எழுமின் விழிமின் – 18

சுவாமி விவேகானந்தரின் எழுச்சியூட்டும் சிந்தனைகள்

தொகுப்பு: ஏகநாத் ரானடே (Rousing call to the Hindu nation)

தமிழில்: ஆர்.கோபாலன்

வெளியீடு: விவேகானந்த கேந்திர பிரகாசன் டிரஸ்ட், சென்னை.

<< முந்தைய பகுதி

தொடர்ச்சி..

மறுமலர்ச்சிப் பெரும் பணி-2

செயலுக்கான திட்டம்

“தானமே இந்தக் கலியுகத்தில் ஒரே நல்லபணி; ஆத்மீக வாழ்வு அளிப்பது தானங்களிலெல்லாம் தலை சிறந்த தானமாகும்; அடுத்த தரத்திலுள்ள தானம் உலகியல் ஞானத்தை அளிப்பதாகும்; அதற்கு அடுத்த படியில் உள்ளது ஒரு மனிதனின் உயிரைக் காப்பாற்றுவது என்ற தானம்; கடைசியாக உள்ளது பசித்தவர்களுக்கு உணவு அளிக்கும் தானமாகும்.” என்று வியாசர் கூறுகிறார்.

நாம் போதுமான உணவு அளித்து வந்துள்ளோம். நம்மை விட அதிகமான ஈகைக்குணம் வாய்ந்த தேசம் எதுவும் இல்லை. பிச்சைக்காரன் கூடத் தனது வீட்டில் சிறு துண்டு ரொட்டி இருக்கிற வரையில் அதில் பாதியை தானம் செய்துவிடுவான். இத்தகைய அதிசயத்தை பாரத தேசத்தில் மட்டுமே காணமுடியும். உணவை தானம் செய்தது போதும். மற்றுமுள்ள இரண்டு தானங்களாகிய ஆத்மீக ஞானத்தையும் உலகியல் ஞானத்தையும் அளிக்க முற்படுவோம்.

நம்மிடம் வீரமிருந்து நமது உள்ள உறுதி குலையாததாக இருக்குமாயின் பரிபூரண உண்மை உள்ளத்துடன் நாம் இந்த வேலையாகிற சக்கரத்தில் நமது தோள்களைப் பதிய வைத்து தள்ளுவோமாயின் இருபத்தைந்து ஆண்டுகளில் பிரச்சனை தீர்ந்துவிடும். போராடுவதற்கு எதுவும் எஞ்சி இராது. பாரத தேசம் முழுவதும் மீண்டும் ஒருமுறை ஆரியபூமியாகிவிடும்.

நான்கு கொடைகள்

வியாசரை நான் போற்றி வணங்குகிறேன். மகாபாரதத்தை இயற்றியவரான வேத வியாசர் கூறுகிறார். இந்த கலியுகத்தில் அரிய சாதனை ஒன்று இருக்கிறது. மற்ற யுகங்களில் அனுஷ்டிக்கப்பட்டுவந்த தபோமுறைகளும் கடினமான யோக அனுஷ்டானங்களும் இக்காலத்தில் அனுஷ்டிக்கக் கூடியனவாக இல்லை. இக்காலத்தில் நாம் செய்யக் கூடிய உயர்ந்த சாதனை தானதர்மம்தான். தானங்களிலெல்லாம் தலையாயது ஆத்மீக ஞானம் புகட்டுவதுதான். அதற்கடுத்து உலகியல் ஞானம் கற்பித்தல்; அதற்கு அடுத்து ஒருவனது உயிரைக் காப்பாற்றுதல்; கடைசியாக உணவும் நீரும் அளித்தல்.

ஆத்மீக ஞானம் அளிப்பவன் ஒரு ஆத்மாவை பல பிறவிகளிலும் பிறந்து உழலாமல் காப்பாற்றுகிறான். உலகியல் அறிவு புகட்டுபவன் ஆத்மீக ஞானத்தை அடைவதற்காக மனிதர்களின் கண்களைத் திறந்துவிடுகிறான். மற்ற தானங்களெல்லாம் -உயிரைக் காப்பாற்றுதல் கூட- இந்த இரு தானங்களைக் காட்டிலும் மிகத் தாழ்ந்த படிகளில்தான் உள்ளன. ஆதலால் ஆத்மீக அறிவைப் புகட்டுதலே அனைத்திலும் சிறந்த பணி. நாம் செய்யக் கூடிய மற்றவிதமான தொண்டுகளெல்லாம் தாழ்ந்தவை என்பதை நீங்கள் அறிந்துணர வேண்டியது அவசியம்.

மனிதனுக்கு ஆத்மீகஞானம் அளிக்கிறவன்தான் மனித குலத்துக்குப் பேருபகாரம் செய்தவனாவான். ஆத்மீக முறையே நமது வாழ்க்கையின் எல்லா நடவடிக்கைகளுக்கும் உண்மையான அஸ்திவாரமாகும். ஆகவேதான் மனிதனின் ஆத்மீகத் தேவைகளில்  உதவி செய்தவர்கள் மிகுந்த சக்தியும் செல்வாக்கும் பெற்று விளங்கினார்கள். ஆத்மீகத் துறையில் பலத்துடனும் அசைக்கமுடியாமலும் விளங்குகின்ற மனிதன், தான் விரும்பினால், மற்றெல்லா துறைகளிலும் கூட வலிமையுடன் விளங்க முடியும். மனிதனுக்கு ஆத்மீக பலம் ஏற்படுத்துகிறவரை அவனால் தனது வாழ்க்கையின் உலகியல் தேவைகளைக் கூட நன்கு பூர்த்தி செய்து கொள்ளமுடியாது.

சமயத்தைப் பரப்புதல் அல்லது ஆத்ம ஞானத்தைப் பரப்புதல்:

முதலாவது தான தர்மம்.

இது தான தர்ம பூமி. இந்நாட்டில் ஆத்மீக ஞானத்தைப் பரப்புகிற முதல் தானப் பணியை ஊக்கமுடன் ஏற்றெடுப்போம். ஆத்ம ஞானத்தைப் பரப்பும் பணியை இந்நாட்டு எல்லைக்குள் மாத்திரம் கட்டுப் படுத்தி வைக்கக் கூடாது. அது உலகமெங்க்கும் பரவ வேண்டும். அது தான் நமது மரபு, பழக்கம்.

பாரதத்தின் உயர்ந்த சிந்தனைகள் ஒரு காலத்திலும் பாரதத்தை விட்டு வெளிச்செல்லவில்லை என்றும், அன்னிய நாடுகளுக்கு உபதேசம் செய்வதற்காக முதன்முதலில் வெளியேறிச் சென்ற சன்னியாசி நான் தான் என்றும் யாராவது உங்களிடம் சொன்னால், அவர்கள் தமது இனத்தின் வரலாற்றை அறியாதவர்களேயாவர். இந்த அறுபுத நிகழ்ச்சி பல தடவை நிகழ்ந்துள்ளது. எவ்வெப்பொழுதெல்லாம் உலகம் இத்தகைய உதவியைக் கோரிற்றோ அவ்வப்பொழுதெல்லாம் இந்நாட்டினின்றும் என்றும் அழியாத வெள்ளமான ஆத்மீக சக்தி பொங்கி வழிந்து உலக முழுவதையும் வெள்ளக் காடாக்கியிருக்கிறது.

சமயம் வீடுதோறும் தடையின்றி வழங்கப் படவேண்டும்:

நெடுங்காலமாக நம் நாட்டில் சமயம் முன்னேற்றமில்லாத ஒரு தேக்க நிலையில்; இருந்து வந்துள்ளது. நாம் அதனை மிகுந்த சக்தித் துடிப்புள்ளதாக ஆக்க விரும்புகிறோம். ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் சமய உணர்ச்சி புகுந்து வேலை செய்ய வேண்டுமென நான் விரும்புகிறேன். முற்காலத்தில் இருந்தது போல இக்காலத்திலும் அது மன்னர்களின் அரண்மனையிலும் பாமர ஏழைகளான குடியானவர்களின் குடிசையிலும் நுழைந்து வேலை செய்ய வேண்டும்.

சமயமானது நமது மக்களினத்தின் பொதுச் சொத்து ஆகும். அவர்களது பொதுவான பிறப்புரிமையாகும். அதனை ஒவ்வொரு வீடுதோறும் எவ்வித தடையுமின்றிக் கொண்டு செல்லல் வேண்டும். கடவுள் அளித்துள்ள காற்றைப் போல சமயத்தை எல்லோருக்கும் எளிதில், தடையின்றிக் கிடைக்கச் செய்ய வேண்டும். பாரதத்தில் நாம் இத்தகைய பணியையே நடத்திவர வேண்டும். நமது சமயத்துக்குள் சிறு உட்பிரிவுகளை உண்டாக்குவதன் மூலமோ, வேறுபாடுகளைப் பற்றிச் சண்டையிடுவதன் மூலமோ அதனைச் செய்ய முடியாது. நம் அனைவருக்கும் பொதுவாக உள்ள கொள்கைகளையே நாம் மையமாகப் பிரசாரம் செய்ய வேண்டும்.

உண்மையைப் புகட்டினால் பொய்மை மறைந்தே தீரும்

பல நூற்றாண்டுகளாக இருள்: அடைந்த ஒரு அறைக்குள் சென்று, “இருட்டாக இருக்கிறதே” என்று எவ்வளவு தான் கூக்குரலிட்டாலும் அவ்விருள் நீங்கி விடுமா? ஒரு விளக்கைக் கொண்டு வாருங்கள். உடனே இருள் நீங்கும். மனிதர்களைச் சீர்திருத்தும் ரகசியம் இது தான்.

vivekananda

முதலில் மனிதனிடம் நம்பிக்கை வையுங்கள். அவனிடம் குற்றங்குறைகள் இருக்குமானால், அவன் தவறுகள் செய்தால், அவன் காட்டுமிராண்டித் தனமான அல்லது மிகக் குரூரமான கொள்கைகளைத் தழுவி வாழ்ந்தால், அவனது உண்மையான சுபாவத்திலிருந்து அவை தோன்றவில்லை என்றும், உயர்ந்த லட்சியங்கள் அவனுக்கு உணர்த்தப் படாமையால் தான் இந்த இழிநிலை வந்தது என்றும் நம்புங்கள்.

அவனுக்கு சத்தியத்தைப் புகட்டுங்கள். அத்துடன் உங்கள் வேலை முடிந்தது. தன்னிடம் முன்னரே உள்ள கருத்துக்களுடன் அவன் இதனை ஒப்பிட்டுப் பார்க்க விட்டுவிடுங்கள். நான் சொல்வதைக் கவனித்துக் கொள்ளுங்கள். நீங்கள் உண்மையிலேயே அவனுக்கு சத்தியத்தைப் புகட்டியிருப்பீர்கள் ஆயின், பொய் மறைந்தே தீரும். சத்தியம் நல்லனவற்றை நிச்சயமாக வெளிக் கொணர்ந்து விடும்.

நாட்டை ஆத்மீகத் துறையில் சீர்திருத்த நீங்கள் விரும்பினால் இதுவே வழி. சண்டையிடுவதோ, நீங்கள் செய்வது தவறு என்று மக்களிடம் சொல்வதோ பரிகாரமாகாது. நல்லனவற்றை அவர்கள் முன்பு வையுங்கள். எவ்வளவு ஆவலுடன் அவர்கள் அவற்றை ஏற்கிறார்கள் என்று பாருங்கள். மனித உள்ளத்தில் எப்பொழுதும் ஆவலுடன் அவர்கள் அவற்றை ஏற்கிறார்கள் என்று பாருங்கள். மனித உள்ளத்தில் எப்பொழுதும் அழியாமல் வாழ்ந்து வரும் தெய்வீக சக்தி விழித்து எழுந்து தனது கைகளை நீட்டி, நல்லன அனைத்தையும் உயர்ந்தன அனைத்தையும் பெற்றூக் கொள்ள முன்வருவதைக் காண்பீர்கள்.

புத்தகங்களில் மறைந்துள்ள ஆத்மீக மணிமொழிகள் – அவற்றை வெளிப்படுத்த வேண்டும்:

என்னுடைய முதல் எண்ணம் இதுதான். ஆத்மீக வாழ்க்கைக்குத் தேவையான ஞானத்தைக் கற்பிக்கும் மணிமொழிகள் பல நமது சமய நூல்களில் நிறைந்திருக்கின்றன. இப்பொழுது அவை சாதாரண மக்களுக்கு எட்டாத இடங்களில் மடாலயங்களிலும் காடுகளிலும் – ஒரு சிலரது கைவசமே உள்ளன. இந்த ஞான மணிகள் வெளிக் கொணரப்பட வேண்டும். அவற்றிலுள்ள ஞானம் வெளிவர வேண்டும். மறைந்திருக்கிற இடத்திலிருந்து மட்டுமல்ல; நமக்கெட்டாத பெட்டியான ஒரு மொழியில் அந்த ஞானம் பாதுகாக்கப் பட்டு வந்துள்ளது. அந்த ஞானமணி பல நூற்றாண்டுகளாக சம்ஸ்கிருதச் சொற்களால் அலங்காரம் பண்ணப் பட்டு மூடிவைக்கப் பட்டிருக்கிறது. ஒரே சொல்லில் குறிப்பிட்டால், அந்த ஞானமணீயை எல்லோருக்கும் கிடைக்கும்படி நாம் செய்ய வேண்டும்.

இதிலுள்ள பெரும் கஷ்டம் சம்ஸ்கிருத மொழி தான். அது புகழ்பெற்ற நமது மொழி. முடியுமானால் – இந்த தேசமக்கள் அனைவரும் நல்ல சம்ஸ்கிருத வல்லுனர் ஆகிறவரை, இந்தக் கஷ்டம் தீராது.

சம்ஸ்கிருதத்தைப் பொதுமக்களீடம் பரப்ப வேண்டும்:

நான் எனது ஆயுளெல்லாம் இம்மொழியைப் பயின்றிருக்கிறேன். இருப்பினும் கூட எனக்கே ஒவ்வொரு புதிய புத்தகமும் புதிதாக உள்ளது என்றால் அதிலுள்ள கஷ்டம் உங்களுக்குத் தெரியவரும். இந்நிலையில் சம்ஸ்கிருத மொழியை ஆழ்ந்து கற்க நேரமில்லாத மக்களுக்கு இனும் எவ்வளவு அதிகமான கஷ்டமிருக்கும்! ஆகையால் மக்களது தாய்மொழியில் இந்தக் கருத்துக்களைக் கற்பிக்க வேண்டும். அதே நேரத்தில் சம்ஸ்கிருதமும் அதனுடன் சேர்த்துக் கற்பிக்கப் பட வேண்டும். ஏனெனில், சம்ஸ்கிருத சொற்களின் தொனியினாலேயே இந்த மக்களினத்திற்கு ஒரு கௌரவ உணர்ச்சியும், ஆற்றலும், சக்தியும் கிடைக்கின்றன.

ஸ்ரீராமானுஜர், சைதன்யர், கபீர் ஆகியோர் நம் நாட்டின் கீழ்நிலையிருந்த மக்களை உயர்த்துவதற்காகச் செய்த முயற்சிக்கு, அந்த மகாபுருஷர்களுடைய வாழ்நாளுக்குள்ளேயே வியக்கத்தக்க பலன் கிடைத்தது. எனினும் அந்த மகான்கள் மறைந்த பிறகு, ஒரு நூற்றாண்டுகளுக்குள்ளேயே அவர்களது உபதேசத்தின் சக்தி தீர்ந்து, நீர்த்துப் போனது ஏன்? தோல்வியின் காரணத்தைக் காட்டி நாம் விளக்கத் தான் வேண்டும்.

ரகசியம் இது தான். தாழ்நிலை மக்களை அவர்கள் உயர்த்தினார்கள். மக்கள் முன்னுக்கு வரவேண்டும் என்றெல்லாம் ஆசைப்பட்டார்கள். ஆனால் பாமர மக்களிடையே சம்ஸ்கிருத மொழியைப் பரப்ப அவர்கள் தமது சக்தியைப் பயன்படுத்தவில்லை. பாமர மக்கள் சம்ஸ்கிருத மொழி பயிலாமல் மகாத்மா புத்தர் தடுத்த போது அவரும் கூட ஒரு தவறு செய்து விட்டார்.

மக்களது மொழியில் அவர் பேசினார். மக்கள் அவரைப் புரிந்து கொண்டார்கள். அது பெரிய காரியம் தான். அவ்வாறு செய்ததால் அவரது கருத்துக்கள் எங்கு பார்த்தாலும் துரிதமாகப் பரவின. ஆனால் அத்துடன் கூட சம்ஸ்கிருதமும் பரவியிருக்க வேண்டும். புத்தர் பிரானின் உபதேசங்களால் அறிவு பரவியிருந்தது. ஆனால் கண்ணியமும், பண்பும் உண்டாகவில்லை. ஏற்படக் கூடிய தாக்குதல்களையும், அதிர்ச்சிகளையும் தாங்கும் சக்தி பண்புக்குத் தான் உள்ளது, வெறும் அறிவுக்கு அந்த வலிமை இல்லை.

பாமர மக்களுக்குத் தாய்மொழியில் கற்பியுங்கள். அவர்கள் பல கருத்துக்களைக் கற்றுக் கொள்வார்கள். பலவற்றைத் தெரிந்து கொள்வார்கள். ஆனால் அதைவிட உயர்ந்த ஒரு பொருள் அவர்களுக்குத் தேவை. அவர்களுக்குப் பண்பைப் புகட்டுங்கள். அதைச் செய்கிற வரையில் அவர்களை உயர்த்தி வைத்திருக்கும் அந்த நிலையில் ஸ்திரத் தன்மை இராது.

(தொடரும்)

அடுத்த பகுதி >>>

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *