சுவாமி விவேகானந்தரின் எழுச்சியூட்டும் சிந்தனைகள்
தொகுப்பு: ஏகநாத் ரானடே (Rousing call to the Hindu nation)
தமிழில்: ஆர்.கோபாலன்
வெளியீடு: விவேகானந்த கேந்திர பிரகாசன் டிரஸ்ட், சென்னை.
தொடர்ச்சி..
அழிவற்ற நமது ஞானநிதி- நமது நம்பிக்கைக்கான விஷயம்:
உபநிடதங்களே நமது ஞான நூல்கள்.
ஒருவனுடைய தத்துவமோ, சமயப் பிரிவோ எதுவாக இருந்தாலும் பாரதத்திலுள்ள ஒவ்வொருவரும் தான் சொல்லுகிற கருத்துக்கு உபநிடதங்களில் பிரமாணத்தைத் தேடிக் காட்ட வேண்டும். அவன் அவ்வாறு காட்டாமற் போனால் அந்தச் சமயப்பிரிவு ஒப்புக்கொள்ளப்படாமற் போய்விடும். ஆதலால் தற்காலத்தில் நாடு முழுவதிலுமுள்ள ஹிந்துவைக் குறிப்பதற்காக ‘வேதாந்தி’ அல்லது ‘வைதிகன்’ என்ற சொல் பொருத்தமென நினைக்கிறேன். இந்தக் கருத்துடன்தான் நான் வேதாந்த தத்துவம், ‘வேதாந்தம்’ என்ற சொல்லை எப்பொழுதும் உபயோகித்து வருகிறேன்.
பௌத்தர்கள், ஜைனர்கள் ஆகியோரின் தத்துவ சிந்தனையை விளக்கும் நூல்களில்கூட சுருதிகளின் (உபநிடதங்களின்) ஆதாரத்தை அவர்கள் புறக்கணிக்கவில்லை. பௌத்தர்களிடையே சில சம்ப்ரதாயத்தை, உட்பிரிவுகளைச் சார்ந்தவர்களும், அத்துடன் பெரும்பாலான ஜைன நூல்களும், சுருதிகளின் பிரமாணத்தை முற்றிலும் ஒப்புக்கொண்டிருக்கின்றன. சில சுருதிகள் “ஹிம்ஸக சுருதிகள்” என்றும் அவற்றைப் பிராம்மணர்கள் இடைச்செருகலாக நுழைத்தார்கள் என்றும் கூறி அவற்றை மட்டும் அவர்கள் ஏற்பதில்லை.
உபநிடதங்கள் – சக்தியின் சுரங்கம்:
சக்தி- சக்தியைத்தான்- உபநிடதங்களின் ஒவ்வொரு பக்கமும் எனக்குக் கூறுகிறது. நினைவிற் கொள்ளவேண்டிய ஒரு பெரிய விஷயம் இது. எனது வாழ்க்கையில் நான் கற்ற ஒரு பெரிய பாடம் இது. “மனிதனே! சக்தியுடனிருப்பாயாக; பலவீனனாக இராதே!” என்ற பாடத்தையே நான் கற்றிருக்கிறேன்.
கடந்த ஆயிரம் ஆண்டுகளாக எவை எவை நம் இனத்தைப் பலவீனப்படுத்துமோ அவற்றுக்கெல்லாம் நாம் இடங்கொடுத்து விட்டோம். அந்தக் காலகட்டத்தில், நமது தேசிய வாழ்க்கைக்கு ஒரே ஒரு நோக்கம்தான் இருந்தது போலும். அதாவது நம்மைப் பலவீனப்படுத்தித் தாழ்த்தித் தாழ்த்தி நாம் மண்புழுவாகவே ஆகும் வரை, தாழ்த்துவதுதான் நோக்கம் போலும்! யார் வேண்டுமானாலும் கேவலமாக நம்மை நினைத்து, ஊர்ந்து வரும் நம்மைக் காலால் மிதிக்கும் அளவுக்கு பலவீனர்களாகிவிட்டோம்.
ஆதலால் சகோதரர்களே! உங்களில் ஒருவன் என்ற நிலையில் உங்களுடன் சேர்ந்து வாழ்ந்து மடிகிற நான் கூறுகிறேன்; கேளுங்கள்! நாம் வேண்டுவது சக்தி. சக்தி, ஒவ்வொரு முறையும் சக்தியே வேண்டும். உபநிடதங்கள் சக்திக்குப் பெரும் சுரங்கமாகும். உலகம் முழுவதற்கும் வீரம் அளிக்கப் போதுமான அளவு சக்தி இதற்கு உண்டு. இதைக் கொண்டு உலகம் அனைத்தையும் புத்துயிர் பெறச்செய்ய, பலம் பெறச்செய்ய, சக்தித் துடிப்புப் பெறச்செய்ய முடியும்.
எல்லா இனத்தவரிடையேயும், எல்லா மதத்தினரிடையேயும், எல்லாச் சமயப் பிரிவினரிடையேயும் உள்ள பலவீனர்களான, துன்பத்தால் நலிந்த, ஒடுக்கப்பட்ட மக்களை இது போர் முரசு கொட்டி அழைத்து, உங்களையே நம்பி எழுந்து நின்று விடுதலை பெறுங்கள் என்று முழங்கும். விடுதலை- உடலுக்கு விடுதலை, மனதுக்கு விடுதலை- ஆத்மாவுக்கு விடுதலை, இவையே உபநிடதங்களின் மூல மந்திரமாகும்.
சந்நியாச வாழ்வையே உபநிடதங்கள் பேசின என்ற தப்புக் கருத்து:
“ஓ! உபநிடதங்கள் சந்நியாசிகளுக்குத்தான்! அவை பரமரகசியம்!” என்கிறார்கள். உபநிடதங்கள் சந்நியாசியின் கையை அடைந்தன. அவரோ காட்டுக்குள் போய்விட்டார்! சங்கரர் கொஞ்சம் கருணை வைத்து “கிருஹஸ்தர்களும்கூட அதனைப் படிக்கலாம். அதனால் அவர்களுக்கு நன்மைதான் ஏற்படும், கெடுதல் உண்டாகாது” என்றார். அப்படிச் சொன்ன பிறகும் கூட உபநிடதங்கள் சந்நியாசியின் காட்டுவாழ்க்கையைப் பற்றிய விஷயங்களையே கூறுகின்றன என்ற கருத்து உள்ளது.
வேதத்தை உணர்த்திய ஸ்ரீகிருஷ்ணனே வேதங்களுக்கு பாஷ்யத்தை, ஒரே ஆதாரபூர்வமான பாஷ்யத்தை, கடைசி முடிவாகக் கீதையின் மூலம் இயற்றினார். அது எல்லா மக்களுக்கும், எல்லாவிதமான தொழில் செய்கிறவர்களுக்கும் பொருந்தும். வேதாந்தத்தின் உயரிய இந்தக் கருத்துகள் வெளியில் வரவேண்டும். அவை காடுகளிலும், குகைகளிலும் வசிக்கும் சாதுக்களிடம் மாத்திரமில்லாமல், எங்கும் பரவி, வழக்கறிஞரிடமும், நீதிபதியிடமும், பிரசங்க மேடையிலும், ஏழையின் குடிசையிலும், மீன் பிடிக்கும் மீனவரிடமும், படிக்கிற மாணவர்களிடமும் குடிகொண்டு அவர்களை இயக்க வேண்டும்.
செம்படவர்கள் போன்றவர்கள் எல்லாம் எப்படி உபநிடதங்கள் காட்டும் லட்சியங்களைத் தமது வாழ்வில் பின்பற்ற முடியுமென்று கேட்கலாம். இதற்கு வழிகாட்டபட்டிருக்கிறது. செம்படவன் தன்னை ஆத்மாவென நினைத்தால் அவன் மேலும் திறமையுள்ள மீனவன் ஆவான்; மாணவன் தன்னை ஆத்மாவென நினைத்தால் இன்னும் நல்ல மாணவன் ஆவான். வழக்கறிஞர் தம்மை ஆத்மாவென நினைத்தால் மேலும் சிறந்த வழக்கறிஞராவார்.
ஆத்மா பரிபூரணமானது என்ற அற்புதமான தத்துவம்:
நாம் சர்வசக்திவாய்ந்த பரம்பொருளின் குழந்தைகள். நாம் ஆதியந்தமற்ற, தெய்வீகஜோதியின் பொறிகள். நாம் எவ்வாறு சக்தியற்றவர்களாக இருக்கமுடியும்? நாம் சர்வசக்தி வாய்ந்தவர்கள். எதை வேண்டுமானாலும் செய்யச் சித்தமாக இருக்கிறோம். எல்லாவற்றையும் செய்ய முடியும். மனிதனால் சாதிக்க முடியாதது ஒன்றுமில்லை.
ஆதலால் இந்த உயிரைக் காக்கிற, மகத்தான, கம்பீரமான, பிரமாதமான தத்துவத்தை உங்கள் குழந்தைகளுக்குப் பிறவி முதலே கற்பியுங்கள். அத்வைத சித்தாந்தத்தைத்தான் அவர்களுக்கு போதிக்கவேண்டுமென்று நான் சொல்லவில்லை. துவைதத்தையோ அல்லது நீங்கள் விரும்பும் வேறு எந்தச் சித்தாந்தத்தை வேண்டுமானாலும் அவர்களுக்குக் கற்பியுங்கள். ஆனால் நாடு முழுவதுக்கும் பொதுவான ஒரு தத்துவம் உள்ளது எனக் கண்டோம். அதுதான் எல்லாப் பிரிவினராலும் பொதுவாக நம்பப்படுகிற ஆத்மாவைப் பற்றிய தத்துவம். அதுதான்- “ஆத்மா சுயமாகவே பரிபூரணமாக உள்ளது” என்பது.
நம் முன்னோர்களது உள்ளத்தில் இத்தகைய நம்பிக்கை இருந்தது. தன்னம்பிக்கைதான் உயர்ந்த நாகரிகத்தை எய்துகிற யாத்திரையிலே அவர்களை முன்னேறிச் செல்ல உந்தித் தள்ளும் சக்தியாக இருக்கிறது. நான் கூறுவதைக் கவனியுங்கள். இப்பொழுது நமது மக்களிடையே வீழ்ச்சி காணப்படுகிறது. குறை காணப்படுகிறது என்றால் அதற்குக் காரணம் இத்தன்னம்பிக்கையை நாம் இழந்ததே. நாம் இந்தத் தன்னம்பிக்கையை இழந்த நாள் முதலே நமது வீழ்ச்சியும் துவங்கியது உங்களுக்குத் தெரியவரும். ஒருவன் தன்னம்பிக்கையை இழப்பது தெய்வ நம்பிக்கையை இழப்பதற்குச் சமானமாகும்.
மனிதனுடைய நம்பிக்கையின் அபாரசக்தி:
நான் மேல்நாடுகளில் கற்றது என்ன? கிறிஸ்தவப் பாதிரிகள் மனிதன் மீளமுடியாத மகாபாவி என்றும், வீழ்ந்தவன் என்றும், திரும்பத் திரும்ப உபயோகமற்ற வார்த்தைகளைச் சொல்லிக் கொண்டிருந்தாலும்கூட மக்கள் மனதில் நான் கண்டதென்ன என்று உங்களுக்குத் தெரியுமா? ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலுமுள்ள மக்களின் மனத்திலே, நாட்டின் உள்ளத்திலே, அளவற்ற தன்னம்பிக்கை குடிகொண்டிருப்பதுதான்.
“நான் ஓர் ஆங்கிலேயன், எதையும் என்னால் செய்துமுடிக்க முடியும்” என்று ஓர் ஆங்கிலச் சிறுவன் கூறுவான். அமெரிக்கச் சிறுவனும் ஐரோப்பியனும்கூட அவ்வாறே கூறுவார்கள். இங்கே நமது சிறுவர்கள் அப்படிச் சொல்லுவார்களா? முடியாது. அவர்களுடைய தந்தையர்கூட அப்படிச் சொல்லமாட்டார்களே! நாம் அந்த அளவுக்கு தன்னம்பிக்கையை இழந்துவிட்டோம்.
தன்னம்பிக்கையாகிற லட்சியம் நமக்கு மிக அதிகமாகத் துணைபுரியக்கூடிய லட்சியமாகும். இந்தத் தன்னம்பிக்கை முற்காலத்தில் இன்னும் பரவலாகக் கற்பிக்கப்பட்டும், கடைப்பிடிக்கப்பட்டும் வந்திருக்குமாயின், நம்மைச் சூழ்ந்துள்ள தீமைகளிலும் துன்பங்களிலும் பெரும்பகுதி மறைந்து போயிருக்கும் என்று நான் நிச்சயமாகக் கருதுகிறேன். உலக மக்களின் வரலாற்றில் ஏதாவதொரு சக்தி, எல்லாப் பெரியோர்களான ஆண், பெண்களின் வாழ்க்கையிலும் உந்தித் தள்ளும் சக்தியாக அமைந்திருக்கிறது என்றால் அது அவர்களது தன்னம்பிக்கைதான். நாம் உயர்ந்தோரென ஆவதற்காகப் பிறந்திருக்கிறோம் என்ற விழிப்புணர்ச்சி காரணமாக அவர்கள் உயர்தோராயினர்.
சாதாரண குமாஸ்தா ஒரு பேரரசின் ஸ்தாபகனாகிறான்:
ஒரு மனிதன் எவ்வளவு மட்டமான இழிநிலைக்கு வேண்டுமானாலும் தாழட்டும். அவனது வாழ்விலும் ஒரு காலம் வந்தே தீரும். அப்பொழுது அவன் வெறும் அலுப்புச் சலிப்பின் காரணமாக மனம் வெறுத்து, மேல் நோக்கி எழுவான். தன்னம்பிக்கை கொள்ளக் கற்றுக்கொள்வான். ஆனால் ஆரம்ப நிலையிலே அதனை அறிந்துணர்வது மிக நல்லதாகும்; நமக்குத் தன்னம்பிக்கை ஏற்படுவதற்காக எல்லாவிதமான கசப்பான அனுபவங்களையும் எதற்காக நாம் அனுபவிக்க வேண்டும்? மனிதர்களிடையே இருக்கும் வித்தியாசமெல்லாம் இந்தத் தன்னம்பிக்கை இருப்பதையும் இல்லாமையையும் பொருத்துதான் இருக்கிறது.
பாரதத்துக்கு ஓர் ஆங்கிலேயன் வந்தான். அவன் ஒரு வெறும் குமாஸ்தாவாக இருந்தான். வறுமையின் காரணமாகவோ அல்லது வேறெது காரணமாகவோ, அவன் இரண்டு தடவை மூளையில் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொள்ள முயன்றான். அதில் அவன் குறி தவறிப்போனதும், ஏதோ அரிய செயல்களைச் செய்வதற்காகவே தான் பிறந்திருப்பதாக நம்பி தன்னம்பிக்கை கொண்டான். அந்த மனிதன்தான் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை இங்கே நிறுவிய லார்டு கிளைவ்.
நடைமுறை வாழ்வில் அத்வைதம்:
ஆகையால் தன்னம்பிக்கை கொள்ளுங்கள். உலகியல் செல்வம் வேண்டுமென்றால் அத்வைதத்தின் மூலம் வேலை செய்யுங்கள். அது உங்களை வந்து அடையும். நீங்கள் அறிவிற் சிறந்த மேதாவியாக ஆக விரும்பினால் அத்வைதத்தை அறிவுத் துறையில் உபயோகியுங்கள். அறிவிற் சிறந்த மேதையாவீர்கள். முக்தியடைய விரும்பினால், ஆன்மிகத் துறையில் அதனைப் பிரயோகம் செய்யுங்கள். நீங்கள் விடுதலை பெற்று முடிவற்ற பேரின்ப நிலையாகிற நிர்வாண நிலையை எய்துவீர்கள்.
இதுவரை அத்வைதைம் ஆன்மிகத் துறையில் மட்டும் பின்பற்றப்பட்டு வந்தது. வேறெங்குமில்லை. இது ஒரு குறையாகும். இப்பொழுது அன்றாட உலகியல் வாழ்க்கையிலும் நடைமுறையில் பின்பற்றத் தக்கதாக நீங்கள் அதனை ஆக்க வேண்டும். அதற்கான காலம் இப்பொழுது வந்துள்ளது. இதுவரை இருந்தது போல் குகைகளிலும் காடுகளிலும் இமயத்திலும் வாழும் சந்நியாசிகளிடமும் அது இரகசியமாக இராது. நடைமுறை வாழ்க்கை நிலைக்கு இறங்கி வந்து அதில் புகுந்து வேலை செய்யும். அரசர்களின் அரண்மனையிலும், துறவியின் குகையிலும், ஏழையின் குடிசையிலும், தெருவிலுள்ள பிச்சைக்காரர்களிடமும், எல்லாவிடங்களிலும், எந்த இடத்தில் வேண்டுமானாலும் அந்தக் கொள்கைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.
(தொடரும்…)
அருமையான விளக்கங்கள், அபாரமான மொழி நடை, அளவிடற்கரிய கருத்து பொக்கிஷங்கள்! அருமை தொடரட்டும் உங்கள் பணி! வெல்லட்டும் நமது சித்தாந்த கோட்பாடுகள்!