியாபார வழிமுறை இதுதான். தவறு செய்யும் சில கம்பெனிகள் இருக்கும்போது, நஷ்டப்படும் வாடிக்கையாளர்கள் இருக்கத்தான் செய்வார்கள். அவர்கள் நஷ்டம் அடைவதை ஒப்புக்கொள்ள முடியாது என்று அரசே இந்த வியாபாரத்தை செய்யும் போது, மிகப்பெரிய நஷ்டங்களை வாடிக்கையாளர்கள் அடைவார்கள். 100 சதவிகிதம் சரியான வியாபார முறையெல்லாம் எந்த காலத்திலும் உலகில் இருந்ததில்லை. இருப்பதிலேயே நேர்த்தியான வழிமுறை சந்தை பொருளாதார முறைதான். “-

  நன்கு தெளிவாக்க உண்மையைபோட்டு உடைத்தீர்கள் . பாலாஜி, நீவிர் வாழ்க! அரசு செய்யும் எந்த செயலும் உருப்படாது . ஏனெனில் அரசு அதிகாரிகள் மூன்று வருடம் அல்லது அதற்கு குறைந்த காலமே ஒரு அலுவலகத்தில் இருப்பார்கள். அந்த காலத்திலும் கூட அவர்கள் , ஆளுங்கட்சி அரசியல்வாதிகள் கிழித்த கோட்டுக்குள் தான் , நிர்வாகம் செய்ய முடியும். மேலும் அரசு அதிகாரிகளின் குடுமி அரசியல்வாதிகள் கையில் தான் உள்ளது.தண்ணியில்லா காட்டுக்கு மாறுதல், பதவி உயர்வில் மோசடி என்று பல ஆயுதங்கள் அரசியல் வாதிகள் கையில் உள்ளன. சுயமாக சிந்தித்து, ஒரு அரசு அதிகாரி எந்த நல்ல காரியமும் செய்ய முடியாது. விதிகள் அனுமதிக்காது.

  சென்ற கலைஞர் ஆட்சியில், பாம்புக்கடிக்கான விஷமுறிவு மருந்து , ஈரோடு மாவட்ட மருத்துவ மனையில் பல வருடமாக இல்லை. கேட்டபோது, நாங்கள் ஒவ்வொரு வருடமும் எழுத்து மூலமான கோரிக்கை அப்போதைய அரசுக்கு அனுப்பியும் , விஷக்கடி மருந்து வாங்கி வழங்கப்படவில்லை என்ற பதிலே கிடைத்தது. ஈரோட்டில் விவசாயம் அதிகம் நடக்கும் பகுதியாகையால் வயலில் பாம்பு கடித்து பல விவசாயிகளும், விவசாய கூலித்தொழிலாளர்களும் இறந்தனர். சென்னையில் இல்ருந்த கலைஞரின் சோனியா குடும்ப அரசு , விஷ முறிவு மருந்து வாங்க முயற்சி செய்யவில்லை. மாறாக, அவர்கள் கவனமோ, டூஜீயை விட பெரியதாக ஏதாவது செய்யமுடியுமா என்ற கவலையிலேயே காலம் கழித்தனர்.

  மேலும் எந்த ஒரு அரசியல் வாதியாவது தப்பித்தவறி ஒரு நல்ல திட்டத்தை கொண்டுவந்தாலும், அவரை அடுத்துவரும் அரசியல் வாதி, தான் ஆட்சிக்கட்டிலில் ஏறியவுடன் , முந்தைய அரசு கொண்டுவந்த நல்ல திட்டத்தை மூடு விழா செய்துவிடுவார். ஒரு உதாரணம்- எம் ஜி ஆர் முதல்வராக இருந்தபோது, விவசாயிகளுக்கு ஒரு இன்ஷுரன்ஸு திட்டத்தை கொண்டுவந்தார். மஞ்சளார் 1989- ஆம் ஆண்டில் அரசு கட்டில் ஏறியவுடன் செய்த முதல் காரியமே, எம் ஜி ஆர் கொண்டுவந்த இன்சூரன்ஸ் திட்டத்தை வாபஸ் வாங்கிவிட்டு, மூடுவிழா செய்தது தான். பம்பாயில் மின்சாரம் தனியார் வசம்தான் உள்ளது. அங்கு சிறந்த முறையில் மின்பகிர்ந்தளிப்பு உள்ளது. அதே போல, இந்தியா முழுவதும் மின்சாரத்தை தனியார் மயமாக்கினால், இப்போது இருப்பதைவிட சிறந்த முறையில் நிர்வாகிக்க முடியும்.

  நமது, நாட்டின் எல்லைப்பகுதியை கூட , நன்கு காக்க நமது ராணுவத்தினை தனியார் வசம் ஒப்படைத்தால், ராணுவம் இப்போது இருப்பதை விட, சிறந்தமுறையில் செயல்படும்.பங்களாதேசத்திலிருந்தோ , பாகிஸ்தானிலிருந்தோ ,எல்லை தாண்டி வரும் தீவிரவாதிகளை தனியாரே தடுத்து நிறுத்தமுடியும். அரசுக்கட்டுப்பாட்டில் இருக்கும் ராணுவம் ஒன்றும் உருப்படியாக செய்ய முடியாது.

 2. சீனாவில் ஏற்பட்டுள்ள தற்போதைய வளர்ச்சி கம்யூனிசத்தினால் வந்ததல்ல.தனியார் சொத்துரிமை கொடுக்கப்பட்டு அரசியல் சட்டத்தை அவர்கள் திருத்திய பின்னரே, அவர்களால் வெளிநாட்டு மூலதனத்தை அதிக அளவில் ஈர்க்க முடிந்தது. இன்று சீனாவில் என்ன நிலை தெரியுமா? பணக்காரர்களுக்கும், ஏழைகளுக்கும் இடையில் உள்ள இடைவெளி மிகவும் அதிகரித்துள்ளது. வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது, ஆனால் சீன கம்யூனிஸ்டு கட்சியோ, சந்தைபோருலாதாரத்தின் அடிப்படையிலே தற்போது பிற நாடுகளுடன் உறவு கொள்கிறது. உண்மையான மார்க்சிசம் வழங்கிய சுய நிர்ணய உரிமையை , எந்த நாட்டுக்கோ இனத்துக்கோ வழங்க சீன கம்யூனிசம் தயாராக இல்லை. எனவே கம்யூனிஸ்டுகள் சீனாவிலும், உலகெங்கிலும் கம்யூனிசம் சரிப்பட்டு வராது என்பதை உணர்ந்து பல வருடங்கள் ஆகிவிட்டது. எனவே, கம்யூனிசம் என்ற பெயர் மட்டுமே இருக்கும். உண்மையான கம்யூனிசம் என்றும் உலகில் இருந்ததில்லை. இனி எக்காலத்தும் இருக்கப்போவதுமில்லை.

 3. அத்விகா,
  மறுமொழிக்கு நன்றி.

  பாதுகாப்பு படையினரை தனியாரிடம் அளிக்க வேண்டும் என்று நீங்கள் எழுதியது கிண்டலுக்கா என்று தெரியவில்லை.

  தீர்மானமான கருத்தாக நான் எடுத்துக் கொண்டு பதில் எழுதுகிறேன். Actually நானே தேவலை என்று நினைக்கிறேன். சில விஷயங்களில் Break போட்டுக் கொள்கிறேன்.

  எனினும் நீங்கள் எழுதியதைக் குறித்து ஒரு செய்தி. பிரிட்டனில், இலண்டனில், நிறைய முஸ்லீம் தீவிரவாதிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் அந்நாட்டின் மனித உரிமை ராவடிக்காரர்களின் சித்து விளையாட்டுகளால், கிட்டத்தட்ட 200 பேரை சிறையில் அடைக்க முடியவில்லை. அதாவது, தீவிரவாதிகளுக்கு உதவினார்கள் என்ற சந்தேகத்தின் கீழ் பிடிக்கப்பட்டவர்களை கொஞ்சம் சுதந்திரத்தோடு வெளியில் நடமாட விடுகின்றனர். உடலில் GPS கருவியை பொருத்தி விடுவார்கள். தத்தம் வீடுகளிலேயே இருப்பார்கள். நாளொன்றுக்கு 3 முறை ஒரு குறிப்பிட்ட தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டு தங்கள் சொந்த குரலில் (Voice Test) ஒரு கணிணியிடம் “தான் தான்தான்” என்று நிரூபிக்க வேண்டும்.

  இந்த கதையைக் கூறியதற்கு காரணம், இந்த கட்டமைப்புகளை தனியார் நிறுவனங்களே அரசிற்காக செய்கின்றன. வாரம் ஒரு முறையோ இரு முறையோ, போலீஸ்காரர் வீட்டிற்கு வந்து நிஜமாகவே ஆள் இருக்கிறாரா என்று Check
  செய்து விட்டு போவார்.

  பாதுகாப்பு பணிகளில் தனியார் பங்களிப்பும் இருக்க முடியும் என்பதற்காக எழுதினேன்.

  பங்களாதேஷ் எல்லைப் பாதுகாப்பைப் பொறுத்தவரை, பிரச்சினை நம் படை வீரர்களிடம் இல்லை. Political Willpower இல்லாதுதான் பிரச்சினை. தேசப்பற்றுடன் ஒருவர் பிரதமராகும்போது, இதே பாதுகாப்பு வீரர்கள், அந்நிய நாட்டினரை
  விரட்டி விடுவார்கள்.

 4. தேசப்பற்றுடன் ஒருவர் பிரதமர் ஆகும் வாய்ப்பு நம் நாட்டில், வெகு குறைவு. காங்கிரசு கொள்ளையர் கூட்டத்தில் உள்ள, அந்தோனி போன்ற தூய மனிதர்கள் நம் நாட்டில் பிரதமராக முடியாது.1977 -ஆம் ஆண்டில் திரு மொரார்ஜி தேசாய் பிரதமர் ஆனது ஒரு விதி விளக்கு. அரசியலில் தூய்மையானவர்கள் முக்கிய கொள்ளைகாரனாக விளங்கும் தங்கள் தலைவன் அல்லது தலைவிக்கு எதிராக எதுவும் செய்ய முடியாது.

  பாதுகாப்பு படையினரின் நிர்வாகத்தை அரசியல்வாதிகள் கட்டுப்பாட்டிலிருந்து எடுத்து, தனியாரிடம் கொடுப்பதே நிச்சயம் சிறந்தது. அது நல்லதல்ல என்று கருதினால் ராணுவம் தானே தேவைப்படும் போது , எல்லையில் பாக் பங்களாதேசம் போன்ற நாடுகளின் தீவிரவாதிகளும்,அகதிகள் என்ற போர்வையில் , நாட்டை துண்டாட மீண்டும் நினைக்கும் தீயசக்திகளின் நாசகார நடவடிக்கைகளுக்கு முடிவு கட்டும் அதிகாரத்தினை வழங்க வேண்டும். பண்டித நேரு இரண்டு நாள் தாமதம் செய்து முடிவு எடுத்ததால் தான் காஷ்மீர் பிரச்சினை வந்தது. அன்றைய ராணுவ தலைமையிடம் இந்த அதிகாரம் கொடுக்கப்பட்டிருந்தால் , காஷ்மீர் பிரச்சினையே இருந்திருக்காது.பங்களா தேச எல்லையில் தினமும் சுமார் 300 -பேருக்கு குறையாமல் எல்லை தாண்டி இந்தியாவுக்கு ஓடி வருகின்றனர். இதனை இந்திய ஓட்டு பொறுக்கி காங்கிரசு அரசால் தடுக்க முடியாது. எனவே, ராணுவத்திடம் முழு அதிகாரம் வழங்குவது ஒன்றே சரியாக படுகிறது.

 5. “தேசப்பற்றுடன் ஒருவர் பிரதமர் ஆகும் வாய்ப்பு நம் நாட்டில், வெகு குறைவு. காங்கிரசு கொள்ளையர் கூட்டத்தில் உள்ள, அந்தோனி போன்ற தூய மனிதர்கள் நம் நாட்டில் பிரதமராக முடியாது.1977 -ஆம் ஆண்டில் திரு மொரார்ஜி தேசாய் பிரதமர் ஆனது ஒரு விதி விளக்கு. அரசியலில் தூய்மையானவர்கள் முக்கிய கொள்ளைகாரனாக விளங்கும்தங்கள்தலைவன்அல்லதுதலைவிக்கஎதிராகஎதுவும் செய்ய முடியாது.”

  அத்விகா அவர்கள் மிகுந்த மன வேதனையில் இருக்கிறார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது, ஆனால் நம்பிக்கை இழக்க அவசியமில்லை…கண்டிப்பாக நாம் அனைவரும் வேண்டுவதை போல வரும் 2014 ஆம் ஆண்டு திரு.நரேந்திர மோடி அவர்களின் தலைமையில் ஒரு பொற்க்கால ஆட்சி ஹிந்துஸ்தானத்தில் தொடங்கும்,…அந்தோணியை எவ்வாறு நீங்கள் தூய மனிதர் என்று குறிபிடுகிறிர்கள் என்று தெரியவில்லை,அவர் மீதுள்ள குற்றச்சாட்டுகளை பற்றி நீங்கள் அறியவில்லையா என்பது தெரியவில்லை….திரு.மொராஜி தேசாயை தவிர இந்தியாவில் வேறு சிறந்த பிரதமர்களே வந்ததில்லை என்று கூறுவதும் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை ..திரு.மொராஜி தேசாயை விட பல மடங்கு நேர்மையான திரு.வாஜ்பாய் அவர்கள் தலைமையில் ஒரு ஊழல் அற்ற ஆட்சி இங்கே நடைபெற்றது என்பது உங்களுக்கு தெரியவிலையா………இராணுவத்திடம் அதிகாரத்தை கொடுக்க வேண்டும் என்று கூறுகிறார்..இது ஏதோ ஓநாய்க்கு பயந்து சிங்கத்தின் குகைக்குள் ஒளிவதை போல் உள்ளது…சில வேத சுவேஷங்களில் அல்லது மறை வாக்கியங்களில் வேண்டுமானால் அந்தோனியும், தேசாயும் திரு.வாஜ்பாயை விட உயர்ந்தவர்கள் என்று கூறியிர்ருக்ககூடும்

  நமஸ்காரம்,
  Anantha Saithanyan

 6. அன்புள்ள ஆனந்த சைதன்யன் அவர்களுக்கு,

  தங்கள் நேர்மறை சிந்தனைக்கு நன்றியும் பாராட்டுக்களும். உங்கள் எதிர்பார்ப்பைப்போல மோடியை போல யாரேனும் நல்ல மனிதர் பிரதமர் ஆனால் நாட்டுக்கு நல்லது. நல்லதே நடக்க இறைவனை பிரார்த்திப்போம்.

  நல்ல மனிதர்கள் எல்லா கட்சியிலும் இருக்கிறார்கள். ஆனால் கட்சிக்கு கட்சி இந்த சதவீதம் வித்தியாசப்படும் அவ்வளவுதான். எவ்வளவு கெட்ட குணங்கள் படைத்த ஒரு மனிதனிடமும் கூட , சில நல்ல குணங்கள் நிச்சயம் இருக்கும்.

  உங்களுக்கு அந்தோணியின் வரலாறு தெரியாது என்று கருதுகிறேன். அவர் ஒரு அப்பழுக்கற்ற மனிதர். காங்கிரசு கொள்ளையர் கூட்ட கட்சியில் அவர் இருப்பதாலேயே அவர் தீயவர் ஆகிவிட மாட்டார். சோனியாவின் மாமியார் டெல்லியில் கட்சியில் அதிகாரம் செய்து வந்த நாட்களிலேயே கேரளா முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்தவர் அவர்.

  திரு வாஜ்பாய் அவர்கள் ஊழல் அற்றவர் தான். ஆனால் அவருடைய மந்திரிசபை தான் திமுக மற்றும் பல நாசகார கட்சிகள் சேர்ந்த ஒரு கூட்டணி அரசு. மொராஜி தேசாய் அவர்கள் ஆட்சி நடத்திய வருடங்கள் இந்தியாவின் பொற்காலமாய் இருந்தது. இன்றைய சூழலில் பெரும் கொள்ளையர்கள் தான் கட்சிகளில் தலைமைப்பொறுப்பை ஏற்க முடியும். பிஜேபி யும், அத்வானியும்,நரேந்திர மோடியும் விதி விலக்குகளே. மேலும் , எல்லோரிடமும் முற்றிலும் தீய குணங்களோ, முற்றிலும் நல்ல குணங்களோ காணப்படவில்லை. எனவே, நல்ல குணங்கள் பெருகவும், தீய குணங்கள் குறையவும் இறைவனை பிரார்த்திப்போம்.

 7. “உங்களுக்கு அந்தோணியின் வரலாறு தெரியாது என்று கருதுகிறேன். அவர் ஒரு அப்பழுக்கற்ற மனிதர். காங்கிரசு கொள்ளையர் கூட்ட கட்சியில் அவர் இருப்பதாலேயே அவர் தீயவர் ஆகிவிட மாட்டார். சோனியாவின் மாமியார் டெல்லியில் கட்சியில் அதிகாரம் செய்து வந்த நாட்களிலேயே கேரளா முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்தவர் அவர்.”

  அன்புள்ள அத்விகா அவர்களுக்கு,

  தங்களது பாராட்டுகளுக்கு நன்றி,அந்தோணியை பற்றி சில விசயங்களை நான் கூற விரும்புகிறேன்,அந்தோனி பாதுகாப்பு அமைச்சராகி சுமார் 6 ஆண்டுகள் ஆகின்றன, ஆனால் சில மாதங்களுக்கு முன்னர் நமது முன்னாள் ராணுவ தளபதி திரு வீ.கே.சிங் அவர்கள் இந்திய இராணுவத்தின் பலத்தினை அப்பட்டமாக்கிய போது ஏதும் சொல்ல முடியாமல் சப்பை கட்டு கட்டியவர் தானே இவர், …இவர் ஒரு நல்ல மனிதர் நல்ல நிர்வாகியாக இருந்திரிந்தால் கண்டிப்பாக நமது ராணுவ பலத்தினை இந்த 6 ஆண்டுகளில் பல மடங்கு முன்னேற்றி இருக்கலாமே ஏன் செய்ய வில்லை… தற்போது திடிரென்று சில ஆயுத விற்பனை நிறுவனங்களின் ஒப்பந்தங்களை ரத்து செய்கிறார் கேட்டால் லஞ்சம் கொடுத்து ஒப்பந்தம் பெற்றார்கள் என்கிறார் அதுவும் இவர் பதவிகாலத்தில் தான் அந்த ஒப்பந்தங்கள் உருவாகி இருக்கிறது…..சோனியாவின் மாமியார் இருக்கும் போது ராஜினாமா செய்தவர் சோனியா இருக்கும்போதும் செய்ய வேண்டியதுதானே ..இந்த ஆட்சியிலே நடக்கும் கூத்துகள் எல்லாம் பார்த்த பிறகு எப்படி ஒரு மகோன்னதமான நேர்மையாளர் இந்த ஆட்சியின் ஓர் அங்கமாக இருக்க முடியும்…..கொள்ளையர் கூட்டத்தில் நல்லவனுக்கு என்ன வேலை………. ஒரு வேளை மரியாதைக்குரிய மனிதர் குல மகாபிறவியான நமது பிரதமரின் வழிகாட்டுதலின்படி நடக்கிறாரோ என்னவோ..

  திரு வாஜ்பாயின் ஆட்சியிலே தி. மு.க. இடம் பெற்றதென்னோவோ உண்மைதான் ஆனால் அப்போது அவர்களால் இப்போது செய்வதை போல ஊழல் செய்ய முடியவில்லை அதனால் தான் அவர்கள் இந்த பக்கம் தாவினார்கள், திரு.வாஜ்பாயின் ஆட்சி காலத்தில் எந்த ஊழல் குற்றச்சாட்டுகளும் இல்லையே..ஆனால் மொராஜியின் காலத்தில் அவரின் சொந்த மகனின் மீதே ஊழல் உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டதே அதே அரசில் மது தண்டவதே,சரண் சிங் போன்ற புல்லுரிவிகளும் இருந்தார்களே..

  குற்றத்தை செய்பவன் மட்டுமல்ல உடந்தையாக இருப்பவனும் குற்றவாளியே

  நமஸ்காரம்,
  Anantha Saithanyan

 8. ” மொரார்ஜியின் காலத்தில் அவரின் சொந்த மகனின் மீதே ஊழல் உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டதே அதே அரசில் மது தண்டவதே,சரண் சிங் போன்ற புல்லுரிவிகளும் இருந்தார்களே..” –

  அன்புள்ள அனந்த சைதன்யன் அவர்களுக்கு,

  எமெர்ஜென்சியின் பின்விளைவாக தோற்றுப்போன இந்திரா , 1980 -ஆம் வருடம் மீண்டும் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து வெற்றி பெற்றுவிடக்கூடாது என்பதற்காக பல சதித்திட்டங்களை தீட்டினார். அவற்றில் ஒன்று தான், மொரார்ஜி தேசாய் அவர்களின் மகன் மீது வைத்திலிங்கம் கமிஷன் என்று ஒரு கமிஷனைப்போட்டு காலம் கடத்தினார். அந்த கமிஷன் அறிக்கை இந்திராவிடம் கொடுக்கப்பட்ட பிறகு, நீதிமன்றத்தில் ஒரு குற்றமும் சொல்லப்படவில்லை. சரண் சிங்கு ஒரு புல்லுருவிதான். ஆனால் மதுதந்தவதே அப்படி அல்ல. ஜனதாவில் இருந்த ஸ்தாபன காங்கிரசை சேர்ந்த மொரார்ஜி குழு, ஜனசங்க குழு ஆகிய இந்த இரண்டு குழுக்களை தவிர, ஜகஜீவன் ராமின் காங்கிரஸ் பார் டெமாக்ரசி ,ஜார்ஜு பெர்னாண்டசின் சோஷலிஸ்டு கட்சி , சரண்சிங்கின் கட்சி இவை எல்லாமே புல்லுருவிகள் தான். மொரார்ஜி ஒரு அப்பழுக்கற்ற மனிதர். திமுகவினர் மீதான சர்க்காரியா கமிஷன் நடவடிக்கைகளில் தலையிட்டு திமுகவினருக்கு சாதகமாக செயல்பட மொரார்ஜி தேசாய் மறுத்ததால் தான், கருணா நேருவின் மகளின் நிலையான ஆட்சி வேண்டும் என்று சொல்லி, சென்னை முப்பெரும் விழாவில், பாய் விரித்தார்.

 9. அன்புள்ள அத்விகா அவர்களுக்கு,

  நீங்கள் என்னதான் சொன்னாலும் அந்தோணியை நேர்மையாளர் என்று ஒப்புக்கொள்ள முடியவில்லை ,மொராஜி நல்லவர்தான்,ஆனால் அவர் கூட இருந்தவகர்களை ஏற்றுகொள்ள முடியவில்லை(ஹிந்துத்துவ தலைவர்களை தவிர்த்து)…நம் இருவரது இறுதி நோக்கங்கள் ஒன்றுதான் என்பதை என்னால் பூரிந்து கொள்ள முடிகிறது…..உங்களை போன்ற அறிவார்ந்தவர்களிடம் சில கருத்து பரிமாற்றங்களை கொண்டதற்காக பெருமையடைகிறேன் ….இந்த வாய்ப்பை கொடுத்ததற்காக தமிழ் ஹிந்துவிற்கு நன்றிகள் ………..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *